போலித் தூதர்கள்…

in 2018 ஜூன்

முஹம்மது சலீம், ஈரோடு

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து நன்மை மற்றும் தீமைகளை தெளிவாக எடுத்துக் கூறி அதன் மூலம் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக அவர்களிலி ருந்தே ஒருவரை அல்லாஹ் தன் தூதராக தேர்வு செய்து அவருக்கு இறை செய்திகளை வழங்கி மனித சமுதாயத்திற்கு பேருதவி புரிந்துள்ளான். இத்தகைய ஏராளமான இறைத்தூதர்களில் நபி(ஸல்) அவர்கள்தான் இறுதியானவர்.

நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு வேறு எந்த ஒரு இறைத்தூதரும் வருவதற்கு தேவையில்லாத அளவிற்கு பரிபூரணமான வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் குர்ஆனின் மூலமாகவும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களின் மூலமாகவும் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளான். இந்நிலையில் நபி(ஸல்) அவர்களின் காலம் முதல் இன்றுவரை சில போலிகள் நாங்களும் இறைத்தூதர்கள் தான், எங்களுக்கும் வஹீ வருகின்றது என்று வாதிட்டு பல பொய்களை கூறி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வழிகேட்டின் பக்கம் அழைப்பு விடுத்துள்ளார்கள். இவ்வாறு போலிகள் கிளம்புவதை குறித்து நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான குழப்பவாதிகள் தோன்றாதவரை மறுமைநாள் வராது, அவர்களில் ஒவ்வொரு வரும் தம்மை “அல்லாஹ்வின் ரசூல்” என்று வாதிடுவர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி), நூர்கள் : புகாரீ 3609, திர்மிதி 2144

நானும் அல்லாஹ்வுடைய ரசூல்தான் என்று வாதிடக்கூடிய பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள் தன்னோடு நபித்துவம் முழுமையடைந்து, முற்றுப்பெற்றுவிட்டதை குறித்து இன்னும் ஆழமான வார்த்தைகளைக் கொண்டு மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என் சமுதாயத்தைச் சேர்ந்த சில கோத்தி ரத்தார் இணைவைப்பாளர்களுடன் போய்ச் சேர்ந்து சிலைகளை வழிபடாத வரை மறுமைநாள் வராது. என் சமுதாயத்தாரில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் அவர்கள் ஒவ்வொரு வரும் தம்மை நபி என்று வாதிடுவர். ஆனால் நான்தான் நபிமார்களின் இறுதியானவன். எனக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரழி), நூல் : திர்மிதி 2198

அனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “தூதுத்துவம் (ரிசாலத்) நபித்துவமும் (நுபுவ்வத்) முற்றுப்பெற்றுவிட்டன. (நானே இறுதித் தூதர் ஆவேன்) எனக்குப் பின் எந்த ரசூலும் இல்லை எந்த நபியும் இல்லை” என்று கூறினார்கள். நூல் : திர்மிதி 2198

உண்மையே பேசுபவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி(ஸல்) அவர் கள் எனக்குப் பிறகு எந்த ரசூலும், நபியும் வரமாட்டார் என்று இரண்டாவது கருத் துக்கு இடமில்லாமல் தெளிவாகக் கூறிய பிறகும் யாரேனும் நானும் இறைத்தூதர் தான் என்று சொல்வாராயின் இவன் பொய்யர்களில் ஒருவன் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

பொய்யர்கள் தோன்றுதல் :

பொய்யர்கள் தோன்றுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபடியே நபி(ஸல்) அவர்களின் வாழ்நாள் இறுதிப் பகுதியில் இரண்டு பொய்யர்கள் தங்களைத் தாங்களே இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டனர். இது குறித்து நபிமொழி நூற்களில் காணப்படும் செய்தியை பார்ப்போம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன அவை எனக்கு பெரும் சுமையாகத் தென்பட்டன. அவற்றின் (விளக்கம் தெரியாத) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது அப்போது அவ்விரண்டையும் ஊதிவிடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதிவிட்டேன் அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. அவ்விரண்டும் எந்த இரு மகா பொய்யர்களுக் கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறிக்கும் என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) “ஸன்ஆ” வாசியும் (முஸைலிமா என்ற) “யமாமா” வாசியும் ஆவர். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள்: புகாரி 4375, முஸ்லிம் 4571

பொய்யன் மதீனா வருதல் :

மக்கா வெற்றிக்கு பிறகு இஸ்லாம் பல பகுதிகளிலும் மிக வேகமாக பரவத் தொடங்கியது. இந்த காலக்கட்டத்தில் பல்வேறு வெளியூர் குழுக்கள் நபி(ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்று வந்தனர். இந்த சூழ்நிலை யில் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டில் பொய்யன் முஸைலிமாவும் அவனது கூட்டத்தினரான பனூஹனீஃபா குலத்தினரும் நபி(ஸல்) அவர்களை சந்திக்க மதீனா வந்திருந்தனர்,

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்களது காலத்தில் மகா பொய்யன் முஸைலிமா (யமாமாவிலிருந்து) மதீனாவுக்கு வந்தான். அவன், “முஹம்மத் தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளிப்பதாக வாக்குறுதியளித்தால் தான் நான் அவரைப் பின்பற்றுவேன்” என்று கூறலானான். அவன் தன் சமுதாய மக்கள் பலருடன் மதீனா வந்திருந்தான்.

நபி(ஸல்) அவர்கள் (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ்பின் ­ம்மாஸ்(ரழி) அவர்கள் தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களதுகையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க, நபி(ஸல்) அவர்கள் அவனருகே (வந்து) நின்று கொண்டு இந்த (ப் பேரீச்ச மட்டை)த் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன்.

அல்லாஹ் உன் வி­யத்தில் முடிவு செய்திருப்பதை மீறிச் செல்ல என்னால் முடியாது நீ (எனக்கு கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும் (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை நான் காண்கிறேன். இதோ இவர்தான் ஸாபித். இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார் என்று சொல்லி விட்டு, அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள். நூற்கள் : புகாரி 4373 முஸ்லிம் 4570

பொய்களை கட்டவிழ்த்துவிட்டான் :

நபித்துவத்திலோ வேறு எந்த ஒரு அதிகாரத்திலோ தமக்கு எள்ளளவும் பங்கு கிடையாது என்பதை உணர்ந்த பொய்யன் முஸைலிமா தனது விஷம பிரச்சாரத்தை யமாமா வந்தவுடனே ஆரம்பித்தான் பதவி செல்வாக்கு, வளமான வாழ்க்கை போன்றவற்றை அடைவதற்காக நபித்துவ போர்வை போர்த்திக் கொண்டு பல்வேறு பொய்களை துணிந்து கூறினான்.

முதலாவதாக குறை´க் குலத்தாரில் ஓர் இறைத்தூதர் தோன்றும்போது பனூ ஹனீஃபா குலத்தாரில் ஏன் ஒரு இறைத் தூதர் தோன்றக் கூடாது என்று இனவாதம் பேசினான். இவனது இந்த குலவெறி பேச்சு யாமாமாவாசிகளிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது இவனது வாதம் சரியானது தான் என்று கூறி அந்த மக்களும் தங்களது ஈமானை இழக்க தயாராயினர்.

இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் மரணமடைகிறார்கள். இப்போது பொய்யன் முஸைலிமா எனது மரணத்திற்குப் பின் நான் கொண்டுவந்த தூதுச் செய்தியில் முஸைலிமாவிற்கும் பங்குண்டு என்று நபி (ஸல்) அவர்களே கூறினார்கள் என்ற படுபயங்கரமான பொய்யை சிறிதும் கூச்சமின்றி கூறினான்.

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு நஹார் என்பவரே சாட்சி என்றும் கூறினான். இந்த நஹார் என்பவ னும் நபி(ஸல்) இவ்வாறு கூறினார்கள் என்று பொய் சாட்சியளித்தான். இந்த மோசடிப் பேர்வழியில் சாட்சியம் பொய்யன் முஸைலிமா வளர்ச்சியடைவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது பொய் சாட்சியம் அளித்த இந்த நஹார் யாரென்றால் 15 பேர் கொண்ட பனூ ஹனீஃபா கிளையின் குழு ஒன்று நபி(ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது இந்த குழுவில் நஹாரும் இருந்தான். இவன் குர்ஆனை நன்கு கற்றிருந்தான். யமாமாவாசிகளுக்கு இவன்மீது தனி மதிப்பு இருந்தது. இதனால்தான் இவன் பொய் சாட்சியளித்தவுடன் பொய்யன் முஸைலிமாவின் ஆதிக்கம் அதிகரித்தது. மக்கள் கூட்டங் கூட்டமாக இந்த பொய் யனை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.

படைகளை அனுப்புதல் :

பொய்யன் முஸைலிமாவை அடக்கி ஒடுக்குவதற்காக கலீஃபா அபூபக்ர்(ரழி) அவர்கள் இக்ரிமா அவர்களது தலைமையில் ஒரு படையையும் அதன் பிறகு ஷிரஹ்பீல் பின் ஹஸனா அவர்களது தலைமையில் மற்றொரு படையையும் அனுப்பினார்கள். ஷிரஹ்பீல் ஹஸனா யமாமா வந்தடைவதற்குள் இக்ரிமா அவர்கள் அவசரப்பட்டு முஸைலிமாவை எதிர்க்கொண்டு போர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் பொய்யன் முஸைலிமாவின் படையில் நாற்பதாயிரம் பேர் இருந்ததால் இக்ரிமாவின் படை வெகு சீக்கிரமாகவே தோல்வியை தழுவியது.

இதன் பிறகு கலீஃபா அபூபக்ர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் போர்வாள் காலித் பின் வலீத்(ரழி) அவர்களது தலைமையில் ஒரு படையை யமாமாவிற்கு அனுப்பி வைத்தார்கள். ஷிரஹ்பீல் பின் ஹஸனா அவர்கள் இக்ரிமாவைப் போல் அவசரப்படாமல் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால் பொய்யன் முஸைலிமா தனது விஷம பிரச்சாரத்தை ஆரம்பித்து ஓராண்டிற்கும் சற்று அதிகமான காலகட்டத்திற் குள்ளேயே நாற்பதாயிரம் பேரை தனது படையில் வைத்திருந்தது மிகப் பெரிய விஷயமாகும். அன்றைய காலக்கட்டத்தில் இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். மிகப் பெரிய பொய்களையயல்லாம் கூறி குறுகிய காலக்கட்டத்தில் இவன் இவ்வளவு பெரியக் கூட்டத்தை தன்னிடம் வைத்திருந் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஸுமாமா((ரழி) அவர்களின் அறிவுரை :

பனூ ஹனீஃபா குலத்தை சேர்ந்த யமாமாவாசியான ஸுமாமா பின் உஸால் என்பவர் மக்கா வெற்றிக்கு முன்பே நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் இஸ்லாத்தை தழுவியிருந்தார் (ஸுமாமாவை குறித்து விரிவாக அறிய புகாரி ஹதீஃத் எண் 4372 ஐ பார்க்கவும்)

இந்த ஸுமாமா(ரழி) பொய்யன் முஸைலிமா ஒரு போலித் தூதர் என்பதை தனது பனூ ஹனீஃபா கூட்டத்தினருக்கு அழகான முறையில் விளக்கக் கூறினார். “ஒரே ஒரு செய்தியைக் கொண்டு இரு தூதர்கள் இணைந்து வரமுடியாது. முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவருக்குப் பிறகு இனி ஒரு நபி கிடையாது. எந்த ஒரு நபியும் இனி அவருடன் கூட்டமாக வரமுடியாது. ஹாமீம் (இது அனைவரையும்) மிகைத்தவனும், நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ் வினால் அருளப்பட்ட புத்தகம். அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன்(பாவிகளை) கடுமையாகத் தண்டிப்பவன்.

“(நல்லவர்கள் மீது) அருள்புரிபவன். அவனைத் தவிர வேறொரு இறைவன் இல்லை அவனிடம் (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.” (குர்ஆன் : 40:1,2,3) இது அல்லாஹ்வின் வார்த்தைகள் எவ்வளவு அர்த்தமுள்ள தாகவும், ஆழமுள்ளதாகவும், அழகானதாகவும் அமைந்திருக்கின்றது?

ஆனால் அதே சமயம் “தவளையே! இது வேதமாகும், குடிப்பவரைத் தடுக்காதீர்கள், தண்ணீரை அசுத்தமாக்காதீர்கள், எங்களுக்குப்பாதி பூமி! குறைஷிகளுக்குப் பாதி பூமி! எனினும் குறை´யர் வரம்பு மீறும் கூட்டத்தினரே!” இவை பொய்யன் முஸைலிமா வஹீ என்ற பெயரில் வாந்தி எடுத்த துர்நாற்றம் நிறைந்த வார்த்தைகளா கும். அவன் உளறிக் கொட்டியிருக்கும் இந்த உளறல்களையயல்லாம் வஹீ என்று நம்பப் போகின்றீர்களா?

இவ்வளவு அழகான முறையில் ஸுபாமா(ரழி) அவர்கள் அறிவுரை கூறியும் இந்த அறிவுரை பனு ஹனீஃபா கூட்டத் தினருக்கு சிறிதும் பயன் தரவில்லை. மாறாக பொய்யன் முஸைலிமாவுடன் சேர்ந்து இஸ்லாமிய படைகளை எதிர்கொள்ள தயாராக இருந்தார்கள்.

மகா பொய்யன் கொல்லப்படுதல் :

அல்லாஹ்வின் போர்வாள். காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் படை திரட்டிக் கொண்டு யமாமாவை நோக்கி வருகிறார் என்பதை கேள்விப்பட்ட பொய்யன் முஸைலிமா நாற்பதாயிரம் பேர் கொண்ட தனது படையை யமாமாவிலுள்ள “அக்ரிபா” என்ற இடத்தில் ஒன்று திரட்டி வைத்திருந்தான். கோட்டையைப் போன்ற தோட்டப் பகுதியான “அக்ரிபா” தனது பாதுகாப்புக்கு ஏற்ற இடம் என பொய்யன் முஸைலிமா கருதியிருந்தான். போர் ஆரம்ப மானபோது முதலில் முஸ்லிம்களுக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. பிறகு காலித் பின் வலீத்(ரழி) அவர்கள் போர் வியூகத்தை மாற்றியமைத்தார்கள்.

அதன்பிறகு முஸ்லிம்களின் கை மேலோங்கியது. போரின் உச்சகட்டமாக பராபின் மாலிக்(ரழி) அவர்கள் பொய்யனின் கோட்டைக்குள் புகுந்து கோட்டையின் கதவை திறந்துவிட்டார்கள். பிறகு முஸ்லிம்கள் கோட்டைக்குள் புகுந்து பொய்யன் முஸைலிமாவின் படையினர் மீது அதிரடி தாக்குதல் தொடுத்து நிலை குலையச் செய்தனர். இந்த இறுதி கட்டத் தில் நடந்த நிகழ்வுகளை குறித்து பொய்யன் முஸைலிமாவை கொன்றவரான வஹ்U(ரழி) அவர்களே கூறுவதை பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது (தன்னை ஒரு நபி என்று கூறிக்கொண்டு) மகா பொய்யன் முஸைலிமா கிளம்பினான். நான் (என் மனதிற்குள்) நிச்சயம் நான் முஸைலிமாவை நோக்கி (அபூபக்ர்(ரழி) அவர்கள் அனுப்பிய படையினருடன்)ப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்லலாம். அதன் மூலம் (முன்பு) நான் ஹம்ஸா(ரழி) அவர்களை கொன்றதற்கு ஈடு செய்யலாம் என்று கூறிக் கொண்டேன்.

மக்களுடன் சேர்ந்து நானும் (போருக்கு) புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய வி­யத்தில் நடக்க வேண்டி யது, நடந்து முடிந்தது. அப்(போரின்) போது ஒரு மனிதன் சுவரின் இடைவெளியில் நின்றுக் கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின்தோள்களுக்கிடையிலி ருந்து வெளியேறியது.

அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடிவந்தார். தமது வாளால் அவனது உச்சந் தலைமீது ஓங்கி வெட்டிவிட்டார் (பொய்யன் முஸைலிமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு ஐயோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்U) கொலை செய்துவிட்டான் என்று (சப்தமிட்டு) சொன்னாள். நூல் : புகாரி 4072

இந்த யமாமாப் போரில் பொய்யன் முஸைலிமா கொல்லப்பட்டதைப் போன்றே அவனது படையிலிருந்த பத்தாயிரம் முதல் பதினோராயிரம் பேர் வரைக் கொல்லப்பட் டார்கள். அபூபக்கர் (ரழி) அவர்களின் உறுதி மிக்க நடவடிக்கையின் மூலமாக இந்த பொய்யனின் மூலமாக ஏற்பட்ட குழப்பங்கள் முடிவுக்கு வந்தது. முஸ்லிம்கள் வெற்றியுடன் மதீனா வந்து சேர்ந்தார்கள்.

பொய்யன் அன்ஸீ கொல்லப்படுதல் :

பொய்யன் அன்ஸீயை கொலை செய் வதற்காக ஃபைரூஸ்(ரழி) அவர்களது தலை மையில் சிறிய குழு ஒன்றை நபி(ஸல்) அவர்கள் “ஸன்ஆ’விற்கு அனுப்பி வைத்தார்கள். ஃபைரூஸ்(ரழி) அவர்கள் ஸன்ஆவில் பல நாட்கள் தங்கியிருந்து மிக சாதுர்யமாக பொய்யன் அன்ஸீயின் கோட்டைக்குள் நுழைந்தார். பிறகு அவன் தங்கியிருந்த அறையை அடைவதற்காக சுரங்கப்பாதை ஒன்றை அமைத்து மிகத் துல்லியமாக அன்ஸீயின் படுக்கையறைக்குள் நுழைந்தார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொய்யன் அன்ஸீயை நிரந்தரமான உறக்கத்திற்கு அனுப்பும் விதமாக ஃபைரூஸ்(ரழி) அவர்கள் மிக துணிச்சலாக பொய்யனை கொலை செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ் நாளின் இறுதிப் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

ஃபைரூஸ்(ரழி) அவர்கள் பொய்யன் அன்ஸீயின் கோட்டைக்குள் நுழைந்தது எப்படி? யாருடைய உதவியோடு சுரங்கப்பாதை அமைத்தார் இதுபோன்ற இன்னும் ஏராளமான விஷயங்கள் வரலாற்று நூற்களில் எழுதப்பட்டுள்ளது. நாம் விரிவஞ்சி அன்ஸீயைப் பற்றி சுருக்கமாகவே எழுதியுள்ளோம்.

மேலும் சிலப் போலிகள் :

முஸைலிமா, அன்ஸீ போன்ற பொய்யர்களைப் போலவே வேறு சிலரும் கலீஃபா அபூபக்ர்(ரழி) அவர்களது ஆட்சியில் கேடு கெட்ட இந்த பொய் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். பனூ அஸத் கூட்டத்தை சேர்ந்த துலைஹா பின் குவைலித் (இவனை தலீஹா என்றும் அழைப்பர்) என்பவன் நானும் இறைத்தூதர்தான் என்று கூறிக்கொண்டிருந்தான். இவனை அடக்குவதற்காக அபூ பக்ர்(ரழி) அவர்கள் காலித் பின் வலீத்(ரழி) அவர்களை படையுடன் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத்(ரழி) அவர்களை அனுப்புவதற்கு முன்பாக அபூபக்ர்(ரழி) அவர்கள் அதீ இப்னு ஹாத்திம்(ரழி) அவர் களை பொய்யன் தலைஹாவுக்கு ஆதரவு அளித்த பனூ தய்யீ உட்பட பல்வேறு குலத்தினர்களையும் சந்தித்து பொய்யன் துலை ஹாவிற்கு ஆதரவு தந்தால் ஏற்படும் விளைவுகளை பற்றியும், தளபதி காலித்பின் வலீத்(ரழி) அவர்கள் நடவடிக்கை எடுக்கும் போது ஏற்படபோகும் பாதிப்புகளைப் பற்றியும் விளக்கி கூறுவதற்காக அனுப்பியிருந்தார்கள்.

அதீ இப்னு ஹாத்திம்(ரழி) அவர்கள் பல நாட்களாக பேசியதன் விளைவாக பனூ தய்யீ மற்றும் பனூ ஜதீலா குலத்தாரில் அதிகமானோர் மனம் மாறி இஸ்லாத்திற்குள் தங்களை இணைத்துக் கொண்டனர். பொய்யன் துலைஹா எஞ்சியிருந்த தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எதிர்கொண்டு போர்ப்புரிந்து படுதோல்வியடைந்து போர்க்களத்திலிருந்து வெருண்டோடி சிரியாவிற்கு தப்பிச் சென்றான். பிறகு ஒருசில மாதங்கலிலேயே துலைஹா மனம் திருந்தி இஸ்லாத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டார். அபூபக்ர்(ரழி) அவர்களது ஆட்சி காலத்திலேயே துலைஹா மக்கா வுக்கு சென்று உம்ராவை நிறைவேற்றினார்.

அதுசமயம் அபூபக்ர்(ரழி) அவர்கள் காலித் பின் வலீத்(ரழி) அவர்களுக்கு கடிதம் எழுதும்போது நீ துலைஹாவிடம் போர் தொடர்பான ஆலோசனை கேட்கத் தவற வேண்டாம். ஆனால் அதேசமயம் அதிகாரப் பொறுப்பை அவரிடம் வழங்கிட வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆண்களில் பொய்யர்கள் பலர் கிளம்பி யதை போன்றே பனூதமீம் கூட்டத்தை சேர்ந்த ஸிஜாஜ் பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணியும் அபூ பக்ர்(ரழி) அவர்களது ஆட்சி காலத்தில் தன்னை நபி என்று கூறிக் கொண்டாள். பிறகு தனது தவறான போக்கை உணர்ந்து மனந்திருந்தி இஸ்லாத் திற்குள் நுழைந்தார்.

ஸகீஃப் குலத்தாரில் பெரும் பொய்யன் தோன்றுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கேற்ப (பார்க்க திர்மிதி 2146) ஸகீஃப் குலத்தை சேர்ந்த முக்தார்பின் அபூ உபைத் என்ற பொய்யன் தான் ஒரு நபி என்ற வாதத்தை முன்வைத்து பல பொய்களை சர்வ சாதாரணமாக கூறிவந்தான். ஹிஜ்ரி 67ல் இவன் கொல்லப்பட்டான். இதை போன்றே அப்துல் மலிக்பின் மர்வான் ஆட்சியிலும், அப்பாஸிய்யாக்களின் ஆட்சியிலும் சில பொய்யர்கள் நானும் நபி என்று கூறிக்கொண்டு குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

பொய்யர்களின் தொடர்ச்சி :

நபி(ஸல்) அவர்களது காலத்தில் உருவான இந்தப் போலித்தூதர்களின் நச்சுப் புகையை அரபுலகத்தை ஆட்சி செய்த அன்றைய ஆட்சியாளர்கள் தயவுதாட் சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தினார்கள். அரபுலகில் அடித்து நொறுக்கப்பட்ட இந்த போலித்தூதர் களின் வாரிசுகள் இன்றளவும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற ஒருசில நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நவீன கால இந்த பொய்யர்கள் குர்ஆனுக்கு, ஹதீஃத்களுக்கு விளக்கம் தருகிறோம் என்ற பெயரில் தங்கள் வாயில் வந்ததையயல்லாம் கூறி உளறி வருகிறார்கள். இந்த போலிகளின் மயக்கும் பேச்சு மற்றும் எழுத்து குழப்பங்களில் வீழ்ந்து விடாமல் இருக்க அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

நபித்தோழர்கள் போலித்தூதர்களின் குழப்பங்களில் வீழ்ந்துவிடாமல் தங்களை தற்காத்து கொண்டதைப் போல் நாமும் நம்மை தற்காத்து கொள்வோமாக! வழிகேட்டை நேர்வழியாக எடுத்துக் கொள்வதை விட்டும் அல்லாஹ் நம்மனை வரையும் பாதுகாப்பானாக.

(நபியே!) கற்பனையாக அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவனை விட அல்லது வஹீ மூலம் அவனுக்கொன்றுமே அறிவிக்கப் படாமலிருக்க தனக்கும் வஹீ வந்தது என்று கூறுபவனை விட அல்லது அல்லாஹ் இறக்கியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவனை விட அநியாயக்காரன் யார்? இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்கு கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும். (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்) குர்ஆன்: 6:93

Previous post:

Next post: