ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், நம்பிக்கை, நாணயமுள்ளவராகயிருப்பாரோ அவர் நீங்குதலாக, உபைதுபின் ரிஃபாஆ(ரழி) திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, தாரமீ.

ஹலாலான (ஆகுமான) சம்பாத்தியத்தைத் தேடுவது(தொழுகை, நோன்பு முதலிய) கடமைகளுக்கு அடுத்துள்ள கடமையாகும். அப்துல்லாஹ்(ரழி) பைஹகீ.
மேற்காணும் ஹதீஃத்களின் வாயிலாக, தமக்கோ அல்லது சம்பந்தப்பட்டோருக்கோ சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் அளவுக்கு சம்பாதிப்பது அவசியமாகும் என்பதை உணர்கிறோம்.

வியாபாரத்தில் லாபம் வைத்தால்தான் சம்பா திக்க முடியும். ஆனால் குர்ஆனிலோ, ஹதீஃதிலோ இவ்வளவு தான் லாபம் வைக்கவேண்டும் என்று சொல்லப்படவில்லை. இருப்பினும் நம்பிக்கை, நாணயம், பரோபகாரம் இறையச்சம் முதலியவைகளை அடிப்படையாகக் கொண்டு, நம்மால் பிறர் பயனடைய வேண்டுமென்று நன்னோக்கத்துடன் ஏமாற்று, மோசடி இல்லாமல் நியாயமான லாபத்தை வைத்துச் சம்பாதிக்கும்படி கூறுகிறது.

——————————————

ஐயம் : சுவர்க்கவாசிகளாகிய ஆண்களுக்கு ஹுருல்யீன் என்ற கண்ணழகிகள் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான். அப்படி என்றால் சுவர்க்கவாசிகளான பெண்களின் நிலை என்ன? சதக் இப்றாஹீம், கீழக்கரை.

தெளிவு : இஸ்லாம் மனித ஒழுக்கங்களில் கற்புக்கே முதலிடமாகிறது. கற்பு நிலை தவறிய ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்கள் மணமுடிக்காதவர்களாயிருப்பின் தலா நூறு கசையடி கொடுக்க வேண்டுமென்றும், மணம் முடிந்தவர்களாயிருப்பின் அவர்களைக் கல்லால் அடித்துக் கொன்று விடவேண்டு மென்றும் கட்டளையிடுகிறது.
மணம் செய்து கொண்ட ஒரு பெண் தனது கணவர் தன்னுடன் இருக்கும் பொழுது, மற்றொரு ஆணை மணம் செய்துகொள்வதை மார்க்கம் தடை செய்கிறது. அவள் அதை மீறி பிறருடன் தொடர்பு கொண்டு விட்டால், அவளைக் கற்பிழந்தவள் என்று கூறுவதுடன், கல்லால் அடித்துக் கொல்லப்படவேண்டிய குற்றம் புரிந்தவள் என்கிறது.
ஆனால் மணம் செய்து கொண்டுள்ள ஒரு ஆண் பல மனைவியரை வைத்து நியாயமான முறையில் நடத்த ஆற்றலுள்ளவராயிருப்பின், நான்கு மனைவிகள் வரை மணம் செய்து கொள்வதை இஸ்லாம் அவருக்கு அனுமதிப்பதுடன் அவ்வாறு அவர் மணமுடித்துக் கொள்வதால் அவரைக் கற்பிழந்தவரென்றோ கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளியயன்றோ சொல்வதில்லை.

ஆகவே கற்பு நிலை என்பது இஸ்லாத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கு வேறு என்பதையறிகிறோம். ஒரு பெண் தனது ஒரே கணவருடனிருந்தால் மட்டும் தான் அவள் கற்புள்ளவளாயிருக்க முடியும். ஆனால் ஆண்களோ நான்கு மனைவிகளுடன் கலந்துறவாடிய நிலையிலும் அவர்கள் கற்புள்ளவராகவே கருதப்படுவார்கள்.

வல்ல அல்லாஹ் இவ்வடிப்படையிலேயே மறு மையின் வாழ்வையும் அமைத்திருக்கிறான். திருகுர்ஆனில் சுவர்க்கத்தின் சுகபோகங்களைப் பற்றிச் செல்லுமிடத்து,சுவர்க்கக் கன்னியரைப் பற்றி கூறும் பொழுது அவர்களின் அழகு, அமைப்பு முதலியவற்றைக் கூறுவதற்கு முன்பே அவர்களின் உயர் பண்பான (பிற ஆடவரைப் பார்க்க விருப்பமில்லாத) அடக்கமான பார்வையுடைய கன்னிகள் என்று வர்ணித்து, பிற மனிதராலும், ஜின்னாலும் தீண்டப் படாதவர்கள் என்றும் கூறியிருக்கிறான்.

அவற்றில் (பிற ஆடவரைப் பார்க்காது) அடக்க மான பார்வையுடைய கன்னிகள் இருக்கிறார்கள். அவர்களை (இவர்களுக்கு முன்னர்) எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை. (55:56)

ஆகவே மேற்காணும் திருவசனம் பெண்கள் எந்த அளவு தமது கணவரைத் தவிர பிற ஆடவரின் மீதும் கவனம் செலுத்தாது அடக்கமுள்ள பார்வையுடையோராக அந்நியரின் கரங்கள் தம் மேனியைத் தீண்டாதவாறு நடந்து கொள்வோராக இருக்கிறார்களோ அந்த அளவு உயர் பண்புடையோராக உத் தமிகளாக, பத்தினிகளாகத் திகழ்வார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அடுத்து பின்வரும் ஹதீஸைக் கவனிப்போம். அன்னை உம்மு ஸல்மா(ரழி) அவர்கள் அறிவிக்கி றார்கள். நான் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களிடம் (மறுமையில்) சுவர்க்கவாசிகளான உலகப் பெண் கள் சிறப்புமிக்கவர்களா? அல்லது ஹூருல்யீன்க ளான சுவர்க்கக் கன்னிகளா? என்று கேட்டேன். அதற்கவர்கள் உலகப் பெண்களுக்கும், ஹூருல்யீன்களுக்கும் பட்டாடையின் வெளிப்புறத்திற்கும், உள்புறத்திற்கும் இடையிலுள்ளது போன்று சிறப் பில் வித்தியாசமிருக்கிறது. உலகப் பெண்கள் வெளிப்புறத்தைப் போன்றும் அப்பெண்கள் உட் புறத்திற்கும் இடையிலுள்ளது போன்று சிறப்பில் வித்தியாசமிருக்கிறது. உலகப் பெண்கள் வெளிப் புறத்தைப் போன்றும் அப்பெண்கள் உட்புறத்தைப் போன்றும் ஹூருல்யீன்களைப் பார்க்கிலும், உலகப் பெண்களே சுவர்க்கத்தில் சிறப்புமிக்கோரா கவிருப்பார்கள் என்றார்கள். பின்னர் அதற்குக் கார ணம் கேட்டதற்கு, உலகப் பெண்கள் தொழுதிருக்கிறார்கள். நோன்பு பிடித்திருக்கிறார்கள். மேலும் அநேக வகையான இபாதத்து செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே சிறப்பாக விளங்குவார்கள் என்றார்கள். (தப்ரானீ)

மேற்காணும் ஹதீஸின் வாயிலாக ஹூருல்யீன்களைப் பார்க்கினும், உலகப் பெண்கள் மிகவும் விசேஷமாக மறுமையில் மதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இவர்கள் அந்த ஹூருல்யீன்களைப் பார்க்கினும் அந்நியரைப் பார்க்காதவர்களாக, அடக்கமுள்ள பார்வையுடையோராக, பிற ஆடவரின் தொடர்பில்லாது உயரிய பண்பாடுள்ளவர்களாக இருப்பார்கள் என்பது தானே பொருள்.
பொதுவாகப் பெண்ணாகப் பிறந்த ஒருவர் தனது கணவரன்றி அந்நிய ஆடவருடன் தொடர்பு கொள்வதென்பது இழுக்கானதொரு செயல் என்றிருக்கும்பொழுது, அல்லாஹ்வின் பேரருளால், சுவர்க்கத்துக் கன்னிகளைப் பார்க்கினும், மிக்க மேலான நிலையில், சீரும் சிறப்போடும், காலா காலம் வாழும் பாக்கியம் பெற்ற, அப்புண்ணியவதிகளான உலகத்துப் பெண்கள், தமது கணவரைத் தவிர, அந்நியரின் பக்கம் ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். அத்தகைய உயர்வானதொரு மனோ நிலையை வல்ல ரஹ்மான் அப்பெண்களுக்குக் கொடுத்து விடுவான் என்பதையே மேற்காணும் ஹதீஃத் உணர்த்துகிறது.

———————————

ஐயம் : சித்திர வேலைப்பாடுள்ள “”முஸல்லா” விரிப்பில் தொழுவது ஆகுமா? நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக பாய் அல்லது துணி விரிப்பு முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளார்களா?

தெளிவு : நிச்சயம் நான்தான் அல்லாஹ், என்னைத் தவிர வேறு நாயனில்லை. என்னையே நீர் வணங் கும். என்னைத் தியானிப்பதற்காகத் தொழுகை யைக் கடைபிடியும். (20:14)

நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாடுள்ள ஒரு துணி விரிப்பில் தொழுதார்கள். அப்பொழுத வர்கள் அச்சித்திரங்களை ஒரு முறை பார்த்து விட்டார்கள். (தொழுதுவிட்டுத்) திரும்பியவுடன், அவர்கள் இந்த முஸல்லாவை எடுத்துக் கொண்டு போய் அபூஜுஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரிடமுள்ள சித்திர வேலைப்பாடில்லா விரிப்பொன்றை எனக்கு வாங்கி வாருங்கள். இச்சித்திர விரிப்பானது சற்று முன் என்னை எனது தொழுகையின் கவனத்திலிருந்து மாற்றி விட்டது. அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் ஒரு மறைப்பிருந்தது. அதனால் தனது வீட்டின் வெளிப் பக்கத்தை மறைத்து வைத்திருந்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அன்னை அவர்களை நோக்கி) உம்முடைய இத்திரையை என்னை விட்டு அகற்றிவிடும். அதன் சித்திரங்கள் எனது தொழுகையில் எனக்குக் குறுக்கிட்டுக் கொண்டிருக்கின்றன என்றார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள் : புகாரீ

நபி(ஸல்) அவர்கள் பாய், பதனிடப்பட்ட தோல் முதலியவற்றில் தொழுது கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர் : முகீரா பின் ஷிஃபா(ரழி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.

அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள்:
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் (என்னைப் பார்த்து) பள்ளியிலுள்ள தொழுகைப் பாயை எடுத்து என்னிடம் கொடு என்றார்கள். அதற்கு நான் மாதவிடாய் உள்ளவள் என்றேன். அதற்கவர்கள் மாதவிடாய் உமது கையில் இல்லையே என்றார்கள். (முஸ்லிம்)
மேற்காணும், ஹதீஸ்களும் சித்திர வேலைப்பாடுள்ள விரிப்புக்களை விரித்துத் தொழுவதானது தவறு என்பதுடன், அது தொழுகையின் உயிர் நாடியாம் அல்லாஹ்வின் தியானத்திற்கே ஊறு விளைவித்து விடுமென்பதை எச்சரிக்கின்றன.
அத்துடன் நபி(ஸல்) அவர்கள் ஒரு வகையான “”முஸல்லா” மட்டுமின்றி பாய், தோல், துணி, கம்பளி முதலிய விரிப்புகளிலும் தொழுதிருக்கிறார்கள் என்பதையும் மேற்காணும் ஹதீஸ்களை எடுத்துக் காட்டுகின்றன. அதன்படி நமது வீடுகளில் தொழுகைக்காக “”முஸல்லாக்கள்” இருப்பது விரும்பத்தக்க செயலேயாகும்.
நபி(ஸல்) அவர்கள் சித்திர வேலைப்பாடுள்ள தொழுகை விரிப்புக்களை ஒதுக்கித் தள்ளியிருக்கும் பொழுது, பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஏன் அனைத்துப் பள்ளிகளிலுமே, மக்கா, மதீனா சித்தி ரங்களுள்ள விரிப்பையே விரித்துத் தொழுவதைப் பார்க்கிறோம். விபரம் தெரிந்த சில ஊர்களில் மட் டும் சித்திரமுள்ள விரிப்பாக இருப்பின் அதன் மீது வெள்ளைத் துணியை விரித்துத் தொழுகிறார்கள். இது விபரம் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களோ தவறாக சித்திர வேலைப்பாடுள்ள விரிப்பை பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறே நமது வீடுகளில் தாய்மார்கள் மக்கா, மதீனா, பைத்துல் முகத்திஸ், தாஜ்மஹால் போன்ற சித்திங்ள் வரையப்பட்ட முஸல்லாக்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். மேலும் கூறினால் மக்கா, மதீனாவெல்லாம் வரையப்பட்ட முஸல்லாவில் தொழுதால்தான் அல்லாஹ்விடம் அதிகமான ஃதவாபு கிடைக்கும் என்ப தாக அவர்களாகவே நினைத்துக் கொள்கிறார்கள். இதைவிடப் பெரிய பரிதாபம் என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான பணத்தைச் செலவு செய்து கொண்டு புனித ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றி விட்டுத் திரும்புகையில் எந்த முஸல்லாவானது தொழும் பொழுது அல்லாஹ்வை நினைத்துத் தொழுவதற்கு இடையூறு செய்வதாகச் சொல்லி அது வேண்டாம் என்று நபி(ஸல்) கூறினார்களோ அதே சித்திரம் உள்ள விரிப்புக்களையே விபரமறியாது வழிகேட்டை விலைக்கு வாங்குவது போல் வாங்கி வந்து, முதன் முதலாகக் கட்டை அவிழ்த்தவுடன், நமதூர் இமாமின் தொழுகையை நாசமாக்குவதற்காகப் பள்ளிவாசலுக்கு என்றும் மற்றும் சுற்றத்தார், பிரமுகர்கள் அனைவருக்கும் தலைக்கு ஒன்று வீதம் கொடுத்து, அவர்களின் தொழுகைகள் அனைத்தையும் பாழ்படுத்தும் செயலைச் செய்து விட்டு, தாம் பெரிய புண்ணியமான காரியத்தைச் செய்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
(பார்க்க : 18:103-106)

எனவே இறையில்லங்களில் உயர் பணிபுரியும் இமாம்களே! முத்தவல்லிகளே! மற்றும் நிர்வாகிகளே! மார்க்கத்திற்குப் புறம்பாக உள்ள இம் “முஸல்லா’ விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தி நபி (ஸல்) அவர்களது ஹதீஃதுக்கு மதிப்புக் கொடுத்து ஆவன -செய்வீர்களாக!

———————————–

ஐயம் : பாவிகளுக்கு கப்ரில் வேதனையுண்டா? அவ்வாறாயின் திருகுர்ஆனின் பின்வரும் வசனத்தில் கப்ரைப் பற்றி தூங்குமிடம் என்பதாகத்தானே சொல்லப்பட்டிருக்கிறது. எங்களின் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்? என்று அவர்கள் கேட்பார்கள் (36:52) தூங்குமிடமென்பதற்கு ஓய்வு பெறுமிடம் என்பதுதானே பொருள். அதனால் கப்ரில் வேதனையில்லை என்பதாகத் தெரிகிறதே?

தெளிவு : அன்னை ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார்கள். ஒரு நாள் யூத பெண்ணொருவள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்து கப்ருடைய வேதனையைப் பற்றி அவர்களிடம் எடுத்துக் கூறிவிட்டு அல்லாஹ் உங்களை கப்ரின் வேதனையை விட்டும் காப்பாற்றுவானாக! என்று கூறினாள்.

அதன் பிறகு அன்னையவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் கப்ருடைய வேதனையைப் பற்றி கேட்க, அதற்கவர்கள் “”ஆம் (பாவிகளுக்கு) கப்ரின் வேதனையுண்டென்பது உண்மை என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழும் போதெல்லாம் கப்ரின் வேதனையை விட்டுத் தாம் பாதுகாப்புத் தேடுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

மேற்காணும் ஸஹீஹான ஹதீஃத்களின் வாயிலாக கப்ருடைய வேதனையுண்டென்பதை அறிகிறோம். ஆனால் மேலுள்ள திருவசனத்தில் எங்களின் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யாரென்று அவர்கள் கேட்பார்கள் எனும் வார்த்தை, அது அவர்கள் சுய உணர்வின்றி பெருந்தடுமாற்றத்திற்கு மத்தியில் கூறும் வார்த்தையேயாகும் (உண்மை அதுவல்ல)

இவ்வாறு தடுமாற்றத்திற்கு மத்தியில் உண்மைக் குப் புறம்பாக பாவிகள் மறுமை நாளில் பேசுவார் கள் என்பதற்கு திருகுர்ஆனில் பல சான்றுகள் காணப்படுகின்றன. (விசாரணைக்குரிய) அந்நேரம் வரும் நாளில் குற்றவாளிகள் நாங்கள் (இவ்வுலகில்) ஒரு சிறிது நேரமேயன்றி அதிக காலம் தங்கியிருக்க வில்லையென்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகிலும்) அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

எனினும் கல்வியறிவும், விசுவாசமும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டிலுள்ளவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரையிலும் (பூமியில்) தங்கியிருந்தீர்கள். இது (மரித்தோர்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சய மாக நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவேயிருந்தீர்கள். (30:55,56)
வட்டி வாங்கிச் சாப்பிட்டவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாது வேறு விதமாய் எழமாட்டார்கள். (2:275)

இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்கள். வட்டி உண்பவன் கியாமத் நாளில் தனது தொண்டையைத் தானே பிடித்து நெறித்துக் கொண்டவனாக, பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். (இப்னு அபீ ஹாத்திம்)

மேற்காணும் திருவசனங்களும், ஹதீஃதும் மறுமை நாளில் குற்றவாளிகள் சுயவுணர்விழந்தவர் களாக வருவார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அல்லாஹ்வின் நல்லடியார்கள் முழுமையான ஞாபக சிந்தனையுடன் வருவார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.

—————————-

ஐயம் : வீட்டில் புகைப்படம் இருந்தால் மலக்குகள் வரமாட்டார்கள். இது பத்திரிகைகளுக்குப் பொருந்துமா? படங்கள் உள்ள பத்திரிகைக்களை வீட்டில் வைத்திருப்பதால் மலக்குகள் வரமாட்டார்களா?
நதீம் அஹ்மது, ஆம்பூர்,

தெளிவு : பத்திரிகைகளுக்கு பொருந்தாது. உருவப் படங்கள் உள்ளதிரையை தொங்கவிட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அதைக் கழற்றினார்கள். நான் அதைக் கொண்டு இரண்டு தலையணைகள் செய்தேன். நபி(ஸல்) அவர்கள் அவற்றின் மீது சாய்ந்து கொள்வார்கள். அவற்றின் உருவப் படங்களும் இருந்தன. அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம், அஹ்மது.

இந்த ஹதீஸின் மூலம் உருவப்படங்கள் உள்ள பத்திரிகைகள் வீட்டில் வைத்திருப்பதால் தவ றில்லை என்று உணரலாம். என்றாலும் இக்காலத்தில் வருகின்ற பல வார, மாத இதழ்கள் விற்பனைக் காக பெண்களை அரைகுறை ஆடைகளுடன் போட்டு விற்கப்படுவதால் அவற்றை வாங்காமல் இருப்பது நல்லது.

Previous post:

Next post: