நபி வழியில் நம் தொழுகை

in 1989 நவம்பர்,இறைவணக்கம்

தொடர்:35                    அபூஅப்திர் ரஹ்மான்

           “என்னை எவ்வாறுத் தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.”    (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

தொழுகையில் மார்க்க ரீதியாக வெறுக்கப்பட்டவை:

    1. தொழும் போது தலையை திருப்பிக் கொண்டுப் பார்ப்பது :

    * நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழும் போது தலையைத் திருப்பிக் கொண்டுப் பார்ப்பது பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள் இது ஷைத்தான் மனிதனிடமிருந்து (அவனது கவனத்தை) அபகரிக்கும்படியானதோர் அபகரிப்பாகும் என்றார்கள்.

                                     (ஆயிஷா(ரழி), புகாரீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

    தலையைத் திருப்பிக் கொண்மு பார்ப்பதானது. முறையாக இறை உணர்வோடு தொழும் ஒருவரின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியாகும். தொழுவோர் இதுவகையில் மிக எச்சரிக்கையோடு நடந்துக் கொள்வார்களாக!

    * ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, “உமக்கு நான் தொழுகையில் திரும்பிப் பார்ப்பதை எச்சரிக்கின்றேன்” என்று கூறிவிட்டு, தொழும் போது திரும்பிப் பார்ப்பதானது ஒருவகையான நாசக்கேடேயாகும் அவசியமாயின் நபில் தொழுகையில் ஆகட்டும் என்றும் பர்ளான தொழுகையில் வேண்டாம் என்றும் கூறினார்கள்.                        (அனஸ்(ரழி), திர்மிதீ)

    2. தொழும் போது கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு நிற்பது:

    * நபி(ஸல்) அவர்கள் தொழும் போது இடுப்பில் கை வைத்துக் கொண்டிருப்பதை தடை செய்துள்ளார்கள்.

                                  அபூஹுரைரா(ரழி), புகாரீ. முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)

    3. தொழும் போது வானத்தின் பால் பார்வையை உயர்த்துவது:

    * தொழுகையில் தமது பார்வைகளை வானத்தின் பால் உயர்த்துவோர், அதிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்வார்களாக! இன்றேல் அவர்களின் பார்வைகள் பறிக்கப்பட்டு போய் விடும். என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

                                          (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், நஸயீ, அஹ்மத்)

    4. ஸுஜுது செய்யும் போது முழங்கையைத் தரையில் படுக்க வைத்துக் கொள்வது :

    * “ஸுஜுதை முறையாக செய்யுங்கள். உங்கள் முழங்கைகளை நாய் விரிப்பதுப் போல் தரையில் விரித்துக் கொள்ள வேண்டாம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                                                (அனஸ்(ரழி), அபூதாவூத்)

    5. தொழும் போது கொட்டாவி விடுவது:

    * உங்களில் ஒருவருக்குத் தொழுகையில் கொட்டாவி விட நேர்ந்தால் தம்மால் இயன்றளவு (அதை) அடக்கிக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.        (இப்னு ஸஃது(ரழி), அபூதாவூத்)

    6. தூக்கம் மிகைத்த நிலையில் தொழுவது :

    * உங்களில் ஒருவருக்கு தூக்கம் (கடுமையாக) வருமாயின் அவர் தூக்கம் போகும் வரைத் தூங்கிக் கொள்வாராக! (ஏனெனில்) அவர் தாம் தூங்கும் நிலையில் தொழ முற்ப்பட்டால், அவர் (தொழும் போது) பாவ மன்னிப்புத் தேட வேண்டியக் கட்டத்தில்  (ஒன்றிருக்க ஒன்றை ஒதி) தம்மைத் தாமே ஏசிக் கொள்ள நேரிடலாம்.” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.       

                       (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

    “உங்களில் ஒருவர் இரவில் விழித்துத் தொழும்போது, (தூக்கத்தின் மேலீட்டால்) குர்ஆன் ஓதுவதற்க நாவு தடுமாறி, தாம் ஓதுவது தமக்குப் புரியாத நிலை ஏற்ப்பட்டு விடுமாயின், உடனே அவர் படுத்துக் கொள்வாராக!” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

                        (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், அஹ்மத்)

    தொழுகை என்பது சுய உணர்வோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு அமலாக இருப்பதால், தூக்கம் மிகுத்த நிலையும் சுய உணர்வை அகற்றி விடுகிறது, இந்த நிலையில் தொழுகையில் ஓத வேண்டியவைகளை முறையாக ஓதித் தொழ இயலாது. தூங்கி விழித்தப் பிறகு தொழ வேண்டியவற்றை தொழுதுக் கொள்ள வேண்டும்.

பர்ளான தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்த கடும் முயற்சி!

    * நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் பிரயாணத்திலிருந்து ஓய்வுப் பெறுவதற்காக ஓர் இடத்தில் இறங்கினால் தமது வலப்புறமாக படுத்திருப்பார்கள். ஆனால் சுப்ஹுத் தொழுகைக்கு சற்று முன்னர் இறங்கினால் தமது தலைக்குக் கையை முட்டுக் கொடுத்தவர்களாக, முழங்கையை நட்டி வைத்து (உஷார் நிலையில்) படுத்திருப்பார்கள்.

                                                (கதாதா(ரழி), முஸ்லிம்)

    * நபி(ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்திலிருந்து திரும்பும் போது, இரவுப் பிரயாணம் செய்து வந்துக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு இலேசாகத் தூக்கம் வந்தது. அப்போது பிலால்(ரழி) அவர்களிடத்தில் இன்றிரவு நீர் விழித்திருந்து, சுப்ஹுத் தொழுகைக்காக எங்களுக்கு பாதுகாப்புப் பணி செயவீராக! என்றார்கள்.

    அப்போது பிலால்(ரழி) அவர்கள் (அதை ஏற்று சுப்ஹு இடையுள்ள இடை நேரத்தில் அல்லாஹ்வால்) விதிக்கப்பட்டுள்ள ஓரளவு நேரம் வரை (நபிலான தொழுகை) தொழுதுக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களும், சஹாபாக்களும் (அயர்ந்து) தூங்கிக் கொண்டிருந்தார்கள். சுப்ஹு நேரம் நெருங்கிய போது  பிலால்(ரழி) அவர்கள் சுப்ஹு நேரத்தை எதிர்ப்பார்த்தவர்களாக, ஒட்டகத் தொட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.

    தொட்டிலில் சாய்ந்துக் கொண்டிருந்த பிலால்(ரழி) அவர்களை அவர்களின் கண்கள் மிகைத்து விட்டன. (அதனால் அவர்களும் அயர்ந்து விட்டார்கள்.) நபி(ஸல்) அவர்களும், பிலால்(ரழி) அவர்களும், மற்றும் சஹாபாக்களில் எவரும் தங்கள் மீது வெயில் அடிக்கும் வரை விழிக்க வில்லை. அவர்களில் முதன்மையாக விழித்தவர்கள் நபி(ஸல்) அவர்களேயாவார்கள்.

    நபி(ஸல்) அவர்கள் திடுக்கிட்டெழுந்து “பிலாலே!” என்றார்கள். உடனே பிலால்(ரழி) அவர்கள் (நபி அவர்களே!) “உங்களை எது அயர்த்தியதோ, அதுவே என்னையும் அயர்த்தி விட்டது.” என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அனைவரையும் நோக்கி (இவ்விடத்தை விட்டு அகன்று விடுங்கள்! என்றார்கள். அனைவரும் தமது பயணச் சாமான்களோடு அதை விட்டு அகன்று விட்டனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஒளூ செய்துவிட்டு, பிலால் அவர்களிடம் “இகாமத்” சொல்லும்படி கூறிவிட்டு, அவர்களுக்கு சுப்ஹைத் தொழ வைத்தார்கள். தொழுகையை முடித்தவுடன் “ஒருவர் தொழுகையை மறந்துவிட்டால், அதை அவர் நினைத்தவுடன் தொழுதுக் கொள்வாராக!” என்று கூறினார்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் கூறியுள்ளான்! என்னை நினைப்பதற்காக தொழுவீராக!                            (20:14)

    (அபூகதாதா(ரழி), அவர்கள் மூலம் நஸயீயில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் “ஒருவர் தொழுகையை விட்டுத் தூங்கி விட்டால் அவர் விழித்தவுடன் அதைத் தொழுதுக் கொள்வாராக!” என்று உள்ளது.                                         (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

    சித்திரங்களையும், சிந்தனையை ஈர்ப்பவை அனைத்தையும் நோக்கித் தொழுவது:

     * ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாடுடைய ஆடை ஒன்றை அணிந்துத் தொழுதாார்கள். அப்போது அவர்கள் அதன் சித்திர வேலைபாட்டை ஒருமுறைப் பார்த்து விட்டார்கள். தாம் தொழுது முடித்தவுடன் இந்த ஆடையை அபூஜஹ்மு என்பவரிடம் கொண்டு போய் கொடுத்து விட்டு அவரிடம் சித்திர வேலைபாடில்லாத ஆடை ஒன்றை எனக்கு வாங்கி வாருங்கள். ஏனெனில் இது என்னை எனது தொழுகையை விட்டு சற்று கவனத்தைத் திருப்பிவிட்டது என்றார்கள்.

  (ஆயிஷா(ரழி), புகாரீ)

        மேற்காணும் ஹதீஸின் அடிப்படையில் தொழுபவரின் கவனத்தை அல்லாஹ்வின் சிந்தனையை விட்டுத் திருப்ப கூடியவையான எந்தப் பொருளுக்கும் எதிரில் நின்று தொழுவது முறையல்ல. அவை தாம் அணிந்திருக்கும் ஆடையாயிருந்தாலும் சரி. அல்லது தாம் விரித்துத் தொழும் முஸல்லா-தொழுகை விரிப்பாயிருந்தாலும் சரி. இதே அடிப்படையில் தான் பள்ளிவாசல்களின் சுவரில் குர்ஆன் வசனங்களை எழுதுவதும் தவறாகும்.

Previous post:

Next post: