விமர்சனம்: மார்ச் 2002  அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’

1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.

2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள்.

3. ஒரு முறை பிறை பார்த்த செய்தி, மாலை கிடைத்ததால் அடுத்த நாள் ஈத்கா வர கட்டளையிட்டார்கள். நேரந்தவறியதால் அடுத்த நாள் வரச் சொன்னார்கள் என்று விளங்குவது தவறாகும். காரணம் நேரந் தவறியதே கூடாது என்றால் அதை நாள் தவறி எப்படிச் செய்ய முடியும்?

4. முஹர்ரம் 10ல் நோன்பு வைத்திருந்த நபி(ஸல்) அவர்களிடம், யூதர்களும் முஹர்ரம் 10ல் நோன்பு நோற்கிறார்கள் என்றபோது, அடுத்த வருடம் 9,10ல் இன்ஷா அல்லாஹ் நோன்பு நோற்பேன் என்று கூறினார்களே அல்லாமல் நாளையும் அதாவது 10,11-ல் நோன்பு நோற்பேன் என்று சொல்லவில்லை. காரணம் 11-ல் நோன்பு நோற்க அனுமதி இல்லை என்றே விளங்க வேண்டும். ஆனால் அடுத்த நாள் பெருநாள் கொண்டாட அனுமதி இருக்க போய்தான் ஈத்கா வர கட்டளையிட்டுள்ளார்கள்.

பதில்: நபி(ஸல்) அவர்கள் தீர்மானிக்க முடியாத கால கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு சொன்ன சட்டத்தை தீர்மானிக்க முடியும் என்பதை உறுதியாக அறிந்துள்ள சமுதாயத்திற்கு சட்டமாக்குவது சரியா என்பதை மேற்கண்ட கருத்தை சொல்பவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் இன்னும் சலுகைகளை சட்டமாக்க வாதிட்டால் அதற்கு எப்படி பதில் சொல்வது என்பதையும் நாம் கீழே காணலாம்.

அதற்கான ஆதாரம்: நாம் உம்மி சமுதாயமாக இருக்கிறோம். நமக்கு மாதத்தை பற்றி எழுதி வைக்க தெரியாது. (ஏன் என்றால்) அதை பற்றி கணக்கு தெரியாது. மாதம் என்பது 29 ஆகவும் சில மாதங்களில் முப்பதாகவும் வரும் என நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

தற்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் சரியாக என்றைய தினம் எத்தனை மணிக்கு எந்தெந்த நாடுகளுக்கு கண்ணில் தெரியும் வகையில் எங்கெங்கு கண்ணிற்கு தெரியாத வகையில் ஏற்படும் என்பது போன்ற துல்லியமான விபரங்கள் மற்றும் இஸ்லாமிய மாதங்கள்  என்று ஆரம்பிக்கிறது என்பது போன்ற விபரங்களை நாம் அறிந்தவர்களாக உள்ளோம். இந்த விஷயங்களை உலகம் உருண்டை என்பதை கூட விளங்காதஅன்றைய சமுதாயத்திற்கு தெரியாது என்று கூறி பிறகுதான் அன்று இருந்த தன்னுடைய சமுதாயம் என்ன செய்யவேண்டும்? அன்றைய நிலையிலும் அதே போல் உள்ள பின் வரும்ட சமுதாயங்கள் என்ன செய்யவேண்டும் என்ற நிலையை நபி(ஸல்) அவர்கள் விளக்குகிறார்கள்.

அன்றைய தினம் அவர்களுக்கு கணக்கென்பது தெரிந்தும் நீங்கள் கூறியது போல் அவர்கள் பெருநாளை கொண்டாடியிருந்தால் நீங்கள் சொல்லும் வாதம் சரியானது தான் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. மாறாக நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருக்கு பிறகு பெருநாள் தொழுகை தொழுவதற்குரிய நேரம்ட தொடங்கிவிடாத சமயத்தில் வரும் தகவலை ஏற்றுக்கொண்டு உடனடியாக பெருநாள் தொழுகை நடத்தி வைக்கிறார்கள். இதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம் பெருநாள் தொழுகைக்குரிய வக்தில் தான் பெருநாள் தொழுகை தொழ வேண்டும்.

முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து தொழவேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு கன்னிப்பெண்கள் மற்றும் மாதவிடாய் பெண்கள் அனைவரையும் வரச் சொன்னார்கள் என சகோதரர் அபூஅப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று நோன்பு வைத்து நோன்பை முடிக்கும் சமயத்தில் ஒரு குழுவினர் பிறை பார்த்த தகவலை நபி(ஸல்) அவர்களுக்கு கூறுகிறார்கள். அந்த கூட்டம் தாங்கள் நேற்று இரவு பிறை பார்த்து விட்டோம் என்ற தகவலை அளிக்கிறார்கள். அதில் இருந்து நாம் இரண்டு படிப்பினைகள் பெறலாம்.

அவர்கள் எங்கு பிறை பார்த்தார்களோ அந்த ஊரில் உள்ளவர்கள் கண்டிப்பாக பெருநாள் சரியான தினத்தில் தொழுதிருப்பார்கள். நபி(ஸல்) என்று தொழுதார்களோ அன்று தான் அவர்களும் தொழுது ஆகவேண்டும் என நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். பெருநாள் தொழுகைக்கு நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த ஒரு ஈட்டி உயரத்தை தாண்டி எதிர் பகுதியில் சூரியன் சாய்ந்து விட்ட பிறகு தகவல் தாமதமாக கிடைக்க பெற்றதினால் நபி(ஸல்) அவர்கள் அடுத்து நாள் பெருநாள் தொழுகையை நடத்துகிறார்கள். அதே சமயம் நோன்பை விட்டு விடுகிறார்கள். உண்மையான பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பது ஹராம் என்பதை தெளிவாக்கிவிட்டு, தாமதமாக தகவல் வந்ததினால் அடுத்த நாள் பெருநாள் திடலுக்கு அதற்குரிய நேரத்தில் வரச் சொல்கிறார்கள்.

சரியான நேரத்தில் தகவல் வந்தால் சரியாக செய்ததையும்; காலம் தாழ்த்தி தகவல் வரும்டபோது அடுத்த நாள் செய்ததையும் நாம் ஹதீஸில் இருந்து அறிந்து விட்டு, நபி(ஸல்) சொல்லுக்கும் செயலுக்கும் மாற்றமாக தீர்மானிக்க முடியாத சமுதாயத்தினருக்கு செய்த சலுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான நாளை பல வருடங்களுக்கு முன் அறிந்து கொள்ளும் அனைத்து வாய்ப்பையும் பெற்றவர்கள் விதிவிலக்காக நபி(ஸல்) செய்தது தான் சரி என வாதிடுவது எந்த வகையில் நியாயம் என்பதை சிந்தித்து பார்த்தால் புரிந்துவிடும்.

இது சுன்னத்தான தொழுகை; இது அல்லாஹ்விற்கு மனிதர்கள் விரும்பி செய்யவேண்டும்; அன்றைய தினம் பெண்கள் பகுதிக்கு சென்று நபி(ஸல்) அவர்கள் சிறப்பு பயான் செய்வார்கள் என்பதினால் தான் அனைவரையும் பயானில் பயனடையும்படி வரச்சொன்னார்கள் என்றுதான் ஹதீஸில் உள்ளது. மாறாக முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்று எந்த ஹதீஸில் இருந்தும் விளக்கம் கூற முடியாது. தகவல் தாமதமாக கிடைத்ததால் விதிவிலக்காக அடுத்த நாள் செய்வதற்கு அனுமதிக்கிறார்களே தவிர எப்படியும் எத்தனை நாட்களும் தொழுது கொள்ளுங்கள் என அனுமதிக்கவில்லை. சலுகைகளை சட்டமாக்கினால் சகோதரர் சொல்லும் விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். இதற்கு ஆதாரம் மேலே கூறப்பட்ட உம்மி சமுதாயம் ஹதீஸ் தான். இந்த விஷயத்தை அவர்கள் தீர்மானிக்க முடியாத சமுதாயமாக இருந்ததால் அவர்கள் அதன்படி செய்தார்கள். தீர்மானிக்க முடிந்தர சமுதாயம் எப்படி செய்யவேண்டும் என்பது தான் தற்போது குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்தும் நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

நபி(ஸல்) அவர்கள் என்பதினால் அவர்கள் அதை அடுத்த நாளில் செய்தார்கள். மாறாக பெருநாளை முன்கூட்டியே அறிய முடியாத சமுதாயத்தினர்களுக்காக பிறை தகவல் தாமதமாக வரும் பட்சத்தில் மட்டும் பெருநாள் தொழுகை அடுத்த நாள் தொழுபவர்கள் அறியாத சமுதாயத்தினர்களாக இருக்கவேண்டும் என்பது நமக்கு இதில் இருந்து தெளிவாக புரியும்.

ஃபஜ்ர் தொழுகையின் முன் சுன்னத்தை வீட்டில் தொழாத ஒருவர் மஸ்ஜிதிற்கு வரும்போது ஃபஜ்ர் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர் ஜமாஅத்தில் சேர்ந்து தொழுது விட்டு பிறகு தொழ நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அதுவும் அந்த ஃபஜ்ருடைய நேரம் முடியும்ட வரையில் தான் அந்த சுன்னத்தை கூட தொழ முடியும். அதை ஒருவர் இஷாவிலோ மஃரிபிலோ தொழ முடியாது. அது சுன்னத்தான தொழுகை என்பதால் தன் அந்த சலுகையை நபி(ஸல்) அவர்கள் நமக்கு தருகிறார்கள்.

சரியாக தீர்மானிக்க முடியாதவர்கள் கண்டிப்பாக ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன் என்றால் நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரில் தகவல் வந்த உடன் தன்னுடைய சமுதாயத்திற்கு நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு தெரியாது என்று கூறிய விஷயம் நமக்கு பெருநாள் நோன்பு எல்லாம் மாதங்களை அடிப்படையாக வைத்து அல்லாஹ் அருளிய இபாதத்துகள். அதற்கென்று உரிய நாளையும் நபி(ஸல்) அவர்கள் மூலம் கற்று தந்து அன்றைய தினம் என்ன செய்யவேண்டும்?

5. எந்த நிலையிலும் சமுதாயத்தை பிளவுபடுத்துவதை நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு காலத்தில் நேரந்தவறி மக்கள் தொழுகையை நிறைவேற்றும் போது, நீங்கள் வீட்டில் நேரத்தில் தொழுது கொண்டு, அவர்களுடன் சேர்ந்து தொழுங்கள் என்ற ஹதீஸிலிருந்து சமுதாயத்தை பிளவுபடுத்துவது எத்தனை குற்றம் என்பது புலப்படும்.

பதில்: நபி(ஸல்) அவர்கள், பின்னால், வரும் தலைவர்கள் (அஸர் தொழுகையை அதன் நேரம் முடித்து மஃரிபிலோ, இஷாவிலோ தொழுவார்கள்) தொழுகையை அதன் நேரத்தையும் பிற்படுத்தி தொழுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் கூட நீங்கள் சரியான நேரத்தில் தொழுது கொண்டு அவர்கள் நேரந்தவறி தொழுகை வைக்கும்போது அவர்களுடனும் சேர்ந்து தொழுது இவர் தான் எங்கள் தலைவர் என்பதை உறுதிபடுத்தி கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் ஷிர்கை காணாதவரை அவர்களை விட்டு பிரிய வேண்டாம் என்பதை உணர்த்தத்தான் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள். இஸ்லாத்தை விட்டு வெளியேறும் எந்த காரியத்தை அவர் செய்தாலும் நாம் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ளும் அவசியம் இல்லை என்பதை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.

இந்த ஹதீஸ் அபூ அப்தில்லாஹ் கூறுவது போல் மக்களை பிளவுபடுத்துவதை பற்றிக் கூறவில்லை மாறாக தலைவர்களை இணைவைக்கும் காரியத்தை செய்யாத வரை அவர்களை விட்டு பிரிந்து செல்லாமல் இருப்பது பற்றி உணர்த்தவே நபி(ஸல்) அவர்கள் இதை நமக்கு கட்டளையிட்டார்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள். அவனுடைய தூதருக்கு கட்டுப்படுங்கள். இன்னும் உங்களின் தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள். ஏதாவது ஒரு விஷயத்தில் உங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நீங்கள் (அந்த தலைவரின் பக்கம் செல்லாமல்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்ட காட்டித்தந்த வழிபடி நடந்து அவர்களுக்கு கட்டுப்படுங்கள் என்று தான் அல்லாஹ்வும் கூறுகிறான்.

ஆகவே நாம் பிறை விஷயத்தில் ஆதி காலம் முதல் பிரிந்து கிடக்கும் சமுதாயத்தை நபி(ஸல்) அவர்கள் எப்படி பிறை விஷயத்தில் ஒன்றிணைக்க வேண்டும் என்று காட்டி தந்தார்களோ அந்த அடிப்படையில் ஒன்றிணைக்கத்தான் பாடுபடுகிறோமே தவிர சகோதரர் கூறுவது போல் நாம் யாரையும் பிரிக்கவில்லை. பிரிந்து சின்னாபின்னப்பட்டு கேவலப்பட்டுள்ள சமுதாயத்தை ஒன்றிணைப்பதை பாவம் என்று கூறினால், அப்படி சொல்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லட்டும்.

இஸ்லாம் உலகத்திற்கு நேர்வழி காட்ட வந்த மார்க்கம். இந்த உலகை ஆட்சி செய்யப்போகிற மார்க்கம் என்றெல்லாம் பெருமை பேசுபவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சரியான நாட்காட்டியை மக்களிடம் கூறி எல்லா இபாதத்துகளையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித்தந்த சரியான நாளில் செய்து இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று நடக்கக்கூடியவர்களை (பேச கூடியவர்களை அல்ல பேசியது போல்  நடக்க கூடியவர்களை) மட்டுமாவது ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் பற்றி சிந்திக்காமல் போனது ஏன்? யாரை திருப்தி படுத்த இப்படியெல்லாம் விளக்கம் கூறுகிறார்கள்.

6. பெருநாள் தொழுகை தொழாமல் பெருநாள் கொண்டாடாமல் விட்டாலும் மறுமையில் அல்லாஹ் நம்மை குற்றப்படுத்த மாட்டான். ஆனால் வெவ்வேறு நாட்களில் தொழுது சமுதாயத்தை பிளவுபடுத்தினால் நாளை மறுமையில் நிச்சயம் குற்றப்படுத்துவான்.

மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் முரணான ஒரு கேள்வியை அவரே எழுப்பியுள்ளார். அது என்னவென்றால் வெவ்வேறு நாளில் தொழுது சமுதாயத்தை பிளவுபடுத்துபவர்களை அல்லாஹ் நிச்சயம் குற்றப்படுத்துவான். அதனால் தான் நாங்கள் சொல்கிறோம் ஒரே நாளில் இஸ்லாமிய மாதங்களை ஆரம்பிக்க நபி(ஸல்) வழிகாட்டி தந்திருக்கும் போது பிளவு பட்டு வெவ்வேறு நாளில் மாதத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று அதை ஒப்புக்கொண்டு அதற்கு முரணாக கட்டுரை எழுதினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் சிந்தித்தால் அவர் பயன் அடைவார்.

7. ஷவ்வால் நாளில் பெருநாள் கொண்டாடி அவர்களுக்கு உணர்த்த, அவர்களையும் நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும்ட என்ற வாதமும் தவறாகும் காரணம் நபி(ஸல்) அப்படி செயல்பட முற்பட்ட சந்தர்ப்பங்களில் நேர்வழிக்கு கெர்ணடு வரும் பொறுப்பு உம்முடையதல்ல என்று அல்லாஹ் கண்டித்துள்ளான் என்பதை 2:272, 28:56 வசனங்களில் பார்க்க முடிகிறது.

நாம் நேர்வழிக்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்று இதை செய்யவில்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் செய்யாததை ஏன் பிறருக்கு ஏவுகிறீர்கள் என கடுமையாக கண்டித்துள்ளதால் நாம் எதை சொல்கிறோமோ அதை செயல்படுத்திக் கட்டுகிறோமே தவிர இதனால் அவ்வளவு பேரும் எங்களுடைய பொறுப்பில் நேர்வழிக்கு வந்து விடுவார்கள் என்று நினைத்து செய்யவில்லை. சத்தியம் எதுவோ அதையே நாம் செய்வோம். அதிலி பிளவுண்டு போகிறவர்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏன் என்றால் நாங்கள் மார்க்கத்தை எப்படி சொல்கிறோமோ அப்படி செயல்படுத்தி அல்லாஹ்விடத்தில் நன் மதிப்பை பெற்று சுவன சோலைகளை அடைந்து நிம்மதியாக இருக்கவேண்டும்ட என்ற சுயநல நோக்கில் தான் செய்கிறோம். அதனால் நேர்வழிக்கு வராதவர்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அல்லாஹ்வும் கவலைப் பட வேண்டாம் என நபிக்கே கட்டளைவிடும் போது நாம் அதை பற்றி ஏன் கவலைப்பட போகிறோம். யாருடைய விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் அல்லாஹ்விடம் நன்மதிப்பை பெற முயற்சிப்போம். அல்லாஹ் அனைவரையும் நேர்வழிகாட்ட பிரார்த்திப்போம். “Eman Dubai”<uvais@eruvadi.com>

விளக்கம்: திட்டமாகத் தீர்மானிக்க முடியாத காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குச் சொன்ன சட்டத்தை தீர்மானிக்க முடியும் என்பதை உறுதியாக அறிந்துள்ள சமுதாயத்திற்கும் சட்டமாக்குவது சரி இல்லை என்பதும், சலுகைகளை சட்டமாக்க முற்படுவதும் தவறு என்பதும் உண்மைதான். அதே போல் சலுகைகளை சலுகை இல்லை என்று மறுப்பதும் தவறு என்பதை உணர வேண்டும் ரமழான் ஆரம்பித்து விட்டது என்பது கணிப்பின் மூலம் திட்டமாகத் தெரியும் இக்காலத்தில் நோன்பை ஆரம்பித்து விடவேண்டும் என்பதும், ஷவ்வால் பிறந்தவுடன் நோன்பு நோற்பது கூடாது என்பதும் தெளிவான சட்டமாகும். இதனை இன்றைய முஸ்லிம் ஏற்று நடக்கவேண்டும் என்பதும் உண்மைதான். நேர்வழி நடப்பவர்கள் இப்படித்தான் நடக்கவேண்டும் என்பதை தங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் யாரையும் தரகர்களாக-புரோகிதர்களாகக் கொள்ளாமல் அல்லாஹ் 73ல் கட்டளையிட்டுள்ளபடி செயல்படுகிறவர்கள் நேரடியாக சிந்தித்துரு விளங்க முடியும்.

ஆனால் பெருநாள் கொண்டாடுவது என்பது என்ன? சந்தோசத்தை வெளிப்படுத்த கொண்டாடுவதற்கும் அல்லாஹ்வின் கட்டளைப்படி கடமையானவைகளை நிறைவேற்றுவதற்குமுள்ள வேறுபாட்டை நாம் முதலில் உணரவேண்டும். ரமழான் மாதம் ஆரம்பித்தவுடன் நோன்பு நோற்காவிட்டால் குற்றம், அல்லாஹ் கேள்வி கேட்பான். தண்டிப்பான். அதேபோல் ஷவ்வால் பிறந்த பின்னரும் ரமழான் நோன்பு என்று நோற்றால் குற்றம். அல்லாஹ் கேள்வி கேட்பான். தண்டிப்பான். ஆனால் ஷவ்வால் முதல் நாள் அன்று பெருநாள் கொண்டாடவில்லையே ஏன்? என்று அல்லாஹ் கேட்பானா? அதற்காக தண்டிப்பானா? இல்லையே. சுன்னத்தான அமல்களை செய்தால் நன்மையுண்டு. செய்யாவிட்டால் கேள்வியோ தண்டனையோ இல்லை. இதை முதலில் நாம் உணர வேண்டும்.

பெருநாள் கொண்டாடுவதோ, பெருநாள் தொழுகை தொழுவதோ நோன்பு பிடிப்பது போல் கட்டாயக் கடமை இல்லை. அத்தொழுகையைத் தொழாமல் விட்டாலும் கேள்வியும் இல்லை; தண்டனையும் இல்லை. இந்த நிலையில் ரமழான் மாத நோன்பை நோற்பதையும், ஷவ்வாலில் நோன்பை விடுவதையும் ஆதாரமாகக் காட்டி, ஷவ்வால் முதல் நாளிலேயே பெருநாளையும் கொண்டாடியே தீரவேண்டும் என்று சட்டம் சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது? சலுகையைச் சட்டமாக்குவது யார்? நீங்களா? அந்நஜாத்தா, நிதானமாகச் சிந்தியுங்கள்.

“முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து தொழ வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு கன்னிப் பெண்கள் மற்றும் மாதவிடாய் பெண்கள் அனைவரையும் வரச் சொன்னார்கள்” என்று நாம் கூறியுள்ளதாக மிகவும் அபத்தமான கருத்தை எழுதியுள்ளீர்கள். நாம் எழுதியுள்ளதை மீண்டும் படித்துப் பாருங்கள்.

“அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறையாகும். அதனால்தான் தொழக்கூடாத மாத விடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் முதல் கொண்டு அனைவரையும் தொழுகை மைதானத்திற்கு (ஈத்கா) வரக் கட்டளையிட்டார்ககள்  நபி(ஸல்) அவர்கள்” என்றே எழுதி இருந்தோம்.

மாதவிடாய் பெண்களும் ஒன்று சேர்ந்து கூடி சந்தோசத்தை வெளிப்படுத்தவும், பிரார்த்தனையில் கலந்து கொள்ளவுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். சகோதரர் எழுதி இருப்பது போல் தொழுகைக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து அழைக்கப்பட்டிருந்தால் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள் அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதை சாதாரண அறிவு படைத்தவர்களும் விளங்க முடியும்.

ரமழானின் நோன்பு நோற்ற சந்தோசத்தைக் கொண்டாட அனுமதித்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் வகையில் அன்று இரண்டு ரகாஅத்துகள் தொழுகிறோமேயல்லாமல், அந்த இரண்டு ரகாஅத் கண்டிப்பாகத் தொழப்பட வேண்டும் என்று நம்மீது கடமையாக்கப்பட்ட கட்டாயக் கடமை இல்லை. ஃபர்ழுகளைவிட சுன்னத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கம் புரோகித முல்லாக்களுக்குப் பின்னால் சொல்லும் முகல்லிதுகளின் நடைமுறை என்பதை சகோதரர் விளங்குவாராக.

சகோதரர் சொல்லுவது போல் “பெருநாள் தொழுகைக்குரிய வக்தில்தான் பெருநாள் தொழுகை தொழ வேண்டும் என்பது உண்மையானால், நபி(ஸல்) அவர்கள் முஹர்ரம் 10ல் இருந்துகொண்டு அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் பிறை 9லும் நோன்பு நோற்பேன் என்று சொன்னதுபோல், இங்கும் அடுத்த வருடம் ஷவ்வால் 1ல் பெருநாள் தொழுகை தொழுது கொள்ளலாம் என்றே சொல்லி இருப்பார்கள். அடுத்த நாள் ஈத்கா வர கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். குறித்த ‘வக்த்’ என்றால் குறிப்பிட்ட நேரம் என்பதாகும். அதே மாலை நேரத்தில் அந்த ‘வக்த்’-நேரம் தவறிவிட்டதென்றால் அடுத்த நாள் காலை அந்த ‘வக்த்’-நேரம் அதாவது ஷவ்வால் முதல் பிறையின் காலை நேரம் மீண்டும் எப்படி வரும்? என்ற சாதாரண அறிவு கூட இல்லாதது வருந்தத்தக்க ஒரு விஷயமே மேலும் ‘விதி விலக்காக நபி(ஸல்) அவர்கள் செய்ததுதான் சரி என வாதிடுவது எந்த வகையில் நியாயம்” என்று நபி(ஸல்) அவர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்க முற்படுவது மிகப்பெரும் கொடுமையாகும். தங்களின் சொந்த யூகங்களைத் திணிக்கும் அதிகப் பிரசங்கித்தனமாகும். தங்களின் கருத்தை நிலைநாட்ட ஹதீஸ் நேரடியாகச் சொல்லும் கருத்தைப் புறக்கணித்து விட்டு சுய விளக்கம் கொடுத்து வாதிடுவது புரோகித முல்லாாக்களின் பாணி என்பதை சகோதரர் விளங்க முடியும்.

“ஒரு காலம் வரும்; அப்போது மக்கள் நேரந்தவறி தங்களின் கடமையான தொழுகையை நிறைவேற்றுவார்கள்’ என்று பொதுவாக மக்கள் தொழுவார்கள் என்று ஹதீஸில் உள்ளதே அல்லாமல், தலைமைப் பற்றிய விஷயமோ. அவர் ஷிர்க் செய்பவரா? செய்யாதவரா? என்பது பற்றிய செய்தியோ எதுவுமே இந்த ஹதீஸில் இல்லை. மக்களைப் பற்றிக் கூறும் ஹதீஸில் தலைவரை இழுத்து சொந்த விளக்கம் கொடுப்பது குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட சுய விளக்கம் அல்லாமல் வேறு என்ன என்பதை சகோதரர் உணர வேண்டும்.

சகோதரர் கற்பனை செய்துள்ள தலைவரை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொள்வோம். அந்த கற்பனைத் தலைவரை ஏற்றுக்கொண்டாலும் அன்று போல் இன்றும் அந்தக் கற்பனைத் தலைவருக்கு மாறு செய்து ஊரை பிளவுபடுத்தக் கூடாது என்றே விளங்க முடிகிறது. மேலும் இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக ஆழமாகத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பதை சகோதரர் உணரவேண்டும். “ஃபர்ழான – கடமையான குறிப்பிட்ட வக்தில் தொழவேண்டிய தொழுகையை மக்கள் (தலைவர் அல்ல) நேரந் தவறி தொழுவார்கள். அந்தக் காலத்தை நீங்கள் டைந்தால் வக்தில் உரிய நேரத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் தொழுது கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் தொழுகை நடத்தும்போது அவர்களுடனும் தொழுது கொள்ளுங்கள்” என்றே கட்டளையிட்டுள்ளார்கள். இந்த ஹதீஸ் ஊரைப் பிளவுப்படுத்துவதைக் கண்டிக்கிறதா? அல்லது தலைவருக்கு மாறு செய்வது குறித்துக் கூறுகிறதா?

“சரியான நேரத்தில் தொழக் கூடியவர்கள் எல்லாம் கூடி ஒரு ஜமாஅத் நடத்திவிட்டு, ஊராருடனும் சேர்ந்து தொழுது கொள்ளுங்கள்” என்று கூட நபி(ஸல்) கட்டளையிடவில்லை. மாறாக உரிய வக்தில் உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள் என்றே கட்டளையிட்டுள்ளார்கள். அதுவும் உரிய வக்தில் கண்டிப்பாகத் தொழ வேண்டிய கடமையான தொழுகை விஷயத்தில் இவ்வாறு கட்டளையிட்டிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? கண்டிப்பான கடமையான தொழுகை விஷயத்தில் கூட ஊரை பிளவுபடுத்தும் காரியத்தைச் செய்யாதீர்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை நேரடியாக தெளிவாக இருக்கும் போது, தலைவரைப் பிரியக் கூடாது என்றே இந்த ஹதீஸ் கூறுகிறது என்று சுய விளக்கம் கொடுத்து, கடமையில்லாத சுன்னத்தான பெருநாள் தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்தாகத்தான் தொழுவோம்ட என்று பிடிவாதமாக ஊரை இரண்டுபடுத்துவது எப்படி குர்ஆன், ஹதீஸுக்கு உட்பட்ட செயலாக இருக்க முடியும்? இது மனோ இச்சைக்கு வழிபட்ட மற்ற முஸ்லிம்களை இழிவாகக் கருதும் ஓர் ஆணவச் செயலாக மட்டுமே இருக்க முடியும் என்பதை சந்பந்தப்பட்டவர்கள் அனைவரும் உணரக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

சகோதரர் சொல்லுவது போல் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதை விட ஷவ்வால் பிறை ஒன்றில் தொழுவதற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் அன்று நோன்பு நோற்பதை ஹராமாக்கி இருக்கமாட்டார்கள். அன்று நோன்பு நோற்பதை விட்டு சாப்பிட்டு சந்தோசமாகக் கொண்டாடும் நோக்கத்துடனேயே அன்று நோன்பு ஹராமாக்கி இருக்கிறார்கள் என்பதை நடு நிலையோடு சிந்தித்து விளங்கலாம். ஈத் என்றாலே-பெருநாள் என்றாலே கொண்டாட்டம்தான்.

நோன்புப் பெருநாளை ஷவ்வால் பிறை ஒன்றிலேயே கொண்டாட வேண்டும். அடுத்த நாள் கொண்டாட முடியாது என்பதை நிலைநாட்ட அதற்கு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களை எடுத்து எழுதி சுய விளக்கம் கொடுத்து தனது வாதத்தை நிலைநாட்ட முற்பட்டிருப்பது தவறாகும். அது மட்டுமல்ல; குறிப்பிட்ட ஹதீஸ்கள் கூறாத கருத்துக்களை வலிய திணித்து தனது கட்சியை நியாயப்படுத்த முற்பட்டிருப்பது அதைவிடப் பெருந்தவறாகும்.

“அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழிப்படி நடந்து அவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என்று அல்லாஹ்வும் கூறுகிறான்” என்று எழுதி விட்டு, “விதிவிலக்காக நபி(ஸல்) செய்ததுதான் சரி என வாதிடுவது எந்த வகையில் நியாயம்?” என்று சிந்திக்கக் கூறி இருப்பது, சகோதரர் தெளிந்த சிந்தனையில்தான் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளாரா என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு கேவலப்பட்டுள்ள சமுதாயத்தை ஒன்றிணைப்பதை உண்மையான நோக்கமாகக் கொண்டிருந்தால், சொந்த விளக்கம் கொடுப்பதை விட்டு 3:103-ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் சகல பிரிவுகளை விட்டும் தெளபா செய்து விட்டு “முஸ்லிம்” என்ற அடையாளத்தோடு, அறிமுகத்தோடு குர்ஆன், ஹதீஸில் இருப்பதை அப்படியே பின்பற்ற முன்வரவேண்டும். மற்ற முஸ்லிம்களை இழிவாக, கேவலமாக நினைத்து தங்களை அவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டத் தனித் தனிப் பெயர்களில் செயல்படுவதை விட்டுத் தொலைக்க வேண்டும். இதுவே அசலான முக்கிய முயற்சியாகும். இதுவே பாவமற்ற செயல். மற்றபடி சமுதாயத்தை ஒன்றுபடுத்துகிறோம் என்று கூறி இவர்களாக சுய திட்டம் வகுத்து அதை நிலைநாட்ட முற்படுவது பாவமான செயலேயாகும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

“பெருநாள் தொழுகை தொழாமல் பெருநாள் கொண்டாடாமல் விட்டாலும் மறுமையில் அல்லாஹ் நம்மை குற்றப்படுத்த மாட்டான். ஆனால் வெவ்வேறு நாட்களில் தொழுது, சமுதாயத்தைப் பிளவுபடுத்தினால் நாளை மறுமையில் நிச்சயம் குற்றப்படுத்துவான்” மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் முரணான ஒரு கேள்வியை அவரே எழுப்பியுள்ளார். அது என்னவென்றால்  வெவ்வேறு நாளில் தொழுது சமுதாயத்தை பிளவுபடுத்துபவர்களை அல்லாஹ் நிச்சயம் குற்றப்படுத்துவான். அதனால்தான் நாங்கள் சொல்கிறோம் ஒரே நாளில் இஸ்லாமிழய மாதங்களை ஆரம்பிக்க நபி(ஸல்) வழிகாட்டித் தந்திருக்கும் போது பிளவுபட்டு வெவ்வேறு நாளில் மாதத்தை ஆரம்பிக்க வேண்டாம் என்று. அதை ஒப்புக் கொண்டு அதற்கு முரணாக கட்டுரை எழுதினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை சிந்தித்தால் அவர் பயன் அடைவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

எமது விளக்கத்தை முறையாகச் சிந்தித்து விளங்கத் தவறியதால் உண்டான விமர்சனமே இதுவாகும். ரமழான் நோன்பு கட்டாயக் கடமை. ரமழான் ஆரம்பித்தவுடன் நோன்பு நோற்க வேண்டும். ஷவ்வால் பிறந்தவுடன் நோன்பை விட வேண்டும். நோன்பு நோற்பதும் விடுவதும் கூட்டு அமல் இல்லை. ஜமாஅத்தாக சேர்ந்து செய்வதும் இல்லை. உரிய காலத்தில் நோன்பை ஆரம்பித்து, உரிய காலத்தில் நோன்பை விடுவதால் சமுதாயத்தைப் பிளவுபடுத்திய குற்றம் ஆகாது. எனவேதான் மக்கள் நேரம் தவறி கடமையான தொழுகையை தொழும்போது, நீங்கள் உரிய காலத்தில் வீட்டில் அத்தொழுகையைத் தொழுது கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், உரிய வக்தில் கூட்டு அமலான தனி ஜமாஅத் தொழுகையை அனுமதிக்கவில்லை. நேரம் தவறி மக்கள் தொழும்போது அவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழக் கட்டளையிட்டார்கள் நபி(ஸல்).

கடமையான அமலுக்கும் சுன்னத்தான அமலுக்கும், தனித்தனி அமலுக்கும், கூட்டு அமலுக்குமுள்ள வேறுபாடு தெரிந்திருந்தால் இப்படியொரு விமர்சனத்தை எழுதி இருக்கமாட்டார். சகோதரருடைய பார்வையில் கடமையான அமல், சுன்னத்தான அமல், தனித்தனி அமல், கூட்டு அமல் இவை அனைத்தும் ஒரே தராதரத்தில் இருக்கின்றன போலும். அதனால்தான் எமது கூற்றுக்கு முரணாக நாமே கட்டுரை எழுதியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

முஸ்லிம்கள் அனைவரும் ஒரே நாளில் ஒன்றுபட்டுத்தான் பெருநாள் கொண்டாட வேண்டும் இதற்கு மற்ற முஸ்லிம்களுக்கு அழகிய முறையில் உபதேசம் செய்து, அவர்களை வழிகெடுக்கும் புரோகித முல்லாக்களின் பிடியிலிருந்து விடுவித்து, அனைவரும் ஒரே நாளில் நோன்பு நோற்று, ஒரே நாளில் பெருநாள் கொண்டாட முயற்சிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டு அவர்கள் சரியான நாளில் பெருநாள் கொண்டாட தயாரில்லை; எனவே சரியான நாளில் நாங்கள் கொண்டாடுகிறோம் என்று அவர்கள் கொண்டாடாத பிரிதொரு நாளில் பெருநாள் கொண்டாட முற்படுவது ஊரை இரண்டுபடுத்தும் தவறான செயலேயாகும். நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைக்கு முரணான செயலேயாகும். மக்கள் நேரம் தவறி தொழும்போது உரிய நேரத்தில்தான் தொழவேண்டும். அவர்கள் உரிய நேரத்தில் தொழத் தயாராக இல்லை. எனவே நாங்கள் உரிய நேரத்தில் ஜமாஅத்தாக தொழுதே தீருவோம் என்ற ஆணவத்துடன் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டலுக்கு முரணாகச் செயல்பட்டு வழிகேட்டை விலை கொடுத்து வாங்குவது போன்ற செயலேயாகும்.

“இஸ்லாம் உலகத்திற்கு நேர்வழிகாட்ட வந்த மார்க்கம்; இந்த உலகை ஆட்சி செய்யப் போகிற மார்க்கம் என்றெல்லாம் பெருமை பேசுகிறவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் சரியான நாட்காட்டியை மக்களிடம் கூறி எல்லா இபாதத்துகளையும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்ட காட்டித் தந்த சரியான நாளில் செய்து, இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்று நடக்கக் கூடியவர்களை மட்டுமாவது ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் பற்றி சிந்திக்காமல் போனது ஏன்? யாரை திருப்திப்படுத்த இப்படி எல்லாம் விளக்கம் கூறுகிறார்கள்?” என்று கேட்டிருக்கிறார் சகோதரர்.

மக்களையோ, தலைவர்களையோ, செல்வந்தர்களையோ, பணம் கொட்டும் அமைப்புகளையோ திருப்திப்படுத்தும் நோக்கம் இருந்தால் மக்கள் அனைவரின் ஏகோபித்த வெறுப்பையும், மறுப்பையும் ஏற்றுக் கொண்டு, இடைத்தரகர்களான புரோகித முல்லாக்களைத் தோலுரித்துக் காட்டும் கடும் பணியை அந்நஜாத் ஒருபோதும் செய்ய முடியாது என்பதை உணருங்கள்.

அல்லாஹ்வை திருப்திப்படுத்த வேண்டும். அவனது கட்டளைகளே கடைபிடிக்க வேண்டியவை என்ற உறுதியுடன் குர்ஆன், ஹதீஸ் கூறுவதையே கூறுகிறோம் என்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும். அல்குர்ஆன் 7:3 கட்டளையைப் புறக்கணித்து விட்டு, அதாவது அல்லாஹ் யாரையும் பாதுகாவலர்களாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றாதீர்கள் என்று தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கட்டளை இட்டிருந்தும் அதை முதுகுக்குப் பின்னால் போட்டு விட்டு அல்லாஹ்வுக்கும் தங்களுக்கு இடையில் இடைத்தரகர்களை புரோகிதர்களை ஆக்கிக் கொண்டு அரபி தெரிந்த மவ்லவிகளே மார்க்கத்தைச் சரியாகச் சொல்ல முடியும் என்ற குருட்டு நம்பிக்கை உடையவர்களே, குர்ஆன், ஹதீஸ் அர்த்தங்களை அனார்த்தமாக்கி சொந்த யூகங்களை மார்க்கமாகச் சொல்லும் புரோகிதர்களை கண்மூடி பின்பற்றுபவர்களே சம்பந்தமில்லாத ஆயத், ஹதீஸ்களுக்கு சம்பந்தமில்லாத சுய விளக்கங்களை மேற்படி விமர்சனத்தில் காணப்படுவது போல் கூறி வழி தவறிச் செல்ல முடியும்.

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் எண்ணம் உடையவர்கள் கூலிக்கு மார்க்கத்தை விற்கும் புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணித்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி அல்லாஹ் இட்ட பெயரான ‘முஸ்லிம்’ என்று தன்னை அறிமுகப்படுத்துவதோடு சகல பிரிவுப் பெயர்களையும் விட்டு தெளபா செய்து 3:103 இறைக் கட்டளைப்படி ஒன்றுபட்டு அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்துக் கொள்வார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சின்னஞ்சிறிய கூட்டத்தில் நம்மை இணைத்தருள்வானாக!

Previous post:

Next post: