உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்?

in 2008 மார்ச்

உலகில் ஃபித்னா-குழப்பம் விளைவிப்பது யார்?

இப்னு கதீஜா

தங்களை மார்க்கம் அறிந்த மேதைகள், மக்களிடையே மார்க்கத்்தை நலினமாக, ஹிக்மத்தாக எடுத்து வைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என நினைத்துக் கொண்டு, மார்க்கப்பணி, அழைப்புப்பணி கட்டாயக்கடமை; அதை செய்யாது வெற்றி இல்லை என்று கூறும் அறிஞர்கள் இது தான் சத்தியம்-நேர்வழி-உண்மை என்று உறுதியாக தெரிந்தப் பின்னரும் அதை மக்களிடையே உரத்துச் சொல்ல தயங்குகிறார்கள்; பின் வாங்குகிறார்கள். அதற்கு அவர்க்ள கூறும் காரணம், அல்லாஹ் அல்குர்ஆன் பகரா 2:191-ல் பித்னா-குழப்பம் செய்வது கொலை செய்வதை விட கொடியது என்று கூறியுள்ளான். இதுதான் உண்மை-சத்தியம் என்று தெரிந்தாலும் மக்களிடம் சொல்வதால் ஃபித்னருகுழப்பம் ஏற்படுமாயின் அந்த உண்மையைச் சொல்லாமல் மறைப்பதே மார்க்கத்தின் கட்டளை என தங்களின் இந்தச் செயலை நியாயப்படுத்துகின்றனர்.

மார்க்கம் அறிந்த ஒரு டாக்டர், மேடைகளின் சண்டமாருத பேச்சாளர், பல மேடைகளை அலங்கரிப்பவர், சின்னத்திரையிலும் தோன்றுபவர், ஒரு சகோதரியிடம் பேசும்போது, தலைப்பிறை-ஒரு நாள்-24 மணிநேரம் மட்டுமே என்பது தான் உண்மை, தலைப்பிறை 2 நாள், 3 நாள் என வரவே முடியாது. ஆயினும் அதை இப்போது மக்களிடம் சொன்னால் ஃபித்னா-குழப்பம் ஏற்படும். அதனால் அதை மக்களிடம் சொல்லாமல், மக்களிடையே நடை முறையிலிருக்கும் அடிப்படையில் 2நாள், 3 நாள் தலைப்பிறையை ஏற்று அதன் படி செயல்படுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என கூறி இருக்கிறார். இதேக் கருத்தை வெளிப்படுத்தி அவர் சார்ந்திருக்கும் இயக்கப் பத்திரிக்கையும் கட்டுரை வெளியிட்டது. மேலோட்டமாகப் பார்க்கும் போது பல அறிஞர்களும் இதை சரிகானவே செய்வார்கள். இதற்கு காரணம் 2:191-ல் காணப்படும் ஃபித்னா குழப்பம்-கொலையை விடக் கொடியது என்ற பகுதியின் முன்பின் பகுதிகளை முழுஐமைகயாக சிந்தித்து விளங்காகததேயாகும். அந்த வசனங்களை முழுமையாகப் பார்ப்போம்.

(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களை கொல்லுங்கள். அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாகுதல்) கொலை செய்யப்பட்டதை விடக் கொடியதாகும். இருப்பினும் மஸ்ஜிதுல் ஹராமி அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில் நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (2:191)

எனினும் அவர்கள் (இவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கிவிடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையவனாகவும் இருக்கிறான். (2:192)

ஃபித்னா (குழப்பமும், கலகமும்) நீங்கி, அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கிவிடுவார்களானால்- அக்கிரமக்காரர்கள் தவிர (வேறு எவருடனும்) பகை கூடாது. (2:193)

இந்த மூன்று இறைக்கட்டளைகளையும் முறையாகப் படித்து சிந்தித்து நடுநிலையோடு அல்லாஹ்வுக்கு அஞ்சி விளங்குகிறவர்கள், அல்லாஹ்வின், அவனது தூதரின் வழிகாட்டலுக்கு முரணாகச் செயல்பட்டு, அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம் என்பதற்கு மாறாக மனிதக் கற்பனைகளை மார்க்கமாக்க முற்படுவதையே ஃபித்னா-குழப்பம்-கழகம் விளைவிப்பது என்பதை எளிதாகப் புரியலாம். இதை ஃபித்னா(குழப்பமும் கழகமும்ீ நீங்கி அல்லாஹ்வுக்கெ மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள் என்ற இறைக் கட்டளை உறுதிப்படுத்தப்படுகிறது.

சத்தியத்தை-நேர்வழியை உள்ளது உள்ளபடி சொன்னால் ஃபித்னா குழப்பம் ஏற்படுகிறது என்று நாமாக நினைத்துக் கொண்டு சத்தியத்தை-நேர்வழியை சொல்வதை விட்டும் நாம் பின்வாங்கினால் நாம் மார்க்கப் பிரசாரம் செய்யவில்லை; அல்லாஹ் தனது இறுதித் தூதருக்கு இறக்கியருளிய இறுதியான முழுமைப்பெற்ற வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் அல்மாயிதா 5:67ல் கூறுகிறான்; படித்துப் பாருங்கள்.

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம் மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராகமாட்டீர்; அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி) லிருந்து காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

சத்தியம் எதுவோ, நேர்வழி எதுவோ அதைச் சிறிதும் தயங்காமல் மக்கள் மன்றத்தில் வைப்பது நம் கடமை; மக்கள் குழப்பம் விளைவிப்பார்கள்; துன்பம் தருவார்கள்; பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அவர்களின் ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் நினைத்து சத்தியத்தை சொல்லாமல் மறைப்பது, பெருங்கொண்ட மக்களின் போக்கிலேயே நாமும் போவது இவை அனைத்தும் தவறு; நாம் நம்மீது கடமையான மார்க்கப் பிரசாரத்தைச் செய்யவில்லை. நமது மனோ இச்சைக்கு வழிபட்டு ஷைத்தானின் வழியில் அவனது பிரசாரத்தையே செய்கிறோம் என்பதை மறுக்க முடியுமா?

அல்லது மக்களிடையே நமக்கிருக்கும் செல்வாக்கு சரிந்துவிடும், பிரசாரம் செய்ய மேடைகள் கிடைக்காது; பெருங்கொண்ட மக்களின் கோபத்திற்கும், கேலிக்கும் கிண்டலுக்கும், அவதூறுகளுக்கும் ஆளாக நேரிடும். உலக வாழ்வில் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும்; எனவே சத்தியத்தை-நேர்வழியைப் பிரசாரம் செய்வதைக் கைவிட்டு மக்களின் மனோ விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரசாரம் செய்வதே ஹிக்மத்த் தான விவேகமான வழி என்று மனோ இச்சைத் தூண்டும். இதுக் குறித்து இறுதித்தூதரை அல்லாஹ் எப்படி கடுமையாக எச்சரிக்கின்றான் என்று பாருங்கள். அவை கனீ இஸ்ராயில் 17:73 ,74,75 ல் காணப்படுகின்றன.

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தமே அதை விட்டும்; அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

மேலும், நாம் உம்மை (நேரான வழியில்) உறுதிப்படுத்தி வைத்திருக்காவிட்டால் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்திருக்கக் கூடும். (17:74)

( அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ் வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்) மரணத்தில் இருமடங்கு (வேதனையும்) நுகருமாறு நாம் செய்திருப்போம். பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:75)

இன்னும் அல்ஹாக்கா 69:44-48 இறை வாக்குகளில் எவ்வளவு கடுமையாக இறுதித் தூதரை எச்சரிக்கின்றான் என்றுப் பாருங்கள்.

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக்கட்டி கூறியிருப்பாரானால் அவரை வலக்கரப்பிடியாக நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர் அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அன்றியும் உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. ஆகவே நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும். (69: 44,45,46,47,48)

இந்த இறைவாக்குகளை நடுநிலையோடு, இறையச்சத்தோடுப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் சத்திய பிரச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளங்க முடியும். அல்குர்ஆனிலும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இருப்பதை, உள்ளதை உள்ளபடி கூடுதல் குறைவு செய்யாமல், வணங்காமல், திரிக்காமல் அப்படியே மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பதே நமது கடமை. நமது சொந்த விளக்கங்களையோ, யூகங்களையோ, கற்பனைகளையோ எடுத்து வைக்கக் கூடாது. அதிகமான மக்கள் ஏற்கமாட்டார்கள்; அவர்களின் ஆதரவு நமக்குக் கிடைக்காது என நினைத்து சத்தியத்தைச் சொல்லாமல் மறைக்கக் கூடார்; அது பெருங்குற்றம் என்பதை எல்லாம் உள்ளச்சமுடையவர்கள் அறிந்துக் கொள்ள முடியும்.

இறுதித் தூதருடைய உள்ளத்திலேயே அப்படியொரு சலனம் இருந்தது; அல்லாஹ்வே அவர்களது பாதங்களை சத்தியத்தில் உறுதிப்படுத்தி வைத்தான். மக்கள் பக்கம் சாய்ந்திருந்தால் எப்படிப்பட்ட கடுமையான வேதனை அனுபவிக்க நேரிடும் என நபியையே அல்லாஹ் எச்சரித்திருக்கும்போது, நம் போன்ற சாமான்யர்களை நமது மநோ இச்சையும், ஷைத்தானும் எந்தளவு நிலைத்தடுமாறச் செய்வார்கள். என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும். அதனால் நமது மனதிற்கு அழகாகவும், சரியாகவும் தெரியும் கால சூழ்நிலைக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்ற ஷைத்தானிய சூழ்ச்சிக்கு ஆளாகாமல், அல்லாஹ் நமக்கு 5:67-ல் கட்டளையிட்டடிருப்பதுப் போல், குர்ஆனிலும், ஹதீஸிலும் இருப்பதை அப்படியே மக்கள் மன்றத்தில் வைத்துவிட வேண்டும். இதுவே அல்லாஹ்வால் ஏற்க்கப்படும் சத்தியப் பிரசாரமாகும். அல்லாஹ்வின் பொருத்தமும், சுவர்க்கமும் கிடைக்கும். (அல்லாஹ் நாடினால்)

எண்ணற்ற நபிமார்கள் தனியாகவும் ஓரிருவருடனும் சுவர்க்கம் நுழைவார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பார்க்கிறோமே! அதன் படிப்பினை என்ன? அல்லாஹ் “வஹீ” மூலம் அறிவித்ததை அப்படியே மக்களிடனம் எடுத்து வைத்தார்கள். அல்லாஹ் யாருக்கு நேர்வழியை நாடினானோ அவர்கள் மட்டுமே ஏற்றார்கள். அவர்கள் மிகமிக சொற்பத்தொகையினர் தான். 32:13, 11:118, 119 இறை வாக்குகள் படி வழிகேட்டில் சென்று நரகில் விழும் பெருங்கொண்ட மக்களைக் கவர அதற்கு ஏற்றவாறு அவர்கள் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக சொன்னால், நிச்சயம் பெருங்கூட்டம் சேரத்தான் செய்யும். ஆனால் அது அல்லாஹ்வின் பெருங்கோபத்தைப் பெற்றுத்தரும் என்பதை அந்த நபிமார்கள் தெளிவான உணர்ந்திருந்த காரணத்தால், பெருங்கொண்ட வழிகேட்டுச் செயல்களை மார்க்கமாகபி் போதிக்கத் துணியவில்லை. அதனால் தான் நபிமார்கள் எண்ணற்ற துன்பங்களையும் சிரமங்களையும் சகிக்க நேரிட்டது. சில நபிமார்கள் கொலை செய்யவும் பட்டார்கள். நபிமார்கள் அனைவரும் கடுமையான ஏச்சுப் பேச்சுக்களுக்கும் அவதூறுகளுக்கும் ஆளானார்கள் என்பதை அல்குர்ஆன் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. (பார்க்க 11: 1-123)

இறுதித் தூதரையே எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது நாற்பதாவது வயதுவரை நல்ல நம்பிக்கையாளர், ஒழுக்கசீலர், ஏழைகளின் உபகாரி, கொடைவள்ளல், பண்பாளர், சத்திய சீலர் என்றெல்லாம் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்து வந்தனர். அவர்களது 40வது வயதில் அல்லாஹ் அவர்களுக்கு “வஹீ” அருளி சத்தியத்தை-நேர்வழியை உறுதிப்படுத்தி அதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கக் கட்டளையிட்டனர். அப்படி சத்தியத்தைப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தவுடன் தான் அவர்களது 40-வது வயது வரை அவர்களை ஏற்றிப் போற்றிப் புகழ்ந்த வாய்கள் தான் இழிவுப்படுத்தின, கேவலப்படுத்தி தூற்றத் தொடங்கின. கட்டுக்கடங்கா துன்பங்களைக் கொடுத்தனர். குறைஷ்கள் கொடுத்த அனைத்துத் துன்பங்களையும் தாங்கிக் கொண்டு சத்தியத்தை-நேர்வழியை நபி(ஸல்) அவர்கள் பிரசாரம் செய்து வந்தனர். அதனால் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 7-ம் ஆண்டிலிருந்து 10ஆம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் ஹாஷிம் குடும்பத்தார், முத்தலிப் குடும்பத்தார் அனைவரும் (அபூலஹப் நீங்கலாக) ஊர் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். உண்ண உணவின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள். பாலின்றி பச்சிளம் சிசுக்கள் கதறும் சத்தம் அந்தப் பள்ளத்தாக்கு வெளியேயும் கேட்டது.

நபி(ஸல்) அவர்களின் இரண்டு பெண் மக்களை மணந்திருந்த அபூ லஹபின் இரண்டு மகன்கள் அவர்களை விசாக விடுதலை செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி விட்டார்கள். இவ்வளவு கொடுமைகள் இழைத்தும் நபி(ஸல்) அவர்களைச் சத்தியத்தைச் சொல்வதிலிருந்துப் பின்வாங்கச் செய்ய முடியவில்லை. இறுதியில் சதித்திட்டம் தீட்டி குறைஷ்கிளையார் அனைவரும் இனைந்து நபி(ஸல்) அவர்களைத் தீர்த்து கட்டவம் முற்ப்பட்டார்கள். அதனால் அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவை விட்டு மதீனா ஹிஜ்ரத் செய்யும் கட்டாயத்திற்கும் ஆளானார்கள்.

இப்போது சிந்தியுங்கள். இதை விடப் பெரிய ஃபித்னா-குழப்பம்-கலகம் அதற்கு முன்னராவது, பின்னராவது இடம் பெற்றதாக வரலாறு உண்டா? அப்படிப்பட்ட நிலையிலும் அல்லாஹ் இறக்கியதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்காமல் நபி(ஸல்) அவர்கள் மறைத்தார்களா? பெருங்கொண்ட மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். கடும் துன்பம் தருகிறார்கள் என்பதற்காக அல்லாஹ் அறிவித்ததை மறைத்தார்களா? இல்லையே! ஆம்! சத்தியத்தை-குர்ஆன், ஹதீஸ் அறிவிப்புகளை உள்ளது உள்ளபடி மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பவர்கள் ஒருபோதும் ஃபித்னா-குழப்பம்-கழகம் விளைவிப்பவர்கள் ஆகமாட்டார்கள். அதற்கு மாறாக சத்தியத்தை ஹதீஸில் உள்ளது உள்ளபடி மக்கள் மன்றத்தில் வைக்காமல் திரிபவர்களே ஃபித்ான செய்வார்கள். குழப்பம் விளைவிப்பவர்கள், இதையே ஃபித்னா நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை; நீங்கள் அவர்களுடன் பொராடுங்கள் என்ற 2:193 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.

3:103,105,6:153,159,30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக இயக்கங்கள் கண்டவர்கள், தங்களின் சுய நலத்திற்காக, இயக்க வளர்ச்சிக்காக அதிகமான மக்களின் ஆதரவை விரும்பும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அதிகமான மக்களின் ஆதரவை விரும்பும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அந்த அதிகமான மக்கள் கொடுக்கும் சந்தாக்கள், நன்கொடைகள் மற்றும் பண உதவிகளைக் கொண்டே அவர்களது இயக்கங்கள் இயங்க முடியும். அதிகமான மக்களின் ஆதரவை இல்லையென்றால் அவர்களின் இயக்கங்கள் முடங்கிப் பொகும் ஆபத்து இருக்கிறது. அந்த இயக்கங்களை ஆதரிக்கும் புரோகித மவ்லவிகளுக்குச் சம்பளம் கொடுக்க வில்லை என்றால் அவர்கள் அல்லாஹ்வுக்காக இறைவனது பொருத்தத்தை மட்டும் நாடி மார்க்கப்பணி செய்ய முன்வரமாட்டார்கள். எனவே இயக்கங்கள் நிலைத்து இயங்க வேண்டுமென்றால் மக்களின் மனங்கோனாதபடி மார்க்கப் பிரச்சாரம் என்ற பெயரால் மக்களின் மனோ இச்சைப்படி ஷைத்தானின் தூண்டுதலின்படி கோணல் வழிகளையே நேர்வழியாகப் பிரசாரம் செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

தங்களின் தவறான போக்கை நியாயப்படுத்த இப்படிப்பட்ட தப்பான காரணங்களை சொல்லி சத்தியத்தை மூடி மறைக்க முற்படுகிறார்கள். எனவே ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை (உம்மத்தின் வாகிதா) பிளவுப்படுத்தி இயக்க வழிபாடுகளில் சென்று நரகில் விழக் காத்திருக்கிறார்கள் என்பதே அல்குர்ஆன், அல் ஹதீஸ்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கும் மறுக்க முடியாத உறுதியான உண்மையாகும். அவர்கள் அதைவிட்டும் மீள துஆ செய்கிறோம்.

Previous post:

Next post: