தகுதிகள்

in 2012 டிசம்பர்

M.S.கமாலுத்தீன், பெங்களூர்.

ஓராண்டுக்குத் திட்டமிட வேண்டுமா? பயிர் செய்; பத்தாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மரங்களை நடு; நூறாண்டுகளுக்குத் திட்டமிட வேண்டுமா? மனிதர்களை உருவாக்கு; – சீனப் பழமொழி.

உலகில் பண்முகம் கொண்ட ஒரே நாடு இந்தியா. பல்வேறு மொழிகள், பலவிதமான மனிதர்கள், விதவிதமான மதங்கள், வணக்க வழிபாடு, கலாச்சாரம், பண்பாடு எனத் தனித்தனி முகம் இருந்தாலும் “”இந்தியன்” என்ற ஒரு முகத்தால் ஆச்சரியத்தோடு அறியப்படுகிறார்கள். “”வேற்றுமையில் ஒற்றுமை” இந்தியாவின் இதயத் துடிப்பாக உள்ளது.

இந்தத் துடிப்பைத் துண்டித்து விட அந்நிய சக்திகள் எதுவும் முயலவில்லை. உள்ளிருந்தே கொல்லும் விஷக் கிருமியைப் போல் நம்முடைய சகோதரர்களே செய்கிறார்கள். பட்டம் பதவிக்காக இன-மத துவேசங்களைத் தூண்டி குளிர்காயும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் அரசு நிர்வாகத்தை நடத்தக் கூடிய அதிகாரிகள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதன் மூலம், எதிர் மறையான விளைவுகள், இதன் தொடர்பான இன்னல்கள் என பஞ்சமில்லாத பிரச்சனைகள் இந்தியாவைச் சூழ்ந்துள்ளன.
வல்லரசுக் கனவை முன் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு அரசு நிர்வாகத்திற்கு அதிகம் உண்டு. தங்கள் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றாததாலும், அதற்கானத் தகுதி தங்களிடம் இல்லாததாலும் இந்தியாவின் முப்பது சதவிகித நிலப்பரப்பு நக்சலைட்டுக்களின் ஆதிக்கத்தில் உள்ளது. அரசு நிர்வாகம் தங்களை அலட்சியப்படுத்தியதால் அந்த சகோதரர்கள் ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதை நியாயப்படுத்தும் விதமாக அவர்கள் செய்யும் மூளைச் சலவை இளைஞர்களை வெகுவாக ஈர்ப்பதும் நக்சல் பாரி இயக்கங்கள் நாளுக்கு நாள் வீரியமாக வளர்ந்து வருவதும் கவலையோடு கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.

சட்டத்தை நிலைநாட்டி நேர்மையாக நிர்வாகத்தை நடத்தும் போதுதான்; வல்லரசுக் கனவு வடிவம் பெறும். அரசு ஊழியராகி விட்டோம். ஓய்வு பெறும் வரை நம்மை ஒரு பயலும் கேள்வி கேட்க முடியாது என்ற அசட்டு தைரியம் எல்லாத் துறைகளிலும் உள்ளது. பணியில் அலட்சியப் போக்கால் அனாவசியமான போராட்டங்கள் தினந்தோறும் நடந்து வருகின்றன. அதில் ஒன்று.
அண்மைக் காலமாக சாலை மறியல் அன்றாடச் செய்தியாகி விட்டது. இது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எந்த அதிகாரியின் அலட்சியத்தால் அந்த மக்கள் சாலை மறியலுக்குத் தள்ளப்பட்டார்கள்? அவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை உண்டா? பணிகளை ஏன் சரியாகச் செய்யவில்லை என எந்த உயர் அதிகாரியும் கேட்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடக் கூடாது என்பதற்காகக் காவல் துறை தான் ஓடிவந்து சமரசம் பேசுகிறது. இந்த பிரச்சனையைப் பாதசாரி மற்றும் பயணிகளின் கண்ணோட்டத்திலிருந்து பாருங்கள். மணிக் கணக்காக நடுரோட்டில் நிற்கும் கொடுமை. எண்ணற்ற இழப்புகள், மன அழுத்தம், பொரு ளாதார இழப்பு இப்படி எத்தனையோ. யாரால்? ஏன்? இந்தக் கஷ்டம், விடை தேடும் போது அரசுப் பணி என்ற அலட்சியமே பதிலாகக் கிடைக்கும். இதற்குத் தீர்வு காணும் விதமாக மத்தியரசு தகுதித் தேர்வை முன் வைத்துள்ளது.

ஒவ்வொரு அதிகாரியின் பணிகளை ஆய்வு செய்வதன் மூலம் திறமை இல்லாதவர்களை பணி இடை நீக்கம் செய்து-திறமையானவர் களைப் பணியில் அமர்த்துவதன் மூலம் நல்ல நிர்வாகம் தர முடியும் என நம்புகிறது. இதன் ஒரு பகுதியாக
நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பெரும் பொறுப்புமிக்க ஆசிரியர்களுக்குத் தகுதி தேர்வை “”ஆசிரியர் தேர்வு வாரியம் -TRP நடத்தியது. கிட்டத்தட்ட ஆறரை லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள். அதில் சுமார் ஒரு லட்சம் பேர் தப்பும் தவறுமாக விண்ணப்பித்துள்ளதாக TRP. கூறுகிறது. இதில் 14,000 பேர் தங்கள் பெயரையே எழுதவில்லையாம். இன்னும் பலர் தாங்கள் ஆணா பெண்ணா என்பதையும், எந்த மொழியில் எழுதப் போகிறோம் என்பதைக் கூட குறிப்பிடவில்லையாம். 2448 பேர் மட் டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 லட்சத்து 74 ஆயிரத்து 315 பேர் தேர்ச்சி பெறவில்லை.

ஆசிரியர் பணி என்பது பிற பணிகளைப் போல் இல்லை. எதை எப்படிச் செய்வது. எது சரி? எது தவறு? எனக் கற்றுத் தரும் பணியைச் செய்யக் கூடியவர்கள் இப்படி என்றால், பிற துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கண்டிப்பாகத் தகுதித் தேர்வை வைத்து “”களை” எடுத்தே ஆகவேண்டும். இதன் மூலம் ஒளிவு மறைவு இல்லாத, திறமையான நிர்வாகம் உறுதி செய்யப்படும். ஒவ்வொரு முறையும் “”உயிர்ப் பலி” வாங்கித் தான் அரசு இயந்திரம் செயல்படுகிறது. சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்தில் 91 குழந்தைகள் பலி, ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்தில் 49 பேர் பலி. கடந்த வருடம் காலாவதியான மருந்தை சாப்பிட்டு சில நூறு பேர் இறந்த பிறகு “”மின்னல்” வேக நடவடிக்கை. இதே கடந்த ஜூலை மாதம் பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையில் வீழ்ந்து “”ஸ்ருதி” என்ற சிறுமி பலியாக அதே மின்னல் வேக நடவடிக்கை.

கடந்த செப்டம்பர் மாதம் 5ம்தேதி விருது நகருக்கு அருகில் உள்ள முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் சுமார் 36 பேர் பயங்கர வெடி விபத் தால் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளார்கள். ஒரு பட்டாசு ஆலை நடத்த வேண்டுமானால், பட்டாசு ஆலைக்கான தனி தாசில்தார், வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, தொழிலாளர் நலத்துறை, வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை, சுகாதாரத் துறை என ஒவ்வொரு துறையினரும் ஒழுங்காக பணி செய்திருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகி இருக்குமா? ஒவ்வொரு முறையும் உயிர்ப் பலி வாங்கித் தான் அரசு இயந்திரம் செயல்படுகிறது. இப்பச்டி சீரழிந்து கிடக்கும் நிர்வாகத்தை சீர் அமைக்க தகுதித் தேர்வு அவசியமா? இல்லையா?!

இதே அளவு கோல் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். அவர்கள் மக்கள் பிரதிநிதியாக பதவி ஏற்ற நாளிலிருந்து சரியாக ஒவ்வொரு வருடமும், அவர்களின் செயல்பாட்டைக் கவனிக்க வேண்டும். தம் தொகுதியில் செய்த வேலை, மக்களுக்கு செய்த சேவை என ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் வழங்க வேண் டும். 75 சதவிகித மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே அடுத்தத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். சொத்துக் கணக்கைப் பதவி விட்டு விலகும் போதும் காட்ட வேண் டும். முறைகேடான சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படவேண்டும், சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன், மதுரையை மலேசியா ஆக்குவேன் போன்ற அடுக்கு மொழி வாக்குறுதிகள் அறவே ஒழிந்து போகும். வெளிப்படையான நிர்வாகம் நடக்கும்போது மக்களுக்கு உறுதி செய்யப்பட்டச் சேவை கிடைக்கும். ஊழல் ஏக தேசம் ஒழிக்கப்பட்டு விடும். இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழும்போது உண்மை யான மக்களாட்சி மலரும்.
இதில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், சிறு பான்மையினருக்கு சில சலுகைகளை தரலாம். எனினும் செயல்பாடுகள் திருப்தி தரவேண் டும். இது எல்லாம் சரிதான். புரையோடிப் போய் இருக்கும் ஜனநாயக அரசியலும், அலட்சிய நிர்வாகமும் சீர்பெற என்ன தீர்வு? மேலே சொன்ன மாற்றங்கள் எப்போது நிகழும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

இறுதி இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறு கிறார்கள் இப்படி. உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் (அவரவர் பொறுப்புக் குறித்து மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்; ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! அவர் (தம் குடிமக்கள் குறித்து) விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன்(தன் பொறுப் புக்கு உட்பட்டவர்கள் பற்றி) விசாரிக்கப் படுவான்) பெண்-மனைவி தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் (அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள்.) அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் (தனக்குரிய பொறுப்பு குறித்து) விசாரிக்கப்படுவான்.
நபிவழி செய்தியாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி)
நூல்: புகாரீ ஹதீஸ் எண்: 893, 2409, 5188.

மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை உண்டு. அங்கு நான் விசாரிக்கப்படுவேன் என பயந்த வன் தன் பணிகளை ஒழுங்காகச் செய்வான். மக்களாட்சி மீது மக்களுக்கு வெறுப்புதான் கூடிக்கொண்டே போகிறது. இது மாற வேண்டு மானால் முஸ்லிம் சமுதாயம் முன்வர வேண்டும். அவர்களால் மட்டுமே இப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள சீனப் பழமொழியை உயர் ஜாதி இந்துக்களாகத் தங்களை சொல்லி கொள்பவர்களும், கிறித்துவ சகோதரர்களும் சரியாகப் புரிந்து கொண்டு வெகு காலமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் சமுதாயத்தைப் பல வகையில் முன்னேற்றி வருகிறார்கள். இதை அவர்கள், மத்தியிலும்-மாநிலத்தில் மிக முக்கியமான பதவியிலும் இருந்து கொண்டு மிகத் தைரியமாகத் தங்கள் சமூகத்தை முன்னேற்றி வருகிறார்கள். அரிதாக உயர் பதவியில் இருக்கும் முஸ்லிம்கள் நியாயமாகச் செய்யவேண்டிய உதவியைக் கூட செய்ய முன்வருவதே இல்லை. காரணம். எங்கே “”தன்னை முஸ்லிம்களின் ஆதரவாளன்” என முத்திரைக் குத்தி விடுவார்களோ என்ற பயம். இந்நிலை மாற வேண்டும். முஸ்லிம்க ளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் முஸ்லிம் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, பட்டைத் தீட்ட வேண்டும்.

இஸ்லாமியக் கல்வி நிறுவனங்கள் தனிக் கவனம் செலுத்தி Government works are God’s work  என்பதை நிலை நாட்ட முன்வர வேண்டும். நேர்மையும், நீதியும், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவதும் மறுமையை நம்பும் முஸ்லிம்களால் மட்டுமே முடியும்.
நம் பிள்ளைகளை உயர்க் கல்வி வரைப் படிக்க வைத்து, திறமைகளை வளர்த்து, இறை யச்சத்தை போதித்து உயர் பதவிகளுக்குச் செல்ல நேர்மையான வழிகளில் முயல வேண் டும். முஸ்லிம்கள் உயர் பதவிகளுக்கு வரும் போது இன்று இந்தியா சிக்கித் தவிக்கும் ஊழல், நிர்வாகச் சீர்கேடு, நக்சலைட் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை என எல்லாவற்றிற்கும் இன்ஷா அல்லாஹ் தீர்வு கிடைக்கும். இதன் மூலம் இந்தியா முதலில் நல்லரசு ஆகும். பிறகு தானாகவே வல்லரசாகும்.

“”நன்மையும், தீமையும் சமமாகாது. நல்ல தைக் கொண்டே (தீமைகளை நபியே!) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக் கிறதோ அவர் அப்போது உற்ற நண்பராகி விடுவார்” d அல்குர்ஆன்: 41:34

கல்வியில் சிறந்த-திறமையான முஸ்லிம் களை உருவாக்கி நம் நாட்டுக்கும்-மார்க்கத்திற் கும் நன்மை செய்வோம் முன்வாருங்கள். இது நம்மால் மட்டுமே முடியும். வழுவான இறை நம்பிக்கையும், தூய எண்ணங்களும் வழியை நமக்கு இலகுவாக்கி தரும். ஒவ்வொரு முஸ்லிமும் இதற்கான முயற்சியை முன் எடுத்துச் செல்வோம்.

Previous post:

Next post: