இன்றைய உலகின் ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவுகளுக்கும் நாத்திகமே பிரதான காரணம்!

in 2013 ஜனவரி,தலையங்கம்

இவ்வுலக வாழ்க்கை அற்பமான தற்காலிகப் பரீட்சை வாழ்க்கை; மறு உலக வாழ்க்கையே அசலான நித்திய வாழ்க்கை. பரீட்சையில் வெற்றி பெறுகிறவர்கள் நிரந்தரமாக இன்பம் அனுபவிக்கும் சுவர்க்கத்தை பெறுவார்கள். தோல்வியுறுகிறவர்கள் நிரந்தரமாகக் கடும் வேதனைகள் அனுபவிக்கும் நரகத்தை அடைவார்கள் என்பது தன்னந்தனியனான ஏகன் இறைவன் அளித்துள்ள இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் கூறும் மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மை நாம் வாழும் இந்தப் பூமிப் பந்தை இதர கோளங்களோடு ஒப்பிடும் போது நாம் வாழும் பூமி ஒரு புள்ளியில் கோடியில் ஒரு பங்கு கூட ஆகாது என்ற இன்றைய வானவியல் அறிஞர்களின் கண்டு பிடிப்பு உறுதிப் படுத்துகிறது. (பார்க்க: அந்நஜாத் ஜூன் 2012)

அற்பமான இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை- சோதனை வாழ்க்கையாக இருப்பதால், அதில் ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானுக்கும் மனித குலத்தினருக்குமிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளான் இறைவன். ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படுகிறவர்கள்தான் அனைத்து மதங்களின் மதகுருமார்கள். இந்த மத குருமார்கள்தான் மக்களிடையே மூட நம்பிக்கை களையும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களையும் பகுத்தறிவு அறவே ஏற்றுக் கொள்ளாத அடாத செயல்களையும் கடவுள் பெயரைச் சொல்லியே மக்களை நம்ப வைத்து, அவர்கள் உலகியல் ஆதாயங் களை அடைவதோடு பெருங்கொண்ட மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள்.

அறிவியல் முன்னேற்றம் ஏற்படாத ஆரம்பக் காலங்களில் மக்களும் அவர்களை முற்றிலுமாக நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் சென்றனர். இந்த நிலையில் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு விஞ்ஞானிகள் உலகம் சம்பந்தப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரும்போது அவை இந்த மதகுருமார்களின் போதனைகளைப் பொய்யாக்குபவையாக அமைந்தன. உதாரணமாக அன்று பூமி தட்டை; சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்ற மூட நம்பிக்கைக்கு மாறாக பூமி உருண்டை; பூமி தான் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என உண்மை நிலையை விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியபோது, இம்மத குருமார்கள் வெகுண்டெழுந்தனர். மதகுருமார்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஆட்சியாளர்களும் விஞ்ஞானிகளுக்கு எதிராகச் செயல்பட்டு அவர்க ளுக்குக் கொடுந் துன்பம் கொடுத்தனர். சிலரைக் கொலையும் செய்தனர்.

கிறித்தவ மதகுருமார்களைப் போல்தான், முஸ்லிம் மதகுருமார்களும் அன்று பிறையைக் கண்ணால் பார்த்து மாதத்தைத் துவங்கியதற்கு மாறாக, இன்று சந்திரனின் ஓட்டம் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுவிட்டது. இன்றே நூறு வருடங்களின் கணக்கையும் கணக்கிட முடியும் என்று சொல்வதை ஏற்காமல் வெகுண்டெழுகிறார்கள். மதகுருமார்களின் ஆக்ரோசத்திற்குக் காரணம், கடவுளின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி உலக ஆதாயங்களை அடைவதோடு வயிறு வளர்த்து வருகிறார்கள். இந்த விஞ்ஞான உண்மைகள் தங்களின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி விடும் என்ற அச்சமேயாகும். இம்மதகுருமார்களின் குறிப்பாக அன்று ஐரோப்பாவில் அதிகாரங்கள் அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருந்த கிறித்தவ மதகுருமார்கள் விஞ்ஞானிகளுக்குக் கொடுத்த கொடுந் துன்பத்தைத் தாங்க இயலாமல் தான், அவர்களும் ஒரு பெரும் தவறான போதனையை மக்களிடையே பரப்ப ஆரம்பித்தார்கள். அதாவது கடவுளின் பெயரைச் சொல்லித்தானே இம்மதகுருமார்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்தக் கடவுளே இல்லை என்று நிலை நாட்டிவிட்டால் இம்மதகுருமார்களின் கொட்டம் அடங்கி விடும் என மூடத்தனமாக நம்பி நாத்திகத்தைப் போதிக்க ஆரம்பித்தார்கள்.

அதே போல் இந்தியாவிலும் இந்து மதகுருமார்கள் ஒரே தாய்க்கும் தகப்பனுக்கும் பிறந்த மனித குலத்தை ஜாதிகளாகப் பிரித்ததோடு பெருங் கொண்ட மண்ணின் மைந்தர்களைத் தீண்டத் தகாதவர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாக ஆக்கி அவர்களை அடிமைப்படுத்தித் தங்களுக்குக் குற்றே வல் செய்ய வைத்தார்கள். கடவுளின் பெயரைச் சொல்லித்தானே இம்மதகுருமார்கள் பெருங் கொண்ட மக்களை அடிமைப்படுத்திச் சிறுமைப் படுத்துகிறார்கள். எனவே கடவுளே இல்லை என நிலை நாட்டிவிட்டால் அடிமைத் தனம் ஒழிந்து விடும், இன இழிவு நீங்கிவிடும், இம்மதகுருமார்களின் கொட்டம் ஒடுங்கிவிடும் என மூடத்தனமாக நம்பி நாத்திகத்தைப் போதிக்க ஆரம்பித்தார்கள். கடவுளோ மறுமையோ இல்லை. இவ்வுலக வாழ்க்கை மட்டுமே வாழ்க்கை. அனுபவிக்க வேண்டியவை அனைத்தையும் இவ்வுலகிலேயே அனுபவித்துத் தீர்த்துவிடவேண்டும் என போதிக்க ஆரம்பித்தார்கள்.

இம்மதகுருமார்களையும், அவர்கள் கற்பனை செய்துள்ள கோடிக்கணக்கான குட்டிக் குட்டிப் பொய்க் கடவுளர்களையும், இறைவனுக்கும் மக்களுக்கும் இடையில் திருட்டுத்தனமாகப் புகுந்து வயிறு வளர்க்கும் இடைத்தரகர்களையும் கடுமையாக விமர்சித்து அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்கு மாறாக சர்வத்தையும் படைத்துப் பரி பாலிக்கும் ஏகன் இறைவனே இல்லை என மறுக்கத் துணிந்தார்கள்.

இது எதுபோல் என்றால் இளமையில் கல்வி கற்கும் காலத்தில் ஆசாபாசங்களை அடக்கிச் சிரமப் பட்டுப் படித்துப் பரீட்சையில் திறமையாக எழுதி அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றால் பின்னால் சீரும் சிறப்பாக வெற்றி வாழ்க்கை வாழ முடியும் என்பதற்கு மாறாக நாளை கிடைக்கும் வாழ்க் கையை விட இன்று கிடைக்கும் வாழ்க்கையே வாழ்க்கை. எனவே இந்த இளமை வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. இதை அனுபவித்துத் தீர்த்து விட வேண்டும். நாளை நிலையை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் அறிவுரைக் கூறினால் அது எப்படிப்பட்ட மூடத்தனமான அறிவுரையாக இருக்கும் என்பதை விளங்க முடியாதவர்கள் கடைந்தெடுத்த மூடர்களாக மட்டுமே இருக்க முடியும்.

கடவுள் மறுப்புக் கொள்கையான நாத்திகப் போதனை எப்படிப்பட்ட விளைவுகளை இன்று உலகில் ஏற்படுத்தி இருக்கிறது என்று அவதானியுங்கள். அனைத்து மதங்களின் மதகுருமார்கள் எப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை வளர்த்து மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்த்தாலும் அவர்கள் கடவுளும், மறுமையும் உண்டு என்றே போதிக்கிறார்கள். அக்கடவுளை அடையக் குட்டிக் குட்டித் தெய்வங்களையும், மூட நம்பிக்கைகளையும் வளர்த்து மக்களை மயக்கி உலகியல் ஆதாயங்களை அடைகிறார்கள். மக்களும் இம்மதகுருமார்களை நம்பி மூடச் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வதோடு, அவர்க ளின் காலடிகளில் தங்களின் செல்வங்களைக் கொட்டி அவை மூலம் கடவுளின் பொருத்தம் பெற்று மோட்சம் அடையலாம் என மூடத்தனமாக நம்புகிறார்கள்.

தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு இம்மதகுருமார்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பது கொண்டு அவை இறைவனால் மன்னிக்கப்பட்டு ஈடேற்றம் பெறலாம் என மூடத்தனமாக நம்புகிறார்கள். ஆயினும் அவர்களின் ஆழ்மனதில் அந்த ஒரே இறைவனைப் பற்றிய நம்பிக்கை உறைந் திருப்பதால், அவர்கள் குற்றங்கள் செய்வதில் அடக்கியே வாசிக்கின்றனர். ஓரளவுக்காவது நீதி, நியாயம், தர்மம் என அஞ்சியே நடக்கின்றனர். எனவே ஒரே கடவுள் நம்பிக்கையால், அல்லது கோடிக்கணக்கானப் பொய்க் கடவுள்கள் நம்பிக்கையால் உலகம் இன்றிருப்பது போல் ஒழுக்கக் கேட்டிலும், சீரழிவுகளிலும் சிக்கிச் சின்னாபின்ன மாகவில்லை. மனிதன் மிருகமாகவில்லை.

சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர், மற்றும் அனைத்துத் துறையினரும் நேர்மை தவறாதவர்களாகவும், நீதம் செலுத்துபவர்களாகவும், லஞ்சத்துக்கு வாய் பிளக்காதவர்களாகவும் இருந்தால், இன்று நாட்டில் தினசரி கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு இத்யாதி, இத்யாதி அராஜகங்கள் அரங்கேற முடியுமா? குற்றத் திற்குரிய தண்டனை நிச்சயமாகக் கிடைக்கும் என்றால் யாரும் குற்றம் செய்யத் துணிவார்களா? பகுத்தறிவு மனிதன் பகுத்தறிவற்ற மிருக வாழ்க்கை வாழப் போய்த்தானே மேலே கண்ட அராஜகங்கள் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் என வளர்ந்து மலிந்து காணப்படுகின்றன.

ஆக ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை, காவல் துறையினரை, நீதிபதிகளை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டால் எத்தனைக் கொலையும் செய்யலாம். எப்படிப்பட்ட அராஜகங்களையும் செய்யலாம். ஊரான் சொத்துக்களைக் கோடிகோடியாக அபகரிக்கலாம். அதில் ஒரு பகுதியை லஞ்சமாகக் கொடுத்துத் தப்பிவிட்டால் போதும். அதன் பின்னர் எவ்விதத் தண்டனையை யும் யாரும் தரமுடியாது என்ற மூட நம்பிக்கையை இந்த நாத்திகச் சிந்தனை வளர்த்து விடுவதால்தானே இன்று நாட்டில் அநியாய அட்டூழியங்கள் தலை விரித்தாடுகின்றன. மக்கள் பஞ்சமாப் பாவங்களில் மூழ்கியுள்ளனர்.

ஓரிறைவனையும், மறுமையையும் மறுக்கும் நாத்திகர்கள் சிறிது ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பகுத்தறிவையும், மனசாட்சியையும் மட்டுமே எல்லையாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படியானால் அவர்களது பகுத்தறிவு சரிகண்டு, மனசாட்சி ஒப்புக் கொண்டு இதுதான் நியாயம், தர்மம், இப்படித்தான் நடக்க வேண்டும் எனப் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் அறிவிப்பவர்கள், அவர்கள் மக்களுக்குப் போதித்தபடி, ஊருக்கு உபதேசித்தபடி தங்களின் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்க முடிகிறதா? இல்லையே! என்ன காரணம்?

“”சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”
என்று வள்ளுவரும் உண்மைப் படுத்துகிறார்.

அவர்களது பகுத்தறிவும், மனசாட்சியும் சரி கண்டு மக்களுக்கு அறிவித்ததற்கு முரணாக அவர்களைச் செயல்பட வைக்கும் சக்தி எது? ஆம்! இறைவன் பரீட்சை அடிப்படையில் மனிதனுக்கு எதிரா கப் படைத்த ஷைத்தானே அந்தச் சக்தியாகும். ஷைத்தானுக்கு அடிமைப்பட்டே நாத்திகர்கள் அவர்களது பகுத்தறிவும், மனசாட்சியும் சரிகண்டு ஒப்புக் கொண்டதற்கு முரணாகச் செயல்படுகிறார் கள். கடவுள் படைத்த ஷைத்தானுக்கு அடிமைப் பட்டு அவர்களது மனசாட்சிக்கே விரோதமாகச் செயல்படும் நாத்திகர்கள் மனித குலத்தையும் ஷைத்தானையும் அகிலங்களையும் படைத்த ஓரிறைவனை மறுப்பது பகுத்தறிவா?

நான் எனது பகுத்தறிவும், மனசாட்சியும் சரி கண்டதை மட்டுமே செய்கிறேன். எனது மனம் உறுத்தும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடுவதில்லை என்று ஒரு நாத்திகர் சொன்னால் அவர் அப்பட்ட மாகப் பொய் கூறுகிறார் என்பதே எதார்த்த உண்மை. காரணம் ஏகனான ஒரே கடவுளை உறுதி யாக நம்பி, மறுமையையும் உறுதியாக நம்பிச் செயல்படுகிறவர்களையே ஷைத்தான் வழிகெடுத்துத் தீயச் செயல்களில் சமயங்களில் ஈடுபட வைத்து விடுகிறான். பின்னர் அவர்கள் இறைவனிடம் பாவ மன்னிப்பு (புரோகிதர்களிடம் அல்ல) கேட்டு மீள வேண்டிய நிலை இருக்கும்போது, இறைவன் ஒருவன் இல்லை; மறுமை என்று ஒன்றில்லை; கேள்வி கணக்கு இல்லை. விசாரணை இல்லை என்று மூடத்தனமாக நம்பும் ஒரு நாத்திகர் தான் நடப்பது முழுக்க முழுக்கத் தனது பகுத்தறிவுப்படி யும், மனசாட்சிப்படியும் மட்டுமே என்று கூறினால் அது கடைந்தெடுத்தப் பொய்யாகத்தானே இருக்கும்.

பகுத்தறிவாளர்கள் எனச் சொல்லும் ஒவ்வொருவரும் வெளியில் சொல்ல வேண்டாம். இதுவரை அவர்கள் கடந்து வந்த பாதை முழுவதிலும் எத்தனைக் காரியங்களில் பகுத்தறிவுப் படியும், மனச் சாட்சிப்படியும் நடந்துள்ளார்கள்; மனசாட்சி சரி கண்டு செயல்பட்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக எத்தனைக் காரியங்களில் அவற்றிற்கு முரணாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்களே மீள் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்வார்களாக. உண்çமையை உணர அது உதவும்.

தாங்கள் செய்யும் பாவச் செயல்களுக்கு, அராஜக அட்டூழியங்களுக்கு, நாளை மறுமையில் விசாரணையோ தண்டனையோ இல்லவே இல்லை என்ற மூட நம்பிக்கையை நாத்திகர்கள் வளர்த்து விட்டதாலேயே இன்று நாட்டில் அனைத்துவித மான ஒழுக்கக் கேடுகள், குடி, கூத்து, மது, மாது, சூது, கொலை, கொள்ளை, களவு, வழிப்பறி, கற் பழிப்பு, விபச்சாரம் என அனைத்துத் தீய செயல்களும் உலகையே நிரப்பி வருகின்றன என்பதை உண்மையான பகுத்தறிவாளர்கள் மட்டுமே உணர்வார்கள்.

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையிலேயே நாத்திகர்கள் இருக்கிறார்கள். குழந்தைக்குத் தாயின் கர்ப்பப்பையே கதி. வெளி உலகை அறியும் வாய்ப்பு அதற்கு உண்டா? இல்லையே! குறிக்கப் பட்டக் காலத்தில் வெளி உலகிற்கு வெளியேற்றப்பட்டப் பின்னர்தானே வெளி உலகை அறிய முடிகிறது. மடியில் வளர்வதை நம்பித் தாயையும், தாயை நம்பித் தந்தையையும் அறிய முடிகிறது. அக்குழந்தை போல் நாத்திகர்களும் அற்பமான இவ்வுலகே கதி எனக் கிடக்கிறார்கள். குறிப்பிட்டத் தவணையில் இவ்வுலகிலிருந்து மறு உலகிற்கு வெளி யேற்றப்பட்ட பின்னரே அதை அறியப் போகிறார்கள்.

இவ்வுலகில் கடுமையாக நாத்திகம் பேசிக் கொண்டிருந்தவர்கள் மரணித்து அவ்வுலகை அடைந்தவர்கள் தங்களின் பரிதாப மிகக்கடுமையான வேதனை நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த உண்மையை மீண்டும் இவ்வுலகிற்கு வந்து சொல்லவும் வழி இல்லை. தாய் வயிற்றில் முழுமையாகத் தயாராகாமல் நொண்டியாக, சப்பாணியாக, கூன் குருடாக இவ்வுலகிற்கு வந்த குழந்தைகள் இங்கு படும் வேதனையைப் பார்க்கத்தானே செய்கிறோம். நாத்திகர்கள் வீம்பு பண்ணுகிறார்களே அல்லாமல் படிப்பினைப் பெறத் தயாரில்லை. எனவே இன்றைய உலகின் ஒழுக்க கேட்டிற்கும் சகலவிதமான சீரழிவுகளுக்கும் நாத்திகர்களே பிரதான காரணக் கர்த்தாக்கள் என்பதில் ஐயமுண்டா?

நாத்திகர்களின் கடவுள் மறுப்புக் கொள்கையால் மதகுருமார்களின் கொட்டமும் ஒடுங்கவில்லை; உயர் ஜாதிக்காரர்களின் ஆணவமும் குறையவில்லை; செல்வந்தர்களின் பணத்திமிரும் ஒழியவில்லை; ஜாதிப் பித்தும் தீரவில்லை; இவை நான்கும் முன்பைவிடக் கொடி கட்டிப் பறப்பதுடன், நாத்திகக் கொள்கையால் கண்ட பலன் மனிதன் மிருகமாக மாறி உலகம் முழுவதும் ஒழுக்கக் கேடுகள், பஞ்சமா பாவங்கள், அனைத்து வகைச் சீரழிவுகளால் நிரம்பி வழியும் காட்சிகளையே பார்க்கிறோம். நாத்திகர்களே முழுமையாகப் பகுத்தறிவைப் பயன்படுத்தி, சிந்தித்துச் சீர்திருந்த முன் வாருங்கள். இணை துணை இல்லாத, தனித்தவனான, இடைத்தரகர் இல்லாத ஓரிறைவனை ஏற்று அவனது வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். அதுவே உங்களுக்கும், உலகிற்கும் விமோசனத்தைத் தரும். இல்லையயன்றால் நாளை மறுமையில் மதகுருமார்களை விட நீங்கள்தான் மனிதகுலத்தைப் பெரிதும் வழிகெடுத்து நரகில் தள்ளிய மாபெரும் பாவிகள் எனத் தண்டனைக்குள்ளாவீர்கள். எச்சரிக்கை!

Previous post:

Next post: