மாமனிதர் நபி(ஸல்)

in 2015 ஏப்ரல்

S. சதீஸ்குமார்,
செல் : 95781-63832

துவக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தி விடுவது அவசியமாகும். அதாவது மனித வரலாற்றில் முதன் முறையாக முஹம்மது நபி (ஸல்) அவர்களால் வழங்கப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம் என்பதும், இக்கருத்தின் அடிப்படையில் நபிகள் தான் இஸ்லாத்தை தோற்று வித்தவர் என்று கூறுவதும் தவறான கருத்தாகும்.

இறைவனின் முன்னிலையில் மனிதன் முழுமையாக அடிபணிதல் வேண்டும். மேலும் இறைவன் முன்னால் நமது சொல்கள், செயல்கள் அனைத்திற்கும் பதில் தருவதற்காக அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவோம் எனும் ஒரே நெறியைத்தான் துவக்க காலத்திலிருந்து மனித இனத்திற்கு இறைவன் தொடர்ந்து முறையாக வழங்கினான் என்ற உண்மையை இறைநெறிநூல் திருகுர்ஆன் தெளிவாகவும், விரிவாகவும் வலியுறுத்திக் கூறுகிறது. இந்நெறியினை அரபி மொழியில் “இஸ்லாம்” என அழைக்கப்படுகிறது.

“”திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்தினரிடையேயும் நாம் ஓர் இறைத்தூதரை அனுப்பியிருந்தோம்” (திருகுர்ஆன் : 16:36)

முதல் மனிதர் ஆதாம் முதல் இறைத்தூதர் ஆவார். அவருக்குப்பின் வந்த சமுதாயங்கள் ஒரே இறைவனின் வழிகாட்டுதலை மறந்து சூரியன் சந்திரன் மழை மரம் செடி ஏனைய படைப்புகள் இன்னும் மனிதனை மிஞ்சிய சக்திகளில் சில நன்மைகளை அளிக்கின்றன என்பதாக நினைத்து வணங்கி வந்தார்கள். இவ்வாறு தவறான வழிகளுக்கு மக்கள் செல்லும்போது அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக, இறைவன் மனிதர்களில் இருந்தே தூதர்களை அனுப்பினான். நூஹ்(நோவா), இப்ராஹீம்(ஆப்ர ஹாம்) மூஸா(மோசஸ்) ஈசா(ஜீசஸ்) ஆகியோரும் இன்னும் பல இறைத்தூதர்களும் பல்வேறு காலங்களில், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் எல்லோரும் போதித்தது அந்த ஒரே நெறியினைத்தான். இறைத்தூதர்கள் ஒவ்வொருவரும் தாம் அறிவுறுத்தும் கொள்கைகளும் சட்டங்களும் தமது சொந்தக் கருத்தல்ல என்றும் பிரபஞ்சத்தின் படைப்பாளனிடமிருந்து தமக்கு அறிவிக்கப்படுபவை என்றும் தெளிவாகக் கூறினார்கள். இவர்க ளில் இறுதித் தூதராக இறைவனால் அனுப்பப்பட்ட வர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
இறைத்தூதர் முஹம்மது (ஸல்)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் தன் தந்தையையும் பிறந்த 6 வருடங்களுக்குப் பின் தன் தாயையும் இழந்து விடுகிறார். பின்னர் தன்னுடைய தந்தையின் சகோதரர் அரவணைப்பில் வளர்கிறார். சிறு வயதிலிருந்தே இறைவனின் கருணையால் எல்லாவித தீய எண்ணங்களிலிருந்தும் செயல்களிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறார். அவருடைய நன்னடத்தையால் அரபுலக மக்களால் “”நேர்மையானவர்” நம்பிக்கைக்குரியவர்” என்று அழைக்கப்படுகிறார்.

அரேபிய மக்களின் அநாகரீகமான, காட்டு மிராண்டித்தனமான செயல்களால் மிகவும் கவலையுற்ற நபி(ஸல்) அங்குள்ள மலைக்குகை ஒன்றில் தனியாக இறை தியானம் செய்யும்போது தன்னுடைய 40வது வயதில் இறைவனால் தூதராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மற்ற இறைதூதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டுமே இறைத்தூதராக அனுப்பப் பட்டார்கள். (உதாரணம் : இயேசு ஈஸா நபி)-இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும். (திருகுர்ஆன் 3:49) பைபிள் மத்தேயு 15:24)
ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டிடவே அனுப்பப்பட்ட இறுதி இறைத்தூதர்.

“(நபியே!) உம்மை (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராகவே நாம் அனுப்பியுள்ளோம். அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியவராகவும் (பாவங்களை குறித்து) அச்சுறுத்தி எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். (திருகுர்ஆன்: 34:28)

மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்கிறது குர்ஆன்; “”அல்லாஹ் வுடைய தூதரிடத்தில் உங்களுக்கு திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது” (திருகுர்ஆன்:33:21)

இதைத்தான் சரித்திர ஆசிரியர் La.Martine  தனது நூலில் “”இறைத்தூதர், தத்துவப் போதகர், சொற்பொழிவாளர், சட்டநிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள், நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள், கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கியளித்த மாமேதை, ஒரே ஆன்மீக தலைமையில் இருப்பது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர் தாம் முஹம்மது (ஸல்) அவர்கள்.

மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களுக்கு கடைசி முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். (திருகுர்ஆன் : 33:40)

ஏன் இறுதி நபி? எனும்போது முஹம்மது நபிக்கு முன்னர் வந்த பல தூதர்களுக்கு நெறிநூல்கள் கொடுக்கப்பட்டன. (உதாரணம் : இயேசு (ஈஸா நபிக்கு) -இன்ஜீல், மோசஸ் (மூசா நபிக்கு)-தவ்ராத், தாவூத் நபிக்கு-ஸபூர்) ஆனால் இந்த இறைத்தூதர்கள் இறந்த பின் வந்த மக்கள் அவற்றை வேதங்களாக்கி கூட்டல், கழித்தல், இடைச்செருகல்கள் என்று பல மாற்றங்கள் செய்ததால் கடவுளின் வார்த்தை எனும் தூய தன்மையை அவ்வேதங்கள் இழந்துவிட்டன. இதனால் இறைவன் குர்ஆன் எனும் இறுதி நெறிநூலை முஹம்மது நபி(ஸல்) மூலமாக வழங்கி அதனை பாதுகாக்கும் பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டான்.
நிச்சயமாக நாம்தாம் (குர்ஆனாகிய) இந்த நல்லுரையை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே இதனை உறுதியாகப் பாதுகாப்பவராகவும் இருக்கிறோம். (திருகுர்ஆன் : 15:9)

14 நூற்றாண்டுகளாக மூலப் பிரதி பாதுகாக்கப்பட்டு வரும் ஒரே நெறிநூலாக திருகுர்ஆன் மட்டுமே அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளுக்கும் அனுப் பப்பட்ட மூலப்பிரதிகளில் சில ஈராக்கின் பாக்தாத் மியூசியம், ரஷ்யாவின் தாஷ்கண்ட் மற்றும் துருக்கி இஸ்தான்புல் நகரில் உள்ள டாப்காப்பி அருங்காட்சியகத்திலும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஆகவே இறைவனின் செய்திகளை எடுத்துக்கூறி அதன்படி வாழ்ந்து காட்டவே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். இறைவனின் செய்தியான திருகுர்ஆன் இன்றளவும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இனி இறைத்தூதர்கள் வரவும் மாட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களில் ஒன்று.
மாநபி மணி மொழிகள் இறைவனின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்திலும் இறைவனின் கோபம் தந்தையின் கோபத்திலும் இருக்கின்றது.

கன்னத்தில் அடித்துக் கொள்பவனும், சட்டையைக் கிழித்துக் கொள்பவனும், மடத்தனமான வார்த்தைகளால் கூப்பாடு போடுபவனும், நம்மைச் சாரந்தவன் (முஸ்லிம்) அல்ல.

தன் நாவையும், வெட்கத் தலத்தையும் பாது காத்துக் கொள்வதாக ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதி இழைத்துவிட்டாலோ, அவனது உரிமைகளைப் பறித்தாலோ, அவனது சக்திக்கு மீறிய சுமைகளை அவன் மீது சுமத்தினாலோ, அவனது பொருளை அபகரித்தாலோ நான் மறுமை நாளில் இறைவனின் நீதி மன்றத்தில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன்.

உண்மை பேசி நாணயத்துடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமைநாளில் இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தோர் ஆகியோருடன் இருப்பார்.
இறைவன் உங்கள் உருவங்களையோ செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கிறான்.

மனைவியிடம் நல்லவராக நடப்போரே உங்களில் சிறந்தவர், நான் என் மனைவியருக்கு நல்ல வனாக இருக்கிறேன்.

தூய்மை இறை நம்பிக்கையின் ஒரு பகுதி
ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும் ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்.

கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசா(அலை) இயேசுவை வரம்பு மீறி (இறை நிலைக்கு) புகழ்ந்தது போல என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்.

மனிதர்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போல் சமமானவர்கள்.
இஸ்லாத்தில் சகுனம் பார்ப்பது, ஜோதிடம் கேட்பது கூடாது. அவ்வாறு கேட்போரின் 40 நாள் தொழுகை ஏற்கப்படாது. அவர்கள் என் மீது அருளப்பட்ட நெறிநூலை நிராகரித்தவராவர்.

தான் விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவர் உண்மையுள்ள விசுவாசியாக மாட்டார்.

இந்து, கிறிஸ்தவ வேதங்களில் நாயகம்(ஸல்) பற்றிய முன்னறிவிப்பு
ஓர் அந்நிய நாட்டிலே ஒரு ஆச்சாரியார் தம் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத் (முஹம்மது) அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவ ராக இருப்பார்.

மகரி´ வியாச முனிவர் எழுதிய பவிஷ்ய புராணத்தில் (3:3:5-8)
மேலும் காண்க : பவிஷ்ய புராணம் (3:25:3) ரிக் வேதம் (8:6:10), யஜூர் வேதம் (31:18), அதர்வண வேதம் (8:15:16)
பைபிளில் புதிய ஏற்பாடு யோவான் (14:16) வசனத்தில் “”நான் பிதாவை வேண்டிக்கொள் வேன். அப்பொழுது என்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்கு சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருள்வார்.

மேலும் காண்க: யோவான் (16:7-14), யோவான் (1:19-22), யோவான் (15:26) மற்றும் உபாகமம் (18:18)
மாமனிதரைப் பற்றி அறிஞர்கள், தலைவர்கள்:
“”மதத் தலைவர்கள் அனைவரிலும் தலை சிறந்த வெற்றியாளர் நபிகள் நாயகம்”

-பிரிட்டானிய கலைக்களஞ்சியம்.
“”முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இன்று நம்மி டையே இருப்பாரானால், இன்று மானிட நாகரீ கத்தையே அழித் திட முனைந்திருக்கும் பிரச்ச னைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதில் வெற்றி கண்டிருப்பார்”. –

அறிஞர் பெர்னாட்சா.
“”சண்டையும், சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது தனி முயற்சியால் இணைத்து ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே நாகரீகம் மிகுந்த பலம் பொருந் திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!.” – தாமஸ் கார்லைல் ஹீரோஸ் அண்டு ஹீரோ ஒர்´ப்.
“”மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்க ளின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்டபோது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கை அமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத்தந்தது வாள் பலம் அல்ல என்று முன் எப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். நபிகளின் மாறாத எளிமை, தம்மை பெரிதாகக் கருதாமல் சாதாரண மானவராக நடந்து கொள்ளும் உயர் பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறை வன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்கு காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபி முன்பு கொண்டு வந்து குவித்தன. எல்லா தடைகளையும் வெற்றி கண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர, வாள்பலம் அல்ல” – மகாத்மா காந்தி, யங் இந்தியா 16 செப்.1924

குர்ஆனும் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாக சொல்லப்படுகின்ற ஹதீஃதின் (நபி மொழியின்) பல பாகங்களும் நேராகவோ, மறைமுக மாகவோ சொல்லிக்காட்டாத விஞ்ஞானமோ, கலையின் துறையோ இல்லை.

– விவேகானந்தர், ஞானதீபம் பாகம்8.
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி, மனிதனை மனிதனாக வாழச் செய்து சமுதாய கூட்டுறவு அடிப்படையின் மீது மக்களை வாழ்விக்க ஒரு நிரந்தர நெறி முறையை வகுத்து தந்த வீரர் முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் இல்லை! -டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியல் சாதனத்தை வகுத்தவர்.

நபிகளின் வாழ்வும் வாக்கும் நிரம்பிய ஹதீசும் (நபிமொழியும்) இஸ்லாத்தின் இணையற்ற, இலட்சிய பொக்கி­மான திருகுர்ஆனும் மனி தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றைக் கடமையாக்க முனையவில்லை. இது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய தூண்டுகோலாகும்.

-அறிஞர் அண்ணா காஞ்சிபுரம் மீலாது விழாவில்.
“”உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக முஹம்மதை நான் தேர்வு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயம் சார்ந்த மற்றும் சமய சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே! (மைக்கேல் H ஹார்ட் The 100 Raning of the Most influential Persons in History New york 1978, P.P.33)

1400 ஆண்டுகள் கழிந்த பின் இன்றும் அவருடைய வாழ்வும், வாக்கும் குறைக்கப்படாமலும், கூட்டப்படாமலும், எந்தவொரு மாற்றமும் இன்றி நமக்கு அப்படியே தான் கிடைக்கிறது. சற்று நிதானித்து உங்களை நீங்களே வினவிக் கொள்ள வேண்டும். இந்த கூற்றுகள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான புரட்சிகரமான சாதனைகள் உண்மைகள் நடைபெற்றனவா? அவை உண்மையாய் இருப்பின் இம் மாமனிதரை நான் அறிந்திருக்கின்றேனா? இன்று வரையிலும் நீங்கள் அவர்களை அறிந்து கொள்ள வில்லையயன்றால் வாருங்கள்!. வியக்கத்தக்க இம்மானிதருடைய வாழ்வைப் பயில நாம் முற்படுவோம். இவரைப் போன்ற எந்த ஒரு மனிதரும் இம்மண்ணுலகில் வாழ்ந்ததே இல்லை. அவருடைய வாழ்வையும் முன் மாதிரியையும் பின்பற்றுவோமானால் நம் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படும். மறுமையிலும் வெற்றி கிடைக்கும். உன்னதமிக்க ஒரு புத்துலகம் உருவாகும்.

Previous post:

Next post: