குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 டிசம்பர்,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

நவம்பர் தொடர்ச்சி…..

இந்த நமது விளக்கத்துக்கு மறுப்பாக :

“உஸ்மான்(ரழி) அவர்களது பிரதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதன் அர்த்தத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வரிசைக் கிரமம், உச்சரிக்கும் ஓசை ஆகியவை உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது என்பதே அதன் பொருளாகும்.

இவ்வாறு அல்ஜன்னத் மே, 90, பக்கம் 34ல் எழுதி மேலும் 30 ஜுஸ்வுகள், ஜேர், ஜபர் குறியீடு இன்னும் எதனையயல்லாமோ எழுதி நம்மை நையாண்டி செய்திருந்தனர். நையாண்டிக்குப் பதில் அளிப்பதை விட்டு அவர்களும், மக்களும் விளங்க அவசியமானதை மட்டும் இங்கு எழுதுகிறோம்.

உஸ்மான்(ரழி) அவர்களது காலத்துப் பிரதியில் நிறுத்தல் குறியீடுகள், ஜேர், ஜபர் போன்ற குறியீடுகள் இல்லை என்பதை நாமும் அறியத்தான் செய்வோம். அந்தக் குறியீடுகள் பின்னால் மொழி வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்பட்டன என்பதையும் நாம் மறுக்கவில்லை.

இப்போது அவர்கள் எழுதியுள்ள “வரிசைக் கிரமம், உச்சரிக்கும் ஓசை ஆகியவை உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது என்பதே அதன் சரியான பொருளாகும்” என்ற வரிகளை உற்று கவனியுங்கள். வரிசைக் கிரமம் உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியைப் பார்த்து அமைத்துக் கொண்டார்கள் இதனை மறுப்பதற்கில்லை. “உச்சரிக்கும் ஓசை” எந்த அடிப்படையில் உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது? அதிலிருந்து ஓசை வந்து கொண்டிருந்ததோ? அதில்தான் ஜேர், ஜபர் இல்லை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனரே? ஜேர், ஜபர் இல்லாத குர்ஆனில் எப்படி உச்சரிக்கும் ஓசையை சரிபார்த்துக் கொண்டார்கள்?

ஆக அவர்களும் அவர்களை அறியாம லேயே ஒன்றை ஒப்புக் கொண்டுவிட்டார் கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் எப்படி ஓதப்பட்டு வந்ததோ அதேபோல் அபூபக்கர்(ரழி) ஆரம்ப பிரதியை உருவாக்கினார்கள். அதிலிருந்து உஸ்மான்(ரழி) பல பிரதிகள் எடுத்தார்கள். உஸ்மான்(ரழி) காலத்துப் பிரதியை அடிப்படையாகக் கொண்டது இப்போது நமக்கு மத்தியிலுள்ள குர்ஆன், உஸ்மான்(ரழி) காலத்தில் குர்ஆன் எப்படி உச்சரிக்கப்பட்டு வந்ததோ, அதே அடிப்படையை வைத்துத்தான் ஜேர், ஜபர் உருவாகும் காலத்தில் அவை போடப்பட்டிருக்க வேண்டும். ஜேர், ஜபர் போடப்படுவதற்கு முன்பு ஓதப்பட்ட குர்ஆனின் “உச்சரிக்கும் ஓசை” எப்படி இருந்ததோ அதேபோல்தான் ஜேர், ஜபர் போடப்பட்ட பின்பும் “உச்சரிக்கும் ஓசை” உள்ளது. அதில் மாற்றமில்லை என்பதை அவர்களும் ஒப்புக்கொண்டு விட்டார்கள். அதாவது “உச்சரிக்கும் ஓசை” முதலாவது: அதனைத் தொடர்ந்து, அதனடிப்படையில் ஜேர், ஜபர் குறியீடுகள்.

இப்போது விஷயத்திற்கு வருவோம். “உச்சரிக்கும் ஓசையில்” கட்டுப்பட்டவை தான் நீட்டல், குறுக்கல் குறிகளும், நிறுத்தல், நிறுத்தாமல் தொடரல் குறிகளுமாகும். ஜேர், ஜபர் குறியீடு வடிவில் வருவதற்கு முன் அவை எப்படி உச்சரிக்கப்பட்ட னவோ, அதேபோல், இக்குறிகளும் உச்சரிக் கப்பட்டுத்தான் இருக்கும் என்பதை அவர் களும் மறுக்க முடியாது.

அப்படி அவர்கள் மறுப்பார்களாயின் அப்படி எந்த ஒரு மொழியும் அமைய முடியாது என்பதைப் பாமரனும் அவர்களுக்குப் புரிய வைப்பான். சுக்கு, மிளகு, திப்பிலி என்று உச்சரிப்பதை சுக்குமி, ளகுதிப், பிலி என்றோ சுக்குமிளகுதிப்பிலி என்று ஒரு வார்த்தையாகவோ அறிவில் குறைந்தவனும் உச்சரிக்க மாட்டான். “உச்சரிக்கும் ஓசை” அடிப்படையில்தான் எழுத்து வடிவு அமையும். பேச்சு வழக்குக்குப் பிறகுதான் எழுத்து வழக்கு ஏற்பட்டது. இது உலகில் காணப்படும் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பதை அவர்களும் மறுத்தலாகாது.

எனவே அவர்களே ஒப்புக்கொண்டுள்ள “உச்சரிக்கும் ஓசை” அடிப்படையில்தான் வக்ஃபுலாஸிம் மற்றும் நிறுத்தல், தொடரல், நீட்டல், குறுக்கல் குறிகள் குர்ஆனில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை அவர்கள் உணர்வார்களாக.

மற்றபடி அவர்கள் நீளமாக அடுக்கிக் கொண்டு சென்றிருக்கும் குறிகள் அனைத்தும் குர்ஆன் ஓதும் வழிகளைக் கட்டுப்படுத்துபவை அல்ல. அவை பின்னால் வந்த வர்கள் தங்கள் செளகரியங்களுக்காகவும், தங்கள் மத்ஹபுகளுக்கேற்றவாறும் அமைத் துக் கொண்டவை என்பதையும் உணர்வார்களாக. இப்போது நகைப்பிற்கிடமானதும், முழுக்க அறியாமையின் அடிப்படையிலும் எழுப்பப்படும் வாதம் யாருடைய வாதம் என்பதை முடிவு செய்யும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடுகிறோம்.

அடுத்து தலைசிறந்த அல்குர்ஆன் விரிவுரையாளர்களின் 3:7 வசனம் பற்றியே விளக்கங்களைப் பார்த்து விட்டு, அவர்களின் இதழில் வரும் “முத்தஷாபிஹாத்” தொடர் கட்டுரையில் உண்மை இருக்கிறதா என்று பார்ப்போம்.

நபித்தோழர்களின் நிலை :

நபித்தோழர்களின் காலத்திலேயே 3:7 வசனம் பற்றிய இந்த மாறுபட்ட கருத்துக்கள் ஏற்பட்டுவிட்டன என்று அவர்கள் எழுதி இருந்தார்கள். அதற்கு ஆதாரமாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் கருத்தாகவும், இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் கருத்தாகவும் எடுத்து எழுதி இருந்தார்கள்.

அவற்றில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை முதலில் நாம் ஆராய்வோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் கருத்து:

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் சிறப்புக்குரிய நபித்தோழர்களில் ஒருவர், குர்ஆன் பற்றிய தெளிந்த ஞானம் உடையவர்கள். அவர்களுக்கு குர்ஆனின் விளக்கத்தை கொடுக்கும்படி அல்லாஹ்விடம் நபி(ஸல்) அவர்கள் துஆ செய்துள்ளார்கள். இவை அனைத்தையும் யாரும் மறுக்க மாட்டார்கள். அதேபோல் அவர்கள் இந்த உலகத்தி லுள்ள “வர்ராஸி கூனஃபில் இல்மி” என்ற ஆழ்ந்த அறிவுடையவர்களில் ஒருவர் என்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இங்கு எழுந்துள்ள பிரச்சனை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் 3:7 வசனத்தில் குறிப்பிட்டுள்ள முத்தஷாபிஹாத் வசனங்களுக்குரிய உண்மைப் பொருள்களை இறுதி முடிவுகளை) அறிவார்களா? என்பது தான். அதற்கு நாம் முதலில் அணுக வேண்டியது இன்று நம்மிடையே இருந்து வரும் “தஃப்ஸீர் இப்னு அப்பாஸ்” என்று அவர்களது பெயரிலுள்ள தஃப்ஸீர் தான். அவர்கள் சொல்லியுள்ள கருத்துக்கள் அந்த தஃப்ஸீரில் இடம் பெற்றிருக்க வேண்டும். அதில் காணப்படும் வாசகங்கள் வருமாறு:

வமா யஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ் அதன் உண்மைப் பொருளை (இறுதி முடிவை) அல்லாஹ்வையன்றி மற்றெவரும் அறியார் என்று குறிப்பிட்டுள்ளதோடு முடிக்காமல் “இத்துடன் வாசகம் முற்றுப் பெற்று பின்னர் அடுத்த வாசகம் துவங்குகிறது” என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இல்லல்லாஹ்வுடன் நிறுத்த வேண்டும். “வர்ராஸி கூனஃபில் இல்மி” அதனைச் சேர்ந்ததல்ல. அது அடுத்த வாசகத்தை சேர்ந்தது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். (தஃப்ஸீர் இப்னு அப்பாஸ், பக்கம் 47)

இதற்கு இன்னும் தெளிவாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள், “வமாயஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ் வயகூலுர்ராஸி கூனஃபில் இல்மி ஆமன்னாபிஹி” என்று ஓதிக்கொண்டிருந்ததாக அப்துர் ரஜாக் அவர்களுக்கு மஃமர் அறிவித்ததாகவும், அவருக்கு இப்னு தாவூஸ் அறிவித்ததாகவும், அவருக்கு அவரது தந்தை அறிவித்ததாகவும், அறிவுப்புத் தொடருடன் தஃப்ஸீர் இப்னு கதீர் பாகம் 1, பக்கம் 347-ல் பதிவாகியுள்ளது.

இவ்வறிவிப்பின் மூலம் இல்லல்லாஹ் என்பதோடு முதல் வாசகத்தை முடித்து விட்டு “வயகூலூன” என்னும் வாசகத்தை ராஸிகூனவோடு இணைத்துப் பின்னால் வரும் ராஸிகூன வாசகம் தனியானது என்பதை இப்னு அப்பாஸ்(ரழி) உணர்த்தியுள்ளார்கள்.

மேலும் “நான் அதன் தஃவீலை (விளக்கம்) அறியக்கூடிய ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன்” என்று இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக முஜாஹித் அவர் கள் அபூ நஜீஹ் அவர்களிடம் கூறியதாக இப்னு கதீர் பாகம்1, பக்கம் 347ல் பதிவாகி யுள்ளது. அதல்லாமல் “முத்தஷாபிஹ் வசனங்களின் உண்மைப் பொருளை அறிந்து கொள்பவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற கல்வியில் சிறந்தவர்கள் கூறியதாக எந்த நூலிலும் ஆதாரப்பூர்வ மான அறிவிப்பாளர் வரிசையுடன் இல்லை. இவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் பெயரை அநியாயமாக இழுத்துள்ளனர். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் வி­யத்தில் முஜாஹித் அவர்களுக்குத் தடுமாற்றம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் அழகாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

முஜாஹித்(ரஹ்) கூறுகிறார் : நான் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை பல முறை ஓதிக்காட்டி ஒவ்வொரு வசனத்தையும் ஓதியபின் நிறுத்திவிட்டு அதைப் பற்றிக் கேட்பேன். அவர்களோ இந்த உம்மத்தின் தலைசிறந்த அறிஞராக இருந்ததோடு “அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அதன் தஃவீலை (இறுதி முடிவு) அறியமாட்டார்” என்று கூறிக் கொண்டிருந்தவர்களில் ஒருவராக இருந் தும், முஜாஹிதாகிய எனக்கு ஒவ்வொரு ஆயத்துக்கும் பதில் அளித்தார்கள். (ப.இ. தைமிய்யா, பாகம் 13, பக்கம் 284)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் முஜாஹித் ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கம் கேட்க அவர்களும் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே முஜாஹித் அவராக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு முத்தஷாபிஹாத் வசனங் களின் உண்மைப் பொருள்கள் தெரியும் என்று முடிவு செய்து கொண்டிருக்கிறார். உதாரணமாக, “அலக்” என்ற பதத்திற்கு “முஜாஹித் விளக்கம் கேட்டபோது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் இரத்தக் கட்டி என்று விளக்கம் கொடுத்துதான் இருப்பார்கள். இதுபோல் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு விளக்கம் கேட்டபோது அவர்களுக்குத் தெரிந்த விளக்கத்தை சொல்லியே இருப்பார்கள். இதை வைத்து முஜாஹித் அவர்கள் 3:7 வசனத்தில் வரும் “தஃவீல்” என்ற பதத்திற்கும் விளக்கம் என்ற தப்பான பொருளைக் கொண்டு, 3:7 வசனத்திலுள்ள இல்லல்லாஹ் என்ற வசனத்துடன் வர்ராஸிகூனஃபில் இல்மியையும் அவராகச் சேர்த்துக் கொண்டார்.

இதனை 3:7 வசனம் பற்றி “அல்லாஹ் வைத் தவிர மற்றெவரும் அதன் தஃவீலை அறியமாட்டார் என்று கூறிக் கொண்டி ருந்தவர்களில் ஒருவராக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் இருந்தார்கள்” என்று முஜாஹித் கூறுவதே உறுதி செய்கிறது. அதாவது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு “”தஃவீல்” (விளக்கம் அல்ல உண்மைப் பொருள்-இறுதி முடிவு) அல்லாஹ் மட்டுமே அறிவான். அதே சமயம் அது பற்றி நானறிந்த விளக்கத்தைச் சொல்லுகிறேன் என்ற கருத்தில்தான் சொல்லி இருக்கிறார் கள். அன்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் “”அலக்” என்ற பதத்திற்கு இரத்தக் கட்டி என்ற விளக்கத்தையே கொடுத்திருப்பார் கள். அவர்கள் அறிந்த விளக்கம் அதுதான். இன்று ஆராயப்படும் போது கரு ஒருபோதும் இரத்தக்கட்டி நிலைக்கு வருவதில்லை. அது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டு ஆகாரத்தை உறிஞ்சி வளர்வதால் அட்டை என்ற பொருளில் “”அலக்” என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள் ளது என்ற விளக்கத்தை இன்று தருகிறார் கள். நாளை வேறு விளக்கங்களும் பெறப் படலாம் என்கிலும் அதன் உண்மைப் பொருளை இறுதி முடிவை அல்லாஹ்வே அறிவான் என்பதே உண்மையாகும்.

ஆனால் நிச்சயமாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு அன்று இந்த விளக்கம் கிடைத்திருக்க முடியாது. ஆயினும் அவர்கள் “வர்ராஹிகூனஃபில் இல்மி” என்ற ஆழ்ந்தறிவுடையவர்களில் ஒருவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இதி லிருந்து வர்ராஹிகூனஃபில் இல்மி என்பவர்கள் முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருளை-இறுதி முடிவை அறிய முடியாது. அதனை அல்லாஹ் மட்டுமே அறிவான். எனவே 3:7 வசனத்தில் இல்லல்லாஹ்வோடு முதல் வாக்கியத்தை நிறுத்த வேண்டும். வர்ராஸிகூனஃபில் இல்மி அதற்கடுத்த வாக்கியத்தைச் சேர்ந்தது என்பதைச் சாதாரணமானவர்களும் விளங்கிக் கொள்ள முடியும்.

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்களின் கருத்து :

இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் 3:7 வசனத்தில் “லாயஃலமு தஃவீலஹூ இல்லல்லாஹ். வயகூலுர் ராஸிகூ னஃபில் இல்மி” என்று ஓதியதாக பிற்கால தஃப்ஸீர்களில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் ஓதிய பிரகாரம் இந்த வசனத்திற்கு இரண்டு அர்த்தங்களுக்கு இடமில்லை. ஒரு அர்த்தம் மட்டுமே உண்டு” என்று ஒரு சாரார் கூறுவதாக அவர்கள் எழுதிவிட்டு இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அவ்வாறு ஓதினார்கள் என்பதற்கு எந்த அறிவிப்பாளர் வரிசையுமில்லை. ஆதாரப்பூர்வமான ஒரு நூலிலும் அது இடம் பெறவில்லை. இது இப்னு மஸ்ஊத்(ரழி) பெயரால் கூறப்படும் பச்சைப் பொய்யைத் தவிர வேறில்லை என்று கூறி அதனை நிராகரித்துள்ளனர். (அல்ஜன்னத் அக். 88, பக்கம் 42)

இங்கு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும், அரபி இலக்கணத்திற்கும் ஒத்த நிலையில் இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள் பற்றி சொல் லப்படுவதை, அறிவிப்பாளர் வரிசை இல்லை, ஆதாரப்பூர்வமான நூலில் பதிவு இல்லை, அதனால் அது பச்சைப் பொய் என்று தீர்ப்பளித்து விட்டார்கள். அதே சமயம் இக்கூற்று பிற்கால தஃப்ஸீர்களில் எழுதப்பட்டுள்ளதாகவும் அவர்களே ஒப்புக் கொண்டுமுள்ளார்கள். இந்த நிலை யில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் அரபி இலக்கணத்திற்கும் முரண்படுகிறது. அறிவிப்பாளர் வரிசையும் இல்லை, ஆதாரப்பூர்வமான நூல்களில் பதிவும் இல்லை ஏன்? பிற்கால தஃப்ஸீர்களிலும் 3:7 வசனத்தைப் பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் குறிப்பிடும்போது முத்தஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை (உண்மைப் பொருளை – இறுதி முடிவை என்பதையே தவறாக அவர்கள் விளக்கம் என்று இங்கு குறிப்பிட்டுள்ளனர்) அறிந்து கொள்பவர் கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற கல்வியில் சிறந்தவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார்கள்” (அல்ஜன்னத் அக். 88, பக்கம் 41) என்று அவர்கள் எடுத்து எழுதி இருக்கும் வாசகம் இல்லை.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது. அவர்களுடைய வாதத்திற்கு ஒத்த கருத்தாக இல்லை என்றால் அது குர்ஆன், ஹதீஃதுக்கு ஒத்திருந்தாலும் பச்சைப் பொய். தங்களின் இந்தக் கூற்றை நியாயப்படுத்த அறிவிப்பாளர் வரிசை, ஆதாரப்பூர்வமான நூல் என் றெல்லாம் எழுதுவார்கள். தங்களின் வாதத்திற்கு ஒத்த கருத்தாக இருந்தால் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும், அரபி இலக்கணத்திற்கும் முரண்படுவது மட்டுமல்ல, சாதாரண ஒரு நூலிலும் காணப்படாவிட்டாலும் இவர்களாகக் கற்பனை செய்து அதனைப் பெரிய ஆதாரமாக எடுத்து எழுதலாம். அதாவது “நான் அதன் தஃவீலை அறியக் கூடிய ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன்” என்று பதியப்பட்டுள்ளதை “முத்தஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தை அறிந்து கொள்பவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்ற கல்வியில் சிறந்தவர்களில் நானும் ஒருவன்” என்று திரித்து எழுதலாம். இதுதான் அவர்களின் நிலை. தங்களின் தவறான கருத்தை நிலைநாட்ட அவர்கள் வீண் வாதம் செய்கிறார்களே அல்லாமல், சத்தியத்தை விளங்கிக் கொள்கிற, விளக்குகிற, நோக்கத்தில் நியாயமான வாதத்தை எடுத்து வைக்கவில்லை என்பதற்கு இதை விட ஆதாரம் வேண்டுமா?

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அவ்வாறு “வமாயஃல முதஃவீலஹூ இல்லல்லாஹ் வயகூலுர்ராஸிகூனஃபில் இல்மி ஆமன்னா பிஹி” என்று ஓதியதாக அறிவிப்பாளர் வரிசையுடன் இப்னு கத்ரில் காணப்படுகிறதே அதற்கு என்ன மறுப்பு தெரிவிக்கப் போகிறீர்களோ?

“நான் அதன் தஃவீலை அறியக்கூடிய ஆழ்ந்த அறிவுடையோரில் ஒருவனாவேன்” என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறி யுள்ளதற்கு “குர்ஆனின் விளக்கத்தை அறியக்கூடிய ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன்” என்று பொருள் கொள்ள முடியுமேயல்லாமல் “முத்தஷாபிஹாத் வசனங்களின் உண்மைப் பொருள்களை அறியக்கூடிய ஆழ்ந்தறிவுடையோரில் ஒருவனாவேன்” என்று பொருள் கொள்ள முடியாது.   (இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

 

Previous post:

Next post: