ஜாக் நடத்திய சேலம் பிறை விளக்க மாநாடு!

in 2013 டிசம்பர்,பிறை

நேர்முக வர்ணனை :
– இப்னு குறைஷ்

கடந்த முஹர்ரம் 14 ஹிஜ்ரி 1435 அன்று ஞாயிற்றுக்கிழமை ஜாக் அமைப்பின் சார்பாக சேலம் மாநகரில் பிறை விளக்க மாநில மாநாடு நடத்தப்பட்டது. துல்லியமான சந்திரக் கணக்கீட்டு முறையை சரிகண்டு அதை நடைமுறைப்படுத்தும் ஜாக் உறுப்பினர்கள் தவறாது இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக் கொடுக்கப்பட்டது. பிறைகளைக் கணக்கிடுவது தவறானது என்றும் ஜாக்கின் சர்வதேச-சவுதி தேசப்பிறை தான் சரியானது என்றும் கூறி இது சம்பந்தமான கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்கப்படும் என்றும் அறிவிப்புச் செய்யப்பட்டது.
பிறைக் கணக்கீட்டை ஆய்வு செய்து சரி கண்டு ஹிஜ்ரி நாட்காட்டியைப் பின்பற்றியும் வரும் ஜாக் அமைப்பின் மவ்லவிகள், மூத்த தாயிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டு ஜாக்கின் பிறை நிலைப்பாடு பற்றிக் கேள்விகளை எழுப்பினர். அறிவுத் தாகத்திற்கு விடை கிடைக்கும் என்ற எண்ணத்தில் கலந்து கொண்ட ஜாக் உறுப்பினர்களின் கேள்விகள் பலவற்றிற்கு பதில் அளிக்காமலேயே அவசர கோலத்தில் அப்பிறை மாநாட்டை முடிக்க முற்பட்டதால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

ஜாக் மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் இமாம் ஹுஸைன் அவர்கள் சுமார் 15 கேள்விகளைக் கேட்டும் அவற்றிற்குப் பதில் சொல்லாமல் மறைக்கப்பட்டதை மேடையில் ஏறி உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொண்டார். தான் கேட்ட கேள்விகளை உறுதி செய்வதற்கு தனது கேள்விகளை நகல் எடுத்து அவற்றைப் பிரசுரமாக அந்த அவையிலேயே வெளியிட்டார்.
ஜாக்கின் மாநில செயற்குழுவில் அங்கம் வகிக்கும் மெளலவி அப்துல்காதிர் உமரி அவர்கள் ஜாக்கின் பேச்சாளர்களால் மாநாட்டில் பேசப்பட்ட தவறான கருத்துக்கள், மற்றும் அவதூறான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், அது பற்றிய உண்மை விளக்கம் அளிப்பதற்குத் தனக்கு சில மணித்துளிகள் பேசுவதற்கு வாய்ப்பைத் தாருங்கள் என்று முறையிட்டார். தனது கோரிக்கை மறுக்கப்படவே அவை பற்றி ஜாக் மாநில அமீருடன் தான் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று பல உறுப்பினர்களைச் சாட்சியாக வைத்து அமீருக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.

பிறைக் கணக்கீட்டை சரிகாண்பவர்களுக்கு அரபி ஞானம் இல்லை என்று பேசிய ஜாக் பேச்சாளர்களுக்கு, ஜாக்கின் மூத்த அறிஞர் மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அரபியிலேயே தனது கேள்வியை எழுதி அதைப் படித்து விளக்கம் சொல்லுமாறு கேட்டார். அவரின் கேள்விக்கும் பதிலளிக்காது விடப்பட்டதால் ஜாக் தலைமை மீதான தனது பலத்தக் கண்டனத்தை அந்த மாநாட்டில் அவரும் பதிவு செய்தார். பிறைக் கணக்கீட்டை வலியுறுத்தி ஜாக் அமீரின் வீட்டு முன்பு தனது தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்றார்.

ஜாக் நெல்லை மாவட்ட நிர்வாகி சகோதரர் முஹம்மது நஸீர் அவர்கள் உட்பட பல உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் கேள்வி பதில் நிகழ்ச்சி முடிக்கப்பட்டதால் சம்பந்தப் பட்ட உறுப்பினர்கள் அனைவரும் மேடையில் ஏறி மாநில அமீரிடம் முறையிட்டனர். மாநாட்டில் பலத்த கூச்சல் குழப்பம் நிலவியது. இறுதியில் பொதுச் செயலாளர் இமாம் ஹுஸைன் அவர்கள் “”பிறை கணக்கை சரிகாணும் நமது உறுப்பினர்களின் மேற்படி கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை தான் அமைப்பின் தேர்தலை நடத்தப் போவதில்லை” என்ற அறிவிப்புடன் பிறை மாநாடு மாலை 5:15 மணிக்கு அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

Previous post:

Next post: