ஆயிஷா(ரழி) மணமுடிக்கும்போது…. சிறுமியா? பருவமடைந்த கன்னிப்பெண்ணா?

in 2012 அக்டோபர்,பொதுவானவை,பொதுவானவை

அபூ அப்தில்லாஹ்

கேப்டன் அமீருத்தீன் ஆகஸ்ட் 2009-ல் பதிப்பித்த “”நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் “மைனர்’ பெண்ணை மணந்தார்களா? என்ற சிறிய நூலை ஆய்வுக்காக அனுப்பி இருந்தார்கள். அந்நூலில் புகாரீ, முஸ்லிம் முதல் பெரும்பாலான ஹதீஃத் நூல்களிலும், வரலாற்று நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தகவலை விமர்சித்து-மறுத்து நடுநிலையாளர்கள் மறுக்க முடியாத வரலாற்று ஆதாரங்களைத் தொகுத்துத் தந்திருந்தார். கடந்த 1000 வருடங்களாக இஸ்லாமிய மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள் என மார்தட்டும், ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா எனப் பெருமை பேசும், மார்க்க அறிஞர்களாக பெரும்பான்மை முஸ்லிம்களால் கண்மூடி நம்பப்படும் முஸ்லிம் சமுதாயத்தில் வெறும் 5% கூட தேறாத, மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் அச்சிறு கூட்டம் கடந்த 1000 வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடச் செய்திருக்கும் “”ஆயிஷா(ரழி) அவர்களை இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் மணமுடிக்கும் போது அவர்கள் 6 வயது சிறுமியாக இருந்தார்கள். மூன்று வருடம் கழித்து அவர்களின் 9-ம் வயதில் மண வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்ற செய்தியே ஆகும் அது!

ஹதீஃத்களை எவ்வாறு தேர்வு செய்யவேண்டும்?
அந்நூலை முழுமையாகக் கருத்தூன்றிப் படித்த பின்னர் எமது சிந்தனையில் தோன்றியது, அவர் தந்துள்ள வரலாற்று ஆதாரங்களை மறுக்கவும் முடியவில்லை; அதே சமயம் மக்களால் சஹீஹ்-உண்மையானவை என நம்பப்படும் புகாரீ, முஸ்லிம் மற்றும் பல ஹதீஃத் நூல்கள், ஆதாரமாகக் கொள்ளத்தக்க வரலாற்று நூல்கள் இவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும் மேலே கண்ட செய்தியை எடுத்தேன் கவிழ்த்தேன் என நிராகரிக்கவும் முடியவில்லை. எனவே முஸ்லிம்களால் ஹதீஃத் என நம்பப்படும் அச்செய்தியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். தக்க குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் கொண்டு மட்டுமே அச்செய்தியை மறுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தோம். அதையே சகோதரர் அமீருத்தினிடமும் சொன்னோம்.

அதையே சகோதரர் இரண்டாவதாக மார்ச் 2012-ல் பதிப்பித்துள்ள “”நபிகள் நாயகம் பால்ய திருமணம் புரியவில்லை” என்ற தொகுப்பின் பக்கம் 5-ல் “உங்களின் ஆய்வு சிந்தனையைத் தூண்டுகிறது. “ஸஹீஹ்’ எனச் சொல்வதால் தவறும் உண்மையாகி விடாது. குர்ஆன் சட்டப்படி ஸஹீஹ் என்பதற்கு இரண்டு சாட்சிகள் வேண்டும். ஆகவே திருமணக் காலத்தில் அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வயது குறித்த அனைத்து ஹதீஸ்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று நாம் கூறியதை அப்படியே எடுத்து எழுதியுள்ளார் சகோதரர் அமீருத்தீன். ஆயிஷா(ரழி) அவர்களின் பால்ய திருமணம் பற்றிய ஹதீஃத்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற எண்ணம் சகோதரரின் முதல் நூலைப் படித்தவுடன் ஏற்பட்டதேயன்றி, அதில் முழு முனைப்புடன் ஈடுபடுத்திக் கொள்ளும் உத்வேகம் எமக்கு ஏற்படவில்லை. அதற்குரியக் காரணத்தை “”அந்நஜாத்தின் இப்பிடிவாதப் போக்கு நியாயமா?” என்ற ஆக்கத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.

சகோதரர் அமீருத்தீனின் “நபி நாயகம் பால்ய திருணம் புரியவில்லை” என்ற இரண்டாவது நூலைப் படித்த பின்னர் அந்த எமது எண்ணத்திற்கு மேலும் வலு உண்டாயிற்று. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

ஹதீஃத் நூல்களின் உண்மை நிலை!
இன்று முஸ்லிம்களின் நடைமுறையில் ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸிஹாஹ் சித்தா என்று ஹதீஃத் நூல்கள் உண்மையானவை, ஏற்கத்தக்கவை என்ற பலமான எண்ணம் வேரூன்றியிருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் நபி(ஸல்) அவர்களின் 40வது வயதிலிருந்து 63வது வயது வரை சிறிது சிறிதாக ஏகன் அல்லாஹ்வால் ஜிப்ரீல் மூலம் இறக்கியருளப்பட்டு உடனுக்குடன் தோல், எலும்பு போன்ற ஏடுகளிலும், நபி(ஸல்) மற்றும் நபி தோழர்களின் உள்ளங்களிலும் பதியப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வரும் அல்குர்ஆன் மட்டுமே முற்றிலும் ஸஹீஹானது; ஏற்கத்தக்கதாகும். மேலும் குர்ஆனின் நம்பகத் தன்மையை உலகம் அழியும் வரை அல்லாஹ் பாதுகாத்து வருவதாக உத்திரவாதம் அளித்துள்ளான். (பார்க்க: 15:9)

அடுத்து நபி(ஸல்) அவர்களின் 40வது வயதிலிருந்து 63வது வயது வரை அல்லாஹ்வுடன் வஹியின் தொடர்புடனும், அல்லாஹ்வின் நேரடிக் கண் காணிப்பிலும் (52:48) இருந்த கால கட்டத்தில், அவர்கள் வஹீ மூலம் பெற்று மக்களுக்கு மார்க்க மாக அறிவித்த (பார்க்க: 53:2-12) நபி(ஸல்) அவர்க ளின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் மார்க்கத்திற்கு உட்பட்டவை என்பதும் உண்மைதான் (ஸஹீஹ்). ஆனால் அல்குர்ஆனைப் போல் இவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. முன்னைய நபிமார்களுக்கு இறக்கியருளப்பட்ட நெறிநூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாதது போல் இறுதித் தூதரின் நடைமுறைகளும் (ஹதீஃத்) உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை.

வேதங்கள் என்றால் என்ன?
முன்னைய நெறிநூல்கள் கடவுளின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் மதகுருமார்களின் யூகங்கள், சுயவிளக்கங்கள், கற்பனைக் கட்டுக்கதைகள் நிறைந்த செயல்படுத்த முடியாத வேதாந்தங்கள் நிறைந்த “”வேதங்கள்”(?) ஆனது போல், நபி நடை முறைகளும் இட்டுக் கட்டப்பட்ட, பொய்யான, பலவீனமான ஹதீஃத்கள் கொண்டு நிரப்பப்பட்டு நடைமுறைச் சாத்தியமில்லாதவை ஆகிவிட்டன. ஆயினும் முன்னைய நபிமார்களின் சமுதாயங்கள் கலப்படமான தங்களின் வேதங்களிலிருந்து இறையறிவிப்புக்களையும், நபி நடைமுறைகளையும் தேடிப்பிடித்து, கண்டறிந்து அதன்படி நடப்பது அவர்களுக்குச் சோதனையாக இருந்தது போல், இறுதிச் சமுதாயமான முஸ்லிம்களுக்கும், கலப்பட மான ஹதீஃத்களிலிருந்து ஆதாரபூர்வமான ஹதீஃத் களைத் தேடிப் பிடித்து, கண்டறிந்து அதன்படி நடப்பது முஸ்லிம்களுக்குரிய சோதனையாக இருக்கிறது. (பார்க்க : 2:214)

ஹதீஃத்கள் நூல்கள் அனைத்துமே நபி(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து சுமார் 250 ஆண்டுகளுக்குப் பிறகே அறிவிப்பாளர் வரிசையுடன் (சனது) முறையாகக் கோர்வை செய்யப்பட்டன. இடைப்பட்ட அக்காலத்தில் இந்த ஹதீஃத்கள் வாய்வழிச் செய்திகளாக வந்தவைதான். மனித பலகீனம், மறதி, சுயநலம், பேராசை இத்யாதி இத்யாதி இழி குணங்களால் நபி(ஸல்) கூறாதவை எல்லாம், அவை நபியவர்களால் சொல்லப்பட்டதாகப் பொய்யாக நுழைக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எனவே ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், ஸிஹாஹ் சித்தா என்று இந்த நூல்களை உண்மையானவை என்று கூறுவது பெருந்தவறாகும். உண்மைக்குப் புறம்பானதாகும். ஸஹீஹ்-உண்மையானது என்று கூறுவதற்கு முழுத்தகுதி பெற்றது அல்குர்ஆன் மட்டுமே! முரண்பாடற்றது (4:82, 18:1, 39:23,28) உண்மைக்கு மாறுபாடற்றது என்றுமே பொய் அணுகாதது(41:42) என்ற நிலை குர்ஆனுக்கு மட்டுமே உரியது. இதற்கு மாறாக ஹதீஃத் நூல்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரண்பாடுகள், மனிதக் கற்பனைகள், பொய்கள் இவற்றிற்கு அப்பாற்பட்டவை என்று யாருமே உத்திரவாதம் அளிக்க முடியாது. ஹதீஃத் நூல்கள் ஸஹீஹானவை அதாவது உண்மையானவை என்று நம்புகிறவர்கள், சொல்கிறவர்கள் பைபிள், தோரா, ஹிந்து வேதங்கள் போன்ற அனைத்து வேதங்களும் உண்மையானவை என்று சொல்லி அவர்களை நம்பியுள்ள பெருங்கொண்ட மக்களைப் பெரும் வழி கேட்டில் இட்டுச் செல்லும் அந்தந்த மதங்களின் மதகுருமார்களைப் போல், முஸ்லிம் மதகுருமார்களும் தங்களை முற்றிலும் நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

நபி(ஸல்) ஆயிஷாவை 6 வயதில் மணமுடித்தார்களா?
எமது இந்தக் கருத்தை ஆயிஷா(ரழி) அவர்கள் திருமணம் முடிக்கும்போது அவர்கள் சிறுமியாக இருந்தார்கள் என்று கூறும் ஹதீஃத்களை இடம் பெறச் செய்துள்ள ஹதீஃத் நூல்கள் அனைத்திலும் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான செய்திகள் உண்மைப்படுத்துகின்றன. சகோதரர் அமீருத் தீன் தொகுத்துத் தந்துள்ள “”நபிகள் நாயகம் பால்ய திருமணம் புரியவில்லை” என்ற நூல் இந்த உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆனாலும் ஹதீஃத் நூல்களில் முன்னுக்குப் பின் முரணாகவும், பொய்ச் செய்திகளும் கலந்துவிட்டன. அவை உண்மை நிலையில் இல்லை. எனவே ஹதீஃத்களைப் புறக்கணித்து விட்டு குர்ஆனை மட்டும் எடுத்து நடப்பதே நேர்வழி என்று ஒரு சாரார் கூறித் திரிவது பெருந்தவறாகும், கலப்படங்கள் நிறைந்த முன்னைய நெறிநூல்களில் (வேதங்க ளில்) உள்ள நேர்வழி கருத்துக்களைக் கண்டறிந்து அக்கால மக்கள் நடப்பது அவர்கள்மீது சோதனை யாக இருந்தது போல் இன்று முஸ்லிம்களுக்குக் கலப்படம் நிறைந்த ஹதீஃத் நூல்களிலுள்ள நேர்வழிக் கருத்துக்களைக் கண்டறிந்து நடப்பது சோதனையாக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலக வாழ்க்கை சோதனை வாழ்க்கையே என்று அல்குர்ஆன் 2:214, 5:48, 94, 6:165, 11:7, 16:92, 67:2 போன்ற பல வசனங்கள் கூறி எச்சரிக்கின்றன.

எது இறை(வேத) வாக்கு?
ஆனால் எப்படிக் கிறித்தவர்கள் மனிதக் கற்பனைகள் நிறைந்த கலப்படமான பைபிளிலுள்ள அனைத்தும் வேதவாக்குகள் (Gospel Truth) என்று ஏற்று வழிகெட்டுச் செல்கிறார்களோ, அவர்களை சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் அப்படியே கண்மூடிப் பின்பற்றி ஹதீஃத் நூல்களிலுள்ள மனிதக் கற்பனைகள், கட்டுக்கதைகள் அனைத்தையும் ஸஹீஹானவை அதாவது உண்மையானவை, இறைவாக்குகள் எனக் கூறி முஸ்லிம்களில் பெருங் கூட்டம் வழிகெட்டுச் செல்கின்றனர். ஒரு சிறு கூட்டம் ஹதீஃத்கள் கலப்படமாகிவிட்டன. அவற்றை எடுத்து நடக்க முடியாது. வாழ்க்கைச் சோதனைகளுக்கு ஆட்பட நாங்கள் தயாரில்லை. (பார்க்க: 2:214) எங்களுக்கு குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி வழிகெட்டுச் செல்கின்றனர்.
குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்று சொல்வதிலும் அவர்கள் பொய்யர்களே; காரணம் நூற்றுக் கணக்கான குர்ஆன் வசனங்களுக்கு அவர்கள் சுய விளக்கம் கொடுத்து அவற்றை நிராகரிக்கிறார் கள்.(பார்க்க: 2:39,159, 25:30) உண்மையில் அவர் கள் குர்ஆனைப் பின்பற்றவில்லை. ஷைத்தானைப் பின்பற்றுகின்றனர் என்பதே உண்மையாகும்.

ஷைத்தானுக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்ட ளையை விட அவனது பகுத்தறிவு அவனுக்கு அழகாகத் தெரிந்தது போல், இங்கு அஹ்ல குர்ஆன் வழிகேடர்களுக்கும் அல்லாஹ்வின் நேரடிக் கட்ட ளைகளை விட அவர்களின் பகுத்தறிவு அழகாகவும், மேலானதாகவும் அவர்களுக்குத் தெரிகிறது. ஒரு வகையில் நாத்திகர்கள், காதியானிகள் வழி நடக்கின்றனர் என்று சொல்லலாம்.

நேர்வழி நடப்பவர்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய, செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் குர்ஆன் வசனங்கள் சொல்லும் நேரடிக் கருத்துக்க ளுக்கு எவ்விதச் சுயவிளக்கமும் கூறி 2:159-162 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ், மலக்குகள், மனிதர்களின் சாபத்திற்கு ஆளாகி வழிகெட்டுச் செல்லாமல், அவற்றில் உள்ளதை உள்ளபடி அப்படியே எடுத்து நடப்பார்கள்.

அடுத்து ஹதீஃத் நூல்களில் காணப்படும் ஹதீஃத்கள் அனைத்தையும் அப்படியே கண் மூடி நபி நடைமுறைகளாக(சுன்னத்) ஏற்று நடக்காமல், அவற்றை முழுமையாக, முறையாகப் பரிசீலனைச் செய்து, ஆதாரபூர்வமானவற்றை மட்டுமே எடுத்து நடப்பார்கள். ஆதாரமற்ற, சந்தேகத்திற்குரிய ஹதீஃத்களை 17:36 இறைக் கட்டளைப்படி விட்டு விடுவதையே நேர்வழியாகக் கொள்வார்கள்!

ஹதீஃத்களை எப்படித் தரம் பிரிப்பது?
இன்று நடைமுறையில் இருக்கும் லட்சக்கணக் கான ஹதீஃத்களை எப்படித் தரம் பிரிப்பது? இந்த மதகுருமார்கள் அவர்களின் அற்பமான இவ்வுலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு தாபி யீன்கள், (நபித்தோழர்களைச் சந்தித்தவர்கள்), தபவு தாபியீன்கள் (தாபியீன்களைச் சந்தித்தவர்கள்) போன்றோரின் சுய கருத்துக்களை எல்லாம் ஹதீஃத்கள் என்ற பெயரால் மக்களிடையே புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் ஆறு ஆயிரத்தைத் தாண்டாத நிலையில் இன்று ஹதீஃத்களின் பெயரால் பல லட்சம் ஹதீஃத்கள் புழக்கத்தில் இருப்பதற்குக் காரணம் நபி(ஸல்) அவர்களின் பெயரால் இப்புரோகிதர்கள் கற்பனை செய்துள்ள பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃத்கள், தாபியீன்களின் சுய கருத்துக்கள், தபவு தாபியீன்களின் சுயக் கருத்துக்கள் என்று ஹதீஃத்களின் பெயரால் இன்று முஸ்லிம்களிடையே வலம் வருகின்றன.

ஒரு மவ்லவி மக்கள் மத்தியில் உரையாற்றும் போது, 10 ஹதீஃத்கள் சொன்னால் அவற்றில் ஓரிரு ஹதீஃத்களைத் தவிர எஞ்சியவை போலியானவையாகவே இருக்கும். ஏன் இப்படித் துணிந்து பொய் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வாதாரமே அதில்தான் தங்கி இருக்கிறது. எனவே 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல், அவர்கள் கூறுவது பலகீனமான, இட்டுக்கட்டப் பட்ட ஹதீஃத்கள் என்று அவர்கள் பெற்ற பிள்ளை களை அறிவது போல் திட்டமாக அறிந்த நிலையில் தான் மக்களிடையே பரப்பி, “”மனிதனுக்கு அவனுடைய வயிற்றை விட மிகக் கெட்டப் பாத்திரம் வேறொன்றுமில்லை. “”(மிக்தாம் இப்னு மஃதீகர்பு (ரழி) அல்ஹதீஃத் 685) என்ற நபிமொழியைப் புறக் கணித்து ஹராமான வழிகளில் தங்களின் வயிறுகளை நிரப்புகின்றனர்.

முத்தவாத்திரான ஹதீஃத்கள்!
எனவே ஹதீஃத்களைத் தெரிவு செய்வதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மிகமிக ஆதாரபூர்வமான ஹதீஃத் என்றால் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தில் உள்ளதைப் பல நபி தோழர்கள் அறிவித்திருக்க வேண்டும் (முத்தவாத்திர்). அப்படிப் பட்ட ஹதீஃத்களில் மிகமிகப் பிரபலமான ஹதீஃத் “”நான் சொல்லாததைச் சொன்னதாக வேண்டு மென்றே எவன் பொய்யுரைக்கிறானோ அவன் தன்னிருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கும் ஹதீஃதாகும். தமக்குப் பின்னால் தமது சமூகத்தில் திருட்டுத் தனமாக, சட்டவிரோதமாகப் புகும் இம்மதகுருமார்களான புரோகிதர்கள் திட்டமிட்டே வேண்டு மென்றே தாம் சொன்னதாகப் பொய்யானச் செய்திகளை ஹதீஃத்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பார்கள் என்று முன்கூட்டியே அறிந்தே நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். ஆயினும் இம்மதகுருமார்களின் உள்ளங்கள் கற்பாறைகளை விடக் கடினமாக இறுகி விட்டதாலும் (பார்க்க 2:74, 5:13, 6:125) இதயங்களிலும், செவிப் புலன்களிலும் அல்லாஹ் முத்திரை இட்டு விட்டதாலும் (பார்க்க 2:6-7, 7:175-179, 36:7-10), குர்ஆன் வசனங்களே அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டாலும் அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து திருந்தமாட்டார்கள். அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பி, அல்லாஹ்வை உண்மையில் அஞ்சி நடப்பவர்களுக்கே குர்ஆனின் அறிவுரைகள் பலன்தரும். (பார்க்க: 2:2-5, 36:11, 51:55)

ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள்!
முத்தவாத்திரான ஹதீஃத்களை அடுத்து ஆதார பூர்வமான ஹதீஃத்களாகக் கொள்ளத்தக்கவை குறைந்தது இரு நபிதோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு செய்தி உண்மை என்று நிலைநாட்டக் குறைந்தது இரு சாட்சிகள் வேண்டும் என்று குர்ஆன் 2:282, 5:106, 65:2 இறை வாக்குகள் கட்டளையிடுகின்றன. ஒரே நபி தோழரின் அறிவிப்பு தரத்தில் குறைந்ததே என்பதற்கு உமர்(ரழி) அவர்களின் வழிகாட்டல் ஆதாரமாக இருக்கிறது. ஒரு நபி தோழர் உமர்(ரழி) அவர்களின் வீட்டுக்கு வந்து சலாம் மூன்று முறைக் கூறியும் பதில் வராததால் திரும்பிச் செல்கிறார். உமர்(ரழி) வெளியே வந்து அவரை அழைத்து “”வந்தவர் ஏன் திரும்பிச் செல்கிறீர்” என்று கேட்க அவர் “”நான் மூன்று முறை சலாம் கூறினேன். வீட்டிலிருந்து பதில் வரவில்லை, பதில் இல்லாவிட்டால் திரும்பி விடுங்கள் என்று நபி(ஸல்) கூறி இருக்கிறார்கள். அதனால் திரும்பிச் செல்கிறேன்” என்று பதில் கூறினார். உமர்(ரழி) அவர்கள் அவரது கூற்றுக்கு இன்னொருவரை சாட்சியாக அழைத்து வரக் கட்டளையிடுகிறார். வந்தவர் போய் இன்னொரு நபி தோழரைச் சாட்சியாக அழைத்து வந்த பின்னரே உமர்(ரழி) அவர்கள், அந்த ஹதீஃதை ஏற்றுக் கொள்கிறார்.

சந்தேகத்திற்குரிய ஹதீஃத்களை இப்படித் தீரப் பரிசீலனை செய்தே ஏற்க வேண்டும். அடுத்து நபிதோழர்கள் நபி(ஸல்) அவர்கள் சொன்னதை நேரில் கேட்காமல், செய்ததை நேரில் பார்க்காமல், அங்கீகரித்ததை நேரில் அறியாமல் சுயமாக ஒன்றைச் சொன்னால் அது ஒருபோதும் ஹதீஃத் ஆகாது. அதற்கு நபி தோழரின் கருத்து (அஃதர்) என்றே அறியப்படும். அக்கருத்து குர்ஆன் வசனங்க ளுக்கோ, ஹதீஃத்களுக்கோ முரணில்லாமல் அவற் றின் கருத்தை மேலும் வலுவூட்டுவதாக இருந்தால் ஏற்கலாம். அவற்றின் கருத்துக்கு முரண்படுவதாக இருந்தால் ஒருபோதும் ஏற்கக்கூடாது.

முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்துக்கு வலுசேர்க்கும் விளக்கத்தை யார் சொன்னாலும் ஏற்கலாம்!
குர்ஆனின் முஹ்க்கமாத் வசனங்களின் நேரடிக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் அன்றிலிருந்து இன்று வரை இதற்குப் பின்னரும் யார் விளக்கம் கொடுத்தாலும் அது ஏற்கத்தக்கதே; அதற்கு மாறாக முஹ்க்கமாத் வசனங்கள் நேரடியாகக் கூறும் கருத்துக்களைத் திரித்து மறைக்கும் விதமாக யார் சுயவிளக்கங்கள் கொடுத்தாலும் அவர்கள் ஸலஃபு களாக இருந்தாலும், கலஃபுகளாக இருந்தாலும் அவை நிராகரிக்கப்பட வேண்டும். அவற்றை ஒரு போதும் மார்க்கமாக ஏற்கக் கூடாது. அது பெருத்த வழிகேடாகும். அது அல்லாஹ், மலக்குகள், மனிதர் கள் அனைவரது சாபங்களையும் பெற்றுத் தருவ தாகக இருக்கிறது. (பார்க்க: 2:159-162)

ஆதாரபூர்வமான செயல்படுத்த வேண்டிய ஹதீஃத்களின் நிலையே இதுவாகவே இருக்கும் நிலையில் இட்டுக்கட்டப்பட்ட, பலகீனமான ஹதீஃத்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? ஆம்! இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஃத்களை மக்களிடமே பரப்பி அவற்றைச் செயல்பட வைப்ப வர்கள், தங்களின் தங்குமிடத்தை நரகில் முன்பதிவு செய்து கொள்கிறார்கள் என்ற உண்மையை இந்த மவ்லவிகள் ஒருபோதும் உணரமாட்டார்கள். இன் னொரு ஆச்சரியமான விடயம் உங்களுக்குத் தெரி யுமா? முஸ்லிம்களிடையே முதன்முதலாக ஏற் பட்ட வழிகெட்டப் பிரிவு ´ஆ பிரிவு. அவர்களே லட்சக்கணக்கான இட்டுக்கட்டப்பட்ட, பலகீன மான ஹதீஃத்களைக் கற்பனை செய்து மக்களிடையே பரவ விட்டனர்.

சு.ஜ.பிரிவினர் பின்பற்றுவது ´ஆக்களையே!
இந்த ´ஷிஆ பிரிவினர்கள் முஸ்லிம்கள் இல்லை; காஃபிர்கள் என குஃப்ர் ஃபத்வா கொடுப்பதோடு, தங்களை நேர்வழி நடக்கும் ஜமாஅத்-சுன்னத் வல் ஜமாஅத் என பெருமை பேசும் வழிகெட்ட நான்கு மத்ஹபு பிரிவினர் அவர்களை நம்பியுள்ள முஸ்லிம் களிடையே பரப்பி வருவது ´ஆக்கள் இட்டுக் கட்டிய, கற்பனை செய்த பொய்யான ஹதீஃத் களையேயாகும். இவர்கள் எப்படிப்பட்ட வழி கேடர்கள்? ஆம்! அவர்கள் பித்அத் வல் ஜமாஅத்.

முஸ்லிம்களின் இன்றைய கொந்தளிப்பது ஏன்?
இன்று உலகம் முழுவதும் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நபி(ஸல்) அவர்களின் நற்பெயரைக் களங்கப்படுத்தும் “”நபி(ஸல்) அவர் கள் 6 வயது சிறுமியை திருமணம் முடித்தார்கள் என்ற ஹதீஃதும், அதையயாட்டிய வேறு சில ஹதீஃத்களும், அபூபக்கர்(ரழி) அவர்கள் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் இருந்த கடும் விரோத குரோத கடும்பகை காரணமாக ´ஆக்கள் இட்டுக் கட்டியவையே. ஹிசாம் இப்னு உர்வா தனது 71வயது வரை மதீனாவில் இருந்த வரை அவரிடம் பாடம் பயின்ற இமாம் மாலிக்(ரஹ்) இமாம் அபூ ஹனிஃபா(ரஹ்) முதல் யாருக்குமே இந்த ஹதீஃத் கள் தெரியாது. காரணம் தனது 71வயது வரை ஹிசாம் இப்னு உர்வா யாருக்குமே இந்த ஹதீஃத் களை அவர் அறிவிக்கவில்லை. அக்கால கட்டத்தில் அவர் உண்மையாளராகவும், நல்ல மனிதராகவும் இருந்த காரணத்தால், இமாம் மாலிக்(ரஹ்) இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) போன்றோரும் அவரிடம் ஹதீஃத் பாடம் பயின்றுள்ளனர். இந்தப் பின்ன ணியை வைத்துத்தான் இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் போன்றோர் அவர் மூலம் கிடைத்துள்ள ஹதீஃத்களைத் தங்களின் நூல்களில் பதிவு செய்துள் ளனர். அவர் மதீனாவில் தனது 71வயது வரை வாழ்ந்த காலத்தில் அவர் மூலம் கிடைத்த ஹதீஃத் கள் ஏற்கத்தக்க நிலையில் இருப்பதோடு, அப்போது “”ஈராக் வாசிகள் 1000 ஹதீஃத்கள் கூறினால் அவற்றில் 990 ஹதீஃத்களைத் தூக்கிக் குப்பையில் எறிந்து விட வேண்டும்: எஞ்சியுள்ள 10 ஹதீஃத்க ளையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டும்” என்று கூறியதாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஆயிஷா(ரழி) அவர்களின் பால்ய திருமணம் பற்றி அறிவிக்கும் அனைத்து ஹதீஃத்களும் ஈராக் வாசிகளிடமிருந்து அறிவிக்கப்படுகின்றனவே அல்லாமல், ஈராக்கியர் அல்லாத வேறு யாரும் இடம் பெறவில்லை. இதிலிருந்தே இந்த ஹதீஃத்கள் அனைத்தும் ´ஆக்களின் கற்பனையில் உதித்தவை என்பது உறுதியாகிறது. ஆக ´ஆக்களின் கற்பனை ஹதீஃத்களையே சுன்னத் ஜமாஅத்தினர் எனப் பெருமை பேசும் மத்ஹபினரும் தூக்கிப் பிடிக்கின்றனர் என்பது உறுதியாகத் தெரிகிறது.

ஹிசாம் இப்னு உர்வா தனது 71வயது வரை மதீனாவில் இருக்கும் வரை மிகமிக நம்பத் தகுந் தவராக இருந்தார் என்பதில் யாருமே சந்தேகம் கிளப்பவில்லை, அவர் மதீனாவை விட்டு ஈராக்கில் குடியேறிய பின்னர் அவரால் அறிவிக்கப்பட்ட செய்திகளிலேயே பெருத்த குழப்பம் இருக்கிறது. ஈராக்கில் இருக்கும் போது அவர் அறிவித்ததாக வரும் இஸ்னாதில் (அறிவிப்பாளர் வரிசை) ஈராக் கியரே இடம் பெறுகின்றனர். வயது முதிர்ச்சி கார ணமாக அவரது அறிவிப்புகளில் குளறுபடிகள் காணப்பட்டன என்று சொன்னாலும் ´ஆக்களின் சதி காரணாகவே அவரது பெயரால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் பரப்பப்பட்டன என்பதற்கே நம்பத் தகுந்த வரலாற்று அறிவிப்புகள் கிடைக்கின்றன. சகோதரர் அமீருத்தீனின் இரண்டு நூல்களையும் வாங்கிப் படிப்பவர்கள் இந்த உண்மையை உணர முடியும்.

வரலாற்றாசிரியர்கள் அனைவரும் ஆயிஷா(ரழி) அவர்களின் தமக்கை அஸ்மா(ரழி) அவர்களின் இறப்பு ஹிஜ்ரி 73 என்றும் அப்போது அவர்களுக்கு வயது 100 என்றும் ஒத்தக்கருத்தில் அறிவித்துள்ள னர். அப்படியானால் ஹிஜ்ரத்தின் போது அவர்க ளின் வயது 28 ஆகும். அஸ்மாவுக்கும் ஆயிஷாவுக் கும் வயது வித்தியாசம் 10. அப்படியானால் ஹிஜ்ரத் தின் போது ஆயிஷா(ரழி) வயது 18 என்பது உறுதியாகிறது.
ஹிஜ்ரி 3-ம் ஆண்டில் இடம் பெற்ற உஹத் யுத்தத்தில் 15 வயதுக்கு உட்பட்ட இரண்டு இளைஞர்கள் யுத்தத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆயிஷா(ரழி) அவர்கள் யுத்தத்தில் காயப்பட்டோருக்குப் பணிவிடை செய்ய அனுமதிக் கப்பட்டார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் 15 வயதுக்கு மேற்பட்டவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 1-ல் அவரது வயது 18 என்றால் ஹிஜ்ரி 3-ல் அவரது வயது 20 என்பதில் சந்தேகமுண்டா?

இத்தனைத் தெளிவான ஆதாரங்களைக் காட்டியும் மவ்லவிகள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக் கிறீர்களா? அதுதான் இல்லை. குர்ஆன் வசனங்கள் நேரடியாகக் கூறுவதை விட அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மூதாதையர்களின் சுயவிளக்கம்தான் அவர்களுக்கு வேதவாக்கு. மூதாதையர்களைப் பின் பற்றுகிறவர்கள் வழிகேடர்களே என்று சுமார் 40க்கும் மேற்பட்ட இறைவாக்குகள் கூறுவதெல்லாம் அவர்களை நேர்வழிப்படுத்தாது. நபிமார்கள் நேரடியாக வஹி மூலம் பெற்று அறிவித்த இறை அறிவிப்புகளையே கண்டு கொள்ளாத மதகுருமார்கள் அந்நஜாத் எடுத்துக் காட்டும் குர்ஆன் வசனங்களையா ஏற்கப் போகிறார்கள்? ஏற்கமாட்டார்கள். அவர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடு பட்டு 7:3, 3:103 இறைக் கட்டளைகள்படி குர் ஆனைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள். மேலும் எண்ணற்ற ஆதாரங்கள் அந்நூல்களில் உள்ளன. மேலதிக விபரங்களுக்கு அந்த நூல்களை வாங்கிப் படித்துத் தெளிவு பெறுங்கள்.

 

கிடைக்குமிடம் :
சாஜிதா புக் சென்டர்
248 தம்புச்செட்டித் தெரு, சென்னை-1. ; 9444162868

Previous post:

Next post: