உறுதி மொழியான “கலிமா” படும் பாடு!

in 2013 நவம்பர்

அபூ ஃபாத்திமா

ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற ஏகனாகிய இறைவன் தன்னந்தனியனான ஒருவனோ, அதுபோல் அந்த ஓரிறைவனை ஏற்று உறுதி மொழி பகர்வதும் ஒன்றே ஒன்றுதான். அது வருமாறு:

அஷ்ஹது அவ்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ.

இந்த அரபி மொழி உறுதி மொழியின் தமிழ்ப் பொருள் வருமாறு:
“”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், இன்னும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்பதாகும்.

இந்தத் தூய கலிமாவை “”லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” எனச் சுருக்கி அதிலும் திருப்திப்படாமல் இறுதியில் அல்லாஹ்-முஹம்மது என சம நிலைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். இன்று பெரும்பாலான பள்ளிகளில் மிஹ்ராபுக்கு மேல் ஒரு பக்கம் “”அல்லாஹ்” என்றும் மறுபக்கம் “”முஹம்மது” என்றும் எழுதி இருப்பதைப் பார்க்கலாம். “”லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று இம்மவ்லவிகள் கூறும் கலிமாவில், தூய கலிமாவில் இருக்கும் “அப்துஹு” அல்லாஹ்வின் அடிமை முஹம்மது(ஸல்) என்பதை எடுத்து விட்டார்கள். அடுத்து அல்லாஹ்வுக்குச் சமமாக முஹம்மதையும் ஆக்கி பள்ளிகளிலும் இன்னும் பல இடங்களிலும் “”அல்லாஹ்” “”முஹம்மது” என்று எழுதி மக்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள். உருதுமொழி பேசும் சில அறிவீனர்கள் முஹம்மது(ஸல்) “ரஸூலுல்லாஹ் நெஹீஹைன்” “ரஸூல் அல்லாஹ் ஹைன்” என்று பிதற்றவும் செய்கின்றனர். அதாவது “”முஹம்மது அல்லாஹ்வின் தூதர் அல்ல; அவரே அல்லாஹ் என்று பிதற்றுகின்றனர். மிஃராஜுடைய பயணத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னையே அங்கு அல்லாஹ்வாகக் கண்டார்கள் என்று பிதற்றுவோரும் உண்டு.

இதற்கு மேலும் ஹழரத், சய்யிதினா, மவ்லானா, முர்ஷிதினா என்றும் தமிழில் நாயகம், பெருமானார் என்றெல்லாம், நபி(ஸல்) அவர்கள் “”என்னை அல்லாஹ்வின் அடிமை மற்றும் அவனது தூதர்” என்பதற்கு மேலதிகமாக எவ்விதப் புகழ்ச்சியையும் செய்து அல்லாஹ்வுக்கு இணையாக்க முற்படாதீர்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளதை நிராகரித்துச் செயல்படுகின்றனர் இம்மவ்லவிகள்.

இத்தோடு விட்டார்களா? இல்லையே! தூய கலிமாவின் தமிழ் மொழி பெயர்ப்பிலும் செய்துள்ள தில்லு முல்லுகளைப் பாருங்கள்.

“”லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற அரபி மூலத்தைத் தமிழில் எப்படி மொழி பெயர்க்க வேண்டும்? “”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை” என்றுதான் மொழி பெயர்க்க வேண்டும். இந்த மவ்லவிகள் எப்படி மொழி பெயர்த்துள்ளார்கள். “”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று மொழி பெயர்த்துள்ளனர். “”லா மஃபூத இல்லல்லாஹ்” என்று அரபியில் இருந்தால் மட்டுமே இப்படி மொழி பெயர்க்க வேண்டும். மூலத்தில் இலாஹ்-இறைவன் என்றிருப்பதை மஃபூதுக்குரிய “”வணக்கத்திற்குரிய” என்று ஏன் மொழி பெயர்க்க வேண்டும்?
1986களில் பீ.ஜை நம்மிடம் வந்து சேர்ந்த புதிதில் ஏன் பீ.ஜை “”லாயிலாஹ” என்றிருப்பதை வணக்கத்திற்குரியவன் என்று எந்த அடிப்படையில் மொழி பெயர்க்கிறீர்கள்? என்று கேட்டதற்கு, அவர் கூறிய பதில் நமக்குச் சிரிப்பையே உண்டாக்கியது. அவரது பதில் இதுதான். “இலாஹ்’ என்ற அரபி பதத்திற்கு அரபி அகராதிகளில் “”மஃபூத்” என்றே கூறப்பட்டுள்ளது. எனவே வணக்கத்திற்குரியவன் என்று தமிழில் மொழி பெயர்க்கிறோம் என்ற பதிலையே தந்தார்.
இது எவ்வளவு அறிவீனமான பதில் என்பதைச் சுய சிந்தனையாளர்கள் நிச்சயம் உணர முடியும். இந்த மவ்லவிகளைக் கண்மூடி நம்பி செம்மறி ஆட்டு மந்தைபோல் அவர்கள் பின்னால் செல்பவர்களே இந்த விளக்கத்தை ஏற்க முடியும். எப்படி என்று பாருங்கள்.

ஒரு மொழியிலுள்ள பதத்திற்கு அதே மொழியில் தெளிவு கொடுக்கும்போது அந்தப் பதத்திற்கு நெருக்கமான வேறு பதம் கொண்டு மட்டுமே தெளிவுபடுத்த முடியும். அந்தப் பதத்திற்கு மீண்டும் அப்பதத்தையே போட்டால் அது பிதற்றலேயாகும். அதாவது அரபியில் “இலாஹ்” என்ற பதத்திற்கு அதே “இலாஹ்’ என்ற அரபி பதத்தையே போட முடியாது. எனவே அதற்கு நெருக்க மான மஃபூத் என்ற பதத்தைப் போட்டு விளக்குவதில் தவறே இல்லை.

அதே சமயம் “இலாஹ்’ என்ற அரபி பதத்திற்கு “”இறைவன்” என்ற தமிழ் பதம் தெளிவாக-நேரடியாக இருக்க அதைப் புறக்கணித்துவிட்டு மஃபூதுக்குரிய தமிழ் பதமான வணக்கத்திற்குரிய என்ற பதத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? அங்குதான் இப்புரோகிதர்களின் வக்கிரப் புத்தி மறைந்து கிடக்கிறது.

இலாஹ்வுக்குரிய நேரடிப் பதமான இறைவன் என்று மொழி பெயர்த்துவிட்டால் அந்த இறைவனுக்குரிய தனித் தன்மைகள் அனைத்தையும் மனிதர்களில் யாருக்கும் சொந்தப் படுத்த முடியாது. இறைவனின் தனித்தன்மைகளில் சில, மனிதர்களில் சிலருக்கும் உண்டு என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க முடியாது. “”வணக்கத்திற்குரிய” என்று மொழி பெயர்த்தால், இம்மவ்லவிகள் வணக்கமாக மக்களை நம்ப வைத்துச் செயல்படுத்தும் தொழுகை, நோன்பு, ஹஜ் இவற்றை மட்டும் தான் அல்லாஹ் அல்லாத யாருக்கும் செய்யக் கூடாது. வணக்கம் அல்லாதவற்றில் தங்கள் மன இச்சைப்படி எதையும் செய்து கொள்ளலாம் என்ற தீய எண்ணத்தைப் புகுத்துகிறார்கள் இப்புரோகித மவ்லவிகள்.

உதாரணமாகப் பொதுமக்களுக்குப் பெருத்த இடையூறுகளையும் சிரமத்தையும், தரும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், இன்ன பிற குர்ஆன், ஹதீஃத் மறுக்கும் (7:86, 29:29) செயல்களில் தீவிரமாக ஈடுபடும் முஸ்லிம் இயக்கத்தினர், இவற்றை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தும் ஜனநாயக வாதிகள், கம்யூனிச, சோசலிச சிந்தாந்தவாதிகள் பெரிதும் நடைமுறைப்படுத்தும் உண்ணா விரதத்தை கடைபிடிக்கத் துணிகிறார்களா? இல்லையே! காரணம் என்ன? காரணம் நோன்பு -உண்ணாவிரதம் வணக்க வழிபாட்டில் உள்ளது. எனவே அதை இறைவனுக்கு மட்டுமே கடைபிடிக்க வேண்டும். அதற்கு மாறாக இந்த இயக்கத்தினர் செயல்படுத்தும் மேலே கண்ட செயல் பாடுகள் குர்ஆனுக்கு முரணானவையாக இருந்தாலும் அவை வணக்க வழிபாட்டில் உள்ளவை அல்ல என்பதுதான். அதனால் துணிந்து அவற்றில் ஈடுபடுகிறார்கள்.

அது மட்டுமா? முஸ்லிம்களில் பெரும்பாலோரைக் கவனியுங்கள். பொதுவாழ்க்கையில், வியாபாரத்தில், தொழில்களில், கொடுக்கல் வாங்கலில், திருமணங்களில் இன்னும் பிற செயல்களில் எவ்வித அச்சமோ, பயமோ இன்றி துணிந்து குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்கள், துணிந்து லஞ்சம் கொடுத்து, தங்களுக்கு உரிமையில்லாதவற்றைப் பெறுகிறவர்கள், ததஜ போல் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுத்து தங்களுக்குச் சாதகமான பெரும் தவறான தீர்ப்பைப் பெறுகிறவர்கள் இப்படி அனைத்துத் தீய செயல்களில் மனந்துணிந்து, ஈடுபடும் முஸ்லிம்கள், வணக்கம் என்று வரும் தொழுகையில், அதற்காக ஒளூ செய்வதில் எந்த அளவு பயந்து நடுங்கி மனக் குழப்பத்துடன் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே செய்கிறோம்.

தங்களின் வணக்க வழிபாடுகளில் தெய்வக் குற்றம் ஏற்பட்டு விடுமோ என அஞ்சி நடப்பவர்கள், அதனாலேயே வணக்க வழிபாடுகளில், அவற்றைச் செய்வதால் தெய்வக் குற்றம் ஏற்படுவதை விட, அவற்றைச் செய்யாமல் விடுவதால் தெய்வக் குற்றம் ஏற்பட்டால் பரவாயில்லை என்று அவற்றில் பொடுபோக்காய் இருக்கிறார்கள். ஆனால் இதர தங்களின் செயல்பாடுகளில் தெய்வ குற்றம் ஏற்படுவது பற்றிக் கடுகளவாவது அஞ்சுகிறார்களா? இல்லையே! காரணம் என்ன? ஆம்! அவர்களின் அகராதியில் வணக்க வழிபாடுகளாக இந்த மவ்லவிகளான புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளவற்றில் மட்டும்தான் தெய்வ குற்றம் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதர தங்களின் செயல்பாடுகள் வணக்க வழிபாடுகளுக்குட்பட்டவை அல்ல. அவற்றில் எப்படியும் நடந்து கொள்ள லாம் என்ற அசட்டுத் துணிச்சலை “”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்று இந்த மவ்லவிகளின் தவறான மொழி பெயர்ப்பு ஏற்படுத்துகிறது.

இந்த மவ்லவிகளும் ஹராமான வழியில் தங்களின் தொப்பைகளையும், பைகளையும் நிரப்ப வழிவகுத்துக் கொடுக்கிறது. இந்தத் தவறான கலிமா மொழி பெயர்ப்பின் காரணம் புரிகிறதா? இம்மவ்லவிகளைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் மேன்மையும், சிறப்பும், மன அமைதியும் கிடைக்கப்போவதில்லை. மறுமையிலும் சுவர்க்கம் கிடைக்கப் போவதில்லை; நரகமே கூலியாகக் கிடைக்கும். முஸ்லிம்களே எச்சரிக்கை.

Previous post:

Next post: