நியூட்ரினோ துகள்களின் துளைத்துச் செல்லும் பண்புகள் – அல்குர்ஆன்

in 2015 அக்டோபர்,அறிவியல்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எஸ்.ஹலரத் அலி.திருச்சி-7.

 அல்லாஹ் படைத்த இந்த மாபெரும் பிரபஞ்சத்தில், அதன் தோற்றம் குறித்து விடைதெரியா மர்மங்கள் ஏராளம். பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் பகுதி (Dark Energy)73% கரும் சக்தியானது மனிதக் கண்ணுக்கு புலப்படாமலும் என்னவென்று விளங்க முடியாமலும் “ அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது. அதைப்போன்று அடுத்து மர்மமானது, பிரபஞ்சத்தின் கால் பகுதியாக 23% இருக்கும் (Dark Matter) “ கரும் பொருள்” இன்னும் புதிருக்குள் புதிரான நியூட்ரினோ துகள்கள் பிரபஞ்சத்தின் அடிப்படையாக உள்ளது.

நாம் வாழும் இந்தப் புவிப்பந்திலும், இதைத்தாண்டியுள்ள விரிந்து பரந்த அண்டத்திலும் உள்ள உயிரற்ற, உயிருள்ள பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை என்பதை அனைவரும் அறிவர்.

அணுக்கள்தாம் பொருளின் ஆகச்சிறிய அடிப்படை வடிவம் என அறிவியல் உலகம் தொடக்கத்தில் நம்பியது. ஆயினும், ஆய்வுகள் தொடரத் தொடர இந்த அணுக்களும் பல உள்துகள்களால் ஆனவை எனத் தெரிந்தது. எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை மட்டுமே இந்த உள் துகள்கள் என ஒரு கட்டத்தில் நம்பப்பட்டது. ஆயினும், இவற்றையும் தாண்டி, இவற்றையும் விட மிகமிகச் சிறிய உள் துகள்கள் கண்டறியப்பட்டன.

இதுவரை கண்டறியப்பட்ட அணு நுண் துகள்களிலேயே மிகமிக நிறை (எடை) குறைவான துகள் நியூட்ரினோவே (Neutrino) ஆகும். முதலில், ஒளியைப் போலவே இதற்கும் நிறை இல்லை என்றே கருதினார்கள். இது குறித்து, கூடுதல் ஆய்வுகள் மேற்கொண்ட போதுதான் இந்த நியூட்ரினோ நுண் துகள் எலக்ட்ரான், மியூவான் (Muon), டாவ் (Tau) ஆகிய மூன்று வடிவங்களில் நிலவுவதாகவும், அவற்றுள் மியூவான், டாவ் ஆகியவற்றுக்கு மிகச்சிறிய அளவில் நிறை உண்டு எனவும் கண்டறிந்தனர்.

அதே நேரம், நியூட்ரினோ நுண் துகளானது, மேற்கண்ட மூன்று வடிவங்களில் ஒன்றிலிருந்து ஒன்று மாறிக் கொண்டே இருக்கிறது எனவும் கண்டறிந்தனர். இதனை நியூட்ரினோவின் “ஊசலாட்டம்” (Oscillation) என்றனர். நிறை இருப்பதிலிருந்து, நிறை இல்லாத நிலைக்கும் மீண்டும் நிறை உள்ள நிலைக்கும் மாறும் இந்த ஊசலாட்டம் குறித்து, அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

“பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது அதைப் படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான்.அதற்க்கு அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.” –அல் குர்ஆன்.41:11

ஆரம்ப பிரபஞ்ச பெருவெடிப்பி(Big Bang)லிருந்து கோடானு கோடி நியூட்ரினோ நுண்ணனுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய் பொழிந்து வந்துள்ளன.சூரியனைப் போன்ற சுய ஒளி நட்சத்திரங்களும் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்து சிதையும் சூப்பர் நோவாக்கள் நியூட்ரினோக்களை வெளியாக்கி வருகின்றன.

காஸ்மிக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி நட்சத்திரங்கள் , அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன. சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் நியூட்ரினோ துகள்கள் வெளிப்படுகின்றன. இது மிக, மிக நுண்ணியது. எந்த அளவுக்கு என்றால், ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி, கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். மனிதன் இதுவரை கண்டறிந்த பொருள்களிலேயே எடை குறைந்தது இதுதான்.

உதாரணமாக, இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட, பல்லாயிரம் கோடி நியூட்ரினோ துகள்கள் உங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். மனித உடம்பை மட்டுமல்ல… மொத்த பூமியையும் குறுக்கும் நெடுக்குமாக ஒவ்வொரு கணமும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றுகொண்டே இருக்கின்றன. பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஊடுருவி சென்று அண்ட சராசரத்தில் கலந்துவிடுகின்றன.

இந்த நியூட்ரினோ துகள், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது.  வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது. சூரியனிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன. எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை. சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை. இந்த நவீன அறிவியல் உண்மைகளை அல்லாஹ் அல் குர்ஆனில் தெளிவாக விவரிக்கின்றான்

“பூமிக்குள் நுழைவதையும்,அதிலிருந்து வெளியேறுவதையும்,வானத்திலிருந்து இறங்குவதையும்,அதன் பால் உயர்வதையும் அவன் அறிகிறான்.அவன் மிக்க அன்புடையவன்,மிகவும் மன்னிப்பவன்.” –அல் குர்ஆன்.34:2,57:4

இது பல பொருளை தரக்கூடிய “முஹ்காமத்” வசனமாகும்.இதன் உண்மைப் பொருள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.கடந்த கால குர்ஆன் விரிவுரையாளர்கள் இவ்வசனத்திற்கு வானிலிருந்து விழும் மழையானது பூமியை துழைத்து செல்வதையும், பின்பு பூமிக்குள்ளே இருந்நது வெளிவரும் தாவர வித்துக்களை குறிப்பதாக பொருள் கூறினர்.

பூமிக்குள் நுழைந்து…. அதிலிருந்து வெளியேறுவதையும்….என்னும் வசனம் கண்ணுக்கு மறைவான நியூட்ரினோ துகள்களுக்குத்தான் பொருத்தமாக உள்ளது.இவைகள் பூமியின் ஒரு புறம் துளைத்துச் சென்று மறுபுறம் வெளியேறுகின்றன. வானம், பூமி போன்று பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது உருவான நியூட்ரினோக்களை ஆராய்வதன் மூலம் உயிரின தோற்றத்தை அறிய முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

அணுக்களால் உருவான பிரபஞ்சத்தையும்,அணுக்களால் ஆன மனித தோற்றத்தையும் அறிந்துகொள்ள அடிப்படை நியூட்ரினோ அணு ஆய்வு அவசியம். பூமிக்குள் நுழையும் நியூட்ரினோவைப்பற்றி அல்லாஹ், வானம், பூமியை படைத்ததின் தொடர்ச்சி வசனத்தில் கூறுவது கவனிக்கத்தக்கது.

“அவன்தான் வானங்களையும்,பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்;பின்னர் அர்ஷின் மீது அமைந்தான்.பூமிக்குள் நுழைவதையும்,அதிலிருந்தும் வெளியாவதையும்;( Neutrino Particles) வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும்( Cosmic Rays ) அவன் நன்கறிகிறான்;நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்-அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.” –அல் குர்ஆன்.57:4.

விண்வெளியிலிருந்து பொழியும் நியூட்ரினோ அணுக்கதிர்கள் பூமியை துளைத்துச் மறுபுறம் வெளியேறுகின்றன.இதுபோல் விண்ணிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் பூமியில் பட்டு மீண்டும் வானத்திற்கே திரும்பச் செல்கின்றன.இதைத்தான்

“பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்தும் வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும்…”என்ற வசனம் கூறுகின்றது. அல்லாஹ் அறிந்தவன்!

நியூட்ரினோக்கள் மிக மிக குறைந்த எடையில் இருப்பதால் அவை கோள்கள், நட்சத்திரங்கள், பாறைகள், மனித உடல்கள் என்று எதன் மீதும் மோதாமல் எதன் மீதும் துளைத்துக்கொண்டு செல்ல முடியும். நியூட்ரினோக்கள் என்பவை பிரபஞ்சத்தின் தகவல்களைத் தங்களுக்குள் அடக்கியிருப்பவை. அவை தங்களுடைய பாதையை எப்போதுமே தவறவிடுவதில்லை. பிரபஞ்ச ரகசியத்தை அறிய நியூட்ரினோ ஆய்வு உதவும்.

நியூட்ரினோ மின்னூட்டம் அற்ற, ஒளி வேகத்தில் பரவும் நுண் துகள் மட்டுமல்ல. கடினமான பாறைகளையும், எந்தவகை நீர்மங்களையும் ஊடுருவிச் செல்ல வல்லது. இவ்வாறு ஊடுருவிச் செல்லும்போது, அதன் திசை வேகத்தில் குறைவதும் இல்லை.

இயற்கையில் சூரியனிலிருந்து வெளிப்படும் நியூட்ரினோ கதிர்கள், பல கோடிக்கணக்கில் நொடி தோறும் பூமிக்கு வந்து கொண்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கோ பிற உயிரிகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. காரணம், இயற்கையில் வெளிப்படும் நியூட்ரினோக்களின் ஆற்றல் 2.2 எலக்ட்ரான் வோல்ட் (ev) முதல் 15 மெகா எலக்ட்ரான் வோல்ட் (Mev) அளவு ஆற்றல் மட்டுமே கொண்டவை ஆகும்.

இந்த சிறிய அளவிலான ஆற்றலுள்ள நியூட்ரினோக்கள் எந்தப் பொருளுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

நியூட்ரினோ கதிர்கள் பூமியை துளைத்துச் செல்வதன் காரணமாகவே பூமியின் ஆழத்தில் சுரங்கம் வைத்து ஆராய்கிறார்கள். தமிழ் நாட்டில் தேனி மாவட்டத்தில் பொட்டிபுரத்தில்1500 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கும் ஆய்வகம் (Indian base Neutrino Observatory) இது குறித்து விரிவாக ஆராயப் போகிறது. இயற்கையில் கிடைக்கும் நியூட்ரினோ தனித்து வருவதில்லை. இதைவிட பல கோடி மடங்கு அளவில் பொழியும் காஸ்மிக் கதிர்கள் ஊடேதான் சேர்ந்து வருகிறது.

தேனி அருகே பொட்டிபுரம் மலையில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமையவிருக்கும் இடம்

இதனை, தனியே வடிகட்டி பிரித்தெடுத்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்குத்தான் ஒரு கிலோ மீட்டர் உயரம் – ஒரு கிலோ மீட்டர் அகலம் – ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள ஓர் மலைப்பகுதியை தேர்ந்தெடுத்து அதைக் குடைந்து உச்சியிலிருந்து 1500 அடி ஆழத்தில், ஆய்வகம் அமைத்து இந்த பாறை வடிகட்டிகளின் மூலம் காஸ்மிக் கதிர் உள்ளிட்ட பிற துகள்களைத் தடுத்து நிறுத்தி, நியூட்ரினோவை மட்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்யப்போகிறார்கள்.

நியூட்ரினோக்களைக் புரிந்து கொண்டால் பூமிக்கடியில் புதைந்திருக்கும் கனிம வளங்களையும், பெட்ரோலிய எண்ணெய் வளங்களையும் கண்டு பிடிக்கலாம். எவ்வளவு தொலைவு கடந்தோம், எந்தந்த பொருட்களை கடந்தோம் என்பதைக்கொண்டு நியூட்ரினோக்கள் தன்மையில் மாறுதல்கள் ஏற்ப்படும். இவற்றைக்கொண்டு கனிம வளங்களை அடையாளம் காண முடியும்.மேலும் பூமிக்கடியில் பாறை அடுக்குகளில் ஏற்ப்படும் அதிர்வு நகர்வு மாற்றங்களை அறிவதன் மூலம் நில நடுக்கம் போன்றவற்றை முன்னறிய முடியும்.

தற்போது கம்பிவடம், செயற்கைக்கோள், நுண்ணலைக் கோபுரம் வழியாக பூமியைச் சுற்றி தகவல் தொடர்பு தரவுகளை (Communication Data) அனுப்பி பெற்று வருகின்றோம். பூமியைத் துளைத்துச் செல்லும் நியூட்ரினோக்களைப் பயன்படுத்தினால் அந்த வழியாகவும் தகவல்களையும்,தரவுகளையும் அனுப்பி,பெற முடியும். இது தகவல் தொடர்பு, இணையதள உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தலாம்.

“பூமிக்குள் நுழைவதையும்,அதிலிருந்தும் வெளியாவதையும்;(Neutrino) வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும்( Cosmic Rays )….” என்ற வசனத்தை இறுதி உம்மத்திற்கு அல்லாஹ் அல் குர்ஆனில் இறக்கியிருப்பதன் காரணம், இதன் மூலம் இச்சமூதாயம் பயன் பெற வேண்டும் என்பதே. மனிதர்களுக்கு பயனில்லாத ஏதொன்றையும் அல்லாஹ் குர் ஆனில் கூறுவதில்லை.இது அவனது சுன்னத் வழிமுறை.

Previous post:

Next post: