குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 ஜூன்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 5

அபூ அப்தில்லாஹ்

முல்லாக்களின் வாதம் :

மார்க்க விஷயத்தில் அரபி மொழி கற்று அதில் தேர்வு பெற்ற பண்டிதர்களுக்கு யூகித்தறிந்து இலக்கண இலக்கியத்தில் யூகம் செய்து ஒன்றை சொல்ல அனுமதி இல்லை என்ற நமது கருத்தை மெளலவிகள் மறுக்கிறார்கள்.

குர்ஆனின் 4:83 வசனத்தில், தகுதி பெற்றவர்கள் மார்க்கக் காரியங்களில் யூகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கி றதே! என்று அந்த வசனத்தில் வரும் “இஸ்தின்பாத்” என்ற ஒரு வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு வாதிடுகிறார்கள். குர்ஆன் முழுவதையும் ஆய்ந்து நோக்கியும், 4:83ல் உள்ள இந்த “இஸ்தின்பாத்” என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு ஆதாரம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்த “இஸ்தின்பாத்” மார்க்க விஷயத்தில் அல்ல, பயம், பீதி, பாதுகாப்பு போன்ற உலகக் காரியங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் மட்டுமே தகுதியுடையவர்கள் யூகித்தறிந்து சொல்லும் அனுமதியை வழங்கியுள்ளது என்பதை அறியத் தவறி விடுகிறார்கள். அந்த வசனத்தை முழுமையாகத் தருகிறோம். நீங்களே பார்த்து நடுநிலையான ஒரு முடிவுக்கு வர அன்புடன் வேண்டுகிறோம்.

“மேலும் பீதியோ, பாதுகாப்பைப் பற்றிய செய்தியோ அவர்களுக்கு எட்டுமானால் உடனே அவர்கள் அதைப் பரப்பி விடுகிறார்கள். அவர்கள் அதை அல்லாஹ்வின் தூதரிடமோ, அல்லது அவர்களிடமோ, தெரிவித்தால், அவர்களில் அதை யூகித்து அறியக் கூடியவர்கள், அதை நன்கு விசாரித் தறிந்து (தக்க ஏற்பாடுகளைச் செய்து) கொள்வார்கள். (4:83)

இந்த வசனம் உலகில் ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தப்பட்ட விஷயத்தை யூகிப்பது பற்றியே குறிக்கிறது. மறுமையில் நாம் அனுபவிக்கப்போகும் நன்மை தீமை பற்றிய வி­யத்தை யூகித்து அறிவது அல்ல என்பதைத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகின்றது. உலகில் ஏற்படும் நல்லவை அல்லது தீயவை சம்பந்தமாக ஓர் அறிஞர் யூகம் செய்து சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்று பகிரங்கமாக தெரிய வருவதற்கு முன்பே யூகம் செய்து சொல்லப்பட்டாலும், பின்னால் அந்த யூகம் சரியானது அல்லது தவறானது என்பதைத் திட்டவட்டமாக அனைவரும் அறிந்து கொள்கின்றனர். மரணத்திற்குப் பின் மறுமையில் அனுபவிக்கும் ஒன்றாக அது இல்லை.

எனவே யூகம் செய்து சொன்னவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், அந்த யூகம் தவறு என்று தெரிந்தவுடன், பெரிய மனிதர் சொன்னார் என்பதற்காக, அந்தத் தவறான யூகத்தைத் தொடர்ந்து செய்து யாரும் நஷ்டமடையத் தயாராக மாட்டார்கள். மனிதர்களிடையே சிறப்பான பல அம்சங்களைப் பெற்ற நபி (ஸல்) அவர்களின் யூகமே, தவறு என்று தெரிந்த பின் நபித்தோழர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

நபி(ஸல்) அவர்கள் மதீனா சென்றடைந்தவுடன் அங்கு அன்சாரிகள் செய்து கொண் டிருந்த அயல் மகரந்தச் சேர்க்கையை நபி (ஸல்) அவர்கள் யூகம் செய்து வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அன்சாரிகளும் நபி(ஸல்) அவர்களின் யூகத்தை ஏற்று அந்தச் செயலை விட்டு விட்டார்கள். ஆனால் அந்த வருட அறுவடையிலேயே அந்த யூகம் தவறு என்பதை கண்கூடாகக் கண்டு கொண்டார்கள். தவறு என்று தெரிந்த பின் நபி(ஸல்) அவர்கள் யூகம் செய்து சொன்ன விஷயமாயிற்றே என்று தொடர்ந்து செய்ய அவர்கள் தயாராக இல்லை. நபி(ஸல்) அவர்களிடம் வந்து முறையிடுகிறார்கள். நபி(ஸல்) அவர்களும்,

“மார்க்க விஷயத்தில் நான் ஒன்றை உத்திரவிடும்போது, அதை ஏற்று நடங்கள். என் அபிப்பிராயத்தில் நான் ஒன்றைச் சொல்வேனேயானால் நானும் மனிதனே!” (முஸ்லிம்)

என்று கூறி, மனித யூகத்திற்கு, அது தன்னுடைய யூகமாக இருந்தாலும், மார்க்கத் தில் இடமில்லை என்று தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இங்கு மனித யூகம் நஷ்டத்தை தருகின்றது என்று கண்டுகொண்டவுடன் நபி(ஸல்) அவர்களின் யூகமே கைவிடப்படுகின்றது என்பதை நாம் பார்க்கும்போது வேறு யாரு டைய யூகத்தையும் அது தவறு என்று தெரிந்து கொண்டு யாரும் எடுத்து நடக்கப் போவதில்லை என்பது நமக்குத் தெளி வாகவே தெரிகின்றது.

எனவே உலகக் காரியங்களில் யார் யூகம் செய்து சொன்னாலும் அதைப் பற்றி நமக்கு அக்கறை இல்லை. அது மார்க்கமும் இல்லை. ஆனால் நமது கவலை எல்லாம் 4:83 குர்ஆன் வசனத்தை ஆதாரமாகக் காட்டி மார்க்கக் காரியங்களில் யூகம் செய்து சொல்வது மக்களை எவ்வளவு தூரம் வழிகேட்டில் இட்டுச் செல்கின்றது. அப்படி பகிரங்கமான வழிகேட்டில் இருந்தாலும், அவற்றின் நஷ்டத்தை இந்த உலகில் காணாது. நாளை மறுமையில் காணும் நிலை இருப்பதால் மக்கள் அப்படிப்பட்ட மூடக் காரியங்களை பக்தியோடு காலங் காலமாகச் செய்துவரும் துர்பாக்கிய நிலை உருவாகிவிடும் என்பதேயாகும்.

உதாரணமாக தலைவர்களின், பெரியவர் களின் யூக அடிப்படையில் பெரும்பான் மையோர் மிகவும் பக்தியோடு செய்து வரும் பாத்திஹாக்கள், மவ்லிதுகள், புரு(டா)தா, ஸலவாத்து நாரியா, இறந்தவர்களின் பெயரால் நடைபெறும் கத்தம், அவுலியாக்களின் சமாதிகளில் நடைபெறும் சடங்குகள், அவுலியாக்களின், நபிமார்களின் பொருட்டால் கேட்கப்படும் பிரார்த்தனைகள், தக்லீது (மத்ஹபுகள்), தரீக்காக்கள் (தஸவ்வுஃப்) இவை அனைத்தும் தெளிவாக குர்ஆனுக்கும், ஸஹீஹான ஹதீஃதுகளுக்கும் முற்றிலும் முரணாக இருக்கின்றன.

இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான, தங்களை முஸ்லிம்கள் என்று நம்பிக் கொண்டிருந்த குறைஷிகளைக் காஃபிர்கள் என்று அல்லாஹ் தீர்ப்பு வழங்கி இருக்கிறதற்குரிய தெளிவான காரணத்தை குர்ஆன் 18:102ம் வசனத்திலிருந்து 18:106 வசனம் வரை தெளிவுபடுத்துகின்றது. அந்த குறைஷிகள் இறந்து போன நபிமார்களையும், அவுலியாக்களையும் தங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும், இறைவனை நெருங்கச் செய்யும் இரட்சகர்களாக, பாதுகாவலர்களாகக் கருதிக் கொண்டு அவர்களை சிலை வடிவிலும், கபுரு வடிவிலும் வைத்துச் சடங்குகள் செய்ததே அவர்கள் காஃபிரானதற்குரிய காரணமாகும்.

இவ்வளவு தெளிவாக இறைவனின் அடியார்களைப் பற்றி (நபிமார்கள், அவுலியாக்கள்) திருமறை கூறிக் கொண்டிருக்க முஸ் லிம்கள் இன்று இறந்தவர்களின் பெயராலும், அவுலியாக்களின் பெயராலும் சடங்குகள் செய்து கொண்டிருப்பதின் காரணம், அவர்கள் இமாம்களாக, பெரியவர்களாக, தலைவர்களாக எண்ணிக் கொண்டிருப் பவர்களின் மனித யூகங்களை மார்க்கமாக்கியதேயாகும். ஆக இவர்கள் செய்யும் இந்தச் செயல்கள் அனைத்தும் இவர்களை நரகத் தில் கொண்டு சேர்க்கக்கூடியனவாக இருந் தும், அவற்றின் கெடுதிகளைக் கண்கூடாகக் காண முடியாமல் இருப்பதாலும், நாளை மறுமையிலேயே அவற்றின் கொடிய விளைவுகளை நரகில் காண வேண்டிய நிலை இருப்பதாலுமே இவற்றை பக்தியோடு காலங்காலமாகச் செய்து வருகின்றனர்.

இந்த உலகில் இப்படிப்பட்ட அனாச்சாரங்களை தங்கள் பெரியார்கள், தலைவர்கள் இவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைத்து மிகவும் பக்தியோடு செய்து வருகிறார்கள். நாளை இவர்கள் நரக நெருப்பில் போட்டு பொசுக்கப்படும்போது, நரக வேதனையை நேரடியாகப் பார்க்கும் போது என்ன சொல்லிக் கதறுவார்கள் என் பதையும் அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக எடுத்துச் சொல்கிறான்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே! அல்லாஹ்வுடைய தூதருக்கு வழிபட்டிருக்க வேண்டுமே!”

“எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் (ஸாதாத்துகளுக் கும்) எங்கள் பெரியவர்களுக்கும் (அகா பிரீன்களுக்கும்) வழிபட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டார்கள்”. “எங்கள் ரப்பே! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக; என்று கதறுவார்கள்”. (33:66,67,68)

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் குர்ஆனில் கூறி இருப்பதைப் புறக்கணித்து விட்டுத் தங்களின் ஸாதாத்துகள், அகாபிரீன்கள் பெயரில் பெரும் நம்பிக்கை வைத்து, அவர் களின் மனித யூகங்களைக் கொண்டு உண்டாக்கப்பட்டுள்ள கத்தம், பாத்திஹா, மவ்லிது, புருதா, ஸலவாத்து நாரியா,சமாதிச் சடங்குகள், தர்காக சடங்குகள், தக்லீது (மத்ஹபுகள்), தரீக்காக்கள் (தஸவ்வுஃப்) போன்ற காரியங்களில் மூழ்கி இருப்போர் சற்று நிதானமாகவே சிந்திப்பார்களாக. இங்கு இந்த உலகில் சிந்தித்து விளங்கி அவற்றை விட்டு தவ்பா செய்யத் தவறினால், நாளை கண்டிப்பாக நரகில் போய் அல்லாஹ் சொல்வது போல கதறத்தான் போகிறார்கள். நிச்சயமாக எந்த நபியும், எந்த வலியும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத் கொடுக்க நாம் துஆ செய்கிறோம். இந்த வி­யங்கள் கசப்பாக இருந்தாலும் எடுத் துச் சொல்வது, அவர்களின் ஹிதாயத்திற்காக துஆ செய்வது எங்கள் மீது கடமையாக இருக்கிறது.

4:83 வசனத்தின்படி மார்க்கப் பண்டிதர்கள் மார்க்க விஷயங்களில் யூகம் செய்து அறிவித்தவை இந்தச் சமுதாயத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது என்ப தைச் சற்று நிதானமாகவே சிந்தியுங்கள். மார்க்க விஷயங்களில் எந்த இமாமுக்கும், எந்த அல்லாமாவுக்கும் யூகம் செய்ய அனுமதி இல்லை என்பதை தெளிவாக உணருங்கள். தக்லீதையும், தஸவ்வுஃபையும் விட்டு தெளபா செய்து, அவை இரண்டைக் கொண்டும் மார்க்கத்தில் நுழைக்கப்பட்டுள்ள எல்லா சடங்கு, சம்பிரதாயங்களையும் விட்டுவிடுங்கள். அடுத்து முத்தஷா பிஹாத் வசனங்களைப் பற்றிப் பார்ப்போம்.

“ஆயாத்தும் முத்தஷாபிஹாத்” “ஆயாத்தும் முத்தஷாபிஹாத்” வசனங்கள் பற்றி அல்குர்ஆன் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது.

அவன் தான் (இந்)நெறிநூலை உம்மீது இறக்கினான். இதில் தீர்க்கமான (தெளி வான) வசனங்கள் இருக்கின்றன. இவை தான் இந்நெறிநூலின் அடிப்படையாகும். மேலும், எஞ்சியவை பல பொருள் பெறத்தக்கவை (தீர்க்கமற்றவை) யாகும். எவர்களுடைய உள்ளங்களில் கோணல் (வழிகேடு) இருக்கிறதோ அவர்கள், குழப்பங்களை நாடி, பல பொருள் வசனங்களின் முடிவுகளைத் தேடி, அவற்றைப் பின்பற்றுகின்றனர். ஆனால், இவற்றின் உண்மைக் கருத்துகளை (முடிவு) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியார். அறிவில் தேர்ந்தவர்களோ “நாங்கள் இவற்றில் (பூரணமாக) நம்பிக்கை கொண்டோம். இவை அனைத்துமே எங்கள் இரட்சகனிட மிருந்து வந்தவை தாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர வேறெவரும் நல்லுபதேசம் பெறமாட்டார்கள். (3:7)

இந்த 3:7 வசனத்திலிருந்து “முத்தஷா பிஹாத்” வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ் மட்டுமே அறிவான். வேறெவரும் அறியமுடியாது என்று தெளிவாக அறிய முடிகின்றது.

அல்குர்ஆனின் பல வசனங்களைத் தங்கள் இஷ்டத்திற்குப் புரட்டியுள்ள காதியானிகள் இந்த 3:7 வசனத்தையும் புரட்டி இருக்கிறார்கள். காதியானிகளின் மொழிப் பெயர்ப்புகளில் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை அல்லாஹ்வும் அறிவான். கல்வியறிவில் நிலையானவர்களும் அறிவார்கள்” என்று தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். (தற்போது பீ.ஜேயின் குர்ஆனிலும் இவ்வாறே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

கல்வியறிவில் சிறந்தவர்களோ, “இதனையும் நாங்கள் விசுவாசித்தோம் (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) யாவும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவை தாம்” என்று கூறுவார்கள் என்ற வசனத்திலுள்ள கல்வியறிவில் நிலையானவர்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்ற வசனத்தோடு இணைத்து அல்லாஹ்வும் அறிவான். கல்வி யறிவில் நிலையானவர்களும் அறிவார்கள் என்று தவறாக மொழிப் பெயர்த்து வைத்திருக்கிறார்கள். காரணம் இந்தத் தவறான விளக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் மிர்சா குலாமின் தவறான விளக்கங்களை நியாயப்படுத்த முடியும்.

இந்தக் காதியானிகளுக்கு வழி வகுத்துக் கொடுத்ததே இந்த முகல்லிது முல்லாக்கள் தான். முகல்லிது முல்லாக்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் குர்ஆன் வசனங்க ளுக்கு “தப்ஸீர்” என்ற பெயரில் அவர்கள் மனதில் வந்ததையயல்லாம் எழுதி வைக்கப்போய், அதே பாணியை இந்தக் காதியானிகளும் பின்பற்றி வழிகெட்டுச் செல்கிறார் கள். கேட்டால் முன்னோர்கள் செய்துள்ள மொழிபெயர்ப்பு, தப்ஸீர் அடிப்படையி லேயே செய்திருக்கிறோம் என்று சொல்லி சில தப்ஸீர்களின் பெயர்களைக் கொடுத்து நியாயப்படுத்துவார்கள்.

3:7 வசனத்தை நடுநிலையோடு வாசிப்பவர் எவரும், அந்த வசனத்தின் முழு சாராம் சத்தையும் இணைத்துப்பார்க்கும் போது முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருள்களை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்பதையும், மனதில் மாறுபாடு இருப்பவர்களே அவர்கள் இஷ்டத்திற்கு விளக்கங்கள் கொடுத்து அதைப் பின்பற்றுவார்கள் என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

முத்தஷாபிஹாத் வசனங்களின் உண் மைப் பொருளை கல்வியறிவில் நிலையான வர்களும் அறிந்து கொள்ள முடியும் என்பதற்கு இவர்கள் சொல்லும் விநோதமான காரணம், மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாததை அல்லாஹ் ஏன் இறக்கி வைக்க வேண்டும்? அவை குர்ஆனில் பதிவாகி மக்கள் ஏன் ஓதவேண்டும்? ஆராய வேண்டாமா? என்ற கருத்துப்பட வரும் வசனங்கள் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண் மைப் பொருள்களை எல்லாரும் விளங்க முடியாவிட்டாலும் கல்வியறிவில் நிலையானவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று வாதிடுகிறார்கள்.

இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் இதில் நியாயம் இருப்பதாகவே எண்ணுவார்கள். சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் உண்மைப் புலப்படும். அல்குர்ஆன் தெள்ளத்தெளிவானது. 3:7 வசனத்தை மீண்டும் நிதானமாக வாசித்துப் பாருங்கள். “விளக்கங்களைத் தேடிப் பின்பற்றுவார்கள்” என்ற பகுதியை ஆழ்ந்து நோக்குங்கள் முத்தஷாபிஹாத் வசனங்களை ஓதுவதையோ, அவற்றைப் பற்றி சிந்திப்பதையோ, விளங்க முற்படுவதையோ தடை செய்யப்படவில்லை. இதுதான் அதன் பொருள் என்று ஓர் உறுதியான முடிவுக்கு வந்து அதை பின்பற்றுவதையே தடை செய்யப்பட்டுள்ளது.

இப்போது பின்பற்ற முடியாத ஒன்றைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? விளங்கிக் கொள்ள முற்படவேண்டும்? என்ற ஐயத்தைக் கிளப்பலாம். அதற்கு 3:7 வசனமே விடை பகர்கின்றது. கல்வியறிவில் உறுதிப்பாடுடையவர்களோ “நாங்கள் பூரணமாக அதில் நம்பிக்கை கொள்கிறோம் அவை (முஹ்க்கமாத், முத்தஷாபிஹாத்) முழு வதுமே எங்கள் ரப்பிடமிருந்து வந்தவை தான்” என்று கூறுவர்.

அதாவது மனிதனது அறிவு சரிகாணும் எந்தக் காரியமாக இருந்தாலும், அதனை மனிதன் ஏற்றுக் கொள்ளத் தயங்கவே மாட்டான். மனித அறிவு சரிகாணாத விஷயங்களை ஜீரணிப்பது தான் மனிதனைப் பொறுத்தமட்டிலும் மிகவும் சிரமமான காரியமாகும். நாஸ்திகர்கள் இறைவனையும், மறுமையையும் மறுப்பதற்கு இதுவே மூலகாரணமாக இருக்கிறது.

மனித அறிவு ஏற்றுக் கொள்ளத் தயங்கும் விஷயங்களையும் அவனது ரப்பிடமிருந்து வந்ததுதான். அவனது கட்டளைதான் என்று உறுதியாகத் தெரியும்போது, எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக் கொள்வதுதான் அவனது உன்னத நிலையாகும். இஸ்லாத்தின் இறுதிக் கடமையான ஹஜ்ஜிலே நிறைவேற்றப்படும் பல காரியங்கள் (ஷைத்தானுக்கு கல் எறிதல், தொங்கோட்டம் ஓடுதல்) மனிதனது அறிவுக்குப் பொருத்தமானதாகத் தெரிவதில்லை. அர்த்தமற்ற செயல்களாகவே தெரியும்.

ஆயினும் அறிவுடையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை அவனது தூதர் செய்து காட்டி இருக்கிறார்கள். நமது அறிவுக்கு எட்டாவிடினும், இறுதித் தூதர் செய்து காட்டியதுதான் என்று ஆதாரபூர்வமாக அறியும்போது நாமும் நிறைவேற்றுவது தான் நமது கடமை அதுதான், “நாம் அடிமை; அல்லாஹ் நமது எஜமான்; எஜமானின் கட்டளைகளை நமக்குச் சரியாகத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நாம் அதை நிறைவேற்றுவதே நமது கடமை” என் பதை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

இதை நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற இரு நிகழ்ச்சிகள் நமக்குத் தெள்ளத் தெளிவாக ஊர்ஜிதம் செய்கின்றன. “இப்றாஹிம் (அலை) அவர்கள் மீது நீ எவ்வாறு சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிந்தாயோ, அதேபோல் முஹம்மத்(ஸல்) அவர்கள் மீது சாந்தியையும், அபிவிருத்தியையும் பொழிவாயாக” என்று ஒவ்வொரு தொழுகையிலும், சலவாத்திலும், துஆவிலும் முஸ்லிம் கள் ஏற்றிப் போற்றும் ஓர் உன்னத பதவியை இப்றாஹீம்(அலை) அவர்கள் பெற்றுள்ளனர்.

இறைவனது கட்டளை தான் என்று அறிந்தவுடன், அதன் பின் விளைவைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், இறைவனது கட்டளையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முற்பட்டதே அவர்களுக்கு இவ்வளவு பெரிய பதவியைப் பெற்றுத் தந்துள்ளது. தள்ளாத முதுமை வரை குழந்தை இல்லாமல் சோதிக்கப்பட்ட பின் (குழந்தை இல்லையே என்று ஏங்கி எந்தத் தர்ஹாவுக் கும் இப்றாஹீம்(அலை) காவடி தூக்கவில்லை) தள்ளாத வயதில் அருமையாகப் பெற்றெடுத்த அருமை மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களையும், அருமை மகனைப் பெற்றுக் கொடுத்த அருமை மனைவி ஹாஜரா(அலை) அவர்களையும் மனித சஞ்சாரமே அற்ற, சொட்டுத் தண்ணீர் கிடைக்காத கடும் பாலைவனத்தில், அல்லாஹ்வின் கட்டளைப்படி விட்டுச் செல்கிறார்கள் என்றால், எந்த மனித அறிவும் சரிகாணுமா இதை? மனைவியையும், மகனையும் பசியாலும், தாகத்தாலும் துடித்துச் சாகடிக்கவே இந்த ஏற்பாடு என்றே மனித அறிவு சொல்லும். ஆனால் இப்றாஹீம்(அலை) அவர்களோ இது தன்னையும், தன் மனைவியையும், மக னையும் படைத்த எஜமானாகிய அல்லாஹ்வின் கட்டளை; எஜமானின் கட்டளையை அடிமை மீற முடியாது. நிறைவேற்றியே தீர வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வின் கட்டளையைச் செய்து முடிக்கிறார்கள்.

Previous post:

Next post: