சத்தியத்தில் இருப்பவர்கள் சொற்பமானவர்களே!

in 2018 டிசம்பர்

* நபி நூஹ்(அலை) அவர்களை இறை தூதராக ஏற்றுக்கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களின் ஒன்பதாவது தலைமுறையில் பிறந்த நபி நூஹ்(அலை) அவர்களுக்கு (தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 17)

நாற்பதாவது வயதில் நபித்துவம் கொடுக்கப்பட்டு (இப்னு அப்பாஸ்(ரழி) தஃப்சீர் இப்னு அபீஹாத்திம், இப்னு கஸீர் பாகம் 7, பக்கம் 18,19)

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக 950 ஆண்டுகள் (என நீண்ட கால அளவுக்கு) அவர்களுடைய சமூகத்தா ருடனேயே தங்கியிருந்து (29:14, நோவா வின் நாட்களெல்லாம் தொள்ளாயிரத்து ஐம்பது வருடமாகும் விவிலியம் பழைய ஏற்பாடு ஆதியாகமம் 9:28,29)

இரவிலும், பகலிலும் (71:5) இரகசியமாகவும், அந்தரங்கமாகவும் (71:9) சப்தமாகவும், பகிரங்கமாகவும் (71:8,9) நபி நூஹ்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுத்தார்கள்.

மொத்தம் 1050 ஆண்டுகள் வாழ்ந்துள்ள நபி நூஹ்(அலை) அவர்கள் (தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் இப்னு கஸீர் 7:19) இவ்வளவு பெரிய நீண்ட காலம் அழைப்பு விடுத்த பின்னரும் அவர்களது ஏகத்துவ அழைப்பை ஏற்றுக் கொண்டது மொத்தம் 80பேர் என்று ஒரு அறிவிப்பிலும் (இப்னு அப்பாஸ்(ரழி), மொத்தம் 72 பேர் என்று மற்றுமோர் அறிவிப்பிலும் (கஅப் அல் அஹ்பார்(ரஹ்), வெறும் 10 பேர் என்பதாக வேறு ஓர் அறிவிப்பிலும் (தஃப்ஸீர் இப்னுகஸீர் 4:625) காணப்படுகிறது. அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான்.

அவர்களுடைய மனைவி ஏற்றுக்கொள்ள வில்லை (66:10) அவர்களுடைய மகன் ஏற்றுக் கொள்ளவில்லை (11:42,43,45, 23:27) உலக அழிவுக்கான வெள்ளப் பிரள யத்தின்போது கப்பலில் ஏறிக்கொண்ட சத்தியத்திலுள்ள சொற்பமானவர்களைத் தவிர மற்ற அனைவரும் அழிக்கப்பட்டார்கள் (11:40, 23:27) உலகில் எவருமே எஞ்சியிருக்கவில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொண்ட இறை தூதர் நூஹ்(அலை) அவர்களின் சமூகத்தாரில் எவருக்காவது அல்லாஹ் கருணை காட்டியிருந்தால் கைக்குழந்தையைச் சுமந்து கொண்டிருந்த ஒரு தாய்க்குக் கருணை காட்டியிருப்பான். ஆனால் அன்றைய தினம் யாருக்கும் கருணை காட்டப்படவில்லை (அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி) ஹாகிம், தஃப்சீர் தபரீ, தஃப்சீர் இப்னு அபீஹாத்திம் தஃப்சீர் இப்னு கஸீர் 4:632)

* நபி இப்ராஹீம்(அலை) அவர்களை இறை தூதராக ஏற்றுக் கொண்டது சொற்பமானவர்களே!

தற்போது யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகிய முப்பெரும் சமூகத்தா ராலும் மதிக்கப்படும் மூத்த இறைதூதரான இப்ராஹீம்(அலை) அவர்கள் சுமார்175 வருடங்கள் வாழ்ந்து (தஃப்ஸீர் மாஜிதி, இப்னு கஸீர் 7:21) ஓரிறைக் கொள்கையின் பால் அழைப்பு விடுத்தபோதிலும் அவர்களது சமூகத்தார் அவர்களைப் பொய்ப் பிக்கவே முற்பட்டனர் (22:42) இப்ராஹீம் (அலை) அவர்களின் சகோதரர் ஹாரூன் என்பவருக்குப் பிறந்த லூத்(அலை) அவர்கள் மாத்திரமே உண்மை வழியில் சத்தியத்திலிருந்த (16:120) இப்ராஹீம் (அலை) அவர்கள் மீது ஈமான் கொண்டு இருவரும் ஷாம்(எனும் சிரியா) நாட்டிற்குப் புலம் பெயர்ந்து சென்றதாகக் காண முடிகிறது. (29:26, தஃப்சீர் இப்னு கஸீர், 7:30,31, தஃப்சீர் மாஜிதி)

* நபி லூத்(அலை) அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

ஓரிறைக் கொள்கையை ஏற்று நபி இப்ராஹீம்(அலை) அவர்களுடன் புலம் பெயர்ந்து சென்ற லூத்(அலை) அவர்களை அல்லாஹ்வின் நேசரான இப்ராஹீம் (அலை) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கிழக்கு ஜோர்தானில் உள்ள சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட “சதூம்” வாசிகளுக்கும் அப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான பெரும் தொகை மக்களைக் கொண்ட பகுதிகளுக் கும் இறைதூதராக அனுப்பப் பெற்றார்கள். (7:80,81)

“சதூம்”வாசிகள் அவர்களுக்கு முன்னர் உலக மக்களில் வேறு யாருமே செய்திராத ஓரினச் சேர்க்கை எனும் இழிவான கெட்ட பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்கள் அவர்களிடம் இருந்த இந்த இழி செயலிலிருந்து அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த இறை தூதர் லூத்(அலை) அவர்கள் பல வருடங்கள் கடுமையாகப் போராடினார்கள். (7:80,81,11:78,79, 15:72, 26:165,166, 27:54,55, 29:28, 29:29) ஆனாலும் அவர்கள் திருந்த மறுத்து நபிக்குத் தொல்லை கொடுத்தனர். (7:82, 26:167, 27:56)

இதனால் அச்சமுதாயத்தார் சுமார் பல இலட்சம் பேர் அடங்கிய நகரம் தலைகீழாகப் புரட்டப்பட்டும் அவரவர் பெயர் பொறிக்கப்பட்டு அடையாளமிடப்பட்ட கற்கள் (11:82,83) பொழியப்பட்டும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டார்கள் (7:83,84, 11:81,82,83, 29:34, 15:65,73,74, 26:173, 27:58, 51:33,34,5, 54:34,38)

இறை வழிகாட்டுதலுடன் சத்தியத்திலுள்ள இறைதூதர் லூத்(அலை) அவர்களும் அவர்களின் ஒரு வீட்டிலுள்ள சொற்பமான வர்களைக் கொண்ட குடும்ப உறுப்பினர்களும் மாத்திரமே அவ்வழியிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள் (7:83, 51:35,36) அவர்களது மனைவியைத் தவிர (7:83, 26:171, 27:57, 29:32,33, 37:135, 66:10, 11:81, 15:60) அவளும் அழிவுக்கு ஆளானாள். (66:10 தஃப்சீர் இப்னு அபீ ஹாத்திம், இப்னுகஸீர் பாகம் 4, பக்கம் 667)

* நபி ஷிஐப்(அலை) அவர்களை இறை தூதராக ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

இறைதூதர் இப்ராஹீம்(அலை) அவர்களின் வழித்தோன்றல்களிலுள்ள உயர்ந்த கோத்திரத்தில் (11:91,92) வந்தவரும் நபிமார்களில் பெரிய பேச்சாளர் கத்தீபுல் அன்பியா என வர்ணிக்கப்படுபவரும் தூய்மையான அரபி மொழியில் அழகாக உரையாற்றக் கூடியவருமான ஷிஐப் (அலை) அவர்கள் ஜோர்தானின் தெற்கே அமைந்துள்ள மஆன் எனும் பகுதியில் உள்ள “மத்யன்” எனும் பிரதேசத்தில் “அல்அய்கா” எனப்படும் ஒரு மரத்தை வழிபட்டு வந்தவர்களும் பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களும் (11:87) வழிப்பறிக் கொள்ளை (7:86) அளவை நிறுவையில் மோசடி(7:85) போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களும் செழிப்பாக வாழ்ந்து வந்த (11:86) தோப்புக்காரர்கள் அஸ்ஹாபுல் அய்க்கா (15:78, 26:176) என்ற பெயரில் அழைக்கப்படுபவர்களும் எண்ணிக்கையில் மிக அதிகமானவர்களும் (7:86) பூர்வீக அரபுக் குடிகளுமான “மத்யன்” மக்களுக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள் (11:84-86, 7:85, 26:181-183, அல்பிதாயா வந்நிஹாயா, அல்முன்ஜித், தஃப்சீர் மாஜிதீ, தஃப்சீர் இப்னு கஸீர் 4:637, 3:821)

ஆனாலும் நபியவர்களின் ஓரிறை அழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்த அச்சமுதாயத்தைச் சேர்ந்த கர்வம் கொண்ட பிரமுகர்கள் ஷிஐப்(அலை) அவர்களையும் அவர்களோடு சத்தியத்தில் இணைந்திருந்த சொற்பமானவர்களையும் ஊரை விட்டும் வெளியேற்றியே தீருவோம் என்று அச்சுறுத்தினார்கள் (7:88) என்றும் நிச்சயமாக உம்மை நாங்கள் கல்லெறிந்து கொல்வோம் என்றும் கொலை மிரட்டலில் ஈடுபட்டார்கள்.

இறை வழிகாட்டுதலின்படி சத்தியத்திலிருந்த ஷிஐப்(அலை) அவர்களையும் அவர்களோடு இருந்த சொற்பமானவர்களையும் அல்லாஹ் அவனது அருள்கொண்டு காப்பாற்றினான். (11:94)

ஏற்றுக்கொள்ள மறுத்து ஆணவத்துடன் எதிர்த்த பெரும்பாலானவர்களைக் கொண்ட கூட்டத்தினரை பயங்கரமான நிலநடுக்கத்தைக் கொண்டும் (7:91) இடி முழக்கத்தைக் கொண்டும் (11:94) நெருப்புப் பொறிகளையும் தீப்பிழம்புகளையும் பிரம்மாண்டமான வெந்தணல்களையும் தாங்கி மழை இருள்போல் வந்து நிழலிட்ட கருமேகங்களைக் கொண்டும். (26:189)

வானிலிருந்து இடிமுழக்கம் அவர்களைத் தாக்க அவர்களுக்குக் கீழிலிருந்து கடுமை யான நிலநடுக்கம் ஏற்பட மேகத்திலிருந்து நெருப்புப் பொறிகளும் தீப்பிழம்புகளும் வெந்தணல்களும் அவர்கள் மீது வீசி எறியப்பட அனைவரும் மாண்டார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 832-834)

* நபி ஹூத்(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

தென் அரேபியாவில் யமன் நாட்டின் எல்லையை ஒட்டிய “ஹளரமவ்த்” எனும் பிரதேசத்தில் கட்டடக் கலையில் கைதேர்ந் தவர்களாக உயரமான தூண்களைக் கொண்ட பிரமாண்டமான குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்த (26:128-135, 89:6-8) மிகப்பெரும் பலமும், வலிமையையும், செல்வச் செழிப்பையும், தோட்டங்கள், ஆறுகள், மக்கட்செல்வம், பயிர்கள், கனிகள் ஆகியவற்றை நிறைவாகப் பெற்று அதற்கேற்ப கர்வமும் அகம்பாவமும் கொண்ட (41:15, 11:59) ஆதுல் ஊலா (53:50) “முதலாம் ஆத்” என்று அழைக்கப்படும் கல் நெஞ்சக்காரர்களான “ஆத்” சமுதாயத்தாரை நல்வழிப்படுத்த (7:65) இறை தூதர் ஹூத்(அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். (7:65, 11:50)

ஹூத்(அலை) அவர்களை எதிர்த்த ஆத் சமுதாயத்தாரில் ஏக இறைவனை மறுத்த பிரமுகர்கள் ஹூதே நிச்சயமாக நீர் அறியாமையில் இருப்பதாகவே நாங்கள் கருதுகி றோம். மேலும் நீர் பொய்யர்களில் ஒருவர் என்றும் கூறினார்கள் (7:66) ஹூதே நீர் எங்களிடம் எந்தச் சான்றையும் கொண்டு வரவில்லை நீர் சொல்வதற்காக நாங்கள் எங்கள் தெய்வங்களைக் கைவிடப்போவது மில்லை நாங்கள் உம்மை நம்பப்போவதுமில்லை என்றும் கூறினார்கள். (11:53)

மேலும் நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால் நீர் எதைக் குறித்து எங்களுக்கு எச்சரிக்கை செய்கிறீரோ அதை அவசரமாக எங்களிடம் கொண்டு வாரும் என்றும் கூறினார்கள். (7:70)

அதனால் ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து அவர்கள் மீது வீசிய விஷம் நிரம்பிய ஒவ்வொரு பொருட்களையும் அடியோடு அழித்துவிடக்கூடிய கடுமையான புயல், காற்றால் அனைவரும் அழிக்கப்பட்டார்கள் (69:6,7, 46:25, 54:19, 51:41, 42)அவர்களில் எவரும் மிஞ்சவில்லை. (69:8)

இறை வழிகாட்டுதலின்படி சத்தியத்திலிருந்த ஹூத்(அலை) அவர்களும் அவர்களை ஏற்றுக்கொண்ட சொற்பமானவர்களும் இறைவனால் காப்பாற்றப்பட்டனர் (7:72, 11:58)

* நபி ஸாலிஹ்(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

“ஆத்” சமுதாயத்தாருக்குப் பின்னர் (7:74) மதீனாவுக்கும் “தபுக்”குக்கும் இடையே ஹிஜ்ர் எனும் பகுதியிலுள்ள “மதாயின்” எனும் ஊரில் ஆடம்பரம் ஆணவம், படாடோபம் கேளிக்கை மோகம் ஆகியவற்றுக்காக (15:82) மலைகளைக் குடைந்து (7:73, 15:82, 26:149, 89:9) கல் மாளிகைகளும், மலைக்குகைகளும் அமைத்துப் பாதுகாப்பாகவும் படாடோப மாகவும் (11:61, அல்பிதாயா வந்நிஹாயா, தஃப்சீர் மாஜிதீ, இப்னுகஸீர் 4:647) செழிப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்த (11:61, 26:146, 26:147,148) பல தெய்வ நம்பிக்கையைக் கொண்ட (11:62) ஒன்பது கோத்திரத்தைச் சேர்ந்த (27:48) ஸமூது கூட்டத்துக்கு ஹிஜ்ர் எனும் ஊரைச் சேர்ந்த ஸாலிஹ் (அலை) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்கள். (7:73)

எனினும் நபி ஸாலிஹ்(அலை) அவர்களை அவர்கள் எதிர்த்து அல்லாஹ்வுடைய கட்டளையை மீறி அற்புதமாக அவர்க ளுக்கு அளிக்கப்பட்ட (7:73, 17:59, 54:27) ஒட்டகத்தை அறுத்து (7:77, 11:65, 26:157, 54:27,28, 91:14) அல்லாஹ்வுடைய தூதரை பீடை என்று தூற்றியதுடன் (27:47) அவர் களைப் பொய்யர் என்று அவதூறு கூறி (54:25) அவர்களையும் அவர்களோடு சத்தியத்தில் இருந்த சொற்பமானவர்களையும் கொலை செய்வதற்காகத் திட்டம் தீட்டினார்கள். (27:49-51)

அதன் விளைவாக அவர்கள் அனைவரும் (27:51, 53:51 வானிலிருந்து பேரிடி முழக்கம் போன்ற பயங்கரமான அண்டம் கிடுகிடுக்கச் செய்யும் பெரும் சப்தம் தாக்கியும் (51:44,45, 54:31, 69:5,6) கல்மாரி பொழியப்பட்டும் கீழிருந்து கடுமையான நிலநடுக்கம் எனும் பூகம்பம் ஏற்பட்டும் ஒரே நேரத்தில் அனைவரும் அழிக்கப்பட்டார்கள். (7:78, 11:67, 15:83, 41:17, 51:44, 54:31, 69:5)

இறை வழிகாட்டுதலின்படி சத்தியத்திலிருந்த நபி ஸாலிஹ்(அலை) அவர்களும் அவர்களை சேர்ந்த சொற்பமானவர்களும் இறைவனால் காப்பாற்றப்பட்டனர். (11:94)

*  நபி மூஸா(அலை) அவர்களையும் ஹாரூன்(அலை) அவர்களையும் இறை தூதர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

எகிப்தில் அன்றைய கால உயர் குலமாகக் கருதப்பட்ட “கிப்தி” குலத்தில் பிறந்த (தஃப்சீர் இப்னு கஸீர் 6:738) அக்கால மக்களில் சிறந்தவர்களாக இருந்த இஸ்ர வேலர்களை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதி கீழ்த்தரமான வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்திய (தஃப்சீர் இப்னு கஸீர் 6:739) நிச்சயமாக அந்நேரம் பூமியில் தன் ஆதிக்க வலிமை மிக்க (10:83, 20:24,43) தன்னுடைய ஆட்சி அஸ்தமிப்பதற்கான அறிகுறியாக ஜெரூசலத்திலுள்ள பைத்துல் மக்திஸில் இருந்து புறப்பட்டு வந்த நெருப்பு ஒன்று இஸ்ரவேலர்களின் இல்லங்களை விட்டுவிட்டுத் தனது இனமான கிப்திகளின் இல்லங்களில் மட்டும் நுழைந்தது போன்ற அதிர்ச்சி தரும் கனவைக் கண்டு (தஃப்சீர் இப்னு கஸீர் 1:201) அதன் விளக்கமாக நபி இஸ்ஹாக்(அலை) அவர்களின் வாரிசுகளான இஸ்ரவேலர்களில் ஓர் ஆண் மகன் பிறந்து அவரது கரத்தால் எகிப்தின் சர்வாதி கார ஆட்சியாளனாகிய தனக்கு ஆபத்து ஏற்படும் என்று இஸ்ரவேலர்களின் மத்தியில் வாழையடி வாழையாகப் பேசப்பட்டு வந்த செய்தியால் தனது ஆட்சி அதிகாரத் திற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பீதி அடைந்திருந்த (தஃப்சீர் இப்னு கஸீர் 1:200-205, 6:738-741) அந்தக் குழந்தை பிறந்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையு டன் இருந்த (தஃப்சீர் இப்னு கஸீர் 6:741)

எந்தக் குழந்தை பிறந்து வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இஸ்ரவேலர்களின் பல்லாயிரக் கணக்கான குழந்தைகளைக் கொடூரமாக அறுத்துக் கொன்று குவித்த
(14:6, 2:49,7:127,141, 28:14, தஃப்சீர் இப்னு கஸீர் 6:741)

இஸ்ரவேலர்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளெல்லாம் அறுத்துக் கொலை செய்வதற்காக நீளமான வாள்களைக் கையில் கொடுத்துப் படையினரை ஏவி விட்ட (தஃப்சீர் இப்னு கஸீர் 4:936-938, 1:200-205) இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கேவலமான பணிகள் கொடுத்துக் கொடுமைப்படுத்திய (2:49, தஃப்சீர் இப்னு கஸீர் 1:200-205) பூமியில் அத்துமீறிய கர்வம் கொண்டு அகந்தையும், ஆணவமும் கொண்டவனாக வரம்பு மீறி நடந்த (28:4, 23:46, 44:31)

அன்றைய ஆட்சியாளர்களில் இருந்த கொடுங்கோலர்களுக்கே தலைவனாகக் கருதப்பட்டு அவ்வாறு அழைக்கப்பட்ட (தஃப்சீர் இப்னு கஸீர் 1:200இன் சிறு குறிப்பு) அன்று தனது ஆட்சிக்குட்பட்டவர்களை ஒன்றுதிரட்டி நானே உங்களின் மேலான இறைவன் என்று உரத்த குரலில் பிரகடனப்படுத்திய (79:23,24, 28:38, தஃப்சீர் இப்னு கஸீர் 6:780-784)

எகிப்தின் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டுப் பின்னால் வருவோருக்குப் பெரும் படிப்பினைக்காகப் பாதுகாக்கப்பட்டுப் பத்திரமாகக் கெய்ரோ அருங்காட்சியகத்தில் இன்றளவும் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் சடலத்திற்குச் சொந்தமான (10:90-92, தப்சீர் இப்னு கஸீர் 4:556-561)

சாட்சாத் இறை சாபத்திற்குரிய எகிப்தின் அடக்குமுறை ஆட்சியாளனாக வும், சர்வாதிகாரியாகவும் எல்லை மீறிய கொடுங்கோலனாகவும் உலகமகா ஆணவத் தின் பிறப்பிடமாகவும் இருந்தபோது பிறக்கும் ஆண் குழந்தைகளையயல்லாம் அறுத்துக் கொலை செய்யும் காலகட்டத்தில் பிறந்த குழந்தையான மூஸா(அலை) அவர்களை கொடியோனான ஃபிர்அவ்னு டைய கைகளில் தவழச் செய்து அவனது மடியிலேயே செல்லமாக வளர்த்தெடுத்து அவனது மஞ்சத்தில் புரள வைத்து நெஞ்சில் இடம் பிடிக்கச் செய்து அவனது அரச மாளிகையில் வளர்த்தெடுத்து மன்னர்க ளின் உணவுண்ணக் கொடுத்து வாலிப வயது வரை அவனது பராமரிப்பிலேயே வளர்த்தெடுத்த நபி மூஸா(அலை) அவர்களை (20:38-40, 28:7-9,12,13,56, 26:18,59, 7:137)

ஃபிர்அவ்னிடம் கொத்தடிமைகளாக சிறைப்பட்டிருந்த இஸ்ரவேலர்களை அவனது கொடூரப் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவர்களது தாய்வழிச் சகோதரர் (5:25, 7:111,142,150,151, 10:87, 19:53, 20:30,42, 23:45, 25:35, 26:36, 28:34,38) ஹாரூன் (அலை) அவர்களையும் நபியாகத் துணையாகக் கொடுத்து (20:42, 23:45, 25:35, 26:13, 28:34,35) கையில் பிரகாசம் (7:108, 20:22, 26:33, 27:12, 28:32) கைத்தடி பாம்பாக மாறுதல் (7:107,117, 20:20, 26:32,45, 27:10, 28:31) வெள்ளப்பெருக்கு, வெட்டுக் கிளிகள், செடிப்பேன்கள், தவளைகள், இரத்தம், (7:133) பஞ்சம் பிடிக்கச் செய்தல் (7:130) போன்ற பலமான சான்றுகளையும் கொடுத்து 7:103, 10:75) மறுபடியும் ஃபிர்அவ்னிடமே அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

ஆனால் அவன் உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தவறான வழியிலும் இறை மறுப்பிலும் பிடிவாதமாகத் தொடர்ந்தும் இருந்ததுடன் அநியாயமாக வும் ஆணவத்தோடும் சத்தியத்தை விடாப்பிடியாக எதிர்த்துக் கொண்டும் இருந்தான் அதனால் கொடியவனான ஃபிர்அவ்னையும் நூறாயிரம் பேர் கொண்ட அவனுடைய பெரும் படையினரையும் இஸ்ரவேலர்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (2:50) கடலில் மூழ்கடித்து அல்லாஹ் அழித்துவிட்டான். (2:50, 10:90, 20:78, 44:24)

நூறாயிரம் பேர் கொண்ட (தஃப்சீர் இப்னு கஸீர் 4:558) அவனது பெரும் படை யினருக்கு முன்னால் சத்தியத்தில் சொற்பமானவர்களாக இருந்த இஸ்ரவேலர்களை அல்லாஹ் தனது பேரருளால் பாதுகாத்தான். (2:49,50, 10:90, 26:52-54)

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது: ஃபிர்அவ்னும் அவனுடைய கூட்டத்தாரும் தங்களைத் துன்புறுத்துவார்கள் என்ற அச்சத்தால் அவனுடைய சமுதாயத்தாரில் சொற்பமானவர்களைத் தவிர (வேறு யாரும்) மூஸாவின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை (10:83) என்பது இஸ்ரவேலர்கள் அல்லாத ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த அவனது துணைவியார், அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறை நம்பிக்கையாளர் அவனுடைய கருவூலக் காப்பாளர் ஆகிய சொற்பமானவர்களேயாகும். (தஃப்சீர் தபரீ, இப்னு கஸீர் 4:548)

* நபி ஈஸா(அலை) அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

தந்தையின்றி அற்புதமாகப் பிறந்து (3:47,59, 19:17-21, 3:59, 4:171,172) அவ்வாறு பிறந்தவுடன் வேதமும், ஞானமும் கையயழுத்துக் கலையும் கொடுக்கப்பட்டு (19:30, 3:48, 5:46,110, 57:27, 5:110) இஸ்ரவேலர்களுக்கு மாத்திரம் நபியாக ஆக்கப்பட்டு (3:49, 61:6,14) தொட்டிலில் இருக்கும்போது பேசி (3:46, 5:110, 19:29,30) களிமண்ணினால் ஒரு பறவையின் தோற்றத்தை வடிவமைத்து பின்பு அதில் ஊதும்போது உடனே அது உயிர்பெற்றுச் சிறகடித்துப் பறப்பது போலவும் செய்யக் கூடிய பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்களுக்கும் தொழுநோயாளிக்கும் குணமளிக்கக் கூடிய செத்து சவக்குழியில் மறுமை நாள் வரை கிடக்க வேண்டிய பிரேதத்திற்குக் குரல் கொடுத்தவுடன் உயிரோடு எழும்பி வரக்கூடிய இன்று என்ன உணவு உட்கொண்டார் நாளைக்கு உண்ண இல்லத்தில் என்ன உணவு சேமித்து வைத்துள்ளார் என்பதையும் சொல்லக் கூடிய அளவுக்குத் தெளிவான ஆதாரங்களையும் உறுதியான சான்றுகளையும் கொடுக்கப் பெற்று (3:49, 5:110) நபியாக அனுப்பிய போதிலும் இஸ்ரவேலர்கள் அவர்களை நபியாக ஏற்றுக் கொள்ளவில்லை சலவைத் தொழிலாளர்களாகவும், மீன்பிடித் தொழிலாளர்களாகவும் இருந்த சாதாரண பன்னிரண்டு அல்லது பதிமூன்று அல்லது பதினேழு பேர் கொண்ட சொற்பமானவர்களே அவர்களை ஏற்றார்கள். (3:52,53, 61:14, தஃப்சீர் இப்னு கஸீர் 2:791)

* இஸ்ரவேலர்களின் அரசர் தாலூத் (அலை) அவர்களை ஏற்றுக்கொண்டவர்கள் சொற்பமானவர்களே!

பாலஸ்தீனத்தின் சர்வாதிகாரியாக இருந்த “ஜாலூத்” எனும் மாபெரும் வீரனை எதிர்ப்பதற்காக இஸ்ரவேலர்களின் அரசர் தாலூத்(அலை) தமது எண்பதாயிரம் பேர் கொண்ட (சுத்தீ(ரஹ்) தஃப்சீர் மாஜிதீ, இப்னு கஸீர் 1:811) படைகளுடன் புறப்பட்டபோது அல்லாஹ் ஜோர்தானுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே ஓடும் “­ரீஆ” எனும் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். அதில் தமது ஒரு கையளவு மட்டும் தண்ணீர் அள்ளி அருந்து பவரைத் தவிர அதற்கு மேலதிகமாக அருந்துபவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று அவர்களிடம் கூறினார். ஆனால் அவர்களில் நான்காயிரம் பேர் வரையான (இப்னு அப்பாஸ்(ரழி) தஃப்சீர் இப்னு கஸீர் 1:811) சொற்பமான வர்களைத் தவிர மற்ற அனைவரும் அதில் அதிகமாக நீர் அருந்தினார்கள் அதன் விளைவாக அவரும் அவருடன் சென்ற நம்பிக்கை கொண்டோரும் அதைக் கடந்து சென்ற போது இன்று “ஜாலூத்” மற்றும் அவனுடைய பெரும்படையினருடன் போரிட எங்களுக்கு வலிமை இல்லை என்று அதிக நீர் அருந்திய அதிகமானவர்கள் கூறிப் பின்வாங்கி விட்டனர். (2:249)

அல்லாஹ்வை நாம் நிச்சயமாகச் சந்திப்போம் என்று நம்பிய எத்தனையோ சிறு கூட்டம் பெரும் கூட்டத்தை அல்லாஹ்வின் உதவியால் வென்றுள்ளது அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (2:249) என்று கூறிய தாலூத்(அலை) அவர்கள் தம்மோடிருந்த இறை நம்பிக்கை கொண்ட சொற்பமானவர்களுடன் சென்று எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீனத்தின் சர்வாதிகாரியாகிய ஜாலூத்தின் படையினரைப் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்துத் தோற்கடித்து ஜாலூத்தையும் கொன்றார்கள். (2:250-252)

(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

Previous post:

Next post: