குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 பிப்ரவரி,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

தொடர்-1

ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன். அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி, மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் அடைவதைத் தெளிவு படுத்தி சமத்துவ சமுதாயம். ஒன்றுபட்ட சமுதாயம், உருவாக, முஸ்லிம்கள் அனைவரும் ஆலிம்களாக, முஸ்லிம் சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

நீண்ட நெடுங்காலமாக அரபி கற்றவர்கள் மட்டுமே, அதிலும் 16 கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியும் என்ற ஒரு வலுவான எண்ணம் முஸ்லிம் சமுதாயத்தில் நிலவி வருகின்றது. இதன் காரணமாக அரபி மதரஸாக்களில் 7 ஆண்டுகள் செலவிட்டு ஸனது பெற்று வரும் மவ்லவிகளும் குர்ஆனை நேரடியாக விளங்க முற்படுவதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய முன்சென்ற பெரியார்களான மனிதர்களின் அபிப்பாரயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை எடுத்து நடந்து வருகின்றனர். மார்க்கப் பிரச்சினை ஏதும் எழுந்தால், இந்த மவ்லவி கள் குர்ஆனையும், ஹதீதையும் பார்ப்பதை விட்டு, மனித அபிப்பிராயங்களுடன் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களையே வேதநூல்களாக(?) ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர். மவ்லவிகளின் இந்த போக்கும், இந்த மவ்லவிகளின் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் போக்கும் சரியானதா? என்பதை நமது வழக்கமான கொள்கைப்படி குர்ஆன், ஹதீது வெளிச்சத்தில் ஆராய்வோம்.

குர்ஆன் தன்னைப் பற்றி இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது.
“இது நெறிநூல், இதில் சந்தேகமே இல்லை: பயபக்தியுடையோர்களுக்கு (இது) நேரான வழியைக் காட்டும்” (2:2)

“நிச்சயமாக இந்த குர்ஆன் (மனிதர்களுக்குத் தெளிவான) மிக நேரான வழியை அறிவிக்கின்றது”. (17:9)

“விசுவாசங் கொண்டோருக்கு அருளாகவும், பரிகாரமாகவும் உள்ளவைகளையே குர்ஆனில் இறக்கி இருக்கிறோம். எனினும், அக்கிரமக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையேயன்றி அதிகரிப்பதில்லை. (17:82)

உம்முடைய மொழியில் நாம் இதை எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன் மூலம் பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் ஜனங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே” (19:97)

“விசுவாசம் கொண்டோருக்கு (இது) நேர் வழியாகவும், நன்மாராயமாகவும் இருக்கிறது” (27:2)
“நன்மை செய்வோருக்கு ஒரு நேர் வழிகாட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கின்றது”. (31:3)

இந்த நெறி வசனங்கள், குர்ஆன் மூலம் நேர்வழி பெற “தக்வா” என்னும் இறை அச்சம்-ஆதரவு அவசியம் என்றும், அக்கிரமக்காரர்களுக்கு நஷ்டமே இதன்மூலம் அதிகரிக்கும் என்றும் தெளிவு படுத்துகின்றன.

இன்னும் 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2 இந்த இறை வசனங்கள் அனைத்தும் குர்ஆன் தெளிவானது என்பதை பறைசாற்றுகின்றன. இப்போதைய மவ்லவிகள் சொல்வதுபோல் குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்ள முடியாது. பல அர்த்தங்கள் இருக்கின்றன என்ற வாதங்களுக்கு ஆதாரமாக குர்ஆனில் ஒரே ஒரு வசனத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு வசனத்தையும் இது வரை எந்த மவ்லவியும் எடுத்துக் காட்டியதாகவும் தெரியவில்லை.

ஜ.உ.சபையினரால் 1987ல் வெளியிடப்பட்ட ஷரஅத் மலரில் 4:83ம் வசனத்தை ஆதாரமாகக் காட்டி இந்த வசனத்தின் அடிப்படையில் கற்றறிந்த அறிஞர்கள் குர்ஆனிலிருந்து யூகம் செய்து சொல்வார்கள் என்று கட்டுரை வரைந்திருந்தார்கள். நாம் முன்னமே, அவர்களின் கூற்று முற்றிலும் தவறு என்பதற்கு ஆதாரங்களை அந்நஜாத்தில் எடுத்துக் கொடுத்திருந்தோம். அவை வருமாறு.

குர்ஆனைப் புரட்டுவது யார்? குழப்பம் விளைவிப்பது யார்? (அந்நஜாத். ஏப். 87)
திருச்சியில் நடைபெற்ற ஜ.உ.ச. மாநாட்டில் விஷேசமாக வெளியிடப்பட்ட “ஷரீஅத்” மலர் 50ம் பககத்தில் “முஜ்தஹிதும் அவர் தம் தகுதிகளும் என்ற தலைப்பில் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபி கல்லூரிப் பேராசிரியர்(?) ஒருவர் எழுதிய கட்டுரையில் 4:83 குர்ஆன் வசனத்திற்கு கொடுத்துள்ள மொழி பெயர்ப்பைக் கீழே அப்படியே கொடுத்துள்ளோம். சகோதரர்களே நீங்களே மற்ற மொழிபெயர்ப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து குர்ஆனைப் புரட்டுவது யார்? குழப்பவாதிகள் யார் என்ற முடிவுக்கு வாருங்கள்.

“பயம் அல்லது பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஏதாவதொரு விஷயம் அவர்களிடத்தில் வருமேயானால் அதை அவர்கள் பிரபல்யம் ஆக்கி விடுகிறார்கள். (அவ்வாறில்லாமல்) அவ்விஷயத்தை அல்லாஹ்வுடைய ரசூல் இன்னும் (அவர்கள் மார்க்க சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனிக்கக் கூடிய) ஆலிம்கள், ஃபகீஹ்களிடம் ஒப்படைத்து விடுவார்களானால் அதை ஆராய்ந்து முடிவு செய்யக்கூடிய(அ)வர்கள் அறிந்து கொள்வார்கள். (4:83)

இது தக்லீதை நியாயப்படுத்துவதற்காக தற்போது போலிகள் செய்யும் அர்த்தம். இதன் உண்மையான அர்த்தம் என்னவென்று ஏனைய தமிழ் மொழி பெயர்ப்புகளில் உள்ள விளக்கத்தைக் கீழே தருகிறோம். இரண்டையும் ஒப்பிட்டு குர்ஆனுடன் விளையாடுபவர் யார்? என்பதை மக்களே இனம் கண்டுகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதம் ட்ரஸ்ட் வெளியீடு தப்ஸீர் அன்வாறுல் குர்ஆன் ஆசிரியர் : மெளலவி ஹாபிஸ், சி.னி. அப்துர்ரஹ்மான், “ஸுரத்துன்னிஸா” தமிழ் தப்ஸீர், பக்கம் 150.

83, மேலும், அவர்களுக்கு (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய செய்தி வந்தால், அதனை (உடனேயே) அம்பலப்படுத்தி விடுகிறார்கள். (இப்படிச் செய்யாமல்) அவர்கள் அ(வ்விஷயத்)தை அல்லாஹ்வின் தூதரிடமும் அவர்களில் விஷய ஞானமுள்ளவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அ(வ்விஷயத்)தை யூகித்து உணர்பவர்கள் அதனை(நன்கு) தெரிந்து (உறுதியான ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். (விசுவாசிகளே!) உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களில்) சொற்பமானவர்களைத் தவிர (நீங்கள் எல்லோரும்) ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள்.

இறக்கப்பட்ட வரலாறு:
நபி(ஸல்) அவர்கள் சில போர்களுக்குப் படைகளை அனுப்புவார்கள். அப்படைகள் போரில் வெற்றியோ, தோல்வியோ அடைந்தால் அவற்றைப் பற்றிய விபரததை நபி(ஸல்) அவர்கள் அறிவிக்கும் முன்னரே நயவஞ்சகர்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பிவிடுவர். உண்மை விசுவாசிகளின் உள்ளங்களை பலவீனப்படுத்துவதுதான் இவ்வாறு அவர்கள் செய்ததின் நோக்கம். அவர்களின் இக்கேவல நிலையை உண்மை விசுவாசிகளுக்குத் தெரிவிப்பதுதான் இந்த வசனம் இறக்கப்பட்டதன் நோக்கமாகும்.

இ.யூ.மு.லீக், தமிழ்நாடு தலைவரின் தந்தை மெளவி ஆ.கா. அப்துல்ஹமீது பாகவி அவர்களின் தர்ஜுமதுல் குர்ஆன் பக்கம் 108.

பயத்தையோ அல்லது (பொதுஜனப்) பாதுகாப்பையோ, பற்றிய யாதொரு செய்தி அவர்களுக்கு எட்டினால், (உடனே) அவர்கள் அதனை (வெளியில்) பிரஸ்தா(பிக்க ஆரம்)பித்து விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களுடைய அதிகாரிகளிடமும் (மட்டும்) தெரிவித்தால், அதிலிருந்து ஊகிக்கக் கூடிய அவர்கள், (அதன்) உண்மையை நன்கறிந்து (தக்க நடவடிக்கைகளை எடுத்துக்) கொள்வார்கள். (விசுவாசிகளே!) அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்திருக்கில் (உங்களில்) சிலரைத் தவிர நீங்கள் யாவரும் ஷைத்தானையே பின்பற்றி இருந்திருப்பீர்கள். (அல்குர்ஆன் 4:83)

முஹம்மது ஜான்ட்ரஸ்ட் வெளியீடு திருகுர்ஆன் மூலமும் தமிழ் உரையும் பக்கம் 135.
மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால், உடனே அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதரிடமோ அல்லது அவர்களில் நின்றுமுள்ள அதிகாரிகளிடமோ தெரிவித்தால், அவர்களில் இருந்து ஊகித்து அறியக்கூடியவர்கள், அதை நன்கு விசாரித்தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். அல்லாஹ்வுடைய கிருபையும், அருளும் உங்கள் மீதில்லாதிருந்தால், உங்களில் சிலரைத் தவிர மற்றவர்கள் ஷைத்தானையே பின்பற்றியிருப்பீர்கள். (அல்குர்ஆன் 4:83)

மேற்கூறிய மூன்று தமிழ் மொழி பெயர்ப்புகளும் என்ன கருத்தைத் தெரிவிக்கின்றன? இப்போது புதிய குழப்பவாதிகளாக மாறியுள்ள போலி முல்லாக்களின் மொழி பெயர்ப்பு என்ன கருத்தை உணர்த்துகின்றது என்பதை நீங்களே உணர்வீர்கள்!

முஸ்லிம்களால் குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாது. ஹதீதுகளை விளங்கிக் கொள்ள முடியாது என்று இந்த மவ்லவிகள் ஏன் வரிந்துகட்டிக் கொண்டு போராடுகிறார்கள்? இதை நாம் சிந்திக்கும்போது ஓர் உண்மை பளிச்சென்று தெரிகின்றது. ஒரு வியாபாரி தான், பொருட்களை எங்கிருந்து கொள்முதல் செய்து கொடுக்கிறோம் என்பதைத் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து மறைக்கவே முற்படுவார். காரணம், வாடிக்கையாளர்களுக்கு அந்த இடம் தெரிந்துவிட்டால், இந்த வியாபாரியின் தயவு தேவை இல்லாமல் போய்விடும். வியாபாரி தனது வாடிக்கையாளர்களை இழந்து நஷ்டமடைவார். ஆகவே, அவர் வியாபார இரகசியத்தை மறைப்பதில் நியாயம் இருக்கிறது. மார்க்கமும் இதற்கு அனுமதி அளிக்கிறது. காரணம், அனைவரும் வியாபாரிகளாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆக இந்த வியாபாரம் கூடும். ஆனால் நமது மவ்லவிகள் இதே அடிப்படையில் மார்க்கத்தையும் வியாபாரமாக்குகிறார்கள்.

மவ்லவிகள் இப்படி அடிக்கடி சொல்லி வருவதை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். அதாவது, “வியாதி வந்து விட்டால் தலை சிறந்த டாக்டரைப் பார்க்கச் செல்லுகிறோம். கோர்ட்டில் வழக்கு என்றால் கெட்டிக்கார வக்கீலைப் பார்க்கச் செல்லுகிறோம். கடிகார ரிப்பேருக்கு நல்ல கடிகார ரிப்பேரிடம் செல்லுகிறோம். இதேபோல் மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள மவ்லவிகளிடம் தான் வரவேண்டும். வேறு யாரிடமும் செல்லக்கூடாது” என்று, மவ்லவி அல்லாதவர்கள் மார்க்கத்தைப் பற்றி பேசுவதைப் பெருங்குற்றம் போல மக்கள் முன் எடுத்து வைக்கிறார்கள். மேல் எழுந்தவாரியாகப் பார்ப்பவர்களுக்கு இவர்களின் இந்தப் பேச்சு நியாயமாகவே படும். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இவர்களின் இந்தப் பேச்சு குர்ஆன், ஹதீதுக்கு எந்த அளவு முரணானது என்பதுபுலப்படும். அவர்களின் இந்தக் கூற்றுப்படி மற்ற வியாபாரப் பொருட்களைப் போல, மார்க்கமும் ஒரு வியாபாரப் பொருளாக இவர்களின் பார்வையில் இருக்கிறது.

மார்க்கத்தை உங்களுக்குப் போதிப்பதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரிய கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது” என்று தெள்ளத் தெளிவாக நபிமார்கள் கூறியதை குர்ஆனில் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. (25:57, 26:109,127,145,164,180) மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கி வயிறு வளர்ப்பவர்களைக் கண்டித்துப் பல ஹதீதுகளைப் பார்க்க முடிகின்றது. இந்த மவ்லவி இனத்திற்கு இந்த குர்ஆன் வசனங்களோ, ஹதீதுகளோ கண்ணில் படுவதில்லை. அவர்களின் வயிற்றுப் பிரச்சனைதான் அவர்கள் கண் முன்னால் நிற்கிறது. நிரந்தரமான மறுமை வாழ்க்கையை விட அற்பமான இவ்வுலக வாழ்க்கையையே அவர்கள் பெரிதாக எண்ணுகிறார்கள். அதன் காரணமாக இப்படிப்பட்ட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகிறார்கள்.

அனைவரும் டாக்டராகவோ, வக்கீலாகவோ, கடிகார ரிப்பேராகவோ ஆக வேண்டியதில்லை. ஒரு சிலர் இருந்தால் போதும், ஆனால், முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வோர் அனைவரும் மார்க்கத்தை அறிந்தவர்களாக இருப்பது அனைவர்மீதும் கண்டிப்பான கடமையாக இருக்கிறது. மார்க்க விஷயங்களில் ஒரு சாரார் இன்னொரு சாராரை சார்ந்து இருப்பதையோ, நம்பிச் செயல்படுவதையோ,

“உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்; அல்லாஹ் அல்லாதவர்களை உங்கள் பாதுகாவர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்”. உங்களில் சொற்பமானவர்களே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (7:3)

என்ற குர்ஆன் வசனம் தெளிவாகத் தடைசெய்கிறது. அனைவரும் குர்ஆனையும், ஹçதீதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையிலேயே அவை அமைந்திருக்கின்றன. இது நமது அபிப்பிராயமல்ல. குர்ஆனும், ஹதீதும் தெளிவாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வி­யமாகும்.

குர்ஆன் கூறுகிறது:
“அவன்தான், எழுத்தறிவில்லாத மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 62:2)

ஹதீஸ்கள்:
வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள்”
(அறிவிப்பவர்: இர்பான் இப்னு ஸாரியா நூல்: இப்னுமாஜ்ஜா)

குர்ஆனும், ஹதீதும் இவ்வளவு தெளிவாக இருந்தும் நொண்டிச் சாக்குகள் சொல்லி, மக்களை குர்ஆனையும், ஹதீதையும் விட்டுத் திசை திருப்புபவர்கள் நிச்சயமாக சுயநலக்காரர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமுண்டோ?

62:2 ஆயத்திலும், அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத மக்களாக இருந்தாலும், அரபி பேசும் மக்களாக இருந்தார்கள். ஆகவே, அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்று காரணம் சொல்வார்கள். அப்படியானால் எழுதப் படிக்கத் தெரியாத மக்களுக்காக அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி..” என்று அல்லாஹ் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதிலிருந்தே எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதையும் (அதற்காக சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வை நாமாக உண்டாக்கிக் கொள்ள அனுமதி இல்லை) அதே சமயம் எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கும் சேர்த்துத்தான் குறிப்பாக குர்ஆன் இறக்கப்பட்டது என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

அடுத்து வரும் 62:3 வசனம் இதனை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.
“இவர்களுக்காகவும், இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும் (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் யாவரையும் மிகைத்தவன், ஞானமிக்கவன். (62:3)

62:3 ஆயத்திற்கு ஹதீது விளக்கம், அபூஹுரைரா(ரழி) கூறுவதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது.
“நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு அமர்ந்திருக்கும் போது சூரத்துல் ஜும்ஆ அவர்களுக்கு இறங்கியது. அப்போது “இவர்களுடன் சேராத(பிற்காலத்த)வர்களுக்காகவும்” என்று கூறப்பட்டிருக்கிறதே அவர்கள் யார்? என்று நபிதோழர்கள் கேட்க, அதற்கவர்கள் மும்முறை கேட்கும்வரை மெளனமாக இருந்துவிட்டு, எங்களிடையே அமர்ந்திருந்த ஸல்மானுல் பார்ஸி(ரழி) அவர்கள் மீது தமது கையை வைத்துக் காட்டி ஈமான் என்பது ஸுரையா என்னும் நட்சத்திரக் கூட்டத்தின் தூரத்திலிருப்பினும் இவருடைய ஆட்கள் அதை அடைந்தே தீருவர் என்று கூறினார்கள்.” (புகாரீ, முஸ்லிம், திர்மிதி, நஸயி) மேற்கூறிய திருவசனத்தில் கூறப்படும் “பிற்காலத்தில் மற்றவர்கள்” என்பதற்கு அரபியர் அல்லாத வேறு மொழிகள் பேசுபவர்களென்றும், நபி(ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்து மொழி பேசக்கூடிய மக்களும் இதில் அடங்குவர் என்றும் முஜாஹித்(ரஹ்) கூறுகிறார்கள். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கதீர்)

ஆக குர்ஆனை எல்லோரும் விளங்கிக் கொள்ள முடியாது” என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது மேல்கண்ட விளக்கங்களிலிருந்து தெளிவாகின்றது. சிலர் சுய ஆதாயத்திற்காக அவ்வாறு கூறுகின்றனர் என்பதும் புரிகின்றது.

Previous post:

Next post: