ஐயம் : மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும், நீர் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கிவிட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே ஊர் தலைவர் இல்லையா? செயலாளர், பொருளாளர் இல்லையா? நீர் எதற்கு புதிய தலைவர் ஆகிறீர்? அவர்களுடன் இருந்தே நன்மையைக் கூறி தீமையை எதிர்க்கக் கூடாதா? அவர்கள் திருந்திக் கொண்டுதானே இருக்கிறார்கள்? திருந்தியவருக்கு ஒரு தலைவர், திருந்தாதவருக்கு ஒரு தலைவரா? பிரிவினை செய்யாதே என மற்றவர்களுக்குக் கூறிவிட்டு, நீர் பிரிவினை செய்வதில் என்ன நியாயம் இருக் கிறது? அல்அமீன், மெட்ரோ, ஃபுட்வேர், திருவனந்தபுரம்.
தெளிவு : உம்மத்தில் பிரிவினை இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணம் தங்களிடம் இருப்பதால், தாங்கள் இதுபோன்ற வினாக்களை எழுப்புகிறீர்கள். உயரிய எண்ணம் கொண்டுள்ள தங்களுக்கு அல்லாஹ் நேரான வழியை விளங்கிக் கொள்ளச் செய்வானாக.
தாங்கள் ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற பெயரில் பிரிவினை செய்வதாக தாங்கள் எம்மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது உங்களின் தவறான எண்ணம். இந்தத் தவறான எண்ணத்தால் மென்மேலும் தவறாகவே சிந்திக்கிறீர்கள்.
பிற இயக்கத்தினரைப் போல் எமது எண்ணத்தில் சுயமாக சிந்தித்து “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் ஜமாஅத்தை நாமாக ஆரம்பிக்கவில்லை. முஸ்லிம்கள் அனைவருமே ஒருங்கி ணைந்து “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் ஒரே ஜமாஅத்தாகச் செயல்பட வேண்டும் என, அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உம்மத்திற்கு உபதேசித்துள்ளார்கள். அந்த உபதேசத்தைப் பல அந்நஜாத் இதழ்களின் பின்பக்க அட்டையில் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஹதீஃதில் பார்த்துக் கொள்ளுங்கள்.
எங்கள் ஊரிலும் சரி, உங்கள் ஊரிலும் சரி மற்ற எல்லா ஊர்களிலும் சரி, இருக்கின்ற ஜமாஅத்துக்கள் அனைத்துமே நபி(ஸல்) அவர்கள் கூறிய “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற பெயரில் இல்லாமல், வேறு பற்பல பெயர்களைச் சூட்டிக் கொண்டு தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. அவர்களில் மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள், சுன்னத் வல் ஜமாஅத், பலதரப்பட்ட தரீக்காவினர்.
ஜமாஅத்தே இஸ்லாமிய SIM என இன்னும் பல பெயர்களில் பிரிவுப் பெயர்களில் நீண்ட காலமாக செயல்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் ஜமாஅத் இல்லையா? தலைவர் இல்லையா? செயலாளர் இல்லையா? என நீங்கள் அவர்களைக் கேட்டதில்லை. மேலும், மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது எனக் கூறிக்கொள்ளும், ஹனஃபீ, ஷாபீ என சொல்லாதே என்றும் உங்களிடம் உபதேசம் செய்துவிட்டு, தாங்கள் மட்டும் அஹ்லே ஹதீஸ் ஜமாஅத், முஜாஹித் ஜமாஅத், ஸலஃபீ ஜமாஅத், ஜமியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) ஜமாஅத், ததஜ, இதஜ என உம்மத்தைப் பிரித்துக் கொண்டவர்களிடமும் தாங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்ட தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் உபதேசத்திற்கிணங்க, “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என நாம் கூறுவதில் தாங்கள் குறை காண்கிறீர்கள்.
தாங்கள் சுட்டிக் காட்டுகின்ற ஜமாஅத்களின் தலைவர்களும், செயலாளர்களும், பொருளாளர்களும் ஆக அனைவருமே, அவர்கள் நடத்தி வைக்கின்ற திருமணங்களில், நிக்காஹ் ரிஜிஸ்ட ரில் கூட (தஃப்தர்) மணமகன், மணமகள், வலீ, 2 சாட்சிகள் என ஒவ்வொருவரையும் முஸ்லிம் என்று மட்டும் பதிவு செய்யாமல், ஹனஃபி, ஷாபிஈ என்றும் பதிவு செய்கின்றனர். “”முஸ்லிம்” என கூறுவது எவ்வளவு அழகாய் இருக்கிறது. முஸ்லிம் சகோதரர்களில் ஒருவரை ஹனஃபி என்றும், மற்றவரை ஷாஃபிஈ என்றும் அதுபோல் ததஜ, இதஜ என்றும் கூறும்போது வேறுபாடு தெரிகிறதவல்லவா? முஸ்லிம்களைப் பிரித்தாளும் சதிதானே இது? இதற்கு திருகுர்ஆனிலும், நபி வழியிலும் எள்ளளவும் ஆதாரம் கிடையாது.
மத்ஹபுகள் இஸ்லாத்தில் கிடையாது எனக் கூறுபவர்களும், தங்களது நிக்காஹ் ரிஜிஸ்டரை “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என அச்சிடாமல் JAQH, அஹ்லே ஹதீஃத்…. தவ்ஹீத் ஜமாஅத் என்றல்லவா அச்சிட்டிருக்கிறார்கள். (ஒரு சிலர் இப்படி செய்யாவிட்டாலும், அவர்கள் கூட அந்த இயக்கங்களின் ஆதார வாளர்களாகத்தானே இருக்கிறார்கள்)
ஜமாஅத்தார்கள் திருந்திக் கொண்டு தானே இருக்கிறார்கள் என தாங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் தெளிவாக இருந்தும் கூட பல பிரிவினைப் பெயர்களில் நூற்றாண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருப்பது, அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் திருந்துவார்கள் என நம்பிக்கை வைக்கலாம். அதற்காக அவர்களுடனிருந்து கொண்டு அவர்களைப் போல செயல்பட முடியுமா? அப்படிப் பார்த்தால், இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டாமே! கிருத்துவத்திலிருந்து கொண்டே இஸ்லாத்தைப் போதித்திருக்கலாம். கிறித்தவம் அறிமுகப் படுத்தப்பட்டிருக்க வேண்டாமே. யூத மதத்திலிருந்து கொண்டே கிறித்துவத்தைப் போதித்திருக்கலாம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படிப் பட்ட அனைத்துப் பிரிவுகளை விட்டும் விலகிவிடு என்பது நபி(ஸல்) அவர்களின் நேரடிக் கட்டளை என்பதையும் மேற்படி ஹதீஃத் எச்சரிக்கிறது.
ஜமாஅத் அல் முஸ்லிமீன் என்பது திருந்திய வர்களுக்கென்றோ, திருந்தாதவர்களுக்கென்றோ தனித்தனி ஜமாஅத் அல்ல, அனைத்து முஸ்லிம்களையும் குர்ஆன், ஹதீஃத் இரண்டின் அடிப்படையில் மட்டுமே ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு ஜமாஅத் ஆகும். நாம் உம்மத்தைப் பிரிக்க வில்லை. பல பிரிவுகளாக இருக்கும் உம்மத் தினர் நபி(ஸல்) அவர்கள் காட்டிய “”ஜமாஅத் அல்முஸ்லிமீனில்” ஒருங்கிணைந்து விட்டாலோ அல்லது ஒருங்கிணைய விருப்பமுள்ள ஒரு சில ஜமாஅத்தினர் மட்டும் இணைந்துவிட்டாலோ அல்லது குர்ஆனையும், ஹதீஃதையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் பெயரில் உலகில் எங்கேனும் ஒரு மூலையில் இருப்பது எமக்குத் தெரியவந்தாலும் கூட தகுதியான ஒருவரை அமீராக நியமித்து அவரின் கீழ் செயல் பட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். நாம் தான் அமீர் என எப்போதும் நாம் மார்தட்டிக் கொண்டதில்லை. ஜமாஅத்துல் முஸ்லிமீனை அரசில் பதிவு செய்து உரிமை கொண்டாடவும் இல்லை.
நீங்கள் கூறியுள்ள அனைத்தும் ஜமாஅத்களும் மற்ற முஸ்லிமிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் குறிக்கோளுடன் இவர் களாக வைத்துக் கொண்ட பெயர்களாகும். எனவே இவை அனைத்தையும் விட்டும் வெளி யேறி, முஸ்லிம்கள் அனைவரையும் ஒருங் கிணைத்துக் காட்டும் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடத்திக் காட்டியதும், அதனையே பற்றிப் பிடிக்கக் கட்டளையிட்டதுமான ஜமாஅத்தாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் விவரங்க ளுக்கு மற்றொரு சகோதரர் விடுத்துள்ள வினா வையும், அதற்கான விடையையும் படித்துப் பாருங்கள்.
ஐயம் : “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஹதீஃதின் விளக்கம் முழுமையாகப் புரியவில்லை. விளக்கவும். இயக்கம், கழகம் போன்றவற்றை விட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்பது போல் உள்ளது. விளக்கம் தரவும். அப்படியானால் தமுமுக, ததஜ, இதஜ இஸ்லாமிய அமைப்புகளான S.I.O. S.I.M. IIM. etc.. இஸ்லாமிய அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் குறித்து விளக்கவும். இவற்றிலிருந்து அந்நஜாத் எவ்வாறு வேறுபடுகிறது, விளக்கவும். பு.ரசூலுதீன், புரசைவாக்கம், சென்னை.
தெளிவு : “விளக்கம் தரவும்” என கேட்டுள்ள தாங்கள், இயக்கம், கழகம் இவைகளை விட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என சரியாகவே விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அரசியலுக்கென ஒரு இஸ்லாமிய இயக்கம், பிறருக்கு உதவி செய்வ தெற்கென சில இஸ்லாமிய அமைப்புகள், இப்படி யாக உம்மத்தை தனித் தனியாக கூறு போட வேண்டிய அவசியம் இல்லை. இப்படிக் கூறு போடுவதால் யார் அதிக உதவிகள் செய்தது? யார் மக்களின் உரிமைகளை அதிகமாகப் பெற்றுத் தந்தார்கள்? என உம்மத்துக்குள்ளேயே யார் பெரியவன் என்ற போட்டிதான் ஏற்படும். சகோதர முஸ்லிம்களை, எதிரிகளாக உருவாக் கும் முயற்சிகளே இவை என்பதை நடைமுறையில் கண்டு வருகின்றோம்.
அனைத்து நல்லதையும் உள்ளடக்கியதே இஸ்லாம், “”எந்த நல்லதின் மீதும் உங்களை நான் ஏவாமல் விட்டதில்லை. (அதே போல) எந்த தீயதை விட்டும் உங்களை நான் தடுக்காமல் விட்ட தில்லை” என நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத் தியது இஸ்லாத்தில் இருந்து கொண்டேதானே ஒழிய, அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
எங்களின் அமைப்புக்கள், அனைத்து நல்லதை உள்ளடக்கியதுதான் என சில அமைப்புகள் கூறிக் கொண்டாலும், பெயர் வைத்து செயல்படத் தேவையே இல்லை. நிர்வாக வசதிக்காக பெயரிட்டுக் கொள்ளலாம் என வாதிப்பவர்கள், அழகிய முன்மாதிரி நபி(ஸல்) அவர்களிடம் மட்டுமே இருப்பதாக அல்லாஹ் கூறி இருப்பதால் (அல்குர்ஆன் 33:21) தமது இறுதி காலத்திற்குள் இஸ்லாம் உலகின் மூலை முடுக்குகளி லெல்லாம் பரவ ஆரம்பித்து மிகப் பெரிய நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், தமது நிர்வாக வசதிக்காக ஒரு பெயர் சூட்டிக் கொள்ளாததை நினைவு கூர்ந்து, நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரியின் அழகைக் கண்டு திருப்தி கொண்டு, தம்மை திருத்திக் கொள் வார்களாக; குர்ஆனையும், ஹதீஃதையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என உபதேசிப்பவர் கள், உபதேசம் பிறருக்குத்தான் நமக்கல்ல என்ற ரீதியில் செயல்பட வேண்டாம் எனக் கூறிக் கொள்கிறோம்.
நடைமுறையில் நாம் கண்டு அனுபவித்து வருவது என்ன?
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தராத பெயரில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அவரவர் பிரிவுகளின் பெயராலேயே பிளவுபட்டு பிரிந்து விட்டனர். தத்தமது பிரிவினர் கூறுவது தான் சரி என தக்லீது செய்ய முற்படுகின்றனர். “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயரில் செயல்பட்டால், குர்ஆன் என்ன சொல்கிறது. ஹதீஃத் என்ன சொல்கிறது என்று, பிரச்சினைகளை குர்ஆன், ஹதீஃதுடன் அணுகுவோம். பிரிவுப் பெயர்களில் செயல்படும் போது, நமது தலைவர் சொல்வது தான் சரி என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிரிவினரிடம் குறைகள் காண நேரிட்டு வருகிறது. இதனால் சண்டை, சச்சரவு, அடிதடி, காழ்ப்புணர்ச்சி அனைத்தும், சகோதரர்களாக வாழவேண்டிய முஸ்லிம்களிடம் ஏற்பட்டுவிட்டது. மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அல்ல இவை.
எல்லாவற்றிற்குமே குர்ஆனும், ஹதீஃதும் தான் சரியான தீர்வைத் தருகின்றன எனக் கூறிக் கொண்டே இரு வெவ்வேறு அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகம், எந்த இயக்கத்திற்கு என்ற பிரச்சனையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, நேரம், பொருள் இரு அமைப்பினர்களுக்கிடையே வீண் விரயம் செய்து, அரசு அதிகாரிகளின் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த நிலையை கண்டு வருகிறோம். யார் பெரியவன் என ஒரு போராட்டமே நடந்து முடிந்தது. தங்கள் பிரச்சனைகளுக்கு குர்ஆனும், ஹதீஃதும் வழிகாட்டாதது போல் இவர்கள் நடந்து கொள்கின்றனர். பல இடங்களில் இவர்களுக்குள்ளேயே போட்டி ஜும்ஆ நடத்தும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
குர்ஆனையும், ஹதீஃதையும் பின்பற்றாத தால் ஒருவர் மற்றவரின் மீது குறை கண்டு எட்டப்பன் வேலை செய்து காட்டிக் கொடுத்தல், இழிசொற்களால் விமர்சித்தல் போன்ற நாலாந்தர பணிகளில் மூழ்கி விடுகின்றனர்.
“”நிச்சயமாக உங்களின் இந்த உம்மத் ஒரே உம்மத்துதான்” என படைத்தவன் கட்டளையிட்டு விட்ட பின்பும், உம்மத்தில் தனித்தனி ஜமாஅத் துக்கள் முஸ்லிம்களுக்குத் தேவையா என சிந்தனை செய்யுங்கள்.
“”எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்து, “”நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?” என அல்லாஹ் 41:33வது ஆயத்தில் அறிவுறுத்துவதைப் பல முறைப் படித்து, சிந்தித் துணர்ந்து, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி “”ஜமாஅத் அல் முஸ்லிமீனில்” (முஸ்லிம்களின் ஜமாஅத்) செயல்படுவோமாக.
ஐயம்: கடல் நீரில் ஒளூ செய்யலாமா? தொழும் போது தொழும் இடத்தில் நமக்கு முன்பாக மூக்குக் கண்ணாடி, லெட்டர், பை, கர்சிப் ஆகிய வைகள் வைப்பது சரியா?
பு.ரசூல்தீன், புரசைவாக்கம், சென்னை.
தெளிவு: கடல் நீரில் தாராளமாக ஒளூ செய்யலாம். ஒளூ செய்யலாம் என்பதற்கான ஹதீஃத் ஆதாரங்களை ஏற்கனவே அந்நஜாத்தில் வெளியிட்டிருக்கிறோம். தாங்கள் கூறிய பொருட்களை தொழும் இடத்தில் நமக்கு முன்பாக நாம் வைத்துக் கொண்டு தொழுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.
ஐயம்: பள்ளியில் அவரது விருப்பப்படி தொழ ஒருவரை அனுமதிக்காவிட்டால், அதற்காக அவர் நீதிமன்றத்தை அணுகினால் குழப்பம் ஏற்படாதா? அப்படி அனுமதிக்கப்படாதவர் வீட்டில் ஜமாஅத்தாகவோ அல்லது தனித்தோ தொழுவது சரியா?
பு.ரசூல்தீன், புரசைவாக்கம், சென்னை.
தெளிவு: அவரவர் விருப்பப்படியெல்லாம், ஒருவர் பள்ளிவாசலிலோ அல்லது வேறு எங்குமோ இறைவனைத் தொழக்கூடாது. நீங்கள் கூறுகின்ற ஒருவர் தொழுத விதம் நபி(ஸல்) அவர்களின் நடைமுறையில் உள்ளதாக இருக்குமேயானால், அவரைத் தடுத்தவர்களிடம் பேசிப் பார்த்து மீண்டும் பள்ளியிலேயே தொழ முயற்சிக்கலாம். பேசிப் பார்ப்பதில் பலன் ஏற்படாது எனத் தெரிந்தால், தடுத்தவர்களிடம் நெருக்கமானவர்கள் மூலமாக பேசிப் பார்க்கலாம். தடுக்கப்பட்டவருக்குத் தோன்றும் இது போன்ற முயற்சிகளை அவரே மேற்கொள்ளலாம். இந்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்காவிட்டாலும், அல்லது முயற்சிகள் மேற்கொள்ளாமலேயே கூட, தடுக்கப் பட்டவர் நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு. ஏனெனில் இறையில்லங்கள் இறைவனைத் தொழுவதற்காகத்தானே ஒழிய, தொழ வருபவர்கள் அனுமதிக்கப்படாத இடங்கள் அல்ல.
“”அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வைத் துதி செய்வதைத் தடுத்து நிறுத்துப வனை விட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்” என்று அல்லாஹ் 2:114வது இறை வசனத்தில் தெரிவித்துள்ளதால், எந்த ஒரு முஸ்லிமும் இன்னொருவரைத் தடுப்பதற்கு அதிகாரம் இல்லை. இது சுன்னத் வல் ஜமாஅத் பள்ளி எனக் கூறுபவர்கள், அவர்கள் பின்பற்றும் மத்ஹபுகளுக்கான ஆதாரங்களை குர்ஆனிலிருந்து எடுத்து நீதிமன்றத்தில் வைக்கத் தவறினால், அவர்கள் குர்ஆனைப் பின்பற்றாதவர்கள் என்பது தெளிவாகிவிடும். எனவே நீதிமன்றத்தை அணுகுவது சரியான செயல்தான். மேலும் ஒருவரது உரிமையை பெறுவதற்கு நமது நாட்டில் இதுவே சரியான வழியாகும்.
நீதிமன்றத்தை அணுகுவதால் குழப்பம் ஏற்படாதா என வினா தொடுத்துள்ளீர்கள். அல்லாஹ்வைத் தொழும் ஒருவரை தடுக்கும் போது மட்டும் குழப்பம் ஏற்படாதா என ஏன் உங்களால் சிந்திக்க முடியவில்லை? குழப்பத்தை ஆரம்பித்து வைப்பவர்களே அவர்கள் தானே, நீதிமன்றம் செல்லும் பட்சத்தில், திருகுர் ஆனையும், ஹதீஃத்களையும் பின்பற்றும் முஸ்லிம்கள் யார் என்பது தெரிந்து விடும். பள்ளியில் தொழ அனுமதிக்கப்படாதவர், அனுமதி பெற முயல வேண்டும். முயற்சிகள் பலனளிக்கா விட்டால் மட்டுமே வீட்டில் ஜமாஅத்தாக தொழலாம்.