அல்லாஹ்வின் பள்ளிவாசல் எது?

in 2018 செப்டம்பர்

அபூ ஹனீபா, புளியங்குடி

அல்லாஹ்விற்காக எவர் ஒருவர் பள்ளி வாசல் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான். (புகாரி 450)

இன்றைக்கு இயக்கங்களை, மத்ஹப்பை வளர்க்க அல்லாஹ்வின் பெயரை சொல்லி இயக்க, மத்ஹப் பெயர்களில் பள்ளிவாசல்களை கட்டுகிறார்களே, கட்டுவதற்காக நன்கொடை கொடுக்கிறார்களே, அவர்களுக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் மாளிகை கட்டுவானா? அல்லது நரகத்தில் மாளிகை கட்டுவானா? எது உண்மை?

அல்லாஹ்வின் பள்ளிவாசல் எது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடியுங்கள் பார்ப்போம்?

மத்ஹப் பள்ளிவாசல்கள் :

தங்கள் பள்ளி எந்த மத்ஹப் கொள்கை யின் அடிப்படையில் செயல்படுகிறதோ அந்த மத்ஹப் அடிப்படையில் தான் தொழ வேண்டும். அப்படி தொழுவோருக்குத் தான் தொழுவதற்கு அனுமதி! மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போர்டு போட்டு மிரட்டுகிறார்கள். மீறுபவர்களை அடித்து விரட்டுகிறார்கள் என் றால் இது அல்லாஹ்வின் பள்ளிவாசலா? அல்லது மத்ஹப்வாதிகள் தங்கள் மத்ஹப்பை வளர்க்க அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்தி கட்டிய பள்ளிவாசலா?

 தவ்ஹீத் பள்ளிவாசல்கள் :

அல்லாஹ் தன்னை ஈமான் கொண்டவர் களுக்கு முஸ்லிமீன் என்று பெயர் வைத்துள்ளான் படியுங்கள் (அல்குர்ஆன்:22:78) அந்த பெயரை மறைத்துவிட்டு தவ்ஹீத் என்ற பெயரை தங்கள் இயக்கங்களுக்கு வைத்துள்ளார்கள் இது முதல் வழிகேடு.

அல்குர்ஆன் 41:33 எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?) என்று அல்லாஹ் சொல்கிறான்.

இவர்களோ தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்கிறார்கள் அல்லாஹ் வைத்த பெயரை விட்டுவிட்டு சுயமாக தங்கள் மனோ இச்சையான ஷைத்தானை பின்பற்றி பெயர் வைத்துள்ளனர். இது வழிகேடா? இல்லையா? சுயமாக பெயர் வைத்து தனித்தனி பிரிவுகளாக செயல்பட மார்க்கத்தில் அனுமதி இல்லவே இல்லை.

அல்குர்ஆன் 21:92 வசனம் சொல்லும் உம்மத்தன் வாஹீதா ஒரே சமுதாயத்தை மனோ இச்சையைப் பின்பற்றி பல பெயர்களை உருவாக்கி பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுகிறார்கள். இயக்க பள்ளிவாசல்களை கட்டி இயக்கவெறியை உருவாக்கி முஸ்லிம் சமுதாயத்தை பிரிக்கிறார்கள் அல்குர்ஆன் 42:13ல் அல்லாஹ் சொல்கி றான் நீங்கள் சன்மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள் என்று இன்றைக்கு நாங்கள்தான் சத்திய மார்க்கத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் பிரிந்து கிடக்கிறார்கள் பிரிவு பள்ளி வாசல்களை உருவாக்குகிறார்கள் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருக்கிறார்கள்.

தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள் பள்ளிவாசல்களை கட்டுவதே முஸ்லிம்களை தவ்ஹீத்வாதிகள், முஷ்ரிக்குகள் என்று பிரிப்பதற்காகத்தான் மத்ஹப் வாதிகளின் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்குக்கு பதில் சொல்லமாட்டார்கள். இவர்கள் கட்டிய பள்ளிவாசலில் இருந்து பாங்கொலி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார்கள் அந்த அளவிற்கு சுய வெறி கொண்டவர்கள். தங்கள் இயக்கத்தில் இருக்கும் தவ்ஹீத்வாதிகள் தவிர எவரும் முஸ்லிம்களாக இருக்கமுடியாது என்று மனோ இச்சையில் மனக்கோட்டை கட்டி வாழ்கிறார்கள். இவர்கள் கட்டிய பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசலா? அல்லது தவ்ஹீத் என்ற பெயரை உடைய இயக்க பள்ளிவாசல்களா?

அரசியல் பாதி ஆன்மீகம் பாதி இயக்கங்கள்:

இவர்கள் ரெண்டும்கெட்டான் என்பவர்கள் போல அரசியல் பாதி ஆன்மீகம் மீதி என்ற நிலையை உடையவர்கள். பணம் மட் டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் மறுமை சிந்தனை என்றால் என்ன என்று நம்மிடமே கேட்பவர்கள். ஆன்மீகம் என்றும் சொல்வார்கள் அரசியல் என்றும் சொல் வார்கள். முஷ்ரிக்குகளை தங்கள் உற்ற நண் பர்களாக கொண்டவர்கள், பணத்திற்காக பெயர் புகழுக்காகவும் வாழ்பவர்கள், பொய்யர்கள், மார்க்க அறிவு அறவே அற்றவர்கள். மார்க்க பிரச்சாரங்கள் தவிர உலக காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பிறருக்கு காட்டவே சமூக சேவை செய்பவர்கள், முஸ்லிம்களை முன்னேற்றப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மனித நேயத்தோடு அரசியல் நடத்துபவர்கள், இவர்கள் பள்ளிவாசல் கட்டியிருப்பது முக்கிய காரணமே அரசியல் பண்ணுவதற்கு தங்களுக்கு என்று ஒரு கூட்டம் தேவை அதற்காக பிரிவு பள்ளி வாசல்கள் தேவை அதனாலேயே தனிப் பள்ளிவாசல்கள் கட்டுகிறார்கள். இவர்கள் பள்ளிவாசல்களில் எவர் எப்படி தொழுதாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். காரணம் கொள்கை அவசியம் அல்ல கூட்டம் தான் அவசியம்.

ஆனால் பிற கொள்கை உடையவர்கள் அல்லது சத்தியத்தை சொல்லக் கூடியவர் கள் இவர்களுடைய பள்ளிகளில் பிரச்சாரம் செய்தால் கடுமையாக எதிர்க்கக் கூடிய வர்கள், இங்கே வந்து பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கண்டிப்பவர்கள். தங்கள் தவ்ஹீத்வாதிகள் என்று சொன்னால் இனி யாரும் நம்பமாட்டார்கள் என்று புரிந்து கொண்டு ஸலஃபிகளாக மாறி வருகிறார்கள் காரணம் பொருளாதாரம் இல்லாமல் கொள்கையாவது மண்ணாங்கட்டியாவது. இப்படிப்பட்டவர்களும் பள்ளிவாசல்கள் கட்டி வைத்துள்ளார்கள். இவர்கள் கட்டிய பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் பள்ளியா? அல்லது இயக்க பள்ளிகளா?

அல்லாஹ்விற்காக பள்ளிவாசல் கட்டுகிறோம் என்ற பெயரால் இந்த முஸ்லிம் சமுதாயத்தை ஒரே சமுதாயத்தை இயக்கங்களாக, மத்ஹப்களாக, அரசியல் பெயரால் பல பிரிவுகளை உருவாக்கி தங்களுக்கு தேவையான பொருளாதாரத்தை முஸ்லிம்களிடம் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள் முஸ்லிம் பிரிவினைவாதிகள். ஆனால் அல்லாஹ் சொல்கிறான் அல்லாஸூ ஸமத் (அல்லாஹ் யாரிடத்திலும் தேவையற்றவன் அல்குர்ஆன் 112:2) அல்லாஹ்விற்காக பள்ளிவாசல் கட்டுவதாக கூறி முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் முஸ்லிம் பிரிவினைவாதிகள்.

எந்த உம்மத்துக்கும் கொடுக்காத ஒரு பாக்கியத்தை அல்லாஹ் இந்த முஸ்லிம் உம்மத்துக்கு கொடுத்திருக்கிறான் என்ன பாக்கியம்? கழிப்பிடங்களை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தொழும் அனுமதியை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அப்படி இருக்கையில் என்னை நபி வழியில் பள்ளியில் தொழ அனுமதிக்க மறுக்கிறார் கள் அதனால் தனிப் பள்ளி கட்டுகிறேன் என்று சொன்னால் அவர்கள் எப்படிப்பட்ட பொய்யர்களாக இருப்பார்கள். மத்ஹப்வாதிகள் பள்ளிவாசலில் நபிவழியில் தொழ தடை செய்தபோது தனிப் பள்ளி கட்டாமல் மத்ஹப்வாதிகளின் பள்ளியின் வாசலில் நின்று தொழுதிருந்தால் அல்லது தெருவில் நின்று தொழுதிருந்தால் இன்று மத்ஹப் பள்ளிகள் அல்லாஹ் வின் பள்ளிகளாக மாறியிருக்கும்.

அப்படி தவ்ஹீத் பேசக்கூடிய தவ்ஹீத்வாதிகள் செய்தார்களா? இல்லையே? அல்லாஹ்வின் பள்ளியான காஃபா முஷ்ரிக்குகள் கையில் இருக்கும் போது முஷ்ரிக்குகள் தடை செய்தபோதும் அல்லாஹ்வின் பள்ளியை விட்டுவிட்டு தனிப்பள்ளி கட்டவில்லை தொழுகைக்கு என்று தனிப் பள்ளிவாசல் கட்டவில்லை தங்களுக்கு கிடைத்த இடங்களிலும், காஃபாவிலும் தொழுதுவந்தார்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அவர்கள் கொடுக்கும் இன்னல்களை சகித்துக் கொண்டு சத்தியத்தை சொன்னதின் விளைவு அல்லாஹ்வின் பள்ளியான காஃபா அல்லாஹ்வை மட்டுமே வழிபடக் கூடிய பள்ளியாக மாறியது அவர்களின் பொறுமை, சகிப்பு தன்மை காரணமாக அல்லாஹ் அவ்வாறு மாற்றித்தந்தான். இன்று மத்ஹப் பள்ளிகளில் அல்லாஹ்வை மட்டும் வணங்கவில்லை. முன்னோர்களுக்கு அவ்லியாக்களுக்கு மவ்லிது ஓதுகிறார்கள். தர்காக்கள் கட்டி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் தவ்ஹீத்வாதிகள் தொடர்ந்து பிரிவினை பள்ளிகளை உருவாக்காமல் பொறுமையுடன் இன்னல்களை சகித்துக் கொண்டு சத்தியத்தை எத்தி வைத்திருந்தால் மத்ஹப் பள்ளிவாசல்கள் இன்று அல்லாஹ்வை மட்டும் வணங்கக் கூடிய பள்ளிவாசல்களாக மாறியிருக்கும். அப்படி செய்தார்களா? இல்லையே! தனிப்பள்ளி கட்டினார்கள் எதற்காக காரணம் அவர்களுடைய நோக்கம் மத்ஹப் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் பள்ளியாக மாற வேண்டும் என்பதல்ல தங்களுக்கு என்று தனிப்பள்ளி வாசல்களை உருவாக்க வேண்டும். தங்களுக்கு என்று தனி அதிகாரம் வேண்டும் என்பதற்காக.

அதனால்தான் கடந்த 30 ஆண்டுகள் தவ்ஹீத் பிரச்சாரம் என்று சொல்லி வந்தவர்களால் ஒரு மத்ஹப் பள்ளியைக்கூட அல்லாஹ்வின் பள்ளியாக மாற்ற முடியவில்லை. மாறாக தவ்ஹீத் என்ற பெயரில் 600க்கும் மேற்பட்ட இயக்க பள்ளிகளை உருவாக்க மட்டுமே முடிந்தது. அதுபோல தவ்ஹீத் போர்வையில் ஒழிந்து கொண்ட பல முஸ்லிம் இயக்கவாதி கள் ஆளாளுக்கு தனிப் பள்ளி கட்டி தனி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டார்கள் ஆக யாருமே அல்லாஹ்விற்காக பள்ளி வாசல்களை கட்டவரவில்லை தங்களுக்கு கூட்டத்தை சேர்க்கவே அல்லாஹ்வின் பெயரால் பொய்யாக பள்ளிவாசல்களை கட்டுகிறார்கள். ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தினராக இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான் அல்குர்ஆன் 2:213. இன்றைக்கு தவ்ஹீத் பேசக்கூடியவர்களும் ஒரு காலத்தில் ஒரே கூட்டத்தினராகவே இருந்தார்கள். மேலும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்குர்ஆன் 2:213 இன்றைக்கு தவ்ஹீத்வாதிகளும் கருத்துவேறுபாட்டால் பிரிந்து கிடக்கிறார்கள்.

காரணம் தங்களுக்குள் பொறாமை. என்ன பொறாமை? அதிகார பொறாமை, கிடைக்கும் பொருளா தாரத்தை பங்கு போடுவதில் பொறாமை, கூட்டம் சேர்வதில் பொறாமை, தான் சொன்னதை மட்டுமே கேட்கவேண்டும் என்ற பொறாமை இப்படி பொறாமையின் காரணமாக பிரிந்தார்கள் இன்றைய தவ்ஹீத்வாதிகள். இப்படி பிரிந்து கிடப்பவர்கள் சத்தியத்தை சொல்லுவார்களா? பிரிவை ஆதரிப்பவர்கள் சத்தியத்தை சொல்வார்களா? தனிப்பள்ளி கட்டி முஸ்லிம்களை பிரிப்பவர்கள் சத்தியத்தில் இருப்பார்களா? ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ்வை வணங்குவதற்கு மட்டுமே கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் மட்டுமே அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் ஆகும். மத்ஹப் கொள்கையை, இயக்கக் கொள்கையை பரப்புவதற்காக கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் பள்ளி வாசல்களாக ஆகாது. மாறாக அப்படி கட்டப்படுகின்ற பள்ளிகள் அனைத்தும் நயவஞ்சகர்களான முனாஃபிக்குள் கட்டிய மஸ்ஜித்தின் ளிரார் பள்ளிகளுக்கு சமமாகும். காரணம் இன்றைக்கு தனிப்பள்ளி கட்டக்கூடிய அனைவருமே முஸ்லிம்களுக்குள்ளேயே பிரிவுகளை உண்டுபண்ணுகிறார்கள்.

ஒற்றுமை என்னும் கயிற்றை அறுத்துவிடுகிறார்கள் ஒன்று படவே முடியாது என்று சத்தியம் செய்கி றார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக. அல்குர்ஆன் 2:213ல் அல்லாஹ் சொல்கிறான் : (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய் வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய நெறிநூலையும் இறக்கி வைத்தான். எனினும் அந்நெறிநூல் கொடுக்கப்பெற்ற வர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின் னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகின்றான். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் நடத்துவான் என்ற உறுதியுடன் சத்தியத்தில், பிரிவுகள் இன்றி அல்லாஹ்வை ஈமான் கொண்ட முஸ்லிம் களாக இருப்போமாக.

Previous post:

Next post: