அந்நஜாத் – ஜனவரி 1988

in 1988 ஜனவரி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் : 2 விளக்கம் : 10

ஜ.அவ்வல் : 1408 ஜனவரி -1988

இதழின் உள்ளே…..

* அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

* விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

* நபி வழியில் நாம் தொழுகை!

* அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின் பொன் மொழிகள்

* “”கலந்தரின் கப்ரை”” நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!

* காதியானிகளின் ஆகாசப் புளுகு

* ஒரு மெளலவியின் மனம் திறந்த மடல்!

* ஐயமும்,! தெளிவும்!!

* நபிவழித் தொகுப்பு வரலாறு!

* குர்ஆனை விளங்குவது யார்?

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையைக் கொண்டு, அந்நஜாத் தனது இலட்சியப் பயணத்தில், எல்லையில்லாத் துன்பங்கள், ஏச்சுப் பேச்சுக்கள், மிரட்ல்கள், உள்பூசல்கள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் கமாளித்துக்கொண்டு, முன்னோறி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த 22 மாதங்களின் உழைப்பின் பலனாக, நாடு முழுதும் ஜாஹில்கள், அவாம்கள், பாமரர்கள் என்று மவ்லவிகளால் எள்ளி நகையாடப்பட்டவர்கள், குர்ஆனையும், ஹதீஃதையும் கொண்டு மவ்லவிகளையே அழகாக மயக்கும், அற்புத நிலையை அல்லாஹ் உருவாக்கித் தந்துள்ளார்கள். வெகு சீக்கிரத்தில் சகோதரர் அலாவுத்தீன் குறிப்பிடும் அந்தக் காலக்கட்டம் வரத்தான் போகிறது. அப்போது முல்லாக்கள் ஓட, பாமரர்கள் விரட்ட படு வேடிக்கையாகத் தான் இருக்கப் போகிறது. நாமும் பார்க்கத்தான் போகிறோம்.

அந்நஜாத்தை முடக்கிவிட்டால், அந்நஜாத்தை நடத்துபவர்களை ஒழித்துக் கட்டிவிட்டால், நிலைமயை மாற்றியமைத்து  விடலாம் என்ற அவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். அந்த ஆசை வீணாசையாகும். காரணம், அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு அந்நஜாத்தைப் போல் பல பத்திரிகைகளை நடத்திக் காட்டிடும் ஆற்றல் மிக்கவர்கள். பாமரர்களிலேயே தயாராகி விட்டார்கள். அதற்கு நவம்பர் வாசகர் இதழும், தொடர்ந்து இடம்பெறும். வாசகர்களின் கட்டுரைகளும் நல்ல எடுத்துக்காட்டாகும். எனவே மவ்லவிகளுக்கு நமது கனழிவான வேண்டுகோள் : மக்கள் ஏமாறும் காலெமெல்லாம். உங்களின் புரோகிதத் தொழிலை தாராளமாக நடத்தி வந்தீர்கள் இப்போது மக்கள் விழிப்படைந்து கொண்டு வருகிறார்கள். எனவே நீங்களும்  மக்களோடு மக்களாகி குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையென்றால், சகோதரர் சொல்வது போல், அந்தக் காலம் சம்பவிக்கத்தான் போகிறது. மக்கள் விரட்டத்தான் போகிறார்கள். நீங்கள் ஓடத்தான் போகிறீர்கள் வேடிக்கையாகத்தான் இருக்கும். அதில் சந்தேகமேயில்லை. இன்ஷா அல்லாஹ்.

*******************************************************************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

“தக்லீது” என்றால் எவ்வித ஆதாரமும் தேடாமல் ஒருவரின் கூற்றைப் பின்பற்றுவதாகும். குர்ஆனே ஆதாரமாக இருக்கும்போது, அதற்கு எப்படி மற்றொரு ஆதாரம் தேட முடியும்? அல்லாஹ் ஒரு கட்டளையிடும்போது, அப்படியே கட்டுப்படாமல் அல்லாஹ்விடமே ஆதாரம் கேட்கவேண்டும் என்கிறார்களோ என்னவோ? திருக்குர்ஆனின் கட்டளைக்கு அப்படியே கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதாவது “”தக்லீது” செய்தே ஆக வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகள் என்று தெரிந்த பின் அவனிடமே ஆதாரம் கேட்பதென்றால்…? இது எவ்வளவு பயங்கரமான வார்த்தைப் பிரயோகம் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு பிரச்சனையில் முடிவெடுத்த பின் மூமினான ஆணுக்கோ, மூமினான பெண்ணுக்கோ, தங்கள் காரியங்களில் சுயவிருப்பம் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. (அல்குர்ஆன் 33:36)

இப்படிச் சிலர் விளக்கம் தருகிறார்களே! இது சரியா? முஹம்மது ரபீக் திருச்சி-8.

இந்த விளக்கம்: இன்னும் அவர்கள் தங்களுடைய ரப்புடைய வசனங்களே எடுத்துணர்த்தப்பட்டாலும் செவிடர்களையும், குருடர்களையும் போல அவற்றின் மீது விழமாட்டார்கள்” (சிந்தித்து விளங்கிச் செயல்படுவார்கள்) என்ற அல்குர்ஆன் 25:73 வசனத்திற்கும் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? இன்னும் இதுபோல கருத்துக்களில் வரும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கும் முற்றிலும் முரணாகும்.

மார்க்கம் என்றால் குர்ஆன், ஹதீஸ் கொண்டு நிலைநாட்டப்பட்டதே என்ற அடிப்படையில், தக்லீதுக்கு கண்மூடிப் பின்பற்றல், எவ்வித ஆதாரமும் தேடாமல் ஒருவரின் கூற்றைப் பின்பற்றல் என்று பொருள் கொள்ளப்பட்டாலும், “”தக்லீத்” என்ற பதத்திற்கு விரிவான, தெளிவான விளக்கமானது: மனிதன், எந்த பகுத்தறிவைக் கொண்டும், படைப்புகளிலெல்லாம் மேலானவனாக, உயர்ந்தவனாகத் திகழ்கின்றானோ, அந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், ஐந்தறிவு ஜீவனைப் போல் செயல்படுவதாகும். அதனால்தான் மூடத்தனமான, பகுத்தறிவுக்கே ஒவ்வாத மெளட்டீகக் காரியங்களை எல்லாம் பக்தி சிரத்தையோடு வழிபாடு என நினைத்து மனிதன் செயல்படுத்த முற்பட்டு வருகிறான். குர்ஆனில் 5:2,97 ஆகிய இரண்டு இடங்களில் குர்பானி செய்யப்படும் மிருகங்களைக் குறித்து, தக்லீதைச் சார்ந்த பதமான “கலாயித” என்ற பதத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். ஹதீஸிலும் குர்பானிக்காகவுள்ள மிருகங்களைக் குறித்தே இப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேறு எந்தப் பொருளிலும் “”தக்லீத்” பதம் குர்ஆனிலோ, ஹதீஸிலோ பயன்படுத்தப்பட்டுள் ளதை யாராலும் காட்டமுடியாது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். ஆதம்(அலை) அவர்களுக்கு எந்த சிந்தனைச் சக்தியின் காரணமாக அல்லாஹ் உயர்வை கொடுத்தானோ, எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள், பயன்படுத்துங்கள் என்று அடிக்கடி குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறானோ, அந்தப் பகுத்தறிவினை தூக்கி மூலையில் வைத்துவிட்டு, குர்ஆனை தக்லீது செய்யுங்கள் என்று அல்லாஹ் சொல்வானா? அதுவும் உண்மையான விசுவாசிகளின் தன்மைகளைப் பற்றிச் சொல்லும்போது, இறை வசனங்களே எடுத்துணர்த்தப்பட்டாலும், செவிடர்களையும் குருடர்களையும் போல் விழமாட்டார்கள். சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுவார்கள் என்று அல்லாஹ்வே 25:73ல் தெளிவுபடுத்தி விட்டபின், குர்ஆனை தக்லீது செய்தே ஆகவேண்டும் என்று சொல்வது அறிவுடைமையா? என்று சிந்திக்கவும். எது கூடாது தெரியுமா? மனிதன் குர்ஆன் வசனங்களை தனது பகுத்தறிவு கொண்டு சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கிறான். அப்படி பார்க்கின்ற போது, அந்த பகுத்தறிவுக்கும் அப்பால்பட்ட விஷயங்கள், மறைவான விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தால், அவற்றை அவனால் விளங்கிக் கொள்ள முடியாது. இந்த இடத்தில் “மறைவானவற்றில் நம்பிக்கை வைத்துச் செயல்படவேண்டும்? என்ற அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து செயல்படவேண்டும். தனது பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அல்லாஹ்வின் கட்டளைக்கோ அவனது ரஸூலின் கட்டளைக்கோ மாற்றமாக நடக்க முற்படக் கூடாது. அப்படி நடக்க முற்பட்டால் மட்டுமே “”அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு பிரச்சினையில் முடிவெடுத்த பின் மூமினான ஆணுக்கோ, மூமினான பெண்ணுக்கோ, தங்கள் காரியங்களில் சுய விளக்கம் கொள்ள எந்த உரிமையும் கிடையாது. (32:36) என்ற இறைவசனத்திற்கு மாறு செய்தவராவார். அதல்லாமல் இந்த 32:36 வசனம் மனிதனின் பகுத்தறிவைப் பயன்படுத்தாமல், குர்ஆன் வசனங்களை தக்லீது செய்ய நம்மை ஏவவில்லை. அதேபோல் பகுத்தறிவுக்கு எட்டாத மறைவான விஷயங்களை அல்லாஹ்வும், அவனது ரஸூலும் அல்லாத, வேறு யார் சொன்னாலும் அதை ஏற்று நடக்கவும் கூடாது.

குர்ஆனிலோ, ஹதீஸிலோ காணப்படாத இந்த தக்லீதை மார்க்கத்தினுள் வைத்துக் கொள்ள ஏன்தான் இந்த அளவு துடிப்புக் காட்டுகிறார்களோ? நாம் அறிவோம். மனிதனை சிந்திக்கத் தூண்டி வந்துள்ள இறை வசனங்களை சிறிது நோட்டமிட்டபோது, ஒரு நுறு வசனங்களுக்கும் அதிகமாக நம்மால் பார்க்க முடிந்தது. இத்தனைக் குர்ஆன் வசனங்களுக்கும் முரணான குர்ஆனை எவ்வித பார்வை பரிசீலனை இல்லாமல் எடுத்து நடக்கச் சொல்கிறவர்கள். தக்லீது செய்தே ஆகவேண்டும் என்று சொல்கிறவர்கள், யாராக இருக்க முடியும்? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மக்களை மாக்களாக்கும் இந்தத் தக்லீதை மனிதனை மனிதன் ஏய்த்துப் பிழைக்க வழி வகுக்கும் இந்தத் தக்லீதை, வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துக் காட்டாவிட்டால், புரோகிதத்தையும், புரோகிதர்களையும், இடைத் தரகர்களையும், இஸ்லாத்தை விட்டு முற்றிலுமாக அப்புறப்படுத்தி, கலப்படமற்ற தூய இஸ்லாத்தை நிலைநாட்டி, சமத்துவ சகோதரத்துவச் சமுதாயத்தை, உருவாக்குவது ஒருபோதும் சாத்தியமாகாது. எனவே சகோதர, சகோதரிகளே தக்லீதை, எந்த நிலையிலும் மார்க்கத்தில் நிலைபெற அனுமதி அளிக்காதீர்கள். அதுவே சாந்திக்குரிய ஒரே வழியாகும்.

முஸ்லிம்கள் ஒரு அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் ஜமாஅத்தாகத்தான் இருக்கவேண்டும். தனி நபராக ஒரு முஸ்லிம் இருக்கவே கூடாது என்று ஹதீஸில் வலியுறுத்தி இருக்கிறது. ஏன் நாம் அவ்வாறு செயல்படாமல் இருக்கிறோம். தாங்கள் அதற்குண்டான முயற்சியும் எடுக்காமல் இருக்கக் காரணம் என்ன?

இதற்கு முன்பும் இக்கேள்வியைக் கேட்டு இருந்தேன், பதில் கொடுக்காததற்கு உள்நோக்கம் இருப்பதாக எண்ணுகிறேன். C.ரபீக் அஹ்மத், சென்னை-3.

முஸ்லிம்கள் ஒரே அமீரின் கட்டுப்பாட்டின் கீழ் ஜமாஅத்தாகத்தான் இருக்கவேண்டும் என்பதில், முஸ்லிம்களில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு முன் முஸ்லிம்கள் ஒரே அணியின் கீழ் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். அதன் பின்புதான் முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் ஜமாஅத்தாகச் செயல்பட முடியும்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டும் நடப்பவர்களே ஆளுக்கொரு பெயர் வைத்துக்கொண்டு, பிரிந்து கிடக்கும் இன்றைய சூழ்நிலையில், ஒரே அமீரின் கீழ் எப்படி ஒன்றுபட முடியும்? என்பதைச் சிந்திக்கவும். முதற்கட்டமாக முஸ்லிம் சமுதாயத்தை “முஸ்லிம்” என்ற பெயரில், ஓர் அணியில் ஒன்றுபட பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்நிலை உருவாகி விட்டால், ஓர் அமீரின் கீழ் ஜமாஅத்தாகச் செயல்படும் நிலை தானாகவே வருவாகி விடும்.

தனி நபராக ஒரு முஸ்லிம் இருக்கக் கூடாது என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை. அந்தக் கருத்தில் வரும் ஹதீஸ்கள் பலஹீனமானவை என்று நவம்பர் வாசகர் மலரில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. ஆனால் “”அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள்” (குர்ஆன் 3:103) என்ற இறை ஆணைப்படி பிரிவினைகளை அகற்றி முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். அதுவும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே ஒன்றுபடவேண்டும் என்பதே உண்மையாகும். ஒற்றுமை காக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு சத்தியத்தை மறைக்க முற்படக் கூடாது. எவ்வளவு பெரிய எதிர்ப்பும், பகைமையும் ஏற்பட்டாலும் சத்தியத்தைத் துணிந்து சொல்லியே ஆகவேண்டும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே ஒன்றுபடவேண்டும் என்று மீண்டும் நினைவுபடுத்துகிறோம். அதிகமான விமர்சனங்கள் வருவதால், காலதாமதமேயல்லாமல், உள்நோக்கம் எதுவும் இல்லை.

“உம்மை வழி தவறியவராகக் கண்டு அவன் உமக்கு வழிகாட்டவில்லையா? (அல்குர்ஆன் 93:7)

இந்த வசனத்திலுள்ள வழி தவறுதலைத் தெளிவாகப் புரிந்து சரியாக விளக்கம் கொடுப்பவர்கள், இஸ்லாத்தில் பிரிவுப் பெயர்களை உண்டாக்குபவர்களும், வழி தவறியவர்களாக இருக்கிறார்கள் என்பதிலுள்ள வழிகேட்டை எப்படிப் புரியாமல் இருக்கிறார்கள்? அதேபோல் மஸ்ஜிதுன்னபி, உமர் பள்ளிவாசல், பாத்திமா பள்ளிவாசர் என்று பெயர் கூறப்படுவதைச் சரிகண்டு, அதேசமயம் “முஹ்யீத்தீன் ஆண்டவர் பள்ளிவாசல்” என்று பெயர் சூட்டுவதை, நோக்கம் தவறாக இருப்பதால் தவறு என்று தெளிவாக விளக்கம் கொடுப்பவர்கள். அடையாளம் தெரிவதற்காகப் பெயரிட்டாலும் நோக்கம் தவறாக இருப்பதாக கூடாது என்பதை மட்டும் எப்படி புரியாமல் இருக்கிறார்கள்? இது உண்மையிலேயே அறியாமையா? அல்லது பிடிவாதமா? B.ஷஹாபுதீன், அரியமங்கலம், திருச்சி-10.

பிடிவாதம் என்று சொல்லுவதை விட அவர்களின் அறியாமை என்று நல்லெண்ணம் கொள்வோம். இறந்தவர்களின் பெயரால் நடைபெறும் அக்கிரமங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்ட அளவிற்கு, தக்லீதின் பெயரால் நடைபெறும் அக்கிரமங்களைத் தெளிவாக இன்னும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இன்ஷா அல்லாஹ் தக்லீதின் கொடுமைகளைப் புரிந்து கொண்டால் அவர்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்வார்கள்.

துலாக்கோல் அருமையாக இருந்தது. படிக்கல்-4, 38ம் பக்கத்தில், “ஜனவரி 88 இதழில் தக்லீது கூடும், மத்ஹபுகள் கூடும், பிரிவுகள் கூடும் என்று சொல்வதை எதிர்பார்ப்போமாக” என்ற வாசகம் மனதை வருந்தச் செய்தது. தவறு செய்பவர்கள் அதிலிருந்து மீளத்தான் துஆ செய்ய வேண்டுமேயொழிய, மீண்டும், மீண்டும் அதிகத் தவறைச் செய்ய எதிர்பாக்கக் கூடாது மேலும் நம் கற்பனையை எதிலும் செலுத்தவேண்டாம். ஒருவேளை இதன்மூலம் அல்லாஹ் அவர்களில் பலரை நேர்வழிக்குக் கொண்டு வரலாம். அது அவன் கையில் உள்ளது. எனவே இதுபோன்ற வாசகங்களைத் தவிர்க்கவும். இப்னு அப்துல்காதர், துபை.

தவறு தான், ஒப்புக்கொள்கிறோம். இனிமேல் இதுபோன்ற வாசகங்களைத் தவிர்த்துக் கொள்கிறோம். சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

முந்தைய வேதங்களை “குர்ஆன்” என்று அழைக்கலாமா? என்ற கேள்விக்கு,

குர்ஆன் என்று அழைப்பது குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண், என்ற கருத்தில் பதிலளித்துள்ளீர்கள்.

ஆனால் ரஸூல்(ஸல்) அவர்கள் முந்தைய வேதமான ஜபூருக்கு குர்ஆன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். ரஸூல்(ஸல்) அவர்கள் குர்ஆனில் விளையாட மாட்டார்கள் என்பதே நமது கொள்கை” என்று எழுதி, அதற்கு ஆதாரமாக புகாரியில் அன்பியா பிரிவில் ஃபயக்ரவுல் குர்ஆன் என்ற அரபி பதம் வரும் ஹதீஸையும் எடுத்து எழுதியுள்ளார். M.A.முகம்மது முஸ்தபா, பெங்களூர்-45.

புகாரியில் இரண்டு இடங்களிலும் மற்றும் முஸ்னது அஹ்மதிலும் காணப்படும் அபூஹுரைரா(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும்  இந்த ஹதீது ஸஹீஹான ஹதீஸ்தான் அதில் சந்தேகமில்லை. அந்த ஹதீஸ்களைப் பரிசீலனை செய்த பின்பே நமது பதிலை வெளியிட்டோம். ஹதீஸ் உண்மையானதே அல்லாமல் அதற்கு, கொள்ளப்பட்டிருக்கும் பொருள் தவறாகும். அல்குர்ஆனில் 17:78, 75:17,18 ஆகிய இடங்களில் ஓதுதல் என்ற பெயரில் குர்ஆன் என்னும் பதம் வந்திருப்பது போல் இந்த ஹதீஸிலும் “ஓதுதல்” என்ற பொருளில் வந்திருக்கிறதேயல்லாமல் வேதம் என்ற பொருளில் குர்ஆன் என்ற பதம் வரவில்லை. இது நமது அபிப்பிராயமோ, யூகமோ அல்ல. புகாரிக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர்(ரஹ்) தனது பத்ஹுல் பாரியில் பாகம் 8 பக்கம் 397ல் இவ்வாறு விளக்கம் தந்துள்ளார்கள். “அபூதர்ரு(ரழி) அவர்களில் அறிவிப்பில் “குர்ஆன்” என்னும் இடத்தில் “கிராஅத்” என்னும் பதம் இடம் பெற்றுள்ளது. எனவே அபூஹுரைரா(ரழி) அவர்களின் அறிவிப்பில் “குர்ஆன்” என்னும் பதத்திற்கு “ஓதுதல்” என்னும் பொருளேயன்றி, இந்த உம்மத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குர்ஆன் என்ற பொருளில் அல்ல” என்பதேயாகும்.

இந்த இடத்தில் வரும் குர்ஆன் என்ற பதத்திற்குத் தவறான பொருள் கொடுத்து மக்களைக் குழப்புகிறார்கள். இதே அடிப்படையில் “சுன்னத்தி குலபாயிர் ராஷிதீனல் மஹ்திய்யீன்” என்று வரும் ஹதீஸிலும், “மன் ஸன்ன ஸுன்னத்தன் ஹஸனத்தன்” என்று வரும் ஹதீஸிலும் காணப்படும் “ஸுன்னத்” என்ற பதத்திற்கும், மார்க்க ரீதியில் அதாவது அல்லாஹ்வின் அறிவிப்பின்படி உள்ள “ஸுன்னத்” என்ற தவறான பொருள் கொடுத்து மக்களைக் குழப்புகிறார்கள். இந்த இரண்டு ஹதீஸ்களின் தெளிவான விளக்கம் “தக்லிதீன் பெயரால்” என்ற கட்டுரைத் தொடரில் இன்ஷா அல்லாஹ் இடம் பெறும்.

விளையாட்டை நபி(ஸல்) அவர்களோடு இணைத்து எழுதியது முறையல்ல. நபி(ஸல்) அவர்கள் குர்ஆனோடு மட்டுமல்ல. எதிலும் விளையாடமாட்டார்கள். வெள்ளை வெளேர் என்ற நிலையிலேயே அதன் இரவும் பகலைப் போன்ற நிலையிலேயே நம்மை விட்டும் சென்றுள்ளார்கள் என்பதே எங்களின் உறுதியான நம்பிக்கை.

*கடந்த அந்நஜாத் நவம்பர் வாசகர் மலரில் 19ம் பக்கத்தில் 17:71, குர்ஆன் வசனத்தின்படி நபிமார்களைத்தான் தலைவர்கள் (இமாம்கள்) என்று கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. அதே மலரில் 53ம் பக்கத்தில் 33:66,67,68 குர்ஆன் வசனத்தில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் வழிபட்டு இருக்க வேண்டாமா? மாறாக தலைவர்களுக்கும் (முன்னோடிகளான) பெரியவர்களுக்கும் வழிபட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் தலைவர்கள் என்பது நபியவர்களைக் குறிக்கவில்லை. நபிமார்கள் வேறு, தலைவர்கள் வேறு என பிரித்துக் காட்டப்பட்டுள்ளதே. உண்மையில் குர்ஆனில் தலைவர்கள் (இமாம்கள்) என்பது யாரைக் குறிக்கிறது. தெளிவுபடுத்தவும். E.முஹம்மது இக்பால், ரியாத்.

17:71 இமாம் என்ற அரபிப் பதமும், 33:67ல் “”ஸாதத்தனா “குபராஅனா” என்ற அரபிப் பதங்களும், இடம் பெற்றுள்ளன. எனவே 17:71ல் குறிப்பிடப்படுபவர்களும், 33:67-ல் குறிப்பிடப்படுபவர்களும் வெவ்வேறானவர்களே. 17:71 நபிமார்களையே குறிக்கிறது.

*************************************************************************************************

நபி வழியில் நம் தொழுகை – தொடர் – 13 அபூ அப்துர் ரஹ்மான்

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகும். (3:31)

என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்! மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்

சென்ற இதழில் “தயம்மும்” செய்வதின் விதிமுறைப்படி எழுதப்பட்டுள்ளது. இவ்விதழில் “அசுத்தங்கள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும்?” என்ற விபரங்கள் இடம் பெறுகின்றன.

அசுத்தங்களும், அவற்றை அகற்றும் முறைகளும்!

நமது வணக்க வழிபாடுகள் அனைத்தும், அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஏனேனில் அல்லாஹ் தூய்மையானவனாகவும், தூய்மையானவற்றையே ஏற்றுக்கொள்பவனாகவும் இருக்கின்றான்.

புறத்தூய்மைப் பற்றி அல்குர்ஆன்!

(நபியே!) உமது ஆடையைப் பரிசுத்தமாக்கிக் கொள்வீராக! அன்றியும் அசுத்தத்தை வெறுத்து விடுவீராக! (74:4,5)

அகத்தூய்மை பற்றிய ஹதீஸ்

அல்லாஹ் தூய்மையானவன், தூய்மையானவை அன்றி மற்றவற்றை ஏற்றுக்கொள்ளமாட்டான். அபூஹுரைரா(ரழி) முஸ்லிம்

அசுத்தங்களின் விபரம்!

அவை மூவகைப்படும். (1) கடுமையானவை (2) நடுத்தரமானவை (3) இலேசானவை.

1. கடுமையானவையும், அவற்றை அகற்றுதலும்!

நாய் வாய் வைத்தவை: “நாய் உங்கள் பாத்திரங்களில் வாய் வைத்துவிட்டால், அவற்றைச் சுத்தப்படுத்தும் முறையாவது: 7 முறைகள் அவற்றைத் தண்ணீரால் தேய்த்துக் கழுவவேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) (முஸ்லிம், அஹ்மத்)

2. நடுத்தரமானவையும், அவற்றை அகற்றுதலும்!

பாலை மட்டும் உணவாகக் கொண்டுள்ள பெண் குழந்தையின் சிறுநீர் மற்றும் மாதவிடாய் ஆகியவை.

பால் குடிக்கும் ஆண் குழந்தையின் சிறுநீரைச் சுத்தம் செய்வதற்காக, அதன் மீது தண்ணீர் (மட்டும்) ஊற்றுவது(போது)ம், ஆனால் அந்நிலையிலுள்ள பெண் குழந்தையின் சிறுநீரை சுத்தம் செய்வதற்காக தண்ணீரால் கழுவியாக வேண்டும்.  அலி(ரழி), (அபூதாவூத், இப்னுமாஜ்ஜா)

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) “”எங்களில் எவளுடைய ஆடையிலேனும் மாதவிடாய் பட்டுவிட்டால், அதை எவ்வாறு நாங்கள் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்”” என்று கேட்டார். அதற்கவர்கள் “கையால் அதைச் சுரண்டிவிட்டு, தண்ணீரை அதன் மீது ஊற்றி தேய்த்து கழுவிவிட்டு, பிறகு அதில் அவள் தொழுது கொள்ளலாம்” என்றார்கள். அஸ்மாபின்த் அபூபக்கர்(ரழி) புகாரி, முஸ்லிம் அஹ்மத்.

மற்றோர் அறிவிப்பில் “அதை முறைப்படி, கழுவி சுத்தம் செய்த பின்னும், அதன் துர்வாடையோ, அல்லது நிறமோ ஆடையில் இருந்ப்பது பற்றி தவறில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) அஹ்மத், அபூதாவூத்.

3. இலேசானவை: உணவருந்தாது பாலை மட்டும் உணவாகக் கொண்டுள்ள ஆண் குழந்தையின் சிறுநீர்.

உம்முகைஸ்பின்த் மிஹ்ஸன்(ரழி) அவர்கள், தமது பால் குடிக்கும் ஆண் குழந்தையை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்(து கொடுத்)தார்கள். அப்போது அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்துவிடவே, நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு வரச்செய்து, அதைத் தமது அந்த ஆடையில் தெளித்துக் கொண்டார்கள். அதை அவர்கள் தேய்த்துக் கழுவவில்லை. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

பூனை வாய் வைத்த தண்ணீர் சுத்தமானதே!

சுஃபுபின் மாலிக்(ரழி) அவர்களின் மகள் கபஷா(ரழி) என்பவர் அபூகதாதா(ரழி) அவர்களின் மகனுக்கு மனைவியாக இருந்தார்கள்.

ஒருமுறை அபூகதாதா(ரழி) அவர்கள் (தமது மருமகளாம்) கபஷா(ரழி) இடம் வந்தபோது, ஒளூ செய்வதற்கான தண்ணீரை அவர்களுக்கு கபஷா(ரழி) கொடுத்தார்கள். (அவர்கள் ஒளூ செய்ய முயலும் தருவாயில்) ஒரு பூனை அத்தண்ணீரைக் குடிப்பதற்காக வந்தது. உடனே அபூகதாதா(ரழி) அவர்கள் அது குடிக்கும் வரை அதற்கு தனது தண்ணீர் பாத்திரத்தைச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

கபஷா(ரழி) கூறுகிறார்கள். “நான் அதைக் கவனதித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த அபூகதாதா(ரழி) அவர்கள் என்னை நோக்கி, எனது சகோதரர் மகனே! (நான் பூனைக்கு தண்ணீர் காட்டுவது) உனக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? என்றார்கள். அதற்கு நான் “ஆம்” என்றேன். அப்போதவர்கள், நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் இதை (நஜீஸ்) அசுத்தமானது என்று கூறவில்லை. ஏனெனில் பூனையானது சதா உங்களிடம் வந்து செல்லக் கூடியது. அண்டி வாழும் இனத்தைச் சார்ந்தது என்று கூறினார்கள். (அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

காட்டு மிருகங்கள் வாய் வைத்த தண்ணீரும் சுத்தமானதே!

ஒரு பயணத்தின் போது, நபி(ஸல்) அவர்கள் இரவில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, ஒரு மனிதரை தண்ணீருள்ள தனது பள்ளத்தின் அருகில் அமர்ந்து இருப்பதைக் கண்டார்கள். உமர்(ரழி)அவர்கள் (அவரை நோக்கி) ஏதேனும் காட்டு மிருகங்கள் இவ்விரவு இதில் தண்ணீர் குடித்தனவா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், பள்ளத்துக்காரரே! இவருக்கு நீர் பதில் சொல்ல வேண்டாம். இவர் வீணாகத் தம்மை அலட்டிக் கொள்கிறார். அவை குடித்தது அவற்றின் வயிறுகளில் இருக்கிறது. எஞ்சியுள்ளது. நமக்குக் குடிப்பாகவும், பரிசுத்தமானதாகவும் இருக்கிறது என்று கூறினார்கள். இப்னு உமர், (தாரருத்னீ)

“ஈ”விழுந்து இறந்த தண்ணீரும் சுத்தமானதே!

“”உங்கள் பானத்தில் “ஈ” விழுந்து விட்டால், அதை அவர் முழுமையாக அதில் முக்கிவிட்டு (வெளியில்) எடுத்தெறிந்து விடுவாராக! ஏனெனில் அதன் இறகுகளில் ஒன்றில் குணமும், மற்றொன்றில் வியாதியும் இருக்கின்றன” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) (புகாரி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

அசுத்தமான மண் தரையைச் சுத்தம் செய்வதற்கு அதன்மீது அதிகமான தண்ணீரை ஊற்றவேண்டும்!

ஒருமுறை மஸ்ஜிதுந்நபவீ(நபியின் பள்ளி)யில், ஒரு கிராமவாசி நின்ற நிலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பதைக் கண்ட ஸஹபாக்கள் அவரைத் தடுக்க முற்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். அவரது சிறுநீரின் மீது ஒரு வாலி தண்ணீரைக் கொண்டு வந்து ஊற்றிவிடுங்கள். ஏனெனில் (இச்சமுதாயத்திற்கு) “நீங்கள் இலகுவு செய்பவர்களாகவே ஏவப்பட்டுள்ளீர்கள். (அவர்களுக்கு) சிரமம் அளிப்பவராக நீங்கள் ஏவப்படவில்லை”” என்றார்கள்.
அபூஹுரைரா(ரழி) (புகாரி, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மத்)

மேற்காணும் ஹதீஸின் மூலம் மண் தரையைச் சுத்தம் செய்வதற்காக, அதன்மீது அதிகமான தண்ணீரை ஊற்றவேண்டும் என்பதும் சிறுநீர் அசுத்தமான பொருள்தான் என்பதும் தெளிவாகிறது. சிறு நீரைத் தண்ணீரால் சுத்தம் செய்வது போன்றே, மனீ, மதீ, வதீ ஆகியவற்றையும் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.

மனீ, மதி, வதி ஆகியவற்றின் விளக்கம்!

1. மனீ: உணர்ச்சியின் மேலீட்டால் துள்ளி வெளிப்படும் திரவப்பொருள்.

2. மதீ: இலேசான இன்ப உணர்வின்போது, சாதாரணமாகக் கசிந்து வெளிப்படும் திரவப் பொருள்.

3. வதீ: சீதோஷ்ண ஏற்றத்தாழ்வின் காரணமாக, உடலில் ஏற்படும் கோளாறினால் எவ்வித இன்ப உணர்வின்றி, சிறுநீர் கழிக்கும்போது, அதற்குமுன் அல்லது பின் வெள்ளை நிறமாக வெளிப்படும் திரவப்பொருள்.

இம்மூன்றில் “”மதீ, வதீ”” ஆகியவற்றைத் தண்ணீரால் கழுவியாக வேண்டும். ஆனால் “”மனீ” ஒன்றை மட்டும் ஈரமாயிருந்தால் கழுவ வேண்டும். காய்ந்துவிட்டால், நன்கு விரல்களால் தேய்த்து சுரண்டுவதன் மூலம் சுத்தமாகிவிடும்.

அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களின் ஆடையிலிருக்கும் “”மனீ””யை (இந்திரியத்தை ஈரமாயிருப்பின் கழுவிக்கொண்டும், காய்ந்து விட்டால் சுரண்டிக் கொண்டும் இருந்தேன். அன்னை ஆயிஷா(ரழி),தாரருத்னீ

தோலைப் பதனிடுவதால் அது சுத்தமடைந்து விடுகிறது!

“”எத்தோலையும் பதனிட்டு விட்டால் அது சுத்தமாகி விடும்”” என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். 
இப்னு அப்பாஸ்(ரழி) முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதீ, அஹ்மத்)

கிணறு போன்ற அதிகத் தண்ணீரில் அசுத்தம் விழுந்து விட்டால்?

1. அபூஸயீத்(ரழி) அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்களிடத்தில் (மதீனாவிலுள்ள) “”புனாஆ”” என்னும் கிணற்றில் ஒளூ செய்வது கூடுமா? அதில் மாதவிடாய் துணிகள், நாய்கள் துர்வாடைப் பொருட்கள் முதலியன போடப்படுகின்றனவே என்று கேட்கப்பட்டது. அதற்கவர் “”தண்ணீர் சுத்தமானதாகும். அதை எப்பொருளும் அசுத்தப்படுத்துவதற்கில்லை” என்றார்கள். (அபூதாலுத், திர்மிதீ, அஹ்மத்)

உங்களில் எவரும் கிடை தண்ணீரில் சிறுநீர் கழிக்கவேண்டாம் ஏனெனில் பின்னர் அவர் அதில் குளிக்க நேரிடும்.

அபூஹுரைரா(ரழி) புகாரீ, முஸ்லிம் அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா)

மேற்காணும் இரு ஹதீஸ்களும், மேலோட்டமாகப் பார்க்கும்போது முரண்படுவது போல் தோன்றினாலும்” முதலாம் ஹதீஸில் தண்ணீர் சுத்தமானது அதை எப்பொருளும், அசுத்தப்படுத்துவதற்கில்லை என்று கூறியிருப்பதன் காரணத்தால் இரண்டாம் ஹதீஸ் உண்மையில், சிறுநீர் போன்றவை கலந்த தண்ணீரில் குளிப்பது உசிதமல்ல என்ற கருத்தில்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆகவே அத்தகைய தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இக்கருத்தையே
அன்னை ஆயிஷா(ரழி), உமர்(ரழி) அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரழி), மேலும் அநேக ஸஹாபாக்களும், தாபியீன்களும் சரிகண்டுள்ளனர். (ஸுபுலுஸ்ஸலாம், பிதாயத்துல் முஜ்தஹித்).

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

*******************************************************************

அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களின்

பொன்மொழிகள்! – தொடர்-2.

-அபூஃபவ்ஜிய்யா

சென்ற இதழில் அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவ்விரண்டைக் கொண்டு மட்டுமே அமல் செய்ய வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளதை பார்த்திருப்பீர்கள். இவ்விதழிலும் அவர்கள் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் அளித்திருக்கும் முக்கியத்துவத்தைக் காண்போம்.

*அல்லாஹ்வின் அருள் மறையும், அவள் தூதரின் வழிமுறையும்:

நாம் பின்பற்றி நடப்பதற்கு நமது நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறெவருமில்லை. (அவ்வாறே) நாம் அமல் செய்வதற்கும் குர்ஆனைத் தவிர வேறெந்த நெறிநூலில்லை. ஆகவே இவ்விரண்டினை விட்டும் அப்பாற்பட்டு, உமது மனோ இச்சை, ஷைத்தான் ஆகியவற்றால் வழிகெட்டு நாசமடைந்து விடாதீர்! வல்ல அல்லாஹ் கூறுகிறான் “”உமது மனோ இச்சையைப் பின்பற்றி அல்லாஹ்வின் வழியை விட்டும் அகன்று விடாதீர்!”” (குர்ஆன் 38:26) ஃபுதூஹுல்கைப் (பொன்மொழி 36)

விமோசனம் அடைய விரும்பிடுவீர் குர்ஆன், ஹதீஸை

குர்ஆனையும், ஹதீஸையும்(முறையாகப்)பின்பற்றி நடந்தாலே அன்றி உங்களுக்கு விமோசனமில்லை. ஃபத்ஹுர் ரப்பானீ(சொற்பொழிவு 39)

தனது அனைத்துக் காரியங்களிலும் ஷரீஅத்தை (குர்ஆன், ஹதீஸின் சட்ட திட்டங்களை) உறுதுணையாகக் கொள்ளாதவர், நாசமடைவோருடன் சேர்ந்து தானும் நாசமடைந்தே தீருவர். ஃபத்ஹுர் ரப்பானீ (சொற்பொழிவு 39)

* அல்லாஹ்வின் கஜானாவில் இல்லாதவையும் உண்டோ?

படைக்கப்பட்டவர்களை அல்லாஹ்வின் பங்காளிகளாக்குவதை விட்டொழித்து (அல்லாஹ் ஒருவனே அனைத்திற்கும் காரணமானவன் என்ற) ஏகத்துவக் கொள்கையில் என்றென்றும் நிலைத்திருங்கள்… அவனே அனைத்தையும் படைத்தவன்… அவனது பிடியிலேயே அனைத்தும் இருக்கின்றன. அல்லாஹ்வையன்றி பிறரிடம் தமது தேவைகளைக் கேட்டுக் கொண்டிருப்போரே! நீங்கள் புத்திசாலிகளாக எனக்குத் தெரியவில்லை!

அல்லாஹ்வின் கஜானாவில் இல்லாதவையுமுண்டோ? வல்ல அல்லாஹ்வே கூறுகிறான்: அனைத்துப் பொருட்களின் கஜானாக்களும் நம்மிடமேயன்றி வேறில்லை.
(15:21) (ஃபத்ஹுர் ரப்பானி-முதலாம் சொற்பொழிவு)

அவனைக் கொண்டே அனைத்தும் நிகழ்கின்றன!

உண்மையில் காரியங்களை நடத்துபவனும், அதைத் தூண்டுபவனும், நடக்காது ஒடுக்குபவனும் அல்லாஹ்வே அன்றி வேறு யாருமில்லை என்பதே உறுதி.

நன்மையும் தீமையும், இன்பமும், துன்பமும், கொடுப்பதும் தடுப்பதும், திறப்பதும் அடைப்பதும், வாழ்வும் மரணமும், கண்ணியமும் கேவலமும், சீமானாக்குவதும் ஏழையாக்குவதும், ஒப்பற்ற வல்ல அல்லாஹ் ஒருவனின் தூய சக்தியைக் கொண்டே நடைபெறுகின்றன. வேறு எவரைக்கொண்டும் நடப்பதில்லை.
(ஃபுதூஹுல்கைப் 2வது சொற்பொழிவு)

உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

(முறையாய் நடக்காவிடில்) உங்களுக்குக் கேடுதான் சம்பவிக்கும், அல்லாஹ் உங்களுக்குப் பிறரை விட மிக அருகில் இருக்கிறான். அவ்வாறு இருந்தும் கூட அவனன்றி பிறரிடம்(உங்கள்) தேவைகளைக் கேட்பதில் (சிறிதும்) வெட்கப்படுகிறீர்களில்லையே! நீங்கள் உங்கள் சம்பந்தமானவற்றை பிறரிடம் கேட்கத் தேவையில்லாத நிலையில் (விபரமறியாது) அவர்களிடமே கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே! (ஃபத்ஹுர் ரப்பானீ சொற்பொழிவு 38)

நான் உங்களை முறையாக அல்லாஹ்வின் மக்கள் அழைக்க, நீங்கள் முறை தவறி என்னை அழைக்கின்றீர்களே! இது முறை தானா?

அனைத்தையும் படைத்தவனிடமே, அனைத்தையும் கேளுங்கள்! அவ(ன் பொருத்தத்தி)னை அடைவதற்காக அனைத்தையும் அவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். எனது போதனைகளைக் கேளுங்கள். நானோ நிச்சயமாக அல்லாஹ்வின்பால் உங்களை அழைக்கும், அழைப்பான(னாகிய ஓர் தொண்ட)னாகும். நான் உங்களை என் பக்கம் அழைக்காது. அல்லாஹ்வின் வாசலுக்கும், வழிபாட்டிற்குமே அழைக்கிறேன். முனாபிக்-நயவஞ்சகனே மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்காது. தன்பக்கம் அழைத்துக் கொண்டிருப்பான். (ஃபத்ஹுர் ரப்பானீ சொற்பொழிவு) (யா முஹிய்யத்தீன் என்று அழைப்போரே சற்று சிந்தியுங்கள்)

தரங்கெட்டோரே தண்ணீரைப் பிடிப்பர்!

அல்லாஹ்வை பலமாக நம்புவோர்தான் பலமான கயிற்றினைப் பற்றிப் பிடித்துள்ளார். அவனன்றி தம்மைப் போன்று படைக்கப்பட்டுள்ள மற்றொருவரை உறுதியாக நம்பியிருப்போர் தண்ணீரைத் தமது கையால் (பலமாகப்) பற்றிப் பிடித்தவரை ஒத்திருக்கிறார். அவர் தமது கையைத் திறந்தால் வெறும் கையைத் தவிர வேறெதையும் காணார். (ஃபத்ஹுர் தப்பானீ சொற்பொழிவு 18)

அவர்கள் தமது மகன் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்குச் செய்த இறுதி வஸிய்யத் (உபதேசம்)

(மகனே!) அல்லாஹ்வின் “தக்வா” – பயபக்தியைக் கடைபிடித்துக் கொள்ளும்! அவனைத் தவிர எவரையும் அஞ்சாதீர்! மேலும் அவனைத் தவிர வேறு யாரின் மீதும் ஆதரவு கொண்டு விடாதீர்! (உமது) தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடமே ஒப்படைத்து விடுவீராக! எக்காரணத்தை முன்னிட்டும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நம்பி விடாதீர்! உமது அனைத்துத் தேவைகளையும் வல்ல அல்லாஹ் ஒருவனிடத்திலேயே கேட்டு பெற்றுக் கொள்வீராக! (முறைதவறி வீணாக) அல்லாஹ்வைத் தவிர மற்றவரை எக்காரணம் கொண்டும் நம்பி இருந்து விடாதீர்!

அனைத்திற்கும் காரணமானவன் அல்லாஹ் ஒருவன் தான் என்னும் தவ்ஹீத் கொள்கையே, அனைத்து நலன்களுக்கும் அடிப்படை அதை முழுமையாகப் பற்றிக் கொள்வீராக! (ஃபுதூஹுல்கைப் முடிவுரை)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

****************************************************************

“கலந்தரின் கப்ஸா” – (ஒரு பகிரங்க கடிதம்) – நல்லம்பல் ஷேக் அலாவுதீன்

அன்புள்ள மவ்லவி S.S.K.மஸ்தான் அவர்களுக்கு (மவ்லவி அல்லாத) A.ஷேக் அலாவுதீன் கூறும் அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்ற 8.11.87 அன்று காரைக்காலை அடுத்துள்ள கொல்லாபுரம் என்ற ஊரில் நடந்த ஷரீஅத் விளக்கக் கூட்டத்தில் ஷரீஅத்தை விளக்கினீர்கள்(?) இல்லை விலக்கினீர்கள். அற்புதமான பேச்சு(?) பொய்யர்கள் தோற்றார்கள் போங்கள்!

நான் மவ்லவி அல்ல என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுவிட்டேன். ஏனென்றால் நீங்கள் மவ்லவிகளிடம் தான் மார்க்கத்தை பற்றி பேசுவீர்கள். மவ்லவி அல்லாதவர்களிடம் மார்க்கத்தைப் பற்றி விவாதிக்க உங்கள் சுய கெளரவம் இடமளிக்காது என்பதை அன்று கூட்டம் முடிந்ததுமே காட்டிவிட்டீர்கள் அல்ல, அப்படி கூறி தப்பித்துக் கொண்டீர்கள்!

இதுவரை நீங்களும் உங்களைப் போன்றவர்களும் வாயில் வந்ததெல்லாம் ஹதீஸ், வாயில் வந்ததெல்லாம் தீர்ப்பு என்று கூறி, பாமர மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் உதவியால் இன்றைய சூழ்நிலல பாமரர்களாக இருந்தவர்கள் பெரும்பாலோர் விழித்துக் கொண்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்னும் எல்லோரும் விழித்துக் கொள்ளும் காலம் தூரமில்லை! சத்தியத்திற்கு அழிவில்லையல்லவா? அந்தகால கட்டத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்! நீங்கள் எல்லாம் ஓட, பாமரர்கள் விரட்ட வேடிக்கையாக இல்லை?

இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகி விடுமோ என்ற பீதியில் தான் எங்களைப் போன்றவர்களுக்கு பயந்து, கூட்டத்திற்கு ஒரு கணிசமான ரூபாய் கூலியும் வாங்கிக் கொண்டு ஏகத்துவவாதிகளாகிய எங்களைக் குறை கூறித் திரிகிறீர்கள். பலமான ஈமான் உள்ளவன் படைப்பினங்களுக்கு பயப்படமாட்டான். படைத்த நாயனுக்கே பயப்படுவான். நீங்களோ மவ்லவி, பலமான ஈமான் உள்னவராகத்தான் இருக்கமுடியும். ஏன் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதில்லை? புரியாத புதிர்தான்!

உங்கள் பேச்சுத் திறனை மெச்சுகிறேன். அது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள அருட்கொடை அவன் கொடுத்த அருட்கொடையை அவனுக்கு எதிராகவே பயன்படுத்துகிறீர்களே. இது உங்கள் அறியாமை என்று நான் சொல்ல வரவில்லை. துரோகம் என்கிறேன்.

புகைப்படமும், புகையிலை விளம்பரமும் போட்டு வியாபார நோக்கில் பத்திரிக்கை நடத்தும் உங்களிடம், உண்மையை எதிர்பார்த்தது எங்கள் தவறுதான்!

எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்களோ (அவர்களை) நான் உமக்கு அறிவிக்கட்டுமா?

பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். (26:221,222)

பொய்யர்கள், ஷைத்தானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் என்று அல்லாஹ் தெளிவாக கூறிவிட்டபின், உங்களைப் போன்றவர்களிடம் உண்மையை எதிர்பார்த்தது எங்கள் தவறதான்!

“‘உங்களிடம் கூலி வேண்டாதவர்களைப் பின்பற்றுக, அவர்களே நேர்நெறியாளர்கள்”” (36:21)

கூறி வாங்குபவர், கூலி கொடுப்பவரின் தயவுக்காக வளைந்து நெளிந்து கொடுக்கக் கூடும் என்பதை அல்லாஹ் தெளிவாக கூறிவிட்டபின், கூலிக்காக மார்க்கத்தை சொல்லும் உங்களைப் போன்றவர்களிடம் உண்மையை எதிர்பார்த்தது எங்கள் தவறுதான்!

ஆனால், நீங்கள் அடித்த “கப்ஸா”வினால் உண்மை என்னவென்று அறியாத மக்கள் ஏகத்துவத்தின் பக்கம் நெருங்க விடாமல் தடுத்து விட்டுப் போய்விட்டீர்களே! என்ற ஆதங்கம் தான் இதை எழுத தூண்டியது.

அந்த மேடையில் ஷிர்க், பித்அத்துக்கு வக்காலத்து வாங்கிய நீங்கள் தான். எங்களை வழிகெட்டவர்கள் என்றீர்கள்! வேடிக்கையாக இல்லை?

ஒன்னே முக்கால் மணிநேரம் நீங்கள் அளந்து, அளந்து குவித்து வைத்த குப்பை மேட்டிலிருந்து, ஒருசில கூடை குப்பையை மட்டும் ஆராய்ந்து விட்டு, கடைசியில் குப்பை மேட்டை கொளுத்திவிடுவோம்!

திருகுர்ஆனை எல்லோரும் விளங்கிக் கொள்ள முடியாது என்று (அதை விளங்கிக் கொள்ள மவ்லவிகளுக்கு மட்டும் தான் தகுதியுள்ளது. அதனால் மவ்லவிகள் சொல்லும் கதைகளுக்கெல்லாம் நாங்கள் மறுபேச்சு பேசாமல் கைகட்டி வாய்பொத்தி பூம்பூம் மாடு போல் தலையாட்டிக் கொண்டு மெளட்டீகத்திலேயே மூழ்கிக் கிடக்க வேண்டும் என்ற கருத்தில்) பேசினீர்கள்.

மக்களுக்காக குர்ஆனை எளிதாக்கி இருக்கிறோம். (54:17) என்று அல்லாஹ் சொல்கிறான். மேலும் 2:99, 2:159, 3:7, 3:137, 36:69 இன்னும் ஏராளமான ஆயத்துக்கள் அல்குர்ஆன் தெளிவானது எளிதானது என்று சொல்கிறது. ஆனால் நீங்களோ. இல்லை இல்லை குர்ஆன் எளிதானதல்ல என்கிறீர்கள்.

குர்ஆனுக்கு தப்ஸீர் சொல்ல 13 தகுதிகள் தேவை என்று பெரியார்கள்(?) சொன்னார்கள் என்றீர்கள். உங்களுக்கு 14வது தகுதியும் சேர்ந்து இருக்கிறது போலும்: அதனால் தான் ஷிர்க் செய்பவர்களை அல்லாஹ் முஷ்ரிக் என்று சொல்லிக் காட்டுவதை நோட்டீஸில் நாங்கள் தெளிவுபடுத்தி இருந்தோம். மக்களை திசை திருப்பவும், அவர்கள் மனதில் ஆவேசத்தை உண்டுபண்ணவும் “”முஷ்ரிக்” என்ற வார்த்தைக்கு “ஹராத்தில் பிறந்தவன்” என்பதைவிட கோடி மடங்கு கொடியது என்று தப்ஸீர் செய்தீர்கள் போலும்.

எங்களுக்கு எதிராக மக்களை திசை திருப்ப, இல்லை இல்லை உங்கள் பக்கம் மக்களை வைத்துக் கொள்ள முடிந்தவரை கீழ்த்தரமாக இறங்கி விட்டீர்கள் என்பதை நினைக்கும்போது உங்கள் மேல் அனுதாபம்தான் ஏற்படுகிறது.

அடுத்து மவ்லூதுக்கு வக்காலத்து வாங்கி பேசிய நீங்கள், நபி(ஸல்) அவர்களுக்கும் கவிதை பாட தெரியும் என்ற கருத்தில் பேசினீர்கள்.

கஃபு இப்னு ஜுஹைர் என்ற கவிஞர் இஸ்லாத்தை தழுவிய பின் நபி(ஸல்) அவர்களை புகழ்ந்து பாடிய பாடலின் “ஒரு அடியை எடுத்துக் கொடுத்தார்கள். அது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியடைந்து தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து அவருக்கு அன்பளிப்பு செய்து நீ இன்னும் என்னை அதிகமாக புகழ்ந்து பாடிக்கொண்டே இரு என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக ஒரு பொய்யை சொன்னீர்கள்.

ஆனால் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். (அதுவும் நீங்கள் அடிக்கடி கத்தம், பாத்திஹாவுக்கு ஓதும் சூரத்து “யாஸீன்” அத்தியாயத்திலேயே உங்கள் புளுகு மூட்டைக்கு ஆதாரம் இருக்கிறது. பொருள் அறிந்து ஓதினால் தானே! பொருளுக்காக மட்டுமே ஓதினால் புரிவது கஷ்டம் தான்).

(நம்முடைய தூதராகிய)அவருக்கு நாம் கவிதை கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்கு தேவையானதுமல்ல. (36:69)

என்று அல்லாஹ் சொல்கிறான். ஆனால் நீங்களோ, இல்லை நபி(ஸல்) அவர்களுக்கு கவிதை தெரியும் என்கிறீர்கள். மேலும் அன்த கப்பாருல் கதாயா நீங்கள் (எங்களது) பாவங்களை மன்னிப்பவராக இருக்கிறீர்கள் என்பதற்கு பிரமாதமான(?) விளக்கம் கொடுத்து விட்டீர்கள் போங்கள்! அதாவது,

என் தூதருக்கு வழிபட்டால், எனக்கு வழிபட்டது போல் என்று அல்லாஹ் சொல்கிறான். இதன்படி பார்த்தால் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் என்ன? அவன் தூதரிடம் மன்னிப்பு கேட்டால் என்ன? என்று சொன்னீர்கள், ஆனால்,

அல்லாஹ்வையன்றி, பாவங்களை மன்னிப்பவன் யார்? (3:135) என்று தன் தூதரையே கேட்கச் சொல்கிறான்.

என்னை அல்லாஹ்வுடைய அடியார்(அப்துஹு) என்றும், அவனது தூதர்(ரசூலுஹு) என்றும் கூறுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) ஆதாரம்: ரஜீன்.

ஷைத்தான் உங்களை வழிகெடுத்துவிட வேண்டாம் நான் அப்துல்லாவின் மகன் முஹம்மது ஆவேன். இன்னும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். அல்லாஹ் எனக்களித்த தகுதிக்குமேல் என்னை உயர்த்திப் புகழ்வதை நான் விரும்பமாட்டேன். ஆதாரம்:அஹ்மது, பைஹகீ.

இவ்வாறு நபி(ஸல்) அவர்களே சொல்ல, ஆனால் நீங்களோ இல்லை இல்லை, அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒன்றுதான் என்கிறீர்கள். “”ஷிர்க்”” என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று புலம்பினீர்களே. இதை ஆத்திரம் இல்லாமல் சிந்தியுங்கள் அர்த்தம் புரியும்.

அடுத்து ஜியாரத் பற்றி பேசிய நீங்கள் ஜியாரத்தையே நாங்கள் மறுப்பதாக சொன்னீர்கள். இது எவ்வளவு அண்டப் புளுகு! ஆகாசப் புளுகு! நாங்கள் அப்படி சொன்னதாக நிரூபிக்க முடியுமா?

நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தபடி ஜியாரத் செய்யச் சொல்கிறோம். பெண்கள் ஜியாரத் செய்தால் லஃனத் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதை சொல்கிறோம்.

நீங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர் என்று நபி(ஸல்) சொல்லச் சொல்லி இருக்கிறார்கள். ஸலாம் யாருக்கு சொல்வோம் விளங்குகிறவர்களுக்கு தானே! சொல்வோம். விளங்காதவனிடமா சொல்ல முடியும்? விளங்காதவனிடம் போய் ஏதாவது பேச முடியுமா? அப்படி பேசினால் நம் தலையில் சரக்கு (அறிவு) இல்லை என்று அர்த்தம். ஆகவே கப்ரில் உள்ளவர்கள் நாம் சொல்லும் ஸலாமை விளங்கிக் கொள்கிறார்கள். காதால் கேட்கிறார்கள். பதிலும் சொல்கிறார்கள் என்று கூறி மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சி போட்டீர்கள்.

மனிதன் தன் மவுத்தை நினைவு கூற ஜியாரத் ஒரு சந்தர்ப்பமாகவும், அதே நேரம் கபுராளிகளுக்காக துவா செய்வதும் தான், ஜியாரத்தின் நோக்கமேயல்லாமல் பதில் சொல்வார்கள் என்பது இதன் நோக்கமல்ல என்பது உங்களுக்கு புரியாமல் இருப்பது வேதனை தான்.

“”கப்ருகளில் உள்ளவர்களை கேட்கும்படி செய்பவராக நீர் இல்லை”” (35:22)

நபி(ஸல்) அவர்களாலேயே கப்ரில் உள்ளவர்களைச் செவிமடுக்கச் செய்ய முடியாது என்பதை அல்லாஹ் தெளிவாக சொல்கிறான். ஆனால் நீங்களோ! இல்லை இல்லை கப்ரில் உள்ளவர்களை செவிமடுக்கச் செய்ய முடியும் என்கிறீர்கள்.

அடுத்து தராவீஹ் தொழுகை 20+2 ரக்அத்கள் தான் என நிரூபித்தால் ரூ.5000 பரிசு வழங்கப்படும் என்று “”நாகூர் தெளஹீது கமிட்டி””யிலிருந்து சவால் விட்டு நோட்டீஸ் வெளியிட்டு இருந்ததைப் பற்றி பேசிய நீங்கள், அதை நிரூபிக்க முடியாது என்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டீர்களே, அது உங்கள் அறியாமையா என்ன?

ரூ.5000 தருவதாக நோட்டீஸ் விட்டார்களே, “பிச்சைகார காசு” 5 லட்சம் தர அவர்கள் தயாரா? நான் நிரூபித்து காட்டுகிறேன் என்று உங்கள் இயலாமையை வெளிப்படுத்தினீர்கள். இது எல்லாவற்றையும் விட மிக மிக வேடிக்கை தான்! ஓடமுடியாதவன் ரோடு சரியில்லை என்றானாம்! அப்படித்தான் இருக்கிறது உங்கள் கூற்று.

அது சரி, 5 லட்சமும் தரத்தயார்! (உங்கள் பாணியிலேயே) ஆண் பிள்ளையாக இருந்தால் நிரூபிக்கச் சொல் என்கிறார்களே அவர்கள்! உங்களுடைய வீராப்பைக் காட்டுங்களேன் பார்ப்போம்.

உங்களைப் போன்றவர்களுக்கு மார்க்கத்தை விட “”பணம்”” தான் முக்கியம் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவை இல்லை. ஒரு மேடையில் உங்கள் புளுகு மூட்டையை அவிழ்த்து விட கணிசமான ரூபாய் வாங்கும் உங்களுக்கு இந்த 5 லட்சமும் பிச்சை காசாகத் தெரியப் போகிறது! அடுத்த மேடையில் 5 கோடி ரூபாய் தரமுடியுமா என்று கேட்காமல் உடனே நிரூபித்துக் காட்டுங்களேன்.

மூஸா(அலை) அவர்களிடம் போட்டியிட வந்த மத்திரவாதிகள் ஃபிர்அவ்னிடம் என்ன கேட்டார்கள் என்பதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.

தின்னமாக தாங்கள் (மூஸாவை) வென்று விட்டால் நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா? என்று (மந்திரவாதிகள்) கேட்டார்கள். (26:41)

அந்த மந்திரவாதிகள் கேட்டதற்கும், நீங்கள் கேட்டதற்கும் வித்தியாசம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மூஸா(அலை) அவர்களிடம் மந்திரவாதிகள் தோல்வியடைந்து தான் போனார்கள். உண்மையை அறிந்த மந்திரவாதிகள் கடைசியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல் நீங்களும் ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.

மீண்டும் இல்லை இல்லை, நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என்று சொல்லிக் கொண்டே இருக்கமாட்டீர்கள் எனவும் நம்புகிறேன்.

விரிவை அஞ்சி நீங்கள் கொட்டிய குப்பைகளில் சிலதை லேசாக கிண்டினேன். மற்ற விஷயங்களை நாம் சரியாக பேசி விட்டோமோ? என ஆச்சரியப்பட்டு போய் விடாதீர்கள். இந்த விளக்கங்களே போதுமானது. இன்னும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தேவை என்றால் தெரியப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ். பெரிய புத்தக வடிவில் ஆதாரங்களை எழுதி அனுப்புகிறேன். குறிப்பாக, உங்கள் பேச்சின் ஒலிப்பதிவு கேஸட் எங்களிடம் பத்திரமாக உள்ளதால், எதையும் நீங்கள் மறுக்க முடியாது.

N.B. மீட்டிங் முடிந்ததும் நீங்கள் விட்ட (ஆண் பிள்ளையாக இருந்தால், வா! என்ற) சவாலுக்காக கொல்லாபுரம் பெரிய பள்ளிவாசலில் உங்களை நாங்கள் சந்தித்து ஒரே மேடையில் காரைக்கால் பகுதியில் விவாதம் செய்ய நீங்கள் தேதி கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால், நீங்கள் ஆலிமா? என்று கேட்டு மழுப்பிவிட்டீர்கள். இப்போது காரைக்கால், நாகூர் நாகைப்பட்டிணம் தெளஹீதுவாதிகளின் சார்பில் பகிரங்க சவால் உங்களுக்கு விடுகிறோம். நீங்கள் கேட்டபடி(ஸனதுடன்) ஆலிம்களை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் முனாழராவிற்கு தயாரா? உங்கள் பத்திரிகை மூலம் பகிரங்கமாக சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள். (நாங்கள் ஆண்பிள்ளைகள் தான் என்பது விளங்கி இருக்கும்) இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.

நம் அனைவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவானாக! ஆமீன்.

வஸ்ஸலாம்.

***********************************************************************

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!!

அக்.87 இதழில், நாஸ்திகர்களின் பெரியதொரு சந்தேகமான, உலகில் மனிதர்கள் செய்யும் பெருந்தவறுகளை எல்லாம் இறைவன் எப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறான். உடனுக்குடன் தண்டிப்பதில்லை என்பதற்குரிய விளக்கங்களைப் பார்த்தோம்.

இந்த இதழில் சிந்தனையாளர்களையும் திணரச் செய்யும், நாஸ்திகர்களின் ஒரு கேள்வியைப் பார்ப்போம்.

ஒவ்வொரு பொருளின் தோற்றத்திற்கும் மூலம் இருக்கிறது.அடிப்படை இல்லாத பொருளே இல்லை. படைத்தவன் இல்லாமல் படைப்பினங்கள் ஏற்பட்டிருக்க முடியாது. படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று இதிலிருந்து நிரூபணமாகின்றது என்று ஆஸ்திகர்கள் சொன்னமாத்திரத்தில், அப்படியானால் அதே அடிப்படையில் இறைவனையும் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டுமல்லவா? அவன் யார்? யாருமே படைக்காமல் அவன் இருப்பது உண்மையானால், அதே போல் யாருமே படைக்காமல் எல்லா மூலப் பொருட்களும் ஏன் உண்டாகி இருக்க முடியாது? என்ற கேள்வியேயாகும் அது.

இந்தக் கேள்வியை கேட்டமாத்திரத்தில், அறிவாளிகளும் சற்று தடுமாறத்தான் செய்வார்கள். ஆனால் ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இதிலுள்ள போலித்தனத்தை அறிந்துகொள்ள முடியும். ஆழ்ந்து நோக்கும்போதும் மனிதன் பார்க்கும் அனைத்திலும், அடிப்படை உண்மைகளுக்கும், அந்த அடிப்படை உண்மைகளை வைத்து முடிவு செய்யக்கூடிய உண்மைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

ஒரு தமிழ் பேசும் குழந்தை பள்ளிக்குச் சென்றவுடன், அங்கு “அ” என்ற எழுத்தை எழுதி, ஆசிரியர் “”ஆனா”” என்று சொன்னவுடன் அக்குழந்தை எவ்வித மறுப்புமின்றி ஏற்றுக்கொள்கின்றது. அப்படி எல்லா எழுத்துக்களையும் எவ்வித ஆராய்ச்சியும், சிந்தனையுமில்லாத நிலையில் ஏற்றுக்கொண்ட அக்குழந்தை, அதன்பின் அ…ப்….பா என்ற எழுத்துக்களை அம்மா என்று சொல்லிக் கொடுத்தால், இப்பொழுது அக்குழந்தை ஆட்சேபனையை கிளப்புகின்றது. அக்குழந்தை அடிப்படை உண்மைகளை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொண்டதையும், அந்த அடிப்படை உண்மைகளை அஸ்திவாரமாக வைத்து அமைக்கப்படும் விஷயங்களில் பார்த்து பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வதையும் காண்கிறோம். கணக்கிலும் இதே நிலைதான் எல்லாத் துறைகளிலும் இதே நிலைதான். அடிப்படை உண்மைகள் (Axioms, Fundamental Truths, Assumptions) என்று கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளாத ஒரு துறையே இல்லை என்று சொல்லலாம். அடிப்படை உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் உலகில் எதையுமே செய்யமுடியாது. நாஸ்திக நண்பர்கள் இந்தத் துறைகளிலெல்லாம் தங்கள் விதண்டா வாதங்களைச் செய்யாமல், அவற்றை கண்ணை மூடிக்கொண்டு, ஒப்புக்கொண்டு செயல்படத்தான் செய்கிறார்கள். அடிப்படை உண்மைகள் என்று ஆரம்பத்தை உண்மைகளாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்றோ, அல்லது பின்னால் உள்ளவற்றை பார்த்து பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வது போல், ஆரம்பத்தையும் பார்த்து பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்வது போல், ஆரம்பத்தையும் பார்த்து பரிசீலனை செய்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முரட்டு வாதம் செய்வதில்லை. இதிலிருந்தே இறைவனை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் மட்டுமே அவர்கள் தங்கள் அறிவை யாருக்கோ கடன் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நம்மால் எளிதாக உணரமுடிகின்றது. ஆம் சாத்தானின் தூண்டுதலின் காரணமாக இந்த பொருத்தமற்ற விதண்டாவாதங்களை எடுத்து முன் வைக்கின்றனர்.

நாம் ஆரம்பத்திலிருந்து இதைத்தான் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். இறைவன் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட சந்தேகங்களையும், ஐயங்களையும் கிளப்புகின்றீர்களோ, அதேபோன்ற சந்தேகங்களையும், ஐயங்களையும் உங்கள் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பல விஷயங்களில் மட்டும் ஏன் கிளப்ப மாட்டேன்கிறீர்கள்? 2+2=4 என்ற சாதாரண கணக்கு தெரியாத நிலையில் 2100 என்ற பெரிய கணக்கைப் பற்றி ஏன் சிந்திக்கிறீர்கள் என்பதுதான் நமது கேள்வி. 2+2=4 என்ற கணக்கைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. 2100 என்ற கணக்கைப் பற்றித்தான் எனக்கு அக்கறை என்று சொல்லும் எந்த மனிதனையும் புத்திசாலி என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

இந்தக் கண்ணோட்டத்தில் தான் குர்ஆனோ குர்ஆன், என்று நாஸ்திகரான புவணன் புலம்பி இருக்கிறார். அவருடைய ஆதங்கமெலாம், இறைவனை மறுத்துப்பேசும், இறைவனை திட்டும் நபர்களையெல்லாம் அந்த இறைவன் எப்படி நீண்டகாலம் விட்டு வைத்திருக்கிறான்? என்பதுதான். இதைப்பற்றி முன் இதழ்களிலேயே தெளிவாகப் பார்த்து விட்டோம். அரசாங்கம் போடும் சட்டங்களை விமர்சித்துக் கொண்டும், எதிர்த்து பேசிக்கொண்டும், திட்டிக்கொண்டும் திரியும் பலரை நாம் பார்க்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களின்படி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்போது வீராப்பு பேசிய இவர்களும் அந்த நடவடிக்கைகளுக்கு அடங்கித்தான் போக நேரிடுகின்றது. தண்டனைகளையும் அனுபவிக்கத்தான் நேரிடுகின்றது. சாதாரண ஒரு அரசாங்கத்தை மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியை மீற முடியாத இவர்களா, இறையாட்சியை மீறி சாதித்து விடப் போகிறார்கள்? குரைக்கிற நாய் கடிக்காது என்பது போல், உண்மையான சிந்தனை திறனோ, ஆற்றலோ அற்றவர்கள்தான், இப்படிப்பட்ட வீண் வாதங்களை பிதற்றித் திரிவார்கள். இவர்கள் எதைப் பகுத்தறிவு என்று சொல்கிறார்களோ? அதுதான் உண்மையில் பகுத்தறிவா என்று அடுத்துப் பார்ப்போம்.

**********************************************************************************

காதியானிகளின் ஆகாசப்புளுகு!

இந்த சமுதாயத்தின் அடிமட்டத்திலும் அடிமட்டத்தில், ஷிர்க்கிலும், குப்ரிலும் முழுக்க முழுக்க மூழ்கி இருக்கும் பெரும்பான்மையான மக்களை சுவனத்தில் கொண்டு, அவர்களின் அறியாமையைப் போக்க, அவர்களை நேர்வழியில் கொண்டுவர அந்நஜாத் அயராது பாடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் காதியானிகளின் வீண் பிதற்றல்களுக்கு பதில் கொடுப்பதில் பக்கங்களை ஒதுக்க முடியாது என்றே சொல்லி வருகிறோம். இதை நமது இயலாமை என்று காதியானிகள் தங்கள் பத்திரிகையில் பிரமாதப்படுத்தி எழுதி வருகிறார்கள். அவர்கள் வழிகேட்டிலேயே இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது போல் குப்பை கிதாபுகளிலிருந்து அல்ல. அல்லது மனித யூகங்களை அல்ல, தெளிவான குர்ஆன் ஆயத்துக்களைக் கொண்டும், உண்மை ஹதீதுகளைக் கொண்டும், அவர்கள் கேட்டிருக்கும் வரிசையிலேயே நாம் நூல் ஒன்று தயார் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ் அந்த நூல் 1988 ஏப்ரல் 15 அன்று வெளியாகின்றது. அவர்கள் சவால் விட்டிருக்கும் அவர்களின் பரிசை எதிர்பார்த்து அல்ல. மக்கள் சத்தியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக்கோடு அந்த நூலை வெளியிடுகிறோம். முல்லாக்களுக்கு வெண் சாமரம் வீசி, புரோகிதத்தை் நிலைநாட்டும் முடக்கு வாதத்திற்கு காதியானிகளும் துணை போகிறார்கள் என்பதே உண்மையாகும். அல்லாஹ்வுக்கும், அடியாருக்கும் இடையில் எந்த ரூபத்தில் புரோகிதம் நுழைந்தாலும் முற்றாக அந்த புரோகிதத்தை வேரோடு, வேரடி மண்ணோடு ஒழித்துக் கட்டவே அந்நஜாத் பாடுபட்டு வருகின்றது. முல்லாக்களையும், புரோகிதத்தையும் ஆதரிக்கும் ஒரு ஏடு அல்ல அந்நஜாத் என்பதை காதியானிகளுக்கு நினைவுபடுத்துகிறோம்.

அவர்கள் சவால் விட்டிருப்பது போல், காதியானிகளின் பொய்க் கொள்கைகளை நிரூபித்துக் காட்ட எந்த மவ்லவியும் பிறந்திருக்க முடியாது என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். காரணம் புரோகிதர்களால் எப்படி புரோகிதத்தை முறியடிக்க முடியும்? ஆனால் குர்ஆன், ஹதீஸைக் கொண்டு காதியானிகளை முறியடிக்க முடியும் என்பதில் சந்தேகமேயில்லை. “காதியானிகளின் ஆகாசப் புளுகு” என்ற பெயரில் வெளியாகும் அந்த நூலின் கிரயம் ரூ.10/- காதியானிகளைப் பற்றியும், அவர்களின் பொய்க் கொள்கைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புவோர் ரூ.10/- முன் பணம் அனுப்பி தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

*************************************************************************

ஒரு மெளலவியின் மனம் திறந்த மடல்:

உண்மையினை உணர்ந்தேன்! மெளலவி K.முஹம்மது ரபீக்

மன்பயீ(பேஷ் இமாம்), (சித்தையன் கோட்டை)

அல்-அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம்-612 001.

“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுடைய (நெறிநூல் என்னும்) கயிற்றைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்: பிரிந்து விடவேண்டாம். (அல்குர்ஆன் 3:103)

என் உடன் பிறவா அறிஞர் பெருமக்களே! உங்கள் சிந்தனைகளை கொஞ்சம் ஓட விடுங்கள்! மனிதன் எண்ணுவதையெல்லாம் அவன் செய்துவிட முடியாது: அத்தகைய ஆற்றலை அவனுக்கு அல்லாஹ் அளித்துவிடவில்லை இந்நிலையில், மனிதர்களிடையே ஏற்படுகின்ற காழ்ப்புணர்வு காரணமாகவோ அல்லது சுயநலம் காரணமாகவோ உண்மை நிலைமை ஒத்துக் கொள்ள அவர்கள் மறுக்கின்றார்கள்.

குறிப்பாக மார்க்கப் பேரறிஞர்கள் என்று தமக்குத் தூமே பட்டம் வழங்கிக் கொண்டு, நம்மை எதிர்ப்பார் எவருமில்லை: நாம் சொன்னால் அப்படியே மக்கள் நம்பி விடுவார்கள் என்ற இறுமாப்பின் காரணமாக, அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் நீங்கி, அவன் மறையின் போதனைகளை மறந்து முன்னோர்கள் பின்பற்றி வந்த தவறான மார்க்கத்தையே இவர்களும் மக்களுக்கு உணர்த்தி, வயிறு புடைக்க உண்டு. நம் சட்டைப் பைகளையும் சில சில்லரை காசுகளால் நிரப்பி வந்தனர்.

இத்தகைய காலக் கட்டத்தில்தான், அந்நஜாத் இதழை காணும் பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

காண்பதற்கு முன்னால் என்னிடம் சில மெளலவிகள் என்போர் கூறியதையும் அப்படியே இவண் கூறுகிறேன். “”ஒரு நஜீஸ்” பத்திரிகை வந்துள்ளதால் அதன் பேர் “அந்நஜாத்” நாம்! அது மக்களுக்கு மார்க்கத்தின் உண்மையைக் கூற வந்து விட்டதாம்! என்று கூறினார்கள். நானும் அப்படியா? என்று வினவி விட்டு பேசாமல் இருந்துவிட்டேன் பார்த்தபிறகு – படித்த பிறகு – தகுந்த சான்றுகளுடன் ஹதீஸ்களைப் பார்த்த கண்களுடன் படித்து சிந்தனை செய்த இதயத்துடன் நான் ஒருகணம் என்னை உணர்ந்த நிலையில், “அல்ஹம்துலில்லாஹ்” என்று அல்லாஹ்வுக்கு நன்றி நவின்றேன்.

தாங்கள் இதுவரை வெளியிட்ட அந்நஜாத் இதழ்கள் எல்லாவற்றையும் படித்துணர்ந்து சிந்திக்கத் தலைபட்டபோது எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. முழுமையாக ஏழு ஆண்டுகள் அரபிக் கல்லூரியில் ஓதிய நிலை! மனப்பாடமாக – பொருளை அறிந்து அமல் செய்ய எண்ணாத நிலை! வயிற்றுப் பிழைப்பை நிறைவேற்றிக் கொள்ள நாம் படித்த அரபிப் பாடங்கள் ஒரு கருவியாகத்தான் எண்ணினேன். இறையருளால் தான் என்னை இப்போது உணர்கிறேன். மனித வாழ்வு மறுமையில் தான் நிறைவு பெறுகின்றது. இம்மை ஒரு கானல் நீர் அற்ப சுகத்துக்காக நாம் வாழ்ந்துவிட்டால் அல்லாஹ்வின் பேரருள் நமக்குக் கிடைக்காது என்பதை உணர்கிறேன். திருமறை குர்ஆனை – தெள்ளிய ஹதீஸை ஆய்ந்துணர்ந்து கடைபிடிக்கத் தலைப்பட்டு விட்டேன். என்னால் இயன்றவரை பொதுமக்களுக்குச் சொல்லியும் வருகிறேன். சிலர் முகம் சுளிப்பதையும் என்னால் காணமுடிகின்றது.

உண்மை கசக்கத்தான் செய்யும்; போக போக அதன் இனிமையை மக்கள் உணர்வார்கள்.

நாம் எதற்காகவும் பிரிந்து விடாமல் நல்ல முஸ்லிம்களாக வாழவேண்டுமென்பதே என் வேணவா? இஸ்லாத்தில் எக்காரணம் கொண்டும் பிளவு கூடாது. இதனையே தான் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய மாமறை உறுதிப்படுத்துகின்றது. வஸ்ஸலாம்.

இவண்,

மெளலவி. K. முஹம்மது ரபீக்

ஒப்பம்.

கும்பகோணம்,

28-12.1987

**************************************************************************

நல்லவர் யார்? கெட்டவர் யார்?

“உங்களில் எவரது தீங்கை அஞ்சப்படாது, அவரது நலவை ஆதரவு வைக்கப்படுமோ அவரே நல்லவரும், எவரது நலவை ஆதரவு வைக்கப்படாது. அவரது தீங்கை அஞ்சப்படுமோ அவரே கெட்டவருமாவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), திர்மிதீ, பைஹகீ.

*************************************************************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: சுப்ஹு தொழுகையின் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது, சுன்னத்துக்குத் தொழலாமா? – ஜைனுல் ஆபிதீன் – இனங்காகுறிச்சி.

தெளிவு: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள் சுப்ஹு தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்பொழுது சுன்னத்துத் தொழுகை இரண்டு ரகா அத்துகளைத் தொழ ஒருவர் ஆரம்பித்தார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரது ஆடையைப் பிடித்திழுத்து, சுப்ஹுத் தொழுகையை நான்கு ரகாஅத்துகளாக்க நீர் கருதுகிறீரோ? என்று கேட்டார்கள். (அஹ்மத்)

கைஸ் பின் உமர்(ரழி) கூறுகிறார்கள். நான் சுப்ஹு தொழச் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டவுடன், அவர்களோடு பர்ளைத் தொழுதுவிட்டு பின்னர் நான் தொழாதிருந்த பஜ்ருடைய சுன்னத்துகளைத் தொழுதேன். அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, என்ன இப்பொழுது தொழுதீர்? என்று கேட்க, நான் விடுபட்டு விட்ட சுன்னத்தைத் தொழுதேன் என்றேன் அதற்கு அவர்கள் ஏதும் கூறாது சென்று விட்டார்கள்.
கைஸ்பின் உமர்(ரழி), (அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்)

ஐயம்: நபி(ஸல்) அவர்கள் அஸ்ருக்கும், இஷாவுக்கும் முன் சுன்னத்து தொழுதுள்ளார்களா? அவர்களின் அந்த சுன்னத்துகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையும் சாதாரணமானவையும் இருக்கின்றனவா? அவற்றிற்கு ஹதீஸின் அடிப்படையில் விளக்கம் தருக! அஹ்மத், அல்கோபார்.

தெளிவு: இப்னு உமர்(ரழி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்களிடமிருந்து (தினசரி சுன்னத்தான தொழுகைகள்) 10 ரகாஅத்துகள் தான் என்பதை நான் மனனம் செய்து வைத்துள்ளேன். (அவையாவன) முஹ்ருக்கு முன் 2 ரகாஅத்துக்கள், பின் 2 ரகாஅத்துகள், மஃரிபுக்குப் பின் 2 ரகாஅத்துகள், இஷாவுக்குப்பின் தமது வீட்டில் 2 ரகாஅத்துகள் ஸுபுஹுக்கு முன் 2 ரகா அத்துகள். (புகாரி, முஸ்லிம்)

அன்னை உம்முஹபிபா(ரழி) அறிவிக்கிறார்கள், “ஒரு பகலும் இரவும் 12 ரகாஅத்துகள் (சுன்னத்தான தொழுகைகள்) தொழும் ஒரு நபருக்கு அவற்றைத் தொழுததன் காரணமாக சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நாள் முதல் நான் அவற்றை (ஒருநாளும்) விடவேவில்லை. (முஸ்லிம்)

மேற்காணும் இரு ஹதீஸ்களும் ஏற்கத்தக்க, ஸஹீஹானவையாயிருப்பதால் இரண்டின்படியும் அமல் செய்வது ஆகும்; மேலும் நபி(ஸல்) அவர்கள் தாமே முஹ்ருக்கு முன், சமயங்களில் 4ம், சமயங்களில் 2ம், தொழுதிருப்பதாக ஹதீஸ்களில் காணப்படுகிறது. மேலும் இவற்றை பெரும்பாலும் தாமும் தொழுது, பிறரையும் தொழும்படி ஆர்வமூட்டியிருப்பதால் இவற்றை பிரதானமானவை எனக் கருதப்படுகிறது. இவையன்றி அஸ்ருக்கும், இஷாவுக்கும் முன்னுள்ள 4 ரகாஅத்துகள் குறித்தும், முஹ்ரு, மஃரிபு, இஷா முதலியவற்றின் பர்ளுக்குப் பின் தொழும் 2 ரகாஅத்து சுன்னத்து நீங்குதலாக, நபில் என்னும் வகையில் தொழப்படும் 2 ரகாஅத்துகள் குறித்தும் போதுமான ஆதாரங்கள் ஹதீஸில் கிடையாது.

“அஸ்ருக்கு முன் 4 ரகாஅத்துகள் தொழுபவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்பான்” எனும் ஹதீஸ் இப்னு உமர்(ரழி) வாயிலாக அஹ்மத், அபூதாவூத், திர்மிதி ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது பற்றி இப்னு ஹிப்பான், இப்னு குஜைமா  ஆகியோர் ஸஹீஹானவை என்றும், திர்மதீ இமாம் அவர்கள் அதை ஹஸனான அறிவிப்பென்று கூறியிருப்பினும், ஏனைய ஹதீஸ்கலா வல்லுநர்கள் அவை குறித்து பல்வேறு குறைபாடுகளிருப்பதாகக் கூறியிருப்பதால், அஸ்ரு, இஷா, ஆகியவற்றின் முன் சுன்னத்துகள் இரண்டு ரகாஅத்துகள் என்பதைக் கூட, பொதுவான கீழ்காணும் ஒரு ஹதீஸையே ஆதாரமாகக் கொண்டு அமுல் நடத்தப்படுகிறது.

அதாவது பாங்குக்கும், இகாமத்துக்குமிடையில் தொழுகை உண்டு பாங்குக்கும், இகாமத்துக்கும் இடையில் தொழுகையுண்டு என்று நபி(ஸல்) கூறிவிட்டு, மூன்றாம் முறையாக விருப்பமுள்ளவர்களுக்கு என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ்பின் முகஃப்பல்(ரழி) (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜ்ஜா)

ஆகவே, நபி(ஸல்) அவர்களால் மேற்கூறப்பட்ட 10 ரகாஅத்து சுன்னத்துகள் நீங்குதலாக மற்றவை சாதாரணமானவை என்பதை அறிகிறோம்.

ஐயம்: ஜும்ஆவுக்கு முன், பின், தொழும் சுன்னத்துகளின் நிலை குறித்து ஹதீஸின் அடிப்படையில் விளக்கம் தருக!

அப்துல்லாஹ், திருச்சி-8.

தெளிவு: அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள்: ஜும்ஆவின் பர்ளுக்குப் பின் தொழுவோர் 4 ரகாஅத்துகள் தொழுது கொள்வார்களாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூது, திர்மிதீ)

இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவுக்குப் பிறகு தமது வீட்டில் 2 ரகாஅத்துகள் தொழுவார்கள்.

(புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

இமாம் அபூதாவூத் அவர்கள் இப்னு உமர்(ரழி) அவர்களின் இதே ஹதீஸின் தொடரில், “நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் தொழுதால் 4ம், வீட்டில் தொழுதால் 2 ரகாஅத்துகளும் தொழுவார்கள்” என்று அறிவித்துள்ளார்கள். ஆகவே ஜும்ஆவுக்குப்பின் 4ம், அல்லது 2 ரகாஅத்துகளும் தொழுதுள்ளார்கள் என்பதையே ஹதீஸில் காணலாம்.

ஆனால் ஜும்ஆவில் பர்ளுக்கு முன் (முஹ்ருக்கு 4 அல்லது 2 ரகாஅத்துகள் தொழுவதுபோல்) நபி(ஸல்) அவர்கள் எதுவும் தொழுதார்கள் என்பதற்கு, ஸஹீஹான ஹதீஸ்கள் ஒன்றுமிலலை. அவ்வாறு உண்டு என்று கூறினால், அது பலகீனமானதாகவோ அல்லது இடைச் செருகலாகவோ அன்றி வேறில்லை.

எனவே, ஜும்ஆவின் பர்ளுக்குமுன், தஹியத்துல்மஸ்ஜித்(பள்ளி காணிக்கை தொழுகை) எல்லா தினங்களிலும் சுன்னத்தாயிருப்பது போல் அன்றும் சுன்னத்துத்தான் என்பதை மறந்து விட வேண்டாம். ஆகவே அதையும், அதுபோன்ற மற்ற நபிலான எத்தொழுகையையும் தொழுது கொள்வது பற்றி எதுவுமில்லை. ஆனால் ஜும்ஆவுக்கு முன் சுன்னத்துகள் எதுவும் ஹதீஸின் அடிப்படையில் இல்லை என்பதே மிகச் சரியானதாகும்.

ஐயம்: தூக்கம் அல்லது மறதியின் காரணமாக, விழித்தவுடன் அல்லது நினைவு வந்தவுடன் தொழலாம் என்று முயற்சிக்கும்போது நேரம் மக்ரூஹானதாக இருக்கிறது. அப்பொழுது அத்தொழுகையைத் தொழலாமா? K.முஹம்மது ஸாலிஹ், வேலுர்.

தெளிவு: ஒருவர்(பர்ளான) தொழுகையை மறந்து விட்டால் அல்லது (தொழாது) தூங்கி விட்டால் அல்லது (தொழுது) தூங்கிவிட்டால், அதற்குப் பரிகாரம் அதை நினைத்தவுடன் (அல்லது விழித்தவுடன்) தொழுது கொள்வதேயாகும். (மற்றொரு அறிவிப்பில்) அதற்கு அதைத் தவிர வேறு பரிகாரமே கிடையாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்)

தூக்கத்தினால் எத்தவறுமில்லை. ஆனால் தவறெல்லாம் விழிப்பில் தான் உள்ளன. உங்களில் ஒருவர்(பர்ளான) தொழுகையை மறந்து விட்டால், அல்லது அதை விட்டும் தூங்கி விட்டால் (தூக்கத்தை விட்டு விழித்தவுடன்) மறதியிலிருந்து நினைவு வந்தவுடன் அதைத் தொழுது கொள்வாராக! ஏனெனில், “என்னை நினைப்பதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக” என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூகதாதா(ரழி), முஸ்லிம்.

மேற்காணும் ஹதீஸின் வாயிலாக, தூங்கியவர் எழுந்தவுடன், மறந்தவர் நினைவு வந்தவுடன் எந்த நேரம் என்பதையே பொருட்படுத்தாது தொழுது கொள்வதுதான் சரி என்பதை அறிகிறோம்.

ஐயம்: பிரசவமாகி மூன்று தினங்கள் வரை தாயின் உடல் நலம் கருதி பிராந்தியை மருந்து போல் குடிக்கலாம் என்று சிலர் கூறுகிறார்களே அவ்வாறு குடிக்க மார்க்கம் அனுமதிக்கிறதா? ஸஃபிய்யா, திட்டச்சேரி.

மருந்து எனும் வகையில் ஆட்டின் இரத்தம் சாப்பிடுவது நமது மார்க்கத்தில் ஆகுமா? முஹம்மத்கனி, இளங்காகுறிச்சி.

தெளிவு: மூமின்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமு், விக்ரக ஆராதனையும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள் (5:90). போதை தரும் பாவங்கள் அனைத்தும் ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஷா(ரழி), (புகாரி)

இவ்வுலகில் ஒருவர் மதுவை அருந்திவிட்டு (அப்பாவத்திற்காக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு திருந்தி நடக்காவிட்டால் (சுவர்க்கத்தில்) மறு உலகில் (அல்லாஹ்வினால் அருளப்படும் பரிசுத்தமான) பானத்தை இழந்து விடுவர்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), (புகாரி)

வல்ல அல்லாஹ்வும், அவனது ரசூலும் மேற்கண்டவாறு எச்சரிக்கை செய்துள்ள போது, மருந்துக்காக அதை உபயோகிப்பதும் ஹராமேயாகும். காரணம் மதுபானமல்லாது, வேறு அநேக விதமான நல்ல ஹலாலான மருந்துகள் நூற்றுக்கணக்கில் இருக்கும்போது, எவ்வாறு பிராந்தி குடிப்பது ஆகுமானதாகும்? வேறு வழியே இல்லாமல் அதை சாப்பிட்டால் தான் மட்டும் ஆள் பிழைக்க முடியும் என்ற கடுமையான நிர்பந்த நிலை ஏற்படும் போது பிராந்தி என்ன? பன்றியின் மாமிசத்தையும், இரத்தத்தையும், செத்துவிட்ட பிராணிகளையும் கூட சாப்பிடலாம் என்று திருகுர்ஆனே கூறுகிறது. (மூமின்களே! நீங்கள் சாப்பிடக் கூடாது என்று) உங்களுக்குத் தடுக்கப்பட்டிருப்பவை: தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கும்போது) அல்லாஹ் அல்லாத வேறு பெயர் சொல்லப்பட்டதுமேயாகும். ஆனால் எவரேனும் தம் சுய விருப்பமின்றி, பாவம் செய்யும் நோக்கமின்றி, வரம்பு மீறாமல், (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டு விட்டால் அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அல்லாஹ் கருணை மிக்கோணும், அன்புடையோனுமாக இருக்கிறான். (2:173)

மேற்காணும் திருவசனத்தில் இரத்தமும் ஹராமாக்கப்பட்டுள்ளதை அறிகிறோம். சில பகுதிகளில் மூல வியாதி நெஞ்சுவலி என்று சொல்லிக்கொண்டு, சர்வ சாதாரணமாக அதைச் சாப்பிடுகிறார்கள். ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் வாயிலுபின் ஸுவைத்(ரழி) அவர்கள் மருந்துக்கு மதுவை உபயோகிப்பது ஆகுமா என்று கேட்டார். அதற்கவர்கள், கூடாது என்றார்கள். மீண்டும் கேட்டார் கூடாது என்றார்கள். அப்பொழுது அவர் அல்லாஹ்வுடைய நபியே! மருந்துக்குத்தானே கேட்கிறேன் என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அது மருந்தல்லவே, அது வியாதியாயிற்றெ என்றார்கள்.” வாயிலுல்ஹழ்ரமீ(ரழி), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)

எனவே நபி(ஸல்) அவர்கள் மருந்துக்குக் கூட ஹராமான பொருட்களை உபயோகிப்பது கூடாது என்று கூறியிருப்பதை உணருகிறோம்.

ஐயம்: அன்னிய மதத்தவர் உபயோகிக்கும் சமையல், சாப்பாட்டுப் பாத்திரங்களை நாம் உபயோகிப்பது கூடுமா?   S.A.லியாகத் அலி, திருச்சி.

தெளிவு: ஒருமுறை அபூதஃலபா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு (பிரயாணத்தின் போது) மஜுஸி(நெருப்பு வணங்கி) களின் பாத்திரங்களை உபயோகிக்கும் நிர்பந்தநிலை ஏற்பட்டுவிடின்; அப்பொழுது அவற்றை நாங்கள் உபயோகித்துக் கொள்வது பற்றி முடிவு சொல்லுங்கள் என்றார். அதற்கவர்கள் அவ்வாறு நிர்பந்த நிலை ஏற்பட்டு விட்டால், அவற்றைத் தண்ணீரால் நன்கு கழுவிக் கொண்டு, பின்னர் அதனால் சமைத்துக் கொள்ளுங்கள் என்றார்கள். அப்துல்லாஹ்பின் உமர்(ரழி),(அஹ்மத்)

ஆகவே முஸ்லிம் அல்லாதவர்களின் பாத்திரங்களை நன்றாய் தண்ணீரால் கழுவியபின் உபயோகிப்பது ஆகும் என்பதை அறியலாம்.

ஐயம் : ஒருவர் மற்றொரு முஸ்லிமிடம் மூன்று தினங்களுக்கு அதிகமாக பேசாமலிருப்பது கூடாது என்று கேள்விப்படுகிறென் அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா? P.M.மீரான், பத்ராவதி.

தெளிவு: ஆம், அவ்வாறே கூறியுள்ளார்கள். “ஒருவர் தமது முஸ்லிம் சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக (அவரோடு பேசாது) வெறுத்து, இருவரும் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் புறக்கணித்துச் சென்று விடுவது முறை அல்ல. அவ்விருவரில் அடுத்த நபருக்கு முதலில் ஸலாம் சொல்பவரே சிறந்தவராவார் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அபூஅய்யுபல் அன்ஸாரீ(ரழி), (புகாரி, முஸ்லிம் அபூதாவூத்)

“மூன்று தினங்களுக்கு அதிகமாக ஒரு மூமினானவர், அடுத்த மூமினானவரை வெறுத்து விட்டிருப்பது முறை அல்ல. மூன்று தினங்கள் கழித்துவிட்டால் (தாம் வெறுத்து விட்டிருந்த) அவரைச் சந்தித்து ஸலாம் சொல்ல வேண்டும். அவர் பதில் கூறிவிட்டால், இருவரும் (பரஸ்பரம் தமது வெறுப்பை அகற்றிக் கொண்டமைக்காக கிடைக்கும்) கூலியில் பங்குதாரராவார். அவர் பதில் கூறாவிடில் அவர் மட்டும் பாவத்தைச் சுமந்தவராவர், ஸலாம் கூறியவர் (ஒரு முஸ்லிமை) வெறுக்கும் நிலையை விட்டும் விலகி விடுகிறார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), (அபூதாவூது)

ஐயம்: மீன் போன்ற கடல் வாழ் பிராணிகளை நாம் ஏன் மற்ற பிராணிகளைப் போல், அறுத்துப் புசிப்பதில்லை? அவ்வாறு செய்வதற்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆதாரம் காட்டுக! K.அர்ஷத் அஹ்மத், பேரனாம்பட்டு.

தெளிவு: (விசுவாசிகளே) (இஹ்ராம் அணிந்துள்ள) உங்களுக்கும், (மற்ற) பிரயாணிகளுக்கும், (பயன் கருதி) நீரில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் ஹலாலாக (ஆகுமானதாக) ஆக்கப்பட்டுள்ளது (5:96). ஒருவர் நபி(ஸல்) அவர்களிடத்தில் யாரசூலல்லாஹ்! நாங்கள் கடலில் பிரயாணம் செய்யும்போது, எங்களுடன் சிறிதளவு தண்ணீரே கொண்டு செல்கிறோம். அத்தண்ணீரால் நாங்கள் ஒளூ செய்துவிட்டால், பின்னர் தாகிந்திருக்க நேரிடும். அப்பொழுது கடல் நீரால் நாங்கள் ஒளூ செய்து கொள்வது ஆகுமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கடலின் தண்ணீர் சுத்தமானதும் அதிலுள்ளவற்றில் மரித்தவை ஹலாலானதுமாகும் என்றார்கள். அபூஹுரைரா(ரழி) (புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ)

மேற்காணும் திருவசனம், ஹதீஸ் ஆகியவற்றின் மூலம் கடல்வாழ் பிராணிகளில் இறந்து போனவையும் ஹலால் என்பதை உணருகிறோம்.

ஐயம் : ஒரு முஸ்லிம் பொய் சொல்வது ஆகுமா? இஸ்லாத்தில் பொய் சொல்வது குறித்து ஏதேனும் விதிமுறை உண்டா? P.M.மீரான்,பத்ராவதி.

தெளிவு: உம்முகுல்ஸூம் பின்த் உக்பா(ரழி) அறிவிக்கிறார்கள்:

“மக்களிடையே (பகைமையை நீக்கி) ஒற்றுமையை உண்டுபண்ணும் நோக்கோடு, நல்லதைச் சொல்லி நன்மையை வளர்ப்பதற்காக (இல்லாததொன்றைப்) பேசுபவர் பொய்யல்லர்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

“மக்கள் பொய் என்று சொல்பவற்றில், நபி(ஸல்) அவர்கள் சொல்வதற்கு அனுமதி வழங்கியவை மூன்றே அன்றி, (வேறு எதையும் அவர்கள் கூற) அவர்களிடமிருந்து நான் கேட்டது கிடையாது.

(1) யுத்தகளத்தில் (எதிரியைச் சமாளிப்பதற்காக, யுத்த தந்திர அடிப்படையில் கூறும் பொய்).

(2) மக்களிடையே நல்லுறவை உண்டுபண்ணுவதற்காகக் (கூறும் பொய்).

(3) “ஒரு கணவர் தமது மனைவியையும், ஒரு மனைவி தமது கணவரையும் திருப்தி செய்வதற்காக சொல்லும் பொய் என்று “நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்முகுல்ஸூம் பின்த் உக்பர்(ரழி), (முஸ்லிம்)

ஐயம்: ஆண்கள் தலையில் முடி வைப்பது அல்லது சிரைத்து விடுவது ஆகியவற்றில் ஹதீஸின் அடிப்படையில் எது சிறந்தது? ரியாஷ்,மதராஸ்.

தெளிவு: இப்னு உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தனது தலையில் ஒரு பகுதி சிரைக்கப்படும், மறுபகுதி (சிரைக்காது) விடப்பட்டுமிருந்த ஒரு சிறுவனைக் கண்டார்கள். அப்போது (சம்பந்தப்பட்டவர்களிடம்) அதை முழுமையாகச் சிரைத்து விடுங்கள். அல்லது அதைச் சிரைக்காது) முழுமையாக கேட்டு விடுங்கள் என்றார்கள். (அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)

இந்த ஹதீஸ், தலைமுடி வைத்துக் கொள்வது சிரமமெனக் கருதும் ஆடவருக்கு, அதை அகற்றிக் கொள்ளவும் செய்யலாம் என அனுமதி வழங்குகிறது.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜு உம்ரா போன்ற சந்தர்ப்பத்திலன்றி மற்ற நேரங்களில் தலைமுடியைச் சிரைத்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் ஹதீஸ்களில் கிடையாது. ஹஜ்ஜு உம்ராவின் போதும் தலை மொட்டை போட்டு தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. விரும்பினால் போடலாம். இல்லையேல் சிறிதளவு முடியை வெட்டிக்கொள்ளவும் செய்யலாம்.

இது விஷயம் குறித்து அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. “நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் பயமற்றவர்களாக, உங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், மேலும் அதன் உரோமங்களை வெட்டிக் கொண்டவர்களாகவும் பிரவேசிப்பீர்கள்”. (48:27)

மொட்டைக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு, மார்க்க ரீதியாக மொட்டை போடுவதால் ஏதோ நன்மை இருப்பதாக கருதிக் கொண்டிருப்போர் கவனிப்பார்களாக!

எனவே முடி வைத்திருப்போர், ஹிப்பிகளைப் போல் அதைப் பாராமுகமாக, தலைவிரி கோலத்தில் விட்டு விடாது. நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களுக்கேற்ப, பாதி காதுக்கு மேல் போகாது. புஜத்திற்குக் கீழ் இறங்காது. முறையாக வெட்டிக்கொண்டு, எண்ணெய் தடவி, சீவி முறையோடு வைத்துக் கொள்வார்களாக!

ஐயம்: “ஹுஹு” என்னும் வார்த்தையைக் கூறி, தனியாகவோ, கூட்டாகவோ திக்ரு செய்வது கூடுமா? H.S.அலாவுத்தீன், அதிரை.

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தியானம் செய்வதற்காக “ஹுஹு” என்னும் வார்த்தையை நமக்குக் கற்றுத்தரவில்லை. அவர்கள் நமக்கு திக்ரு செய்வதற்கு கற்றுத்தந்தவை அனைத்தும் முழுமையான பொருளைக் கொண்டுள்ள வாக்கியங்களே தவிர, பொருள் முழுமை பெறாத வார்த்தைகள் எதுவுமில்லை. உதாரணமாக, “சுப்ஹானல்லாஹ்” அல்லாஹ் பரிசுத்தமானவன், “அல்ஹம்துலில்லாஹ்” அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே “அல்லாஹு அக்பர்” அல்லாஹ் மிகப் பெரியோன். இவை போன்ற வாசகங்களையே கூறி அல்லாஹ்வை தியானம் செய்வதற்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

நான் ஒரு முறை “சுப்ஹானல்லாஹி-வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹஇல்லல்லாஹு – வல்லாஹு அக்பர் என்று கூறுவதானது. எவற்றின் மீதெல்லாம் சூரியன் உதிக்கின்றதோ அவை அனைத்தைக் காட்டிலும் (அகில உலகத்தைக் காட்டிலும்) எனக்கு அதிகம் வீருப்பமுள்ளதாகும். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.

ஆகவே நபி(ஸல்) அவர்கள் கூறப்பட்ட வாசகங்களைக் கொண்டு திக்ரு செய்வதன் மூலமே, நன்மையை அடைய முடியுமே அன்றி, அவர்களால் கற்றுத்தரப்படாத, நமது சொந்தத் தயாரிப்பிலுள்ள, எந்த திக்ருகளுக்கும், குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் சிறிதும் நன்மை கிடையாது.

ஐயம்: நாம் நமது விஷயங்களை ஒரு வக்கீலிடம் எடுத்துச் சொல்லி நீதிபதியிடம் நியாயத்தைக் கோருவது போல், அவ்லியாக்களிடத்தில் அவ்வாறு கூறி அல்லாஹ்வை அணுகுவதில் என்ன தவறு இருக்கிறது? அவர்களும் வக்கீலைப் போன்றவர்கள் தானே! நாம் பாவிகளாயிருப்பதால், நமது தேவைகளை அவனிடம் நேரிடையாக எப்படி கேட்க முடியும்? A. கமாலுத்தீன், துபை.

தெளிவு: (நபியே!) நானம் உம்மை எவர்கள் மீதும் பாதுகாவலராக நியமிக்கவில்லை. இன்னும் நீர் எவருக்கும் வக்கீலும்ட அல்லர். (6:107)

என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தும் பாவங்களையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மன்னித்துக் கிருபை செய்பவனாகும் என்று (நான் கூறுவதாக நபியே!) நீர் கூறும். (39:53)

“உன்னையே வணங்குகிறோம் மேலும் உன்னிடமே உதவி தேடுகிறோம்” (1:4)

எனவே, நல்லடிாயர்களும், பாவிகளும் இடைத்தரகரே இல்லாமல் இறைவனிடம நேரிடையாக கேட்கவேண்டும் என்பதை மேற்காணும் திருவசனங்கள் வலியுறுத்துகின்றன.

********************************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு  தொடர் -12   அபூஅஸ்மா

ஸஹாபாக்களை கண்ணால் காணும் பாக்கியம் பெற்ற சிலரின் விபரம்:

1. ஸயீத்பின் முஸய்யயு(ரழி)

இவர்கள் உமர்(ரழி) அவர்களின் கிலாபத்தாட்சியின் போது இரண்டாம் ஆண்டில் மதீனாவில் பிறந்து, ஹிஜ்ரி 105ல் காலமானார்கள். இவர்கள் ஸஹாபா பெருமக்களில் உஸ்மான்(ரழி), அன்னை ஆயிஷா(ரழி), அபூஹுரைரா(ரழி), ஜைதுபின்ஸாபித(ரழி) ஆகியோரிடமிருந்து ஹதீஸ் ஞானம் பெற்றிருக்கிறார்கள்.

2. உர்வாபின் ஜுபைர் (ரழி)

இவர்கள் மதீனாவின் பேரறிஞர்களில் ஒருவராகத் திகழ்வதோடு அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் சகோதரியாம் அன்னை அஸ்மா(ரழி) அவர்களின் அருமைப் புதல்வருமாவார்கள். இதன் காரணமாகவே இவர்களின் பெரும்பாலான அறிவிப்புகள், இவர்களின் சிறப்புமிக்க சிறிய தாயாராம். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டவையாக காணப்படுகின்றன.

இது மட்டுமின்றி, அபூஹுரைரா(ரழி) ஜைத்பின்ஸாபித்(ரழி) ஆகியோரின் மாணவராயிருக்கும் பேறும் பெற்றவர்கள் ஸாலிஹுபின் கைஸ்(ரழி), இமாம் ஜுஹரி(ரழி) போன்ற மாமேதைகளும், இவர்களின் மாணாக்கர்களில் உள்ளவரேயாவார். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 94ல் ஆயிற்று.

3. ஸாலிமு பின் அப்துல்லாஹ் பின் உமர்(ரழி)

இவர்கள் மதீனா நகரின் சட்ட நிபுணர் எழுவரில் ஒருவராவர். குறிப்பாக தமது மதிப்பிற்குரிய தந்தையாம், அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்களிடத்திலும், பொதுவாக அநேக ஸஹாபாக்களிடத்திலும், ஹதீஸ்ஞானம் பெற்றுள்ளார்கள். நாஃபிஉ(ரழி), ஜுஹரீ(ரழி) முதலிய பிரபலமான தாபியின்களும் இவர்களின் மாணாக்கர்களாவர். இவர்கள் ஹிஜ்ரீ 160ல் காலமானார்கள்.

4. நாஃபிஉமவ்லா அப்துல்லாஹ்பின் உமர்(ரழி)

இவர்கள் அப்துல்லாஹ்பின் உமர்(ரழி)அவர்களின் பிரதான மாணவரும், இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் ஆசிரியருமாவார்கள்.

இவர்களின் வாயிலாக இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கும் கிடைத்துள்ள குறிப்பிட்டதோர் அறிவிப்புத் தொடருக்கு ஹதீஸ் கலாவல்லுநர்களிடையே “தங்க சங்கிலித் தொடர்” என்று பெருமிதமாகப் பேசிக்கொள்ளும் பழக்கமிருக்கிறது. அதாவது, ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) கூற, அவர்கள் கூறியதாகறாஃபிஉ(ரழி) கூற, அவர்கள் கூறியதாக இமாம் மாலிக்(ரஹ்) கூறினார்கள்” எனும் அறிவிப்புத் தொடராகும்.

மேலே காணப்படும் அறிவிப்புத் தொடரில் நபி(ஸல்) அவர்களுக்கும், இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கும் இடையில் இருவர் மட்டுமே காணப்படுகிறார்கள். அந்தளவு நபி(ஸல்) அவர்களுக்கு இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் அண்மித்திருப்பதை முன்னிட்டு இவ்வாறு “தங்க சங்கிலித் தொடர்” என சிலாகித்துக் கூறப்படுகிறது. நாஃபிஉ(ரழி) அவர்கள் ஹிஜ்ரி 117ல் காலமானார்கள்.

5. அபூ உமாமா அன்ஸாரீ (ரழி)

இவர்களின்  அசல்பெயர் “ஸஃதுபின் ஸஹ்லுபின் ஹனீஃப் அன்ஸாரீ அவ்ஸீ” என்பதாகும். எனினும் இவர்கள் மக்களிடையே “அபூ உமாமா அன்ஸாரீ” எனும் பெயரால் பிரபல்யடைந்துள்ளார்கள். இவர்கள் நபி(ஸல்) அவர்களின் வாபாத்திற்கு இருவருடங்களுக்கு முன்பே பிறந்தார்கள்.

மிகச் சிறிய குழந்தையாயிருந்தமையால், நபி(ஸல்) அவர்களிடமிருந்து நேரிடையாக ஹதீஸ்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும் இவர்கள் தமது தந்தை ஸஹ்லுபின் ஹனீஃப் மேலும் அபூஸயீதுல்குத்ரீ ஆகியோரிடமிருந்து ஹதீஸ் ஞானம் பெற்று அநேகருக்கு ஹதீஸ் ஆசிரியராக திகழ்கின்றார்கள். ஹிஜ்ரி 100ல் தமது 92ம் வயதில் காலமானார்கள்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

***************************************************************

 

குர்ஆனை விளங்குவது யார்?இப்னு ஹத்தாது

அக்.87 இதழில், முஹ்க்கமாத் வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாத வேறு யாருடைய விளக்கமும் செல்லாது என்பதை விரிவாகப் பார்த்தோம்.

இந்த இதழில் குர்ஆனின் “”முஹ்க்கமாத்” வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமா? என்பதை அலசுவோம்.

இந்த முல்லாக்கள் இப்படி அரபி பாஷையைக் கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாலும், படித்த சிந்தனையாளர்களும், பொதுவாக இது விஷயத்தில் நிலைதடுமாறுவதாலும், இதைப்பற்றி விரிவாகவே பார்ப்போம். மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு நூல் என்ற அடிப்படையில், இவர்கள் சொல்லும் அத்தனைக் காரணங்களும் முற்றிலும் உண்மையே. ஓர் அறிஞன் ஒரு நூலை உருவாக்குகிறான் என்றால், அதை முழுமையாக நிறைவு செய்து. முழுமையான நிலையில் மக்களிடம ஒப்படைக்கிறான். அந்த நூலிலுள்ள அனைத்து விஷயங்களும் அந்த அறிஞனாலேயே செயல்படுத்திக் காட்டப்படும் என்பதை நான் எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒருக்கால் விளக்கினாலும் அந்த அறிஞனது சிந்தனைத் திறனிலேயே கோளாறு இருக்கவும் வாய்ப்புண்டு. அவனே அவன் எழுதியதற்குத் தவறான விளக்கம் கொடுக்கவும் வாய்ப்புண்டு. அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை வைத்தே விளங்க வேண்டியதிருக்கிறது. அப்பொழுது அவரவர்களுக்குரிய மொழியறிவு, ஆற்றல் திறமை இவற்றை அடிப்படையாக வைத்தே ஒவ்வொருவரும் புரிந்து கொள்கிறார்கள். ஒரு வார்த்தைக்கு பல பொருள் வரும் இடங்களில் மாறுபட்ட கருத்துக்களை எடுக்கவும். இடம் ஏற்படுகின்றது. சுருங்கச் சொல்லின் மனிதனால்  உருவாக்கப்பட்ட நூல்களைக் கொண்டு கருத்து மோதல்கள் நீர் எப்படி வாய்ப்புகள் இருக்கின்றனவோ. அதே போல் புதிய கருத்து மோதல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதை விட்டும் மனிதனால் உருவாக்கப்படும் எந்த நூலும் விதி விலக்கு பெற முடியாது. இதைத்தான் அல்லாஹ் தெளிவாக இவ்வாறு சுட்டிக்காட்டுகிறான்.

“இது அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (குர்ஆன் 4:82)

ஆனால் இப்போது நாம் செய்யும் பெரிய  தவறு. ஹிமாலயத் தவறு மனிதனால் உருவாக்கப்பட்ட நூல்களை எந்தக் கண்ணோட்டத்தோடு நாம் அணுகுகிறோமோ, அதே கண்ணோட்டத்தோடு, குர்ஆனை நாம் அணுகுவதேயாகும். குர்ஆன் ஒரு நூல் அல்ல; அதனால் தான் எடுத்த எடுப்பிலேயே அல்லாஹ் தன் திருமறையில் “இது நெறிநூல் இதில் சந்தேகமே இல்லை (2:2) “என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறான். இறைவனால் கொடுக்கப்பட்ட வேதத்திற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட நூலுக்கும், மலைக்கும் மடுவுக்கும், இல்லை, அதைவிட பாரதூரமான வித்தியாசம் உண்டு. மனித நூல் கருத்து மோதலை தீர்ப்பதற்காகவே நெறிநூலை இறக்கியதாக அல்லாஹ் உறுதி கூறுகிறான்.

“அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் விகற்பங்களை தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்” (2:213)

“(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ்விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ, அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம்மீது இந்நெறிநூலை இறக்கினோம். (16:64)

இவ்வளவு தெளிவாக அல்லாஹ் சொன்னதற்குப் பிறகு, தங்களின் இலக்கண, இலக்கிய திறமைகளைக் கொண்டு முஹ்க்கமாத் வசனங்களில் இப்படியும் பொருள் எடுக்கலாம், அப்படியும் பொருள் எடுக்கலாம். அப்படியும் பொருள் எடுக்கலாம் என்று கூறி கருத்து மோதல்களை உண்டாக்குகிறவர்கள். குர்ஆனை நெறிநூல் என்று ஒப்புக் கொள்ளவில்லையோ, என சந்தேகிக்க வேண்டியுள்ளது. நெறிநூல்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் இவர்கள் நிலை தடுமாறுகிறார்களா? அல்லாஹ்(ஜல்) அல்குர்ஆனில் 6666 வசனங்களையும், ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் இறக்கி, இதிலுள்ளபடி பார்த்து, நடந்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டிருந்தாலாவது, இவர்களாக ஆராய்ந்து பார்த்து எடுப்பதில் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்த நிலையிலும் கருத்து மோதல்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக, அல்லாஹ்(ஜல்)23 வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் சந்தர்ப்பத்தில், தேவையான ஆயத்துக்களை இறக்கி, நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும், அவற்றை செயல்படுத்திக் காட்டவும் செய்திருக்கிறான். இதை கீழ்காணும் இறை வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இன்னும், “”இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள் இதைக் கொண்டு நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக (கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி) மேலும் நாம் இதை ஒழுங்கான முறையில் அமைத்துள்ளோம்ட. (25:32)

தெளிவான – அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே! அவ்வாறே இந்த வேதத்தையும் உம்பால் அருளினோம் மனிதர்களுக்காக (உம்பால்) அருளப்பட்ட இ(ந்நெறிநூ)லை அவர்கள் சிந்திக்கும் பொருட்டுத் தெளிவாக அவர்களுக்கு நீர் விளக்குவீராக. (16:44)

ஆக, தத்துவ ரீதியிலும் (Theoritically), நடைமுறை ரீதியிலும் (Practically), தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட “”முஹ்க்கமாத்” வசனங்களில், இவர்கள் தங்கள் இலக்கண, இலக்கிய ஞானங்களைக் கொண்டு குழப்புகிறார்கள். புதிய புதிய கருத்துக்களைக் கொண்டு, தெளிவு படுத்தப்பட்டவற்றை, மீண்டும் தெளிவுபடுத்த முனைபவர்களை நாம் என்னவென்பது? எனவே “ஆயத்தும் முஹ்க்கமாத்” என்ற குர்ஆனில் வசனங்களைப் பொறுத்தமட்டில் அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை என்று தெளிவாகச் சொல்லி விடலாம். அவர்களின் இந்தவாதம் உண்மையானால் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் தாருந்நத்வாவைச் சேர்ந்த அரபி இலக்கண, இலக்கிய பண்டிதர்களையே அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவர்களை புறக்கணித்துவிட்டு, எழுதப்படிக்கத் தெரியாது. இலக்கண, இலக்கிய பாண்டித்யம் இல்லாத சாதாரண மக்களையே தேர்ந்தெடுத்தான். இதிலிருந்து சுய கருத்துக்களைப் புகுத்தும் இலக்கண, இலக்கிய ஞானமுள்ள பண்டிதர்களை விட சுய கருத்துக்களைப் புகுத்தாமல், உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடிய சாதாரண நிலை உடையவர்களே மார்க்க சேவைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் என்பது மிகத் தெளிவாகப் புரிகின்றது. இதனைத் தெளிவாக கீழ்வரும் வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டவும் செய்கிறான்.

“அவன் தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை, அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.” (62:2)

அவர்கள் அரபி பேசக்கூடியவர்களாக இருந்தார்கள் என்ற வாதமும், வீண் வாதமாகும். எந்த மொழியைப் பேசக்கூடியவர்களாக இருந்தாலும், எழுதப்படிக்கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கிலுள்ள கொச்சைப் பேச்சை பேசக்கூடியவர்களாகத்தான் இருப்பார்களே அல்லாமல், இலக்கண, இலக்கிய பாண்டித்யம் உடையவர்களாக இருப்பார்கள் என்பது எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். “மாரீஸ் புகைல்” போன்ற பெரும் அறிஞர்கள், “அரபிமொழி கற்றுக்கொண்ட பின்தான் குர்ஆனை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது” என்று சொல்கிறார்களே என்று சிலர் ஐயத்தைக் கிளப்பலாம். இந்த அவரது கூற்று விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட “மூத்த ஷாபிஹாத்” வசனங்களைப் பற்றிய விஷயமாகும், என்ற விபரங்களை முத்தஷாபிஹாத் வசனங்கள் பற்றி ஆய்வு செய்யும்போது விரிவாகப் பார்ப்போம்.

(இன்ஷா அல்லாஹ் வளரும்)

**************************************************************

ஆபரேஷன் தியேட்டர் :

போஸ்ட் மார்டம் – Dr.அம்ரைனி (G.H.)

(REPORTS : அறிக்கைகள்)

கேஸ் : 1

“இஜ்மாவுல் உம்மாவின்படி செயல்படுதல் அவசியம் என்பதற்கு குர்ஆனில் ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா? என்று ஒருவர் இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களிடம் வினவியபோது, அவர்கள் குர்ஆனை எடுத்து வைத்து மூன்று தினங்கள் இரவு பகலாக ஓதினார்கள். ஒவ்வொரு நாளும் பகலில் மூன்று தடவை இரவில் மூன்று தடவை ஓதி முடிந்த பின் திரு(க்குர்ஆன்) வசனம் (4:115) அன்னாரின் கருத்தினில் பட்டது”

இக்கூற்றினை தப்ஸீர் மஆரிபுல் குர்ஆன், பாகம் 2, பக்கம் 517லிருந்து எடுத்ததாக “தராவீஹ் 20 ரகஅத்துகளா?” என்ற நூலில் பக்கம் 33ல், அதன் ஆசிரியர் (மெளலவி) குறிப்பிடுகிறார். இவரது கூற்று உண்மை தான், மார்க்க சட்டப்படி ஏற்கவேண்டியதுதான் என தமிழகத்தின் தாய் மதரஸாவென புகழப்படும் 20 மெளலவிகளைக் கொண்ட வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் முதல், இரண்டு, மூன்று மெளலவிகளைக் கொண்ட குட்டி மதரஸாக்கள் வரை 21 அரபி மதரஸாக்கள் நற்சான்று வழங்கியுள்ளன. இதற்கு தமிழக மெளலானா மெளலவிகள்(?) என தங்களை பறைசாற்றிக் கொண்டிருக்கும் 147க்கும் மேலானவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

இதே கூற்றினை மீண்டும் வலியுறுத்தி தமிழகத்தின் தாய் மதரஸா பாக்கியத்துஸ் ஸாலிஹாத் “மத்ஹபுகள் அவசியமே” என்ற நூலிலும் (பக்கம் 49) பத்வாக் கொடுத்துள்ளனர். முதல் புத்தகம் எழுதியவர் பழுத்த ஆலிம்(?) இரண்டாவது புத்தகம் எழுதியவர் (மன்னிக்கவும் திருடி எழுதியவர்) ஆலிமுக்கு படிக்கும் மாணவர், இதன் அடிப்படையில் பல பள்ளிகளில் மெளலவிகள் “இஜ்மாவுக்கு” வக்காலத்து வாங்கி இதே பத்வாக்களை மேற்கோள் காட்டி ஜும்ஆ பயான்களிலும், பொது சொற்பொழிவுகளிலும் உரையாற்றுகிறார்கள். இதனை நாம் தற்சமயம் பல இடங்களில் நேரில் காணுகிறோம்.

எனவே எல்லா அரபி மதரஸாக்களாலும், மெளலவிகளாலும் ஏகோபித்து (இஜ்மாபடி) ஏற்றுக் கொண்டுள்ள இக்கூற்றினை Dr.அம்ரைனி குர்ஆன், ஹதீஸ் என்ற ஒளியில் ஆராய்ச்சி செய்து கண்ணியமிக்க இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களை புகழ்வதாக நினைத்து 21 மதரஸாக்களும், 147 மெளலவிகளும் தரங்கெட்டு தாழ்த்தியிருப்பதை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறார். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலைக் கண்ணோடு இதனை படிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

முதல் ரிரல்ட்:

இமாம் ஷாபிஈ (ரஹ்) ஹிஜ்ரி 150ல் பிறந்து 204ல் வபாத்தானார்கள். அவர்கள் பிறந்த உடனே இமாமாக ஆகியிருக்க முடியாது. சுமார் 20 வருடங்களுக்கு பின்தான் அனைவராலும் அவர்கள் இமாமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவரிடம் “இஜ்மாவும் உம்மாவின்படி செயல்படுதல் அவசியம் என்பதற்கு குர்ஆனில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா?” என கேட்கப்பட்டுள்ளது. அதாவது நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி 150 முதல் 160 வருடங்களுக்குப் பின் “இஜ்மா” என்பதைப் பற்றிய சர்ச்சை தலைதூக்கியுள்ளது. அதற்கு முன் அவ்விஷயம் ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉதாபியீன்கள், மற்றுமிருந்த இமாம்களிடையே இல்லை என்பதை இக்கூற்று நிரூபிக்கிறது.

ஏன்? இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முந்திய இமாம் அபூஹனீபா(ரஹ்) (80-150ஹி.) அவர்களிடமும், ஷாபிஈ(ரஹ்) அவர்களின் ஆசிரியரான இமாம் மாலிக்(ரஹ்) (93-176ஹி) அவர்களிடமும் கூட “இஜ்மா” என்ற சட்டமில்லை. அதை ஒரு அவசிய சட்டமாக கொள்ளவுமில்லை என்பதை அவ்விரு இமாம்களும்; “உண்மையான ஹதீஸ் கிடைத்தால் அதையே பின்பற்றுங்கள்; எங்களது சொற்களை (தீர்ப்புகளை) விட்டு விடுங்கள். அதுவே எங்களது மத்ஹபு, (வழிமுறை)” என்று சொன்னதிலிருந்து அறியலாம்.

இரண்டாவது ரிசல்ட்:

குர்ஆனின் ஆதாரத்தில் மார்க்க சட்டத் தீர்ப்பு, (பிக்ஹு) வழங்க இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் குர்ஆனை மூன்று தினங்கள் இரவு, பகலாக ஓதினார்கள் என்ற இக்கூற்றுடன் முடிந்திருந்தால் உண்மை; நடந்திருக்கலாம்; மூன்று நாட்கள் குர்ஆனை ஒரு தடவை முழுமையாக ஓதி, ஆராய்ந்து குறிப்பிட்ட வசனத்தை கொடுத்தனர் என்று ஏற்கலாம்.

ஆனால் நபி(ஸல்) அவர்களின் பல ஹதீஸ்களுக்கு மாற்றமாக இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களை வானளாவ புகழ்வதாக நினைத்து,

“ஒவ்வொரு நாளும் குர்ஆனை பகலில் மூன்று தடவை, இரவில், மூன்று தடவை (அதாவது ஒரு நாளைக்கு 6 தடவைகள்) என மூன்று நாட்கள (18 தடவைகள்) ஓதினார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

முதலில் ஒரு நாளைக்கு 6 தடவைகள் குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா? என்பதை பகுத்தறிவு ரீதியில் ஆராய்வோம், அவர்களது கூற்றுப்படி 24 மணி நேரத்தில் 6 தடவைகள் குர்ஆன் ஓதி முடிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு தடவை குர்ஆன் முடிக்க 4 மணி நேரமாகியுள்ளது. அதாவது (4 x 60) = 240 நிமிடங்களில் 30 ஜுஸ்வு கொண்ட குர்ஆன் ஓதப்பட்டுள்ளது.

ஒரு ஜுஸ்வு ஓதுவதற்கான நேரம் 24030=8 நிமிடங்கள் 8 நிமிடங்களுக்கு ஒரு ஜுஸ்வு என்ற வேகத்தில் ஒரு மணி, இரண்டு மணி நேரங்களல்ல 72 மணி நேரங்கள் ஓதி இருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களில் (72 மணி) வேறு எந்த வேளையும் செய்யாமல், தூங்காமல், தொழாமல், தினசரி தேவைகளான கழிப்பறைகளுக்குக் கூட சொல்லாமல், மனைவி, மக்களுக்கு, உற்றார், உறவினர்களுக்கான கடமைகளையும் செய்யாமல், குர்ஆன் ஓதுவதை மட்டுமே செய்திருப்பார்களேயானால் தான் 8 நிமிடத்தில் ஒரு ஜுஸ்வு வீதம் 4 மணி நேரத்தில் ஒரு குர்ஆன் முடித்திருக்க முடியும். அவர்களது கூற்றுப்படி 3 நாட்களில் 18 தடவை முடிந்திருக்க முடியும். இது சாத்தியமா? முடியுமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

குர்ஆனை ஓதி, சிந்தித்து (பிக்ஹு) சட்டம் பெற நாடிய இமாம் ஷாபிஈ(ரஹ்) இந்த வேகத்தில் ஓதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப் பாருங்கள். இக்கூற்றை இஜ்மாவுக்கான ஆதாரமாகக் கூறும் மெளலவியும், அதனை “ஆமாம் சரியானது” என நற்சான்று வழங்கிய தமிழகத்து 21 அரபி மதரஸாக்களும், கையொப்பமிட்ட 147 மெளலவிகளும், இமாம் ஷாபிஈ(ரஹ்) இஜ்மாவுக்கு குர்ஆனிலிருந்து சட்டமெடுக்க முனைந்த மூன்று நாட்களும்:

சாப்பிடவில்லை, குடிக்கவில்லை (நோன்பு வைத்திருக்கலாம்)

தூங்கவில்லை; மலஜல உபாதைகளுக்காக கழிப்பறைக்கும் செல்லவில்லை; மனைவி மக்களுடன் பேசவுமில்லை;

உற்றார் உறவினர்களுடன் உறவாடவில்லை; ஏன்?

அன்றாட தொழுகையான ஐவேளையும் தொழவில்லை எனக் கூறுகிறார்களா? இச்செயல்களை செய்திருப்பார்களேயானால் 8 நிமிடங்களை விட குறைவான நேரத்தில் ஒரு ஜுஸ்வை முடித்திருக்க வேண்டும், முடியுமா? ஒரு நாளைக்கு 6 தடவை குர்ஆனை முடித்திருக்க முடியுமா? என்பதை பாருங்கள். இல்லையில்லை இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் ஒரு நாளைக்கு 9 தடவைகள் குர்ஆனை முடித்தார்கள் என வாதிடுவார்களேயானால் மேலே குறிப்பிட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கண்ணியமிக்க ஷாபிஈ(ரஹ்) மீது சுமத்துகிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம். இது தான் அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத் எனக் கூறிக்கொள்ளும் அரபி மதரஸாக்களும், மெளலானா, மெளலவி(?)க்கும் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு தரும் அளப்பரிய கண்ணியமாகும்.

இதில் இன்னொரு வேடிக்கை, இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் 17 முறைகள் கவனக்குறைவாக ஓதியதால் 4:115 வசனம் அவர்களை விட்டும் தப்பி விட்டதாகவும், 18வது முறையே அதைக் கண்டுபிடித்ததாகவும், பழி சுமத்தி இருக்கிறார்கள்.

மூன்றாவது ரிசல்ட்:

அப்துல்லா பின் அம்ர் பின் ஆஸ்(ரழி) என்ற நபித்தோழர் தொடர்ந்து பகலில் நோன்பு வைத்தும், இரவில் நின்று தொழுதும், குர்ஆன் ஓதியும் தூங்காமல் மனைவிக்குரிய உரிமைகளைக் கொடுக்காமல் பாராமுகமாக இருந்தார்கள். இதனை அறிந்த நபி(ஸல்) அத்தோழரை அழைத்து அறிவுரை பகர்ந்தார்கள்: குர்ஆனை 30 நாட்களில் ஓதி முடிப்பாயாக! என்றார்கள்.

நபித்தோழர்: அதற்கும் குறைவான நாட்களில் என்னால் ஓத முடியும்! யா ரசூலுல்லாஹ் என்றார். அப்படியெனில் 25 நாட்களில் முடிப்பாயாக! என்றார்கள். அதற்கும் அதே பதிலை திருப்பி, திருப்பிக் கூற 20,15 நாட்களென சிறிது சிறிதாக முறைந்த நபி(ஸல்) முடிவாக 7 நாட்களில் முடிப்பாயாக! அதற்கு குறைவான நாட்களில் முடிக்க வேண்டாம். அதுவே சரியான முறை. உன்மீது உனக்கான பல கடமைகள் உண்டு; உனது மனைக்கான கடமைகளுண்டு; உற்றார் உறவினர்களுக்கான கடமைகளுண்டு; அவைகளையும் செவ்வென செய்வாயாக! அதுவே நம் வழி(நபிவழி) என நபி(ஸல்) அறிவுறுத்தினார்கள். இந்த நபிமொழியை நாம், புகாரி, முஸ்லிம், முஸ்னது அஹ்மது போன்ற நூல்களில் அப்துல்லாஹ்பின் அம்ர் அறிவிப்பதையே காணலாம். (ஹதீஸ் சுருக்கம்).

மேற்கண்ட நபி மொழிமூலம் ஒவ்வொருவரும் அவரவரது அன்றாட கடமைகளை செவ்வெனச் செய்து பொறுமையுடன் குர்ஆனை குறைந்தபட்சம் 7 நாட்களில் முடிக்க வேண்டும் என்பதை அறிகிறோம். இமாம் ஷாபியீ(ரஹ்) அவர்களும் இதனடிப்படையில் அவரவர்க்குரிய கடமைகளை செய்வதும் ஒரு வணக்கம் (இபாதத்து) என தனது கைப்பட எழுதிய “கிதாபுல் உம்மு” என்ற நூலில் பற்பல இடங்களில் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தமிழகத்து 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவி(?)களும் மேற்படி கூற்றை அங்கீகரித்தது மூலம், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள் தனக்குரிய கடமைகளை செய்யவில்லை. அவரது குடும்பத்தாருக்குரிய கடமைகளை செய்யவில்லை ஏன்? அன்றாட அல்லாஹுவுக்கு செய்ய வேண்டிய கடமையான ஐவேளை தொழுகையைக் கூட தொழவில்லை என ஏகோபித்து (இஜ்மாவுடன்) கூறுகின்றனர். இது தான் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் என தங்களை அழைத்துக் கொள்ளும் இவர்கள் கண்ணியமிக்க இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களை கண்ணியப்படுத்தும் விதம்.

நான்காவது ரிசல்ட்:

“மன் காஅல் குர்ஆன் ஃபீ அகல்லி மின் ஃதலாஃதலம் யஃபகஹ்ஹு”.

“எவர் மூன்று நாட்களுக்குக் குறைவாக குர்ஆனை ஓதி முக்கிறாரோ, அவர் குர்ஆனை விளங்கிக் கொள்ளவில்லை” என நபி(ஸல்) கூறினார்கள். இதனை அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) அறிவித்ததாக பற்பல அறிவிப்பாளர்கள் வரிசையில் அபூதாவூத், தாரமி, திர்மிதி, முஸ்னத் அஹ்மது போன்ற ஹதீஸ் நூல்களில் காணலாம். இதுதான் நாம் கண்டவரை மிக மிகக் குறைந்த காலத்தில் குர்ஆனை ஓதி முடிக்க நபி(ஸல்) நமக்கு ஆணையிட்டு இருப்பதற்கான ஆதாரங்கள்.

அதாவது ஒரு குர்ஆனை முடிக்கவே குறைந்தது மூன்று நாட்கள் தேவை. அதற்கு குறைந்த நாட்களில் ஓதுபவர்கள் குர்ஆனை விளங்கிக் கொள்ளவில்லை என நபி(ஸல்) எச்சரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்து 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவிகளும் இமாம் ஷாபிஉ(ரஹ்) மூன்று நாட்களில் 18 தடவைகள் குர்ஆனை ஓதி முடித்து 18வது முறையே விளங்கி (பிக்ஹு) சட்டமியற்றியதாக நற்சான்றுடன் பத்வா வழங்கியுள்ளனர். நபி(ஸல்) கூற்று சரியா? 21 மதரஸாக்களும், 147 மெளலவிகளும் கையொப்பமிட்டு (இஜ்மாவுடன்) இஜ்மாவுக்கு வக்காலத்து வாங்கி இருக்கும் கூற்று சரியா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அல்லது மூன்று, நாட்களில் 18 தடவைகள் குர்ஆனை வேக வேகமாக ஓதி விளங்காமல், இஜ்மாவுக்கு ஷாபிஈ(ரஹ்) ஆதாரம் எடுத்து தந்தார்கள் என இக்கூட்டம் கூறுகிறதா? (நஊது பில்லாஹி) அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக! இமாம் ஷாபிஈ(ரஹ்) குர்ஆனை விளங்கவில்லை என நினைக்கவே நமது உள்ளம் கூசுகிறது. ஆனால் இந்த 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவிகளும் சிறிதும் கூசாமல் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களை அவமதித்துள்ளனர். இதுதான் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் என தங்களைக் கூறிக்கொள்ளும் இவர்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதம்.

ஐந்தாம் ரிசல்ட்:

மேற்கூறிய ஹதீஸ்கள் மக்காவில் பிறந்து, வளர்ந்த இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறவும் முடியாது. ஏனெனில் அவரது அன்பு மாணவர் இமாம் அஹ்மது இப்னு ஹம்பல்(ரஹ்) தொகுத்த முஸ்னதில், முஸ்னத் அப்துல்லா பின் அமர் என்ற தலைப்பில் இந்த ஹதீஸ் வெவ்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் வரிசையில் பதிவு செய்துள்ளார்கள் (முஸ்னத் அஹ்மது பாகம் 2 பக்கங்கள் 158 முதல் 226).

இது மட்டுமின்றி எனக்குத் தெரியாத ஹதீஸ்கள்  தங்களுக்கு கிடைத்தால் தயவு செய்து எனக்கு அறிவியுங்கள். நானும் அதன்படி செயலாற்றுகிறேன் என ஆசிரியர் இமாம் ஷாபிஈ(ரஹ்) தனது மாணவர் இமாம் அஹ்மதுபின் ஹம்பல்(ரஹ்) அவர்களிடம் கேட்டுமிருக்கிறார்கள்.

(ஆதாரம்: ஆதாபுஷ் ஷாபிஈ பக்கம் 94,95, ஹில்யா பாகம் 9, பக்கம் 106 அல்இன்திகா பக்கம் 75) எனவே இந்த ஹதீஸ்கள் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு கிடைத்திருக்காது என வாதிடவும் முடியாது.

ஒரு வாதத்திற்காக இவ்வதீஸ்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு கிடைக்கவில்லையென்றாலும் “நான் சொன்னவைகள் நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கு முரண்படும் போது, நபியின் ஹதீஸ்தான் ஏற்கத்தக்கது. என்னை பின்பற்றாதீர்கள் என அறிவுக் குறைவைப் புரிந்து கொள்ளுங்கள்” என்ற ஷாபிஈ(ரஹ்) அவர்களின் கூற்றையும் கவனியுங்கள்.

ஆதாரம்: அபூநயீம் பாகம் 9, பக்கம் 106, அல் ஆதாப் பக்கம் 93. இவ்வளவு தெளிவாக இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறியிருக்க தமிழகத்து 21 அரபி  மதரஸாக்களும், 147 மெளலவிகளும் இமாம் ஷாபிஈ(ரஹ்) மீது வீண்பழி சுமத்தி இருப்பதையும் பாருங்கள். இதுதான் அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத் என தங்களை பிரகடன்படுத்துவோர் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு கொடுக்கும் கண்ணியமாகும்.

ஆறாவது ரிசல்ட்:

அருமை ஸஹாபிகளை விடவும் உயர்வாக ஷாபிஈ(ரஹ்) அவர்களை கெளரவிப்பதற்காக தரந்தாழ்த்தி இருப்பதை கீழ்க்காணும் ஹதீஸ் மூலம் நமக்கு தெளிவாகிறது.

ஒரு மஜ்லிஸில் அபூ அய்யூப் அன்சாரி(ரழி) பயான் செய்து கொண்டிருந்தார்கள். அப்பயானில் “எவராவது ஒரு இரவில் மூன்றில் ஒரு பகுதி குர்ஆனை (10 ஜுஸ்வு) ஓதி இரவில் தொழ முடியுமா? என கூடியிருந்தவர்களைக் கேட்டார்கள். அனைவரும்(வியப்புடன்) அது எங்ஙனம் முடியுமென வினவினர். அதற்கு அபூஅய்யூப் அன்சாரி(ரழி) அவர்கள்; எவரொருவர் குல்ஹுவல்லாஹுஅஹது (சூரா இக்லாஸ்: 112வது அத்தியாயம்) ஓதி தொழுகிறாரோ, அவர் குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி (10 ஜுஸு) ஓதியதற்கு சமம் என சூரா இக்லாஸின் மகிமையைக்) கூறினார். அதனை கேட்டுக்கொண்டு (மஜ்லிஸில் நுழைந்த நபி(ஸல்) அவர்கள்; அபூஅய்யூப் உண்மையைச் சொன்னார் என ஆமோதித்தார்கள். (அறிவிப்பு: இப்னு அம்ர், ஆதாரம்: முஸ்னத் அஹ்மது, பாகம் 2, பக்கம் 173, வரிகள் 9 முதல் 13)

மேற்கண்ட ஹதீஸ் மூலம் ஸஹாபிகளுக்கே ஒரு இரவில் மூன்றில் ஒரு பகுதி (10 ஜுஸ்வு) ஓதுவது வியப்புக்குரிய விஷயமாகவும், முடியாத காரியமாகவும் இருந்திருப்பதை அறியலாம். ஒரு மூத்த ஸஹாபி அபூ அய்யூப்(ரழி) அவர்களே மூன்றில் ஒரு பகுதி ஒரு இரவில் ஓத முடியுமா? என வினவுகிறார்கள். மற்ற ஸஹாபிகளும் அது எங்ஙனம் முடியுமென வியப்புடன் கேட்கிறார்கள். இதிலிருந்து அது முடியாத காரியம் மட்டுமல்ல அவ்விதம்! செய்ய நபி(ஸல்) அவர்களும் கற்றுக் கொடுக்கவுமில்லை என்பதையும் அறியலாம். அதனை இலகுவாக்கவே சூரா இக்லாஸை ஓதக் கற்றுக் கொடுத்துள்ளதை விளங்கலாம்.

ஆனால் தமிழகத்து 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவிகளும் ஏகோபித்து (இஜ்மாவுடன்) ஸஹாபிகளுக்கு முடியாதது, இமாம் ஷாஹிஈ(ரஹ்) முடிந்தது. ஸஹாபிகளுக்கு மூன்றில் ஒரு பகுதி இரவில் ஓதுவது கஷ்டமாக இருக்கலாம். முடியாத காரியமாக இருக்கலாம். ஆனால் எங்களது தலைவர் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள், ஸஹாபிகளை விட வேகமானவர்கள் இமாமவர்கள் ஒரே இரவில் ஒன்பது, மூன்றில் ஒரு பகுதிகளை (3 குர்ஆனை) ஓதினார்கள் என பத்வா கொடுத்துள்ளனர். இவர்களது தனி நபர் ஆராதனை (Hero-Workship) எவ்வளவு பெரிய தவறைச் செய்யத் தூண்டியுள்ளது. மனமொப்பி செய்துள்ளனர் என்பதை வாசகர்களே! விளங்கிக் கொள்ளுங்கள். இதுதான் இவர்கள் இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களை கெளரவிக்கும் விதம்.

முடிவான அறிக்கை : (Fina; Report):

எனவே இமாம் ஷாபிஈ(ரஹ்) மூன்று நாட்களில் தொடர்ந்து பகலில் மூன்று தடவை, இரவில் மூன்று தடவை என குர்ஆனை ஓதி “”இஜ்மாவுக்கு” சட்டமியற்றினர் என்பது கட்டுக்கதையாகும். நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்கு ஒருபோதும் ஷாபிஈ(ரஹ்) மாறு செய்திருக்க மாட்டார்கள் என நம்புகிறோம், ஷாபிஈ(ரஹ்) அவர்களை கெளரவிக்கிறோம். ஆனால் நபியும், ஸஹாபிகளும், தாபியீன்களும், இமாமும் கூறாத “இஜ்மா” என்ற சட்டத்தை தாங்களே உருவாக்கி, அதனை தாங்கள் கூறினார் மக்களிடையே எடுபடாது. விலை போகாது என நினைத்து, இராஜ தந்திரத்துடன் அனைவராலும் கெளரவிக்கப்படும் இமாம் ஷாபிஈ(ரஹ்) மீது இட்டுக்கட்டியுள்ளனர். இந்த இஸ்லாமிய புரோகிதர்களும், புரோகிதர்களை உருவாக்கும் மதரஸாக்களும் என்பதை அறியவும், இவ்விதம் எவ்வித ஆதாரமுமின்றி பொய் சொல்வதும் இல்லாததை இட்டுக்கட்டி கூறுவதும் அதற்கு நற்சான்றிதழ் என கையொப்பமிட்டு புத்தகமாக வெளிவர துணைபோவதும், பொய்யையே  திருப்பி திருப்பிக் கூறி பாமர மக்களை மூளை சலவை செய்வதும் தான் இன்றைய அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் மெளலவிகளும், அரபி மதரஸாக்களும் “இஜ்மா” எனக் கூறுவதின் உண்மை பொருளாகும் என்பதை பொதுமக்கள் அறிவார்களாக!

யாரோ, எவரோ எவ்வித ஆதாரமுமின்றி எழுதி வைத்தததை ஆராயாமல் அப்படியே கண்மூடி பின்பற்றுவது தான் தக்லீத் என்பதாகும். தான் கேள்விப்பட்டதையெல்லாம் (ஆராயாமல்) அறிவிப்பது ஒரு மனிதனிடம் பொய் ஏற்பட்டுவிடப் போதுமானதாகும் என நபி(ஸல்) கூறினார்கள் என அபூஹுரைரா(ரழி), அபூ உஸ்மான் நஹ்தீ(ரழி), இப்னு மஸ்ஊது(ரழி) அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:முஸ்லிம், ஆரம்பப் பாடம்)

இவர்கள் மார்க்க அறிஞர்களா?

இப்படி பொய்யான கூற்றுக்கு நற்சான்று வழங்கிய 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவிகளும் நம்மிடையே மார்க்க அறிஞர்களாக நிகழ்ந்து வருகிறார்கள். இவர்கள், தாம்(படித்ததை) கேள்விப்பட்டதையெல்லாம் ஆராயாமல் மக்களிடையே மார்க்கமாக போதிக்கிறார்களே! இவர்கள் மார்க்க அறிஞர்களாக இருக்க முடியுமா? அதற்கும் கீழ்க்காணும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் அறிவிப்பை கவனியுங்கள்.

நான் கேள்விப்பட்டதை எல்லாம் அறிவிக்கிற மனிதர் (தவறுகள் ஏற்படுவதிலிருந்து) தப்பிக்க முடியாது என்பதையும், தான் கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் நிலையில் அவர் ஒருபோதும் மார்க்க அறிஞர் ஆக முடியாது என்பதையும் நீ அறிந்து கொள்வாயாக! என மாலிக்(ரஹ்) கூறியதாக இப்னுவஹ்பு(ரஹ்) கூறுகிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம் – ஆரம்பப்பாடம்)

இதன் அடிப்படையில்தான் பல பொய்யான, ஆதாரமற்ற கருத்தினை ஆராயாமல் யாரோ எழுதி வைத்துள்ள ஒரு சில அரபி கிதாபுகளிலிருந்து மொழி பெயர்த்து மார்க்கச் சட்டமாக எழுதியுள்ளனர். தராவீஹ் 20 ரகாஅத்துகளா? என்ற நூலும், “மத்ஹபுகள் அவசியமே” என்று திருடி எழுதப்பட்ட நூலும் இதே வகுப்பைச் சார்ந்தவை. இதனை தாங்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் என்ற இறுமாப்பில் 21 அரபி மதரஸாக்களும், 147 மெளலவிகளும் கையொப்பமிட்டு சட்டமாக்க முயற்சித்துள்ளனர் என்பதை இஸ்லாமிய நண்பர்களே புரிந்து கொள்வீர்களாக! பொய்க்கும், இட்டுக்கட்டலுக்கும் துணைபோன, இம்மதரஸாக்களும், மெளலவிகளும் மறுமையில் அல்லாஹுவிடம் பதில் சொல்லியே தீரவேண்டும்.

இவர்கள் எங்கே நம்மை அழைத்துச் செய்கிறார்கள்; இப்போது இவ்விதம், மார்க்க அறிஞர்கள் என்பவர்கள், கூறுவதை தெளிவான ஆதாரம் தேடாமல் கண்மூடி பின்பற்றலாமா? அது எங்கு நம்மை அழைத்து செல்கிறது என்பதையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் சிறிது பார்ப்போம்.

அவர்(வேதக்காரர்)கள் தங்களின் பாதிரிகளையும் மதக் குருக்களையும் ரப்புகளாக கருதிக்கொண்டனர் (அல்குர்ஆன் 9:31) என்ற திருவசனம் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது, முன் கிறிஸ்துவராக இருந்து முஸ்லிமாகியிருந்த அதீ இப்னு ஹாதம்(ரழி) அவர்கள் யா ரசூலுல்லாஹ்! நாங்கள் பாதிரிகளையும், மதகுருமார்களையும் ரப்புகளாக கொண்டிருக்கவில்லையே!? என்றார்கள். அதற்கு நபி(ஸல்) ஒரு மார்க்க விஷயத்தில் உங்களது பாதிரிகள், மதக்குருமார்கள் கூடும், கூடாது என்றால் அது ஏற்றீர்களா? இல்லையா? என வினவினார்கள். நபித்தோழர்-ஆம்! நாம் அவர்கள் கூடும் என்பதை ஹலாலாகவும், கூடாது என்பதை ஹராமானதாகவும் ஏற்றோம் என பதில்  அளித்தார்கள். உடனே நபி(ஸல்) இவ்விதம் உங்களது மதக்குருக்கள் ஒன்றை கூடும் என்றால், அதனை கூடும் என்று கண்மூடி ஏற்பதும், கூடாது என்றால் கூடாது என்று கருதுவதும் தான் அவர்களை ரப்புகளாக்கியதாகும் என விளக்கம் தந்தார்கள். (ஆதாரம் : திர்மிதீ, அஹ்மது)

இதே நிலையில் தான் இன்றைய தமிழக அரபி மதரஸாக்களும் அதனது மத புரோகிதர்களும் தாங்கள் கூறியது சரி, கூடும் என பற்பல பொய்யான கூற்றை மார்க்கமாக்கி மக்களிடையே தங்களை சட்டமியற்றும் ரப்புகளாக நினைக்க வைத்துள்ளனர். இது எங்களது சொந்த கற்பனை ஊகமல்ல அவர்கள் பற்பல ஆதாரமற்ற கூற்றுக்களைக் கொண்ட மெற்படி இரு புத்தகங்களுக்கும் நற்சான்று என பத்வா கொடுப்பதிலிருந்து, தெளிவாக உணரலாம். இவர்கள்  அந்த அளவு மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்து செல்கிறார்கள் என்பதை இனியாவது சிந்தித்துப் பாருங்கள்.

இம் மெளலவிகள் யாரோ, எவரோ எழுதியதை, மொழி பெயர்த்து எதனையும் ஆராயாமல் புத்தகமாக வெளியிடுவதை விட அல்லாஹுவின் அருள் வேதமான திருகுர்ஆனையும், நபியின் அருள்மொழியான ஹதீஸ்களையும் ஆராய தொடங்கினால் நலமாக இருக்கும். வெள்ளை வெளேர் என்ற நிலையில், அதன் இரவும் பகல் போன்ற நிலையில் இஸ்லாத்தை நபி(ஸல்) விட்டுச் சென்றிருப்பதை அறிவார்கள். தாங்களும் நேர்வழி பெறுவர். மக்களையும் நேர்வழிப்படுத்துவர்.

அந்நிலை உருவாகுமா? அதற்கு இம்மெளலவிகளும், அரபி மதரஸாக்களும் துணைபோவார்களா? இனியாவது குர்ஆன், ஹதிஸை ஆராய்ந்து ஆதாரப்பூர்வமான விஷயங்களை மார்க்க சட்டமாக வெளியிடுவார்களா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்! விழித்துக் கொண்டே இஸ்லாமிய எழுச்சி சமுதாயம் இனி எதனையும் சிந்தித்து ஆய்ந்தெடுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாக! அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழிக் காட்ட போதுமானவன். ஆமீன்!

Previous post:

Next post: