கையூட்டும்(லஞ்சமும்) ஊழலும் எப்போது ஒழியும்?

in 2013 ஜூன்,தலையங்கம்

இன்று நம் இந்திய நாடு மட்டுமல்ல உலகமே கையூட்டிலும், ஊழல்களிலும் மிதக்கின்றது என்று சொல்வது மிகைப்பட்ட சொல் அல்ல. ஒரு காலம் இருந்தது. அன்று கீழ் மட்டத்திலுள்ள அரசுப் பணியாளர்களிடம் மட்டுமே இந்த இரண்டும் காணப்பட்டன. ஆனால் இன்றோ பிரதம மந்திரி, முதன்மந்திரி, மந்திரி, முன்னணி ஆட்சி அதிகாரிகள், நீதித்துறை, காவல்துறை, அனைத்து அரசுத் துறைகள் என காற்றுப்புகா இடங்களிலும் கையூட்டும், ஊழலும் நுழைந்துள்ளன என்று சொல்லும் அளவிற்கு இவை தலை விரித்து ஆடுகின்றன.

கையூட்டுக்கும், ஊழலுக்கும் உட்படக் கூடாது என்ற மன உறுதியோடு பொறுப்பேற்பவர்கள் கூட இறுதியில் அவற்றிற்கு அடிமையாகும் நிலையே இன்று காணப்படுகிறது. காரணம் கையூட்டிலும், ஊழலிலும் கைகோர்க்காமல் தனது பதவியை காப்பாற்ற முடியவே முடியாது என்ற பரிதாப நிலையே இன்று காணப்படுகிறது.

ஆட்சியாளர்கள் கையூட்டு, ஊழல் இல்லாமல் இருந்தால் அல்லவா, அதிகாரிகளையும், பணியாளர்களையும் கட்டுப்படுத்த முடியும். ஆட்சியாளர்களே கையூட்டிலும், ஊழல்களிலும் முங்கிக் குளிக்கும் போது, எப்படி அதிகாரிகளையும் பணியாளர்களையும் கட்டுப்படுத்த முடியும்.

சிறிது சிந்தித்துப் பாருங்கள். ஆட்சியாளர்கள் தூயவர்களாக இருந்து, சட்டம் ஒழுங்கை அணுவளவும் பிசகாது நடைமுறைப்படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். தப்புச் செய்கிறவன் தப்பவே முடியாது; நிச்சயம் தண்டிக்கப்பட்டே தீர்வான் என்று நிலையிருந்தால் யாருக்கேனும் தப்புச் செய்யும் துணிவு பிறக்குமா?

ஆட்சியாளர்கள் தூய்மையற்றவர்களாக, நெறி பிறழ்ந்தவர்களாக, கையூட்டிலும், ஊழலிலும் சிக்கித் தவிப்பவர்களாக இருக்கக் காரணம் என்ன? இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு அறவே இல்லை. கழுதை விட்டையில் முன் விட்டை, பின் விட்டை என எப்படி வேறுபாடு காண முடியாதோ அதே போல் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என்று வேறு பாடும் காண முடியாது. இரு சாராரும் கையூட்டிலும் ஊழலிலும் முங்கிக் குளிக்கவே செய்கிறார்கள். அப்படியானால் இரு சாராரும் அவர்களை மீறிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அது தான் பணநாயகத்தைக் கொள்கையாகக் கொண்ட பாழும் ஜனநாயக ஆட்சி முறையாகும். இன்று ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி விரும்பினால் அதற்குப் பல்லாயிரம் கோடி தேவைப்படுகின்றது. அதை நேர்மையான முறையில் ஈட்ட முடியுமா? முடியாதே! முறை தவறி கையூட்டுப் பெற்று, ஊழல்கள் செய்து, நாட்டு வளத்தையும், ஏழைகளின் வாழ்வையும், வெளிநாட்டு, உள்நாட்டுப் பண முதலைகளிடம் அடகு வைத்தே தேர்தலுக்கு வேண்டிய பல்லாயிரம் கோடியை திரட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அவர்கள் இந்தியாவின் பெரும்பாலோரான ஏழைகளின், சில்லறை வணிகர்களின் வாழ்வு பரி போவதைப் பற்றியோ, நாட்டு வளம் வெளிநாடுகளுக்கு கொள்ளை போவதைப் பற்றியோ கவலை கொண்டால் ஆட்சியில் அமர முடியாதே. சில்லரை வணிகத்தில் அந்நியர்களின் முதலீடு,வெளிநாட்டு பெருங் கொண்ட கம்பெனிகளுக்கு அனுமதி அளிப்பதின் மூலமே அவர்களிடமிருந்து கையூட்டாகப் பல்லாயிரம் கோடி பெற்றுக் கொண்டு ஊழல் செய்யும் கட்டாயத்திற்கு ஆட்சியாளர்கள் ஆளாகிறார்கள்.

இதனை மிகக் கடுமையாக எதிர்க்கும் எதிர்க் கட்சி அடுத்தத் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தால் அதே கையூட்டு முறையையும், ஊழல்களையும் செய்துதான் பல்லாயிரம் கோடி திரட்ட முடியும். இப்போது ஆட்சி இழந்து எதிர்க்கட்சி ஆனவர்கள், தாங்கள் முன்னர் கை நிறையப் பெற்ற கையூட்டுகளையும், செய்த ஊழல்களையும் மறந்து முன்னர் எதிர்க்கட்சியாக இருந்து இப்போது ஆளும் கட்சியானவர்களைப் பார்த்து கையூட்டோ கையூட்டு, ஊழலோ ஊழல் என ஒப்பாரி வைப்பார்கள். மக்களை மடையர்களாக்குவார்கள். மக்களும் இக்கட்சிகள் கொடுக்கும் இலவசங்களை, தேர்தல் நேரத்தில் 500, 1000-த்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொண்டு இக்கட்சிகளுக்குத் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்கை அளிப்பார்களே அல்லாமல், இக்கட்சிகள் செய்யும் அநியாய அட்டூழியங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதனால்தான் நாட்டில் கையூட்டும், ஊழலும் மலிவோ மலிவு என மலிந்து வருகின்றன. நமது நாடு கடைபிடிக்கும் ஜன நாயக ஆட்சி முறையில் கையூட்டையும், ஊழலை யும் ஒழிப்பது நிறைவேறாத காரியமே. குதிரைக் கொம்பே!

எதுவரை மக்களின் உள்ளங்களில் இவ்வுலக வாழ்க்கையே வாழ்க்கை. எனவே இவ்வுலக வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து விட வேண்டும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குடி, கூத்து, கூத்தியாள், சூது என வாழ்ந்து முடித்து விட வேண்டும் என்ற மாயையில் சிக்கி வாழும் நிலை ஏற்படும் போது அங்கு நீதி, நியாயம், தர்மம், ஒழுக்கம் என்பதெல்லாம் நடைமுறைச் சாத்திய மில்லா வேதாந்தங்கள் என்ற மனப்பான்மையே மிகைக்கும். இந்த நிலையே இன்று ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள், பொது மக்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரிடமும் நிறைந்து காணப்படுகிறது. இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மறிக் கொண்டிருக்கிறான். இத்தனை அநியாயங்களையும் துணிந்து செய்கிறவர்கள் அனைத்தையும் செய்து விட்டு அவர்களில் கடவுளையும் மறுமையையும் நம்பும் ஆத்திகர்கள் தங்களின் ஆபத்பாந்தவனாக நம்பும் மதகுருமார்களுக்கு தட்சணையாகக் கையூட்டும், கோவில்கள், சர்ச்கள், தர்காக்களின் உண்டியல்களில் பொய்க் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கையூட்டும், அதற்கு மேல் ஆட்சியருக்கும், அரசு அதிகாரிகள், காவல் துறையினர், நீதித் துறையினருக்குக் கையூட்டும் கொடுத்து அனைத்துத் தவறுகளி லிருந்தும் தப்பிவிடலாம் என நம்புகின்றனர். பொய்க் கடவுள்களும் மன்னித்து விடுவார்கள் என நம்புகின்றனர்.

அதற்கு மாறாக கடவுளையும், மறுமையையும் நம்பாத நாத்திகர்கள், ஆத்திகர்களை விடத் துணிவுடன் மேலே சொன்ன அனைத்து அட்டூழியங்கள், கையூட்டு, ஊழல்கள் அனைத்திலும் மூழ்கிவிட்டு, ஆட்சியருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கையூட்டுக் கொடுத்து தப்பிவிடுகிறார்கள். அந்த தைரியத்தில் மீண்டும் மீண்டும் அநியாய அட்டூழியங்களில் மூழ்கிறார்கள். இந்த நிலை நீடிக்கும் வரை மக்கள் உருப்படுவார்களா? நாடு உருப்படுமா? சிந்தியுங்கள்.

கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் மதகுருமார்களும், அரசியல் குருமார்களும், கடவுள் இல்லை என்று சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும். நாத்திக மதகுருமார்களும், நாத்திக அரசியல் குருமார்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. பெரும் பாவிகளே, மீளா நரகை அடைபவர்களே.
“”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது பழந் தமிழர்களின் அதாவது நம் முன்னோர்களின் மூல மந்திரம்.

“”அகர முதல் எழுத்தெல்லாம் ஆதிபகவான் முதற்றே உலகு” இது வள்ளுவர் வாக்கு. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பதும் நம் முன்னோர்களின் அறிவுரை. அகில உலகுக்கும், மனித குலத்தினர் அனைவருக்கும் ஓரிறைவன் மட்டுமே. அந்த இறைவனுக்குத் துணைக் கடவுள்களோ, துணைத் தெய்வங்களோ இல்லவே இல்லை. இப்படிப்பட்டப் பொய்க் கடவுள்களை கற்பித்தவர்கள் அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களே. கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்களை விடக் கேடுகெட்ட ஒரு படைப்பு இவ்வானத்தின் கீழ் இல்லவே இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இம் மதகுருமார்களிலும் மகாக் கேடுகெட்டவர்கள் முஸ்லிம் மதகுருமார்கள். அவர்களிலும் கேடு கெட்ட வர்கள் இறைவனுடன் கூட்டு வைத்திருக்கும் தவ்ஹீத்(?) மதகுருமார்கள் -ஏகத்துவக் கூட்டு அமைப்பினர்.

அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனோ இணை, துணை, கூட்டு, இடைத் தரகு என எதுவும் இல்லாத ஆதி அந்தம் இல்லாத தனித்தவன். அவனுக்குத் துணைப் பொய்த் தெய்வங்களை கற்பிப்பவர்களை விட மகா அயோக்கியர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ஒரே இறைவன் காலத்திற்குக் காலம் தனது தூதர்களை அனுப்பி மக்களுக்கு வாழ்க்கை நெறியைப் போதித்தான். ஒவ்வொரு இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு அந்தந்த தூதர்களின் சமூகங்களில் திருட்டுத் தனமாகப் புகுந்து கொண்டு பொய்த் தெய்வங்களைக் கற்பனை செய்து ஏகன் இறைவனுக்கு இணை வைக்கச் செய்து அதன் மூலம் வயிறு வளர்த்து வந்தவர்களே மதகுருமார்கள். அவர்களின் கற்பனைகளில் உருவானவையே எண்ணற்ற மதங்கள்.

மதங்களுக்கும் ஏகன் இறைவனுக்கும் சம்பந்தமே இல்லை. மதங்கள் அனைத்தும் மதகுருமார்களின் கற்பனையே; வெறி கொள்ள வைப்பவையே. கஞ்சா அபின் போல் போதை ஏற்றுபவையே. மதங்களைக் கடை பிடிப்பது கொண்டு மனிதர்கள் ஒருபோதும் ஈடேற்றம்-வெற்றி பெற முடியவே முடியாது. குதிரைக் கொம்பே!
ஏப்ரஹாம், டேவிட், சாலமன், மோசஸ், ஜீசஸ் போன்ற பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மதாகும். அவருக்கு, இறுதியாக மனித குலம் அனைத்திற்கும் ஒட்டு மொத்தமாக அருளப்பட்டதுதான் வாழ்க்கை நெறி நூல் குர்ஆன். முஸ்லிம் மதகுருமார்கள் சொல்வது போல் அது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய வேதம்(?) அல்ல.

குர்ஆனை வேதம் என்று சொல்வதே பெருந் தவறாகும். முன்னைய இறைத் தூதர்களுக்கு அருளப்பட்டவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட வில்லை. இறைத் தூதர்களின் மறைவுக்குப் பின்னர் இம்மதகுருமார்களால் நடைமுறை சாத்தியமில்லாத பல கற்பனைகள், கட்டுக்கதைகள் புகுத்தப்பட்டு பதிவானவையே அவை. இந்துக்களிடம் உள்ள நான்கு வேதங்கள், யூதர்களிடமுள்ள தோரா, கிறித்தவர்களிடமுள்ள பைபிள் இவையும், இவை போன்ற ஏனைய மதங்களில் காணப்படும் வேதங்களும் இத்தரத்தவையே.

வேதங்கள் என்றால் நடைமுறைச் சாத்தியமற்ற வேதாந்தம் நிறைந்தவை என்பதே அதன் பொருள். வேதம்-வேதாந்தம்-வேதாந்தி என்று தமிழ் அகராதிகளில் உள்ளவற்றைப் படித்து விளங்கினால் இந்த உண்மைப் புலப்படும். எனவே குர்ஆனை நடை முறைச் சாத்தியமற்ற வேதம் என்று சொல்வது பெருந் தவறு. முஸ்லிம் மதகுருமார்கள் குர்ஆனை வேதம் எனப் பிடிவாதமாகச் சாதிக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் சுயநலமே காரணம்.

இந்துக்களுக்கு இந்து வேதம், கிறித்தவர்களுக்கு கிறித்தவ வேதம் பைபிள், யூதர்களுக்கு யூத வேதம் தோரா என்பது போல் முஸ்லிம்களுக்குரிய வேதம் குர்ஆன் என்று மக்களை மயக்கி மற்ற மதத்தினர் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம், அதற்கும் நமக்கும் சம்பந்தமேயில்லை என ஒதுங்கிப் போக வைத்து விட்டு, முஸ்லிம்களையும் உளூ (அங்க சுத்தி) இல்லாமல் தொடக் கூடாது. அரபி மொழி தெரியாமல் குர்ஆன் விளங்காது என்றெல்லாம் ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கத் தோதுவாகத்தான் குர்ஆனை வேதம் என்று சொல்வதில் உறுதியாக இருக்கிறார்கள். குர்ஆன் மனித குலத்தினர் அனைவருக்கும் வாழ்க்கை நெறியைத் தெளிவாக, துல்லியமாக, நேரடியாக விளக்கும் வாழ்க்கை நெறி நூலே அல்லாமல் வேதாந்தங்கள் நிறைந்த வேதம் அல்லவே அல்ல.

குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமுரிய வேதம் என்று இது காலம் வரை மக்களை ஏமாற்றி வந்த முஸ்லிம் மதகுருமார்களின் நயவஞ்சகத்தை, பச்சோந்தித் தனத்தை அந்நஜாத் தெளிவாக அடையாளம் காட்டி வருகிறது. குர்ஆன் அகில உலக மக்களுக்குமுரிய வாழ்க்கை வழிகாட்டும் நெறிநூல். அதை எவரும் எந்த நிலையிலும் எடுத்துப் படித்து விளங்கி அதன்படிச் செயல்படலாம் என்று அந்நஜாத் அந்த குர்ஆனிலுள்ள வசனங்களைக் கொண்டே நிலை நாட்டி வருகிறது. மேலும் இணை, துணை, தேவை, மனைவி, மக்கள், இடைத் தரகு எதுவுமே இல்லாத தன்னந்தனியனான ஏகனாகிய இறைவனுக்குக் குட்டிக் குட்டிப் பொய்க் கடவுள்கள், பொய்த் தெய்வங்களின் தேவை எதுவுமே இல்லை. அவற்றைப் போதிக்கும் மதகுருமார்கள் பெருத்த வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். அவர்களின் துர்போதனைகளை ஏற்க வேண்டியதில்லை என்பதையும் குர்ஆன் வசனங்களைக் கொண்டு தெளிவுபடுத்துகிறது அந்நஜாத்.

முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகள் முஸ்லிம்களுக்குப் போதித்து வருவது தூய இஸ்லாமிய மார்க்கம் அல்ல. இந்து மதத்திலிருந்து காப்பி அடித்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குச் சம்பிர தாயங்கள், அநாச்சாரங்கள், சமாதிச் சடங்குகள், கூடு, கொடி, கந்தூரி, இத்யாதி இத்யாதி அனைத்துச் செயல்பாடுகளும் தூய இஸ்லாத்திற்கு நேர் முரணானவை; பொய்க்கடவுள்கள், பொய்த் தெய்வங்கள் போல இறைவனுக்கு இணை வைக்கும் கொடும் செயல்களே என்பதையும் அந்நஜாத் குர்ஆன் வசனங்களைக் கொண்டே தெளிவுபடுத்தி வருகிறது.

நாத்திக நண்பர்களே பொய்க் கடவுள்களின் பெயரால் பொய்த் தெய்வங்களின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், அட்டூழியங்கள் இவற்றைக் காட்டி உண்மையான ஓரிறைவனையும் மறுப்பது பெருங்குற்றம்; பகுத்தறிவு ஏற்காத மூட நம்பிக்கை. அதனால்தான் இன்று உலகு சகல தீய காரியங்களிலும் மூழ்கி அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் பொய்க் கடவுள்களுடன் உண்மையான ஒரே கடவுளையும் மறுக்கும் பெருங் குற்றத்தை விட்டு விலகி, அந்த ஓறிரைவனையும், அந்த இறைவனால் இறக்கியருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல் குர்ஆனையும் ஏற்று அதன் உப தேசப்படி மக்களுக்கு வழிகாட்ட முன் வாருங்கள்.

அதேபோல் மதகுருமார்களும் அவர்கள் கற்பனை செய்துள்ள பொய்க் கடவுள்களையும், குட்டி குட்டி தெய்வங்களையும் புறக்கணித்து அனைத்துலகையும் படைத்து ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளனாகிய அந்த ஒரே இறைவனை மட்டும் ஏற்று அவன் இறக்கியருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் குர் ஆனின் போதனைகளை மட்டுமே மக்களுக்குப் போதிக்க முன்வாருங்கள்.

இன்று உலகில் காணப்படும் கையூட்டு, ஊழல் முதல் அனைத்து வகைக் கேடுகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். இன்று நாம் செய்யும் பெருந்தவறுகள், பஞ்சமா பாவங்களிலிருந்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், நீதிபதிகளுக்கும் கையூட்டுக் கொடுத்துத் தப்பினாலும், நிச்சயம் நம்மைப் படைத்து, வாழ்க்கை வசதிகளைத் தந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் இணை, துணை, தேவை, இடைத்தரகு எதுவுமே இல்லாத ஓரிறைவனுக்குக் கையூட்டுக் கொடுக்கவும் முடியாது. அவனது தண்டனையிலிருந்து தப்பவும் முடியாது என்ற உறுதியான நம்பிக்கை ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டுவிட்டால் அவர்களால் தவறுகளில் ஈடுபட முடியுமா? அந்தத் துணிச்சல் ஏற்படுமா? சிந்தித்துச் சீர்பட முன்வாருங்கள்.

Previous post:

Next post: