உண்மையே உன் விலை என்ன?

in 2014 பிப்ரவரி

பெங்களூர் M.S.கமாலுத்தீன்

“”பயமின்மை, உள்ளத்தூய்மை, ஞானத்திலும் யோகத்திலும் நிறைவு பெற்றிருத்தல். தானம், புலனடக்கம், யாகம், வேதசாஸ்திரங்கள் கற்றிருத்தல், தவம், நேர்மை, அகிம்சை, பிறர் பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், சபலமின்மை, தைரியம், பொறுமை, மனவுறுதி, தூய்மை, துரோகமின்மை, செருக்கின்மை, அர்ஜூனா! இவை தெய்வீக சம்பத்துடன் பிறந்தவனின் தன்மையாகின்றன.”
ஸ்ரீமத் பகவத்கீதை : 16:2-4

3369 நாட்கள், 28 குற்றவாளிகள் 1873 பக்கக் குற்றப்பத்திரிகை. 189 அரசு தரப்பு சாட்சிகளோடு நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது. “”அவாளுக்கு” தேவைப்பட்டத் தீர்ப்புக் கிடைத்து விட்டது. பட்டாசு வெடித்து சங்கரமடம் சந்தோசப்பட்டுவிட்டது. எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டதால் சங்கராச் சாரியாரும் சில முருகன் கோயில்களுக்குச் சென்று சிறப்பு தரிசனம் செய்துவிட்டார்.

அந்நஜாத் இதழில் நாம் எழுதியது போல் வேறு வார்த்தையில் தீர்ப்பு வந்துவிட்டது. தன் வாழ்நாளில் முப்பது வருடங்களுக்கு மேலாக தீவிர விசுவாசத்துடன் பணியாற்றி வந்த சங்கரராமன், சங்கரமடத்தின் புனிதத் தன்மைக்கு இழுக்கு ஏற்படும் விதமாக நடந்து கொண்ட சங்கராச்சாரியார்களை திருத்தும் விதமாக “சோம சேகர கனபாடிகள்” என்ற பெயரில் தவறுகளைச் சுட்டிகாட்டி கடிதங்கள் எழுதினார். மட சந்நியாசிகளுக்கு காமம் கண்ணை மறைக்க. இதை கண்டு கொள்ளவில்லை.

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி விற்பனைக்கு வந்தது. இதை அன்றும் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா தரப்பினர் வாங்கும் முயற்சியில் ஈடுபட சங்கராச்சாரியார்கள் வியாபாரத்தை முடித்தே விட்டார்கள். அரசியலும், ஆன்மீகமும் உரசிக் கொண்டன.

சங்கராச்சாரியார்களின் “”அந்தப்புர ஆன்மீக சேவைகள்” எல்லை மீறிப் போவதாக நினைத்த சங்கரராமன் இந்து அற நிலையதுறைச் சட்டபடி, சந்நியாசிகளை தகுதி நீக்கம் செய்யப்போவதாக கடிதம் எழுத, சங்கரராமனை சமாதியாக்க “”கூலிப் படை” ஏவி கொன்று முடித்தார்கள். இறந்துபோன சங்கரராமன் ஏழை எளிய நிராதரவான சைவப் பார்ப்பனர். மடத்தின் புனிதத்தைக் காக்கப் போராடிய போராளி.

உயர் ஜாதி இந்துக்களின் அடையாளமாக திகழும் சங்கரமடம் ஆன்மீக சேவை செய்வதாக அறிவித்துக் கொண்டாலும், அசல் நோக்கம் வேறு. பல லட்சம் கோடிகளை குவித்து வைத்துக் கொண்டு “”பங்குச் சந்தை முதலீடுகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக தொழில் நடத்தும் சங்கராச்சாரியார்களுக்கு சமூக விரோதிகளோடும் சகல தொடர்பும் உண்டு.

கள்ளச் சந்தை முதலாளிகள் முதல் காப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் வரை, உள்ளூர் கிராம நிர்வாகி முதல் மாநில தலைமை செயலாளர் வரை, வார்டு மெம்பர் முதல் நாட்டின் ஜனாதி பதி வரை அத்தனை பேரையும் தன் காலில் விழவைத்து “”பக்தர்களாக்கி” பலனடையும் “”ஆன் மீக முதலாளிகள்” சட்டத்துக்கும் மேலானவர்கள்; சமமாக கூட அமர மாட்டார்கள். தனிச் சலுகைக்கு உரியவர்கள், நடமாடும் தெய்வங்களிடம்(?) உள்ள கருப்புப் பணம் சகல காரியத்தை சாதிக்கும்.

இதில் புதுச்சேரி நீதிமன்றம் மட்டும் என்ன விதிவிலக்கா? விலைபோன இந்தத் தீர்ப்பைப் பற்றி புதிய ஜனநாயகம் இப்படிப் புலம்புகிறது. “”தன்முன் வைக்கப்படும் தடயங்கள், சாட்சிகள், ஆதாரங்கள், வாதங்களை மட்டுமே வைத்துத் தீர்ப்பு சொல்வதனால் இயந்திரங்களே போதுமே! பல ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் பெறும் பகுத்தறிவற்றக் கைக்கூலிகள் எதற்கு! சட்டத்தின், நீதியின் பொருத்தப்பாடுகளை வாதிட்டு, உண்மைக் குற்றவாளிகளைத் தண்டித்துத் சமூகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவதற்குப் பதில், சட்டத்தை வளைத்தும் நீதியைச் சிதைத்தும் பணம் பார்ப்பதற்கான தொழிலாக மட்டுமே இருக்கு மானால் சட்டத்துறை எதற்கு?

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, குற்றவாளி களை நீதியின் முன் நிறுத்தி, தண்டித்துச் சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பணியைக் காட்டி ஊதியமும், வரம்பற்ற அதிகாரத்தையும், வன்முறைக் கருவிகளை ஏந்தும் ஏகபோக உரிமைகளையும் வசதிகளையும், பெற்றுக் கொண்டு, ஆளும் வர்க்கங்களின் ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாக மாறிச் செல்வாக்கு மிக்க கிரிமினல் குற்றவாளிகளைத் தப்புவிப்பதற்காகவே செயல்படுவதாக இருக்குமானால், எதற்காக இந்தக் காவல் துறை?

ஓர் அநீதியான தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதி அதிலேயே தன் தவறை மூடி மறைத்து விட்டு, எதிர்மறையிலும் மறைமுகமாகவும் சில உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். எதிரிகள் மீதான கொலை, அதற்கான சதிக் குற்றச்சாட்டுகளை போலீசும், அரசுத் தரப்பும் வாதாடியும் நிரூபிக்கத் தவறிவிட்டனர். சட்டம், நீதி, போலீசு மூன்றையும் நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள் தமது அரசியல் ஆதாயங் கருதியே குற்றவாளிகளைத் தப்புவிப்பதும், எதிராளிகளைப் பழி வாங்குவதாகவும், அப்பாவிகளைத் தண்டிப்பதாகவும் செயல் படும்போது அரசாங்கமும் அதற்கு ஜனநாயகம் என்ற பெயரும் எதற்கு?”

இந்தக் கேள்விகள் நியாய உள்ளங்களில் எழவே செய்கிறது. டெல்லியில் 2008-ம் ஆண்டு 14 வயது சிறுமி ஆரு´ கொலை செய்யப்பட்டாள்; வேலைக்காரன் மீது சந்தேகம். மறுநாள் அவனும் சடலமாகக் கிடந்தான். அவனுடைய நண்பர்கள் மீது சந்தேகம் திரும்பியது. தடயங்கள் சாட்சியங்கள் கிடைக்கவில்லை. சந்தேகம் பெற்றோர் மீது திரும்பியது. நிரூபிக்க இயலாததால் வழக்கைக் கை விட, சி.பி.ஐ. அனுமதி கேட்டது. கோர்ட் மறுத்துவிட்டது. சி.பி.ஐ. விசார ணைக் குழு மாறியது. பெற்றோர் மீது பிடி இறுகியது. அவர்கள்தான் கொலை செய்தனர் எனக் கூறி ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

சிறுமிக்கும் மூன்று மடங்கு வயதில் மூத்த அதாவது 45 வயது ஹேம்ராஜுக்கும் (வேலைக் காரன்) தொடர்பு இருப்பதை நேரில் பார்த்த பெற்றோர் ஆத்திரத்தில் செய்த கெளரவ கொலையை நிரூபிக்கும் விதமாக சிறு துரும்பு கூடத் தடயமாக தாக்கல் செய்யப்படவில்லை. பெற்றோர் கேட்ட 14 சாட்சிகள் ஒருவர் கூட அழைக்கப்படவேயில்லை. அவர்கள் கேட்ட பிரேத பரிசோதனை அறிக்கை, கைரேகை ஸ்லைடுகள், உண்மை கண்டறியும் சோதனை முடிவு என எதுவும் இல்லாமல் நியாயத் தீர்ப்பு வழங்கிவிட்டது.
சங்கராச்சாரியார் வழக்கில் எல்லாம் இருந்தும் தீர்ப்பு ஏன் திருத்தப்பட்டது? “”சங்கரராமன் தானே கூலிப்படையை அமர்த்தி தன்னை கொலை செய்யச் சொன்னாரா? என் தந்தை என்ன மனநோயாளியா? ஆண்டவன் நீதிமன்றத்தில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்; இவர்களுக்குத் தண்டனையும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்கிறார் சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா.

உண்மை தான். மெய்யான இறைவனாகிய அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் துல்லியமான தீர்ப்பு வெகு நிச்சயம். இங்கு உண்மை விலை போகலாம். பொய்யர்கள் புகழப் படலாம். சத்தியங்களைச் சாகடிக்க முடியாது. மயக்கமடையச் செய்யலாம். மயக்கம் தெளியும் போது தெரு நாயை விட கேவலப்படபோவது உறுதி. இக்கட்டுரை எழுதும் கடைசி நேரம் வரை தமிழக அரசு, மேல் முறையீடு செய்யவில்லை. எல்லாவற்றிற்கும் கருத்துச் சொல்லும் கருணாநிதியும் இதைக் கண்டு கொள்ளவேயில்லை. இதற்கு எல்லாம் ஒரே காரணம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல். இங்கு எல்லாமே அரசியல் ஆதாயம் கருதியே காய் நகர்த்துகிறார்கள். புரிந்து கொள்ள வேண்டியது மக்கள்தான்.

நெல்லை பேட்டை புனித அந்தோணியார் ஆலய பாதிரியாராக பணியாற்றி வந்த 34 வயது செல்வன், சர்ச்சுக்கு வந்த மாணவி ஒருவருக்கு பாட்டுச் சொல்லித் தருவதாகக் கூறித் தன் பங்களாவுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமானார். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் வெக்க கேடு. எனவே நெல்லை டவுனிலுள்ள ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துச் சென்று கருக் கலைப்பு செய்துள்ளனர்.
மாணவியின் வயிற்றில் இருந்த ஐந்து மாத ஆண் சிசுவை பேட்டை ஆதம் நகர் அருகே உள்ள காட்டில் புதைத்துள்ளனர். விஷயம் வெளியே தெரிய, வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாதிரியார் கைது செய்யப்பட்டு விட்டார். இந்த செய்தி எல்லா நாள் இதழ்களிலும் வந்துள்ளது. சங்கராச்சாரியார்கள், பாதிரியார்கள் விஷயத்தில் முக்கியமானது.

“பிரம்மச்சரியம்”. இல்வாழ்க்கையைத் துறந்து “”துறவு” வாழ்வால் மட்டுமே முக்த்தி பெற முடியும் என்ற போலியான நம்பிக்கைப் பொல்லாத வேலைகளைச் செய்யத் தூண்டுகிறது. சந்நியாசிகளாகத் தங்களை காட்டிக் கொண்டு சரச சல்லாபங்களில் ஈடுபடுவது மிகப் பெரிய நம்பிக்கை மோசடி. இதை இஸ்லாம் 1435 வருடங்களுக்கு முன்னாலே சொல்லி விட்டது இப்படி.

“”துறவறத்தை நாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை. அவர்களே கடமையாக்கி கொண்டார்கள். அதைப் பேண வேண்டிய விதத்தில் பேணவில்லை”. அல்குர்ஆன் 57:27. பேண முடியாது என்பது மனித இயல்பு; முடியும் என்பவன் பொய்யன். பொய்யர்களால் நம்பிக்கை மோசம் போய் பொருளாதாரமும் வீண் விரையம் ஆகும். இறை நம்பிக்கையாளர்களே!
உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை ஏற்று அவன் தந்த வாழ்க்கையை இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழி முறையைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. இறைப் பொருத்தத்தை மட்டுமே பெற்றுத்தரும். சிந்தியுங்கள். இறுதி இறைத் தூதர்(ஸல்) இப்படிச் சொன்னார்கள்.

“திருமணம் எனது வழிமுறை. என் வழி முறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” நபிவழிச் செய்தியாளர் : அனஸ் பின் மாலிக்(ரழி) புகாரீ 5063/5 பாகம்.

பல திருமணங்களை முடித்த தூதர்(ஸல்) அவர்களைப் போல் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்து, மக்களுக்கு ஏன் வழிகாட்ட முடியாது? அவர்களின் வாழ்க்கையில் எந்தப் பக்கத்திலும் குறை என்பதே இல்லை. பல ஆயிரம் கோடி மக்கள் அந்த மாமனிதரின் வாழ்க்கையை அனுதினமும் பின்பற்றி அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுக் கொண்டிருக்கும் சமூகத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். இஸ்லாம் ஒன்றே இறுதி வெற்றியைத் தரும். யா அல்லாஹ்! எங்களோடு வாழும் சகோதர சமுதாயத்திற்கு இதற்கான வழியை இலகுவாக் கித்தா! ஆமீன்!

இன்றைய தினம் (மனித குலத்தினராகிய) உங்களுக்காக உங்களின் மார்க்கத்தைப் பூர்த்தியாக்கி விட்டேன். உங்கள் மீது என் அருட்கொடை யையும் பூர்த்தியாக்கிவிட்டேன். உங்களுக்காக (சாந்தி மார்க்கமான) இஸ்லாத்தை உங்களின் மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (குர்ஆன்:5:3)

(சாந்தி மார்க்கமான) இஸ்லாம் மட்டுமே (மனித குல இறைவனான) அல்லாஹ்விடம் மார்க்கமாகும். (குர்ஆன் : 3:19)

(சாந்தி மார்க்கமான) இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஒருபோதும் ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பிற்குள்ளானோரில் இருப்பார். (குர்ஆன் : 3:85)

Previous post:

Next post: