பொதுப் பள்ளியின் தேவையும், கல்வி வியாபாரமும்!

in 2011 ஜுலை

அ.ப.அ.
நன்றி கீற்று இணைய இதழ்

பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அதிகமுக அரசு முதல் நடவடிக்கையாகச் சமச்சீர் கல்வி பொதுப் பாடத் திட்டத்தை இந்தாண்டு நிறுத்துவதாக அறிவித்துள்ள நடவடிக்கை கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லோர் மத்தியிலும் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இவர்களின் நடைமுறையாக இருந்தாலும் திமுக ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் சீர்குலைக்கப்படும். அதிமுக ஆட்சியின் திட்டங்கள் திமுக ஆட்சியில் சீர் குலைக்கப்படும் என்பது புதிதல்ல.

ஆனால், சமச்சீர் கல்வி திமுக அரசின் கொள்கை முடிவு என்று சொல்லிவிட முடியாது. தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளின் நீண்ட போராட்டங்களின் பின்னணியில் உருவானதுதான் சமச்சீர் கல்வி.

நாடு விடுதலை பெற்ற பின்னர் உருவாக்கப் பட்ட பல கல்விக் குழுக்கள், பொதுப்பள்ளி முறையை வற்புறுத்தி வந்துள்ளன. எல்லா பள்ளிகளும் நல்ல தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் அளிக்க வேண்டும் என்பதே பொதுப்பள்ளி முறையின் அடிப்படையான நோக்கம். இப்பொதுப் பள்ளி முறை என்பது நமது ஆட்சியாளர்களால் எட்ட முடியாத இலக்காகவே உள்ளது.
பொதுப்பள்ளி முறையின் முதற்படியாக சமச்சீர் கல்வி முறை இருக்க வேண்டுமென தமிழ் நாட்டில் கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள் ஜனநாயக அமைப்புகள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக போராடி வந்துள்ளன. ஆளும் அரசுகளின் மக்கள் விரோத பொருளாதார கொள்கை கல்வி வியாபார நடவடிக்கையை ஊக்குவித்ததோடு ஏழைக்கொரு கல்வி. வசதி படைத்தோருக்கு ஒரு விதமான கல்வி என்ற சமூக ஏற்றத்தாழ்வை ஆழப்படுத்தியது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியம். மெட்ரி குலேசன் வாரியம், ஆங்கிலோ இந்தியன் வாரியம். ஓரியன்டல் வாரியம் என்ற நான்கு வகையான பள்ளி கல்வி வாரியங்கள் இயங்கி வருவதால், வெவ்வேறு வகையான பாடத்திட்டம் கற்றல், கற்பித்தல் என அனைத்தும் சமச்சீரற்ற கல்விச் சூழலை உருவாக்கியுள்ளன. தரமான, ஒரே பாடத் திட்டத்தை கற்றல், கற்பித்தல் முறையை கொண்ட சமச்சீர் கல்விக்காக நடத்தப்பட்ட நீண்ட போராட்டத்திற்குப் பின் கடந்த திமுக அரசு கல்வியாளர் ச.முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை 2007 ஜூன் மாதம் அவர் அரசிடம் ஒப்படைத்தார். ஆனால் குழு மேல் குழு அமைத்து காலம் கடத்தியது. இந்திய மாணவர் சங்கத்தின் விடாப் பிடியான போராட்டத்தால் தமிழக அரசு சமச்சீர் கல்விக்காக சட்டத்தை அவசர அவசரமாக இயற்றியது. சமச்சீர் கல்வியை படிப்படியாக நடை முறைப்படுத்தப் போவதாக அறிவித்தது.

சமச்சீர் கல்விக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்:
*பள்ளிக் கல்வித்துறை சார்ந்த கல்விச் சட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாடு கல்விச் சட்டம் இயற்றிட வேண்டும்.
*நான்கு வகையான கல்வி வாரியங்களை கலைத்து விட்டு அதிகாரமுள்ள ஒரே பள்ளிக் கல்வி வாரியமாக மாற்றிட வேண்டும்.
*ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்றும் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
*மழைலையர் கல்விப் பொறுப்பையும் அரசே ஏற்றுக்கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்கு மழலையர் பிரிவு தொடங்க வேண்டும்.
*பொதுப் பாடத்திட்டம் பாடநூல்கள் உருவாக் கப்பட வேண்டும்; ஒரே வகையான தேர்வு முறை வேண்டும்.
*மாணவர்களின் பன்முகத்தன்மையை வளர்த் தெடுக்க நூலகம் சுற்றுலா மற்றும் உயற்பயிற்சி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும்.
*பயிற்றுமொழி தாய்மொழி என்பதை உறுதிப் படுத்த வேண்டும்.
*அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
*தனியார் பள்ளிகளின் கல்வி வியாபாரத்தை தடுத்து முறைப்படுத்த வேண்டும் என பல்வேறு முக்கிய பரிந்துரைகளை கல்வியாளர் முத்துக் குமரன் குழு அளித்தது.
*சமச்சீர் கல்வியை 1,6 வகுப்பில் முதற்கட்ட மாகவும், படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தப்படுவ தாக திமுக அரசு அறிவித்தது.
*கல்வி குறித்த உண்மையான அக்கறையோடு திமுக அரசு செயல்படுவதாக நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது

மேலே சொல்லப்பட்ட அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்தினால் தான் சமச்சீர் கல்வியாக இருக்க முடியும். அரசோ, கல்வியாளர் முத்துகுமரன் கொடுத்த எந்த பரிந்துரைகளையும் நிறைவேற்றிட தயாரில்லாத அரசு, பொதுப் பாடத்தை மட்டும் நிறைவேற்றப் போவதாக அறிவித்து நடைமுறைப் படுத்தியது. 150 கல்வியாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளடக்கிய குழுவை நியமித்து பாட புத்தகங்கள் 216 கோடிகளில் தயாரிக்கப்பட்டு உள்ளன. அந்த பாடங்களின் அடிப்படையில் முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு ஒருமுறை தேர்வும் நடத்தப்பட்டுவிட்டது. மற்ற வகுப்பு மாணவர்கள் இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்களை படிக்கத் தொடங்கி விட்ட நிலையில், நடை முறைக்கு வந்து விட்ட பாடத் திட்டங்கள் குறித்து பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வாளர்களிடமிருந்து புகார்கள் ஏதும் வராத நிலையில் இந்த பொதுப் பாடத் திட்டத்தை நிறுத்தி வைப்பது சரியா? பொது பாடத் திட்டத்தில் கருத்துப் பிழைகள், எழுத்துப் பிழைகள் இருப்பதால் அதனை சுற்றறிக்கை மூலம் திருத்திடவும், நீக்கவேண்டிய பகுதிகளை நீக்கியும் தேவையான மாற்றங்களோடு பொதுப் பாடத் திட்டத்தை இந்தாண்டு நடைமுறைப் படுத்துவதே சரியானதாக இருக்கும்.

DYFI, SFI மற்றும் பல இயக்கங்களின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் கல்வியாளர்கள் எஸ்.எஸ். ராஜகோபாலன், ச.முத்துக்குமரன், வே.வசந்தி தேவி போன்றோரின் கேள்விகள் நம்மை சலனப்படுத்தாமல் இல்லை. உணர்வுப்பூர்வமாக தியாக மனப்பான்மையுடன் பல துறை வல்லுநர்கள், ஆசிரியர்கள் சேர்ந்து தயாரித்த பாடத் திட்டத்தை அமைச்சரவை குறை கூறுவது அபத்தம் என்கிறார்கள். NCERT-CBSE பாடக் குழுவில் 40 ஆண்டுகாலம் பணியாற்றிய எஸ்.எஸ். ராஜ கோபாலன், நான்கு வாரியத்தின் மூத்த ஆசிரியர்களால் பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட 600 பக்க பாடத் திட்டம் தரமற்றது என ஒரே வரியில் நிராகரிப்பதின் அர்த்தம் புரியாமல் இல்லை என்கிறார். தரம் என்பது வகுப்பறைகளில் என்ன நடக்கிறது என்பதேயாகும் என்கிறார். 200 நாட்களுக்குத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் 150 நாட்களிலேயே கற்றுத்தரப்படுகின்றது. பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியரே இல்லை. வரலாறு படித்த ஆசிரியர்கள் அறிவியல் கற்பிக்கும் நிலையுள்ளது. பள்ளிகளில் 9ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்கள் கிடையாது. அதற்கு மேல் பாட வாரியான ஆசிரியர்கள் இல்லை என்கிறார்.

கல்வி என்பது அரசியல் தலையீடு இல்லாமல் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டுமெனவும். 1961ல் தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்ட பின்பும். 2010 ஏப்ரல் கல்வி உரிமைச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்பும் கல்விக்கான வெள்ளையறிக்கை வைத்து விவாதமோ கல்வி விதிகளோ இன்னும் தமிழகத்தில் இயற்றப்பட வில்லை. வசந்தி தேவி குறிப்பிடுகையில் இந்திய கல்வியில் குறைகளில் ஒன்று கல்வி தனியார் பள்ளிகளாக வணிகமயமாகி வருகிறது. மற்றொன்று பொதுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதிகாரிகளின் பிடியில் உள்ளன. இதை மீட்டு 75 சதம் பெற்றோர்களை கொண்ட பள்ளி நிர்வாக கமிட்டி அமைக்க வேண்டுமென்கிறார். மேலும் எந்த அரசு வரவேண்டுமென மக்கள் நிர்ணயிக்கிறார்கள். அரசு என்ன செய்ய வேண்டுமென வசதி படைத்தவர்கள் நிர்ணயிக்கிறார்கள் என்கிறார். நாமக்கல் வகையறாக்களின் விளம்பரங்களும், கல்வி முதலாளிகளின் அறிக்கைகளும் இதை நமக்கு உறுதிப்படுத்துவதாகவே அமைகின்றது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ல் நடைமுறைப் படுத்திட உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும், குறிப்பேடுகளை பாடநூல் கழகத்தின் மூலம் தயாரித்து இலவசமாக அளிக்கவும், உண்மையான சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தவும், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையை உறுதியுடன் தடுத்திட வலியுறுத்தியும், தீர்மானங்கள் இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.

2கோடிக்கும் மேற்பட்ட பெற்றோர் மாண வர்களது பிரச்சனையில் தலையிட்டு முடிவு களையயடுக்க வேண்டும். தனியார் பள்ளிக் கல்வி கட்டணப் பிரச்சனையில் அரசு தலையிடாது என்று தமிழக முதல்வரின் பொறுப்பற்ற அறிவிப்பால் பெற்றோர்கள், மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே தமிழக மக்களை தனது வழக்கமான அதிரடி நடவடிக்கைகளால் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் முதல்வர்.

மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட சட்ட மன்றம் பயன்படுத்தப்படாதது, பொதுப் பாடத் திட்டம் நிறுத்தம், தனியார் பள்ளிகளின் கொள்ளையை வேடிக்கை பார்ப்பது என்று அதிமுக அரசு தமிழக மக்கள் காட்டிய விசு வாசத்திற்கு அவர்கள் மீது சேற்றை வாரி வீசும் நடவடிக்கையைத் துவக்கி விட்டது.

Previous post:

Next post: