பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்போரிடம் சில கேள்விகள்:

in பிறை

அபூ அப்தில்லாஹ்

1.பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன் 3:13) என்று நேரடியாகக் கூறும் குர்ஆன் வசனமோ, ஹதீஃதோ இருக்கிறதா?

2.ஹதீஃதில் மேகமூட்டம் என்றிருக்கிறதா? மறைக்கப்பட்டால் என்றிருக்கிறதா? (பார்க்க 10:71) ஃகும்ம, ஃகுப்பிய, ஃகும்மிய இந்த அரபி பதங்களின் நேரடி தமிழ் பதங்கள் என்ன?

3.நபி(ஸல்) அவர்கள் பிறை 29 அன்று மாலை மறையும் பிறையை மேற்கில் பார்க்கச் சொன்னார்களா? அல்லது தினசரி பார்க்கச் சொன்னார்களா?

4.மாத ஆரம்ப நாட்களில் மாலையில் பார்க்கும் பிறை மறையும் பிறையா? அல்லது பிறக்கும் பிறையா?

5.மறையும் பிறையைப் பார்த்துவிட்டு நாள் ஆரம்பிப்பதாக நபி(ஸல்) கூறி இருப்பார்களா?

6.நபி(சல்) அவர்கள் அந்த அளவு விளக்கக் குறைவானவர்கள் என்பது தான் உங்களின் நம்பிக்கையா?

7. 2:185ல் அல்லாஹ் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அதாவது சாட்சியளிக்கிறாரோ (ஃபமன் ஷஹித) அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கிறானா? அல்லது எவர் ரமழான் தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்க்கிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிட்டிருக்கிறானா?

8.எவர் அடைகிறாரோ என்ற சொல் ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் அடைவதைக் குறிக்குமா? அல்லது 2,3 நாட்களில் அடைவதைக் குறிக்குமா?

9.உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஜுமுஆ தொழுகையை வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்திற்குள் தொழுகிறார்களா? அல்லது வியாழன், வெள்ளி என 48 மணி நேரத்திற்குள் தொழுகிறார்களா? வியாழன், வெள்ளி, சனி என 72 மணி நேரத்திற்குள் தொழுகிறார்களா?

10.சூரியக் கணக்கின்படி 1 தேதி-1 நாள் என்பது 24 மணி நேரம், திங்கள், செவ்வாய் போன்ற 1 கிழமை 24 மணி நேரம் என்பது உலகறிந்த உண்மை. இதே போல் சந்திரக் கணக்குப்படி தலைப் பிறையான முதல் நாள் 24 மணி நேரத்திற்குள் வரவேண்டுமா? அல்லது இன்றைய முஸ்லிம்கள் கடைபிடிப்பது போல் துல்லியக் கணக்கீட்டின்படி (கணிப்பின்படி அல்ல) ஒரு சாராருக்கு ஒரு நாள் தலைப்பிறை, மற்றொரு சாராருக்கு சர்வதேச பிறை என்ற அடிப்படையில் இரண்டாவது நாள் தலைப் பிறை, பிரிதொரு சாராருக்கு தத்தம் பகுதி பிறை என்ற அடிப்படையில் மூன்றாவது நாள் தலைப்பிறை என24 மணி நேரம் கொண்ட தலைப்பிறை 2 நாள்-48 மணி நேரம், 3 நாள் 72 மணி நேரம் என வருவது பகுத்தறிவு ஏற்கும் செயலா? பகுத்தறிவற்றவர்களின் பிதற்றலா?

11.பிறையைப் பார்த்து மாதத்தை முடிவு செய்யுங்கள் என்று அன்று நபி(ஸல்) சொன்னது துல்லிய கணினி கணக்கீடு அன்று இல்லாத காரணத்தால், அன்று முஸ்லிம்களிடையே எழுந்த இம்மாதம் 29ல் முடிகிறது என ஒரு சாராரும், இல்லை! 30ல் முடிகிறது என பிரிதொரு சாராரும் சச்சரவிட்டுப் பிளவு பட்டதை முடிவுக்குக் கொண்டு வந்து சமுதாய ஒற்றுமை (21:92,23:52) காக்கவா? அல்லது பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்களா?

12.அன்று நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்ப்பதை மார்க்கமாக்கி அப்படிக் கூறினார்கள் என்றால், மனிதனின் கண்கள் சந்திரனில் பட்டால்தான் அது தனது சுற்றுப் பாதையில் செல்லும், மனிதக் கண் அதில் படாதவரை சந்திரன் அப்படியே நிற்கும்; சந்திரனின் ரீமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள் என்று கூறியதாக அதாவது பல குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்கள் நிராகரித்ததாகப் பொருள்படுகிறதே? நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தலை மார்க்கமாக்கி இருக்க முடியுமா?

13.அப்படி என்றால் சூரியன், சந்திரன் மற்ற இதர கோள்கள் அனைத்தும் தத்தம் சுற்றுப் பாதைகளில் ஒரு நொடி கூட முன் பின் ஆகாமல் பல கோடி வருடங்கள் சீராகச் சுழன்று வருகின்றன எனக் கூறும் அல்குர்ஆனின் 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 போன்ற எண்ணற்றக் கட்டளைகளை நபி(ஸல்) அவர்கள் நிராகரித்து விட்டு (நவூதுபில்லாஹ்) சந்திரன் மனிதனின் கண்கள் பட்டால்தான் சுழலும், பார்வையில் படும் வரை பிறை ஒன்றிலேயே சுழலாமல் நிற்கும் என்ற மூடத்தனமான ஒரு கட்டளையை பிறப்பித்திருக்க முடியுமா?

14.அல்குர்ஆன் 3:13ல் காணப்படுவதுபோல் எதிரிகள் தம் புறக்கண்ணால் பார்த்தார்கள் (ரஃயல் ஐன்) என்றிருப்பது போல் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என்று ஒரேயொரு ஹதீஃதும் நேரடியாகக் கூறாத நிலையில், பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் நீங்கள், அல்குர்ஆன் 22:27ல் ஹஜ்ஜுக்கு நடந்தும், தொலைவிலிருந்து மெலிந்த ஒட்டகங்களிலும் வருவார்கள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லியிருந்தும், அல்லாஹ்வின் இக்கட்டளையைப் புறக்கணித்து விட்டு இன்று ஹஜ்ஜுக்கு விமானத்தில் செல்வதை எந்த அடிப்படையில் சரி காண்கிறீர்கள்?

15.நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் தங்கள் மனைவிமார்களிடம் செல்வதில்லை எனக் கூறிவிட்டு, அந்த மாதம் 29லேயே பிறையைப் பார்க்காமலேயே, மாதம் முடிந்துவிட்டது என்பதை ஜிப்ரயீல்(அலை) வந்து சொன்னதின் பேரில் முடித்துக் கொண்டார்களே? (இப்னு அப்பாஸ்(ரழி)நஸாயீ 2104) பிறை பார்த்து மாதத்தை முடிவு செய்ய வேண்டும் என்று சொன்ன நபி(ஸல்) அவர்கள் தனது சொல்லுக்கே முரணாக நடந்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஜிப்ரயீல் (அலை) சொன்னதின் பேரின் அறிந்து கொண்டார்கள். இங்கு பிறை பார்க்க வேண்டியதில்லை என்பது உங்களின் பதில் என்றால், அதே போல் கோள்கள் சம்பந்தப்பட்ட நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அடிப்படையில் கணினி கணக்கீட்டின்படி (கணிப்பின்படி அல்ல) மாதம் பிறப்பதை துல்லியமாக அறிந்த பின்னரும் பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் என அடம் பிடிப்பது சரியா?

16.அன்று நபி(ஸல்) அவர்கள் சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்கால தொழுகைகளைத் தொழுததை நிராகரித்துவிட்டு இன்று நீங்கள் எந்த அடிப்படையில் கடிகாரம் பார்த்து நேரத்தை அறிந்து தொழுகிறீர்கள்?

17.கிழக்கிலிருந்து இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நீங்கள் நோன்பு துறக்கவும். இதிலுள்ள கண்டால் என்பதற்கும் பிறை பார்த்தலில் வரும் அதே பதமே இருக்கிறது. உங்களின் அளவுகோல் என்ன? நீங்கள் கடிகாரம் பார்த்து நோன்பை நோற்றுத் துறக்கலாமா?

18.அன்று வைகறையைக் கண்ணால் பார்த்து நோன்பை ஆரம்பித்து சூரிய மறைவை கண்ணால் பார்த்து நோன்பு துறந்ததை நிராகரித்து விட்டு இன்று நீங்கள் எந்த அடிப்படையில் கடிகாரம் பார்த்து நோன்பு ஆரம்பித்து நோன்பு துறக்கிறீர்கள்?

19.அன்று நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களில் சிலரின் இறப்பை ஆள் நேரில் வந்து சொன்னதன் பின்னர் அதை அறிந்து செயல்பட்டதை நிராகரித்துவிட்டு இன்று நீங்கள் எந்த அடிப்படையில் தொலைத் தொடர்பு மூலம் தகவல் அறிந்து செயல்படுகிறீர்கள்?

20.உங்களின் இந்த அனைத்துச் செயல்களும் 5:41ல் அல்லாஹ் யூதர்களைப் பற்றி சொல்வது போல், அந்த யூதர்களின் சதி வலையில் நீங்களும் சிக்கி மார்க்கத்திலுள்ளவற்றை மார்க்கம் அல்லாததாக ஆக்கவும், மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவற்றை மார்க்கம் ஆக்கவும் முற்படுகிறீர்கள். 2:146, 6:20ல் அல்லாஹ் சொல்வது போல் அன்று யூத மத குருமார்கள் அறிந்தே மார்க்கத்தைப் புரட்டியதுபோல், இன்று நீங்களும் நன்கு அறிந்து கொண்டே மார்க்கத்தைப் புரட்டுகிறீர்கள் என்ற எமது குற்றச் சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?

21.பிறை பார்ப்பது இபாதத்தா? வணக்கமா? அல்லது மாதம் தொடங்கியதை அறிவதற்காக அன்றிருந்த ஒரே சாதனமா?

22.பிறை பார்ப்பது இபாதத் என்றால் அன்று தொழுகைக்காக நேரம் அறிய சூரியனைப் பார்த்ததும் இபாதத் என ஒப்புக் கொள்கிறீர்களா?

23.பிறை பார்ப்பது இபாதத் என்றால் அன்று ஹஜ்ஜுக்கு ஒட்டகத்தில் போனதும் (பார்க்க 22:27) இபாதத் என ஒப்புக் கொள்கிறீர்களா?

24.பிறை பார்ப்பது இபாதத் என்றால் அன்று மரணச் செய்தியை ஆள் நேரில் வந்து சொன்னதும் இபாதத் என ஒப்புக் கொள்கிறீர்களா?

25.சூரியகிரகணம் மாத இறுதியில் இடம் பெறுமா? அல்லது பிறை 27ல் இடம் பெறுமா?

26.சந்திரகிரகணம் மாத நடுப்பகுதியில் இடம் பெறுமா? அல்லது பிறை 12ல் இடம் பெறுமா?

27.நாட்களை பிறையின் படித்தரம்(மன்ஜில்) காட்டுமா? டவுன் காஜியின் அறிவிப்பு நாட்களை முடிவு செய்யுமா?

28.குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் கூறுபவர்கள், தங்களின் சுய புராணத்தைக் கைவிட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஸிலிருந்து பிறையைப் புறக்கண்ணால் பார்க்க வேண்டும் (ரஃயல் ஐன்) என்பதற்கு ஆதாரம் காட்டுவார்களா?

29.ஹதீஸ்களில் வரும் “”ஃபக்துரூ” என்ற அரபி பதம் கணக்கிடுவதை (Calculation) குறிக்குமா? கணிப்பதை (Assume) குறிக்குமா?

30.மவ்லவிகள்தான் 4ம் வகுப்பை, 5ம் வகுப்பைத் தாண்டாதவர்கள். அவர்களுக்கு கணக்கீட்டிற்கும், கணிப்பிற்குமுள்ள வேறுபாடு தெரியாதிருக்கலாம். பட்டதாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், பொறிஞர்களுக்கும், வழக்குரைஞர்களுக்குமா கணக்கீட்டிற்கும், கணிப்பிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் மதகுருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள்?

நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பவர்களிடம் சில கேள்விகள்: 1.நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பதற்கு உங்களின் சுய விளக்கம் தவிர்த்து நேரடியாகக் கூறும் ஒரு குர்ஆன் வசனத்தையோ, ஓர் ஆதாரபூர்வமான ஹதீஃதையோ காட்ட முடியுமா?

2.கத்ருடைய நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது என்பதை “”ஹியஹத்தா மத்லயில் ஃபஜ்ர்” என்று 97ம் அத்தியாயத்தின் இறுதிப் பகுதி தெளிவாகக் கூறுகிறதே. தவாஃபின் முதல் சுற்று ஹஜ்ருல் அஸ்வத் கல்லிற்கு நேராக உள்ள கோட்டுடன் முடிவடைகிறது என்றால் எப்படி விளங்குகிறோம்? அங்கு ஆரம்பித்து அங்கு வந்து முடிகிறது என்பது போல் நாளும் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது என்பதை விளங்க முடியவில்லையா? பூமி சுழலும்போது தனது சுற்றுப் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தில் வந்து முடிவதைத்தானே ஒரு நாள் என்கிறோம். 36:39,40ம் இதை உண்மைப்படுத்துகிறதே!

3.பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றிவர 1 நாள் அதாவது 24 மணி நேரம். ஓர் இரவு என்பது நாள் 12 மணி நேரம். 12 மணி நேரம் மட்டும் கத்ரு இருந்தால் அப்போது பகலில் இருக்கும் 12 மணி நேர மக்களுக்கு அது கிடைக்கவே செய்யாது. அவர்கள் இரவில் இருக்கும் 12 மணி நேரத்தில் அவர்களுக்கும் கத்ரு கிடைக்கும் என்றால் 12+12=24 மணி நேரம். அப்படியானால் “கத்ரு” ஒரு நாளே அல்லாமல் ஓர் இரவு அல்ல என்ற சாதாரண அடிப்படை அறிவும் இல்லாதவர்களா தங்களை மார்க்க அறிஞர்கள் எனப் பீற்றுகிறார்கள்?

4.நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது என்று 97ம் அத்தியாயமும், நடுத்தொழுகை என்று 2:238 இறைவாக்கு கூறுவதற்கு அந்த நடுத்தொழுகை அஸர் தொழுகை என நபி(ஸல்) அவர்கள் விளக்கிய பின்னரும், குர்ஆன், ஹதீஸை நிராகரித்துவிட்டு நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்பது யூதர்களின் மூடக் கொள்கையா? அறிவுடைய முஸ்லிம்களின் கொள்கையா?

5.மாதத்தின் ஆரம்ப நாட்களில் காலையில் உதித்து மாலையில் மறையும் சந்திரனைப் பார்த்துவிட்டு நாள் மாலையில் ஆரம்பிக்கிறது என்ற அறிவீனமான கூற்றை நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்களா? அல்லது புரோகிதத்தை முஸ்லிம் சமுதாயத்தில் நுழைத்த யூதக் கைக்கூலிகள் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள்கையை முஸ்லிம்களிடையே புகுத்தி இருப்பார்களா?

6.97:1-5, 2:51, 7:142, 19:10 போன்ற இறை வாக்குகளில் வரும் “லைலத்’ என்ற அரபி பதம் நாளைக் குறிக்கும் நிலையில் அவற்றை இரவு என மொழி பெயர்த்துள்ள புரோகித மவ்லவிகள் அரபி மொழியை முறையாகக் கற்ற அறிஞர்களாக இருக்க முடியுமா?

7.ஹதீஃதில் வரும் “”லைலத்த மஷாஹ்” என்ற அரபி வார்த்தைக்கு “”இரவின் மாலை” என்பது சரியா? “”நாளின் மாலை” என்பது சரியா?

8.மத்ஹபுகள் முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் நோன்பு காலங்களில் இஷாவுக்குப் பின் சொல்லிக் கொடுக்கும் பித்அத்தான நோன்பு நிய்யத்தில் கற்றுக் கொடுத்த “நவைத்து சவ்மஃகதின்” அதாவது நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று இன்றும் மத்ஹபினர் கடை பிடிக்கும் நோன்பு நிய்யத் நாள் ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறதே. ஆக நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள்கை அதன் பின்னரே முஸ்லிம் சமுதாயத்தில் யூதக் கைக் கூலிகளால் புகுத்தப்பட்டுள்ளது என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறதே?

9.பேரீச்சம் பழம் ஊறவைத்து குடித்த ஹதீஃத்களில் எத்தனை நாள் அது மதுவாகாமல் இருக்கும் என்று கூறுகின்றனவா அல்லது நாள் துவங்குவதைப் பற்றி அவை கூறுகின்றனவா?

10.புகாரீ 1821 ஹதீஸில் மாதம் 29 லைலாஹ்வை கொண்டது என்பதை மாதம் 29 இரவுகளைக் கொண்டது என்பீர்களா? அல்லது 29 நாட்களைக் கொண்டது என்பீர்களா?

11. 19:10ல் வரும் ஃதலாஃதலயாலின்-மூன்று நாள்தான் என்பதை 3:41ல் வரும் ஃதலாஃதத அய்யாம்-மூன்று நாட்கள் என்று வருவதன் மூலம் உறுதிப்படுத்துகிறதே! இதை மறுக்கிறீர்களா?

12.நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃபை ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடித்தார்களா? மஃறிபில் ஆரம்பித்து மஃறிபில் முடித்தார்களா?

13.ஹஜ்ஜுடைய கிரிகைகளை நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ரில் ஆரம்பித்தார்களா? மஃறிபில் ஆரம்பித்தார்களா?

14. துல்ஹஜ் பிறை 9ம் நாள் பகலில் அரஃபா மைதானத்தில் தங்கும் வாய்ப்பை இழந்தவர்கள் அன்று மாலை முடிந்து வரும் இரவில் அரஃபா மைதானத்தில் தங்கினாலும் அவர்களது ஹஜ் நிறைவேறி விடும் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். அப்படியானால் அது 9ம் நாளின் இரவா? அல்லது 10ம் நாளின் இரவா? 10ம் நாளின் இரவாக இருந்தால் ஹஜ் எப்படி நிறைவேறும்? விளக்குவார்களா? நாள் ஃபஜ்ரிலிருந்து ஆரம்பிக்கிறது என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா?  

15.பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதி வெளியிட்டுள்ள, நபி வழியில் ஹஜ் என்ற நூலின் 44ம் பக்கம் காணப்படுவது வருமாறு:

“”துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று “மினா’ எனுமிடத்திற்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ரு தொழுகையையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்லிம் 2137

இவ்வளவு தெளிவாக நேரடியாக முஸ்லிம் நூலின் 2137 எண் ஹதீசை ஆதாரம் காட்டி எழுதியுள்ள பீ.ஜை. அவர் எழுதியுள்ளதற்கு நேர் முரணாக நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பதற்குச் சம்பந்தமே இல்லாத நீரில் ஊற வைக்கப்பட்ட பேரீச்சம்பழச் சாறு எத்தனை நாட்களுக்கு மதுவாகாமல் இருக்கும் என்று கூறும் ஹதீஃத்களில் வரும் “லைலத்’ என்ற அரபி பதத்தை இரவு என அறிவீனமாக மொழி பெயர்த்து, உங்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வதை உங்களால் உணர முடியவில்லையா? அவரது இரட்டை வேடத்தை – நயவஞ்சகத்தை – முனாஃபிக்தனத்தை உங்களால் உணர முடியவில்லையா? அந்த அளவு மூடர்களா நீங்கள்?

16.மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ள மதகுருமார்களான மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் கண்ணிருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள், உள்ளம் இருந்தும் உண்மையை உணர முடியா மாபாவிகள் என்பதை தக்வாவுடைய எந்த ஆணும், பெண்ணும் மறுக்க முடியாது. (பார்க்க. 2:10,18,171, 6:39, 7:175- 179, 8:22, 10:42, 17:97, 21:45, 25:73, 27:80, 30:52, 43:40)

மவ்லவிகளான மதகுருமார்கள் பின்னால் செல்பவர்களின் எதார்த்த நிலை இதுதான் என்பதை அல்குர்ஆனே பல இடங்களில் உறுதிப்படுத்துகிறது.
நன்றி : அந்நஜாத், பிப்ரவரி 2011

மாதங்கள் 18 உருண்டோடியும், P.J.யிடமிருந்தோ, அவரது கைத்தடிகளிடமிருந்தோ, பக்தர்களிடமிருந்தோ பதில் இல்லை. அவர்களது மெளனமே பிறையைப் பார்க்காமல் கணினி கணக்கீட்டை ஏற்கலாம்; நாள் மஃறிபிலிருந்து அல்ல, ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்ற இரு உண்மைகளையும் ஒப்புக்கொண்டதற்குப் போதிய ஆதாரமாகும். கன்னிப்பெண் சம்மதம் தெரிவிக்க வெட்கப்படுவது போல், இவர்களின் வரட்டுக் கெளரவம், ஆணவம் உண்மையை ஒப்புக் கொள்ள வெட்கப்பட வைக்கிறது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

தொடர்பு எண்கள்: 9443955333, 934510088

Previous post:

Next post: