பாபரி மஸ்ஜித்

in 2010 நவம்பர்

அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்

பாபரி மஸ்ஜித்

பாபரி மஸ்ஜித் 6.12.1992ல் காவி வெறியர்களால் இடிபடுவதற்கு 34 மாதங்களுக்கு அதாவது சுமார் 3 வருடங்களுக்கு முன்னரே மார்ச் 1990 அந்நஜாத் இதழ் பக்கம் 27 முதல் 36 வரை இடம் பெற்ற கட்டுரையை இங்கு மறுபதிப்பாக இடம் பெறச் செய்துள்ளோம். -ஆசிரியர்
பாபரி மஸ்ஜித் விவகாரம் அறிவு ஜீவிகளிடையே மிகப் பெரிய ஒரு விஷயமாக இருந்து வருகின்றது. முஸ்லிம்களின் கெளரவப் பிரச்சினை, இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வாழ்வா சாவா? என்பதை முடிவு செய்யும் பிரச்சினை என்றெல்லாம் பேசி விஷயத்தை முற்ற வைத்துள்ளனர். முஸ்லிம்களின் மிகப் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கேற்றவாறு செயல்பட்டு மிகப் பெரும் சிக்கலை உண்டாக்கி வைத்துள்ளனர்.

இப்போது நாம் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் இடம்பெற்ற ஒரு அழகிய முன்மாதிரியை எடுத்து ஆராய்வோம். ஹி.6ம் ஆண்டு நபி(ஸல்) அவர்களும், அவர்களின் அருமைத் தோழர்களும் உம்ராவை நிறைவேற்றும் நோக்கத்துடன் இஹ்ராம் அணிந்து குர்பானி மிருகங்களோடு மதீனாவிலிருந்து மக்காவுக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றனர். ஹுதைபியா என்ற இடத்தில் அவர்கள் குறைஷ்களால் தடுக்கப்படுகின்றனர். அங்கு முஸ்லிம்களுக்கும் குறைஷ்களுக்கும் பேச்சு வார்த்தைகள் நடந்து இறுதியில் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு வருகின்றனர்.

உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1. முஸ்லிம்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் குர்பானி மிருகங்களுடன் வந்திருந்தும் அந்த ஆண்டு மக்கா செல்லாமல் அங்கிருந்து மதீனா திரும்பிவிட வேண்டும்.

2. மக்காவிலிருந்து யாரும் முஸ்லிமாகி மதீனா வந்தால் அவர்களை மீண்டும் குறைஷ் கள் வசம் ஒப்படைத்து விடவேண்டும்.

3. மதீனாவில் முஸ்லிமாக இருப்பவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி மக்கா வந்தால் அவரை முஸ்லிம்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டியதில்லை.

இந்த மூன்று நியாயமற்ற கோரிக்கைகளும் நபி(ஸல்) அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதன்பின் உடன்படிக்கை எழுத ஆரம் பிக்கும்போது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று ஆரம்பத்தில் எழுதப்பட்டது. குறைஷ் தரப்பிலிருந்து வந்திருந்த ஸுஹைல் பின் அம்ரு என்பவர் இதனைத் தடுத்து “பிஸ்மி கல்லாஹும்ம’ (அல்லாஹ்வின் பெயரால்) என்று குறைஷ்கள் வழக்கப்படி எழுதும்படி வற்புறுத்தி அதுவும் நபி (ஸல்) அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிறகு “அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய சமாதான உடன்படிக்கையாகும்’ என்று எழுதப்படுகிறது. அதனையும் ஸுஹைல் ஆட்சேபித்து “முஹம்மது பின் அப் துல்லாஹ்’ என்று எழுதும்படி வற்புறுத்துகிறார். நபி(ஸல்) அவர்கள் அதனையும் ஏற்று, எழுதிக் கொண்டிருந்த அலீ(ரழி) அவர்களிடம் அதனை மாற்றி எழுதும்படி சொல்கிறார்கள். அலீ(ரழி) அவர்கள் “முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்று எழுதியதை அடித்து எழுதத் தயங்கவே நபி(ஸல்) அவர்கள் “முஹம்மதுர்ரசூலுல்லாஹ்” என்ற பதம் எங்கு எழுதப்பட்டிருக்கிறது என்று காட்டச் சொல்லி அதனை அவர்களின் புனிதக் கரங்களாலேயே அடித்து விடுகிறார்கள்.

உடன்படிக்கை கையயழுத்து ஆகுமுன்!
இவ்வாறு குறைஷ்களுக்காக வந்திருந்த ஸுஹைலினுடைய கோரிக்கைகள் எல்லாம் ஏற்று ஒப்பந்தம் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒப்பந்தம் இன்னும் கையயழுத்தாகி அமுலுக்கு வரவில்லை. இந்த நிலையில் ஸுஹை லினுடைய மகனார் அபூ ஜந்தல்(ரழி) அவர்கள் விலங்கிடப்பட்டவராக முஸ்லிம்களிடம் அடைக்கலம் தேடி வந்து சேர்கிறார். அவர் இஸ்லாத தைத் தழுவிய ஒரே காரணத்திற்காக குறைஷ்களால் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என்பதனை அவரது பரிதாபத்திற்குரிய புண்பட்ட உடல் படம் பிடித்துக் காட்டியது. அவரைப் பார்த்ததும் முஸ்லிம்களின் உள்ளங்கள் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டன. ஆனால் ஸுஹைலோ அபூ ஜந்தலை(ரழி) மீண்டும் தம்மிடம் ஒப்படைத்து விடவேண்டும் என்று பிடிவாதம் செய்கிறார். நபி(ஸல்) அவர்கள் இன்னும் ஒப்பந்தம் கையயழுத்தாகி அமுலுக்கு வரவில்லையே! அதனால் இவரை மட்டும் நம்மோடு விட்டுவிடும் என்று கேட்கிறார்கள். ஸுஹைல் ஒப்புக்கொள்வதாக இல்லை. அப்போது அபூ ஜந்தல்(ரழி) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து “முஸ்லிம் கூட்டத்தார்களே! நிச்சயமாக, நான் முஸ்லிமாகி வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப் போகிறீர்களா? நிச்சயமாக நான் பட்டிருக்கும் துன்பத்தை நீங்கள் பார்க்கவில லையா? என்று தழுதழுத்த குரலில் வேண்டுகோள் விடுக்கிறார். அவரது பரிதாப நில யைப் பார்த்து உருகாத மனித உள்ளங்கள் இருக்க முடியாது. ஆனால் கல்மனம் கொண்ட குறைஷ்கள் பிடிவாதமாக இருந்தனர். இந்த அளவு விட்டுக் கொடுத்து சமாதான உடன் படிக்கை செய்யப்படுவதை முஸ்லிம்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த உம்மத்திலேயே அபூ பக்கர்(ரழி) அவர்களுக்குப் பின் சிறப்புக்குரிய பதவிகளை வகித்தவர் உமர்(ரழி) அவர்களாவர். இரண்டாவது கலீஃபா, சொர்க்கத்து நன்மாராயம் பெற்ற பத்துப் பேரில் ஒருவர். நீதி வழுவாது ஆட்சி செய்து காட்டி மங்காத சரித்திரம் படைத்தவர். அப்படிப்பட் டவர்களால் கூட இந்த சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவர்கள் தன்னிலை இழந்து நபி(ஸல்) அவர்களிடம் நிகழ்த்திய உரையாடல் வருமாறு:

உமர்(ரழி) அவர்களின் மறுப்பு!
உமர்(ரழி) : அல்லாஹ்வுடைய நபியே! உண்மையில் தாங்கள் அல்லாஹ்வுடைய நபியல்லவா?
நபி(ஸல்) : ஆம்!
உமர்(ரழி) : நாம் உண்மையான மார்க்கத்திலும் நம் விரோதிகள் பொய்யான மதத்திலும் இருக்கவில்லையா?
நபி(ஸல்) : ஆம்!
உமர்(ரழி): அவ்விதமாயின் நாம் ஏன் நம்முடைய (சத்திய) மார்க்கத்திற்கு இழிவை ஏற்க வேண்டும்?
நபி(ஸல்): நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதனே! நான் அவனுக்கு மாறு செய்ய மாட்டேன். அவனே எனக்கு உதவி புரியக் கூடியவன்.
நபி(ஸல்) அவர்களிடம் உரையாடி விளக்கம் பெற்றும் உமர்(ரழி) அவர்களால் திருப்தியடைய முடியவில்லை. அபூபக்கர்(ரழி) அவர்களிடம் சென்று அடுத்து நிகழ்த்திய உரையாடல் வருமாறு:
உமர்(ரழி): அபூபக்கரே! இவர்கள் அல்லாஹ்வுடைய உண்மையான நபியல்லவா?
அபூபக்கர்(ரழி) : ஆம்!
உமர்(ரழி): நாம் உண்மையான மார்க்கத்திலும் நம் விரோதிகள் பொய்யான மதத்திலும் இல்லையா?
அபூ பக்கர்(ரழி) : ஆம்!
உமர்(ரழி): அவ்விதமானால் நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவை ஏற்க வேண்டும்?
அபூ பக்கர்(ரழி): மனிதரே! நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! அவர்கள் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்ய மாட்டார்கள். அவன் அவர்களுக்கு உதவி புரியக் கூடியவன். எனவே அவர்களின் கயிற்றை(அடிச் சுவடு களை) வலுவாகப் பற்றிப் பிடியும். இறைவன் மீது ஆணையாக நிச்சயமாக அவர்கள் உண்மையின் மீதுதான் இருக்கிறார்கள்.

(பின்னர் உமர்(ரழி) அவர்கள் இந்த அதிகப் பிரசங்கித்தனமான வினாக்களுக்குப் பரிகாரமாகப் பல நற்காரியங்களைச் செய்ததாக அவர்களே கூறுகிறார்கள்)

நபியவர்களின் கட்டளையை மீறிய நபிதோழர்கள்:
இப்படி குறைஷ்களின் தாங்கள்தான் பெரும் பான்மையினர் என்ற அகந்தையில் முட்டாள்த் தனமான நியாயமற்ற பல கோரிக்கைகளை ஏற்று உடன்படிக்கை செய்தபின், நபி(ஸல்)அவர்கள் தமது தோழர்களிடம் அந்த இடத்திலேயே குர் பானிகளை அறுத்துவிட்டு தலைமுடியைக் களைந்து இஹ்ராமிலிருந்து வெளியாகும்படி கூறினர். நபி(ஸல்) அவர்கள் இதனை மூன்று முறை கூறியும் நபிதோழர்கள் யாரும் அதனை நிறை வேற்ற எழுந்திருக்கவில்லை. அதனால் நபி (ஸல்) அவர்கள் விரக்தியுற்று கூடாரத்திற்குள் சென்று தனது மனைவி உம்முஸலமா(ரழி) அவர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட மனக் கவலையை வெளியிட்டனர். அதற்கு உம்முஸலமா(ரழி) அவர்கள் “”நபியே! நீங்கள் உங்கள் குர்பானியை அறுத்து விட்டு முடியையும் களைந்து விடுங்கள்” என்று ஆலோசனை கூறினர். நபி(ஸல்) அவர்கள் வெளியில் வந்து தனது மனைவி கூறிய வண்ணமே செய்தனர். இதனைக் கண்ட நபிதோழர்களும் கவலை தோய்ந்த முகத்துடன் எழுந்து குர்பானிகளை அறுத்துவிட்டு முடியையும் களைந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் தோல்வி என நினைத்தது மாபெரும் வெற்றி!
இப்படி முஸ்லிம்களில் அதிகமானவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரும் தோல்வி என்றும், இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இழிவு என்றும் எண்ணியதை அல்லாஹ் ஒரு தெளிவான வெற்றி என்று அறிவிக்கிறான். அது மட்டுமல்ல தனது உம்மத்திலுள்ள மிகப் பெரும்பான்மையினர் கடுமையாக எதிர்த்தும் அதைப் பொருட்படுத்தாமல் அல்லாஹ்வின் கட்டளையை நபி(ஸல்) அவர்கள் நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றுக் கொண்டதினால், நபி(ஸல்) அவர்களின் முன், பின் தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தனது அருட்கொடையை பூர்த்தி செய்து நேரான வழியில் நடத்துவதாகவும் உறுதி அளிக்கிறான். ஒரு வலிமை மிக்க உதவியாக உதவி செய்வதாகக் கூறுகிறான். முஸ்லிம்கள் தங்கள் ஈமானுடன் மேலும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் அமைதியை அளிக்கவும், அவர்களைச் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யவும் இதை நிகழ்த்தியதாகவும், முஸ்லிம்கள் தோல்வி என்று எண்ணியதை மகத்தான வெற்றி என்றும் அல்லாஹ் குறிப் பிடுகிறான். (பார்க்க 48:1-5)

கொடுஞ் செயலா இல்லையா?
அப்போது குறைஷ்கள் முஸ்லிம்களை கஃபாவை விட்டும் தடுத்தது, குர்பானி மிருகங்கள் அவற்றிற்குரிய இடத்தை அடைய முடியாமல் தடுத்தது எவ்வளவு பெரிய கொடுஞ்செயல், வைராக்கியத்திலும் முட்டாள்த்தனமான வைராக்கியம். ஆயினும் அந்த இடத்தில் முஸ்லிம்கள் அதனைத் தங்கள் கெளரவப் பிரச்சினையாகக் கருதாமல் அல்லாஹ்வின் விருப்பப்படி விட்டுக் கொடுத்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டது அல்லாஹ்வின் அருளே. இந்த விபரங்களை அல்லாஹ் 48:25,26 வசனங்களில் விவரிக்கிறான். (இந்த விபரங்களை பெரும்பாலான ஹதீஸ் நூல்களில் ஹுதைபியா உடன்படிக்கை என்ற பாடத்தில் பார்க்கலாம்)

முஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டும்!
இந்தச் சரித்திர முக்கியத்துவமுள்ள வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து இன்று முஸ்லிம்கள் படிப்பினை பெற வேண்டாமா? அன்று குறைஷ் மத வெறியர்கள், கடைபிடித்த முட்டாள்த்தனமான வைராக்கியம், அணு அளவும் நியாயமில்லாத கோரிக்கை, அகந்தை, வரட்டு கெளரவம் இவற்றால் மற்றவர்களை மனிதர்களாக மதிக்காத மனிதாபிமானமற்ற போக்கு இவை அனைத்தையும் இன்றைய ஹிந்து மத வெறியர்கள் கைக்கொண்டு பாபரி மஸ்ஜிதை இராமர் கோவிலாக்க வேண்டும் என்று முட்டாள்த் தனமான வைராக்கியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். மக்களைத் தூண்டி வருகின்றனர். இராமர் அங்கு பிறக்கவுமில்லை. அப்படி ஒரு மனிதர் வாழ்ந்ததுமில்லை. அந்த இடத்தில் என்றுமே கோவில் இருந்ததில்லை. அங்கு இருந்த ஒரு கோவிலை இடித்துவிட்டு மன்னர் பாபர் மஸ்ஜித் கட்டினார் என்பது கலப்படமே இல்லாத பொய். பாபரி மஸ்ஜித் கடந்த சுமார் 462 வருடங்களாக முஸ்லிம்களுக்குரிய சொத்து, அதனை நியாயமற்ற முறையில் ஹிந்து மத வெறியர்கள் கைப்பற்ற முனைகின்றனர் என்பன போன்ற உண்மைகளை இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல மனிதத் தன்மையுள்ள எந்த மதத்தினருமே மறுக்க மாட்டார்கள். அன்று குறைஷ்கள் தாங்கள்தான் பெரும்பான்மையினர் என்ற அகந்தையில் செயல்பட்டதுபோல், இன்று ஹிந்து மத வெறியர்கள் தாங்கள் தான் பெரும்பான்மையினர் என்ற அகந்தையில் செயல் படுகின்றனர்.

அல்லாஹ் 48:26ல் குறிப்பிட்டிருப்பது போல் ஹிந்து மத வெறியர்களின் முட்டாள்த்தனமான வைராக்கியத்தை முறியடிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அன்று அல்லாஹ்வின் தூதர்மீதும், முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருளச் செய்து அவர்களுக்கு இறை யுணர்(தக்வா)வுடைய வாக்கியத்தின்மீதும் அவர்களை நிலைபெறச் செய்தான். அவர்களோ அதற்கு மிகவும் தகுதி உடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள். (பார்க்க 48:26)

அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் அதற்கு தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் ஆக வேண்டாமா? அதற்கு இன்றும் முஸ்லிம்கள் தங்கள் கெளரவத்தையோ, தங்கள் மார்க்கத்திற்கு இழிவு ஏற்படுகிறது என்பதையோ பார்க்காமல் விட்டுக்கொடுத்து அதன் மூலம் வெற்றி பெற முன்வர வேண்டும். முட் டாள்த்தனமான வைராக்கியத்துடன் பாபரி மஸ்ஜித் இடத்தில் இராமர் கோவில் கட்ட வேண்டும் என்று வீண் பிடிவாதம் பிடிக்கிறீர்களா? உங்கள் பிடிவாதம் காரணமாகவும், இரண்டு சமூகங்களுக்கிடையில் சுமூகமான உறவு நீடிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத் துடனும் நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம். பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுக்கிறோம். நீங்கள் பொய்யாக வாதிப்பது போல் அதனை ஒரு புனிதமான இடமாக பொய்யாகவோ, மெய்யாகவோ நாங்கள் வாதிக்கவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில் அது இறைவனை வணங்குவதற்குக் கட்டப்பட்ட ஒரு மஸ்ஜித் மட்டுமே. வேறொரு இடத்திலும் மஸ்ஜிதைக் கட்டி இறைவனைத் தொழ முடியும். ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் தொழுவதற்காக வேறு இடத்தில் ஒரு மஸ்ஜிதைக் கட்டித் தந்துவிட்டு பாபரி மஸ்ஜிதை எடுத்துக் கொள்ளுங்கள். எங்கள் உள்ளங்கள் இதனை வெறுத்தாலும் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி இதை நாங்கள் ஒப்புக் கொள்ளுகிறோம் என்று முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

கஃபாவையே விட்டுக் கொடுத்தார்கள்!
ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இருந்து வரும் அல்லாஹ்வின் புராதன இல்லம் கஃபா, இப்றாஹீம்(அலை) அவர்கள் அதனைப் புதுப்பித்து அல்லாஹ்வை மட்டும் வணங்கும் இடமாக தன்னுடைய சந்ததிகளிடம் வாக்கு வாங்கிக் கொண்டு விட்டுச் சென்றார்கள். (பார்க்க 2:132) அந்த அல்லாஹ்வின் வீட்டில் இடைக் காலத்தில் சிலைகளைக் கொண்டு சேர்த்து சிலை வணக்கம் செய்து கொண்டிருந்தனர் குறைஷ்கள்; சிலை வணக்கம் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் போதித்து வந்தார்களே அல்லாமல் பலாத்காரமாக கஃபாவைக் கைப்பற்றும் முயற்சியில் நபி(ஸல்) அவர்கள் இறங்கவில்லை. ஹுதைபியா உடன் படிக்கை சமயம் நல்ல சந்தர்ப்பம். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே தலைமையில் ஒன்றுபட்டு உயிர் இழக்கும்வரை போராடி ஷஹீதாக தயாராக இருந்தார்கள். அதற்காக நபி(ஸல்) அவர்களிடம் கைபிடித்து உறுதி அளித்தும் இருந்தனர். இதனையே பைஅத்து ரிழ்வான் என்று சொல்லுகிறோம். (பார்க்க 48:10) இன்று முஸ்லிம் களிடையே இருப்பது போல் ஆளுக்கொரு கொள்கை, நாளுக்கொரு இயக்கம்(அமைப்பு) என்ற நிலை அன்று இருக்கவில்லை. அன்று போராடி இருந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெற்று, கஃபாவைக் கைப்பற்றும் வாய்ப்பும் இருக்கத்தான் செய்தது. இதற்கு முன் இடம் பெற்ற தற்காப்பு போர்களில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றுத்தான் இருந்தார்கள். இவ்வளவு சாதகமான சூழ்நிலைகள் இருந்தும் நபி(ஸல்) அவர்கள் கெளரவத்தைப் பார்க்காமல், இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுகிறது என்று எண்ணாமல் விட்டுக் கொடுத்து சமாதான உடன் படிக்கை செய்து கொள்கிறார்கள். கஃபாவை அதன் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற முடியாது. கஃபா புனிதமான இடம், அதற்கென்று தனிச் சிறப்புகள் பல உண்டு.
இந்த நிலையில் கஃபா விஷயத்திலேயே நபி (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்றால், பாபரி மஸ்ஜித் விஷயமாக விட்டுக் கொடுப்பது தவறில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும்.

விட்டுக் கொடுத்ததால் ஏற்பட்ட அதிசய மாற்றம்:
நபி(ஸல்) அவர்கள் விட்டுக்கொடுத்த காரணத்தால் அடுத்த நான்கு ஆண்டுகளிலேயே இரத்தம் சிந்தாமல், கஃபா முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. இந்த நான்கு ஆண்டுகளில் குறைஷ்களில் பலர் தங்களுக்கிடையே இருந்த காழ்ப்புணர்ச்சிகள் மறைந்து, உண்மை இஸ்லாத்தை விளங்கி இஸ்லாத்தைத் தழுவுகின்றனர். முன்னணியில் நின்று ஹுதைபிய்யா உடன்படிக்கை செய்துகொண்ட ஸுஹைலே இஸ்லாத்தைத் தழுவுகிறார். அன்று விட்டுக் கொடுத்ததால் கஃபா காலங்காலமாக அல்லாஹ் வுக்கு இணையாக சிலைகளையுடைய இடமாக இருந்து விடவில்லை. நான்கு ஆண்டு காலத்திலேயே புனிதமிக்க இடமாக மீண்டும் ஆகிவிட்டது. நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலத்திலிருந்து சுமார் 21 ஆண்டுகள் கஃபாவில் சிலைகள் இருக்கும் நிலையிலேயே நபி(ஸல்) அதனை எதிர்த்து சத்தியப் பிரச்சாரம் செய்து கொண்டும், மதீனா சென்றதிலிருந்து கஃபாவை நோக்கி தொழுது கொண்டும் இருந்தனர் என்பதனை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நபி(ஸல்) அவர்கள் எந்த அளவு விட்டுக் கொடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பாடமாகக் கொள்ள வேண்டும். இவ்வளவு அழகிய முன்மாதிரியைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் இன்று அதற்கு மாற்றமாக தங்களின் சொந்த மனோ இச்சைக்கும், வரட்டு கெளரவத்திற்கும், மலிவான அரசியல் ஆதாயத்திற்கும் ஆளாகி இருப்பது உண்மையில் வேதனைக்குரியது. பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுப்பதால் ஏற்படும் விளைவுக ளாக அறிவு ஜீவிகள் சொல்லும் கூற்றுக்களில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

முஸ்லிம் இயக்கத்தினர் கூறுவது உண்மையா?
பாபரி மஸ்ஜிதை விட்டுக் கொடுப்பதால் முஸ்லிம்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படை உரிமையை இழந்து விடுகிறார்கள். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என்பது அவர்களின் கூற்று. பாபரி மஸ்ஜிதாக இருக்கட்டும் அல்லது எந்த மஸ்ஜிதாக இருக்கட்டும், அவை அனைத்தும் முஸ்லிம்களால் கட்டப்பட்டவையே. அதே சமயம் ஹிந்து மத வெறியர்களே முஸ்லிம்களுக்கென்று ஒரு மஸ்ஜிதை கட்டித் தந்து விட்டு பாபரி மஸ்ஜிதை எடுத்துக் கொள்வதாக இருந்தால் முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜைகளே என்பதற்கு ஹிந்து மத வெறியர்களே ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்பதற்கு இது வருங்காலத்தில் பெரிய சான்றாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்திய மண்ணில் அவர்கள் கைகளாலேயே முஸ்லிம்களுக்கு மஸ்ஜித் கட்டித் தந்தால் அதன் பொருள் என்ன? முஸ்லிம்களும் இந்தியப் பிரஜைகளே என்பதனை அவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள் என்பதுதானே. இந்த ஒரு மஸ்ஜிதை விட்டுக் கொடுத்தால் அடுத்து ஒவ்வொரு மஸ்ஜிதாக ஆக்கிரமிக்க முற்படுவார்கள் என்பது இன்னொரு கூற்றாகும். இது முஸ்லிம்களைத் தூண்டிவிடும் ஒரு தவறான கூற்றாகும். பாபரி மஸ்ஜித் விவகாரம் கடந்த 137 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு சர்ச்சையாகும். அதுவும் வெள்ளையர்கள் ஹிந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரித்து அவர்கள் லாபம் அடைய வேண்டும் என்ற தவறான நோக்கத்தில் எழுதி வைத்த சரித்திரப் புரட்டாகும். அப்படிப்பட்ட தவறான கூற்றுக்களை ஆதாரமாக வைத்தே ஹிந்து மத வெறியர்கள் வெறியாட்டம் ஆடுகிறார்கள். எல்லா மஸ்ஜிதுகள் சம்பந்தமாக இப்படி வெறி ஆட்டம் ஆட வழி இல்லை என்பதே உண்மையாகும். அப்படியே தவறான வாதம் செய்ய முற்பட்டாலும் ஒவ் வொரு மஸ்ஜிதுக்கும் பகரமாக வேறு ஒரு மஸ்ஜிதை அவர்கள் கைகளாலேயே கட்டித் தந்து விட்டுத் தானே எடுக்கப் போகிறார்கள். பழங்கால வசதிகள் குறைந்த பள்ளிகளுக்குப் பகரமாக நவீன வசதிகளுடன் கூடிய பள்ளிகள் கட்டித் தந்தால் நல்லதுதானே. அவர்களே தங்கள் கைகளாலேயே பல பள்ளிகளைக் கட்டித் தந்தால் முஸ்லிம்களும் இந்த நாட்டு பிரஜைகளே என்பதற்கு அவர்களே உத்திரவாதம் அளித்து விட்டு பின்னால் அவர்களாலும் அதனை மறுக்க முடியுமா? அந்த பள்ளிகள், கோவில்கள் இருந்த இடங்களில் கட்டப்பட்டவை என்று பொய்ப் பிரச்சாரம் செய்து ஹிந்து பெருங்குடி மக்களைத் தூண்டவும் அவர்களுக்கு வகை இல்லாது போகுமே. முஸ்லிம்களும், ஹிந்துக்களும் பரஸ்பரம் ஒற்றுமையாகவும், அந்நியோன்யமாகவும் வாழ இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்பதில் ஐயம் இருக்க முடியுமா?

விட்டுக் கொடுப்பதால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் நன்மைகள்!
அது மட்டுமல்ல; இந்த பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் தங்கள் மனோ விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம்கள் விட்டுக் கொடுப்பதால் பல நன்மைகள் விளையலாம். இன்று இரு சமுதாயத்தாருக்குமிடையே கெளரவப் பிரச்சினை காரணமாக நிலவி வரும் கசப்புணர்வு நீங்கி விடும். ஹிந்து சமுதாயத்தவர் ஆத்திரமும், குரோதமும் தீர்ந்து தன்னிலைக்கு வந்து நிதானமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். அதனால் அவர்களில் பலர் இஸ்லாத்தைத் தழுவும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஹுதைபியா உடன்படிக்கைக்கு குறைஷ்கள் சார்பாக முன்னணியில் நின்ற ஸுஹைல் இஸ்லாத்தைத் தழுவியது போல் இன்று ஹிந்துக்களுக்காக முன்னணியில் நிற்கும் பலர் இஸ்லாத்தை தழுவவும் செய்யலாம். பாபரி மஸ்ஜிதிற்குப் பகரமாக தனியொரு மஸ்ஜித் கட்டித் தந்து விட்டு அதனை எடுத்துக் கோவிலாக்கியவர்கள், பின்னால் அதனை தங்கள் கைகளாலேயே மீண்டும் மஸ்ஜிதாக ஆக்கும் வாய்ப்பும் வரலாம். அல்லாஹ்வின் ஆணைக்கு அடிபணிந்தால் இத்தனையும் நடக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்கு அல்குர்ஆனின் 48ம் அத்தியாயம் தக்கச் சான்றாகும்.

அல்லாஹ்வின் சோதனை!
அரேபியா நாட்டை இஸ்லாம் மயமாக்க கஃபாவைக் கொண்டு அல்லாஹ் வைத்த சோதனையில் அன்றைய முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். அதேபோல் இந்திய நாட்டை இஸ்லாம் மயமாக்க அல்லாஹ் வைத்திருக்கும் சோதனையான பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்கள் வெற்றிபெற வேண்டும் என்பதே நமது மிகுந்த ஆவலாகும். முஸ்லிம்களை இந்த கோணத்தில் சிந்திக்க வைக்க அறிவு ஜீவிகள் முன்வர வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முன்மாதிரிக்கு மாறாக முஸ்லிம்கள் இன்று தங்கள் மனோ இச்சைக்கு ஆளானதால், அதற்கு இந்த அறிவு ஜீவிகளும் தூபம் போட்டதால் என்னென்ன கேடுகள் விளைந்திருக்கின்றன என்பதனையும் சிந்திக்க வேண்டும். பாபரி மஸ்ஜித் இடத்தின் பெருமதியைவிட கோடிக்கணக்கான மடங்கு பெருமதி வாய்ந்த சொத்துக்களையும், நிலங்களையும் முஸ்லிம்கள் இழந்துள்ளனர். அது மட்டுமல்ல; அன்றிலிருந்து இன்று வரை பல லட்சக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் உயிரை இழந்ததோடு, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் விலை மதிக்க ஒண்ணா தங்கள் கற்பை இழக்கவும் நேரிட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் ஊனமுற்றவர்களாக நரக வேத னையை இவ்வுலகிலேயே அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவி வெறியர்களின் வளர்ச்சிக்கு யார் காரணம்!
பாபரி மஸ்ஜித் விவகாரம் காரணமாக முஸ்லிம் சமுதாயம் அனுபவித்துவரும் துன்பங்களும், தொல்லைகளும் எழுத்தில் வடித்து மாளாது. இந்த விவகாரம் முடிவுக்கு வராவிட்டால் இவை போல் இன்னும் எத்தனை கோடி துன்பங்களை முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க வேண்டி வருமோ? அது மட்டுமா? முஸ்லிம்களின் இந்த மனோ இச்சைக்கு ஏற்ற தவறான போக்கின் காரணமாக இந்த நாட்டில் ஹிந்து மத வெறியர்கள் வளர்ந்து வருகிறார்கள். 1948ல் தேசபிதா என இந்திய பெரும்பான்மை மக்களால் போற்றப்படும் திரு.எம்.கே. காந்தியைச் சுட்டுக் கொன்றதால் ஹிந்து சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டிருந்தR.S.S காரர்களும், அவர்களைச் சார்ந்த அரசியல் கட்சிகளும் செழித்து வளர இந்த பாபரி மஸ்ஜித் விவகாரம் நல்ல உரமாகப் போய்விட்டது. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் 2 பிரதிநிதிகளை மட்டுமே கொண்டP.J.P. இந்த நாடாளுமன்றத்தில் 86 பிரதிநிதிகளை வெற்றிகரமாக நுழையச் செய்ய இந்த பாபரி மஸ்ஜித் விவகாரமே பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது. ஆட்சியைப் பிடிக்க கனவு கண்டு கொண்டிருந்த P.J.P.யினர் சில மாநிலங்களில் ஆட்சி அமைக்க வழி வகுத்துக் கொடுத்தது இந்த பாபரி மஸ்ஜித் விவகாரமே என்பதை யாரால் மறுக்க முடியும்? இப்படி முஸ்லிம்களுக்கு விரோதமான சக்திகள் இந்த நாட்டில் வளர்வதற்கு முஸ்லிம்களே துணை போகிறார்கள் என்றால் உண்மையான முஸ்லிம்கள் வேதனைப்படாமல் இருக்க முடியுமா? இந்தப் போக்கு நீடித்தால் ஹிந்து மத வெறியர்கள் இந்திய நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முஸ்லிம்களே உதவி செய்ததாகத்தான் முடியும்.

பெரும்பான்மையினரின் விருப்பம் வழிகேடே! (6:116)
முஸ்லிம்களில் பெரும்பான்மையினரின் மனோ நிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டு அவர்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தவறான எண்ணத்தில் செயல்படும் அறிவு ஜீவிகளே இவற்றிற்கெல்லாம் காரணம் என்றால் அதில் தவறு இருக்கிறதா? மக்களின் மனோ நிலைக்கு ஏற்றவாறு தாளம் போடும் தலைவர்கள் ஒழிந்து அனைவரும் வெறுத்தாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டும் ஒரு தலைவனை இந்தச் சமுதாயம் பெறாத வரை விமோசன மில்லை. அன்று முஸ்லிம்களின் மாபெரும் வெற்றிக்கு ஹுதைபியா உடன்படிக்கை சமயம் முஸ்லிம்கள் அனைவரின் மனோ விருப்பத்திற்கு விரோதமாக அல்லாஹ்வின் விருப்பத்தை நிலை நாட்டும் மனோ உறுதியை நபி(ஸல்) அவர்க ளுக்கு அல்லாஹ் அளித்ததுபோல், அப்படிப் பட்ட ஒரு சமுதாயத் தலைவனையும், அந்தத் தலைவனுக்கு அல்லாஹ்வின் விருப்பத்தை நிலை நாட்டும் மனோ உறுதியையும் அளிக்க அல்லாஹ்விடமே துஆ செய்கிறோம்.

R.S.S கைக்கூலி என விமர்சிக்கப்பட்டோம்!
இன்றைக்குச் சுமார் 20½ ஆண்டுகளுக்கு முன்னர் நாம் எழுதிய இக்கருத்திற்கு பல்வேறு இயக்கத்தினரிடமிருந்தும், இன உணர்வு மிக்க முஸ்லிம்களிடமிருந்தும் மிகக் கடுமையான விமர்சனங்கள் வெளிவந்தன. எம்மைR.S.S கைக்கூலி, அவர்களிடமிருந்து பெரும் பணம் வாங்கிக்கொண்டு பாபரி மஸ்ஜிதை ஹிந்துக்களுக்கு தாரை வார்க்க முற்படுகிறார் என்றெல்லாம் செய்திகள் பரப்பினர்.

நபி(ஸல்) அவர்களே விமர்சிக்கப்பட்ட போது நாம் எம்மாத்திரம்?
அன்று 1425 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஹுதைபியாவில் குறைஷ்களின் மிகமிக அநீதமான நிபந்தனைகளை ஏற்று ஹுதைபியா உடன்படிக்கை செய்து கொண்டதை இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) மற்றும் நபிதோழர்கள் ஒட்டு மொத்தமாக சரிகாணாத நிலையில் எம்மு டைய இக்கருத்தை பெரும்பான்மை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாதது ஆச்சரியம் இல்லை என்ற முடிவுக்கே அன்று வந்தோம்.

காவி வெறியர்களின் சதித்திட்டம் அன்றே முறியடிக்கப்பட்டிருக்கும்!
காவி வெறியர்கள் ஹிந்து முஸ்லிம் விரோதத்தையும், பகைமையையும் வளர்த்து அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் தீய நோக்குடன் பாபரி மஸ்ஜித் விவகாரத்தைக் கையில் எடுத்தபோது, முஸ்லிம்கள் இன உணர்வுக்கு ஆளாகாமல், எரிந்த கட்சி, எரியாத கட்சி என காவி வெறியர்களுடன் மல்லுக்கு நில்லாமல் மெளனம் சாதித்திருந்தால் காவி வகையறாக்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவும், ஆட்சியைக் கைப்பற்றவும் வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. அந்த அரிய வாய்ப்பையும் இன உணர்வுக்கு அடிமைப் பட்ட முஸ்லிம்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதுதான் போகட்டும். 1990ல் விட்டுக் கொடுக்கும் வாய்ப்பை அதாவது நபிவழியைக் கடை பிடித்திருந்தாலும் முஸ்லிம் சமுதாயம் ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பை சந்தித் திருக்காது, ஆம்!

அன்று முஸ்லிம்கள் இப்படியொரு முடி வைச் சரிகண்டு நடந்திருந்தால், முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்திருந்தால் பா.ஜ.க. ஆட்சிக் கட்டிலில் ஏறி இருக்கவும் முடியாது. மத்திய, சில மாநில அரசுகளைப் பிடித்திருக்கவும் முடியாது. அனைத்து முக்கியத் துறைகளிலும் காவி மனம் படைத்த அதிகாரிகளை மிகமிக முக்கிய பதிவிகளில் நுழைத்திருக்கவும் முடியாது. பாபரி மஸ்ஜிதை வைத்து ஆட்சியைப் பிடிக்கும் R.S.Sன் சூழ்ச்சித் திட்டம் 1990களிலேயே பிசு பிசுத்துப் போயிருக்கும். பெருந்தோல்வியைக் கண்டிருப்பார்கள்.

அது மட்டுமல்ல 1990க்குப் பிறகு ஏற்பட்ட அனைத்துக் கலவரங்களுக்கும் வழி இல்லாமல் போயிருக்கும். முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் பெறு மதியை விட பல்லாயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழக்க நேரிட்டிருக்காது. பல்லாயிரம் முஸ்லிம்கள் உயிர்ப் பலியாக வேண்டி இருந்திருக்காது. ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பிழக்க நேரிட்டிருக்காது. விதவைகளாக நேரிட்டிருக்காது. அன்று முஸ்லிம்களுக்கும் குறைஷ்களுக்கும் ஹுதைபியா உடன் படிக்கை காரணமாக ஓர் இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது போல் அன்று முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையே ஓர் இணக்கமான சூழ் நிலை ஏற்பட்டிருக்கும். மனித நேயத்துடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தையும் பாழாக்கியவர்கள் இன உணர்வு மிக்க முஸ்லிம்களும், அந்த இன உணர்வைத் தூண்டி விட்ட இயக்கத்தினருமேயாகும்.

அன்று முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இடத்தை மனமுவந்து விட்டுக் கொடுத்திருந்தால், தானமாக அளித்திருந்தால் அது முஸ்லிம் சமுதாயத்தின் மதிப்பைப் பெரிதும் உயர்த்தி இருக்கும். ஹிந்து மக்களில் பெரும்பான்மையினரிடம் முஸ்லிம்கள் பற்றி மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருக்கும். அவர்கள் காவி வெறியர்களைப் புறக்கணித்திருப்பார்கள். காவி வெறியர்கள் விலாசமற்றவர்களாக ஆகி இருப்பார்கள். ஆனால் இன்று உயர்நீதி மன்றம் கட்டப் பஞ்சாயத்து மூலம் பாபரி மஸ்ஜிதைப் பிடுங்கிக் கொடுத்திருப்பதால் ஹிந்து சகோதரர்களிடம் முஸ்லிம்கள் பற்றிய உயர் எண்ணம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முஸ்லிம் மத குருமார்களின் பேச்சை வேதவாக்காக(?)  நம்பி அல்லாஹ்வுக்கு மாறு செய்வதற்கே முனைவதால் முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டதையே அனுபவிக்கிறார்கள்.
(பார்க்க அல்குர்ஆன்: 30:41, 42:30)

உயர்நீதிமன்ற கட்டப் பஞ்சாயத்திற்குப் பின்னரும் :
உயர் நீதிமன்றம் செய்துள்ள கட்டப் பஞ்சாயத்தான தென்காசி தீர்ப்புக்குப் பின்னரும், “”உயிரைக் கொடுத்தும் மஸ்ஜிதை மீட்போம்” என்றே முழக்கமிடுகிறார்கள்;  நாட்டு நடப்பையும் முஸ்லிம்களின் நிலையையும் உணராது தங்களின் இவ்வுலக ஆதாயத்தையே குறிக் கோளாகக் கொண்ட இயக்கத்தினர். பாபரி மஸ்ஜித் விவகாரம் இன்று நேற்றல்ல, 10, 20 ஆண்டுகள் அல்ல, சுமார் 157 வருடங்கள் 1853லிலிருந்து வெள்ளையன் பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக ஹிந்து முஸ்லிம்களுக்கிடையே பெரும் பிளவை நோக்கமாகக் கொண்டு கட்டிவிட்ட கட்டுக் கதையாகும்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் 157 வருடங்களாக!
அந்த அடிப்படையில் வெள்ளையனின் தூண்டுதலில் ஹனுமன் கிரி கோவில் பூசாரி ரகுபர் தாஸ் பாபரி மஸ்ஜித் வளாகத்தில் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை அமைத்து ராம் சபூட்ரா-ராமர் பிறந்த இடம் என அறிவித்தான். இந்த நிலையில் 1885ல் அங்கு கோவில் கட்ட அனுமதி கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. கோவில் கட்ட அனுமதி மறுக்கப்பட்டாலும் திண்ணை ரகுபர் தாசுக்குச் சொந்தம் என வெள்ளையனின் அரசால் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

1886ல் பாபரி மஸ்ஜித் ராமர் கோவிலை இடித்து கட்டப்பட்டது என வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கும் தள்ளுபடியானது. ஆயினும் ரகுபர் தாசின் கோரிக்கை ஆங்கில அரசால் சரி காணப்பட்டது. அதன் பின்னர் வழக்கு தொடரப்படவில்லை என்றாலும் பள்ளி வளாகத்திலுள்ள திண்ணையில் பூஜை புனஸ்காரம் செய்யப்பட்டே வந்தது. இந்த நிலையில் 1949ல் மஸ்ஜித் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுத்தனமாக சிலைகள் வைக்கப்பட்டன. இதில் மிகப்பெரும் வேதனை அன்று பஜ்ர் தொழுகைக்கு முஸ்லிம்களில் ஒரு பத்து பேர் வந்திருந்தாலும் யாருக்கும் தெரியாமல் அச்சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு பள்ளியைப் பூட்டிப் பாதுகாத்திருக்க முடியும். இன்று 2010ல் முஸ்லிம்களைத் தொழுகைக்காக அழைக்கும் தப்லீஃக் பணி கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தாலும் இன்றும் கிராமப் புறங்களில் பல பள்ளிகள் தொழுகை இல்லாமல் பூட்டப்பட்டும் பாழடைந்தும் காணப்படுகின்றன. அப்படியானால் 1949ல் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

ஐங்காலத் தொழுகை உண்டா?
இன்றும் பாபரி மஸ்ஜிதுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை என இன உணர்வோடு ஈடுபடும் முஸ்லிம் வாலிபர்களில் எத்தனை பேர் வழமையாக ஐங்கால தொழுகைகளை விடாமல் தொழுது வருகிறார்கள் என ஒரு புள்ளி விபரக் கணக்கு எடுத்துப் பாருங்கள் உண்மை புரியும். காவி வெறியர்கள் மஸ்ஜித் என்ற கல்கட்டிடத்தைத்தான் இடித்துத் தரை மட்டமாக்கினார்கள் என்றால், முஸ்லிம்களில் மிகப்பெரும்பான்மையினர்  இஸ்லாத்தின் இரண்டாவது பிரதான தொழுகை என்ற தூணையே இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் மார்க்கப் பணியைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள் தொழுகையின் சட்டங்களை கடினமாக்கி இருப்பதும், கத்தம், பாத்தியா, மீலாது, மவ்லூது, கந்தூரி, சலாத்து நாரியா போன்ற மூடச் சடங்கு சம்பிரதாயங்களைக் கொண்டு சுவர்க்கம் புகுந்து விடலாம்; தொழுகை தேவை இல்லை என்ற மூட நம்பிக்கையை வளர்த்து வைத்திருப்பதுமேயாகும்.

ஆக ஐங்கால தொழுகை இல்லாத முஸ்லிம்களே பாபரி மஸ்ஜிதில் காவி வெறியர்கள் சிலைகளை வைக்க வழிவிட்டார்கள். இது முஸ்லிம்களின் தவறு. அதே சமயம் ஆட்சியாளர்கள் நேர்மையாளர்களாகவும், மதச்சார் பற்ற நடு நிலையாளர்களாகவும் இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தொழுகை நடக்கிறதோ இல்லையோ அது முஸ்லிம்களின் பள்ளி. அங்கு திருட்டுத்தனமாகப் பூட்டை உடைத்து சிலைகளை வைத்தது கிரிமினல் குற்றம் என சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, சிலைகள் வைத்தவர்கள்மீது கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். உங்களுக்கு உரிமை இருந்தால் அதை சிவில் வழக்கு மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள், என அரசு கட்டளையிட்டிருக்க வேண்டும்.

அரசுகளின், நீதிமன்றங்களின் அநீதமான கட்டளைகள்!
அரசு தனது மதச்சார்பற்ற நடுநிலையைத் தவற விட்டது. பள்ளியைப் பூட்டி, பள்ளிக்கு வெளியில் காவி வெறியர்கள் பூசை நடத்தவும், முஸ்லிம்கள் அங்கு போகக் கூடாது என்றும் நியாயமற்ற கட்டளையை நீதிமன்ற மூலம் நிலைநாட்டியது. மூன்றாவது பெரும் அநீதியாக நீதிமன்றம் 1986ல் பூட்டைத் திறந்துவிட்டு காவி வெறியர்கள் உள்ளே போயே பூஜை புனஸ்காரம் செய்ய வழிவகுத்துக் கொடுத்தது. இதற்கு மத்திய மாநில அரசுகளும் துணை நின்றன. அதனால் முஸ்லிம்கள் கொதிப்படைந்து ஆர்ப்பட்டம், போராட்டம் என ஈடுபட்டனர். இது காவி வெறியர்களுக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. நான்கு வருடங்களிலேயே 1990 லேயே முஸ்லிம்கள் பல கோடி சொத்துக்களை இழக்கவும், ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க வும், எண்ணற்ற பெண்கள் கற்பழிக்கப்படவும், விதவைகளாக்கப்படவும் காரணமாயிற்று. இவை அனைத்தையும் 1990 மார்ச் அந்நஜாத் இதழில் சுட்டிக்காட்டி முஸ்லிம்கள் என்ன செய்தால் இப்பிரச்சினை தீரும். பா.ஜ.க.வின் வளர்ச்சியை, காவி வெறியர்களின் வளர்ச்சியை முறியடிக்க முடியும் என தெளிவுபடுத்தி இருந்தோம். அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு இயக்கங்களைக் கற்பனை செய்தவர்களுக்கு எமது இந்த ஆலோசனை நியாயமாகப்படுமா? எனவே “”இந்த விவகாரம் முடிவுக்கு வராவிட்டால் 1990 வரை ஏற்பட்ட உயிர், பொருள், கற்பு, உடல் ஊனம் போன்ற பெரும் நட்டங்களை விட இன்னும் எத்தனை கோடி துன்பங்களை முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க வேண்டி வருமோ?” என்று நாம் 1990ல் எழுதியது எந்த அளவு நிதர்சனமாக நடந்துள்ளது என்ற சோக வரலாற்றை எண்ணிப்பாருங்கள். எந்த அளவு ஹிந்து முஸ்லிம் விரோதப் போக்கு வளர்ந்திருக்கிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

உற்று நோக்குங்கள்!
1885லிலிருந்து ஆங்கில, ஆரிய ஆட்சியினரும் அதிகாரிகளும், நீதிபதிகளும் ஆரிய மாயையை நிலை நாட்ட எந்த அளவு முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைபிடித்திருக்கிறார்கள் என்பதை 1885லிலிருந்து 2010 வரை நீதிமன்றங்கள் மூலம் தீர்ப்பளித்து வருகிறார்கள் என்பதை முஸ்லிம்கள் உற்றுக் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஈ.வே.ரா. பெரியார் சொன்னது போல் “”உச்சி குடுமி மன்றத்தில்” முஸ்லிம்களுக்குச் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியுமா? ஆயினும் முஸ்லிம்கள் தங்கள் உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்ட மார்க்கம் அனுமதிக்கிறது. அதே சமயம் இயக்கத்தினர் கடைபிடித்து வரும் ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை, பந்த், சாலை மறியல் போன்ற செயல்பாடுகள் மார்க்க முரணானவை. அப்பாவி பொதுமக்களுக்குத் துன்பம் கொடுப்பவை. அவர்களின் அன்றாட பணிகளைத் தடுப்பவையாகும்.

கம்யூனிச, நாத்திகக் கொள்கை!
இவை அனைத்தும் கம்யூனிச, நாத்திகச் சிந்தனை வயப்பட்டவையாகும். “”இறைவன் என்று ஒருவன் இல்லை. நம்முடைய சொந்த முயற்சிகள் மட்டும் கொண்டே நாம் நமது உரிமைகளை அடைய முடியும்” என்ற மூட நம்பிக்கைக்கு அடிமைப்பட்ட அவர்கள் இப்படிப்பட்ட பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தி, ஆட்சி யாளர்களுக்கு நிர்பந்தத்தைக் கொடுத்து அதாவது பிளேக் மெயில் செய்து சாதிக்க முற்பட முடியும். அதற்கு மாறாக “”அல்லாஹ் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; அல்லாஹ் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது” என்ற இறை நம்பிக்கையில் உறுதியானவர்கள் மார்க்கம் தடுத்திருக்கும் இப்படிப்பட்ட காரியங்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

உண்மை நிலை என்ன?
முஸ்லிம்கள் தங்கள் கடமைகளை முறையாக முழுமையாகச் செய்தால், அவர்களது உரிமைகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகத் தருவதாக வாக்களிக்கிறான். (பார்க்க 3:139, 24:55)

எதார்த்த நிலையை அறிந்து கொள்ளுங்கள். உண்மையில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் பா.ஜ.க. காவி வெறியர்களுக்கு இல்லை. அவர்கள் பின்னால் கண் மூடிச் செல்லும் ஹிந்து சகோதரர்களுக்கு இருக்கும் ராமர் பக்திதானும் காவி வகையறாக்களுக்கு இல்லை. அப்படி அவர்களுக்கு ராமர் பக்தி இருந்தால் இந்தியாவில் ராமர் கோவில் கட்ட இடமா இல்லை; ஏன்? அயோத்தியில் இடமா இல்லை! ராமர் பிறந்த இடம் என்று இன்னும் எத்தனை இடங்கள் அயோத்தியிலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன. அந்த இடங்களையயல்லாம் விட்டுவிட்டு பாபர் மஸ்ஜிதில் கோவில் கட்ட வேண்டும் என அடம் பிடிப்பதின் மர்மம் என்ன?

பாபரின் நடுநிலைப் போக்கு!
அதுவும் மன்னர் பாபரின் வரலாறு அவர்க ளுக்குத் தெரியாதா? வெளிநாட்டிலிருந்து அப்போதுதான் பாபர் இந்தியாவில் கால்பதித்துள்ளார். அவருக்குப் பின்னால் வந்த அவரது வாரிசுகளே இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டுள்ளனர். பாபர் ஆரம்பத்தில் ஒரு குறு நில மன்னராகவே இருந்தார். அப்போது அவர் தனது மகனுக்குச் செய்த உபதேசம் என்ன தெரியுமா? “”மகனே நீ மாட்டிறைச்சி உண்பதைக் கைவிட்டுவிடு; மாட்டிறைச்சி சாப்பிடாதே. நமது ஆட்சியில் பெரும்பான்மையினராக இருப்பது ஹிந்துக்கள். அவர்கள் பசுவை தெய்வமாக வணங்குகின்றனர். எனவே அவர்கள் மனம் கோணும்படி நடந்து கொள்ளாதே” என்று மகனுக்கு அறிவுரை கூறிய பாபர், கோவிலை இடித்துவிட்டு பள்ளி கட்ட முற்பட்டிருப்பாரா? கோவிலை இடிப்பது இருக்கட்டும் சிதைந்து தரைமட்டமாகக் கிடந்த ஒரு கோவில் இடத்திலும் பள்ளி கட்ட முற்பட்டிருக்க மாட்டார்.

ஹிந்துப் பெருங்குடி மக்கள் வேடிக்கை பார்த்திருப்பார்களா?
அப்படி கோவிலை இடித்துவிட்டு பள்ளி கட்ட முற்பட்டிருந்தால், அன்று பெரும்பான்மையினராக இருந்த ஹிந்துக்கள் வாய் பொத்தி, கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டா இருந்திப்பார்கள்? பெரும் கலகம் செய்திருக்க மாட்டார்களா? ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னால் கட்டப்பட்ட தஞ்சைக் கோவிலின் வரலாறே இருக்கும்போது 482 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோவில் இடிக்கப்பட்டு பள்ளி கட்டியிருந்தால் அந்த வரலாற்றின் அ, ஆ முதல் அனைத்தும் மறைக்கப் பட்டிருக்க முடியுமா? அப்போது வாழ்ந்த துளசிதாசர் கோவில் இடிப்புப் பற்றித் தனது நூலில் குறிப்பிடாமல் விட்டிருப்பாரா? அது மட்டுமா? ராமர் என்று ஒருவர் உலகில் பிறக்கவுமில்லை; வாழவுமில்லை. ஜாதிகளின் பெயரால் மக்களை பிரித்து ஆரியர்கள் பெருங்கொண்ட இந்திய மக்களை ஆட்டிப் படைக்கும் தீய நோக்குடன் கற்பனை செய்யப்பட்ட ஒரு கற்பனைக் காவியம் என்பதை ஆரிய மாயையை நிலைநாட்ட முற்படும் ஆரியர்கள் தங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் அறிவார்கள்.

மத குருமார்கள் தாங்கள் போதிப்பது வழிகேடு என நன்கு அறிந்த நிலையிலேயே மக்களை வஞ்சிக்கிறார்கள்! மக்களிடையே பொய்யான பல கடவுள்கள் கொள்கையை நிலைநாட்டி அது கொண்டு பிழைப்பு நடத்தும் அனைத்து மதக் குருமார்களும், அவர்கள் நிலைநாட்டும் பல கடவுள் கொள்கை பொய்யானவை என்பதை அவர்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் அறிந்த நிலையில் தான் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அவர்களை நம்பும் அப்பாவி மக்களை நரகில் தள்ளுகிறார்கள்.
(பார்க்க அல்குர்ஆன் 2:75, 109,146, 6:20, 31:6)

இந்த அடிப்படையில் ஆரிய மாயையை நிலை நாட்டி மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் ஆரியர்கள் ராமர் என்ற மனிதர் இவ்வுலகில் பிறக்கவுமில்லை; வாழவுமில்லை என்பதை நன்கு அறிவார்கள். அப்படி ராமர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்ற நம்பிக்கை-உண்மையான பக்தி பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களுக்கு இருக்குமானால் என்றோ ஏதோ ஓர் இடத்தில் ராமர் கோவில் கட்டி வழிபட ஆரம்பித்திருப்பார்கள். அந்த நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆயினும் தங்களின் ஆரிய மாயையை நிலைநாட்டி தங்களை வளர்த்துக் கொள்ள பாபர் மஸ்ஜித் இடம் ராமர் பிறந்த இடம்; அங்குதான் கோவில் கட்ட வேண்டும் என கடந்த 157 வருடங்களாக நாடகமாடி வருகிறார்கள். இந்திய ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், நீதிபதிகளும் காவி எண்ணம் கொண்டிருப்பதால் அதற்குத் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தீர்வு ஏற்பட, அதுவும் முஸ்லிம்களுக்குச் சாதகமாக தீர்ப்புக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? பின்னர் ஏன் முஸ்லிம் இயக்கத்தினர் வரிந்து கட்டிக் கொண்டு பாபரி மஸ்ஜிதை மீட்டே தீருவோம் என நாடகமாடுகிறார்கள்? உண்மை இது தான். ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் ஆரிய மாயைக்காரர்களுக்கு இல்லை. ராமர் பெயரை வைத்து மக்களை ஏமாற்றி தங்களை வளர்த்துக் கொள்ள  இப்படி நாடகமாடுகிறார்கள்.

அதுபோல் முஸ்லிம் இயக்கத்தினர்களுக்கு மஸ்ஜிதை மீட்டு அங்கு தொழுகை நடக்க வேண்டும் என்ற ஆசை உண்மையில் இல்லை. அப்படியே பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டாலும், அந்த சுன்னத் ஜமாஅத் பள்ளியில் இவர்கள் தொழப் போவதில்லை. அதற்குப் பக்கத்திலேயே போட்டிப் பள்ளி கட்டுவார்கள். மேலும் அந்த ஆசை உண்மையிலேயே இருந்தால் தமிழ் நாட்டிலேயே பல பள்ளிகள் தொழுகை இல்லாமல் பாழ்பட்டுக் கிடக்கும் நிலையில் அதுவும் வெறும் 482 வருடங்கள் அல்ல; 1000 வருடப் பள்ளிகளும் தொழுகை இல்லாமல் பாழ்பட்டுக் கிடக்கும் நிலையில், அப்பள்ளிகள் இவர்களைச் சபித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளா மல், 482 வருட பாபரி மஸ்ஜிதுக்காக கச்சையைக் கட்டிக் கொண்டு நாடகம் ஆடுவார்களா?

அல்குர்ஆனையே நிராகரிக்கும் இயக்க வெறியர்கள்!
ஆம்! ஆரிய மாயையை நிலைநாட்ட காவி வெறியர்கள் எப்படி போராடுகிறார்களோ, அதுபோல் இயக்க மாயையை நிலைநாட்ட இயக்க வெறியர்களான இவர்கள் போராடுகிறார்கள். இயக்க மாயையோ, இயக்க வெறியோ இவர்களுக்கு இல்லை என்றால் 21:92, 23:52, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைவாக்கு களை 25:30 கூறுவது போல் முற்றிலும் புறக்கணித்து நிராகரித்து குஃப்ரிலாகி இயக்கங்களைத் தூக்கிப் பிடிப்பார்களா? அவர்கள் அல்லாஹ்வை அஞ்சி, மறுமையை நம்பிச் செயல் படவில்லை. அற்ப உலக ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால் தான் இத்தனை இறைக் கட்டளைகளுக்கும் சுய விளக்கம் கொடுத்து அவற்றை நிராகரித்து எண்ணற்ற பிரிவு இயக்கங்களில் செயல்பட முடிகின்றது.

இந்த மறுக்க முடியாத உண்மையை நீங்கள் நிதர்சனமாக கண்கூடாகப் பார்க்கவே செய்கிறீர்கள். இந்தியத் தந்தை மகாத்மா என மக்களால் போற்றப்படும் திரு காந்தியை சுட்டுக் கொன்றதின் காரணமாக இந்தக் காவி வெறியர்கள் ஹிந்து பெருங்குடி மக்களாலே புறக்கணிக்கப் பட்டிருந்தனர். அவர்களுக்கு இந்த பாபரி மஸ்ஜித் விவகாரம் ஆபத்பாந்தவனாக வந்து கைக் கொடுத்தது. இயக்க வெறி மற்றும் இன உணர்வு மிக்க முஸ்லிம்களும் அவர்கள் வளரக் கைக் கொடுத்தனர். அதன் விளைவு ஹிந்துக களால் புறக்கணிக்கப்பட்டிருந்த காவி வெறியர்கள் மீண்டும் ஹிந்துக்களின் ஆதரவைப் பெற்று மத்தியிலும், சில மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். மத்தியிலும், மாநிலங்களிலும், அனைத்துத் துறைகளிலும் காவியில் ஊறியவர்களைப் புகுத்தும் பெரும் வாய்ப்பைப் பெற்றனர். இன்று அரசுகளும், அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும், நீதித் துறையினரும் முழுக்க முழுக்க காவி வெறியர்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றனர்.

பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகளாக ஆகி விட்டனர். வெளிநாடுகளில் லட்சம் லட்சமாக குவித்து வைத்துள்ளனர் என ஊடகங்கள் அம்பலப்படுத்தி வருகின்றன. ஆம்! பாபரி மஸ்ஜிதை வைத்து அவர்கள் எவற்றைச் சாதிக்க நினைத்தார்களோ அவற்றைச் சாதித்து வருகிறார்கள். ஆம்! இன்று காவி வெறியர்கள் புறக்கணிக்க முடியாத ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்துவிட்டார்கள். அவர்களது நோக்கம் நிறைவேறி விட்டது. ராமர் கோவில் கட்டுவது அவர்களது உண்மை நோக்கமல்ல.

இயக்கத்தினருக்கு மஸ்ஜித் மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணமில்லை!
அதேபோல் முஸ்லிம் இயக்கத்தினருக்கும் உண்மையில் பாபரி மஸ்ஜித் மீட்கப்பட வேண்டும். அங்கு தினசரி ஐங்கால தொழுகை நிலை நாட்டப்பட வேண்டும் என்பது நோக்கமல்ல. பாபரி மஸ்ஜித் மீட்கப்பட்டு அங்கு தொழுகை நடந்தாலும் இவர்கள் அந்தப் பள்ளியில் போய் தொழ மாட்டார்கள். காரணம் அது சுன்னத் ஜமாஅத் பள்ளி. வேண்டுமென்றால் அதற்குப் பக்கத்தில் போட்டிப் பள்ளிக் கட்ட அடுத்த வசூல் வேட்டையில் இறங்குவார்கள். தமிழகத்தில் அவர்களது செயல்பாடுகள் எமது இந்தக் கூற்றை உண்மைப்படுத்துகிறதா? இல்லையா?

ஏன் இந்த நாடகம்?
அப்படியானால் ஏன் கடந்த 18 ஆண்டுகளாக பாபரி மஸ்ஜித் மீட்புப் போராட்டம் என நாடகமாடுகிறார்கள் தெரியுமா? காவி வெறியர்களுக்கு அற்ப உலகியல் ஆதாயங்களே உண்மை யான குறிக்கோளாக இருக்கிறது போல், இயக்க வெறியர்களுக்கும் அற்ப உலகியல் ஆதாயங்களே உண்மையான குறிக்கோள். இறை உணர்வு இல்லாமல் இன உணர்வுக்கு அடிமைப் பட்டுக் கிடக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களை ஏமாற்றி, கோடி கோடியாக பாபரி மஸ்ஜித் விவகாரத்தை வைத்து குவிக்கலாம் எனத் தெரிந்து கொண்டார்கள்.

எனவே அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். காவி வெறியர்களைப் போல் இந்த இயக்க வெறியர்களும் கோடிகோடியாக மக்கள் பணத்தைச் சுருட்டி வருகிறார்கள். இந்த உண்மையை 1990க்கு முன்னால் விலாசமே இல்லாதிருந்த இந்த இயக்க வெறியினர் இன்று எப்படிப்பட்ட வசதி வாய்ப்புகளோடு இருக்கிறார்கள் என்பதன் மூலம் அறியலாம். இந்த வசதி வாய்ப்புகளை ஆகுமான தொழில், வியாபாரம், விவசாயம் மூலம் அவர்கள் அடைந்திருந்தால் அவர்களைக் குற்றப்படுத்த முடியாது. ஆனால் டிசம்பர் 6 துக்கநாள், பாபரி மஸ்ஜித் ­ஹீத் என்றெல்லாம் மூடத்தனமாகக் கூறி ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், முற்றுகைப் போராட்டம், இத்தியாதி, இத்தியாதி காரணங்களைச் சொல்லி இன உணர்வுக்கு ஆட்பட்ட அப்பாவி மக்களை ஏமாற்றி வசூலித்து இந்த வசதி வாய்ப்புகளை அடைந்திருப்பதையே இங்கு குறிப்பிடுகிறோம்.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப்பின்!
30.10.2010 தீர்ப்புக்குப் பின்னரும் மார்க்கம் அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதில் கவனம் செலுத்தாமல், பாபரி மஸ்ஜிதை விடுவிக்க எந்த வகையிலும் உதவாத, கவைக்குதவாத முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல், பந்த் என இந்த இயக்க வெறியர்கள் ஈடுபடுவதின் நோக்கம் பாபரி மஸ்ஜிதை விடுவிப்பதல்ல. தங்களின் இயக்க மாயையை, வெறியை நிலை நாட்டவும், வசூல் வேட்டையில் ஈடுபட்டு இன உணர்வுக்கு ஆளாகும் அப்பாவி முஸ்லிம்கள் அரபு நாடுகளில் இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி ஈட்டும் பணத்தை அபகரிக்கும் தீய நோக்கமே ஆகும். பாபரி மஸ்ஜிதை தொழுகைக்காக மீட்கப் போராடும் இயக்க வெறியர்களிடம் ஐங்கால தொழுகைகளை முறையாக முழுமையாக விடாது தவறாமல் நிலைநாட்டும் உயர் பண்பு இல்லை என்பதே எமது இந்தக் கூற்றை உண்மைப் படுத்தும்.

இரு சாராரின் சாதனை என்ன?
இப்படி காவி வெறியர்கள் ராமர் கோவில் கட்டியபாடும் இல்லை; முஸ்லிம் இயக்க வெறியர்கள் பாபரி மஸ்ஜிதை மீட்டி அங்கு தொழுகை நடத்தியபாடும் இல்லை. ஆனால் இருசாராரும் அற்பமான இவ்வுலகில் தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டார்கள்; வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டார்கள். கோடிக் கணக்கில் பணத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். இவ்வுலக வசதி வாய்ப்புகளைப் பெருக்கும் அவர்களின் இலட்சியம் நிறைவேறி வருகிறது. இந்த இரு சாராரின் போட்டா போட்டியில் இதுவரை முஸ்லிம்களின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் நாசமாகியுள்ளன. பல ஆயிரம் உயிர்கள் பலியாகியுள்ளன. ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான ஆண்களும், பெண்களும் உடல் ஊனமாக் கப்பட்டுள்ளனர். 2.7 ஏக்கர் பாபரி மஸ்ஜித் இடத்திற்குப் பகரமாக அதைவிட பல்லாயிரம் மடங்கு நட்டத்தை முஸ்லிம்கள் இதுவரை அடைந்துள்ளனர். இன்னும் எத்தனை மடங்கு நட்டம் ஏற்படப் போகிறதோ!

சமுதாய துரோகிகள்!
இயக்க வெறியினர் பல கோடிகளையும், பேர் புகழையும் அடையும் நோக்கத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பல்லாயிரம் கோடிகளையும், பல்லாயிரம் ஆண், பெண் உயிர்களையும், பல்லாயிரம் பெண்களின் கற்பையும், பல்லாயிரம் ஆண், பெண்களின் உடல் ஊனங்களையும் பகரமாகக் கொடுக்க முனைந்து செயல்படும் இயக்க வெறியினர் எப்படிப்பட்டவர்கள்? சொல்லுங்கள்.

லஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் என அனைத்திலும் ஊறித் திளைக்கும், தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக மக்களை ஜாதிகளின் பெயரால் பிரித்தாலும் இன்றைய கேடுகெட்ட அரசியல்வாதிகள் மேலா? அல்லது அதே லஞ்சம், ஊழல், ஒழுங்கீனம் அனைத்தையும் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டு, முஸ்லிம்களை குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என பொய்யாகச் சொல்லி 21:92, 23:52, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் கட்டளைகளுக்கு முரணாக இயக்கங்களின் பெயரால் பிரித்து அற்ப உலகியல் ஆதாயங்களை அடையும் இந்த இயக்க வெறியர்கள் தரங்கெட்டவர்களா? சொல்லுங்கள். சமுதாய துரோகிகள் யார்?

ஆம்! தங்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக முழுச் சமுதாயத்தையே பலியிடும் சமுதாய துரோகிகள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் இயக்க வெறியர்களே!

யார் கூமுட்டைகள்?
பாபரி மஸ்ஜித் வழக்குகளில் இதுவரை மத்திய, மாநில அரசுகளும், அரசு அதிகாரிகளும், நீதி மன்றங்களும் எடுத்துள்ள காவி பக்க சார்பான நட வடிக்கைகளை, தீர்ப்புகளைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு நடுநிலைச் சிந்தனையாளன், எதிர் காலத்திலும் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை உணர முடியும். உணர முடியாதவர்கள் கூமுட்டைகளாகவே இருக்க முடியும்.

சொத்துத் தகராறு பற்றி சட்டம் என்ன சொல்கிறது?
ஒரு சொத்துக்கு இரு தரப்பாரோ, முத்தரப் பாரோ உரிமை கொண்டாடி வழக்குத் தொடர்ந்தால், அவ்வழக்கை விசாரிக்கும் நீதிபதி அவ்வழக்கை எப்படி விசாரிக்க வேண்டும்? எப்படிப்பட்ட ஆதாரங்களைப் பார்க்க வேண்டும்? எப்படிப்பட்ட சாட்சிகளின் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்று இந்திய அரசியல் சாசன சட்ட விதிகள் தெளிவாக வகுக்கப் பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் நீதிபதிகள் புறக்கணித்து விட்டு, அகழ்வாராய்ச்சி முடிவு அடிப்படையிலும், மூட நம்பிக்கை அடிப்படையிலும், ஆரிய மாயை அடிப்படையிலும் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள் கூமுட்டைகளாகவே இருக்க முடியும் என இயக்க மாயையை நிலைநாட்ட முற்படும் ஓர் அமைப் பின் தலைவர் சொல்லி வருவதாக அறிகிறோம்.

இவரின் நிலை என்ன?
அப்படியானால் ஆரிய மாயையை நிலை நாட்டும் அற்பப் புத்தி காரணமாக, அம்பேத்கர், மற்றும் சில மனிதர்களால் வடிவமைக்கப்பட்ட அரசியல் சட்ட விதிகளைப் புறக்கணித்து விட்டு தனது மனோ விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள் கூமுட்டைகள் என்றால், தனது இயக்க மாயையை நிலைநாட்டும் அதே அற்பப் புத்தி காரணமாக, அகில உலகங்களையும் படைத்து, மனிதனுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவையும் கொடுத்து, மனித வாழ்க்கை முறை இப்படித்தான் இருக்க வேண்டும் என வடிவமைத்து, அதைத் தெளிவுபடுத்தும் இறுதி வாழ்க்கை நெறியாக இறைவனால் அளிக்கப்பட்டுள்ள அல்குர்ஆனில் சமூகங்களிடையே ஏற்படும் இப்படிப்பட்ட விரோத, குரோத நிலைகளில், இறைக் கட்டளைகளுக்கு அடி பணிந்து இப்படித்தான் நடக்க வேண்டும் என ஆல இம்ரான் 3:186, ஹாமீம் ஹஜ்தா 41:34 தெள்ளத் தெளிவாகக் கூறி இருக்க அவற்றைப் புறக்கணித்து தனது மனோ விருப்பத்திற்கு அடிபணிந்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், முற்றுகை, சாலை மறியல் என அப்பாவி பொது மக்களுக்கத் துன்பம் கொடுக்கும் இவர்கள் அந்த நீதிபதிகளை விட கூமுட்டைகள் என்பதை மறுக்க முடியுமா?

அல்குர்ஆன் 21:92, 23:52, 53,54,55,56, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைக்கட்டளைகளை நிராகரித்துவிட்டு, குஃப்ரிலாகி அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக மனோ இச்சைக்கு வயப்பட்டு இயக்க மாயையை நிலைநாட்ட முற்படும் இவர்கள், மனித சட்டங்களைப் புறக்கணித்து மனோ இச்சைக்கு அடிமைப் பட்டு ஆரிய மாயையை நிலைநாட்ட முற்பட்ட அந்த நீதிபதிகளைவிட பல ஆயிரம் மடங்கு கூமுட்டைகள் என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?

பிறர் தவறு மலை போல்!
ஆம்! அறிவு குறைந்தவர்களிடம் உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டவர்களிடம் பிறரிடம் காணப்படும் ஊசியளவு தவறு மலை போன்ற தவறாகவும், அவர்களின் மலை போன்ற தவறுகள் ஊசி போன்ற தவறாகவும் காணப்படுவது ஆச்சரியம் தரும் ஒன்றல்ல. இயக்க மாயையை நிலைநாட்ட அவர்கள் கைக் கொள்ளும் பேச்சுச் சூன்யம், மயக்கு மொழிகள், உலகியல் ஆதாயங்களான இட ஒதுக்கீடு, வாழ்வுரிமை (வாழ்வுரிமையை அரசுகளே கொடுக்கும் என்பது இவர்களின் அல்லாஹ்வை மறந்த மூட நம்பிக்கை; பார்க்க 13:26) இத்தியாதி, இந்தியாதி கூப்பாடுகள், ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை விட ஷைத்தானின் சூன்யப் பேச்சு அழகாகவும், சரியாகவும் தெரிந்தது போல், ஆதத்தின் சந்ததிகளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான இந்த மவ்லவிகளின் சூன்யப் பேச்சில் மயங்குவது ஆச்சரியம் தரும் விஷயம் அல்ல. மக்களில் மிகப் பெரும் பான்மையினர் வழிகெடுக்கும் இம் மவ்லவிகள் பின்னால் தான் சென்று நரகை அடைவார்கள். அல்லாஹ் அருள் புரிந்த மிகமிகச் சொற்பமானவர்களே ஷைத்தானின் ஏஜண்டுகளான இவர் களில் வசீகர வலையிலிருந்து விடுபடுவார்கள்.
(பார்க்க 7:20-27, 4:118-121, 20:116-128, 38:75-88)

இந்த இயக்க வெறியர்களின் மாய, வசீகர, உடும்புப் பிடியிலிருந்தும், இன உணர்விலிருந்தும் விடுபடுகிறவர்கள் மிகமிகச் சொற்ப மானவர்களே என்பதை 4:118-121, 38:75-88 இறைவாக்குகளை நடுநிலையோடு சுய சிந்தனையோடு மீண்டும் மீண்டும் படித்து உணர்கிறவர்கள் மட்டுமே அறிந்து, மத்ஹபு, தரீக்கா, இயக்கம் போன்ற பிரிவுகளை விட்டு தவ்பா செய்து மீள்வார்கள். அவர்கள் மட்டுமே ஐங்காலத் தொழுகைகளை முறையாக முழுமையாக நபிவழிப்படி தவறாது தொழுவதோடு, ரமழான் நோன்புகளை பிறையை புறக்கண்ணால் பார்க்க வேண்டும், அதுவே நபி வழி எனப் பொய்யாகக் கூறி அடம் பிடிக்காமல், ரமழான் மாதத்தை அடைந்து விட்டோம் என்பதை அறிவியல் அறிவு கொண்டு திட்டமாகத் தெரிந்த பின்னரும் ரமழான் முதல் நாள் நோன்பு நோற்காமலும், ஷவ்வால் முதல் நாள் ஹராமான முறையில் நோன்பு நோற்றும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யாமல் உரிய நாட்களில் நோன்பு நோற்றும், முறையாக வருடா வருடம் ஜகாத் கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்தும் இதர மார்க்கக் கடமைகளைப் பேணி, ஹலால் ஹராம் பேணி நடப்பார்கள்.

ஆதத்தின் சந்ததிகளில் மிகமிக அதிகமானவர்கள் அல்குர்ஆனை விளங்கமாட்டார்கள், நன்றி செலுத்த மாட்டார்கள், நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள், உண்மையை உணர மாட்டார்கள், பெரும் பாவிகள், அநியாயக்காரர்கள், வழிகேடர்கள், குருடர்கள், செவிடர்கள், கால்நடைகளைவிட கேடுகெட்டவர்கள் என அல்குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் குறிப்பிட்டுக் கூறுகிறான் அல்லாஹ். இவர்கள் நரகத்தை நிரப்பும் பெருங்கூட்டம். மிகமிகச் சொற்பமானவர்களே அல்குர்ஆனைப் படித்து விளங்கி அதன்படி நடப்பார்கள். இவர்களே சுவர்க்கம் புகும் நல்லடியார்கள். நேர்வழி நடக்கும் சொற்பத் தொகையினர் அல்குர்ஆனின் எண்ணற்றக் கட்டளைகளை நிராகரித் துவிட்டு இந்த மத குருமார்களுக்கு மார்க்கப் பணிக்காக ஊதியம்-சம்பளம் ஒருபோதும் கொடுக்கமாட்டார்கள்.

எனவே மார்க்கப் பணியை பிழைப்பாகக் கொண்ட மத குருமார்கள் நேர்வழி நடக்கும் இச்சிறு கூட்டத்தைத் திருப்திப்படுத்த சத்தியத்தை -நேர்வழியைப் போதிப்பார்களா? ஒருபோதும் போதிக்க மாட்டார்கள். அதற்கு மாறாக கோணல் வழிகளை நேர் வழியாகக் காட்டி நரகம் புகும் பெருங் கொண்ட மக்களை திருப்திப்படுத்தி அவர்களிடமிருந்து ஊதியத்தை-சம்பளத்தைப் பெறவே முற்படுவார்கள், சிந்தியுங்கள். ஆம்! கூலிக்கு-ஊதியத்திற்கு-சம்பளத்திற்கு மார்க்கப் பணி புரிகிறவர்கள் கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதையே அல்குர்ஆன் 2:41, 74, 79, 174, 3:78,187,188, 4:44,46, 5:62,63, 6:21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் நெத்தியடியாகப் பறைசாற்றுகின்றன. இவற்றைப் படித்து விளங்கி உணர்வு பெற்று மதகுருமார்களான மவ்லவிகளை விட்டு விலகி, அல்லாஹ்வின் 7:3, 33:36, 18:102-106 அல்குர்ஆன் வசனங்களைப் படித்து அதன்படி நடவாதவர்கள் 33:66-68 கூறுகிறபடி நரகம் புகுந்து கூப்பாடு போட நேரிடும்; அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஒவ்வோர் ஆண்டிலும் நடந்த முதன்மை நிகழ்வுகள்:
1527: பாபர் இந்தியா மீது படையயடுத்தார். பல இந்து மன்னர்களைத் தோற்கடித்து பேரரசை நிறுவினார்.

1528: பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். இராமர் கோயில் இருந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப் பெற்றதாக இந்துக்கள் புகார் கூறினர். அதில் இருந்து தான் சிக்கல் தொடங்கியது.

1853: பாபர் மசூதியைக் கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
1859: ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு இசுலாமியர்களும் இந்துக்களும் தனித்தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
1885 : மகந்த் இரகுவர் தாசு என்பவர் இந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட அனுமதிக் கும்படி வழக்குத் தொடர்ந்தார்.
1886: இந்துக்களுக்கு சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பெற்று இருப்பதாக பைசாபாத் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு கூறினார்.
1949: மறைமுகமாக பாபர் மசூதிக்குள் இராமர் சிலையைக் கொண்டு வந்து வைத்தனர். இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. இதனால் சிக்கலுக்கு உரிய இடம் பூட்டப்பட்டது.
1950: சிக்கலுக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
1959: அந்த இடத்தில் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
1961: சிக்கலுக்கு உரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்குத் தொடர்ந்தது.
1984: கருத்து முரணுக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கம் தொடங்கப் பெற்றது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
1986: பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.
1989: இராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது கருத்து முரணுக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோயில் கட்ட பூமி வழிபாடு நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு நீதிமன்றத் திற்கு மாற்றப்பட்டது.
1990 செப்: பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு இரத யாத்திரை தொடங்கினார்.
1990, நவ. : பீகாரில் அத்வானி இரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப் பட்டார். அப்போது பிரதமராக இருந்த வி.பி. சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
1992, டி. 6: பாபர் மசூதி இடிக்கப்பெற்று தற்காலிக இராமர் கோயில் கூடாரமாகக் கட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாகத் தொடரப் பெற்ற வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கட்டளை இட்டது.
2003 மே: இந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் நீதிமன்றம் ஆணையிட்டது.
2003 ஆக. 22: அகழ்வாராய்ச்சி அறிக்கை நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பத்தாம் நூற்றாண்டு கட்டடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
2003, ஆக. 31: அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
2010, ஜூலை கருத்து முரணுக்கு (சர்ச்சைக்கு) உரிய இடம் யாருக்குச் சொந்தம் என்பது பற்றி அறுபது ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.
2010, செப். 8: தீர்ப்பு செப்டம்பர் 24ஆம் நாள் வெளிடப்பெறும் என்று நீதிமன்றம் தள்ளி வைத்தது.
செப். 30ஆம் நாள் தீர்ப்பு அளிக்கப் பட்டது. நீதிபதிகள் தரம் வீர்சர்மா, கதிர் அகர்வால், சி.யு.கான் ஆகியோர் தனித் தனியாகத் தீர்ப்பு அளித்தனர்.
(நன்றி தமிழ் இலெமுரியா அக். 15-நவம். 14, 2010)

Previous post:

Next post: