ரமழானை முறையாக வரவேற்போம்!

in 2012 ஜூலை,தலையங்கம்,பொதுவானவை

அல்குர்ஆன் ஆல இம்ரான்: 3:102 இறைக் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து, அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்ள வேண்டிய முறைப்படி பயபக்தி கொண்டு முழுமையான முஸ்லிமாக வாழ்ந்து மரணிக்க விரும்பும் அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, திட்ட மாகத் துல்லியமாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி 1433 வருடத்திய ரமழான் மாதம் 20.07.2012 வெள்ளியன்று ஆரம்பித்து 17.08.2012 அதே வெள்ளியன்று 29 நோன்புகளுடன் முடிவடைகிறது. 18.08.2012 சனி 1433 வருடத்திய ஷவ்வால் மாதத்தின் முதல் நாள். அன்று தான் நோன்புப் பெருநாள் தினம்.

எனவே அல்பகரா: 2:185 இறைக் கட்ட ளைக்கு முற்றிலும் அடிபணிந்து 20.07.12ல் நோன்பை ஆரம்பித்து 17.08.12ல் 29 நோன்புகளுடன் நிறைவு செய்யுங்கள். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடப்பதன் மூலமே அவனது பொருத்தம் பெற்றுச் சுவர்க்கம் நுழைய முடியும்.

தூய இஸ்லாமிய மார்க்கத்தை இதர மதங்களைப் போல் மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளை நம்பி, கோள்கள் அனைத்துமே அல்லாஹ்வின் முழுக் கட்டுப்பாட்டில் அவற்றிற்குரிய வட்ட வரைகளில் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் காலங்காலமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன என்று கூறும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து, சந்திரனின் சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; மனிதக் கண் அதில் பட்டால்தான் சந்திரன் சுழல ஆரம்பிக்கும்; மனிதக் கண் சந்திரனில் படாதவரை அது அந்த இடத்திலேயே சுழலாமல் நிற்கும்; எனவே முதல் பிறை இரண்டு நாள்களும் இருக்கலாம், மூன்று நாள்களும் இருக்கலாம் என்ற இந்த மவ்லவிகளின் கூமுட்டை (ஃபத்வா) தீர்ப்பை நம்பி 20.07.12 அன்று ரமழான் நோன்பை ஆரம்பிக்காமல், 21 அல்லது 22ல் ஆரம்பிப்பவர்கள் ரமழான் ஒரு நோன்பையோ இரு நோன்புகளையோ பாழ்படுத்தி பெரும் இழப்புக்கு ஆளாகிறார்கள். அதற்காக அவர்களது வாழ்நாள் முழுவதும் நோன்பு நோற்றாலும் இழந்த அந்த நோன்புகளை ஈடுகட்ட முடியாது என்பதைச் சகோதர சகோதரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இது நபி(ஸல்) யின் எச்சரிக்கை!
அதேபோல் 18.08.12 சனியன்று ஷவ்வால் முதல் நாளாகும். பெருநாள் தினமாகும். இந்த மவ்லவிகளை நம்பி அன்று நோன்பு நோற்பது கொடிய ஹராமாகும். அன்று நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதன் மூலம் மெகா பாவிகளாவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறோம்!

குர்ஆன் யாசீன்! 36:21 இறைவாக்கு கூலி- சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள் என்று உறுதியாகக் கூறுகிறது. சம்பளத்திற்காக மாரடிக்கும் இந்த மவ்லவிகள் நேர்வழியில் இருக்க முடியுமா? மற்ற மதங்களின் மதகுருமார்கள் அவர்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை இறைவனது கட்டளைகளை நிராகரிக்கச் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களைச் செய்ய வைப்பது கொண்டு தங்கள் தொப்பைகளை எப்படி நரக நெருப்பால் நிரப்புகிறார்களோ(2:174), அப்பாவி மக்களை நரகில் தள்ளுகிறார்களோ, அதில் அணுவளவும் பிசகாது மவ்லவிகளான முஸ்லிம் மதகுருமார்களும் அற்பமான உலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு, அவர்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை இறைக் கட்டளை நிராகரிக்கச் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களைச் செய்ய வைத்து, தங்கள் தொப்பைகளை நிரப்புவ தோடு அப்பாவி முஸ்லிம்களை நரகில் தள்ளுகிறார்கள். முஸ்லிம்களே எச்சரிக்கை!
இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் இந்த மவ்லவிகள் யூதர்களையும், கிறித்தவர்களையும் சாணுக்கு சாண் முழத்திற்கு முழம் பின்பற்றுவார்கள். அவர்கள் ஒரு பொந்தில் நுழைந்தால் இவர்களும் நுழைவார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்கள். (புகாரிரீ(ர.அ.) 3456)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே 39:17 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து தாஃகூத்களான, மதகுருமார்கள் எனப் பீற்றும் இந்த மவ்லவிகளின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்ட உபதேசங்களின்படி நடப்பது கொண்டு, அவர்களை வணங்குவதைத் தவிர்த்து, அவர் களை முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு, நேரடியாக குர்ஆன், ஹதீஃதை சுய சிந்தனையுடன், தன்நம்பிக்கையுடன் படித்து விளங்க முன் வாருங்கள். 29:69ல் அல்லாஹ் வாக்களித்துள்ளபடி உங்களுக்கு நேர்வழியை அல்லாஹ்வே எளிதாக்குவான். அடுத்து, அந்நஜாத் 1986லிருந்து, மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களைக் கொடிய நரகில் தள்ளும் மவ்லவிகளான இந்த மதகுருமார்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதுவே முன்சென்ற நபிமார்கள் செய்த பணி என்பதையும், கல்லில் நார் உரிக்கும் பணி என்பதையும் அறிவீர்கள்.

பாவம் இம்மவ்லவிகள்! முதுகில் அடித்தால் தாங்கிக் கொள்வார்கள். ஆனால் அவர்களின் வயிற்றில் அல்லவா அடிக்கிறோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எம்மை மிகக் கடுமையாகத் திட்டுகிறார்கள்; அவதூறு பரப்புகிறார்கள். அமானித மோசடி என காதில் பூ சுற்றுகிறார்கள்; பக்தர்களை அந்நஜாத்தைப் படிக்க விடாமல் தடுக்கிறார்கள். மக்களை எமது கூட்டங்களுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். வால் போஸ்டர்களையும், நோட்டீஸ்களையும் கிழித்தெறிகிறார்கள். இதில் முன்னணியில் நிற்பவர்கள் அவர்கள் பெயருக்கேற்ப ததஜவினரே! ஆயினும் இம்மதகுருமார்களும் அவர்களின் கண்மூடி பக்தர்களும் நாளை நரகில் ஆகிவிடக்கூடாதே என்று அவர்கள் மீது அனுதாபப்பட்டும், அல்குர்ஆன் அல்மாயிதா: 5:67ல் அல்லாஹ் நபியை மிகக் கடுமையாக எச்சரித்திருப்பதை அதாவது அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை ஒளிவு மறைவின்றி மக்களிடம் எடுத்துவைக்க வேண்டும், அல்லாஹ் எம்மைக் காப்பாற்றுவான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி மக்கள் முன்னால் எடுத்து வைக்கிறோம்!
இப்பணிக்குப் பெருங்கொண்ட மக்களின் ஆதரவோ, ஒத்துழைப்போ, நிதி உதவியோ நிச்சயமாகக் கிடைக்காது என்பதையும் அறிந்தே இப்பணியைத் தொடர்கிறோம்.

கோடிக் கணக்கான சிப்பிகளில் ஒரு சில முத்துக்களே கிடைப்பது போல் கோடிக்கணக்கான மக்களில் ஒரு சிலரே நேர்வழிக்கு வருவார்கள் என்ற உண்மை பல நபிமார்களின் வரலாறுகளி லிருந்தும், குறிப்பாக நூஹ்(அலை) அவர்களின் வரலாற்றிலிருந்தும் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் மறுமையில் வெற்றியடைந்து சுவர்க்கம் செல்ல விரும்பினால் கல்லில் நார் உரிக்கும் இப் பணியைச் செய்தே ஆகவேண்டும். இம்மத குருமார்களின், அவர்களின் பக்தகோடிகளின் ஏச்சுப் பேச்சு, அவதூறுகள், சொல்லடிகள், கல்லடிகள் அனைத்தையும் பொறுத்தே தீர வேண்டும் என்பதை குர்ஆன் அல்அஸ்ர்:103:1-3 இறைவாக்குகள் உணர்த்துகின்றன.

அதனால் பெரும் மன உளைச்சலுக்கும், நிதி நெருக்கடிக்கும், எண்ணற்ற சிரமங்களுக்கு மிடையில்தான் அந்நஜாத் வெளிவருகிறது. வருடாவருடம் ஒரு கணிசமான தொகை துண்டு விழுகிறது. இம்மவ்லவிகளின், அவர் களின் கண்மூடிப் பக்தர்களின் அமானித மோசடி போன்ற அவதூறுகளின் பெரும் பலனாக அந்த ரப்புல் ஆலமீன் அச்சகத் தொழில் மூலம் எம்மை தலை நிமிரச் செய்துள்ளதால் சமாளிக்க முடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்! அந்நஜாத்தை வெளி அச்சகத்தில் அச்சடிப்ப தாக இருந்தால் என்றோ அந்நஜாத்திற்கு மூடு விழா நடத்தப்பட்டிருக்கும்.

அல்லாஹ்வின் பெருங்கிருபையைக் கொண்டு அந்நஜாத் தொய்வின்றி தொடர்ந்து வருகிறது. இம்மவ்லவிகளின் மாய, வசீகர, உடும்புப் பிடி யிலிருந்து விடுபட்ட சகோதர சகோதரிகளே அந்நஜாத்திற்குச் சந்தா செலுத்திப் படிக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையில் இலவச மாகத்தான் செல்கிறது.
முன்னர் நபிமார்கள் செய்த இந்த அரும் பணியை, இறுதி நபிக்குப் பின்னர் அவர்களின் உம்மத்தினர் செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம். இக்கட்டளைக்கு அடிபணிந்தே பல சிரமங்களுக்கு மத்தியில் அந்நஜாத் வெளி வருகிறது. அதன் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் தாராளமாக நிதி உதவி செய்யுங்கள். அடுத்து ஏழை எளியவர்களின் படிப்பு, தொழில், மருத்துவம், கடன், திருமணம் போன்றவற்றிற்கு ஜகாத் நிதியைத் தாராளமாக அனுப்பித்தர அன்புடன் வேண்டுகிறோம்.

Previous post:

Next post: