சத்தியத்தில் இருப்பவர்கள் மிகமிகச் சிறுபான்மையினரே!

in 2014 மே,பொதுவானவை

அபூ ஃபாத்திமா

ஒரே ஆணிலிருந்தும் ஒரே பெண்ணிலிருந்தும் ஆரம்பமான மனித வர்க்கம் இன்றுவரை பல்லாயிரம் கோடிகளாகப் பல்கிப் பெருகி விட்டது. மாண்டவர்கள் போக இன்று இவ்வுலகில் எட்டு நூறு கோடிக்கும் மேல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் மிகப் பெரும் பான்மையினர் மனித இனத்தில் பிறந்திருந்தாலும், பகுத்தறிவுடன் படைக்கப்பட்டிருந்தாலும், பகுத்தறிவற்ற மிருகங்களைவிட கேடுகெட்ட வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இழிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். (பார்க்க : 7:175-179)

மாற்றப்படாத, திருத்தப்படாத, மனிதக் கற்பனைகள் நுழைக்கப்படாத தூய்மையான நெறிநூல்கள் இல்லாத ஹிந்துக்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் தங்களின் செயல்களை உரைத்துப் பார்க்கத் தூய்மையான நெறிநூல் இல்லை. ஆனால் ஏகன் இறைவனால் இறுதி நெறிநூலாக இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன், அது இறக்கப்பட்ட சுமார் 1435 ஆண்டுகள் ஆகியும் ஒரு புள்ளி கூட மாற்றப்பட முடியாத நிலையில் பாதுகாக்கப்பட்டு இன்று முஸ்லிம்களிடையே காணப்படுகிறது. ஆயினும் அதை இறைவனின் இறுதி நெறிநூலாக ஒப்புக்கொண்டு ஏற்றிருக்கும் முஸ்லிம் களில் மிகப் பெரும்பான்மையினர் அதன் போதனைப்படி நடப்பதாக இல்லை. மாறாக இமாம்கள், முன்னோர்கள், மூதாதையர்கள், மவ்லவிகள் பேரால் கற்பனையாகப் புனையப்பட்டக் கட்டுக்கதைகளையே வேதவாக்காகப் பக்தியோடு எடுத்துச் செயல்படுகிறார்கள். அதனால் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றி வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றனர். நரகின் விறகுக் கட்டைகளாகத் தங்களை ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். (2:24)

முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் அப்படித்தான் செயல்படுகின்றனர். அதுவே நேர்வழி என்று நம்பிக் கொண்டு, அந்தப் பெரும்பான்மையினர் செல்லும் வழிகேட்டையே நேர்வழியாகக் கொண்டு செயல்படுகின்றனர். கூட்டம் குறைவாக இருந்தால், அல்லது கூட்டமே இல்லாதிருந்தால் அது வழிகேடு என்று நம்புகின்றனர். 20.6.2004 அன்று முத்துப்பேட்டையில் ஒப்பந்த மேடையை விவாத-விதண்டாவாத மேடையாக்கி, ஒப்பந்தமோ, விவாதமோ நடைபெறாமல் தடுப்பதற்கென்றே பீ.ஜை. அனுப்பும் கலீல் ரசூல் இப்படிப்பட்ட சிந்தனையிலேயே தனது விதண்டாவாதங்களை எடுத்து வைத்தார். எனவே மிகமிகச் சிறுபான்மையினர்தான், மக்களிடையே செல்வாக்குப் பெறாதவர்கள்தான் நேர் வழியில் இருப்பார்கள் என்பதை குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் விளங்கும் கட்டாயம் ஏற்படுகிறது.

“மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும், மனிதர்களையும் ஆக அனைவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துவிட்டது. அல்குர்ஆன் : 32:13 (மேலும் பார்க்க 11:118,119)

“தன்னுடைய இந்த வாக்கு நிச்சயமாக நிறைவேறியே தீரும்” என அல்லாஹ் அல்குர்ஆனின் பிரிதொரு இடத்தில் உறுதிப்படுத்துகிறான். பெரும்பான்மைக்கு மதிப்பே இல்லை. அவர்கள் நரகிற்குரியவர்களே என அல்குர்ஆனில் சுமார் 71க்கும் அதிகமான இடங்களில் அல் லாஹ் தெளிவாக அறிவித்துள்ளான். அவற்றில் சில :

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால், அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். அல்குர்ஆன் : 6:116

(நயவஞ்சகர்களே!) உங்களுடைய நிலை உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலையை ஒத்திருக்கிறது; அவர்கள் உங்களை விட வலிமை மிக்கவர்களாகவும், செல்வங்களிலும், மக்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். (இவ்வுலகில்) தங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களைக் கொண்டு அவர்கள் சுகமடைந்தார்கள். உங்களுக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்குரிய பாக்கியங்களால் சுகம் பெற்றது போன்று, நீங்களும் உங்களுக்குக் கிடைத்த பாக்கியங்களால் சுகம் பெற்றீர்கள். அவர்கள் (வீண் விவாதங்களில்) மூழ்கிக் கிடந்தவாரே நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இம்மையிலும் மறுமையிலும் அவர்க ளுடைய செயல்கள் யாவும் (பலனில்லாமல்) அழிந்து விட்டன. அவர்கள்தான் நஷ்டவாளிகள். அல்குர்ஆன் : 9:69

இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. அல்குர்ஆன் :40:82

மக்களில் மிகப் பெரும்பாலோர் அறியாதவர்களாகவும், மூடர்களாகவும், விளங்காதவர்களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும், வழிகேடர்களாகவுமே இருப்பார்கள் என்று அல்குர்ஆன் பல இடங்களில் தெளிவு படுத்துகிறது. ஆக மிகமிகச் சொற்பமானவர்களே சத்தியத்தை விளங்கி நேர்வழியில் இருப்பார்கள்.

இதில் இன்னும் ஒரு பேருண்மை என்னவென்றால் எந்த அளவு வழிகேடு அதிகரிக்கிறதோ அந்த அளவு மக்கள் கூட்டமும் அதிகரிக்கும். (பார்க்க 6:116, 17:73-75) இதற்கு ஆதாரம் தேடி வேறு எங்கும் போக வேண்டியதில்லை. தவ்ஹீத் மவ்லவி புரோகிதர்களிடையே இருக்கிறது. 1986ல் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று முழங்கிக் கொண்டு, முகல்லிது புரோகிதர்களைக் கடுமையாகச் சாடிக்கொண்டு, எங்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கம் இல்லை; நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை போன்ற முழக்கங்களோடு சத்திய பிரசார பணி செய்தபோது நாடு தழுவிய ஓர் எழுச்சி ஏற்பட்டாலும், மக்கள் நஜாத் கூட்டம், நஜாத்காரன் என்று பேசிக்கொண்டாலும், சத்திய போதனையை ஏற்றுக் கொண்டவர்களோ சொற்பமானவர்கள் தான். தாங்கள் எதிர்பார்த்த உலக ஆதாயம் கிடைக்கவில்லை. மக்கள் அதிகமாகச் சேரவில்லை என்பதைக் கண்டவுடன், கூட்டத்தைச் சேர்க்க, எங்களுக்கு “இஸ்லாம்’ அல்லாத இயக்கமில்லை என்று முழக்கமிட்டவர்கள், அந்நஜாத்திலிருந்து வெளியேறி பிளேட்டை மாற்றி வேறு வேறு இயக்கங்களும் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டவையே என வழிகேட்டைத் துவக்கி வைத்தனர். புரோகிதர்களை சப்ளை செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவு தலைவர், செயலர், பொருளாளர் என பதவி சுகத்தை ஆசை வைத்த ஒரு கூட்டம் மளமளவென சேர்ந்தது.

கூட்டம் முன்பைவிட, அதிகமானது; பணமும் லட்சக்கணக்கில் சேர ஆரம்பித்தது. ஆயினும் அதுவும் வழிகேட்டின் பரிணாம அளவுக்கு உட்பட்டே குறைவாக இருந்தது. அந்தக் கூட்டத்தைக் கொண்டும் தவ்ஹீத் மவ்லவிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை. காலம் சென்ற பழனி பாபா, நாஸர் மதானி போன்றோரின் அரசியல் ஆர்ப்பாட்டங்கள் வாலிபர்களைச் சுண்டி இழுத்ததைக் கண்டார்கள். கூட்டம் சேர்க்க இதுதான் வழி என்று முடிவு செய்து இன்னும் வழிகேட்டை அதிகப்படுத்தினார்கள். இங்கும் வழிகேட்டின் பரிணாமத்திற்கு ஏற்ப கூட்டமும் அதிகரித்தது. லட்சத்தில் புரண்டவர்கள், கோடியில் புரள ஆரம்பித்தார்கள்.

தவ்ஹீத் மவ்லவிகளால் உருவாக்கப்பட்ட அரசியல் ஆர்வளர்கள், அதற்கு மேலும் வழிகேட்டில் சென்று மேலும் அதிகக் கூட்டத்தையும், பட்டம் பதவி சுகங்களையும் காண ஆசைப்பட்டார்கள். தலைக்கு மேல் வெள்ளம் போனால் சான் என்ன? முழம் என்ன? என நினைத்து அரசியலில் முற்றிலும் முங்கிக் குளிக்க ஆசைப்பட்டார்கள். ஆனால் தவ்ஹீத் மவ்லவிக்கோ ஏதோ நெருடல்; “”தேர்தலில் களப்பணி ஆற்றினால் ஈமான் போய்விடும்” என்ற தோரணையில் ஏகத்துவத்தில் 2004-ல் தலையங்கம் எழுதினார். விளைவு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்களே தொப்பெனக் கீழே போட்டு விட்டார்கள். வெளியேற்றவும் பட்டார். அந்த ஆத்திரத்தை இன்றளவும் வெளிப்படுத்துகிறார். தன்னை வைத்துத் தான் இயக்கம்; தனக்காகவே கூட்டம் சேர்கிறது என்று தப்புக்கணக்குப் போட்டவர், அது தனக்குரிய கூட்டம் இல்லை; தான் போதிக்கும் வழிகேட்டுக் கொள்கைக்கே மக்களின் ஆதரவு என்பதை அப்போதாவது புரிந்தாரோ இல்லையோ, ஆயினும் அது தான் உண்மை. “தேர்தலில் களப்பணி ஆற்றினால் ஈமான் போய்விடும்” என்று தலையங்கம் தீட்டியதற்கு மாறாக “”தேர்தலில் களப்பணி ஆற்றினால் ஈமான் உறுதிப்படும்” அதுவே இன்றைய “”ஜிஹாத்” என தனது வார்த்தை ஜாலங்களாலும், மயக்கு மொழிகளாலும் தவ்ஹீத் மவ்லவி நியாயப்படுத்தி எழுதி இருந்தால் மக்களின் ஆதரவு இன்னும் பல மடங்கு ஆகி இருக்கும். குட்டி குட்டி கட்சிகளெல்லாம் வந்து இணைந்திருப்பார்கள். தவ்ஹீத் மவ்லவியின் புகழ் இன்னும் மேலோங்கி இருக்கும். அந்த உண்மையைப் பின்னர் புரிந்து கொண்டு மற்றவர்களை விடத் தீவிரமாக அரசியலில் முங்கிக் குளிக்கிறார். தகுதியற்றப் பெரும் பாவிகளுக்கெல்லாம் ஆதரவு திரட்டிப் பிரசாரம் செய்கிறார். அதற்கேற்றவாறு கூட்டமும் சேர்ந்துள்ளது.

அதற்கு மேலும் அரசியல் கட்சிகளின் நடைமுறைகளான ஆட்டம், பாட்டம், களியாட்டம், குடியாட்டம் இவற்றையும் தனது வாதத் திறமையால், பேச்சாற்றலால், மயக்கு மொழிகளால் குர்ஆன், ஹதீஃதை வளைத்துத் திரித்து நியாயப்படுத்தினால், அப்பப்பா மக்கள் கூட்டத்திற்கு கேட்கவா வேண்டும். தவ்ஹீது மவ்லவி தானைத் தலைவர் மட்டுமல்ல; முதுபெரும் ராஜதந்திரியாகவும், அரசியல் வித்தகராகவும் ஆகலாம். ஆக இப்படி வழிகேடு எந்த அளவு கொடிகட்டிப் பறக்கிறதோ அந்த அளவு மக்கள் கூட்டமும் அலை மோதும். பேர், புகழ், பட்டம், பதவி, பணம் காசு என தாராளமாகவே கிடைக்கும். இவற்றையே அல்குர்ஆன் 9:69, 40:82-85 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மற்றபடி இறைவனது கட்டளைகளில் கடுகளவும் பிசகாது, உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பவர்களை நோக்கி மக்கள் கூட்டம் வரவே வராது. விரண்டோடத்தான் செய்வார்கள். எண்ணற்ற நபிமார்கள் நாளை மறுமையில் விரல்விட்டு என்னும் அளவில் மிகச் சொற்ப மக்களுடனேயே சுவர்க்கம் புகுவார்கள். வேறு சில நபிமார்கள் தன்னைத் தொடர்ந்து ஒரு நபரும் வராத நிலையில் தன்னந்தனியாக சுவர்க்கம் நுழைவார்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் உயரிய போதனை, நமக்கு எதை உணர்த்துகிறது. (புகாரீ 5705, 5752) அதுதான் நேர் வழியில் சென்றால் கூட்டம் சேராது. வழிகேடு அதிகரிக்க அதிகரிக்க மக்கள் கூட்டமும், பேர் புகழும், காசு பணம் செல்வாக்கும் அதிகரிக்கும் என்ற பேருண்மைகளையே உணர்த்துகிறது. உண்மை விசுவாசிகளே கூட்டத்தைக் கண்டு மயங்காதீர்கள். குர்ஆன், ஹதீஃத் போதனைகளில் கடுகளவும் தவறாமல் அப்படியே கடைபிடித்து நேர் வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழைய முற்படுங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: