ஐயமும்! தெளிவும்!!

in 2017 ஜுலை,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : “ஜின்” இனத்தைப் பற்றி விவரிப்பதோடு, இப்லீஸுக்கும் ஷைத்தானுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்க! (முஷ்தக் அஹ்மத், பம்பாய்)

தெளிவு : மனிதரைப் போல் ஜின்னும் ஓர் இனத்த வராவார். இப்லீஸ் இந்த இனத்தவனாவான். ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள் என்று நாம் மலக்கு களிடத்தில் கூறியதை (நபியே!) நீர் நினைத்துப் பாரும்) இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள். அவனோ ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான். அதனால் தன் இறைவனுடையக் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். (18:50)

இவ்வசனத்தில் இப்லீஸ் ஜின் இனத்தவன் என்பது தெளிவாகிறது. இப்லீஸும் ஷைத்தானும் ஒருவனுக்குரிய இரு பெயர்களாகும். ஏனெனில் அல்குர்ஆன் 2:34 வசனத்தில் இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் ஸஜ்தா செய்தார்கள் என்ப தாகக் கூறப்பட்டிருக்கிறது. அடுத்து 2:36 வசனத்தில் எனினும் ஷைத்தான் அவ்விருவரையும் தவறிழைக் கும்படி செய்து அவ்விருவரும் இருந்த நிலையிலி ருந்து அவர்களை வெளியேரும்படி செய்து விட்டான் என்று உள்ளது. ஆகவே 2:34 வசனத்தில் இடம் பெற்றுள்ள இப்லீஸையே 2:36 வசனத்தில் ஷைத்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இப்லீஸ் இறைக்கட்டளையை நிராகரித்து ஆணவம் பேசியதால் இறைவனால் விரட்டியடிக்கப்பட்டான்! அதனால் ஷைத்தான் ஆனான். மதகுருமார்களின் நிலையும் இதுவே. (தாஃகூத்)

மலக்குகள் நூர் ஜோதியால் படைக்கப்பட்டுள் ளார்கள். இப்லீஸ் நெருப்பின் கொழுந்தால் படைக்கப்பட்டுள்ளான். ஆதமோ (குர்ஆனில்) உங்களுக் குக் கூறப்பட்டுள்ளப் பொருளிலிருந்து (மண்ணினால்) படைக்கப்பட்டுள்ளார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆயிஷா(ரழி), முஸ்லிம்

இப்லீஸ் இமைப் பொழுதேனும் மலக்குகளைச் சேர்ந்தவனாக இருந்ததில்லை. ஆதம்(அலை) அவர்கள் மனித இனத்தவரின் மூலப் பொருளாயிருந்தது போல், இப்லீஸும் ஜின் இனத்தவரின் மூலப் பொருளாக இருந்துள்ளான். (ஹஸன் பஸரீ(ரழி), இப்னு ஜரீர்)

சிலர் இப்லீஸை மலக்குகளின் இனத்தவன் என்றும், ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்ய மறுப்பதற்கு முன், மலக்குகளின் பெயரைப் போன்றே “”அஜாஜில்” என்ற அழகிய பெயரை உடையவனாயிருந்தான் என்றும், வானத்திலோ, பூமியிலோ அவனுடைய நெற்றிப் படாத இடமே கிடையாது. அந்தளவு அவன் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடு செய்து கொண்டுதான் இருந் தான். அவன் ஆதம்(அலை) அவர்களுக்கு ஸஜ்தா செய்யாததன் காரணமாகவே தன்னுடைய உயர் பதவியை இழந்து இப்லீஸ் “”அல்லாஹ்வின் அருளை இழந்தவன்”-ஷைத்தான் என்ற இழிப் பெயருக்கு ஆளாகி விட்டான் என்றும் கூறுகின்றனர்.

இது குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் புறம்பான ஆதாரமற்றதோர் கூற்றாகும். ஏனெனில் அல்குர் ஆன் 18:50 வசனத்தில், “”அவனோ ஜின் இனத்தைச் சேர்ந்தவனாயிருந்தான், அதனால்தான் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து விட்டான்” என்று கூறப்பட்டுள்ளது.

மேற்காணும் ஆயிஷா(ரழி) அவர்கள் வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஃதில் மலக்குகள் நூர்-ஜோதியால் படைக்கப்பட்டவர்கள் என்றும், இப்லீஸ்- நெருப்பால் படைக்கப்பட்டவன் என்றும் தெளிவுப்படுத்தப்பட்டிருப்பதால் இப்லீஸ், மலக்கு ஆகியோரின் இயற்கை அமைப்பே வேறுபட்டுள்ளது. மலக்குகள் ஜோதியாலும், இப்லீஸ் நெருப்பாலும் படைக்கப்பட்டுள்ளனர். மலக்குகள் ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பதால் தான், அல்லாஹ் அவர்களைப் பற்றிக் கூறும்போது “”அல்லாஹ் மலக்குகளுக்கு இட்ட கட்டளைக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்களுக்கு ஏவப்பட்டதையே செய்வார்கள்” (66:6) என்று கூறுகிறான்.

எனவே அல்லாஹ் இப்லீஸை ஜோதியால் படைக்காமல் நெருப்பினாலும், இவ்வாறே மனிதனை மண்ணினாலும் படைத்திருப்பதால் ஜோதியால் படைக்கப்பட்டுள்ள மலக்குகளைப் போல், சொன்னவற்றை மட்டுமே செயல்படுத்தும் தன்மை இல்லாமல், சுய அபிப்பிராயத்தின் படி செயல்படும் தன்மை வாய்ந்தவர்களாக இப்லீசும், மனிதர்களும் ஆகிவிட்டார்கள்.
ஆகவே இப்லீஸ் படைக்கப்பட்ட பொருள் வேறுபட்டு, தனது சொந்த அபிப்ராயத்தின் படி நடக்கும் தன்மையுள்ளவனாக இருப்பதால், இப்லீஸை மலக்குகளின் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவது தவறு என்பதை அறிகிறோம்.

அல்குர்ஆனும், ஹதீஃதும் இப்லீஸை ஜின் இனத் தைச் சேர்ந்தவன் என்றும், மேலும் நெருப்பினால் படைக்கப்பட்டவன் என்றும் கூறுவதற்கேற்ப, ஜின் இனமும் மனித இனத்தைப் போன்றதோர் இனம் என்பதையும், நன்மை தீமை ஆகியவற்றில் எதனை யும் செய்வதற்கான சுய அபிப்ராயம்-சுதந்திரம் உடையவர்களேயன்றி மலக்குகளைப் போல் இறை வனால் ஏவப்பட்டதை மட்டும் செய்து, அவனுடைய கட்டளைக்கு மாறு செய்வதற்கே இயலாத் தன்மையுடையவர்கள் அல்லர் என்பதையும் அறிகி றோம். மேலும் இவர்களில் முஸ்லிம்களும், காஃபிர் களும், சுவர்க்கவாதிகளும், நரகவாதிகளும் உள்ள னர் என்பதை அல்குர்ஆனும், ஹதீஃதும் தெளிவுப் படுத்துவதோடு, இவர்களைப் பற்றி அறிந்து கொள் ளும் வகையில் “”சூரத்துல் ஜின்” எனும் ஓர் அத்தியாயமும் 72வது அத்தியாயமாக குர்ஆனில் இடம் பெற்றுள்ளது.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் எல்லாரைப் பார்க்கினும் சிறப்புக்குரியவர்களாயிருப்பதால் அவர்கள் உடலி லிருந்து நிழல் கீழே விழுவதில்லை. நிழல் உருவம் அவர்களுக்கு கிடையாது என்று சிலர் கூறும் கூற்றுக்கு குர்ஆன், ஹதீஃதின் வாயிலாக ஏதேனும் ஆதாரமுண்டா? எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீது, துபை.

தெளிவு : இதற்கு குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஃத் களிலோ ஆதாரம் ஏதுவுமில்லை. இவ்வாறு சிலர் கூறி, நபி(ஸல்) அவர்கள் நூர்-ஜோதியால் படைக் கப்பட்டுள்ளார்கள் என்ற பொய்யான ஹதீஃதினை மெய்யாக்க எத்தனிக்கின்றனர். எவ்வாறெனில் நபி (ஸல்) அவர்கள் ஜோதியால் படைக்கப்பட்டிருப்ப தனால் தான் அவர்களின் உடலிலிருந்து நிழல் கீழே விழுவதில்லை. காரணம், பிரகாசமுள்ள விளக்குக் குப் பக்கத்தில் மற்றொரு பிரகாசமுள்ள விளக்கைக் கொண்டுவந்து வைத்தால் எவ்வாறு இரு விளக்குகளின் நிழல்களும் கீழே விழாத நிலையில் இருக்கிறதோ இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் நூர்-ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பதால் அவர்களின் நிழல் கீழே விழுவதில்லை என்று விஞ்ஞான ரீதியில் உதாரணம் காட்டி, நபி(ஸல்) அவர்கள் நூர்-ஜோதியால் தான் படைக்கப்பட்டுள்ளார்கள் என்று வாதிடுகின்றனர்.

ஆயிஷா(ரழி) அவர்கள் மூலம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஹதீஃதுக்கு ஏற்ப மலக்குகளை ஜோதியாலும், இப்லீஸ்-ஜின்னை நெருப்பினாலும், மனிதரை மண்ணினாலும் படைக்கப்பட்டுள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜோதியால் படைக்கப்பட்டவர்களாயிருப்பின் மலக்குகளுடைய இனத்தைச் சார்ந் தவர்களாகவல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அல்குர்ஆனில்,

(நபியே!) சொல்வீராக! நிச்சயமாக நான் உங்களைப் போன்றதொரு மனிதனே என்று குர்ஆன் நபி(ஸல்) அவர்களைப் பற்றி மனிதர் என்றே கூறுவ தால் (18:110) அவர்களும் மற்றவரைப் போல் மண்ணால் படைக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நிழல் இல்லை என்று கூறுவது அபத்தமானதாகும்.

ஐயம் : சிலர் கிராஅத் ஓதும்போது அஊது ஓதிய பிறகு “பிஃபழ்லி பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று ஓதுகிறார்களே! இதற்கு ஹதீஃதில் ஆதார முண்டா? ஷைக் ஸலாஹுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு : இவ்வாறெல்லாம் பிஸ்மியுடன் “”பிஃபழ்லி” என்று இணைத்து ஓதுவதற்கு ஹதீஃதில் அறவே ஆதாரமில்லை.

ஐயம் : தொழுகையில் முதல் தக்பீரின் போது, ருகூவுக்காக குனியும் போதும், ருகூஃவிலிருந்து தலையை உயர்த்திய போதும், இரண்டாவது ரகாஅத்திலிருந்து (நடு இருப்பிலிருந்து) எழுந்து நிற்கும் போதும் இரு கைகளையும் உயர்த்துவது பற்றி இப்னு உமர்(ரழி) அவர்களின் வாயிலாக புகாரீயில் ஒரு ஹதீஃத் உள்ளது என்பதை அறிகிறோம். ஆனால் திர்மிதீயில் “”முதல் தக்பீரின் போது மட்டுமே அன்றி மற்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்கள் தமது கைகளை உயர்த்தியதில்லை” என்பதாக ஒரு ஹதீஃத் இருப்பதாகவும், அது பற்றி இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்களே ஹஸன் ஸஹீஹான ஹதீஃத் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதாக அறிகிறேன். இந்த ஹதீஃத்படி கைகளை உயர்த்தாமல் தொழலாம் அல்லவா? சரியான விளக்கம் தரவும்! ஷைக் ஸலாஹுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு : திர்மிதீயில் இடம் பெற்றுள்ள ஹதீஃதின் பொருள்!
இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் : நான் உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் தொழுகையைத் தொழ வைத்துக் காட்டுகிறேன் என்று கூறி விட்டு தொழ வைத்தார்கள். அப்போது அவர்கள் முதல் முறையைத் தவிர (மற்ற சந்தர்ப்பங்களில்) தமது கைகளை உயர்த்தவில்லை. (திர்மிதீ)

இந்த ஹதீஃதைப் பற்றி இமாம் திர்மிதீ(ரஹ்) அவர்கள் “”ஹஸன்” என்று மட்டுமே குறிப்பிட்டுள் ளார்களே அன்றி தாங்கள் எழுதி இருப்பது போல் “”ஹஸன் ஸஹீஹான ஹதீஃத்” என்று குறிப்பிட வில்லை. மேலும் இது வகையில் இப்னு உமர்(ரழி) அவர்கள் பற்றி அவர்களின் மகன் “”ஸாலிம்” என்பவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஃத் தான் ஸஹீஹானதாயிருக்கிறது. இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஃத் உறுதி யானது அல்லவென்று இப்னு முபாரக்(ரஹ்) அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக இமாம் திர்மிதீயே தமது நூலில் இனம் காட்டியுள்ளார்கள்.

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் தொடரில் “ஆஸிமுபின் குலைப்” என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி பலர் நம்பகமானவர் என்று கூறியபோதிலும் இவரில் காணப்படும் ஒரு சில குறைகளை வைத்து இவர் தனித்த நிலையில் ஒரு ஹதீஃதைக் கூறுவாரானால் அது ஆதாரமாகக் கொள் ளத்தக்கதல்ல என்று இப்னு மத்யனீ(ரஹ்) கூறியிருப் பதாக இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது தஹ்தீபுத் தஹ்தீபு எனும் நூலில் பாகம் 5, பக்கம் 56ல் குறிப் பிட்டுள்ளார்கள். தொழுகை இருப்பில் ஷைத்தா னின் செயலான (நஸாயீ 1148) விரலாட்டும் பலவீன மான ஹதீஃதிலும் இதே ஆஸிமுபின் குலைபே இடம் பெறுகிறார்.

இவ்வாறே பின்வரும் ஓர் அறிவிப்பு அபூதாவூதி லும் இடம் பெற்றுள்ளது. பர்ராஉபின் ஆஜிப்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். நான் நபி(ஸல்) அவர்கள் தொழ ஆரம்பிக்கும்போது தமது கைகளை உயர்த்து வதைப் பார்த்துள்ளேன். அதற்குப் பிறகு தொழுது முடிக்கும் வரை தமது கைகளை அவர்கள் உயர்த்த வில்லை. அபூதாவூத்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஃதை எடுத்தெழுதிவிட்டு இது ஸஹீஹானது அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் தொழத் துவங்கினால் தமது கைகளைத் தமது காதுகளுக்கு அருகில் உயர்த்துவார்கள். அதன் பிறகு மீண்டும் உயர்த்த மாட்டார்கள் என்று பர்ராஉபின் ஆஜிப்(ரழி) அவர்களின் மற்றொரு அறிவிப்பும் அபூதாவூதிலேயே இடம் பெற்றுள்ளது. அதில் யஜீத்பின் அபீஜியாத் எனும் நம்பகமற்றவர் இடம் பெற்றுள்ளார். ஆகவே இந்த அறிவிப்பும் பலகீனமானதாகும்.

இது வகையில் ஒரு ஹதீஃதும் முறையானதாக இல்லை. அவ்வாறு முறையானதாக இருப்பினும் இப்னு உமர்(ரழி) அவர்களின் ஹதீஃத் ஒரு விஷயத்தை உண்டு என்று கூறும்போது அவ்வாறு இல்லை என்று கூறும் ஹதீஃத் தள்ளுபடியாகிவிடும். காரணம், ஹதீஃத்களில் ஒன்றை இல்லை என்று கூறும் ஹதீஃதைப் பார்க்கிலும், அது உண்டு என்று கூறும் ஹதீஃதுக்கே முதலிடம் அளிக்கப்படும் என்று இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தமது “”ஃபத்ஹுல்பாரீ” எனும் நூலில் பாகம் 2, பக்கம் 220ல் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழுகையில் கைகளை (4 முறை) உயர்த்துவது பற்றிய அறிவிப்புக்குக் கிடைத்துள்ள சரியான ஆதாரங்கள் மற்றவைக்குக் கிடைக்கவில்லை. இதை 17 ஸஹாபாக்கள் அறிவித்துள்ளார்கள் என்று இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் தமது “”ரஃப்உல்தைன்” கைகளை உயர்த்தல் எனும் நூலில் குறிப்பிட்டுள் ளார்கள். மேலும் இந்த ஹதீஃதை எடுத்துக் கூறிய வர்களில் அ­ரத்துல் முபஷ்­ரா -சுவர்க்கவாசிகள் என்று நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக் களும் உள்ளனர் என்று இமாம் ஹாக்கிம் கூறுவதாக இப்னு ஹஜ்ர்(ரஹ்) அவர்கள் ஃபத்ஹுல்பாரீ மேற்காணும் பாகத்தில் அதே பக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆகவே தொழும்போது நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்ற அறிவிப்பு ஸஹீஹானதாகவும், பலம் வாய்ந்ததாகவுமிருப்ப தால் இதன்படி அமல் செய்வதே நபிவழி என்பதை அறிகிறோம்.

ஐயம் : நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் தாயார் பெயர் என்ன? என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருவர் எங்களிடம் இது பற்றிக் கேட்கிறார் அவசியம் இதைத் தெரிவிக்கவும்.
M.S.முஜீபுர்ரஹ்மான், பெரம்பலூர்.

தெளிவு : (நபியே!) நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அனுப்பியுள்ளோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துக் கூறியுள்ளோம். பலரைப் பற்றி உமக்கு நாம் எடுத்துக் கூறவில்லை. (40:78)

மேற்காணும் வசனத்தில் ஒரு சில நபிமார்களின் விபரங்கள் மட்டுமே நபி(ஸல்) அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அநேகருடைய விபரங்கள் எடுத்துக் கூறப்படவில்லை என்பதாக அல்லாஹ்வே கூறியிருக்கும் போது, நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் தாயாரின் பெயரைக் கேட்டால் எவ்வாறு நாம் கூற முடியும். அவர்களின் பெயரின் விபரத்தை நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதாக ஹதீஃத்களிலும் காண முடியவில்லை. ஆகவே இது போன்ற விஷயங்களை நாம் அறியாதிருப்பதால் மார்க்க அடிப்படையில் நமக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை என்பதை அறிகிறோம்.

ஐயம் : தொழுபவருக்கு எதிரில் குறுக்கே செல்வது பாவம் என்று கூறுகிறார்களே, ஸஹீஹான ஹதீஃத் ஆதாரமாக உள்ளதா? பாவம் என்றால் சாதாரணமான பாவமா? பெரும் பாவமா? தொழுபவர் ஸஜ்தா செய்யும் இடத்திற்கு அப்பால் நடந்து செல்வது பாவமா? தெளிவுபடுத்தவும். முஹம்மத் இல்யாஸ், சென்னை.

தெளிவு : உங்களில் ஒருவர் (தாம் தொழும் போது) மக்கள் குறுக்கே சென்றுவிடாதவாறு “சுத்ரா” தடுப்புப் பொருளை(த் தமக்கு எதிரில்) வைத்துத் தொழும்போது, எவரும் குறுக்கே சென்றால் அவரைத் தடுத்து நிறுத்துவாராக! அதை மறுத்து விட்டு அவர் மீண்டும் வந்தால் அவரைக் கொன்று விடுவாராக! ஏனெனில் அவர் ஷைத்தானாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஸயீத்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

ஒருவர் பிறர் குறுக்கே செல்லாத வகையில் தடுப்புப் பொருளைத் தமக்கு எதிரில் வைத்துத் தொழு துக் கொண்டிருக்கும்போது அத்தடுப்புப் பொருளுக்கு உள்பாகத்தில் குறுக்கே சென்றால் தான் அவ ரைத் தடுப்பதற்கு தொழுபவருக்கு உரிமை உண்டு. அதன் எல்லைக்கு அப்பால் நடந்து செல்பவரைத் தடுக்கக் கூடாது. ஏனெனில் அவர் இவருக்குக் குறுக்கே செல்லவில்லை.
இதன்படி ஒருவர் தொழும்போது, ஸஜ்தா செய்யும் இடத்திற்கு அப்பால் மற்றொருவர் செல்வது பாவமாக மாட்டாது. காரணம் தொழும் எல்லைக்கு அப்பால் செல்வதால் தொழுபவருக்கு குறுக்கே சென்றார் என்ற நிலை ஏற்படுவதற்கில்லை.

தொழுதுக் கொண்டிருப்பவரின் குறுக்கே செல்பவர் தம்மீது என்ன ஏற்படுகிறது என்பதை அவர் அறிந்திருப்பாராயின் அவர் 40 நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் அவர் நின்றுவிட்டு பின்னர் செல்வது அவருக்கு சிறப்பானதாகிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் 40 நாட்கள் என்றார்களா? அல்லது மாதங்கள் என்றார்களா? அல்லது வருடங்கள் என்று கூறினார்களா? என்பதை நான் அறியவில்லை என்று இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ள “”அபுன் நழ்ரு” என்பவர் கூறியுள்ளார்) அபூஜுஹைம்(ரழி), புகாரி)

மற்றொரு அறிவிப்பில் முஸ்னது பஜ்ஜாரில் 40 வருடங்கள் என்பதாகத் தெளிவாக்கப்பட்டுள்ளது. இப்னு ஹிப்பான், இப்னு மாஜ்ஜா ஆகியவற்றில் அபூ ஹுரைராவின் வாயிலாக தொழுபவருக்கு எதி ரில் குறுக்கே செல்லும் வகையில் ஒருவர் எடுத்து வைக்கும் ஒரு எட்டைவிட 1000 வருடங்கள் நின்று விட்டுப் பிறகு அவர் செல்வது அவருக்கு மேலான தாகிவிடும் என்று உள்ளது.

மேற்காணும் அறிவிப்புகளின் வாயிலாகப் பார்க்கும்போது அவ்வாறு தொழுபவருக்கு எதிரில் குறுக்கே செல்வதானது சாதாரணமான பாவமல்ல. கடுமையான பெரிய பாவம் தான் என்பதை ஸஹீஹான ஹதீஃத்களின் மூலம் அறிகிறோம்.

Previous post:

Next post: