அந்நஜாத் – ஜூலை 1988

in 1988 ஜுலை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்-நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் : 3 விளக்கம் : 4

துல்கஃதா – துல்ஹஜ் : 1408 ஜூலை – 1988

இதழின் உள்ளே…..

* ஈத் சிந்தனை

* விமர்சனங்கள்; விளக்கங்கள்!!

* பைத்தியங்கள் பலவிதம்! இது ஒரு விதம்!

* தேர்வுக் கூடம், பித்அத்துக்கு ஸஹாபி காட்டிய கறுப்புக் கொடி!

* குர்ஆனை விளங்குவது யார்?

* கனியிருப்பக் காய் கவர்தல்!

* நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!

* தக்லீதின் பெயரால்?

* நபி வழியில் நம் தொழுகை!

* நபி வழித் தொகுப்பு வரலாறு!

* ஐயமும்! தெளிவும்!

**********************************************************************************************************************************************************************************

ஈத் சிந்தனை!

அல்லாஹ்வின் அளப்பஅன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், அல்லாஹ்வின் இறுதித் தூதர் காட்டித்தந்த வழியில் ஈதுல்-அழ்ஹா என்னும் தியாகத்திற்கு நாளை சந்திக்க இருக்கிறோம். அந்தத் திருநாளின் சிந்தனைக்காக சில வரிகள்:

அல்லாஹ்(ஜல்) நம்மைப் படைத்துப் பரிபக்குவப்படுத்தி போஷித்து வரும் நமது எஜமானன். அவனுக்குச் சொந்தமான சர்வ பொருட்களையும் அனுபவித்துக் கொண்டு வாழும் நாம் அவனது அடிமை. எஜமானனின் கட்டளைகளை வழுவாது கடைப்பிடிப்பதே அடிமையின் நீங்காக் கடமையாகும். அந்த அடிப்படையில் இப்றாஹீம்(அலை) அவர்கள், தான் அல்லாஹ்வின் அடிமை என்பதை மனப்பூர்வமான ஒப்புக்கொண்டு, தனது சொந்த விருப்பு, வெறுப்பு, இலாம், நஷ்டம் எதையும் பொருட்படுத்தாது, தன்னைப் படைத்த ரப்புவின் கட்டளைகளை எவ்வித தயக்கமும் இன்றி நிறைவேற்ற முற்பட்டதாலேயே, அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைத்தது. அந்தச் செயலின் ஞாபகார்த்தமாக முஸ்லிம்கள் வருடாவருடம் அந்நாளை நன்நாளாக மதித்துப் போற்றும்படி ஆக்கியுள்ளான்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன்.

அந்த ரப்புல் ஆலமீனின் பொருத்தம் நமக்கும் கிடைக்க வேண்டுமென்றால், நாமும் நமது விருப்பு, வெறுப்பு, லாபம், நஷ்டம் எதையும் பொருட்படுத்தாது அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்ற முற்பட்டுவிடவேண்டும். நமது முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் சடங்கு சம்பிரதாயங்களைச் செய்யாமல், அல்லாஹ்வின் கட்டளைகளை விளங்கி அவற்றைச் செயல்படுத்த முற்பட வேண்டும்.

அதன் காரணமாக குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும் எவ்வளவுதான் எதிர்ப்புகள் வந்தாலும், முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும் நபி(ஸல்) அவர்களுக்கும், அருமை ஸஹாபாக்களுக்கும் ஏற்பட்ட இன்னல்களையும், முட்டுக்கட்டைகளையும் முன் உதாரணமாகக் கொண்டு, சத்தியத்தில் நிலைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சோதனைகளுக்குப் பின்பே சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ்வின் கூற்றில் உறுதி கொள்ளவேண்டும்.

மனிதர்களின் கற்பனைகளினாலும், யூகங்களினாலும் சின்னாப்பின்னப்படுத்துப்பட்டு தூசிபடிந்திருந்த இஸ்லாத்தில், அந்த கற்பனைகளையும், யூகங்களையும் அகற்றி தூய இஸ்லாத்தை விளங்கிக் கொள்ளும் மாபெரும் பாக்கியத்தை நமக்குத் தந்தானே அந்த ரப்புல் ஆலமீனுக்கு, நாம் எவ்வளவு தான் நன்றி செலுத்தினாலுமத் அது மிகக் குறைவே என்பதை நானம் உணரவேண்டும். நாம் அடைந்த பாக்கியத்தை அகில உலக மக்களும் அடையவேண்டும் என்ற பேர் ஆர்வத்தோடு செயல்பட முற்படவேண்டும்.  பூரண பணிவோடும், பொறுமையோடும், உறுதியோடும் தனது அழைப்புப் பணியைத் தொடரவேண்டும். அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

**********************************************************************************************************************************************************************************

ஆயத்துல் குர்ஸீ

அல்லாஹ்-அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரிதுயிலோ, உறக்கமோ பிடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும்,  அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனது அரியாசனம்(குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை. அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன். (அல்குர்ஆன் 2:255)

*********************************************************************************************************************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

சமீபத்தில் நடந்த ஜ.உ.ச. மாநாட்டில் அரபுக் கல்லூரி முதல்வர் கீரனூரி அவர்கள் தனது பேச்சில் “மத்ஹபை” பின்பற்றுபவர்கள் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுபவர்கள் என்றும், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் மார்க்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கி சொந்தமாக கஷ்டப்பட்டு சமைத்து சாப்பிடுபவர் என்றும் கூறிவிட்டு, ஹோட்டலில் சாப்பிடுபவரை சிலாகித்து-இவர்தான் புத்திசாலி என்று பேசியுள்ளார். இவரது சொற்பொழிவை “டேப்பில்” கேட்ட எனது தாயார் (வயது 70) “என்ன இது அநியாயமாயிருக்கு! வீட்டு சாப்பாடுதானே, சுத்தமாகவும், சுகாதாரமாகவும், இனிமையாகவும் இருக்கும் ஹோட்டல் சாப்பாட்டில் தூய்மைக்கேடும், கல்லும் மண்ணும் கலந்து இருக்குமே” இந்த சின்ன விஷயம் கூட ஹஜ்ரத்திற்கு தெரியாதோ? இவர் சொல்வதைப் பார்த்தால் மத்ஹபுகளில் குழப்பம் இருப்பது போல் தோன்றுகிறது. மத்ஹபை பின்பற்றாதவர்களிடம் தான் தெளிவும், ஆதாரமும் இருக்கிறது என்று வியாக்யானம் அவர்கள் செய்ததைப் பார்த்து நான் அப்படியே அசந்து போய்விட்டேன். உங்கள் கருத்து என்ன? இப்னு ஹமீத், சிங்கப்பூர்.

குர்ஆனிலிருப்பதையும், ஹதீஸிலிருப்பதையும் போதிக்க வேண்டிய அரபுக்கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள், குர்ஆனையும், ஹதீஸையும் விட்டு தங்கள் சொந்த கற்பனைகளைக் கொண்டும், யூகங்களைக் கொண்டும் மார்க்கத்தை நிலைநாட்ட முற்படுவதால், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் சாதாரண எழுத, படிக்கத் தெரியாத உம்மிகளும் இவர்களின் பேச்சிலிருந்தே இவர்களை அடையாளம் கண்டு கொண்டு வருகிறார்கள். மிக விரைவில் தெளிவு பெறுவார்கள்.

மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸில் இருந்தாகவேண்டும். எனவே, மத்ஹபுகளை பின்பற்றுவதற்கு குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ ஆதாரம் தாருங்கள் என்று நான் கேட்கிறோம். இவர்களோ, இவர்கள் சொந்தக் கற்பனைகளையும், யூகங்களையும் தருகிறார்கள். இன்னொரு அரபுக் கல்லூரி முதல்வரும் தன் சொந்த கற்பனைப்படியே, யூசுப்படியே மத்ஹபுகளைப் பின்பற்றுவதை நியாயப்படுத்தி அதே மாநாட்டில் பேசி இருக்கிறார்.

இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு தங்கள் சொந்த கற்பனைகளையும், யூகங்களையும் எடுத்துச் சொல்வதைப் பார்த்தால் நமக்கு;

“பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் திருப்பி விடுவார்கள். ஆதாரமற்ற வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள் (6:116) என்ற குர்ஆன் வசனம் தான் ஞாபகம் வருகின்றது. இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவதுபோல், உண்மையில் இந்த அரபுக்கல்லூரி முதல்வர்கள், பெரும்பாலோரின் மனோநிலையை அனுசரித்தே மார்க்கத்தைப் பேசுகிறார்களே அல்லாமல், அல்லாஹ்வைப் பயந்து மார்க்கம் பேசுவதாக இல்லை.

இதற்கு நமக்குத் தெரிந்த ஒரு ஆதாரத்தையே இங்கு தருகிறோம்.

அந்நஜாத் ஆரம்பிப்பதற்கு முன் நாம் வெளியிட்டுக் கொண்டிருந்த பிரசுரங்களில், முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள்! என்ற பிரசுரத்தில் பர்ளான தொழுகைக்குப் பின்னால், இமாம் கூட்டு துஆ செய்வது நபி வழியல்ல, இடையில் புகுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரங்களைக் கொடுத்து, அப்பழக்கத்தைத் தவிர்த்துக் கொள்ள வேணடியிருந்தோம்.

அந்தக் காலக்கட்டத்தில் ஒரு பள்ளியில் இமாம்(மவ்லவி) உடனடியாக அந்தக் கூட்டு துஆவை நிறுத்திவிட்டார். இதனால் அங்குள்ள அறியாமையில் மூழ்கி இருக்கும் மக்கள் விவகாரத்தை உண்டாக்கினார்கள். மஹல்லா மக்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாறு செய்ய அந்த இமாம் தயாராக இல்லை. இறுதியில் அவர் ஸனது பெற்ற மதரஸாவிற்கு ஒரு குழுவினர் சென்றனர். அவர்கள் சென்று அந்த மதரஸாவில், தொழுகைக்குப் பின் இமாம் கூட்டு துஆ ஓத ஆதாரம் கேட்டதற்கு, அந்தக் குழுவினரிடம் அந்த மதரஸாவின் “முஃபதி” அப்படி கூட்டு துஆ ஓத ஆதாரமில்லை. நபி(ஸல்) அவர்கள் அப்படி ஓதவில்லை என்று “வாய்ஃபத்வா” கொடுத்துள்ளார். சென்றவர்கள் எங்களுக்கு இதற்கு எழுத்து மூலம் ஃபத்வா வேண்டும் என்று கோரியுள்ளனர். ஆனால் எழுத்து மூலம் அவர்களால் ஃபத்வா பெற முடியவில்லை. எப்படி ஃபத்வா கொடுக்க முடியும்? பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு அவர்கள் ஆளாக முடியுமா? பெரும்பான்மை மக்களின் கோபத்திற்கு அவர்கள் ஆளாக முடியுமா? சந்தாக்களையும், வருமானத்தையும் இழக்க முடியுமா? எனவே, குர்ஆன் ஹதீஸில் இல்லை என்று ஒப்புக்கொண்டாலும், பகிரங்கமாக எழுத்துமூலமாக ஒப்புக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை.

மக்களின் தயவை இவர்கள் எதிர்பார்த்திருப்பதால், மக்களின் தயவிலேயே இவர்கள் வாழ்க்கை இருப்பதால் அந்த மக்களைத் திருப்திபடுத்தவே இந்த அரபுக் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மார்க்கம்  என்று எதை எதையோ பேசுகிறார்கள் என்பதும், மக்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாதவரை இந்த அரபுக்கல்லூரிகளோ, அரபுக் கல்லூரி முதல்வர்களோ, ஆசிரியர்களோ தங்கள் நிலைகளை ஒதுபோதும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்பதும் தெளிவான விஷயங்களே! நாம் பாடுபட்டு மக்களை மத்ஹபுகள் வழிவிட்டு, நபி(ஸல்) அவர்களின் வழிக்கு அதாவது குர்ஆன், ஹதீஸ் வழிக்குத் திருப்பிவிட்டால் இவர்களும் தானாகவே அந்த நேர்வழிக்குத் திரும்பிவிடுவார்கள்.

இங்கு நாகூரில் ஒரு பள்ளிவாசலில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த முதியவர் அப்துல் காதர் மரைக்கார் என்பவர், மத்ஹபுகளை விட்டு நபி(ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றி குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதாக பலாத்காரமாக பள்ளிவாசலை விட்டு வெளியேற்றப்பட்டார். இனிமேல் அந்த பள்ளிப் பக்கமே வரக்கூடாது, என்று எச்சரிக்கப்பட்டுள்ளார். இது முறையா? யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், நாகூர்.

சத்திய இஸ்லாத்தை நிலைநாட்ட இப்படிப்பட்ட இன்னல்களை எல்லாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒன்று நமக்கு தெளிவாகத் தெரிகிறது. சுமார் 1400 வருடங்களுக்கு முன் இப்றாஹீம்(அலை) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தின்படி நடப்பதாக நம்பிக்கொண்டு வழிகேட்டிருந்த குறைஷிகள், சத்திய இஸ்லாத்தைப் போதித்த நபி(ஸல்) அவர்களுக்கு்,அவர்களது அன்புத் தோழர்களுக்கும் அளவற்ற இன்னல்களைக் கொடுத்தனர். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்விற்கு வரவிடாமல் தடுத்தனர். சத்திய இஸ்லாத்தை போதிக்க, முட்டுக்கட்டை போட்டனர். இது குறைஷிகள் தரப்பிலிருந்து உண்மை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சோதனை. அதுபோல் இன்று சத்திய இஸ்லாத்தை-குர்ஆன் ஹதீஸை எடுத்துச் சொல்லும் நம்மை, முஹம்மது(ஸல்) அவர்களின் இஸ்லாம் மார்க்கத்தின்படி நடப்டபதாக நம்பிக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருக்கும் இந்தச் சமுதாயத்தினரில் சிலர் அல்லாஹ்வின் வீடான பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று தடுக்கின்றனர். பகிரங்க மேடைகளில் குர்ஆன். ஹதீஸை- சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதற்கு முட்டுக் கட்டைப் போடுகின்றனர். அன்று நடந்த சம்பவங்களையும், இன்று நடக்கும் சம்பவங்களையும், ஒப்பு நோக்கும்போது யார் வழிகேட்டில் இருக்கிறார்கள். யார் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. யார் குறைஷிகள் தரப்பில் இருக்கிறார்கள் யார் உண்மை முஸ்லிம்கள் தரப்பில் இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

அன்று எப்படி அசத்தியம் அழிந்து, சத்தியம் நிலைபெற்றதோ அதேபோல் இன்றும் நிச்சயம் அசத்தியம் அழிந்து, சத்தியம் நிலைத்தே தீரும். இது அல்லாஹ்வின் அருள்வாக்கு. அசத்தியம் அழியும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதையே அவர்களின் ஆணவப்போக்கு நிருபிக்கின்றது. பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. கட்டுக்கடங்காத கொடுமைகள் காரணமாக நமது சகோதரர்கள் அரசாங்க உதவியையோ, நீதிமன்றத்தின் உதவியையோ நாடிச் சென்றால், அதற்குரிய முழு பொறுப்பையும் ஜ.உ.சபையாகும். அவர்களின் ஆணவப்போக்கை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஜமாஅத்தார்களுமே ஏற்க வேண்டி நேரும். நாம் வாழும் இந்திய நாடு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொரு குடிமகனும் மதரீதியாக முழு சுதந்திரத்துடன் செயல்படுவதற்கும், தனது கருத்தைப் பகிரங்கமாக மக்கள் முன் எடுத்து வைப்பதற்கும் பூரண உரிமை பெற்றவனாக இருக்கிறான். இதை அரசாங்கமும் தடை செய்ய முடியாது. அதிகாரிகளும் தடை செய்ய முடியாது. பெரும்பான்மையினர் என்ற காரணத்தைக் காட்டி, சிறுபான்மையினரின் இந்த உரிமைகளை யாரும் பரிக்க முடியாது.

பள்ளிவாசல் அல்லாஹ்வின் வீடு அது அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமானது. ஹனபிப் பள்ளி, ஷாபிப் பள்ளி என்று சொல்லிக்கொண்டு உண்மை முஸ்லிம்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தன் சொந்தச் செலவிலேயே அதை நிர்வகித்து வருபவரும், அந்தப் பள்ளிவாசலில் யாரையும் வந்து தொழக்கூடாது என்று தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. உம்மத்தே முஹம்மதியாவிலுள்ள எந்த ஒரு பிரிவினரையும், வேறு எந்தப்ட பிரிவினரது பள்ளியிலும் நுழையக்கூடாது என்று தடை விதித்து எந்த நீதிமன்றத்திலும் தீர்ப்பளித்திருப்பதாக ஒரு சம்பவத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இவ்வளவு தெளிவாக தெரிந்த நிலையிலும் நாம் நீதிமன்றத்தை நாடிச்செல்லவில்லை என்றால், அதற்குரிய காரணம் சமுதாய நலன் கருதி-இஸ்லாமிய ஷரீஅத்தில் அரசாங்கள் தலையிடும் ஒரு நிலை நம்மால் ஆகக்கூடாது என்பதேயாகும். இந்தச் சமுதயாத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை காரணமாக, ஒரு பெண் நீதிமன்றத்தை அணுகியது. இஸ்லாமிய ஷரீஅத்தில் நீதிமன்றம் கைவைக்கும் ஒரு நிலையை உண்டாக்கிவிட்டது. அது மட்டுமின்றி, “யூனிபார்ம் சிவில் கோட்” (Uniform Civil Code) என்ற மிரட்டலும் நம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட ஒரு நிலை இந்தச் சமுதாயத்திற்கு வந்துவிடக்கூடாது என்றே நாங்கள் பொறுமை காட்டுகிறோம். அந்த பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அரசாங்கத்தையோ, நீதிமன்றத்தையோ, அணுகினால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜ.உ.சபையாரும், அவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஜமாஅத்தார்களுமே ஏற்றுக் கொள்ள வேண்டி நேரிடும் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறோம். நீதிமன்றத்தை அணுகினால் அங்கு குர்ஆன், ஹதீஸ் மட்டுமே நிலைக்கும். மற்றும் அனைத்தும் தவிடு பொடியாகிவிடும் என்பதையும் எச்சரிக்கிறோம். நாங்கள் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி பர்ளான தொழுகைக்குப்பின் கூட்டுதுஆ செய்வதில்லை, ரமழான் இரவில் 8+3 ரகாஅத்துகள் தொழுது கொள்கிறோம். இப்படி குர்ஆன், ஹதீஸுக்கு முரண்படும் காரியங்களில் மனித அபிப்பிராயங்களை விட்டு, குர்ஆன் ஹதீஸில் நிலைத்திருக்கிறோம். மற்றபடி பர்ளான தொழுகைக்குப் பின் கூட்டு துஆ செய்பவர்களை நாங்கள் தடுக்கவில்லை. ரமழான் இரவில் தராவீஹ் என்ற பெயரால் 20+3 ரகாஅத் தொழுபவர்களை நாங்கள் தடுக்கவில்லை. அவர்களோடு எவ்வித சச்சரவிற்கும் நாங்கள் செல்வதில்லை. அவர்கள் செய்யும் மார்க்க முரணான காரியங்களை நாங்கள் தடுத்தாலாவது எங்களை குழப்பவாதிகள் என்று சொல்வதில் கொஞ்சமாவது நியாயம் இருப்பதாகச் சொல்லலாம்.  விஷயம் அவ்வாறில்லை. குர்ஆன், ஹதீஸ்படி நடக்கும் எங்களைத்தான் அவர்கள் தங்கள் பெரும்பான்மை பலத்தைக்கொண்டு தடுக்கிறார்கள். இப்போது உண்மையில் யார் குழப்பவாதி என்று நீங்களே முடிவு சொல்லுங்கள். குர்ஆன், ஹதீஸ்படி நடக்கும் எங்களைத் தடுக்கும் அவர்களா? குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக அவர்கள் நடந்தும், அவர்களைத் தடுக்காமல் குர்ஆன் ஹதீஸ்படி இதமாக போதனை செய்து கொண்டு அதன்படி நடக்கும் நாங்களா? தீர்ப்பு அளியுங்கள்.

அஹ்லுஸ்ஸுன்னத்தி வல்ஜமாஅத்” என்ற சொற்றொடரில் உள்ள “ஜமாஅத்” என்ற பதம், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகுள்ள நபித்தோழர்களின் ஜமாஅத்தையே குறிக்கு். ஸுன்னத்-என்றால், நபி(ஸல்) அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம், ஜமாஅத்-என்றால் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு நபித்தோழர்களின் நடைமுறைகள் இவற்றையே குறிக்கும் என்று ஒரு மவ்லவி விளக்கம் கூறுகிறார். இந்த விளக்கம் சரியா? S.அப்துல்லாஹ், திருச்சி-8.

நபி(ஸல்) அவர்கள், எனது உம்மத்டது 73 பிரிவினர்களாகப் பிரிவார்கள், 72 பிரிவினர் நரகை அடைவர், ஒரு பிரிவினர் மட்டுமே சுவர்க்கம் அடைவர் என்று கூற, அந்த ஒரு கூட்டத்தினர் யார்? என்று நபித்தோழர்கள் வினவியபோது, “நானும் எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு இருக்கிறவர்கள் என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அவர்கள் “அஹ்லுஸ் ஸுன்னத்தி வல் ஜமாஅத்” என்று கூறவில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறிய சொற்றொடரை வைத்து பின்னால் வந்தவர்களே “அஹ்லுஸ் ஸுன்னத்தி வல்ஜமாஅத்” என்று பெயரிட்டுக் கொண்டார்கள்.

ஒரு பிரிவு என்றால் அது ஒரு ஜமாஅத், அதற்கு ஒரு அமீர் இருக்க வேண்டும். அந்த ஜமாஅத்தினர், அமீராக நானும், அமீராகிய எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் நபித்தோழர்களும் இருப்பது போல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நானும், எனது தோழர்களும் இருப்பது போல் இருக்க  வேண்டும் என்ற அடிப்படையிலேயே நானும், எனது தோழர்களும் எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறிருக்கிறவர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

களங்கமற்ற மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தம் (39:3) அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (42:27) மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களா? (49:16)

இன்னும் இதுபோன்ற குர்ஆன் வசனங்களை விளங்கியவர்கள் மார்க்கத்தில் கூட்டக் குறைக்கச் செய்ய அல்லாஹ் அல்லாத வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை விளங்க முடியும். மேலும் இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து, எனது அருட்கொடைகளை சம்பூரணமாக்கி இஸ்லாத்தை மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன் என்ற (5:3) இறை வசனத்தின் மூலம் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு இந்த உலகிலுள்ள அனைவரும் ஏகோபித்து ஒரு முடிவு செய்தாலும், அது மார்க்கமாகாது என்பதையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

“நானும், எனது தோழர்களும் எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறு இருக்கிறவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டது என்னுடைய ஜீவிய காலத்தில் அல்லாஹ்வின் வஹியின் தொடர்போடு இருக்கக் கூடிய என்னுடைய சொல், செயல் அதே வஹியின் தொடர்போடு இருக்கக் கூடிய  என்னுடைய சொல், செயல் அதே வஹியின் தொடர்போடு நான் அங்கீகரித்த எனது தோழர்களின் சொல், செயல்கள் இவை மட்டுமே வெற்றிக்குரிய – சுவர்க்கத்தை அடைய – ஒரே வழி – நேர்வழி  என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவே பொருள் கொள்ள முடியும். அல்லாஹ்வோடு வஹியினுடைய தொடர்பு இல்லாத நிலையில் ஒன்றை மார்க்கமாக்க யாராலும் முடியாது. எனவே நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு உள்ள நபித்தோழர்களின் ஜமாஅத்தையே “அஹ்லுஸ்ஸுன்னத்தி வல்ஜமாஅத்” என்ற சொற்றொடரிலுள்ள ஜமாஅத் குறிக்கும் ன்று அந்த மவ்லவி அல்ல. எந்த மவ்லவி சொன்னாலும் அது தவறேயாகும்.

இதற்கு அடிப்படைக்காரணம் ஒன்றைச் சொல்கிறோம். நினைவில் நன்றாக நிறுத்திக் கொள்ளுங்கள். குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை மட்டும் மார்க்கமாக மக்களுக்குச் சொல்வதாக இருந்தால், இவ்வளவு பெரிய முயற்சிகள், தில்லுமுல்லுகள் எதுவும் அவசியமேயில்லை. குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாததை மார்க்கமாக மக்களுக்குச் சொல்லி ஏமாற்ற முற்படும்போதுதான் இப்படி எல்லாம் நபித்தோழர்கள் என்றும், இமாம்கள் என்றும், அவுலியாக்கள் என்றும், மத்ஹபுகள் என்றும், முன்னோர்கள் என்றும், இவர்கள் அனைவரும் வழிகேடர்களா? என்றும், மக்களைத் திசை திருப்பி ஏமாற்ற வேண்டியுள்ளது. அல்லாஹ் கூறும் “தக்வா” உடையவர்கள் இதைச் செய்யமாட்டார்கள்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் சொல்லியே ஆகவேண்டும். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததுபோல், முஸ்லிம்கள் தங்களை முஸ்லிம்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டு, ஓர் அமீரின் கீழ் கட்டுப்பாடாக குர்ஆன், ஹதீஸை செயல்படுத்த வேண்டும். அப்படி ஒரு நிலை இந்த உம்மத்தில் கண்டிப்பாக உருவாக வேண்டும். அப்போதுதான் இந்த சமூகம் இந்த உலகில் மிக மேலான சமூகமாகத் திகழ முடியும்.

*********************************************************************************************************************************************************************************

ஏர்வாடியில்

பைத்தியங்கள் பலவிதம்! இது ஒரு விதம்!

இப்னு ஜையத்துன்

26.5.1988ந் தேதி வியாழனன்று 34 வயதுடைய இப்றாஹீம் என்ற கேரளத்து ஆண்மகன் கோட்டயம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சுயநினைவற்ற நிலையில் ஜுரத்துடன் உடல் முழுதும் காயங்களுடன், மொட்டைத் தலையில் பலத்த அடிகளுடன் சேர்க்கப்பட்டனர். அவர் பலத்த முறையில் அடிக்கப்பட்டார் என்பதற்கு அவரது உடல், முன்நெற்றி, தோள்களில் உன்ள காயங்களே சாட்சி பகர்ந்தன. அவரது கண்கள் கொவ்வைப் பழமாக சிவந்திருந்தது. இக்கோர நிகழ்ச்சி அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தர்ஹாக்களில் நோய் குணமாகுமென மூட நம்பிக்கையில் ஓடும் பாமர மக்களுக்கு பாடமானது.

இப்றாஹீம் சென்ற ஆறு வருடங்களாக மன நோயால் பிடிக்கப்பட்டு பனிக்குளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். அவரது நோய் சுகமாகி நல்ல நிலையை அடைந்திருந்தார். அந்நிலையில் அவரது மனைவி கற்பவதியானாள். அவளது கற்பின் மீது சந்தேகம் கொண்டு சில சமயங்களில் அவளை கண்டித்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட மனைவி லைலா தனது அக்கம் பக்கத்தாருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறாள்; அவர்கள் இப்றாஹீமுக்கு பில்லை, சூன்யம் வைக்கப்பட்டுள்ளது அதனை போக்க ஏர்வாடி போக அறிவுரை பகர்ந்திருக்கிறார்கள். அவர்களது அறிவுரையை அறவுரையாக எடுத்து ஏர்வாடி இப்றாஹீம் வலியுல்லாஹுவை நாடி தனது கணவர் இப்ராஹீமை அழைத்து வந்தான்.

முந்திய மன நோயுக்காக ரூ.800/- வரை செலவு செய்திருக்கிறான். கூலி வேலை செய்யும் கணவன், அவனும் அவரைப் பைத்தியம், இந்நிலையில் அதிக செலவு செய்ய வசதியுமில்லை. எனவே குறைந்த செலவில் ஏர்வாடியில் சிகிச்சை பெற ஓடோடி வந்தான். தர்ஹா வழக்கப்படி மூன்று முறை தர்ஹாவை வலம்(நவாப்) வந்தான். அப்போது அப்துர்ரஹ்மான் என்பவன் அவர்களை சந்தித்தான். லைலாவின் கதையைக் கேட்ட அவன் ருர்115/- கொடுத்தால் 10 நாட்களில் அவளது கணவனை சுகப்படுத்தி விடுவதாக வாக்களித்தான். கணவனின் மனநோயை தீர்ப்பதில் ஆவல் கொண்ட மனைவி ரூ.150/- கொடுத்தாள். அவர்களது சிகிச்சைக்கு நோயாளியின் தலையை மொட்டையடிக்க ரூ.10/-யும் கொடுத்தாள்.

லைலா தனது கணவர் இப்றாஹீமை விட்டு சென்றதும், ஏர்வாடி மந்திர டாக்டர்கள் அவனுக்கு மொட்டையடித்தனர். பூமியில் புதைக்கப்பட்டிருந்த கல்லில் இணைந்திருந்த சங்கிலியில் அவனது கையையும், காலையும் பிணைத்துக் கட்டினர். பின்அவரை சரமாரி அடிக்க ஆரம்பித்தனர். அவரது உடல், முன் நெற்றி, தலையென அடித்தனர். தலையை தூக்கி பார்க்க எத்தனித்தபோது அவரது கண்ணில் மண்வாரி அடித்தனர். காரி முகத்தில் துப்பினர். இக்கொடிய நிலையில் இப்றாஹீம் தனது சுய நினைவை இழந்தார்.

கணவனை 20-5-88 வெள்ளியன்று விட்டுச் சென்ற மனைவி லைலா செவ்வாய் வருவதாக கூறிச் சென்றான். அனால் அவளுக்கு நீங்கள் (23.5.88) உடனே வரவும் என தந்தி வர ஓடி வந்தாள். குற்றுயிறும் கொலை உயிருமாக இருகக்கும் தனது கணவனை சுய நினைவற்ற நிலையில் கண்டதும்  துணுக்குற்றாள்; துடித்துப் போனாள். தனது கணவர்இனி பிழைக்கப் போவதில்லை என நினைத்தாள். இருப்பினும் கோட்டயம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றாள்.

உடனே இப்றாஹீம் இண்டன்ஸிவ் கேர் வார்டில் அட்மிட் ஆனார். அவரை நன்றாக மருத்துவ பரிசோதனை கெய்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், கொடிய துன்புறுத்தலாக அடிஈ உதையால்  மீண்டும் அவர் கொடிய மனநோயாளிக்கு ஆளாக வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர்.

இந்நிகழ்ச்சிகளை தெளிவாக மனைவி லைலாவும், சிறிது குணமாகி சுய உணர்வு பெற்ற இப்றாஹீமும் தெரிவித்தனர். தற்சமயம் இப்றாஹீம் கோட்டயம் மருத்துவக் கல்லூரி வார்டு எண்,2ல் முதல் படுக்கையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களை நேரில் பேட்டிக் கண்டு “இந்தியன் எக்ஸ்பிரஸ்” நிருபர் 30.5.1988(பக்கம்-13) தினசரியில் குறிப்பிட்டுள்ளார்.

பகுத்தறிவு இஸ்லாத்தைச் சார்ந்த பல பாமரர்கள் இதுபோல் மூட நம்பிக்கையால் சீரடிகின்றனர். ஒரு இப்றாஹீமின் கதை வெளியாகியுள்ளது. வெளியாாத கதைகள் எத்தனையோ? அல்லாஹுவுக்கும் அதன் காரணகர்த்தாக்களான ஏர்வாடி மந்திரவாதிகளுக்குமே வெளிச்சம்; இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே! இதுபோன்ற நிலைக்கு நீங்களும் ஆளாகாமல் தவிர்த்து கொள்ளுங்கள்.

*********************************************************************************************************************************************************************************

தேர்வுக் கூடம்!

நல்லம்பல் – ஷேக் அலாவுதீன்

காலத்தின் மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். (103:1,2)

இவ்வுலக வாழ்வோடு எல்லாம் முடிந்து விட்டது என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படியானால் மனித வாழ்வில் ஏன் பல பாகுபாடுகள்? பணக்காரர்கள், பிச்சைக்காரர்கள், நியாயவான்கள், அநியாயக்காரர்கள், முதலாளி, தொழிலாளி, இப்படி பல பாகுபாடுகள் ஏன்? எல்லோரும் ஒரே மாதிரியல்லவா இருக்கவேண்டும்! சாத்தியமில்லையே ஏன்? பணக்காரர்கள் என்ன, கொடுத்து வைத்தவர்களா? பிச்சைக்காரர்கள் என்ன, ஏமாளிகளா? சிலர் நியாயத்திற்கு கட்டுப்பட்டவர்களாகவும் சிலர் அநியாயத்திலேயே ஊறித் திளைப்பவர்களாகவும் ஏன் இருக்க வேண்டும்? சிந்தித்தால், பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியானால் நிச்சயமாக இவைகளுக்கெல்லாம் ஒரு பின்னணி இருக்க வேண்டும் என்பதை சிந்திப்போர் விளங்க முடியும்.

உங்களில் எவர், செயல்களில் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக(வே) அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (07:2)

இவ்வுலக வாழ்வு மனிதனுக்கு ஒரு தேர்வுக்கூடமேயல்லாமல் வேறில்லை. இது நிரந்தரமற்ற வாழ்க்கைதான் என்பது மெற்கண்ட ஆயத்தின் மூலம் தெளிவாகிறது. மனிதன் இவ்வுலகில் செய்யும் நல்ல அல்லது கெட்ட செய்கைகள் அனைத்தும் மரணத்தின் மூலம் முற்று பெற்றுவிட்டாலும் மறுமையில் அதற்கான தகுந்த கூலி நிச்சயம் உண்டு.

அந்நாளி(மறுமையி)ல் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுக்கப்படும். அந்நாளில் எந்த அநியாயமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன் (40:17)

அல்லாஹ்(ஜல்) மனிதனைத் தன் சுய விருப்பப்படி இயங்க இவ்வுலகில் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து இருக்கின்றான்.

(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக! இந்தச்  சத்திய(வேத)ம் உங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ளது. ஆகவே விரும்பியவர் இதில் நம்பிக்கைக் கொள்ளட்டும்; இன்னும் விரும்பியவர் நிராகரிக்கலாம். (18:29)

இப்படிப்பட்ட சுதந்திரத்தை மனிதர்களுக்கு அல்லாஹ்(ஜல்) வழங்கி, மனிதன் தன் ரப்பை நினைத்து அவனை வணங்கி வழிபடுவதும், வழிபடாமலிருப்பதும் மனிதனுடைய சுய விருப்பத்திற்கு விட்டுவிட்டாலும், ஜின் வர்க்கத்தையும், மனித வர்க்கத்தையும் என்னை வணங்கி வழிபடுவதற்காக(வே) அல்லாமல் நான் படைக்கவில்லை. (51:56)

என்று மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தையும் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளான். அது மட்டுமல்லாமல் நபிமார்கள் மூலமாகவும், வேதங்களின் மூலமாகவும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே இல்லை என்பதை மனிதனுக்கு அறிவுறுத்திக் காட்டி அவன் நேர்வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிவகுத்துத் தந்துள்ளான். ஆனால் பெரும்பாலான மனிதர்களோ, தம்மைப் படைத்து, பாதுகாத்து, தனக்கு நேரான வழியையும் வகுத்துக் கொடுத்துள்ள அந்த மகத்தான ரட்சகனைப் பற்றி சிந்திப்பதில் சிறிதேனும் அக்கரைக் கொள்வதில்லை! மாறாக இவ்வுலக நிலையற்ற வாழ்வின் மாயையிலும், ஷைத்தானுடைய சூழ்ச்சியாலும் சிக்கி இரட்சகனுக்கு மாறு செய்வதிலும் அவனை நினைவு கூற கூட நேரமில்லா வகையில் பொருளைச் சேர்ப்பதிலும், மாட மாளிகைகள் அமைத்து பெருமைப்படுவதிலும், தான்தோன்றித்தனமாக வாழ்வதிலுமே பெரும்பாலான மனிதர்கள் காலத்தைக் கழித்துக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையில் மரணம் விதிக்கப்பட்டுவிட்டுது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு  நாள் பொழுது (இபாதத் இல்லாமல்) வீணாகப் போவதினால் தன் மரணத்தை நோக்கி ஒரு நாள் முன்னேறி விட்டோம் என்பதை மனிதன் ஒரு நிமிடமாவது சிந்திப்பானேயானால் இப்படி வீணான விஷயங்களில் ஈடுபட்டுப் படைத்தவனை மறந்து பொழுதை போக்கிக் கொண்டிருக்கமாட்டான். பொருளை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொண்டிருப்பதிலையே ஈடுபட்டிருக்கமாட்டான். மாறாக மறுமைக்குத் தேவையானதையும் மறக்காமல் செர்த்துக் கொண்டிருப்பான்.

மனிதனே! நிச்சயமாக நீ உன் ரப்பிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய். பின்னர் அவனை சந்திப்பவனாக இருக்கின்றாய் (என்பதை மறந்து விடாதே) (34:6)

மனிதன் சுதந்திரமாக சுயமுடிவுப்படி இயங்குவது எல்லாம் மரணத்துடன் முற்றுப்பெற்றுவிடும் அதன் பின்னர் அவன் “”தவ்பா”” நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஆகவே சகோதர, சகோதரிகளே! உங்கள் சுதந்திரம் பறிக்கப்படுமுன் அல்லாஹ்வைப் பற்றி சிந்தியுங்கள் அல்லாஹ்வும், அவன் தூதர்(ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ள அந்த நேரிய வழியில் வாழ ஆயத்தமாகுங்கள்.

இவ்வுலக தேர்வுக் கூடத்தில் நீங்கள் பரீட்சை எழுத குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் கவனமாகப் படித்து, சிந்தித்து அதன்படி உங்கள் வாழ்வை அமைத்துக்கொண்டு வழி தவறாமல் வாழ்ந்து இறந்து விட்டீர்களேயானால் நிச்சயமாக அல்லாஹ்(ஜல்)வின் உதவியால் சுவனத்திற்கு “பாஸ்” ஆகிவிடுவீர்கள்.

குர்ஆனையும்,  ஹதீஸையும்  விட்டுவிட்டு,  கிஸ்ஸாக்களையும்,  அப்பா, மஸ்தான் பாடல்களையும், மெளலூதுகளையும், புரு(டா)தா போன்ற கப்ஸாக்களையும் படித்துக் காலத்தை வீண் விரயம் செய்து கொண்டிருந்தீர்களேயானால், நிச்சயமாக படைக்கப்பட்டதன் நோக்கம் பூர்த்தியாகாமல் மறுமைக்கான பரீட்சையில்படுதோல்வியடைந்தவர்களாவீர்கள் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

அல்லாஹ்(ஜல்) நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ்களை(மட்டும்) சரியாக விளங்கிப் பின்பற்றி ரசூல்(ஸல்) அவர்களின் உம்மத்தில் வெற்றிபெற்ற கூட்டத்தில் ஆக்கியருள்வானாக! ஆமீன்.

**********************************************************************************************************************************************************************************

ஒவ்வொரு சந்தாதாரரும், இன்னொரு சந்தாதாரரை அந்நஜாத்திற்கு அறிமுகப்படுத்தி கலப்படமற்ற தூய இஸ்லாம் வளர உதவுங்கள்.

**********************************************************************************************************************************************************************************

சரித்திர துணுக்கு:

பித்அத்துக்கு ஸஹாபி காட்டிய கறுப்புக்கொடி – அபூமூமினா – சென்னை.

பெருநாட்களின் போது முதலில் செய்யவேண்டியது (வணக்கம்) பெருநாள் தொழுகை என ரசூல்(ஸல்) எங்களுக்கு கூறினார்கள். அறிவிப்பு: அல்-பராஉ(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அஹ்மது,

ஈதுல்பித்ர், ஈதுல் அழ்ஹா நாட்களில் ரசூல்(ஸல்) அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி கூடித்தொழும் இடத்திற்கு வந்ததும் முதன் முதலில் பெருநாள் தொழுகையை தொழவைப்பார்கள். நபித்தோழர்கள் அவரவர் தொழுத இடத்தில் அமர்ந்திருக்க நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹுவைப் புகழ்ந்து வாழ்த்திப் பிரசங்கம் செய்வார்கள். அறிவிப்பு: அபூசயீத் அல்குத்ரீ(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.

ரசூல்(ஸல்). அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) ஆகியோர் முதலில் பெருநாள் தொழுகை தொழுதபின் குத்பா பிரசங்கம் செய்யக்கூடிவர்களாக இருந்தனர். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இவ்விதமாக ஈத்பெருநாட்களின் போது, குத்பா பிரசங்கம் செய்யக் கூடியவர்களாக இருந்தனர். அறிவிப்பு: இப்னு உமர்(ரழி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

இவ்விதமாக ஈத்பெருநாட்களின்போது, குத்பா பிரசங்கம் தொழுகைக்குப் பின் தான் செய்யவேண்டும். அதுவே நல்வழி, நபிவழி என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. ஆனால் இந்நபி வழிக்கு மாறாக, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், 50 வருடங்களில் ஒரு புதுவழியை உமைய்யா கலீபா ஒருவர் புகுத்தினார். அன்றும் நபித்தோழர்கள் உயிருடனிருந்தனர். அவர்கள் வலிமைமிக்க கலீபா செய்யும் நவீன வழி(பித்அத்)யை ஏற்கவில்லை. மாறாக தயவு தாட்சண்யமின்றி தட்டிக்கேட்டனர். நபி(ஸல்) அவர்களின் நல்வழி(சுன்னத்து)க்கு அவர்கள் கொடுத்த சிறப்பினை, நவீன வழி(பித்அத்து)க்கு அவர்கள் காட்டிய கடும் வெறுப்பினை கீழ்க்காணும் சரித்திர துணுக்கு விளக்கும். அபூசயீத் அல்-குத்ரீ(ரழி) அறிவிக்கிறார்கள்.

ரசூல்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா), நோன்பு பெருநாள்(ஈதுல் பித்ர்) அன்று(வீட்டை விட்டு) வெளியேறி (பெருநாள் தொழும் பொது இடம் வந்ததும்) முதலில் தொழவைப்பார்கள். தொழுகை முடிந்ததும் பின்பற்றி தொழுத நபித்தோழர்கள் அவரவர் தொழுத இடத்தில் அமர்ந்திருக்க அவர்களை நோக்கி பிரசங்கம் செய்வார்கள். ஏதாவது புனிதப்போருக்கு ஆயத்தமாக வேண்டுமெனில் அதனை மக்களுக்கு தெரிவிப்பார்கள். ஏதாவது அவசிய ஆணைகளிருந்தால் அதனையும் வெளியிடுவார்கள். அதற்குப்பின் தர்மம் செய்யும்படி கூறுவார்கள். அன்றைய தினம் அதிகமாக தானதர்மங்கள் செய்தவர்கள் பெண்மக்கள். பின் அவர்கள் (வீடு) திரும்புவார்கள்.

இந்த வழக்கம் மர்வான் பின் அல்-ஹகம்(இவர் உமைய்யா கலீஃபாக்களில் ஒருவர், தாபிஈ, இவரது இறப்பு 64-65 ஹிஜ்ரி) காலம் வரை இருந்தது. ஒரு ஈத்பெருநாளன்று நான் கலீஃபா மர்வானுடன் பெருநாள் தொழுகைக்கு வந்தேன். கதீர்பின் அஸ்ஸலத் என்பவர்(கலீஃபா குத்பா பிரசங்கம் செய்வதற்காக) மண், செங்கல்லைக் கொண்டு ஒரு மிம்பர் கட்டியிருந்தார். (தொழுமிடம் வந்ததும்) கலீஃபா மாவான் எனது கையை உதறிவிட்டு, நான் (தடுத்து) தொழுகைக்காக இழுத்தபோதிலும் (கேட்காமல்) மிம்பரில் ஏறினார்.

இதனைக் கண்ணுற்ற நான் “”(நபிவழிபடி) தொழுகையை (குத்பாவுக்கு) முற்படுத்தவேண்டியது என்னவாயிற்று?” (ஏன் செய்யவில்லை) என வினவினேன். அதற்கு கலீஃபா மர்வான் “யா அபா ஸயீத்! உனக்குப் பிரியமான அப்பழக்கம் (சுன்னத்து) விடுபட்டுவிட்டது” என பதிலளித்தார். இதனை செவிமடுத்த நான் (கடும் கோபத்துடன்) நிச்சயமாக! இல்லவே இல்லை! எனது உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் (அல்லாஹ்) மீது ஆணையாக! எனக்கு பழக்கமான நபிவழியை (சுன்னத்தை)விட, சிறப்பானதை நீர் செய்யவே இல்லை” என மூன்று தடவைகள் கூறி அங்கிருந்து வெளியேறினேன். இந்நிகழ்ச்சியை இமாம் முஸ்லிம்(ரஹ்) தனது ஸஹீஹில் குறிப்பிடுகிறார்கள்.

தொழுதபின் நான் குத்பா பிரசாங்கம் செய்தால், மக்கள் கேட்கமாட்டார்கள் என கலீஃபா மர்வான் காரணம் கூறியதாக இமாம் புகாரி(ரஹ்) தனது ஸஹீஹில் இதே ஹதீஸை முடிக்கிறார்கள். கலீஃபா மர்வான் செய்த புது வழி(பித்அத்)யை ஒரு சாதாரண குடிமகன் எழுந்து தடுத்ததாகவும், அதனை நபித்தோழர் அபூசயீத் அல்குத்ரீ(ரழி) வரவேற்றதாகவும் இமாம் அபூதாவூத்(ரஹ்) தனது சுனனில் அறிவிக்கிறார்கள்.

உமைய்யாக்களின் காலத்தில் இஸ்லாம் பல நாடுகளில் பரவியிருந்தது. பரந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஜனாதிபதியாக நிகழ்ந்த, வலிமைமிக்க கலீஃபா செய்த ஒரு பித்அத்தைக்கூட அன்று வாழ்ந்த அருமை ஸஹாபாக்கள் ஏற்கவில்லை. அவர்களது நட்பை முறித்தனர் என்பதை இந்நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்குகிறது.

இன்று பற்பல நவீன வழி(பித்அத்)களை சர்வசாதாரணமாக செய்து நபிவழியை(சுன்னத்தை) மறந்து வாழும் முஸ்லிம்கள் சிறிது யோசிப்பார்களாக! இதுபோன்ற நவீன வழி(பித்அத்து)க்கு துணைபோகும் ஒரு சில மார்க்க அறிஞர்கள் (எல்லோருமல்ல) நாற்பது பித்அத்கள் ஒரு ஹராமென சொந்த யூகத்தில் கணக்கிடாமல் “எல்லா பித்அத்துக்களும் வழிகேடு அவ்வழிகேடு நரகத்திற்கு அழைத்துச் செல்லும்” என்ற நபி(ஸல்) வாக்குப்படி பித்அத்திற்குப் பயந்து, வாழ அழைக்கிறோம்.

செய்வார்களா? நபிவழி(சுன்னத்து)க்கு துணை போவார்களா? நவீன வழி(பித்அத்)யில் நாசமாவார்களா? என்பதை எல்லாம் வல்ல நாயனே நன்கறிவான். அனைவருக்கும் நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

*********************************************************************************************************************************************************************************

அழகிய தோற்றம் வாய்ந்த கிடாயே குர்பானிக்கு ஏற்றதாகும்.

அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரு கொம்புகளை உடைய, கறுப்பும், வெள்ளையும் கலந்த நிறமுறள்ள இரு கிடாய்களை குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் “பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறித் தமது கையால் அறுத்தார்கள். அவ்விரண்படின் விலாப்புறத்திலும் தமது காலை வைத்(துமிதித்)தவர்களாக,  “பிஸ்மில்லாஹில்லாஹு அக்பர்” என்று அவர்கள் கூறுவதை நான் கண்டேன். (புகாரீ, முஸ்லிம்)

**********************************************************************************************************************************************************************************

குர்ஆனை விளங்குவது யார்? தொடர்: 7 இப்னு ஹத்தாது

சென்ற இதழோடு அல்குர்ஆனிலுள்ள “ஆயாத்தும்முஹ்க்கமாத்” என்ற தெளிவான குறிப்பான வசனங்களைப் பற்றிய விபரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டோம்ட. இனி இந்த இதழிலிருந்து அல்குர்ஆனிலுள்ள அடுத்தவகையான “ஆயாத்தும் முத்த ஷாபியஹாத்” என்ற ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தரும் வசனங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

“”ஆயாத்தும் முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றி அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

அவனே, இவ்வேதத்தை உம்மீது இறக்கினான் இதில் (தெளிவாகவும்) குறிப்பாக(வும்) உள்ள அர்த்தத்தையுடைய வசனங்களும் (முஹ்க்கமாத்) இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். எஞ:சியவை ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தையுடைய வசனங்களாகும். (முத்தஷாபிஹாத்) எவர்களுடைய இருதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டு பண்ணக் கருதி (முத்தஷாபிஹாத் வசனங்களில்) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுகிறார்கள். ஆயினும் (முத்தஷாபிஹாத் வசனங்களின்) உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியார். கல்வியறிவில் நிலையானவர்களோ (அதன் கருத்து தங்களுக்கு விளங்காவிடினும்) “இதனையும் நாங்கள் விசுவாசித்தோம் (இவ்விருவகை வசனங்கள்) யாவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் (இவற்றைக்கொண்டு) நல்லுபதேசமடையமாட்டார்கள். (3:7)

இந்த 3:7 வசனத்திலிருந்து “முத்தஷாபிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான் வேறெவரும் அறிய முடியாது என்று தெளிவாக அறிய முடிகின்றது.

அல்குர்ஆனின் பல வசனங்களைத் தங்கள் இஷ்டத்திற்குப் புரட்டியுள்ள காதியானிகள் இந்த 3:7 வசனத்தையும் புரட்டி இருக்கிறார்கள். காதியானிகளின் மொழிப்பெயர்ப்புக்களில் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப்பொருளை அல்லாஹ்வும் அறிவான். கல்வியறிவில் நிலையானவர்களும் அறிவார்கள்” என்று தவறாக மொழிபெயர்க்கப் பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

கல்வியறிவில் சிறந்தவர்களோ, “இதனையும் நாங்கள் விசுவாசித்தோம் (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) யாவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தாம்” என்று கூறுவார்கள் என்ற வசனத்திலுள்ள கல்வியறிவில் நிலையானவர்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற வசனத்தோடு இணைத்து அல்லாஹ்வும் அறிவான், கல்வியறிவில் நிலையானவர்களும் அறிவார்கள் என்று தவறாக மொழிப்பெயர்த்து வைத்திருக்கிறார்கள். காரணம் இந்தத் தவறான விளக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மிர்சா குலாமின் தவறான விளக்கத்தை அடிப்படையாக வைத்துத்தான் மிர்சா குலாமின் தவறான விளக்கங்களை நியாயப்படுத்த முடியும். இந்தக் காதியானிகளுக்கு வழி வகுத்துக் கொடுத்ததே இந்த முகல்லிது முல்லாக்கள் தான். முகல்லிது முல்லாக்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் குர்ஆன் வசனங்களுக்கு “தப்ஸீர்” என்ற பெயரில் அவர்கள் மனதில் வந்ததையெல்லாம் எழுதி வைக்கப்போய், அதே பாணியை இந்தக் காதியானிகளும் பின்பற்றி வழிகெட்டுச் செல்கிறார்கள். கேட்டால் முன்னோர்கள் செய்துள்ள மொழிப்பெயர்ப்பு, தப்ஸீர் அடிப்படையிலேயே செய்திருக்கிறோம் என்று சொல்லி சில தப்ஸீர்களின் பெயர்களைக் கொடுத்து நியாயப்படுத்துவார்கள்.

3:7 வசனத்தை நடுநிலையோடு வாசிப்பவர் எவரும், அந்த வசனத்தின் முழு சாராம்சத்தையும் இணைத்துப் பார்க்கும்போது முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருள்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதையும், மனதில் மாறுபாடு இருப்பவர்களே அவர்கள் இஷ்டத்திற்கு விளக்கங்கள் கொடுத்து அதைப் பின்பற்றுவார்கள் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை கல்வியறிவில் நிலையானவர்களும் அறிந்துகொள்ள முடியும் என்பதற்கும் இவர்கள் சொல்லும் விநோதமான காரணம், மனிதர்களால் விளங்க முடியாததை அல்லாஹ் ஏன் இறக்கி வைக்க வேண்டும்? அவை குர்ஆனில் பதிவாகி மக்கள் ஏன் ஓதவேண்டும்? சிந்திக்க  வேண்டாமா? விளங்க வேண்டாமா? ஆராய வேண்டாமா? என்ற கருத்துப்பட வரும் வசனங்கள் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு பொருந்தாதர்? எனவே முத்தஸாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருள்களை எல்லாரும் விளங்க முடியவிட்டாலும் கல்வியறிவில் நிலையானவர்கள் அறிந்து கொள்ளமுடியும் என்று வாதிடுகிறார்கள்.

இந்த வசனத்தை மேல் எழுந்தவாரியாகப் பார்ப்பவர்கள் இதில் நியாயம் இருப்பதாகவே எண்ணுவார்கள். சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் உண்மைப் புலப்படும். அல்குர்ஆன் தெள்ளத் தெளிவானது. 3:7 வசனத்தை மீண்டும் நிதானமாக வாசித்துப் பாருங்கள். “”விளக்கங்களைத் தேடிப் பின்பற்றுவார்கள்” என்ற பகுதியை ஆழ்ந்து நோக்குங்கள். முத்தஷாபிஹாத் வசனங்களை ஓதுவதையோ, அவற்றைப் பற்றி சிந்திப்பதையோ, விளங்க முற்படுவதையோ தடை செய்யப்படவில்லை. இது தான் அதன் பொருள் என்று ஓர் உறுதியான முடிவுக்கு வந்து அதை பின்பற்றுவதையே தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது பின்பற்ற முடியாத ஒன்றைப் பற்றி ஏன் சிந்திக்கவேண்டும்? விளங்க முற்பட வேண்டும்? என்ற ஐயத்தைக் கிளப்பலாம்ட. அதற்கு 3:7 வசனமே விடை பகர்கின்றது. கல்வியறிவில் உறுதிப்பாடுடையவர்களோ “நாங்கள் பூரணமாக அகில் நம்பிக்கை கொள்கிறோம் அவை (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) முழுவதுமே எங்கள் ரப்பிடமிருந்து வந்தவைதான்” என்று கூறுவர். அதாவது மனிதனது அறிவு சரிகாணும் எந்தக் காரியமாக இருந்தாலும் அதனை மனிதன் ஏற்றுக்கொள்ளத் தயங்கவே மாட்டான். மனித அறிவு சரிகாணாத விஷயங்களை ஜீரணிப்பதுதான் மனிதனைப் பொறுத்தமட்டிலும் மிகவும் சிரமமான காரியமாகும். நாஸ்திகர்கள் இறைவனையும், மறுமையையும், மறுப்பதற்கு இதுவே மூலகாரணமாக இருக்கிறது.

மனித அறிவு ஏற்றுக்கொள்ளத் தயங்கும் விஷயங்களையும், அவனது ரப்பிடமிருந்து வந்ததுதான். அவனது கட்டளைதான் என்று உறுதியாகத் தெரியும்போது, எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்வது தான் அவனது உன்னத நிலையாகும். இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படும் பல காரியங்கள் (ஷைத்தானுக்கு கல் எறிதல், தொங்கோட்டம் ஓடுதல்) மனிதனது அறிவுக்குப் பொருத்தமானதாகத் தெரிவதில்லை. அர்த்தமற்ற செயல்களாகவே தெரியும் ஆயினும் அறிவுடையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை அவனது தூதர் செய்து காட்டி இருக்கிறார்கள். நமது அறிவுக்கு எட்டாவிடினும், இறுதித் தூதர் செய்து காட்டியதுதான் என்று ஆதாரபூர்வமாக அறியும்போது நாமும் நிறைவேற்றுவது தான் நமது கடமை. அதுதான் நாம் அடிமை. அல்லாஹ் தமது எஜமான். எஜமானின் கட்டளைகளை தமக்குச் சரியாகத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் நாம் அதை நிறைவேற்றுவதே நமது கடமை என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இதை நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற இரு நிகழ்ச்சிகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக ஊர்ஜிதம் செய்கின்றன. “இப்றாஹீம்(அலை) அவர்கள் மீது நீ எவ்வாறு சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிந்தாயோ, அதே போல் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிவாயாக என்று ஒவ்வொரு தொழுகையிலும், சலவாத்திலும் துஆவிலும் முஸ்லிம்கள் ஏற்றிப் போற்றும் ஓர் உன்னத பதவியை இப்றாஹீம்(அலை) அவர்கள் பெற்றுள்ளனர். இறைவனது கட்டளைதான் என்று அறிந்தவுடன், அதன் பின் விளைவைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், இறைவனது கட்டளையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முற்பட்டதே அவர்களுக்கு இவ்வளவு பெரிய பதவியைப் பெற்றுத்தந்தது.

தள்ளாத முதுமை வரை குழந்தை இல்லாமல் சோதிக்கப்பட்டபின் (குழந்தை இல்லையே என்று ஏங்கி எந்தத் தர்ஹாவுக்கும் இப்றாஹீம்(அலை) அவர்கள் காவடி தூக்கவில்லை) சுமார் 80 வயதுக்குப் பின் அருமையாகப் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில்(அலை) அவர்களையும், அருமை மகனை பெற்றுக்கொடுத்த அருமை மனைவி ஹாஜரா(அலை) அவர்களையும் மனித சஞ்சாரமே அற்ற சொட்டுத் தண்ணீர் கிடைக்காத கடும் பாலைவனத்தில், அல்லாஹ்வின் கட்டளைப்படி விட்டுச் செல்கிறார்கள் என்றால், எந்த மனித அறிவும் சரி காணுமா இதை? மனைவியையும், மகனையும் பசியாலும், தாகத்தாலும் துடித்துச் சாகடிக்கவே இந்த ஏற்பாடு என்றே மனித அறிவு சொல்லும். ஆனால் இப்றாஹீம்(அலை) அவர்களோ இது தன்னையும், தன் மனைவியையும், மகனையும் படைத்த எஜமானாகிய அல்லாஹ்வின் கட்டளை. எஜமானின் கட்டளையை அடிமை மீற முடியாது நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து அல்லாஹ்வின் கட்டளையைச் செய்து முடிக்கிறார்கள். அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டுமல்லாமல், மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான். இன்று உலகில் எந்த மூலைமுடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை (Freshness) மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா?

இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம்(அலை) அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது காலம் கழித்து இஸ்மாயில்(அலை) அவர்களின் துள்ளித்திரியும் பருவத்தில் தனது செல்வ மகனை தன் கையாலேயே அறுத்துப் பலியிடுவதாக கனவு காண்கிறார்கள். நபிமார்களின் கனவு உண்மைச் செய்தியாகும். எனவே இறைவனின் இக்கட்டளையையும் நிறைவேற்றத் துணிகிறார்கள். இப்றாஹீம்(அலை) தன்னை அறுத்துப் பலியிடுவதற்கு பூரண ஒப்புதலைத் தருகிறார்கள் தனயன் இஸ்மாயில்(அலை). இதை மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளுமா? பெற்ற தந்தையே தனது கையாலேயே மகனை அறுத்துப் பலியிடுவது அதுவும் பல்லாண்டுகள் குழந்தையில்லாமல் ஏங்கிக் கிடந்த பெற்ற மகன். அந்த மகனை பலியிடுவதால் அல்லாஹ்வுக்கு என்ன லாபம்? என்று தான் மனித அறிவு சொல்லும். இதைவிட காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல் இருக்கமுடியாது என்றே உலகம் தீர்ப்புக் கூறும். இன்று இப்படிப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டான் செய்யவும் முடியாது. (காரணம் யாருக்கும் வஹிவருவதில்லை) ஆனால் அன்று இப்றாஹீம்(அலை) அவர்கள் செய்யத் துணிந்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் இது படைத்த எஜமானின் கட்டளை. எஜமானன் கட்டளையை அடிமை மீற முடியாது.எனவே பின் விளைவு மிக பயங்கரமாகத் தெரிந்தாலும், இறைவனது கட்டளையை தனக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி சிந்திக்காது, நிறைவேற்றத் துணிந்தார்கள். இறைவனும் இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது கட்டளைக்கு எந்த அளவு அடிபணிகிறார்கள் என்று உலகிற்கு காட்டவே இந்த சோக நிகழ்ச்சியை செய்யும்படி கட்டளையிட்டான். அவர்கள் இறைவனது கட்டளைக்கு அடிபணிந்து அதை நிறைவேற்றத் தயாராகிவிட்டார்கள் என்று நிரூபணமானபின், மகனுக்குப் பகரமாக ஆட்டை அறுத்துப் பலியிடச் செய்து இஸ்மாயில்(அலை) அவர்களைக் காப்பாற்றியதோடு, இப்றாஹீம்(அலை) அவர்களின் உன்டனத நிலையையும் உலகம் அறியச் செய்தான்.

இன்று மனிதர்களில் சிலர் தங்களின் மனித எஜமானர்களை திருப்திப்படுத்த, எவ்வித சிந்தனையுமில்லாமல் எவ்வளவு கொடூரமான செயல்களையும், அவர்களின் உத்திரவுப்படி செய்து முடிப்பதை பார்க்கும் நாம், எஜமானர்களுக்கெல்லாம் பெரிய எஜமானனான அல்லாஹ்வின் கட்டளைகள் நமக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஏற்றுக்கொள்வது நமது கட்டாயக் கடமையே என்பதை அறிவுடையவர்கள் மறுக்கமாட்டார்கள். இதையே அல்குர்ஆனின் ஆரம்பத்திலேயே (2:3) மறைவான விஷயங்களை அதாவது அறிவுக்கு எட்டாத விஷயங்களை நம்பி ஏற்றுக்கொள்வார்கள் என்று அல்லாஹ் அறிவிக்கிறான். இந்த விஷயத்தில் எந்த அளவு உண்மையாளர்களாக இருக்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காக முத்தஷாபிஹாத் ஆயத்துக்களை அல்லாஹ் இறக்கி இருக்கிறான் என்று சொன்னால் அறிவுடையவர்கள் அதை மறுக்க எந்த முகாந்திரமுமில்லை. இதையே 3:7ல் ஒரு பகுதி சுட்டிக்காட்டுகிறது. அடுத்து முத்தஷாபிஹாத் ஆயத்துகள் இறக்கப்பட்டதற்கு இன்னொரு காரணத்தையும் சொல்லலாம். அதாவது வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய இவ்வுலக சம்பந்தமான உண்மைகளை அன்றே தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தால் மனிதர்கள் அதனை ஜீரணித்திருக்கமாட்டார்கள். 16-ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்று அறிவித்த கலிலேயோ விஷம் கொடுக்கப்பட்டு, கொல்லப்பட்டார் என்றால், 7-ம் நூற்றாண்டில், மக்களின் மனோ நிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதைச் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த விபரங்களை அடுத்துப் பார்ப்போம்.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

**********************************************************************************************************************************************************************************

சமூகவியல்: 9. கனியிருப்பக் காய் கவர்தல்! புலவர் செ.ஜஃபர் அலி, பி.லிட்.,

“(நபியே! எனக்கு வழிப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீர் கூறும்: அவர்கள் (எம்மனிதருடன் பேசியபோதிலும் எது நல்லதோ அதையே கூறவும். உறுதியாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படிச் செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்) உறுதியாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான விரோதியாக இருக்கின்றான். (ஆகவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்) (அல்குர்ஆன்:17:53)

இனிய சொற்களால் உரையாடுக! அது மனிதப் பண்பாட்டை உயர்த்திக் காட்டும்; கடுஞ்சொல் கூறுவதால் ஏற்படுவது தீமையே! எல்லாருக்கும் தெரிந்த உண்மையே இது! இறைநேசச் செல்வர் என்று மக்களால் நம்பப்படும் சிலருடைய வாயிலிருந்து வெளி வருவதெல்லாம் கெட்ட வார்த்தைகளாகவே இருக்கின்றன. தன்னை நோக்கி வருபவர்களைப் பார்த்து நாக்கூசாமல் இழிந்த சொற்களால் திட்டித் தீர்க்கும் இவர்களைப் பார்த்து என்ன சொல்வது? சாராணமாக, மனித சமுதாயத்துக்கு மகுடமிடுவது இனிய சொற்களே! உரையாடிக்கொண்டிருக்கும்போது கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி  வீணே கோபப்படுவது மனித சமுதாயத்தை மாசற்ற சமுதாயமாக மாற்றிவிடும். ஒருவரைப் பற்றி கூறும்போது, அவருடைய நற்பண்புகளை மட்டுமே எடுத்துக்கூறி, தீய பண்புகளை மறைக்க முற்படவேண்டும்! பிறருடைய பண்புகளைப் பாராட்டுபவருடைய பண்புகளும் பாராட்டப்படுவதற்கு தகுதியுடையன! எல்லாம் வல்ல அல்லாஹ் மிகத்தெளிவாகவே அருள்மறையில் குறிப்பிடுகின்றான்; “(நிராகரிப்போரின் குப்ரு, ஷிர்க்கான) கெட்ட வார்த்தைக்கு உதாரணம்: பூமியில் இருந்த வேர்கள் அறுபட்டு (உறுதியின்றி) நிற்கும் (பட்டுப்போன ஒரு) கெட்ட மரத்துக்கு ஒப்பாகும்: அது நிலைத்திருக்காது. (அல்குர்ஆன் 14:26)

நாம் மனிதர்களில் பலரைப் பார்க்கலாம்; அவர்கள் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் யாவும், தத்துவமுத்துக்கள் என்னும் எண்ணத்தில்-கெட்ட வார்த்தைகளாகவே சர்வசாதாரணமாக வெளிவந்து கொண்டிருக்கும். கெட்ட வார்த்தைகளைப் பேசுவது தங்களுக்குரிய அதிகபட்சமான தகுதியாகவே சிலர் எண்ணி, பெருமைப்பட்டுக் கொள்வோரும் உண்டு. கேவலம்! அந்தோ கைசேதம்! பகிரங்கமான விரோதி ஷைத்தான், அவர்களுடனேயே இருந்து வருகின்றான் என்பது அவர்களுக்கே தெரியாது போலும்! வேடிக்கைக்காகவும்,  விளையாட்டுக்காகவும் நண்பர்களுக்காகவும் கெட்ட வார்த்தைகள் பேசிக்கொள்வோரும் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர் களுக்கு சமுதாயத்தில் எப்படி மதிப்பு இருக்கும்? மூன்று-நான்கு வயது அடைந்த சின்னஞ் சிறுவர்கள்-சிறுமியர்கள் கூட சில குடும்பங்களில் சர்வசாதாரணமாக, கெட்டவார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்! காரணம் என்ன? வளர்ப்பவர்களும்-சூழ்நிலைகளும் அரிச்சுவடி பாடமாக, கெட்ட மொழிகளையே கற்பித்துக் கொடுத்துள்ளனர்.

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும், தர்மம் செய்த பின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்: தவிர அல்லாஹ்(எவரிடத்திலும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன் (2:263)

“இனிய உளவாக இன்னாத கூறல்” “கனியிருப்பக் காய்கவர்ந்தற்று”-என்பது குறள். அழகிய இனிய மொழிகள் உன்ளபோது, தீய வார்த்தைக் கூறுவதானது.மரத்தில் பழங்கள் கனிந்து குலுங்கும்போது, காயைத் தேடி பறிப்பது போலாகுமன்றோ? நாம் ஒருவரைப் பார்க்கும்போது, “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும் என்னும் பொருள்தரும். “அஸ்ஸலாமு அலைக்கும் வாஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு” என்று கூறும்போது கேட்பவருக்கு எத்துணை இதமாக இருக்கும்? சொல்லும் நமக்கும் எத்துணை இனிமையாக இருக்கும்? சிந்தித்துப் பாருங்கள்! இன்று வரை, நாம் அறிந்தோ.. அறியாமலோ கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கலாம்! அல்லாஹ்வின் கட்டளை நமக்குத் தெளிவாகத் தெரிந்த பின்பும், நாம், பழக்கத்தின் காரணமாக, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது அல்ல என்பதை நாம் அறிவோம். இனிய மொழிகளால் உரையாடி-நல்லன கூறி, மனிதப் பண்பாளர்களாக வாழ்வாங்கு வாழ்வோமாக! எல்லாம் வல்ல ரஹ்மானும் அருள்புரிவானாக. (இன்ஷா அல்லாஹ் வளரும்)

*********************************************************************************************************************************************************************************

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!! தொடர்-6 

 K.M.H. அபூ அப்துல்லாஹ்

சென்ற இதழில், நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு, உண்மையில் பகுத்தறிவு அல்ல; பகுத்தறிவு இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்பதைப் பார்த்தோம். இந்த இதழில் பகுத்தறிவு ஏன் மனித சமூகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நடுநிலையோடு சிந்திப்பவர்கள் பகுத்தறிவு மனித சமுதயாத்திற்கு மறுமை வாழ்க்கையைக் குறிக்கோளாகக் கொண்டே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். உலகில் படைக்கப்பட்டுள்ள மனிதனல்லாத இதர அனைத்துப் படைப்புக்களும் இவ்வுலகில் மனிதனுக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ உதவி வருகின்றன. எல்லாப் படைப்புக்களைக் கொண்டும் மனிதன் பயன் அடைகிறான். ஆனால் மனிதனைக் கொண்டு எந்தப் படைப்புக்கும் பிரயோஜனம் இல்லை என்பதைத் தெளிவாக நாம் அறிகிறோம். மனிதன் ஒரு படைப்பின் மீது அக்கறை எடுத்து பாடுபடுகிறான் என்றாலும் அதிலும் அவன் தனது சுயநலம் கருதியே, தனது நலனைக் கருதியே அதைச் செய்கிறான். உதாரணமாக, அவன் ஆடு, மாடுகளை வளர்ப்பது அவற்றிலிருந்து தனக்குக் கிடைக்கும் பால், இறைச்சி, தோல் இவற்றின் பலனைக் கருதியே, அதிலும்மனிதன் இடைத்தரகனாக இருந்து பூமியிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களைக் கொடுக்கின்றானே அல்லாமல் மனிதன் தன்னிலிருந்து எதனையும் கொடுப்பதில்லை.

யானை போன்ற படைப்பினங்கள் உயிரோடிருக்கும் போதும் மனிதனுக்கு உதவுகின்றன. செத்த பின்பும் மனிதன் பயன் அடைகிறான். ஆனால் உயிரோடிருக்கும் மனிதனைக் கொண்டும் இதர படைப்பினங்களுக்கு உபயோகம் இல்லை. செத்த மனிதனைக் கொண்டும் உபயோகமில்லை. எனவே, எதற்கும் உபயோகமற்ற இந்த மனித இனம் உலகில் ஏன் வாழவேண்டும்? அதற்காக விசேஷமாக மனித இனத்திற்கு மட்டும் பகுத்தறிவு ஏன்கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்? என்று சற்று நிதானமாகவே சிந்தித்துப் பாருங்கள்.

பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ள மனிதனும் இவ்வுலகத்திற்கு அவசியமற்றவனாக இருக்கிறான். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள பகுத்தறிவும் இவ்வுலக வாழ்விற்கு அவசியமற்றதாக இருக்கிறது. அப்படியானால் மனிதன் ஏன் படைக்கப்பட்டுள்ளான்? அவனுக்கு விசேஷமாக ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது? இதை முறையாக ஒரு மனிதன் சிந்தித்தால், மனிதன் மறுமைக்காகப் படைக்கப்பட்டுள்ளான். அந்த மறுமை வாழ்க்கையை, உணர்ந்து விளங்கி, இவ்வுலக வாழ்க்கையை ஒழுங்குமுறையுடன் நடத்த அவனுக்குப் பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். மனிதனல்லாத பிராணிகளுக்கு பகுத்தறிவு இல்லை; அவற்றிற்கு மறுமை வாழ்க்கையும் இல்லை என்றாலும் இவ்வுலகில் மனிதனது இவ்வுலக வாழ்க்கைத் தேவைக்காக அவை படைக்கப்பட்டுள்ளன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மறுமைக்காகப் படைக்கப்பட்ட மனிதன், அந்த மறுமை வாழ்க்கையை உணர்ந்து வாழ பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதன், அந்த மறுமையை மறுத்து வாழ்கிறான் என்றால், அல்லது மறந்து வாழ்கிறான் என்றால், அவன் மனிதன் என்ற அந்தஸ்தையே இழந்து விடுகிறான். நான்கு கால் பிராணிகள் போல், இவன் இரண்டுகால் பிராணிகளாகவே நாளை மறுமையில் நரக வேதனை இல்லை. இந்த இரண்டு கால் பிராணிக்கோ நிச்சயமாக நாளை மறுமையில் நரக வேதனை உண்டு. அந்த நரக வேதனையை கண்கூடாக பார்க்கும்போது, நாங்களும் மண்ணோடு மண்ணாய்ப் போன இந்த மிருகங்களைப் போல், மண்ணோடு மண்ணாய் போயிருக்கக் கூடாதா? என்று கதறுவார்கள். ஆனால் அவர்களது கதறல் எவ்வித பலனையும் தராது. இந்த உலகிலேயே சிந்தித்து விளங்கி உணர்ந்து வாழ்ந்தால்தான் தப்பினார்கள். இல்லையேல் அதோகதிதான்.

பகுத்தறிவு என்றால் “பிரித்து அறிதல்” என்று தமிழ் அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியானால் ஒவ்வொரு விஷயத்திலும் யதார்த்தமான, உண்மையான நிலையைப் பிரித்து அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவாகும். உண்மையான நிலையை பிரித்தறிய தவறும் போது அது பகுத்தறிவாக ஆக முடியாது. உதாரணமாக குற்றம் சுமத்தப்படுபவர்களில் உண்மையான குற்றவாளியைப் பிரித்தறிந்து தண்டிக்கும் பொறுப்பில் உள்ள ஒரு நீதிபதியை எடுத்து கொள்வோம். அவர் மிகவும் நீதியாக நடக்கக் கூடிய நீதிபதியாக லஞ்சம் வாங்கிக்கொண்டு தன் மனச்சாட்சிக்கு விரோதமாக உண்மைக்கும் புறம்பாகத் தீர்ப்பளிக்கும் ஒரு நீதிபதி அல்ல; குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் மிகமிக எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில் அவர் தீர்ப்பளிக்கும் எல்லாத் தீர்ப்புகளிலும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தீர்ப்பளித்து வருகிறார் என்று சொல்ல முடியாது. சில தீர்ப்புக்களில் குற்றமற்றவரைத் தண்டிக்கும் நிலையும், சில தீர்ப்புக்களில் உண்மைக் குற்றவாளியை விடுதலை செய்துவிடும் நிலையும் ஏற்படத்தான் செய்கின்றது. இது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இந்த இடங்களில் அந்த நீதிபதி உண்மைக்கு மாற்றமான முடிவுக்கு வந்தமையினால் அவரின் பிரித்தறியும பகுத்தறிவில் கோளாறு ஏற்பட்டுவிட்டது எனபதை மறுக்க முடியாது.இதற்கு என்ன காரணம்? சம்பவத்தை நேரடியாகப் பார்த்தவர்கள் மூலம் சரியான தகவலைப் பெறத் தவறிவிட்டார் அந்த நீதிபதி என்றுதான் சொல்லவேண்டும். சம்பவத்தோடு நேரடியாகத் தொடர்புடையவர்கள், அல்லது நேரடியாக கண்டவர்கள் தரும் வாக்குமூலத்தை வைத்துத்தான் அவர் தீர்ப்பு செய்யவேண்டியுள்ளது. அவரது புலன்கள் இந்தத் தீர்ப்பு செய்யும் விஷயத்தில் அவருக்குத் துணை செய்ய முடியுமே அல்லாமல், அவரது புலன்களைக் கொண்டு மட்டும் தீர்ப்பு செய்துவிடமுடியாது. நாஸ்திகர்கள் செய்யும் பெருந்தவறு நீதிபதியின் தீர்ப்புக்குப் புலன்கள் மட்டும் போதும்; சம்பவத்தோடு தொடர்புடையவர் அல்லது நேரில் கண்டவரை இவர்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்ய முற்பட்டு விடுகிறார்கள். அவர்கள் பெரும் நஷ்டத்தில் இருப்பதற்கும், அவர்களது பகுத்தறிவு ஒழுவை பெறாததற்கும் இதுவே பிரதான காரணமாகும்.

அதாவது இறைவனைப் பற்றி, மறுமையைப் பற்றி மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் முடிவு செய்யும்போது அவனது பகுத்தறிவு முழுமைப் பெறாமல், புலன்களைக் கொண்டு மட்டும் அறிந்த ஒரு குறைவான அறிவோடு நின்றுவிடுகின்றது. எப்போது அவர்கள் இறைவனோடு தொடர்புடைய, இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் வாக்குமூலத்தை, தங்களின் புலன்களின் துணையோடு முறையாக அணுகுகிறார்களோ அப்போதே அவர்களின் பகுத்தறிவு முழுமைப் பெறுகிறது. உண்மை நிலைகளை சரியாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. அதே சமயம் அந்த நீதிபதி சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட அல்லது நேரடியாகப் பார்த்த சரியான நபர் மூலம் தகவல் பெற தவறிவிடுவதன் காரணமாக தவறான தீர்ப்பு அளிக்க நேரிகிறது. அதேபோல் உண்மையான மாற்றப்படாத சட்டங்களையுடைய, அதிகாரத்தில் இருக்கிற உண்மைத் தூதரை விட்டு, பொய்த் தூதர்களையோ, அல்லது சட்டங்கள் மாற்றப்பட்ட அதிகாரத்தில் இல்லாத தூதர்களின் வாக்கமூலங்களையோ. அல்லது அந்தத் தூதர்களின் பெயரால் நடைமுறையில் இருக்கும் மனித யூகங்கள் கலக்கப்பட்ட வாக்குமூலங்களையோ, தங்களின் புலன்களைக் கொண்டு விளங்கிச் செயல்பட்டாலும் பகுத்தறிவில் கோளாறு ஏற்படவே செய்யும்.

உலகில் தோன்றிய இறைத் தூதர்களைப் பற்றி நாஸ்திகர்களும் நன்கு அறிவார்கள். அவர்களின் நல்லொழுக்கம், மனித சமுதாயத்தில் அவர்களுக்கிருந்த அன்பு, மனித மேம்பாட்டுக்காக அவர்கள் செய்த கடும் உழைப்பு, அதனால் அவர்கள் மக்களிடம் பெற்ற துன்பங்கள், அளவற்ற துன்பங்களை மக்கள் அளித்தும், அதற்கு மாறாக அந்த மக்கள் மீது அந்த இறைத் தூதர்கள் காட்டிய பரிவு அனைத்தையும் நாஸ்திகர்களும் அறிவார்கள். குறிப்பாக அவர்கள் அனைவரும் மனிதருள் மாணிக்கங்களாக வாழ்க்கை நடத்தியுள்ளார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்கமாட்டார்கள். இந்த நிலையில் இறைவனைப் பற்றியும், மறுமையைப் பற்றியும் அவர்கள் ஏன் பொய் பகரவேண்டும்? அதனால் அவர்கள் அடைந்த லாபம் என்ன? என்பதை நாஸ்திகர்கள் சிந்திக்கவேண்டும். நாஸ்திகர்கள் சொல்வதுபோல் இறைவனோ, மறுமையோ இல்லை என்றால், அந்த சான்றோர்கள் அதையே மக்களிடம் சொல்லி மனித சமுதாயத்திற்கு அவர்கள் அரசர்களாக ஆகி இருக்கலாம். எண்ணற்ற உலக சுகபோகங்களை அனுபவித்திருக்கலாம். தங்களையே இறைவனாக மக்கள் ஒப்புக்கொள்ள வைத்திருக்கலாம். குறிப்பாக இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் அதிகமதிகம் இருந்தன. நாஸ்திகர்களால் அறிஞர்களாகப் போற்றப்படுகிறவர்கள் கொடுத்த திட்டங்களைவிட, மிக உன்னதமான திட்டங்களை அந்த மேன்மக்கள் சுயமாக கொடுத்திருக்க முடியும். ஆனால் இதற்கு மாற்றமாக அந்த மனிதப் புனிதர்கள் தாங்கள் இறைவனின் அடிமை என்றும், இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் என்றும், இறைவனின் கட்டளைகளுக்கு தாங்களும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். மக்களும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏன் சொல்லவேண்டும்? தங்களையே மிக வன்மையாக கண்டித்துச் சொல்லும் வசனங்களை இறைவனிடமிருந்து வந்த வசனங்கள் என்று மக்களிடம் ஏன் சொல்லவேண்டும்? (இறுதிமறை அல்குர்ஆனில் இறுதித் தூதர் முஹம்மது(ஸல) அவர்களைக் கண்டித்து இறக்கப்பட்டுள்ள பல வசனங்களைப் பார்க்கிறோம்)

இறைவன் ஒருவன் இல்லை என்றால், மறுமை என்ற ஒன்று இல்லை என்றால், அந்த மனிதப் புனிதர்கள் ஏன் இவ்வாறெல்லாம் செயல்பட்டிருக்க வேண்டும்? என்று நாஸ்திகர்கள் நிதானமாகச் சிந்திப்பார்களேயானால், அந்த மனிதப் புனிதர்களான தூதர்களைத் தன்னுடைய அறிவிப்புகள் மூலம் இறைவனே செயல்பட வைத்துள்ளான். இறைவனோடு அந்தத் தூதர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்ததால், அந்த இறைவனை அத்தூதர்கள் ஐயமின்றி விளங்கிக் கொண்டார்கள். இறைவனால் அறிவிக்கப்பட்ட மறுமை வாழ்க்கையையும் தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். அந்த மறுக்க முடியாத உண்மைகளையே மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள் என்பதை முறையாகச் சிந்திப்பவர்கள் விளங்காமல் இருக்கமுடியாது.

மக்களிடம் அப்படி இறைவன் இருக்கிறான் என்று சொல்லித்தான் மக்களை கவர முடிந்தது? அதன் மூலம் சீர்திருத்தங்களைச் செய்ய முடிந்தது”. எனவே, உண்மைக்குப் புறம்பாக அந்தத் தூதர்கள் கூறினார்கள் என்று நாஸ்திகர்கள் வாதிடலாம்; இதுவும் தவறாகும். இறைவன் இல்லை என்று சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெறுவதாக இருந்தால், இந்த நாஸ்திகர்கள் இன்று மக்களிடம் சொல்வாக்குப் பெற்றிருப்பதைவிட மிக அதிகமாக செல்வாக்குப் பெற்றிருக்க முடியும். ஆனால், இறைவனின் கட்டளைக்கு மாற்றமாக இரறத்தூதர்கள் நடக்கமுடியாது. இறைவன் இல்லை என்ற பொய்க்கொள்கையை மக்கள் முன்வைத்தால்தான், தாங்கள் செல்வாக்குப் பெற முடியும். தங்களால் சில சாதனைகளைப் புரிய முடியும் என்று நம்பியே நாஸ்திகர்கள் பொய்க் கொள்கையைக் கடைபிடிப்பதால், இறைத் தூதர்களும் அவ்வாறு உண்மைக்குப் புறம்பாக நடந்திருப்பார்கள் என்ற தவறான எண்ணத்தில் நாஸ்திகர்கள் இருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

எனவே மனிதன் தனது புலன்களைக் கொண்டு மட்டும் அறிந்து கொள்வது நிறைவான பகுத்தறிவல்ல. இறைவனையும், மறுமையையும் தெளிவாக அறிந்த இறைவனோடு நேரடித் தொடர்பில் இருந்த இறுதித் தூதரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் புலன்களைப் பயன்படுத்தி அறியும் அறிவே முழுமையான பகுத்தறிவாகும். இந்தப் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தும் எந்த மனிதனும் இறைவனையோ, மறுமையையோ இறுதித் தூதரையோ மறுக்க ஒருபோதும் முற்படமாட்டான். அடுத்து நாஸ்திகர்கள் இறைவனையும், மறுமையையும் மறுத்துக் கூற பிரதான காரணம் என்ன? அவர்கள் எண்ணப்படி காரியம் நிறைவேறியதா? என்பதை பார்ப்போம். (வளரும்)

*********************************************************************************************************************************************************************************

தக்லீதின் பெயரால்……

பிப்ரவரி 1988 இதழில் முகல்லிதுகள் தங்கள் பொய்க் கொள்கையை நிலைநாட்ட குர்ஆன் 4:115 வசனத்தை எவ்வாறு திரித்துக் கூறுகிறார்கள் என்று பார்த்தோம். இந்த இதழில் “நீங்கள் அறியாதிருந்தால் திக்ரை உடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” என்ற வசனத்தை எவ்வாறு திரித்துக் கூறுகிறார்கள். அதன் உண்மைப் பொருளென்ன? என்று பார்ப்போம்ட. முதலில் அந்த இறைவசனத்தை முழுமையாகத் தருகிறோம். (நபியே!) உமக்கு முன்னர் வஹி கொடுத்து, நாம் அவர்களிடம் அனுப்பியதைத் தூதர்களெல்லாரும் ஆண்களே தாம் ஆகவே “நீங்கள் அறியாதிருந்தால் திக்ரை (வேதங்கள்) உடையவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (16:43, 21:7)

இந்த வசனங்களை வைத்து ஆலிம் என்று சொல்லிக் கொள்ளும் வர்க்கத்தாரிடம் கேட்டுத்தான் மார்க்கத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்றோ? அவர்கள் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் அப்படியே எவ்வித மறுப்பும் இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றோ, தக்லீது செய்ய வேண்டுமென்றோ பொருள் கொள்ள முடியுமா? என்று நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள். இந்த முல்லாக்கள் சொல்லும் எந்தக் கருத்தையும் இந்த இறை வசனங்களிலிருந்து பெறமுடியாது. தூதர்களாக அனுப்பப்பட்டவர்கள் ஆண்களே என்ற விஷயத்தை அறியாதிருந்தால் திக்ரை உடையவர்களிடம் – அதாவது வேதத்தை உடையவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். என்று தான் அல்லாஹ் சொல்கிறான்.

இந்த இறைவசனங்களிலிருந்து ஓர் உண்மை தெளிாகத் தெரிகின்றது. அதாவது நபிமார்கள் அனுப்பப்பட்டது. நடந்து முடிந்துபோன சரித்திர உண்மைகள்,அவர்கள் அனைவரும் ஆண்களாக இருந்ததும் சரித்திர உண்மைகள், இவை எந்த அல்லாமாவினுடைய கற்பனையிலோ, யூகத்திலோ ஒருபோதும் வரமுடியாது. இஜ்மா, கியாஸ் மூலம் முடிவு செய்யவும் முடியாது. தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சரித்திர சான்றுகள் மட்டுமே ஆதாரமாக இருக்கமுடியும். சரித்திர சான்றுகளுக்கு இறைவனால் இறக்கப்பட்ட வேதங்களை விட மிக உறுதியானவை வேறு எதுவும் இருக்க முடியாது. எனவே உண்மை நிலைகளை உள்ளது உள்ளபடி அறிந்துகொள்ள விரும்பினால் வேதங்களைப் பாருங்கள் வேதங்களில் உள்ளவற்றை திரிக்காமல், கூட்டாமல், குறைக்காமல் சொல்லுபவர்களிடம் கேளுங்கள் என்று தான் பொருள் கொள்ள முடியும்.

எனவே இவர்கள் கூற்றுப்படியே ஆலிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் இவர்களிடம் மார்க்கம் கேட்டால், இவர்கள் அதற்கு குர்ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் எடுத்து கொடுத்து தெளிவுபடுத்த வேண்டுமேயல்லாமல், இவர்களின் கற்பனை கட்டுக்கதைகளை ஒருபோதும் சொல்லக்கூடாது. இதற்கு மாற்றமாகச் செயல்படுகிறவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளாவார்கள் என்றே கீழ்காணும் இறை வசனம் தெளிவுபடுத்துகிறது. “நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும்-யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கிறார்கள்” (2:159)

கணக்குத் தெரியாத பையனை தகப்பனார் கணக்கு வாத்தியாரிடம் கேட்டுத் தெரிந்துகொள் என்று அனுப்பி வைக்கிறார். கணக்கு வாத்தியார் என்ன செய்யவேண்டும்? அந்தக் கணக்கின் ஆரம்பத்திலிருந்து இறுதி விடை வரை செயல்முறைகளோடு, அந்த மாணவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதல்லாமல் செயல்முறைகளைக் கற்றுக் கொடுக்காமல் இறுதியில் வரும் விடையை மட்டும் (அது சரியான விடையாக இருந்தாலும்ட) சொல்லிக் கொடுப்பதை யாருமே கணக்கைக் கற்றுக்கொடுத்ததாகச் சொல்லமாட்டார்கள். இந்த நிலையில் அவர் சரியான விடைக்குப் பதிலாக தவறான விடையைச் சொல்லிக்கொடுத்து அனுப்பினால், அவரை ஒரு பெரும் மோசடிக்காரர், கணக்கே தெரியாத அறிவிலி என்றுதான் கணக்கைப் பற்றித் தெரிந்தவர்கள் சொல்வார்கள். குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரணானவற்றை மார்க்கமாக மக்களுக்குப் போதிக்கும் இந்த முகல்லிது முல்லாக்கள், இந்த அறிவிலியான கணக்கு வாத்தியாரை விட மட்டரக மாணவர்களாகத்தான் இருக்க முடியும்.

உண்மை மார்க்கத்திற்கு முரணான, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான காரியங்களை மக்களிடம் “மார்க்கமாகச் சொல்லி, மக்களை ஏமாற்றத்தான் இவர்கள் இந்த தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆக இந்த 16:43, 21:7 வசனங்களில் இடம்பெறும் “நீங்கள் அறியாதிருந்தால் திக்ரை உடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” என்ற பகுதி தக்லீதை முற்றிலுமாக மறுக்கின்றதே அல்லாமல் தக்லீதுக்குத் துணை போகவில்லை. (இன்ஷா அல்லாஹ் வரும்)

*********************************************************************************************************************************************************************************

நபி வழியில் நம் தொழுகை – தொடர்-19    அபூ அப்துர் ரஹ்மான்

நபியே! சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும், உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), (புகாரி, முஸ்லிம்)

சென்ற ஜூன் 1988 இதழில் தொழும்போது பார்வை எங்கிருக்க வேண்டும். தொழுகைகளில் ஒருவர் தமது இமாமைப் பார்ப்பது தவறாகாது. சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவதற்கு முன் “அஊது” ஓதுவது சுன்னத்து, சப்தமின்றி மெதுவாக “பிஸ்மில்லாஹ்” ஓதுவது ஆகிய விபரங்களைக் கண்டோம். இன்ஷா அல்லாஹ், இவ்விதழில் “சப்தமிட்டு பிஸ்மில்லாஹ்” ஓத வேண்டும் என்பதற்கான அறிவிப்புகளின் நிலை, “சூரத்துல் ஃபாத்திஹா” ஓதுவதன் அவசியம். சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதத் தெரியாதவர் அதை ஓதக் கற்றுக்கொள்ளும் வரை எதை ஓத வேண்டும்? சூரத்துல் ஃபாத்திஹா உட்பட எந்த சூராவையும்ட ஓதத் தெரியாதவர் என்ன செய்யவேண்டும்? நபி(ஸல்) எந்த தொழுகையில் எந்த ரகா அத்துகளில் வேறு சூராவை இணைத்து ஓதினார்கள்? எந்த ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் ஓதினார்கள். பொதுவாக எத்தொழுகைகளில் எந்த சூராக்களை ஓதினார்கள் ஆகிய விபரங்களைக் காண்போம்.

சப்தமிட்டு “பிஸ்மில்லாஹ்” ஓதவேண்டும் என்பதற்கான அறிவிப்புகளின் நிலை:

1. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் தொழுகையை “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதைக் கொண்டே துவங்குவார்கள். (திர்மிதீ). இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீலுபின் ஹம்மாது என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் அல்லர் என்பதாக இமாம் “திர்மிதீ” அவர்களே கூறியுள்ளார்கள். இவ்வாறே பிரச்சனைக்குரிய இவர், ஹதீஸ் கலாவல்லுநர்களில் எவருக்கும் அறிமுகமில்லாததோர் நபராகும் என்று இமாம் இப்னுஹஜர்(ரஹ்) அவர்கள் இவர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

2. அனஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

ஒருமுறை முஆவியா(ரழி) அவர்கள் மக்களுக்குத் தொழவைத்தார்கள். அப்போது கிராஅத்தை சப்தமிட்டு ஓதினார்கள். ஆனால் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பதை (சப்தமிட்டு) ஓதவில்லை. அவ்வாறே அவர்கள் தாம் குனியும்போதும், நிமிரும்போதும் தக்பீரையும் (சப்தமிட்டுக்) கூறவில்லை. அவர்கள் தொழவைத்து முடித்தவுடன் “முஹாஜிரீன்” களும், “அன்ஸார்”களும்ட அவர்களை அழைத்து “மூஆவியா” அவர்களே! “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” எங்கே? குனியும்போதும், நிமிரும்போதும் கூறப்படும் தக்பீர் எங்கே? என்று அவர்களைப் பார்த்து கேட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் தாம் தொழ வைக்கும்போது “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று (சப்தமிட்டு) கூறுவதோடு, தக்பீரையும் (சப்தமிட்டுக்) கூறிக்கொண்டிருந்தார்கள். (ஹாக்கிம், முஸ்னத்ஷாபியீ) மேற்காணும் இவ்வறிவிப்பை இமாம் ஜைலயீ என்னும் ஹதீஸ் கலாவல்லுநர் இதன் தொடரில் “அப்துல்லாஹ்பின் உஸ்மானு பின் குஸைம் என்ற நம்பகமற்ற ஒருவர் இடம் பெற்றிருப்பதன் காரணமாக இது லயீஃபான – பலகீனமான அறிவிப்பு என்று கூறியுள்ளார்.

3) இப்னுஉமர்(ரழி) அவர்களைப் பற்றி நாஃபிஉ(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இப்னு உமர்(ரழி) அவர்கள் உம்முல்குர்ஆனு(சூரத்துல் ஃபாத்திஹா)க்கும், அதன் பின் ஓதப்படும் சூராவுக்கும் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று தாம் (சப்தமிட்டு) ஓதுவதை (ஒருபோதும்) விடாதவர்களாக இருந்து கொண்டிருந்தார்கள். (முஸ்னத் ஷாபியீ) இவ்வறிவிப்பின் தொடரில் இடம்பெற்றுள்ள “இப்னு ஜுரைஹ்” என்பவர் தமக்கு இவ்விஷயத்தை அறிவித்தவர் யார் என்பது பற்றி அவரது பெயரைத் தெளிவாக எடுத்துக் கூறாது. “எனக்கு ஒருவர் கூறினார்” என்று மறைமுகமாகக் கூறியுள்ளார். ஆகவே இவ்வறிவிப்பும் முறையானது அல்ல என்று ஹதீஸ்கலா வல்லுநர்கள் கூறுகிறார்கள். (ஷரஹுஸ்ஸுன்னா, பாகம் 3, பக்கம் 57)

4. இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்புறமாகவும், இவ்வாறே அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) ஆகியவர்களுக்குப் பின்புறமாகவும் நின்று தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று சப்தமிட்டு ஓதிக்கொண்டிருந்தார்கள். (தாரகுத்னீ)இவ்வறிவிப்பின் தொடரில் அபூதாஹிர் அஹ்மது பின் ஈஸா என்பவர் இடம்பெற்றுள்ளார். அவர் நம்பகமற்றவர் என்று ஹாபிழ் இப்னுஹஜர்(ரஹ்) அவர்களும், இம்மனிதர் மிக மோசமான பொய்யர் என்பதாக இமாம் ஹாக்கிம்(ரஹ்) அவர்களும் கூறியுள்ளார்கள்.

5. இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (சூரத்துல் ஃபாத்திஹா மேலும் அத்துடன் ஓதப்படும் மற்ற சூரா ஆகிய) இரு சூராக்களிலும் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று சப்தமிட்டு ஓதியவர்களாகவே இருந்தார்கள். (தாரகுத்னீ) மேற்காணும் இவ்வறிவிப்பின் வரிசையில் “உமருபின் ஹஃப்ஸுல்மக்கீ” என்னும் நம்பகமற்றவர் இடம்பெற்றுள்ளார். ஆகவே இதுவும் பலஹீனமான அறிவிப்பாகும். ஆகவே, “பிஸ்மில்லாஹ்”வை சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதற்கான ஹதீஸ்கள் அனைத்தும் பலஹீனமானவையாகவே இருக்கின்றன என்பதை உணர்கிறோம்.

இமாமும் அவரைப் பின்பற்றி தொழுபவரும், தனித்து தொழுபவரும், தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் “சூரத்துல் ஃபாத்திஹா” ஓதுவதன் அவசியம்:

1. உப்பாத்தது பின் ஸாமித்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல் கிதாபு (சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதாதவருக்கு தொழுகை கிடையாது. (புகரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

2. அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உம்முல் குர்ஆனை (சூரத்துல் ஃபாத்திஹாவை) (மற்றொரு அறிவிப்பில் ஃபாத்திஹத்துல் கிதாபுவை என்று பதிவு செய்யப்பட்டுள்ளது? ஓதாது தொழுபவரின் தொழுகை குறைபாடுள்ளதாகும். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

3. அபூஹுரைரா(ரழி) அறிவத்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபாத்திஹத்துல் கிதாபு(சூரத்துல் ஃபாத்திஹா)வை ஓதப்படாத எத்தொழுகையும் முழுமை பெறுவதில்லை. (இப்னு குஜைமா, இப்னுஹிப்பான், அபூஹாத்திம், தாரகுத்னீ)

4. அபூகதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் ஃபாத்திஹத்துல் கிதாபு(சூரத்துல் ஃபாத்திஹா(வை ஓதிக் கொண்டிருந்தார்கள். (புகாரீ) தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது பர்லு கட்டாயக்கடமை என்பதற்காக  ஆதாரங்கள் ஸஹீஹான பல ஹதீஸ்களிலும் காணப்படுவதால், இவ்விஷயத்தில் மாற்றுக்கருத்துக்கு அறவே இடம்ாடு கிடையாது. மேலும் நபி(ஸல்) அவர்கள் தமது பர்லு, சுன்னத்து போன்ற அனைத்து தொழுகைகளின் ரகாஅத்துகளிலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி வந்துள்ளார்கள்.இதற்கு மாறாக எப்பொழுதும் வேறு எதையும் ஓதியதாக ஹதீஸ்களில் ஆதாரமில்லை. எனவே, வணக்க வழிபாடு என்பது நபி(ஸல்) அவர்கள் எந்த அமலை எவ்வாறு செய்து வந்தார்களோ, அந்த அமலை அவ்வாறே செய்வதுதானே அன்றி, அதில் நமது யூகங்களுக்கு சிறிதும் இடமில்லை.

சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதத் தெரியாதவர் அதை ஓதக் கற்றுக் கொள்ளும் வரை எதை ஓதவேண்டும்?

அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள.: நபி(ஸல.) அவர்கள் தமது பர்லு, சுன்னத்து போன்ற அனைத்து தொழுகைகளின் ரகாஅத்துகளிலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி வந்துள்ளார்கள். இதற்கு மாறாக எப்பொழுதும் வேறு எதையும் ஓதியதாக ஹதீஸ்களில் ஆதாரமில்லை. எனவே, வணக்க வழிபாடு என்பது நபி(ஸல்) அவர்கள் எந்த அமலை எவ்வாறு செய்து வந்தார்களோ, அந்த அமலை அவ்வாறே செய்வதுதானே அன்றி, அதில் நமது யூகங்களுக்கு சிறிதும் இடம் இல்லை. சூரத்தல் ஃபாத்திஹாவை ஓதத் தெரியாதவர் அதை ஓதக் கற்றுக் கொள்ளும் வரை எதை ஓத வேண்டும்?

அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்”

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்தார்கள். அப்போது ஒருவர் பள்ளியில் நுழைந்து தாம் தொழுதுவிட்டு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு “ஸலாம்” கூறினார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதில் அளித்துவிட்டு (அவரை நோக்கி) மீண்டும் நீர் தொழுவீராக!” நிச்சயமாக நீர் தொழவில்லை” என்று கூறினார்கள். மீண்டும் அவர் முன்பு நாம் தொழுதது போன்றே தொழுதுவிட்டு, பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (அவரை நோக்கி) மீண்டும் நீர் தொழுவீராக! நிச்சயமாக நீர் தொழவில்லை என்றார்கள். இவ்வாறு மும்முறை செய்தார்கள்.

அப்போது அம்மனிதர் சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பி வைத்துள்ளவனின் மீது ஆணையாக இதைவிட அழகாக தொழ என்னால் இயலாது என்று கூறிவிட்டு (முறையான தொழுகையை) எனக்குக் கற்றுத் தாருங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீர் தொழுகைக்காக எழுந்தால்” (முதலில்) “அல்லாஹு அக்பர் என்று கூறிவிட்டு, பின்னர் குர்ஆனிலிருந்து உனக்கு இயலுமானவற்றை ஓதுவீராக! பின்னர் உமக்கு (அவசரமின்றி) நிம்மதி ஏற்படும் வகையில் ருகூஉ செய்வீராக! பின்னர் நீர் ஒழுங்காக நிற்கும் வரை நிமிர்ந்து நிற்பீராக! பின்னர்(அரைகுறையின்றி) நீர் நிம்மதியாக சுஜூது செய்யும் வகையில் சுஜூது செய்வீராக! பின்னர் இவ்வாறே உமது தொழுகை அனைத்திலும் இம்முறையைக் கடைப்பிடித்து நடந்து கொள்வீராக என்றார்கள். (முஸ்லிம்) மேற்காணும் ஹதீஸில் “சூரத்துல் ஃபாத்திஹா ஓதத் தெரியாதவர் குர்ஆனிலிருந்து தமக்கு ஓதத் தெரிந்த எந்த சூராவையோ, அல்லது வேறு எந்த ஆயத்துக்களையும் ஓதிக் கொள்வது ஆகும் என்பதை அறிகிறோம். குர்ஆனிலிருந்து “சூரத்துல்ஃபாத்திஹா” உட்பட வேறு எதையுமே ஓதத் தெரியாதவர் என்ன செய்ய வேண்டும்?

ரிஃபா அத்துபின் ராஃபிஉ(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஒருவருக்கு தொழுகையைக் கற்றுக்கொடுத்தார்கள். அப்போது(அவரை நோக்கி) உன்னிடம் குர்ஆன் (ஞானம்) இருந்தால் அதை ஓதுவீராக! இல்லையேல் “அல்ஹம்துலில்லாஹ்” “அல்லாஹு அக்பர்” “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று ஓதிவிட்டு ருகூஉ செய்வீராக! என்று கூறினார்கள். (அபூதாவுர், திர்மதீ, நஸயீ, பைஹகீ)

சூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு சூராவை இணைத்து ஓதுவது விஷேசமே தவிர கட்டாயம் அல்ல.

அதாவு(ரழி) அறிவித்துள்ளார்கள்:

அபூஹுரைரா(ரழி) கூறினார்கள். ஒவ்வொரு தொழுகையிலும் (குர்ஆனை) ஓதியாக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் எதை எங்களுக்கு கேட்கும்படி ஓதினார்களோ, நாங்களும் அதை உங்களுக்கு கேட்கும்படி ஓதுகிறோம்.  எதை அவர்கள் எங்களுக்கு முறைக்கோதினார்களோ அதை அவ்வாறே உங்களுக்கு மறைத்தோதுகிறோம். ஒருவர் உம்முல் கிதாபுவை (சூரத்துல் ஃபாத்திஹாவை) ஓதிவிட்டால் அதுவே அவருக்கு போதுமானதாகும். ஒருவர் அதைவிட அதிகமாக ஓதினான் (அது) மிகவும் விசேஷமாகும். (முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் எந்த தொழுகையில் எந்த ரகாஅத்துகளில் வேறு சூராவை இணைத்து ஓதினார்கள்? எந்த ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் ஓதினார்கள்?

அபூகதாதா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ளுஹ்ரு தொழுகையில் முந்தைய இரு ரகாஅத்துகளிலும் உம்முல்கிதாபு(சூரத்துல் ஃபாத்திஹா)வையும், வேறு இரு சூராக்களையும் ஓதிவந்தார்கள். பிந்தைய இரு ரகாஅத்துகளிலும் உம்முல்கிதாபு(சூரத்துல் ஃபாத்திஹா)வை (மட்டும்) ஓதினார்கள். சில சமயங்களில் தாம் ஓதும் ஆயத்தை எங்களுக்கு கேட்கும்படி ஓதுவார்கள். இரண்டாம் ரகாஅத்தைப் பார்க்கினும், முதலாம் ரகாஅத்தில் நீட்டி ஓதுவார்கள். இவ்வாறே அஸ்ரிலும், ஸுப்ஹுவிலும் செய்வார்கள். (புகாரீ, முஸ்லிம்) மேற்காணும் ஹதீஸில் பர்லு தொழுகைகளில் மட்டும் பிந்தைய இரு ரகாஅத்துகளில் சூரத்துல் ஃபாத்திஹாவை மட்டும் ஓதினார்கள் என்பதை அறிகிறோம்ட. ஆனால் பர்லு அல்லாத சுன்னத்து போன்ற தொழுகைகளை தொழும்போது இரண்டுக்கு மேற்பட்ட ரகாஅத்துகளிலும் சூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு சூராவை இணைத்து ஓதியுள்ளார்கள்.

அப்துல் அஜீஸ் பின் ஜுரைஹ்(ரஹ்) அறிவித்துள்ளார்கள்:

நாங்கள் அன்னை அயிஷா(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் எதை ஓதி வித்ரு தொழுவார்கள் என்று கேட்டோம். அதற்கவர்கள் முதலாம் ரகாஅத்தில் “ஸப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா”வையும். இரண்டாம் ரகாஅத்தில் “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” என்பதையும், மூன்றாம் ரகாஅத்தில் “குல்ஹுவல்லாஹு அஹத்” என்பதையும் “முஅவ்வித்தைன்” (குல்அஊது பிரப்பில பலக், ருல்அஊது பிரப்பின்னாஸ்) ஆகிய சூராக்களையும் ஓதிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள். (இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்கள் உபைபின் கஃபு வாயிலாகவும், இமாம் தாரமீ”(ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் வாயிலாகவும் மேற்காணும் ஹதீஸை மேற்கண்டவாறே அறிவித்துள்ளார்கள். ஆனால் அவ்விருவரும் மூன்றாம் ரகாஅத்தில் “குல்ஹுவல்லாஹூ அஹத்” ஓதினார் என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள். மேலும் அத்துடன் “குல்அஊது பிரப்பில் பலக்”, குல்அஊது பிரப்பின்னாஸ்” என்ற சூராக்களையும் ஓதினார்கள் என்று கூறவில்லை. ஆகவே மேற்காணும் ஹதீஸில் இரண்டிற்கு அதிகமான பர்லு அல்லாத தொழுகையில் மூன்றாம் ரகாஅத்திலும், சூரத்துல் ஃபாத்திஹாவுடன் வேறு சூராவை இணைத்து ஓதியிருப்பதைக் காணுகிறோம். நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் ஃபஜ்ரில் எந்த சூராக்களை ஓதிவந்தார்கள்?

அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தின் ஃபஜ்ரு தொழுகையில் “அலிஃப் லாம் மீம் தன்ஜீல்” எனும் சூராவை முதலாம் ரகாஅத்திலும் “ஹல்அத்தா அவல் இன்ஸான்” எனும் சூராவை இரண்டாம் ரகாஅத்திலும் ஓதிவந்தார்கள். (புகாரீ, முஸ்லிம்) ஜும்ஆ தொழுகையிலும், இருபெருநாள் தொழுகைகளிலும் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த சூராக்கள் யாவை?

நுஃமானுபின் பஷீர்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும்ட, ஜும்ஆவிலும் ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலாவையும், ஹல்அத்தாக்க ஹதீஸுக்காஷியாவையும் ஓதி வந்தார்கள். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் சேர்ந்து வந்த போதும் இவ்விரண்டு சூராக்களையே இரு தொழுகைகளிலும் ஓதினார்கள். பஜ்ரு, மஃரிபு தொழுகைகளின் சுன்னத்துகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்கள்:

அப்துல்லாஹ்பின் மஸ்ஊத்(ரழி) அறிவித்துள்ளார்கள்”

நபி(ஸல்) அவர்கள் மஃரிபுக்குப் பின்னுள்ள இரு ரகாஅத்துகளிலும் பஜ்ருக்கு முன்னுள்ள இரு ரகாஅத்துகளிலும் (முதலாம் ரகாஅத்தில்) “குல்யா அய்யுஹல் காஃபிரூன்” எனும் சூராவையும் (இரண்டாம் ரகாஅத்தில்) “குல்ஹுவல்லாஹு அஹத்” எனும் சூராவையும் அவர்கள் ஓதி, நான் செவியுற்றதை என்னால் கணக்கிட இயலாது. (திர்மிதீ)

ளுஹ்ரு, அஸ்ரு, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளில் நபி(ஸல்) அவர்களின் கிராஅத்தின் நிலை:

ஜாபிரூபின் ஸமுரா(ரழி), அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் லுஹரில் “வல்லைலி இதாயக்ஷா”வையும் அஸ்ரில் அதைப் போன்றதையும் ஸுப்ஹில் அதைவித விட நீளமுள்ளதையும் ஓதிக்கொண்டிருந்தார்கள். (முஸ்லிம்)

மஃரிபு, இஷா ஆகியவற்றில் அவர்களின் கிராஅத்:

உம்முல் ஃபழ்லுபின்துல்ஹாரிஸ்(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் மஃரிபில் “வல்முர்ஸலாத் உரூஃபன்” எனும் சூராவை ஓத நான் கேட்டேன். (புகாரீ, முஸ்லிம்)

பர்ராஉ(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் இஷாவில் “வத்தீனி வஜ்ஜைத்தூனி” எனும் சூராவை ஓத நான் கேட்டேன். அவர்களைப் பார்க்கினும் அழகிய தொணியுடைய எவரையும் நான் கேட்டதில்லை. (புகாரீ, முஸ்லிம்)

முழுமையான சூராவிற்கு ஒரு சில ஆயத்துகளை மட்டும் ஓதுதல்:

இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் பஜ்ருடைய இரு ரகாஅத்துகளில் (சூரத்துல் பகராவின் ஆயத்துகளில்) “கூலூஆமன்னா பில்லாஹிவமா உன்ஜில இலைனா” என்பதையும், ஆலஇம்ரானிலுள்ள “குல்யா அஹ்லல் கிதாபிதஆலவ் இலாகலிமத்தின் ஸவாஇன் பைனனா வபைனக்கும்” என்ற ஆயத்தையும் ஓதினார்கள்.

முதல் ரகாஅத்தில் ஓதிய சூராவை மீண்டும் இரண்டாம் ரகாஅத்தில் ஓதுவதன் நிலை:

முஆதுபின் அப்தில்லாஹில் ஜுஹ்னீ(ரழி) அவர்கள் தமக்கு ஜுஹைனா குடும்பத்தாரைச் சார்ந்த ஒருவர் பின்வருமாறு அறிவித்ததாகக் கூறியுள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் “இதாஜுல்ஜிலாத்(திர் அர்ளு)” எனும் சூராவை ஸுப்ஹுடைய இரு ரகாஅத்களிலும் ஓத நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் மறந்துவிட்டார்களா? அல்லது வேண்டும் என்றே செய்தார்களா? என்பதை நான் அறியேன். (அபூதாவூத்)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

*********************************************************************************************************************************************************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு – தொடர் -18 – அபூ அஸ்மா

ஹதீஸ்கலையின் வரலாறு, மற்றும் அது சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் அனைத்தையும் விபரமாக அறிந்துகொள்வதற்கு கீழ்க்காணும் நூற்கள் தன்னிறைவு கொண்டவைகளாகத் திகழ்கின்றன.

1. “முகத்திமாஃபத்ஹுல் பாரீ”

ஆசிரியர் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ(ரஹ்) அவர்கள் (பிறப்பு ஹிஜ்ரி 773; மறைவு : 852)

2. “ஜாமிஉ பயானில் இல்மிவ அஹ்லிஹீ”

ஆசிரியர் ஹாபிழ் இப்னு அப்துல்பர்ரு உத்துலூஸீ(ரஹ்) அவர்கள் (மறைவு ஹிஜ்ரி : 463)

3. “மஃரிஃபத்து உலூமில் ஹதீஸ்”

ஆசிரியர் இமாம் ஹாக்கிம்(ரஹ்) (மறைவு ஹிஜ்ரி : 405)

4. “முகத் திமாதுஹ்ஃபத்துல் அஹ்வதீ”

ஆசிரியர் அப்துர்ரஹ்மான் சாஹிபு முஹத்திஸ் முபாரக்பூர். (மறைவு ஹிஜ்ரி 1353, சரியாக ஈசவி 1935) சமீப கால நூற்களில் இந்நூல் தன்னிறைவுக் கொண்டதாகத் திகழ்கிறது.

5. “முகத்திமா ஃபத்ஹுல் முல்ஹிம்”

தொகுப்பாசிரியர் ஷப்பீர் அஹ்மத் உஸ்மானீ (ரஹ்)

6. “தத்வீனே ஹதீஸ்” (உருதுமொழி) :

ஆசிரியர் மனாஜிர் அஹ்ஸன் கைலானீ, இந்நூல் மிக விரிவான அறிவின் புதையலாக விளங்குகிறது. மூன்றாம் காலகட்டத்தில், சிறப்புமிகு பிரபல ஹதீஸ் சேகரிப்பாளர்களும், மற்றும் நம்பகமான சில தொகுப்புகளின் சிறப்புகளும் பின்வருமாறு:

1. இமாம் அஹ்மதுபின் ஹம்பல்(ரஹ்) (பிறப்பு : ஹிஜ்ரி 164 மறைவு: 241)

இமாம் அவர்களின் மிக முக்கியமானத் தொகுப்பு “முஸ்னத் அஹ்மத்” எனும் பெயரால் பிரசித்தி பெற்றுள்ளது. இது 24 பாகங்களாக அமைக்கப்பட்ட, 30,000 ஹதீஸ்களைக் கொண்டுள்ளதோர் அழகிய தொகுப்பாகும். குறிப்பிடத்தக்க அனைத்து ஹதீஸ்களும் ஒட்டுமொத்தமாக இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஹதீஸ்கள் முறைப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஸஹாபா பெருமக்களின் ஒவ்வொரு ஸஹாபியின் அறிவிப்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஓர்  இடத்தில் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நூலுக்கு பல தலைப்புகள் அமைத்து சிறப்பாக முறைப்படுத்தும் பணியை “ஷஹீத் ஹஸனுல் பன்னா” அவர்களின் தந்தை “அஹ்மத் அப்துர் ரஹ்மான் ஸாஅத்தீ” அவர்களால் துவக்கப்பட்டது. அக்காலத்திலேயே அதில் 14 பாகங்கள் வெளிவந்துவிட்டன. மேலும் எகிப்திய பிரபல அறிஞர் “அஹ்மத் ஷாக்கிர்” எனபவரும் இதன் தொடரில் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆகவே, இப்பொழுது இந்நூலின் அனைத்துப் பாகங்களும் வெளிவந்துவிட்டன.

2. இமாம் முஹம்மது பின் இஸ்மாயீலுல் புகாரீ(ரஹ்)

இவர்கள் “புகாரா” எனும் ஊரில் ஹிஜ்ரி 194-ல் பிறந்தார்கள். தமது சிறு பிராயத்திலேயே தந்தையை இழந்து “யத்தீம்” – அநாதையாகி விட்டார்கள். தமது ஊரிலேயே இருந்துகொண்டு சிறுவயதிலேயே குர்ஆனை மனனம் செய்துவிட்டு, லட்சக்கணக்கில் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களையும் தாம் பருவ வயதை அடையும் முன்பே மனனம் செய்துகொண்டார்கள். இமாம் அவர்களின் பாட்டனாரின் பெயர் “இப்ராஹீமு பின் முகீரத்துல் ஜுஃபீ இவர் ஏற்கனவே நெருப்பை பூஜிக்கும் “மஜூஸி”யாக இருந்து, பின்னர் இஸ்லாத்தைத் தழுவி சிறந்ததொரு முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். இமாம் அவர்களின் தந்தையின் பெயர் “இஸ்மாயீல்” என்பதாகும். இவர்கள் மிகவும் இறையச்சம் “தக்வா” உள்ளவர்களாக இருந்தமையால் தமது மரண தருவாயில் தமது குடும்பத்தவரை நோக்கி, எனது சொத்தில் ஒரு “திர்ஹம்”(வெள்ளிக்காசு) கூட ஹராமானதாகவோ, அல்லது ஹலால் என்பதற்கு சந்தேகமானதாவோ கிடையாது என்று கூறியுள்ளார்கள். இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள்் தமது சிறு வயதில் அநாதையாக தாயின் பராமரிப்பில் இருந்து கொண்டிருக்கும்போது திடீரென்று இமாம் அவர்களுக்கு கண்ணில் கோளாறு ஏற்பட்டு பார்வை இல்லாது போய்விட்டது. மகனுக்கு இந்நிலை ஏற்பட்டு விட்டதே என்று இரவுப் பகலாக அல்லாஹ்விடம் அழுதழுது இமாம அவர்களின் தாயார் துஆ கேட்டதன் பயனாக மீண்டும் பார்வை கிட்டும் பாக்கியம் அடைந்தார்கள். இமாம் அவர்களுக்கு அஹ்மதுபின் இஸ்மாயீல் எனும் பெயரில் ஒரு அண்ணனும் இருந்திருக்கிறார்.

இமாம் அவர்கள் தமது 17 வயதில் தன் தாயார், அண்ணன் ஆகியவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்று, அதை நிறைவு செய்தபின் அவ்விருவரையும் ஊருக்கு அனுப்பிவிட்டு மக்காவிலேயே ஹதீஸ் கலையினைக் கற்பதற்காக தங்கி விட்டார்கள். குராஸான், ஈராக், ஹிஜாஸ், எகிப்து, சிரியா, பஸரா, கூஃபா, பக்தாத், நைஸாப்பூர் முதலிய நாடுகளுக்கு கல்வியைத் தேடி பயணம் செய்துள்ளார்கள். இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் ஒரு முறை இமாம் மாலிக்(ரஹ்) உடையவும், தமது ஆசிரியர் “ராஹவைஹி”யுடையவும் ஹதீஸ் தொகுப்புகளைப் பார்த்துவிட்டு அவற்றிலும் ஒரு சில லயீஃபான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதை உணர்ந்து முழுமையாக ஸஹீஹான ஹதீஸ்களைக் கொண்டதோர் தொகுப்பைத் தாம் தொகுத்து, அவசியம் மக்களுக்கு வெளியிட வேண்டுமென்று தமக்குள் முடிவு செய்து கொண்டார்கள். இமாம் அவர்களுக்கு ஸஹீஹான ஹதீஸ்களைத் தேடி அவற்றை ஒன்றுதிரட்டவேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருப்பதைத உணர்ந்த அவர்களின் ஆசிரியர் “ராஹவைஹி” அவர்கள், இமாம் அவர்களைப் பார்த்து ஸஹீஹான ஹதீஸ்களின் மீது நீர் கொண்டிருக்கும் மோகத்தைப் பார்த்தால் நீரே தனியாக நபி(ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களின் மாபெரும் தொகுப்பொன்றைத் தொகுத்து வெளியிட்டுவிடுவீர் போலத் தெரிகிறதே என்றார்கள். இவ்வாறு தமது ஆசிரியர் தம்மைப் பற்றி கூறிய ஆர்வமூட்டும் வார்த்தைகளே நான் “ஸஹீஹுல் புகாரீ” தொகுப்பதற்கு மூலக் காரணமாக விளங்கியது என்று இமாம் அவர்களே கூறியுள்ளார்கள்.

“ஸஹீஹுல் புகாரீ”யில் மொத்தம் 7275 ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவை 6,00,000 அறிவிப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவையாகும். இவற்றில் மீண்டும், மீண்டும் வரும் அறிவிப்புகள் நீங்கலாக உள்ளவை 4000 ஹதீஸ்கள்தான். இவற்றில் 110 ஹதீஸ்கள் மட்டும் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் ஒருசில கோளாறுகளை அடிப்படையாக கொண்டு லயீஃபானவை-பலஹீனமானவை என்றும், ஆகவே, இந்த 110 லயீஃபான அறிவிப்புகள் நீங்குதலாக மற்ற ஸஹீஹான ஹதீஸ்கள் அனைத்தையும் கொண்டு அமல் செய்வது முஸ்லிம் சமுதாயத்தின் மீது அவசிய கடமையாகும் என்று ஹதீஸ் கலாவல்லுநர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (நுர்பத்துல் ஃபிக்ரு பக்கம் : 19,20,30).

இமாம் அவர்கள் தமது 18வது வயதில் “ஸஹீஹுல் புகாரீ”யைத் தொகுக்கத் துவக்கி சற்றேறக்குறைய 18 ஆண்டுகளில் நிறைவு செய்தார்கள். இமாம் அவர்களுக்கு “ஸஹீஹுல்புகாரீ” அல்லாத வேறு அநேகத் தொகுப்புகளும் இருந்திருக்கின்றன. அவை யாவன: 1. “அல்அதபுல் முஃப்ரத்” 2.”ரஃப்உல்யதைனிஃபிஸ்ஸலாத்” 3.”அல்கிராஅத்து கல்ஃபல் இமாம்” 4.”பிர்ருல்வாலிதைன்” 5.”தாரீக்கபீர்” 6.”தாரீக் அவ்ஸத்” 7.”தாரீகுஸ்ஸகீர் ஃபிரிஜாவில் ஹதீஸ்” 8.”குலுகுல்இபாத்” 9.”கிதாபுல் ழு அஃபாஃ” 10.”அல்ஜாமி உல் கபீர்” 11.”அல்முஸ்னதுல் கபீர்” 12.அத்தஃப்ஸீருல் கபீர் 13.”கிதாபுல் அஷ்ரிபா” 14.”அல்ஹிபத்” 15.”அஸாமிஸ்ஸஹாபா” 16.”கிதாபுல் வுஹ்தான்” 17.”கிதாபுல் மப்ஸூத்” 18.”கிதாபுல் இலல்” 19.”அல்குஹ்னா” 20.கிதாபுல் ஃபுஆத்” 21.”அல்ஹதீஸுந்நபவீ” 22.”ஸுலாஸிய்யாத்துல் புகாரீ” முதலியனவாகும்.

இமாம் புகாரீ(ரஹ்) அவர்களிடம் நேர்முகமாக “ஸஹீஹுல் புகாரீ” படித்த மாணவர்கள் தொகை 9000 ஆகும். சில நேரம் ஒரே இடத்தில் வருகைத் தந்தோரின் எண்ணிக்கை 30,000 ஆகிவிடும். இம்மாபெரும் கூட்டத்தாருக்கு இமாம் அவர்களின் ஹதீஸின் வாசகங்களை பிறர் எழுதிக் கொள்வதற்கு ஏதுவான முறையில் எடுத்துச் சொல்வோரின் எண்ணிக்கையே 300க்கு அதிகமாகிவிடும். இமாம் அவர்கள் மற்ற ஹதீஸ் தொகுப்புகளைவிட, ஹதீஸ்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மிகக் கடுமையான நிபந்தனைகளை ஏற்படுத்தி வைத்து “ஸஹீஹுன் புகாரீ”யை தொகுத்திருப்பதால் இவ்வுலகிலுள்ள அனைத்து ஹதீஸ் தொகுப்புகளைப் பார்க்கிலும் இதற்கே முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக இமாம் அவர்கள் நைஸாப்பூரிலிருந்து, தமது ஊர் “புகாரா”வுக்கு திரும்பி வந்துவிட்டார்கள். புகாராவின் அரசர் காணும், தனது மக்களும் “ஸஹீஹுல் புகாரீ”யைப் படித்துக் கொள்ள விரும்பி, இமாம் அவர்களை அதற்காக தனது வீட்டிற்கு வந்து செல்வதற்காக கேட்டுக் கொண்டபோது, இமாம் அவர்கள் அதை மறுக்கவே, அதன் காரணமாக தனது அதிகாரத்தை வைத்து அவ்வரசர் இமாம் அவர்களை தமது ஊரிலிருந்து வெளியேற்றிவிட்டார்.

இமாம் அவர்கள் அங்கிருந்து, “ஸமர்கந்தை” அடுத்துள்ள “கர்தங்கு” என்னும் ஊரில் வந்து, அங்கு வாழ்ந்து வந்த தமது பத்துக்களோடு ஒரு சில தினங்கள் தங்கி இருந்துவிட்டு, ஒருநாள் தமது “தஹஜ்ஜுத்” தொழுகைக்குப் பின் “அகிலத்தவரின் ரட்சகனே! எனக்கு உமது விசாலமாகிய இப்பூமி, மிக நெருக்கடியானதாகத் தோன்றுகிறது. ஆகவே, நீ என்னை உன்பால் அழைத்துக் கொள்வாயாக!” என்று தமது வாழ்நாளில் இறுதி ரமழானில் துஆ கேட்டுக்கொண்டிருந்தார். வல்ல அல்லாஹ் அவர்களின் அந்த துஆவை முழுமையாக அங்கீகரித்து ரமழான் இறுதியில் நோன்புப் பெருநாள் இரவு அவர்களின் 62ம் வயதில் தன்பால் அழைத்துக்கொண்டான். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) அன்று பெருநாள் அஸ்ரு தொழுகைக்குப் பின் அவர்களை நல்லடக்கம் செய்யப்பட்டது.

புகாரீ இமாம் அவர்கள் நான்கு இமாம்களை யாரையும் தக்லீத் செய்து பின்பற்றாத தமக்குக் கிடைத்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களைக் கொண்டு மட்டும் அமல் செய்து வந்தால், இமாமும் அவரைப் பின்பற்றித் தொழுவோரும் தொழுகையின் ஒவ்வொரு ரகாஅத்துகளிலும் “சூரத்துல்ஃபாத்திஹா” கட்டாயமாக ஓதியாக வேண்டும் என்ற வகையில் ஹனபி மத்ஹபுக்கு முரண்பட்டவர்களாகவும், இவ்வாறே நான்கு இமாம்களுக்கு ஒருசில விஷயங்களில் முரண்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதை அவர்களின் “ஸஹிஹுல் புகாரியின்” அட்டவணையையும், நான்கு மத்ஹபின் விஷயங்களையும் உற்றுநோக்குவோர் எளிதில் புரிந்துகொள்வார்கள். இமாம் புகாரி(ரஹ்) அவர்களைப் போன்றே, இமாம் முஸ்லிம், இமாம் திர்மதீ, இமாம் அபூதாவூத், இமாம் நஸயீ, இமாம் இப்னுமாஜ்ஜா ஆகியோரும், தமக்குக் கிடைத்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களையே அடிப்படையாகக் கொண்டு மற்றவர்களை “தக்லீத்” செய்யாதவர்களாகவே வாழ்ந்து கொண்டு மற்றவர்களை “தக்லீத்” செய்யாதவர்களாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

***********************************************************************************************************************************************************

குர்பானீ கொடுக்க தகுதியற்ற பிராணிகள்!

பர்ரா உபின் ஆஜிப்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்களிடம் குர்பானி கொடுப்பதற்கு தவிர்த்துக் கொள்ளவேண்டிய பிராணிகள் எவை? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் தமது கையால் நான்கை என்று சமிக்கை செய்து (1) தெளிவாக நொண்டியானவையும் 2. தெளிவாக குருடானவையும், 3.தெளிவாக வியாதியுடையவையும், 4. எலும்பில் மூளை இல்லாதபடி மெலிந்து போனவையும் என்றார்கள். (அபூதாவூத், திர்மதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத், முஅத்தா, தாரமீ)

***********************************************************************************************************************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: அந்நஜாத் கொள்கைகளை முழுமனதுடன் ஈமான் கொண்டு அதன் வழி நடக்கும் ஒருவர் கண்டிப்பாக தாடி வளர்க்க வேண்டுமா? அப்படி வளர்க்காவிட்டால் குற்றமாகுமா? நஜாத் வாசகர் : S.H.அலி, திருச்சி-22.

தெளிவு: நஜாத் வாசகர் என தங்களைக் குறிப்பிட்டுக்கொண்டு இக்கேள்வியை கேட்டிருப்பது வருந்தத்தக்கது. தங்களது கேள்வியில் கண்மூடிப்பின்பற்றும் (தக்லீது) வழக்கம் தெரிகிறது. முழு மனதுடன் ஈமான் கொண்டு, விளங்கி, அதன்படி வழி நடக்க நமக்கு ரசூல்(ஸல்) விட்டுச் சென்றுள்ளது குர்ஆன், ஹதீஸ் மட்டுமே. இவ்விரண்டின் அடிப்படையில், ஆதாரத்தில் எவர் கூறினாலும் ஏற்கும் மனோபாவம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வரவேண்டும். குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தில் கூறப்படும் கொள்கைகள் அந்நஜாத்துக்கு மட்டும் ஏகபோக உரிமை (Monopoly) அல்ல. தங்களது கேள்வியில் அக்கொள்கை அந்நஜாத்துக்கு மட்டுமுள்ள ஏகபோக உரிமை போலும் அதனை முழுமனதுடன் ஈமான் கொண்டு வழி நடப்பது போன்றும் தெரிகிறது. இதுவும் ஒரு வகை கண்மூடிப் பின்பற்றும் “தக்லீது”தான். எனவே, நாம் ஒவ்வொரு இதழிலும் “அந்நஜாத்தையும் தக்லீது செய்யாதீர்கள். அந்நஜாத்தில் வருபவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு சரிபார்த்து விளங்கிச் செயல்படுங்கள்” என கூறி வருகிறோம்.

இப்போது தாடியைப் பற்றிய கேள்விக்கு வருவோம். நபி(ஸல்) அவர்கள் சொன்னது, செய்தது, அங்கீகரித்தது ஆக மூன்றும் சுன்னத் என்கிறோம். ஒருசில சுன்னத்துக்களை செய்திருப்பார்கள்; சொல்லியிருக்க மாட்டார்கள். ஒருசில செயல்களை சொல்லியிருப்பார்கள்; செய்திருக்கமாட்டார்கள். ஒருசில சுன்னத்துக்களை சொல்லியோ, செய்தோ இருக்கமாட்டார்கள். ஆனால், வேறு ஒருவர் செய்கையில் பார்த்து எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அங்கீகரித்திருப்பார்கள்.ஆனால் இவையணைத்தும் சுன்னத்(நபிவழி) என்றே ஏற்கவேண்டும். ஆனால் தாடி விஷயத்தில் தாங்களே அழகான தாடி வைத்திருந்தார்கள். செயல், மற்ற நபித்தோழர்களையும் வைக்கும்படி ஏவினார்கள் -சொல். ஓரிரு முடிவுகளையுடைய தாடி வைத்திருந்தவர்களை அதையும் சிரைக்காமல் வைக்க அங்கீகரித்தார்கள். எனவே, தாடி விஷயத்தில் சுன்னத்துக்கான அடிப்படை, நபியின் சொல், செயல், அங்கீகாரம் மூன்றும் இடம் பெறுவதிலிருந்து தாடி வைப்பது மிகமிக ஏற்றமான நபிவழி(சுன்னத்) ஆகும் என்பதை அறியலாம். தாடி வளர்க்காதவர் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரத்தில் வந்த ஒரு சுன்னத்தை அமுல்படுத்தும் பாக்கியம் இழந்தவர் என்பதில் சந்தேகமில்லை. என்னை விரும்புவோர் எனது சுன்னத்தை-வழிமுறையைப் பின்பற்றி நடப்பாராக! எனும் நபிமொழியை சிந்தித்து செயல்படுவார்களாக! (3:31)

ஐயம்: தஸ்பீஹ் மணி உருட்டி சுப்ஹானல்லாஹ் (33) அல்ஹம்துலில்லாஹ்(33), அல்லாஹு அக்பர்(34) ஓதும் பழக்கம் எப்போது ஏற்பட்டது? நபி(ஸல்) அவர்கள் ஆரம்பித்து வைத்ததா? சிலபேர் ஓதிவிட்டு, மணியை கண்ணில் ஓததவும், முத்தமிடவும் செய்கிறார்கள். ஒளூ இல்லாமல் மணியைத்  தொடக்கூடாது என்று பழக்கமும் உள்ளது? தெளிவாக்கவும், M.H.யூசுப் மரைக்காயர், திருவனந்தபுரம்.

தெளிவு: இன்றைய தஸ்பீஹ் மணியுடைய இடத்தில், கற்களைக் குவித்து, ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டு அன்றைய சில நபித்தோழர்கள் தஸ்பீஹ் செய்ததாக இரு ஹதீஸ்கள் உள்ளன. அவை மிகமிக பலஹீனமானவையாகும் ஆதாரப்பூர்வமான நபிமொழிப்படி இது தவிர்க்கப்படவேண்டிய ஒரு அநாச்சார(பித்அத்) செயலாகும். அதன் விளக்கத்தைப் பார்ப்போம். நபி(ஸல்) அவர்கள் தஸ்பீஹ் செய்யும்போது தங்களின் வலது கைவிரல்களால் எண்ணுவதை நான் கண்டிருக்கிறேன். என அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்:  அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம், பைஹகீ,

இதன் மூலம் நபி(ஸல்) தஸ்பீஹ் செய்ய தனது கைவிரல்களையே உபயோகித்திருப்பது தெளிவாகிறது. இதற்குக் காரணமும் அல்லாஹுவும், அவனது ரசூலும் நமக்கு தெளிவாக்குவது கவனிக்கத்தக்கது. “அந்நாளில் அவர்களின் வாய்கள் மீதும் முத்திரையிட்டு விடுவோம். மேலும் அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; அலர்களின் கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி சொல்லும்”. (36:65) மேற்படி குர்ஆன் வசனப்படி கைகளும், கால்களும் பேசுமென்றால், நாம் உபயோகிக்கும் தஸ்பீஹ் மணி பேசாதா? என குதர்க்கவாதம் பேசுபவர்களுக்கு நபி(ஸல்) அவர்களே சாட்டையடி கொடுப்பதையும் பாருங்கள்.

தஸ்பீஹ் செய்கையில் நீங்கள் உங்கள் விரல்களால் எண்ணுங்கள். ஏனெனில், அந்த விரல்களும் (அல்லாஹுவால்) விசாரிக்கப்பட்டு பேச வைக்கப்படும் என நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். ஆதாரம்: அபூதாவூது, ஹாகிம். எனவே மேற்படி குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்தில் கைவிரல்களைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதே நபிவழியாகும். அதற்கான காரணத்தையும் கூறியுள்ளதால் தஸ்பீஹ்மணி உருட்டுவதை தவிர்ப்பது நலம். அடுத்து ஒரு சிலர் தஸ்பீஹ் செய்தபின், மணியை கண்ணில் ஒற்றி முத்தமிட்டு கண்ணியப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவும் இஸ்லாமிய வழியே அல்ல. மாற்று மதத்தவர்கள் தங்களது ஜபமாலைகளை கண்ணியப்படுத்துவதைக் கண்டு காப்பியடித்த வழக்கமாகும். இவர்கள் கண்ணியப்படுத்தும் தஸ்பீஹ் மணிகளை நமது நபிவழி சஹாபிகள் அவமதித்திருப்பதையும் காணீர்

நபித்தோழர்களில் பேரறிஞராக கணிக்கப்படும் அப்துல்லாஹ்பின் (ரழி) ஒரே வழியில் இரு செய்கைகளை கண்ணுற்றார்கள். ஒரு பெண்மணி ஒரு தஸ்பீஹ் மணி மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தான். இதனைக் கண்ணுற்ற இப்னு மஸ்ஊது(ரழி) அவர்கள் அதனைப் பிடுங்கி அறுத்தெறிந்தார்கள். அதை அவர்கள் கண்ணில் ஒற்றி முத்தமிடமில்லை. கண்ணியப்படுத்தவுமில்லை. இன்னும் சிறிது தூரம் சென்றதும் ஒருவர் சிறிய கற்களைக் குவித்து வைத்து அதன்மூலம் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார். அதனைத் தன் காலால் எட்டி உதைத்துவிட்டு, “நீங்கள் நபித்தோழர்களைவிடக் கல்வியில் மிஞ்சிவிட்டீர்களா? அவர்களைவிட (மரியாதையில்) முந்திவிட்டீர்களா? இல்லை! நீங்கள் அனாச்சாரம் (பித்அத்) என்ற வாகனத்திலேயே சவாரி செய்கிறீர்கள் என வன்மையாகக் கண்டித்தார்கள். இந்த நிகழ்ச்சியை கல்து இப்னு பஹ்ராம்(ரழி) அறிவித்ததாக இமாம் குர்த்துபீ அவர்கள் தனது “பித்அத்துக்கள்” என்ற நூல் குறிப்பிடுகிறார்கள்.

கூபாவில் சில பெண்மணிகள் தஸ்பீஹ் மணி தயாரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்கள் தனது மகளிடம் “இதற்கெல்லாம் துணைபோகாதே” என எச்சரித்தார்கள். ஆதாரம்: முஸ்னது அபீஷைபா. இந்துக்களின் உத்திராட்சமாலை, கிறித்தவர்களின் ஜபமாலை நம்மிடம் தஸ்பீஹ் மணியாக உருவெடுத்து கண்ணியப்படுத்தப்படுகிறது. எவரொருவர் மாற்று மதத்தவர் பழக்கத்தைப் பின்பற்றி நடக்கிறாரோ அவர் தம்மை சார்ந்தவரல்ல என்பதும் நபிமொழியாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: 1. தராவீஹ் என்ற வார்த்தை குர்ஆன், ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளதா? 2. தஹஜ்ஜுத் தொழுகையை தராவீஹ் தொழுகையாக உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மாற்றினார்கள் என்றும், இரவின் 3வது பாகத்தில் தொழ வேண்டிய தஹஜ்ஜுத் தொழுகையை இரவின் முதல் பாகத்தில் தராவீஹ் என்ற பெயரிலும் தொழ வைத்தார்களாம் இது சரியா? தவறா? H.அப்துல் கபூர், பொன்மலை.

தெளிவு: 1. “தராவீஹ்” என்ற வார்த்தை குர்ஆனிலும், ஹதீஸிலும் எங்கும் இடம்பெறவில்லை. ஆனால் கியாமுல் வல்ல (இரவில் நின்று வணங்கல்) ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) கியாமு ரமழான் என்றே ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளன. இப்பெயர்கள் குர்ஆன் கூறும்(வசனம் 17:79). சாதாரணமாக எல்லா இரவுகளிலும் தொழப்படும் சுன்னத்தான “தஹஜ்ஜுத்” தொழுகைதான் என ஹதீஸ் நூற்களும் தெளிவுபடுத்துகின்றன. ஆனால் இதே தொழுகை குறிப்பாக ரமழான் மாதத்தில் தொழும்போது “தராவீஹ்” என பின்வந்தவர்கள் குறிப்பிடலாயினர். எந்த ஸஹாபியும், ஏன்! ஹதீஸ்கலா வல்லுநர்களும் இதனை “தராவீஹ்” எனக் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 2. தஹஜ்ஜுத்து தொழுகையை உமர்(ரழி) தராவீஹாக மாற்றினார்கள்; இரவின் 3வது பாகத்தில் தொழ வேண்டியதை முதல் பாகத்திற்கு மாற்றினார்கள் என்று கூறுவதும் அப்பட்டமான பொய்க்கூற்றாகும். உமர்(ரழி) தஹஜ்ஜுத்தை “தராவீஹ்” தொழுகையாக மாற்றியதற்கு அறவே ஆதாரமில்லை. ஆனால் ரமழானின் இரவுத் தொழுகையை முதல் பகுதியில் ஜமாஅத்தாக தொழுததைக் கண்ட உமர்(ரழி) அவர்கள் ஒரு சுன்னத்தை தாம் ஹயாத்தாக்கியதற்காக சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தோஷத்திற்கு இடையிலும் “எல்லோரும் உறங்குகின்ற இரவின் கடைசி நேரத்தில் இத்தொழுகை தொழுவது” (இவர்களைப் போல) இரவின் முந்தியப் பகுதியில் தொழுவதை விட சாலச் சிறந்தது” என நவின்றார்கள். அறிவிப்பு: அப்துர்ரஹ்மான்பின் அப்துல்காரி(ரழி) ஆதாரம்: முஅத்தா.

இவ்விரமாக இரவின் முந்தியப் பகுதியில் தொழுவதைவிட கடைசிப் பகுதியில் தொழுவதை சாலச் சிறந்ததாக கூறியுள்ள உமர்(ரழி) முதல் பகுதிக்கு மாற்றியிருப்பார்களா? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அடுத்து, மேலே குறிப்பிட்ட முழு ஹதீஸிலிருந்து நாம் உமர்(ரழி) அவர்கள் ரமழான் இரவுத் தொழுகையை “ஜமாஅத்” தாக்கிய சுன்னத்தைக் காணலாமேயன்றி 20 ரகாஅத்துக்கள் தொழுதார்கள் என்பதை காணவே முடியாது. ஏனெனில் இதற்கு அடுத்த ஹதீஸ்(முஅத்தா மாலிக்கி). அவர்கள் 11 தொழ ஆணையிட்டதையே தெளிவுபடுத்துகிறது. தாங்கள் வாழையடி வாழையாக செய்துவரும் ஒரு புதுமையான(பித்அத்) செயலை நீதப்படுத்த எப்படிப்பட்ட பொய்யையும் வாய்க்கூசாமல் கூறித்திரிவோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட நாம் பிரார்த்திப்போமாக! அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: எங்கள் ஊரில் சுப்ஹு, அஸ்ரு தொழுகைகளுக்குப் பின் முஸாபஹா செய்து கொண்டிருக்கிறார்கள். இது நபிவழியாகிய சுன்னத்தா? அல்லது நவீன அனுஷ்டானமாகிய பித்அத்தா? முஹம்மத் அய்யூபு, சென்னை.

தெளிவு: “அனஜா”வென்னும் கூட்டத்தாரைச் சார்ந்த ஒருவர் கூறியதாக அய்யூபுபின் புஷைர்(ரழி)அறிவித்துள்ளார்கள். அவர் கூறினார். நான் ஒருமுறை அபூதர்ரு(ரழி) அவர்களிடத்தில் நபி(ஸல்) அவர்கள் உங்களிடத்தில் முஸாபஹா செய்து கொண்டிருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நான் அவர்களைச் சந்திக்கும்போதெல்லாம் என்னிடம் அவர்கள் முஸாபஹா செய்து கொண்டேயிருந்தார்கள்” என்று கூறினார்கள். (அபூதாவூத்)

மேற்காணும் ஹதீஸை சற்ற கவனித்துப் பார்த்தால், நபி(ஸல்) அவர்கள் முஸாபஹாவுக்கு குறிப்பிட்டதோர் நேரத்தை நியமித்துக் கொள்ளாது சர்வகாதாரணமாக நாம் இன்று ஸலாம் சொல்லிக்கொள்வது போல் அன்று அவர்கள் முஸாபஹாவை ஒருவருக்கொருவர் செய்துகொண்டிருந்தார்கள் என்பதை உணரலாம். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சாதாரணமாக எப்பொழுதும் செய்து கொண்டிருந்த முஸாபஹாவை இன்று நாம் சுப்ஹு தொழுகை, அஸ்ர் தொழுகைக்குப் பின் என்றும், ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகைக்குப் பின் என்றும், அதற்கு குறிப்பிட்டதோர் நேரத்தை நாமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு அதைச் செய்து வருவது நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறுபடுவதால் இது சுன்னத்தென்ற உயர் நிலையிலிருந்து தள்ளப்பட்டு பித்அத் என்ற அனாச்சார நிலைக்கு வந்து விடுகிறது.

எனவே சுன்னத் என்றால் நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு அமலை எந்த முறைப்படி செய்தார்களோ, அம்முறைப்படி அதைச் செய்வதாகும். அவர்கள் சாதாரணமாக எப்பொழுதும் செய்து வந்த ஒரு காரியத்தை அவ்வாறு செய்யாது,அதற்கென்று ஒரு நேரத்தைக் குறிப்பிட்டுக்கொண்டு அப்போது மட்டும் அதைச் செய்வது நபிவழிக்குப் புறம்பானதாகும்.

ஐயம்: ஒரு முஸ்லிம் நகங்களை வெட்டுதல், மர்மஸ்தல முடியை நீக்கம் செய்தல், கண்டிப்பாகச் செய்ய வேண்டுமா? அப்படி செய்ய வேண்டுமானால் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டுமோ? நபி வழியில் விடை பகர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முகம்மது இக்பால், இலால்குடி.

தெளிவு: விருத்தசேதனம்(கத்னா) செய்வது, மர்மஸ்த முடியை நீக்குவது, மீசையைக் கத்தரிப்பது, நகம் வெட்டுவது,கட்கத்தின் முடியை அகற்றுவது போன்ற ஐந்து விஷயங்கள் இயற்கையாக ஒரு முஸ்லிமின் மீது கடமையாகும், என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”. அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், முஅத்தா,அபூதாவூத், திர்மதீ, நஸயீ, “மீசையைக் கத்தரிப்பதும், நகங்களை வெட்டுதலும், கட்கத்தின் முடியை அகற்றுதலும் நமக்கு 40 இரவுகளுக்கு மேல் செல்லக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் காலநிர்ணயம் செய்தனர்”. அறிவிப்பாளர்: அனஸ்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூது, திர்மதி, நஸயீ. மேற்கூறிய நபிமொழியிலிருந்து, மேற்கூறிய காரியங்களை அவசியம் செய்யவேண்டுமென்பதும், அதுவும் 40 நாட்களுக்கு மேல் விட்டுவிடுதல் ஆகாது என்பதையும் அறிகிறோம்.

குறிப்பு: ஹஜ், உம்ரா செய்பவர்கள் இஹ்ராமுடைய நிலையில் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது போன்ற காரியங்களை செய்யக்கூடாது என்பதால் இஹ்ராம் உடை அணிவதற்கு முன்பாகவே இவைகளைச் செய்துவிடவேண்டும்.

ஐயம்: நான் இலங்கை வங்கியில் கொஞ்சம் பணம் முதலீடு செய்துள்ளேன். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். எனது பணத்திற்கு ஒரு சிறிய தொகையை வருட முடிவில் சேர்க்கிறார்கள். அப்படி சேர்த்த பணம் எனக்கு ஹலாலாகுமா? அதனை நான் என்ன செய்வது? S.M.H.நிஸார், ரியாத்.

இன்றைய நிலையில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்திற்கு மேல் அதிகமாகப் பெறும் பணம் வட்டியே ஆகும். வட்டி எந்த நிலையிலும், எப்படி வந்தாலும் ஹராமாகும் என்பது ஹதீஸ்களின் சாரமாகும். (ஆதாரம்: முஸ்லிம், திர்மதீ, அபூதாவூத்) நிர்ப்பந்தத்தின் காரணமாக வங்கியில் முதலீடு செய்வதை நியாயப்படுத்துவதற்கும், அதனால் கிடைக்கப்படும் வட்டிப் பணத்தைக் கொண்டு நன்மையைக் கருதாமல் ஏழைகளுக்கு கொடுத்துவிடலாம் என்பதற்கும் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஆதாரங்களைக் காணமுடியவில்லை. நிர்ப்பந்தத்தைக் காரணப்படுத்துபவர்களின் முடிவு அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள விஷயமாகும்.அல்லாஹ் மிக அறிந்தவன்.

ஐயம்: வெளிநாடு செல்லும் நண்பர்கள் ஊரைவிட்டு கிளம்பும் போது பள்ளிவாசலுக்குச் சென்று ஃபாத்திஹா ஓதிவிட்டு கிளம்புகிறார்கள். இது சுன்னத்தா? K.முஹம்மது அலி, ஜித்தா.

தெளிவு: ஃபாத்திஹா இடம் பெறாத நிகழ்ச்சி இல்லவே இல்லை போலும், ஏதாவது பிரயாணத்திற்குப் புறப்படும்போது ஏன்?  போருக்குப் புறப்படும் போதும் ரசூல்(ஸல்) அவர்கள் பள்ளிக்குச் சென்று, 2 ரகாஅத்துகள் நபில் தொழுதுவிட்டுச் சென்றதை, நாம் ஹதீஸ் நூல்களில் காணமுடிகிறது. ஃபாத்திஹா ஓதி சென்றதற்கு ஆதாரமில்லை. அதேபோல் பிரயாணத்திலிருந்து திரும்பியதும் நேராக பள்ளிக்குச் சென்று இரு ரகாஅத்துக்கள் தொழுது வீடு சென்றதாகவும் காணுகிறோம். எனவே, 2 ரகாஅத் நபில் தொழுது செல்வதே சுன்னத்தாகும். ஃபாத்திஹா ஓதி செல்வதல்ல, அல்லாஹ் போதுமானவன்.

************************************************************************************************************************************************************

Previous post:

Next post: