எங்கள் கல்யாணம்! தவ்ஹீத் கல்யாணம்!

in 2014 செப்டம்பர்

பள்ளியில் சுன்னத் மண்டபத்தில் (பித்அத்) எங்கள் கல்யாணம்! தவ்ஹீத் கல்யாணம்!

M. ஜமாலுத்தீன், நாகர்கோவில், 98949324

மார்டன் தவ்ஹீத்வாதிகளின் பேஷன் ஷோ கல்யாணம் பரவலாக அதுவும் அதிகமாக நடை பெறுகிறது. உலகத்திற்கு முன்மாதிரியாக திகழ வேண்டிய இஸ்லாமிய சமூகம் இன்று கலாச்சார சீரழிவை நோக்கி அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. திருமணம் செய்கிறோம் என்ற பெயரில் அனாச்சாரத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இதில் சுன்னத் ஜமாஅத்தும் சரி தவ்ஹீத் ஜமாஅத்தும் சரி யாரும் குறைந்தவர்கள் கிடையாது. சுன்னத்தான ஒரு திருமணத்தை அதன் முறைப்படி நடத்த அதாவது இஸ்லாம் காட்டித் தந்த வழி முறைப்படி நடத்த யாருக்கும் திராணியில்லை.

திருமணம் பேசப்பட்ட உடனே இதுதான் பெண், இதுதான் மாப்பிள்ளை என முடிவானதும் ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் திருமணத் தேதியை தள்ளிப் போடுகிறார்கள். இந்த இடைப்பட்ட நாட்களில் வருங்கால மாப்பிள்ளை, தன் வருங்கால மனைவிக்கு, செல்போன் வாங்கி கொடுத்துவிடுவார். இதை மானங்கெட்ட பெண்ணின் உம்மாவும், வாப்பாவும் வாங்கி உம்மா இந்தா மருமகன் உனக்கு கொடுத்து விட்டிருக்கு எனக் கூறி, அந்த பெண்ணிடம் கொடுத்து விடுவார்கள்.

அந்தப் பெண்ணும்,போன் வந்தவுடன் தங்களது கனவுகளை பரிமாறிக் கொள்ளும் அவல நிலையை ஏற்படுத்திக் கொடுத்தது உம்மாவும் வாப்பாவும் Sorry  தவ்ஹீத் உம்மாவும் தவ்ஹீத் வாப்பாவும், ஏன்னா மாப்பிள்ளை தவ்ஹீத், கல்யாணமோ தவ்ஹீத் கல்யாணம், கல்யாணம் நடக்குமிடமோ தவ்ஹீத் பள்ளி, கல்யாணத்தை நடத்தி வைப்பவர் தவ்ஹீத் இமாம், இமாம் திருமண உரை நிகழ்த்தும்போது இப்படி தாங்க கல்யாணம் பண்ணனும்; இப்படி எளிமையாக பள்ளியில் வச்சுதான் பண்ணனும். இதுதான் நபிவழிக் கல்யாணம். இப்படி எல்லோரும் பண்ணினால் நன்றாக இருக்குமென்று அவருடைய கடமையை முடித்து விடுவார். நிக்காஹ் முடிந்தது. பேரீத்தம்பழம், பாலும், பப்சும், சாயாவும் கொடுத்து விட்டு ஒரு நபிவழித் திருமணத்தை முடித்து விட்டதாக ஒரு மாயை ஏற்படுத்தி விடுவார்கள். இனிதான் இருக்கிறது.

கல்யாண மண்டபத்தில் விருந்து; அதுவும் தடபுடல் விருந்து. ஆர்ப்பரிக்கும் மேடை, ஸ்டில் காமிரா, வீடியோ காமிரா இன்னும் வசதியுள்ள தவ்ஹீத்வாதிகள் LCDகள் அதுவும் வரவேற்பு முதல் மேடை, சாப்பாட்டு ஹால் வரை LCDகள் வாவ் என்னவா நடத்துறாங்க நபிவழி திருமணத்தை. எந்த திருமணத்தில் சிக்கனம் இல்லையோ, அந்த திருமணத்தில் அல்லாஹ்வின் பறக்கத் இல்லை, எந்த விருந்தில் ஏழைகள் இல்லையோ, அந்த விருந்தில் அல்லாஹ்வின் பறக்கத் இல்லை. இப்படி அல்லாஹ்வின் பறக்கத்தும், அருளுமில்லாத திருமணம் எப்படி நபிவழித் திருமணமாகும்.

இது ஒரு புறம்; இன்னொரு புறம் மணப் பெண்ணை அலங்கரித்து (ஹிஜாபில்லாமல்) மேடையில் ஏற்றி பேஷன் ஷோ நடத்தும் தவ்ஹீது பெற்றோர்கள், மாப்பிள்ளையைத் தவிர மண்டபத்தில் உள்ள அத்துணை பேரும் பெண்ணை ரசிப்பார்கள். அங்குலம், அங்குலமாக ரசிப்பார்கள். எல்லோரும் ரசித்த பின்பு மாப்பிள்ளை முதல் இரவுக்கு அழைத்துச் செல்வார். பாவம் மாப்பிள்ளை; முதுகு எலும்பில்லாத மாப்பிள்ளை, இஸ்லாம் தெரியாத மாப்பிள்ளை. என்ன அனாச்சாரம் வேண்டுமானாலும் பண்ணுங்க. எனக்கு வெள்ளைப் பொண்ணும் 50 பவுன் நகையும் வேணும் என்ற நிலையில் மாப்பிள்ளை.

இன்னொரு விஷயம் என்னடானா நாங்கள் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் தவ்ஹீதை சொல்லும் போது அடிபட்டோம். சட்டை கிழிந்தது, பனியன் கிழிந்தது, அடிச்சாங்க ஓட ஓட அடிச்சாங்க; அப்படிக் கஷ்டப்பட்டு இந்த தவ்ஹீதை வளர்த்தோம் என மார்தட்டிக் கொள்ளும் தவ்ஹீதுவாதிகள் வீட்டு கல்யாணம் கூட மேடையில் பெண்ணை அலங்கரித்து ஷோ நடத்தறாங்க, கேட்டா எங்க வீட்டு முதல் கல்யாணம், அப்படின்னு சொல்றாங்க; இல்லைன்னா கடைசி கல்யாணம்னு சொல்றாங்க. எதுவானாலும் ஈமானையும், இஸ்லாமையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு திருமணம் முடிந்தவுடன் திரும்ப ஏற்றுக் கொள்வோம் என்ற நிலையில் இன்றைய திருமணங்களும் இன்றைய தவ்ஹீத்வாதிகளும். அல்லாஹ்வை திருப்தி படுத்துங்கள். அடியானை திருப்திபடுத்த வேண்டுமென்பதற்காக அல்லாஹ்வை மறந்து விடாதீர்கள்.

சூடு சுரணை, தன்மானம், ஈமான், இஸ்லாம், இஃக்லாஸ், தக்வா உள்ள எந்த இளைஞனும் தன் மனைவியை அலங்கரித்து, அன்னியர்களுக்கு காட்டமாட்டான். இன்ஷா அல்லாஹ்! இனி வரும் திருமணங்களில் பார்ப்போம்.

மேலும் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெ னில் நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். (அல்குர்ஆன்:51:55)

Previous post:

Next post: