அந்நஜாத் – செப்டம்பர் 1988

in 1988 செப்டம்பர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்-நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் : 3 – விளக்கம் : 6

ஸபர் : 1409 – செப்டம்பர் – 1988

இதழின் உள்ளே…..

* சிந்தித்து செயல்பட வேண்டுகிறோம்!

* விமர்சனங்கள்; விளக்கங்கள்!!

* வேண்டாம் 786

* ஈமானைப் பாழாக்கும் ஈனச் செயல்கள்!

* குர்ஆனை விளங்குவது யார்?

* நபி வழித் தொகுப்பு வரலாறு!

* இரு வழிகள்!

* பித்அத் ஓர் ஆய்வு!

* நபி வழியில் நம் தொழுகை!

* ஐயமும்! தெளிவும்

*********************************************************************************************************************************************************************************

சிந்தித்து செயல்பட வேண்டுகிறோம்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைக் கொண்டு இந்த 15ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலக்கட்டத்தில் சிந்தனையில்லாது குருட்டுத்தனமாக முன்னோர்களையும், பெரியார்களையும், பின்பற்றும் நிலையை விட்டு, ஒவ்வொரு செயலையும் குர்ஆன், ஹதீஸுடன் ஒப்பிட்டுப் பார்த்து, சிந்தித்துச் செயல்படும் பெரும் பாக்கியமாகும். அல்ஹம்துலில்லாஹ்.

வளர்ந்து வரும் இந்த நிலையை நமது சமுதாயத்தில் மேலும் மேலும் வளர்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக, இளைய சமுதாயத்தினரை சிந்தனையுடன் செயல்படும் துடிப்புள்ள சமுதாயமாக வளர்க்க நாம் நமது முயற்சிகளை முறைப்படி ஈடுபடுத்த வேண்டும்.

ஸஃபர் மாதத்தின் பெயரால் சமுதாயத்தை பீடித்திருக்கும் பீடைகளை அகற்றி காலத்தாலோ, மாதத்தாலோ, மனிதனுக்கு எவ்வித நலனையோ, இடரையோ கொண்டு வரமுடியாது. நலனும், இடரும், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகின்றன என்ற உறுதியான நம்பிக்கையை சமுதாயத்தில் உருவாக்கிட அயராது பாடுபடுவது நமது நீங்காத கடமையாக இருக்கின்றது.

மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட மார்க்க உண்மைகளை, வெளிச்சத்திற்கு கொண்டுவர அந்நஜாத் செய்யும் பெரும்பணியை பெரும் கிரமங்களுக்கிடையேதான் தொடர் வேண்டியுள்ளது. பிரிவினை மனப்பான்மை உடையவர்களையும், இஸ்லாம் அனுமதிக்காத வகையில் இயக்க வழிபாட்டை உருவாக்குபவர்களையும், எதிர்த்து அந்நஜாத் தனது பணியை அல்லாஹ்வின் அருள் கொண்டு தொடர்கின்றது.

வல்ல நாயனின் கிருபையால், அனைத்து பிரிவாரிடமிருந்தும்  வரும் எல்லா எதிர்ப்புக்களையும், முட்டுக்கட்டைகளையும்ட சமாளித்து வருகின்ற இந்தத் தருணத்தில் அந்நஜாத் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த இரு இதழ்கள் கால தாமதமாக வெளியிட்டமைக்கு வருந்துகிறோம். எனவே, அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அந்நஜாத் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு, தனது பணியை தொய்வின்றி தொடர்வதற்கு நீங்கள் அனைவரும் துஆ செய்வதுடன் உங்களால் இயன்ற அளவு சந்தாக்களை சேகரித்து அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறோம். சந்தா தீர்ந்த அன்பர்கள் மார்க்க வளர்ச்சிப் பணிக்கு செய்யும் பெரும் உதவியாகக் கருதி தங்கள் சந்தாக்களை புதுப்பிப்பதோடு, புதிய சந்தாக்களையும் சேர்ந்து உதவ அன்புடன் வேண்டுகிறோம்.

*********************************************************************************************************************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

தற்போதைய அஹமதியா இயக்கத்தின் கலீஃபாவான ஹஸரத் மிர்சாதாகிர் அஹமத் அவர்கள் மற்ற முஸ்லிம் தலைவர்களை யார்(இஸ்லாத்தின்) உண்மைவாதி, யார் பொய்வாதி என்பதைப் பிரித்தறிய முபாஹலா என்ற பிரார்த்தனைப் போட்டிக்கு நேரடியாக பகிரங்க அழைப்பு விடுத்துள்ள செய்தி ஜூலை, ஆகஸ்ட் “88 சமாதான வழிமூலம் அறிந்திருப்பீர்கள். இதற்கு உங்கள் பதிலைக் கூறுங்கள்.

1. A.ரஹ்மத்துல்லாஹ், அம்பாசமுத்திரம்,

2. விலாசமில்லாத நபர் ஒருவர்.

எந்த முகத்தோடு இந்தக் காதியானி மிர்ஸாதாஹிர் முபாஹலாவுக்கு அழைக்கிறாரோ? நாம் அறியோம். ஒருவேளை அவரது பாட்டனார் மிர்ஸாகுலாம் 15.4.1907ல் மெளலவி சனாவுல்லாஹ் அமிர்ஸ்ட்ரசி அவர்களுடனும், 4.6.1907ல் டாக்டர் அப்துல்ஹக்கீம் அவர்களுடனும் இரு முபாஹலாக்கள் செய்து அவற்றின் விளைவாக அவருக்கு எதிராக அவரது சொந்தப் பிரார்த்தனையால் (முபாஹலா) காலராவினால் 26.5.1908ல் காலமானதை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்! அதேபோல மிர்ஸாகுலாமை எதிர்த்து வாதிட்ட கிறிஸ்தவர் அப்துல்லாஹ் ஆகும் என்பவர் 5.9.1894க்கு முன் இறந்துவிடுவார் என்ற மிர்ஸா குலாமின் சாபத்திற்கு மாற்றமாக அப்துல்லாஹ் ஆதம் 5.9.1894க்கு பிறகும் வாழ்ந்திருந்தார். இன்னும் பல முன்னறிவிப்புக்கள் மிர்ஸா குலாமினால் வெளியிடப்பட்டவை படுதோல்வியில் முந்தன என்பதை முஸ்லிம் சமுதாயம் மறந்துவிடவில்லை.

அஹமது பேகின் மகள், முஹம்மது பேகத்தை நான்தான் மணம் முடிப்பதாக பல கோணத்தில் பலமுறை மிர்ஸாகுலாம் செய்த பல முன்னறிவிப்புகள் படுதோல்வியில் முடிந்தன. கடைசி வரை முஹம்மது பேகத்தை மணமுடிக்கவே முடியவில்லை என்ற விஷயமும் உலக பிரசித்தமான ஒன்றாகும். இவற்றையெல்லாம் முஸ்லிம் சமுதாயம் மறந்துவிட்டிருக்கும் என்ற தைரியத்தில் பொய் நபியின் பேரன் முபாஹலாவுக்கு அழைப்பு விட்டிருக்கிறார் போலும்! முபாஹலாவுக்கு இந்தக் காதியானிகள் மதிப்புக் கொடுப்பவர்களாக இருந்தால், பொய் நபி மிர்ஸாகுலாம் முபாஹலாவில் தோல்வியுற்று, இறந்தவுடன் இவர்கள் தங்கள் காதியானி இயக்கத்தை கலைத்துவிட்டு நேர்வழிக்கு வந்திருக்க வேண்டும். செய்தார்களா? இப்படிப்பட்டவர்களோடு முபாஹலா செய்வதால் ஆகப்போவது என்ன?

சரித்திரத்தை உற்று நோக்கும்போது, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு வழிகேட்டில் இருப்பவர்களே மற்றவர்களை முபாஹலாவுக்கு அழைத்திருப்பதைப் பார்க்கிறோம். வழிகேட்டிலிருந்த பொய் நபி மிர்ஸா குலாம் முபாஹலாவுக்கு அழைத்ததைப் பார்த்தோம். சமாதி சடங்குகளில் சரணடைந்து இறந்துபோன அவுலியாக்களை உதவிக்கு அழைத்து, இருட்டு திக்ரில் மூழ்கி, வழிகேட்டில் இருப்பவர்களைச் சேர்ந்த ஜலீல்  முஹ்யுத்தின் முபாஹாலாவுக்கு அழைத்ததைப் பார்த்தோம். இன்று வழிகேட்டிலிருக்கும் பொய் நபியின் பேரன் மிர்ஸாதாஹிர் இப்போது முபாஹலாவுக்கு அழைப்பு விட்டிருக்கிறர். முபாஹலாவுக்கு அழைப்பு விடுவதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

ஒன்றைத் தெளிவாகச் சொல்லி விடுகிறோம். சத்திய இஸ்லாத்தை நிலைநாட்ட முற்படும் எவருக்கும் முபாஹலா  செய்துதான் சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சத்தியத்தை நிலைநாட்ட இறுதி நாள் வரை அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளும், தாராளமாக போதுமானவையாக இருக்கின்றன. அவை இரண்டைக் கொண்டு மட்டும் இஸ்லாத்தை – சத்தியத்தை நிலைநாட்ட முற்படுகிறவனே நேர்வழியில் இருக்கிறான். தனது அறிவுத்் திறமையைக் கொண்டு, வாதத் திறமையைக் கொண்டு, தகுதிகளைக் கொண்டு, பட்டம் பதவிகளைக் கொண்டு, தன்னிடம் இருக்கும் உலக வசதிகளைக் கொண்டு, அதிசயங்களை செய்து காட்டுவது கொண்டு, முபாஹலாவுக்கு அழைப்பு விடுவது கொண்டு சத்தியத்தை நிலைநாட்ட நேர்வழியில் நடக்கும் ஒரு முஸ்லிம் ஒருபோதும் முற்படமாட்டான். காரணம் சத்தியத்தை நிலைநாட்ட குர்ஆன், ஹதீஸ் அல்லாத பிரிதொரு சாதனம் தேவையே இல்லை. இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களைக் கொண்டு அல்லாஹ் மார்க்கத்தை நிறைவு செய்து, “”உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள்  வழிதவறவே மாட்டீர்கள். ஒன்று குர்ஆன், மற்றது எனது நடைமுறை,” என்று பகிரங்கமாக அறிவிப்புச் செய்ய செய்துவிட்டான்.

ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் அளவில் உயர்த்தப்படமாட்டார்கள். இன்று வரை மரணத்தை சுகிக்கவில்லை என்பதற்கு குர்ஆன், ஹதீஸ் ஆதாரமுண்டா? A.மஹ்ரூப், சென்னை, நஸ்ரீன் பர்வீன், விருதை, M.H. யூசுஃப், மரைக்காயர், திருவனந்தபுரம்.

குர்ஆனிலும், ஹதீஸிலும் இதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயம் இது. எனவே விரிவானதால் ஒன்று எழுதி தயார் செய்துவிட்டோம். பொருளாதார நெருக்கடி காரணமாக அச்சிட்டு வெளியிட முடியவில்லை. கூடிய விரைவில் வெளியிட முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். துஆ செய்யுங்கள்.

தங்களது ஜூலை இதழில் “பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதுவதற்கான ஹதீதுகள் அனைத்தும் பலஹீனமானவை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் ‘ஹாக்கிம்” என்ற நூலில் “பிஸ்மில்லாஹ்வை” சப்தமிட்டு ஓதியதாக, அனஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பதாக நம்பகமான அறிபிப்பாளர் தொடரைக் கொண்ட ஹதீது உள்ளது. அடுத்து, நபி(ஸல்) அவர்களின் “கிராஅத்” எப்படி இருக்கும் என அனஸ்(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, நபி(ஸல்) அவர்கள் நீட்டி, நிறுத்தி ஓதுவார்கள் எனக் கூறிவிட்டு, பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதில் ரஹ்மான், ரஹீம் என்ற வார்த்தைகளை நீட்டி ஓதிக்காட்டியதாக கதாதா(ரழி) அறிவிப்பது புகாரி நூலில் உள்ளது. இதுபோன்று உம்முஸலமா(ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டபோதும், “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அல்ஹம்துலில்லாஹி ரப்பீல் ஆலமின்” என்று நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக அபூதாவூத், அஹ்மத் நூற்களில் உளளது. இவ்விரண்டு ஹதீதுகள் மூலம் நபி(ஸல்) அவர்கள் பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதியிருந்தால்தானே, ஏனையோர் கேட்டிருக்க முடியும்? ஆகவே, தாங்கள் “ஹாக்கீம்” நூல் உட்பட ஆராயாமல், முடிவுக்கு வந்தது சரியா?. S.இப்ராஹீம், ஆறாம் பண்ணைஃ

நமது ஜூன் ’88 இதழ் பக்கம் 85, 86ல் பிஸ்மில்லாஹ்வை சப்தமின்றி ஓதுவதற்கு ஆதாரமாகக் கொடுத்துள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை கவனமாக பார்வையிடவும், அவை அனைத்திலும் தொழுகையில் பிஸ்மில்லாஹ்வை ஓதுவது பற்றிய விபரம் தெள்ளத் தெளிவாக இருக்கின்றது. ஆனால், நீங்கள் ஒரு மாத இதழிலிருந்து எழுத்து எழுதியுள்ள ஹதீஸ்கள் அனைத்திலும் தொழுகையில் ஓதப்பட்டதற்குரிய எவ்வித குறிப்பும் இல்லை. அவை தொழுகையில்லாத சந்தர்ப்பத்தில் ஓதிக்காட்டப்பட்டதாக இருக்கலாம். குறிப்பாக வஹி வரும் சந்தர்ப்பத்தில் புதிய அத்தியாயமாக இருந்தால் நபி(ஸல்) பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டே ஓதியிருப்பார்கள். காரணம், பதிவு செய்பவர்கள் அதையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டியவர்களாயிருந்தார்கள். ஜூன் “88 இதழ் 55,56 பக்கங்களில் 1,2,3,4,5 ஆகிய ஐந்து ஹதீஸ்களும் அனஸ்(ரழி) அவர்கள் மூலமாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஐந்து ஹதீஸ்களிலும் நபி(ஸல்) அவர்கள் மட்டுமல்ல. அபூபக்கர்(ரழி), உமர்(ரழி). உஸ்மான்(ரழி) ஆகியவர்களில் எவருமே தொழுகையில் “பிஸ்மி’யை சப்தமிட்டு ஓதவில்லை என்று சந்தேகத்திற்கு இடமின்றி அறிவித்துள்ளனர். இந்த நிலையில் “ரசூல்(ஸல்) அவர்கள் சப்தமிட்டு பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஓதுவதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று அதே அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்திருக்கும்போது, அதை எந்த  வகையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.

அனஸ்(ரழி) அவர்கள், அவர்களுக்கு அவர்களே முரண்படும் நிலையில் இருந்திருப்பார்களா? என்றும் எண்ணிப் பாருங்கள். ஒருசில சந்தர்ப்பங்களில் அப்படி ஓதியிருப்பார்கள்: ஒரு சில சந்தர்ப்பங்களில் இப்படி ஓதியிருப்பார்கள் என்ற முடிவுக்கும் யாரும் வருவதற்கு இல்லை. காரணம், முதல் ஐந்து ஹதீஸ்களின் வார்த்தை நடையைப் பார்ப்பவர்கள் அவ்வாறு இருக்கவே முடியாது என்ற முடிவுக்கே வரமுடியும். அப்படி இருக்குமேயானால் அனஸ்(ரழி) அவர்களே தெளிவாக தனது அறிவிப்பால் குறிப்பிட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும். நமது ஜூலை “88 இதழ் பக்கம் 34ல் ஹாக்கிமில் இடம் பெற்றுள்ள ஒரு பலவீனமான ஹதீஸையும் குறிப்பிட்டுள்ளோம். பார்வையிடவும், இதனையும் அனஸ்(ரழி) அவர்கள் அறிவித்ததாகவே காணப்படுகின்றது. எனவே, தொழுகையில் “பிஸ்மில்லாஹ்” சப்தமிட்டு ஓதுவதற்கு எவ்வித ஆதாரமுமில்லை என்பதே சரியாகும்.

1988 ஜூலை இதழில் பக்கம் 35ல் இமாமை பின்பற்றி தொழுபவரும் ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் சூரத்துல்  ஃபாத்திஹா ஓத வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் ’88 ஆகஸ்ட் இதழில் பக்கம் 50-ல் இமாம் ஓதும்போது மற்றவர் வாய்மூடி நின்று கேட்பது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இவை ஒன்றையொன்று முரண்படுகிறதே” ஓத வேண்டுமா? அல்லது வாய் மூடி நின்று கேட்க வேண்டும்? தெளிவுபடுத்துங்கள். H.S.அலாவுதீன், அல்கோபார்: M.Z.A.மாலிக், ரியாத். M.அபூநபீல் B.A., தேங்காய்பட்டிணம், M.சலாஹுத்தீன், குன்னூர்.

1988 ஜூலை இதழ் பக்கம் 35-ல் இமாமும் அவரைப் பின்பற்றி தொழுபவரும், தனித்து தொழுபவரும், தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்திலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் அவசியம் என்றே குறிப்பிட்டிருந்தோம். இந்த இதழில் “நபி வழியில் நம் தொழுகை” என்ற தொடரில் இடம் பெற்றுள்ள இமாமுக்குப் பின்னால் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது பற்றிய விளக்கம் இடம் பெற்றுள்ளது. பார்வையிட்டதற்குப் பின் சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள். தெளிவுபடுத்துகிறோம்.

*********************************************************************************************************************************************************************************

வேண்டாம் 786   – அபூ உவைன்.

(அரசி) சொன்னாள். பிரமுகர்களே! மிக்க கண்ணியமுள்ள ஒரு கடிதம் (ஹுதுஹுது பறவை மூலம்) போடப்பட்டுள்ளது. இது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. இன்னும் இது பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது. (அல்குர்ஆன் 27:29,30)

சூரத்துன் “னம்லி” (எறும்புகள்) என்னும் அத்தியாயத்தில் உள்ள மேற்கூறப்பட்ட வசனங்கள் அவர்களும் நொன் வந்து அல்லாஹ் கடிதம் எழுதும் முறையை நமக்கு அழகாகக் கற்றுத்தருகிறான். கடிதம் எழுத துவங்கும் முன் ஆரம்பமாக பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதி அதன்பின் மற்றுமுள்ள விஷயங்களை எழுதவேண்டும்.

நபி சுலைமான்(அலை) அவர்கள் “ஸபா” நேசத்தை ஆட்சி புரிந்து வந்த பெண்ணுக்கு ஹுதுஹுது பறவை மூலம் அனுப்பிய கடிதத்தின் வாயிலாக வல்ல அல்லாஹ் இதனை தெளிவாக்கியுள்ளான். அல்லாஹ் வெளிச்சமிட்டு காட்டிய இவ்விஷயத்தில் நமது சகோதர, சகோதரிகள் தெளிவில்லாமலிருப்பது வேதனைக்குரியது.  பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பதற்கு பதிலாக 786ஐ போடுகின்றனர். மேலும் இந்த நம்பரை நமது மதரஸா மவ்லவிகள் அவர்களின் பிரசுரங்களில் போடுவதும், இப்படிப் போடுவது நல்லதுதான் என்று இவர்களது யூகத்தைப் பயன்படுத்தழி தீர்ப்பளிப்பதும், வேதனைக்குரிய விஷயம் மட்டுமல்ல; வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்! கடிதங்கள், பிரசுரங்கள் மாற்றுமதந்தவர்களின் கைகளிலும், குப்பைகளிலும் செல்லுமாம்! எனவே பிஸ்மிக்குப் பதில் நம்பரைப் போடலாமாம்!

நமது உயிரிலும் மேலான நபி(ஸல்) அவர்கள், மாற்றுமத மக்களுக்கு “இஸ்லாமிய அழைப்பு” விடுத்த கடிதங்களில் பிஸ்மியை முழுமையாக எழுதியுள்ளார்களே, இது சரியல்ல, என இவர்கள் கூறுகிறார்களா? அல்லாஹ்வின் தூதருக்கே இவர்கள் பாடம் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்களா? உலக மக்கள் வாழ அழகிய முன்மாதிரியாக வந்த நபிவழியை நிராகரித்து விட்டு, புதுவழியை புகுத்த முனைகிறார்களா? இவர்கள் அல்லாஹ்வின் தீர்ப்புக்கு அஞ்சவேண்டாமா? நபிமார்கள் வாரிசு என வாயளவில் மேடைகளில் சொல்லி பெருமைப்படும் ஆலிம்களே! போலிகளை விட்டுவிட்டு உண்மை இஸ்லாத்தின் பக்கம் நீங்களும் வாருங்கள்! இந்த சமுதாயத்திற்கும் உண்மை மார்க்கத்தை உபதேசியுங்கள்!.

இந்த நம்பர் யூகம், குர்ஆனில் உள்ள வாசகங்களை மறைக்க, இஸ்லாத்தின் எதிரிகளால் புகுத்தப்பட்டு, நமது முன்னோர்களால் வாழையடி வாழையாக கையாளப்பட்டு வரும்முறை, இஸ்லாத்தில் உள்ள உண்மை விஷயங்களை மறைக்கச் செய்த சதியில் இதுவும் ஒன்று,

மார்க்கமாக நடைமுறையில் உள்ள விஷயங்களும், மார்க்கம் என்று தற்போது போதிக்கப்படும் விஷயங்களும், குர்ஆன், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் உள்ளவைதானா? என்பதை அறிந்து மிக்க சுவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட முஸ்லிம் சகோதர, சகோதரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். காலம் காலமாக நம்மவர்கள் இந்த 786 விஷயத்தில் பழகிவிட்டார்கள். சில பத்திரிகைகள் இது பற்றி எழுதியும், பழக்கதோஷயம் யாரை விட்டது என்ற சொல்லின்படி இன்றும் இந்த 786 பலரிடத்தில் தொடர்கிறது. நடந்தது நடந்து விட்டது. “அந்த உம்மத்து சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே. நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள் (2:134) என்ற இறை வசனத்திற்கேற்ப நமது தலைமுறைகளாவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி அறிந்து, குர்ஆன், ஹதீஸ் வழியில் மட்டுமே வாழ முயற்சி செய்வோமாக! இதுதான் நேர்வழி. அல்லலாஹ்வின் வழி, “அல்லாஹ்வுக்காக” இனி நம்பரைப் போடாமல் பிஸ்மியை முழுமையாக எழுதுவோமாக! குர்ஆன், ஹதீஸ் வழிக்கு மாற்றமான சகல புது வழிகளை விட்டும் தவ்பா செய்து மீள்வோமாக! வேண்டாம். 786.

குறிப்பு: ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் நமது உயிரினும் மேலாக நபி(ஸல்) அவர்களின் பெயரை நம்பர் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். வல்ல அல்லாஹ் அவர்களையும், நம்மையும், உலக மக்கள் அனைவரையும் அவனது நெர்வழியில் நடத்தாட்டுவானாக! ஏற்கனவே 786 பற்றிய ஒரு கட்டுரை மே “88 இதழில் இடம் பெற்றுள்ளது.

*********************************************************************************************************************************************************************************

ஈமானைப் பாழாக்கும் ஈனச் செயல்கள்!!!! – அபூ தஸ்னீம்.

“நிச்சயமாக அல்லாஹ்வின் ஆட்சி வானங்களிலும், பூமியிலும் உள்ளது. அவனைத் தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ, துணை செய்பவனோ வேறு எவருமில்லை. இதை நீங்கள் அறியவில்லையா?” (அல்குர்ஆன் 2:107)

நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு முஸ்லிம்களும் நம்பிக்கை (ஈமான்) சொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் முறையான மார்க்க அறிவு இல்லாத எத்தனையோ முஸ்லிம்கள் புரியும் மூடப் பழக்கங்களும், அனாச்சாரங்களும் நம்முடைய இறை நம்பிக்கையைத் தகர்த்து சின்னாபின்னப்படுத்துவதை கண்டு வருகிறோம்.

உதாரணமாக, உலக ஆதாயம் கருதி தமிழகம் முழுவதும் பரவலாக ஓதப்பட்டு வரும் மவ்லிது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள் இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவைகளை ஆராயும்போது, முஸ்லிம் சகோதரர்கள் தம்மை அறியாமலேயே ஷைத்தானின் கோரப்பிடியில் சிக்கி ஈமானை இழக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இவ்வுலக தேவைகளையும், மறு உலக தேவைகளையும் பூர்த்தி செய்து தருபவன் அல்லாஹ் ஒருவன்தான் என்பதை ஏனோ இவர்கள் மறந்து விடுகிறார்கள்.

ஒரு உண்மை முஸ்லிம் அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய நல் அமல்களைச் செய்து அவனது திருப் பொருத்தத்தைப் பெறுவதில்தான் கவனமாக இருப்பான். அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் ஏவியவற்றை எடுத்து நடந்து, தடுத்தவற்றை விட்டும் முழுமையாகத் தவிர்த்து நடப்பான். முஸ்லிம்களுக்கு இம்மை, மறுமை இரு உலக தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் சந்தேகமே இருக்கமுடியாது.

அல்லாஹ்வின் மகத்தான பண்புகளை அவனது படைப்புகளுக்கு கொடுத்து இயற்றப்பட்ட கவிகளுக்கு மார்க்க அறிவு குறைந்த பொது மக்கள்தான் பலியாகிறார்கள் என்றில்லை. கற்றறிந்த “மவ்லவிகளும்” இந்த ஷிர்க்கான கவிதைகளுக்கு துணைபோவதை நாம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம். மவ்லிதும், புர்தாவும் புகழ்பாக்கள். எனவே அதனை ஓதுவதில் தவறில்லை என்று மவ்லவிகள் கூறுகின்றனர். மவ்லிது, புர்தாவிற்கு வக்காலத்து வாங்கி பேசும்ட மவ்லவிகளே! உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள். “எந்த முஸ்லிமாவது தம் வீட்டில் ரசூல்(ஸல்) அவர்களது புகழ்பாட வேண்டும்” என்ற நிய்ய(எண்ண)த்தில் தான் மவ்லிது. புர்தா ஓதுகிறாரா? இல்லை… நிச்சயமாக இல்லை. ரபிய்யுல் அவ்வல் 12 நாட்களிலும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் முறை வைத்து ஏற்பாடு செய்கிறார்களே, இது நபி(ஸல்) அவர்கள் புகழ் பாடவா? (அது புகழே அல்ல என்பது வேறு விஷயம்).

தங்களுக்கு பரக்கத் வருவதற்கும்,கஷ்டங்கள் நீங்குவதற்கும் தான் மவ்லிது, புர்தாக்களை ஓதிவருகிறார்கள். இந்த நிய்யத்து ஈமானையே பாழாக்கி விடும் என்பதில் யாருக்காவது சந்தேகம் இருக்க முடியுமா?

மேலும் வெள்ளி, திங்கள்கிழமை இரவுகளில் ஓதப்பட்டு வரும் புர்தா நிகழ்ச்சிகளில் பெரிய விநோத வேடிக்கைகளை செய்து காட்டுகிறார்கள். புர்தா மஜ்லிஸ் நடைபெறும் ஊரில் பல குழும்பங்களிலிருந்து “பாட்டிலில் தண்ணீரை ஊற்றி” அந்த சபையில் வைத்து விடுவார்கள். புர்தாவை ஓதுபவர்கள் அனைவரும் அப்பாட்டிலில் ஊதி சப்ளை செய்யும் காட்சி ஈமானுள்ள முஸ்லிம்கள் வெட்கித் தலை குனியச் செய்யும் காட்சியாகும்.

தண்ணீரை அருந்தும் முன்பு அதனை ஊறிக்குடிக்காதீர்கள் என்று சொன்ன நபி(ஸல்) அவர்களின் ஹதீதை புகழ் பாடும் ரசனையில் மறந்துவிட்டார்கள் போலும்! தண்ணீரை அருந்தும் முன்பு அதனை ஊதிக்குடிக்காதீர்கள் என்று சொன்ன நபி(ஸல்) அவர்களின் ஹதீதை புகழ்பாடும் ரசனையில் மறந்து விட்டார்கள் போலும்!

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் பாத்திரங்களில் மூச்சு விடப்படுவதையும் அல்லது அதில் ஊதப்படுவதையும் தடை செய்துள்ளார்கள். (அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

சமீப காலங்களில் “அந்நஜாத்” போன்ற பத்திரிகைகளில் மவ்லிது, புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றை கவனமாக ஊன்றிப் படிக்கும் எண்ணற்ற முஸ்லிம்கள் தமது தவறிலிருந்து விலகி, தவ்பா கோருவதை ஆங்காங்கு பார்த்து வருகிறோம். ஆனால் மவ்லவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலர் தெளிவு பெறுவதைக் காணமுடியவில்லை. காரணம் அவர்கள் குழப்பத்தில் இருந்தால்தானே தெளிவுபெறுவதற்கு!!! அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். மவ்லிது, புர்தா கவிதைகளின் அர்த்தங்கள் அனைத்துமே அவர்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது என்றாலும் இந்த ஷிர்க், பித்அத்தான செயல்களுக்கு துணைபோகக் காரணம்? அவர்கள் இந்த உலகத்தின் அற்ப சுகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அல்லாஹ் தன் திருமறையில் மிக அழகாக இதை விளக்குகிறான்.

“எனினும் நீங்களோ மறுமை சிறப்பானதையும், நிலையானதாகவும் இருக்கும் நிலையில் (அதை விட்டுவிட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்”. (அல்குர்ஆன் 87:16,17)

மவ்லிது, புர்தா, தர்கா நிகழ்ச்சிகள் இறந்தவர்களுக்காக செய்யும் சடங்குகள் முதலியவை ஷிர்க், (இணைவைத்தல்) பித்அத் (புதுவழி) என்பதை அறிந்தும் – அதை விட்டும் விலக முடியாத இக்கட்டான மனநிலையில் இருக்கும் சில சகோதரர்களையும் பார்க்கிறோம். இவ்வளவு காலம் “நன்மைகள் வரும்” என்ற நிய்யத்தில் ஓதி வந்தவர்கள் இப்போது திடீரென்று நிறுத்திவிட்டால் “ஏதேனும் ஆபத்துக்கள்” வந்துவிடுமோ, எதிர்பாராத கஷ்டத்தில் சிக்கி விடுவோமோ என்று அஞ்சி தொடர்ந்து ஓதி வருகிறார்கள். இத்தகைய எண்ணம் நமது ஈமானையே அழித்துவிடும் என்பதை கவனத்தில் வையுங்கள்! நன்மையும், தீமையும் தருவது அல்லாஹ் ஒருவனே என்ற நம்பிக்கையில் உறுதியாக இருங்கள். வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஈமானுடன் வாழ்ந்து ஈமானுடன் மரணிக்கச் செய்வானாக! மேலும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவானாக!

*********************************************************************************************************************************************************************************

குர்ஆனை விளங்குவது யார்? தொடர்: 9 இப்னுஹத்தாது.

கடந்த இரு இதழ்களில் அல்குர்ஆனிலுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அந்த வாசனங்களிலுள்ள விஷயங்களை வெளிக்கொணர அரபி இலக்கண, இலக்கிய பண்டித்யம் அவசியமா? என்பதை ஆராய்வோம்.

அதற்கு முன்பு அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியம் இல்லை. எனவே மார்க்கத்தை விளங்கிக்கொள்ள அவை அவசியமென்று ஒரு சாரார் கூறிவருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருகிறோம். காரணம்: முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் (Theoretically) நடைமுறை (Practically) ரீதியிலும் தெளிவுப்படுத்தப்பட்டுவிட்டன. காலமாறுதலினால் விஞ்ஞான வளர்ச்சிக் காரணமாக முஹ்க்கமாத் வசனங்களில் எவ்வித மேலதிக விளக்கத்திற்கோ, மாறதலான விளக்கத்திற்கோ, அவசியமே இல்லை. திட்டமான மாறுதலே இல்லாத ஒரே பொருளைத் தரக்கூடிய வசனங்கள் தான் முஹ்க்கமாத் வசனங்கள், இந்த விபரங்கள் அனைத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளும்படி வேண்டுகிறோம்.

முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு உறுதியான, திட்டமான ஒரு முடிவுக்கு அல்லாஹ் அல்லாத வேறு யாரும் (கல்வியறிவில் நிலையானவர்கள் உட்பட) வரமுடியாது என்பதனால் அந்த வசனங்களைப் பற்றி சிந்திக்கக்கூடாது; அவற்றிலுள்ள ஞானங்களை விளங்க முற்படக்கூடாது. உலக ரீதியில் அவற்றிலுள்ள ஞானங்களை விளங்கி செயல்படுத்தக்கூடிய விஷயங்கள் நிதர்சனமாக இவ்வுலக வாழ்க்கையில் குர்ஆனுக்கோ, ஹதீதுக்கோ முரணில்லாத நிலையில் நல்ல பலன்களை தரும்பொழுது அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றோ, நாம் சொல்லவில்லை. மாறாக, முத்தஷாபிஹாத் வசனங்களிலிருந்து திட்டமான ஒரு கருத்தைச் சொல்லி அதைப் பின்பற்றுவதால், மறுமையில் நன்மை கிடைக்கும் என்றோ, உலகத்தில் பரக்கத் ஏற்படும் என்றோ எடுத்து மார்க்கமாகச் செயல்படுத்தக் கூடாது என்றே சொல்கின்றோம். இந்த 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்” என்ற அரபிப் பதத்திற்கு உண்மைக் கருத்து (இறுதியான முடிவு) என்ற பொருளைத் தராமல் விளக்கங்கள், விரிவுரைகள், என்ற பொருளைத் தருவது கொண்டு சிலர் தடுமாறுவதால் இந்த விளக்கத்தை இங்கு இணைக்க நேரிட்டது.

இப்போது நாம் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு வருவோம். அரபி இலக்கண, இலக்கிய ஞானம் அவசியம் தேவை என்று மவ்லவிகள் கூறி வருவது இந்த முத்தஷாபிஹாத் வசனங்களை பொருத்தமட்டிலும் முற்றிலும் உண்மையே. ஆனால், அதே சமயம்  அந்த வசனங்களிலுள்ள ஞானங்களை வெளியே கொண்டுவர அரபி இலக்கண, இலக்கிய ஞானம் மட்டும் போதாது. அது உண்மையாக இருந்தால், 1400 வருடங்களுக்கு முன்னால் அரபு நாட்டிலிருந்த தாருந்நத்வாவைச் சார்ந்த அரபிப் பண்டிதர்கள் இன்றைய அரபிப் பண்டிதர்களைவிட எந்த வகையிலும் குறைவானவர்கள் அல்லர். அது மட்டுமல்ல. அன்றிலிருந்து இன்றுவரை அரபிப் பண்டிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஒரு அரபிப் பதத்திற்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதை காலங் காலமாக அரபிப் பண்டிதர்கள் அறிந்து வைத்து தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், ஒரு அரபிப் பதத்திற்கு வரக்கூடிய பல பொருள்களில் எந்தப்பொருளை குறிப்பிட்ட அந்த இடத்தில் பயன்படுத்துவது என்பதே தடுமாற்றத்திற்குரிய விஷயமாகும். உதாரணமாக, “அலக்” என்ற அரபிப் பதத்திற்கு இரத்தக் கட்டி என்ற பொருளும், ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளும், ஒட்டி தொங்கிக்கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. அன்றைய அரபி அறிஞர்களுக்கு “இரத்தக் கட்டி” என்று பொருள் கொள்வதே மிகச் சரியாகத் தெரிந்தது. ஆனால், இன்று அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யமும், மனித உடற்கூற்று துறையில் பாண்டித்யமும் உள்ளவர்கட்கே இரத்தக்கட்டி என்ற பொருள் தவறானது. ஒட்டித் தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று என்ற பொருளே பொருத்தமானது என்ற முடிவுக்கு வரமுடிந்தது.

அதே சமயம் 1400 வருடங்களுக்கு முன்னால் அல்ல, சுமார் 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் பெற்றவரும், மருத்துவத்துறை நிபுணருமான ஒருவரால் கூட இந்த உண்மையை விளங்கி இருக்க முடியாது. காரணம்: அன்றைய காலகட்டத்தில் தாயின் கர்ப்பப்பையில் குழந்தை எப்படி உருவாகிறது என்பதை அறியாது இருந்த காலமாகும். ஆனால் இன்றோ, தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் குழந்தை வளர்ச்சி சம்பந்தப்பட்ட நிலைகளை பல ஆய்வுகளின் மூலம் அறிந்திருக்கிறார்கள். டாக்டர் மாரிஸ் புகைல் ஒரு சிறந்த மருத்துவ மேதை, ஆராய்ச்சியாளர் இஸ்லாத்தை தழுவி அரபி அல்லாத பாஷைகளில் குர்ஆனை அவர் விளங்கும்போது, இன்றைய விஞ்ஞான கூற்றுகளுக்கு ஒரு சில விஷயங்கள் (உதாரணமாக, அலக் என்ற பதத்திற்கு கொள்ளப்பட்ட பொருள்) முரண்படுவது போல் தெரிந்தது. காரணம், மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட ஞானமில்லாத வெறும் அரபி மற்றும் மொழி ஞானமுள்ளவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட மொழி பெயர்ப்புகளையே ஆதாரமாகக் கொண்டு அவர் சிந்திக்க வேண்டியிருந்தது. எனவே அந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவையாக ஆகிவிட்டன. அவரின் ஈமானின் உறுதி காரணமாக அல்குர்ஆன் அப்பட்டமான, தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிலைநாட்டப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கு முரணாக இருக்க முடியாது. காரணம், அல்குர்ஆன் அல்லாஹ்வின் பேச்சு(கலாம்) என்றால், விஞ்ஞான உண்மைகள் அல்லாஹ்வின் செயல்களாக இருக்கின்றன. எனவே, அல்லாஹ்வின் பேச்சும், செயலும் முரண்பட முடியாது. இங்கு எங்கேயோ கோளாறு ஏற்பட்டிருக்கின்றது. அதைக் கண்டறிய வேண்டும். அதற்கு அல்குர்ஆன் இறங்கியுள்ள அரபி மொழியை தான் கட்டாயம் கற்றறியவேண்டும் என்ற ஆர்வத்தோடு அரபி மொழி கற்றார். அரபி மொழியில் ஒவ்வொரு பதத்திற்கும் உள்ள பொருள்களையும் அறிந்தார். எனவே அவர் ஈடுபட்டிருந்த மருத்துவத்துறையில் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்த பொருள்களை அகற்றி அந்த இடத்திற்கு பொருத்தமான பொருளைக் கொடுத்து, அல்குர்ஆன் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு விரோதமானது அல்ல; என்பதை நிரூபித்துக் காட்டினார்.

ஆக, இந்த இடத்தில் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளக்கும் விஞ்ஞான உண்மைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள அரபி இலக்கண, இலக்கியத்தை டாக்டர் மாரிஸ் புகைல் கற்றுக் கொண்டாரேயல்லாமல், முஹ்க்கமாத் வசனங்களையோ, அவை கொண்டு நிலைநாட்டப் பெற்றிருக்கும் மார்க்கத்தையோ, தெளிவாக அறிந்து கொள்ள அவர் அரபி இலக்கண, இலக்கியம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த முத்தஷாபிஹாத் வசனங்களிலுள்ள விஷயங்களை விளக்கிக் கொள்ள அரபி இலக்கண இலக்கியம் மட்டும் போதாது. அதற்கு மூன்று நிலைகள் இருக்கின்றன. அந்த மூன்று நிலைகளும் நிறைவு செய்யப்பட்டால் மட்டுமே அரபி சாத்தியமாகும் என்பதாகும். அவையாவன:

1. அரபி இலக்கண, இலக்கிய ஞானம்,

2. அந்த முத்தஷாபிஹாத் வசனம் எந்தத் துறை சம்பந்தப்பட்டதாக இருக்கின்றதோ, (உதாரணம்: மருத்துவத்துறை, வானியல் துறை) அந்தத் துறையில் அன்றைய காலகட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ள உண்மைகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும்.

3. இதற்கெல்லாம் மேலாக அதற்குரிய காலம் கனிந்திருக்க வேண்டும்.

இதே டாக்டர் மாரிஸ் புகைல் சுமார் 500 வருடங்களுக்கு முன் பிறந்து, வாழ்ந்து இப்போது அவர் செய்த அனைத்து முயற்சிகளை செய்திருந்தாலும், இன்று அவர் கண்டுள்ள உண்மைகளை அன்று கண்டிருக்க முடியாது. காரணம்: அதற்குரிய காலம் கனியவில்லை. கர்ப்பப்பை உண்மைகளை அன்றைய மருத்துவத்துறை அறிஞர்களும் அறிந்திருக்கவில்லை.

ஆக அரபி மொழியறிவைக் கொண்டு, பல அர்த்தங்களை முஹ்க்கமாத் எனும் தெளிவான வசனங்களுக்கு கொடுப்பது பெருங்குற்றமாகும். முஹ்க்கமாத் வசனங்களைக் கொடுப்பது பொருங்குற்றமாகும் முஹ்க்கமாத் வசனங்களைக் கொண்டு மக்களை தவறான வழிக்கு ஏவுவது ஏமாற்றுவதேயாகும். ஏனெனில் அவற்றின் நேரடியான மொழி பெயர்ப்புகளை படித்த பாமரனும் அவற்றை எளிதில் புரிந்து கொள்ள இயலும்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

**********************************************************************************************************************************************************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு!  தொடர்: அபூ அஸ்மா

ஹதீஸ் நூற்களின் படித்தரங்கள் :

ஹதீஸ்கலா வல்லுநர்கள் ஹதீஸ்களின் முறையான அமைப்பையும், அதள் தரத்தையும் கவனத்தில் கொண்டு, எல்லா ஹதீஸ் நூற்களையும் நான்கு படித்தரங்களாகப் பிரித்துள்ளார்கள்.

1. ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய இவ்விரண்டு நூற்களும் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் தொடர்கள் முறையாக  அமைத்திருப்பதோடு, அவற்றின் அறிவிப்பாளர்களும் மிக நம்பகமானவர்களாக இருக்கின்றனர் என்பனவற்றைக் கவனித்து இவை மிக உன்னத ஸ்தானத்தை வகிக்கின்றன.

2. முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய இந்நான்கு நூற்களும் இவற்றின் சில அறிவிப்பாளர்களின் நம்பக நிலையைக் கவனிக்கும்போது, முதலாம் தரத்தோரைப் பார்க்கினும் சிறிது குறைந்தவர்களாயிருக்கின்றனர். இருப்பினும் இவர்கள் அனைவரும்  நம்பகமானவர்கள் தாம் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. முஸ்னத் அஹ்மத் எனும் நூலும் இவ்விரண்டாம் தரத்தைச் சார்ந்ததென்றே கணிக்கப்படுகிறது.

3. தாரமீ, (ஹிஜ்ரீ 225ல் மறைவு) இப்னுமாஜ்ஜா, (ஹிஜ்ரி 273ல் மறைவு), பைஹகீ (ஹிஜ்ரீ 458ல் மறைவு) தாருகுத்னீ (ஹிஜ்ரீ 385ல் மறைவு), தப்ரானீ (ஹிஜ்ரீ  360ல் மறைவு). தஹாவீ (ஹிஜ்ரீ 311ல் மறைவு), முஸ்னத் ஷாபியீ(ஹிஜ்ரீ 204ல் மறைவு), முஸ்தத்ரக் ஹாக்கிம் (ஹிஜ்ரீ 405ல் மறைவு), மேற்காணும் பெயர்களையே நூற்களின் பெயர்களாகக் கொண்டுள்ள இவ்வெல்லா நூற்களிலும் ஸஹீஹ், லயீஃபான இருவகை அறிவிப்புகளும் கலந்தே இடம் பெற்றிருப்பினும், ஏற்கத்தக்க, நம்பகமான அறிவிப்புகளே இந்நூற்களில் மிகைத்துக் காணப்படுகின்றன.

4. ஹிஜ்ரீ 310ல் காலமாகிய இப்னுஜகர் அவர்களின் தொகுப்புகளும், ஹிஜ்ரீ 469ல் காலமாகிய கதீபு பக்தாதீ அவர்களின் நூற்களும்ட ஹிஜ்ரீ 403ல் காலமாகிய அபூநயீம், ஹிஜ்ரீ 571ல் காலமாகிய இப்னு அஸாக்கீர், ஹிஜ்ரீ 509ல் காலமாகிய தைலமீ, ஹிஜ்ரீ 365ல் காலமாகிய காமிலுபின் அதீ, ஹிஜ்ரீ 410ல் காலமாகிய இப்னுமர்தூயா, ஹிஜ்ரீ 207ல் காலமாகிய வாகிதீ(ரஹ்) ஆகியோரின் நூற்களும், மேலும் இவர்களைப் போன்ற ஏனைய தொகுப்பாளர்களின் நூற்களும் இந்நான்காம் படித்தரத்தைச் சார்ந்தவை என ஹதீஸ்கலா வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளன.

மேற்காணும் இத்தொகுப்புகள் அனைத்தும் நம்பகமானவை, நம்பகமற்றவை என்ற பாகுபாடின்றி அனைத்து ஹதீஸ்களும் இடம் பெற்றுள்ள மொத்த தொகுப்புகளாகும். (மவ்ழூலான) இடைச் செறுகலான ஹதீஸ்களும் இந்நூற்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

பெரும்பாலான பிரசங்கிகள், சரித்திராசிரியர்கள், ஞானவான்கள்(?) என்று சொல்லப்படும் சூபியாக்கள் முதலியோரின் துணைச் சாதனங்களே இத்தகைய நூற்கள் தாம், இருப்பினும் இவற்றை அலசிப் பார்த்து பொருக்கினால் இவற்றிலிருந்தும் விலை மதியாப் பொக்கிஷங்களைப் பெற முடியும்.

நான்காம் காலக் கட்டம்:

இது ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டில் துவங்கி இன்றைய நமது காலம் வரை இதன் தொடர் விடுபடாது நடந்து கொண்டிருக்கிறது. இக்காலக் கட்டத்தில்தான் மூன்றாம் காலக்கட்டத்திய நூற்தொகுப்புப் பணிகள் முற்றுப் பெறும் நிலையை அடைந்தன.

இந்நீண்ட காலகட்டத்தில் நிகழ்ந்த பணிகளின் விபரம் வருமாறு:

1. பிரதான ஹதீஸ் நூற்களுக்கான விரிவுரைகள், ஓரக் குறிப்புகள், ஹதீஸ்களைப் பிறமொழிகளில் மொழி பெயர்ப்புச் செய்தல் முதலியவை நடந்துள்ளன.

2. ஹதீஸ் கலை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களின் விபரங்களைக் கொண்ட மேற்காணும் நூற்களில் அநேக நூற்கள் இதே காலகட்டத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஹதீஸ்களின் விரிவுரைகளும், கருத்துரைகளும் எழுதப்பட்டன.

3. சன்மார்க்க அறிஞர்கள் தமது ஆர்வத்துக்கும், அவசியத்துக்கும் ஏற்ப மூன்றாம் காலகட்டத்திய நூற்களிலிருந்து ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து பயன்மிகு பல நூற்களைத் தொகுத்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றின் பெயர்கள் பின்வருமாறு:

அ. மிஷ்காத்துல் மஸாபீஹ்:

இதன் தொகுப்பாசிரியர்  “வலிய்யுத்தீன் கதீபு” என்பவராகும். இதில் சன்மார்க்கத்தின் கொள்கைக் கோட்பாடுகள், நடைமுறைகள், நற்குண நல்லொழுக்கங்கள், சுவர்க்கம் நரகத்தைப் பற்றிய விபரங்கள் மறுமையில் மக்களை எழுப்புதல், அவர்களை ஒன்று சேர்த்து பின் அவர்களை விசாரித்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஆ. ரியாழுஸ்ஸாலிஹீன் :

இதன் தொகுப்பாசிரியர், ஹிஜ்ரீ 676ல் காலமாகிய, ஸஹீஹ் முஸ்லிமீன் விரிவுரையாளரான இமாம் அபூஜகரிய்யா யஹ்யாபழின் ஷரஃப் நலவீ(ரஹ்) அவர்களாவர்.

இதில் பெரும்பாலும் நற்குணம், நல்லொழுக்கம் பற்றிய ஹதீஸ்களையே தெரிவு செய்துள்ளார்கள். மேலும் ஒவ்வொரு தலைப்பிலும் அதற்கேற்ப குர்ஆனின் வசனங்களையும் இணைத்துள்ளார்கள். இதுவே இந்நூலின் சிறப்புக்கோர் எடுத்துக்காட்டாகும். இவ்வாறே ஸஹீஹ் புகாரீயும் ஒவ்வொரு தலைப்புக்கேற்ப குர்ஆனின் வசனங்கள் இணைக்கப்பட்ட நிலையில் இருக்கிறதென்பது  குறிப்பிடத்தக்கது.

இ. முன்தகல் அஃக்பார்:

இதன் தொகுப்பாசிரியர் அபுல்பரகாத் அப்துஸ்ஸலாம்பின் தைமிய்யா(ரஹ்) அவர்களாவர். (மறைவு: ஹிஜ்ரீ 652) இவர்கள் (ஹிஜ்லீ 727ல் காலமாகிய) “ஷைகுல் இஸ்லாம் தகிய்யுத்தீன் அஹ்மத் இப்னுதைமிய்யா” என்னும் பெயரில் பிரசித்தி பெற்றவர்களின் பாட்டனாராவார்கள்.

இந்நூலுக்கு காழீ ஷவ்க்கானீ(ரஹ்) அவர்கள் விரிவுரையாக “நைலுல் அவ்த்தார்” எனும் பெயரில் 8 பாகங்கள் தயாரித்துள்ளார்கள். இந்நூலில் அறிவிப்பாளர்களின் நிலைகளை விமர்சிப்பதோடு, அனைத்துப் பிரச்சனைகளையும். ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டே தீர்வு செய்யப்பட்டுள்ளன.

ஈ. புலூசூல் மராம்:

இந்நூல் ஹிஜ்ரீ 852ல் காலமாகிய ஸஹீஹ் புகாரீயின் விரிவுரையாளர் ஹாபீஸ் இப்னுஹஜர் அஸ்கலானீ(ரஹ்) அவர்களால் தொகுக்கப்பட்டது.

இதில் பெரும்பாலும் வணக்க வழிபாடுகள், மற்றும் நடைமுறைகள் சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள் திரட்டப்பட்டுள்ளன. இதற்கு “ஸுபுலுஸ்ஸலாம்” எனும் பெயரில் ஹிஜ்ரீ 1182ல் காலமாகிய முஹம்மது பின் இஸ்மாயீல் ஸன்ஆனீ(ரஹ்) அவர்கள் விரிவுரை செய்துள்ளார்கள். மேலும் “மிஸ்குல் கிதாம் எனும் மற்றொரு பெயரில் ஹிஜ்ரீ 1307ல் காலமாகிய “நவாப் ஸித்தீகுல் ஹஸன்கான்”  என்பவர் பாரஸீக மொழியில் விரிவுரை செய்துள்ளார்கள். இவற்றில் பெரும்பாலானவை உரூதூவில் மொழி பெயர்க்கப்பட்டு பல்லாண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

********************************************************************************************************************************************************************************

சமூகவியல்: 10. இரு வழிகள்! செ. ஜஃபர் அலீ,, பி.லிட். கும்பகோணம்.

“(மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன ஒன்று) அல்லாஹ்விடம் செல்லக்கூடிய  நேரான வழி: (மற்றும்) கோணல் வழிகளும் உண்டு. அவன் நாடினால் உங்கள் யாவரையும் நேரான வழியில் செலுத்தி விடுவான்”. (அல்குர்ஆன் 16:9)

இணையற்ற எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து – தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே நேரான வழியில் இறையருளால் செல்வார்கள். தங்களைப் பற்றிய உணர்வு இல்லாமல் – வாழ்க்கை நடத்துபவர்கள் நேர்வழியில் எங்ஙனம் வீறுநடை போடுவர்? நிச்சயமாக இயலாது!

இம்மையின் அற்ப சுகங்களுக்காக, அற்ப நீர்த்துளியிலினின்றும் உருவாக்டகப்பட்ட மனிதன் அற்பத்தனமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறான்! என்னே கேவலம்! என்னே மதியீனம்!

“பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவைகள் விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவைகளாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது”. (அல்குர்ஆன் 16:13) என்று வல்ல நாயன் வான் மறையில் மிகத் தெளிவாகக் கோடிட்டு காட்டிய பின்னரும் உணர்வில்லாமல் வாழ்கின்ற மனித சமுதாயத்தைப் பற்றி என்ன எண்ணுவது?

நம்முடைய ஒவ்வொரு செயலிலும் நாயன் இட்ட கட்டளைகளுக்கும், நபிவழிகளுக்கும் பகிரங்கமாகவே மாறு செய்து கொண்டு, “நானும் முஸ்லிம்” என்று வாய்க் கூசாமல் சொல்லித் திரிபவர்கள்: இறையச்சமும் இறை நம்பிக்கையும் அற்றவர்களேயாவர்!.

“அக்கிரமக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை, நாம் அழித்திருக்கிறோம். அதனுடைய முகடுகள் இடிந்து குட்டிச்சுவராகக் கிடக்கின்ற; எத்தனையோ மாட மாளிகைகள் பாழாய்க் கிடக்கின்றன. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவைகளைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக் கூடிய இதயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்; அல்லது (நல்லுரையைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகியிருக்கும், உறுதியாக அவர்களுடைய (வெளிக்) கண்கள் குருடாகவில்லை; எனினும் நெஞ்சங்களில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்கள் தாம் குருடாகி விட்டன”. (அல்குர்ஆன் 22:45,46) என்று அல்லாஹ் மிகத் தெளிவாக அறிவிக்கின்றான்.

அண்மைக் காலங்களில் சமுதாய அமைப்பில் நிகழ்ந்து வரும் சில நிகழ்ச்சிகளை – வேதனை தரும் சம்பவங்களை மனதில் எண்ணியே றே்காணும் அருள்மறை வசனங்களை எடுத்துக்காட்டுகின்றேன். புதைகுழி விழாக்கள் ஆங்காங்கே “எக்ஸ்ட்ரா” நடிகைகளின் நடனங்களுடனும், திரைப்பட இன்னிசை விருந்துடனும் தடபுடலாக நடந்து வருகின்றன. பெண்குலப் பொன்விளக்குகள் பட்டாம் பூச்சிகளாய் – வண்ணப் பூச்சுகளுடன் தங்களை மினுக்கிக் கொண்டு – வாலிபர்களுக்கிடையே இடிபட்டுக் கொண்டு அருங்காட்சியாக – ஆபாச களியாட்டங்களைக் கண்டு களிப்பதற்காக செல்லுகின்ற விதமோ சொல்லுந்தரமன்று!

இப்படித்தான் அண்மையில், அடக்கப்படாத இறை நேசரின் மண்டப விழா ஒன்று நடந்தது. மாற்றுச் சமய இளங்காளைகள் கலகத்தை ஏற்படுத்தி, காமத்தைத் தணிக்க வடிகால் ஏற்படுத்திய “சோகம்” ஒன்று நடந்தேறியுள்ளது! சொல்லவும் – வரையவும் நாவும், கையும் கூசுகின்றன! தம் இல்லங்களிலே, இணையற்றவனை நாளொன்றுக்கு ஐவேளை வணங்கி, இதயம் ஒன்றி இறைஞ்சவேண்டிய நம் குலப் பெண்கள், இல்லதத்தை விட்டு ஏகி, ஏகனுக்கு இணை வைக்கும் கொடிய செயல்களுக்குத் துணை போகி, மானத்தை இழந்த கொடுமைகளை என்னென்பேன்?

“ஜமாஅத்” என்னும் பெயரில் இயங்குபவர்களைக் குறை கூறுவதா? சமயம் கிடைத்தால் சண்டையிடுவோம் என்று திரியும் சண்டாளர்களைக் குறை கூறுவதா? சமுதாய ஒட்டுமொத்த அமைப்பையே குறை காண்பதா? கோணல் வழி செல்லும் குறுக்குப் புத்தியாளர்களே! சமுதாய சிந்தனையற்றவர்களே! குர்ஆனையும்-குண நபி போதனைகளையும் துச்சமென எண்ணி தம் இச்சைகளைப் பூர்த்தி செய்ய பொதுமக்களை பலி கிடாக்களாக்கும் ஊர் நிர்வாகிகளே! நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றவர்கள் தாமா? அண்ணலின் அறவுரைகளை மதித்தவர்கள் தாமா? சமுதாயத்துக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமானால், புதைகுழிகளை – கப்ருகளை தரைமட்டமாக்குங்கள்! உங்கள் ஆணவத்தை அத்துடுன் புதையுங்கள்!

கோணல் வழிவிட்டு நேர்வழி செல்ல உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! தவ்ஹீத்வாதிகள் கூறுவது இன்று வேப்பங்காயாக கசக்கலாம். ஆனால் நடக்கும் நிகழ்ச்சிகளை மனதில் எடைபோட்டு உங்கள் பகுத்தறிவினை விரிவாக்கி, நீங்கள் சிந்தித்தால் உண்மை உணர்வீர்கள்! “உரூஸுக்குச் சென்று திரும்பியவர்களின் வேன் மரத்தில் மோதியது் பலர் இறந்தனர்” என்னும் செய்தியை நாளேட்டில் படிக்கத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றவர்களே இஸ்லாமியர்கள். இணையற்றவனுக்கு இணை காண்பதில் முற்பட்டு மகிழ்வு கொள்பவர்கள் இஸ்லாமியர்களாக எங்ஙனம் வாழ இயலும்?

இம்மைக்கும்,மறுமைக்கும் நன்மை பயக்கும் வழியே நேர்வழி இருமைக்கும் தீமை காட்டும் வழியே கோணல் வழி! நீங்கள் எவ்வழி! வல்ல அல்லாஹ், நம்மனைவோர்க்கும் நல்வழி என்னும் நேர்வழியை காட்டி, இம்மையிலும் மறுமையிலும் எவ்வித அச்சத்துக்கும் இடையூறுகளுக்கும் நாம் உள்ளாகாமல், இறையச்சத்தை மட்டும் இதயத்தில் தேக்கி வாழக் கூடியவர்களாக நம்மை ஆக்கிவைப்பானாக! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

**********************************************************************************************************************************************************************************

“பித்அத் ஓர் ஆய்வு” – அபூ ஃபாத்திமா

அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்:

“அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு”. (அல்குர்ஆன் 42:21)

(நபியே! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தை கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். (48:16)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும்,

* அல்லாஹ்வுக்கே மார்க்கம் சொந்தம்!

* அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்!

* ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது!

* அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்கமாக்கப்பட்டதை அதாவது, பித்அத்துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு இணை(ஷிர்க்) வைக்கிறார்கள்.

* அந்த பித்அத்துக்களை உண்டாக்கியவைகளை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கிவிட்டார்கள்!

* இது இணை(ஷிர்க்) வைக்கும் மன்னிக்கப்படாத குற்றமே என்பனவற்றை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றன.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

“எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடை.ய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்த தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள்: அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூனினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர் ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (முஸ்லிம்)

2.”வார்த்தையில் சிறந்தது அல்லாஹ(ஜல்)வின் வேதம், நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் நடைமுறை காரியங்களில் கெட்டது நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துகள், பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி) நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸயீ.

3.உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டிர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் வேதம். இரண்டு எனது வழிமுறை”. அறிவிப்பாளர் :மாலிக் இப்னு அனஸ்(ரழி), (முஅத்தா)

4.அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள் : “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

5.ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்: “எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

6.நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: “வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பலலைப் போன்றது. அதில் அழித்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்: ரஜீன்.

7. ஜாஃபிர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புறப்பட்டனர். சூராவும் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார்கள். மக்களும நோன்போடு இருந்தனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையாக உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பருகினார். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (முஸ்லிம், திர்மிதீ)

8. “எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

அறிவிப்பவர்: அலி(ரழி), நூல்: அபூதாவூது, நஸயீ.

9. நபி(ஸல்) அவர்கள், நபித்தோழர் பராஉ பின் ஆஜிப்(ரழி) அவர்களுக்கு, இரவில் படுக்கப் போகும் பொழுது ஓதும் துஆ ஒன்றை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் “……………….. வ நபிய்யி கல்லதீ அர்ஸல்த………..” என்று கற்றுக்கோடுத்ததை, நபித்தோழர் அதை “…….வ ரசூலி கல்லதீ………….” என்று ஓதிக் காண்பித்த போது, இதைக் கேட்டவுடன் நபி(ஸல்) அவர்கள், இல்லை “வநபிய்யி கல்லதீ அர்ஸல்த….” என்று (நான் ஓதிக் காட்டியபடியே) ஓதுமாறு கூறினார்கள். (புகாரீ)

(‘நபிய்யீ கல்லதீ” என்பதை “ரசூலிகல்லதீ” என்று சொன்னதையே நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்காமல், அதைக் கண்டித்து திருந்தி இருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானது என்று கூறி செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்)

மேற்காணும் குர்ஆனின் வசனங்களும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக அணு அளவும் இணைக்க முடியாது என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் உண்மை விசுவாசிகள் விளக்கிக் கொள்ள முடியும். இனி பித்அத் விஷயமாக நபித்தோழர்களுடைய அறவுரைகளைப் பார்ப்போம்.

1. “நான் உங்களிடம் அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வுடைய ரசூல்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன் நீங்களோ அபூபக்கர் சொன்னார்; உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என இப்னு அப்பாஸ்(ரழி) கூறுகிறார்கள்.

2. ”நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்ல. நான் நேராக நடந்தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னை திருத்துங்கள்” என அபூபக்கர் சித்தீக்(ரழி) கூறுகிறார்கள்.

3. ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “திக்ரு”, ஸலவாத்து, ஓதிக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், “நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவனாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

4. ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தபடி சொல்வதோடு “வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்” என்று இணைத்துக் கொண்டார். இதனை பித்அத்து என்று கண்டித்து திருத்தினார்கள் இப்னு உமர்(ரழி) அவர்கள்.

5. “பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் தான், மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது (ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்.

6. “பின்பற்றுபவனாக இரு. புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே” என இப்னு அப்பாஸ்(ரழி) உபதேசம் செய்துள்ளார்கள்.

7. “நபித்தோழர்கள் செய்யாத வணக்க வழிபாடுகள் எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா(ரழி) அறிவித்துள்ளார்கள்.

8. “அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரழி) அவர்கள் பிஸ்மியை சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட அவருடைய தகப்பனார், மகனே! நான் நபி(ஸல்) அவர்கள், அபூபக்கர் சித்திக்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோருக்குப் பின்னே தொழுதிருக்கிறேன். அவர்களில் யாரும் பிஸ்மியை சப்தமிட்டு ஓதியதை நான் கேட்டதில்லை. எனவே, மார்க்கத்தில் இல்லாத பித்அத்தை நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள்”.

இச்செய்தியை அவர்களே அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, நஸயீ, அஹ்மத்) அடுத்து, தாபிஈன்களில் தலை சிறந்தவரும், சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் பித்அத் விஷஸயமான எச்சரிக்கையையும் தருகிறோம். அது பின்வருமாறு உள்ளது.

“அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கொண்டும் மார்க்கத்தைப் போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை(பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்”.

இமாம்களின் நல் உபதேசங்கள்:

இதற்கு மேலும் இது விஷயத்தில் சந்தேகிப்பவர்கள் இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்துக் கொண்டிருக்கும் முகல்லிதுகளேயாகும். ஆனால் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் “எங்களைத் தக்லீது செய்யாதீர்கள். எங்கள் பெயரால் மத்ஹபுகளை அமைக்காதீர்கள்” என்றே தெளிவாகக் கூறி இருக்கின்றார்கள். அந்த இமாம்களின் கூற்றுக்கு முரணாக மத்ஹபுகளை அமைத்திருப்பது போல், இங்கு அந்த இமாம்களின் தெளிவான உபதேசங்களுக்கு விரோதமாகவே பித்அத்துகளை உண்டாக்கி செய்து வருகின்றனர். இதோ அந்த மரியாதைக்குரிய இமாம்களின் நல் உபதேசங்கள்.

1. இமாம் அபூஹனீஃபா(ரஹ்) கூறியுள்ளார்கள்:

“நீங்கள் ஹதீஸ் ஆதாரங்களையும், நபித்தோழர்களின் நடைமுறைகளையும்ட பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில், அனைத்து பித்அத்துகளும் வழிகேடுகளேயாகம்.

2. இமாம் மாலிக்(ரஹ்) கூறியுள்ளார்கள்:

“மார்க்கத்தில் பித்அத்தை உண்டாக்கி அதற்கு “பித்அத்து ஹஸனா” என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன், நபி(ஸல்) அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்த விட்டார்கள் என்றே கருதுகிறான். ஏனென்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்த்து லக்கும் தீனக்கும்,… என்று சொல்லிவிட்டான். யவ்ம அக்மல்த்து லக்கும் தீனக்கும்…. என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்கமாக இல்லாதது இன்றும் மார்க்கமாக இருக்கமுடியாது.

3. இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறியுள்ளார்கள்:

“எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை பித்அத்து ஹஸனா(அழகிய பித்அத்து) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே(மதம்) உண்டாக்கிவிட்டான்”.

4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) கூறியுள்ளார்கள்:

“எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படையாவது: ரசூல்(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி பித்அத்துகளை விடுவதேயாகும். ஏனென்றால் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளேயாகும்.”

நூல்: அஸ்ஸுன்னத்து வல்பித்ஆ

மேற்கூறிய மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள், அவர்களின் மணியான இந்த உபதேசங்களுக்கு நேர் முரணாக பித்அத்துகளில் ஏன்தான் மூழ்கி இருக்கிறார்களோ? நாம் அறியோம். அது மட்டுமல்ல, பித்அத்துக்களை வகை வகையாக தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பிப் போய், மக்களையும் குழப்புவது அதைவிட விந்தையாக இருக்கிறது.

அடுத்து, பித்அத்துக்களை நியாயப்படுத்த அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்வோம்!

கால மாறுதலினால், விஞ்ஞான வளர்ச்சியினால், ஏற்பட்டுள்ள வசதி வாய்ப்புகளை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை காரணமாகக் காட்டி, இவையெல்லாம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாதவைதானே! புதுமைகள் தானே! பித்அத்து ஹஸனாதானே! என்ற நியாயம் கற்பித்து மார்க்கத்திலும் புதுமைகளை நுழைக்க முற்படுகிறார்கள். உதாரணமாக, நவீன வாசனங்களை பயன்படுத்துவது, நவீன கட்டிடங்களில் வாழ்வது, நவீன கல்விக் கூடங்கள் கட்டுவது, நவீன கருவிகளை பயன்படுத்துவது, இவற்றையெல்லாம் “பித்அத்து ஹஸனா” என்று பெயர் சூட்டுகின்றனர். இவையெல்லாம்  தவிர்க்க முடியாதவை என்று கூறி மார்க்கத்திலும் “பித்அத்து ஹஸனாவை” உண்டாக்குகின்றனர். ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இக்கூற்றில் உள்ள தவறை உணர்ந்து கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலமாகவும் அவனது அங்கீகாரத்தின் மூலமாகவும் போதித்த மார்க்கத்தில், மனித அபிப்பிராயத்தில் நலவாகத் தெரியும் விஷயங்களை புகுத்துவதையே பித்அத்து என்று கண்டித்துள்ளார்களேயல்லாமல், இவையல்லாத உலகக் காரியங்களில் உலகிலேயே நிதர்சனமாக இலாபத்தைப் பெறும். அதே சமயம் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லாத நவீன கண்டுபிடிப்புகளைப் பற்றி பித்அத்து என்று கூறவில்லை. இதற்கு ஆதாரமான ஹதீஸ்களைக் கீழே தருகிறோம். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்த ஆரம்பத்தில், அங்கு நடந்து வந்த ஒரு விவசாய முறையைத் தடுத்து விட்டார்கள். அதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இது விஷயம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்ததும், நானும் உங்களைப் போன்ற மனிதன் தான், உங்களின் மார்க்கம் பற்றிநான் கட்டளையிடுவேனாயின் அதை ஏற்று நடங்கள். அன்றி, நான் எனது ஆலோசனையைக் கொண்டு ஒன்றைக் கூறினால், உங்கள் நோக்கப்படி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர். அறிவிப்பவர்: ராபிஃ இப்னு கதீஜ்(ரழி), முஸ்லிம்.

இதே போல் விடுதலைப் பெற்ற பரீரா(ரழி) தனது அடிமைக் கணவர் முகீஸை(ரழி) வேண்டாம் என்று அறிவித்தபோது, முகீஸின்(ரழி) மனவேதனையைக் கேட்டு, நபி(ஸல்) அவர்கள் வருந்தி பரீராவை(ரழி), முகீஸோடு(ரழி) வாழும்படி சொன்னதற்கு, இது மார்க்கக் கட்டளையா? என்று பரீரா(ரழி) கேட்டனர். எனது சிபாரிசு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை பரீரா(ரழி) ஏற்றுக் கொள்ளவில்லை. நபி(ஸல்) அவர்களும் அதற்காக அவர்களைக் கண்டிக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) (நூல்: புகாரீ, அபூதாவூத், நஸயீ, திர்மிதீ)

“பத்ரூப்போரின் போது முஸ்லிம்கள் தங்கள் முகாமை எந்த இடத்தில் அமைத்துக் கொள்வது என்ற விஷயத்தில், நபி(ஸல்) அவர்கள் தேர்ந்தெடுத்த இடத்திற்கு மாற்றமாக வேறு இடத்தை ‘ஹப்பாப் இப்னுல் முந்திர்” என்ற நபித்தோழர் தேர்ந்தெடுத்து, இது முகாம் அமைப்பதற்கு மிகப் பொருத்தமான இடம் என்று சொன்னபோது அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்று தன் கருத்தை, மாற்றிக் கொண்டார்கள். காரணம், நபி(ஸல்) அவர்கள் முதலில் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் முகாம் அமைக்க வேண்டுமென்பது இறைக்கட்டளை அல்ல. இதை நபி(ஸல்) அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொண்டதன் மூலம் விளங்க முடிகிறது. மேற்காணும் ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து உலகக் காரியங்களில் நிதர்சனமாக, பலனைப் பெறும் விஷயங்களை செய்வது பித்அத்து ஆகாது. விபரம் அறியாதவர்களே இவற்றை பித்அத் என்று கூறுகிறார்கள் என்பது தெளிவாகின்றது.

பித்அத்து போல் தோன்றும் காரியங்கள்:

அபூபக்கர் சித்திக்(ரழி)அவர்கள் காலத்தில் குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்பட்டது. உதுமான்(ரழி) காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டது; குர்ஆனை எளிதாக ஓத அரபி லிபியில் அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை மீண்டும் ஜமாஅத்தாக ஆக்கியது. இவற்றை ஆதாரமாகக் காட்டி, இவற்றிற்கு “பித்அத்து ஹஸனா” என்று பெயரிட்டு பித்அத்தை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அறிவாளிகளும் இவற்றில் தடுமாறவே செய்கின்றனர். எனவே இவற்றை மிக நுட்பமாக ஆராய்ந்து விளங்குவோம்.

1. குர்ஆன் ஒரே நூலாக இணைக்கப்படுவது: நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் இருந்து 114ம் அத்தியாயம் வரை முறையாக நபி(ஸல்)அவர்களாலேயே கோர்வை செய்யப்பட்டன என்பதே உண்மையாகும். புதிதாக சில வசனங்கள் இறங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதிக்காட்டி இன்ன அத்தியாயத்தில், இன்ன வசனத்திற்கும் இன்ன வசனத்திற்கும் இடையில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாகக் கூறி அவ்வாறே பதிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு அத்தியாயத்தினுடைய பிஸ்மி முதற்கொண்டு நபி(ஸல்) அவர்களின் கட்டளையின்படியே எழுதப்பட்டன. 9ஆம் அத்தியாயமான சூரத்துத் தவ்பாவிற்கு பிஸ்மி எழுதும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இன்று வரை பிஸ்மி எழுதப்படாமலே இருக்கிறது. இன்று யாரும் அதுவும் ஒரு அத்தியாயம் தானே பிஸ்மி தவறுதலாக விடப்பட்டு இருக்கின்றது என்று கூறி 9ஆம் அத்தியாயத்திற்கு பிஸ்மி எழுத முற்பட்டால் அது பித்அத்தே ஆகும். ஆக மார்க்க அடிப்படையில் குர்ஆனில் எவ்வித கூடுதல், குறைதல் ஏற்படவில்லை, என்பதே உண்மையாகும்.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலேயே, இவ்வாறு நிறைவு செய்யப்பட்டு, நபித் தோழர்கள் சிலர் சிலரிடம் இருந்த சில சில வசனங்கள் அனைத்தையும் அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒன்று திரட்டப்பட்டு ஒரே நூலாக ஆக்கப்பட்டது. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் பல பிரதிகள் எடுக்கப்பட்டன. இதனால் வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட குர்ஆன் வசனங்களிலோ அவற்றின் கருத்துக்களிலோ புதிதாக(பித்அத்) ஒன்றும் இணைக்கப்படவில்லை என்பதே உண்மையாகும். முறையோடு சிந்திப்பவர்கள் இதை மறுக்க மாட்டார்கள். இதே போல் அன்று தோலிலும், எலும்புத் துண்டுகளிலும் எழுதப்பட்ட குர்ஆன் வசனங்கள் இன்று அழகிய காகிதத்தில் எழுதப்படுகின்றன. இதற்கு மேலும் முன்னேறி குர்ஆன் வசனங்கள் காரிகளின் இனிமையான குரல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அவற்றை நாம் கேட்டு விளங்கிச் செயல்பட எளிதாக ஆக்கப்பட்டுள்ளது.

நாளை கம்ப்யூட்டரில் கொடுக்கப்பட்டு, தேவைப்படும் வசனத்தை, தேவைப்படும் நேரத்தில் மிக எளிதாக எடுத்துப் பார்த்து விளங்கிச் செயல்பட இன்னும் நவீன வசதிகள் ஏற்படலாம். எனவே இவற்றையெல்லாம் பித்அத் எனச் சொல்வது, நபி(ஸல்) அவர்கள் எவற்றை பித்அத் என்று குறிப்பிட்டார்கள் என்பதை முறையாக விளங்கிக் கொள்ளாததேயாகும்.

2. உஸ்மான்(ரழி) அவர்கள் காலத்தில் குர்ஆனின் பல பிரதிகள் எடுக்கப்பட்டதின் நோக்கம், பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் உள்ள மக்களுக்கு முறையாக கோர்வை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் எளிதில் அவர்களுக்கு கிடைத்து, அவர்கள் அவற்றை பார்வையிட்டு விளங்கிச் செயல்பட வேண்டும் என்பதேயாகும். அதல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு, மறுமையில் இலாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செயல்படுத்தும் மார்க்க காரியங்களைப் போல் செய்யப்பட்டது அல்ல. பரக்கத் உண்டாகும் என்ற நம்பிக்கையில் செய்யப்பட்டதும் அல்ல. எனவே. இச்செயலையும் பித்அத் என்று குறிப்பிடுவது அறியாமையேயாகும்.

3.குர்ஆன் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், அகார, இதர, உகர குறிகள் இல்லாமல், எழுதப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது, நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப் பிறகு இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி, அஜமி(அரபி அல்லாதவர்கள்)களும் குர்ஆன் ஓதும் நிலை ஏற்பட்டது. எனவே அவர்கள் எளிதாகவும், முறையாகவும் குர்ஆனை ஓதி விளங்கி, செயல்படும்ட நோக்கத்தோடு குர்ஆனுக்கு அகர,இகர,உகர குறிகள் இடப்பட்டன. உண்மையில் இது அரபி லிபியில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றமேயல்லாமல் மார்க்கத்தில் ஏற்பட்ட அல்லது குர்ஆனில் எற்பட்ட ஒரு புதுமை (பித்அத்) அல்ல. அரபி தெரிந்தவர், அந்தக் குறிகள் இடப்படாத குர்ஆனை எப்படி ஓதுகின்றாரோ, அதை எப்படி விளங்கிச் செயல்படுகிறாரோ அதேபோல் அதில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஓர் அஜமி(அரபி அல்லாதவர்) அந்த குறிகள் இடப்பட்ட குர்ஆனை ஓதவும், விளங்கிச் செயல்படவும் செய்கிறார். எனவே, நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதில் எவ்வித மாற்றமும் இதனால் ஏற்படவில்லை. ஆகவே, இதனையும், பித்அத் என்று கூறுவது தவறேயாகும்.

4. உமர்(ரழி) அவர்களும், ரமழான் இரவுத் தொழுகையும்:

உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை “தராவீஹ்” என்று பெயரிட்டு, அதனை 20 ரகாஅத்துகளாக்கி ஜமாஅத்தாகவும், ஆக்கியதாக முஸ்லிம் சமுதாயம் காலங்காலமாக நம்பி வருகின்றது! சொல்லி  வருகின்றது! ஆனால் இவற்றிற்கு ஹதீஸில் நம்மால் எந்தவித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. நபி(ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இத்தொழுகையை ரமழான் இரவுத் தொழுகை, என்ற பெயரால் 8 ரகாஅத்துகள் தொழுது வந்ததற்கு மூன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதேபோல், உமர்(ரழி) அவர்கள் உபைஇப்னு கஃபு(ரழி), தமீமுத்தாரி(ரழி) ஆகிய இரு நபித்தோழர்களுக்கு 8 ரகாஅத்துகள் தொழவைக்க கட்டளையிட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸும் காணப்படுகிறது. நபி(ஸல்) அவர்கள் மூன்று இரவுகள் ஜமாஅத்தாக இத்தொழுகையை தொழுதுவிட்டு, நான்காவது இரவு அது பர்ளாக ஆக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, அவர்கள் ஜமாஅத் செய்வதை விட்டதாக தெளிவான அறிவிப்பு புகாரியில் காணப்படுகிறது. மற்றபடி, நபி(ஸல்) அவர்களே. உபை இப்னு கஃபு(ரழி) அவர்கள் பெண்களுக்கு இத்தொழுகையை 8 ரகாஅத்து ஜமாஅத்தாக நடத்த அங்கீகாரம் அளித்ததற்குரிய ஸஹீஹான ஹதீஸ் காணப்படுகின்றன.  ஆகவே, உமர்(ரழி) அவர்கள் இத்தொழுகையில் செய்த ஒதே மாற்றம் ரசூல்(ஸல்) அவர்கள் 8 நாட்கள் ஒரே ஜமாஅத்தாக செய்துகாட்டிய சுன்னத்தைப் பின்பற்றி மீண்டும் அதை அமுல்படுத்தியதாகும். சிறு சிறு ஜமாஅத்துகளாக நடந்து வந்த இத்தொழுகையை ஒரே இமாமின் கீழ், ஒரே ஜமாஅத்தாக ஆக்கியது மட்டுமேயாகும்.

மேற்கண்ட விபரங்களையெல்லாம் முறையாக சிற்திப்பவர்கள் உமர்(ரழி) அவர்கள் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். மற்றபடி, உமர்(ரழி) அவர்கள் “தராவீஹ்” என்று பெயரிட்டார்கள். 20 தராகஅத்துகளாக ஆக்கினார்கள் என்பதற்கு ஹதீஸிலோ, சரித்திர நூற்களிலோ எவ்வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு சொல்வதெல்லாம் அவர்கள் மீது வீண்பழி சுமத்துவதேயாகும். மார்க்கத்தில் இல்லாததை புதிதாக அவர்கள் உண்டாக்கவில்லை, என்பதை உறுதியுடன்  சொல்ல முடியும். மேலும், அவர்கள் “நிஃம ஹாதிஹில் பித்ஆ” என்று கூறியதாக ஹதீஸில் காணப்படுவது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட பித்அத்தாக அறிஞர்களால் கணிக்கப்படவே இல்லை.  நடைமுறையில், ஆச்சரியத்தோடு சொல்லப்பட்ட ஒரு வார்த்தையாகவே கணிக்கப்படுகின்றது. காரணம், நபி(ஸல்)அவர்களால் காட்டித் தரப்படாத புதிய எந்த ஒரு விஷயமும் உமர்(ரழி) அவர்களின் இந்த நடவடிக்கையில் ஏற்படவில்லை என்பதேயாகும்.

இவ்வளவு  தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் கலீஃபாக்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இந்த நடைமுறைகளை ஆதாரமாகக் காட்டி, “பித்அத் ஹஸனாவை” நியாயப்படுத்த யாரும் முற்பட்டால் அவர்களுக்கு நாம் கூறும் இன்னொரு விளக்கமாவது வருமாறு: நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்தையும், நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களின் சுன்னத்தையும், பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்ற கருத்துப்பட வரும் ஸஹீஹான ஹதீஸ் ஒன்று காணப்படுகின்றது. இதில் நபி(ஸல்) அவர்கள் எனது சுன்னத்து என்று குறிப்பிட்டது வஹீயின் தொடர்போடு இருந்த, நபி(ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரம்  ஆகும். நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னத்து என்று குறிப்பிட்டது. நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு  மாற்றமில்லாத கலீஃபாக்களின நடைமுறை ஆகும். இந்த அடிப்படையில், கலீஃபாக்களுடைய இச்செயல்களுக்கு நபி(ஸல்) அவர்களின் ஒப்புதல் இருக்கின்றது என்பது தெளிவாகின்றது. மேலும், இந்த நடவடிக்கைகள் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்திற்கு முரணாக இல்லை என்பதும் தெளிவான விஷயமாகும்.

இந்த நிலையில், பின்னால் வந்தவர்கள், கலீஃபாக்களின் இந்த நடவடிக்கைகளை “பித்அத் ஹஸனா”விற்கு ஆதாரமாகக் காட்டி, இவர்கள், மார்க்கத்தில் புதுமைகளை (பித்அத்) உண்டாக்க இவர்களுக்கும், யார் அனுமதி கொடுத்தார்கள்? கலீஃபாக்களின் நடைமுறைகளுக்கு மேலே உள்ள ஹதீஸ் ஆதாரமாக இருப்பது போல், இவர்களின்  நடைமுறைகளுக்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்ட முடியுமா? அப்படி எந்த ஒரு ஹதீஸும் இல்லை என்பதே உண்மையாகும். மேலே காணப்படும் ஹதீஸ் விஷேசமாக நேர்வழி நடந்த கலீஃபாக்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அனுமதி என்பதை தெள்ளத் தெளிவாக குறித்துக் காட்டுகின்றது. எனவே, அவர்களின் இந்த வாதமும் தவறேயாகும்.

“குத்பா” அரபி அல்லாத மொழிகளில் செய்வது பித்அத்தா?

இன்னொரு முக்கிய விஷயம், நமது “தமிழகத்தின் பல பகுதிகளில் குத்பாக்கள் தமிழில் செய்யப்பட்டு வருகின்றன. இது பித்அத்து ஹஸனா என்று காரணம் கூறி இதன் மூலம் மற்ற பித்அத்துக்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர். சமீபத்தில் வெளியான “பாக்கியத்துஸ் ஸாலிஹாத்  பத்வாத் தொகுப்பு: ஓர் அறிமுகம்” என்ற நூலிலும் இதை பித்அத் என்றே குறிப்பிடுகின்றனர். அதே சமயம் எங்கு அந்த வழக்கம் இருக்கின்றதோ, அங்கு அதை நிறுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்றிருந்தால் அப்படியே விட்டு விடுவதில் தவறில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. பித்அத் என்றால் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அது பித்அத்துதான்! இருந்தாலும் பரவாயில்லை! என்பது மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்தை நுழைப்பதாகும்.

உண்மையில் பிற மொழிகளில் குத்ஃபா செய்வது பித்அத்தே இல்லை. ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். (14:4) என்று வசனத்தின்படி குத்ஃபா என்பது மக்களை நோக்கி, மக்கள் விளங்குவதற்காக செய்யப்படும் உபதேசம் ஆகும். வெள்ளிக்கிழமை 2 ரகாஅத் பர்ளூ தொழ வைக்கப்படுவதால் எஞ்சியுள்ள 2 ரகாஅத்துக்கு பகரமாக இந்த குத்ஃபா செய்யப்படுகிறது என்ற தவறான எண்ணம் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. தொழுகை அல்லாஹ்வுக்காக தொழப்படுகின்றது. குத்ஃபா – உபதேசம் மக்களுக்காக – மக்கள் விளங்கி செயல்படுவதற்காக – மக்களை நோக்கி செய்யப்படுவதாகும். அதனால் தான் இமாம் குத்ஃபா செய்யும்போது கிப்லாவை முன்நோக்காமல், மக்களை முன் நோக்கி நிற்கிறார். நபி(ஸல்) அவர்களுடைய காலத்திலோ, நபி(ஸல்) அவர்கள் போற்றிய மூன்று தலைமுறையினருடைய காலத்திலோ, இப்பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. என்று காரணங்காட்டி அதனை பித்அத்து என்று சொல்வதும் சரியாகத் தெரியவில்லை. அந்தக் காலக் கட்டங்களில் இருந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரபி தெரிந்தவர்களாக இருந்தமையால் அவர்கள் விளங்கக்கூடிய மொழியான அரபியில் குத்ஃபா-உபதேசம் இடம் பெற்றதே உண்மையாகும். ஆக குத்ஃபாவின் பிரதான நோக்கம் எந்த மக்களை நோக்கி குத்ஃபா-உபதேசம் செய்யப்படுகின்றதோ அந்த மக்கள், அந்த குத்ஃபாவை-உபதேசத்தை, விளங்க வேண்டும் என்ற சாதாரண விஷயம் அனைவருக்கும் புரிந்ததே!

குர்ஆன் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது. அதனை பல பிரதிகளாக எடுத்தது. அகர, இகர, உகர குறிகள் இடப்பட்டது. எப்படி பித்அத்து இல்லையோ, மக்கள் இவ்வுலகில் எளிதாக குர்ஆனை ஓதி விளங்கி செயல்படுவதை நோக்கமாக கொண்டு செய்யப்பட்டிருக்கின்றனவே  அதேபோல் கதீஃப்-உபதேசிப்பவர், செய்யும் குத்பாஃவை – உபதேசத்தை எதிரில் உள்ள மக்கள் எளிதில் விளங்கி செயல்படுவதை நோக்கமாகக் கொண்டே குஃத்பா-உபதேசம், அரபி அல்லாத மொழிகளில் செய்யப்படுகின்றது. எனவே, அதனையும் பித்அத்து என்று சொல்லுவது தவறேயாகும்.

முடிவுரை: மேலே நாம் பார்த்த விளக்கங்கள் எந்த வகையிலும் மார்க்கத்தில் புதிதாக (பித்அத்) ஒன்றை உண்டாக்க முடியாது! உண்டாக்கக் கூடாது! என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதற்கு மேலும், பித்அத்துகளுக்கு புதிய புதிய விளக்கங்கள் கொடுத்துக் கொண்டு, வகை வகையாக பிரித்துக்கொண்டு, பித்அத்தை நியாயப்படுத்த முற்படுவது மார்க்க முரணான செயலே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

ஆதத்தினுடைய சந்ததிகளை வழிகெடுத்து நரகில் கொண்டுசேர்க்க ஷைத்தான் பயன்படுத்தும் இரண்டு மிக பயங்கரமான ஆயுதங்கள் ஷிர்க்கும் (இணைவைத்தல்), பித்அத்து(புதுமைகள்)மேயாகும். எனவே, முஸ்லிம்கள் இவற்றில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அல்லாஹ்(ஜல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வழிகேடான முயற்சிகளை மேற்கொண்டு தாங்கள் உண்மையிலேயே அழகான காரியங்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறார்களே! அவர்கள் தாம் தம் செயல்களில் மிகப்பெரும் நஷ்டவாளிகள், ஆவார்கள்””. (18:103.104) என்று குறிப்பிடுவது

**********************************************************************************************************************************************************************************

சுஃபு பின் இபாழ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

ஒவ்வொரு சமுதாயத்தவருக்கும் சோதனைப் பொருளென்று ஒன்றுண்டு. ஆனால் எனது சமுதாயத்தவரின் சோதனைப் பொருள் என்பது செல்வமேயாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (திர்மிதீ)

அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: வயோதிகரின் மனோநிலை இரு விஷயங்களில் வாலிபமாகவே இருந்து கொண்டிருக்கிறது. 1. உலக ஆசை, 2. மேலென்னமெலும் மனக்கோட்டை.  (புகாரீ, முஸ்லிம்)

அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன்னில் இரு தன்மைகள் வாலிபப் பருவத்தையடைந்து வரும் நிலையில்,ஆதமின் மகனாகிய மனிதன் வயோதிகத்தையடைந்து சென்று கொண்டிருக்கிறான். 1. பொருளின் மீதுள்ள ஆசை. 2. ஆயுளின் மீதுள்ள ஆசை. (புகாரீ, முஸ்லிம்)

*********************************************************************************************************************************************************************************

நபி வழியில் நம் தொழுகை! – தொடர்: 21 – அபூ அப்துர்ரஹ்மான்.

நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), (புகாரீ, முஸ்லிம்)

சென்ற ஆகஸ்ட் ’88 இதழில்  “எந்தெந்த தொழுகைகளில் கிராஅத்தை சப்தமின்றி மெதுவாக ஓதுவது சுன்னத்தாகும்” “எந்தெந்த  தொழுகைகளில்  கிராஅத்தை சப்தமிட்டு ஓதுவது சுன்னத்தாகும்” “எத் தொழுகைகளில் கிராஅத்தை நடுநிலையாக ஓதவேண்டும்”, “இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி “ஆமீன்! என்று அவர் கூறும்போது அவரைப் பின்பற்றித் தொழுவோரும் சப்தமிட்டு “ஆமீன்” கூறுவது சுன்னத்தாகும்” ஆகிய விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் “இமாமைப் பின்பற்றித் தொழுவோர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நிலை”யைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இமாமைப் பின்பற்றித் தொழுவோர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதன் நிலை:

1. சூரத்துல் ஃபாத்திஹாவை ஒவ்வொரு ரக்அத்துக்களிலும் கட்டாயம் ஓதவேண்டும் – என்பது முதல் பிரிவினர்.

2. சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதவேக்கூடாது என்பது இரண்டாவது பிரிவு.

3. இமாம் சப்தமாக ஓதும் தொழுகையில் ஓதக்கூடாது. மெதுவாக ஓதும்(லுஹர், அஸர் போன்ற) தொழுகைகளில் ஓதவேண்டும் என்பது மூன்றாம் பிரிவினர்.

1. முதலாம் பிரிவினரின் கூற்று:

இமாமைப் பின்பற்றித் தொழுவோர், அவர் சப்தமாக ஓதினாலும் அல்லது சப்தமின்றி மெதுவாக ஓதினாலும், அவருடன் தாம் தொழும் ஒவ்வொரு ரகாஅத்திலும் அவசியம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதியாக வேண்டும் என்பதாகும்.

இவர்களின் ஆதாரங்கள்:

1-1: உபாதத்துப்னிஸ்ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஃபாத்திஹத்துல் கிதாபு(சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை என்பதே இல்லை. (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா அஹ்மத்)

1-2. அபூஹுரைரா(ரழி) அறிவித்தள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (மற்றொரு அறிவிப்பில் ஃபாத்திஹத்துல் கிதாபுவை) ஓதாது தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

இவ்விரு ஹதீஸ்களும் எவ்வித பிரச்சினையுமின்றி முழுமையாக ஏற்கத்தக்கவையே இவையன்றி வேறு சில ஹதீஸ்களையும் தமது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அவற்றையும் பார்ப்போம்.

1-3: அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : உம்முல் குர்ஆனை (சூரத்துல் ஃபாத்திஹாவை) ஓதித் தொழாதவரின் தொழுகை முழுமை பெறாததாகும் என்று மும்முறை கூறிவிட்டு, குறைபாடுள்ளதேயாகும். என்றார்கள். அப்போது அபூஹுலைலா(ரழி) அவர்களிடம் நாங்கள் இமாமுக்குப் பின்னர் இருந்து (அவரைப் பின்பற்றி) தொழுகிறோமே (அப்போது நாங்கள் என்ன செய்வது?) என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் அதை நீர் உமக்குள்ளேயே ஓதிக்கொள்வீராக! என்றார்கள். ஏனெனில் நபி(ஸல்) அவர் (பின்வருமாறு) கூற நான் கேட்டிருக்கிறேன். (அதாவது) அல்லாஹ் கூறுகிறான்; நான் தொழுகையை (தொழுகையில் ஓதப்படும் சூரத்துல் ஃபாத்திஹாவை) எனக்கும் எனது அடியானுக்கு இடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும்.

அடியான்: அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் (அகில உலகங்களையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று கூறும்போது.

அல்லாஹ்: “எனது அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான்” என்று கூறுகிறான்.

அடியான்: அர்ரஹ்மானிர்ரஹீம்(அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்) என்று கூறும்போது,

அல்லாஹ்: எனது அடியான் என்னைப் போற்றி விட்டான் என்று கூறுகிறான்.

அடியான்: மாலிக்கி யவ்மித்தீன் (கூலி கொடுக்கப்படும் தினத்தின் அதிபதி அவனே) என்று கூறும்போது,

அல்லாஹ்: எனது அடியான் என்னை கெளரவப்படுத்தி விட்டான் என்று கூறிவிட்டு, எனது அடியான் (அனைத்தையும்) என்னிடம் ஒப்படைத்து விட்டான் என்றும் கூறுகிறான்.

அடியான்: “இய்யாக்க நஃபுது வஇய்யாக்க நஸ்தயீன்” (உன்னையே வணங்கி வழிபடுகிறோம். மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்) என்று கூறும்போது,

அல்லாஹ்: இது எனக்கும் எனது அடியானுக்கும் இடையிலுள்ள விஷயமாகும். எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும் என்று கூறுகிறான்.

அடியான்: “இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம் ஸீராத்தல்லதீன அன்அம்த்த அலைஹிம் கைரில் மக்ழூபி அலைஹிம் வலழ்ழால்லீன்” (உன்னால் கோபிக்கப்பட்டவர்களும், வழி தவறியவர்களும் சென்ற வழி அன்றியே. நீ எவர்கள் மீது அருள் செய்திருக்கின்றாயோ அத்தகையோரின் வழியை எங்களுக்கு காட்டி அருள்வாயாக! என்று கூறும் போது,

அல்லாஹ்: இது எனது அடியானுக்குரியது, எனது அடியானுக்கு அவன் கேட்டவை கிடைக்கும் என்று கூறுவான். (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் நிலையைப் பார்ப்போம். இந்த ஹதீஸ் முஸ்லிமீல் இடம் பெற்றிருப்பினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள அலாஉபின் அப்திர்ரஹ்மான் என்பவர் குறித்து இப்னு முயீன் அவர்கள் இவருடைய ஹதீஸ் எதற்கும் ஆதாரமாக ஏற்கத்தக்கதல்லவென்று கூறியதாக தவ்ரீ கூறுகிறார்கள். இவ்வாறே அவரைப் பற்றி இப்னுமூயீன் அவர்கள் இவருடைய ஹதீஸ்களை ஏற்கும் வகையில் ஹதீஸ்கலாவல்லுநர்கள் வெகு ஜாக்கிரதையாகவே இருந்துள்ளார்கள் என்று கூறியதாக இப்னு அபீகைஸமா அவர்கள் கூறுகிறார்கள் மேலும் “அபூஜர்ஆ” அவர்கள் இவர் பலமிழந்தவர் என்கிறார்கள். அல்கலீலீ மதனீ அவர்கள் இவர் ஹதீஸ்கலா வல்லுநர்களிடையே பல்வேறுபட்ட கருத்தையுடையவராக உள்ளார் என்கிறார்கள்.

இவ்வாறு ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் தமது “தஹ்தீபுத்தஹ்தீபு” எனும் நூலில் பாகம் 8,பக்கம் 187ல் விமர்சித்துள்ளார்கள். மேற்காணும் இம் மனிதரைப் பற்றி பலரல் நல்லபிப்பிராயம் கூறப்பட்டிருப்பினும், ஹதீஸ்களை எடுத்தோதும் பெரியார்களிடம் இத்தகைய குறைபாடுகள் இருப்பது அவர்களால் அறிவிக்கப்படும் அறிவிப்புகளை நம்பகமற்றதாக்கி விடும் என்பதில் ஐயமில்லை. மேலும் இவ்வறிவிப்பில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் தமக்குள்ளேயே சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதிக் கொள்ள வேண்டும் என்று அபூஹுரைரா(ரழி) அவர்கள் தமது சொந்தக் கருத்தையே கூறியிருக்கிறார்களே அன்றி, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்று கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1-4 உபாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு கிராஅத் ஓதுவது சிரமமாகி விட்டது. அவர்கள் தொழவைத்து விட்டுத் திரும்பியபோது (ஸஹாபாக்களை நோக்கி) நீங்கள் உங்கள் இமாமுக்குப் பின்னால் ஓதிக்கொண்டிருப்பதாக எனக்குத் தெரிகிறதே! என்றார்கள். அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆம் அவசரமாக ஓதிக்கொள்கிறோம் என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உம்முல்குர்ஆனை(சூரத்துல் ஃபாத்திஹாவை)த்தவிர வேறு எதையும் ஓதாதீரு்கள். ஏனெனில் அதை ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது என்றார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

1-5 உபாதத்துப்னிஸ்ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதும் ஒரு தொழுகையை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அப்போது அவர்களுக்கு கிராஅத்தில் சிக்கல் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தொழவைத்து முடித்தவுடன், எங்களை நோக்கி, “நான் சப்தமாக கிராஅத் ஓதும்போது, நீங்கள் ஓதவா செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு எங்களில் ஒருவர் “ஆம் அவ்வாறு ஓதத்தான் செய்கிறோம் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அது) வேண்டாம் என்று கூறிவிட்டு, (உங்களால்) எனக்கு குர்ஆனில் சிக்கல் ஓதினால் நீங்கள் உம்முல் குர்ஆனை சூரத்துல் ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓத வேண்டாம் என்றார்கள். (அபூதாவூத்)

இவ்விரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள மக்ஹூல் என்பவர் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) அவர்கள் தமது “மீஜானுல் இஃதிதால்” எனும் நூலில் பின்வருமாறு விமர்சித்துள்ளார்கள்: ஒரு சிலர் இவரை நம்பகமானவர் என்று கூறுகின்றனர். ஆனால் இவரை ஒரு ஜமாஅத் கூட்டமே பலகீனமானவர் என்று கூறுகிறார்கள். மேலும் இவர் தாம் ஹதீஸ்களை அறிவிக்கும்போது தாம் யாரிடமிருந்து இவ்விஷயத்தைக் கேட்டேன் என்று தெளிவாகக் கூறாது எனக்கு ஒருவர் கூறினார் என்று மறைத்து கூறும் பழக்கமுடையவராக இருந்துள்ளார் என்று நான்(தஹபீ) கூறுகிறேன். மேலும் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் தமது “தபகாத்துல் முத்லிஸீன்” எனும் நூலில் தமது ஆசிரியரின் பெயரைக் கூறாது, ஒருவர் தனக்குக் கூறினார் என்று மறைத்துக் கூறும்ட பழக்கமுடையவர்களின் படித்தரத்தை விளக்குமிடத்து, இவரை தமக்கு அறிவித்த ஆசிரியரின் பெயர்களை மிக அதிகமாக மறைத்துக் கூறும் மூன்றாம் படித்தரத்தைச் சார்ந்தோரின் வரிசையில் இடம் பெறச் செய்துள்ளார்கள்.

மேற்காணும் இந்நபரைப் பற்றி பலர் நற்சான்று அளித்திருப்பினும், இத்தகைய குறைபாடுகள் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை எடுத்தியம்பும் ஒரு மேதையிடம் காணப்படுவது முறையல்ல. இவ்விதமாக முதலாம் பிரிவினர் எடுத்து வைக்கும் ஹதீஸ்களில் முதலிரண்டு ஹதீஸ்களைத் தவிர, மற்றவை அனைத்திலும் ஏதோ ஒரு விதத்தில் கோளாறுகள் காணப்படுவதால் தக்க ஆதாரமாகக் கொள்வதற்டகு இவை ஏற்புடையதாகயில்லை என்பதே தெளிவு. இவற்றைச் சுட்டிக் காட்டும் போது முதலிரண்டு ஹதீஸ்களை வைத்தே நியாயப்படுத்த முற்படுகின்றனர் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

2. இரண்டாம் பிரிவினரின் கூற்று :

இமாமைப் பின்பற்றித் தொழுவோர் இமாம் சப்தமாக ஓதும் தொழுகை, சப்தமின்றி மெதுவாக ஓதும் தொழுகை ஆகிய அனைத்துத் தொழுகைகளின் எந்த ரக்அத்திலும் அறவே சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாது, வாய் மூடியே இருக்கவேண்டும் என்பதாகும்.

இவர்களின் ஆதாரங்கள் :

2-1: “குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள்! மேலும் (அதற்காக) வாய் மூடியிருங்கள்! (அவ்வாறிருப்பின்) நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்.” (7:204)

2-2: அபூமூஸல் அஷ்அரீ(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்! (முஸ்லிம்)

2-3: அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரை இமாமாக்கப்படுவதெல்லாம் அவர்(மற்றவரால்) பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஆகவே, அவர் தக்பீர் கூறினார் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்!

(அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

மேற்காணும் திருவசனமும், இரு ஸஹீஹான ஹதீஸ்களும் இமாம் சப்தமாக ஓதும்போது மட்டும் அவரைப் பின்பற்றித் தொழுவோரிடம் பிரிவினர் கூறுவது போல் இமாம் மெதுவாக ஓதினாலும் அவரைப் பின்பற்றித் தொழுவோர் எப்போதும் வாய் மூடியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக இல்லை. குர்ஆன் (7:204) வசனத்திலும் “குர்ஆன் ஓதினால் செவிமடுங்கள்: வாய் மூடியிருங்கள்” என்றே உள்ளது. மேற்காணும் இரு ஹதீஸ்களிலும் “வஇதாகரஅ ஃபஅன்ஸித்து” அவர் ஓதினால் வாய் மூடியிருங்கள்! என்று மட்டுமே உள்ளது. இமாமைப் பின்பற்றித் தொழுபவர் எப்போதுமே வாய் மூடியிருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாசகம் கூட அவற்றில் கிடையாது. இமாம் சப்தமாக ஓதும்போது அவர் ஓதுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவரும் அவரைப் போன்றே தாமும் ஓதியவராகி விடுகிறார். சப்தமின்றி மெதுவாக ஓதும்போது அவர் ஓதுவதைக் கேட்க வாய்ப்பில்லாததால் வெறுமனே வாய் மூடியிருப்பவர் ஓதியவராக மாட்டார்.

1-4: அப்துல்லாஹ்பின் ஷத்தாத்(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் ஒருவருக்கு இமாமாக இருந்தால் அவருடைய கிராஅத்தே தமக்கும் (போதுமானது) ஆகும். (தாருகுத்னீ) இவ்வறிவிப்பு ஆதாரப்பூர்வமானது என்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டிருப்பினும், அவ்வழிகள் அனைத்துமே பலகீனமானவையாக உள்ளன. ஆனால் ஸுஃப்யானுஸ்ஸவ்ரீ, ஷுஃபா, இஸ்ராயீல், ஷரீக், அபூகாலிதித்தவ்லானீ, அபுல் அஹ்வஸ், ஸுஃப்யானு பின் உயைனா, ஹுரைஸுபின் அப்துல் ஹமீத்(ரஹ்) ஆகியோரின் வாயிலாக மூஸப்னி அபிஆயிஷா மூலம், அப்துல்லாஹ்பின் ஷத்தாத்(ரஹ்) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் அறிவிப்பே முறையானதாக உள்ளது. ஆகவே அப்துல்லாஹ்பின் ஷத்தாத்(ரஹ்) அவர்கள் தமக்கு இவ்வறிவிப்பை எடுத்டதுக் கூறிய ஸஹாபியின் பெயரைக் கூறாது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தாமே அறிவித்திருப்பதால் இவ்வறிவிப்பின் தொடரில் ஸஹாபியின் பெயர் விடுபடுவதால், இவ்வறிவிப்பு “முர்ஸல்” (சஹாபி விடுபட்டது) என்ற வகையைச் சார்ந்ததாக அமைந்துள்ளது.

எனவே முர்ஸலான இவ்வறிவிப்பை தமக்கு சாதகமாக வைத்து இரண்டாம் பிரிவினர் இமாம் ஓதும் கிராஅத்தே அவரைப் பின்பற்றித் தொழுவோருக்கும் போதுமானது. ஆகையால், அவர் சப்தமாக ஓதினாலும், மெதுவாக ஓதினாலும் அவரைப் பின்பற்றித் தொழுவோர் வாய் மூடியே இருக்கவேண்டும் என்பதை நியாயப்படுத்தும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர். காரணம், “முர்ஸலான” அறிவிப்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.

2-5 : ஜாபிருபின் அப்துல்லாஹ்(ரழி)அறிவித்துள்ளார்கள்:

ஒருவர் உம்முல் குர்ஆனை-சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதாது ஒரு ரகாஅத்து தொழுதால், அவர் ஒரு இமாமைத் தாம் பின்பற்றியவராக இருந்தாலன்றி தொழுதவராக மாட்டார். (திர்மிதீ, முஅத்தா)

2-6: யஹ்யாபின்  யஹ்யா(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

ஒருமுறை அதாஉபின் யஸார்(ரஹ்) அவர்கள் ஜைதுபின் ஸாபித்(ரழி) அவர்களிடத்தில் இமாமுடன்(அவரைப் பின்பற்றித் தொழுவோர்) ஓதுவது பற்றி தாம் கேட்டபோது, அதற்கவர்கள் “இமாமுடன்” எந்த சந்தர்ப்பத்திலும் ஓதவேண்டும் என்பதில்லை” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மேற்காணும் கடைசி இவ்விரு அறிவிப்புகளும் ஸஹாபாக்களின் சொல்லாக இருக்கின்றன. அவ்வாறின்றி, நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளர் என்றிருப்பின் இவற்றை வைத்து மேற்காணப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களை மறு பரிசீலனை செய்ய வாய்ப்புண்டு. அவ்வாறின்றி “ஆஸார்” என்னும் ஸஹாபாக்களின் கூற்றாக இருப்பதால் இவற்றை மட்டும் வைத்து ஸஹீஹான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளவற்றில் எம்மாற்றமும் செய்ய முடியாது.

3. மூன்றாம் பிரிவினரின் கூற்று:

இமாமைப் பின்பற்றித் தொழுவோர், இமாம் சப்தமாக ஓதும்போது மட்டும் எதுவும் ஓதாது அவர் ஓதுவதை செவிமடுத்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்பதும், இமாம் சப்தமின்றி மெதுவாக ஓதும்போது, சூரத்துல் ஃபாத்திஹாவை அவசியம் தாம் ஓதிக்கொள்ள வேண்டும் என்பதும் ஆகும்.

இவர்களின் ஆதாரங்கள்:

3-1 : குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள். மேலும், (அதற்காக) வாய் மூடியிருங்கள்! அவ்வாறிருப்பின் நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள். (7:204)

3-2 : உபாதத்துப்னிஸ் ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல் கிதாபு (சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை என்பதேயில்லை.

(புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

3-3: அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (மற்றொரு அறிவிப்பில் சூரத்துல் ஃபாத்திஹாவை) ஓதாது தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும். (புகாரீ, முஸ்லிம், அஹ்மத்)

3-4: அபூமூஸல் அஷ்அரீ(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள்! அவர் கிராஅத் ஓதினால் நீங்கள் வாய் மூடியிருங்கள்! (முஸ்லிம்) மேற்காணும் (7:204) திருவசனத்துக்கும், மற்றுமுள்ள ஹதீஸ்களுக்குமுள்ள விளக்கம் முதலாம், இரண்டாம் பிரிவினர்களின் கூற்றுக்களை விமர்சிக்கும் போதே தரப்பட்டுள்ளது.

“இமாம் கிராஅத் ஓதினால் வாய்மூடியிருங்கள்”! எனும் நபிமொழிக்கு மாற்றமாக நடந்த மக்களை நோக்கி, நபி(ஸல்) அவர்கள் கூறியது:

3-5: அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தாம் சப்தமாக கிராஅத் ஓதும் தொழுகையை(த் தொழவைத்து) விட்டுத் திரும்பினார்கள். அப்போது (அங்கிருந்தவர்களை நோக்கி) சற்று முன் உங்களில் யார் என்னுடன் ஓதியவர்? என்று கேட்டார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! ஆம்! (நான் தான்) என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நான்(எனது) ஓதலில் (உங்களால்) குழப்பம் விளைவிக்கப்படுவதாக கருதுகிறேன் என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், இவ்வாறு கூறுவதைக் கேட்டுக்கொண்டிருந்த (ஸஹாபாக்களாகிய) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் சப்தமாக ஓதும் தொழுகைகளில் தாம் ஓதுவதை தவிர்த்து கொண்டார்கள். (அபூதாவூத், முஅத்தா, திர்மிதீ)

மேற்காணும் இந்த அறிவிப்பின் தொடரில் இடம் பெற்றுள்ள இப்னு உகைமாவைப் பற்றி ஒருசிலர் “மஜ்ஹூல்” (ஹதீஸ்கலாவல்லுநர்களுக்கு மத்தியில் அறிமுகமில்லாதவர்) என்று கூறியிருப்பது முறையற்றதாகும். ஹதீஸ்கலா வல்லுநர்களுக்கு மத்தியில் பிரதான ஸ்தானத்தை வகிக்கும் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் இப்னு உகைமாவைப் பற்றி கூறும் நற்சான்றுகள் பின்வருமாறு:

“இவரது அசல் பெயர் “உமாரா” என்பதாகும். இமாமுக்குப் பின் ஓதுதல் விஷயம் குறித்து அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாக அறிவிப்பவர் இவர்தான் என்பது தெளிவு: இவர் ஹிஜ்ரி 101-ல் காலமானார் என்று இப்னு ஸஃது கூறுகிறார். அபூ ஹாத்திம் அவர்கள் இவரது ஹதீஸ் ஏற்கத்தக்கதாகும் என்று கூறியிருப்பதோடு, இவர் நம்பகமானவரில் ஒருவராவார் என்று இப்னு ஹிப்பானும் கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக “ஸயீதுப்னிஸ் முஸய்யிப்” கூறுவதாக இப்னு உகைமா அறிவிப்பதை நான் கேட்டிருக்கிறேன் என்று இமாம் ஜுஹ்ரி(ரஹ்) அவர்கள் கூறியிருப்பது ஒன்றே போதுமான சான்றாகும் என்று யஹ்யாபின் முயீன் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மதீனாவில் வாழ்நது வந்த பிரபல்யமான தாபீயீன்களில் ஒருவராவார் என்று யஃகூபுபின் சுஃப்யான் கூறுகிறார்கள்.

(தஹ்தீபுத் தஹ்தீபு, பாகம் 7, பக்கம் 410).

ஆகவே, இப்னு உகைமாவைப் பற்றி அறிமுகமில்லாதவர் என்ற கூற்றுக்கு அறவே இடமில்லை என்பதை மேற்கூறப்பட்டவை நிரூபித்துக் காட்டுகின்றன.

7:204 திருவசனம் பற்றி குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுவது பின்வருமாறு:

திருகுர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவராம் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தமது தஃப்ஸீருப்னி அப்பாஸ்” என்ற நூலில் “வஇதா குரிஅல் குர்ஆனு” எனும் வசனத்திற்கு பர்லான தொழுகையில் குர்ஆன் ஒதப்பட்டால் அதன் ஓதலுக்காக செவிமடுங்கள்! மேலும் அதன் ஓதலுக்காக வாய்மூடியிருங்கள்!” என்பதாக விரிவுரை செய்துள்ளார்கள்.

இமாம் ஜுஹ்ரீ(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:

இவ்வசனம் அன்ஸார்களைச் சார்ந்ததொரு வாலிபரின் விஷயமாக அருளப்பட்டதாகும். அவர் நபி(ஸல்) அவர்கள் கிராஅத் ஓதும்போதும் அவர்களுடன் நாமும் ஓதிக்கொண்டிருந்தார். அப்போது “குர்ஆன் ஓதப்பட்டால் அதனை செவிமடுங்கள்,மேலும், வாய்மூடியிருங்கள், நீங்கள் ரஹ்மத் செய்யப்படுவீர்கள்” எனும் திருவசனம் இறங்கியது என்று கூறுகிறார்கள். (இப்னுஜரீர்)

இமாம் முஜாஹித் அவர்கள் மட்டும் இத்திருவசனம் தொழுகையில் மட்டுமின்றி ஜும்ஆ குத்ஃபாவின் போதும், வாய் மூடியிருப்பது குறித்து அருளப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள். (தப்ஸீர் இப்னுகஸீர்).

ஆகவே, இத்திருவசனம் ஏகோபித்து எல்லா முஃபஸ்ஸிரீன்களில் கருத்துப்படி தொழுகை சம்பந்தமாக தொழுகை கடமையாக்கப்பட்ட பின்னர் அருளப்பட்டுள்ளது என்பதையே தப்ஸீர் இப்னு அப்பாஸ் முதல் ஏனைய நம்பகமான அனைத்து தப்ஸீர்களும் ஊர்ஜிதம் செய்கின்றன. “நீங்கள் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதில் கூச்சலிடுங்கள் அதனால் மிகைத்துவிடலாம் என்று காஃபிர்கள் கூறினார்” (41:26) என்ற (காஃபிர்களின் கூற்றுக்கு பதிலாக இந்த (7:204) வசனம் இறக்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். இவ்வசனம் அவ்வசனத்திற்கு பதில் கொடுத்ததுபோல் அமைந்திருந்தாலும் அக்காலக் கட்டத்தில் இவ்வசனம் அருளப்பட்டதாக ஆதாரப்பூர்வமான எந்த தப்ஸீரிலும் காணப்படவில்லை.

இமாமைப் பின்பற்றுவோர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது பற்றிய முடிவு என்ன?

மேலே, நாம் கண்ட 3 பிரிவினரின் கூற்றுக்களையெல்லாம் விட்டு, நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த விஷயங்களை மட்டும் கவனமாக நாம் பார்க்கும்போது, கீழ்க்கண்டவை நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன.

1. குர்ஆன் ஓதப்படும் பொழுது. நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள். நிசப்தமாக இருங்கள். நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள். (7:204)

2. “சூரத்துல் ஃபாத்திஹா இல்லாமல் தொழுகையே இல்லை” என்ற கருத்தில் காணப்படும் ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள்.

இவை இரண்டும் அல்லாத, இமாம் சப்தமாக, ஓதும்போது, பின்னால் உள்ளவர்கள் நிசப்தமாக இருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான 2 ஹதீஸ்கள் இருந்தும் அவற்றிலும் வீண் விவாதம் இருப்பதால், அவற்றையும் விட்டு எல்லாராலும் ஏகோபித்து ஒப்புக் கொள்ளப்பட்ட மேலே காணப்படும் இரண்டு அம்சங்களுக்கு முரண்பாடில்லாத முறையில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதாவது,

1. இமாம் சப்தமிட்டு ஓதும்போது பின்னால் இருப்பவர்கள் செவிதாழ்த்தி நிசப்தமாக கேட்க வேண்டும். அப்படி கேட்கும்போது, சூரத்துல் ஃபாத்திஹாவை அவர்களும் ஓதியவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதே உண்மையாகும்.

(அ. அல்குர்ஆனில் மூஸா(அலை) அவர்கள் மட்டும் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கு எதிராக பிரார்த்தனை செய்தபோது, அதை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் பதிலளிக்கையில் ”உங்கள் இருவரின் பிரார்த்தனை செய்தபோது, அதை ஏற்றுக்கொண்டு அல்லாஹ் பதிலளிக்கையில் “உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது” என்று கூறுகிறான். (10:88,89)

இங்கு மூஸா(அலை) அவர்கள் மட்டும் கேட்டார்கள் என்று தெளிவாகக் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஹாரூன்(அலை) அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னதாக இக்ரிமா(ரழி) அவர்கள் கூறுவதாக தப்ஸீர் இப்னு கஸீரில் காணப்படுகிறது. அல்லாஹ் குறிப்பிடும்பொழுது இருவருடைய பிராத்தனையையும் ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடுகிறான். இதிலிருந்து சூரத்துல் ஃபாத்திஹாவை இமாம் ஓதி பின்னால் இருப்பவர்கள் அதனை கேட்டு ஆமீன் சொல்லும்போது அவர்களும் ஓதியவர்களாகவே கருதப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆ. புறம் பேசப்படுவதை கேட்பவனும், புறம் பேசிய குற்றத்திற்கு ஆளாகிறான் என்ற கருத்தில் வரும் நபி மொழிகளை இங்கு கவனிக்க வேண்டுகிறோம்.

இ. இமாம் சப்தமிட்டு ஓதும்போது, பின்னாலிருப்பவர்களும், ஓத வேண்டும் என்றால், இமாம் சப்தமிட்டு ஓதவேண்டிய அவசியம் என்ன? இதுவும் சிந்தனைக்குரியது.

2. இமாம் சப்தமின்றி ஓதும்போது இமாமின் கிராஅத்தை பின்னால் இருப்பவர்கள் கேட்க முடியாதாகையால் அவர்களும் சப்தமின்றி ஓதிக்கொள்ள வேண்டும்ட.

3. இமாம் சப்தமிட்டு ஓதும்போது, பெரும்ட கூட்டம் காரணமாக மிகவும் பின்னால் இருப்பவர்கள் இமாமின் கிராஅத்தை கேட்க முடியாதிருந்தால் (அப்போது, அவர்களும் சப்தமின்றி ஓதிக் கொள்ள வேண்டும்.)

இந்த மூன்று நிலைகளிலும் மேலே காணப்படும், குர்ஆனின் கட்டளைக்கோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கோ முரண்பட்ட நிலை ஏற்படவில்லை என்பது நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

*********************************************************************************************************************************************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: பட்சிகள், மிருகங்கள் அறுக்கும் அசைவ (Non-Vegetarian) முறை எப்போது யாரால் கொண்டு வரப்பட்டது? M.A.ஜின்னா, பொறையார்.

தெளிவு: பட்சிகள், மிருகங்களை அறுக்கும் அசைவ முறை தொன்றுதொட்டு உள்ள ஒரு பழக்கம் என்பதை திருக்குர்ஆனின் வசனங்கள் நிரூபிக்கின்றன.

மூஸா(அலை) தனது சமூகத்தாரிடம் அல்லாஹ் ஒரு பசுமாட்டை அறுக்க ஆணையிட்டதாக கூறுகிறார். (குர்ஆன் வசனம் 2:67) அவர்களும் ஒரு பசுமாட்டை அறுத்தனர் என்பதை குர்ஆன் வசனம் 2:7) வசனத்தில் காணுகிறோம்.

ஓரிணப் புணர்ச்சியில் ஒழுக்கங் கெட்டிருந்த லூத்(அலை) மக்களை அழிக்க, மனித உருவில் வந்த வானவர்களுக்கு இப்றாஹீம்(அலை) ஒரு இளங்கன்றை அறுத்து, அதன் இறைச்சியை(சமைத்து) உண்ணும்படி கூறிய காட்சியை நாம் சூரா ஹூதில் 69, 70ம் வசனங்களில் காணுகிறோம்.

அல்லாஹுவின் ஆணைப்படி தனது அருமை மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்து பலியிட துணிந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் இறைபக்தியை (தக்வாவை)க் கண்டு அல்லாஹ், அவர்களுக்கு(வேறு) ஒரு மகத்தான (ஆடு) பலியைக் கொண்டு பகரமாக்கினோம் என்கிறான்.(அல்குர்ஆன் 37:107).

இறந்தவற்றை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உள்ளவன், அல்லாஹ் என்பதை செயல்முறையில் காண ஆசைப்பட்ட இப்றாஹீம்(அலை) அந்த ஆசையை அல்லாஹுவிடம் தெரிவிக்கிறார். அதற்கு அல்லாஹ்ட பறவைகளில் நான்கை பிடித்து, வளர்த்து, பின்னர் அவற்றை அறுத்து ஒவ்வொரு மலையிலும் ஒரு பாகத்தை வைத்து அழைப்பாயாக! அது உயிர் பெற்று வரும் என கூறுகிறான். அவரும் அவ்விதமே செய்ய அறுத்து வைத்த பறவைகள் உயிர்பெற்று வருகின்றன. இதனை நாம் அல்குர்ஆன் 2:260ல் காணலாம்.

இதுபோன்ற இறை வசனங்கள் மூலம் பறவைகளையும், மிருகங்களையும் அறுக்கும் அசைவ முறை (தொன்று தொட்டு உள்ள முறை என்பதை விளங்குகிறோம். கீழ்காணும் குர்ஆன் வசனம் மூலம் இது ஆதம்(அலை) முதல் உள்ள வழக்கம். அல்லாஹுவால் அங்கீகரிக்கப்பட்டது என்பதையும் உள்ளங்கை நெல்லிக் கனியாக உணரலாம்.

இன்னும் கால்நடை(ப் பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் (அல்லாஹுவின்) பெயரைக் கூறும்படிச் செய்வதற்காகவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன்: 22:34)

இவ்விதமாக ஒவ்வொரு வகுப்பாருக்கும் அசைவ உணவு முறையையும் கடமையாயிருந்ததால் தான் இன்று பலர் இவ்வுணவின் பக்கம் சாயக் கூடியவர்களாக இருக்கின்றனர். மரக்கறி உணவு உண்ணும் மக்களும், ஜீவகாருண்யம் பேசும் பவர் அசைவ உணவின் பக்கம் தங்களை அறியாமலே திரும்பி வருவதையும் காணுகிறொம். எனவே பறவைகள், மிருகங்களை அறுக்கும் அசைவ முறை எல்லா வகுப்பாருக்கும் அவரவர் நபிமார்கள் மூலம் அல்லாஹ் கடமையாக்கியுள்ளதைக் காணலாம்.

இதனடிப்படையில் தமது நபி(ஸல்) அவர்கள் அகீகா, வலீமா விருந்துகளுக்கும், விசேஷங்களுக்கும் ஆட்டை அறுத்து உண்ண ஆணையிட்டார்கள். மற்றும் ஜும்ஆ தொழுகைக்கு வருபவர்களில் முதலில் வருபவருக்கு ஒட்டம் அறுத்து பலியிட்ட நன்மை கிடைக்கும். அடுத்தவருக்கு மாடு, அடுத்தவருக்கு ஆடு, அடுத்தவருக்கு கோழி அறுத்து பலியிட்ட நன்மை கிடைக்கும் எனவும் உபதேசித்தார்கள்.

(ஆதாரம்: புகாரீ, அஹ்மத்)

அசைவ உணவுக்காக பட்சிகள், மிருகங்களை அறுக்க ஆணையிட்ட அல்லாஹ், அதனை அறுக்கும் முறையையும் அந்த நபிமார்கள் மூலம் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் கற்றுத் தந்தான். அதன்படியே அந்தந்த நபிமார்கள் அவரவர் உம்மத்துக்களுக்கு செய்து காட்டினார்கள். சொன்னார்கள், அந்நபிமார்களில் கடைசியாக வந்த நபி(ஸல்) சொன்னாலும், செய்ததும் அல்லாஹுவின் ஆணைப்படியே என்பதை கீழ்காணும் இறைவசனமும் மெய்ப்பிக்கின்றது.

அவர் தம் மனோ இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ(இறைச்செய்தி) மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. (அல்குர்ஆன் 53:3,4)

எனவே பட்சிகள், மிருகங்கள் அறுக்கும் விதத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருப்பதும் அல்லாஹுவின் ஆணைப்படியே என்பதை அறிகிறோம். மேற்காணும் திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மூலம் பட்சிகள், மிருகங்களை அறுக்கும் முறை தொன்று தொட்டு ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அல்லாஹ் அங்கீகரித்த முறை என்பதையும் விளங்கலாம். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.

ஐயம்: பூசனிக்காய் சாப்பிடக் கூடாது: அது மக்ரூஹ் என சிலர் கூறுகின்றனர். அதை காஃபிர்தான் சாப்பிடவேண்டும். முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது என்கின்றனர். விளக்கவும். ஹாபிழ் M.Y.அப்துல் ஹக், தொழுதூர்.

தெளிவு: காய்கறிகளில் முதலில் இஸ்லாத்தில் சேர்ந்தது கத்திரிக்காய், சுரைக்காய் தின்பது சுன்னத்து: பூசனிக்காய் சாப்பிடக் கூடாது என்பது போன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பற்பல செய்திகள் நமது முஸ்லிம் சமுதாயத்தில் மலிந்துள்ளது வருந்தத்தக்கது. மக்களிடமிருந்து ஏதாவது ஆதாயம் தேடி ஒரு சிலர் எழுதி வைத்துள்ள நூற்களில் இவற்றினை காணலாம். பூசனிக்காய் சாப்பிடக் கூடாது என்பதற்கு குர்ஆனில் எவ்வித ஆதாரமுமில்லை. யாமறிந்தவரை ஹதீஸிலும், இதற்கு ஆதாரமில்லை. வெள்ளைப் பேப்பரில் கருப்பு மையால் அச்சடித்திருக்கும் அனைத்தையும் ஆதாரமாக கொள்பவர்கள் ஒருசில கட்டுக்கதைகள், கப்ஸாக்கள் அடங்கிய நூல்களிலிருந்து இதற்கு ஆதாரமாக கொள்ளலாம். குர்ஆன் ஹதீஸ்படி எவ்வித ஆதாரமுமில்லை.

மருத்துவ ரீதியாக பூசனிக்காய் எவருக்காவது உடல் அசெளகர்யத்தை தந்தால் அதனை அவர் சாப்பிடுவது கூடாதுதான். அது முஸ்லிமாக இருந்தாலும், காஃபிராக இருந்தாலும் சரியே. அது அந்த தனிப்பட்ட மனிதருக்கு மட்டும் உள்ள நிலை. இதனை மார்க்கமாக்கி மக்ரூஹ், ஹராம் என பிரித்திட எந்த முஸ்லிமுக்கும் அதிகாரமில்லை.

மூமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கியுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமான (விலக்கப்பட்ட)வையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறியவர்களை நேசிப்பதில்லை” (அல்குர்ஆன்: 5:87)

ஹராம், ஹலால் விஷயத்தை தெளிவுபடுத்தும் அல்லாஹ் இவ்வாசனத்தில் வரம்பு மீற வேண்டாமெனவும் எச்சரிக்கிறான். கூறும், கூடாது என்பதை தரம் பிரித்து மக்ரூஹ் என்று தானே கூறினேன் என எவராவது கூறினால் அவ்விதம் தரம் பிரிக்க அனுமதியளித்தது யார்? என கேளுங்கள். பூசனிக்காய் சாப்பிடக் கூடாது. அது முஸ்லிம்களின் உணவல்ல என்பதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களும் கிடையாது. எனவே எல்லாமே சாப்பிடலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: மார்க்கத்தை வழிகாட்டி செல்லவேண்டியவர்கள் தினசரி லாட்டரி சீட்டுகள் வாங்குகிறார்களே! எப்போது திருந்துவார்கள்? M.A.ஜின்னா, பொறையார்.

தெளிவு: மார்க்கத்துக்கு வழிகாட்டி செல்ல வேண்டியவர்கள் லாட்டரி சீட்டு வாங்குவது வேலியே பயிரை மேய்ந்தது போன்றதுதான். அவர் கெடுவது மட்டுமின்றி, அவரை பார்க்கும் பாமர முஸ்லிம் அவரே செய்கிறார்! தவறாக இருந்தால் செய்வாரா? எனவே இது கூடும்; நாமும் செய்வோம் என செய்ய துணிகிறான். செய்கிறான். எனவே அவன் செய்யும் தவறுக்கும் இவரே பொறுப்பாளியாகின்றார். இதனை அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் பாரீர்! எவரேனும் ஒரு தன்மையான காரியத்துக்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு(நன்மையான) பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்துக்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு(தீமை) பாகம் உண்டு. (அல்குர்ஆன் 4:85)

மார்க்கத்துக்கு வழிகாட்டி செல்லவேண்டியவர் லாட்டரி சீட்டு வாங்குவது மூலம் – செயல் மூலம் – சூதாட்டம் என்னும் பாவச் செயலுக்கு, பாமர முஸ்லிமுக்கு சிபாரிசு செய்கிறார். ஒரு சில ஊர்களில் இம்மார்க்க வழிகாட்டிகள் “லாட்டரியில் (குலுக்கல்) விழுந்தால் வீட்டுக்கு: விழாவிட்டால் நாட்டுக்கு” என்ற சொல் மூலம் நியாயப்படுத்துவதாகவும் அறிகிறோம்ட. இவர்களது அறியாமையை, மார்க்க சூன்யத்தை என்னென்பது!

அல்லாஹ் சூதாட்டத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இது பெரும் பாவம் என்கிறான். சுலபமாக பணக்காரனாகும் பலனுள்ளதே! என மேதாவி தனத்தில் பேசிவிடும் பகுத்தறிவு மனிதனுக்கு இதில் ஒரு சில நன்மைகளும் உண்டு, தீமைகளுமுண்டு: ஆனால் தீமைகள் நன்மைகளை விட அதிகமாக உள்ளது. எனவே சூதாட்டத்தில் ஈடுபடாதீர்கள் என ஆணையிடுகிறான். (அல்குர்ஆன் 2:219 கருத்து)

இறை நம்பிக்கையாளர்களே! மதுபானமும், சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறிகேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

இவ்வசனத்தில் சூதாட்டத்தை, கற்சிலைகளை வணங்கல், மது ஜோஸ்யம்ட போன்ற கடும் பாவங்களுடன் சேர்த்து அல்லாஹ் சொல்கிறான். இச்செயல்கள் ஷைத்தானின் செயல்கள் எனவும் அடையாளம் காட்டுகிறான். இச்செயல்களை விட்டு இருப்பதே வெற்றியடைவதின் விதியாக்குகிறான். எனவே வெற்றியடைவதற்கான விதிகளில் ஒன்றான சூதாட்டத்தை விடாமல், லாட்டரி சீட்டு வாங்குபவனை எப்படி நீங்கள் மார்க்க வழிகாட்டிகள் என்கிறீர்களோ? தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் மேற்படி குர்ஆன் வசனப்படி ஷைத்தானிய மார்க்க வழ்காட்டிகளாக இருப்பார்களோ? அப்படி தான் இருக்கவேண்டும்!

அல்லாஹ் தவிர்த்து கொள்ளும்படி கூறியுள்ள லாட்டரி சீட்டு போன்ற சூதாட்டத்தை சொல், செயல் மூலம் நியாயப்படுத்துபவர்கள் திட்டமாக தூய இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியாக முடியாது. அல்லாஹுவின் ஆணையை உதாசீனப்படுத்துபவர் மார்க்க வழிகாட்டியாக தகுதியானவரே அல்ல எனலாம். இதனை தெரிந்து கொண்டே லாட்டரி சீட்டு போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டால் அவர் ஒரு முனாஃபிக் ஆகிறார். எப்படியாயினும் அல்லாஹ் நாடினால் ஒழிய அவரை திருத்த மார்க்கமில்லை. பாமரனுக்கு குர்ஆன், ஹதீஸ் மூலம் போதித்து திருத்தலாம். மார்க்கத்துக்கு வழிகாட்டும் திறன் படைத்தவர்கள் இப்பாவத்தை செய்வதால் எவ்விதம் நம்மால் திருத்த முடியும். தூங்குபவனை எழுப்பலாம். தூங்குபவன் போல் நடிப்பவனை எழுப்பவே முடியாது. எனவே அவருக்கு நேரிய வழிகாட்ட அல்லாஹுவிடம் நாம் இறைஞ்சுவோமாக!

அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழிபடுத்துகிறான்! நான் நாடியவர்களை வழிகேட்டில் வைக்கிறான்!

(அல்குர்ஆன் 14:4, 16:93, 35:8, 74:31)

அல்லாஹ் மிக அறிந்தவன்:

ஐயம்: ஒரு ஜனாஸாவை குளிப்பாட்டி, கபனிட்டு நெற்றியிலும், நெஞ்சிலும் ஏதேதோ எழுதுகிறார்களே, இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? ஹாபிழ் M.Y.அப்துல் ஹக்-தொழுதூர்.

தெளிவு: இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதல்ல, நபி(ஸல்) அவர்கள் உயிருடனிந்தபோது பல நபித்தோழர்கள் இறந்திருக்கிறார்கள், ஏன்? தனது அருமை மனைவி கதீஜா(ரழி), அருமை மக்கள் ஜைனப், உம்முகுல்தும், ருக்கையா (ரழி)-அன்குன்ன) மற்றும் உறவினர்கள் மரித்திருக்கிறார்கள். எவருக்கும் நபி(ஸல்) ஜனாஸாவைக் குளிப்பாட்டி, கபனிட்டு நெற்றியிலும், நெஞ்சிலும், எதுவும் எழுதியதாக அறவே ஆதாரம் கிடையாது. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு செயலையும் பின்பற்றிய நபித் தோழர்கள் காலத்திலும் கிடையாது. அவர்களுக்கு பின் வந்த தாபயீன்கள், இமாம்கள் காலத்திலும் கிடையாது.

ஏன்? இன்று இந்தியா, சிலோன் போன்ற ஓரிரு கீழை நாடுகளைத் தவிர வேறு எந்த நாட்டிலும் இப்பழக்கமில்லை. உயிருடனிருக்கையில் சரியான முஸ்லிமாக குர்ஆன், ஹதீஸ்படி வாழாமல் மரித்ததும் அவரது நெற்றியிலும், நெஞ்சிலும் ஏதாவது எழுதிவிட்டால் ஈடேற்றம் கிடைக்குமா? இதை எழுதும் விஷயத்திலும் பற்பல அநாச்சாரங்கள், சுருமா அல்லது சந்தனத்தை ஜம்ஜம் நீரில் கரைத்து எழுதவேண்டுமாம், நெற்றியிலும், நெஞ்சிலும் யா அல்லாஹ்! எனறோ, கலிமாவோ எழுதினால் கஃபுரில் கேள்வி கணக்கு கேட்க வரும் முன்கர், நகீர் இவ்வெழுத்துக்களைக் கண்டு நல்லடியார் என நினைத்து கொள்வார்களாம்! இப்படியெல்லாம் தங்களால் உருவாக்கப்பட்ட அநாச்சாரங்களுக்கு அர்த்தம் சொல்லும் மேதாவிகளும் இருக்கின்றனர். எனவே குர்ஆன், ஹதீஸ்படி வாழ நாடும் நாம் இதுபோன்ற மூடப்பழக்கங்களிலிருந்து விடுபடவேண்டும். குறுக்கு வழியில் மலக்குகளை ஏமாற்ற நினைக்க வேண்டாம். அல்லாஹ் சதிகாரர்களிலெல்லாம் பெரும் சதிகாரன். (அல்குர்ஆன் 3:54, 8:30) என்பதை நினைவில் கொள்க. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: (சிங்கப்பூரில்) ஷாஃபியாக்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பெரும்பாலும் இரவில் வித்ரு தொழுவதில்லை. பஜ்ர் பர்லு தொழுகையில் 2-வது ரகாஅத்தில் இமாம் குனூத் ஓதி தொழ வைக்கிறார். நபிவழியில் தொழும் நான் எப்படி அதில் கலந்து தொழுவது? இப்னு சுல்த்தான், சிங்கப்பூர்.

தெளிவு: சிங்கப்பூர் ஷாஃபியாக்கள் இரவில் வித்ரு தொழுவதில்லை என்பது நமக்கு புது செய்தி. இந்தியாவில் ஷாஃபியாக்கள் வித்ரு தொழுகிறார்கள். இதுவே சரி, வித்ரு தொழுகையின் சிறப்பை அறிந்தவர்கள் திட்டமாக அதனை தொழவே செய்வார்கள். வித்ரு தொழுகை இரவில் தொழுவதாகும். அறிவிப்பு: அர்ரபுனு யஸார்,(ரழி) ஆதாரம்: தப்ரானீ.

வித்ரு என்பது இரவின் கடைசியில் தொழப்படும் ஒரு ரகாஅத்தாகும். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்(ரழி) ஆதாரம்: அஹ்மது, தப்ரானீ.

உங்கள் இரவின் கடைசி தொழுகையாக வித்ரை வைத்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி), ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்.

மேற்கண்ட ஹதீஸ்கள் மூலம் வித்ரு இரவில் தொழவேண்டும். அது அவ்விரவின் கடைசி தொழுகையாக அமைய வேண்டும் என்பவர் அறியலாம்.

வித்ரு ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவசியமாகும்.

அறிவிப்பு: அபூ அய்யூப்(ரழி), ஆதாரம்: அபூதாவூத், (நஸயீ, இப்னுஹிப்பான், இப்னுமாஜா, ஹாக்கிம்.)

எவரொருவர் வித்ரு தொழவில்லையோ அவர் நம்மை சார்ந்தவரல்ல.

அறிவிப்பு: புரைதா(ரழி), ஆதாரம்: முஸ்னது அஹ்மது, அபூதாவூத், ஹாக்கிம்

பிரயாணத்தில் பர்லான நான்கு ரகாஅத்துகளைக் கூட இரண்டாக தொழ கற்று தந்த நபி(ஸல்) அவர்கள் வேறு எந்த சுன்னத்தான தொழுகை தொழாவிட்டாலும் வித்ரு தொழுதிருப்பதைக் காண முடிகிறது. எனவே தரத்தில் பர்லான (ஐவேளைத் தொழுகையின்) 17 ரகாஅத்துக்களுக்கு அடுத்த இடம் வகிப்பது வித்ரு தொழுகையாகும். இதனை சிங்கப்பூர் ஷாஃபிய்யாக்கள் தொழாமலிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். எனவே மேற்படி ஆதாரங்களை எடுத்துக் கூறி வித்ரு இரவில் தொழாதவர்களை தொழச் செய்யுங்கள். குறைந்தது ஒரு ரகாஅத்தாவது தொழ ஏவுங்கள்.

அடுத்து பர்லு தொழுகையில் 2-வது ரகாஅத்தில் குனூத் ஓதுவதற்கு பலமான ஆதாரமில்லை. நபி(ஸல்) பஜ்ரின் 2வது ரகாஅத்தில் குனூத் ஓதினார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத், அபூநயீம், பைஹகீ, ஹாக்கிம், தாருகுத்னீ போன்ற நூற்களில் வந்திருந்தாலும் இது பலஹீனமானது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அபூஜஃபர் ரானபீ என்பவர் நினைவாற்றல் குறைந்தவர் என பல ஹதீஸ்கலை மேதைகள் விமர்சித்துள்ளனர். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒரு, குறிப்பிட்ட தொழுகையில் மட்டும் குனூத் ஓதினார்கள் என்ற வரையரையும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் பஜ்ர், மஃரிப் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். அறிவிப்பு: அனஸ்(ரழி) ஆதாரம் :புகாரீ.

அறிவிப்பு: பர்ஆ இப்னு ஆஜிப்(ரழி), ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மது.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், இஷா, பஜ்ர் ஆகிய தொழுகையின்றி எல்லா தொழுகைகளிலும் நபி(ஸல்) அவர்கள் குனூத் ஓதியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

குனூத் எப்போது, எதற்காக, எதுவரை ஓதப்பட்டது என்பதையும் பார்ப்போம். பனூகலைம் என்ற நயவஞ்சகக் கூட்டத்தார் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுத்தர ஒரு சில பிரச்சாரகாரர்கள் தேவையென கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் ஒரு சிலரை அனுப்பி வைத்தார்கள்.  நயவஞ்சகர்கள் அவர்களை அழைத்துச் சென்று கொன்று விட்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு தெரிந்தபோது சொல்லொனா கவலைப்பட்டு அந்நயவஞ்சகர்களை சபித்து ஒரு மாதம் தொழுகையில் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். இவ்விதம் சபித்து ஒதுவதைக் கண்ட அல்லாஹ் “நபியே! உமக்கு இதில் எவ்வித அதிகாரமுமில்லை” (அல்குர்ஆன் 3:128) என எச்சரித்தான். இவ்வெச்சரிக்கைக்குப் பின் அவ்விதம் குனூத் ஓதுவதை நபி(ஸல்) விட்டு விட்டார்கள். இச்செய்தி அனஸ்(ரழி) மூலம் முஸ்லிம், அஹ்மது நஸயீ, இப்னுமாஜா போன்ற நூற்களிலும், இப்னு உமர்(ரழி) மூலம் புகாரீ, அஹ்மது போன்ற நூற்களிலிருந்தும் நமக்கு கிடைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பாதகச் செயலுக்காக அல்லாஹுவிடம் இறைஞ்சி குனூத் ஓதியதை மேலே கண்டோம். இதே அடிப்படையில் போர்க் காலங்களில் குனூத் ஓதாதவர்களாகவும் இருந்தனர் என அஸ்வத் பின் யஜீத் அன்னகீ(ரஹ்) மூலம் இமாம் தஹாவி அறிவிக்கிறார்கள். இமாம் ஷாபிஈ(ரஹ்)அவர்கள் அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) பஜ்ரில் குனூத் ஓதக்கூடியவர்களாக இல்லை என்கிறர்கள். (சுன்சுல் உம்மால்)

எனவே குனூத் ஓதுவதாக இருந்தால் ஒவ்வொருவரின் வாழ்வில் ஏற்படும் கடுமையான இடுக்கண்களுக்காக ஓதலாம் என்பதை காணலாம்ட. அதனை எந்த தொழுகையிலும் ஓதலாம். ஒரு தொழுகையில் தான் ஓதவேண்டும் என வரையறை செய்துகொள்ளவோ, அதனை ஓதாவிட்டால் தொழுகையில் குறைவு ஏற்பட்டுவிட்டது என்பதற்கோ எவ்வித சரியான ஆதாரமுமில்லை. மேலும் ஷாபிய்யாக்கள் பஜ்ரில் ஓதும்ட “அல்லாஹும்மஹ்தீனி ஃபீமன் ஹதய்த்த” என்ற குனூத்தைதான் நபி(ஸல்) பஜ்ரில் ஓதினார்கள் என்பதற்கும்ட ஆதாரமில்லை. குனூத்தைக் காரணம் காட்டி ஜமாஅத்தை விட ஆதாரமில்லை, எனவே நீங்கள் பின்பற்றி தொழும் இமாம் குனூத் ஓதினால் நீங்களும் ஓதலாம் அல்லது வாய்மூடி சும்மாவும் இருக்கலாம். இதனால் தொழுகையில் எவ்வித குறையும் ஏற்படாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: குர்ஆனை ஆரம்பம் முதல் முடிவு வரை ஓதிவிட்டு அப்படியே நிறுத்தக் கூடாது என்றும், மறுபடியும் ஆரம்பத்தில் ஒரு ஆயத்து ஓதிவிட்டு தான் முடிக்க வேண்டும் என்கிறார்கள். இது உண்மையா? குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா? S.சுமர்தீன், விருதுநகர்.

தெளிவு: பொருள் விளங்கியோ, விளங்காமலோ ஓதினால் நன்மை கிடைக்கும் ஒரே செயல் குர்ஆன் ஓதுவதாகும். குர்ஆனில் ஓதும் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒன்று முதல் 10, 700 நன்மைகள் கிடைக்கும் என நமக்கு அறிவித்த நபி(ஸல்), நாம் வார்த்தையைதான் எழுத்து என நினைத்து விடுவோமோ என்ற ஐயத்தில் அலிப், லாம், மீம் என்பதில் அலிப் ஒரு எழுத்து லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்து என்ற விளக்கமும் தந்தார்கள். (அறிவிப்பு: இப்னு மஸ்ஊது(ரழி), ஆதாரம்: திர்மிதீ, தாரமீ)

நபித் தோழர்கள் அடிக்கடி குர்ஆன் ஓதக்கூடியவர்களாக, முழுமையாக (ஹத்தம்) ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளனர். ஆனால் எவரும் தாங்கள் கூறியது போன்று ஓதியதற்கு ஆதாரமில்லை. குர்ஆனை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஓதுகிறோமொ அவ்வளவுக்கவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது உண்மையே அதற்காக குர்ஆனை ஆரம்பம் முதல் முடிவு வரை ஓதிவிட்டு அப்படியே நிறுத்தக் கூடாது என சட்டம் இயற்றவோ, ஆரம்பத்தில் ஏழு ஆயத்து ஓதிதான் முடிக்க வேண்டும் என வரையறை செய்யவோ, மார்க்கச் சட்டமாக்கவோ, குர்ஆன், ஹதீஸில் ஆதாரமே கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

**********************************************************************************************************************************************************************************

Previous post:

Next post: