நோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!… குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.!! – MIT ஆய்வு!
(Fasting Boosts Stem cells’ Regenerative Capacity)
எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7
விசுவாசிகளே! உங்களுக்கு முன்பு இருந்தவர்களின் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். அல் குர்ஆன்.2:183
…….. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். அல் குர்ஆன்.2:184.
அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏராளமான ஏவல், விலக்கல்களை கடமையாக ஆக்கியுள்ளான். தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ், மற்றும் ஹராம்,ஹலால் இப்படி பல கட்டளைகளை மார்க்கமாக்கி வைத்துள்ளான். அடியார்களுக்கு இக்கடமையை அளிப்பதன் மூலம் அல்லாஹ்வின் அந்தஸ்தில் கூடுதல் குறைவு ஏற்படுவதில்லை. அல்லது அடியார்கள் அல்லாஹ்வின் கட்டளையை அமுல்படுத்துவதால் அவனது புகழ் அதிகமாவதில்லை; அவன் கட்டளையை மீறுவதால் அவன் புகழ் குறைவதுமில்லை. ஏனெனில் அவன் தனித்தவன்; படைப்பினங்களின் தேவையற்றவன்.
அல்லாஹ்வுக்கு மனிதர்களிடம் எந்தத் தேவையும் இல்லை. ஆயினும் மனிதர்களுக்கு கடமையாக்கிய தொழுகை, நோன்பு, போன்றவைகள் மூலம் அம்மனிதர்களுக்கே அல்லாஹ் நன்மையளிக்கிறான். குறிப்பாக அல்லாஹ் கடமையாக்கிய நோன்பின் மூலம் மனிதனின் உடலும் உள்ளமும் தூய்மை அடைகிறது. இவ்வுலகில் மனிதன் ஆரோக்கியமாக வாழ, உடலானது நோய் நொடியின்றி இருக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான உடலை புதுப்பித்து தரும் பணியையையும் நோன்பு செய்கிறது.
நோன்பு வைப்பதன் மூலம் கிடைக்கும் உடல்ரீதியான நன்மைகள் குறித்து, ஏராளமாக அறிவியல் ஆய்வுகள் கடந்த காலங்களில் சொல்லப்பட்டுள்ளன. அந்த வரிசையில், கடந்த வாரம் (3-May-2018) உலகப்புகழ்பெற்ற அமெரிக்காவின் மாஸாஸூட்ஸ் (MIT- Massachuttes Institute of Technology) தொழிற்நுட்ப பல்கலைக்கழக ஆய்வறிஞர்களால் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டது. Fasting – எனப்படும் உண்ணா நோன்பினால் உடலில் ஏற்படும் மாற்றங்களை எலிகளை வைத்து ஆய்வு செய்து அறிவித்தனர்.
இன்றைய மருத்துவ உலகில் அதிகம் ஆராயப்படுகின்ற விசயமாக “ஸ்டெம்செல்” உள்ளது. இது உயிரினங்களின் ஆதி செல் என்று சொல்லலாம். உடலின் பிற செல்களுக்கு இல்லாத பிரத்தியேகமான இரண்டு குணங்கள் ஸ்டெம்செல்களுக்கு மட்டுமே உண்டு, அதாவது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு (Self Renewal), ஒரே பண்புடைய மற்றொரு செல்லை தானே உருவாக்கிக்கொல்லும் திறன். மற்றொண்டு, உடலில் உள்ள எல்லா வகையான அணுக்களாகவும் தன்னை உருமாற்றிக்கொள்ளும் தன்மை. (Totipotency/Pluripotency).
ஆகவே நம் உடலின் மூல செல்லான ‘ஸ்டெம்செல்கள்”, எலும்பு, கல்லீரல், இதயம், குடல் என உடலின் எந்த ஒரு செல்லாகவும் மாறும் தன்மை கொண்டது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.நமக்கு வயது ஆக ஆக, நமது குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் பல காரணங்களால் திறம்பட செயல்பட தவறிவிடுகின்றன.இதனாலே நாம் நோய்வாய்ப்படுகின்றோம்.
ஆனால் நாம் உண்ணா நோன்பிருப்பதன் மூலம் இருபத்துநான்குமணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் (Regenerate) பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள எம்ஐடி பல்கலைகழக உயிரியல் ஆராய்ச்சியாளர்களான ஓமார் இல்மாஸ் மற்றும் டேவிட் சபாடினி ஆகிய இருவரும் எலிகளை வைத்து ஆய்வு நடத்தினர்.
அப்போது இரண்டு வகையாக எலிகளை பிரித்து வைத்து ஆய்வு செய்ததில், உண்ணாவிரதம் இல்லாத எலிகளின் உடலில் இருந்த ஸ்டெம் செல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் உண்ணாவிரதம் இருக்க வைக்கப்பட்ட எலிகளின் உடலில் இருக்கும் செல்களில் குளுகோஸ் உருவாவதற்குப் பதிலாக கொழுப்பு அமிலங்கள் கரைந்து ஸ்டெம்செல்கள் புத்துணர்ச்சி பெறுவதை ஆய்வில் கண்டறிந்தனர். இந்த மாற்றம் இள வயது மற்றும் முதிய எலிகளிடமும் ஏற்பட்டது.
இடது பக்க படத்தில் உள்ளது உண்ணாவிரதம் வைக்காத எலிகளின் ஸ்டெம்செல்லின் வளர்ச்சியின்மை. வலதுபுறம் உள்ள படத்தில் உள்ளது உண்ணாவிரதம் வைக்கப்பட்ட எலிகளின் புத்துணர்ச்சி பெற்ற வளர்ச்சியுற்ற ஸ்டெம்செல்கள்.
உடலில் காயம் அல்லது நோய் தொற்று ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்ய ஸ்டெம்செல்கள் உதவுகின்றன. நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் அல்லது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை பெறுவதால் அவர்களது குடல்கள் பாதிக்கப்படும். எனவே அவை மீண்டும் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம். எனவே உண்ணா நோன்பு இருப்பதன் மூலம் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. புற்றுநோய் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இதனால் அதிக வாய்ப்புள்ளது.
http://news.mit.edu/2018/fasting-boosts-stem-cells-regenerative-capacity-0503
https://www.cell.com/cell-stem-cell/fulltext/S1934-5909(18)30163-2
நோன்பை அரபியில் “ஸவ்ம்” என்று சொல்லுவார்கள். இதற்கு “தடுத்துக் கொள்ளுதல்’ என்று பொருள். நோன்பானது நோய் வருவதை முன்கூட்டியே தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை ஸ்டெம்செல்களுக்கு அளித்து நோயை தடுக்கிறது. ஆகவே தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “நோன்பு கேடயமாகும்!” (-புஹாரி.-1894.) ஆம்! மாண்பளிக்கும் நோன்பானது ஒரு அடியானை நோயிலிருந்து காக்கும் கேடயமாக செயல்படும் என்ற உண்மையை, நவீன அறிவியல் மெய்ப்பிக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!
…நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும் அவர்களுக்காக மன்னிப்பையும், மேலான சன்மானத்தையும் அல்லாஹ் ஆயத்தமாக்கி வைத்திருக்கிறான். அல் குர்ஆன்.33:35.