அந்நஜாத் – நவம்பர் 1988

in 1988 நவம்பர்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்-நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் : 3 – விளக்கம் : 8

ரபிஉல் ஆகிர் : 1409-நவம்பர்-1988

இதழின் உள்ளே…

* இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்ட..! 

* விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

* இறை நேசம் இழந்தவர்கள் யார்? யார்?

* நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் ஏன்?

* நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!!

* வேதனைக் குரல்!

* நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்!

* உலகளவில் தரீக்காவின் தவறான பிரச்சாரம்!

* நபி வழியில் நம் தொழுகை!!

* நபி வழித் தொகுப்பு வரவாறு!!

* ஐயமும்! தெளிவும்!!

***************************************************************************************************************************************************************************************************

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்ட…!

“நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (2:42)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும் நேர்வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கியப் பின்னரும் யார்? மறைக்கின்றனரோ நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் இவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கின்றனர்” (2:159)

மேலே காணப்படும் இரு குர்ஆன் வசனங்களும் எந்த நிலையிலும் சத்தியும் மறைக்கப்படுவது ஆரோக்கியமானது அல்ல என்பதையும், அதுவே இஸ்லாத்தில் மாசுபடிய காரணமாக இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன. சத்தியத்தை மறைப்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கும், சபிப்பவர்களின் சாபத்திற்கும் உள்ளாகின்றனர் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், இஸ்லாத்தில் மாசு படியச் செய்வதை பிரதான குறிக்கோளாகக் கொண்டுள்ள ஷைத்தான் சத்தியத்தை மறைக்கப் பல தந்திரங்களைக் கையாள்கிறான். அதில் தலையாயது சத்தியம் வெளிப்படுத்தப்படுவதே, மக்களிடையே குழப்பங்களையும், கலகங்களையும் ஏற்படுத்தி விடும் என்ற பீதியை மக்கள் உள்ளங்களில் தோற்றுவிப்பதாகும்.

இந்த அடிப்படையில் 1984லிருந்து பிரசுரங்கள் மூலமும், 1986 ஏப்ரலிலிருந்து அந்நஜாத் மாத இதழ் மூலமும், சத்தியத்தை மறைக்காமல், மக்கள் முன் எடுத்து வைக்க முற்பட்ட நமக்கு, மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மெளலவிகள் அரசியல் தலைவர்களிலிருந்து ஆன்மீகத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை, மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். மிகக் கீழ்த்தரமாகச் சாடினார்.

காலங்காலமாக மக்கள் சரியோ, தவறோ, ஏதோ ஒரு நம்பிக்கையில் செயல்பட்டு வருகின்றனர். அவற்றை விமர்சிப்பதால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சமுதாயத்திற்குள்ளேயே மோதல்கள் ஏற்பட்டு கலகங்கள் ஏற்படுகின்றன. நீங்கள் வெளியிடுவது குர்ஆன், ஹதீஸ்படி சரியாக இருந்தாலும், முஸ்லிம்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கும் இந்த நாட்டில் இந்த சர்ச்சைகள் கூடாது. முஸ்லிம்களிடமும் பிளவுகள் இருக்கின்றன என்பதை மற்றவர்கள் தெரிந்து நம்மைப் பார்த்து நகைப்பவர்கள். முஸ்லிம்களுக்கு தலைகுனிவு ஏற்படும் என்று அனைவரும் ஒரே குரலில் கூறினார். நமக்கு குழப்பவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டினர்.

இவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் சிந்தனையில்லாமல் மேலே மூத்த நிலையில் பார்ப்பவர்கட்கு நியாயமாகவே படும். ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது இஸ்லாத்தில் மாசு படியச் செய்ய ஷைத்தான் செய்யும் சூழ்ச்சியே இது என்பதையும், அல்லாஹ்வின் சத்திய மார்க்கம் மக்களிடமிருந்து மறைக்கப்படுவதே கொடிய பித்னாவாகும் என்பதை அல்குர்ஆன் 2:193 வசனத்திலிருந்தும் புரிந்து கொள்ள முடியும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் சத்தியத்தை மறைக்க மார்க்கத்தில் அனுமதியில்லை என்ற துணிவுடன் செயல்பட்டோம். அதனால் நம்மோடு மிக நெருக்கமாக இருந்த பலர் நம்மை விட்டும் தூரமாயினர்.

“நீர் இணங்கி வந்தால், பின் அவர்கள் இணங்கி வருவதை அவர்கள் விரும்புகின்றனர். (68:9) என்பது அவர்களின் நிலையாக இருந்தது.

“இப்புவியில் இருப்போரில் அநேகரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து திருப்பி விடுவர்” (6:116) “அறியாதவர்களின் விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்” (45:18)

என்ற இறை எச்சரிக்கைகள் நம்மை பாதுகாத்து அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றாது தடுத்தன. அல்ஹம்துலில்லாஹ். அதன் விளைவு குர்ஆன், ஹதீஃதை மட்டும் கொண்டே செயல்பட முயற்சிக்கும் ஒரு சமுதாயம் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் இவர்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் பிரிவுப் பெயர்கள், ஆலிம், அவாம் என்று சமுதாயத்தைக் கூறுபோடும் நிலை, ஜ.உ.ச.(இம் மூன்றும் “ஸலஃபி” தத்துவத்தின் கிளைகளாகும்) இம்மூன்றின் கெடுதிகளையும் தெளிவுபடுத்தி, ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ, சகோதரத்துவ சமுதாயம் அமைக்கப்படுவது எமது நீங்காக் கடமையென செயல்பட்டு வருகிறோம். ஆனால், அன்று தீனை விளங்காதவர்களிடமிருந்து வந்த நெருக்கடிகள், இன்று தீனை விளங்கி வருகிறோம் என்பவர்களிடமிருந்து வருவது வேதனைக்குரியதே! நீங்கள் இவ்வாறு எழுதுவதால் கபுரு வணங்கிகளும், முகல்லிதுகளும் தம்மைப் பார்த்து நகைக்கின்றனரே, நமக்கு தலைகுனிவு ஏற்படுகின்றதே, என ஆத்திரப்படுகின்றனர்.

இவர்களின் இக்கூற்றுகளினால் அல்லாஹ்வின் பொருத்தம் பெற பாடுபடுகிறோமா? அல்லது மனிதர்களிடம் பெயரும், பெருமையும், கெளரவமும் பெற பாடுபட்டு வருகிறோமா? என்ற சந்தேகம் எழுகின்றது. நாம் இவ்வாறு எழுதுவதால் தெளஹீதுவாதிகளிடையே குழப்பம் ஏற்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர். முன்னவர்களின்  வாதத்திலிருந்த நியாயம் இவர்களின் வாதத்திலிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. அவர்கள் முகல்லிதுகள், சிந்தனையில்லாமல் கண்மூடி பின்பற்றுகிறவர்கள், மாறுபட்ட கருத்துகள் வரும்போது அவர்களிடையே குழப்பம் ஏற்படத்தான் செய்யும். எனவேதான் ஒரு இமாமுடைய கூற்றுகளை தக்லீது செய்யுங்கள். கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுங்கள் என்று அவர்கட்கு உபதேசம் செய்யப்படுகிறது. அதே போல் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இந்த நாட்டில் நமக்குள் பிரிவுகள் இருப்பதை பெரிதுபடுத்திக் காட்டுவது நமது பாதுகாப்புக்கு உகந்ததல்ல என்ற அவர்களின் கூற்றிலும் ஓரளவு நியாயம் இருக்கத்தான் செய்கிறது ஆயினும் இவற்றை காரணம் காட்டி சத்தியத்தை மறைக்க மார்க்கத்தில் அனுமதி இல்லை என்பதை விளங்கியே நாம் செயல்பட்டோம்.

ஆனால், தக்லீதை விட்டுவிட்டோம், குர்ஆன் ஹதீஃதை விளங்கிச் செயல்படுகிறோம் என்று சொல்பவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான் நமக்கு பெருத்த ஆச்சரியத்தைத் தருகின்றது. அதன் பொருள் இவர்கள் இன்னும் தக்லீதை முழுமையாக விட்டு விடவில்லை என்பதே உண்மையாகும். படித்த பட்டதாரிகளும் அவர் மெளலவி, அவர் தப்பாக சொல்வாரா? என்று கேள்விக்கணை தொடுப்பதே அவர்கள் தக்லீதை விட்டும் முழுமையாக விடுபடவில்லை என்பதையே ஊர்ஜிதம் செய்கின்றது. தக்லீதை விட்டும் முழுமையாக விடுபட்டவர்கள் சொல்லுகிறவர், மெளலவியா? இல்லையா? என்பதை வைத்து அவர் சொல்லுவது சரி அல்லது தவறு என்ற முடிவுக்கு வரமாட்டார்கள். சொல்லுகிறவர் யாராக இருந்தாலும் சொல்லும் விஷயம் குர்ஆன், ஹதீஃத்படி இருக்கிறதா? இல்லையா? என்பதை விளங்கியே முடிவுக்கு வருவார்கள். இப்படி தக்லீதை விட்டு சுயமாக சிந்தித்து செயல்படும் நிலை ஏற்பட்டுவிட்டால், 1000 மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அதனால் குழப்பம் அடையமாட்டார்கள். மாறாக, அவற்றில் எந்த கருத்து குர்ஆன், ஹதீஃதுக்கு நெருக்கமானது என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிடுவார்கள். குழப்பம் ஏற்பட வழியே இல்லை.

மேலும், கபுரு வணங்கிகளிடமும், குராபிகளிடமும் தலை குனிவு ஏற்படுவதைப் பெரிதாக எண்ணி, சத்தியத்தை மூடி மறைக்க விரும்புகிறவர்கள், நாளை மறுமையில் ஆதம்(அலை) அவர்கள் முதல் உலகம் அழியும் வரை வாழ்ந்த கோடானகோடி மக்கள் அறிய அல்லாஹ்வின் முன்னிலையில் சத்தியத்தை மறைத்த குற்றத்திற்காக தலைகுனிவு ஏற்படுமே என்பதை சிந்தித்து உணர வேண்டாமா? கபுரு வணங்கிகளிடமும், குராபிகளிடமும் பெருமை பேசவேண்டும் என்ற எண்ணம் தானே இந்த தவறைச் செய்யத் தூண்டுகின்றது. அதாவது சத்தியம் மறைக்கப்பட்டாலும் பரவாயில்லை, எமக்கோ, எமது இயக்கத்திற்கோ, எமது அணிக்கோ கெளரவக் குறைவு ஏற்பட்டு விடக்கூடாது. சத்தியம் நிலைநாட்டப்படுவதைவிட தங்கள் இயக்க கெளரவம் நிலைநாட்டப்படவேண்டும் என விரும்புகிறார்கள். இதையே இயக்க வழிபாடு என்று நாம் சொல்கிறோம்.

எனவே, இவையனைத்தையும் தீர பரிசீலனை செய்த பின், குர்ஆனின் வசனங்கட்கு முரணாக இருப்பதால், இவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாமைக்கு வருந்துகிறோம். இதன் காரணமாக முன்பு போல் இப்போதும் நம்மோடு நெருக்கமாக இருந்தவர்களில் சிலர் நம்மைவிட்டு தூரமாகலாம். இவர்களை நெருக்கமாக வைத்துக் கொள்வதற்காக, எஜமானனாகிய அல்லாஹ்வை விட்டும், நம்மை தூரப்படுத்திக் கொள்ள நாம் தயாராக இல்லை.

அன்று, மற்றவர்களுக்கு முன் முஸ்லிம்களுக்குத் தலை குனிவு ஏற்படுகின்றது என்று நம்மீது ஆத்திரப்பட்ட அதிகமானவர்களின் பகைமையைப் பொருட்படுத்தாமல், சத்தியத்தை நிலைநாட்ட துணிந்து செயல்பட்டது போல், இன்றும் கபுரு வணங்கிகள், குராபிகள் முன் நமக்குத் தலைகுனிவு ஏற்படுகின்றது என்று நம்மீது ஆத்திரப்படுகிறவர்களின் அன்பு கட்டளையும் பொருட்படுத்தாமல் துணிவுடன் செயல்பட நாம் கடமைப்பட்டுள்ளோம். இதற்கு, ஹுதைபியா உடன்படிக்கையின் போது, நெருங்கிய தோழர்களின் கோபத்துடன் கூடிய அன்புக் கட்டளைகளை எல்லாம் பொருட்படுத்தாமல், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிக் காட்டிய நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறை முன் உதாரணமாக இருக்கிறது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு பரப்பிய சந்தர்ப்பத்தில், அது அவதூறு தான் என்று அல்லாஹ் 24:12-ல் அறிவித்த பின், தனது நெருங்கிய தோழர்களான ஹஸ்ஸான் பின் ஸாபித்(ரழி) மிஸ்தஹ்பின் அஸாயா(ரழி) ஆகிய இரண்டு ஆண்களுக்கும், ஹிம்னாபின்த் ஜஹ்ஷ்(ரழி) என்ற பெண்ணுக்கும், கசையடி கொடுத்து கடுமையாகத் தண்டிக்கக் கட்டளையிட்ட நபி(ஸல்) அவர்கள், அந்த அவதூறுக்கு மூலகர்த்தாவாக இருந்த அப்துல்லாஹ்பின் உபை என்ற நயவஞ்சகனை தண்டிக்காது  விட்டுவிட்டார்கள்.

மேலும், தனது அழைப்பை ஏற்று நடக்காத நயவஞ்சகர்களை விட்டு விட்டு, உண்மையான நபித்தோழர்கள் மூவரை மட்டும், நபி(ஸல்) அவர்கள் பகிஷ்காரம் செய்து பல நாட்களாக அவர்களை சோதித்து திருத்தினார்கள். இந்த வழிகாட்டல்கள் மூலம், தீமைகளை களைவதில் தூரமாக இருப்பவர்களை விட நெருக்கமாக இருப்பவர்களிடம் அதிக கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிகிறோம். நபி(ஸல்) அவர்களின் இந்த அழகிய நடைமுறையை விட்டு, அதற்கு மாற்றமாக நெருக்கமானவர்களின் குறைகளை மறைத்துக்கொண்டு, தூரமானவர்களின் குறைகளை பெரிதுபடுத்தி வருவது மற்ற சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ளது போல் நமது சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள ஒரு சாபக்கேடாகும். இதன் காரணமாகத்தான் மற்ற சமூகங்களுடன் இருந்து வர வேண்டிய சுமூக உறவுகளுக்குப் பதிலாக, துவேஷமும், வெறுப்பும் கலந்த கசப்பான உறவுகளே ஏற்பட்டு வருகின்றன. தூரமானவர்களை விட நெருக்கமானவர்களிடம் மார்க்க விஷயத்தில் மிகக் கண்டிப்பாக நடந்து கொள்வது நமது கடமையாகும்.

கபுரு வணங்கிகளையும், முகல்லிதுகளையும் நமது எதிரிகளாகச் சிலர் கருதுகின்றனர். இன்று வழமையாகக் காணப்படும் நண்பர்களின் குறைகளை மறைத்து பகைவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்திக் காட்டும் இயல்பின் காரணமாக அவ்வாறு நினைக்கின்றனர். ஆனால் நாம் அவ்வாறு கருதவில்லை. அவர்களை நமது எதிரிகளாகக் கருதி இருந்தர், நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழகிய முறைப்படி தவறுகளைச் சுட்டிக்காட்டுவதோடு விட்டிருப்போம். கண்டிக்க முற்பட்டிருக்கமாட்டோம். அவர்கள் நம்மவர்களாக இருக்கும் காரணத்தாலேயே உரிமையோடு கண்டிக்கிறோம். மிக நெருக்கமானவர்களை கண்டிப்பதோடு, தண்டிக்கும் நிலை ஏற்பட்டாலும் அதனை செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். இஸ்லாத்தை நிலைநாட்டுவதே நமது நோக்கமேயல்லாமல், நமக்கென ஓர் அணி அமைப்பது நமது நோக்கமல்ல.

சத்தியத்தை எடுத்துச் சொல்வதில் சமரசத்திற்கு இடமே இல்லை என்ற நமது விளக்கம், தக்லீதை விட்டும் முற்றிலுமாக விடுபடாதவர்களுக்குச் சரியாகத் தெரியாது என்பதையும் நாம் அறிவோம். அந்நஜாத் 1986 ஏப்ரல் இதழ் (ஆரம்ப இதழ்) பக்கம் 3-ல் காலம் சென்ற மெளலவி P.S.அலாவுதீன் அவர்கள் அந்நஜாத் சார்பாக வாக்களித்தது போல், சத்தியத்தை எடுத்துச் சொல்வதால் பாதிக்கபடுகிறவர்கள், நண்பனா? பகைவனா? உறவா? அயலா? பெற்றோரா? மற்றவரா? ஆசிரியரா? மாணவனா? சமுதாயத்0தில் செல்வாக்குப் படைத்தவனா? தனது செல்வாக்கு அம்பலம் ஏறாதா சாமானியக் குடிமகன் என்றெல்லாம் அந்நஜாத் தரம் பார்த்துக் கொண்டிருக்காது என்ற உறுதிமொழியை மீண்டும் தருகிறோம். அதே சமயம், அந்நஜாத்தில் சமுதாயத்திற்கு முரணாக ஏதேனும் இடம் பெற்று, அதனை யார் சுட்டிக் காட்டினாலும் அவர்களின் தகுதிகளைப் பாராமல், அவர்கள் சொல்லும் விஷயத்தின் தரத்தைப் பார்த்து அதனை ஏற்று தன்னை திருத்திக் கொள்ளவும், அவர்கட்கு நன்றி சொல்லவும் தயங்காது அந்நஜாத்தின் நோக்கம் மார்க்கத்தில் படித்துள்ள மாசுகள் அகற்றப்பட்டு இஸ்லாம் அதன் தூய வடிவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதேயாகும்.

**************************************************************************************************************************************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

உலகிலுள்ள இஸ்லாமியர் அனைவரும் முஸ்லிம் என்ற பெயரில் தான் இயங்க வேண்டும், வேறு பெயர்களில் இயங்கக் கூடாது என்று தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். குரைஷி, ஹாஸிம், அன்சாரி போன்ற பெயர்களில் இயங்கிக் கொண்டிருப்பதும் கூடாதா? சாஹுல் ஹமீது என்ற உங்கள் பெயரை “முஸ்லிம்” என்று வைத்துக் கொள்ளாமல் அபூஅப்துல்லாஹ் என்று வைத்துக் கொண்டது ஏன்? இவைகட்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தோடு விளக்கம் தரவும். மு. யூசுப் ரஹ்மத்துல்லா சேட், நாகூர்.

“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ” என்று சொல்லியே நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். எனவே எல்லா வகையிலும் அந்த நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் மக்களுக்குத் தனது பெற்றோர் வைத்த பெயரான “முஹம்மது” என்ற பெயரால் தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள். பின்னர் அவர்களது மகனார் காசிமின் பெயராலும் “அபுல் காசிம்”-காசிமின் தந்தை என்றும் அறிமுகமானவர்கள். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் ரஸூலாக ஆன பின் மக்களுக்கு போதித்த கொள்கையை “இஸ்லாம்” என்ற பெயராலேயே அறிமுகப்படுத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் “இஸ்லாம்” அல்லாத ஒரு பெயரில் இயங்கியதாக எவ்வித ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை.

அவ்வாறு இயங்க அவசியம் ஏற்படவில்லை என்றும் தப்பிக்க முடியாது. நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே நயவஞ்சகர்கள் இஸ்லாத்தை ஏற்று நடப்பதாக வாயளவில் சொல்லிக் கொண்டு இஸ்லாத்திற்கு விரோதமாகச் செயல்பட்டார்கள். அவர்களை அடையாளம் காட்டி, “நயவஞ்சகர்கள்” என்ற 63-ம் அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கினான். அதன் பின்பும் நயவஞ்சகர்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ள பிறிதொரு பெயரை நபி(ஸல்) தேர்ந்தெடுக்கவில்லை. முஸைலமா கஃத்தாப், இப்னுஸியாது போன்றவர்கள் தங்களை நபி என்று வாதம் செய்து கொண்டு இஸ்லாத்திற்கு விரோதமான கொள்கைகளை புகுத்தியும், ஒரு சிலர் அவற்றை ஏற்றுக் கொண்ட நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் தங்களை அவர்களிலிருந்து பிரித்துக் காட்ட “இஸ்லாம்” அல்லாத ஒரு பெயரைத் தெரிவு செய்யவில்லை. நபி(ஸல்)அவர்களுக்குப் பின் முஸ்லிம்களை வழிநடத்திச் சென்ற நான்கு கலீஃபாக்களின் காலத்திலேயே இஸ்லாத்திற்கு விரோதமான பல பிரிவினர் முஸ்லிம் என்று தங்களைச் சொல்லிக்கொண்டே செயல்படலாயினர். அவர்களிலிருந்து தங்களைப் பிரித்து காட்ட அந்த கலீஃபாக்கள் “இஸ்லாம்” அல்லாத ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து இயங்கவில்லை. அந்த கலீஃபாக்கள் பல நாடுகளைக் கொண்ட ஒரு பெரிய வல்லரசையே “இஸ்லாம்” என்ற பெயரின் கீழ் இயக்கிக் காட்டினார்கள் என்பதை நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. இன்று நாம் மார்க்கத்தின் ஒரு சில பகுதிகளை நிறைவேற்ற இயக்கங்களையும், புதிய புதிய பெயர்களையும் தேடி அலைகிறோம்.

ஆக, இப்படி இஸ்லாமிய வரலாறு தெளிவாக இருப்பதால், அந்த வரலாற்றை உண்டாக்கிய நபி(ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றி எமது பெற்றோர் இட்ட பெயரை “முஸ்லிம்” என்று வைத்துக் கொள்ளாமல் எமது மகனின் பெயரால் “அபூஅப்தில்லாஹ்” என்று அழைக்கப்படுகிறோம். நபி(ஸல்) அவர்கள் தங்கள் “முஹம்மது” என்ற பெயரை முஸ்லிம் என்று மாற்றிக் காட்டி இருந்தால் நாமும் அவ்வாறே முஸ்லிம் என்று மாற்றி இருப்போம். அந்த நபி(ஸல்) தங்கள் கொள்கையை வெளிப்படுத்த “இஸ்லாம்” அல்லாத  ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் நாமும் இஸ்லாம் அல்லாத ஒரு பெயரை தேர்ந்தெடுப்பதை வன்மையாகக் கண்டித்து வருகிறோம். மேலும் குரைஷி, ஹாஸிம், அன்சாரி போன்ற பெயர்களில் அந்தந்தப் பெயர்களை உடையவர்கள் இயங்கிக் கொண்டிருக்கவில்லை. (அவற்றைக் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை) அறிமுகப்படுத்தப்பட்டார்கள் என்பதையும் அறியவும். இதற்கு மேலும் தெளிவு வேண்டும் என்றால் எழுதுங்கள். 1986 அக்டோபரில் துபைக்கு நாம் தயாரித்துச் சென்ற பெயர் சம்பந்தப்பட்ட “ஸலஃபி” கட்டுரையையே இடம் பெறச் செய்கிறோம்.

கல்லை வணங்குகிறவர்கள் அதை நியாயப்படுத்த கல்லை வணங்கக் கூடாது என்று சொல்லும் நீங்கள் “மக்கா” சென்று அங்கு ஒரு கல் கட்டிடத்தை சுற்றி வருகிறீர்களே? என்பதற்கும், வட்டித் தொழிலில் மூழ்கி இருப்பவர்கள் அதை நியாயப்படுத்த ஒரு பொருளை ஐந்து ரூபாய்க்கு வாங்கி அதனை 5.50 ரூபாய்க்கு விற்பது கூடும் என்றால் 5 ரூபாய் கொடுத்துவிட்டு 5.50 ரூபாய் வாங்குவதில் தவறு என்ன இருக்கிறது? என்பதற்கும், இயக்கப் பேர்களை நியாயப்படுத்த “முஸ்லிம்” என்ற பெயரில் இயங்கச் சொல்லும் நீங்கள் உங்கள் பெயரை “முஸ்லிம்” என்று ஏன் வைத்துக் கொள்ளவில்லை? என்பதற்கும் எவ்வித வித்தியாசமும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. சத்தியத்தை தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக இதனைச் சுட்டிக் காட்டுகிறோமேயல்லாமல், குத்திக் காட்டுவதற்காக அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

***************************************************************************************************************************************************************************************************

குர்ஆனின் நற்போதனைகள் : தொடர் : 1.

இறைநேசம் இழந்தவர்கள் யார்? யார்?

தொகுப்பு : A.முஹம்மது அலி, M.A.M.Phil.

நிச்சயமாக அல்லாஹ் :

1. (அல்லாஹுவின் கட்டளைகளை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகளை நேசிப்பதில்லை. (2:276)

2. (கர்வங்கொண்டு) பெருமையடிப்பவர்களை நேசிப்பதில்லை. (16:23)

3. (பெருமைக்கொண்டு) மகிழ்ச்சியடைபவர்களை நேசிப்பதில்லை. (28:76)

4. (கொடிய) பாவியான சதி செய்வோரை நேசிப்பதில்லை. (4:107)

5. கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (4:36, 31:18, 57:23)

6. இறை மறுப்பாளர் (காஃபிர்)களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 3:22, 30:45)

7. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. (2:205)

8. குழப்பம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (5:64, 28:77)

9. அக்கிரமம், அநியாயம் செய்வோரை நேசிக்கமாட்டான். (3:57,3:140,42:40)

10. வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (6:141, 7:31)

11. மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (8:58)

12. நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நேசிப்பதில்லை. (22:38)

13. அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு எவரும் வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை விரும்புவதில்லை. (4:148)

14. வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190, 5:87, 7:55)

நமது கடமை என்ன?

(நபியே!) நீர் கூறும்: நீங்கள் அல்லாஹுவை நேசிப்பீர்களேயானால், என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான். (3:31)

(அடுத்த தொடர், இறை நேசம் ஈட்டுபவர்கள் யார்! யார்!!)

***************************************************************************************************************************************************************************************************

நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் ஏன்! – அபூசாலிஹ்.

புகாரீ, முஸ்லிம் ஆகிய இரு பெரும் நபிமொழி நூல்களிலும் இடம் பெற்றுள்ள ஓர் அறிவிப்பு கூறுகின்றது. “என் தோழர்களைக் குறை சொல்லாதீர்கள். எவனுடைய கரத்தில் என் உயிர் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை தருமம் செய்தாலும் என் தோழர்களில் ஒருவர் ஒரு முத்து (இரு கைகளில் குவிந்திருக்கும்) அளவு செய்த தருமத்திற்கு அல்லது அதில் பாதியளவு செய்த தருமத்திற்கு ஈடாக முடியாது”.

நபித் தோழர்களுக்கு இவ்வளவு மகத்துவம் கிடைத்தது எதனால்? அவர்களிடத்தில் நம்மால் புரிந்துகொள்ள முடியாத ரகசியமான ஒரு புனிதம் இருந்ததால்தான் இந்த மகத்துவம் அவர்களுக்குக் கிடைத்ததா? இல்லை; மாறாக அதற்கு அறிவுப்பூர்வமான காரணம் ஒன்று உள்ளது. அதனை திருக்குர்ஆனில் அல்லாஹுதஆலாவே நமக்குச் சொல்லிக் காட்டுகின்றான்.

உங்களில் எவர் (இஸ்லாத்தின்) வெற்றிக்கு முன்பு அதற்காகச் செலவு செய்து போரிட்டார்களோ அவர்கள் வெற்றிக்குப் பின்பு செலவழித்து போரிட்டவர்களுக்குச் சமமாகமாட்டார்; வெற்றிக்கு முன்பு செலவிட்டுப் போரிட்டவர்கள், வெற்றிக்குப் பின்னர் செலவிட்டுப் போரிட்டவர்களை விட மிக உயர்ந்த அந்தஸ்துடையவர்கள் ஆவர். (57:10)

மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்னால் நாயகம்(ஸல்) அவர்கள் எதார்த்தத்தில் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் உலக ரீதியாக அவர்களுடைய உயர் அந்தஸ்து இன்னும் நிரூபிக்கப்படாமலிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் இறை தூதரைப் புரிந்து கொள்ளவும் அவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும் பிரத்தியேகமான ஒரு அறிவாற்றல் தேவைப்பட்டது. வெளித் தோற்றத்தைக் கண்டு ஏமாந்து விடாமல் ஊடுருவிப் பார்த்து உண்மையை விளங்கிக் கொள்ளும் விசேஷ ஆற்றல் தேவைப்பட்டது; அப்படியே உண்மையை விளங்கிக் கொண்டாலும் கூட அண்ணாலருடன் ஒத்துழைத்திட பெரும் துணிச்சல் தேவைப்பட்டது. ஏனெனில், சத்தியவாதியான நாயகத்துடன் ஒருவர் ஒத்துழைப்பது என்பது அந்த நேரத்தில் சமுதாயம் முழுவதையும் பகைத்துக் கொண்டு அதில் அவர் ஒதுக்கப்பட்டவராக, தீண்டத் தகாதவராக நம்மைத் தாமே ஆக்கிக் கொள்வதாக இருந்தது. அத்தகைய கடினமான சூழ்நிலையில் இந்தத் தியாகத்திற்கு ஒருவர் முன்வந்தாலும் அப்போதைய நிலையை மனத்திற்கொண்டு பார்க்கும்போது அவருக்கு அதற்கான பலன் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உத்திரவாதமும் கூட இல்லாதிருந்தது.

இறைத்தூதர்களை நிராகரித்தவர்கள் அவர்களின் வெளிப்படையான நிலைமையைக் கொண்டு இறைத் தூதர்களையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பார்த்து “உங்களிடம் எந்த மேம்பாடும் சிறப்பும் இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லையே” என்றுதான் சொன்னர்கள். இறைத்தூதர்கள் “நாங்கள் கொண்டு வந்திருக்கும் இறைச்செய்தி உண்மையானதே என்பதைக் காட்டும் (அறிவின் தெளிவான) சான்று உங்களுக்குப் புலப்படவில்லையா? என்று கேட்டார்கள்.

இந்த உலகத்தில் தனிச்சிறப்புகள், வசதி வாய்ப்புகள், செல்வாக்கு ஆகியன சத்தியவாதிகளுக்கு இல்லாதிருந்த நிலையை-இந்த வெளித் தோற்றத்தை பார்த்து முடிவெடுக்கும் போக்குதான் சத்தியவாதிகளைப் புரிந்து கொள்ள எல்லாக் காலங்களிலும் தடையாக இருந்து வந்திருக்கின்றது. நபி நூஹ்(அலை) அவர்கள் தமது பிரச்சாரத்தை தன் சமூகத்தாரிடையே செய்து வந்தபோது இதே காரணத்தால் நூஹ்(அலை) அவர்களுக்கு நமக்கில்லாத தனிச் சிறப்பு எதுவும் வெளிப்படையில் இருப்பதாகவோ, வசதி வாய்ப்புகள், உலகியல் பலம், செல்வாக்கு எதுவும் இருப்பதாகவோ தெரியாததால் அந்தச் சமூகத்து மக்கள் அவர்களிடமும் இப்படித்தான் கேட்டார்கள்! அவர்களது கேள்வியையும் நபி நூஹ்(அலை) அவர்களின் பதிலையும் அல்லாஹ் பின் வருமாறு திருக்குர்ஆனில் எடுத்துரைக்கின்றான்.

நாம் நூஹ்(அலை) அவர்களை அவரது சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் (அம்மக்களிடையே சென்று) நான் “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாது” என்று பகிரங்கமாக உங்களை அச்சுறுத்தி எச்சரிக்கக் கூடியவனாவேன்” துன்புறுத்தும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக்கொள்ளும் என்று நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார்கள். அவரது சமூகத்தவரில் அவரை நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே நாங்கள் காண்கிறோம், எங்களில் அப்பாவிகளான கீழ்த்தட்டு மக்கள் மட்டுமே உங்களைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். மேலும் உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக எங்களுக்குப் புலப்படவில்லை: மாறாக நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகின்றோம்.” (11:26-27)

(இந்த வாதங்களைக் கேட்ட) நபி நூஹ்(அலை) அவர்கள் கூறினார்கள். “என் சமூகத்தவரே! நான் என் ரப்பிடமிருந்து எனக்குக் கிடைத்திருக்கும் ஓர்(அறிவின்) சான்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளேன். (11:28)

ஆனால் இந்த சிந்தனைப் பூர்வமான சான்றை ஆதாரத்தை அந்த மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பொது மக்கள், சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்களை உலக செல்வாக்கு உடையவர்களாகப் பார்த்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்ள முன்வருகிறார்கள். ஆனால் சத்தியவாதிகள் அறிவாதாரத்தின்-இறையாதாரத்தின் அடிப்படையில்தான் நிற்கின்றார்கள், உலக செல்வாக்கின் அடிப்படையில் நிற்பதில்லை.

நாயகம்(ஸல்) அவர்களின் வாய்மையைப் புரிந்து கொள்ள இந்த அறிவாதாரத்தைத் தவிர வேறெந்த உலக பலமும் செல்வாக்கும் சிறிதும் இல்லாதிருந்த ஒரு காலகட்டத்தில்தான், நபித்தோழர்கள் அண்ணலாரின் வாய்மையைப் புரிந்துகொண்டு அவர்களுக்குப் பக்கபலமாக நின்றார்கள், தங்கள் உலக லாபங்களைக் குறித்தோ தங்கள் எதிர்காலத்தைப் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை. மக்கள் ஆதரவு கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணி சஞ்சலமும் அடையவில்லை, அவர்கள் இறை திருப்தியை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டார்கள், மறுமை வெற்றியைக் கருத்தில் கொண்டு, நாயகம்(ஸல்) அவர்களுக்கு வெளிப்படையாக தமது ஆதரவை தெரிவித்துப் போராட்டக் களத்தில் குதித்தார்கள், பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இஸ்லாத்தை ஓங்கச் செய்திட தமது முழு ஒத்துழைப்பையும் நல்கினார்கள், தம்முடைய இந்தத் தனிப்பெரும் தியாகப் பண்பின் காரணத்தால்தான் நபித்தோழர்கள் அல்லாஹ்விடத்தில் இவ்வளவு பெரிய அந்தஸ்தை அடைந்தார்கள்.

**************************************************************************************************************************************************************************************************

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!! தொடர் : 8 – K.M.H.அபூ அப்தில்லாஹ்.

சமுதாய மேம்பாட்டுக்காக, மனிதகுல ஒற்றுமைக்காக நாஸ்திகர்கள் எடுத்து வைக்கும் திட்டங்கள் தவறு, மேலும், மனித சீரழிவையே உண்டாக்கும் என்ற விவரங்களைப் பார்த்து வருகிறோம். அந்தத் தொடரில் இந்த இதழில் சமுதாய கூட்டு அமைப்புக்கு அரசியல் அத்தியாவசியமாக இருக்கின்றது. அந்தக் காரணத்தை பயன்படுத்தி அரசியல் இடைத் தரகர்களான அரசியல்வாதிகள் எப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் மனித சமுதாயத்திற்கு இழைத்து வருகின்றனர். நாஸ்திகர்கள் தங்கள் சித்தாந்தங்களின்படி அரசியல் வேண்டாம். அரசியல் என்று ஒன்று இல்லை. அரசியலை கற்பிப்பவன் முட்டாள் என்று கோஷங்கள் போடுவதற்கு பதிலாக, அரசியலில் மிகமிகத் தேவை என்றே சொல்கின்றனர். அந்த அரசியலில் இவர்கள் மிகப்பெரும் பங்கே வகிக்கின்றனர். தமிழ்நாட்டில் செல்வாக்கினைப் பெற்றுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளெல்லாம் நாஸ்திகத்தைப் பரப்பிய பெரியாரின் போதனைகளின்படி செயல்படுகிறோம் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் தான் பெரும்பாலான இன்றைய அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய குணநல ஒழுக்கங்கள் எப்படிப்பட்டவை? என்பதை அன்றாட செய்தி பத்திரிகைகளைப் பார்ப்பவர்கள் மிக அதிகமாக தெரிந்து வைத்துள்ளனர். கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்கள், அவற்றிற்காக துணிந்து பல கொலைகளை செய்பவர்கள் இன்னும் இது போன்ற பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவோர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அரசாங்க உத்தியோகஸ்தர்களையும் நாட்டு மக்கள் அன்றாட செய்திகள் மூலம் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட சமூக விரோத காரியங்கள் இன்றைய பல அரசியல்வாதிகளின் பூரண ஆதரவோடும், ஒத்துழைப்போடும் தான் நடந்து வருகின்றன என்பதை நம்மை விட நாஸ்திகர்கள் நன்கு அறிவார்கள். அப்படியிருந்தும் அரசயில் அவசியம் இல்லை என்று அவர்கள் சொல்லுவதில்லை.

அரசியல் அமைப்பே நாட்டு மக்களின் நலனைக் கருதியே இருக்கிறது என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள். ஆனால், நாட்டு மக்களின்  நலனை விட அரசியல்வாதிகளாகிய தங்களின் நலனை முன் வைத்தே சட்டங்கள் அமைக்கின்றனர். அவர்களால் இயற்றப்படும் சட்டங்களைக் கொண்டு, அரசியல்வாதிகளாகிய அவர்களும் அவர்களுக்கு துணை நிற்கும் அரசாங்க அதிகாரிகளும் கொழுத்து வளர்கின்றனரேயல்லாமல், நாட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடி வதங்கி அவஸ்தைப்படும் அவலக் காட்சிகளைத்தான் பார்த்து வருகிறோம். உதாரணத்திற்கு மக்களின் அன்றாட தேவைக்கு அத்தியாவசியமான பொருட்களில் விற்பனை வரி என்று அரசு அமைத்திருக்கும் வரிமுறையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மக்கள் நலனைக் கருதும் அரசாக இருக்குமேயானால் ஏழை மக்கள் உபயோகிக்கும் பொருட்களில் வரிவிதிக்கும் முறையை ஒருபோதும் மேற்கொள்ளாது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஒருமுனை வரிவிதிப்பைக் கொண்டும் திருப்திப்படாமல், பல பொருட்களில் பலமுனை வரிவிதிப்பு முறையை அமுல்படுத்தியிருப்பதையும் பார்க்கிறோம். இந்த பலமுனை வரிவிதிப்பு முறை நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ பலன்தரும் ஒரு முறையல்ல. மாறாக அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் வியாபாரிகளிடமிருந்து பணம் கொள்ளை கொள்ளையாகப் பிடுங்கும் ஒரு வழியாகும்.

ஒருமுனை வரிவிதிப்பால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படாது. மாறாக செழிப்பான ஒரு நிலையையே பார்க்கலாம். ஆனால், இன்றைய அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ அதற்கு தயாராவார்களா? என்றால் நிச்சயமாக ஒருபோதும் தயாராகமாட்டார்கள். காரணம், இத்திட்டத்தைக் கொண்டு நாட்டு மக்கள் பயனடைவார்களேயல்லாமல் இந்த அரசயில்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ கொழுத்த இலாபம் அடைய முடியாது. அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உற்பத்தியாளர்களிடமும், வியாபாரிகளிடமும் இருக்கும் செல்வாக்கு இல்லாமல் போய்விடும். இவர்கள் இலட்சலட்சமாக, கோடி கோடியாக உற்பத்தியாளர்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் பணம் திரட்ட முடியாது.

வியாபாரிகள் விற்பனை வரி அதிகாரிகளின் மிரட்டல்களுக்கோ, அச்சுறுத்தல்களுக்கோ ஆளாக வேண்டி வராது. உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இலட்சலட்சமாக, கோடிகோடியாக. இன்றைய அரசயில்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் கொடுத்துவிட்டு அதனை வியாபார முதலீடாகக் கருதி ஆதாயத்தோடு அவற்றைப் பெற்றுக்கொள்ள தரமில்லாத பொருட்களை தயார் செய்தும், கலப்படங்கள் செய்தும் பொதுமக்களை வஞ்சிக்கும் நிலை ஏற்படாது. ஆக இப்படி பலமுனை வரியால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் பல தீமைகளை களைய முடியும்.

பெருங்கொண்ட வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் விலைக்கு வாங்கி விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதே என்று யாரும் கேட்டால், இவர்கள் ஏன் அப்படி விலை போகிறார்கள்? என்பதே நமது கேள்வியாகும். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தனக்கு தேர்தல் நிதி இரண்டரைக் கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இன்னொரு கட்சி ஒன்றரை கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இன்னொரு கட்சி ஒன்றரை கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இப்படி தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைதானா? ஒரு வேட்பாளருக்கு விளம்பர வகைகளுக்காகவும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அவை முறைப்படி இருக்குமேயானால், எவ்வளவு செலவாகிவிடப் போகிறது. புள்ளி விவரம் தெரியாமல்தான் இன்றைய அரசியல்வாதிகள் இருக்கின்றனரா? கோடிக்கணக்கில் உற்பத்தியாளர்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் தங்களை விற்று பெறவேண்டிய அவசியமென்ன வந்துவிட்டது. கோடிக்கணக்கில் கொடுப்பவர்கள் இவர்களின் துணை கொண்டு பல கோடி திரட்டி விடமுடியும் என்ற தைரியமில்லாமலா கொடுக்கின்றனர். நாளை இவர்கள் ஆட்சியில் அமரும்போது கோடி கோடியாக கொடுத்தவர்களுக்கு அடிபணியாமல் இருக்க முடியுமா? அதன் விளைவு என்னவாகும்? அப்படிப்பட்ட ஆட்சிகளைக் கொண்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு நலன் ஏற்படும் என்று நாஸ்திகர்கள் நம்புகின்றார்களா? இப்படிப்பட்ட அரசியலில் இவர்களும் பங்கெடுக்கின்றார்களே, அப்படியானால் அதன் இரகசியம் என்ன? நாட்டு மக்களின் நலனிலும், ஒற்றுமையிலும், சமுதாய மேம்பாட்டிலும் உண்மையில் அக்கறையுடையவர்கள் இப்படிப்பட்ட அரசியலமைப்பை சரிகாண முடியுமா? அதற்கு துணைபோக முடியுமா? இதற்கு நாஸ்திகர்களின் பதில் என்ன?

இன்று பிரபலமான பீரங்கி ஊழல்… இந்திய பாதுகாப்புத் துறைக்கே கேடுதரும், அவமானத்தைத்தரும் நிகழ்ச்சி, அரசியல்வாதிகளின் முறைகேடான செயல்களால் அரசியலுக்கே இழுக்காக அமைந்துள்ளது. இன்று பரபரப்பூட்டும் பல கொலைகளுக்குப் பின்னணில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையென கூறப்படுகிறது. இதுவும் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள ஓர் அவப்பெயர். மேலும் சாராயத் தொழிலும், சூதாட்டத் தொழிலும் அரசியல்வாதிகளின் அணிவகுப்பே மேலோங்கி நிற்கிறது. சுருங்கச் சொன்னால், இன்று நம் நாட்டில் நீக்கமற நிறைந்துள்ளது ஊழல்தான். அந்த ஊழல்களுக்கு முழு முதற்காரணமாக, களமாக இருப்பவர்கள் இன்றைய அரசியல்வாதிகளே!

இப்படிப்பட்ட இன்றைய அரசியலை நாஸ்திகர்கள் சரிகண்டு அவர்களும் இன்றைய அரசியலில் எப்படி பங்கு வகிக்கின்றார்கள்? இவ்வாறு கேட்பதின் காரணம், இறைவனின் பெயரால் மதப்புரோகிர்கள் மக்களை ஏமர்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருகிறார்கள். என்பதற்காக “கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளைக் கற்பிப்பவன் முட்டாள்! கடவுளை ஆக்கியவன் அயோக்கியவன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!” என்று கோஷமிடும் நாஸ்திகர்கள் இங்கு அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் என்ற என்ற புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருவதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாஸ்திகர்கள் இங்கு அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் என்ற புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருவதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாஸ்திகர்கள் “அரசியல் இல்லை! இல்லவே இல்லை! அரசியலைக் கற்பிப்பவன் முட்டாள்! அரசியலை ஆக்கியவன் அயோக்கியன் அரசியலை ஒப்புக்கொள்கிறவன் காட்டுமிராண்டி!” என கோஷமிடுதில்லையே! ஏன்? மாறாக, இப்படிப்பட்ட நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் இவர்களும் மூழ்கிக் குளிப்பதேன்? என்பதே நமது கேள்வியாகும். நாஸ்திக நண்பர்கள் விடையளிப்பார்களா?

நாஸ்திகர்கள் சிந்தித்து விளங்கத் தவறிய அந்த பேருண்மையை நாம் தெளிவுபடுத்துகிறோம். மனிதன் தேவையுடையவனே, தேவையற்ற ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடியாது. தேவை எத்தனை முக்கியமானதாக அமைகின்றதோ, அந்தளவிற்கு நெருக்கடியும் ஏற்படும். எனவே, இடைத்தரகர்கள் ஏற்படுவதும் இயல்பே, இப்படிப்பட்ட இடைத்தரகர்களின் மனிதாபிமானமற்ற மிருகச் செயல்களைக் கண்டித்து, அவர்களை திருத்தப் பாடுபடவேண்டுமேயல்லாமல், இடைத்தரகர்கள் உண்டாகக் காரணமாயிருந்த தேவைகளை மறுப்பது மனிதச் செயலல்ல. மனிதன் மனிதனாக வாழ இறை நம்பிக்கை மிக மிகத் தேவையானதாகும். இறை நம்பிக்கை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ள எந்த மனிதனும் மனச்சாட்சிக்கு விரோதமாக செயல்படுவான் என்று நாம் நம்பவே முடியாது. போலி ஆஸ்திகர்களைப் பார்த்து இந்த நாஸ்திகர்கள் ஒரு பெரிய தப்பான முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றே சொல்லமுடியும். மக்களிடையே சரியான, முறையான, தெளிவான ஓரிறை நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலம் இன்று மக்களிடையே மலிந்து காணப்படும் பல ஊழல்களையும் தவறுகளையும், ஓருவரை ஒருவர் ஏமாற்றும் கொடுஞ்செயல்களையும் அகற்றி நேர்மையான, உன்னதமான சகோதரத்துவம் நிலவும் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அந்தப் பேருண்மையாகும்.

***************************************************************************************************************************************************************************************************

வேதனைக் குரல் – M.K.முஹம்மது யூசுப் (சின்னமரைக்கார்) தம்மாம், சவுதி அரேபியா.

அமெரிக்காவில் ஒரு பெண்மணி இஸ்லாத்தில் இணைந்தார் என்ற செய்தியை மே 88 அந்நஜாத் இதழில் வாசித்தேன். பரம்பரையாக பிறப்பால், வளர்ப்பால் முஸ்லிமாக இருக்கும் நம்முடைய நிலையை எண்ணத்தூண்டியது. நம் நிலை வேதனைத் தருவதாகவே உள்ளது. ஏதோ ஒரு கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்து வந்த அப்பெண்ணுக்குத் தன் தாய்மொழியில் திருக்குர்ஆனின் மொழிப் பெயர்ப்பு கிடைக்கப்பெற்று வாசித்ததும் உண்மையை உணர்ந்து அறிந்து, திருமறையின் போதனைப்படி வாழத் தொடங்கிவிட்டார். திருமறை கூறுகிறது.

(நபியே!) நாம் உம்மீது அருளியிருக்கும் இவ்வேதம் மிக்க பாக்கியம் உடையதாகும். அறிவுடையோர் இதன் வசனங்களைச் சிந்தித்து ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவார்களாக! (38:29)

(மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து) நல்லுணர்ச்சி பெரும் பொருட்டு இ(ந்த)த் திருக்குர்ஆனை நிச்சயமாக நாம் மிக்க எளிதாக்கியிருக்கிறோம். ஆகவே (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுவோர் எவரும் உண்டோ? (54:17)

“மார்க்க அறிஞர்கள்” என்று தம்மை அழைத்துக் கொண்டவர்கள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி சுய லாபத்திற்காக குர்ஆனின் போதனையை மறைத்தும், திரித்தும் கூறி, கட்டுக் கதைகளை உண்மைக்குப் புறம்பானவைகளை, எடுத்தியம்பி மக்களை வழிகேட்டில் நிலைநிறத்தினர். மக்களும் அதையே மார்க்கம் என நம்பி வாழ்ந்தனர். குர்ஆனை காலமெல்லாம் பத்திரப்படுத்தி வைத்து, இறந்தவர்களுக்குப் புண்ணியம் சேர்க்க மட்டுமே எடுத்து ஓதுவது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்கள்.

அல்லாஹ்வின் உதவியால் குர்ஆனையும், ஹதீஸ்களையும் நம் தாய் மொழியிலேயே வாசிக்க பாக்கியம் கிட்டியும் நம் தமிழ்நாட்டில் “தீனின்” நிலை என்ன?

இஸ்லாமிய மாத இதழ் என நாமம் சூட்டி பவனி வரும் இதழ்கள் எண்ணற்றவை. “ஹனபி மத்ஹபைச் சேர்ந்த பெண்ணுக்கு ஹனபி மத்ஹபைச் சேர்ந்த மணமகன் தேவை”; பள்ளிவாசலுக்கு ஷாபி இமாம் தேவை; “…………அவுலியாவின் சந்தனக்கூடு சிறப்பாக எடுக்கப்படும்” “குறைந்த கட்டணத்தில் அஜ்மீர் ஷரீப் உர்ஸ் கண்டு வரலாம்” “….இத்தியாதி விளம்பரங்கள் நிறைந்து காணப்படும் அவைகளில்; இரங்கல் கூட்டம்”, “திருமண வாழ்த்து” இவைகளின் அறிவிப்புகள், “……புகையிலை”; ……..பீடி இவைகளின் விளம்பரங்கள் தாங்கி வருபவையே இஸ்லாமிய மாத இதழ்கள்!

 அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூலுல்லாஹ் என்று உள்ளத்தால் உறுதிக்கொண்டு நாவால் மொழிந்தவர்கள் தம்மை ஹனபி, ஷாபி என்று பரிவுபடுத்தி ஹனபிக்கு ஓர் சட்டம், ஷாபிக்கு பிறிதொரு சட்டம் வகுத்திட்டனர். கல்யாணங்களில் வெறுக்கப்பட்ட நிபந்தனைகள், அனாச்சாரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. “பாத்திஹா” என்ற பெயரில் இஸ்லாத்தில் இல்லாத பித்தலாட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவைகளை அவற்றின் சுய உருவம் வெளிப்பட நமக்குக் காட்டி நம்மை விழிப்படையச் செய்தது ஓரிரு பத்திரிகைகளே!

சாதாரண மக்கள் கண்விழித்து உண்மையை உணர்ந்திட வழி வகுத்த இம்மாத இதழ்களின் ஆசிரியர்களை, “மார்க்க அறிஞர் தாமே என இறுமாப்புக் கொண்டு மனமறிந்து தூய இஸ்லாத்திற்கு முரணானவைகளை ஆகுமானவை எனக் கூறி அலையும் ஆலிம்கள் என்று சொல்லிக் கொள்வோரும், பத்திரிகை ஆசிரியர்களும் குழப்பவாதிகள் என வாய்க் கூசாமல் கூறிடத் துணிந்துவிட்டனர்.

குர்ஆனையும், ஹதீதுகளையும் இறைவாக்கு என்றும், நபிமொழி என்றும் ஈமான் கொண்ட பரம்பரை முஸ்லிம்களிடையே திருமறையின் போதனைகளையும், ஹதீதுகளின் அறிவுரைகளையும், உள்ளது உள்ளபடி எடுத்துரைப்பவர்களுக்கு “இஸ்லாத்தின் பாதுகாவலர்கள்” எனக் கூறும் மவ்லவிகளே எதிரிகளாகத் தோன்றும் இக்கால கட்டத்தில் மேற்கத்திய கலாச்சாரமும், நாகரிகமும் நிலவும் அமெரிக்காவில், ஒரு பெண்மணி குர்ஆனை தானே வாசித்தறிந்து, நல்லுணர்ச்சி பெற்று இஸ்லாத்தைத் தழுவினர் என்றால், அல்லாஹ்வே அவருக்கு “ஹிதாயத்” நல்கி அருளினான் என்பது திண்ணம்.

நிச்சயமாக இந்த குர்ஆன் (மனிதர்களுக்கு தெளிவான) மிக நேரான வழியை அறிவிக்கின்றது (அல்குர்ஆன் 17:9) இவ்விறை வசனம் இவர்களது உயர்வாழ்வின் நிலையை அன்றே அறிவித்திருப்பதைப் பாருங்கள்.

அறிந்து, மன முரண்டாக மனசாட்சிக்கு எதிராகப் பேசியும், செயல்பட்டும் வரும் மவ்லவிகளே! உங்களுக்கும் அல்லாஹ் (ஹிதாயத்) நல்குவான்; மவ்லிது, பூரியான் ஃபாத்திஹா, மூன்றாம், ஏழாம், பத்தாம், நாற்பதாம் ஃபாத்திஹாக்கள் இஸ்லாத்திற்கு முருணானவை என்பதை உணர்வீர்கள், நூல் முடிவது, தாயத்துக்கள் கட்டுவது எல்லாம் ஆகுமானவை அல்ல என உள்ளம் உணர்ந்து வருந்துவீர்கள். காலம் கடந்து விடாமல் தவறை உணர்ந்து தெளபாச் செய்து மீளுங்கள்.

பிர்அவுன் தன் வாழ்நாள் முழுவதும் இறைவனை நிராகரித்து விட்டு தன் இறுதிக் கட்டத்தில் ஈமான் கொள்ள விரும்பினான். ஆனால் அவனுடைய மரண ஓலத்தை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவில்லை. 10:90-92 இறை வசனங்கள் இறை உணர்த்துகின்றன.

வேறு சிலர் (இருக்கின்றனர். அவர்கள்) தங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கின்றனர். (அறியாமையினால்) நல்ல காரியத்தைக் கெட்ட காரியத்துடன் கலந்து செய்து விட்டனர். அல்லாஹ் அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்து விடலாம். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கிருபை செய்வோனுமாக இருக்கின்றான். (9:102)

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மன்னிப்புக் கோருதலை அங்கீகரிக்கின்றான் என்பதையும், நானங்களை ஏற்றுக் கொள்ளுகிறான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னித்துக் கிருபை செய்வோன் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? (3:104)

நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்கள் எல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம் (35:28) என்ற இறை வசனத்திற்கு ஒப்ப, மவ்லவிகளே! நீங்கள் கூறுவது போல் உண்மையில் நீங்கள் ஆலிம்களாயின் மக்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க முன் வாருங்கள். மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களால் சரிந்து கிடக்கும் சமுதாயத்தை நிமிர்த்தி தலைதூக்கி நிற்க ஆவன செய்திடுவீர்.

நபி(ஸல்) அவர்களும், ஸஹாபா பெருமக்களும் இஸ்லாத்தை நிலைநாட்ட செய்த தியாகங்களை நினைத்துப் பாருங்கள். தூய இஸ்லாத்தை அதன் உண்மை வடிவில் கண்டு செயல்படுங்கள்; எடுத்துச் சொல்லுங்கள். பொது கபுருஸ்தானில், ஸியாரத் எப்படி, எங்ஙனம் நிறைவேற்றப்பட வேண்டும் என நபி(ஸல்) காட்டித் தந்தார்களோ, அங்ஙனம் நிறைவேற்றுங்கள், நிறைவேற்றும்படி மக்களுக்கு எடுத்துக் கூறுங்கள். அவ்லியாக்களிடம் உதவி தேடுவது தான் “ஸியாரத்” என்று கூறி மக்களை வழி கெடுக்க வேண்டாம் சந்தனக் கூடு, ஒடுக்கத்துப் புதன், இறந்தவர்களுக்காக ஓதும் ஃபாத்திஹாக்கள் மவ்லிது இவை இஸ்லாத்திற்கு மாறானவை என்று கூறத் தயங்காதீர். “மத்ஹபு” ஒன்றிலே கண்மூடி நிற்க வேண்டும் என்று கூறாதீர் நபி(ஸல்) அவர்களில் வழிமுறையை எடுத்துரையுங்கள்.

யா அல்லாஹ்! சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொள்ளுங்கள் எனும் உன் கட்டளையை ஏற்று, தன் உடல், பொருள், சுகம் அனைத்தும் தியாகம் செய்து, பல இன்னல்களுக்கு ஆளாகி மார்க்கத்தை எங்களுக்கு எத்தி வைக்கும் உத்தமர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அருள்வாயாக!

யா அல்லாஹ்! நேர் வழிகாட்டுபவனே! என்றும் நிலைத்திருப்பவனே! அந்த உத்தமர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றி அருள்வாயாக!

யா அல்லாஹ்!  நேர்வழி காட்டுபவனே!

என்றும் நினைத்திருப்பவனே! அந்த உத்தமர்களின் சேவையை அடையச் செய்து இவர்களது இலட்சியம் நிறைவேற அருள்வாயாக! யா அல்லாஹ் இவர்கள் தீனுக்காக செய்யும் சேவையைப் பொருந்திக் கொள்வாயாக!

யா அல்லாஹ் முஸ்லிமான ஆண், பெண் யாவருடைய பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! ரஹ்மானே! ரஹீமே, எங்களை முஸ்லிம்களாக வாழவைத்து முஸ்லிம்களாகவே மரணிக்கச் செய்வாயாக!

***************************************************************************************************************************************************************************************************

அந்நஜாத் நிர்வாகக் குழுவின் அறிவிப்பு!

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அந்நஜாத் நிர்வாகக் குழு கீழ்க்காணும் தகவல்களை உங்களுக்கு அறிவிக்க கடமைப்பட்டுள்ளது.

1. அந்நஜாத் சமுதாயப் பத்திரிக்கையாக ஒரு நிர்வாகக் குழுவினரால் நிர்வகித்து வரப்படுகிறது.

2. இதன் சந்தா மற்றும் நன்கொடை வரவுகள் அனைத்தும் இப்பத்திரிக்கைக்கே முழுமையாக செலவழிக்கப்படுகிறது.

3. இதன் வரவு – செலவு கணக்குகள் நிர்வாகக் குழுவால் முறையாக இன்றளவும் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

4. தற்போதைய அந்நஜாத் ஆசிரியர் எவ்வித ஊதியத்தையும் எதிர்பாக்காமல் சேவையின் அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.

5. அதே போல் நிர்வாகியும் எவ்வித ஊதியத்தையும் எதிர்பாராமல் சேவையின் அடிப்படையில் பணி புரிந்து வருகிறார்.

ஆனால் இவற்றிற்கு மாற்றமாக அந்நஜாத் மீது பல அவதூறு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை அறிகிறோம். அந்நஜாத் நின்று விட்டதாகவும், அதற்குப் பகரமாக வேறு பத்திரிக்கைகள் வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட தவறான பிரச்சாரங்களை யாரும் நம்பவேண்டாம்.

அந்நஜாத் சம்பந்தமாக எந்த விஷயத்திலும் தெளிவைப் பெற விரும்புவோர் அந்நஜாத் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு நேரடியாகத் தொடர்பு கொண்டு தெளிவு பெறாமல் ஒரு தரப்பு விஷயங்களை மட்டும் உண்மை என நம்பி அநேக சகோதரர்கள் அந்நஜாத்திற்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக, அந்நஜாத் தனது பணியைத் தொய்வின்றித் தொடர்வதில் சற்று பொருளாதார சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மனவளமும், பொருள் வளமும் மிக்க சகோதர, சகோதரிகளே! அந்நஜாத் தனது பணியைத் தொடர அல்லாஹ்விடம் துஆச் செய்வதோடு, அல்லாஹ்வின் பொருத்தத்தை அன்றி, வேறு எந்த நோக்கமும் இல்லாமல் அல்லாஹ்வுக்காகவே பொருளுதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். தங்களுடைய சந்தாக்களை முறையாக புதுப்பிப்பதுடன் புதிய சந்தாக்களைச் சேகரித்து அனுப்பியும், விளம்பரங்கள் அனுப்பியும் உதவி செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இவண், அந்நஜாத் நிர்வாகக் குழுவினர்.

***************************************************************************************************************************************************************************************************

நான் ஏன் இஸ்லாத்தில் இணைந்தேன்! நந்தசேனா அப்துல்கரீம் ஆனார்!

தமிழாக்கம் : A.முஹம்மது அலி, M.A., திருச்சி-4.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் பெரும்பாலோருக்கு தமிழ் தாய்மொழியாகும். ஆனால் அழகிய தாடியுடன் காட்சியளிக்கும் கொடும்பு இஸ்லாமிய கல்வி மையத்தில் பணிபுரியும் அப்துல் கரீம் அவர்களுக்கு சிங்களம் தாய்மொழியாகும். இலங்கையில் பெரும்பான்மையான புத்த மதத்தவர்கள் பேசும் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்ட இவரது இஸ்லாமிய பற்றும், அதில் அவரது ஆழ்ந்த பிடிப்பும் அண்மையில் “இஸ்லாமிக் வாய்ஸ்” நிரூபர் நேரில் கண்டபோது வெளியானது. 37 வயதான இவ்விளைஞரின் சொந்த வாக்குமூவத்தை நமது வாசகர்களுக்கு விருந்தாக்குகிறோம்.

ஆரம்ப நிலை:

நான் அக்டோபர் 1985ல் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் புத்த மதத்தில் ஆழ்ந்த பிடிப்புள்ளவனாக இருந்தேன். நான் மார்டின்-பேபிநோனா என்ற புத்த பெற்றோருக்கு மகனாகப் பிறந்தேன். நான் கிறித்துவ பள்ளியில் பயின்றேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் புத்தப் பள்ளியான “தம்மா பள்ளிக் கூடங்களுக்கு” செல்வேன். அத்துடன் பைபிளையும் ஆழ்ந்து படித்திருக்கிறேன்.

இஸ்லாத்தை அறிந்தது:

அடுத்து இலங்கையில் மூன்றாவது பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களின் இஸ்லாத்தை அறிந்து கொள்ள அவர் எழுந்தது. எனக்கு ஒரு சில முஸ்லிம் நண்பர்கள் இருந்தனர். அவர்கள் மூலமாக சையத் குத்பு எழுதிய “இஸ்லாம்-தவறாக கணிக்கப்பட்ட மதம்” (Islam the Misunderstood Religion). சையத் மெளலூதி எழுதிய “இஸ்லாமிய அடிப்படைகள்” (Fundamental of Islam), மெளரிஸ் பொகைல் எழுதிய “குர்ஆன், பைபிள், விஞ்ஞானம்” (The Quran, The Bible and Science) போன்ற நூல்களை படிக்கலானேன். பிறகு புனித குர்ஆனையும் படித்தேன். விளக்கம் பெற்றேன். அக்டோபர் 1985-ல் இஸ்லாத்தில் இணைந்தேன்.

தொழுகையில் மன நிம்மதி:

இஸ்லாம் காட்டும் சகோதரத்துவம் என்னை மிகவும் கவர்ந்தது. முஸ்லிம்களின் தினசரி ஐவேளை தொழுகையில் அடியானுக்கும் அல்லாஹுவுக்குமிடையில் நேரடி தொடர்புகள் எம்மதத்திலும் இல்லாத சிறப்பு அம்சமாகும். ஒவ்வொரு தொழுகைக்கு பின்னும் இதுவரை நான் தேடித்திரிந்த மன அமைதியையும், நிம்மதியையும் உளமாற உணர்கிறேன். (பரம்பரை முஸ்லிம்களுக்கு இவ்வுணர்வு வராதது வருந்தத்தக்கது – ஆர்).

குடும்ப வாழ்க்கை:

நான் 1972ல் ஒரு புத்த பெண்மணியை மணம் புரிந்தேன். அவன் இன்னும் இஸ்லாத்தில் இணையவில்லை. இருப்பினும் எங்களுக்கிடையில் எவ்வித கருத்து மோதல்களும் ஏற்பட்டதில்லை. பரஸ்பர ஒற்றுமையில் குடும்ப வாழ்வு சுமுகமாக நடக்கிறது (இஸ்லாமிய வழியில் இவருடைய இல்லற வாழ்க்கை ஏற்புக்குரியதில்லை – ஆர்) எங்களுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். என் மனைவியை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் இணைக்க விரும்பவில்லை. அல்லாஹ் அவளுக்கு அருள்புரிந்து, இஸ்லாத்தில் இணையும் நாளுக்காக நான் எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன். எனது குடும்பத்தில் இஸ்லாமிய சூழ்நிலை உருவாக ஆசிக்கிறேன். (அல்லாஹ் இவரது ஆசையை நிறைவேற்றி வைப்பானாக – ஆமீன் – ஆர்)

முஸ்லிம்களைப் பற்றி இலங்கை மக்களின் கணிப்பு:

இலங்கையில் முஸ்லிம்களைப் பற்றி ஒரு தவறான எண்ணம் நிலவி வருகிறது. இலங்கை முஸ்லிம்கள் பணக்காரர்கள், ஏழு எட்டு மனைவிகளுடன் வாழும் மக்கள் என்ற எண்ணம் நிலவி வருகிறது. அது தவறான எண்ணம் என்பதை தெளிவான இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளுடன் அறிவு புகட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்். இலங்கையில் பெரும்பான்மையினரான புத்தமத நண்பர்களுடன் நாம் நேரடி மதச் சார்பான பேச்சுக்களில் (Dialogue) ஈடுபடவேண்டும்ட. உண்மை இஸ்லாமிய கொள்கைகளை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் விளக்க வேண்டும்.

எனது எதிர்காலம்:

இஸ்லாத்தைப் பற்றி நான் கற்றுக்கொண்டது மிகவும் குறைவு. இன்னும் அதிகமாக இஸ்லாத்தைப் பற்றி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். இப்போது நான் இலங்கை இரயில்வே ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்டில் வேலை செய்து வருகிறேன். இரயில்வே ஸ்டோர்ஸ் சோஷியல் இன்ஸ்டிடியூட்டின் சார்பில் பொதுநலப் பணிக்காக பொருள் திரட்ட லாட்டரி சீட்டு முறை கொண்டுவரவேண்டுமென நாடினார். ஒரு முஸ்லிமான நான் காரியதரிசியாக இருப்பதால்… லாட்டரி இஸ்லாமிய கொள்கைக்கு முரண்பாடானதால் அம்முறையில் பொருளீட்டுவதைத் தடுத்தேன். இதுபோன்ற இஸ்லாமிய கொள்கைகளை என்னால் முடிந்தவரை செயலாக்க முயற்சிப்பேன்.

**************************************************************************************************************************************************************************************************

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பி வாழ்வோரின் நிலை!

அபூ ஷுரைஹ்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறும்போது எனது காதுகள் கேட்டுக் கொண்டும், கண்கள் பார்த்துக் கொண்டிருந்தது. அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புவோர் தமது அயலகத்தாரிடம் முறையோடு கண்ணியமாக நடந்து கொள்வாராக! அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புவோர் தமது விருந்தாளியை கண்ணியத்துடன் உபசரிப்பாராக! அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புவோர் பேசினால் நல்லவற்றைப் பேசட்டும் இல்லையேல் மெளனமாயிருக்கட்டும். (புகாரீ, முஸ்லிம்)

***************************************************************************************************************************************************************************************************

உலகளவில்

தரீக்காவின் தவறான பிரச்சாரம் (An International Report) முஹம்மது தாஹா… சிங்கப்பூர்.

தமிழகத்தில் தரீக்காவின் பெயரால் பரப்பப்படும் தவறான பிரச்சாரத்தை முன்பு ஒரு கட்டுரையில் தந்தோம். தற்போது இரண்டாவதாக மலேசியாவில் நடந்த உண்மை சம்பவத்தைத் தருகிறோம். உலகளாவிய அளவிலும் வழிகெட்ட பற்பல தரீக்காவினரால் இஸ்லாத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை இக்கட்டுரை உணர்த்துகிறது. இதுபோன்ற தகவல்களைத் தந்தால், பித்தலாட்டங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, மக்களை விழிப்படையச் செய்ய இயலும்.  (ஆசிரியர்)

இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கம், அழகிய, தெளிவான சட்ட திட்டங்களை அல்லாஹ்வின் அருள்மறையும், நபி(ஸல்) அவர்களின் அல்ஹதீஸும், நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்விரண்டிற்கும் மாற்றமான வேறு வழிமுறைகளும் உண்டு என்று எவர் கூறினாலும் அவை மார்க்க வழியல்ல. வேண்டுமானால் தனி மனித வழி முறைகள் என்று அழைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாம் உலகளாவிய மார்க்கம், உலகளாவிய மார்க்கம் என்றால் அதன் சட்ட திட்டங்களும் ஒரே மாதிரியில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இஸ்லாத்தை உலகளாவிய மார்க்கம் என்று கூற முடியும். நாட்டுக்கு நாடு சட்டங்களும், திட்டங்களும் மாறுபட்டால் இது நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கமாகிய இஸ்லாமாக இருக்க முடியாது. மாறாக வழி கெடுக்கும் ஷைத்தானின் மார்க்கமாக இருக்கும். உதாரணமாக, உலகில் யானை என்று எதை கூறுகின்றோமோ அந்த யானைக்கு அதன் அமைப்புகள் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது யானை, மாறாக மீசை முளைத்திருந்தால் அது யானை அல்ல; பூனை என்று வேண்டுமானால் கூறலாம். இதே முறையில் இன்று இஸ்லாத்தில் தெளிவான ஷரீஅத் இருக்க, இதை விட்டுவிட்டு தரீக்கா என்றும், ஞான மார்க்கம் என்றும் ஒரு கூட்டம் கூறித் திரிகிறார்கள்.

பெயரை மட்டும் “முஸ்லிம் என்று சூட்டிக்கொண்டு வாழ்கிறார்கள். சர்கோனியும் (Imitation). வைரமும் பார்ப்பதற்கு ஒன்றுபோலவே தெரியும். தரம் பிரித்தால் உண்மை விளங்கும். பார்வைக்கு சர்கோனியும் வைரம் போலவே தோற்றமளிக்கும். விபரம் தெரியாவிட்டால் வைரம் என்று எண்ணி ஏமாற்றவேண்டும்.

இன்று பல தரீக்காக்கள் உலகில் நடமாடிக் கொண்டிருப்பதை அறிவீர்கள். அவைகளில் காதிரியா, நக்ஸபந்தி, சுஹ்ரவர்த்தி, ஸாதுலியா, நூரிஷா இவைகளுடன் இன்னும் பல குட்டி தரீக்காக்களும் இருக்கின்றன.

மலேசியா நாட்டில் “அர்க்கம்” என்ற ஒரு தரீக்கா உண்டு. இதை தரீக்கா என்றும் அழைக்கலாம்; “மஹதியா” என்றும் அழைக்கலாம். இந்நாட்டில் பல இடங்களில் இதற்கு கிளைகள் உண்டு. தனி அமைப்பு மட்டுமல்ல; பல உணவுப் பொருள்களையும், அன்றாடம் உபயோகப்படுத்தும் பயனீட்டாளர்கள் பொருளையும் இவ்வியக்கம் தானே தயார் செய்து கொள்கிறது.

நம் நாட்டில் 200, 300க்கு முரீது கொடுப்பது போல் இவர்கள் மலிவாகக் கொடுப்பதில்லை. ஒரு குடும்பமாகவே ஐக்கியமாகி விடுகிறார்கள். அதனால் தனி கட்டணம் தேவைப்படவில்லை. உங்கள் உழைப்பும், ஊதியமும், சொத்தும் இதற்கு சொந்தம். புத்தி சாலியான ஷேக் ஊர் ஊராக ஆள்களை தேடிப்போவதுமில்லை. மலேசியா நாட்டில் இந்த இயக்கத்தை சார்ந்தவர்களை மிக சுலபமாக மூடியிருப்பார்கள். கண்கள் மட்டும் திறந்திருக்கும், ஆண்களும் தாடி, தலைப்பாகை முழு உடையுடன் இருப்பார்கள்.

இவர்களுக்கென்று வார இதழ் ஒன்றும் உண்டு. அதன் பெயர் “மிங்குவான் இஸ்லாம்” இது பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் படிக்கலாம். தனியாக மெம்பர்களுக்கு மட்டும் “அல்-அர்க்காம்” என்ற வார ஏடும் உண்டு. இந்த இயக்கத்தின் நடை உடை பாவனைகளை ஒரு பாமரன் கண்டால் தனி பரிவே இவர்களிடம் ஏற்படும். கிட்டத்தட்ட அரபு மக்களின் கலாச்சாரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள் என்ற தோற்றமே காரணம். நம் நாட்டு ஆலிம்களிடம் மக்கள் மயங்குவதும் உடை நடை ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம்.

இவர்களின் உண்மை ரூபம் சில மாதங்களுக்கு முன் வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஹாஜி அஸ்ஸாரி முஹம்மது தன்னை இமாம் மஹதி என்று பிதற்ற ஆரம்பித்தார். இது மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனே இந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டது. செப்டம்பர் 1988-ல் இந்த இயக்க வெளியீடாக ஒரு நூல் வெளியிடப்பட்டது. நூலின் பெயர் “அல்றாது முஹம்மதியா”. இதில் உள்ள பல விஷயங்கள் இஸ்லாத்துக்கும், அதன் சட்டதிட்டங்களுக்கும் நேர் விரோதமாக இருப்பதை அரசாங்கம் அறிய வந்தது. உடனே “ஷரீஅத்” கோர்ட்டுக்கு நூல் சென்றது. விசாரணையும் நடைபெற்றது. முடிவு: தடை! நூலை வெளியிடக் கூடாது; மார்க்கப் புறம்பானது; ஆகவே, விற்ற நூல்களையும் மக்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டளையிட்டது.

இந்த நூலில் என்ன எழுதியிருந்தார்கள் என்பது நமக்கு உண்மையில் தெரியாது. இப்படித் தான் எழுதியிருக்க வேண்டும் என்பதை அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் நியூஸிலாந்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டபோது கொடுத்த வாக்குமூலத்தில் இருந்து ஓரளவு ஊகிக்க முடிகிறது! நீங்களும் சிந்தியுங்கள்.

அக்டோபர் 11, 1988 “ஸ்டார்” என்ற ஆங்கில தினசரியில் வந்த செய்தி:

நியூஸிலாந்தில் மேல்படிப்புக்காகச் சென்ற மாணவர்களை அரசாங்கம் திரும்ப நாட்டுக்கு அழைத்துக் கொண்ட காரணம் அறிய ஒரு மாணவி தன்னை “இறையருள்” பெற்றவள் என்று கூறினாள். அவள் தன்னைப் பற்றி கூறும்பொழுது, தனது வலது பக்கத்தில் நபி(ஸல்) அவர்களும் தனது இடது பக்கத்தில் தன்னுடைய ஷேக் ஹாஜி அஸ்ஸாரி முஹம்மதுவும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினாள். அவள் விஞ்ஞானப் பாடத்தை படிக்கக் கூடியவள். அர்க்காம் இயக்கத்தில் ஒரு மூரிது. அவள் தனது சக மாணவர்களிடமும், மாணவிகளிடமும் தனிமையில் அமர்ந்து, தனியிடத்தில் “திக்ர்” செய்து வாருங்கள். அப்படி செய்து வந்தால் இமாம் மஹதியைப் பற்றி முன் அறிவிப்பு கிடைக்கும் என்று கூறி வந்தாள். அப்படி அவர்கள் செய்யும்பொழுதும், தொழும்பொழுதும் கஃபாவை முன்னோக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினாள் என்று பிரதம மந்திரி  இலாக்காவின் உதவி மந்திரி டாக்டர் யூசுப் நூர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் டாக்டர் யூசுப் நூர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவள் தனது கைக்குழந்தைக்கு முறையாக பால் கொடுக்கவில்லை. காரணம், அவளுடைய குழந்தைக்கு சொர்க்கத்தில் இருந்து திரவ உணவு ஊட்டப்படுவதாக நம்பினாள். அத்துடன் அவுலியாவினால் குழந்தை பாதுகாக்கப்படுவதாகவும் நம்பினாள். இவளுடைய கணவன் அரசாங்க உபகாரச் சம்பளத்தில் படித்து வந்தான். இருமுறை பரீட்சையில் தோல்வி கண்டான். ஆகவே அரசாங்கம் இவனுடைய உபகார சம்பளத்தை தள்ளுபடி செய்துவிட்டது. இப்படி இருக்கும்பொழுது ஒரு நாள் நியூஸிலாந்து போலீஸார் மலேசியா மாணவர்களை ஒரு குழந்தையைக் கொலைச் செய்யும் நோக்கத்தில் உணவு ஊட்டப்படாமல் தனி வீட்டில் விட்டுச் சென்ற காரணத்தைக் காட்டி கைது செய்தது.

மலேசியா ஹைகமிஷன் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கைது செய்வதை விட்டும் போலீஸை தடுத்து மாணவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிட்டது. இவர்களின் இந்நடவடிக்கையினால் மலேசியாவிற்கு உலக ரீதியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள். நாட்டுக்கு மட்டுமா? இஸ்லாத்தையும் அதன் கொள்கையையும் காட்டுமிராண்டி கொள்கையைப் போல் காட்டி விட்டார்கள். ஐரோப்பாவில் இன்று இஸ்லாம் மிக வேகமாக மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துக் கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட வேலையில் ஷைத்தான் கும்பல்களும் தன் வேலையைக் காட்ட வேண்டாமா? அதுதான் இது!

நல்ல வேளை! மாணவர்கள் நம் நாட்டுக்கு வரவில்லை. வந்திருந்தால் இவர்கள் கும்பல் தமிழகத்தில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு ஊரில் இருப்பது தெரிந்திருக்கும். நியூஸிலாந்து போலீஸுக்கு எப்படி இவர்களின் தரீக்கா நடவடிக்கை தெரியவந்தது என்பதையும் நாம் தெரிந்து கொள்வோம். இந்த மாணவர்களுடன் கல்விக் கற்று வந்த யூகோஸ்லேவியா மாணவன் ஒருவனை இவர்கள் தங்களின் தரீக்கா நடவடிக்கையில் ஈடுபடுத்தினர் அவன் ஒரு முஸ்லிம் மாணவன் சென்ற ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி இந்த மாணவனின் பெற்றோர் இவனை அழைத்துச் செல்லும் நோக்கத்தில் வந்தபோது மலேசியா மாணவர்களும், மாணவியும் அவனை பெற்றோருடன் அனுப்ப மறுத்து விட்டனர். அதற்கான காரணத்தையும் அவர்கள் கூறினார்கள். “உங்கள் மகனுக்கு பேய் பிடித்திருக்கிறது அதை நாங்கள் ஓட்டும் முயற்சியில் இருக்கிறோம். ஆகவே, இப்பொழுது அனுப்ப மாட்டோம்” என்று கூறி மறுத்துவிட்டார்கள்.

மாணவனின் பெற்றோர் போலீஸின் உதவியை நாடினார்கள் செப்டம்பர் 2ந் தேதி அந்த மாணவன் இவர்களிடமிருந்து மீட்கப் பட்டான். போலீஸ் மாணவனை மீட்க சென்றபொழுது தரீக்காக்காரர்கள் தனி அறையில் கதவைத் தாள் இட்டுக்கொண்டு தங்களுடைய ஷேக் “ஹாஜி அஸ்ஸாரி முஹம்மது”வின் பெயரை திக்ர் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது அப்பெண், போலீஸை கத்தியால் தாக்க முற்பட்டாள். அவளுடைய குழந்தை பால் ஊட்டப்படாமல் மரணம் அடையக் கூடிய நிலையில் காய்ந்த சருகைப்போல் அழக்கூட தெம்பில்லாமல் இருந்ததை போலீஸார் கண்டார்கள். உடனே போலீஸார் அவசர பிரிவு முகாமில் குழந்தையை சேர்த்தார்கள். அப்படி இருக்கும் நிலையில் மாணவர்களும், மாணவியும் குழந்தையை ஆஸ்பத்திரியிலிருந்து கடத்த முயற்சித்தார்கள். முயற்சியை டாக்டர்கள் தடுத்துவிட்டு போலீஸிலும் புகார் கொடுத்தார்கள்.

செய்தியறிந்த மாணவர்களும், மாணவியும் அங்கிருந்து புறப்பட்டு வெலிங்டன் என்ற ஊருக்கு தப்பி ஓடினார்கள். ஆனால் அங்கே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இதுவே மகத்துவமும் மகோன்னதமும் கொண்ட தரீக்காக் காரர்களின் உண்மைச் சம்பவம்.

மாணவி கூறியபடி வலது பக்கம் நபி(ஸல்) அவர்களும் இடது பக்கம் அவளின் ஷேகும் பாதுகாப்புக் கொடுத்திருந்தால் அவனின் நிலை இப்படி ஆகியிருக்குமா? இஸ்லாத்தையும், அதன் வழிமுறைகளையும் இதைப் போன்றவர்கள் மற்றவர்கள் முன் எப்படி எல்லாம் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

இன்று தரீக்காவின் கொள்கைகளை இஸ்லாமிய கொள்கையைப் போல் மக்களிடம் பல மதரஸாக்கள் போதனை செய்து வருகின்றன. இதே அடிப்படையில் அமைந்ததே “அல் அர்க்காம்” என்ற இயக்கம். இறந்த நல்லடியார்கள் உயிருடன் இருக்கிறார்கள் அழைத்தால் ஆஜராகிறார்கள், உதவி செய்கிறார்கள் என்று நம்பியதால்தான் மலேசியா மாணவர்களும், மாணவியும் செயல்பட்டார்கள்; அவமானமும் அடைந்தார்கள். முஸ்லிம்களை உலகளவில் தலைகுனியவும் வைத்தார்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுவதை நம்ப மறுக்கிறார்கள். தங்களின் ஷேக் சொன்னால் சரியாகவே இருக்கும் என்று நம்புகிறார்கள். மலேசியா அரசாங்கமும் மக்களிடம் நிறைய பிரச்சாரங்களை செய்து வந்தும் தரீக்கா பித்தர்கள் தவற்றை உணரவில்லை. ஆனால் இன்று தானாகவே அல்லாஹ் புரியவைத்தான்.

இன்றைய செய்தி 12.9.88, இதன் ஷேக் ஹாஜி அஸ்ஸாரி முஹம்மது நாட்டை விட்டு எங்கோ தலைமறைவாகி விட்டார். அரசாங்கம் தேடிக் கொண்டிருந்தது. அவராலேயே அவரை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. இவர்தான் முரீதுகளை காப்பாற்றவாரா? இதைப் போன்ற பேய் மாளங்களை நம்பி ஈமான் இழக்காதீர்கள். முஸ்லிம் பெற்றோருக்கு முஸ்லிமாக பிறக்க வைத்த பாக்கியத்தை அருட்கொடையை இழக்காதீர்கள். (அனைத்தையும்) படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுணுக்கமாக கவனிப்பவன்; யாவற்றையும் நன்கு தெரிந்தவன். (அல்குர்ஆன்: 67:14)

**************************************************************************************************************************************************************************************************

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமுக்கு சகோதரராவர். அவருக்கு தாம் அநியாயம் செய்யாதிருப்பதோடு, பிறர் அவருக்கு அநியாயம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஒருவர் தமது சகோதர முஸ்லிமுடைய தேவையை நிறைவேற்றினால் அல்லாஹ் அவருடைய தேவையை நிறைவேற்றி வைக்கிறான். ஒருவர் ஒரு முஸ்லிமீன் குறையை மறைத்தால் அல்லாஹ் மறுமையில் அவருடைய குறையை மறைத்து விடுவான். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

**************************************************************************************************************************************************************************************************

நபி வழியில் நம் தொழுகை!  தொடர்-25. – அபூ அப்துர் ரஹ்மான்

நபியே சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருப்பின் என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறான். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்.

சென்ற அக்டோபர் “88 இதழில் “தொழுகையில் கிராஅத் ஓதி முடித்தவுடன் இரு கைகளையும் புஜங்களுக்கு நேரே உயர்த்தி தக்பீர் கூறுதல், ருகூஃப் செய்யும் முறை, ருகூஃ, ஸுஜூதின் போது குர்ஆன் ஓதத் தடை, ருகூஃ, ஸுஜூதுகளில் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த பல்வகை தஸ்பீஹ்கள்” ஆகிய விபரங்களைப் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் “ருகூஃவிலிருந்து நிமிர்ந்த பின் நிற்கும் நிலையும், அதன் முக்கியத்துவமும்,” “ருகூஃவிலிருந்து எழும்போது என்ன ஓத வேண்டும்?” “சிறு நிலையில் ஓதப்படும் பல்வகை துஆக்கள்”, “ஸுஜூதுக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை”, “ஸுஜூது செய்யும் முறை” “நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதில் ஓதியவை” ஆகியவற்றின் விபரங்களைக் காண்போம்.

ருகூஃவிலிருந்து நிமிர்ந்த பின் நிற்கும் நிலையும், அதன் முக்கியத்துவமும்:

இந்நிலையைச் “சிறுநிலை” என கூறுகிறோம். இதுவும் தொழுகையின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

1. ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் (முறைகேடாகத் தொழுதவரை நோக்கி உபதேசிக்கையில்) “பின்னர் நீர் ஒழுங்காக நிற்கும் வரை எழுந்து நிற்பீராக!” என்று கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

2. நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தினால், தாம் நேராக நிமிர்ந்து நிற்காதவரை ஸுஜூதுக்குச் செல்லமாட்டார்கள். (அன்னை ஆயிஷா(ரழி), முஸ்லிம்)

3. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தமது ருகூஃ, ஸுஜூதுக்கு மத்தியில் தமது முதுகெலும்பை நேராக நிமிர்தவில்லையோ, அவரது தொழுகை ஏறிட்டும் பார்க்கப்படமாட்டாது. (அபூஹுரைரா(ரழி), அஹ்மத்)

ருகூஃவிலிருந்து எழும்போது என்ன ஓதவேண்டும்?

ருகூஃவிலிருந்து எழும்போது இமாமும், தனித்துத் தொழுவோரும் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறுவதோடு, “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்றும் கூறவேண்டும்.

1. நபி(ஸல்) அவர்கள் “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று தாம் கூறும்போது “அல்லாஹும்ம ரப்பனா லக்கல்ஹம்து” என்றும் கூறுவார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

மேற்காணும் அறிவிப்பில் இமாம் இரண்டையும் சேர்த்துக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். தனிமையில் தொழுவோரும் இவ்வாறு இரண்டையும் சேர்த்துக் கூறவேண்டும் என்பதற்கு “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” எனும் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஆதாரமாயுள்ளது. (மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இமாமைப் பின்பற்றித் தொழுவோர், இமாம் “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும்போது “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று மட்டும் கூற வேண்டும்.

2. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: இமாம் “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறினால் அதற்கு நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று கூறுங்கள். ஏனெனில் (மலக்குகளும் அவ்வாறு கூறுகின்றனர்) எவருடைய சொல் மலக்குகளின் சொல்லுக்கு ஒத்ததாக அமைந்து விடுமோ, அவருடைய பாவங்களில் முன்னுள்ளவை மன்னிக்கப்பட்டுவிடும். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)

ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் = அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழை ஏற்கிறான். அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து = அல்லாஹ்வே! எங்கள் ரட்சகனே! உனக்கே சர்வ புகழும்.

மேற்காணும் “அல்லாஹும்ம ரப்பனா லக்கல்ஹம்து” எனும் வாசகமே பெரும்பாலான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், “ரப்பனா லக்கல் ஹம்து” என்றும், “ரப்பனா வலக்கல் ஹம்து” என்றும் ஒரு சில ஹதீஸ்களில் மட்டுமே காணப்படுகின்றன. இவைகளும் ஸஹீஹான ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பதால் இவற்றில் ஒன்றையும் ஓதிக் கொள்ளலாம்.

மேற்கண்டவாறு இமாமைப் பின்பற்றித் தொழுவோர் “அல்லா ஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” என்று மட்டும் கூறுவதே முறையாகும். மாறாக இமாமைப் பின்பற்றித் தொழுவோர் “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்பதையும் சேர்த்தே கூற வேண்டும் என்ற சிலரின் கூற்றுக்கு ஸஹீஹான ஒரு ஹதீஸும் ஆதாரமாக இல்லை என்பது தெளிவு. (பத்ஹுல் பாரீ, பாகம் 2, பக்கம் 284)

சிறு நிலையில் ஓதப்படும் பல்வகை துஆக்கள் :

1. அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி லமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத்த மின்ஷையின் பஃது (அல்லாஹ்வே! எங்கள் ரட்சகனே! உனக்கே வானங்கள் நிறையவும், பூமி நிறையவும், இவற்றின் பின்னர் எவை எல்லாம் நிறைய வேண்டுமென நீ விரும்புகின்றாயோ அவை யாவும் நிறைய அனைத்துப் புகழும் உரித்தானவை)

* நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது முதுகை உயர்த்தும்போது, “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” (என்று கூறிவிட்டு) அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து மில் அஸ்ஸமாவாத்தி வமில் அல் அர்ழி… என்பதை ஓதிக்கொண்டிருந்தார்கள். (இப்னு அபீ அவ்ஃபா(ரழி), முஸ்லிம்)

2. லிரப்பியல் ஹம்து – லிரப்பியல் ஹம்து (எனது ரட்சகனுக்கே சர்வப் புகழும், எனது ரட்சகனுக்கே சர்வப் புகழும்)

* நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போது, “லிரப்பியல் ஹம்து – லிரப்பியல் ஹம்து” என்று ஓதுவார்கள். (ஹுதைஃபா(ரழி) நஸயீ)

3. ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக் கன்ஃபீஹி (எங்கள் ரட்சகனே! உனக்கு சர்வ புகழும் உரித்து. அப்புகழ் அபரிமிதமானதாகவும், தூய்மையானதாகவும் அபிவிருத்தியானதாகவும் இருக்குமாக! *நாங்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தி அப்புகழ் அபரிமிதமானதாகவும், தூய்மையானதாகவும் அபிவிருத்தியானதாகவும் இருக்குமாக!

* நாங்கள் ஒருமுறை நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். அப்போது  அவர்கள் ருகூஃவிலிருந்து தமது தலையை உயர்த்தி “ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறினார்கள். அது சமயம் அவர்களுக்குப் பின்னால் உள்ளோரில் ஒருவர் “ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி” என்று கூறினார். அவர்கள் தொழுகையிலிருந்து திரும்பியவுடன் (சற்று முன்) பேசியவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்(அவர்) நான் என்றார். அப்போதவர்கள் நீர் கூறிய அவ்வார்த்தைகளை 30க்கு அதிகமான மலக்குகள் முதலில் தாம் எழுத வேண்டும் என்பதற்காக விரைவதைக் கண்டேன் என்று கூறினார்கள். (ரிஃபா அத்துப்னு ராஃபியிஜ்ஜு ரகிய்யி(ரழி), புகாரீ)

ஸுஜூதுக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை :

தரையில் கைகளை வைத்து பின்னர் முட்டுக்கால்களை வைக்க வேண்டும்.

1. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தால் தமது முட்டுக்கால்களை(த்தரையில்) வைப்பதற்கு முன்பே தமது கைகளை வைக்க முற்படுவார்கள். (அபூஹுரைரா(ரழி) தஹாவீ)

2. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: உங்களில் ஒருவர் ஸஜ்தா செய்தால் ஒட்டகம் மண்டியிடுவது போல் மண்டியிட வேண்டாம். அவர் தமது கைகளை வைத்து பின்னர் தமது முட்டுக்கால்களை வைப்பார்கள்! (அபூஹுரைரா(ரழி), அஹ்மத், அபூதாவூத், நஸயீ)

3. இப்னு உமர்(ரழி), அவர்கள் ஸுஜூது செய்தால் தமது முட்டுக்கால்களை(த் தரையில்) வைக்கும்முன், தமது கைகளை வைப்பார்கள் என்பதாக ஓர் அறிவிப்பு ஹாக்கிமில் இடம் பெற்று அதை இமாம் ஹாக்கிம் அவர்களும், இமாம் தஹபீ அவர்களும் ஸஹீஹான அறிவிப்பென்றே ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு, நாம் ஸுஜூக்குச் செல்லும்போது முதலாவதாக கைகளைக் கீழே வைத்து, பின்னர் முட்டுக்கால்களை வைப்பதே முறையானது என்பதை உணருகிறோம்.

இதற்கு மாற்றமாக வாயிலுபின் ஹுஜ்ரு(ரழி) அவர்களின் மூலம், “நபி(ஸல்) அவர்கள் ஸுஜூது செய்தால் தமது கைகளைத் தரையில் வைப்பதற்கு முன்பே, தமது முட்டுக் கால்களை வைப்பதை நான் பார்த்திருக்கிறேன்” எனும் ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டு, அது அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ ஆகிய நூல்களில் இடம் பெற்றிருப்பினும் அதன் அறிவிப்பாளர் தொடர் மிகவும் பலஹீனமாயிருப்பதுடன், பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கு முரண்பட்டிருப்பதாலும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.

ஸுஜூது செய்யும் முறை :

ஸுஜூது செய்வது தொழுகையின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஸுஜூதென்பது ஒருவர் தமது நெற்றி, மூக்கு, இரு கைகள் (ஐந்து விரல்களைக் கொண்டுள்ள உள்ளங்கைப் பகுதி) இரு முட்டுக் கால்கள், இரு பாதங்களின் (விரல்களைக் கொண்டுள்ள) முற்பகுதி ஆகியவற்றைத் தரையில் வைப்பதாகும்.

1. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் 7  எலும்புகளினால் ஸஜ்தா செய்ய வேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன். (அவையாவன 🙂

“நெற்றியினால்” என்று கூறிவிட்டு, தமது கையை தமது மூக்கின் மீது தடவிக் காட்டினார்கள். மேலும் இரு கைகள், இரு முட்டுக் கால்கள், இரு பாதங்களின் விரல்கள் ஆகியவற்றினாலும் (ஸுஜூது செய்ய வேண்டும் என்றும், அதுசமயம்) தலை உரோமம் மற்றும் ஆடைகள் முதலியவற்றைச் சுருட்டி வைத்துக் கொள்ளக் கூடாது (என்றும் ஏவப்பட்டுள்ளேன்) (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ.)

2. நபி(ஸல்) அவர்கள் மக்களுக்குத் தாம் தொழ வைத்ததோர் தொழகையின் போது (அவர்கள் தமது நெற்றி, மூக்கு ஆகியவற்றைக் கொண்டு ஸஜ்தா செய்தமையால்) அவர்களின் நெற்றியிலும் மூக்கிலும் களிமண்ணுடைய வடு காணப்பட்டது. (அபூஸயீதுல் குத்ரீ(ரழி), அபூதாவூத்)

மேற்காணும் இரு ஹதீஸ்களின் வாயிலாக நெற்றியுடன் மூக்கையும் சேர்த்து தரையில் வைக்க வேண்டும் என்பதையும் ஸுஜூதுக்குச் செல்லும்போது ஆடைகளையோ, தலை உரோமங்களையோ சுருட்டி வைத்துக் கொள்ளாது அவற்றைத் தன் நிலையில் விட்டுவிட வேண்டும்  என்பதையும் உணருகிறோம்.

3. நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். ஓர் அடியார் தாம் ஸுஜூது செய்கையில், அவருடன் அவரது முகமும், இரு கைகளும், இரு முட்டுக்கால்களும், மேலும் அவருடைய பாதங்களின் விரல் பகுதி ஆகியவையாவன 7 உறுப்புகளும் ஸஜ்தா செய்கின்றன. (இப்னு அப்பாஸ்(ரழி), முஸ்லிம்)

4. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீர் ஸஜ்தா செய்தால் இரு கைகளின் விரல்களுடன் கூடிய உள்ளங்கைப் பகுதிகளைக் கீழே வைத்து, உமது முழங்கைகளை உயர்த்திக் கொள்வீராக! (பர்ராஉ பின் ஆஜிப்(ரழி), முஸ்லிம்)

5. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தால் அவர்களின் அக்குளின் வெண்மை பிறரால் பார்க்கப்படும் அளவு, அவர்கள் விலாவை விட்டும் தமது கைகளை அகற்றி வைத்திருப்பார்கள். (அம்ருப்னுல் ஹாரிஸ்(ரழி), முஸ்லிம்)

6. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது தமது இரு கைகளை (அதிகம்) அகற்றாமலும் (விலாவுடன்) சேர்க்காமலும் (நடு நிலையில்) வைத்திருப்பார்கள். மேலும் தமது கால் விரல்களை கிப்லாவை முன்னோக்கி (மடக்கி) வைத்திருப்பார்கள். (அபூஹுமைத் (ரழி), புகாரீ)

7. நபி(ஸல்) அவர்கள் தாம் ஸஜ்தா செய்கையில் ஆட்டின் ஒரு குட்டி அவர்களின் இரு கைகளின் இடையே (புகுந்து) செல்லக் கருதினால் சென்று விடும் அளவு (தமது விலாவை விட்டும்) இரு கைகளையும் அகற்றி வைத்திருப்பார்கள். (மைமூனா(ரழி), முஸ்லிம்)

மேற்காணும் இரு ஹதீஃத்களில் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் தாம் ஸுஜூது செய்கையில் இரு கைகளை (அதிகம்) அகற்றாது விலாவுடன் (ஒட்டி) சேர்த்துக் கொள்ளாது (நடுநிலையில்) வைத்திருந்ததாகவும், மற்றொன்றில் இரு கைகளின் இடையே ஆட்டின் ஒரு குட்டி புகுந்து செல்லும் அளவு இரு கைகளையும் (தமது விலாவை விட்டும்) அகற்றி வைத்திருந்ததாகவும் காணுகிறோம்.

ஆகவே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இருவிதமாகவும் இருந்திருப்பதால், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப ஸுஜூது செய்கையில் கைகளை அகற்றியோ, அல்லது சேர்த்தோ வைத்துக் கொள்ளலாம் என்பதை உணருகிறோம்.

8. நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, தமது நெற்றியையும் தரையில் நன்கு படும்படி வைப்பார்கள். தமது விலாவை விட்டும், தமது கைகளை அகற்றிக் கொள்வார்கள். மேலும் நமது விரல்களுடன் கூடிய உள்ளங்கை பகுதியை புஜங்களுக்கு நேராக (முன்னால்) வைத்துக்கொள்வார்கள். (அபூஹுமைத்(ரழி), திர்மிதீ, அபூதாவூத், இப்னுகுஜைமா)

9. நான் புர்ராஉ பின் ஆஜிப்(ரழி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது, தமது முகத்தை எந்த இடத்தில் வைத்திருப்பார்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் தமது இரு கஃப்புகளுக்கு மத்தியில் என்று கூறினார்கள். (அபூஇஸ்ஹாக்(ரழி), திர்மிதீ)

(கஃப்பு என்றால் விரல்களையும், உள்ளங்கையையும் கொண்டுள்ள பகுதிக்குச் சொல்லப்படும். எனவே ஸுஜூது செய்யும்போது இரு புஜங்களுக்கு நேராக இரு கைகளையும் தரையில் வைக்கும் சமயம் முகத்தையும் அவ்விரு கைகளுக்கு மத்தியில் வைக்கவேண்டும் என்பதை அறிக!)

10. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஸுஜூதை முறையாகச் செய்யுங்கள்! நீங்கள் உங்கள் முழங்கைகளை (மேலே உயர்த்திக் கொள்ளாது) நாய்(தான் படுக்கும்போது) வைத்திருப்பது போன்று நீங்கள் வைக்காதீர்கள்! (அனஸ்(ரழி) முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதில் ஓதியவை :

1. ஸுப்ஹானக்கல்லா ஹும்ம ரப்பனா வபி ஹம்திக்கல்லாஹும்மஃ ஃபிர்லீ” (யாஅல்லாஹ்! எங்கள் ரட்சகனே! உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் புகழ்வது கொண்டு உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன்)

நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவிலும், ஸுஜூதிலும் குர்ஆனின் கருத்துக்கேற்ப அமுல்படுத்தும் வகையில் மிக அதிகமாக “ஸுப்ஹானல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக் கல்லாஹும்மஃ ஃபிர்லீ’் எனும் துஆவை ஓதி வந்தார்கள். (அன்னை ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

(அல்குர்ஆனி(110:3)ல் “நபியே! நீர்) உமது ரட்சகனைப் புகழ்வது கொண்டு அவனைப் பரிசுத்தப்படுத்துவீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக்கொள்பவனாக இருக்கிறான்” என்று கூறப்பட்டிருப்பதால், அக்கட்டகைக்குக் கீழ் பணிந்து நடக்கும் வகையில் மேற்காணும் துஆவை ஓதியுள்ளார்கள்.

2. அல்லாஹும்ம லக்க ஸதத்து வபிக்க ஆமன்த்து வலக்க அஸ்லம்த்து ஸஜத வஜ்ஹீலில்லதீ கலக்கஹூ வஸவ்வரஹூ வஷக்க ஸம்அஹூ வபஸ ரஹு, தபாரக்கல்லாஹ்” அஹ்ஸனுல் காலிக்கீன்.

யா அல்லாஹ் உனக்கே நான் பணிந்து சிரம் தாழ்த்திவிட்டேன். உன்னையே நான் விசுவாசித்தேன். மேலும் உன்னையே வணங்கி வழிபடுகிறோன். எனது முகம் அதனைப் படைத்து உருவாக்கி, அதில் கேட்கும் திறனையும், பார்க்கும் திறனையும் உண்டு பண்ணியவனுக்கு ஸுஜூது செய்து விட்டது. படைப்போரில் எல்லாம் மிக அழகானவனாகிய அல்லாஹ் மிகவும் விசேஷமானவனாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (மேற்காணும்) அல்லாஹும்ம லக்க ஸதத்து வபிக்க ஆமன்த்து…. என்பதை ஓதுவார்கள். (அலி(ரழி) முஸ்லிம்)

3. அல்லாஹிம்மஃ ஃபிர்லீ தன்பீ குல்லஹூ நிக்கஹூ வஜுல்லஹூ வஅல்லஹூ வஆகிரஹூ வஅலானியத்தஹூ வஸிர்ரஹூ.

(யா அல்லாஹ் எனக்கு என் பாவத்தில் சிறிய, பெரிய, ஆரம்பத்திலிலுள்ள, கடைசியிலுள்ள, பகிரங்கமாயுள்ள, மறைவாயுள்ளவை அனைத்தையும் மன்னித்தருள்வாயாக!)

நபி(ஸல்) அவர்கள் தமது ஸுஜூதில் (மேற்காணும்) “அல்லாஹும் மஃ ஃபிர்லீ தன்பீ குல்லஹூ திக்கஹூ வஜுல்லஹூ …..” என்பதை ஓதிக் கொண்டிருந்தார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)

4. “அஊது பிரிழாக்க மின் ஸகத்திக்க வஅஊது பிழுஆ ஃபாத்திக்க மின் உகூபத்திக்க வஅஊது பிக்க மின்க்க லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக்க”.

(யா அல்லாஹ்!) உனது பொருத்தத்தைக் கொண்டு உனது வெறுப்பை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். உனது தீங்கை அகற்றும் வல்லமை கொண்டு, உனது வேதனையை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறென். மேலும் உன்னைக் கொண்டே உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உனக்குள்ள புகழை என்னால் மட்டிட இயலாது. உன்னை நீ எவ்வாறு புகழ்ந்துள்ளாயோ அவ்வாறுள்ளவனாகும்)

நான் ஓர் இரவு நபி(ஸல்) அவர்களை படுக்கையில் காணாது, (இருளில்) எனது கையால் தடவி தேடிப்பார்த்தேன். அப்போது அவர்கள் (தாம்) தொழுவிடத்தில் இரு பாதங்களும் தட்டப்பட்ட நிலையிலிருந்தார்கள். இந்நிலையில் எனது கை அவர்களின் பாதங்களின் உட்புறத்தில் பட்டுவிட்டது. (அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக) “அஊது பிரிழாக்க மின் ஸகத்திக்க வஊது பிமுஆ ஃபாத்திக்க மின்உ கூபத்திக்க….” எனும் துஆவை ஓதிக் கொண்டிருந்தார்கள். ஆயிஷா(ரழி): முஸ்லிம்.

5. “ரப்பி அஃத்தி நஃப்ஸீ தக்வாஹா வஜக்கிஹா அன்த்தகைரு மன் ஜக்காஹா அன்த்த வலிய்யுஹா வமல்லாஹா”.

(எனது ரட்சகனே! என் நஃப்ஸுக்கு அதற்குரிய பயபக்தி நிலையைத் தந்தருள்! மேலும் அதனைப் பரிசுத்தமாக்கியருள். அதனைப் பரிசுத்தப்படுத்துவோரில் நீயே மிக்க மேலானவன். நீ தான் அதற்கு உரித்தானவனும், அதன் எஜமானனுமாவாய்). இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

****************************************************************************************************************************************************************************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு : தொடர்-21, அபூ அஸ்மா

ஹதீஃத் கலையின் வழக்குச் சொற்கள்.

ஹதீஃத் : நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்.

அதர் : ஸஹாபாக்களின் சொல், செயல், அங்கீகாரம்,

ஸனத் : ஹதீஃத் அறிப்பாளரின் சங்கிலித் தொடர்

மத்தன்  : ஹதீஃதின் வாசகம்

ஹதீஃதின் தொடர் ஓர் அறிவிப்புக்கு கூருதல், குறையுதலாக அமைந்திருப்பதைக் கவனித்து அவ்வறிவிப்பின் தரம் :

1. முத்தவாத்திர் : ஏகோபித்து அனைவரும் பொய்யுரைத்தல், அசாத்தியம் எனக் கருதப்படும் அளவுக்கு, மிக அதிகமான அறிவிப்பாளர்களை ஒவ்வொரு கால கட்டத்திலும் பெற்றுள்ள பல ஸனதுகளைக் கொண்டுள்ள, அதன் ஒவ்வொரு ஸனதின் ஆரம்பம் முதல் இறுதி வரை அறிவிப்பாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அமைந்திருப்பதுடன், கடைசி அறிவிப்பாளர் தாம் நேரில் கேட்டதையோ, அல்லது பார்த்ததையோ தாமே அறிவித்துள்ள அறிவிப்பாகும்.

தரமும், தகுதியும் : இது ஓர் விஷயத்தை கண்கூடாகக் காண்பது அல்லது நேரிடையாகக் கேட்பது போன்றே உறுதி மிக்கதும் சட்டம் வகுப்பதற்கு ஏற்புடையதுமாகும்.

2. மஷ்ஹூர் : இதன் அறிவிப்பாளர் ஸஹாபாக்கள் காலத்தில் மூவரை விட குறைவானவராயிருப்பினும், மற்ற கால கட்டங்களில் மூவரைப் பார்க்கினும் அதிகமானவரைக் கொண்டுள்ள அறிவிப்பாகும்.

தரமும், தகுதியும்: இது தரத்தால் “முத்தவாத்திரான” அறிவிப்பைவிட குறைவானதாகயிருப்பினும், நம்பகமானது தான் என்பதில் ஐயமில்லை. இது குர்ஆனின் சட்ட திட்டங்களுக்கு விளக்கமாக, விரிவுரையாகக் கொள்ள ஏற்புடையதாகும்.

3. அஜீஸ் : இதன் அறிவிப்பாளர் எக்கால கட்டத்திலும் இருவருக்குக் குறைவில்லாதவரைக் கொண்டுள்ள அறிவிப்பாகும்.

4. ஃகரீப் : இதன் அறிவிப்பாளர் எல்லா கால கட்டத்திலும் ஒருவரைக் கொண்டுள்ள அறிவிப்பாகும்.

மேற்காணப்படும் நான்கு வகையான அறிவிப்புகளில் மூத்தவாத்திரைத் தவிர இதர மூன்று வகையான மஷ்ஹூர், அஜீஸ், ஃகரீப் ஆகியவற்றைப் பொதுவாக “கபருவாஹித்” என்றே சொல்லப்படும். (உலூமுல் ஹதீஃத் பக்கம் 61)

“கபருவாஹித்” எனும் அறிவிப்புகள் அறிவிப்பாளரின் தரத்தைக் கவனித்து இரு வகைப்படும் :

1. மக்பூல் : “கபருவாஹித்” அடிப்படையில் காணப்படும் அறிவிப்பின் அறிவிப்பாளர் அனைவரும், நம்பகமானவராக அமைந்துள்ள அறிவிப்பாகும்.

2. மர்தூத் : “கபரு வாஹித்” அடிப்படையில் காணப்படும் அறிவிப்பின் அறிவிப்பாளரில் ஒருவரேனும் நம்பகமற்றவராக அமைந்துள்ள அறிவிப்பாகும்.

(ஹதீஃத்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் வாயிலாக வந்துள்ளவையாகயிருப்பதால், அவை அனைத்தும் “மக்பூல்”  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவையாக யிருப்பினும், அவற்றின்  அறிவிப்பாளருடைய நம்பகநிலை, நம்பகமற்ற நிலைகளை முன் வைத்தே அவை “மர்தூத்” ஏற்கத்தகாதவையாக கணிக்கப்படுகிறது.)

பலம் வாய்ந்ததோர் அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு, பலவீனமானதோர் அறிவிப்பாளரின் அறிவிப்பு முரண்படுவதைக் கவனித்து ஒரு சில தரங்கள்!

1. ஷாத் : பலம் வாய்ந்ததோர் அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு முரண்படும் நிலையிலுள்ள பலவீனமானதோர் அறிவிப்பாளரின் அறிவிப்பாகும்.

2. முஅல்லல் : ஹதீஃத் கலா வல்லுநர்கள் மேலோட்டமாக பார்த்தமாத்திரத்திலேயே கண்டு பிடிக்கும் வகையில் மறைவான சில குறைபாடுகளைக் கொண்டுள்ள அறிவிப்பு.

அறிவிப்பாளர் தொடரில் அறிவிப்பாளர் தொடர்ச்சியாக அமைந்திருப்பதைக் கவனித்து ஹதீஃதின் தராதரங்கள்.

1. முத்தஸில் : அறிவிப்பாளர் தொடரில் ஆரம்ப முதல் இறுதி வரை ஒரு நபரும் விடுபடாது முறையாக அமைந்துள்ள அறிவிப்பாகும். இத்தகைய அறிவிப்புகளில் அறிவிப்பாளர் நம்பகமானவராயிருப்பின் ஆதாரமாகக் கொள்ளப்படும்.

2. முஅல்லக் : அறிவிப்பாளர் தொடரின் ஆரம்பத்தில் ஒரு அறிவிப்பாளரோ, அல்லது பல அறிவிப்பாளரோ விடுபட்டுள்ள அறிவிப்பாகும். எனவே நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று வெறுமனே ஸனது அன்றிச் சொல்லப்படும் அனைத்து ஹதீஃத்களும் இவ்வகையைச் சார்ந்தவையேயாகும். இத்தகைய அறிவிப்புகள் அறிவிப்பாளர் தொடர் இழந்தவையாகக் காணப்படுவதால் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் தொடரில் விடுபட்டவர் யார் என்பது வேறு வகையில் தெரியவந்தால் இவை “மக்பூல்” எனும் உயரிய நிலையை அடைந்து விடுகின்றன. (உலூமுல் ஹதீஃத் பக்கம் 132)

3. முர்ஸல் : அறிவிப்பாளர் தொடரில் ஹதீஃதை அறிவித்துள்ள ஸஹாபியின் பெயரில்லாது, ஸஹாபாக்களைச் சந்தித்துள்ள தாபிஈன்களில் ஒருவர், நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் அல்லது இவ்வாறு செய்துள்ளார்கள் என்று தாமே கூறும் அறிவிப்பாகும்.

இத்தகைய முர்ஸலான அறிவிப்புகளில் விடுபட்டவர் யார்? என்பது புரியாதிருப்பதால் ஏற்கப்படாது, லயீஃப்-பலவீனமானவை எனும் நிலையை அடைகின்றன.

4. முஃலல் : அறிவிப்பாளர் தொடரின் மத்தியில் ஒரு காலகட்டத்தில் இரு அமைப்பாளர்கள் விடுபட்டுள்ள அறிவிப்பாகும்.

5. முன்கதீஃ : அறிவிப்பாளர் தொடரின் மத்தியில் ஏதேனும் ஓர் கால கட்டத்தில் ஒரு அறிவிப்பாளரோ, அல்லது பல்வேறு கால கட்டங்களில் இரு அறிவிப்பாளரோ விடுபட்டுள்ள அறிவிப்பாகும். மேற்காணும் “முஃலல்,” “முன்கதிஃ” ஆகியவற்றில் ஒன்றுக்கு மேல் அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதாலும், அவர்களின் பெயரும், உண்மை நிலையும் தெரியாததாலும் இவையும் லயீஃப்-பலவீனமான அறிவிப்பின் தரத்தையே அடைகின்றன. (உலாமுல் ஹதீஃத் பக்கம் : 139)

அறிவிப்பாளர் தொடர் சென்றடையும் நிலையைக் கவனித்து ஹதீஃதின் தராதரங்கள் :

1. மர்ஃபூஃ : இதன் தொடர் நபி(ஸல்) அவர்கள் வரைமுறையாக சென்றடையும் அறிவிப்பாகும். அதாவது இதன் அறிவிப்பாளராகிய ஸஹாபீ “கால ரசூலுல்லாஹி” (நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்) என்றோ, அல்லது “ரஅய்த்து ரஸுலல்லாஹி” (நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் கண்டேன்”) என்றோ, அல்லது “கான ரசூலுல்லாஹி” (நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்து கொண்டு, அல்லது கூறிக்கொண்டு அல்லது பார்த்துக்கொண்டு இருந்தார்கள்) என்பன போன்ற தமக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் மத்தியில் நேரிடையான தொடர்பு உள்ள வகையில் கூறியிருப்பார்.

தரமும், தகுதியும் : இத்தகைய “மர்ஃபூஃ”வான அறிவிப்புகள் சட்டங்களுக்கு ஆதாரமாகக் கொள்ள தகுதி வாய்ந்தவையாகும்.

2. மவ்கூஃப் : இதன் தொடர் ஒரு ஸஹாபி வரை சென்றடையும் அறிவிப்பாகும். அதாவது இதில் ஒரு ஸஹாபியின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றின் விபரங்கள் மட்டும் காணப்படும்.

தரமும், தகுதியும் : ஒரு மவ்கூஃபான அறிவிப்பு மற்றொரு மர்ஃபுஃவான அறிவிப்புக்கு கருத்தில் சமீபித்திருப்பின் ஒரு சட்டத்திற்கு ஆதாரமாகக் கொள்ள ஏதுவாகும். (ஃபவாத்திஹு : பக்கம் 156)

3. மக்தூஃ : இதன் தொடர் தாபியீ வரை சென்றடையும் அறிவிப்பாகும். அதாவது : இதில் தாபியீயுடைய சொல், செயல், அங்கீகாரம் ஆகிய விபரங்கள் இதில் காணப்படும். இந்த மக்தூஃவான அறிவிப்பு வேறு அறிவிப்புகளின் வாயிலாக பலப்படுத்தப்பட்டு விட்டால், மவ்கூஃபான அறிவிப்பைப் போன்றே பயன்படுத்தப்படும். (உலூமுல் ஹதீஃத் பக்கம் 50)

ஸஹீஹ், ஹஸன், லயீஃப் ஆகிய அறிவிப்புகளின் விபரங்கள் :

1. ஸஹீஹ் : இதன் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவராயிருப்பதுடன், முழுமையான ஞாபக சக்தியுடையோராகவும் இருப்பர். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடையில் துண்டிப்பு ஏற்படாதிருப்பதுடன், மறைமுகமான எவ்வித குறைபாடுகள் இல்லாததாகவுமிருக்கும். குறிப்பாக நம்பகமானதோர் அறிவிப்பாளரின் அறிவிப்புக்கு முரண்படாத நிலையில் அமைந்திருக்கும்.

தரமும், தகுதியும்: ஸஹீஹான ஹதீஃத்கள் சட்டம் வகுப்பதற்கு ஏற்புடையவையாக இருப்பதோடு, அவற்றின்படி அமல் செய்வது கடமையாகும். (உலூமுல் ஹதீஃத் பக்கம் 85)

2. ஹஸன் : ஸஹீஹான ஹதீஃதுக்குரிய அனைத்து சிறப்பம்சங்களும் முழுமையாகக் காணப்படுவதோடு, இதன் அறிவிப்பாளருடைய நினைவாற்றலில் மட்டும் இலேசான குறைபாட்டைக் கொண்டுள்ளதோர் அறிவிப்பாகும்.

தரமும், தகுதியும் : இதுவும் ஸஹீஹான ஹதீஃதைப் போன்றே ஆதாரமாகக் கொள்ள தகுதி வாய்ந்ததாகயிருப்பதோடு, இதன்படி அமல் செய்வதும் அவசியமாகும்.

3. ஸஹீஹுன் லிகைரிஹீ : மேற்காணும் அறிவிப்பாளருடைய நினைவாற்றலில் மட்டும் இலேசான குறைபாட்டைக் கொண்டுள்ள அறிவிப்பு மற்றொரு அறிவிப்பாளர் தொடரிலும் இடம் பெற்றிருந்தால் ஹஸன் எனும் தரத்தை விட்டும் சற்று உயர்த்து “ஸஹீஹுன்லிகைரிஹீ” (மற்றொன்றை வைத்து ஸஹீஹாக்கப்பட்டது) என்ற அந்தஸ்தை அடைந்து, ஆதாரங்களுக்கு ஏற்புடையதாக அமைவதோடு, அதைக்கொண்டு அமல்செய்வது அவசியமானதாகவுமாகிவிடுகிறது.

4. லயீஃபு : மேற்காணும் ஸஹீஹான அறிவிப்புகளுக்கான சிறப்பம்சங்கள் அனைத்தும், அல்லது ஒரு சிலதை மட்டும் இழந்து காணப்படும் அறிவிப்பாகும். லயீஃபான அறிவிப்புகளும் அதன் அறிவிப்பாளருடைய நம்பிக்கை நாணயத்தை அடிப்படையாகக் கொண்டு “ஹஸனுன் லிகைரிஹீ” எனும் உயர்நிலையை அடைந்து விடுகின்றன. (கவாயிதுத் தஹ்திஸ், பக்கம் 90)

அவ்வாறு ஒரு லயீஃபான அறிவிப்பு : “ஹஸனுன் லிகைரிஹீ” எனும் தரத்தை அடைய வேண்டுமாயின் அதன் அறிவிப்பாளருக்கு நினைவாற்றலில் மட்டும் கோளாறு ஏற்பட்டிருக்க வேண்டும். அல்லது அறிவிப்பாளர் ஹதீஃத்கலா வல்லுநர்களுக்கு மத்தியில் அறிமுகமில்லாதவராய் இருந்திருக்க வேண்டும். அல்லது ஸனது (அறிவிப்பாளர் தொடரில்) துண்டிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். இத்தகைய காரணங்களைக் கொண்டு லயீஃபாக்கப்பட்ட ஹதீஃத்கள் மட்டும்தான் மற்றவரைக் கொண்டு அறிவிக்கப்படும் அறிவிப்பின் மூலம் வலுவடைந்து “ஹஸனுன் லிகைரிஹீ” எனும் அந்தஸ்தை அடைய முடியும். (உலூமுல் ஹதீஃத் பக்கம் 204)

இவ்வாறான “ஹஸனுன் லிகைரிஹீ” எனும் தரத்தையுடைய அறிவிப்புகள் சுயமே “ஹஸன்” என்பதாகவுள்ள அறிவிப்புகளைவிட குறைந்தவையும், லயீஃபான அறிவிப்புகளை விட மேலானவையுமாகும். இவை ஆதாரத்திற்கு தகுதியுடையவையாக கணிக்கப்படும்.

5. முழ்தரிபு : ஒரு அறிவிப்பாளருக்கு தாம் அறிவிக்கும் ஹதீஃதின் வாசகத்திலோ, அல்லது அறிவிப்பாளரின் பெயரிலோ தடுமாற்றம் ஏற்பட்டு, ஒன்றிருக்க ஒன்றைக் கூறி பிறரையும் தடுமாறச் செய்யும் வகையில் அவர் அறிவிக்கும் ஓர் அறிவிப்பாகும். இவரது தொடரில் இடம் பெற்றுள்ள மற்றவர் முறையானவர்களாயிருப்பினும் இவரது இக்குறைபாட்டின் காரணத்தால் அவ்வறிவிப்பு தனது தரத்தை இழந்து லயீஃபானதாகி விடுகிறது.

6. முன்கர், மவ்ழூஃ(நிராகரிக்கப்பட்டதும், இடைச் செறுகலானதும்) :

ஸஹீஹான ஹதீஃத்களின் கருத்துக்கு முரண்படும் வகையில் நம்பகமற்ற அறிவிப்பாளர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளாகும்.

தரமும், தகுதியும் : இத்தகைய அறிவிப்புகள் எதற்கும் பயன்படாது போவது ஒரு புறமிருக்க, இவற்றின்படி அமல் செய்வது மார்க்க ரீதியான பாவமுமாகும். காரணம் இவற்றின் அறிவிப்பாளரிடம் நம்பிக்கை, நல்லொழுக்கம் காணப்படாது இருப்பதுடன், இவர்களின் “தக்வா” பயபக்தி எனும் அடிப்படையே ஐயப்பாட்டிற்குரியதாக உள்ளது.

இன்ஷா அல்லாஹ். தொடரும்….

***************************************************************************************************************************************************************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நபி(ஸல்) எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த ஒரு நபித் தோழரையாவது சபித்ததுண்டா? S.M.யஹ்யா : காரைக்கால்.

தெளிவு : (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக – அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107). இவ்விறை வசனத்தை நிரூபிக்கும் நபிமொழியையும் பாரீர் : அல்லாஹுவின் இவ்வருள்வாக்குப்படி நபி(ஸல்) அருட்கொடையாக இருந்தார்களேயன்றி சபிப்பவராக இருந்ததில்லை. தமது நபித் தோழர்களில் எவரும் தவறு செய்துவிட்டால், அதனை பலர் அறிய, அல்லது தவறு செய்தவர் மனம் வருந்தும்படிக் கூட கூறமாட்டார்கள். தாம் பொது பயான் (குத்பா) செய்யும்போது உங்களில் “ஒரு சிலர் இந்தத் தவறு செய்வதைக் காண்கிறேன். (பெயர் குறிப்பிடமாட்டார்கள்) அது தவறு” என உபதேசிப்பார்கள். (இப்னு ஹிஷாம்) எனவே யாமறிந்த வரை நபி(ஸல்) எந்த ஒரு நபித்தோழரையும் சபித்ததாக காண முடியவில்லை. ஆனால் செயல் அடிப்படையில் அல்லாஹுவின் ஆணைக்கு மாறு செய்பவர்களை மொத்தமாக சபித்துள்ளதற்கு ஆதாரங்களுள்ளன. அதனையும் அல்லாஹுவின் ஆணைப்படியே செய்தார்கள்.

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமையுடைய)வர்களும் சபிக்கிறார்கள்”. (அல்குர்ஆன் : 2:159)

இவ்விறை வசனப்படி சபிப்பதற்கு அல்லாஹுவிடமிருந்து உரிமை பெற்றவர்கள் உண்டு என்பதை அறியலாம். அவ்வுரிமை பெற்றவர்கள் வானவர்கள், ரசூல்மார்கள், நபிமார்கள், போன்றோர் முதலிடம் வகிக்கின்றனர். இவ்வுரிமைப் பெற்ற வானவர்களின் முக்கியமானவர் ஜிப்ரயீல்(அலை) அவர்களும், நபி(ஸல்) அவர்களும் மூன்று கூட்டத்தாரை சபிப்பதை கீழ்க்காணும் நபிமொழி மூலம் நன்கு உணரலாம்.

ரமழான் மாதத்தில் ஒரு குத்பாவின்போது எல்லா நபித்தோழர்களையும் மிம்பருக்கு அருகில் வர ஆணையிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் முதல் படியில் கால் வைத்ததும் “ஆமீன்” என்றார்கள். இரண்டாவது படியிலும் “ஆமீன்” என்றார்கள். மூன்றாவது படியிலும் “ஆமீன்” என்றார்கள். என்றுமில்லாதபடி புதுமையாக நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறும்போது “ஆமீன்” சொல்வதைக் கண்ட நபித்தோழர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தாமும், ஜிப்ராயில்(அலை) அவர்களும் உரையாடியதை விளம்பினார்கள். அது வருமாறு:

நபி(ஸல்) மிம்பரின் முல் படியில் கால் வைத்தபோது ஜிப்ராயீல்(அலை) “எவரொருவர் ரமழான் மாதத்தைப் பெற்று அதில் தமது பாவ மன்னிப்புக்கான நல்லமல் எதுவும் செய்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்”

ரசூல்(ஸல்) : “ஆமீன்!” (இவரது சாபத்தை ஏற்றுக்கொள்வாயாக!)

இரண்டாவது படியில் கால் வைத்தபோது,

ஜிப்ராயீல்(அலை) : நபி(ஸல்) அவர்களை நினைவுபடுத்தும்போது எவரொருவர் அவர்கள் ஸலவா சொல்லவில்லையோ அவரும் நாசமாகட்டும்”

ரசூல்(ஸல்) : “ஆமீன்!” (இதனை ஏற்றுக் கொள்வாயாக)

மூன்றாவது படியில் கால் வைத்தபோது,

ஜிப்ரயீல்(அலை) : “எவரொருவர் தனது வயது முதிர்ந்த பெற்றோரில் இருவரையோ அல்லது ஒருவரையோ அடையப் பெற்று அவர்கள் மூலம் சொர்க்கம் அடைந்து கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்.”

ரசூல்(ஸல்) : “ஆமீன்!” (இதனை ஏற்றுக்கொள்வாயாக)

அறிவிப்பு : கஃபு இப்னு உஜ்ரா(ரழி)

ஆதாரம் : புகாரீ, திர்மிதீ, பைஹகீ, தப்ரானி, ஹாக்கிம், இப்னு ஹப்பான்.

மேற்கண்ட ஹதீஸ் மூலம் ரமழானில் நற்செயல் செய்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்பது அவசியம். நபி(ஸல்) அவர்களை நினைவுபடுத்தப்பட்டால் கேட்போர் ஸலவாத் சொல்லவேண்டும். வயோதிகர்களான பெற்றோருக்குப் பணிவிடை செய்யவேண்டும். இந்நற்செயல்கள் செய்யாதவர் யாராக இருந்தாலும் அவர்கள் வானவர், ரசூல்(ஸல்) சாபத்திற்கு உரித்தாகுகிறார்கள் என்பதை அறியலாம்.

ஐயம் : வடக்கே தலை வைத்து தெற்கே கால் நீட்டியும்-மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டியும் படுக்க வேண்டுமென்பது ரசூல்(ஸல்) காட்டித் தந்த முறையா? இதற்கு ஹதீஃதில் ஆதாரமுண்டா? அல்லது நமது நாட்டுக்கு மேற்கே கஃபத்துல்லா இருப்பதால் நாம் தரும் மரியாதையா? மூ.அப்துல் ஹமீது – நிராவி.

தெளிவு : கிழக்கும், மேற்கும் அல்லாஹுவுக்கே சொந்தம் : நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அல்லாஹுவின் முன்னிலையுள்ள. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவன். எல்லாம் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:115)

நன்மை (புண்ணியம்) என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதிலில்லை. ஆனால், நன்மை என்பது அல்லாஹுவின் மீதும், மலக்குமார்கள் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும், ஈமான் கொள்ளுதல்.

(தன்) பொருளை இறைவன் மேலுள்ள பாசத்தின் காரணமாக பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்.

இன்னும் தொழுகையை ஒழுங்காக கடைப்பிடித்து முறையாக ஜகாத்(ஏழை வரி) கொடுத்து வருதல் (இவைகளே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போகும்தான் தன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள் தாம் முத்தகின்கள் (பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன் 2:177)

திசைகளுக்கு எவ்வித முக்கியத்துவமுமில்லை. அல்லாஹ் அனைத்தையும் சூழ்ந்திருக்கிறான் என்பதை முதல் குர்ஆன் வசனம் நிரூபிக்கிறது. ஒருசில திசைகளை சிறப்பாக்கி நன்மை கிடைக்குமென செயல்படுவதை இரண்டாவது இறைவசனம் மறுக்கிறது. உண்மையான நன்மை, புண்ணியம் எப்படி கிடைக்கும் என்பதையும் பட்டியிட்டு காட்டுகிறது. அல்லாஹ் கூறும் இந்நற்செயல்களை செய்யாமல் ஒரு திசையில் கால் நீட்டுவது கூடாது. அத்திசையில் தலை வைக்க வேண்டுமென சிறப்பிப்பது அல்லாஹ் கூறும் அருள் மொழியும், நபி வழியுமல்ல.

நபி(ஸல்) அவர்கள் படுக்கையை தூய்மையாக உதறி விரித்து, நமது உடலின் வலப்புறத்தை சாய்த்து “அல்லாஹும்ம பிஸ்மிக்க ரப்பீ வழஃத்து ஜன்பீ, வபிக அர்ஃ(F) பஉகு  வஇன் அம்சக்தஹா நப்ஸீ ஃபர்ஹம்ஹா, வஇன் அர்சல்த்தஹா ஃFபஹபழ் பிமா தஹ்பழ இபாதுக்க சாலிஹீன்”.

பொருள் : யா அல்லாஹ்! எனது இரட்சகனே! உனது திருநாமத்தை உச்சரித்தவனாக, எனது உடலை சாய்க்கிறேன். உன்னைக் கொண்டு அதை உயர்த்துவேன். (நான் உறங்குகையில்) எனது உயிரை கைப்பற்றிக் கொண்டால் அதனை (சுவர்க்கம் தந்து அருள் பாலிப்பாயாக! (விழிப்பது மூலம்) எனது உயிரை திருப்பி தந்தால் (தீய செயலிலிருந்து) உனது நல்லடியார்களை  பாதுகாத்தது போல் பாதுகாப்பாயாக! ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், அஹ்மது

வடக்கே தலை வை! தெற்கே கால் நீட்டு! மேற்கே காலை நீட்டாதே! கிழக்கே தலை வைக்காதே! என்றெல்லாம் நபி(ஸல்) கூறியதற்கு ஆதாரமில்லை. தமிழகத்தில், மேற்கே கஃபத்துல்லாஹ் இருப்பதால் அத்திசையில் கால் நீட்டக் கூடாது என்று நினைக்கின்றனர். இதே அடிப்படையில் ஒரு சிலர் அவர்களது குல தர்ஹாவிருக்கும் திசை நோக்கியும், கால் நீட்டக் கூடாது என சட்டமியற்றி நடந்து வருவதைப் பார்க்கிறோம். இவை மூட நம்பிக்கையாகும். கிப்லாவை நோக்கி கால் நீட்டக் கூடாது என்பதற்கு எவ்வித குர்ஆன், ஹதீஃத் ஆதாரமுமில்லை. ஆனால் திறந்த வெளியில் கிப்லாவை முன் நோக்கியோ, பின்னோக்கியோ மலம், ஜலம் கழிப்பதற்கு தடை இருக்கிறது.

“நீங்கள் மலம், ஜலமட் கழிக்கும்போது கிப்லாவை முன்நோக்கவும் வேண்டாம்; பின் நோக்கவும் வேண்டாம்” (அபூ அய்யூபில் அன்ஸாரி(ரழி), புகாரி,

அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.

ஐயம் : நபி(ஸல்) மக்காவை விட்டு மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) புறப்பட்டதிலிருந்து தானே நமது இஸ்லாமிய ஆண்டு கணக்கிடப்படுகிறது. அப்படியிருக்க ரபீயுல் அவ்வல் பிறை 12-ல் ரசூலுல்லாஹ்(ஸல்) பிறந்தார்களென்றும், 40-வது வயதிலட் நுபுவத்(நபிப்பட்டம்) வந்ததென்றும் கூறுகிறோமே அது எந்த ஆண்டைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. ஹிஜ்ரத் நபி(ஸல்) அவர்களின் 58-வது வயதில் தானே ஏற்பட்டது?மு.அப்துல்ஹமீது, நிரவி.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டது போல நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்த ஆண்டிலிருந்தே இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிக்கவில்லை. நபி(ஸல்) ஹிஜ்ரி ஹஹுல் வஃபாத்தானார்கள். அடுத்து அபூபக்கர் (ரழி) ஆட்சி நடந்தது. அவர்கள் இரண்டரை வருடங்கள் ஆட்சி செய்து ஹிஜ்ரி ஹ4-ல் வஃபாத்தானார்கள். பின் உமர்(ரழி) ஆட்சி ஆரம்பமானது. அப்போதுதான் இஸ்லாமிய காலண்டர் உருவானது. ஹிஜ்ரி ஆண்டு என பெயரிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பும் 12 மாதங்களைக் கொண்ட வருட கணக்கு நடைமுறையிலிருந்தது. அதற்கு இன்றைய அரபி மாதங்களின் பெயர்களும் இருந்துள்ளன என்பதற்கு குர்ஆனிலும் ஹதீஃதிலும் ஆதாரங்களுள்ளன.

“நிச்சயமாக அல்லாஹுவிடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டில்) பன்னிரண்டு ஆகும்…. அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை; இதுதான் நேரான மார்க்கமாகும்” (அல்குர்ஆன் 9:36)

“ஹிஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாயிருக்கும்”. (2:197)

“ரமழான் மாதத்தில் குர்ஆன் இறக்கப்பட்டது.” (2:185)

போர் விலக்கப்பட்ட (ரசூல் (ஸல்) விளக்கப்படி: துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு) சங்கைமிக்க மாதங்கள் கழிந்துவிட்டால்…. (அல்குர்ஆன் 9:5)

மேற்கண்டவாறு இஸ்லாமிய நிகழ்ச்சிகள் ஹிஜ்ரி ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்பே கணக்கிடப்பட்டுக் கொண்டிருந்தன என்பதை அறியலாம். “அல்பிதாயா வந்திஹாயா” என்ற பெரும் சரித்திர நூல் எழுதிய இமாம் இப்னு கதீர்(ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி ஆண்டு வருவதற்கு முந்திய காலங்களை ஆமுல்ஃபீல்(யானை வருடம்) எனக் குறிப்பிடுகிறார்கள். எனவே ரபீயுல் அவ்வல் மாதம் நபி(ஸல்) அவர்களுக்கு 40 வயதில் நபிப் பட்டம் கிடைத்தது அனைத்தும் அன்றைய நடைமுறையில் இருந்த கணக்குப்படி கணக்கிடப்பட்டதுதான். அதனை மாற்றிவிடாதபடியே சந்திர ஓட்டத்தை (LUNAR SYSTEM) கணக்கிட்டு ஹிஜ்ரி ஆண்டு உமர்(ரழி) காலத்தில் உருவாக்கப்பட்டது.

அன்றைய அரபிகளிடம் ஞாபக சக்தி அதிகம். தன் குதிரையின் எழுபது தலைமுறையைக் கூட ஞாபகத்தில் வைத்திருந்தனர். எனவே நாள், மாதம், ஆண்டு கணக்குகளை நினைவில் வைத்திருந்தது வியப்பில்லையே! அன்றைய “ஆமுல்பீல்” கணக்கில் கொண்டிருந்தனர். அது உமர்(ரழி) காலத்தில் ஹிஜ்ரியாக, ஹிஜ்ரத் நடந்த ஆண்டிலிருந்து புதுப்பிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்கள் புது ஹிஜ்ரி ஆண்டை உருவாக்கினார்களே ஒழிய முந்திய கணக்கை பொய்ப்பிக்கவில்லை என்பதை அறியவும். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

குறிப்பு : திருவள்ளுவரின் பிறப்பு பல நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்திருந்தாலும், வள்ளுவர் ஆண்டு எனட்று அண்மையில்தான் தமிழகத்தில் கணிக்கப்பட்டது.

ஐயம் : வியாழன் மாலை, வெள்ளி இரவு ஒவ்வொரு வாரமும் கடைகளிலும், பள்ளிகளிலும் பலாமுசீபத்து நீங்கி பரக்கத் கிடைப்பதற்காக யாஸீன் ஓதி சிலர் காசு வாங்குகிறார்கள். இது மார்க்கத்தில் உள்ளதா?M.A.அப்துல் காதிர், விருதுநகர்.

தெளிவு : பலாமுசீபத்து என்ற பெயரில் பல அநாட்சாரங்கள் முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. அவற்றில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வெள்ளி இரவு தான் யாஸீன் ஓத வேண்டுமென மார்க்கமாக்கியவர் யார்? என்பது எவருக்கும் தெரியாத உண்மை. தினமும் குர்ஆன் ஓதுங்கள்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓதுங்கள்! நபி(ஸல்) அவர்கள் வாக்குப்படி கட்டாயம் நன்மை கிடைக்கும்.

வெள்ளி இரவு பலாமுசீபத்து நீங்க யாஸீன் ஓதுகிறார்கள் என்றால் அன்றுதான் பலாமுசீபத்து இறங்குகிறதா? மற்ற நாட்களில் இறங்குவதில்லையா? மற்ற நாட்களில் பலாமுசீபத்து இறங்கினால் என்ன செய்வார்கள்? எந்த நாளில் பலாமுசீபத்து இறங்கும் என்பதை இவர்களுக்கு கற்றுத் தந்தது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார்கள். குர்ஆன் ஓதுவது தவறா? யாஸீன் ஓதக் கூடாதா, அல்லாஹுவின் கலாமை ஓதுவதால் நன்மைதானே~ எனக்கூறி காசு தேடவே முற்படுவர்.

ஒவ்வொரு வெள்ளி இரவும் யாஸீன் ஓதி காசு வாங்கும் – நீங்கள் குறிப்பிட்டபடி ஒரு சில ஆலிம்கள் எவ்வித பலாமுசீபத்தும் இல்லாமல் சுபீட்சமாக இருக்கிறார்களா? என்பதைப் பாருங்கள். உங்களுக்கு உண்மை தெரிந்துவிடும். அவர்களது பொருளாதார வாழ்வில் பரக்கத் இல்லாததால்தான், அவர்கள் யாஸீனை வாராவாரம் வெள்ளி இரவுகளில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே ஒரு தடவை ஒரு கடையில் வெள்ளி இரவு யாஸீன் ஓதுவதால் பரக்கத் அக்கடையில் ஏற்படுமென்றால், பல கடைகளில் பல தடவைகள் யாஸீன் ஓதும் ஒரு சில ஆலிம்களின் வாழ்வு எவ்வளவு பரக்கத்தாக இருக்க வேண்டும். இருக்கிறதா? ஒவ்வொரு வியாழன் இரவும் பல கடைகளில் யாஸீன் ஓதி காசு பெற்று பரக்கத் கிடைக்குமென கூறும் ஆலிம்கள் அடுத்த வியாழன் இரவுக்கும் யாஸீன் ஓதி காசு பெறும் நிலையிலேயே அவர்களுக்கு பரக்கத் இருக்கிறது என்பதையும் உணருங்கள். இவர்களைப் பற்றி நபி(ஸல்) அன்றே நமக்கு அறிமுகப்படுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.

“எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடையே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம் : திர்மிதீ, அஹ்மது.

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள் என நபி(ஸல்) எச்சரித்தார்கள். ஆதாரம் : அஹ்மத், தஹாபி, தப்ரானி, இப்னு அஸாகீர்.

மேற்கண்ட ஹதீஃத்களை பார்வையிடுபவர்கள், வெள்ளி இரவு பலாமுசீபத்து, பரக்கத்து பெயரில் யாஸீன் ஓதி காசு வாங்குபவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணரலாம். அரபி படித்தவர்கள், குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் என்ற ஒரே காரணத்தில் இஸ்லாமிய மக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர். நாமம் குருட்டு நம்பிக்கையில் நடந்து வருகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக! இதுபோன்ற மூடப் பழக்கத்திலிருந்து விடுபட்டு தினமும் அல்லது நேரம் கிடைக்கும்போது குர்ஆன் ஓதி, ஓதக் கேட்டு அல்லாஹுவின் அருட்கொடையை அள்ளிக் கொள்ளுங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.

ஐயம் : தொழும்போது  இரு ஸுஜூதுகளுக்கும்  இடையிலுள்ள  சிறு இருப்பில் நபி(ஸல்) அவர்கள் எதையும் நாம் ஓதும் வகையில் கற்றுத் தந்திருக்கிறார்களா? நிஃமத் ஹுஸைன், கத்தார்.

தெளிவு : ஹுதைஃபா(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் (இருக்கும் சிறு இருப்பில்) “ரப்பிஃ ஃபிர்லீ, ரப்பிஃ ஃபிர்லீ” என்று ஓதிக் கொண்டிருந்தார்கள்.

பொருள் : எனது ரப்பே! என்னை மன்னித்து விடு! எனது ரப்பே! என்னை மன்னித்து விடு!

நபி(ஸல்) அவர்கள் இரு ஸஜ்தாக்களுக்கு மத்தியில் (உள்ள சிறு இருப்பில்) “அல்லாஹும்மஃ ஃபிர்லீ வர்ஹம்னீ வஜ்புர்னீ வஹ்தினீ வர்ஜுக்னி” என்று ஓதிக் கொண்டிருந்தார்கள். (ஜைது பின் ஹுபாப்(ரழி) ஹாக்கிம்)

பொருள் : யா அல்லாஹ் என்னை மன்னித்தருள்வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்திப்பாயாக! எனக்கு நேர்வழி காட்டுவாயாக! எனக்கு (முறையாக) ரிஜ்கு தந்தருள்வாயாக!

ஐயம் : முஸ்லிம்களின் திருமணத்தின் போது பெண்ணுடைய கழுத்தில் தாலி கட்டுவது அவசியமா? தாலி கட்டுவது பற்றி மார்க்கத்தில் ஏதேனும் கூறப்பட்டிருக்கிறதா? S,H,M. தாஸிர், ரியாத்.

தெளிவு : திருமணத்தின் போது பெண்ணுடைய கழுத்தில் தாலி கட்டுவதென்பது அவசியமற்றதோர் செயலேயாகும். இதற்கு இஸ்லாத்தில் இம்மியளவும் ஆதாரம் கிடையாது. இத்தகைய அர்த்தமற்ற பழக்கங்கள் நம்மிடையே பழக்க தோஷத்தினால் ஏற்பட்டவையாகும்.

அன்னை ஃபாத்திமா(ரழி) அவர்கள் கூட தமது கழுத்தில் தான் சங்கிலி போட்டிருந்தார்கள் என்று நமது தாய்மார்கள் பேசிக் கொள்வார்கள். அதற்கெல்லாம் ஹதீஃத்களில் அறவே ஆதாரமில்லை. திருமண சபையில் அன்னை ஃபாத்திமா(ரழி) அவர்களோடு அலி(ரழி) அவர்களின பெயரைச் சேர்த்து “கமா அல்லஃப்த்த பைன அலிய்யின் வ  ஃபாத்திமத்திஜ் ஜஹ்ரா” என்று யாரோ சுயமாக தயாரித்த அந்த துஆவில் இந்த வாசகத்தை ஓதும்போது ஹூம்… ஹூம்…. தான் கட்டுங்கள் என்று சபையிலுள்ளோர் கூறுவார்கள். அப்பொழுதுதான் தாலி கட்டப்படும். இப்பழக்கம் அநேக இடங்களில் உண்டு! எடுத்துக்கூற ஆள் இல்லாததால் இதுபோன்ற சடங்கு முறைகள் அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத்துச் செய்வானாக!.

ஐயம் : ஸலவாத்துன்  நாரியா 4444 தடவை கூட்டாக சேர்ந்து சிலர் ஓதுகிறார்கள். இது மார்க்கத்தில் அனுமதியுள்ளதா? குர்ஆன், ஹதீஃத்படி விளக்கம் தரவும். M.A.அப்துல் காதிர், விருதுநகர்.

தெளிவு : இப்படி ஒரு ஸலவாத்தை நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததில்லை. இதற்கான தெளிவான விளக்கத்தை அந்நஜாத் செப்டம்பர் அக்டோபர் 1986  இதழ்களில் “ஸலவாத்: என்ற தலைப்பில் காண்க.

ஐயம் : 1. நபி(ஸல்) அவர்கள்மீது மலக்குகளும், மூமின்களும் கூறும் ஸலவாத்துக்கு, நபி(ஸல்) அவர்களுக்கு அருள்புரியும்படி, அவர்கள் துஆ செய்கிறார்கள் என்பது, அரட்த்தம் என்று கூறுவோமேயானால், அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத்துக்கு என்ன பொருள்?

2. பூமி அல்லாத செவ்வாய் போன்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது சம்பந்தமாக ஹதீஃத் விளக்கம் தேவை. அ.அப்துஸ்ஸலாம், மஞ்சக்கொல்லை.

தெளிவு : 1. ஸலவாத் எனும் பதத்திற்கு பல பொருள் உள்ளன. “ஸலவாத்” எனும் பதத்தை அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறும்போது ஒரு பொருளும், மற்றவர்களுடன் இணைத்துக் கூறும்போது பிரிதொரு பொருளும் அதற்குண்டு.

பொதுவாக அருள்புரியுதல், அபிவிருத்தி செய்தல், நேசித்தல், புகழ்தல், உதவி ஒத்தாசை செய்தல், நற்பிரார்த்தனை புரியுதல் ஆகியவை அதன் பொருட்களாகும்.

அல்லாஹ்வுடன் “ஸலவாத்” எனும் பதத்தை இணைத்துக் கூறும் போது, அவன் அருள் புரிகிறான். அபிவிருத்தி செய்கிறான். நேசிக்கிறான், புகழ்கிறான், உதவி ஒத்தாசை செய்கிறான் என்பது பொருளாகும்.

ஆனால் அதை மலக்குகளுடன் இணைத்துக் கூறும்போது, அவர்கள் அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார். நேசிக்கிறார்கள், உதவி ஒத்தாசை செய்கிறார்கள். நற்பிரார்த்தனை புரிகிறார்கள் என்பது பொருளாகும்.

இவ்வாறே மூமின்களுடன் அப்பதத்தை இணைத்துக் கூறும்போதும், அவர்கள் அருள்புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள், நேசிக்கிறார்கள், புகழ்கிறார்கள், உதவி ஒத்தாசை செய்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும்.

சுருங்கக் கூறின், அல்லாஹ் நபி(ஸல்) அவர்களட் மீது ஸலவாத்துச் செய்கிறான் என்றால், அவன் அவர்கள் மீது அருள்புரிகிறான் என்றும் மலக்குகள் மூமின்கள், அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள் என்றால், அவர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அருள் புரியும்படி அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள் என்பதாகவும் அறிகிறோம்.

எனவே, அல்லாஹ் நம்மை நோக்கி, மூமின்களே! நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறுங்கள்! என்று கட்டளையிட்டிருப்பதை நாம் உற்று நோக்கும்போது, நமது நாவினால் மட்டும் “அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதி” (யா அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மேற்கண்டபடி முழுமையாக “ஸலவாத்”தின் பொருட்கள் அனைத்தையும் அமுல்படுத்தும் வகையில் நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்தி, முறையாக அவர்களை நேசிப்பதுடன், அவர்கள் தமது உயிரினும் மேலாக பேணி வளர்த்து நம்மிடம் ஒப்படைத்து விட்டுச் சென்ற நம் தீனுல் இஸ்லாத்தின்படி நாமும் நடந்து, பிறரும் நடக்க ஆவனச் செய்வதும் அவசியம் என்பதை உணருகிறோம்.

2. தாங்கள் கூறியிருப்பது போல் பூமி அல்லாத மற்ற கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புவதாலும் நாம் அதை நம்புவதிலோ, அல்லது நம்பாது போவதிலோ, நமக்கு எதுவும் ஏற்படுவதற்கில்லை. அவற்றில் உயிரினங்கள் வாழ்வது குறித்து குர்ஆன், ஹதீஃத்களில் விபரங்களை நாம் பார்க்கவில்லை.

ஐயம் : 1. பஜ்ரு தொழுதபின் விடியும் வரை ஒருவர் மஸ்ஜிதில் “திக்ரு” செய்து கொண்டிருந்தால், ஒரு ஹஜ்ஜு உமரா செய்த பலன் உண்டு என்பதாக கூறுகிறார்களோ இதற்கு ஹதீஃத் ஆதாரமுண்டா?

2. ளுஹர் தொழுகையின் ஜமாஅத் நடைபெறும் போது வந்தவர் ஜமாஅத்துடன் பர்ளை தொழுதுவிட்டு, பின்னர் முன் சுன்னத்தை அவர் அவசியம் தொழ வேண்டுமா?

3. பஜ்ருடைய ஜமாஅத்தில் சேர வேண்டுமா? அல்லது ஜமாஅத்தோடு தொழுதுவிட்டு பின்னர் சுன்னத்து தொழுவதா? அபுல்கலாம், மதுரை.

தெளிவு : 1. ஒருவர் ஜமாஅத்துடன் பஜ்ரு தொழுது சூரியன் உதிக்கும் வரை அல்லாஹ்வை திக்ரு செய்துவிட்டு பின்னர் இரண்டு ரகாஅத்து தொழுவாரேயானால் அவருக்கு ஒரு ஹஜ்ஜு உம்ராவின் கூலி போன்றதுண்டு. (அதுவும்) முழுமையாக, முழுமையாக, முழுமையாக என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹுரைரா(ரழி) திர்மிதீ)

மேற்காணும் ஹதீஃத் “கரீபு” எனும் ஒரே நபரைக் கொண்டுள்ள அறிவிப்பாயிருப்பதுடன் இதன் அறிவிப்புத் தொடர் பலமிழந்ததாகவும் காணப்படுகிறது.

2. ளுஹருடைய முன் சுன்னத்தும் நபி(ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாயிருப்பதால் பின் சுன்னத்துக்குப் பின்னால் தொழுவதே மேலாகும். நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்தும் (தினசரி சுன்னத்தான தொழுகைகள்) 10 ரகாஅத்துகள் தான் என்பதை மனனம் செய்து வைத்துள்ளேன். (அவையாவன) ளுக்ருக்கு முன் 2 ரகாஅத்துகள், பின் 2 ரகாஅத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரக்அத்துகள் இஷாவுக்குப் பின் தமது வீட்டில் 2 ரகாஅத்துகள், ஸுப்ஹுக்கு முன் 2 ரகாஅத்துகள். (இப்னு உமர்(ரழி) புகாரீ, முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில் 12 ரகாஅத்துகள் என்றும் உள்ளது. ஒரு பகலிரவு 12 ரகாஅத்துகள் (சுன்னத்தான தொழுகைகள்) தொழும் ஒருவருக்கு அவ்வாறு அவர் அவற்றைத் தொழுததன் காரணமாக சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நாள் முதல் நான் அவற்றை (ஒருபோதும்) தவறவிடவில்லை. (அன்னை உம்மு ஹபீபா(ரழி) முஸ்லிம்)

(மேற்காணும் அறிவிப்பில் 12 ரகாஅத்துகள் என்று கூறியிருக்க, ளுஹ்ருக்கு முன் 4  ரகாஅத்துகள் என்ற கணக்கின்படியாகும்.

3. நான் ஒருமுறை சுப்ஹு தொழுகைக்கு சென்றபோது நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் பர்ளைத் தொழுதுவிட்டு, பின்னர் நான் தொழாதிருந்த பஜ்ருடைய சன்னத்தைத் தொழுதேன். அப்போது அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் “என்ன தொழுதீர்?” என்று கேட்க, அதற்கு நான் விடுபட்டு விட்ட சுன்னத்தை தொழுதேன் என்றேன். அதற்கு அவர்கள் எதுவும் பேசாது சென்றுவிட்டார்கள். (கைஸ்பின் உமர்(ரழி) : அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்)

***************************************************************************************************************************************************************************************************

Previous post:

Next post: