தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2017 செப்டம்பர்

அமல்களின் சிறப்புகள்…

தொடர் : 28
M. அப்துல் ஹமீத்

தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, அந்த ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூலான அமல்களின் சிறப்புகள் புத்தகம் தான் வாழ்க்கையின் வழிகாட்டி என்று ஜமாஅத்தில் இருந்த மற்றவர்களைப் போல நானும் எண்ணினேன். இறை நாட்டம், ஒரு சந்தர்ப்பத்தில் குர்ஆனையும், ஹதீஃதுகளையும் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அப்போதுதான், தலையணை சைசில் இருந்த அமல்களின் சிறப்பு புத்தகம் இறை வேதத்துக்கும் இறைத் தூதரின் ஹதீஃதுகளுக்கும் நேர்மாற்றமாகவும், முரண்பாடுகள் கொண்ட ஒரு மூட்டை (BUNDLE OF CONTRADICTIONS) ஆகவும் இருப்பதை உணர்ந்தேன். எனது உணர்வை அங்கிருந்த என் நண்பர் கள் சிலரிடம் கூறினேன். ஓரிருவர் மட்டும் ஏற்றனர். ஏற்காதோரிடம் சிறு சலசலப்பு! எனவே, அந்த முரண்பாடுகளை அந்நஜாத்தில், ஆய்வுத் தொடராக எழுத ஆரம்பித்தேன்.

செப்டம்பர் 1987ல் முதல் தொடரை பிரசவித்தேன். 2 & 3 தொடர்களில் குர்ஆன் ஹதீஃதுக்கு ஏதிராக (1) நபி (ஸல்) அவர்களின் கழிவுப் பொருட்கள், இரத்தம், மலம், சிறுநீர் அனைத்தும் பரிசுத்தமானவை. எனவே அவற்றை சாப்பிடுவது, குடிப்பது என்பதில் எந்த விதமான கேள்விக்கும் இடமில்லை என்றும்

(2) மனிதன் தன்னை மலத்தில் உள்ள பூச்சியைப் போன்று நினைக்க வேண்டும் என்றும் அமல்களின் சிறப்புகள் புத்தகத்தில் இருப்பதை கண்டித்து விமர்சித்திருந்தேன்.

புத்தகத்திலுள்ள 2 விஷயங்களே இப்படி என்றால் இன்னும் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கேவலமாக இருக்கிறதே, அதையெல்லாம் விமர்சித்தால் நாறிப் போயிடுமே என்று நினைத்தாரோ என்னவோ, கொதித்தெழுந்தார் தப்லீக் ஜமாஅத்தின் பேச்சாளர் ஒருவர். இவர் ஒரு கல்லூரியின் புரஃபசர், நான் மதிப்பு வைத்திருந்தவர், அறிவாளி என்று நான் அப்போது எண்ணியிருந்த, அந்த சகோதரரிட மிருந்து, “”நாங்கள் விமர்சிப்பது நாய் புத்தி! நாய் நரகலைத்தான் மனம் பிடித்து தின்னும்” என்று தரக்குறைவான கன்டன கடிதம் ஒன்று வந்தது. அக் கடிதமும் அதற்கான பதிலும் எமது 4-ஆம் தொடர் மார்ச் 1999ல் வெளியானது. இக் கடித்ததைப் படித்தவுடன், இவரை அறிவாளி என நான் எண்ணியது தவறு என்று நினைக்க வைத்து விட்டார்.

எனவே, தன்னை மறந்த இவர்களின் மாயவலையில் வேறெவரும் சிக்காமல் இருக்க, இவரது கடிதம் ஒரு உத்வேகத்தை என்னுள் இறக்கியது. விளைவு!
தொடரை தொடர ஆரம்பித்தேன். அப்புத்தகத்தில் இருந்த உலமாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பை ஆய்வு செய்ய முற்பட்ட போது, “”மவ்லவிகள் பற்றி நிறைய எழுத வேண்டி இருப்பதால் அத்தலைப்பை பிறகு எழுதுவதாக அத்தொடரிலேயே அறிவித்தேன்.” எனவே, பிற தலைப்புக்களை ஆய்வு செய்து எழுதிக் கொண்டிருந்தேன்.

இந்த நிலையில் எனக்கு அறவே அறிமுகமில்லாத நபர் ஒருவர் என்னைத் தெரிந்தவர்- என்னுடன் பழகியவர் போல் தன்னை காட்டிக் கொண்டு, நான் வழக்கமாக தொழும் பள்ளியில் அடிக்கடி சந்தித்து, நீங்கள் எழுதும் தொடர் நன்றாக இருப்பதாகவும், உலமாக்களின் சிறப்புகள் பற்றி எப்போது எழுதுவீர்கள்? என்றும் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

என்னைப் புகழ்வதைக் கண்டு இவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மட்டும் எண்ணினேன் பழக்கம் உள்ளவர் போல பழகும் இவரிடம் நீங்கள் யார்? என்று கேட்க சங்கடமாக இருந்தது. இவர் யார் என்று பிறரிடம் விசாரிக்கையில் இவர் திருச்சி அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் தொடர்புடைய நபர் என்று சொன்னார்கள். அவர் அங்கு பணியில் இருக்கிறாரா என்பதும் சொன்னவர்களுக்கு தெரியவில்லை.

அடுத்த தடவை என்னை அவர் சந்தித்த போதும் வழக்கமான நலன் விசாரணை முடித்து விட்டு, “”உலமாக்களின் சிறப்புகள் பற்றி எப்போது எழுதுவீர்கள்?” என்று கேட்டார். நான் சற்று கோபத்துடன் “”இதை என்னிடம் கேட்க சொல்லி யார் உங்களை மதரசாவிலிருந்து அனுப்பினார்கள்? அவர்களிடம் போய் சொல்லுங்கள். சீக்கிரம் எழுதுவேன். அவர்களின் சுயரூபம் அப்போது தெரியும் என்று எச்சரித்தேன்.” அந்த நபர் எதுவுமே பேசாமல் அமைதியாக சென்று விட்டார். அதன் பிறகு பல வருடங்கள் ஆகியும் இது நாள் வரை அந்த நபர் என் கண்ணில் தென்படவேயில்லை.

இதன் பிறகு, சில மாதங்களுக்குப்பின் திருச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் அமல்களின் சிறப்பு புத்தகத்திற்கு பதிலாக வேறொரு புத்தகம் வாசிக்க ஆரம்பித்து விட்டனர். உல மாக்களின் சிறப்புகள் பற்றி எப்போது எழுதுவேன்? என அந்த நபர் விசாரித்ததற்கும், “”சீக்கிரம் எழுதுவேன். அவர்களின் சுயரூபம் அப்போது தெரியும்” என்று நான் எச்சிரித்ததற்கும், பள்ளிவாசல்களில் அமல்களின் சிறப்பு புத்தகத்திற்கு பதிலாக வேறொரு புத்தகம் படிக்க ஆரம்பித்ததற்கும் தொடர்பு இருக்குமா என்பதை அல்லாஹ்வே அறிவான். அந்த சமயத்தில் ஜூலை 2005 முடிய 27 தொடர்கள் வரை வளர்ந்து இருந்தது. அப்போது ஆய்வு செய்வதையும், எழுதுவதையும் நிறுத்தி விட்டேன்.

சில ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் பத்திரிக்கை பரிசீலனை கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தபோது, ஆசிரியர் சகோ.அபூ அப்தில்லாஹ் அவர்கள் “”தொடரையும் கேள்விகளுக்கு பதில் எழுதுவதையும் ஏன் நிறுத்தி விட்டீர்கள்? ” என்று கேட்டார். “திருச்சியில் உள்ள நிறைய பள்ளிவாயில்களில் அமல்களின் சிறப்புகள் புத்தகத்திற்கு பதிலாக முன்தகப் அஹாதீஸ் என்ற ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருக்கிறார்கள். நமது வேலை முடிந்து விட்டது; எனவே, ஆய்வை நிறுத்தினேன். அலுவலக வேலைப் பளுவின் காராணமாக, கேள்விகளுக்கு பதில் எழுத நேரம் கிடைக்கவில்லை” என்று கூறினேன்.

“”முன்தகப் அஹாதீஸ் புத்தகத்தில் உள்ள ஹதீஸ்கள் பெரும்பாலானவை சஹீஹானவை அல்ல. எனவே அமல்களின் சிறப்புகள் ஆய்வை தொடருங்கள்; மக்களுக்கு போய் சேர வேண்டும். அதை முடித்து விட்டு, “”முன்தகப் அஹாதீஸ்” பற்றியும் எழுதுங்கள்; நேரம் கிடைக்கும்போது கேள்விகளுக்கும் பதில் எழுதுங்கள். வினா- விடை பகுதி ஏன் வருவதே இல்லை? என்று வெளிநாட்டிலிருந்து நிறைய பேர் கேட்கிறார்கள்” என்று சொன்னார். “முடிந்தவரை எழுகிறேன்” என நான் ஒப்புக் கொண்டேன்.

ஒப்புக் கொண்ட பிறகும் பல ஆண்டுகள் மவுனம் காத்தேன். ஒரு முறை என்னிடம் தொலைபேசியில், “”வேலை எல்லாம் எப்படி இருக்கு?” என்றார். “”டைட்டாகத்தான் இருக்கு, பாய் சாப்” என்றேன். “”நீங்க எழுத ஆரம்பிங்க; இல்லேன்னா அல்லாஹ்விடம் பிடிபடுவீங்க” என்றார் பயந்து விட்டேன்.
அம்மனிதர் யாரையும் எதிர்பார்த்து எதையும் செய்பவர் அல்ல! பயானுக்காக பல ஊர்களுக்கு போவார்; எங்களை அழைப்பார். ஓரிருவர் மட்டும் ஆரம்பத்தில் சென்றோம். பிறகு அதுவும் இல்லை என்றாகி விட்டது. எல்லாம் தெரிந்தவர்களாக நாங்கள் ஆகி விட்டோம். அவர் மட்டும் புதிதாக ஜமாத்தில் செல்பவர் போல, ஒவ்வொரு தடவையும் ஆர்வமாக போவார், வருவார். யாருமே வருவதில்லை என்பது பல ஆண்டுகளாக தெரிந்த நிலையிலும், ஒவ்வொரு தடவை போகும்போதும் எங்களிடம் தாவா செய்வார். யாரும் போக மாட்டோம். கொஞ்சமும் வருந்த மாட்டார். எங்களை அழைப்பதை மட்டும் இறுதி வரை அவர் நிறுத்தியது இல்லை. ஊர் போய், திரும்பி வந்த பிறகு “”கார்குஜார்” கூறுவார். அப்போது போகவில்லையே என்று வருந்துவோம். ஆனால், திரும்பவும் போக மாட்டோம்.

யாரும் வரவில்லையே தாவாவுக்கு, தனியாக போகிறோமே என்று இம்மி அளவு கூட கவலைப்பட மாட்டார். அப்படிப்பட்ட மனிதர் என்னை எழுத சொல்லிக் கொண்டே இருக்கிறாரே. ஜமாஅத்தின் அமீர் என்ற முறையில் இப்போது கடுமையாக எச்சரிக்கையும் செய்கிறாரே? ஒரு பயம் என்னை கவ்விக் கொண்டது.

ஆனால், அந்த பயம் என்னுள் நிலைத்து விடவில்லை. எழுதாமலே இருந்து விட்டேன். ஆண்டுகள் சென்று கொண்டிருந்தன. சகோதரரின் அஜ்ல் முடிந்து விட்டது. வருந்திப் பயன்? “கடைசி வாய்ப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். நான், அம்மனிதருக்கு, கொடுத்த வாக்கை காக்க வேண்டும்- அதுவும் அல்லாஹ்விடம் பிடிபடுவதற்கு முன்பாக! அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் என்னை மீண்டும் எழுத வைத்து விட்டான். இன்ஷா அல்லாஹ், இனி தொடர்ந்து எழுதுவேன்.’

சென்ற இதழில் உள்ள தலைப்பு ஒன்றிலுள்ள மேட்டரை படித்து விட்டு நான் எழுதியதா? என்று என் மூத்த மகன் மொபைலில் வினவினார். “”ஆம்!” என்று கூறிவிட்டு, எனக்கு அந்நஜாத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ள எழுதும் பொறுப்புக்கள் பற்றியும், அம் மனிதரிடம் நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, எழுத ஆரம்பிக்கப் போறேன் என்று சொன்னது தான் தாமதம் “”நீங்க எழுத ஆரம்பிக்க, உங்களுக்கு ஒரு மவுத் தேவைப்படுகிறது” என்று சொன்னார். என் கன்னத்தில் பளார் என்று யாரோ அறைவதைப் போல் உணர்ந்தேன்.

அல்லாஹ், என் மகனை இப்படி பேச வைத்து என்னுள் வைராக்கியத்தை இறக்கி விட்டான். “”இரு விரல்களுக்கு இடையே உள்ளங்களை புரட்டுபவன், அல்லாஹ் அல்லவா?” இறை உதவி கிட்டும் என நம்பி, எழுத உறுதி கொள்கிறேன். மரணிக்கும் வரை நான் எழுதிக் கொண்டு அதன் மூலமும் தாவா பணி செய்ய வேண்டும் என்று துஆ செய்யுங்கள்!

இன்ஷா அல்லாஹ், ஆய்வுக்குள் நுழைவோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி இடம் பெற்றுள்ள விவரம்:
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஸ்கள்
பக்கம் : 354, ஹதீஸ் எண் : 7-ன் விளக்கம்
செய்தி :

ஹஜ்ரத் ஸிர்ரீ சிக்தீ (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள். ஜூர்ஜானீ (ரஹ்) அவர்கள், பொரிமாவை வாயில் கொட்டிக்கொண்டிருக்கக் கண்டு, ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று நான் கேட்டபோது, “”ரொட்டியை மென்று சாப்பிடுவதற்கும், இந்த மாவை வாயில் கெட்டுவதற்கும் இடையே உள்ள நேரத்தை கணக்கிட்டுப் பார்த்ததில் ரொட்டியை மென்று சாப்பிடுவதில் 70 தடவை “”சுப்ஹானல்லாஹ்” கூறிவிடுமளவுக்கு செலவாகுவதை அறிந்தேன். ஆகையால் 40 ஆண்டுகளாக நான் ரொட்டி சாப்பிடுவதை விட்டு விட்டேன். இந்த மாவையே சாப்பிட்டு வருகிறேன்” என்று பதில் கூறினார்கள்.

இந்த ஸிர்ரீ சிக்தீ, ஜீர்ஜானீ இவர்களெல்லாம் யார்? இவர்கள் பெயர்கள் எல்லாம் கற்பனை பெயர்களா? இஸ்லாத்தில் இவர்களின் பங்கு என்ன? 70 தடவை சுப்ஹானல்லாஹ் சொல்வதற்காக ரொட்டியை மென்று சாப்பிடாமல் மாவை வாயில் கொட்டிக் கொள்கிறாரே லூசா இந்த ஆளு? இவரு முஸ்லிம் தானா? “”எவருடைய அமலும் ஒருவரை சொர்க்கம் கொண்டுசெல்லாது; அல்லாஹ்வின் கிருபை இருந்தால் மட்டும் தான் சொர்க்கம் செல்லமுடியும்; அதற்கு நானும் விதிவிலக்கு அல்ல என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்ன புத்திமதி ஊர் உலகுக்கே தெரியுமே. இந்த மரமண்டைகளுக்கு ஏறவில்யே! ஏன்?” இதில் இவர்கள் பெயர்களுக்கு பின்னால் “”ரஹ்மத்துல்லாஹி அலைஹி” என்று “”டைட்டில் சாங் (துஆ)” வேறு!

ஒண்ணுமில்லை! நா கேக்குறேன்! இந்த புத்தக உருது மூல ஆசிரியரும், தமிழ் மொழி பெயர்ப்பாளரும், தாலிம் படிக்கும் நபர்களும், இதற்கு வக்காலத்து வாங்கும் அறிவாளிகளும்(!) சோறு சாப்டிரிங்களா? இல்லை மாவை அள்ளி வாயிலே போட்டுக்கிரிங்களா? பாக்குறோமே! லுஹர் முடிஞ்ஜ ஒடனே சாப்புட்ரதை! படிக்கிறது ஒன்னு. செய்றது வேற. “”நீங்க செய்யாததை சொல்லாதீங்க”னு குர்ஆன்லே இருக்கிறதை என்னைக்காவது படிச்சி இருக்கீங்களா? நீங்கதான் குர்ஆனை படிகிறதுக்கு பதிலா ஒங்க புஸ்தகத்தை தானே படிக்கிறீங்க. ஒங்க புஸ்தகத்திலே தானே பரக்கத் இருக்குன்னு டெல்லிக்காரரு சொல்றாரு!

அடுத்து “”ஜூர்ஜானீட்டே வருவோம். 40 வருசமா மாவு சாப்புடுறாரே. அல்லாஹ்வுடைய தூதர் என்ன செஞ்சாங்க தெரியுமா? அவுங்களுக்கு சாப்பாடு கெடைக்கிறதெல்லாம் இல்லை. சாப்பாடு இல்லேனா நோன்பு வைப்பாங்க. அப்போ எல்லாம் சுப்ஹானல்லாஹ் சொல்லிட்டு இருக்கிறதா ஹதீஸ்லே இல்லே. எதிர்பாரமே சாப்பாடு கெடச்சா, சாப்பாடு இல்லேன்னு தான் நோன்பு வெச்சேன். இப்போ சாப்பாடு கிடைத்து விட்டதால், நோன்பை உட்டுட்டேனு சொல்லிட்டு சாப்புட ஆரம்பிச்சிர்றாங்க. இது தான்யா மார்க்கம். எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சிம்ப்ளா டீல் பண்றாங்க. நீங்களும் இருக்கீங்களே. ரொட்டிக்கு பதிலா மாவு சாப்பிட்டு, எக்ஸ்ட்ரா 70 தடவை சுபஹானல்லாஹ் சொல்லனுமாம்.”

திர்மிதீலே அபூஹுரைரா (ரழி) சொல்றாங்க: “”நபி(ஸல்) அவர்களிடம் (சமைத்த) இறைச்சி கொண்டு வரப்பட்டது. அவர்களுக்கு மிகவும் பிடிப்பதால், அதிலிருந்து முன் சப்பை இறைச்சியை எடுத்து கொடுக்கப்பட்டது. அவர்கள் அதன் இறைச்சியை முன் பல்லால் கடித்து உண்டார்கள்.”
“”அல்லாஹ்வுடைய இந்த தூதரிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது”னு குர்ஆனில் (33:21) அல்லாஹ் சொல்றான்.

இறைச்சியை எடுக்குறாங்க. முன் பல்லால் கடித்து சாப்புடுறாங்க. இதுக்கு நேரமாகுதேனு மட்டன் சூப் குடிச்சி “”சுப்ஹானல்லாஹ்” சொன்னாங்களா? ஜூர்ஜானீ மாவு சாப்பிட்டுக்கிட்டு “”சுப்ஹானல்லாஹ்” சொன்னாராம். எதுக்கு? சொர்க்கத்துக்கு போவ? இந்த மாதிரி அமல் செய்ற ஆளெல்லாம் “”நம்மை சேர்ந்தவர் இல்லே”னு நெத்தியடியா, அழகா நபி(ஸல்) சொன்னதெல்லாம் இந்த ஆளுங்களுக்கு தெரியவில்லையே. இந்த புஸ்தகம் இப்பிடி இருக்குன்னு நம்ம சொன்னா கன்டன கடிதம் அனுப்புறாங்க. அல்லாஹ் விடம் இவர்களுக்காக துஆ செய்வோம்.

இன்ஷா அல்லாஹ், நல்ல அமல்கள் இனியும் தொடரும்……

Previous post:

Next post: