MTM. முஜீபுதீன், இலங்கை
செப்டம்பர் தொடர்ச்சி……
ருகூவின் போது ஓதப்படும் ஓர் இறைவனை போற்றும் வசனங்கள் : ஸுரத்துல் ஃபாத்திஹா மற்றும் வேறு வசனங்களை ஓதி முடித்த பின் ருகூவு செய்தல் வேண்டும். தொழுகையில் ருகூவில் பின் வருமாறு மூன்று முறை ஓதுதல் வேண்டும். அதன் பொருளை கவனியுங்கள். “ஸுப்ஹான ரப்பியல் அழீம்” (பொருள்: மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) அஹ்மத், அபூதாவுத், நஸயீ ருகூவிலிருந்து எழும்போது கூறவேண்டியவைகள் : அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் : இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார்.
எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்கள் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச் செய்)தால் நீங்களும் குனி யுங்கள். அவர் “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று சொன்னால் நீங்கள் “அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து” (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று சொல்லுங்கள்.
அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள். முஸ்லிம் : 706 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும் “”ரப்பனா! ல(க்)கல் ஹம்து மிஸ்அஸ்ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ´ஃத்த மின் ஷையிம் பவது, அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த், அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன், அல்லாஹும்ம, லா மானிஅ லிமா மன உத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்” என்று கூறுவார்கள்.
(பொருள் : எங்கள் அதிபதியே! வானங்களும், பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரி யது. புகழுக்கும், மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள் தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது. “இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உந்தன் வேதனையிலிருந்து பயன் அளிக்காது” என்பதேயாகும்) முஸ்லிம்:822
தொழுகையில் இறைவனை மேன் மைப்படுத்தும் உயர்ந்த சொற்களே காணப்படுகின்றன. அன்று சிலைகளையும், மரணித்த மனிதர்களிடமும், பொருட்களிடமும் மண்டியிட்ட மனிதனை, அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என வலியுறுத்திய மார்க்கம் இஸ்லாம் மார்க்கமாகும். மேலும் தொழுகையில் உச்சரிக்கப்படும் வசனங்களை கவனியுங்கள். ஸஜ்தாவின் போது கூறவேண்டியவைகள்: அன்று மனிதன் தான் கண்டவற்றை எல்லாம் கடவுளாக கொண்டு வணங்கி வந்தான். அதனால் 360 சிலைகள் கஃபாவை அசிங்கப்படுத்தின. மூடநம்பிக்கைகள் மலிந்து காணப்பட்டன. அவர்களின் தொழுகை விளையாட்டும் கூச்சலுமாகவே இருந்தது. அந்த சமுதாயத்தில் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைத்த முஸ்லிம்களின் தொழுகையில் ஸஜ்தாவில் பிரார்த்தனை வசனங்கள் ஒரு இறைவனை மட்டுமே வணங்கி வழிபடுவதாக அமைந்திருக்கிறது கவனியுங்கள். ஸஜ்தாவுக்காக நபி(ஸல்) அவர்கள் குனியும் போது அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவார்கள். புகாரி நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவின் போது “ஸுப்ஹான ரப்பியல் அஃலா” (உயர்வு மிக்க என் இறைவன் தூயவன்) என்று ஓதுவார்கள். அஹமத் நஸாயீ
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் தம் இறைவனி டம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக் கும் நிலையில் மிக நெருக்கமானது. அவர் கள் ஸஜ்தாவிலிருக்கும்போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள். முஸ்லிம் : 832 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழும்போது) தமது ஸஜ்தாவில் “அல்லா ஹும்மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹஜ வ அவ்வலஹஜ வ ஆகிரஹஜ, வ அலானியத்தஹு” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள் : இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும், பெரியதையும், ஆரம்பமாகச் செய்ததையும், இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும், மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக! முஸ்லிம் : 833
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்ட துஆ பின்வருமாறு ஆகும்.
“அத்தஹிய்யாது லில்லாஹி வஸ்ஸலவாது வத்தய்யிபாது அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மதுல்லாஹி வபரகா தஹுஅஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு” (பொருள் : கண்ணியம் அல்லாஹ்வுக்கே! ஓ! நபியே! உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்ஷமும் உண்டாவதாக!
எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல் லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதி மொழி கூறுகிறேன். மேலும் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றும் கூறுங்கள். பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று சொன்னார்கள். முஸ்லிம் : 672
இவ்வகையான பிரார்த்தனைகளையே ஓதும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அத்துடன் (தொழுகையின் இறுதி அமர்வில்) அத்தஹிய்யாத்திற்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவது அவசியமாகும். நபி(ஸல்) ஓதும்படி கற்றுக் கொடுத்த ஸலவாத்தினை கவனியுங்கள்.
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத்.
(பொருள் : இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவருடைய குடும்பத் தாருக்கும் நீ கருணை புரிவாயாக! நிச்சயமாக நீயே புகழுக்குரியவனும், கண்ணியம்மிக்கவனும் ஆவாய் இறைவா! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவருடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்ஷம் அளித்ததைப் போன்று முஹம்மத்(ஸல்) அவர்களுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்ஷமளிப்பாயாக!
நிச்சயமாக நீயே புகழுக்குரியவனும் கண்ணியம் மிக்கவனுமாவாய்) முஸ்லிம் : 682
அல்லாஹும்ம-ஸல்லி-அலா முஹமத் தின் வஅலா-ஆலி முஹம்மதின்-கமா-ஸலைத்த-அலா-இப்றாஹீம்-வலா-ஆலி இப்றாஹீம்-இன்னக்க-ஹமீதும் மஜீத்-அல்லாஹும்ம-பாரீக்-அலா-முஹம்மதின்-வலா-ஆலி-முஹம்மதின்-கமா-பாரகத்த- அலா-இப்றாஹீம்-வலா-ஆலி-இப்றாஹீம் -இன்னக்க-ஹமீதும் மஜீத். (புகாரி) இது வேறு ஹதீஃத் நூல்களில் இடம் பெற்றிருப்பினும் பெரும்பாலான அறிவிப் புகளில் இந்த ஸலவாத்தின் வாசக அமைப்பு சிறிது முன்பின்னாக காணப்படுகிறது. இதைப் போன்றே ஸஹீஹான ஹதீஃத்களில் இடம் பெற்றுள்ள மற்ற ஸலவாத்துக்களையும் ஓதிக்கொள்ளலாம்.
ஸலவாத்துக்குப் பிறகு ஓத வேண்டிய துஆக் களில் ஒன்று :
இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். பாவங்களை விட்டும், கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய் வார்கள். “தாங்கள் கடனை விட்டும் அதிகமாக பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?” என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது “ஒரு மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான் வாக்களித்து விட்டு அதை மீறுவான்” என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். புகாரி : 832
இது போன்ற பல துஆக்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகையிலும், தொழுகைக்குப் பின்பும் ஓதுவதற்கு கற்றுக் கொடுத் தார்கள். முஸ்லிம்கள் ஒருபோதும் அல்லாஹ்வை தவிர்த்து, வேறு எவரையும் வணங்குவதும் இல்லை தொழுது, பிரார்த்திப்பதும் இல்லை. ஓர் இறைவனை வணங்கி வழிபடுவது சரியானதா? அல்லது கண்டவைகள் எல்லாவற்றையும் தெய்வமாக கொண்டு வழிபடுவது சரியானதா? சத்திய இறை நெறிநூலின் ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுங்கள். எது உண்மையானது?
கூட்டுத் தொழுகையும் (ஜமாஅத்) அதன் சிறப்பும் :
அல்லாஹ்வுக்கு இணை வைத்து பல தெய்வங்களை வணங்கி வழிபடுபவர்கள் அநேகமாக தனித்தே தாம் உருவமைத்த தெய்வங்களை வணங்குவர். அவர்கள் வாரத்துக்கு ஒரு முறை தமது தெய்வச் சிலைகளை கூட்டாக நோக்கிப் பிரார்த்திப்பர். ஆனால் முஸ்லிம்கள் தமது ஐவேளைத் தொழுகைகளை அநேகமான சந்தர்ப்பத்தில் இறை இல்லங்களில் கூட்டாக ஒன்று கூடி மேற்கொள்வர். அல்லது தாம் கூட்டாக பயணம் மேற்கொள்ளும் போது கூட்டாக சேர்த்து, சுருக்கி தொழுகை நடத்துகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அல்லாஹ் இந்த சமுதாயத்திற்குக் கடமையாக்கிய ஐங்காலத் தொழுகைகளை கூட்டாக தொழுவதனால் பல நன்மைகளை மக்கள் அடைந்து கொள்வர். தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுகின்றபோது, அதைக் கேட்கின்ற மக்கள் தொழு கைக்காக வருகை தருவர். உரிய காரணம் இன்றி கூட்டுத் தொழுகையைத் தவறவிடக் கூடாது. கூட்டுத் தொழுகையை இமாம் முன் நின்று நடத்துவார். அவர் நபி(ஸல்) காட்டித் தந்த முறையில் தொழுகை நடத்தத் தெரிந்த வராகவும், குர்ஆன் அத்தியாயங்களை அறிந் தவராகவும் இருத்தல் வேண்டும்.
ஒரு ஜமாஅத்தினரில் அத்தகுதி கூடுதலாகப் பெற்றவரில் ஒருவரே இமாமாக இருந்து தொழுகை நடத்துவார். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டவுடன் இமாமுக்குப் பின் ஜமாஅத்தினர் கிப்லாவை நோக்கி சீரான வரிசையில் மக்கள் அணிவகுத்து நிற்பர். அவர்கள் காலும், தோளும் இணைந்தவர்களாக அணி வகுத்து நிற்பர். முதல் வரிசை சீராக பூரணமான பின்பே இரண்டாம் வரிசையில் நிற்கவேண்டும். வரிசையில் நிற்பதற்கு அரசன் அடிமை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எந்த ஏற்றத் தாழ்வுகளும் இஸ்லாத்தில் இல்லை. முதல் வரிசைக்கு கூடிய நன்மைகள் ஆண்களுக்கு உண்டு. இதனால் மக்கள் முதல் வரிசைக்கு முதலில் வந்து நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதும் உண்டு. முதல் வரிசையில் பருவ வயதை அடையப் பெற்றவர்களும், ஆண்களின் பின் வரிசையில் சிறுவர்களும் நின்று தொழுவர். பெண்கள் தமது தொழுகைகளை வீட்டில் தொழுவதற்கு அனுமதி உண்டு.
ஆனால் பெண்கள் விரும்பினால் கூட்டாக தொழுவதற்கு அனுமதி உண்டு. பெண்கள் தொழுகைக்கு இறை இல்லம் வர அனுமதி கேட்டால் தடுத்தல் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளனர். பெண்களின் முதல் வரிசையில் பருவ வயதை அடைந்த சிறு பிள்ளைகளும், பின் வரிசையில் பருவ வயதை அடைந்த மூப்படைந்த பெண்களும் இருப்பது சிறப்பு. இதனால் தொழுகை முடிந்தவுடன் பெண்கள் ஆண்களுக்கு முன் வீடுகளைச் சென்றடைவது இலகுவாக இருக்கும். இவை அல்லாஹ்வின் தூதரின் வழி முறையாகும்.