வெற்றி பார்முலா…
– M. பஷீர் அஹமது, தென்காசி
எல்லா புகழும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் எல்லாம் வல்ல ஏக இறை வனாம் அல்லாஹ்விற்கே முழு மனித குலம் வெற்றி பெற உள்ள ஒரே மார்க்கமான இஸ் லாமை உலகுக்கு கொண்டுவந்த உத்தம நபி முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் உத்தம தோழர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மீதும் இன்னும் நம் அனைவர் மீதும் இறைவனின் அருளும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக என்று வேண்டி இதை தொடங்குகிறேன்.
நாம் ஒவ்வொருவரும் இன்று உலகில் வேண்டுவது போதுமான செல்வம், பாதுகாப்பு, கண்ணியம், அமைதியான வாழ்க்கை! இன்று அது நமக்கு எட்டாக்கனியாக இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொரு வரும் உணர்ந்தே இருக்கிறோம். எங்கு பார்த்தாலும் பற்றாக்குறை வேலை யின்மை, பித்தலாட்டம், கொள்ளை, கொலை, தற்கொலை, போராட்டம், ஜாதிக் கொடுமை, கலவரம், கடமையை செய்ய லஞ்சம், கடமையை செய்யாமலிருக்க லஞ்சம். அதிகாரி, மேலதிகாரி, மேல் மேல் அதிகாரி என்று யாரை அணுகினாலும் சாமானியனுக்கு கதவு அடைக்கப்படுகிறது. சரி, நீதிமன்றம் செல்லலாம் என்றால் அங் கேயும் நீதி கிடைக்கும் என்ற எந்த உத்திர வாதமும் இல்லை. பெண்களின் நிலைமையோ இன்னும் பயங்கரம். மூன்று வயது இல்லையில்லை இரண்டு வயது குழந்தை முதல் எண்பது வயது மூதாட்டி வரை பாலி யல் பலாத்காரத்திற்கு ஆளாகும் கொடுமை இன்று நாம் வாழும் வாழ்க்கையை விவரிக்க வேண்டுமானால் இது ஒரு குறைந்தபட்ச நரகம் என்றுதான் சொல்லவேண்டும்.
சரி, இவைகளை சரிசெய்ய நம்மிடம் ஏதேனும் வழிவகைகள் உள்ளதா? இருந்தால் எந்த விஞ்ஞானியாவது சமூகவியலா ளராவது, தலைவராவது அதை சொல்ல மாட்டார்களா? அது கிடைத்தால் நம் அத்தனை துன்பங்களும் தீர்ந்து விடுமே! வழி வகைகள் இருக்கிறது சகோதரர்களே! என்ன ஆச்சரியமடைந்துவிட்டீர்களா? ஆம், உண்மையிலேயே வழிவகைகள் இருக்கிறது. அந்த வழி ஒரு சமூகத்திடம் பரீட்சித்து பார்க்கப்பட்டு வெற்றிகரமான தீர்வு என்று நிரூபிக்கப்பட்ட வழி. அந்த வெற்றி பார்முலாவை கி.பி. 611ம் ஆண்டு முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அரேபியா தீபகற்பத்தில் குறிப்பாக மக்கா நகரத்தில் அறிமுகம் செய்தார்கள். இதை நாம் சொல் லும்போது இது பொய், கற்பனை அல்லது புழுகு என்று எண்ணிவீடாதிர்கள். இது முழுக்க முழுக்க பதிவு செய்யப்பட்ட சரித்திரமாக உள்ளது.அதாவது நம் நாடு 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது எப்படி சரித்திரமாக உள்ளதோ அதேபோன்று ஒரு சரித்திரப் பதிவு.
அந்த அரேபிய சமுதாயம் ஆரம்பத்தில் எப்படிப்பட்ட சமூகமாக இருந்தது. நாம் முன்பே நம் சமுதாயத்தை பற்றி விவரித்ததை விட பல மடங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்தது. பசி, பஞ்சம், வறுமை, வட்டி, குழுச்சண்டை, விபச்சாரம், குடி, கொள்ளை, கொலை என்று அனாச்சாரத்தின் உச்சியில் இருந்து கொண்டு மக்கள் இழிவான வாழ்க்கை வாழ்ந்தார்கள். நமக்காவது இன்று அரசாங்கம் என்று ஒன்று பெயர் அளவுக்காவது இருக்கிறது. அவர்க ளுக்கு அது கூட இல்லை. சுத்தமான காட் டாட்சி இந்த நிலப்பரப்புக்கு இடது புறத்திலும் வலது புறத்திலும் இரு வல்லரசுகள் இருந்தன. ரோமானிய மற்றும் பாரசீக பேரரசுகள் தான் அவைகள். இந்த இரண்டு வல்லரசுகளும் இந்த அரேபிய தீபகற்பத்தை தங்களுடைய ஆட்சிக்கு கீழ் கொண்டுவர எண்ணியது கூட இல்லை. அங்கே ஏதேனும் அரசுகளோ, வளங்களோ இருந்தால் தானே அவர்களுக்கு அவ்வாறெல்லாம் எண்ணத் தோன்றும். மனிதர்களோ, நாடோடிகள், வம்பர்கள் எதற்கும் லாயக்கற்றவர்கள். இவர்களை நம் அரசுடன் இணைத்து என்ன பயன்? என்று விட்டுவிட்டார்கள்.
இப்படிப்பட்ட சமூகத்தில்தான் முஹம்மது(ஸல்) அவர்கள் அந்த ஒரு வரி வெற்றி பார்முலாவை முன் வைத்து பிரச் சாரத்தை ஆரம்பித்தார்கள். மேலும் சரித்திரத்தை தொடருமுன் அந்த ஒரு வரி பார்முலா என்ன என்பதை இங்கு சொல்லி ஆக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் அந்த சமூகத்தில் நிலவிய பல்வேறு அநீதி அக்கிரமங்களுக்கு தனித்தனியான தீர்வுகளை சொல்லவில்லை. எல்லா நோய்க்கும் ஒரே மருந்து! அதாவது மனிதனையும் மற்ற உயிரற்ற உயிருள்ள சகலவற்றையும் படைத்தவன் ஒரே இறைவன்தான்; அவன் அவைகளை நோக்கமின்றி வீணாக படைக்கவில்லை; அவன் படைத்தது போன்றே ஒருநாள் அவைகளை அழித்து பின் பகுத்தறிவு கொடுக்கப்பட்ட மனிதனை மட்டும் உயிர்ப்பித்து எழுப்பி விசாரணை செய்து முடிவில்லா சொர்க்கத் தையோ அல்லது நரகத்தையோ கூலியாக கொடுக்க உள்ளான்; ஆகவே மனிதர்களே அந்த கேள்வி கணக்கிற்கு மரணம் வருமுன் தயாராகி கொள்ளுங்கள் என்றார். இது தனக்கு வந்த இறை செய்தி என்றும் சொன்னார். தனக்கு ஆதாரமாக தனக்கு அருளப்பட்ட குர்ஆன் என்னும் வேதத்தையே காண்பித்தார். உடனேயே அதை ஏற்றுக் கொள் வார்களா என்ன! எதிர்த்தார்கள், கேள்வி கேட்டார்கள், நாம் இறந்து நம் உடல் மண்ணில் மக்கி மண்ணாகி போனாலும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுமா? அது சாத்தியமே இல்லை என்றார்கள்.
ஒரு சிறு கூட்டம் அவர் சொன்ன பார் முலாவை ஏற்றுக் கொண்டாலும் பெரும் பான்மையானவர்களும் செல்வாக்கு மிக்கவர்களும் எதிர்த்தார்கள். கொலை மிரட்டல் விடுத்தார்கள், ஊரை விட்டே துரத்தி னார்கள் இருந்தும் அவர்கள் வெறி தீர்ந்த பாடில்லை! அடைக்கலம் தேடி மதீனா நகர் சென்றாலும் அங்கும் அவருடன் போர் செய்து அவரையும் அவரை சார்ந்தவர் களையும் கொன்றொழிக்க நினைத்தார்கள். அந்த மாமனிதரும் அவரை சார்ந்த அந்த சிறு கூட்டமும் காட்டிய பொறுமையும், வீரமும், தியாகமும் இறுதியில் வென்றது, இருபத்தி ஐந்து ஆண்டுகளில் அந்த வெற்றி பார்முலாவை புரிந்து கொண்டார்கள். அந்த மக்கள் தங்களுடைய தாரகமந்திரமாக அதை ஏற்றுக்கொண்டார்கள். அந்த பார்முலா பலன் தர ஆரம்பித்தது புதிய சமு தாயம் பிறந்தது அது என்னவாக இருந்தது?
அந்த வெற்றி பார்முலாவின் பயனாக அரேபிய தீபகற்பம் மட்டுமல்லாது அதை யும் தாண்டி ரோமானிய மற்றும் பாரசீக சாம்ராஜ்யங்களின் கணிசமான பகுதிகள் இந்த அரேபியர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதுவும் மிக குறுகிய காலகட்டத்தில் அதாவது சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகளில் அங்கு ஆள்பவர்கள் இருந்தார்கள்; அரண்மனையும், பாதுகாவலர்களும் இல்லை! ஆள்பவர்கள் ஆடம்பரம் சிறிதும் இல்லாமல் மக்களுக்கு பணி செய்து கடந்தார்கள். நாடாள்பவர்களிடம் மாற்றுத் துணி கூட இல்லை என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை!
சுமார் 1500 கிலோமீட்டர் தூரமுள்ள பிரயாணத்தை ஒரு கன்னிப்பெண் தனியாக முழு நகை அலங்காரத்துடன் எந்தவித பய மும் இல்லாமல் மேற்கொள்ள முடிந்தது, சர்வாதிகாரம் ஒழிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, வட்டியும் வறுமையும் ஒழிந்தது, குடியும் விபச்சாரமும், குழுச்சண்டையும் பழங்கதையானது, பெண்களுக்கு விடுதலை யும் கண்ணியமும் கிடைத்தது, கல்வி, கலைகள், விஞ்ஞானம் என்று உலகமே வியக்கும் அளவுக்கு அந்த அரேபியா சமுதாயம் உலகிற்கே முன்னோடியானது இருண்ட ஐரோப்பாவை தன் அற ஒளியால் விழிக்கச் செய்தது. ஆப்ரிக்காவில் நிற வெறி இல்லாமல் அரேபியர்களையும், கறுப்பர்களையும் சகோதரர்களாக்கியது தனது இருபுறமும் அமைந்த இரு வல்லரசுகளை ஒருசேர எதிர் கொண்டு வெற்றிவாகை சூடி தனது ஆட்சி யின் கீழ் அந்த மக்களை சுதந்திரக் காற்றை சுவாசிக்க செய்தது.
சிதறுண்டு கிடந்த இந்தியாவை கட்டி எழுப்பி 14, 15வது நூற்றாண்டுகளில் உலக வல்லரசாக மாற்றியது இந்தியாவில் நில விய, இன்றும் நிலவி வரும் ஜாதி கொடு மைக்கு ஒரு மாற்றாக மனிதனை மனிதனாக மதிக்கும் சமூக நீதி பாதையை காட்டியது சுருக்கமாக சொன்னால் ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் உள்ள சுமார் நூறு நாடுகளில் உள்ள மக்களுக்கு இன்றளவும் சமூக, அரசியல் வாழ்வின் அடிப்படை நீரோட்டமாக அமைந்துள் ளது. ஆனால் இந்த 14 நூற்றாண்டுகளில் அது பல சோதனைகளுக்கு உள்ளானது, சதிகளுக்கு ஆளானது, ஆட்சியாளர்களாலும், புல்லுருவிகளாலும், பதவிப்பித்தர்களாலும் காயப்படுத்தப்பட்டது. தத்துவ இடைசெருகல்களுக்கு ஆளாக்கப்பட்டு மக்கள் இந்த வெற்றி பார்முலாவை விட்டு திசை திருப்பப்பட்டார்கள் என்பதெல்லாம் தனிக்கதை; இருந்தும் கடந்த 1400 ஆண்டு களாக இந்த பார்முலா அதை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு அளப்பரிய நன்மை களை தந்து கொண்டுதான் இருக்கிறது.
நபியவர்களின் கடைசி 23 வருட வாழ்வின் சாராம்சமும் அவர் கொண்டு வந்த இறை செய்தியான (நெறிநூல்) குர்ஆனின் சாராம்சமும் இந்த ஒரு வரி வெற்றி பார்முலாதான். இந்த பார்முலா, ஆட்சி செய்கிறவர்களையும், அதிகாரிகளையும் ஆணவம் கொள்ளுதல், பெருமையடித்தல், வரம்பு மீறுதல் போன்ற அநியாயங்களின் பக்கம் நெருங்க விடாமல் கடிவாளமிடுகிறது. அற்பமான உலக வாழ்வை விட நிலையான மறுமை வாழ்வே சிறந்தது என்ற உண்மை படித்தவனுக்கும், பாமரனுக்கும் புரிந்தது. இறைவனிடம் எப்படியாவது விசாரணைக்கு பின் உள்ள தண்டனைகளில் இருந்து தப்பிக்க தன் நிர்வாகத்தின் கீழ் வாழும் மக்களை மனிதாபிமானத்துடனும், நேர்மையுடனும் நடத்த அது கட்டாயப்படுத்தியது.
விசாரணையில் வெற்றி பெற்றால் கிடைக்கும் சுவர்க்கலோக சன்மானங்கள் அவர்களை அதையே தம் வாழ்நாள் நோக்கமாக்கி கொள்ள வைத்தது. தோல்வியடைந்தால் கிடைக்கும் நரக தண்டனை அவர்களை நடுநடுங்க வைத்து, பொறுப்புள்ள மனிதனாக நடக்க தூண்டியது. பொதுமக்கள் தன்மானத்துடன் சமூகத்தில் உள்ள பல்வேறு துறைகளிலும் சம வாய்ப்பு பெற்றவர்களாக ஆகி எளிதாக தேவைகள் நிறைவேறியது. மக்கள் நிம்மதியுடன் வாழ தலைப்பட்டனர். தேவைகள் எளிதாக நிறைவேறி விடுவதால் ஓய்வு நேரங்களில் இந்த வாழ்க்கை திட்டம் மற்றவர்களிடம் போய் சேர உழைப்பவர்களாகவும் அவர்களை மாற்றிவிட்டது. சுருக்கமாக சொன்னால் இந்த ஒருவரி பார்முலாவை உறுதியுடன் பின்பற்றும் தனி மனிதனோ, சமுதாயமோ வெற்றியடை வது நிச்சயம். கடந்த 14 நூற்றாண்டுகளில் மனித சமூகம் எத்தனையோ சிறிய பெரிய சரித்திர நிகழ்வுகளை பார்த்திருந்தாலும் இந்த ஒருவரி பார்முலா ஏற்படுத்திய புரட்சிகர மாற்றத்தை போல வேறதையும் சுட்டிக்காட்ட எந்த வரலாற்று ஆசிரியர்களாலும் முடியாது.
இனி வெற்றியா, வீழ்ச்சியா முடிவு நம் கையில்!