ஐயமும்! தெளிவும்!!

in 2018 டிசம்பர்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் தமது 63வது வயதில் ஹஜ் பயணம் செல்லும் வழியில், தன் தாயாரின் கப்ரைப் பார்த்து, “நான் தொழுகையில் இருக்கும்போது, நீங்கள் “”முஹம்மது, முஹம்மது” என்று அழைத்திருந்தால், தொழுகையை விட்டுவிட்டு பணிவிடை செய்ய வந்திருப்பேன் என்ற கருத்தில் கூறியதாக (முஸ்லிம்) ஏதேனும் ஹதீஃத் உள்ளதா? சுல்தான்ஜீ, ஆத்தூர்.

தெளிவு : இதுபோன்ற செய்தி சமூக வலை தளங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மார்க்கத்தில் எள்ளின் முனையளவு கூட ஆதாரம் இல்லை.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை, அல்லாஹ்வின் மேலான அந்தஸ்துக்கு உயர்த்தி கவிபாடிக் கொண்டிருக்கும் கப்ர் வணங்கிகளிலுள்ள ஒரு கூட்டம் பரப்பும் வதந்தியே இது.

மார்க்கத்தில் பல நிலைகளைக் கடந்து விட்ட ஆன்மீகவாதிகள் என்று தங்களது ஆதரவு கும்பலால் புகழப்பட்டுக் கொண்டி ருக்கும் இந்த கூட்டத்தாரின் நிலைப்பாடு என்னவென்றால் மார்க்கத்தில் கடமையாக்கப்பட்ட முக்கியமான ஐந்து வேளைத் தொழுகைகளைத் தொழ மாட்டார்கள். இவர்கள் தொழ மாட்டார்களா என்று கேட்டால், அவர்கள் ஷரீஅத்தைக் கடந்து மக்ரிஃபத்தில் இருப்பதாக பிதற்றுவார்கள். மார்க்கத்தில் அப்படியயல்லாம் எதுவும் இல்லை என்பதை அறியாத சாதாரண நபர்கள் மக்ரிஃபத் என்பது ஒரு பெரிய உயரிய அந்தஸ்து போலும் என்று எண்ணிக் கொள்வர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது மாநாடு ஒன்று திருச்சியிலுள்ள ஒரு பள்ளி வாசலில் நடைபெற்றது. இந்தியாவின் பல மாகாணங்களிலிருந்தும் பலர் உருது மொழி யில் பயான் செய்தனர். பள்ளிவாசலில் தொழுகை நேரங்களில் பாங்கு சொல்லப்பட்டது பாங்கு சொன்ன ஒவ்வொரு முறையும் மாநாட்டில் இருந்த பல நபர்கள் ஜூட்! சொற்பமானவர்களே ஜமாஅத் தொழுதனர். தொழுகை முடிந்து சொற்பொழிவு ஆரம்பித்தவுடன் ஜூட்டானவர்கள் ஆஜரானார்கள்.

இந்த கும்பலின் திருச்சி மாவட்ட செயலாளர் ஒருவர் தமது தமிழ் சொற் பொழிவில் “தொழுகை நேரான வழி அல்ல! தொழுகை நேரான வழியாக இருந்தால், தொழுகையில் இருக்கும்போது “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் (யா அல்லாஹ்!) நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!” என்று ஏன் ஓதவேண்டும் என்று சொற்பொழிவு நிகழ்த்தினார்.

ஆக, மார்க்கத்தில் தொழுகை இவர்களுக்கு முக்கியம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த கும்பல் பரப்பும் வதந்திகளே இதுவும், இது போன்றவைகளும். இது பொய் அல்ல, அவர்கள் ஹதீஃத் என்று கூறியதை திரும்பத் திரும்ப படித்து பாருங்கள். அவர்களைப் பற்றிய உண்மை வெளிப்படும். தாயாரின் கப்ரில் முஹம்மதே என்று என்னை எப்போது அழைத்தாலும், நான் பணிவிடை செய்ய வந்திருப்பேனே” என்று கூறியதிலிருந்து அவர்களது நோக்கம் வெளிப்படுகிறதல்லவா? ஒன்று தொழுகை முக்கியம் அல்ல. மற்றொன்று தாய்க்கு பணிவிடை செய்வது தொழுது கொண்டிருக்கும் தொழுகையை விட முக்கியம் என்று நினைப்போம். அந்த மற்றொன்றை சாதாரணமாக எண்ணு வோம்.

ஆனால் ஆழ்ந்து சிந்தியுங்கள்! உண்மை வெளிவரும்! இறந்துபோன பிறகு அந்த இறந்து விட்ட தாய்க்கு பணிவிடை செய்ய வந்திருப்பேனே என்று கூறினால் என்ன அர்த்தம்? கப்ரில் இருப்பவருக்கு என்ன பணிவிடை தேவைப்படும்? வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும், கப்ருக்குள்ளே சென்று இறந்துவிட்டவருக்கு பணிவிடை செய்ய முடியுமா? ஆக, இந்த கும்பலுக்கு தொழுகையும் முக்கியம் அல்ல; உயிரோடிருக்கும் தாய்க்கு பணிவிடை செய்வதும் முக்கியம் அல்ல; இறந்துபோன தாய்க்குத்தான் பணிவிடை செய்வார்களாம். ஹதீஃத்களின் வாசக அமைப்பிலிருந்தே இது சரியான ஹதீஃதாக இருக்குமா என்பதை ஹதீஃத்களுடன் தொடர்புடையவர்கள் ஓரளவேனும் அறிய முடியும். எப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொல்லும் செய்திகள் நிச்சயமாக இலக்கிற்கு பொருத்தமானதாக  இருக்கும்.

அதாவது சொல்ல வந்த விஷயம் ரத்தினச் சுருக்கமாக, தெளிவாக பொருத்தமாக இருக்கும். சொல்லப்பட்ட ஹதீஃதில் சந்தேகம் வந்து நாம் எதுவும் கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமே இருக்காதவைகளாக இருக்கும். உயிர் பிரிந்து மவுத்தாகி கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள், பூமியில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களிடம் பேச முடியும் என்ற தவறான நச்சுக் கருத்தையும், அதே போல, பூமியில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், உயிர் பிரிந்து மவுத்தாகி கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட வர்களிடம் பேச முடியும் என்ற தவறான நச்சுக் கருத்தையும் இது விதைக்கிறது. மரணித்து கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவருடனும் தொடர்பு கொள்ள முடியாது என்பதை மனித ஜின் இனங்களிலுள்ள எல்லோரையும் விட நன்கு அறிந்த வர்கள்தான் நபி(ஸல்) அவர்கள், அதுவும் எப்படி? கப்ரில் முன்கர் நக்கீர் மலக்குகளின் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த அடியார் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரை புது மாப்பிள்ளை உறங்குவது போல் உறங்கிக் கொண்டிருப்பார்.

தவறாக பதிலளித்த வனுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரை வேதனைகள் நடந்து கொண்டிருக்கும் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், கப்ரிலுள்ள அவரது தாயார் அழைத்தால் தொழுகையை விட்டுவிட்டு பணிவிடை செய்ய வந்திருப்பேன் என்று கூறியதாக சொல்பவர்கள், அல்லாஹ்வின் தூதரை கேலி செய்கிறார்கள். மனம் திருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுத் தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால், அதற்கான தண்டனையை தீர்ப்பு நாளின் அதிபதியிடம் தீர்ப்பு நாளில் அவர்கள் பெறப்போவது நிச்சயம். பொதுவாக தொழுது கொண்டிருக்கும் நபரை ஒருவர் அழைத்தால் தொழுகையை விட்டுவிட்டு எதையும் செய்யலாமா என்பதையும் தெரிந்து கொள்வோம். நபி(ஸல்) அவர்களின் ஜீவித காலத்தில், அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்தருளிய சிறப்புக்களில் ஒன்று, தொழுது கொண்டிருக்கும் ஒரு நபரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தால், அவர்களின் அழைப்புக்கு பதில் கொடுக்க வேண்டும் என்பதை 8:24 வசனம் கூறுகிறது.

“நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்தின்பால் உங்களை அவர் அழைத்தால், நீங்கள் பதிலளியுங்கள். இன்னும் அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இதயத்திற்கும் இடையேயும் சூழ்ந்து இருக்கிறான் என்பதையும் அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் : 8:24) “நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதில ளிக்கவில்லை. ஆகவே, நான் (தொழுது முடித்த பின்), “அல்லாஹ்வின் தூதரே! நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர்கள், “உங்களுக்கு வாழ் வழிக்கக்கூடியதன் பக்கம் இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக் கும் அவனுடைய தூதருக்கும் பதிலளியுங் கள்” என்று அல்லாஹ் கூறவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு. என்னிடம் “குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்து வமிக்க ஓர் அத்தியாயத்தை நீ பள்ளிவாசலி லிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் வெளியே செல்ல முனைந்தபோது நான் அவர்களிடம், “நீங்கள் குர்ஆனின் அத்தியாயங்களிலேயே மகத்துவமிக்க ஓர் அத்தியா யத்தைக் கற்றுத் தருகிறேன் என்று சொல்ல வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்தான். அவை திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அஸ்ஸப்உல் மஸானீ) ஆகும். எனக்கு அருளப்பட்டுள்ள மகத்துவம் பொருந்திய குர்ஆனும் ஆகும்” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர் : அபூசயீத் பின் அல் முஅல்லா (ரழி), புகாரி எண் : 4474)

அல்லாஹ்வின் தூதரின் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்ற கட்டளை மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த நிலையில் இருந்தாலும் குறிப்பாக தொழுது கொண்டிருக்கும் நிலையிலிருந்தாலும் இது பொருந்தும் என்றுதான் இக் கட்டளையை எடுத்துக் கொள்ள முடியும். ஏனெனில், அல்லாஹ் எந்த ஒரு குறிப்பிட்ட நிலைக்கும் விதிவிலக்கு அளிக்கவில்லை. இந்த இறைக் கட்டளை தொழுது கொண்டிருப்பவர்களுக்கும் பொருந்தும் என மேற்கண்ட ஹதீஃதிலிருந்து அறிய முடிகிறது.

எனவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஜீவித காலத்தில் மட்டுமே சாத்தியமாகக் கூடிய நிகழ்வாக இது இருப்பதாலும், அவர்களின் மறைவிற்கு பிறகு அவர்கள் நம்மை நேரில் அழைக்க முடியாது என்பதாலும், இந்த ஆயத்தும், ஹதீஃதும் அவர்களின் ஜீவித காலத்தைப் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் இதன்மூலம் இப்போது அது சாத்தியமாகாது என்பதையும் உள்ளங்கை நெல்லிக் கனியாய் அறிந்து கொள்ள முடிகிறது. நிலைமை இவ்வாறு இருக்க தாங்கள் குறிப்பிட்டுள்ள விஷயமும் சாத்தியமற்ற ஒன்று என்பதை அறிவோமாக.

ஐயம் : அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியைப் பார்த்து கோபத்தில், “அல்லாஹ் வின் தூதராக நடிப்பவரே! என்று கூறிய தாக, இஸ்லாத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இமாம் கஜாலியின் “இஹ்யா உலுமுத்தீன் தொகுதி 2, பக்கம் 43ல் குறிப்பிடப்பட்டுள் ளதாக கூறப்படுவது உண்மையா? சுல்தான்ஜீ, ஆத்தூர்.

தெளிவு : “இஹ்யா உலுமுத்தீன்” அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்கள் பின்பற்ற சொன்ன ஹதீஃத்களைத் தெரிவிக்கும் ஹதீஃத் நூல் அல்ல. அது கஜ்ஜாலியினுடைய கருத்துக்கள் அடங்கிய புத்தகம். அவரது கருத்துக்கு ஆதாரமாக பல விஷயங்கள் எழுதப்பட்டிருக்கும். அவரது கருத்து என்னவென்றால், எதையாவது எழுதி வைத்ததுதான் அவரது கருத்து. அந்த புத்தகத்தைப் படித்திருக்கும் தாங்கள் இதை பல இடங்களில் அறிந்திருப்பீர்கள் என்று எண்ணுகிறோம். சில சம்பவங்களை கவனியுங்கள். ஜைது (ரழி) அவர்கள், தமது மனைவியை விவாகரத்து செய்து விடுகிறார்கள். பிறகு விதவையான அந்த அம்மையாரை அல்லாஹ்வின் கட்டளைப்படி (அல்குர்ஆன் : 33:37)

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வை கொச்சைப்படுத்தி அல்லாஹ்வின் தூதரை கண்ணியக் குறைவாக எதிரிகள் சொல்வதற்கும், “தப்ஸீர் ஜலாலைன்” என்ற தப்ஸீரை அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவதற்கும் காரணம் என்ன? நபி(ஸல்) அவர்களைக் கொச்சைப்படுத்தி விரிவுரை எழுதி இருக்கிறார் தப்ஸீர் ஜலாலைன் ஆசிரியர் ஜலாலைன் இதனை மேற்கோள் காட்டி, ஒரு அரபிக் கல்லூரி முதல்வரிடம் பேசும்போது, “ஜலாலைன் எவ்வளவுப் பெரிய “நாதா” அவரைப் போய் திட்டுகிறார்கள் நஜாத்காரர்கள் என்று வக்காலத்து வாங்கினார்! அல்லாஹ்வின் தூதரைப் பற்றி தவறாக எழுதி இருப்பதைக் கூறினால், நீங்கள் அவர் செய்தது தவறு என்று சொல்லாமல் அவரை நாதா என்கிறீர்களே என்று கேட்டதற்கு, எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சின்ன சின்ன தவறு கள் நடக்கத்தானே செய்யும். இதையயல்லாம், பெரிதுபடுத்துகிறார்கள் என்று சாந்தமாக பதிலளித்தார் அந்த முதல்வர். இதேபோல குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான நடக்கவே சாத்தியம் இல்லாத பல விஷயங்கள் அமல்களின் சிறப்புகள் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு பேசும்போது, தப்லீக் ஜமாஅத்தின் மூலமாக பலர் திருந்தி இருக்கிறார்கள் என்றார் சாந்தமாக!

நல்ல வேளை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாக இருந்தால் என்ன என்று நேரிடையாகக் கேட்டுவிடவில்லை. அதேபோல இஸ்லாத்தை கேலிக் கூத்தாகக் காண்பித்துக் கொண்டிருக்கும் ஃபிக்ஹ் நூல்களுக்கு வக்காலத்து வாங்கி அவைகளை மதரஸாக்களில் மாணவர்களுக்கு பாடமாக நடத்தவும் செய்கின்றனர். இந்த வகைகளைச் சேர்ந்ததுதான் இஹ்யா உல் உலுமூத்தீன் என்ற புத்தகமும் ஆகும்.

கவிஞர்கள் பொய்யர்கள்; அவர்களை வீணர்கள்தான் பின்பற்றுவார்கள் என்று அல்லாஹ் எச்சரித்தபின்னும், (பொய்யான அந்த கவிதைகளுக்கு பக்கபலம் சேர்க்கும்) இசைக்கருவிகளை உடைத்தெறியவே நான் நபியாக அனுப்பப்பட்டேன் என்று நபி (ஸல்) அவர்களும் எச்சரித்த பின்னும், இசை கூடும் என்று இசைக்கு வக்காலத்து வாங்கும் கல்விமான் அவர்(?) இப்படிப்பட்ட பேரறிஞர்(!) கஜ்ஜாலியின் ஞானம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரபிக் கல்லூரி மற்றும் மதரஸாக்களின் கல்விமான்கள்(?) அவர்களுக்காகவும் அவர்களிடம் கல்வி(?) பயிலும் மாணவர்களுக்காகவும் துஆ செய்வது வழக்கம். அல்லாஹ்வின் தூதர்(ஸல் அவர்கள் உம்மத்து நேர்வழியில் செல்ல விட்டுச் சென்றவை குர்ஆனும், ஹதீஃதும் மட்டுமே. எனவே, தாங்கள் குறிப்பிடும் கூற்று கஜ்ஜாலியின் கூற்றுதானே தவிர, நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஃத் அல்ல என்பதை அறிந்து கொள்வோமாக!

 

Previous post:

Next post: