உலகே மாயம்! ஸலஃபியே மாயம்!!

in 2017 ஜுலை

அபூ அப்தில்லாஹ்

அல்லாஹ்வின் அருளினால் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை மட்டும் 3:103 இறைக் கட்டளைப்படிப் பற்றிப் பிடிக்க முன் வந்த சகோதர்களில் சிலர் மீண்டும் ஸலஃபி, அஹ்லுல் குர்ஆன் என இரண்டு வழிகேடுகளில் சிக்கியுள்ளனர். அவற்றில் ஸலஃபி வழிகேட்டைப் பற்றி இங்கு ஆய்வு செய்வோம்.

குர்ஆனைப் பாமரர்களாக இருந்தாலும், படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்களாக இருந்தாலும், மதரஸாவில் ஓதிய மவ்லவியாக இருந்தாலும், நேரடியாகப் படித்து விளங்க முடியாது. ஸலஃபிகள் விளங்கியபடிதான் விளங்க வேண்டும் என்ற கொள்கையுடையோர் தங்களை ஸலஃபிகள் என அழைத்துக் கொள்கின்றனர். அதற்காக குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் கலீஃபாக்கள், நபி தோழர்கள், தாபியீன்கள் பற்றி சிறப்பித்துச் சொல்லப் பட்ட ஆதாரங்களைக் காட்டி, அவர்கள் விளங்கியபடிதான் நாமும் குர்ஆனை விளங்க வேண்டும், அதாவது அவர்களைப் பின்பற்றுவது மார்க்கத்திற்கு உட்பட்டதுதான். நேர்வழிதான் என்று வாதிடுகின்றனர். அவர்கள் அல்லாஹ்வாலேயே சிறப்பித்துச் சொல்லப்பட்டவர்கள், அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள், சிலரின் பாவங்கள் அனைத்தும் நன்மையாக மாற்றப்பட்டப் பாக்கியம் பெற்றவர்கள், சுவர்க்கத்து நன்மாராயம் பெற்றவர்கள் என அவர்களது சிறப்புகள் அனைத்தையும் கூறி, எனவே அவர்களைப் பின்பற்ற வேண்டும்; அவர் கள் விளங்கியபடிதான் குர்ஆனை நாமும் விளங்க வேண்டும் என்றெல்லாம் கூறி தங்கள் ஸலஃபிக் கொள்கையை நியாயப்படுத்துகின்றனர்.

இவர்களின் இந்த வாதங்கள் எத்தரத்தவை என்பதை விளங்க ஓர் உதாரணம். தங்கமும் ஓர் உலோகம். மேலும் பல உலோகங்கள் இருக்கின்றன. இதர உலோகங்களோடு தங்கத்தை ஒப்பிட்டுச் சொல்லி, வானளாவத் தங்கத்தைப் புகழ்ந்து, மக்களை மயக்கி, எனவே தங்க ஊசியால் வயிற்றில் குத்தலாம், எவ்விதப் பாதிப்பும் இல்லை. இரத்தம் வராது. காயம் ஏற்படாது என்று ஒரு மூடன் சொன்னால் அவனை எவ்வளவு பெரிய மூடன், வழி கேடன் என்று நாம் சொல்லுவோமோ அவனை விட வழிகெட்ட மூடர்கள்தான் ஸலஃபிகள் பற்றிய சிறப்புச் செய்திகளைக் கூறி அவர்களைப் பின்பற்றலாம். அவர்கள் விளங்கியபடிதான் நாமும் குர் ஆனை விளங்க வேண்டும் என்று வாதிடுபவர்கள்; இதை ஸலஃபிகள் உணர வேண்டும்.

ஸலஃபிகள், ஸலஃபிகள் என வீண் பெருமை பேசும் (பார்க்க : 7:146) இம்மவ்லவிகளுக்கு ஸலஃ பிப் பிரிவு தோன்றிய வரலாறாவது தெரியுமா? ஹிஜ்ரி 7-ம் நூற்றாண்டில் வாழந்த இப்னு தைமிய்யா (ரஹ்) காலத்திற்கு முன்னர் ஸலஃபி என்ற வழி கெட்டப் பிரிவு இருந்ததாக இந்த ஸலஃபிகளால் காட்ட முடியுமா? இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களது காலத்தில் கபுரு வழிபாடுகள், மத்ஹபுகள், தரீக்காக்கள் மூன்றும் கொடி கட்டிப் பறந்தன; அன்றைய ஆட்சியாளர்களும் அவற்றிலேயே மூழ்கி இருந்தனர். தக்லீது முஸ்லிம்களை ஆட்டிப் படைத்து வந்தது. தக்லீதைப் புறம் தள்ளி நேரடியாக குர் ஆனைப் பற்றிப் பிடிப்பது இன்றைய நிலையை விட அன்று மிகக் கடினமாக இருந்தது. இப்னு தைமிய் யாவின் நேர்வழி போதனைகள் அன்று மக்களிடம் எடுபடவே இல்லை. அவருக்கு குஃப்ர் ஃபத்வா அன்றைய ஆலிம்களால் கொடுக்கப்பட்டது. அரசரிடம் முறையிட்டு அவரை நீண்ட காலம் சிறையிட்டுக் கொடுமைப்படுத்தி வந்தனர். அன்று எடுபடாத பெரும்பாலான அவரது நேர்வழிக் கருத்துகள் வெகு காலத்திற்குப் பின்னர் ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களால் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டன.

அன்று இப்னு தைமிய்யா அவர்களின் காலத்தில் கண்மூடிப் பின்பற்றும் தக்லீதை எதிர்த்துப் பேசுவது, எழுதுவது கல்லில் நார் உரிக்கும் சாத்தியமே இல்லாத நிலை. அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்று அவர் ஆராயும் போது அவரது அறிவில் பட்டதுதான் இந்த “”ஸலஃபி” திட்டம். அதாவது பின்னோர்களான கலஃபிகளை தக்லீது செய்வதை விட முன்னோர்களான ஸலஃபுகளை தக்லீது செய்வது குற்றங்கள் குறைவாக இருக்கும். முகல்லிது யுகல்லிதுஸ்ஸலஃப்-முகல்லிதுகள் ஸலஃபுகளை தக்லீது செய்யட்டும் என்பதாகும்.

கலஃபுகளை தக்லீது செய்யும் மக்களிடம் காணப்படும் கபுரு வழிபாடுகள், தர்கா சடங்குகள், தரீக்கா சடங்குகள், இன்னும் பலவிதமான மூடச் சடங்குகள், சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் போன்ற கொடிய வழிகேட்டுச் சடங்குகள். ஸலஃபிகளிடம் முன் சென்றோரிடம் காணப்படவில்லை. எனவே தக்லீதை விட்டும் விடுபடாத மக்கள் கலஃபிகளை தக்லீது செய்வதை விட்டும் மீண்டு ஸலஃபுகளை தக்லீது செய்வதால் குறைந்த பாவங்களோடு இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்ற நல்லெண்ணத்தில், ஓரளவு நேர்வழிச் சிந்தனையாளர்கள்

இப்னு தைமிய்யாவின் இந்த முகல்லிது யுகல்லிதுஸ் ஸலஃப்-முகல்லிதுகள், கலஃபிகளை தக்லீது செய்வதை விட்டு நீங்கி ஸலஃபுகளை தக்லீது செய்வார்களாக என்ற புதிய கருத்து சிலரால் வரவேற்கப்பட்டது. அதன் பரிணாம வளர்ச்சிதான் இந்த ஸலஃபி பிரிவு. நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ள நரகிற்குரிய 72 பிரிவுகளில் ஒரு பிரிவு. பின்னர் ஹி. 7-ம் நூற்றாண்டில் கற்பனை செய்யப்பட்ட ஸலஃபி பிரிவு 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்!

ஸலஃபி பிரிவும் வழிகேடுதான் என்று நாமாகச் சொல்லவில்லை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுவதைத்தான் எடுத்து எழுதுகிறோம். வரிசையாகப் பாருங்கள்.

2:186 வசனம் இறைவனை மட்டுமே நம்ப வேண்டும் மனிதர்களில் யாரையும் நம்பிப் பின்பற்றக்கூடாது இறைவனிடம் மட்டுமே கேட்க வேண்டும். மனிதர்களிடம் கேட்கக் கூடாது. அதுவே ஒரே நேர்வழி என்று கூறவில்லையா? சிந்தியுங்கள்!

7:3 இறைவாக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்ற வேண்டும். மனிதர் களில் எவரையும் நம்பிப் பின்பற்றக்கூடாது என்று எச்சரிக்கவில்லையா? சிந்தியுங்கள்!

18:102 இறைவாக்கு மனிதர்களில் எவரைப் பின்பற்றினாலும் அது வழிகேடு, அவன் காஃபிர், அவனுக்கு நிரந்தர நரகம் என்று எச்சரிக்க வில்லையா? சிந்தியுங்கள்!

மேலும் 18:103-106 வசனங்களையும் படித்து அறிவு பெறுங்கள். 33:36 இறைவாக்கு மார்க்கத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரும் முடிவு செய்துள்ளதற்கு மாறாக வேறு கருத்துக் கொள்வது பகிரங்க மான வழிகேடு என்று கூறுவதை ஸலஃபிகள் படித்து விளங்கவில்லையா! 5:3, 3:19,85 இறை வாக்குகள் நபி(ஸல்) அவர்கள் மரணிக்க முன்னரே தூய மார்க்கம் முழுமையாக பரிபூரணமாக நிறைவு பெற்றுவிட்டது; மார்க்கத்தில் புதிதாகச் சேர்ப்ப தற்கு அணுவளவும் அனுமதி இல்லை. புதிதாகக் கற்பனை செய்கிறவர்கள் நாளை மறுமையில் பெரும் நஷ்டம் அடைந்தோரில் இருப்பர் என்று எச்சரிப்பது. ஸலஃபி பிரிவினரின் கண்களில் படவில்லையா? (பார்க்க : 7:146)

ஆக ஸலஃபி பிரிவினரும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து காஃபிராகும் மற்றப் பிரிவினர்களைப் போல் ஓர் பிரிவினரே என்பது உறுதியாகத் தெரியவில்லையா?

ஸலஃபிகள் தங்கள் வழிகெட்டப் பிரிவை நியாயப்படுத்த 9:100 இறைவாக்கைக் காட்டுவார்கள். அதைப் படித்துப் பாருங்கள். முஹாஜிர்களையும், அன்சார்களையும் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? அதற்கு மாறாக அவர்களை நற்கருமங்களில் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? சிந்தியுங்கள்!

நற்கருமங்களில் பின்பற்றுவதற்கும், பொதுவாகப் பின்பற்றுவதற்கும் உள்ள வேறுபாடு தெரியாத மூடர்களா இந்த ஸலஃபி பிரிவினர். இறைத் தூதரைப் பின்பற்றுவது பற்றி “”அத்தீவுர்ரஸூல்” என்று பல இடங்களில் கூறியிருப்பது போல் அத்தீவுல் முஹாஜிர் வ அன்சார் என்று குர்ஆனில் ஓரிடத்திலாவது ஸலஃபிகளால் காட்ட முடியுமா? இல்லாத ஒன்றை வீணாக ஸலஃபிகள் ஏன் கற்பனை செய்கிறார்கள்?

அது மட்டுமா? 2:186, 7:3, 53:2-6, 18:102-106, 33:36,66-68, 59:7 மேலும் பல குர்ஆன் வசனங்கள் அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும் மட்டுமே பின்பற்றவேண்டும். மார்க்க விசயங்களில் பின்பற்றத் தகுதி படைத்த மூன்றாவது ஒரு நபர் இல்லவே இல்லை என்று பகிரங்கமாகக் கூறிக் கொண்டிருக்க ஏன் இந்த ஸலஃபி நாடகம்!

இன்னும் பாருங்கள். இந்த ஸலஃபி மவ்லவிகளின் கயவாலித்தனத்தை! ஸலஃபுகள் குர்ஆனை விளங்கியபடி தான் நாம் விளங்க வேண்டும்; ஸலஃபுகளைப் பின்பற்றுவதுதான் ஒரே நேர்வழி எனப் பிதற்றுகிறார்களே அதில் அவர்கள் உண்மையாளர்களாக இருக்கிறார்களா? வடிகட்டின பொய்யர்களா? என்று சுய சிந்தனையுடன் கவனமாகப் படியுங்கள்.

மார்க்கத்தைச் சொல்வதற்கென்று 5% தேராத ஒரு சிறு கூட்டம் மவ்லவி-ஆலிம் எனப் பெத்தப் பெயரிலும், அவர்கள் கூறுவதைத்தான் அவாம்கள் என இம்மவ்லவிகள் கூறும் 95% பெருங்கொண்டக் கூட்டம் கேட்டு நடக்க வேண்டும் என்று ஸலஃபி மவலவிகள் நடைமுறைப்படுத்துவதை குர்ஆனிலிருந்து விளங்கி எந்த ஸலஃபுஸ்ஸாலிஹீன் கூறி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது; காட்டுவார்களா? இந்த ஸலஃபி நடிகர்கள்.

21:92, 23:52 குர்ஆன் வசனங்கள் கூறும் ஒன்று பட்ட ஒரே சமுதாயம் என்ற திட்டமாகக் கூறுவதை நிராகரித்துச் சமுதாயத்தை ஆலிம்-அவாம் என கூறு போடலாம் என்று எந்த கலீஃபா, எந்த நபி தோழர், எந்த தாபியீ எந்த குர்ஆன் வசனத்திற்கு மேல் விளக்கமாகக் கூறியதாக வரலாறு இருக்கிறது? காட்டுவார்களா இந்த ஸலஃபிகள்?

103:1-3, 3:110 குர்ஆன் வசனங்கள் கட்டளைப்படி, ஒவ்வொரு நபியும் தங்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி-சம்பளம் கேட்கவில்லை; எங்களுக்குரிய கூலி-சம்பளம் அல்லாஹ் விடமே இருக்கிறது என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதால் மதகுருமார்கள் எப்படிப்பட்டப் பொய் புரட்டுகளையும், தில்லுமுல்லுகளையும், குர்ஆன் வசனங்களை நிராகரிக்கும் (பார்க்க : 7:146) கொடிய ´ஷிர்க்கான, குஃப்ரான செயல்களைத் துணிந்து செய்யும் பரிதாப நிலைக்கு இட்டுச் செல்லும்; கடமையான விதிக்கப் பட்ட மார்க்கப் பணியான ஐங்காலத் தொழுகை, மார்க்கப் பிரசாரம் இதர கடமையான மார்க்கப் பணி இவற்றை கூலி-சம்பளம் வாங்கிக் கொண்டு செய்யலாம் என்று எந்த கலீஃபா, நபிதோழர், தாபியீ, தபஅதாபியீ குர்ஆனை விளங்கிச் சொன்னதாக வரலாறு இருக்கிறதா? காட்டுவார்களா? ஸலஃபி நடிகர்கள்.

ஸலஃபி மவ்லவிகள் கூறும் ஸலஃபுஸ்ஸாலிஹீன்களில் எவராவது ஒருவர், இன்று இந்த ஸலஃபி மவ்லவிகள் கூறுவது போல், “”நாங்கள்தான் மார்க்கம் கற்ற அறிஞர்கள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும். அவாம்களால் அவர்கள் தாய் மொழியில் குர்ஆனைப் படித்தாலும் விளங்காது. நாங்கள் கொடுக்கும் மேல் விளக்கம், சுய விளக்கப் படிதான் அவர்கள் செயல்படவேண்டும் என்று கூறியதாக ஒரேயொரு வரலாற்று ஆதாரத்தையாவது இம்மவ்லவிகளால் காட்ட முடியுமா? ஒரு போதும் முடியாது.

இன்று ஸலஃபிகள் சரிகண்டு நடைமுறைப் படுத்தும் காம இச்சைகளை சரிகண்டு எந்த ஸலஃபுஸ்ஸாலிஹீன் சரிகண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது? காட்டுவார்களா? ஸலஃபி நடிகர்கள்! அதற்கு மாறாக நாம் 1985லேயே, தலைமுறையில் சிறந்தது எனது தலைமுறை, அடுத்தது அடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்தது அடுத்த தலைமுறை என்று நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன மூன்றாவது தலைமுறையினரான, நான்கு இமாம்களுக்கும் இன்று மவ்லவிகள் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நான்கு மத்ஹபுகளுக்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை. எப்படி முக்கடவுள் கொள்கையான கிறித்தவ மதம், ஈசா(அலை) அவர்களுக்குப் பின்னர் ஈசா(அலை) அவர்களது சமூகத்தில் திருட்டுத்தனமாக நுழைந்த கிறித்தவ மதகுருமார்களால் நுழைக்கப்பட்ட வழிகேடோ, அது போல் அந்த நான்கு இமாம்களுக்குப் பின்னால் ஹிஜ்ரி 400 வாக்கில், முஸ்லிம் சமுதாயத்திலும் திருட்டுத்தனமாக நுழைந்த முஸ்லிம் மதகுருமார்களால் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணாகக் கற்பனை செய்யப்பட்டவையே இந்த நான்கு மத்ஹபுகள்-வழிகேடுகள். ஆக பெரும்பான்மை முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நான்கு மத்ஹபுகளுக்கும் அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களுக்கும் அணுவளவும் சம்பந்தமே இல்லை என்பதை அவர்களது அரபு மதரஸாவில் இருக்கும் நூல்களிலேயே காணப்படும் அவர்களின் உண்மை அறிவுரைகளை எடுத்து 1985-லேயே வெளியிட்டிருந்தோம். (பார்க்க : முஸ்லிம் சமுதாய சிந்தனை)

அந்நால்வரில் எவருமே குர்ஆனை நாங்கள் விளங்கியபடிதான் நீங்கள் விளங்கவேண்டும். எங்களைப் பின்பற்றலாம், எங்களை தக்லீது செய்யலாம் என்று சொல்லவே இல்லை. அதற்கு மாறாக எங்களை ஒருபோதும் தக்லீது செய்யாதீர்கள். நாங்கள் சொல்வது குர்ஆன், ஹதீஃதில் இருக்கிறதா என்று பார்க்காமல் அதை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை. நாங்களும் தவறு செய்யும் மனிதர்கள்தான்; இன்று ஒன்றை சொல்லி நாளை அதை மாற்றும் மனிதர்கள்தான் என்று திட்டமாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த ஸலஃபி மவ்லவிகள் ஸலஃபிகள் குர்ஆனை விளங்கியபடிதான் நாம் விளங்க வேண்டும். அவர்களைப் பின்பற்றலாம் என்று எந்த குர்ஆன் ஹதீஃத் ஆதாரப்படிச் சொல்கிறார்கள்? ஸலஃபி மவ்லவிகளும் படு பொய்யர்கள் என்பது விளங்க வில்லையா? அவர்கள் ஸலஃபிகளையும் பின்பற்ற வில்லை. தங்களின் மனோ இச்சையை-ஷைத்தா னையே பின்பற்றுகிறார்கள் என்பதும் ஷைத்தானைப் போல் 7:146 இறைவாக்குக் கூறுவதுபோல் ஆலிம் என வீண் பெருமை பேசுகிறார்கள் என்பதும் உறுதிபடத் தெரியவில்லையா?

உண்மையில் ஸலஃபி கொள்கைதான் ஒரே நேர்வழி என்பது உண்மையானால் அந்நஜாத்தை ஆரம்பிக்க முன்னரே நாம் அதில் இணைந்திருப்போம். 1983-84களில் மத்ஹபுகளை விட்டு வெளியேறி மத்ஹபுகளின் கெடுதிகளை குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் கொண்டு மக்களிடையே பிரசாரம் செய்ய ஆரம்பித்தபோது நம்மோடு வந்து இணைந்தவர்கள் திருச்சியிலிருக்கும் கேரள முஜாஹிதுகள், அஹ்ல ஹதீஃத்கள், மர்கஸுஸ் ஸலபி என்ற அமைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1985 இறுதியில் அந்நஜாத் ஆரம்பிக்கு முன்னர் திருச்சியில் நாம் நடத்திய இஸ்லாமிய மாநாட்டில் நமக்கு ஒத்துழைப்பும் செய்தார்கள்.

அந்நஜாத்தை அவர்களின் அமைப்பான மர்கஸுஸ் ஸலஃபி வெளியீடாக வெளியிட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை நாம் ஏற்கவில்லை. கருத்து வேறுபாடு முற்றி நாம் அவர்களிடமிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போது பீ.ஜையும், எஸ்.கே.யும் அவர்களைச் சரி காணாமல் எம்மோடுதான் இணைந்தார்கள். அப்படி இணைந்து அந்நஜாத்தில் செயல்பட முன் வந்தவர்கள் இக்பால் மதனியின் ஆசை வார்த்தைகளில் மயங்கி பல்டி அடித்து அங்கு போய் சேர்ந்தார்கள். அந்நஜாத் ஆரம்பித்த மறு வருடமே நாம் திருச்சியில் நடத்திய இஸ்லாமிய மாநாட்டிற்கு எந்தளவு நெருக்கடிகள் கொடுத்து எப்படி எல்லாம் முட்டுக்கட்டைகள் போட முடியுமோ அப்படி எல்லாம் நெருக்கடிகள் கொடுத்து மாநாட்டை முறையாக நடத்த முடியாமல் ஆக்கினார்கள். பெரும் பெரும் அவதூறுகளை, மாபெரும் பொய்களைக் கூறி எமக்கு அவப்பெயரை உண்டாக்கினார்கள். இந்த நெருக்கடிகள் அனைத்தும் ஏன் தெரியுமா? நாமும் அவர்களின் ஸலஃபி புரோகிதக் கொள்கையை ஏற்க வைக்க வேண்டும் என்ற சுயநலமே.

ஆயினும் அவர்கள் கொடுத்த அனைத்துத் துன்பங்களையும், அவமானங்களையும் தாங்கிக் கொண்டு எம்மை அந்த அல்லாஹ் வல்லோன் கொள்கையில் உறுதியாக நிற்க வைத்தது அவனது அருளே! அல்ஹம்துலில்லாஹ். தர்கா, தரீக்கா, மத்ஹபு போன்ற அனைத்துப் பிரிவுகளும் எப்படிப் பட்ட வழிகேட்டில் சென்று நாளை நரகை நிரப்ப இருக்கிறார்களோ அதேபோல் ஸலஃபி பிரிவும் வழி கேட்டில் சென்று நாளை நரகை நிரப்ப இருப்பவர் களே என்ற தெளிவான அறிவை எமக்கு அல்லாஹ் தந்து உதவியதேயாகும்.

அல்லாஹ் பெயரிட்டு (22:78) முஸ்லிம்கள் தங்களை அழைத்துக் கொள்ளக் கட்டளையிட்டு (41:33), நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய, இந்த உம்மத்திற்காக விட்டுச் சென்ற “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத வேறு பிரிவுப் பெயர்களுக்கு தூய இஸ்லாமிய மார்க்கத்தில் அணு வளவும் அனுமதி இல்லை என்பதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் நேரடியாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மவ்லவிகளான இம்மதகுருமார்கள் அனைவரும் 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் இந்த உண்மையை நன்கு அறிந்த நிலையில் ஏன் நிராகரிக்கிறார்கள் தெரியுமா? ஆம்! அவர்களின் கொடிய ஹராமான வழியிலுள்ள வயிற்றுப் பிழைப்பாகும். தங்கள் வயிற்றுப் பிழைப்பைத் தக்க வைத்துக் கொள்ளும் தீய நோக்குடன் நாங்கள்தான் ஆலிம்கள் மார்க்கம் கற்ற மேதைகள், நீங்கள் எல்லாம் அவாம்கள், குர்ஆனை நீங்கள் விளங்க முடியாது, நாங்கள் விளக்கிச் சொல்வதைத் தான் நீங்கள் ஏற்று நடக்க வேண்டும் என்று 7:146 இறைவாக்கை நிராகரித்து வீண் பெருமை பேசும் நிலையே இம்மதகுருமார்களை குர்ஆன், ஹதீஃதை நிராகரிக்க வைக்கிறது. புரோகித தொழிலை விடாதவரை, சுயமாகத் தங்கள் கைகளால் உழைத்துச் சாப்பிட முன் வராத வரை இம்மவ்லவிகள் ஒருபோதும் நேர் வழிக்கு வரமுடியாது என்பதே பல வசனங்கள் கூறும் உண்மையாகும்.

வயிற்றுப் பிழைப்பு என்று வந்துவிட்டால், இனி அதில் போட்டாபோட்டி வந்துவிடும். ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் என்றல் அங்கு ஒரே ஒரு தலைவர்தான் இருக்க முடியும், அதை ஏற்பார்களா? இம்மவ்லவிகள். அதனால் 2:213 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களிடையே போட்டி பொறாமைகள் ஏற்பட்டு பிரிந்தார்கள். அப்படி ஏற்பட்டவைதான் தர்கா பிரிவுகள், தரீக்கா பிரிவுகள், மத்ஹபு பிரிவுகள், மஸ்லக் பிரிவுகள், ததஜ போன்ற இயக்கப் பிரிவுகள், ஸலஃபி பிரிவுகள் என அழைத்துப் பிரிவுகளும். ஆக நேர்வழி நடந்து குர்ஆன், ஹதீதைப் பின்பற்றி 6:153 குர்ஆன் கூறும் ஒரே நேர் வழியில் நடப்பவர்கள் நாளை சுவர்க்கம் புகுவார்கள். அல்லாஹ்வை நம்பாமல் இம்மவ்லவிகளை நம்பி 72 பிரிவினர்களாகப் பிரிந்து செயல்படுகிற வர்கள் நாளை நிச்சயம் நரகை அடைவார்கள். இது நபி(ஸல்) அவர்களின் மிகக் குடுமையான எச்சரிக்கையாகும்.

2:186, 50:16, 56:85 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ் தனது அடியார்களுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கிறான். அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக- புரோகிதர்களாக இம்மவ்லவிகள் புகவே முடியாது. அவர்களால் முடியாதது மட்டுமல்ல கொடிய ´ஷிர்க்காகும். நாளை நரகே கூலியாகும். குர்ஆன் வசனங்கள் இவ்வளவு தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கும் நிலையில், நாங்கள்தான் குர்ஆனை விளக்கும் பேர் வழிகள் எனத் திருட்டுத்தனமாக நுழைவதற்கு ஒரே காரணம் அவர்களின் வயிற்றுப் பிழைப்பே. 2:213 இறைவாக்குக் கூறுவது போல், அவர்களின் ஹரா மான வயிற்றுப் பிழைப்புக் காரணமாக அவர்களிடையே போட்டிப் பொறாமை ஏற்பட்டு, நரகை நிரப்பும் பெருங் கூட்டத்தினரை தங்கள் பின்னால் வரச் செய்ய பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர்.

அதனால் தர்கா, தரீக்கா, மத்ஹபு, ஹனஃபி, ஷாஃபி, மாலிக், ஹன்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி, இன்னும் பல பிரிவுகள் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தது போல் நரகை நிரப்பும் 72 பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் பின்னால் பெருங் கூட்டத்தைச் சேர்க்க அதாவது நரகை நிரப்ப ஓயாது பாடுபடுகின்றனர். எந்த மவ்லவிக்குப் பின்னால் சென்றாலும் இறுதியில் நரகமே. நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்ல ஆசையா? எம்மையும் நம்பாதீர்கள். எந்த மவ்லவியையும் நம்பாதீர்கள். அல்லாஹ்வை மட்டுமே நம்புங்கள். குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள். அதன் வழிகாட்டல்படி நடங்கள். நேர்வழி நடந்து சுவர்க்கம் புகுவீர்கள். அல்லாஹ் அருள் புரிவானாக!

Previous post:

Next post: