“இஜ்மா” மார்க்க ஆதாரமா?

in 2013 ஏப்ரல்

அபூ அப்தில்லாஹ்

02.02.2013 சனியன்று திருச்சியில் சைபுத்தீன் ரஷாதிக்கும் ஜைனுல் ஆபிதீன் உலவிக்கும் இடையில் ஒரு விவாதம் இடம் பெற்றது. அதில் சகோ. சைபுத்தீன் ரஷாதி இஜ்மா குர்ஆன், ஹதீஃதுக்குப் பிறகு மூன்றாவது ஆதாரமாக இருக்கின்றது என்றும் சகோ. ஜைனுல் ஆபிதீன் இஜ்மா மார்க்க ஆதாரம் இல்லை என்றும் வாதிட்டனர். ஆரம்பத்தில் பீ.ஜை. இஜ்மா மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பதற்கு ஆதாரமான குர்ஆன் வசனங்களை எடுத்து வைத்தவர் பின்னர் அதில் உறுதியாக நில்லாமல், இஜ்மாவின் பேரால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை பிக்ஹு கிதாபுகளிலிருந்தே எடுத்து அடுக்கடுக்காக வைத்துத் திசை மாறிப் போனார். அதுவும் சைபுத்தீன் ரஷாதிக்குச் சாதகமாகப் போய் விட்டது.

இதற்கு முன்னரும் ஒரு சமயத்தில் மவ்லூதுகள் மார்க்கத்திற்கு உட்பட்டவையா? அல்லது மார்க்க முரணான பித்அத்தா என்ற விவாதத்திலும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களை எடுத்து வைக்காமல் அந்த மவ்லூதுகளில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துப் பேச எதிர் தரப்பினருக்கு அது பெரும் வாய்ப்பாகப் போய் விவாத நேரத்தை அந்தச் சர்ச்சையே விழுங்கிவிட்டது.

இதேபோல் “”பிக்ஹு” கிதாபுகள் மார்க்கத்திற்கு உட்பட்டவை அல்ல என்பதற்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கொடுக்காமல், பிக்ஹு கிதாபுகளிலுள்ள அசிங்கங்களை எடுத்து வைக்கப் போய் அவை வீண் சர்ச்சைகளுக்கு வழிவிட்டு விவாத நேரத்தைப் பாழாக்கியது.

இஜ்மாவுக்கு, மவ்லூதுகளுக்கு, பிக்ஹு கிதாபுகளுக்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்பதற்குத் தெள்ளத் தெளிவான நேரடியான ஆதாரங்கள் குர்ஆன், ஹதீஃதில் பல இருக்க, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல், அவற்றைக் கண்டு கொள்ளாமல் இஜ்மா, மவ்லூதுகள், பிக்ஹு கிதாபுகள் இவற்றிலுள்ள குறைகளைப் பெரிதுபடுத்தி பேசுவதால் கண்ட பலன் என்ன? பீ.ஜை. கூறும் அவற்றிலுள்ள குறைபாடுகள் அகற்றப்பட்டு விட்டால், மவ்லூதுகள் ஓதுவது மார்க்கமாகி விடுமா? இஜ்மா மார்க்கத்தின் அடிப்படை ஆதாரமாகிவிடுமா? பிக்ஹு கிதாபுகள் வேதப் புத்தகங்கள் ஆகிவிடுமா? என்று ஒருவர் கேட்டால் அதற்குப் பீ.ஜை.யின் பதில் என்ன? அப்படியானால் ஏனிந்த வீண் வாதங்கள்?

பீ.ஜை. ஏனிந்தத் தந்திரங்களைக் கையாள்கிறார் தெரியுமா? அங்குதான் அவரது சூதுமதி மறைந்திருக்கிறது. 4 மத்ஹபுகள், பிக்ஹுகள், தரீக்காக்கள், இஜ்மா, கியாஸ், மவ்லூதுகள் தர்கா சடங்குகள் இவை அனைத்தும் மார்க்கம் நிறைவு பெற்று (பார்க்க 5:3, 3:19,85) இறுதித் தூதரும் மரணித்து 400 ஆண்டுகள் கழித்து மனிதக் கற்பனையில் உருவானவையே என்பதற்குரிய குர்ஆன் வசனங்களையும், ஆதார பூர்வமான நபி நடைமுறைகளையும் எடுத்து வைத்து வாதிட்டால், அவர் தூக்கிப் பிடிக்கும் இயக்கங்கள், அரசியல் நடவடிக்கைகள் இவற்றை நியாயப்படுத்த இஜ்மா, கியாஸ் போன்று லாஜிக்-குயுக்தி, பாலிசி- தந்திரம் இவையும் மார்க்க முரணானவை-பித்அத்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். பூனைக்குட்டி வெளியே வந்துவிடும்.

இந்த அச்சம் காரணமாக நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட வற்றில் எது ஒன்றும் ஒருபோதும் மார்க்கமாகாது. நரகத்தில் கொண்டு சேர்க்கும் பித்அத்கள்-புதுமைகள் என்பதைத் திட்டமாகத் தெள்ளத் தெளிவாக உறுதியாகக் கூறும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும், மார்க்கத்தைப் பிழைப்பாக-தொழிலாகக் கொண்ட மவ்லவிகளான இந்த மதகுருமார்கள் ஒரு போதும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க மாட்டார்கள். அப்படி உள்ளதை உள்ளபடி குர்ஆன், ஹதீஃதை எடுத்து வைத்தால் அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ள ஒரு போதும் முடியவே முடியாது.

குர்ஆன், ஹதீஃதின் நேரடிக் கருத்துக்களை மக்களிடமிருந்து மறைத்து(2:159) இந்த மவ்லவிகள் தங்கள் கைச் சரக்குகளை வாரி இறைத்து மக்களை மதிமயக்கி வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில்தள்ளும் காரணம் புரிகிறதா? இந்த மவ்லவிகளும் அவர்களை தக்லீது செய்யும் அதாவது கண்மூடிப் பின்பற்றும் முகல்லிது களும் (பீ.ஜையைப் பின்பற்றுகிறவர்களும் முகல்லிதுகள்தான்) நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு ஒப்பாரி வைப்பதோடு, ஒருவரை ஒருவர் குற்றப்படுத்தி சபிப்பதைக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துச் சிந்திப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.
7:35-41 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45.

34:31-34 இறை வாக்குகள் பெருமையடித்தவர்கள் என்று கூறுவது இம்மதகுருமார்களையே. யாரெல்லாம் தங்களை ஆலிம்கள் மார்க்கத்தைப் படித்து விளங்கியவர்கள், மற்றவர்கள் நாங்கள் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் கொடுக்கும் விளக்கத்தை ஏற்று நடக்க வேண்டும்; சுயமாக நேரடியாக குர்ஆனை, ஹதீஃதைப் படித்து விளங்க முற்படக்கூடாது என்று கூறுகிறார்களோ அவர்கள் கடைந்தெடுத்தப் பொய்யர்கள், அயோக்கிய சிகாமணிகள், மூடர்கள், பெரும் பாவிகள், நரகத்தை நிரப்ப இருப்பவர்கள் என்பதற்கே எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக இருக்கின்றன. அவர்களது பேச்சை நம்பி அவர்கள் பின்னால் சுய சிந்தனை இல்லாது கண்மூடிச் செல்பவர்கள்தான் நரகில் அழுது புலம்புகிறவர்கள்.

உலகியல் பரீட்சைகளில் காப்பி அடிப்பவர்கள் எப்படிப்பட்டத் தண்டனைக்கு ஆளாகிறார்களோ அதைவிட மிகமிகக் கடுமையான மீட்டவே முடியாத கடும் தண்டனையை (33:66-68) வாழ்க்கைப் பரீட்சையில் (67:2) இந்த மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்று வதன்(தக்லீத்) மூலம் காப்பி அடிப்பவர்கள் அடைகிறார்கள் என்றே மேலே எடுத்து எழுதியுள்ள வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த மவ்லவிகளின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் படித்து சுயமாக சிந்தித்து விளங்குகிறவர்கள் அதன்படி நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி பெற முடியும்.

ஒவ்வொரு தொழுகையிலும் ஒவ்வொரு ரகாஅத்திலும் “”எங்களை நேர்வழியில் நடத்துவாயாக” என்று அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம். 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளில் மனிதர்கள் அனைவரையும் விட நமக்குச் சமீபமாக இருப்பதாகவும், தன்னையே நம்பும்படியும், தன்னிடமே கேட்கும்படியும் (2:186) அல்லாஹ் கூறி இருக்க, இந்த இறைவாக்கு களை 2:39 இறைவாக்கு சொல்வது போல் நிராகரித்து விட்டு மதகுருமார்களான இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் சொல்வது தான் மார்க்கம் என்று கண்மூடித்தனமாக நம்பி அவர்களை வழிகாட்டிகளாக ஏற்று நடப்பவர்கள் நாளை மறுமையில் எங்கே போய்ச் சேர்வார்கள் என்பதை மேலே கண்ட வசனங்கள் தெளி வாக்கவில்லையா?

இப்போது சு.ஜ.மவ்லவிகள் அடம் பிடிக்கும் “”இஜ்மா” “”கியாஸ்” த.த.ஜ. மவ்லவிகள் அடம் பிடிக்கும் “”லாஜிக்”, “”பாலிசி” தெள்ளத் தெளிவான பித்அத்கள்-வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்ப்பவை என்பதை நாம் கூறவில்லை. குர்ஆன், ஹதீஃத் கூறுவதைப் படித்துப் பாருங்கள்.

7:3 இறைவாக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். மனிதர்களில் யாரையும் வழிகாட்டியாக-பாதுகாவலராகப் பின்பற்றவே கூடாது என்று கட்டளையிடுகிறது. மனிதர்களில் மிகச் சொற்பமானவர்களே இந்த உண்மையை உணர்ந்து நடக்கிறார்கள் என்பதையும் இந்த வசனம் உறுதிப்படுத்துகிறது.

53:2-4 இறைவாக்குகள் இறுதி இறைத் தூதர் தம் இச்சைப்படி எதையும் கூறுவதில்லை; அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதையே மக்களுக்கு அறிவிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.
3:31 இறைவாக்கு அல்லாஹ்வை உண்மை யாகவே நேசிப்பவர்கள் தூதரையே பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
33:21இறைவாக்கு அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்பி நடப்பவர் களுக்கு இறைத் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருப்பதாக உறுதியாகக் கூறுகிறது.
59:7 இறைவாக்கு இறைத்தூதர் ஏவியதை எடுத்து நடக்க வேண்டும்; விலக்கியதை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

இவை அல்லாமல் 3:32, 132, 4:59, 5:92, 8:1, 20,46, 20:90, 24:54,56, 47:33, 58:13, 64:12,16 ஆகிய இறைவாக்குகளில் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுவது பற்றியும், 3:50, 26:108,110,126,131,144,150,163,179, 43:63, 71:3 ஆகிய இறைவாக்குகளில் அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடப்பதோடுத் தங்களைப் பின்பற்றும்படி நபிமார்கள் வலியுறுத்தி யுள்ளதையும் பார்க்க முடிகிறது.

இவை அல்லாமல் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதரும் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக, நேரடியாக எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி மிகத் துல்லியமாக விளக்கிவிட்டதாக எண்ணற்ற குர்ஆன் வசனங்களும், ஹதீஃத்களும் திட்டமாகக் கூறுவதை இதற்கு முன்னர் அந்நஜாத்தில் இடம்பெறச் செய்துள்ளோம். இவ்வளவு தெளிவாக குர்ஆனும், ஹதீஃத்களும் சொல்லிக் கொண்டிருக்க அல்லாஹ் விளக்கிய குர்ஆன் உங்களுக்கு விளங்காது, தூதர் விளக்கிய ஹதீஃத் உங்களுக்கு விளங்காது, நாங்கள்தான் மேல் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று இந்த மதகுருமார் களான மவ்லவிகள் கூறுவதாக இருந்தால் அதன் பொருள் என்ன? அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ் நாங்கள்தான், தூதருக்கும் மேல் தூதர் நாங்கள்தான் என்று தானே இந்த மவ்லவி கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

42:21 இறைவாக்கு இந்த மவ்லவிகளை மிகக் கடுமையாக எச்சரிக்கிறது. மேலும் இந்த இறைவாக்கு அல்லாஹ் தீர்ப்பை மறுமைக் கென்று ஒத்தி வைத்திருக்காவிட்டால், இங்கேயே இப்போதே தீர்ப்பளித்து நரகில் எறியப் பட்டிருப்பார்கள் என எச்சரிக்கின்றது. மேலும் 42:14 இறைவாக்கு குர்ஆனும், ஹதீஃதும் தெள்ளத் தெளிவாக இருந்தும் அந்த ஞானம் தங்களிடம் (குர்ஆன்) வந்தபின்னரும் அவர்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரண மாகத் தவிர 21:92, 23:52 இறைவாக்குகளை நிராகரித்து மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், ஜாக், ததஜ இயக்கம் இத்யாதி, இத்யாதி பிரிவுகளாகப் பிரியவில்லை என்று கூறி இங்கும் தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்ப தால் இம்மவ்லவிகள் தப்பினார்கள்; இல்லை என்றால் நரகில் எறியப்பட்டிருப்பார்கள் என எச்சரிக்கிறது.

மேலும் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள் என்று 49:16 இறைவாக்கு மிகக் கடுமையாக எச்சரிக்கிறது. மேலும் 33:36 இறைவாக்கு அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தைத் தெளிவாக்கியப் பின்னர் அதில் வேறு அபிப் பிராயம் கொண்டு தங்களின் சுய கருத்துக்களைப் புகுத்துவது பகிரங்கமான வழிகேடு என்று எச்சரித்திருந்தும் இந்த மவ்லவிகள் இஜ்மா, கியாஸ்,லாஜிக், பாலிசி என்று தங்கள் தங்கள் சுய கருத்துக்களைப் புகுத்தி பகிரங்க மான வழிகேட்டில் செல்கிறார்கள் என மிகக் கடுமையாக எச்சரிக்கிறது. அதன் முடிவு நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கொண்டு ஒருவரைக் குற்றம் சொல்லியும், சபித்தும், வேதனையை இருமடங்காக்கச் சொல்லியும், ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:33, 37, 27:33, 38:55-64, 40:47,50, 41:29, 43:36-45 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த இறைவாக்குகள் இந்த மவ்லவிகளை இங்கு திருத்தா. நாளை மறுமையில் தண்டனையை அனுபவிக்கும் போதுதான் உணர்வார்கள். காரணம் அல்லாஹ் குர்ஆனில் நேரடியாக சுமார் 50 இறைவாக்குகளில், சம்பளத்திற்கு மார்க்கப்பணி செய்யக் கூடாது என்றும், அதனால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகள் பற்றியும் தெள்ளத் தெளிவாக விளக்கி இருந்தும் இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு, கூலிக்கு மார்க்கப்பணி புரிந்து தங்கள் உள்ளங்களை கற்பாறைகளை விடக் கடுமையாக இறுகச் செய்து விட்டதால் (பார்க்க 2:74, 174-176, 5:13, 6:125)குர் ஆனின் நேரடிப் போதனைகள் அவர்களுக்கு உறைக்காது. அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்களின் கற்பனைச் சுய விளக்கங்கள் அவர்களுக்கு நேர்வழியாகத் தெரியும். ஷைத்தான் அவர்களுக்கு கோணல் வழிகளைத்தான் நேர்வழியாகக் காட்டுகிறான். அதனால் தான் அல்லாஹ் 36:21 இறைவாக்கில் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்களை மட்டுமே பின்பற்றச் சொல்லி ஒரு மனிதர் மூலம் அறிவிக் கச் செய்கிறான். அதாவது அன்று கூலிக்கு மாரடித்த மதகுருமார்களைப் பின்பற்றாமல், சம்பளம் வாங்காமல் மார்க்கப் பணி புரிந்த இறைத் தூதர்களை மட்டுமே பின்பற்றச் சொல்லி வழிகாட்டியிருக்கிறான்.

பிப்ரவரி 2013 முதல் வாரத்தில் நடைபெற்ற விவாதத்தில் சகோ.சைபுத்தீன் ரஷாதி வரம்பு மீறி முன் சென்றவர்களைப் புகழ்ந்தார். சகோ.ஜைனுல் ஆபிதீன் வரம்பு மீறி முன் சென்றவர்களை இகழ்ந்தார். இருவரும் 2:134, 141 இறைக் கட்டளைகளை நிராகரித்து விட்டு மனோ இச்சைக்கு வழிப்பட்டே விவாதம் செய்தனர். அல்லாஹ் அவர்கள் சென்று போனவர்கள், அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கு, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் வினவப்படமாட்டீர்கள் என்று திட்டமாக, தெளிவாக,நேரடியாகக் கூறி இருக்க இந்த இறைக்கட்டளை நிராகரித்து ஷைபுத்தீன் ரஷாதி முன்னோர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களின் வழிகாட்டல் படிதான் நடக்க வேண்டும் என்று வாதிட்டதும், ஜைனுல் ஆபிதீன் வரம்பு மீறி அவர்களின் தவறுகளை மிகைப்படுத்தி விமர்சித்ததும் பகிரங்க வழி கேடே! இதை நாம் சொல்லவில்லை. 33:36 இறைவாக்குத் திட்டமாகக் கூறுகிறது.

மேலும் வரம்பு மீறி நடப்பவர்களை தாஃகூத்-மனித ஷைத்தான்கள் என்று 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 ஆகிய எட்டு இடங்களில் கடுமையாக எச்சரித்திருக்கிறான்.

39:3 இறைவாக்கு தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்றும் 3:128,154, 4:47, 6:57,62, 12:40,67, 28:70,88, 39:3, 40:12, 68:48 போன்ற பல இறைவாக்குகள் அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. நபிமார்களும் அதில் தலையிட முடியாது; இறுதி நபிக்கே அதிகாரத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்றும் திட்டமாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த மவ்லவிகள் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு மேல் விளக்கம் கொடுக்க முடியும் என்று நம்பினால் அதைவிட மாபெரும் வழிகேடு பிரிதொன்று இருக்க முடியுமா? (பார்க்க : 33:36)

5:3 இறைவாக்கில் மார்க்கம் முழுமையாக நிறைவு பெற்று விட்டது, அல்லாஹ்வின் அருட் கொடைகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டன; இதற்கு மேல் அதில் சேர்ப்பதற்கு ஒன்றுமே இல்லை; அந்த மார்க்கத்தை மட்டுமே அல்லாஹ் பொருந்திக் கொள்வான் என்றும், 3:19 இறை வாக்கு அந்த இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட- ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம், நெறிநூல் வழங்கப்பட்டவர்கள் (மவ்லவிகள் உட்பட அனைத்து மத மதகுருமார்கள்) தங்களுக்கிடையேயுள்ள பொறாமை காரணமாகவேயன்றி பல பிரிவினர்களாகப் பிரியவில்லை என்றும், 3:85 இறைவாக்கு அல்லாஹ்வால் பொருந்திக் கொள்ளப்பட்ட நிறைவு பெற்ற இஸ்லாத்தைத் தவிர, வேறு பல்வேறு மதங்களோ, மத்ஹபுகளோ, தரீக்காக்களோ, மஸ்லக்களோ, அஹ்லஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, இத்யாதி இத்யாதி பிரிவுகளோ மக்களால் விரும்பி நேசிக்கப் பட்டாலும் அவை ஒருபோதும் அல்லாஹ்வால் ஏற்கப்படா; இத்தரத்தினர் நாளை மறுமையில் பெரும் இழப்பிற்கும், நட்டத்திற்கும் உரியவர் களாக மட்டுமே இருப்பர் என்று அறுதியிட்டு உறுதி கூறுகின்றன.

நபி(ஸல்) அவர்களும் குர்ஆனும், ஹதீஃதும் (இரண்டு மட்டும்) இரவும் பகலைப் போல் வெளிச்சமானவை, தெளிவானவை, சந்தேகத்திற்கப்பாற் பட்டவை, அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழிகெட்டுச் செல்ல மாட்டான் என்றும் குர்ஆன், ஹதீஃத் அல்லாமல் புதிதாக உண்டாக்கப்படுபவை அனைத்தும் பித்அத்துகள்-வழிகேடுகள்-நரகில் கொண்டு சேர்க்கும் என்று 33:36 இறைவாக்கை உறுதிப்படுத்திக் கூறி இருக்கையில், இஜ்மா, கியாசுக்கோ, லாஜிக், பாலிசிக்கோ மார்க்கத்தில் அனுமதி இருக்குமா? சிந்தியுங்கள்.

குர்ஆன், ஹதீஃத் கூறும் நேரடிக் கருத்துக்களை வலியுறுத்தி மேல் விளக்கம் கொடுப்பதைச் சரி காணலாம். அதற்கு மாறாக 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வே, நேர்வழியையும், ஆதாரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளத் தெளிவாக மனிதர்களுக்காகவே விளக்கியுள்ள நிலையில், அவற்றின் நேரடிக் கருத்துக்களைத் திரித்து, வளைத்து மறைப்பவர்களான இந்த மவ்லவிகள் நேர்வழி பெற முடியுமா? மக்களுக்கு நேர்வழி காட்ட முடியுமா?

அதற்கு மாறாக அல்லாஹ்வினதும், மற்றும் அனைத்துப் படைப்பினங்களினதும் சாபத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் போதிக்கும் வழிகேடு கள் தெளிவான நேரடியான குர்ஆன் வசனங்களைக் கொண்டு எடுத்துக் காட்டும்போது அவர்கள் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிப்பதாக வாக்களிக்கிறான் (2:160). அதற்கு மாறாக தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் மட்டுமே என்று சாதிப்பார்களானால், அதே நிலையில் மரணித்தும் விட்டால், அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது சாபமும் ஏற்படுகிறது; நரகில் எறியப்படுவார்கள். தண்டனை எளிதாக்கப்பட மாட்டாது என்று 2:161, 162 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்போது சிந்தியுங்கள்! குர்ஆன் விரிவுரை (தஃப்சீர்) ஹதீஃத் விரிவுரை (தஃப்சீர்), மத்ஹபுகளின் பெயரால் பிக்ஹ் நூல்கள் இவை அனைத்தும் மக்களுக்கு குர்ஆன், ஹதீஃதிலுள்ளவற்றை உள்ளது உள்ளபடி எடுத்துக் சொல்லவா? அல்லது 2:159 கூறுவது போல் நேர்வழியை கோணல் வழிகளாக்கி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திப் பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளவா? இந் நூல்களிலுள்ளவற்றில் ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலானவை மனிதக் கற்பனைகளே. கோணல் வழிகளே. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மவ்லவிகள் 36:21 சொல்வது போல் நேர்வழியை மக்களுக்குக் காட்ட முடியுமா? ஒரு போதும் முடியாது. அதற்கு மாறாக கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி மக்களை வஞ்சிப்பார்கள். இவர்களை நம்பி இவர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்கள் (32:13, 11:118,119) நாளை மறுமையில் நரகை நிரப்ப இருப்பவர்களே என்று குர்ஆனின் எச்சரிக்கைப் பொய்யாகுமா?

குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்களுக்கு கடும் கோபமும், வெறுப்பும் இம் மவ்லவிகள் மீது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் 16:116 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு ஹலாலை ஹராமாக்குகிறார்கள்; ஹராமை ஹலாலாக்குகிறார்கள். அதாவது மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாக்குகிறார்கள். மார்க்கம் அல்லாததை மார்க்கம் ஆக்குகிறார்கள். பித்அத்களான மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக், ஜாக், ததஜ, இதஜ இத்யாதி இத்யாதி கோணல் வழிகளை மார்க்கமாக்கி வைத்துள்ளனர். இறை வாக்குகள் 5:3, 3:19,85, 33:36, 21:92, 23:52, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 இன்னும் இவை போல் எண்ணற்ற இறைவாக்குகளை 2:39 இறைவாக்கு சொல்வது போல் நிராகரித்து முஸ்லிம் சமுதாயத்தில்-பித்அத்களை புதுமைகளைப் புகுத்தி சமுதாயத்தை அக்கு வேறு ஆணி வேறாக்கி விட்டார்கள்.

6:153 இறைவாக்குத் திட்டமாகத் தெளிவாக நேரடியாக அல்லாஹ் தனது தூதர் மூலம் காட் டிய வழி மட்டுமே நேர்வழி; இம்மதகுருமார்கள் கற்பனை செய்துள்ள மத்ஹபுகள், தரீக்காக்கள், (சூஃபிசம்), மஸ்லக்கள், அஹ்லஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, இத்யாதி, இத்யாதி, அனைத்தும் பகிரங்க வழிகேடுகள் என்று மிக உறுதியாகக் கூறுகிறது. மேலும் அல்லாஹ் கொடுத்த அந்த ஒரே நேர்வழியைப் பின்பற்றுகிறவர்கள் மட்டுமே பயபக்தி மற்றும் இறையச்சம் உடையவர்கள், முஃமின்கள் என்றும் உறுதியாகத் தெரிகிறது. இன்று முஸ்லிம் சமுதாயம் SC, ST  என இந்து மத குருமார்களால் இழிவுபடுத்தப்பட்டுள்ள மக்களை விட கீழான நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதையும் நாம் சொல்லவில்லை. சமீபத்தில் ஆய்வு நடத்திய சச்சார் கமிஷனே பாராளு மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆயினும் விமோசனம் பிறக்கவில்லை. அழிவின் அதலபாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கிறது.

தொழுகை இல்லாத ஒருவன் நாளை மறுமையில் முஸ்லிமாக அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படமாட்டான் என்பது குர்ஆனும், ஹதீஃதும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் இன்று 98% தொழுகையற்றவர்களாகக் காணப்படுகின்றனர். தொழுபவர்ளிலும் பெரும்பாலோர் தொழுகை முறை அறியாதிருக்கின்றனர். இமாம்களின் பெயரால், இயக்கங்களின் பெயரால் கற்பனை செய்யப்பட்ட தொழுகையைத் தான் தொழுகிறார்கள். அதேசமயம் தொழுகையற்ற, அரைகுறை தொழுகையாளிகளின் வீடுகளில் தர்கா சடங்குகள், தரீக்கா சடங்குகள், கத்தம் ஃபாத்தியா, இன்னும் பல பித்அத்தான சடங்குகள் தவறாமல் அரங்கேறி வருவதைப் பார்க்கத்தான் செய்கிறோம். இவற்றைப் பக்தி சிரத்தையுடன் நடத்தி வைப்பது இந்த மவ்லவிகள்தான். இப்படி எண்ணற்ற விடயங்களின் மார்க்கக் கடமைகளை மார்க்கம் அல்லாததாக வும், மார்க்கம் அல்லாதவற்றை மார்க்கமாகவும் பெரும்பான்மை முஸ்லிம்கள் கடைபிடிப்ப தற்கு இந்த மதகுருமார்களான மவ்லவிகள்தான் முழுமுதல் காரணம் என்பதை மறுக்க முடியுமா?

இப்படி இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன், ஹதீஃத் இரண்டு மட்டுமே என்பதற்கு முரணாக இஜ்மா, கியாஸ் என மேலும் இரண்டைச் சேர்ப்பது கொண்டு சு.ஜ. மத்ஹபினர் சமு தாயத்தில் புரையோடச் செய்துள்ள ´ஷிர்க், குஃப்ர், பித்அத் இவற்றை வகைவகையாக அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த நல்ல கைங்கரியத்தை(?) புதிய மத்ஹபினராகிய ததஜ வினர் லாஜிக்(யுக்தி) பாலிசி(தந்திரம்) என்ற இரண்டின் மூலம் அரங்கேற்றி வருகின்றனர்.

மவ்லவிகளான இந்த மதகுருமார்களுக்கும் சுய சிந்தனைக்கும் சம்பந்தமே இல்லை. முன் சென்றவர்களை 2:134, 141 இறைக் கட்டளைகளை நிராகரித்து கண்மூடி நம்பி அவர்கள் சொன்னதாகச் சொல்லப்படுவதை வேதவாக்காகக் கொண்டு செயல்படுவார்கள். அவர்களில் சிலர் சமீப காலத்தில் மறைந்த, அல்லது இப்போது இருக்கிற ஒரு மவ்லவியை கண்மூடி நம்பி அவர்கள் சொல்வதை வேதவாக்காகக் கொண்டுச் செயல்படுவர். அவர்களின் செயல் பாடுகள் 32:13, 11:118,119 இறைக் கட்டளை கள் கூறும் பெருங்கொண்ட மக்களை கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கும். அந்த மக்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டால் இவர்களும் மாற்றிக் கொள்வார்கள்.

உதாரணமாக நவீன வாகனங்கள் கண்டு பிடிக்கப்படும் முன் முஸ்லிம்கள் தொலை தூரத் திலிருந்து ஒட்டகங்களிலேயே ஹஜ்ஜுக்குச் சென்று வந்தனர். அல்லாஹ்வும் 22:27 இறை வாக்கில் தொலை தூரத்திலிருந்து ஒட்டகங்களில் வருவார்கள் என்றே கூறுகிறான். ஒட்ட கம் அல்லாத வாகனங்கள் கண்டுபிடிக்கப் பட்ட பின் பிரயாண வசதியை முன்னிட்டு சிலர் ஒட்டகம் அல்லாத வாகனங்களை பயன் படுத்தி ஹஜ்ஜுக்குச் செல்ல முற்பட்டனர். அப்போது இந்த முல்லாக்கள் 22:27 ஓதிக் காட்டி ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில்தான் செல்ல வேண்டும். வேறு வாகனங்களில் செல்வது ஹராம் என்று தான் ஃபத்வா கொடுத்திருப்பார்கள். அவர்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லையே.

மக்கா சென்று அங்கு ஹஜ்ஜுடைய கடமைகளை நிறைவேற்றுவது தான் மார்க்கத்திற்கு உட்பட்டது. ஒட்டகம் தொலை தூர பயணத்திற்குப் பயன்பட்ட அன்றிருந்த ஒரே வாகனமே அல்லாமல் ஹஜ்ஜுக்கும் ஒட்டகத் திற்கும் சம்பந்தமே இல்லை என்பதை சுயமாகச் சிந்தித்து விளங்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லவே இல்லை. கண்மூடி முன்னோர் களைப் பின்பற்றும் மூடத்தனமே அவர்களிட மிருந்தது. பயணத்தின் வசதியைக் கண்ட மக்கள் ஒட்டகம் அல்லாத வாகனங்களில் ஹஜ்ஜுக்குச் செல்வது அதிகரித்தவுடன் இந்த மவ்லவிகளும், தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

அதேபோல் அன்று நபி(ஸல்) அவர்கள் சூரியனின் ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்காலத் தொழுகைகளை தொழுது கொள் ளும்படி வழிகாட்டினார்கள். நேரத்தை அறிய அன்றிருந்த ஒரே சாதனம் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்ப்பது மட்டுமே. பின்னர் நேரம் அறிய கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், துல்லியமாக எளிய முறையில் தொழுகை நேரம் அறிந்து தொழ முற்பட்டபோதும் இந்த முல்லாக்கள் சூரியனைக் கண்ணால் பார்த்துத் தொழத்தான் நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். எனவே கடிகாரம் பார்த்துத் தொழுவது ஹராம் என்றுதான் ஃபத்வா கொடுத்திருப்பார்கள். அவர்களுக்குத்தான் சுய சிந்தனை இல்லையே. முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுகிறவர்கள்தானே!

மற்றபடி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நேரம் அறிய இருந்த ஒரே சாதனம் சூரியனைக் கண்ணால் பார்ப்பது மட்டும் தானே! அது மார்க்கத்திற்கு உட்பட்டதல்லவே! அதை விடத் துல்லியமாக நேரத்தை அறிய புதிய சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதால் அதை நேரம் அறிய பயன்படுத்துவது மார்க்கத்திற்கு முரண் அல் லவே என்பதை அறியும் சுய சிந்தனை அவர் களுக்கில்லையே! அதே சமயம் பெருங்கொண்ட மக்கள் அதன் எளிய துல்லிய நிலையை கருதி கடிகாரம் பார்த்து செயல்பட ஆரம்பித்தவுடன் இந்த மவ்லவிகளும் தங்கள் தவறான நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

இப்போது தொழுகை, நோன்பு கால அட்ட வணை ஒவ்வொரு பள்ளியிலும் தொங்குகிறது. இதேபோல் தொலைபேசி, ஒலிபெருக்கி இன்னும் இவை போல் நவீன கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தபோதும் இவையயல்லாம் பித்அத், நபி நடைமுறைக்கு மாற்றம்-ஹராம் என ஃபத்வா கொடுக்கத்தான் செய்தார்கள். பெருங்கொண்ட மக்கள் மவ்லவி களின் இந்த குருட்டு ஃபத்வாவை கண்டு கொள்ளாமல் நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பின்னர் மவ்லவிகள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டது சமீப கால வரலாறாகும்.

இப்போது ஒரேயொரு வரிசை மட்டும் இருக்கும் பள்ளிகளில்கூட காலர் மைக் கொண்டு பள்ளியை அதிர வைக்கிறார்கள். அதே வரிசையில் இன்றைய அதி நவீன கண்டுபிடிப்பான கணினி மூலம் சந்திர மாதம் பிறப்பதை மிகமிகத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லப்படுவதை ஏற்றுச் சிலர் செயல் படுவதை இந்த மவ்லவிகள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். நபி(ஸல்) தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை துவங்கக் கட்டளையிட்டுள்ளார்கள். கணினி கணக்கீடு மிகமிகத் துல்லியமாக இருந்தாலும் அதனை முதல் பிறையாக ஏற்றுச் செயல்படுவது ஹராம். இரண்டாம் நாள் காலையில் கிழக்கில் உதித்து மாலையில் மறையும் பிறையை, பிறை பிறந்து விட்டதாக ஏற்று, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்றும் 3ம் நாளே முதல் நாள்; அதையே தலைப்பிறையாகக் கொண்டு நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்று சிறிதும் சுயசிந்தனை இல்லாமல் கூறுகின்றனர். முன் னோர்கள் வேறு வழியின்றி அன்றைய சாதனம் கொண்டு செயல்பட்டது தான் எங்களுக்கு மார்க்கம் என வீம்பு பண்ணுகின்றனர்.

தலைப்பிறையை மேற்கில் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று இவர்கள் கூறுவது போல் ஒரு பலவீன மான ஹதீஃதும் இல்லை; இவர்கள் நம்பும் முன்னோர்கள் இட்டுக்கட்டிய ஹதீஃதும் இல்லை.

அதை(சந்திரனின் படித்தரங்களை) பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள்; நோன்பை விடுங்கள் என்று 2:189 இறைவாக்குக் கூறும் தேய்ந்து வளரும் சந்திரனின் படித்தரங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள விளக்கத்தை இவர்கள் வசதிபோல் திரித்து வளைத்து மறைத்து (2:159) கூறும் இவர்களின் மேல் விளக்கமே இது அல்லாமல் மேற்படி ஹதீஃத் பிறையைப் புறக்கண்ணால் பார்க்கக் கட்டளை இட்ட ஹதீஃத் அல்ல. வழமை போல் ஒட்டுமொத்த மவ்லவிகளின் வீண் பிடிவாதத்தை நிராகரித்து சு.ஜ. மத்ஹபு பிரிவினர்களிலும், ஜாக் மத்ஹபினரிலும், ததஜ மத்ஹபினரிலும் ஓரளவு மக்கள் தாங்கள் நம்பி யுள்ள இந்த மவ்லவிகளின் பிறை பற்றிய சுய விளக்கத்தை நிராகரித்துவிட்டு, கணினி கணக் கீட்டை ஏறறுச் செயல்பட ஆரம்பித்து விட்ட னர். வழமை போல் பெருங்கூட்டம் அப்படிச் செயல்பட ஆரம்பித்து விட்டால் இந்த மவ்லவி களும் வழமை போல் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.

இந்த அளவு விரிவாக எழுத வேண்டிய நிர்ப்பந்தம் என்னவென்றால் சு.ஜ.வினர் இஜ்மா, கியாஸ் என்றும் ததஜவினர் லாஜிக், பாலிசி என்றும் கூறி சமுதாயத்தை எந்த அளவு சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தி சீரழித்து வைத்திருக்கிறார்கள் என்பதை புரிய வைக்கும் கட்டாயம் எழுந்ததாலேயாகும். இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள், சச்சரவுகள், பிரிவுகள் அனைத்திற்கும் கடந்த சுமார் 1000 வருடங்களாக இருந்து வரும் இஜ்மா, கியாசும், சமீபத்தில் கற்பனை செய்யப் பட்ட லாஜிக், பாலிசியுமாகும். குர்ஆன் விரி வுரைகள், ஹதீஃத் விரிவுரைகள், பிக்ஹு நூல் கள் இவை அனைத்தும் பெரும்பாலும் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிசி கொண்டு மனிதக் கற்பனைகளால் நிரப்பப்பட்டிருப்பதே சமுதாயத்தின் பிரிவுகளுக்கு, பேரழிவுகளுக்கும் முழுக்க முழுக்க காரணமாக இருக்கின்றன.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் 2:186 கட்ட ளைப்படி இந்த மவ்லவிகளை நம்பாமல் அல்லாஹ்வையே முற்றிலும் முழுவதுமாய் நம்பி 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலுமாக அடிபணிந்து அல்லாஹ்வின் கயிறாகிய (3:103) அல்குர்ஆனை ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்து அதற்கு மனிதர்களில் எவரது சுயவிளக்கமுமின்றி அதில் உள்ளதை உள்ளபடி அப்படியே ஏற்று நடக்க முன்வந்தால் மட்டுமே முஸ்லிம்களுக்கு மீண்டும் உயர்வு ஏற்படும். முஸ்லிம்கள் இழந்து விட்ட பழம் பெருமையையும், ஆட்சி அதிகாரங்களையும் பெறுவார்கள் இல்லையேல் அதலபாதாள வீழ்ச்சியே; நாளை மறுமையில் கொடிய நரகமே!

இப்போது இந்த இஜ்மா பற்றி எழுதும் போது 1986ல் நஜாத் ஆரம்பித்தவுடன் இடம் பெற்ற ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. 30.10.1984ல் திருச்சி கிறித்தவ குருமடத்தில் நாம் ஆற்றிய உரை நூல் வடிவில் வெளிவந்ததைப் பார்த்து விட்டு, சகோ.எஸ்.கமாலுத்தீன் மதனி 1985 ஆரம்பத்தில் அப்போது 43 வயதே நிரம்பிய எம்மை “”சீர்திருத்தப் பெரியார்” என அடைமொழியிட்டு, அவர் ஊரான கோட்டாறில் மவ்லவிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் வந்து அந்நூலிலுள்ள கருத்துக்களை எடுத்து வைக்க அழைப்பு விட்டார். நாமும் அவரது அழைப்பை ஏற்று அங்கு சென்று மவ்லவிகளுக்கு மத்தியில் உரை நிகழ்த்தினோம். அப்போது எம்மை மிகக் கடுமையாக எதிர்த்த மவ்லவிகளில் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி முக்கியமான ஒருவர். அப்போது அவர் அங்குள்ள மதரஸாவின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் அல்லாஹ் அவ ருக்கு ஹிதாயத் கொடுத்து குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள் என நேர்வழிக்கு வந்த ஆரம்ப நிலை. சு.ஜ.மவ்லவிகள் அவருக்குக் கடுமையான நெருக்கடி கொடுத்து அவரை முனாழரா-விவாதத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டனர்.

இதில் வேதனை என்னவென்றால் விவாதத்தை குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் என்ற நான்கின் அடிப்படையில் வைத்துக் கொள்வது என சம்மதித்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டு வந்து விட்டார். விஷயம் அறிந்த சகோ.பீ.ஜை. துடிதுடித்தார். இஜ்மா, கியாஸ் அடிப்படையில் நாம் எப்படி விவாதம் செய்ய முடியும். அது ஒருபோதும் நடக்காது. இந்த விவாதம் வேண்டாம் என்று படபடத்தார். அப்போது நாம் பீ.ஜை. அவர் ஒப்புக் கொண்டு கையெழுத்தும் போட்டு கொடுத்து விட்டார். இப்போது நாம் மறுத்தால் அவர்கள் நம்மைப் பற்றி அவதூறுகள் பரப்ப மேலும் ஆதாரம் கிடைத்தது போல் ஆகிவிடும். வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்ததாகி விடும்.

எனவே இப்படி நடக்க இடம் தரக்கூடாது. அவர்கள் இஜ்மா என்கட்டும், கியாஸ் என் கட்டும் அல்லது வேறு எதையும் கூறட்டும், அவை குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டால் அதை மார்க்கமாகக் கொள்ள முடியாது என்று நிபந்தனை வைப்போம். அதை அவர்களும் மறுக்க முடியாது; மறுக்க மாட்டார்கள் என்று கூறினோம். அந்த அடிப்படையில் விவாத ஏற்பாடுகள் நடந்தன. விவாத நாளுக்கு இரண்டு தினம் முன்னால் திருச்சியிலிருந்து சென்று அப்போது சு.ஜ.வினரிடமிருந்து நம் கைவசம் வந்திருந்த நாகர்கோவில் கலாச்சார பள்ளி மாடியில் வைத்து (இப்போது ஜாக்கின் தவ றான போக்கால் அப்பள்ளி மீண்டும் சு.ஜ.வின ரிடம் சென்று விட்டது) விவாத முறைகளைப் பற்றி ஆலோசனை செய்து முடித்தோம்.

விவாதத்திற்கு முதல் நாள் ஓய்வாக இருந்ததால் பக்கத்திலுள்ள காயல்பட்டினம் சென்று அங்குள்ள தப்லீஃக் பணி மூலம் நெருக்கமாக இருந்த மவ்லவிகள், சகோதரர்களைச் சந்தித்து நேர்வழியின்பால் அழைப்புக் கொடுத்து வரலாம் என்று சென்று விட்டோம். நாகர்கோவிலுள்ள சு.ஜ.வினருக்கு எம்மைப் பற்றி நன்கு தெரியும். 1966லிருந்து தப்லீஃக் பணி மூலம் அறிமுகமாகி இருந்தோம். 1983லிருந்து குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்பதைத் தெளிவுபடுத்தி பல பிரசுரங்களை வெளியிட்டிருந்தோம். மதரஸாக்களுக்குக் கடிதங்களும் எழுதி இருந்தோம்.

1985 ஆரம்பத்தில் S.K யின் அழைப்பின் பேரில் அங்கு சென்று குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கத்தின் அடிப்படை என்பதை மவ்லவிகளுக்கிடையே விளக்கி உரையாற்றியும் இருக்கிறோம். எனவே நாம் விவாதத்தில் கலந்து கொண்டால் நாம் எடுத்து வைக்கும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களுக்கு முன்னால் அவர்களது வாதங்கள் எடுபடாமல் போகும் என்ற அச்சத்தில், நாம் காயல்பட்டினம் சென்றதை அறிந்து கொண்டு எஸ்.கே., பீ.ஜை. ரஹ்மத்துல்லாஹ் வகையறாக்களை அழைத்து, விவாதத்தில் மவ்லவிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அபூ அப்தில்லாஹ் மவ்லவி இல்லை. அவர் விவாதத்தில் கலந்து கொள்வதை ஏற்க மாட்டோம் என நிபந்தனை வைத்துள்ளனர். இவர்களும் மவ்லவி வர்க்கம்தானே. எனவே இவர்களும் அதை ஏற்றுக் கொண்ட னர். எனவே நாம் விவாத மேடைக்குப் போகவே இல்லை.

அன்று இரவு பழைய ஜம்யியாவின் மேட்டுப் பகுதியில் சகோ.பீ.ஜை. குத்தவைத்து உட்கார்ந்து கொண்டு சு.ஜ. தரப்பிலிருந்து எப்படிப் பட்ட வாதங்கள் வரும். அவற்றிற்கு எப்படிப் பட்ட பதில்களை வைக்க வேண்டும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டார். காரணம் அவரும் அப்போதுதான் மத்ஹபு பிடியிலிருந்து விடுபட்டு வந்திருந்தார். நஜாத்தில் மத்ஹபுகளை மறுத்து எழுதக் கூடாது என்று ஆரம்பத்தில் நிபந்தனை வைத்தவர்தான். அக்கடிதம் இன்றும் எம்மிடம் இருக்கிறது. பல குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டிய பின்னரே குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி என்ற சரியான நிலைக்கு அப்போது தான் வந்திருந்தார்.

அடுத்த நாள் காலையில் குறிப்பிட்டபடி ஜும்ஆ பள்ளிக்கு வெளியில் விவாதம் ஆரம்பித்தது. காராசாரமான விவாதங்கள் சூடு பறந்தது. நாம் வெளியில் ஓரிடத்தில் இருந்து கொண்டு சு.ஜ.வினரின் வாதங்களை மறுத்துக் கூறும் குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் துண்டுச் சீட்டுக்களில் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தோம். அதைக் கவனித்த சு.ஜ.வினர் அதையும் தடுத்துவிட்டார்கள். விவாதம் படு ஜோராகப் போய்க் கொண்டிருந்தது. பீ.ஜை. ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தார். விவாதம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சு.ஜ.வினர், இப்போது இங்கு நீங்கள் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கின் அடிப்படையில் தான் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவே எதிர்காலத்திலும் உங்கள் தரப்பினரது பிரசாரங்கள் இதே குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கின் அடிப்படையில் தானே இருக்கும் என்று பீ.ஜை.யை மடக்கினர். பீ.ஜை. புத்திசாலியாக இருந்தால் குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு முரணில்லாமல் யார் எப்பெயரில் எதைச் சொன்னாலும் எங்களுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. குர்ஆன், ஹதீஃதுக்கு முரணானவற்றை எப்பெயரில் சொன்னாலும் அதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி அவர்களின் வாயை மூடச் செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக அறிவிழந்து அது இந்த மேடைக்கு மட்டும்தான் என்று கூறிவிட்டார். அவ்வளவு தான்; பீ.ஜை. யின் இந்த அறிவீனமான பதில் சு.ஜ.வினருக்குப் பெரும் வாய்ப்பாகப் போய் விட்டது. அப்படியானால் மேடைக்கு ஒரு பேச்சு, வெளியில் ஒரு பேச்சு என நீங்கள் எல்லாம் முனாஃபிக்- நயவஞ்சகர்களா? என்று மடக்கினர்.

முஸ்லிம் பெருமக்களே இவரைப் புரிந்து கொள்ளுங்கள். இவர் மேடையில் ஒரு பேச்சும், வெளியில் ஒரு பேச்சும் பேசும் நயவஞ்சகர் – முனாஃபிக் எனக் கூறி பொதுமக்களைத் தூண்டி விட்டனர். விவாதத்தின் பார்வையாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் சு.ஜமாஅத்தினர். குர்ஆன் ஹதீஃத் போதனைகள் படி நடப்பவர்கள் மிகமிகச் சொற்பம். கேட்க வேண்டுமா? சு.ஜ.வினர் கொதித்து எழும்பினர். பெரும் கலவரம் ஏற்பட்டுவிட்டது. பீ.ஜை. தரப்பினரை உள் பள்ளியில் கொண்டு போய் வைத்துப் பாதுகாக்கும் நிலை உருவானது. இதற்குக் காரணம் பீ.ஜையின் தவறான பேச்சாகும். பீ.ஜைக்கு நாவன்மையிருந்தாலும், சமயோசிதம் இருந்தாலும் சமயங்களில் விவாதங்களில் அவசியமற்றப் பேச்சை பேசி விவாதத்தின் போக்கையே மாற்றிவிடுவார். அது எதிர் தரப்பினருக்கு நல்லதொரு வாய்ப்பாகப் போய் விடும். அதுவே பிப்ரவரி 2013 விவாதத்திலும் இடம் பெற்றுள்ளது.

எனவே இஜ்மா, கியாஸ் மார்க்கத்தின் மூன்றாவது நான்காவது அடிப்படைகள் என்பது குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளுக்கு முற்றிலும் முரணானவை. இந்த சமுதாயத்தில் இன்று மண்டிக்கிடக்கும், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், யூத, கிறித்தவர்களின், ஹிந்துக்களின் கலாச்சாரங்களைக் கண்மூடிப் பின்பற்றும் வழிகேடுகளுக்கு அப்படைக் காரணமே இஜ்மா, கியாஸை மார்க்கத்தின் அடிப்படைக் காரணமாகக் கொண்டது தான். அதே சமயம் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களுக்கு முரணில்லாமல் அவற்றின் கருத்துக்களை வலியுறுத்தும் நிலையிலுள்ளவற்றை இஜ்மா என்றோ, கியாஸ் என்றோ, லாஜிக் என்றோ, பாலிசி என்றோ யார் கூறினாலும் அதில் நேர்வழி நடப்பவர்களுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

Previous post:

Next post: