பீ.ஜை. அன்றும்! இன்றும்!

in 2015 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ்

அந்நஜாத் 1986
விமர்சனம் : எங்கள் ஊரில் ஒரு ஹாபிழ் பணத்துக்காகத் தான் தராவீஹ் தொழ வைக்கிறார்! பணம் வாங்காத ஹாபிழ் ஒருவரை உடனே அனுப்பவும்! இப்போது தொழவைப்பவரை நாங்கள் அனுப்பி விடுகிறோம். எல்லா ஊர்களுக்கும் ஹாபிழ்கள் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் ஊதியம் வாங்காமல் தான் ஆசிரியராக சேவை செய்கி றீர்களா? A.K அப்துஸ்ஸுபுஹான், மெயின் ரோடு, லெப்பைக்குடிகாடு.

விளக்கம் : ஹாபிழ்கள் தான் தராவீஹ் தொழ வைக்க வேண்டும் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? ஏன் உங்களுக்கு திருகுர்ஆனின் சில சூராக்களும், தொழுகையின் சட்டங்களும், தெரிந்தால் நீங்களே அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாமே. புரோகிதர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடை முறைப்படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர்களைச் சப்ளை செய்வதில்லை.

நஜாத்தின் ஆசிரியர் பணிக்குச் சம்பளம் வாங்குவதும், நீங்கள் குறிப்பிடுவதும் வெவ்வேறானவை. இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்காகச் சம்பளம் வாங்குவதில் தவறு எதுவும் கிடையாது. ஆனால் நான் இதற்காக ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவுமில்லை, வாங்குவதாகவும் இல்லை. (அந்நஜாத் ஜூன் 86, பக்.2)

புரோகிதர் முறையை மாற்றியமைத்து மக்கள் தாங்களே தங்களின் தீனுடைய காரியங்களை நடை முறைப்படுத்தும் நிலைமைக்கு உயர வேண்டும் என்பதுதான் எங்களின் இலட்சியம். நாங்கள் புரோகிதர்களைச் சப்ளை செய்வதில்லை என்று 1986ல் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி சொன்னவர், 1987ல் அந்நஜாத்தை விட்டு வெளியேறிய பின்னர் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக புரோகித மதர ஸாக்கள் அமைத்து, புரோகிதர்களை சப்ளை செய்து வருகிறார். அன்று கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடாது என்று ஒப்புக் கொண்டவர், அதன் பின்னர் புரோகிதர்களை தாயிகள் என்றும் கூலியை ஊக்கத் தொகை என்றும் இவராகப் பெயர் மாற்றம் செய்து 5:87, 10:59, 16:116 இறைவாக்குகள் கூறுவது போல் தனது மனோ இச்சைப்படி ஹராம்களை ஹலாலாக்கி வருகிறார்.

தன் மீது கடமையில்லாத-அதைச் செய்யாவிட்டால் ஏன் செய்யவில்லை என்று நாளை மறுமையில் கேட்டுத் தண்டிக்காத நஜாத் ஆசிரியப் பணிக்கு கூலி வாங்க மார்க்கத்தில் தடை இல்லை என்பது உண்மை தான். அதே சமயம் வரட்டு-வீண் பெருமை காரணமாக “நான் நஜாத் ஆசிரியப் பணிக்கு ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவும் இல்லை, வாங்குவதாகவும் இல்லை” என்று அப்பட்டமான பொய்யை எழுதியவரின் ஈமானின் நிலை என்ன?

அந்நஜாத் ஆரம்பித்த 1986 ஏப்ரல் முதல் மாத சம்பளத்தை நாம் கொடுக்கும் போது வேண்டாம், வேண்டாம் என்று பீ.ஜை மறுக்கத்தான் செய்தார். நாமும் எதார்த்தமாக நம்பினோம். ஆனால் அவர் அவரது ஊர் போய் இருந்து கொண்டு, நான் ஆசிரியப் பணியை தொடர முடியாது, எனக்கும் மனைவி, மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடவேண்டும் என்று கடிதம் எழுதினார். அப்போதுதான் அவரது சுய ரூபத்தை நன்கு அறிந்திருந்த எஸ்.கே. மதனி, பீ.ஜை சம்பளம் வேண்டாம், வேண்டாம் என்றுதான் பிகு பண்ணுவார்; நாம்தான் வலுக்கட்டாயமாக அவரது பாக்கெட்டில் திணிக்க வேண்டும் என்று உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் இரட்டை வேடத்தை -நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தினார். சம்பளம் வாங்குவதை உறுதி செய்து கொண்டு மீண்டு வந்து ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். அப்போதே துணிந்து பொய் பேசும் துணிச்சலையும், உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் நயவஞ்சகத்தையும், அதாவது முனாஃபிக் தனத்தையும் புரிந்து கொண்டோம். அப்போதே அவரை அந்நஜாத்திலிருந்து வெளியேற்றிடவே நினைத்தோம். சில சகோதரர்களின் வற்புறுத்தல் காரணமாகவே மீண்டும் சேர்த்துக் கொண்டோம்.


விமர்சனம் :
“நஜாத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், குர்ஆனின் குரலில் வேலூர் பேராசிரியர் ஒருவர் மூலமாக மறுப்புக் கட்டுரை எழுதப்படுகின்றதே! உங்கள் விளக்கம் என்ன? என்று சில வாசகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

விளக்கம் : “நஜாத்’ தன் முதல் இதழிலேயே கட்டிக் காட்டியபடி விமர்சனங்களை வரவேற்கின்றது. உண்மைகள் வெளிவர விமர்சனங்கள் தான் துணை செய்யும், ஆரோக்கியமான சூழ்நிலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். நாம் வேலூர் பேராசியரின் விமர்சனத்தை வரவேற்கிறோம். அவர்களின் முதல் தொடரிலேயே பொய்யான தகவல்கள், முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. எனினும் அவர்கள் “இன்னும் வரும்” என்று குறிப்பிட்டுள்ளதால், அது முடிந்த பின் நஜாத் தன் விளக்கத்தைக் கூறும். (அந்நஜாத் ஜூலை 86, பக்.2)

அன்று சு.ஜ.வேலூர் மவ்லவியின் விமர்சனத்தில் “”பொய்யான தகவல்கள் முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன” என்று கண்டித்து அந்நஜாத்தில் எழுதினாரோ, அதேபோல் இன்று பீ.ஜையே பொய்யான தகவல்களையும், முரண்பாடுகளையும் வாரி வாரி இறைத்து வருகிறார். அவருக்கு அவரே முரணா?

விமர்சனம் : நீங்கள் தான் இஸ்லாத்தைத் தெளிவு படுத்துகிறீர்களா? ஜமாஅத்துல் உலமாவினர் அல்லவா?

விளக்கம் : யார் உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறார்கள். யார் உண்மைகளை மறைக்கின்றார்கள் என்ற உண்மை அல்லாஹ்வுக்கும் அவரவர் மனச் சாட்சிக்கும் நன்றாகவே தெரியும்.  (அந்நஜாத் ஜூலை 86, பக்.45)

ஆம்! பீ.ஜை அன்று ஜமாஅத்துல் உலமாவினர் பற்றிச் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! அதே போல் பீ.ஜை. இன்று உண்மைகளைத் தெளிவுபடுத்துகிறாரா? அல்லது உண்மைகளை மறைக்கிறாரா? என்ற உண்மை அல்லாஹ்வுக்கும் பீ.ஜையின் மன சாட்சிக்கும் நிச்சயம் நன்றாகவே தெரியும். (உதாரணம் பிறை விவகாரம்) அவர் உண்மையைச் சொல்பவராக இருந்தால், அவரது ஆதரவாளர்களை அந் நஜாத்தைப் படிப்பதையும், எமது பேச்சைக் கேட்பதையும் உற்சாகப்படுத்துவார். ஒருபோதும் தடுக்க மாட்டார் (பார்க்க: 39:17,18) அடுத்த விமர்சனம் மேலும் தெளிவைத் தருகிறது.

விமர்சனம் : நஜாத் படிக்காதீர்கள் என்று சில ஆலிம்கள் பேசி வருகின்றனர்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பதுருன் முனீரா, பொன்மலை, திருச்சி

விளக்கம் : அவர்கள் சத்தியத்தின்பால் இருந்தால் நஜாத் படியுங்கள்; அதில் கூறப்படுபவைகளுக்கு நாங்கள் விளக்கம் தருகிறோம் என்று தான் அவர்கள் கூறவேண்டும். அவர்களிடம் குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் அறவே கிடையாது என்ற காரணத்திற்காக வும், மக்கள் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அப்படிச் சொல்கிறார்கள். நஜாத்தையும் படியுங்கள்! அதற்கு முரண்பட்ட பத்திரிகைகளையும் படியுங்கள்! இரண்டையும் ஒப்பிட்டு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்! என்று நாங்கள் சொல்கிறோம். (அந்நஜாத் ஜூலை 86, பக்.57)

1986ல் பீ.ஜை கூறியது போல், இன்று அவர் சத்தியத்தின்பால் இருந்தால் நஜாத்தையும் படியுங்கள். அதில் வரும் தவறான கருத்துக்கு நான் விளக்கம் தருகிறேன் என்றுதான் அவர் கூறவேண்டும். இன்று அவரிடம் குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் அறவே கிடையாது என்ற காரணத்திற்காகவும், அவரது ஆதரவாளர்கள் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவுமே அவர்களை அந்நஜாத்தைப் படிப்பதை விட்டும், எமது பேச்சைக் கேட்பதை விட்டும் தடுத்து வருகிறார், நாம் கூட்டம் போட்டால் அவரும் அங்கேயே போட்டிக் கூட்டம் போட்டு, அவரின் ஆதர வாளர்கள் தப்பித் தவறியும் எமது கூட்டத்தில் கலந்து கொள்வதைத் தடுப்பதில் அதிதீவிரம் காட்டுகிறார்.

விமர்சனம் : உங்கள் இயக்கம் மவ்லிது ஓதக்கூடாது, தராவீஹ் எட்டு ரக்அத்கள் என்று கூறும்போது அதே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மவ்லிது என்றால் ஏங்கித் தவிக்கின்றனர். தராவீஹ் 20 ரக்அத்கள் தொழ வைக்கிறார்கள். இவர்களைப் பற்றி… ஹாபிஸ் K.N.M..முகம்மது மஸ்ஊது, அரபிக் காலேஜ், கிளியனூர்.

விளக்கம்: எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை. தவறு யார் செய்தாலும் தவ றுதான். தவறு செய்தவர்கள் அதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். அதே நேரத்தில் தவறை நியாயப்படுத்தி மற்றவர்களையும் வழி கெடுப்பவர்களை விட, தவறை ஒப்புக் கொண்டு பிறரை வழி கெடுக்காதவர்கள் மேலான வர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
(அந்நஜாத் 86, ஆகஸ்ட், பக்.12)

அன்று, எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கமே இல்லை என்று திட்டமாக அறிவித்தவர், எழுதியவர் 1987ல் நம்மை விட்டு வெளியேறிய பின்னர் இன்று 2015 வரை எத்தனை இயக்கங்களைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தியுள்ளார். சுன்னத் ஜமாஅத்தினர் கடந்த ஆயிரம் வருடங்களாக நான்கே நான்கு மத்ஹபு இயக்கங்களில் மட்டுமே நிலைத்திருக்கும் நிலையில், பீ.ஜை. கடந்த 28 ஆண்டுகளில் மத்ஹபுகளை விட்டு வெளியேறி வந்த முஸ்லிம்களை இயக்கத்தின் பெயரால் எத்தனை பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்? கணக்கிட்டுப் பாருங்கள். ஆம்! சுன்னத் ஜமாஅத்தினரைவிட ஆகக் கேடுகெட்டக் கோணல் வழிகளில் தன்னை நம்பியவர்களை இட்டுச் செல்கிறார் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவரின் வழி கேட்டை 7:146, 30:32, 23:52-56, இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால் அவரின் வழிகேட்டின் ஆழம் உங்களுக்குக்கே புரியும். தன்னை நம்பியுள்ள அப்பாவி இளைஞர், இளம் பெண்களைப் பாழும் நரகை நோக்கி இட்டுச் செல்கிறார் என்பதையும், விளங்கிக் கொள்வீர்கள்.

விமர்சனம் : இஸ்லாத்தில் பல பிரிவுகள் ஏன் ஏற்பட்டன? அலி(ரழி) அவர்களை அளவுக்கு மீறி உயர்த்துவோர் நல்ல நிலையில் உள்ளனரே! விளக்கம் தேவை. M. கலிலுல்லா, சிங்காநல்லூர்

விளக்கம் : குர்ஆனையும், நபி வழியையும் விட்டதால் தான் பல பிரிவுகள் தோன்றின. உலகத்தில் சிலர் நல்ல நிலையில் இருப்பதைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம். மூஸா நபியை விட பிர்அவ்ன் நல்ல நிலையில்தான் இருந்தான். எத்தனையோ நபிமார்களை விட அவர்களின் எதிரிகள் நன்றாகவே இருந்தனர். ஏன் இன்றும் சில காஃபிர்கள் நல்ல நிலையில் தான் உள்ளனர். சரியான தீர்ப்பு மறுமை தான் கூறும். (அந்நஜாத் ஆகஸ்டு 86, பக்.14)

1986ல் குர்ஆனையும், நபி வழியையும் விட் தால்தான் பல பிரிவுகள் தோன்றின என்று தெளிவாக நேரடியாகக் கூறியவர். 1987ல் நம்மை விட்டு வெளியேறிய பின், வாயளவில் குர்ஆன், ஹதீஃத் எனப் பீற்றிக் கொண்டு 33:36 இறைவாக்கை நிராகரித்து அவரது சுய கருத்துக்களை மார்க்கத்தில் புகுத்தியதால்தான், அவரே ஒப்புக் கொண்டுள்ள படி உலகில் கூட்டம் சேர்ந்துள்ளதையும் பேர், புகழ், பணம், காசு சேர்ந்ததையும் கொண்டு பெருமை பேசுகிறார். சரியான தீர்ப்பு மறுமையில் தான் என்று அவரே ஒப்புக் கொண்டதற்கு முரணாக இவ்வுலகில் கூட்டமும், பணமும், பதவி சும் சேர்ந்துள்ளதைக் கொண்டு பெருமை பேசுகிறார். இவர் நாளை இவரே ஒப்புக் கொண்டுள்ளபடி நரகம் புகும் 1000ல் 999 நபர்கள் என்ற அடிப்படையில் ஃபிர்அவ்ன், அபூஜஹீல், இன்னும் சத்தியத்தைச் சொன்ன நபிமார்களை எதிர்த்த நிராகரிப்பாளர்களுடன் இருப்பாரா? நேர்வழி நடந்து (6:153) சுவர்க்கம் புகும் 1000ல் 1 நபர் என்ற அடிப்படையில் சின்னம் சிறு கூட்டத்தினருடன் இருப்பாரா? நீங்களே முடிவு செய்யுங்கள். (பார்க்க :புகாரீ:3348,4741)

விமர்சனம் : நீங்கள் ஒற்றுமைக்கு வேட்டு வைப்பவர் என்று சிலர் கூறுகின்றனரே! உங்கள் விளக்கம் என்ன? முகம்மது அய்யூப், பேரணாம்பட்டு

விளக்கம் : நபிமார்கள், நல்லவர்கள் அத்தனை பேரைப் பற்றியும், அந்தந்தக் காலத்தில் இவ்வாறே சொல்லப்பட்டது. எங்களைச் சொல்வதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஒற்றுமை, கொள்கை அடிப்படையில் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு தலைவரின் பெயரால் ஒரு கூட்டம், ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை என்று முரண்பட்டு நிற்பவர்களை ஒரே தலைவரான நபி(ஸல்) அவர்களையும், ஒரே கொள்கை விளக்கமாக திருகுர்ஆனையும் கொண்டு, பிளவுபட்டு நிற்கின்ற சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்று பாடுபடுகிறோம். அதற்காகப் பெரும் தியாகம் செய்ய வேண்டி வரும் என்றாலும், பல அபவாதங்களை ஏற்க வேண்டி வந்தாலும், குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியை நாங்கள் செய்து கொண்டு தான் இருப்போம். (அந்நஜாத் ஆகஸ்டு 86, பக்.15)

1986ல் பீ.ஜை எழுதியுள்ளது போல் அந்நஜாத் தனது இலட்சியத்தில் அணுவளவும் பிசகாது இன்று வரை செயல்பட்டு வருகிறது. 1987ல் அந்நஜாத்தை விட்டு வெளியேறிய பீ.ஜை.தான் அவரே வாக்களித்ததற்கு மாறாக, ஒவ்வொரு தலைவரின் பின்னால் ஒரு கூட்டம், ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை எனக் கடந்த 28 ஆண்டுகளில் பத்து, பன்னிரண்டு கொள்கைக் கூட்டங்கள் உருவாகக் காரணகர்த்தாவாக இருக்கிறார். இன்னும் எத்தனைக் கொள்கைக் கூட்டங்களைக் கற்பனை செய்யப் போகிறாரோ? அல்லாஹ்வே அறிவான்!

விமர்சனம் : 28.7.86 அன்று ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் பிரிவினர் சார்பாக நடந்த கூட்டத்தில் குத்புத்தீன் பாகவி பேசும்போது சிலர் பள்ளிவாசலில் மட்டும் இஸ்லாத்தை வைத்துக் கொண்ட னர். இன்னும் சிலர் கபுறு வணக்கம், எட்டு ரக்அத் பிரச்சனையில் மார்க்கத்தை முடக்கி விட்டனர்” என்று பேசியுள்ளாரே! அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? A அப்துல்லா, பாலக்கரை, திருச்சி

விளக்கம்:  “”சிலர் அனைத்துத் துறை என்று வாயளவில் கூறிக் கொண்டு வெறும் அரசியல் பொருளா தாரம் பற்றி மட்டும் பேசிக் கொள்கின்றனர்” என்று நாம் பதில் சொல்ல விரும்பவில்லை. மாறாக, இஸ்லாத்தின் எந்த ஒரு துறையையும் நிலைநாட்டப் பாடுபடுபவர்களை நாம் வரவேற்கிறோம். அனைத்துத் துறையையும் போதிப்பதாகச் சொல்பவர்கள் இந்தத் துறையையும், இன்னும் இதுபோன்ற பல துறைகளையும் ஏன் சொல்லத் தயங்குகின்றார்களோ? தெரியவில்லை. நஜாத்தைப் பொறுத்தவரை அவர் குறிப்பிட்ட இரண்டு பிரச்சனைகளை மட்டும் சொல்லவில்லை. கடந்த நான்கு இதழ்களில் எத்தனையோ பிரச்சனைகளைத் தெளிவாக்கியுள்ளோம். இன்னும் பல துறைகளையும் சொல்ல இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ். முதல் இதழிலேயே எங்கள் “”மனம் திறந்த மடலிலும்,” இரண்டாவது இதழில் “”நஜாத் ஏன் பிறந்தது”? என்ற விளக்கத்திலும் இதைத் தெளிவாக்கி விட்டோமே! ஒரு வேளை அவர் இதைப் படித்திருக்கவில்லை போலும்.
(அந்நஜாத் ஆகஸ்டு 86, பக்.22)

“”ஒரு வேளை அவர் இதைப் படித்திருக்க வில்லை போலும்” என்று மற்றவரைக் கிண்டல் செய்துள்ள பீ.ஜை.யே அவ்விரண்டு ஆக்கங்களையும் படிக்கவில்லை போலும். அல்லது மனமுரணாக அதற்கு மாறாக நடக்கிறார் போலும். அவ்விரு ஆக்கங்களையும் மீண்டும் இந்த இதழில் இடம் பெறச் செய்துள்ளோம். அவற்றைப் படித்து பீ.ஜை. அந்த உபதேசப்படி நடக்கிறார? அல்லது அதற்கு முரணாக நடக்கிறாரா? நீங்களே முடிவு செய்யுங்கள். அதில் ஓர் ஆக்கம் பீ.ஜையின் அண்ணன் காலஞ் சென்ற பீ.எஸ். அலாவுதீன் எழுதியதாகும்.

தக்லீதை எதிர்க்கும் பிரச்சாரத்திற்கு அவர் (பீ.ஜை) ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்று நம்மைப் பற்றி (ரஹ்மத் ஆசிரியர்) எழுதுகிறார்.

நல்லதொரு பணிக்கு அல்லாஹ்வால் நான் (பீ.ஜை) ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது பற்றி பெரு மகிழ்ச்சியே! மறுமையில் “”இந்த நல்ல பணிக்கு நான் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டேன்” என்று இவரை அல்லாஹ் சாட்சி சொல்ல வைப்பானாக! அந்நஜாத் ஜன-பிப்.1987,பக்கம் 101

1986ல் தக்லீதை எதிர்க்கும் நல்லதொரு பணிக்கு பீ.ஜை. பயன்பட்டது நன்மை தரும் பணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இன்றோ பீ.ஜை. மத்ஹபு இமாம்களை தக்லீது செய்வதை தவ்பா செய்து மீண்டு வந்த இளைஞர்கள், இளம் பெண்களை மீண்டும் தன்னை தக்லீது செய்ய வைத்திருக்கிறாரே, பெருத்த வழிகேட்டில் இட்டுச் செல்கிறாரே! அது தான் பெருத்த வேதனைக்கு உரிய விசயமாகும்.

நஜாத் வாட்சு ரிப்பேரர் சொன்ன அர்த்தங்கள் சரியில்லையாம்!
எந்த அர்த்தம் சரியில்லை என்று புள்ளி விபரத்துடன் விளக்கம் தருவாரா? வாட்சு ரிப்பேர் செய்து ஹலாலான முறையில் சாப்பிடக் கூடியவர் மார்க்கத்தைச் சொல்லக் கூடாதா? மார்க்கம் என்ன குடும்பச் சொத்தா? மக்களிடம் யாசகம் பெற்று தீனை அடகு வைப்பவர்கள் தான் மார்க்கத்தைச் சொல்ல வேண்டுமா? (அந்நஜாத் ஜன.-பிப்.1987,பக்கம் 101)

அன்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஆலிம் அவாம் என்ற பாகுபாடு இல்லாமல் மார்க்கப் பணி செய்யக் கடமைப்பட்டவர்கள், உரிமை பெற்றவர்கள் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டு எழுதிய பீ.ஜை. இன்று அவரது சொல்லுக்கு முரணாகப் புரோகித மடங்களான மதரஸாக்களை ஆங்காங்கே ஏற்படுத்தி தாயிகள் என்ற பெயரால் புரோகிதர்களை உருவாக்கி, ஊக்கத் தொகை என்ற பெயரால் 36:21, இன்னும் 14 இறைவாக்குகளை நிராகரித்து, கூலிக்கு மாரடிக்கும் புரோகிதர்களை சப்ளை செய்து வருகிறார். ஆக அவரது இரட்டை வேடம்-முனாஃபிக் தனம் சுயமாகச் சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் விளங்கும். அவரது கண்மூடி பக்தர்கள் விளங்குவது கடினமே. அவர்களுக்கும் நேர்வழி கிடைக்க நாம் துஆ செய்கிறோம்.

மேலும் 1987 ஜன-பிப். அந்நஜாத்தில் பீ.ஜை. எழுதிய அபத்தங்கள் மறு அலசல், அடையாளம் காட்டுகிறார்கள். புரிந்துகொள்ள முடியாத புதிர்கள், மழுப்பல்கள் பலவிதம், வேண்டாம் தில்லுமுல்லுகள், யாரைத் திருப்திப்படுத்த இந்தச் சட்டங்கள், தத்துவமுத்துக்கள் போன்ற கட்டுரைகளைப் படித்து விளங்குகிறவர்கள் அன்றைய ரஹ்மத் ஆசிரியரை எப்படியெல்லாம் இவர் விமர்சித்து எழுதி இருந்தாரோ, அந்த விமர்சனங்கள் அனைத்தும் நூற்றுக்கு நூறு இன்றைய பீ.ஜைக்கும் அப்படியே பொருந்தும் என்பதை உணர முடியும்.

அவரே அன்று அந்நஜாத் ஜன.-பிப். 1987 பக்கம் 72ல் எழுதியுள்ள “”அவருக்கு அவரே முரண்படுவது தான் அவரது கொள்கையாக இருக்குமோ? என்று அன்றைய ரஹ்மத் ஆசிரியரைக் கிண்டல் செய்து எழுதியது இன்றைய பீ.ஜை.க்கு 100% பொருந்திப் போவதை நிச்சயம் விளங்க முடியும்!

பீ.ஜை. நம்மோடு 1985 மார்ச்சிலிருந்து பழக ஆரம்பித்தாலும், 1986 ஏப்ரலில் அந்நஜாத் ஆரம்பத்திலிருந்து அவர் வெளியேறிய 1987 ஜூன் வரை 15 மாதங்கள் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றோம். அப்போதே அவரது துணிந்து பொய் பேசும் நிலையையும், உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் முனாஃபிக்-நயவஞ்சகத் தன்மையையும், தனக்குத் தேவைப்பட்டால் ஒருவரை அளவுக்கு மீறி வானளாவப் புகழ்ந்தும், அவரே வேண்டாதவராகி விட்டால் அவரை அளவுக்கு மீறி தரம் தாழ்ந்து பொய்களையும், அவதூறு பரப்புவதையும் வீண் பழிகள் சுமத்துவதையும், தொழுகையற்ற நிலையையும் கண்கூடாகக் கண்டோம். இவை பற்றி அவரைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தோம். அவர் வெளியேறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும். அவர் வெளியேறியதிலிருந்து நம்மைப் பற்றி அப்பட்டமான அவதூறுகளையும், அமானித மோசடி, பிறர் சொத்தை அபகரித்தல், அந்நஜாத் நிலத்தை, பணத்தை அபகரித்தல் போன்ற ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்களைத் தானும், தன் பக்தர்களையும் கொண்டு பரப்பித் திரிகிறார். 1987 லிலிருந்து அவரது குற்றச் சாட்டுக்களை நேரடியாக வந்து நிரூபிக்கும்படி தொடர்ந்து அழைத்து வருகிறோம். பொய்க்குற்றச் சாட்டுக்களை நிரூபிக்க முடியுமா? எனவே கடந்த 28 ஆண்டுகளாக ஒளிந்தோடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் “”என்னைப் பொய்யன், அயோக்கியன்” என்று குற்றப்படுத்தினால் அதை எதிர் கொள்ள நான் தான் போகனும். வேறு யாரையும் அனுப்ப முடியாது என்று தெளிவாகப் பேசியது அவரது வலைதளத்தில் காணப்பட்டது. அதன் அடிப்படையில் “”பீ.ஜையை பெரும் பொய்யன், பரம அயோக்கியன், அவதூறு மன்னன்” என்று குற்றப்படுத்தி, அவருக்கே பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பி வைத்தோம். அவர் வாக்களித்தபடி அவரே நேரடியாக வந்து தான் அக்குற்றங்களுக்குரியவன் அல்ல என்று நிலைநாட்டத் தவறிவிட்டார். அதாவது நாம் சுமத்திய குற்றங்கள் அனைத்தும் உண்மை என்று எக்ஸ் பார்ட்டி தீர்ப்பு என்ற அடிப்படையில் ஒப்புக்கொண்டு விட்டார். அவர் குற்றமற்றவர் என்றால் நேரில் சந்தித்து நிரூபித்திருப்பார் என்பதை யாரால் மறுக்க முடியும்? இமாம்களை, மத்ஹபுகளை தக்லீது செய்தவர்கள் அதை விட்டு வெளியேறி வந்தவர்களை பீ.ஜை. தன்னை தக்லீது செய்ய வைத்திருப்பதால் இவரை அடையாளம் காட்டும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

இமாம்களை தக்லீது செய்பவர்களை அதிலிருந்து விடுதலை செய்கிறோம். தவ்ஹீத்வாதி என்று பீற்றிக்கொண்டு தன்னைத் தக்லீது செய்ய வைத்திருக்கும் பீ.ஜையை விட மாபெரும் வழிகேட்டில் வேறு யார் இருக்க முடியும்? அல்குர்ஆன் 7:175 -179 வரையுள்ள ஐந்து வசனங்கள் அக்காலத்தில் பல்ஆம் இப்னு பாவூரா பற்றியவை என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றோ இந்த ஐந்து வசனங்கள் மட்டுமில்லாமல், 45:23, 47:25 இறைவசனங்களும் நூற்றுக்கு நூறு பீ.ஜைக்குப் பொருந்தி போவதை அவரது அன்றைய எழுத்துக்களையும், இன்றைய எழுத்துக்களையும் நேரடியாக நடுநிலையுடன் படிப்பவர்கள் நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள்.

குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளின் தக்லீதை விட்டு விடு பட்ட சகோதரர்கள், சகோதரிகளை அதைவிட மிக மிக வழிகேடான தன்னை தக்லீது செய்ய பீ.ஜை. தூண்டுவதாலும், எந்த அந்நஜாத் இதழை வைத்து உலகிற்கு அவர் அறிமுகமானாரோ, அந்த இதழை அதாவது அந்நஜாத் இதழை, 1986 ஏப்ரலிலிருந்து குர்ஆன், ஹதீஃதை மட்டுமே சொல்லி வரும் அந்நஜாத்தைக் குழி தோண்டி புதைக்கும் கொடிய பாவத்தில் பீ.ஜை. மூழ்கி இருப்பதால் அவரை இந்தளவு அடையாளம் காட்டும் கட்டாயம் அந்நஜாத்திற்கு ஏற்படுகிறது. மற்றவர்களை விட பீ.ஜையின் பெரும் வழிகேட்டை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அக்கடமையையே நிறைவேற்றுகிறோம். அல்லாஹ் போதுமானவன்.

Previous post:

Next post: