யார் இந்த மதகுருமார்கள்?

in 2017 டிசம்பர்,புரோகிதம்

அபூ அப்தில்லாஹ்

முஸ்லிம் யார்? காஃபிர் யார்?
இந்த மதகுருமார்கள் மக்களிடையே முஸ்லிம்களுக்கும், காஃபிர்களுக்கும் தவறான பொருளைக் கற்பித்து அதை மக்கள் உள்ளங்களில் புரையோடச் செய்துள்ளனர். முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெற்றோருக்குப் பிறந்து, முஸ்லிம் பெயரிட்டு, சுன்னத்துச் செய்யப்பட்டு, முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்ந்தால் அவன் முஸ்லிம்; அவனுக்கு முஸ்லிமாக இருப்பதற்கு அடிப்படையான கலிமாவே தெரியாமல், மார்க்க சம்பந்தப்பட்ட அடிப்படைகள் எதையும் தெரியாமல் இருந்தாலும் அவன் முஸ்லிம்; இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் கடுமையாக கண்டித்துக் கூறும் எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து (காஃபிர்) வாழ்ந்தாலும் அவன் முஸ்லிம். அன்று நபி(ஸல்) அவர்களின் வருகை யின்போது கஃபத்துல்லாஹ்வை சுற்றி வாழ்ந்து கொண்டிருந்த இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல் (அலை) அவர்களின் நேரடி சந்ததிகளான குறைஷ்களும் இப்படித் தங்களை முஸ்லிம்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் இறுதி நபிக்கு இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆன் வசனங்களை, அன்று அவர்களை ஆட்டிப் படைத்த தாருந் நத்வா மதப் புரோகிதர்களை கண்மூடி நம்பி நிராகரித்தனர். அவர்களின் கோணல் வழி உபதேசங்களை வேதவாக்காகக் கொண்டு நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதனாலேயே அவர்கள் காஃபிர்கள்-இறை நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். (பார்க்க 109:1-6)

இன்றைய முஸ்லிம்களின் நிலை!
அதே போல் இன்றைய முஸ்லிம்களும் இந்த மவ்லவிகளான மதகுருமார்களை கண்மூடி நம்பி நேரடி அல்குர்ஆன் வசனங்களை நிராகரிக்கின்றனர். அவர்களின் கோணல் வழி உபதேசங்களை வேதவாக்காகக் கொண்டு, சுய கருத்தைச் சொல்லாமல் அல்குர்ஆனிலுள்ள இறைவாக்குகளை மட்டுமே எடுத்துக் கூறுகிறவர்களை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அப்படியானால் இம் மத குருமார்களின் பின்னால் கண்மூடிச் செல்லும் (தக்லீது) முஸ்லிம்களின் நிலை என்ன? நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத குருகுல மதரசா நடைமுறை மார்க்கத்திற்கு உட்பட்டதா? நபி(ஸல்) அவர்களுக்கு முன்னரே அனைத்து மதங்களிலும் இக்குருகுல கல்வி முறை இருந்தும், அரபு நாட்டிலேயே கஃபாவிற்கு மிகச் சமீபமாக அதன் வட பகுதியில் “தாருந்நத்வா’ என்ற குருகுல கல்வி மடம் இருந்தும் நபி(ஸல்) அதைத் தரைமட்டமாக்கி ஒழித்துக் கட்டினார்கள். அந்த மதகுருமார்களை இழிவு படுத்தினார்கள் என்ற வரலாறு குன்றிலிட்ட தீபமாக, தெள்ளத் தெளிவாக இருக்க, மீண்டும் இக்குருகுலக் கல்வி முறை அதாவது அரபி மதரஸாக்கள் எப்படி முஸ்லிம் சமுதாயத்தினுள் நுழைந்தன? சிந்திக்க வேண்டாமா?

குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் காட்டுவார்களா?
“சுன்னத் ஜமாஅத்’ என்ற பிரிவினராவது “பித் அத் ஹஸனா”-“அழகிய புதுமை” என இம் மதரஸாக்களை நியாயப்படுத்துகின்றனர். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயளவில் பிதற்றும் அஹ்ல ஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி போன்றோர் எந்த முகத்துடன் இந்த மத குருமார்களை உற்பத்தி செய்யும் குருகுல மடங்களான மதரஸாக்களை புதிதாகக் கற்பனை செய்து நடத்தி வருகின்றனர்? பதில் தருவார்களா?

மார்க்கத்தை ஓசி-தண்டச் சோறு போட்டுக் கற்றுக் கொடுப்பது எந்த அளவு தவறானது -பெருங்குற்றமானது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் நடைமுறையே நமக்குப் போதுமான ஆதாரமாகும். தாருந்நத்வா குருகுல மடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிய நபி(ஸல்) அது போன்றதொரு குருகுல மடம் முஸ்லிம்களிடையே மீண்டும் வந்து நுழைந்து விடக்கூடாது என்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தார்கள். மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளும் மிகத் தூய்மையான நோக்கத்துடன் சில நபி தோழர்கள் மஸ்ஜித் நபவிக்குப் பக்கத்திலிருந்த திண்ணையில் அடுகிடை படுகிடை எனக் கிடந்தனர்.

நபி(ஸல்) ஏன் ஏற்பாடு செய்யவில்லை?
இத்தனைக்கும் அத்திண்ணைத் தோழர்கள் அத்திண்ணையில் அடுகிடை படுகிடையாகக் கிடந்த நோக்கம் மார்க்கத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கமே அல்லாமல் வேறு நோக்கம் எதுவும் இல்லை. தங்களால் ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிட வழி தெரியாமல் அத்திண்ணையில் போய் தஞ்சம் அடையவில்லை. இந்த நிலையில் நபி(ஸல்), அவர்களின் வயிற்றுப் பசிக்கு எந்தவித முன் ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவில்லை. வரக்கூடியவர்கள் அவர்களின் பரிதாப நிலையைக் கண்டு இரக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் உணவு கொடுத்தால் சாப்பிடுவார்கள். இல்லை என்றால் கொலைப் பட்டினிதான். பசி தாளாமல் சிலர் மயங்கி விழுந்து விடுவார்கள் என்று வரலாறு கூறுகிறது.

இப்படிப்பட்ட நிலையைக் கண்டும் நபி (ஸல்), அவர்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏன் ஏற்பாடு செய்யவில்லை. அந்த அளவு இரக்கமற்றவர்களா நபி(ஸல்) அவர்கள்? வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்தால் அவர்களை விழுந்து விழுந்து உபசரிக்கும் நபி(ஸல்) அவர்கள், தன்னிடம் ஒன்று மில்லாவிட்டாலும் கூட, நபி தோழர்களிடம் கேட்டு அந்த விருந்தாளிகளை அழைத்துச் சென்று உணவு கொடுத்து உபசரிக்கும்படி கட்டளையிடும் நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து பட்டினி கிடக்கும் இந்த திண்ணைத் தோழர்கள் பற்றி எந்த ஏற்பாடும் செய்யாமலிருந்தது ஏன்?

ஒவ்வொரு திண்ணைத் தோழரையும், ஒவ்வொரு நபிதோழரிடம் ஒப்படைத்து, அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றும்படி ஏன் கட்டளையிடவில்லை? சிந்தித்து உணர வேண்டாமா?

முஹாஜிர்களுக்கு செய்த ஏற்பாடு, மார்க்கம் கற்பவர்களுக்கு ஏன் இல்லை?
இத்தனைக்கும் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) மதீனா வந்த முஹாஜிர்களை ஒவ்வொரு மதீனாவாசிகளிடம் (அன்சார்கள்) ஒப்படைத்து அவர்களின் இவ்வுலக தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும்படி கட்டளையிட்ட முன் மாதிரியும் இருந்ததே! அந்த ஏற்பாட்டை மார்க்கத்தைத் தூய நிலையில் கற்க அத்திண்ணையில் அடுகிடை படு கிடை எனக் கிடந்த திண்ணைத் தோழருக்காக ஏன் செய்யவில்லை?

வழிகேட்டில் இட்டுச் செல்லும் குருகுலக் கல்வி!
தனக்கு முன்னால் வந்து சென்ற நபிமார்களின் சமூகங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து அச் சமூகங்களைப் பல கோணல் வழிகளில் இட்டுச் சென்று நரகில் விழச் செய்யும் அக்கொடூர குருகுலக் கல்வி முறை தப்பித் தவறியும் தமது சமூகத்தில் நுழைந்து விடக் கூடாது. அதனால் முஸ்லிம் சமூகம் நரகம் நோக்கி நடைபோடக் கூடாது என்பதில் மிகமிக எச்சரிக்கையாக இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள். மார்க்கக் கல்வி கற்கும் காலத்தில் ஓசியில் தங்கி, ஓசிச் சாப்பாடு சாப்பிட்டு சோம்பேறிகளாகி, மார்க்கத்தை மதமாக்கி அது கொண்டு வயிறு வளர்க்கும் மதகுருமார்கள் ஒரு போதும் தமது சமூகத்தில் திருட்டுத் தனமாக நுழைந்து விடக்கூடாது என்பதில் மிக மிக எச்சரிக்கையாக இருந்தார்கள் நபி(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்), திண்ணைத் தோழர்களின் உணவுத் தேவைக்கு எவ்வித முன் ஏற்பாடும் செய்யவில்லை. அதே சமயம் பள்ளிக்குத் தொழவரும் நபி தோழர்கள் அவர்களின் பரிதாப நிலையைப் பார்த்து தாங்களாக முன்வந்து அவ்வப்பொழுது அவர்களுக்கு உதவி செய்ததை நபி(ஸல்) தடுக்கவில்லை. அல்குர்ஆன் 2:273 இறைவாக்கும் இதை உறுதிப்படுத்துகிறது. ஆனால் இப்படிப்பட்ட இந்த உதவி அவ்வப்பொழுது அவர்களின் நிலை அறிந்து உதவி செய்வதைக் குறிக்குமே அல்லாமல், மார்க்கத்திற்காக தங்களை அர்ப்பணிப்பவர்களுக்கு நிரந்தரமாக மாதாமாதம் சம்பளம் கொடுத்து அவர்களை மதகுருமார்களாக்குவதை ஒருபோதும் அனுமதிக்காது.

அப்படிப்பட்ட ஒரு மூடத்தனமான சுய விளக்கத்தை ததஜ மத்ஹப் தலைமை மதகுரு தன்னுடைய குர்ஆன் விரிவுரை என்ற பெயரால் வெளியிட்டுள்ள இதுகாலம் வரை வெளிவந்த தஃப்ஸீர்களை (குர்ஆன் விரிவுரை) எல்லாம் வழி கேட்டில் மிஞ்சும் வகையில் எழுதிய அபத்தக் களஞ்சியத்தில் இந்த 2:273 இறைவாக்குக்கு விரிவுரையாக எழுதி அவரது ஆதரவாளர்களை மூளைச் சலவை செய்து நரகிற்கு இட்டுச் செல்கிறார். நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்ளும், மத குருமார்களை உற்பத்தி செய்யும் குருகுல கல்வி அதாவது மதரஸா கல்வி எந்த நிலையிலும் தமது சமுதாயத்தில் தப்பித் தவறியும் நுழைந்து விடக் கூடாது என்ற கவலை காரணமாகவே, அக்கறை காரணமாகவே தாம் பெரிதும், அன்பும், இரக்கமும் காட்டிய திண்ணைத் தோழர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்து கொடுக்கும் எவ்வித நிரந்தர முன் ஏற்பாட்டையும் செய்து கொடுக்கவில்லை என்பது குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது.

குருகுல கல்வி முறை எப்போது இஸ்லாத்தில் நுழைந்தது?
மதகுருமார்களை உருவாக்கும் குருகுல கல்வி முறையை இந்த அளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் தடுத்து நிறுத்தியும், எப்படி இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்தார்கள்? எப்போது இந்த குருகுல கல்விமுறை அதாவது மதரஸா கல்வி முறை நடைமுறைக்கு வந்தது என்று ஆய்வு செய்து பார்த்தால், யூதக் கைக் கூலிகள் முஸ்லிம்களாக நடித்து, இமாம்களின் பெயரைச் சொல்லி கண் மூடி(தக்லீது) பின்பற்றும் மத்ஹபுகள் முஸ்லிம்களிடையே புகுத்தப்பட்ட பின்னரே இம்மதரஸாக்கள்-குருகுல மடங்கள் இஸ்லாமிய சமூகத்திலும் புத்துயிர் பெற்றன.

அந்த வரலாறுகளையும், முஸ்லிம்களில் வெறும் 5% மட்டுமே மார்க்கத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் புரோகித குருகுல கல்வி கற்கும் முறைக்கு மாற்றமாக முஸ்லிம் சமுதாயத்திலுள்ள 100% ஆண்களும், பெண்களும் முழுமையாக தூய மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ளும் மிக எளிய, சிரமமற்ற நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டி தமது சமூகம் அவசியம் அதையே பின்பற்றி நடக்க வேண்டும் என்று கட்டளையிட்டுச் சென்ற கல்வி முறையையும், அத்திட்டத்தை முறியடிக்க  இம்மதகுருமார்கள் செய்து வரும் தகிடு தத்தங்களையும் இன்ஷா அடுத்த இதழில் பார்ப்போம்.

Previous post:

Next post: