பின்பற்றக்கூடாத பள்ளி இமாமுண்டா?

in 1991 பிப்ரவரி

அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்…

பின்பற்றக்கூடாத பள்ளி இமாமுண்டா?
அபூ அப்தில்லாஹ்

கடமையான ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்து டன் (கூட்டுத் தொழுகை) தொழுவது மார்க்கத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டச் செயல். தக்கக் காரணமின்றி ஜமா அத்தை விட்டுத் தனித்துத் தொழக்கூடாது என்பதற்குப் பல ஹதீஃத் ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றையும் மற்றும் பல விபரங்களையும் 90 ஜனவரி முதல் செப். &அக். வரை மிக விரிவாக எடுத்து வைத்துள்ளோம். குறிப்பாக ஜூன் 90 இதழில் இமாமின் தொழுகை கூடாமல் போனா லும் அதன் காரணமாகப் பின்பற்றித் தொழுபவர்களின் தொழுகை கூடாமல் போகாது என்பதற்குரிய ஹதீஃத், அஃதர் ஆதாரங்களைத் தந்திருந்தோம். இவை அனைத் தையும் கவனமாகப் படித்துணர்ந்தவர்கள் எப்படிப்பட்ட இமாமைப் பின்பற்றித் தொழுதாலும் அதனால் நமது தொழுகைக்குப் பாதிப்பு இல்லை என்பதை எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். (பார்க்க : 6:164, 17:35)
ஆயினும் இன்னும் இதில் சிலர் கருத்து வேறுபாடு களைக் கொண்டிருப்பதால் அவர்களின் கருத்து வேறுபாடு களையும் அலசி ஆய்ந்து தெளிவு பெற விழைகிறோம். பித் அத் மற்றும் பாவங்களில் ஈடுபடும் இமாம்களைப் பின்பற் றித் தொழலாம் என்பதில் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட இமாம்களைப் பின்பற்றித் தொழுவதற்குச் சாதகமாக விரிவான விளக்கங்கள் அல் ஜன்னத் ஜனவரி 89 இதழில் தரப்பட்டுள்ளது. எனவே அவை பற்றி மீண்டும் இங்கு அலச வேண்டிய அவசிய மில்லை. ஜமாஅத் தொழுகைக்காகப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்கள் அப்பள்ளியில் பாங்கில் பித்அத் புகுத்தப்பட்டி ருந்ததைக் கேட்ட மாத்திரத்தில், ஜமாஅத்துடன் தொழாமல் அப்பள்ளியை விட்டு வெளியேறி விட்டனர் என்ற சம்பவத்தை ஆதாரமாகக் காட்டி பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றித் தொழக்கூடாது என்று சிலர் வாதிடு கின்றனர். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆதாரப் பூர்வமாக நமக்குக் கிடைக்கவில்லை. அதற்கு மாற்றமாக கொடுமை யாக ஆட்சி புரிந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபுக்குப் பின் இப்னு உமர்(ரழி) அவர்கள் தொழுத நிகழ்ச்சி புகாரியில் இடம் பெற்றுள்ளது. மேலும் இப்னு உமர்(ரழி) அவர்கள் கஷ்பிய்யா, காரிஜிய்யா ஆகிய பெரும் குழப்பவாதி களுக்குப் பின்னால், அவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தொழுதுள்ளார்கள்.

அதுசமயம் அவர்களை நோக்கி, தமக்குள் சண்டை செய்து கொண்டு, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டி ருக்கும் இந்தக் கூட்டத்தாருக்குப் பின்னால் நின்று தொழு கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் யார் ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று அழைப்பு விடுக்கிறாரோ அவருக்குப் பதில் அளிப்பேன். யார் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று அழைப்பு விடுக்கிறாரோ அவருக்கும் பதில் அளிப் பேன். ஆனால் யார் ஹய்ய அலா கத்லி அகீக்கல் முஸ்லிமி வ அக்தி மாலிஹி (உமது சகோதர முஸ்லிமை வெட்டி அவரு டைய பொருளை அபகரிப்பதற்காக வாருங்கள்) என்று அழைப்பு விடுக்கிறாரோ, அதற்கு மாட்டேன் என்று கூறி விடுவேன் என அழகாகவும் தெளிவாகவும் பதில் அளித்துள் ளார்கள். (நாபிஊ(ரழி), ஸுனனு ஸயீது பின் மன்சூர்) அந்நஜாத் ஜூன் 90, பக். 6&7)
எனவே பித்அத் புரியும் இமாமைப் பின்பற்றி இப்னு உமர்(ரழி) அவர்கள் தொழவில்லை என்ற அந்தச் சிலரின் வாதமும் அடிப்பட்டுப் போகிறது)
இணை(´ர்க்) வைக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இப்போது, ஆனால் எவர்கள் மக்கா காஃபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப் பது திட்டவட்டமாகத் தெரிகின்றதோ, இணை வைத் தலை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின் றதோ, அத்தகையோரை இமாமாக ஏற்க முடியாது. இறை வன் எத்தகைய காரியங்களைச் செய்பவர்களைக் காஃபிர் கள் என்று அறிவிக்கின்றானோ அவர்களைப் பின்பற்றித் தொழலாகாது என்ற கூற்றை விரிவாக ஆராய்வோம்.

முதலில் ஒரு மனிதனின் உள்ளத்திலிருப்பது பற்றி திட்டவட்டமான ஒரு முடிவுக்கு இன்னொரு மனிதனால் வரமுடியுமா? என்பதனை அலசுவோம்.

(நபியே!) எவன் நிராகரிப்பானோ அவனுடைய குஃப்ரு நிராகரிப்பு உம்மை விசனப்படுத்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடத்தில்தான் இருக்கிறது. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதை அப்போது நாம் அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ்வே இருதயங்களில் உள்ளவற்றை அறிபவன். (31:23)

தோல்வியுற்று ஓடும் எதிரிப்படையில் ஒருவனை நபி தோழர் ஒருவர் பாய்ந்து அவரைத் தாக்க முற்பட்ட போது அவர் லா இலாஹ இல்லல்லாஹு என்று கூறினார். அப் போது நபி தோழர் அதைப் பொருட்படுத்தாமல் அவரை வெட்டி வீழ்த்தி விட்டார். பிறகு அவரை வெட்டியது பற்றி வருந்தி நபி(ஸல்) அவர்களிடம் இது வி­யத்தை எடுத்துக் கூறினார். அப்போது அவன் தன்னைக் காப்பாற்றிக் கொள் வதற்காகவே கலிமாவைக் கூறினான் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் அவனது உள்ளத்தைப் பிளந்து பார்த்தீரோ? உள்ளக்கிடக்கையை வாயின் மூலமே வெளி யிட முடியும் என்றார்கள். (கபீஸாபின் துவைபு(ரழி), முஸ்னத் அப்திர் ரஜ்ஜாக், இப்னு அஸாக்கீர்)

இந்த குர்ஆன் வசனம், ஹதீஃத் இரண்டிலுமிருந்து ஒருவனுடைய உள்ளத்தின் நிலை பற்றிய திட்டமான அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அது வி­யத்தில் நாம் தலையிடுதல் கூடாது என்பதையும் இவ்வசனமும், ஹதீஃ தும் சுட்டிக் காட்டுகின்றன. இவை கொண்டு தெளிவு பெறதாவர்களுக்கு இன்னொரு ஹதீஃத் ஆதாரத்தைத் தருகிறோம்.

மறுமை நாளின் போது முறையே புனிதப் போரில் ­ஹீதானவரில் ஒருவரையும், தானும் கற்றுப் பிறருக்குக் கற்பித்துக் கொடுத்த ஆலிம்-அறிஞரில் ஒருவரையும் பல்வேறு துறைகளிலும் வருமானம் அளிக்கப்பட்ட செல்வந்தரில் ஒருவரையும் கொண்டு வரப்பட்டு முதன் முதலாக இவர்களுக்குத் தீர்ப்பளிக்கப்படும். முறையே இவர்களில் ஒவ்வொருவருக்கும் தான் செய்துள்ள அருட் கொடைகளை அல்லாஹ் அவர்களுக்கு எடுத்து உணர்த்து வான். அப்போது அவர்களை நோக்கி நீங்கள் இவற்றிற்காக என்ன கைமாறு செய்தீர்கள் என்று கேட்பான். அதற்கு ஒருவர் (யா அல்லாஹ்) நான் உனக்காக புனிதப் போரில் ­ஹீதானேன் என்பார். மற்றொருவர் நான் உனக்காக குர்ஆனை ஓதினேன். இல்மை நானும் கற்றுப் பிறருக்கு கற்பித்தும் கொடுத்தேன் என்பார். மூன்றாம் நபர் நீ விரும் பும் அத்துனை வி­யங்களுக்கும் நான் உனக்காக அனைத் துப் பொருள்களையும் செலவு செய்தேன் என்பார்.

அப்போது அல்லாஹ் முதலாம் நபரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு மாவீரன் என்று அழைக்கப்படுவதற்காக வெட்டுப்பட்டு ­ஹீதாகியுள் ளீர். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இழுக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மற்றொரு வரை நோக்கி நீர் பொய் சொல்கிறீர் உண்மையில் நீர் ஒரு ஆலிம்-அறிஞர், காரீ-குர்ஆனை அழகாக ஓதுபவர் என்று அழைக்கப்படுவதற்காகச் செயல்பட்டுள்ளீர். அவ்வாறு கூறப்பட்டுவிட்டது என்று கூறி இவரும் முகம் கவிழ இழுக் கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார். மூன்றாமவரை நோக்கி, நீரும் பொய் சொல்கிறீர். உண்மையில் நீர் ஒரு கொடை வள்ளல் என்று அழைக்கப்படுவதற்காக செலவு செய்துள்ளீர். அவ்வாறு அழைக்கப்பட்டு விட்டது என்று கூறி முகம் கவிழ இவரும் இழுக்கப்பட்டு நரகில் தள்ளப் படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஹதீஃத் சுருக்கம்) (அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்) ஆதாரபூர்வமான இந்த ஹதீஃதிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்?
சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அந்தச் சத்தியத்தை எதிர்த்துப் போராடுபவர்களை எதிர்த்து ஒருவர் சண்டை யிடுகிறார். இதனை நாம் திட்டமாகக் கண்ணால் காண்கி றோம். அந்தச் சண்டையில் வெட்டப்பட்டு மரணிப்பதும் நமக்குத் திட்டமாகத் தெரிகிறது. நமக்குள்ள திட்டமான அறிவின்படி அவர் அல்லாஹ்வுக்காகப் போராடி அல்லாஹ்வுக்காக வெட்டுப்பட்டு ­ஹீதாகியுள்ளார். நமது கண்களும் நமது அறிவும் இதனையே ஊர்ஜிதம் செய்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட ஒரு ­ஹீதை முதன் முதலில் அல்லாஹ் நரகில் எறிகிறான் என்பதாக இந்த ஹதீஃத் கூறுகிறது.

அடுத்து ஆலிம் ஒருவர் தனது அறிவைக் கொண்டு மக்களை அல்லாஹ்வின்பால் அழைக்கிறார். ஆதாரங்களை குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு ஆணித்தரமாக எடுத்துத் தருகிறார். சாதாரண மக்களும் எளிதாகப் புரிந்து கொள் ளும் வகையில் நாவன்மையுடனும் கருத்துச் செறிவுடனும் சொற் பொழிவாற்றுகிறார். அவரது உபதேசத்தைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் உண்மையை உணர்ந்து தங்களின் தவறுகளை விட்டு தெளபா செய்து நேர்வழிக்கு வந்துவிடு கின்றனர். அவரைப் பெரும் சீர்திருத்தவாதியாக ஒரு பெருங்கூட்டமே கருதிப் போற்றுகிறது. நமது கண்களுக் கும், அறிவுக்கும் இதுவே திட்டவட்டமாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு ஆலிமையும் அல்லாஹ் நரகில் எறிவதாகவும் இந்த ஹதீஃத் கூறுகிறது.

அதேபோல் செல்வச் சீமான் ஒருவர் தமது செல்வங் களில் பெரும் பகுதியை அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளித் தருவதை நமது கண்களாலேயே திட்டமாகப் பார்க்கிறோம். அவர் பெருங்கொண்ட வள்ளல் என்று நமது அறிவு திட்டமாகக் கூறுகிறது. ஆனால் அவரையும் அல்லாஹ் நரகில் எறிவதாக இந்த ஹதீஃத் கூறுகிறது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? நாம் நமது கண் களால் திட்டமாகப் பார்ப்பதை வைத்தோ, அல்லது நமது அறிவு ஆராய்ச்சியால் திட்டமாக விளங்கியோ ஒருவனு டைய உள்ளத்தில் இருப்பது ஈமானா-இறை விசுவாசமா, குஃப்ரா-இறை நிராகரிப்பா என்று முடிவு கட்டிவிட முடி யாது. அந்த இரகசியம் அல்லாஹ்வுக்கே வெளிச்சம். கண்ணால் பார்ப்ப தும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்தறிவதே மெய்யாகும் என்பது நம் நாட்டுப் பழமொழி. ஆயினும் இங்கு ஒருவனுடைய உள்ளத்திலிருப் பதைத் தீர விசாரித்தும் நம்மால் அறிந்து கொள்ள முடி யாது. இந்த நிலையில் தொழ வைக்கும் ஒரு இமாமின் குஃப்ரைப் பற்றித் திட்டமாகத் தெரிந்து கொள்வது எப்படிச் சாத்தியம்? அது மனித வர்க்கத்தால் முடிகிற காரியம் இல்லையே! எனவே அப்படிப்பட்டவர்களையும் பின்பற்றித் தொழுகிறதைத் தவிர வேறு வழி ஒரு உண்மை முஸ்லிமுக்கு இல்லை என்பதே சரியாகும்.

இன்னொரு கோணத்தில் அலசுவோம் :
மக்கத்து காஃபிர்களின் அதே கொள்கையைத் தங்களின் கொள்கையாகக் கொண்டிருப்பதை-இணை வைத்தலை ஆதரிப்பதைத் திட்டவட்டமாக நம்மால் ஊர்ஜிதம் செய்ய முடியாது என்பதை விளக்கினோம். இப்போது ஒரு வாதத் திற்காக அந்தக் கூற்றை ஏற்றே அலசுவோம்.

அந்தக் கூற்றுப்படி அவர்கள் மக்கத்து காஃபிர்களின் கொள்கையிலிருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் களை நாம் அவர்களின் அந்தத் தவறான கொள்கையில் பின்பற்றப் போகவில்லையே! அவர்கள் செய்யும் ஒரு அழ கான செயலை-அல்லாஹ்வால் தெளிவாகக் கட்டளை யிடப்பட்ட ஒரு செயலை, நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டித் தந்த ஒரு உயர்ந்த செயலை அல்லவா நாமும் பின்பற்றித் தொழுகிறோம்.

எவர்கள் சொல்லைச் செவியேற்று அதிலே அழகான தைப் பின்பற்றுகிறார்களோ, அப்படிப்பட்ட அடியார் களுக்கு நன்மாராயம் கூறுவீராக. (39:18) என்ற அல்லாஹ் வின் கட்டளையை ஏற்றல்லவா செயல்படுகிறோம். அப்படித் தொழுவதைத் தடுப்பவர்கள் தாஃகூத்-மனித ஷைத்தான்கள் என்றல்லவா 39:17 வசனம் கூறுகிறது.
முஸ்லிம் அல்லாத ஒருவரே குர்ஆனிலிருந்தோ, ஹதீஃதிலிருந்தோ ஒன்றை எடுத்துச் சொன்னால் அதனைப் பின்பற்றும்படி அல்லாஹ்வே கட்டளையிட்டிருக்கிறான். அப்படி நாம் பின்பற்றும்போது அல்லாஹ்வின் கட்டளை யைத்தான் பின்பற்றுகிறோம். அதற்கு மாறாக குர் ஆனையே சொன்னாலும் ஒரு காஃபிர் சொல்வதை நான் ஏற்று நடப்பதா? என்று சொல்லி ஒரு முஸ்லிம் அதை நிரா கரிப்பாரானால் அந்த முஸ்லிம் அந்த காஃபிரை நிரா கரிக்கவில்லை. உண்மையில் குர்ஆனை-அல்லாஹ்வின் கட் டளையை நிராகரிக்கிறார் என்பதே அதன் பொருளாகும்.

இந்த நிலையில் தன்னை முஸ்லிம் என்று சொல்லு வதோடு இந்த உம்மத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ள ஒருவர் அல்லாஹ்வின் கட்டளையின் படி யும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைப்படியுமுள்ள தொழுகையைத் தொழும் போது அவரைப் பின்பற்றித் தொழமாட்டேன் என்று எவ்வாறு ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்? அப்படிச் செய்தால் அல்லாஹ்வின் கட்டளை யையே நிராகரித்தக் குற்றத்திற்கல்லவா ஆளாக நேரிடும். மேலும் அப்படிப்பட்ட ஒருவரைப் பின்பற்றித் தொழுவ தால் அவரின் தவறான கொள்கைகளுக்கும் நாம் துணை போவதாகப் பொருளாகாது. இதனையே ஆரம்பத்தில் நாம் எடுத்தெழுதியுள்ள இப்னு உமர்(ரழி) அவர்களின் பதில் தெளிவு படுத்துகிறது.

உதுமான்(ரழி) அவர்கள் முற்றுகையிடப்பட்டிருந்த போது, குழப்பவாதிகளைப் பின்பற்றித் தொழுவதால் நாங்களும் பாவிகளாகி விடுவோமா? என்று கேட்கப்பட்ட போது, தொழுகைதான் மக்களுடைய அமல்களில் மிக்க அழகானதாகும். மக்கள் அதை அழகாகச செய்யும்போது, அவர்களுடன் சேர்ந்து நீரும் அதை அழகுறச் செய்து கொள் வீராக! அவர்கள் தீமை விளைவிப்பவர்களாய் இருப்பின் அவர்களின் அத் தீமையை நீர் செய்யாமல் உம்மைத் தற்காத்துக் கொள்வீராக. (அதிய்யு பினகியார்(ரஹ்), புகாரீ) (பார்க்க. அந்நஜாத் ஜூன் 90) இது 31:23 வசனத்தின்படி தான் என்பது விளங்குகிறது.

காஃபிரை பின்பற்றித் தொழலாமா?
தன்னை முஸ்லிம் இல்லை, காஃபிர் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தொழ வைக்கிறார். அவரைப் பின்பற் றித் தொழலாமா? என்று குதர்க்கம் பேசுபவர்களும் உண்டு. இந்த சர்ச்சையில் இப்போது நாம் இறங்குவது இங்கு நமக்கு அவசியமில்லை. முதலில் ஒரு காஃபிர் முஸ்லிம்களுக்கு தொழ வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு முன்வரப் போவதுமில்லை. ஒரு காஃபிரை எந்தப் பள்ளியிலும் யாரும் இமாமாக நியமிக்கப் போவதுமில்லை. பிக்ஹு நூல்களில் நடக்காத காரியங்களுக்கெல்லாம் மஸ்அலா-சட்டம் வகுத்து வைத்திருக்கிறார்களே, அதுபோல் இவர் களும் மஸ்அலா-சட்டம் வகுக்கப் போகிறார்களா?

அப்படியே அவர்களின் கூற்றுப்படியே ஒரு காஃபிர் முஸ்லிம்களுக்கு தொழ வைக்க முன் வந்தால், அவரைப் பின்பற்றி தொழாததினால் இந்த உம்மத்தில் எந்தப் பிளவோ, குழப்பமோ ஏற்பட்டு விடப் போவதில்லை. நமது கவலை எல்லாம் தேவையில்லாத, மார்க்கம் வலியுறுத் தாத காரியங்களிலெல்லாம் வேறுபட்டு இந்த உம்மத்தில் பிளவுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துவதால் சமுதாயம் இழி நிலையை நோக்கிச் செல்கிறதே என்பதேயாகும். ஓர் உண்மையான முஸ்லிம், உம்மத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதையே வன்மையாகக் கண்டிக்கிறோம். அதற்கு அனுமதி இல்லை என்கிறோம்.

அல்ஜன்னத் ஜனவரி 89 இதழ் பக்கம் 27ல் எடுத்தெழுப் பட்டுள்ள தொழுகையை அதற்குரிய நேரம் தவறித் தொழக் கூடிய கூட்டத்தினரை நீங்கள் அடைய நேரும். அவர்களின் காலத்தை நீங்கள் அடைந்தால் உங்கள் இல்லங்களில் (உரிய நேரத்தில்) தொழுது கொள்ளுங்கள். பின்பு அவர்களுடனும் தொழுங்கள்! அவர்களைப் பின்பற் றித் தொழும் தொழுகையை உபரியான (நஃபில்) தொழுகையாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத்)(ரழி), நஸயீ) என்ற இந்த ஹதீஃதை சிந்தித்துப் பாருங்கள்.

தொழுகை வி­யத்தில் நேரம் தவறி தொழுவதை விட பெரிய குற்றம் இருக்க முடியாது. அந்நிலையிலும் உரிய நேரத்தில் வீட்டில் தொழுது கொண்டு ஜமாஅத்திற்கும் செல்லும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார் கள் என்றால் தனித்துத் தொழுவது கொண்டு சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவது எவ்வளவு பெரிய குற்றம் என்பது புரிகிறதல்லவா? ஊரின் ஒற்றுமையை ஜமாஅத்தை விடுவது காரணமாக பிளவுபடுத்த முற்படக் கூடாது. அதே சமயம் தொழுகையில் மக்களின் நடைமுறைக்கு மாற்றமாக-மத்ஹபுகளை விட்டு நபிவழியில் நம் தொழுகையை ஆக்கிக் கொள்வது பிளவை ஏற்படுத்துவதாக ஒருபோதும் ஆகாது. குர்ஆனும், ஹதீஃதும் சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும் சாதனங்களேயல்லாமல் பிளவை உண்டு பண்ணு பவை அல்ல. குர்ஆனும், ஹதீஃதும் பிளவையும், குழப் பத்தையும் ஏற்படுத்துபவை என்ற போதனையும், மாயத் தோற்றமும் ஷைத்தானின் கைங்கரியங்களாகும். ஷைத்தா னுக்கு நாம் ஒருபோதும் செவி சாய்க்கக்கூடாது. ஆயினும் தொழ வைக்கும் இமாம் நபி வழிக்கு முரணாக மத்ஹபுக ளின் வழிகளைக் கடைபிடிப்பதால் நமது தொழுகை பாதிக்கப்படாது. இதனை, உங்களுக்குச் சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள், அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கும், அவர்களுக்கும் பயனுள்ளதாகும். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லது தான். அன்றி அவர்களுக்குத்தான் கேடு என்று நபி(ஸல்) அவர்கள் கூறி யுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரி)

இதுவரை நாம் தெரிந்து கொண்ட வி­யங்களிலிருந்து அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டு நபி (ஸல்) அவர்க ளால் தொழுது காட்டபட்ட அழகிய செயலான தொழு கையை யார் தொழ வைத்தாலும் அவரைப் பின்பற்றித் தொழுது கொள்வதே மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டக் காரியமாகும். எக்காரணத்தைக் காட்டியும், ஒரு இமாமின் பின்னால் தொழுவதை ஒரு உண்மையான முஸ்லிம் புறக் கணிக்க முடியாது என்பதை அறிந்து கொள்கிறோம்.

இன்னொரு கோணத்திலும் அலசுவோம்!
தங்கள் சொந்த ஊர்களில், சொந்த மஹல்லாக்களில் உள்ள பள்ளியில் இப்படிப்பட்டக் காரணங்களைக் கூறி அங்குள்ள இமாம்களைப் பின்பற்றித் தொழாமல் தனித்துத் தொழுது கொள்ளும் சகோதரர்கள் வெளியூர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுது கொள்கிறார்கள். கேட்டால் அந்த இமா மைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவரைப் பற்றித் தெரியாத நிலையில் அவருக்குப் பின்னால் நாங்கள் தொழுகிறோம். அதனால் எங்கள் தொழுகை நிறைவேறிவிடும். எங்களூர் பள்ளிகளிலுள்ள இமாம்களின் நிலை எங்களுக்கு நன்கு தெரியும். ஒரு இமாமைப் பற்றி அறிந்த நிலையில் அவர் பின்னால் தொழுதால்தான் அந்தத் தொழுகை கூடாது என்று விளக்கம் தருகிறார்கள். இந்த விளக்கத்தை அவர்கள் எந்த ஹதீஃத் ஆதாரத்தின் அடிப்படையில் தருகிறார்களோ? நாம் அறியோம்.

ஆயினும் அவர்களின் இந்தக் கூற்றை சிறிது விரிவாக ஆராய்வோம். வெளியூர் பிராயணத்திலிருக்கும் ஒரு வருக்கு ஜமாஅத்து கடமையில்லை. மேலும் தொழுகை யைச் சுருக்கியும்(கஸ்ர்) இணைத்தும் (ஜம்உ) தொழுது கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டு. வெளியூர் சென்றுள்ள ஒருவர் ஒரு பள்ளிக்குச் சென்று ஜமாஅத் நடை பெற இன்னும் சில நிமி­ங்களே இருக்கும் நிலையிலும் தனித்துத் தொழுது விட்டு வெளியேறுவதைப் பார்க்கும் எவரும் அவரைத் தவறாக எண்ணமாட்டார்கள். அங்குள் ளவர்களுக்கு இவரைப் பற்றித் தெரியாது. ஜமாஅத்தில் பிளவை உண்டு பண்ண வந்துள்ளார் என்று குற்றப்படுத்த மாட்டார்கள். வெளியூர்காரர்; என்ன அவசர வேலையோ? முன்னால் தொழுது விட்டுச் செல்கிறார் என்றே எண்ணு வார்கள். இமாமின் மீது சந்தேகப்பட்டு அவர் பின்னால் தொழாமல் தனித்துத் தொழுதுவிட்டுச் செல்லுகிறார் என்று யாரும் நினைக்கமாட்டார்கள். இந்த நிலையில் தான் முன்பின் அறியாத ஒரு இமாமின் பின்னால் தொழுதால் இவரின் தொழுகை கூடுமாம். எந்த அளவு என் றால் இவர் தனது சொந்த ஊரில் அறிந்து வைத்திருப்பதின் காரணமாகப் பின்பற்றித் தொழாமல் இருக்கிறாரே அந்த இமாமை விட இந்த இமாம் கேடுகெட்ட நிலையிலும் இருக்கலாம்.

இவர் ஊரிலுள்ள இமாம் ஃபாத்திஹா, மெளலூது ஓதுவார். இருட்டிலிருந்து கொண்டு இறந்து போன அப்துல் காதிர்(ரஹ்) ஜிலானியை உதவிக்கு அழைக்கும் குத்பிய்யத் என்னும் இருட்டு திக்ரை(?) செய்வார். அவ்வளவுதான். ஆனால் வெளியூரில் போய் இவர் பின் பற்றித் தொழுகிறாரே அந்த இமாம் இவற்றையும் செய்து கொண்டு இதற்குமேல் ஒருபடி மேலே சென்று தர்காக்களி லுள்ள கபுருகளுக்கு ஸுஜூது செய்யலாம் என்று சொல்லு வதோடு அதனைச் செய்பவராகவும் இருக்கலாம். இந்த நிலையில் வெளியூர் வந்து ஜமாஅத் கடமையில்லாத நிலை யிலேயே இந்த இமாமைப் பின்பற்றித் தொழுகிறார். ஆயி னும் தனது சொந்த மஹல்லாவிலுள்ள பள்ளியில் ஜமா அத்துக்குப் போகாமல் வீட்டில் தனித்துத் தொழுது கொள் கிறார். அல்லது ஜமாஅத் முடிந்த பின் பள்ளி சென்று தனித் துத் தொழுகிறார். கேட்டால் அவரைப் பற்றித் தெரியாது. இவரைப் பற்றித் தெரியும் எனக் காரணம் கூறுகிறார்.

ஊரில் முகீமாக (நிரந்தரமாக) இருக்கும் இவருக்கு ஜமாஅத் வலியுறுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஊர்க் காரர்களுக்கு இவரைப் பற்றி நன்கு தெரியும். இந்த நிலை யில் இவர் ஜமாஅத்தை விட்டுத் தனித்துத் தொழுவதால் ஊரில் பெரும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜமாஅத்தில் பிளவை ஏற்படுத்த முற்படுகிறார் என்ற கோபம் நடுநிலை மக்களுக்கு ஏற்படுகிறது. மஹல்லா இமாமையும், மற்றவர் களையும் முஸ்லிமாக இவர் மதிக்காதபோது, அவர்கள் இவரை முஸ்லிமாக மதிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது? அதனால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் குஃப்ர் ஃபத்வா கொடுத்துக் கொள்ளும் நிலை ஏற்படுகி றது. நெருங்கிய இரத்த பந்துக்களுக்கிடையிலும் அனாவசி யமாக குரோத விரோதங்களும், மனஸ்தாபங்களும் சர்வசாதாரணமாக ஏற்பட்டு விடுவதை அறிகிறோம். அன்றாடம் சந்திக்கும் மஹல்லா முஸ்லிம்களிடையே ஸலாம், கலாம் (பேச்சுவார்த்தை) இல்லாமல் ஒருவரை ஒருவர் கடும் பகைவர்களாகக் கருதும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இப்போது சிந்தித்துப் பாருங்கள். வெளியூரில் தனித்துத் தொழுது செல்வதால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாத நிலையில், ஜமாஅத் தொழுகைக் கடமையில்லாத நிலை யில், இமாமின் நிலை தெரியாததால் எப்படிப்பட்ட இமா மைப் பின்பற்றித் தொழுதாலும், அந்தத் தொழுகையை ஏற்றுக் கொள்ளும் அல்லாஹ், அவரது சொந்த ஊரில் மஹல்லா வின் ஐக்கியத்தைக் கருதி, முஸ்லிம்களிடை யேயுள்ள சகோதர நேசத்தை மனதில் கொண்டு, அனாவசி யமான குழப்பங்களையும், கலவரங்களையும் தவிர்க்கும் நல் லெண்ணத்துடன்-மஹல்லா இமாம் எப்படிப்பட்ட வராக இருந்தாலும் அவர் பின்னால் நின்று தொழுதால் அந்தத் தொழு கையை அதே அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டானா?

மஸ்ஜித்களில் இமாமாக நியமிக்கப்பட்டவர்கள் எப் படிப்பட்டவர்களாக இருந்தாலும், கொடிய ´ர்க்குகளில் மூழ்கி இருந்தாலும், அவர்கள் தொழுகையில் பர்ழுகளில் சரியாகத்தான் செய்கிறார்கள். அவர்களது தொழுகை அவர்களின் ´ர்க்கின் காரணமாக அவர்களது முகத்தில் தூக்கி வீசப்பட்டாலும், அவர்களைப் பின்பற்றித் தொழு பவர்கள் ஈமானோடு சரியாகத் தொழுதால் அவர்களின் தொழுகைக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. ஒருவர் சுமையை பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 ஆக ஐந்து வசனங்கள் கூறும் நிலையில் மவ்லவிகளுக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்? எனவே எப்படிப்பட்ட இமாம்களைப் பின்பற்றித் தொழுவதற் கும் மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை என்பதற்கு குர்ஆன், ஹதீஃத் உள்ளங்கை நெல்லிக்கனிபோல், குன்றி லிட்ட தீபம் போல், இரவும் பகலைப் போல் தெளிவாக நேரடியாகச் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தாஃகூத்களான இந்த மவ்லவிகள் வீம்பாக குர்ஆன் வசனங் களையும், ஹதீஃத்களையும் நிராகரித்து குஃப்ரிலாகி, ´ர்க் செய்யும் இமாம்கள் பின்னால் தொழவே கூடாது என்று சுயமாகச் சட்டம் சொல்வதில் இந்த அளவு வெறித்தனமாக ஏன் இருக்கி றார்கள் தெரியுமா?

ஒவ்வொரு பிரிவு மவ்லவிகளும் நாளை நரகை நிரப்ப இருக்கும் பெரும் கூட்டத்தினரில் (பார்க்க : 32:13, 11:118,119) ஒரு பெரும் தொகையினரைத் தங்கள் பின் னால் கண்மூடி (தக்லீத்) வரச் செய்வதில் குறியாக இருக்கி றார்கள். எப்படிப்பட்ட எப்பிரிவு பள்ளியிலும் எப்படிப் பட்ட இமாம்களைப் பின்பற்றியும் தொழலாம். மார்க்கத் தில் எவ்விதத் தடையும் இல்லை என்று உள்ளதை உள்ள படிச் சொன்னால், அவர்களின் பக்தகோடிகள், தங்கள் வீட் டின் அருகிலுள்ள எப்பள்ளியிலும் தொழுது கொள்வார் கள். அவர்களின் பிரிவுப் பள்ளியில் கூட்டம் சேராது. இம் மவ்லவிகள் விரும்பும் உலகியல் ஆதாயங்கள் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்குக் கிடைக்காது. எனவே தங்களின் பக்தகோடிகள் வேறு எப்பள்ளியிலும் தொழாமல் தூரமாக இருந்தாலும் தங்கள் பள்ளிகளைத் தேடி வர வைக்கவே ´ர்க் செய்யும் இமாம்களைப் பின்பற்றித் தொழவே கூடாது என்ற குர்ஆனுக்கும், ஹீஃதுக்கும் முரண்பட்டக் கொடிய சட்டம். புரிந்து கொள்ளுங்கள்! (பார்க்க: 5:87, 10:36,59, 16:116) அல்லது தடையை குர்ஆன், ஹதீஃதில் காட்டட்டும். இது அவர்களின் சொந்த மனோ இச்சையின் அடிப்படையிலும், சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படை யிலும், சுயலாபம் காரணமாகவும் வரட்டுக் கொளரவம் காரணமாகவும் இவர்களாக ஏற்படுத்திக் கொண்ட தவறான நடைமுறையேயன்றி, மூடத் தனமான ஃபத்வாவே அன்றி வேறில்லை. குர்ஆன், ஹதீஃத் அடிப் படையில் அமைந்ததல்ல என்பதே உண்மையாகும்.

நமது மஹல்லா இமாமின் பின்னால் தொழா மல், அதே சமயம் ஜமாஅத்தையும் விடாமல் பக்கத்து மஹல்லாவில் போய் ஜமாஅத்துடன் தொழுது கொள்ளலாம் அல்லவா? என்று சிலர் கேட்கலாம். இதுவும் மஹல்லாவில் பிளவை உண்டுபண்ணும் காரியமாக இருப்பதாலும் எந்த இமா மைப் பின்பற்றித் தொழுதாலும் தொழுகை கூடும் என்று மார்க்கம் சொல்வதாலும், சொந்த மஹல்லாவில் தொழுது கொள்வதே ஓர் உண்மை முஸ்லிமுக்கு அழகாகும்.

முடிவுரை : மனித அபிப்பிராயங்களை முற்றிலுமாக நீக்கி குர்ஆன், ஹதீஃதை நிலைநாட்டி சகோதரத்துவ சமுதாயத் தைக் காணத் துடிக்கும் ஆர்வமுள்ள துடிப்புள்ள இளைஞர் களுக்கு நாம் வைக்கும் அன்பு வேண்டுகோள் இதுதான்.

ஒரே நேர்வழியான குர்ஆன், ஹதீஃதை மறைக்காமல் மக்கள் முன் வைப்பது குழப்பத்தையும், பிளவுகளையும் உண்டாக்கும் என்ற போதனை ஷைத்தானின் போதனை யாகும். ஷைத்தானின் இந்த துர்போதனைக்கு நாம் செவி சாய்க்க வேண்டியதில்லை. அதல்லாமல் நம்முடைய சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கும், வரட்டு கெளரவங் களுக்கும் ஆளாகி சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்த நாம் ஒருபோதும் முற்படக் கூடாது. சமுதாயத்தைக் கூறு போட்டுச் சுரண்டும் மனப்பான்மை முகல்லிது முல்லாக் களுக்கே உரித்தான ஒன்றாகும். அதில் நமக்கு எவ்விதப் பங் கும் அவசியமே இல்லை. அவர்களே அர்த்தமற்ற காரணங் களைக் கற்பித்து மக்களிடையே வேற்றுமைகளை வளர்த்து அதில் குளிர் காய முற்படுவார்கள். அந்த அடிப்படையில் அந்த இமாமுக்குப் பின்னால் தொழக் கூடாது இந்த இமாமுக்குப் பின்னால் தொழக்கூடாது என்று சட்டம் வகுப்பதும், ஒருவருக்கொருவர் குஃப்ர் ஃபத்வா கொடுத் துக் கொண்டு சமுதாயத்தில் வேற்றுமைகளை வளர்ப்ப தும், தங்களுக்கென்று தனிப் பெயர்களைத் தேர்ந்தெடுத் துக் கொண்டு சமுதாயத்திலிருந்துத் தங்களை வேறுபடுத் திக் காட்டிக் கொள்வதும், தங்களுக்கென்று தனிப் பள்ளி கள் கட்டிக் கொள்வதும் முழுக்க முழுக்க முகல்லிது முல்லாக்களின் செயல்களேயாகும். இந்த அவர்களின் செயல்களை விட்டு விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் எடுத்துச் செயல்படுவது உண்மை முஸ்லிம்களின் கடமையாகும். எலலாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

இந்தளவு இந்த மவ்லவிகள்-தாஃகூத்கள் வழிகெட்டுச் செல்லக் காரணம் 2:41,75,78,79,109,146, 159-162,174, 3:14,18,187,188, 4:44,46, 5:13,41,62,63, 6:20,21,25,26,90, 9:9,10,34, 10:72, 11:18,19,29,51, 23:72, 25:57, 26:109,127, 145,164,180, 34:47, 38:86, 42:23 இத்தனை குர்ஆன் வசனங் களை நிராகரித்து மாய்மாலங்கள், திருகுதாளங்கள், தில்லுமுல்லுகள் செய்து மிகமிகக் கொடிய ஹராமான வழியில் ஒரு ஜான் வயிற்றை நிரப்புவதாலும், அதற்காகவே 2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56, 60, 45:37, 49:13, 57:23, 59:23, 34:31-33 குர்ஆன் வசனங் களையும், புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620 ஹதீஃத்களையும் நிராகரித்து குஃப்ரிலாகி, நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கம் கற்ற மேதைகள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும்.

நாங்கள் தான் அரபி மொழி கற்றப் பண்டிதர்கள். அவாம்களான பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது. அவர் களின் தாய்மொழியில் குர்ஆன் மொழி பெயர்ப்புக் கொடுக்கப்பட்டாலும் அதனைப் படித்து பாமரர்களால் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசுகிறார்கள். இந்த மவ்லவிகளின் இப்படிப்பட்ட வீண் பெருமை காரண மாகவே எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மவ்லவிகளை குர்ஆன் வசனங்களை விளங்குவதை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினா லும் நம்பமாட்டார்கள், ஏற்கமாட்டார்கள். 6:153 குர்ஆன் வசனம் கூறும் ஒரே நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட் டார்கள். கோணல் வழிகளையே தங்கள் வழியாக ஏற்பார்கள். இவை 7:146 குர்ஆன் வசனம் கூறும் நேரடி உண்மைக் கருத்துக்களாகும்.

ஆக இந்த மவ்லவிகள் எதுவரை நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள் என்ற வீண் பெருமையை விட்டொழிக்க வில்லையோ, அவாம்களை அதாவது பாமரர்களை இழி வாக எண்ணுவதை விட்டொழிக்க முன்வரவில்லையோ, அவர்கள் தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிட முன்வர வில்லையோ அதுவரை இம்மவ்லவிகள் நேர்வழி பெறவே முடியாது.

இவர்களைப் போல் தாருந்நத்வா உலமாக்கள் சபையில் அபுல் ஹிக்கம் என்று போற்றப்பட்ட அபூ ஜஹீலுடன் இருந்த உமர்(ரழி) அவர்களும், அலீ(ரழி) அவர்களும் அந்த நாற்றக் குட்டையிலிருந்து வெளியேறி, அலீ(ரழி) அவர்கள் யூதனுடைய தோட்டத்தில் தன் கைகளால் நீர் இறைத்து உழைத்தும், உமர்(ரழி) அவர்கள் தன் கைகளால் வியாபா ரம் செய்து உழைத்தும் ஹலாலான முறையில் தங்கள் வயிற்றின் பசியைப் போக்கினார்கள். அது மட்டுமா? பிலால்(ரழி) அவர்களை அடிமையாக, அவாமாக, கேவல மாக எண்ணி இழிவு படுத்தி வந்த பெரும் தவறை உணர்ந்து தெளபா செய்து மீண்டு, அவர்களை என்னுடைய மதிப்புக் குரிய தலைவரே என்று ஏற்றிப் போற்றும் நிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டார்கள்.

அதேபோல் அன்றைய தாருந்நத்வா போன்ற நாற்றக் குட்டையான ஜமாஅத்துல் உலமா நாற்ற குட்டையிலி ருந்து யார் வெளியேறி கொடிய ஹராமான வழியில் வயிற்றை நிரப்புவதை விட்டு, தங்கள் கைகளால் உழைத் துச் சாப்பிடுவதோடு, அரபி மொழி கல்லாதவர்களை இழிவுபடுத்துவதை விட்டு தொளபா செய்து மீண்டால் மட்டுமே அவர்கள் ஈடேற்றம் பெற முடியும்.

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் மவ்லவிகளின் உண்மை நிலை இதுதான். அவர்க ளின் பெருமை காரணமாக அவர்கள் உங்களைக் கோணல் வழிகளில் நரகை நோக்கித்தான் இட்டுச் செல்வார்கள். சமுதாயம் ஒன்றுபடுவதை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்களின் வயிற்றுப் பிழைப்பே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதில்தான் இருக்கிறது.

எனவே மார்க்கத்தை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாக்கக் கொண்ட எந்த மவ்லவியாக இருந்தாலும் அவர்கள் தர்கா, தரீக்கா, மத்ஹப், ஷாஃபி, ஹனஃபி, மாலிக்கி, ஹன்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி இன்னும் எத்தனைப் பிரிவுகள் உண்டோ அத்தனைப் பிரிவுகளின் மவ்லவிகளாக இருந்தா லும் அவர்கள் சமுதாய ஒற்றுமையை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். 21:92, 23:52 குர்ஆன் வசனங்ளை நிராகரித்து குஃப்ரிலாகி சமுதாயத்தைப் பிளவு படுத்துவதிலேயே குறி யாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா கொடுப்பதிலும், ஒருவரை ஒருவர் பின்பற்றித் தொழக்கூடாது என ஃபத்வா கொடுப்பதிலும் குறியாகத் தான் இருப்பார்கள். யார் இந்த மவ்லவிகளின் மாய, வசீகர, சூன்யப் பேச்சில் மயங்காமல் அவர்களிலிருந்து விடுபட்டு 3:103 இறைக்கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து 29:69 இறைவாக்குப்படி பெரும் முயற்சி எடுக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்று சுவர்க்கம் செல்ல முடியும். அவர் களே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து நேர்வழி நடப்பவர்கள்.

இந்த ஆக்கத்திலுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களை யும் சோம்பல் படாமல் பெரும் முயற்சியாக நேரடியாக குர்ஆனை எடுத்துப் படித்துப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் அல்லாஹ் 29:69 வாக்களித்துள்ளபடி மார்க்கத்தை விளங்கு வதை எளிதாக்கி நேர்வழியை நிச்சயம் காட்டுவான். எவர்கள் அல்லாஹ்வை நம்பாமல் இம்மவ்லவிகளை நம்பி குர்ஆன் 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி இந்த மவ்லவிகளின் பின்னால் கண்மூடிச் செல்கிறார்களோ அவர்கள் மட்டுமே பள்ளி இமாம்களுக்கிடையே வேற்றுமைப் பாராட்டிச் சமுதா யத்தைப் பிளவுபடுத்துவார்கள். அவர்களின் நாளைய நிலை பற்றி குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:22-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற்றில் 34:31,32,33, 40:47,48 வசனங்கள் பெருமையடிக்கும் சாட்சாத் இந்த மவ்லவி களையே குறிக்கின்றன. சகோதர்களே, சகோதரிகளே இந்த மவ்லவிகளை நம்பி மோசம் போகாதீர்கள். பள்ளி இமாம்களிடையே வேற்றுமை பாராட்டி, சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அதனால் நரகம் புகாதீர்கள். எச்சரிக்கை!

Previous post:

Next post: