முஸ்லிம்களே! ஈமானை இழந்து மோசம் போகாதீர்கள்!

in 2014 நவம்பர்,தலையங்கம்

எமக்கு குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்பட்ட 1983 காலக்கட்டத்திலிருந்து, 2:186, 7:3, 18:102-106, 33:66-68, 53:2-5, 59:7 போன்ற வசனங்களைக் காட்டி மார்க்கம் என்றால் அல்லாஹ்வும், அவனது இறுதித் தூதரும் காட்டியவை மட்டும் தான்; அதற்கு மேல் அந்த மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ குறைக்கவோ மனிதர்களில் யாருமே அதிகாரம் பெற மாட்டார் என்று கூறி வருகிறோம். மேலும் 5:3, 3:19,85 வசனங்களைப் படித்துக் காட்டி இறுதித் தூதரின் காலத்திலேயே மார்க்கம் முற்றிலும் நிறைவு பெற்றுவிட்டது. உலகம் அழியும் வரை மார்க்கத்தில் புதிதாக ஒன்றைச் சேர்க்கும் நிலையோ, அதிலிருந்து ஒன்றை அகற்றும் நிலையோ இல்லவே இல்லை என்றும் கூறி வருகிறோம். ஆலிம்-அவாம் என்ற பிரிவோ, மதகுருமார்கள் என்ற ஒரு இனமோ மார்க்கத்தில் இல்லவே இல்லை என்றும் கூறி வருகிறோம். 5 சதவிகிதமும் தேறாத ஒரு சிறு கூட்டம் மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்ற சாக்கில் 95 சதவிகித பெருங்கூட்டத்தை ஆட்டிப் படைக்கும் அநியாயத்திற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அணுவளவும் இடமே இல்லை என்பதையும் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கொண்டே அழுத்தமாகச் சொல்கிறோம். (9:71, 103:1-3)

இவ்வுலக வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கை; இதில் யாரும் யாரையும் காப்பி அடிக்கக் கூடாது. எந்த மவ்லவியையும் நம்பி ஏமாறக் கூடாது என்று 67:2 மற்றும் பல இறைவாக்குகளைக் காட்டியே எச்சரிக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் பெரும்பாலான முஸ்லிம்களுக்குச் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றது. இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் 17:45-47,89, 22:72, 25:30,60, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் வெறுப்பையே அதிகப்படுத்துகின்றன. இந்தச் சமூகத்திற்கு என்ன நேர்ந்தது? எதையும் புரிந்து கொள்ளத் தயாரில்லையே என்று 4:78 இறைவாக்குக் கூறும் நிலையில் முஸ்லிம் சமூகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

இம்மதகுருமார்களுக்குப் பின்னால் முஸ்லிம் சமூகம் இருப்பதால் அவர்களில் மிகப் பெரும்பாலோர் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் ஈமான் உள்ளத்தில் நுழையாமல் பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்கள். ஈமான்(நம்பிக்கை) கொண்டோரிலும் பெரும்பான்மையோர் 12:106 இறைவாக்குக் கூறுவதுபோல் இணை வைக்காத நிலையில் ஈமான் கொள்ளவில்லை. 9:31 குர்ஆன் வசனத்தை நிராகரித்து கிறித்தவர்கள் தங்கள் மதகுருமார்களைத் தங்களின் ரப்பாக ஆக்கிக் கொண்டது போல், பெரும்பான்மை முஸ்லிம்கள் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களை தங்களின் ரப்பாகக் கொண்டு மூட நம்பிக்கைகளிலும், மூடச் சடங்குகளிலும், 7:86, 29:29 குர்ஆன் வசனங்களை நிராகரித்து ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் எனப் பொது மக்களுக்குப் பெருத்த இடையூறை, சிரமங்களைத் தரும் துர்ச் செயல்களில் துணிந்து ஈடுபடுகின்றனர்.

பாபரி மஸ்ஜித் விவகாரம் பற்றி 1990 மார்ச் இதழிலேயே, அது 1992ல் இடிபடுவதற்கு 2¾ வருடங்களுக்கு முன்னரே எழுதினோம். அப்போது காவிக் கட்சியினர் இரண்டே இரண்டு எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். காவியினர் தேன் தொட்டு வைத்து 19ம் நூற்றிலிருந்தே இருந்து வரும் பாபர் மஸ்ஜித் விவகாரத்தை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். அதற்கு முஸ்லிம்கள் பலியாகக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் ஹுதைபியா உடன்படிக்கையை அழகிய முன்மாதிரியாகக் கொண்டு (பார்க்க : 3:31, 33:21) காவியினர் புதிதாகக் கட்டித் தரும் பள்ளியை ஏற்றுக்கொண்டு 19-ம் நூற்றாண்டிலிருந்தே விவகாரத்தில் இருக்கும் பாபரி மஸ்ஜிதை விட்டு விடுங்கள் என்று குர்ஆன், ஹதீஃத் ஆதார அடிப்படையில் எழுதி இருந்தோம்.

மதகுருமார்களும், அரசியல் குருமார்களும் தங்களின் அற்ப உலக ஆதாயங்களை, அதாவது வசூல் வேட்டையைக் குறியாகக் கொண்டு, எம்மை R.S.S கைக்கூலி என அவதூறு பரப்பி குர்ஆன், ஹதீஃத் போதனையை முஸ்லிம் சமுதாயம் நிராகரிக்க வைத்தனர். அதன் விளைவு பாபரி மஸ்ஜித் இடிபட்டு அங்கு கோவில் அமையக் காரணமாயிற்று. அது மட்டுமல்ல பாபரி மஸ்ஜித் பெறுமதியை விட பல ஆயிரம் கோடியை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். பல ஆயிரம் பெண்கள் கற்பிழந்துள்ளனர். பல ஆயிரம் பேர் ஊனமுற்றவர்களாகப் பெருத்த வேதனையுடன் காலத்தைக் கழிக்கின்றனர்.

அது மட்டுமா? குர்ஆனில் காணப்படும் தற்காப்பு யுத்தங்கள் பற்றிய வசனங்களைக் காட்டி இம் மதகுருமார்கள் தூண்டிய தீவிரவாதச் செயல்களையும், அராஜகச் செயல்களையும் குர்ஆன், ஹதீஃதே கட்டளையிடுகிறது என்று 2:159 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களை வளைத்துத் திரித்து சுய விளக்கம் கொடுத்து 20 வயதுக்கும் குறைந்த வாலிபர்களுக்குக் கொம்பு சீவி தீவிரவாதச் செயல்களில் ஈடுபட வைத்தனர் 1987க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட இயக்கத் தலைவர்கள். இவர்கள் கற்பனை செய்து செயல்படுத்தும் இயக்கங்கள் குர்ஆன் 7:71, 12:40, 53:23 வசனங்கள் கூறுவது போல் இவர்களாகக் கற்பனை செய்து இட்டுக்கொண்ட பெயர்கள், இயக்கங்களுக்கு அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லை. வழிகேடானவை, நரகில் கொண்டு சேர்ப்பவை! என்பதை விளங்கலாம். நேரடியாகப் படித்து விளங்கவும்!

சுன்னத் ஜமாஅத்தினர் தர்கா, தரீக்கா, கூடு கொடி, மவ்லூது, கந்தூரி, கத்தம், ஃபாத்திஹா, மீலாது ஊர்வலம் என மக்களை ஏமாற்றி வசூல் மன்னர்களாகி வயிறு வளர்க்கின்றனர். இயக்கத்தினரோ ஜிஹாது, போராட்டம், ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல், இட ஒதுக்கீடு, சிறை நிரப்புப் போராட்டம், இழந்ததை மீட்போம், இருப்பதைக் காப்போம் என மதிமயக்கும் டயலாக் முழங்கி மக்களை, ஏமாற்றி வசூல் மன்னர்களாகி வயிறு வளர்க்கின்றனர். இதுதான் வித்தியாசம்.

இவர்களின் இந்த குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட இப்படிப்பட்டச் செயல் பாடுகளை குர்ஆன், ஹதீஃத் என்ற பெயரால் முழங்கி வருவதால், முஸ்லிம் அல்லாதவர்கள், குறிப்பாக காவியினர் இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிர வாதம், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என ஊடகங்கள் அனைத்திலும் செய்தி பரப்பி பெருங்கொண்ட மக்கள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் மிகமிகத் தவறான எண்ணம் கொண்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் நாட்டில் நடக்கும் அராஜகச் செயல்கள் அனைத்திலும் முஸ்லிம் வாலிபர்களைக் குற்றவாளியாக்கிக் கைது செய்து கொட்டடியில் வைத்து கொடும் சித்திரவதை செய்யப் பெரிதும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். சில வாலிபர்களை காவல்துறைக் கட்டிடத்தில் வைத்து சுட்டுக் கொல்லும் தைரியமும் காவல்துறையினருக்கு ஏற்பட இந்த இயக்கத்தினரே வழி வகுத்துக் கொடுத்துள்ளனர். இப்படிப்பட்ட தீவிரவாத அராஜகச் செயல்களில் ஈடுபடும் காவியினர் இப்படிப்பட்ட தீச் செயல்களை அவர்களின் இந்துமதம் போதிப்பதாகச் சொல்வதில்லை. இயக்கத்தினரே சிந்தியுங்கள்!

இதன் விளைவு என்ன தெரியுமா? காவி தீவிர வாதிகள் தீவிரவாத, அராஜகச் செயல்களில் ஈடுபட்டு விட்டு அப்பழியை முஸ்லிம் வாலிபர்கள் மீது மிக எளிதாகச் சுமத்த முடிகிறது. காவல்துறையிலும் காவியினரே மிகைத்திருப்பதால் அந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது எஃப்.ஐ.ஆர். போட்டு அவர்கள் மீது கடும் சித்திரவைதகளை அவிழ்த்து விடுவதோடு, சிலரைச் சுட்டுக் கொல்லவும் துணிந்து வலிடுகின்றனர். இதற்கு வழிவகுத்தவர்கள் குர்ஆன் போதனைக்கு முரணாகச் செயல்படும் முஸ்லிம் இயக்கத்தினரே!

இந்த இயக்கத்தினரின் அராஜகச் செயல்களை குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரண்பட்ட செயல்களை 2004 ஜனவரி இதழ் தலையங்கமாகவே “”அறிஞர்களே! அறிவு ஜீவிகளே!! ஆலிம்களே!!! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அன்று நாம் எது நடக்கும் என்று எழுதினோமோ அது இன்று நடக்கிறது. அதை அறிய மீண்டும் அந்த ஆக்கத்தை இந்த இதழில் வெளியிட்டுள்ளோம். 1990களில் இரண்டே இரண்டு எம்.பி.க்களை மட்டுமே கொண்டிருந்த, எந்த மாநிலத்தையும் கைப்பற்ற முடியாதிருந்த காவியினர் பாபரி மஸ்ஜித் விவகாரத்தை வைத்து உ.பி. மாநில அரசையும் இன்னும் சில மாநில அரசுகளையும் கைப்பற்றினர். மத்தியில் எம்.பிக்களையும் அதிகப்படுத்திக் கொண்டனர்.

அடுத்து சில மாநிலக் கட்சிகளின் ஆதரவோடு மத்திய அரசையும் கைப்பற்றி அதில் அமர்ந்தனர். ஆட்சி அதிகாரத்தின் முக்கியப் பொறுப்புகளில் காவி மனம் படைத்தவர்களை அமர்த்தினர். பாட நூல்களிலும் தங்களுக்குச் சாதகமாகத் திரித்து வளைத்து பொய்யாக எழுதி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலக்க வழிவகை செய்து கொண்டனர். அடுத்துப் பத்தாண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்தாலும் ஆட்சி அதிகாரம் காவியினரிடமே இருந்தது. இப்போது 2014ல் தனிக்கட்சியாக முழுப் பலத்துடன் மத்திய அரசைக் கைப்பற்றி விட்டனர். இப்போது ஆட்சியும் காவியினரிடம் தான். ஆட்சி அதிகாரமும் காவியினரிடம்தான்.

அடுத்து நீண்ட காலமாக காங்கிரசிடம் இருந்து வந்த மாநில ஆட்சிகளையும் கைப்பற்றி வருகின்றனர். தமிழக ஆட்சியையும் கைப்பற்றக் காய்களை நகர்த்திப் பெரும் சதித்திட்டங்கள் தீட்டி வருகின்றனர். ஆம்! இந்தியாவின் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் காவியினரிடம் செல்ல வழி வகுத்துக் கொடுத்தவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களும், மதகுருமார்களும்தான் என்பதில் சந்தேகமுண்டா? ஒருபோதும் இல்லை. எப்படி மனிதர்கள் தங்களின் அழிவையும், கேடுகளையும் தங்களின் கைகளால் தேடிக் கொள்கிறார்கள் என்று குர்ஆன் கூறுவது போல, முஸ்லிம்கள் தங்களின் அழிவையும், கேடுகளையும் தங்கள் கைகளால் தேடிக் கொள்கிறார்களே அல்லாமல் முஸ்லிம் அல்லாதவர்களால் அல்ல என்ற நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு பொய்யாகுமா? எனவே முஸ்லிம் மதகுருமார்களை யும், அரசியல் குருமார்களையும் நம்பி, அவர்களின் பேச்சை வேதவாக்காகக் கொண்டு செயல்பட்டதால் தங்களின் கைகளால் தேடிக் கொண்ட அழிவையே, கேடுகளையே முஸ்லிம்கள் சந்தித்து வருகிறார்கள். முஸ்லிம்களை இந்த நாட்டை விட்டுத் துடைத்தெறிய கங்கணம் கட்டிக் கொண்டு செயல் படும் காவியினரை ஆட்சியில் அமர்த்த துணை போயுள்ளனர்.

இந்த முஸ்லிம் மதகுருமார்களைக் கண்மூடி நம்பியதால் அவர்கள் துணிந்து 99¾ சதவிகித முஸ்லிம்களை ஈமான் (நம்பிக்கை) உள்ளத்தில் நுழையாதவர்களாகவும், (49:14) இணை வைக்காத நிலையில் நம்பிக்கை கொள்ளாதவர்களாகவும் (12:106) ஆக்கி வைத்துள்ளனர். அதனால் இவ்வுலகில் பெரும் இழப்புக்கும், துன்பங்களுக்கும்,நரக வேதனையை இவ்வுலகிலேயே அனுபவிப்பதோடு, நாளை மறுமையிலும் மாபெரும் கேடும் நரக வேதனையையும் அனுபவிக்க இருக்கிறார்கள். இந்த உண்மையை 7:35-41 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றில் பெருமையடிப்போர் என்று சில வசனங்கள் சாட்சாத் பெருமையடிக்கும் மத, அரசியல் தலைவர்களையே குறிக்கின்றன. எச்சரிக்கை!

எனவே அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே!! நீங்கள் எம்மையும் நம்பாதீர்கள், மதகுருமார்களையும் நம்பாதீர்கள், அரசியல் தலைவர்களையும் நம்பாதீர்கள். அல்லாஹ்வுடைய இறுதித் தூதருக்குப் பிறகு மனிதர்களில் எவரையும் நம்பாதீர்கள். 2:186-ல் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளதற்கு முற்றிலும் அடிபணிந்து அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்புங்கள். அல்லாஹ்வின் வழிகாட்டலான அல்குர்ஆனையும், அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ்வின் இறுதித் தூதரின் வழிகாட்டலையும் மட்டுமே பின்பற்றுங்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இந்த மதகுருமார்களான மவ்லவிகளையும் இயக்க, அரசியல் தலைவர்களையும் முற்றிலுமாகப் புறக்கணித்து ஒதுக்கி விடுங்கள்.

3:102 இறைக்க கட்டளைப்படி முற்றிலும் இஸ் லாத்தில் நுழைந்து விடுங்கள். சுன்னத் ஜமாஅத், தரீக்கா ஜமாஅத், தப்லீஃக் ஜமாஅத், அஹ்ல ஹதீஃத் ஜமாஅத், ஸலஃபி ஜமாஅத், ஜாக், முஜாஹித், ததஜ, இதஜ, இன்ன பிற இயக்க ஜமாஅத்கள் என்றில்லா மல் முஸ்லிம்களிலுள்ளவர்களாக மட்டுமே மரணிக்க முன்வாருங்கள்.

3:103 இறைவாக்குக் கூறுவது போல் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். எந்த நிலையிலும் பிரியாதீர்கள். அதுவே பெருத்த வழிகேடு. தனித்தனியாகப் பிரிந்து தனித் தனித் தலைமைக்கு ஆசைப்படாதீர்கள். அது உங் களை நரகில் கொண்டு சேர்க்கும். நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரே தலைமையில் அணிதிரளுங் கள். அதுவே உங்களுக்குப் பலத்தைத் தரும்.

நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம். எங்களோடு சேர்ந்து ஒற்றுமை எனும் கயிறைப் பற்றிப் பிடியுங்கள் என்று கூறும் வழிகேடர்களை நம்பாதீர்கள். எம்மையும் நம்பாதீர்கள். ஒரே ஜமாஅத்தாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி ஒரே தலைமையில் ஒன்றிணைந்து உங்களில் தகுதியான ஒருவரை, அதாவது குர்ஆன், ஹதீஃத் போதனைப்படி, அவற்றிற்கு இஜ்மா, கியாஸ் என்றோ, லாஜிக், பாலிசி என்றோ சுயவிளக்கம் கொடுக்காமல், ஆயாத்தும் முஹ்க்கமாத் வசனங்களுக்கு இரண்டாவது பொருள் எடுக்காமல், அதன் நேரடிக் கருத்தை அப்படியே எடுத்து நடக்கும் ஒருவரை அமீராக, தேர்ந்தெடுத்து அவரது வழி காட்டல்படி ஒற்றுமையாக நடக்க முன்வாருங்கள். அதுவே உங்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றியை ஈட்டித்தரும். நான் அந்த அமீர் பதவிக்குத் தகுதியில்லாதவன் என்பதை இப்போதே அறிவிக்கிறேன். எனக்கு சந்திரக் கணக்குப்படி 75ம் அகவை நடக்கிறது. முதுமைப் பருவம். தலைமை தாங்கி வழி நடத்தும் தெம்பு எனக்கில்லை. தலைமை தாங்கிய நபி(ஸல்), அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உதுமான் (ரழி), அலீ(ரழி) போன்ற வயதுடைய ஒருவரை அமீராக தேர்ந்தெடுத்து அவரை குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றச் செய்து அவரது தலைமையின் கீழ் ஒன்றுபட்டுச் செயல்பட முன்வாருங்கள். அதுவே முஸ்லிம்களுக்கு ஈருலக வெற்றியை ஈட்டித்தரும். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: