ஐயமும்! தெளிவும்!!

in 2018 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நான் ‘T சர்ட் அணிந்து தொழுகிறேன். அவ்வாறு தொழலாமா? முழுக்கை சட்டை அல்லது ஜிப்பா அணிந்து தான் தொழ வேண்டுமா? R.முஹம்மது பாரூக், திருநெல்வேலி பேட்டை.

தெளிவு : ‘ கீழ் ஆடையுடன் ‘T சர்ட் அல்லது, அரைக்கை சட்டை அல்லது முன்டா பனியன் அணிந்து தொழலாம். இவைகளுக்கு தடை ஏதும் இல்லை. ஜூப்பா அணிந்தும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடனும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடன் தொழலாம். ஆனால் அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தோள்மீது போட்டிருக்க வேண்டும். தடை இல்லை. கீழே உள்ள ஹதீஃத்களை கவனியுங்கள்.

“”நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது இரு தோள்களின் மீதும் மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்” என உம்மு ஹானி(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
(புகாரி, பாகம்:1, அத்தியாயம்: 8, பாடம்:4)

“”நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுதார்கள்” என உமர் பின் அபீசலமா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி:பாகம் 1, அத்தியாயம் : 8, ஹதீஃத் எண். 354)
“”உம்மு சலாமா(ரழி)வின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு அதன் இரு ஓரத்தையும் இரு தோள்களின் மீது மாற்றிப் போட்டு கொண்டு தொழுதார்கள்” என உமர் பின் அபீசலமா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி : பாகம் 1: அத்தியாயம் : 8, ஹதீஃத் எண் : 355 , 356)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “”உங்களில் யாரும் தமது தோள் மீது எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி), நூல் : புகாரி, பாகம் :1, எண்:359)
கீழ் ஆடையுடன் முழுக்கை சட்டை அல்லது ஜூப்பா அணிந்து தான் தொழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. அப்படிக் கூறுபவர்கள் மார்க்கம் அறியாத பாமரர்கள்.

 

ஐயம் : ஆமை சாப்பிடலாமா?
S.M. நாசர், நாகர்கோவில்

தெளிவு : சாப்பிடலாம். கடலில் உள்ள அனைத்து உயிரினங்களும் மனிதன் சாப் பிடுவதற்காக படைக்கப்பட்டது. ஒருசில விஷஜந்துக்களை தவிர. ஆதாரம் :
அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து “”அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் கடலில் பயணம் மேற்கொள்கிறோம் அப்போது எங்களுடன் குறைந்த அளவு நீரையே கொண்டு சொல்கிறோம்! அதைக் கொண்டு நாங்கள் அங்கத் தூய்மை (உளு) செய்தால், தாகத்தால் தவிக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, கடல் நீரால் நாங்கள் அங்கத் தூய்மை செய்யலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள். “”கடல் நீர் தூய்மைப் படுத்தக் கூடியதாகும். அதில் (வாழும்) உயிரினங்களில் செத்ததும் (உண்பதற்கு) அனுமதிக்கப்பட்டதாகும்” என்றார்கள்.
நூல் திர்மிதீ, அபூதாவூத், இப்னு மாஜா, நஸாயீ, முஸ்னது அஹ்மத், முவத்தா, மாலிக் தாரிமீ.

Previous post:

Next post: