தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் (TNTJ) ஆதரவாளர்கள் சிந்திப்பதில்லையா?

in பிறை

அபூ அப்தில்லாஹ்

1999 நவம்பர் & டிசம்பர் , அல்முபீன் இதழில் சர்வதேச பிறையை ஏற்கக்கூடாது. தத்தம் பகுதியில் பிறை பார்த்தே நோன்பை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று எழுதி இருந்தார் தவ்ஹீத் மவ்லவி, அதற்கு முன்னர் 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் அப்போதைய அதன் ஆசிரியராக இருந்த இதே தவ்ஹீத் மவ்லவி, அவரது பெயரிலேயே ஓர் அறிவிப்புச் செய்திருந்தார். அதில் அப்போதைய 11 தவ்ஹீத் மவ்லவிகள்  (JAQH & TNTJ)  அனைவரும் ஐந்து அமர்வுகளில் அலசி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு என எழுதி சர்வதேச பிறையை ஏற்கலாம் என்று அறிவித்திருந்தார்.

சர்வதேச பிறையை முன்னர் 1997ல் ஏற்றுக் கொண்டவர், 1999ல் தத்தம் பகுதி பிறைக்கு பல்ட்டி அடிக்க உண்மைக் காரணம் அல்லாஹ்வும் அறிவான்; அவர் உள்ளமும் அறியும். ஆனால் வாகனக் கூட்டத்தார் பற்றிய “ஹதீஃதை’ தான் முன்னர் 1997ல், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சாட்சி சொன்னதின் பேரில், நபி(ஸல்) அவர்களும் நபி தோழர்களும் நோன்பை விட்டு அடுத்த நாள் ஈத்கா சென்று தொழுததாக தவறாக விளங்கியதாகவும், இப்போது 1999ல் வாகனக் கூட்டத்தார் சாட்சி சொல்ல வரவில்லை. நபி(ஸல்) அவர்களிடம் வந்து பிறை பார்த்த பின்னர் என்ன செய்யவேண்டும்? என்று சட்டம் கேட்கவே வந்தனர் என்று சரியாக விளங்கியதாகவும் தனது செயலை நியாயப்படுத்தி அறிவீனமாக எழுதி இருந்தார்.

அவரது இந்தக் குழப்பமான விளக்கத்தின் அடிப்படையில் எழுந்த சில ஐயங்களைத் தெளிவுபடுத்துமாறு நாம் பல முறை கேட்டும், இதுவரை அவர் பதில் அளிக்க முன்வரவில்லை. காரணம் நமது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அபத்தமான-மூளையற்ற ஒரு ஃபத்வாவை அப்போதும் இப்போதும் அவர் வழங்கி வருகிறார். இந்த நிலையில் இப்போது 2006ல் காயல்பட்டின வாசிகள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்வதா? அல்லது கணினி கணக்கீட்டின் அடிப்படையில் முன்கூட்டியே முடிவு செய்து செயல்படுவதா? என்று கேட்டு எழுதிய கடிதத்திற்குப் பதிலாக, அவர்கள் (TNTJ) 1999ல் அல்முபீனில் எடுத்த நிலைபாட்டில் எந்தவித மாறுதலும் இல்லை; அதாவது சர்வதேச பிறையை ஏற்க முடியாது; தத்தம் பகுதியில் பிறை பார்த்தே நோன்பை ஆரம்பித்து முடிக்க வேண்டும் என்று பதில் எழுதியுள்ளார்.

1999ல் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பவர்கள் அவர்களின் முடிவினால் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்வது அவர்களின் நீங்காக் கடமையாக இருக்கிறது. எனவே அந்த ஐயங்களை மீண்டும் இங்கு கேட்டுள்ளோம். TNTJ ஆதரவாளர்கள் இந்த ஐயங்களுக்கு அவர்களின் தலைவரிடமிருந்து உரிய பதில்களைப் பெற்றுத் தரக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களை நாம் விமர்சிக்கும் போது நவீன இமாமின்(?) முகல்லிதுகள், சுய சிந்தனையற்றவர்கள், பக்தகோடிகள் என்று எழுதுவதை சகிக்க முடியாமல் ஆத்திரப்படுகிறவர்கள், வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறவர்கள், இந்த எமது கேள்விகளுக்குரிய பதில்களைப் பெற்றுத் தந்துவிட்டால், நாம் எமது இந்தக் குற்றச்சாட்டுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதோடு அதற்காக அவர்களிடம் மன்னிப்பும் கேட்கத் தயாராக இருக்கிறோம். அவர்கள் இந்த ஐயங்களுக்குரிய சரியான, நேரடியான பதில்களை அவர்களின் தலைவரிடமிருந்து பெற்றுத் தரத் தவறினால், எமது இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் 100% உண்மை என்றே சுய சிந்தனையாளர்கள், குர்ஆன், ஹதீஃதை நேரடியாக விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் முடிவுக்கு வர நேரிடும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம். கேள்விகள் வருமாறு:

1. வாகனக் கூட்டத்தார், நபி(ஸல்) அவர்களிடம் சாட்சி சொல்ல வரவில்லை; ரமழான் பிறை பார்த்து நோன்பை ஆரம்பித்தவர்கள், அடுத்து ஷவ்வால் பிறை பார்த்து என்ன செய்யவேண்டும்? என்று தெரியாமல் சட்டம் கேட்கவே வந்தனர் என்பது TNTJ தலைவரின் விளக்கம். சட்டம் கேட்க வந்த வாகனக் கூட்டத்தார் சட்ட விளக்கம் கேட்டிருப்பார்களா? மாறாக “ஷஹிதூ’ என்று சாட்சி சொல்லியிருப்பார்களா? சந்தேகம் கேட்ட ஏதாவது ஒரு ஹதீஃதில் “ஷஹிதூ’ – சாட்சி சொன்னார்கள் என்ற அரபி பதம் இடம் பெற்ற ஒரு ஹதீஃதையாவது இவரால் காட்ட முடியுமா?

2. “நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று சாட்சி சொன்னார்கள் என்று தெளிவாக அரபியில் இருப்பதை “நேற்று நாங்கள் பிறை பார்த்தோம்’ என்று கூறினார்கள் என்று திரித்து-மறைத்து அதுவும் பல இடங்களில் தமிழில் எழுதியதின் நோக்கம் என்ன? சத்தியத்தை மறைப்பது தானே?

3. “பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும்’ என்று சட்டம் சொன்ன நபி(ஸல்) அவர்கள் அடுத்த பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் என்று சட்டம் சொல்லாமல் மறைத்து, அந்த வாகனக் கூட்டத்தாரை தடுமாற்றத்தில் விட்டிருக்க முடியுமா? “ஸுமூ லி ருஃயத்திஹீ அஃப்திரு லிருஃயத்திஹீ’ என்று முழுமையான ஹதீஃத் இல்லாமல் “ஸூமூலி ருஃயத்திஹீ’ என்று பாதியை மட்டும் சொல்லும் ஒரே ஒரு ஹதீஃதையாவது P.J.யால் காட்ட முடியுமா?

4. தலைப்பிறை பூரண சந்திரன் அல்ல; அண்ணார்ந்து பார்ப்பவர்களுக்கெல்லாம் தெரிவதற்கு. பிறை பார்த்து நோன்பை விட வேண்டும் என்று அக்கறையோடு கூர்ந்து பிறையைப் பார்ப்பவர்களின் கண்ணுக்கே தெரியாத அந்தச் சன்னக்கீற்று “பிறை பார்த்து நோன்பை விட வேண்டும்’ என்ற சட்டமே தெரியாதவர்களுக்கு எப்படித் தெரிந்தது? அவர்கள் பிறையைப் பார்க்க எவ்வித முயற்சியும் எடுத்திருக்க முடியாதே! இதற்கு என்ன விளக்கம் தருகிறார் TNTJ தலைவர்.

5. சட்டம் தெரியாத அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சட்டம் கேட்டு வருவதற்காக இரவோடு இரவாக வேகமாகச் செல்லும் குதிரைகளில் ஓரிருவரை அனுப்பி சட்டம் கேட்டு வரச்சொல்வார்களா? அல்லது இதற்கு மாறாக ஒரு கூட்டமாக சாவதானமாக மறுநாள் மாலை வந்து சட்டம் கேட்டிருப்பார்களா?
6. இதற்கு முன்னர் இதே TNTJ தலைவர், இந்த வாகனக் கூட்டம் பற்றிய இதே ஹதீஃதை விளக்கும்போது “”அவர்கள் பிறைப் பார்த்தார்கள்; நோன்பை விட்டார்கள்; காலையில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு, சாப்பிட்டு விட்டு சாவதானமாக நபி(ஸல்) அவர்களைச் சந்திக்க வந்த இடத்தில், நபி(ஸல்) அவர்களும், நபிதோழர்களும் நோன்புடன் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, நாங்கள் நேற்று பிறை பார்த்தோம் என்று சாட்சி சொன்னார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நபிதோழர்களைப் பார்த்து நோன்பை விடும்படியும், அடுத்த நாள் காலை தொழுகைத் திடலுக்கு வரும்படியும் கட்டளையிட்டார்கள்’ என்று பேசிப் பதிவாகி இருந்த ஆடியோ கேஸட்டை ஏர்வாடி பிறை விவாதத்தில் போட்டுக்காட்ட முற்பட்டபோது, அதைத் தடுத்து நிறுத்தினாரே? முன்னர் பேசிய விஷயமெல்லாம் இங்கு வேண்டாம் என்று கூறி தடுத்தாரே அதன் ரகசியம் என்ன?

7. முன்பு விளங்கிய சரியான விளக்கத்திற்கு முரணாக பின்னர் தவறான விளக்கம் கூற அவரைத் தூண்டியது எது? விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.

8. TNTJ தலைவரது வாதப்படி, தூரப் பிரதேசத்திலிருந்து சட்டமும் தெரியாமல், போதிய அறிவும் இல்லாமல் சாவதானமாக மறுநாள் மாலை நபி(ஸல்) அவர்களிடம் வந்து சட்டம் கேட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அவரது வாதப்படி நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் 30 நோன்புகளைப் பூர்த்தி செய்து விட்டு அடுத்த நாள் காலையில் தொழுகைத் திடல் சென்று தொழுகை நடத்த இருக்கிறார்கள் என்பதை TNTJ தலைவரும் மறுக்க மாட்டார். அப்படியானால் நபி(ஸல்) எப்படிக் கட்டளை இட்டிருப்பார்கள்? தங்கி காலையில் எங்களோடு தொழுதுவிட்டுச் செல்லுங்கள் என்று கட்டளையிட்டிருப்பார்களா? அல்லது அதற்கு மாறாக இன்னொரு இரவு, பகல் பிரயாணம் செய்து அடுத்த நாள் மாலை அவர்கள் ஊருக்குச் சென்று அவர்களது தொழுகைத் திடலில் 3ம் நாள் காலை தொழுகை நடத்தும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளை இட்டிருப்பார்களா?

வந்த வாகனக் கூட்டத்தாரைச் சட்டம் முழுமையாகத் தெரியாத அரைகுறை என்று கூறுவது போல், நபி(ஸல்) அவர்களும் சட்டம் முழுமையாகத் தெரியாத அரைகுறை (நவூதுபில்லாஹ்) என்பதுதான் TNTJ தலைவரின் முடிவா? நேரடியாக விளக்கம் பெற விரும்புகிறோம். இல்லை என்றால் என்ன முகாந்திரத்தோடு, அவர்கள் ஊருக்குச் சென்று 3ம் காலை தொழுது கொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் வாகனக் கூட்டத்தாருக்குக் கட்டளை இட்டதாக இந்த தவ்ஹீது(?) மவ்லவி சரடு விடுகிறார்?

9. பிறை பார்த்து நோன்பு திறக்க வேண்டும் என்ற ஆரம்ப சட்டமே தேரியாத அந்த வாகனக் கூட்டத்தார், அதன் பின்னர் செய்ய வேண்டிய செயலான பெருநாள் தொழுகை முறையை எப்படி அறிந்து வைத்திருந்தார்கள்? அறிவு ஏற்றுக் கொள்கிறதா?

10. வாகனக் கூட்டத்தாரின் ஊருக்குச்சென்று அவர்களது தொழுகைத் திடலில் 3ம் நாள் தொழுகை நடத்தும் அளவுக்கு அவர்களின் தொழுகைத் திடல், மஸ்ஜித் நபவிக்கு அருகில் மதீனாவில் உள்ள தொழுகைத் திடலை விட அந்தஸ்தில் உயர்ந்ததா? என்பதை விளக்கக் கோருகிறோம்.

11. எல்லோரும் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் மாதத்தை அடைகிறார்கள் என்று நாம் கூறுவதை எல்லோரும் ஒரே நேரத்தில் அதாவது ஒரே வினாடியில் அடைகிறார்கள் என்று நாம் கூறுவதாக எழுதி இருப்பது (அல்முபீன் நவம். டிசம். 1999, பக், 30) அப்பட்டமான அவதூறா இல்லையா? அந்த அடிப்படையில்தானே எல்லோரும் ஒரே நேரத்திலா நோன்பு நோற்கிறார்கள்; நோன்பு திறக்கிறார்கள். ஐங்கால தொழுகைகளைத் தொழுகிறார்கள்; ஒரு பகுதியில் சூரிய கிரணம் என்றால் உலகம் முழுவதும் கிரணத் தொழுகை தொழுகிறார்களா? என்று கேட்டு தமது பக்தர்களை ஏமாற்றுகிறார் என்று கூறினால் அதில் என்ன தவறு காண்கிறார்?

உலகின் கிழக்குக் கோடியிலிருந்து, மேற்குக் கோடிவரை முழு உலகமும் ஒரே நாளான வெள்ளிக்கிழமை ஜுமுஆவை 24 மணி நேரம் ஒரு நாளைக்குள் தொழுது முடித்து விடுகிறார்கள். இரண்டு நாள் ஆவதில்லை என்ற அடிப்படை அறிவும் இந்த தவ்ஹீத் மவ்லவிக்கு இல்லையா?

24 மணி நேரத்திற்குள் வரும் அதிக பட்சம் சில மணி நேரங்களே நீடிக்கும் ஐங்கால தொழுகைகளையும், சில மணி நேரத்திற்குள் முடியும் சூரிய, சந்திர கிரகணங்களையும், சுமார் 13 மணி நேரத்திற்குள் இடம் பெறும் நோன்பு நோற்பதையும்,நோன்பு திறப்பதையும் 29 அல்லது 30 நாட்கள் அதாவது 696 அல்லது 720 நீண்ட மணி நேரம் நீடிக்கும் பிறையோடு ஒப்பிட்டுப் பேசுகிறவர் ஒன்றில் அறிவு சிறிதும் இல்லாத அடி முட்டாளாக இருக்க வேண்டும்; அல்லது அறிந்து கொண்டே தனது பக்தர்களை ஏமாற்ற வேண்டும். இதில் அவர் எந்த ரகம் என்பதை TNTJ யினர் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

12. TNTJ தலைவரின் ஃபத்வாபடி தத்தம் பகுதிகளில் பிறையை புறக்கண்ணால் கண்டு செயல்படுகிறீர்களா? அல்லது சர்காஜியின் ஃபத்வாபடி செயல்படுகிறீர்களா? மறைக்காமல் பதில் தரவும்.

இந்த 12 கேள்விகளுக்கும் தங்களின் தலைவரிடமிருந்து TNTJ சகோதரர்கள் உரிய பதில்களைக் கேட்டு எங்களுக்கு அறிவித்துத் தங்களின் அறிவுக் கூர்மையை, சுய சிந்தனையை நிலைநாட்ட வேண்டும். ஒன்றில் இவற்றிற்குரிய சரியான பதில்களைப் பெற்றுத் தரவேண்டும்; அல்லது தங்கள் தலைவரின் பிறை பற்றிய தீர்ப்பு அடி முட்டாள்த்தனமான தீர்ப்பு என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் குர்ஆன், ஹதீஃதை சுயமாக விளங்கிச் செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் நம்புவார்கள்.
இந்த இரண்டில் ஒன்றையும் செய்யாமல் அவர்கள் மெளனம் சாதித்தால், நாம் கூறி வருவது போல் TNTJ சகோதரர்கள் நவீன இமாமின்(?) முகல்லிதுகள் தான், சுய சிந்தனையற்றவர்கள்தான், பக்தகோடிகள்தான் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு உறுதி அளிப்பதாகவே நடுநிலையாளர்கள் புரிந்து கொள்வார்கள்.

பிற்சேர்க்கை:
1997 நவம்பர் அல்ஜன்னத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்களைச் செய்து மவ்லவிகள், வானியல் அறிஞர்கள், மற்றும் பலர் பல அமர்வுகளில் தீர ஆய்வு செய்து பின்னர் சர்வதேச பிறையை ஒப்புக்கொண்டு PJ தனது பெயரிலேயே வெளியிட்டவருக்கு என்ன நிர்பந்தம் ஏற்பட்டதோ அப்படியே அந்தர் பல்டி அடித்துச் சர்வதேச பிறையைத் தான் சரிகண்டது பெருந்தவறு என்றும் தன்னைத் தடுமாறச் செய்தது வாகனக் கூட்டத்தார் பற்றிய ஹதீஃதை தான் தவறாக விளங்கியதாக, அதாவது வாகனக் கூட்டத்தாருக்கு நபி(ஸல்) கட்டளையிட்டதைத்தான் நபிதோழர்களுக்குக் கட்டளையிட்டதாகத் தவறாக விளங்கியதாக ஒரு நொண்டிக் காரணத்தைச் சொன்னதோடு, அந்த ஹதீஃதில் “ஷஹிதூ’ சாட்சி சொன்னார்கள் என்றிருப்பதைக் கூறினார்கள், சொன்னார்கள் என்று இருட்டடிப்புச் செய்து 2:159 கூறுவது போல் ஹதீஃத் தெளிவாக நேரடியாக இருப்பதை மறைத்து அல்முபீன் நவம்பர், டிசம்பர் 1999ன் 120 பக்கங்களையும் மூடத்தனமான சுய விளக்கங்களால் பாழடித்திருந்தார்.

சுய சிந்தனையோடு அதைப் படித்தவர்கள் வாயால் சிரித்திருக்கமாட்டார்கள். அந்த அளவு வேடிக்கையும் மூடத்தனமும் நிறைந்ததாக அவரது சுய விளக்கங்கள் அமைந்திருந்தன. அந்த அபத்தங்களை அம்பலப்படுத்தி 2000 ஜனவரி அந்நஜாத்தின் 48 பக்கங்களில் தெளிவுபடுத்தியதோடு பல கேள்விகளையும் கேட்டிருந்தோம். எமது கேள்விகளுக்கு குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் விளக்கம் தரும் யோக்கியதை அவருக்கில்லை. அதன் பின்னரும் பலமுறை மேலே கண்டுள்ள 12 கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். 13 நீண்ட வருடங்கள் ஆகியும் இன்றுவரை எமது இந்த 12 கேள்விகளுக்குப் பதில் தரும் தகுதி அவருக்கோ அவரின் கைத்தடிகளுக்கோ இல்லை.

இவை அல்லாமல், 2011 பிப்ரவரி அந்நஜாத் இதழில் இடம்பெற்ற “”பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும்” என்று அறிவீனமாகக் கூறும் PJ யிடமும் அவரது பக்தகோடிகளிடமும் 30 கேள்விகளையும், நாள் மஃறிபிலிருந்துதான் ஆரம்பிக்கிறது; ஃபஜ்ரிலிருந்து அல்ல என்று கூறும் PJ யிடமும் அவரது பக்தர்களிடமும் 16 கேள்விகளைக் கேட்டு 18 மாதங்கள் உருண்டோடி விட்டன. இன்று வரை PJ க்கோ அவரது கைத்தடிகளுக்கோ, பக்தர்களுக்கோ இந்த 12+30+16 =58 கேள்விகளுக்கும் உரிய பதில் தர முடியாமல் தவிக்கின்றனர். ஆயினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீண் ஜம்பம் பேசுவார்களே அவர்களைப் போல் கடந்த 13 வருடங்களாக சொன்ன அறிவீனங்களையே மீண்டும் மீண்டும் சொல்லித் தங்களின் கண்மூடி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்கள். கடந்த 13.07.12 வெள்ளி ஜுமுஆ மேடையில் PJ யின் கைத்தடி பக்கீர் முஹம்மது அல்தாபி திருச்சி சிங்காரத்தோப்புப் பள்ளியில் அதே வாகனக் கூட்ட ஹதீஃதுக்கு அதே அறிவீனமான வாதங்களை எடுத்துச் சொல்லி அங்கு குழுமி இருந்தவர்கள் காதில் பூ சுற்றி இருக்கிறார்.

ஆம்! வழிகேட்டில் கப்ரு வணக்கத்தை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் ஜமாலியை இந்த உலவிகளும், அல்தாபிகளும் விஞ்சிவிட்டார்கள். ஜமாலி எப்படிச் சொன்னதையே காலம் காலமாகச் சொல்லி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறாரோ அதே போல் குர்ஆன், ஹதீஃத் ஆதாரமே இல்லாத நிலையில் வாகனக் கூட்டத்தார் ஹதீஃதை ஜமாலியைப் போல திரித்து, வளைத்து, மறைத்து 2:159-162 இறைவாக்குகள் சொல்வது போல் இறைவனது, மலக்குகளது, மனிதர்களது சாபத்திற்கு ஆளாகி நரகை நோக்கி நடைபோடுகிறார்கள் ததஜவினர்.

4:49, 53:32 இறைவாக்குகள் நேரடியாகக் கூறுவதை முற்றிலும் நிராகரித்து 2:39 சொல்வது போல் குஃப்ரிலாகி, தாங்கள்தான் பட்டம் பெற்ற மவ்லவிகள்-ஆலிம்கள்; குர்ஆன், ஹதீஃதைத் தெளிவாக விளங்கும் ஆற்றல் மிக்கவர்கள் எனத் தம்பட்டம் அடிக்கும், மவ்லவி அல்லாதவர்களுக்கு குர்ஆன் விளங்காது என இழிவுபடுத்தும் இவர்கள்தான் ஜாஹில்கள்-மூடர்கள், தவ்ஹீத்வாதிகள் என்போர் தான் கடும் ´ஷிர்க்வாதிகள் என நாம் கூறுவதை உண்மைப்படுத்துகிறார்கள்.

நாம் கூறுவது தவறு, அவர்கள்தான் நேர்வழியில் இருப்பதாக அவர்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்தால், எமது 58 கேள்விகளுக்கும் திரிக்காமல், மறைக்காமல், வளைக்காமல் குர்ஆன், ஹதீஃத் கொண்டு மட்டுமே விளக்கம் தரட்டும். அவர்களால் நேரடியான பதிலைத் தர முடியாது. தங்களின் வார்த்தை ஜாலங்கள் மூலம் அவர்களது கண்மூடி பக்தர்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை நரகில் தள்ளவே முற்படுவார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். 2:186, 7:3, 33:36, 29:69 இறைக் கட்டளைகள்படி அல்லாஹ்வை மட்டுமே நம்பி அவனை மட்டுமே முன்னோக்கி இருப்பவர்களை அவன் ஒருபோதும் கைவிடமாட்டான். பொய்யர்கள் மீதே அல்லாஹ்வின் சாபம உண்டாகும். (பார்க்க: 3:61) ததஜவினர் எக்கூட்டத்தில் இருக்கிறார்கள்? ததஜ ஆதரவாளர்களே சுயமாகச் சிந்தியுங்கள்! நேர்வழி பெறுங்கள்! வெற்றி அடையுங்கள்!

Previous post:

Next post: