அந்நஜாத்தின் பணி தமிழ் மக்களுக்கு தொடரவேண்டும்…

in 2017 டிசம்பர்

MTM. முஜீபுதீன், இலங்கை

அந்நஜாத் மாத இதழ் வெளியீட்டுக் குழு சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தினருக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

“”ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக் கக் கூடியதாகவே இருக்கிறது. தீமையைக் கொண்டும், நன்மையைக் கொண்டும் பரீட்சிப் பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம். மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப் படுவீர்கள். (அல்குர்ஆன் :21:35)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக் கக் கூடியதாகும். பின்னர் நீங்கள் நம்மிடமே திருப்பிக் கெண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன்: 21:35)

அவன் எத்தகையவனென்றால், உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங் களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான்; அவனே (யாவற்றையும்) மிகைத்தவன் மிக்க மன்னிக்கிறவன். (அல்குர்ஆன் : 67:2)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக் கக் கூடியதாகும்; இன்னும் உங்கள் (செயல் களுக்குரிய) கூலிகளை நீங்கள் பூரணமாக்கப் படுவதெல்லாம் மறுமை நாளில் தான். ஆகவே (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு, சுவர்க்கத்தில் பிரவேகிக்கச் செய்யப்படுகிறாரோ அவர், திட்டமாக வெற்றி யடைந்து விட்டார். மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் : 3:185)

சகோதரர் அந்நஜாத் ஆசிரியர் லு.னி.க்ஷி. அபூ அப்தில்லாஹ் அவர்களின் மரணச் செய்தி சில நாட்களுக்கு முன் எனக்கு எட்டியது. கவலை யாக இருந்தது உடனே என மனதில் எழுந்தது அந்நஜாத்தின் சத்திய குரல், எதிர் காலத்தில் தொடருமா? என்பதே! உடனே நான் பின்வருமாறு ஓதிக்கொண்டேன்.
“”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர் கள்) என்றும் “”அல்லாஹூம்ம, அஜூர்னீ, ஃபீ, முஸீபத்தி வசுக்லிஃப் லீ கைரம் மின்ஹா” இறைவா! எனக்கேற்பட்ட அத்துன்பத்தை நான் பொறுமையுடன் ஏற்றதற்கு மாற்றாக எனக்கு நன்மையை வழங்குவாயாக என்று வேண்டினேன். (முஸ்லிம் :1674)

மேலும் ஜனாஸா தொழுகையில் ஓதும் பிராத்தனை என் மனதில் எழுந்தது.
இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப் பாயாக; கருனை புரிவாயாக! இவருடைய பாவங்களை மன்னித்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்கு வாயாக! இவர் புகுமிடத்தை (கப்ரை) விசால மாக்குவாயாக. இவருடைய குற்றம் குறைகளி லிருந்து இவரை நீராலும், பனிக்கட்டியாலும் ஆலங் கட்டியாலும் கழுவி அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய் மைப்படுத்தப்படு வதைப் போன்று தூய்மையாக்குவாயாக. மேலும், இங்குள்ள குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்குள்ள துணைவியை விடச் சிறந்த துணைவியையும் இவருக்கு வழங்குவாயாக. மண்ணறையின் வேதனையிலி ருந்தும், நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் அவரைக் காத்தருள்வாயாக.

எனக்கு 1986 முதல் இன்று வரை அந்நஜாத் மாத இதழுடன் தொடர்பு உண்டு. சில வருடங் களுக்கு முன் அந்நஜாத் ஆசிரியர் இலங்கை வந்திருந்தார். எனது ஊருக்கும் வந்திருந்தார். எனது வீட்டுக்கும் வந்திருந்தார். அவர் ஒரு புத்தகத்தையும் எனக்கு அன்பளிப்பாக தந்திருந் தார். அவருடன் இஸ்லாம் பற்றி பல விசயங் களையும் கதைத்துள்ளேன். அவர் ஒவ்வொரு முஸ்லிம்களும் சுயமாக மார்க்கத்தை படிக்க வேண்டும். தனி மனித வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அத்துடன் அந்நஜாத் ஆசிரியரின் கட்டுரை களை மிகவும் கவனமாக வாசித்து வந்துள் ளேன். அவர் தமிழ் பேசும் மக்களிடம், அல்குர் ஆன், நபி மொழிகளை அதன் தூய வடிவில் முன் வைப்பதில் முன் நின்றார். அவருடைய எழுத்து சொல் நடை சிறிது காரம் கூடியதாக இருந்தது. ஆனால் அவர் முன் வைத்த உண்மைச் செய்திகள் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டியவையாக இருந்தது.

அவருடைய கட்டுரைகள் நடுநிலையாளர் களுக்கு பிடித்தன. ஆனால் பிரிவினைவாதி களுக்கு கசந்தன. உண்மையை தேடும் அறிஞர் களுக்கு எச்சரிக்கையாக, அச்சமூட்டி எச்சரித்து, நன்மாராயம் சொல்பவைகளாக இருந்தன. ஆனால் பிரிவினைவாத குருமார்களுக்கு ஜீரணிக்க முடியாதவைகளாக இருந்தன. அத் துடன் பிரிவினைவாதிகளுக்கு நஷ்டத்தை தோற்றுவித்தன.

அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் புரோகிதர்களினாலும், பிரி வினையை முஸ்லிம் மக்களிடம் தூண்டும் குரு மார்களாலும் விமர்சிக்கப்பட்டார். இஸ்லா மிய மார்க்கத்தை கூறுபோடும் குழுக்களால் நிந்திக்கப்பட்டார். பிரிவினைவாத ஜமாஅத்து களின் சூனிய வார்த்தைகளினால் சில மக்கள் போதையூட்டப்பட்டனர். இவ்வாறு உடும்பு பிடியில் சிக்கிய மக்களிடையே “”அந்நஜாத்” பெரும் ஆபத்தான புத்தகம் என காட்டப் பட்டது. இவ்வாறான எதிர்ப்புகளுக்கு பிரதான காரணம், “”அந்நஜாத்” மாத இதழில் வெளிவந்த ஆணித்தரமான, உண்மையான சத்திய கருத்துகளே ஆகும். இஸ்லாமிய பிரி வினை குருமார்களினாலும், பிரிவினைவாதி களாலும் “”அந்நஜாத்” நிந்திக்கப்படுவதற்கான காரணங்களை அவதானிப்போம்.

அல்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அருளிய சத்திய இயற்கை மார்க்கம் மட்டுமே ஒரே நேர்வழி மார்க்கம் என்ற கட்டுரைகள், இவ்வாறான ஆதாரபூர்வமான கட்டுரைகள் அறிவுடைய தமிழ் பேசும் மக்களை சிந்திக்க வைத்தன. இவை மெளட்டீக குருமார்களுக் கும், பிரிவினைவாத மெளலவிகளுக்கும், அவர் களின் கண்மூடிப் பின்தொடரும் ஆதரவாளர் களுக்கும் கசந்தன, கோபமூட்டின. ஆனால் “”அந்நஜாத்” முன்வைத்த அல்குர்ஆன் ஆதாரங் கள் புரோகிதர்களின் வியாபாரத்தை பாதித் தது. “”அந்நஜாத்” இதைத்தான் சொன்னது.

“”நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும். ஆகவே, இதனையே பின்பற்றுங் கள், இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண் டாம், அவை உங்களை அவனுடைய வழியை விட்டும் பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழி)யைப் பின்பற்றி இறைவனுக்கு) பயபக்தியுடன் நடப் பதற்காக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (அல்குர்ஆன் : 6:153)

அந்நஜாத் மாத இதழில் இவ்வாறான அல்குர்ஆன் வசனங்களை சகோதரர் அபூ அப்தில்லாஹ் முன்வைத்து, மக்களை எச்சரித் தார். அத்துடன் தற்போது பிரிவினை மெளலவி களினால் நேர்வழி என இனங்காட்டப்பட்ட ஜாதி, மதம், மத்ஹபு, தரீக்கா, பிரிவினை இயக்கம் போன்ற பிரிவுகளை விமர்சித்தார். மெளலவிமார்களின் மனித கருத்துக்கள், இஸ்லாம் மார்க்கம் அல்ல என மக்களுக்கு வழி காட்டினார். இவ்வாறு அபூ அப்தில்லாஹ் எழுதியது குற்றமா? இவ்வாறான வழிகெட்ட பிரிவினை இயக்கங்களை நபி தோழர்களும் எதிர்த்திருக்கிறார்களே! அந்த வழியைத் தானே சகோதரர் அபூ அப்துல்லாஹ்வும் எழுதினார். அவதானியுங்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறிய தாவது: இறை நம்பிக்கையாளர்கள் கூட்டாக (ஜமாஅத்) இருக்கவேண்டுமென அல்லாஹ் இங்கு கட்டளையிடுகின்றான், கருத்து வேறு பாடு கொண்டு பிரிந்து விட வேண்டாமெனத் தடை செய்கின்றனர். மார்க்க வி­யத்தில் தர்க்கம் செய்து சண்டையிட்டுக் கொண்டதா லேயே முந்தைய சமுதாயத்தார் அழிந்து போயினர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் தமது கரத்தால் ஒரு கோட்டைக் கிழித்தார் கள், பின்னர் “”இது அல்லாஹ்வின் நேரான வழி” என்று கூறினார்கள், பிறகு அந்தக் கோட் டின் வலப்பக்கத்தில் இரு கோடுகளையும், இடப் பக்கத்தில் இரு கோடுகளையும் கிழித்தார்கள்.

பிறகு “”இந்த வழிகள் ஒவ்வொன்றிலும் “”ஷைத்தான் நின்று கொண்டு (மக்களைத்) தன் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறான்” என்று கூறினார்கள். பிறகு இந்த வசனத்தை (6:153) ஓதிக்காட்டினார்கள். நூல்: முஸ்னது அஹ்மத், ஹாகிம், தாரிமீ.

இஸ்லாத்தில் பிரிவினைகளை எதிர்க்கும், இன்னும் ஓர் நபி மொழியை அவதானியுங்கள்:
மற்றொரு ஹதீஃதில் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், அல்லாஹ் நேரான பாதைக்கு ஓர் உதாரணம் கூறுகின்றான். அந்த (நேரான) பாதையின் இரு மருங்கிலும் இரு சுவர்கள் உண்டு. அவற்றில் சில வாசல்கள் திறந்து வைக் கப்பட்டுள்ளன. (திறந்து வைக்கப்பட்ட) வாசல்களில் திரைகள் தொங்கவிடப்பட்டுள் ளன.

“”மனிதர்களே! வாருங்கள் அனைவரும் நேரான பாதையில் நுழைந்து விடுங்கள். யாரும் பிரிந்திட வேண்டாம்” என்று கூறுகிறார்கள்.
(இவ்வாறே) அந்தப் பாதையில் மேலே உள்ள அழைப்பாளரும் அழைக்கிறார். யாரே னும் ஒரு மனிதர் (ஓரத்தில் உள்ள) வாசல்களில் ஒன்றைத் திறக்க நினைத்தால் “”உனக்கு நாசம் உண்டாகட்டும். அதைத் திறக்காதே, திறந்தால் உள்ளே நுழைந்திடுவாய்” என கூறுவார்.

இவற்றில் நேரான பாதை என்பது இஸ்லா மாகும். இரு சுவர்கள் என்பது இறைவனின் வரையறைகளாகும். திறக்கப்பட்ட வாசல்கள் என்பது இறைவனால் தடை செய்யப்பட் டவை ஆகும். தலைவாயிலில் நின்று கொண்டு அழைப்பு விடுப்பது இறைவனின் வேதமாகும். பாதையின் மேலே (நின்று கொண்டு) அழைப் பது ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் அல்லாஹ்வை நினைவுபடுத்தும் மனசாட்சி யாகும். அறிவிப்பாளர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரழி), திர்மிதீ, முஸ்னது அஹ்மத்.

இவ்வாறான ஹதீஃத்களை முன்வைத்து, இஸ்லாம் மார்க்கத்தில் பிரிவினையை எதிர்த் தது குற்றமா? பிரிந்து சிதறியுள்ள முஸ்லிம் மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டியது படித்த மெளலவிகள் செய்ய வேண்டியது இல்லையா? புதுமையான பெயர்களில் மெளலவிகளின் ஆசீர்வாதத்துடன் பிரிவு ஜமாஅத்துகளை உருவாக்குவது குற்றமில் லையா? இஸ்லாத்தை கூறுபோடும் ஜமாஅத்து களிலுள்ள செல்வந்தர்களை மூலதனமாக வைத்து, பிரிவினையை உருவாக்கும் பிரிவினை மதரஸாக்களை, கல்விக் கூடங்களை ஆரம் பித்து பிரிவினையைத் தூண்டும் மெளலவி களை உருவாக்குவது பாவம் இல்லையா? பிரிவினைவாதப் பள்ளிவாசல்களை உருவாக்கி அல்குர்ஆன், நபி(ஸல்) அவர்களின் உண்மை யான ஹதீஃத்களை மக்கள் பார்க்க விடாமல் தடுப்பது குற்றமில்லையா இவைகளை “”அந்நஜாத்” மாத இதழ் மூலம் மக்கள் மன்றத் தில் வைத்து விமர்சித்தது அபூ அப்துல்லாஹ் செய்த குற்றமா?

இந்த போலி முல்லாக்களை தோலுரித்து காட்டுவது தான் குற்றமா? தயவு செய்து முஸ்லிம் மக்களே! தமிழ்நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்களே! நடுநிலையோடு சிந்தித்து பாருங்கள். “”அந்நஜாத்” ஆசிரியர் தமது எழுத் துக்கள் மூலம் தெளஹீதுக்கு எதிரான கொள்கைகளை கொண்டு வந்தாரா? அல்லது உங்களிடம் இஸ்லாத்தை பேசுவதற்கு கூலி கேட்டாரா? அல்லது பிரிவினை ஜமாஅத்து களை உருவாக்கி அறியாத மக்களை தன் பக்கம் வசப்படுத்தினாரா? அல்லது “”அந்நஜாத்” 2017 ஜுன் இதழில் 20ம் பக்கம் முதல் 22ம் பக்கம் வரை எழுதப்பட்ட “”கூடாதவைகள்” என்ற இஸ்லாத்தில் புகுத்தப்பட்ட அனாச்சாரங்கள் யாரினால் இஸ்லாமிய தமிழ் மக்களிடம் புகுத் தப்பட்டது? கூலிக்கு மார்க்கம் சொல்லும் குருமார்களினாலா? அல்லது “”அந்நஜாத்” பத்திரிகை மூலமா? இறை அச்சமுடைய முஸ்லிமான விசுவாசிகளே சிந்தியுங்கள்! ஏன் தமிழ் பேசும் தொளஹீத்வாதிகளுக்கு அபூ அப்தில்லாஹ் மீது இந்த அளவு கோபம். அபூ அப்தில்லாஹ் அவர்கள் எந்த முஸ்லிமுக்காவது “”காபிர்” பத்வா கொடுத்தாரா? பிரிவு குருமார் களின் மாய வலையிலிருந்து பிரிந்து சிந்தியுங் கள்! சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்களும், “”அந்நஜாத்” மாத இதழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை நரகை அடையாமல் தடுப்பதற்கு முயற்சித்தார்கள் அந்த சகோதரர் அபூ அப்தில்லாஹ்வின் மறுமை நல் வாழ்வுக்கு பிரார்த்தியுங்கள்.

ஃபிர்அவுன் என்ற ஆட்சியாளன் எகிப்து மக் களை அடிமைப்படுத்தி வைத்தான். அதுபோல் யூத, கிறித்தவ பாதிரிமார்கள், சந்நியாசிகள் சத்திய இறை நெறி நூல்களை மறைத்தனர். இஸ்ரவேலர்களை 72 பிரிவுகளாக பிரித்தனர். இவ்வாறு “”அந்நஜாத்” இதழ் அல்லது சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் தமிழ் பேசும் முஸ் லிம்களை பல பிரிவுகளாக பிரித்தாரா? தொளஹீத் சிந்தனையாளர்களே! சிந்தியுங்கள்! “”அந்நஜாத்” ஆசிரியர் தன் கருத்துக்களைதான் மக்கள் பின்பற்ற வேண்டும் என சொன்னாரா? 23 வருடமாக அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியில் செல்வதே நேர்வழி என்று சொன் னாரா? அல்லது முஸ்லிம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்திய “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற ஜமாஅத் பெயரை தவிர்த்து, வேறு பெயர்களை சூட்டி பிரிந்து விடாதீர்கள் என்று அல்லவா சொன்னார். இதைத்தானே அந்த அப்பாவி சகோதரர் அபூ அப்தில்லாஹ் என்ற மனிதர் இறுதி மூச்சு உள்ளவரை எழுதிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் இருந்தார். இது குற்றமா? சிந்தியுங்கள்!

முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்துவிடக் கூடாது. தமிழ் பேசும் முஸ்லிம்கள் அல்குர்ஆன், நபி வழிமுறையில் ஒன்றுபட அழைப்பு விட்டது அவர் செய்த குற்றமா? அவர் எத்தனை இஸ்லாமிய அறிஞர்களை பிரிவினையை விட்டு நீங்கி ஒன்றுபட அழைத்தார். அவர் தொடராக ஒரு ஹதீஃதை “”அந்நஜாத்” இதழில் வெளியிட்டு வந்தார். அதே ஹதீஃதை மீண்டும் இங்கு எழுதுகிறேன் அவதானிப்போர் உண்டா? என பார்ப்போம்.
ஹுதை ஃபத்துல் யமான்(ரழி) அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் (எப் போதும்) நல்லதைப் பற்றியே கேட்ப வர்களாக இருந்தனர், நானோ கெட்டது என்னை மிகைத்து விடாமல் இருக்க கெட்டது பற்றியே கேட்கக் கூடியவனாக இருந்தேன். ஒரு முறை…
1. நான் : அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் அறியாமையிலும், தீமையிலும் (மூழ்கி) இருந்தபோது அல்லாஹ் எங்களுக்கு (இஸ்லாம் என்ற) இந்த நல்லதை அருளினான். இந்த நல்லதற்குப் பின்னால் கெட்டது உண்டா?
2. நபி(ஸல்) : ஆம்! உண்டு.
3. நான் : அந்த கெட்டதற்குப் பின்னர் நல்லது உண்டா?
4. நபி(ஸல்) : ஆம்! உண்டு! ஆனால் அது “”தகனுன்” களங்கப்பட்டிருக்கும்.
5. நான் : அதனது “”தகனுன்” களங்கம் என்ன?
6. நபி(ஸல்) : ஒரு கூட்டம் எனது நேர்வழி அல்லாததைக் கொண்டு மக்களை வழி நடத்துவார்கள். நீங்கள் அவர்களை (செயல் களைக்) கண்டறிந்து (அவற்றை) நிராகரித்து விடுவீர்கள்.
7. நான் : அந்த நல்லதற்கும் பின்னர் கெட்டது உண்டா?
8. நபி(ஸல்) : ஆம்! உண்டு!! (சிலரால்) நரகத் தின் வாயிலுக்கு அழைப்பு விடுக்கப்படும். எவர்கள் அந்த அழைப்பை ஏற்கிறார்களோ அவர்கள் அதில் (நரகத்தில்) எறியப்படுவார் கள்.
9. நான் : யாராஸுல்லாஹ்! அவர்களைப் பற்றி (எனக்கு) விளக்குவீர்களாக.
10. நபி(ஸல்) : அவர்கள் நம்மைச் சார்ந்தவர் களாகவும், நாம் பேசுவதையே பேசுபவர் களாவும் இருப்பார்கள்.
11. நான் : (அவர்களது வலையில் சிக்காமல் இருக்க) அப்போது எப்படி நடக்க வேண்டு மென்று) எனக்கும், (என்னைப் போன்றவர் களுக்கும்) என்ன கட்டளை இடுகிறீர்கள்?
12. நபி(ஸல்) : (அப்போது) நீர் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஐயும் அதன் “”இமாம்” ஐயும் பற்றிக் கொள்வீராக.
13. நான் : (நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற) அந்த ஜமாஅத்தோ, அதனது இமாமோ இல்லை என்றால்.
14. நபி(ஸல்) : (மத்ஹபு, தரீக்கா, இயக்கம், கழகம் போன்ற) எல்லா பிரிவுகளையும் விட்டு (தூர) ஒதுங்கி வாழ்வீராக. அப் படியே உமது மரணம் வரை மரவேர்களைச் சாப்பிட்டுக் காலத்தைப் போக்கும் நிலை ஏற்பட்டாலும் சரியே! (புகாரி, முஸ்லிம், திர்மிதீ, இப்னு மாஜா)

அந்நஜாத்தில் தொடர்ந்து இந்த ஹதீஃதை வெளியிட்டு வந்தார். அந்நஜாத் மீதும், சகோதரர் அபூ அப்தில்லாஹ் மீதும் தமிழ் நாட்டு தெளஹீத் இயக்கத்தினருக்கும், ஏனைய பிரிவினை இயக்கத்தினருக்கும் ஏனிந்த கோபம்? சிந்தியுங்கள்!

“”அந்நஜாத்” மாத இதழ் தொடராக எழுதி யது, ஒவ்வொரு மனிதனும் சத்திய உண்மை நபி மொழிகளை அறிந்து கொள்ள முயற்சியுங்கள். அல்குர்ஆனை அதன் தூய வடிவில் விளங்க முயற்சியுங்கள் என எழுதியது. அவ்வாறு முயற் சித்தால் அல்லாஹ் நேர்வழி காட்டுவான். மனி தர்கள் சொல்வதை எல்லாம் மார்க்கமாக கண் மூடி பின்பற்றாதீர்கள். அல்குர்ஆன், நபி வழியில் நடந்தால் மட்டுமே, மரணத்தின் பின் புதைகுழியில் வானவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க அல்லாஹ்வின் அருளால் முடி யும் என எழுதி வந்தது. வழிகெட்ட மனிதர் களை கண்மூடி வழிப்பட்டால், நிராகரித்தவர் கள், நயவஞ்சகர்கள் சொல்வது போல் “”எனக்கு ஒன்றும் தெரியாது, மக்கள் சொன்னபடி நடந்து வந்ததாகவே பதில் சொல்ல முடியும். இவ்வாறு அல்குர்ஆன் நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத் களை வாசித்து உண்மையை அறியும்படி “”அந்நஜாத்” எழுதி வந்தது. அத்துடன் “”அந்நஜாத்” இதழை மட்டுமல்ல. நல்ல அறிஞர் களின் ஆய்வுகளையும் வாசியுங்கள் என்றது. ஒவ்வொருவரும் சத்திய மார்க்கத்தை தூய வடி வில் படித்தால் மட்டுமே, ஷைத்தானிய கருத்து களை இனங்கான முடியும் என்றது.

பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள். உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் கப்ரில் வானவர்கள் விசாரிப் பதை அவதானித்து முன் கூட்டியே சத்தியத்தை அறிந்துகொள்ள முயற்சியுங்கள். பிரிவினை வாதிகளின் பக்கம் செல்லாதீர்கள். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள்.

“”ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனது தோழர்கள் திரும்பும் போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு மலக்குகள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்காரவைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டி ருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கவன் “”இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதரு மாவார் என நான் சாட்சி கூறுகின்றேன்” என்பான் பிறகு “”(நீ கெட்டவனாக இருந்திருந் தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்கு மிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்ப தனால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள் ளான்” என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும் எனக்கு தெரியாது. மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டி ருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் “”நீயாக எதையும் அறிந்ததுமில்லை, (அல்குர் ஆனை) ஓதி (விளங்க)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரி யில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத் தும் செவியேற்கும் அளவுக்கு அவன் கத்துவான்”
இதை அனஸ்(ரழி) அறிவிக்கிறார் : புகாரி: 1338

ஆகவே நாம் ஒரு மூமின்களாக இறப்பை சந்திக்க வேண்டும். ஆகவே அல்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் உண்மை ஹதீஃத்களை அறிந்து அதன்படி நடக்கவேண்டும். இதைத் தவிர்த்து மக்கள் ஆதாரம் இல்லாது சொல் வதை கேட்டு நடந்தால் நரகை அடையவே வழி வகுக்கும். இதனையே “”அந்நஜாத்” இதழ் மூலம் சகோதரர் அபூ அப்தில்லாஹ் எழுதினார்.

சிலர் அபூ அப்தில்லாஹ் மெளலவிமார் களை விமர்சிக்கிறார் என எதிர்க்கின்றனர். இறை அச்சத்துடன் சத்தியத்தை முன் வைத்த எந்த மெளலவியையும் அவர் எதிர்க்கவில்லை. ஆனால் ஒரு மெளலவி அல்குர்ஆன், நபி வழிக்கு மாற்றமாக சுய கருத்துக்களை சொல் லும்போதே, அதனை ஆட்சேபித்தார். அக்கருத்து மக்களிடம் சென்று மக்கள் அதன் வழி நடந்து நரகம் அடையாமல் தடுப்பதற்காக “”அந்நஜாத்” மூலம் எதிர்த்து எழுதினார். அந்த மெளலவி சொல்வது பொய்! அவர் பொய்யன் என எழுதினார். இது குற்றமா? சிந்தியுங்கள். அல்குர்ஆனையும், ஹதீஃத்களையும் அவ தானித்து பாருங்கள்.

அல்லாஹ் அல்குர்ஆனில் யூதர்களையும், கிறித்தவர்களையும், அவர்களின் பாதிரிமார் களையும், சந்நியாசிகளையும் கடுமையாக எச்சரிக்கின்றான். அவர்கள் செய்த பிழைகளை சுட்டிக் காட்டுகின்றான். நபி(ஸல்) அவர்கள் பல ஹதீஃத்களில் யூத, கிறித்துவ அறிஞர்கள் அவர்களின் இறை நெறி நூல்களை மக்களிடம் மறைத்ததை சுட்டிக் காட்டியுள்ளார்கள். நபித் தோழர்கள் குறை´ நிராகரிப்பாளர்களின் தலைவனை “”மடையர்களின் தந்தை” என விபரித்தார்கள். தற்போது நாங்களும் அவ்வாறு குறிப்பிடுகிறோம். ஹதீஃத் கலை வல்லுநர்கள் எத்தனை ஹதீஃத்களை அறிவித்த ராவிகளை, பொய்யர்கள் நம்பமுடியாதவர்கள் என சுட்டிக் காட்டியுள்ளனர். ஏன் அவர்கள் அப் படி குறிப்பிட்டனர். இஸ்லாம் மார்க்கத்தை பாதுகாப்பதற்கு அவ்வாறு சொன்னார்கள். இவை குற்றமா? அவதானியுங்கள்.
இறைநெறி நூல் வழங்கப் பெற்றோரிடம், “”நீங்கள் மக்களுக்கு அ(ந்த நெறி நூலை)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்திவிட வேண்டும். அதை நீங்கள் மறைக்கலாகாது” என அல்லாஹ் உறுதி மொழி பெற்றதை (நபியே!) நினைத்துப் பாருங்கள். ஆனால், அவர்களோ அதைத் தமது முதுகுக்குப் பின்னே தூக்கி எறிந்து விட்டு, அதற் குப் பதிலாகச் சொற்ப விலையை வாங்கிக் கொண்டனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் மோசமானதாகும். அல்குர்ஆன்: 3:187
பாதிரிமார்களின் செயல்களை பற்றி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.

விசுவாசங் கொண்டோரே! நிச்சயமாக (அவர்களுடைய பாதிரிகளிலும், சந்நியாசிகளி லும் அநேகர் மனிதர்களின் பொருட்களைத் தவறான முறையில் உண்ணுகிறார்கள்! இன்னும் (மக்கள்) அல்லாஹ்வுடய வழியில் செல்வதற்கும் தடை விதிக்கின்றனர்.
அல்குர்ஆன் : 9:34

இவ்வாறு பல இடங்களில் பாதிரிமார் களின் உண்மைக்கு மாற்றமான செயற்பாடு களை அல்குர்ஆன் விமர்சிக்கிறது. நபி(ஸல்) அவர்களுக்கு அல்குர்ஆனை அருளி விளக்கும் படி கூறுகின்றான்.

அல்குர்ஆனின் மூலமும், நபி(ஸல்) அவர் களின் ஹதீஃத்கள் மூலமும், யூத, கிறித்தவ பாதிரிமார், சந்நியாசிமார்களை விமர்சிக்கிறது. இதற்கு காரணம் அவர்களை நம்பி மக்கள் வழி தவறிவிடுவதைத் தவிர்ப்பதாகும். பின் வரும் அல்குர்ஆன் வார்த்தைகளைப் பாருங்கள்.

பாவமான அவர்களின் கூற்றிலிருந்தும், விலக்கப்பட்டவைகளை அவர்கள் உண்பதிலி ருந்தும் மேதைகளும், அறிஞர்களும் அவர் களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பவை மிகக் கெட்டவையாகி விட்டது. அல்குர்ஆன்:………

அல்லாஹ் காட்டுவது மட்டுமே ஒரே நேர் வழி என்பதை “”அந்நஜாத்” 2017 ஜுன் மாத தலைப்பு பின்வருமாறு கூறுகின்றது.
நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழியாகும், ஆகவே, இதனையே பின்பற்றுங் கள், இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண் டாம். இவை உங்களை அவனுடைய வழியை விட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி இறைவனுக்கு) பயபக்தியுடன் நடப்பதற்காக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். அல்குர்ஆன்: 6:153

பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள் :
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“”மதீனா நகர் இங்கிருந்து இதுவரை புனித மானதாகும்! இங்குள்ள மரங்கள் வெட்டப் படக்கூடாது. இங்கே (மார்க்கத்தின் பெயரால்) புதியது எதுவும் உருவாக்கப்படக் கூடாது! யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிய (செயல் அல்லது கொள்கை) ஒன்றை ஏற்படுத்துகிறாரோ அவர் மீது அல்லாஹ்வுடைய மலக்குகளு டைய மற்றும் மக்கள் அனைவருடைய சாபம் ஏற்படும்!” இதை அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆகவே சுய கருத்துக்கள் என்ற பெயரால் மார்க்கத்தில் அனுமதிக்காத புதுமைகளை புகுத்துவது பெரும் பாவம் ஆகும்.

முன்பு ஒரு காலத்தில் ஐரோப்பாவில் பாதிரிமார்களின் ஆதிக்கமே மேலோங்கி காணப்பட்டது. அவர்களை அரசரும், பிரபுக் களும் ஆதரித்தனர். அங்கு வாழ்ந்த யூத, கிறித் தவ குருமார்கள் அரசர்களுக்கும், பிரபுக்களுக் கும் சாதகமாக தமது மார்க்கத்தை மறைத்து தீர்ப்பு வழங்கி வந்தனர். இது குடிமக்களை பாதித்தது. ஆனால் குடிமக்கள் குருக்களை விமர்சிக்கவில்லை. அவர்களை யாரும் விமர்சிப்பது பெரும் பாவம் என நம்பவைக்கப் பட்டது. இதே வழியையே பிற்கால இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பின்பற்றினர். ஒரு மெளலவி எதை பிழையாகச் சொன்னாலும், அவன் பொய்யன் என இனங்காட்டப்படமாட்டான். அது பாவமாம்! மெளலவிமார்களிடையே நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அநேகமாக ஒரு மெளலவி இன்னொரு மெளலவியை குற்றம் சாட்டுவதைத் தவிர்ப்பார். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் குற்றம் சாட்டுவார். அது யாது எனின் அவர்களின் பதவி அல்லது கூலி குறையும் போது மட்டும் வேறுபடுவர்.

எமது நாட்டில் (இலங்கை) ஆங்கிலம், சிங்களம், தமிழ் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை அப்பாதை சிறு பிள்ளைகளுக்கு கற்பிப்பர். மூன்று அல்லது நான்கு வருடங்களில் அவர்களுக்கு ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் எழுத, வாசிக்க, சிந்திக்க கற்றுக் கொடுத்து விடுவர். ஆனால் மெளலவி ஆசிரியர்களுக்கு அரபு பாஷை தெரியும். ஆனால் அவர்களிடம் பத்து வருடங்கள் பிள்ளைகள் படித்தாலும், அரபு மொழி பேசுவதற்கு அல்லது சிந்திப்பதற்கு கற்பிக்க மாட்டார்கள். கிளிப் பிள்ளை போல் வாசிப்பதற்கே கற்றுக் கொடுப்பார்கள். இது அவர்கள் சமுதாய முஸ்லிம் மக்களுக்கு செய்யும் பெரும் மோசடியாகும். மறுக்க முடியுமா? அறிவுமிக்க முஸ்லிம் சமுதாயமே சிந்தியுங்கள். இந்த நிலையில் அவர்களை தமது தாய் மொழியில் அல்குர்ஆனை, ஹதீஃத்களை பார்க்க தடுத்து விடுவார்கள். மற்ற எல்லாப் புத்தகங்களையும் வாசிக்க அனுமதிப்பார்கள். இது மனித சமுதாயத்திற்கு செய்யும் கொடுமை இல்லையா? சிந்தியுங்கள்.

இன்று இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் எத்தனை மெளலவிமார்கள் அரபு கல்லூரி களிலிருந்து வெளிவருகின்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பெயரைப் பயன் படுத்தி ஜும்மாக்களில் பலவீனமான ஹதீஃத் களை முன் வைக்கிறார்கள். இன்று சில மெளலவிகள் எல்லா அறிஞர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஸஹீஹான ஹதீஃத் களைக் கூட பிழையானது என்று மறுக்கிறார் கள். எத்தனை ஹதீஃத்களுக்கு பிழையான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அன்று வாழ்ந்த ஹதீஃத் கலை வல்லுநர்கள் தற்போது இருந்தால் அவர்களை தமது புத்தகங்களில் இனங்காட்டி இருப்பர். அந்த மெளலவி களை பொய்யர் என்றே குறிப்பிட்டிருக்க முடியும். இதை அந்நஜாத் ஆசிரியர் சுட்டிக் காட்டி பொய்யன் என்றால், பிரிவினைவாத பக்தர்களுக்கு தாங்க முடிவதில்லை. அறிவு மிக்க தமிழ் முஸ்லிம்களே சிந்தியுங்கள். ஒரு அரபு படித்த மெளலவி எந்த பிழையை சொன்னாலும் அவர்களை பொய்யன் என்று சொல்வது பாவமாம்! இது யார் கொள்கை? ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் கொள்கையா? இல்லை அவர்கள் அல்லாஹ் வுக்கு பயந்தவர்கள் யார் பிழையாக இஸ்லாத் திற்கு விளக்கம் கொடுத்தாலும், அதனை தனது புத்தகங்களில் எழுதி இனங்காட்டுவார் கள். இதுவே உண்மை.

இன்று தமிழ்நாட்டில் எந்த மெளலவி இஸ்லாத்திற்கு விரோதமான செய்திகளை வெளியிட்டாலும், அதனை அந்நஜாத் இனங் காட்டியது. தவ்ஹீத் மெளலவி பிழையான செய்திகளை வெளியிட்டால் அதனையும் அந்நஜாத் இனங்காட்டியது. அவ்வாறு இனங் காட்டும் போது, தன்னை “”தவ்ஹீத்” வாதி எனக் கூறுபவர்களுக்கு ஜீரணிக்க முடிய வில்லை. இது அந்நஜாத்தின் குற்றமா? சிந்தியுங்கள்!

இன்று சில நல்ல மெளலவிமார்கள் தம்மை மெளலவி என இனங்காட்டுவதற்கே தயங்குகின்றனர். வெட்கப்படுகின்றனர். சில அரபு கல்லூரிகளில் பட்டங்களின் பெயர் களையே ய.பு.,னி.பு.,என மாற்றி அறிவிக்கின்ற னர் அல்லது புதுப் பெயர்களை பயன்படுத்து கின்றனர். ஒரு உண்மை முஸ்லிம் அறிந்து

கொள்ள வேண்டும், அல்லாஹ்வும், அவன் தூதரும் வெளிப்படுத்தியவை மட்டுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதை, ஆனால் அல்குர்ஆன், நபி வழிக்கு மாற்ற மானவை விமர்சனத்துக்கு உரியவையாகும். இவ்வாறே ஆரம்ப இஸ்லாமிய அறிஞர்கள் செயற்பட்டுள்ளனர். அந்நஜாத்தும் அந்த அடிப்படையிலேயே விமர்சிக்கின்றது. அதே போல் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர் களும் தாம் பிழை செய்தால் அதை விமர்சிக்கும்படியே எழுதி வந்தார். ஆகவே அவர் தனது உயிர் பிரியும் வரை மக்களை நல்வழிப்படுத்தவே  எழுதி  வந்தார்.  ஆகவே அவர் மறுமை வாழ்க்கை வெற்றி அடைய பிரார்த்தியுங்கள். அவர் மனிதன் என்ற அடிப்படையில் அவர் எழுத்துக்கள் யாரை யாவது பாதித்திருப்பின் அல்லாஹ்விற்காக மன்னியுங்கள். அத்துடன் அந்நஜாத் தொடர்ந்தும், அல்லாஹ்வின் அல்குர்ஆன், மற்றும் உண்மை ஹதீஃதின்படி வெளிவர இறைவனை பிரார்த்தியுங்கள். சகோதரர் அபூ அப்துல்லாஹ் அவர்களின் குடும்பத்தினர் நல்வாழ்வுக்காகவும் அல்லாஹ்வை  பிரார்த்தியுங்கள்.

Previous post:

Next post: