தப்லீக் ஜமாஅத்தால் என்ன நன்மை, என்ன தீமை?

in 2013 ஜூன்

விமர்சனம் : தப்லீக் ஜமாத் என்றால் என்ன? இதனுடைய குறிக்கோள் என்ன? சாதாரண மக்களும் ஜமாஅத்தில் செல்பவர்களும் இது தான் இஸ்லாம்; இதுதான் நபி(ஸல்) அவர்களின் வேலை என்று கருதுகிறார்கள். டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம். கரண்ட் பில் யார் கட்டுவது என்றே தெரியவில்லை என்று மிக பிரமாண்டமாக சொல்கிறார்கள். இவர்களுக்கு யார் அமீர்? இதனுடைய நோக்கம் என்ன? தப்லீக் ஜமாஅத்தால் என்ன நன்மை, என்ன தீமை? இஜ்திமா என்று நடத்துகிறார்கள். அதில் என்ன செய்கிறார்கள். அதனால் இஸ்லாத்திற்கு என்ன நன்மை என்பதை நன்கு விளக்கவும். இதனுடைய வளர்ச்சிக்கு ஹஜ்ரத்கள்(புரோகிதர்களின்) முழு ஆசி கிடைக்கிறதே இதன் மர்மம் என்ன? ஜைனுல் ஆபிதீன், நத்தம்.

விளக்கம் : மவ்லவி இல்யாஸ் சாஹிபால் ஆரம்பிக்கப்பட்டதுதான் இன்று செயல்பட்டு வரும் தப்லீஃக் ஜமாஅத். சுமார் நூறாண்டுகளுக்கு முன்னால் வட இந்தியாவில் மேவாத் போன்ற ஊர்களில் பெயரளவில் முஸ்லிம்களாக இருந்து கொண்டு செயல்பாடுகள் அனைத்திலும் ஹிந்துக்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் செயல்பாடுகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திலும் அந்த மக்கள் மூழ்கி இருந்ததைப் பார்த்துக் கடும் வேதனைப்பட்டு, அவர்களைப் பள்ளிகளோடு தொடர்பு ஏற்படுத்திவிட்டால் அவர்கள் இஸ்லாத்தை விளங்கி மேம்பட வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டது தான் தப்லீஃக் ஜமாஅத். நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை.

முஸ்லிம் சமூக சீர்திருத்தத்திற்காக ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு முயற்சியும் நல்ல நோக்கத்தோடு தான் ஆரம்பிக்கப்படுகிறது. ஆனால் ஷைத்தானின் தோழர்களான தாஃகூத்கள் புகுந்து அம்முயற்சிகளைப் பாழ்படுத்தி விடுகிறார்கள். இந்த உண்மையை மவ்லவி இல்யாஸ் சாஹிப் தனது இறுதி காலத்தில் கூறிய அறிவுரைகள் “”மல்பூஜாத்தே இல்யாஸ்” என்ற பெயரில் வெளிவந்த நூலைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

அந்த நூலிலுள்ள ஓர் உதாரணம்:
பால் தேவைக்காக நீங்கள் ஒரு கறவை மாட்டை விலை பேசுகிறீர்கள் என்றால், அது காலை மாலை எத்தனை லிட்டர்கள் பால் கறக்கும் என்றே பார்ப்பீர்கள். அது ஒரு நாளைக்கு எவ்வளவு சாணம் போடும் என்று பார்க்க மாட்டீர்கள். ஆயினும் அது போடும் சாணமும் உங்களுக்கு வரும்படிதான். அது போல் தீனுடைய சேவைகள் நாளை மறுமையில் அல்லாஹ்வின் பொருத்தமும், சுவர்க்கமும் கிடைக்கும், கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு இருக்க வேண்டும். இவ்வுலகில் கிடைக்கும் உலகியல் ஆதாயம் குறிக்கோளாக இருக்கக் கூடாது என்று தெளிவாகச் சொல்லி எழுதப்பட்டுள்ளது. தப்ஃலீக் ஜமாஅத் பணியைத் தோற்றுவித்த மவ்லவி இல்யாஸ் சாஹிபின் அழகிய அறிவுரை இன்று தப்லீஃக் ஜமாஅத்தினரால் கடைபிடிக்கப்படுகிறதா? இல்லையே! அதற்கு மாறாக இன்று அவர்களின் பயான்களில் இன்னார் அல்லாஹ்வுடைய பாதையில் 4 மாதம் போனார். அவரது கடையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்தது. இன்னார் கர்ப்பினியான தனது மனைவியை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தனிமையில் விட்டுவிட்டு 4 மாதம் புறப்பட்டுச் சென்று விட்டார்; அவரது மனைவி பிரசவ வேதனையில் கத்த ஆரம்பித்துவிட்டார். பாதையில் சென்று கொண்டிருந்தவர் சப்தம் கேட்டு வந்து பார்த்தார். ஒரு பெண் பிரசவ வேதனையில் துடிப்பதைக் கண்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். நல்லவிதமாகக் குழந்தை பிறந்தது. தனது வீட்டில் கொண்டு வைத்துப் பராமரித்து, பெண்ணின் கணவர் 4 மாதத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர் பிள்ளையையும் தாயையும் அழைத்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட இன்னும் பல கதைகளைக் கூறியே அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றனர். இவர்களின் செயல்பாடுகளில் தூய எண்ணம் (இஃலாசு) இருக்க முடியுமா?  தப்லீஃக் ஜமாஅத்தினர் தஃலீம் என்ற பெயரால் படிக்கும் அமல்களின் சிறப்பு என்ற நூலில் கற்பனைக்கு எட்டாத கட்டுக் கதைகளும், கப்சாக்களும், புளுகு மூட்டைகளுமே நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் காணப்படும் அசிங்கங்களை முன்னர் அந்நஜாத்தில் தெளிவாக விளக்கி எழுதி வந்தோம். அக்கட்டுக் கதைகளைப் படிக்கும் மக்களின் உள்ளங்களில் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக முன்னோர்கள், அகாபிரீன்கள், சாதாத்துகள் போன்றோர் மீது குருட்டு பக்தி ஏற்பட்டு, அவர்களின் பெயரால் சொல்லப்படும் கட்டுக்கதைகளை வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டு நாளை நரகை அடைந்து ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவாக்குகளை குர்ஆனைத் திறந்து நேரடியாகப் படிப்பவர்கள் நிச்சயம் உணர முடியும்.

இவற்றில் 34:31,32,33, 40:47,48 இறைவாக்குகள் கூறும் பெருமையடித்தவர்கள் நாங்கள் தான் ஆலிம்கள், மார்க்கம் கற்றவர்கள், நாங்கள் சொல்கிறதைத்தான் நீங்கள் எடுத்து நடக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு முன்னோர்கள், மூதாதையர்கள், அகாபிரின்கள், சாதாத்துக்கள், இமாம்கள், ஆலிம்கள் பேரால் 7:3, 33:36, 59:7 இறைவாக்கு களை நிராகரித்து மக்களை இணை வைப்பின்பால் தூண்டும் மவ்லவிகளையே குறிக்கிறது. இன்று தப்லீஃக் ஜமாஅத்தில் ஈடுபடும் மவ்லவிகள் அனைவரும் இத்தகையவர்களே.

மவ்லவி இல்யாஸ் சாஹிப் இந்த ஜமாஅத்தை ஆரம்பித்தப் புதிதில் மவ்லவிகள் அதில் ஈடுபட வில்லை. மவ்லவிகள் தப்லீஃக் ஜமாஅத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். சாதாரண மக்கள் (அவாம்கள்) மார்க்கத்தைத் தெரிந்து பிரச்சாரம் செய்வதா என்று கூறி கடுமையாக எதிர்த்தார்கள். எந்தப் பள்ளியிலும் தப்லீஃக் ஜமாஅத்தை அனுமதிக்கவில்லை. மிகக் கடுமையாக விரட்டி அடித்தார்கள். பள்ளிக்கு வெளியிலும் தங்க அனுமதிக்கவில்லை.இன்று குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள் என்று பிரச்சாரம் செய்யும் நம்மை எந்த அளவு கடுமையாக எதிர்க்கிறார்களோ, குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறும் கருத்துக்களை மட்டுமே எடுத்தெழுதும் அந்நஜாத்தை மக்கள் படிக்க விடாமல் தடுக்கிறார்களோ, அது போல் அன்று தப்லீஃக் ஜமாஅத்தை எதிர்த்தார்கள். நேர்வழியிலிருந்து வளைந்து கொடுத்தால் தான் தப்லீஃக் பணியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மதகுருமார்களான மவ்லவிகளுக்கு தப்லீஃக் ஜமாஅத்தில் சிகப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. கற்பனை கட்டுக்கதைகள், கப்சாக்கள், கப்ரில் தொழுத பெரியார் என்றெல்லாம் மனம் போன போக்கில் மனோ இச்சைக்கு-தாஃகூத்களுக்கு அடிமைப்பட்டு அமல்களின் சிறப்புகள் பெயரால் நூல் தயாராகி தப்லீஃக் தஃலீமில் நுழைக்கப்பட்ட பின்னரே தப்லீஃக் ஜமாஅத்திற்கு ஆதரவு பெருகியது. தேவ்பந் அகீதாவுடைய மவ்லவிகளின் பெருத்த ஆதரவும் கிட்டியது. ஆக தூய எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தப்லீஃக் ஜமாஅத் பெரியார், அகாபிரீன், சாதாத்துகள் பெயரால் கோணல் வழியை போதிக்கும் கூடாரமாகவே ஆகிவிட்டது. நாம் இலங்கையில் U.E.படித்துக் கொண்டிருந்த 1960-61 எமது 18 வயதிலிருந்து 1971, 29 வயது வரை மிகத் தீவிரமாகவும் 1971லிருந்து 1983 வரை பெருத்த தடுமாற்ற நிலையிலும், கடுமையாக ஆய்வுகள் அடிப்படையிலும் தப்லீஃகில் இருந்தோம்.

இந்தக் காலக் கட்டங்களில் டெல்லி மர்கசுக்குச் சென்று எமது மனக்குறையை முறையிட்டோம். அமல்களின் சிறப்பு(?) புகழ் மவ்லவி ஜக்கரிய்யா சாஹிபை இரண்டு முறை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்திருக்கிறோம். நாம் அங்கு வைத்தக் கோரிக்கை இதுதான். அமல்களின் சிறப்பு நூல்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் வைத்து தஃலீம் ஹல்காக்களை உயிர் பெறச் செய்யுங்கள் என்பது தான். ஆனால் அவர்களோ ´ஷிர்க், குஃப்ர், பித்அத்கள் நிறைந்த “”அமல்களின் சிறப்புகள்” நூல்களில் தான் பரக்கத் இருக்கிறது என்று கூறி எமது கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள். அவர்கள் “”பரக்கத்” என்று எதைச் சொல்கிறார்கள் தெரியுமா? இந்த “”அமல்களின் சிறப்புகள்” நூல்களை தஃலீமில் நுழைத்த பின்னர் தானே மவ்லவிகளின் ஆதரவு கிடைக்கிறது. அதனால் கூட்டமும் சேர்கிறது. பணமும் சேர்கிறது. இதுதான் அவர்களது பாஷையில் பரக்கத். தப்லீஃக் ஜமாஅத்தில் நான்கு மாதம் போய் வந்தால் உலகியல் ஆதாயங்கள் கிடைக்கிறது என்று கூறித்தானே மக்களைக் கிளப்புகிறார்கள். மறுமையில் கிடைக் கும் லாப நட்டத்தைப் போய்ப் பார்த்து விட்டு வந்தா பரக்கத்தைப் பேசுகிறார்கள்.

32:13, 11:118,119 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து சிந்தித்து விளங்கி இருந்தால் அல்லவா, எந்த அளவு வழிகேடுகளை மக்களுக்குப் போதிக்கிறோமோ அந்த அளவு மக்கள் கூட்டம் சேரும், பேர் புகழ் கிடைக்கும், காசு பணம் கிடைக்கும், ஆனால் மறுமையில் நிரந்தர நரகமே கூலியாகக் கிடைக்கும் என்பதை உணர முடியும். தப்லீஃக் வாலாக்கள் குர்ஆனை பொருள் அறியாமல் கிளிப்பிள்ளைப் பாடமாகப் படித்து வருகிறவர்கள் தானே. குர்ஆன் அறிவுரைகளை எங்கே அறியப் போகிறார்கள். குர்ஆன் ஆலிம்களுக்கு மட்டுமே விளங்கும், அவாம்களுக்கு விளங்காது என்று இந்த மவ்லவிகள் கூறுவதை வேதவாக்காக நம்புகிறார்கள்தானே.

எனவே தப்லீஃக் ஜமாஅத்திலோ, மத்ஹபுக ளிலோ, தரீக்காக்களிலோ குர்ஆன், ஆதாரபூர்வ மான ஹதீஃத்களை நேரடியாகப் படித்து விளங்கி அவற்றின் போதனைகள்படி நடப்பவர்களைப் பார்க்க முடியாது. அவர்கள் மட்டுமல்ல புதிய மத்ஹபினராகிய இயக்கவாதிகளும் குர்ஆன், ஹதீஃத் போதனைகளை நேரடியாகப் படித்து விளங்கி அவற்றின் நேரடிப் போதனைகளை ஏற்றுச் செயல்படுவதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம்கள், அகாபிரீன்கள், சாதாத்துகள் பேரால் சொல்லப்படுபவற்றை அப்படியே கண்மூடி ஏற்றுச் செயல்படுகிறவர்களே மத்ஹபினர், தரீக்காவினர். புதிய மத்ஹபினரோ அவற்றைத் தோற்றுவித்த மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃத்களுக்கு 2:159 இறைக் கட்டளை கூறுவது போல் திரித்து, வளைத்து, மறைத்துக் கூறும் கருத்துக்களை வேதவாக்காக(?)ஏற்றுச் செயல்படுகின்றனர். 7:3, 33:36, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையே எந்த இடைத்தரகரையும் புகுத்தாமல் நேரடியாக விளங்கிச் செயல்படுவதாக இல்லை. அவர்களின் இறுதி முடிவு பற்றி 33:66-68 இறை வாக்குகள் எச்சரிப்பது பற்றியும் அவர்கள் கவலைப்படுவதாக இல்லை.நாளை மறுமையில்தான் உண்மை நிலையை 33:66-68 இறைவாக்குகள் கூறுவதை அறிந்து ஒப்பாரி வைத்து, கண்மூடி நம்பிப் பின்பற்றியவர்களையே சபிக்கப் போகிறார்கள்.

ஆதி நபி ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் வரை ஒவ்வொரு நபியின் மறைவுக்குப் பிறகும் தாஃகூத் களான மதகுருமார்கள் சட்டவிரோதமாகத் திருட்டுத்தனமாக ஒவ்வொரு சமுதாயத்திலும் புகுந்த அந்த நபிமார்களின் போதனைக்கு முற்றிலும் முரணானவற்றை இறைவன் கூறியதாகவும் அந்தந்த நபிமார்கள் போதித்ததாகவும் பொய்யாகக் கூறி மக்களை வழிகேட்டில் இழுத்துச் சென்று வயிறு வளர்த்தார்கள். பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளினார்கள். இதற்கு ஈசா(அலை) அவர்கள், இறைவன் இணை துணை இடைத்தரகு இல்லா ஏகனான ஒருவனே; நான் அவனது அடிமையும் தூதனுமாவேன் என்று தெளிவாகக் கூறி மக்களை எச்சரித்ததற்கு மாறாக, அவர்கள் கொல்லப்படாமலும், சிலுவையில் அறையப்படாமலும் அல்லாஹ் வசத்தில் உயர்த்தப்பட்ட பின்னர், தாஃகூத்களான இம் மதகுருமார்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து இறைவனுக்கு அடிமையும், அவனது தூதருமான ஈசா (அலை) அவர்களை இறைவனின் குமாரனாகக் கற்பித்து, முக்கடவுள் கொள்கையை உருவாக்கி கிறித்தவ மதத்தைத் தோற்றுவித்த பின்னர் இன்று உலகில் கிறித்துவ மதத்தினர்தான் மிகப் பெரும்பான்மையாக இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கத்தானே செய்கிறோம். எந்த அளவு வழிகேடுகளைப் போதிக்கிறோமோ அந்த அளவு பெருங் கூட்டமும் சேரும்; உலகியல் பட்டம்,பதவி, சொத்து, சுகம், ஊடகங்களில் பிரபல்யம், காசு பணம் இத்யாதி இத்யாதி நிறையவே கிடைக்கும் என்பது உறுதியாகிறதா? இல்லையா?

இதுபோல்தான், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க நிறைவு செய்யப்பட்ட (பார்க்க 5:3, 3:19,85) இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைபிடித்த முஸ்லிம்களிடையேயும் தாஃகூத்களான இம்மத குருமார்கள் புகுந்து ´ஷிர்க், குஃப்ர், பித்அத் என அனைத்து வழிகேடுகளையும் அரங்கேற்றுகிறார்கள். முஸ்லிம்களிலும் மிகப் பெரும்பான்மையினர் செம்மறியாட்டு மந்தை போல் அவர்களின் பின்னால்தான் நரகை நோக்கி நடை போடுகிறார்கள். நாம் ஆரம்பத்தில் எடுத்தெழுதியுள்ள இறைவாக்குகள் இந்த உண்மையை நேரடியாக விளக்குகின்றன. சோம்பல் படாமல், தன்னம்பிக்கையுடன் நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள்.

அப்படி குர்ஆன், ஹதீஃத்களைப் படித்து அறிந்து நேர்வழி பெற்றவர்கள், அந்த நேர் வழியை மக்களுக்குப் போதிக்க முற்பட்டும் உள்ளனர். சில நபிமார்கள் நேர்வழியை மக்களுக்குப் போதித்தும் தாஃகூத்களின் கடுமையான எதிர்ப்பால் அந்த நேர்வழி போதனை மக்களிடம் எடுபடாமல் இறுதியில் அவர்கள் தன்னந் தனியாக சுவர்க்கம் புகுவதாக ஹதீஃத்கள் கூறுகின்றன. (பார்க்க : புகாரீ (ர.அ) 5705, 5752) இதுபோலவே மக்களுக்கு நேர்வழியைப் போதிக்க முற்பட்ட சிலரின் முயற்சிகள் தாஃகூத்களின் எதிர்ப்பையும் மீறி தாம் கொண்ட நேர்வழிக் கொள்கையில் உறுதியாக இருந்திருந்தால் அவர்கள் அந்த நபிமார்களைப் போல் சுவர்க்கம் நுழைவார்கள் என்பதில் ஐயமில்லை.

வேறு சிலர் தூய்மையான எண்ணத்துடன் ஆரம்பித்தாலும் இந்த தாஃகூத்களின் தலையீட்டால் அதன் தூயநிலை மாசுபட்டு மதங்களில் ஒன்றாக மருவி மக்களை வழிகேட்டில் இழுத்துச் செல்கிறது. அந்த நிலையில் உள்ளதுதான் இன்றைய தப்லீஃக் ஜமாஅத். தப்லீஃக் ஜமாஅத் முயற்சி ஒன்றுதான் முஸ்லிம்களின் இக, பர முன்னேற்றத்திற்குள்ள ஒரே வழி என்ற உறுதியான எண்ணத்தில்தான் 1960 முதல் 1983 வரை இருந்த நாமே,1983க்குப் பிறகு குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்க ஆரம்பித்த பின்னரே உண்மையான நேர்வழி எமக்குப் புரிந்தது. அதையே 30.10.1984ல் குருத்துவக் கல்லூரியில் அனைத்து மத மக்களின் நடுவில் எடுத்து வைத்தோம். அது நூல் வடிவிலும் வெளி வந்தது. அந்நூலைப் படித்து பார்த்து விட்டே சில மவ்லவிகள் எம்மை அணுகினார்கள்.

நாம் பெரிதும் சந்தோஷப்பட்டோம். பருத்தி புடவையாகவே காய்த்துவிட்டது என்று நம்பினோம். இம்மவ்லவிகள் எமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று உறுதியாக நம்பினோம். ஒரு வருடத்திலேயே அவர்களின் சாயம் வெளுத்து விட்டது. வழமை போல் நேர்வழியை கோணல் வழிகளாக்கும் தீய நோக்கத்துடனே அவர்கள் நம்மோடு இணைத்துள்ளனர் என்பதை ஒரு வருடத்திலேயே விளங்கிக் கொண்டோம். வழமைபோல் பலவித ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களின் புரோகித வட்டத்திற்குள் நம்மை இழுத்துப் போட முயன்றார்கள். அவர்களின் ஆசை வார்த்தைகளால் நம் மனதிலும் ஊசலாட்டம் ஏற்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எமது பாதங்ளை உறுதிப்படுத்திப் பாதுகாத்திருக்காவிட்டால் நிச்சயம் நாம் அவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அவர்கள் பின்னால் சென்றிருப்போம்; அல்லாஹ் பாதுகாத்தான். அவனுக்கே எல்லாப் புகழும்.

எம்மை விட்டு வெளியேறிய மவ்லவிகள் அனைவரும் 1987-ல் இணைந்து ஆரம்பித்த “”ஸலஃபி” கொள்கை அடிப்படையிலான ஜாக் ஜமாஅத்திற்கு இன்றிருக்கும் பல கோடி சொத்துக்கள் இதற்குப் போதிய ஆதாரமாகும்.  அவர்களின் தவறான போதனைகளை ஏற்காமல் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகராக புரோகிதராக-மதகுருமார்களாக எவருமே புக முடியாது என்று உறுதியாக விளங்கி, அதையே அந்நஜாத்தில் எழுதி வருவதால் அன்றிலிருந்து இன்று வரை அந்நஜாத்தின் கழுத்தை நெறித்து அதைக் கொன்று மண்ணில் புதைத்து விடவே 1987லிருந்து இன்று 2013 வரை ஓயாது உழைக்கிறார்கள். உலகம் முடியும் வரை அயராது போராடுவார்கள். இறுதி வெற்றி அந்நஜாத்தின் நேர்வழி-ஏகத்துவ போதனைக்கா? அல்லது மதகுருமார்களின் கோணல் வழிகளுக்கா என்பது அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது.

அல்லாஹ் நாடினால், இக்காலக் கட்டத்தில் முஸ்லிம்களுக்கு மேன்மையை நாடினால், 120 கோடி முஸ்லிம்களும் அல்ல, அல்லாஹ் நாடும் கணிசமான முஸ்லிம்களை குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒன்றுபட வைப்பான். இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பது அல்லாஹ்வின் முடிவு என்றால் முஸ்லிம்கள் தாஃகூத்களான மத குருமார்கள் பின்னால் தான் அணிவகுப்பார்கள். அல்லாஹ்விடம் முஸ்லிம்க ளின் ஈடேற்றத்தை வேண்டி துஆ செய்வோம்.

தப்லீஃக் ஜமாஅத்திற்கு மவ்லவி இல்யாஸ் சாஹிபுக்குப் பின்னர் அவரது மகன் மவ்லவி யூசுஃப் சாஹிப் அமீராக இருந்தார். அவருக்குப் பின் மவ்லவி இன்ஆமுல் ஹஸன் இருந்தார். அவருக்குப் பின் ஒரு ஷீராஜமாஅத்தே இருந்து வழி நடத்தியது. யாரும் அமீராக நியமிக்கப்படவில்லை; டெல்லி மர்கஸில் ஒரே கூட்டம் என்பது உண்மை தான். நாமே பலமுறை சென்று பார்த்திருக்கிறோம். செலவினங்களுக்கும் இன்றைய இயக்கவாதிகள் போல் மக்களிடம் கை பகிரங்கமாக ஏந்தாமலேயே வசதி தவறாமல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

தப்லீஃக் ஜமாஅத்தில் தஃலீம் என்ற பெயரால் வாசிக்கப்படும் அமல்களின் சிறப்புகள் நூல்களை அப்புறப்படுத்திவிட்டு குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டும் வைத்து மக்களுக்குப் படித்துக் காட்டினால் நிச்சயம் பெரியதொரு மாறுதல் எழுச்சி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அந்நூல்களுக்குப் பகராக தற்போது அறிமுகப்படுத்தியுள்ள “”முன்தகப் அஹாதீஃத் என்ற நூலிலும் அதிகப்படியாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களும், பலவீன மான ஹதீஃதுகளுமே காணப்படுகின்றன. இந்த விபரங்களையும் முன்னர் அந்நஜாத்தில் விளக்கியுள்ளோம். ஆயினும் மவ்லவிகள் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் காலமெல்லாம் ஒருபோதும் நேர்வழிக்கு வரமாட்டார்கள். (பார்க்க :2: 146,174, 6:20, 31:6, 36:21)

Previous post:

Next post: