ஐயமும்! தெளிவும்!!

in 1992 ஏப்ரல்,ஐயமும்! தெளிவும்!!


ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம்
ஒன்று மிஸ்ரில் உள்ளதாக குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது.
இது உண்மையான செய்திதானா?
A. ஜைலாலுத்தீன், துபை.

தெளிவு : தங்களது கேள்வியில் ஒரு சரித்திர தவறு
உள்ளது. நமது அருமை நபி(ஸல்) அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்பது எல்லோரும்
அறிந்த விஷயம். எனவே நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதியதாகக் கூறுவது
தவறாகும்.

ஹிஸ்ரி 6ம் ஆண்டு மக்கத்து குரைஷி
குப்பார்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையில் ஒரு அமைதி உடன்படிக்கை எழுதப்பட்டது.
அதற்கு ஹுதைபிய்யா உடன்படிக்கை என்று பெயர், இந்த உடன்படிக்கையால் உள்நாட்டில் அமைதி
நிலவ ஆரம்பித்ததும் நபி(ஸல்) அவர்கள் அயல் நாடுகளில் இஸ்லாமிய அழைப்புப் பணியை
விஸ்தீரணமாக்கினார்கள்.

அதனடிப்படையில் கீழ்காணும் நாடுகளுக்கு
தனது தூதர்களை இஸ்லாமிய அழைப்பின் கடிதங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.

நாடுகள்
அரசர்கள்          தூதர்கள்

ரோம்
ஹெர்குலிஸ்         அப்துல்லா பின் குஹாஃபா(ரழி)

பாரசீகம்
அந்-நஜானி         ஜாபஃர் பின் அபீதாலிப்(ரழி)

மிஸ்ர்
அல்-மகூகில்        ஹாதிப் பின் அபீபல் தஆ(ரழி)

இக்கடிதங்கள் நபி(ஸல்) அவர்களால்
சொல்லப்பட்ட அவரது எழுத்தாளர்களாக இருந்த ஜைது பின் தாபித்,உபை இப்னு கஃபு, அலி
பின் அபீதாலீப் (ரழி-அன்கும்) போன்றோர்களால் எழுதப்பட்டன. அக்கடிதங்களின் முடிவில்
நபி(ஸல்) அவர்களின் கையெழுத்தாக அவரது வெள்ளி மோதிர முத்திரையிடப்பட்டது.
இக்கடிதங்களின் அசல்கள் இன்றும் பாதுகாக்கப்ட்டு ரோம், மிஸ்ர் நூலகங்களில் இருப்பது
உண்மையே. தொல்பொருள், புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களும் இதன் பழமையை இராசாயண
ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளார்கள். இது நம்ப முடியாத விஷயமுமல்ல. ஏனெனில்
நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு பல ஆண்டுகள் முன் இவ்வுலகில் அட்டூழியம் செய்த,
செங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட பிர்அவ்னுடைய உடலையே அல்லாஹ் பாதுகாத்து நமக்கு நமக்கு
ஒரு படிப்பினையைக் காட்டி இருக்கின்றான். எனவே இவ்வுலகிற்கு அருட்கொடையாக
அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களின் கடிதங்களைப் பாதுகாத்து வைத்திருப்பது ஒரு
விநோதமான செயலல்ல.

தற்சமயம் லண்டனிலுள்ள டாக்டர் முஹம்மது
ஹமீதுல்லாஹ் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மற்ற நாட்டு அரசர்களுக்கு எழுதிய கடிதங்கள்,
பட்டயங்கள் போன்றவற்றின் கையெடுத்துப் பிரதிகளைத் தொகுத்து ஆராய்ச்சி செய்து “அல்வதாயிக்
அல்-ஸியாஸிய்யாஹ்” என்ற ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதியுள்ளார். இது ஒரு
ஆதாரப்பூர்வமான நூல் என பற்பல அரபு நாட்டு பல்கழைக்கழகங்களும் உறுதி செய்துள்ளன.
அவ்வளவுத் தூரம் ஏன் செல்ல வேண்டும். நமது சென்னையில் அமீர் நவார் ஜங்குடைய “குதுப்கானா
நாஸிரிய்யா” வில் இன்றும் 1000, 1200 வருடங்களுக்கு முந்திய கையெழுத்து பிரதிகள்
(Rare Manuscripts) உள்ளதைக் காணலாம். நமது தோழர் A. முஹம்மது அலி கூட அவற்றிலுள்ள
ஒரு முஅத்தா கையெழுத்துப் பிரதியை ஆதாரமாக எடுத்து ஆராய்ச்சி செய்துள்ளார்.


*********************************************************************

ஐயம் : ஒருவருக்கு வயிற்றில் அல்சர் வியாதி.
நேராநேரத்தில் சாப்பிடவில்லையெனில் வயிற்றில் பற்பல வேதனைகள் ஏற்படுகின்றன. இவ்வாறு
இருக்கையில் அவன் நோன்பு வைக்க முடியாதே! என்ன செய்யலாம்?

A. ஜைலாலுத்தீன், துபை.

தெளிவு : வயிற்றில் உருவாகும் அல்சர் வியாதி
குணப்படுத்த முடியாத ஒரு நோயல்ல. இலகுவாக குணப்படுத்திக் கொள்ள மருத்துவ வசதிகள்
நிறைந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நாம் மறக்க வேண்டாம். அதற்கு நாம்
அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவும் கடமைப்பட்டுள்ளோம்.


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது
நோன்பு கடமையாக்கப்பட்டதுப் போல் உங்கள் மீதும் அது கடமையாக்கப்பட்டுள்ளது; அதன்
மூலம் நீங்கள் பரிசுத்தவான்கள் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின்
கடைசி வாக்கியத்தைப் பாருங்கள். நோன்பு மூலம் நீங்கள் பரிசுத்தவான்கள் ஆகலாம் என
அல்லாஹ் வாக்களிக்கின்றான். நமது உடல், உள்ள பரிசுத்தத்திற்கு நோன்பு அழகிய
வழிகாட்டி என்பதை இதன் மூலம் அறியலாம். எனவே நம்மை பரிசுத்தப்படுத்திக் கொள்ள
வேண்டிய ஒரு வழியை வயிற்று அல்சர் என்ற சாதாரண நோய்களால் இழப்பது விவேகமான செயலல்ல.
எனவே வயிற்று அல்சரை போக்குவதற்குரிய மருத்துவ வசதிகளைப் பெற்று குணமடைய வேண்டும்.
நமது நிய்யத்(எண்ணம்) உயர்வானதாக இருந்தால் அல்லாஹ் நிச்சயம் குணம் தருவான்.
அதற்கான நாமும் துஆ செய்கிறோம்.

நாள்பட்ட அல்சரால் நோன்பு வைக்க
முடியாதவர்களுக்கும், எல்ல மருத்துவ வசதிகளையும் பெற்று குணமாவதை அல்லாஹ்
நாடாதவர்களுக்கும் மாற்று வழியையும் அல்லாஹ் தந்துள்ளான். இம்மாற்றுவழி நம்மாலான
எல்லா முயற்சிகளையும் செய்தும் முடியாதவர்களுக்கேப் பொருந்தும். அதனை
சம்பந்தப்பட்டவர்களே முடிவு செய்ய வேண்டும். அவரது எண்ணத்திற்க்கொப்பவே அல்லாஹ்
கூலிக் கொடுப்பான் என்பதை மறக்கலாகாது. அம்மாற்றுவழி(பரிகாரம்) என்ன?


அல்லாஹ் கூறுகின்றான்:


உங்களில் எவர் ரமழான் மாதத்தை
அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ,
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ, (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப் பின்வரும்
நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185)

நோயாளியாக இருப்பவர்கள்
நோன்பு வைப்பதை விட்டிருக்க அல்லாஹ் சலுகைத் தருகிறான். ஆனால் குணமானதும் அதனை
களாச்செய்ய சொல்கின்றான். மீளாத நோய், முதுமையில் இருப்பவர்களுக்கு இச்சலுகையை
மேலும் தளர்த்துவதையும் பாருங்கள்:

எனினும் (கடுமையான நோய், முதுமை
போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்கு பரிகாரமாக
– ஃபித்யாவாக -ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்; எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக்
கொடுக்கிறாரோ, அது அவருக்கு நல்லது.
(அல்குர்ஆன் 2:184)

கடுமையான நோயாளி நோன்பு வைப்பதற்கு
பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கலாம் என சலுகையை தரும் அல்லாஹ் மேற்படி வசனத்தை
முடிக்கும் விதத்தையும் பாரீர்;

(ஆயினும் நீங்கள் நோன்பின் பலனை
அறிவீர்களேயானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை
உணர்வீர்கள்)
(அல்குர்ஆன் 2:184)

இங்கு நாம் அனுபவத்தில் கண்ட
ஒரு உண்மையைக் கூற விரும்புகிறோம். கும்பக்கோணத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் கடுமையான
வயிற்று அல்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். நாள்பட்ட அல்சர் தாங்கள் கேட்ட
பிரச்சனைகள் அவருக்கு இருந்தது. ஆனால் நோன்பின் பலனை உணர்ந்து நோற்க ஆரம்பித்தார்.
அல்லாஹ் அவருக்கு இலகுவாக்கினான். முதல் ஓரிரு நோன்புகள் கடினமாக இருந்ததாகவும்
பின் இலகுவானதாகவும் கூறினார். மிகப்பெரிய ஆச்சர்யமான விஷயம்; எவ்வளவோ மருந்துக்கள்
சாப்பிட்டும் குணமாகாமலிருந்த அவரது நாள்பட்ட அல்சர் சென்ற வருட ரமழானுடன்
குணமடைந்ததாகவும் கூறினார்.

அல்லாஹ்வின் ஆணையின் மீது உறுதியான
நம்பிக்கைக் கொண்டு செயலாற்றினால் இது நடைபெற முடியாத அதிசயமல்ல. எனவே வயிற்று
அல்சர் உள்ளவர் மேற்படி கருத்துக்களை கவனத்தில்க் கொண்டு செயலாற்ற வேண்டுகிறோம்.
அல்லாஹ் அவரது நாட்டத்தைப் பூர்த்தி செய்வானாக!


*********************************************************************

ஐயம் : ஒருவர் எந்த தேதி. கிழமைகளில் பிறக்கிறாரோ
அதே தேதி, கிழமைகளில் இறப்பார் என சொல்லப்படுகிறதே! அது உண்மையா? A. ஜலாலுத்தீன், துபை.

தெளிவு : சொல்லப்படுகிற விஷயங்கள் அனைத்தும் உண்மை
இல்லை. இதுவரை, நாம் கேள்விப்பட்டவரை நபிமார்கள் எந்த தேதி, கிழமைகளில் பிறந்தார்களோ
அதே தேதி, கிழமைகளில் இறந்தனர் என்பதாகும். இதற்கே சரியான, உறுதியான ஆதாரங்களில்லை.
நிலைமை அப்படியிருக்க சாதாரணமாக எல்லா மனிதர்களுமோ அல்லது பெரும்பான்மையினரோ
பிறந்த தேதி, கிழமைகளில் இறக்கின்றனர் என எப்படிக் கூற முடியும். அப்படியே
ஒருவருக்கு நிகழ்வதால் என்ன சிறப்பு வந்துவிடப் போகின்றது. அதில் சிறப்புண்டு
என்றால் பிறந்த அன்றே இறந்து விடும் பாலகர்களுக்கு அச்சிறப்பு உண்டல்லவா?

காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது
என்ற பழமொழிப்படி ஒரு சிலருக்கு நடந்து விட்டால் அவரை, நபி ரசூல் எனக் கூறும்
வழக்கம் பழைய யூதர்களிடமிருந்து, அது அவர்களது சொந்த ஊகத்தில் கூறப்பட்ட
வார்த்தைகளாகும். அதற்கு சரியான சரித்திரச் சான்றுகளில்லை.


*********************************************************************

ஐயம் : குர்ஆனின் குரல் இதழில் “இறைவனுக்க அஞ்சி
பயந்து நடந்துக் கொள். எங்கு வேண்டுமானாலும் படுத்து உறங்கு” என தவ்ராத்திலிருந்து
கத்தாதா(ரழி) கூறியதாக உள்ளதே. இந்த தவ்ராத் என்பது என்ன நூல்?

A. ஜலாலுத்தீன், துபை

தெளிவு : தாங்கள் கேட்டுள்ள விஷயத்தை குர்ஆனின்
குரலில் படித்துள்ளீர்கள். அவர்கள் ஆதாரமாக தவ்ராத், நபித்தோழர் கத்தாதா(ரழி) ஐக்
குறிப்பிட்டுள்ளனர். அவர்களிடமே தவ்ராத் என்பது என்ன நூல் எனக் கேட்டிருக்க வேண்டும்.
எங்களிடம் கேட்கிறீர்கள். பரவாயில்லை, எங்களுக்குத் தெரிந்ததை விடையாகத் தருகிறோம்.

தெளராத், மூஸா(அலை) அவர்களுக்கு
அருளப்பட்ட வேத நூல் என்பதும், அல்லாஹ்வுக்கு அஞ்சி, பயந்து நடந்துக் கொள் என்ற
முதல் வாசகம் எல்லா நபிமார்களுக்கும் வஹி மூலம் அறிவிக்கப்பட்டு அவரவர் மக்களுக்கு
உணர்த்தப்பட்டதாகும். இதனை குர்ஆனில் பற்பல இடங்களில் காண முடிகிறது.

“இத்தக்குல்லாஹ்” என்று குர்ஆனில்
ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் வந்திருப்பதும் இம் முதல் வசனத்தை
உறுதிப் படுத்துகிறது. ஆனால் “எங்கு வேண்டுமானாலும் படுத்துக் கொள்” என அத்துடன்
இணைத்திருப்பது நாம் காணாதது.

அல்லாஹ்வை மட்டும் அஞ்சி, பயந்துக்
கொண்டு ட்ரைன் ஓடும் தண்டவாளத்திலோ, விரைவு ரோடு (Express way, Grand Trunk)களிலோ
படுக்க முடியுமா? இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு ஆணை தெளராத்தில் இருக்குமா?
என்பது விடை தேட வேண்டிய விஷயம். ஆனால் நமது அருமை நபி(ஸல்) அவர்கள் கூறியதை இங்கு
நினைவுக் கூர்வோமாக!


அல்லாஹ்வின் மீதுப் பொருப்பு
சாட்டுங்கள்; அதே சமயம் உங்களது ஒட்டகத்தை கட்டிப்போட மறக்காதீர்கள்.

இந்நபிமொழி மூலம் நம்மால் முடிந்த முயற்சிகளை செய்துக்
கொண்டே முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை உணரலாம். நமது இஸ்லாம்
பகுத்தறிவு முறையில் அழகிய வழிகாட்ட தவ்ராத்தில் ஒரு வேளை இருந்தாலும்-உள்ளதை நாம்
ஏன் பின்பற்ற வேண்டும்.

நம்மிடையே அல்லாஹ்வினால்
பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இருக்கையில்
அதிலுள்ளவைகளையே மாற்றியோ, திரித்தோ கூறும் குர்ஆனின் குரல் போன்ற இதழ்கள்
தவ்ராத்தில் இஸ்லாத்தை ஏன் கூறாது? அதை ஒரு சஹாபி கூறியதாக எழுதி ஹதீஸாக்க
முயன்றுள்ளது என்றே தோன்றுகிறது. அல்லாஹ் அவர்களுக்கு குர்ஆன்,
ஹதீஸ் வழிகளில் நடக்க தவ்பீக் தர நாம் வேண்டுவோமாக!


*********************************************************************

ஐயம் : பர்லான தொழுகையில் வஜ்ஜஹ்த்து முழுமையாக
கண்டிப்பாக ஓத வேண்டுமென்றும்; குறைவாக ஓதுவது நபிவழியல்ல என்றும்; சுன்னத்தான
தொழுகைகளில் முஸ்லிமீன் வரை ஓதிக் கொள்ளலாம் என்றும் ஒரு இமாம் ஜும்ஆ பயானில்
கூறினார். இதனுடைய நிலை என்ன? தெளிவாக விளக்கவும். முஹம்மது கெளஸ், திருச்சி.

தெளிவு : தெளிவாக விளக்க வேண்டியுள்ளதால் விபரமாக
தெரிவிக்கிறோம். இமாம் அவர்கள் ஞாபக மறதியால் மாற்றிக் கூறிவிட்டார் என்ற
நல்லெண்ணம் வைத்து விபரத்தைக் காண்போம்.

நபி(ஸல்) அவர்கள் தங்களது வாழ்நாளில்
பெரும்பான்மையான பர்லானத் தொழுகைகளுக்கு இமாமத் செய்துள்ளார்கள். அது மட்டுமின்றி
இமாமத் செய்பவர் பின்பற்றி தொழுபவர்களின் வயது, உடல்நல சேமங்களையும், தேவைகளையும்
கருத்தில்க் கொண்டு தொழ வைக்க ஆணையுமிட்டுள்ளார்கள்.

உங்களில் எவராவது மக்களுக்கு, (ஜமாஅத்)
தொழுகைக்கு இமாமத் செய்தால், அத்தொழுகையை இலேசாக்குங்கள். (உங்களைப் பின் பற்றி
தொழும்) அவர்களில் வயதானவர்கள் இருக்கலாம்; பலஹீனமானவர்கள் இருக்கலாம். நோயாளிகள்
இருக்கலாம்; தனித்து தொழும்போது உங்கள் விருப்பம் போல் (தொழுகையை) நீட்டிக்
கொள்ளுங்கள்.

(அறிவிப்பாளர்கள் : அபூஹுரைரா, அனஸ் பின் மாலிக்,
அபூமஸ்ஊத் அல்-அன்சாரி, உஸ்மான் பின் அபீஆஸ், அதீ இப்னு ஹாதம்(ரழி-அன்கும்)

ஆதார நூல்கள் : ஸஹீபா ஹம்மாம், முஅத்தா மாலிகி, புகாரீ,
முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னு ஹுசைமா, இப்னு ஹிப்பான், இப்னு
மாஜ்ஜா, மஸானித் அபீ அவானா, அபீதாவூத் தயாலிஸி, அஹ்மத்)


இந்நபிமொழிப்படி இமாமத் செய்பவர்
பின்பற்றி தொழுபவர்களின் நிலைகளைக் கருத்தில்க் கொண்டு அதிகமாக நீட்டி தொழ
வைக்காமல் ஓத வேண்டியவைகளை சுருக்கி ஓதி தொழுகையை இலகுவாக்க வேண்டுமென்பதை அறியலாம்.

ஒரு தடவை நபித்தோழர் முஆத் இப்னு
ஜபல்(ரழி) அவர்கள் இமாமத் செய்கையில் பல சூராக்களை ஓதி நீட்டித் தொழ வைக்கிறார்கள்.
அவரைப் பின்பற்றி தொழும் ஒருவர் அத்தொழுகையிலிருந்துப் பிரிந்து தனியாக தொழுது
செல்கிறார். இவ்விஷயம் முஆத்(ரழி) தெரிவிக்கப்பட்டபோது அவர் ஒரு “முனாஃபிக்” என
விமர்சிக்கிறார். இதனை அறிந்த நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் முஆதின் விமர்சனத்தை
முறையிட்டு நீதி கேட்கிறார். நபி(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல்(ரழி) அவர்களை அழைத்து
விசாரிக்கிறார்கள். அவர் நீண்ட சூராக்களை ஓதி தொழ வைத்ததை ஆட்சேபித்து இனி எவராவது
மக்களுக்கு இமாமத் செய்ய நாடினால் அத்தொழுகையை சுருக்கிக் கொள்ளட்டும். ஏனெனில்
அவரைப் பின்பற்றி தொழுபவர்களில் வயோதியர்கள் இருக்கலாம்; சிறுவர்கள் இருக்கலாம்;
பலஹீனமானவர் இருக்கலாம்; நோயாளிகள் இருக்கலாம்; பிரயாணிகள் இருக்கலாம்; தனித்துத்
தொழுகையில் அவரது விருப்பம் போல் நீட்டித் தொழுதுக் கொள்ளட்டும் என கடிந்து
கூறினார்கள். என்ற நபிச்செயலை அபூ மஸ்ஊத் அல்-அன்சாரி தெரிவிக்க அபூதாவூதிலும் இடம்
பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் வசனங்களான
குர்ஆனின் நீண்ட சூராக்களை இமாம் – ஜமாஅத் தொழுகையில் ஓதுவதையே ஆட்சேபித்துள்ள நபி(ஸல்) அவர்கள் வஜ்ஜஹ்த்தை தொடர்ந்து வரும், நபி(ஸல்) அவர்களால் கற்றத் தரப்பட்ட
அல்லாஹும்ம அன்தல் முல்க், லாயிலாஹா இல்லா அன்த…. என்ற நீண்ட துஆ ஓத
சொல்லியிருப்பார்களா? என்று யோசித்துப் பாருங்கள்.

மாறாக சுன்னத்தான தொழுகைகளில் இப்படி
நீண்ட துஆக்களை வஜ்ஜஹ்த்துடன் ஓதலாம் என்றும்; பர்லான
தொழுகைகளில் வஜ்ஜஹ்த்தை
முஸ்லிமீன் வரை சுருக்கி ஓதலாமென்றும் ஹதீஸ் நூல்களில் காண முடிகின்றது. பர்லானத்
தொழுகைகளிலும், நபீலானத் தொழுகைகளிலும் நபி(ஸல்) அவர்கள் “முஸ்லிமீன்’ வரை
ஓதினார்கள் என்ற வாசகம் சுனன் நஸயீயில் பாபு இகாமத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே
தாங்கள் குறிப்பிட்டுள்ள இமாம் அவர்கள் ஜும்ஆ பயானில் மாற்றி கூறியுள்ளார் என்றே
நினைக்கின்றோம். சம்பந்தப்பட்ட இமாம் அவர்களுக்கு தெரிவித்து விளக்கம் தாருங்கள்.
அல்லாஹ் அவரையும் நம்மையும் அல்லாஹ், ரசூல் வழிகளில் வாழ நல்லருள் பாலிப்பானாக!
ஆமின்.


*********************************************************************

ஐயம் : ஒரு முஸ்லிமிற்கு வியாபார நிமித்தமாக 10
லட்சம் ரூபாய் வட்டிக் கடன் இருக்கிறது. இவர் ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டவரா?  காதர் மைதீன், பரமக்குடி.

தெளிவு : வட்டிக் கடன் வாங்கி வியாபாரம் செய்யும்
மேற்படி தோழர் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். பேராசை வேண்டாம். இவர் வட்டிக் கடன்
வாங்குவது மூலம் இஸ்லாம் அனுமதிக்காத பெரும் குற்றத்தை அக்கடனைக் காட்டி அல்லாஹ்வின்
ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஜக்காத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார்.

கடன் இருப்பவர்கள்
மற்றவர்களிடமிருந்து ஜகாத் பெற உரிமையுள்ளவர்கள் என்பதை அல்குர்ஆன் 2:177 கூறுகிறது.

அதனைக் காட்டி இவரும் தப்பிக்க
முயற்ச்சிக்கிறாரோ என்னவோ? பத்து லட்ச ரூபாய் வட்டிக் கடன் வாங்க தகுதியுள்ளவர்
எவ்வளவுப் பெரியப் பணக்காரராக இருப்பார் என்பதை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.
அவரது சொந்த முதலீடு + அவருக்கு மற்றவர்களிடமிருந்து வரவேண்டியத் தொகை இரண்டையும்
கூட்டி அதற்கு 40-ல் 1 வீதம் ஜகாத் கொடுப்பது கடமையாகும். கடனாகப் பெற்றுள்ள
10-இலட்சம் வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அதற்கு ஜகாத் கொடுக்க
வேண்டிய அவசியமில்லை. பத்து லட்ச ரூபாய்க்கு குறைந்த வட்டியான 12% என வைத்தாலும்
வருடத்திற்கு வட்டியாக ரூ. 1,20,000/- கொடுக்க தயாராக உள்ளவர், தனது முதலீட்டுக்கு
அல்லாஹ்வின் ஆணைப்படி 21/2% ஜகாத் கொடுக்க முடியாதா? ரூ. 1,20,000  வட்டிக்
கொடுக்க தயாராக உள்ளவர் தனது முதலீட்டுக்கு ஜகாத் கொடுக்க தயங்குவதேன்? வட்டிக்
கொடுக்கா விட்டால் ஜப்தி வரும், வக்கீல் நோட்டீஸ் வரும், வில்லங்கங்கள் உருவாகும்
என்ற பயம். எனவே ரூ. 1,20,000 வட்டிக் கொடுக்கத் தயார். ஜகாத்
கொடுக்காவிட்டால் உடனே எந்த பாதிப்பும் இவ்வுலகில் ஏற்படாது என குருட்டு
நம்பிக்கையில் இருக்கலாம். ஒரு வாதத்திற்காக எடுத்து வைத்தோம்.

வட்டிக் கடன் வாங்கியதற்காக அவர்
கட்டாயம் அல்லாஹ்வின் சந்ததியில் “ஷைத்தான் பிடித்துப் பித்துக் கொண்டவர்கள்
போல மறுமையில் எழப்போவது உண்மை”.
இது எமது தீர்ப்பல்ல. அல்லாஹ் தனது குர்ஆன்
2:275 வசனத்தில் கூறுகிறான். எரியும் நெருப்பில் கெரசின் ஊற்றுவது போல கடனைக்
காட்டி ஜகாத் கொடுப்பதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பது கொடுமையிலும் கொடுமை.

முதலில் வட்டிக் கடனை நிறுத்த
சொல்லுங்கள். தன்னிடமுள்ள சொந்த முதலைக் கொண்டு ஹலாலான முறையில் வியாபாரம் செய்ய
அறிவுரைப் பகருங்கள். அதற்குரிய ஜகாஅத்தை வருடா வருடம் சரியாக கணக்கிட்டுக்
கொடுக்கச் சொல்லுங்கள். அல்லாஹ் அவரது வாழ்வில் செழிப்பை உருவாக்குவதைக் காணலாம்.
அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழிக் காட்டப் போதுமானவன்.


*********************************************************************

ஐயம் : தொப்பி அணிந்துக் கொண்டு தான் தொழ
வேண்டுமா? அல்லது அணியாமலும் தொழலாமா? தொப்பி அணிவதால் ஏதாவது குற்றமா அல்லது
குற்றமில்லையா? அன்வர் ஹுசைசன், காயல் பட்டினம்.

தெளிவு : பல தடவைகள் கேட்கப்பட்டு
விடையளிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில்
தலையை மறைத்தவர்களாகவும், திறந்த நிலையிலும் தொழுதுள்ளார்கள் என்பதை பற்பல ஹதீஸ்கள்
மூலம் தெரிய வருகிறது. இதன் மூலம் தொழுபவர் தலையை தொப்பி, தலைப்பாகை, துண்டுப்
போன்றவற்றால் மறைத்துக் கொள்ளலாம். அது ஒரு நபிவழி என்பதையும், இல்லை திறந்த
தலையுடன் தொழலாம் அதுவும் ஒரு நபிவழி தான் என்பதையும் உணர வேண்டும். உணர்த்த
வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் இருவிதமாக
செய்திருந்தால் இரண்டு விதமாகவும் நாம் பின்பற்றலாம், தவறில்லை, அது நபிவழித் தான்
என்பதை உணர்ந்தால் சச்சரவில்லை. ஆனால் தலைக்குத் தொப்பிப் போட சொல்பவர்கள்,
திறந்த தலையுடன் தொழுபவர்களை ஏதோ பாவம் செய்ததுப் போல் பாவிப்பதும் நபி(ஸல்)
அவர்களின் இரண்டாவது நபி வழியை பரிகசிப்பது போலல்லவா? உள்ளது. நபி(ஸல்) அவர்களும்
திறந்த தலையுடன் தொழுதிருக்கிறார்களே! இது ஏன் இவர்களது கண்ணுக்கு படவில்லை.

நபி(ஸல்) அவர்களின் ஒரு செயலை ஏற்போம்,
மற்றொரு செயலை ஏற்க மாட்டோம் என சொல்பவர் உண்மையாக நபி(ஸல்) அவர்களை
பின்பற்றுவராக மாட்டார். அவர் யூதமார்க்க வியூகங்களை பின்பற்றுபவர் என்பதை நாம்
திருக்குர்ஆன் வசனம் மூலம் விளங்குவதைக் காணீர்.

யூதர்கள் இப்படித்தான் அல்லாஹ்வினாலும்,
அவர்களது தூதர்களாலும் இடப்பட்ட கட்டளைகளில் சிலவற்றை ஏற்றனர்; சிலவற்றை
நிராகரித்தனர். அவர்களை நோக்கி அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள்
நெறிநூலில் (உள்ள) சில
கட்டளைகளை நம்பி, சில கட்டளைகளை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் எவர்கள் இவ்வாறு
செய்கின்றார்களோ அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடையாது;
மறுமை நாளிலோ அவர்கள் கடுமையான வேதனையின்பால் விரட்டப்படுவார்கள். நீங்கள்
செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாயில்லை.

தொழுபவர்கள் தலையை மூடாமலும்
மூடியும் தொழலாம் என்பதே நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியாகும். தலையை மூடித்
தொழுவதற்கு ஏதும் சிறப்பு இருப்பதாகவும் உண்மையான ஹதீஸ்களில் காண முடியவில்லை. எனவே
இருவிதமாக தொழுவதும் நபிவழியே! ஒரு வழியை ஏற்று மற்றொரு வழியை மறுப்பது நபி(ஸல்)
அவர்கள் காட்டிய நேர்வழியில் ஒன்றை மறுப்பதுப் போன்றாகும். எனவே நபிவழியை
முழுமையாக பின்பற்ற நாடுபவர்கள் இது போன்ற விஷயங்களை மக்களுக்கு உணர்த்தி
முழுமையாக நபிவழி நடக்க பாடுபடுங்கள்.

இதனை மக்களுக்கு உணர்த்தினால்
தலைக்குத் தொப்பி இல்லை, துண்டு இல்லை எனவே தொழ முடியவில்லை, இப்போது தொழவில்லை
என தேவையற்ற காரணங்களைக் கூறி தொழுகையிலிருந்து தப்பிக்க நாடுபவனையும் தொழுகைக்கு
அழைக்கலாம் அல்லவா? தொப்பியை சாக்காக வைத்து தொழாமலிருப்பவன் தப்பிக்க
வாய்ப்பில்லையல்லவா? எப்படியோ தொழுதுதான் ஆக வேண்டுமென்பதை மக்களுக்கு
உணர்த்துவது நமது கடமை. அல்லாஹ் அக்கடமையை செவ்வென நிறைவேற்ற அருள்பாலிப்பானாக!
ஆமின்.


*********************************************************************

ஐயம் : அல்லாஹ் திருநாமங்கள் 99 இருப்பதுப் போல்
நபி(ஸல்) அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளதா?

A. ஜலாலுத்தீன், துபை.

தெளிவு : அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் உள்ளன
என்பது ஹதீஸ்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. அதேபோல் நபி(ஸல்) அவர்களுக்கு 99
திருநாமங்கள் இருந்ததாக எந்த ஹதீஸும் இல்லை.

பழம்பெரும் ஹதீஸ் நூலான முஅத்த
மாலிகியில் கடைசி ஹதீஸாக இடம் பெற்றுள்ள நபிமொழி:


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு ஐந்து பெயர்கள் உண்டு

1. நான் முஹம்மத்

2. நான் அஹ்மத்

3. நான் மாஹி (குப்ரை அழிப்பவர்) அல்லாஹ் என் மூலம்
அவனுக்கு இணைவைத்தலை (குப்ரை) அளிக்கின்றான்.

4. நான் ஹாஷிர்; மக்கள் என் வழி நடக்க அல்லாஹ் அருள்
பாலிக்கின்றான்.

5. நான் அகீப் (நபிமாார்களின் முடிவு) அறிவிப்பு :
முஹம்மது இப்னு ஜுபைர் பின் மத்அம்(ரழி)


மற்றும் சில ஹதீஸ் நூல்களில் 7
பெயர்கள் 9 பெயர்கள் என மேலே குறிப்பிட்டது போல் சில காரணப் பெயர்கள் இருந்ததாக
அறிய முடிகிறது. தாங்கள் கேட்டிருப்பது போல் நபி(ஸல்) அவர்களுக்கு திருநாமங்களிருந்ததற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லை என்பது மட்டும் திண்ணம்.

அல்லாஹ்வுக்கு 99 திருநாமங்கள் உள்ளன.
அதுபோல நபி(ஸல்) அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளன. அதுபோல முஹ்யித்தீன்
அப்துல் காதில் ஜைலானி அவர்களுக்கும் 99 திருநாமங்கள் உள்ளன; என்ற 99 பற்றி
கூற்றுக்கள் ஒரு உண்மையின் (அல்லாஹ்வின் 99 திருநாமங்களின்) பெயரில்
இட்டுக்கட்டப்பட்ட கூற்றுகளாகும். இதனை நிரூபிப்பவர்கள் சரியான ஸனது தரட்டும்
பார்க்கலாம்.


*********************************************************************

ஐயம் : ஒப்பந்தப்படி வெளிநாடு வந்த ஒருவருக்கு
ஜும்ஆத் தொழுகைத் தவறிவிடும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் என்ன செய்ய வேண்டும்?
வேலை செய்யா விட்டால் பிரச்சனை.  A. ஜலாலுத்தீன், துபை.

தெளிவு : தோழர் ஜலாலுத்தீன் அவர்களே! நீங்கள்
இஸ்லாமிய நாடான துபையிலிருந்து இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். தங்களது கேள்வியில்
அந்நாட்டில் ஜும்ஆத் தொழுகைத் தவறிவிடும் நிலை எப்படி ஏற்ப்பட்டது என்ற
விளக்கமில்லை. தாங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஜும்ஆத் தொழுக அனுமதிக்கவில்லையா?
அப்படியானால் உடனே துபை தொழிலாளர்கள் அமைச்சரக அலுவலகத்தில் (Ministry of Labour)
புகார் செய்யுங்கள். தொழுகைக்கு அனுமதிக்காத தங்களது நிறுவனம், கம்பெனி மீது உடனே
நடவடிக்கை எடுப்பார்கள்.

துபையிலிருந்து கொண்டு ஜும்ஆத்
தொழுகை தவறிவிடும் நிலை வேலைப் பலுவினால் ஏற்ப்பட்டதாகக் கூறித் தப்பிக்க முயல
வேண்டாம். ஒரு உண்மையான முஸ்லிம் எந்நிலையிலும் தனது மார்க்கச் சட்டங்களை முழு
சுதந்திரத்துடன் அமல்ப்படுத்த விரும்புவான். அதற்கான சூழ்நிலைகளில் தன்னை இணைத்துக்
கொள்வான். அப்படிப்பட்ட சூழ்நிலையை உருவாக்க நாடினால் நிச்சயம் அல்லாஹ் உதவி
செய்வான் என்ற உறுதியான இறை நம்பிக்கையுடன் செயல்படுங்கள். மற்றதை அல்லாஹ்வின்
பொறுப்பில் விடுங்கள்.

அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்;
அவனையே நம்புங்கள்; உங்கள் இறைவன், நீங்கள் செய்பவைகளைப் பற்றி பாராமுகமில்லை.
(அல்குர்ஆன் 11:1,2,3)

Previous post:

Next post: