அந்நஜாத் – பிப்ரவரி 1988

in 1988 பிப்ரவரி

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

அந்நஜாத்

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

நோக்கம் : 2  விளக்கம் : 11

ஜ.அவ்வல் : 1408  பிப்ரவரி -1988

இதழின் உள்ளே…..

*     சமுதாயம்  இனியும்  ஏமாறாது!

*     விமர்சனங்கள்!  விளக்கங்கள்!!

*     அறிபவன்  அவனே!

*     நபி வழித் தொகுப்பு வரலாறு!

*     துலாக்கோல்

*     தக்லீதின் பெயரால்…..

*     நபிவழியில்  நம் தொழுகை!

*     துடுப்பா?  இடுப்பு  ஒடிவது  நிச்சயம்!

*     இதுதான்  சமாதான வழியா?

*     ஐயமும்!  தெளிவும்!!

*     முக்கிய  குறிப்பு!

**********************************************

சமுதாயம் இனியும் ஏமாறாது! 

எல்லாத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வரும் இஸ்லாமிய சமுதாயம், எல்லா விஷயங்களையும் கருத்து வேறுபாடற்ற குர்ஆன், ஹதீஸ்களின் அடிப்படையில் அணுக ஆரம்பித்து விட்டது, விழ்த்துக் கொண்ட சமுதாயத்திற்கு குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் பதிலளிக்க முடியாது பல பத்திரிகைகள், அவ்விதம், பதிலளிக்கும் இஸ்லாமிய பத்திரிகைகளை சரமாரியாக திட்டவும், வசைமாரி மொழியவும் செய்கின்றன. 1984லிருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிக்ஹு சட்டங்கள விட, எவ்வித குறையும் காணமுடியாத குர்ஆன், ஹதீஃத் அடிப்படையிலான சட்டங்களை எடுத்து நடக்க மக்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம். மக்களுக்கு குர்ஆனையும், ஹதீஸையும் அவர்களது தேவைக்கான பதிலாகத் தராமலிருந்த பல பத்திரிகைகள் தாங்கள் கூறிவதும் பிக்ஹு நூல்களிலிருந்து ஏதாவது தவறைக் காட்ட முடியுமா? என்று மக்களை ஏமாற்ற முற்பட்டன.

எனவே, நாம் நவம்பர்-86 அந்நஜாத் இதழில் ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டு பிக்ஹு நூல்களிலுள்ள அசிங்கங்களை, மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். அதற்கான ஆதாரங்களை நூல் பாகம், பக்கம் முதற்கொண்டு வெளியிட்டோம். அவர்கள் அரபிப் பண்டிதர்கள்(?) என்ற ஆணவத்தால் அவை உர்து நூல்களிலிருந்து எடுத்து எழுதப்பட்டவை என்று மக்களை திசை திருப்ப முற்பட்டால்களே அல்லாமல் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அவற்றிற்கு விளக்கம் கொடுக்கவோ, அல்லது சம்பந்தப்பட்ட நூல்களில் அவை இல்லை என்று நிரூபிக்கவோ அவர்களால் முடியவில்லை. ஜ.உ.ச. செயலர் நடத்தும் பத்திரிகையில் வந்த விமர்சனங்களுக்கும் விளக்கம் தந்தோம். ஆதாரமற்றவர்கள் அடங்கிக் கிடந்தனர். பேசமுடியாமல் வாயடைத்துப் போயினர். ஆங்காங்கே ஒருசில கூட்டங்களைப் போட்டு நம்மைத் திட்டியும், நமக்கெதிராக தீர்மானங்களை போட்டும் தங்களது வயிற்றெரிச்சலைக் காட்டினர்.

ஆனால் விழித்துக்கொண்ட இஸ்லாமிய சமுதாயம், விளங்கிவிட்ட குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தனர். பத்தாண்டுகள், இருபதாண்டுகள் இவ்வடிப்படையில் எதனையும் மக்களுக்கு முன் எடுத்து வைக்காத பத்திரிகைகள் திணர ஆரம்பித்தன; சந்தாக்கள் குறைந்து கொண்டு வருகின்றன. தங்களது மரியாதைகள் காற்றில் பறப்பதை அறிந்தனர். போலி வேஷத்தால் மக்களை ஏமாற்றி வந்தவர்கள் மீண்டும் கூக்குரவிட ஆரம்பித்துள்ளனர். ஷியா கொள்கையை மறைமுகமாகப் புகுத்த முற்படும் ஒரு போலி மகளிர் ஏடு; தனது டிசம்பர் 87 இதழில் தனது வயிற்றெறிச்சலை ஜ.உ.ச.க்கு பகிரங்கக் கடிதமாக வெளியிட்டது. அக்கடிதத்தில் ஒரு சில மெளலாக்களின்(?) பெயர்களைக் குறிப்பிட்டு, இவர் ஒருவர் போதாதா? அவர் ஒருவர் போதாதா? இந்தக் குழப்பவாதிகளை அடக்குவதற்கு என ஒப்பாரி வைத்து அழுது தீர்த்தது.

அவ்வளவுதான்! நாம் முன்பு கொடுத்திருந்த அடியில் தலைதூக்க முடியாமல் இருந்த ஜ.உ.ச. தலைவரும், செயலரும் உடனே உணர்வு பெற்றுள்ளனர். ஆகா! நமது பேச்சை, நமது முடிவைக் கேட்க இன்னும் ஆட்களிருக்கிறார்கள் போலும் என்ற நப்பாசையில், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் வெளியிடும் கட்டுரைகளை அர்த்தமற்ற நிலையில் மீண்டும் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களது விமர்சனங்கள் சரியானதாக இருந்தால், அவற்றை எற்கும் மனப்பான்மை நமக்குண்டு, ஆனால் அவர்களது விமர்சனங்கள் அர்த்தமற்ற வீண் பிதற்றல்களாக இருப்பதால் அவற்றை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது நமது நீங்காக் கடமையாக இருக்கிறது. ஜ.உ.சபையாரை சத்தியத்தைச் சொல்ல வைக்கும் எங்கள் அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்ற பின்பே, அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டத் துணிந்தோம்.

முஸ்லிம்களை நேரடியாக குர்ஆனையும், ஹதீஃதையும் நெருங்கவிடாமல் தடுக்கும் இந்தப் புரோகிதர்களையும், இடைத்தரகர்களையும் முற்றிலுமாக நீக்கிவிட்டால், முஸ்லிம்கள் எவ்வித தடங்களும் இல்லாமல் குர்ஆனையும், ஹதீஃதையும் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்நஜாத்தின் பணி தீர்ந்துவிடும் என்பதே உண்மையாகும். அந்நஜாத்தை தக்லீது செய்யுங்கள். அந்நஜாத்தை வேதப்புத்தகமாக எடுத்து நடங்கள் என்று முஸ்லிம்களுக்கு நாம் ஒருபோதும் கொள்ளவில்லை. இனி மேலும் சொல்லவும் மாட்டோம்.

அதனால் தான் வெறும் குர்ஆன் நம்பர்களைக் கொடுக்காதீர்கள். அந்த வசனத்தையே எடுத்துப் போடுங்கள். அப்படியானால் தான் பார்ப்பதற்கு எங்களுக்கு எளிதாக இருக்கும் என்று பல சகோதரர்கள் அடிக்கடி எழுதி வந்தும், முஸ்லிம்களுக்கு குர்ஆனோடு நேரடித் தொடர்பு ஏற்படவேண்டும். மார்க்கம் என்றால் அந்நஜாத்தையோ, அல்லது வேறு நூல்களையோ தூக்கிப் பிடிக்காமல், குர்ஆனைத் தூக்கிப் பிடிக்கும் பழக்கம் வரவேண்டும் என்ற நன்னோக்கோடு குர்ஆன் அத்தியாயத்தையும், வசனத்தையும் கொடுத்து வருகிறோம். ஆக மக்களை குர்ஆன். ஹதீஃதின் பக்கம் திருப்ப பெரும் முயற்சிகள் செய்கிறோமே அல்லாமல், அவர்கள் சொல்வதுபோல் எங்கள் பக்கம் திருப்ப எவ்வித முயற்சியையும் நாங்கள் செய்யவில்லை என்பதே உண்மையாகும். அந்த எண்ணமுடையவர்களை அந்நஜாத்தில் நீடிக்க வல்ல அல்லாஹ்விடவும் மாட்டான்.

எனவே இது காலம் வரை இருந்து வந்த பெரியார்களைத் தக்லீது செய்யாதீர்கள். எங்களைத் தக்லீது செய்யுங்கள், நாங்கள் இஜ்திஹாது செய்ததை எடுத்து நடங்கள் என்று நாங்கள் சொல்வதாக, அவர்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரத்தை முஸ்லிம்கள் நம்பப் போவதில்லை. இனியும் ஏமாறப்போவதில்லை என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லி வைக்கிறோம்.

*******************************************

புறம், அவதூறு ஆகியவற்றின் பாகுபாடு,

அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்:

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் சஹாபாக்களை நோக்கி புறம் என்றால் என்ன என்றார்கள். அதற்கவர்கள், அல்லாஹ்வும், அவனது தூதரும் மிக அறிந்தோர் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (புறம் என்றால்) உமது சகோதரர் வெறுக்கும் ஒன்றை அவர் குறித்து நீர் பிறரிடம் கூறுவதாகும் என்றார்கள். அப்போது நான் சொல்வது எனது சகோதரரிடம் இருந்தாலோ? என்று (ஒருவரால்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நீர் சொல்லும் குறை அவரிடம் இருந்தால் நீர் அவரைப் புறம் பேசி விட்டீர் என்பதாகும். நீர் கூறும் குறை அவரிடம் இல்லையேல் நீர் அவரைப் பழி(அவதூறு) சுமத்தி விட்டீர்கள் என்று தான் ஆகும் என்றார்கள். (முஸ்லிம்)

***********************************************

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

“ஒரு படிக்கல் தடைக்கல்லாகிறது” எனும் தலைப்பில் பு.மி.பிப்ரவரி வெளியீட்டில் அந்நஜாத்தை விமர்சித்து வெளியாகியவற்றைப் படித்தேன். ஒரு ஆசிரியர், 5 சிறப்பாசிரியர்கள் ஆக 6 மவ்லவிகளை தனதாக்கியிருக்கும் அப்பத்திரிக்கை விஷயங்களை முன்பின் மாற்றி நானும் குழம்பி, மக்களையும் குழப்பியிருப்பதை அறிகிறேன். மவ்லவிகள் கூட்டு சேர்ந்தாலே இதுதான் நடக்குமோ?

மேலும் கேள்வியும் நீயே! பதிலும் நீயே!! எனும் தலைப்பில் வந்துள்ள கட்டுரையையும் கண்டேன். அதில் ஹிமாலயக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்ற பிரமை ஏற்படச் செய்கிறது. தவ்ஹீத்வாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் வழிகேட்டில் தான் இருக்கிறார்கள் என்ற பிரமையை சாதாரண மக்களிடம் “மத்ஹபுகள் அவசியமே!” என்ற நூல் எப்படி ஏற்படுத்தியதோ, அதே பிரமையை இக்கட்டுரையும் ஏற்படுத்துகிறது.

ஆனால், ஊன்றி கவனித்தால் 50 பக்கங்கள் அச்சில் வெளியானதை தவிர, உருப்படியான “சரக்குகளை’ வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. எப்படி சிந்தனாவாதிகளிடம் “மத்ஹபுகள் அவசியமே’ எனும் நூல் எடுபடவில்லையோ, அதே போல் இக்கட்டுரையின் வாயிலாக எழுத்தாற்றலும், சிந்தனையும் விரயமாகி இருப்பதை அறிய முடிகிறது. ஆதங்கத்தின் பிரதிபலிப்பே இக்கட்டுரை என்பதையும் அறியமுடிகிறது.

இது குறித்து அந்நஜாத்தின் பதில் என்ன?

இவைகளுக்கு “அந்நஜாத்’ பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறது என்பதையும் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.  M.அப்துல் ஹமீது, திருச்சி-8.

நாமும் அவற்றைப் பார்வையிட்டோம். மார்க்கத்தில் இஷ்டம்போல் விளையாடியுள்ளனர். “தஹ்தீபுத் தஹ்தீப்” என்ற நூலின் 7ம் வால்யூமில் இப்னு ஹஜர்(ரஹ்) அளித்துள்ள தீர்ப்பை தலைகீழாக மாற்றியுள்ளனர். அந்நூலின் ல் வால்யூம் 202ம் பக்கம் 14ம் வரியிலிருந்து 207ம் பக்கம் 19ம் இறுதி வரி வரை, அதா இப்னுஸ்ஸாயிப் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளது. அதில் 202ம் பக்கம் 14ம் வரியிலிருந்து 207ம் பக்கம் 15 வரி வரை அவரைப் பற்றி விபரங்களையும், சாதக, பாதக வாதங்களையும் எடுத்து வைத்துவிட்டு, முடிவில், 207ம் பக்கம் 15வரியிலிருந்து 19ம் இறுதி வரி வரை 5 வரிகளில் தனது தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பான 5 வரிகளில் டி.மி.டிசம்பர் 64ம் பக்கம், “ஏனெனில் அதா இப்னுஸ்ஸாயிப் குழப்பத்து வங்கிய பின்னரும் அவர் மூலம் ஹம்மாத் இப்னுஸ்ஸலமா அறிவிப்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.” என்று ஹாபிழ் இப்னுஹஜர் குறிப்பிடுகிறார்கள் என்று எழுதப்பட்டுள்ளது காணப்படவில்லை. இது தவறு என்றுதான் குறிப்பிட்டிருந்தோம். தனது அந்தத் தவறை மறைக்க, தனது பிப்ரவரி இதழின் 72ம்பக்கம் இன்னொரு மாபெரும் தவறைச் செய்து தனது மழுப்பலை பு.மி.வெளியிட்டுள்ளது. அதாவது இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது தீர்ப்பை, 207ம் பக்கம் 15ம் வரியிலிருந்து ஆரம்பித்திருக்க, 207ம் பக்கம் முதல் வரியில் (சாதக, பாதகங்கள் விவாதப் பகுதியிலிருந்து) உள்ள வாசகத்தை பிளாக் செய்து போட்டு மக்களை ஏமாற்றியுள்ளனர். இதன் மூலம் மக்களைக் குழப்பி சத்தியத்தை இருட்டடிப்புச் செய்துள்ளனர். அரபி பிளாக் போட்டு மக்களை ஏமாற்றும் முல்லாக்களின் பாணியைக் கடைப்பிடித்து உள்ளனர். அவர்கள் எடுத்துப் போட்டுள்ள அரபி பிளாக்கின் வாசகத்திலும், அவர்கள் இப்னு ஹஜர் போட்டுள்ள சுரபி பிளாக்கின் வாசகத்திலும், அவர்கள் இப்னுஹஜர்(ரஹ்) குறிப்பிடுவதாக, கொட்டேஷன் குறிக்குள் குறிப்பிட்டிருந்த மேலே எழுதியுள்ள வாசகம் இல்லை என்பதை சிந்தனையாளர்கள் விளங்குவார்கள்.

சாதக, பாதக வாதங்கள் பகுதியிலிருந்து தீர்ப்பு என்று எடுத்துக் கொடுத்து மக்களை ஏமாற்றியது அல்லாமல் புகாரீ, முஸ்லிம் மற்றும் பல நூல்களில் காணப்படும் பல ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களின் சாதகமான ஆண், பெண் முழுக்குக் குளிப்பிலும், பெண்கள் ஹைழு, நிபாஸ் குளிப்பிலும் தலையின் முடிக்காம்பு (தலையை ஒட்டிய பகுதி, பின்னல் சடையோ, அதன் நுனிப்பகுதியோ அல்ல) நனைந்தேயாக வேண்டும்; இல்லை என்றால் குளிப்பு நிறைவேறாது என்ற தெளிவான குளிப்பின் முக்கிய விதியை தலைகீழாக மாற்றி அப்படி நனையாமல் விடுபட்டாலும், குளிப்பு நிறைவேறி விடும் என்ற கருத்தின் புதிய தீர்ப்பை வழங்கி 5வது மத்ஹபை உருவாக்க முற்பட்டிருக்கிறார்கள். அடுத்த கட்டுரையும், அவர்களின் அறிவு முதிர்ச்சியின்மையையும் ஆணவத்தையும், புரோகித மனப்பான்மையையுமே எடுத்துக்காட்டுகிறது.

14ம் நூற்றாண்டில் தான் ஒரு மிர்சாகுலாம் தோன்றி தனது அரபி இலக்கண ஞானத்தையும், வாதத் திறமையையும் கொண்டு குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் புது விளக்கம் கொடுத்து, மக்களில் சிலரை வழிகேட்டில் இழுத்துச் சென்றதைத்தான் நாம் அறிவோம். 15ம் நூற்றாண்டிலும் இன்னொரு மிர்சாகுலாமா?

இவர்களின் மனம்போன போக்கையும், தில்லுமுல்லுகளையும், புரோகித மனப்பான்மையையும், அறிவுடையோர் அறிவர், நீங்கள் எழுதியிருப்பது போல் சிந்தனையாளர்களிடம் இவர்களின் சரக்கு எடுபடாது என்பதை நாமும் அறிவோம். இருப்பினும் அக்கட்டுரைகளைப் பற்றி விரிவான விளக்கத்தை மார்ச் இதழில் இடம்பெறச் செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

யூசுப்(அலை) அவர்கள் சம்பந்தப்பட்ட சரித்திரத்தில், அஸீஸுடைய மனைவி காமவேட்கை உள்ளவள் என்று விமர்சித்தோம். ஒரு மவ்லவி அதை மறுக்கிறார். காரணம் “அன்றியும், என் மனது பாவத்தை விட்டும் பரிசுத்தமானது என நான்(கூற) இல்லை. ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக் கூடியதாக இருக்கிறது என் இறைவன் அருள்புரிந்தாலன்றி… (12:53) என்று அஸீஸுடைய மனைவி கூறியிருக்கிறான் என்று விளக்கம் தருகிறார். நாம் இந்த 12:53 வசனத்தை யூசுப்(அலை) அவர்கள் கூறியதாகத்தான் அறிகிறோம். இந்த 12:53 வசனம் யாரால் கூறப்பட்டது என்று ஆதாரத்துடன் விளக்கவும்.

குறிப்பு:  இப்னு கஸீர்(ரஹ்) என்ற குர்ஆன் விரிவுரையாளர், 12:53 வசனத்தை அஸீஸின் மனைவி கூறியதாக விளக்கம் தந்துள்ளாராம். இப்னு அப்துல்காதர், துபை.

அல்குர்ஆன் 12ம் அத்தியாயம், 46ம் வசனத்திலிருந்து ஆரம்பிக்கும் ஒரு நீண்ட சம்பாஷணையின் இடையில் 51ம் வசனத்தில் “இப்பொழுது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று அஸீஸுடைய மனைவி கூறியதாக வருகிறது. அவரது பேச்சு இந்த 51ம் வசனத்தின் பிற்பகுதி மட்டுமே. அதன் பின்வரும் 52ம் வசனமும், 53ம் வசனமும், நீண்ட சம்பாஷணையில் யூசுப்(அலை) அவர்கள் கூறிய தொடராகும்.

இந்த நீண்ட சம்பாஷணை யூசுப்(அலை) சிறையில் இருக்கும்போது, அவர்களுக்கும், அரசருக்கும் இடையில் அரசருடைய தூதர் வந்து போகும் சமயம் இடம் பெற்றதாகும். சிறையில் இருந்து கொண்டு யூசுப்(அலை) கனவிற்கு விளக்கம் கொடுத்தபோது, அதைத் தூதர் மூலம் அறிந்து கொண்ட அரசர் யூசுப்(அலை) அவர்களை அழைத்து வரச்சொல்கிறார். அப்போது யூசுப்(அலை) அவர்கள் வராமல் சிறையில் இருந்து கொண்டே, கைகளை வெட்டிக் கொண்ட பெண்களைப் பற்றி விசாரிக்கும்படி சொல்லி அனுப்புகிறார்கள். இதன்படி அரசர் விசாரித்து, உண்மை வெளிப்பட்டபோதே, அஸீஸின் மனைவி அந்த 53ம் வசனத்தின் இறுதிப் பகுதியைச் சொன்னான். இந்த விஷயங்களை அரசரின் தூதர் திரும்பவும் யூசுப்(அலை) அவர்களிடம் சொல்லும்போதே யூசுப்(அலை) இந்த 52ம், 53ம் வசனங்களைச் சொன்னார்கள். இதை அறிந்த அரசர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள் அவரை நான் என் அத்தியந்தராக அமர்த்திக் கொள்வேன்”  என்று கூறி யூசுப்(அலை) அவர்கள் வந்தபின் அவரிடம் பேசி, “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறீர்” (12:54) என்று கூறினார்.

அரசரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர் யூசுப்(அலை) அவர்களே தவிர அந்தப் பெண்மணி அல்ல, இதிலிருந்தே 12:52, 53 வசனம் யூசூப்(அலை) அவர்கள் கூறியதே என்பது தெளிவாகின்றது. இன்னும் இதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக “ஆனால் அவனோ அவரைத் திடமாக விரும்பினான். அவரும் தன் இறவைனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவன் மீது விருப்பம் கொண்டே இருப்பார். இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும், மானக்கேடான செயல்களையும் திருப்பி விட்டோம். ஏனெனில் அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்” என்ற 12:24 வசனம் அமைந்துள்ளது. இந்த 12:24 வசனம்  12:53ல் உள்ள விஷயங்களை ஊர்ஜிதம் செய்வதோடு அதைக் கூறியது யூசுப்(அலை) அவர்கள்தான் என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமின்றி நிரூபிக்கின்றது.

12:51ம் வசனத்தில் வரும் “காலத்திம்ரஅத்துல் அஸீஸ்” என்ற பகுதியே இந்த சர்ச்சைக்குக்  காரணமாயிற்று. இது 22:78ல் “மில்லத்த அபீக்கும் இப்றாஹீம்” என்ற வசனத்திற்குப் பின் “ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்” என்ற வசனம் வந்திருப்பதால், இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வந்துள்ள அல்லாஹ்வைக் குறிக்கும் அவன் என்ற பதத்தோடு “ஹுவ சம்மாக்குமூல முஸ்லிமீன்” என்ற வசனத்தைச் சேர்க்காமல், இடையில் இருக்கும் இப்றாஹீம் என்ற மதத்தோடு சேர்ப்பதால் அல்லாஹ் முஸ்லிம் என்று பெயரிட்டான் என்பதற்கு முரணாக இப்றாஹீம்(அலை) அவர்கள் முஸ்லிம் என்று பெயரிட்டார்கள் என்று தவறாக சில தப்ஸீர்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தவறான விளக்கம் தப்ஸீர் இப்னுகஸீரிலும், வேறு சில தப்ஸீர்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது உண்மையேயாகும். வேறு சில தப்ஸீர்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது உண்மையேயாகும். ஏற்றி எண்ணப்படும் தப்ஸீர்களில் மிகச் சிறந்தவையாக இவை நிகழ்ந்தாலும் 12:53,54 வசனங்களைப் பொருத்தமட்டிலும் தவறான விளக்கம் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. அவர்களும் மனிதர்களே. அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட குர்ஆனைத் தவிர, மனிதர்களைால் எழுதப்பட்ட எந்த நூலாக இருந்தாலும் தவறுகள் இடம் பெறுவது சாத்தியமான விஷயமேயாகும். மனித கூற்றுக்களை எவ்வித பார்வை பரிசீலனையும் இல்லாமல், அவர் சொல்லிவிட்டால் அது சரியாகத்தான் இருக்கும். இவர் சொல்லிவிட்டால் அது சரியாகத்தான் இருக்கும் என கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது நமது தவறேயாகும். அல்லாஹ்(ஜல்) இந்த விஷயத்தில் இந்த உம்மத்துக்குத் தெளிவைத் தருவானாக.

தாங்கள் ஷிர்க், பித்அத்களில் ஈடுபடாத முஸ்லிம்களை குறிப்பதற்கு தெளஹீத்வாதி” என்ற பெயரை பயன்படுத்துகிறீர்கள். (ஆதாரம்: அந்நஜாத்-டிசம்பர் 87 – பக்கம்16)

அல்லாஹ் தெளஹீதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முஸ்லிம்கள் என்று பெயரிட்டிருக்க, நீங்கள் தெளஹீத்வாதி என்று இன்னொரு பெயரை வைத்து இறைவனோடு போட்டியிடுகிறீர்கள். இது வழிகேடு இல்லையா?

ஜமாஅத்தாக கூட்டமைப்பில் செயல்படுபவர்கள் மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக:

முஸ்லிம் ஜமாஅத் ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன் போன்ற பெயர்களை வைத்தால் இதுவும் வழிகேடுதானா? அபூ ரஃபீக், 3:133, ஜின்னாதெரு, நீடுர்.

ஓர் இறைவனை மட்டும் ஒப்புக்கொண்டவர்களையே தவ்ஹீத்வாதி என்று குறிப்பிடப்படுகின்றது. தவ்ஹீத்வாதி என்றால் வெற்றி பெற்ற கூட்டமாகத்தான் இருக்கும் என்று தவறாக எண்ணப்படுகின்றது. எல்லா மதஸ்தர்களிலும் ஒரே இறைவனை மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள் இருக்கலாம். உதாரணமாக விவேகானந்தரை ஓர் இறைவனை மட்டும் ஏற்றுக்கொண்டவர் என்று சொல்லலாம். ஓர் இறைவனை மட்டும் உறுதியாக நம்பிச் செயல்படும் அரபு நாட்டினர்களிலும், வேறு பல வழிகேடுகளில் மூழ்கி இருப்பவர்களையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஆக தெளஹீத்வாதி என்றால் வெற்றிபெறும் கூட்டம் என்று பொருளல்ல. உம்மத்தே முஹம்மதியாவிலுள்ள ஓரிறைக் கொள்கையுடையவர்களை நாம் தெளஹீத்வாதி என குறிப்பிட்டோம். பெயர் விஷயத்தில் மிக நுட்பமான சிறு வேறுபாடே இருப்பதால், நமது சகோதரர்கள் நிலை தடுமாறுகிறார்கள். நோக்கத்தை வைத்தே சரி, தவறு என்பதை முடிவு செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். மஸ்ஜிதுத் நபி, உமர் பள்ளி, பாத்திமா பள்ளி, இன்னும் இதுபோன்ற பெயர்களைச் சரிகாணும் நாம், முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் என்ற மாத்திரத்தில் நோக்கம் தவறாக இருப்பதால் கூடாது என்கிறோம். இறந்தவர்களின் பெயரால் வழிபாடுகள் செய்வோர், பாத்திமா பள்ளி, உமர் பள்ளி எல்லாம் சரி என்றால் முஹ்லித்தீன் ஆண்டவர் பள்ளி மட்டும் எப்படித் தவறாகும் என்று கேட்கலாம். அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்வீர்களோ, அதுவே இதற்கும் பதிலாகும்.

ஆனால் கொள்கை அடிப்படையிலோ, வெற்றி பெறும் கூட்டம் என்ற அடிப்படையிலோ தனிப்பெயர் வைத்துக் கொண்டால் அதுவே குர்ஆனின் கூற்றுக்கு முரணாகும். முஸ்லிம் சமுதாயம் ஓரணியில் ஒன்றுபட நாமாக இட்டுக்கொண்ட பெயர்களை விட்டு அல்லாஹ் கொடுத்த பெயரில் நம்மை இணைத்துக் கொள்ள, நம்மை நாம் தயார் செய்து கொள்வதே. இழந்துவிட்ட நமது சமுதாயத்தின் உயர் நிலையை மீண்டும் அடைய நமக்குள்ள ஒரே வழியாகும். என் உஸ்நாத் அவர்கள் பலருக்கு ஷிர்க் சஹாப்தீன், ஹனபி ஹாஜியார், மண்ணு பஷீர், மோடுமுட்டு என்ற பட்டப்பெயர்களை வைத்து அழைக்கிறார். நமக்கு உள்ள மார்க்க அறிவை வைத்து இரு தப்பு என்று கூறினாலும் ஏற்கவில்லை.

மார்க்க ரீதியில் இந்த மாதிரி பட்டப்பெயர் வைத்து அழைப்பது கூடுமா கூடாதா? விளக்கம் தரவும்.  A. ஷாஜஹான்,  துபை.

உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள். இன்னும் பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்ட பின் பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (49:11)

அடுத்தவருக்குச் சொந்தமானதை, தன்னுடையதாக்கி கொண்டதாகவும், அமானித மோசடி செய்ததாகவும், உங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறதே?
அமானுல்லாஹ், சென்னை-
12.

இது போன்ற விஷயங்களை, மஞ்சள் பத்திரிகைகள் போல், அச்சாக்கி வெளியிடுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அவர்கள் கூற்றில் உண்மையிருந்தால் சம்பந்தப்பட்டவர்களோடு நேரடியாக வந்து,  சட்டையைப் பிடித்துக் கொண்டு இவற்றிற்கெல்லாம் வழி செய், என்று கேட்பதே ஆக்கப் பணியாளர்களின் வேலையாகும். டிசம்பர் இதழிலேயே அழைப்பு விட்டிருந்தோம், யாரையும் காணோம். மஞ்சள் பத்திரிக்கை நடத்துகிறார்கள். நடத்திவிட்டு போட்டுமே. நமக்கென்ன? மனிதர்களால் ஒருவரை உயர்த்தி விடவும் முடியாது. இழிவுபடுத்தி விடவும் முடியாது. அந்தஸ்தைக் கொடுப்பவன் அல்லாஹ்இழிவுபடுத்துபவனும் அல்லாஹ்வே என்பதில் நமக்கு உறுதியான நம்பிக்கையுண்டு; அவனே போதுமானவன்.

29.3.87ல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு, 2.8.87ல் கலைக்கப்பட்டவின், 9.8.87ல் பிரிவுகளற்ற இஸ்லாத்தை மட்டும் கொள்கையாகக் கொண்ட இலட்சியவாதிகளின் கூட்டத்தில் 9 நபர்களைக் கொண்ட ஒரு தற்காலிய நிர்வாகக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்தக் குழுவே அந்நஜாத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது என்பதை உண்மையாளர்கள் அறிவார்கள் அந்நஜாத்தில் அக்கறையுடையவர்கள் நேரடியாக வந்து சம்பந்தப்பட்ட மினிட்ஸ்களையும், ஃபைல்களையும் பார்வையிட்டு உண்மைகளைத் தெரிந்து கொள்ளவும் முடியும். அந்நஜாத் ஆபீஸ் அதற்காக எப்பொழுதும் திறந்தே இருக்கிறது.

அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களையும், அவர்கள் பேசி பதிவாகியுள்ள செய்திகளையும் வெளியிட்டால் போதும், அவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். எவ்வளவு பெரிய மனிதர்களின் கோரிக்கைகளும், அந்நஜாத் உண்மையை சொல்வதை விட்டும், அதன் கைகளை கட்டிவிட முடியாது. பெரிய மனிதர்களின் தயவுக்காக உண்மையை மறைப்பவர்கள் உண்மை விசுவாசிகளாகவும் முடியாது. ஆனால் தனி மனதர்களுடைய உண்மையான குறைகளையும் பகிரங்கப்படுத்தி அவர்களை அவமானப்படுத்துவது கூடாது என்ற ஷரீஅத்தின் கட்டளையே அந்நஜாத்தின் கைகளைக் கட்டியுள்ளது. ஆயினும் அந்த தனி நபர்களின் சொந்தக் குறைகள் காரணமாக, வேகமாக முன்னேறி வரும் சமுதாயத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டால், சமுதாயத்தின் நலன் கருதி அவற்றை வெளியிட, அந்நஜாத் ஒருபோதும் தயங்காது சேயைக் கொன்றுதான் தாயைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டால், அதையும் செய்துதான் ஆகவேண்டும். அதுவே மனித தர்மம், என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளவே செய்யும். இஸ்லாமிய ஷரீஅத்தும் அதை ஏற்றுக் கொள்கிறது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலையையே அவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

***********************************************

முஸ்லிம்களின் பண்பாடு!

 ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களுக்கு சகோதரர் ஆவார்.(ஆகையால்) ஒருவர் மற்றொருவருக்கு அநியாயம் செய்வதும், உதவி செய்ய வேண்டிய தருணத்தில் கைவிரித்து விடுவதும், அவரைக் கேவலமாக கருதுவதும் கூடாது. (நபி(ஸல்) அவர்கள் தமது நெஞ்சின் பக்கம் மும்முறை சமிக்கை செய்த நிலையில் பின்வருமாறு கூறினார்கள்) “தக்வரு பயபக்தி இவ்விடத்தில் இருக்கிறது”. ஒருவர் நாம் கெட்டவர் என்பதற்கு பிற முஸ்லிம் சகோதரர் ஒருவரை அவர் கேவலமாகக் கருதுவது ஒன்றே போதும். ஒரு முஸ்லிமுக்கு, பிற முஸ்லிமுக்கு சொந்தமானவை அனைத்தும் ஹராம் (தடை) செய்யப்பட்டவையாகும். (அதாவது) ஒருவர் பிற முஸ்லிமின் இரத்தத்திற்கோ, அவரது பொருளுக்கோ, அவரது கொளரவத்திற்கே பங்கம் விளைவித்தல் ஹராமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) (முஸ்லிம்.

******************************************************

முக்கிய  அறிவிப்பு:

இதன் மூலம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அன்புடன் அறிவிப்பது என்னவென்றால், புரட்சிமின்னல் பிப்.பக்கம் 5ல் குர்ஆன், ஹதீஸை எடுத்தியம்ப வேண்டும் என்ற வேணலாவினால் ஒரு இஸ்லாமிய அமைப்பினர் அரும்பாடுபட்டுச் சமுதாயப் பத்திரிகை எனப் பெற்றெடுத்த பிள்ளையை அதன் தந்தையிடமிருந்து சேவகனே தட்டிப் பறித்துக்கொள்ள – ஆதாரமற்ற இன்னொரு பிள்ளையைத் தத்தெடுத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது” என்றும், பக்கம் 120ல் “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடையதாக்கிக் கொண்டதும். அமானித மோசடியும் தான். பிளவு ஏற்பட முக்கியக் காரணம், என்றும் எழுதுவதன் மூலம் “அந்நஜாத்” ஆசிரியர், வெளியிடுபவரை விமர்சித்துள்ளார். அவர் கூறும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நஜாத்தை (அவர்கள் பாணியில் சொல்வதானால்) யார் பெற்றார்களோ அவர்களிடமே பிள்ளையாக உள்ளது. பு.மி.கூறும் அமைப்பினர் இடையினர் வந்து தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி செய்தனர். இறையருளால் சூழ்ச்சிகள் வீழ்ந்தன.

P.J. K.M.H. & K.S.R. இம்தாதி ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டு, பொதுக் குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவதே சிறப்பு என எண்ணி முறையாக எழுத்து மூலம் எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளனர். மேலும் அந்நஜாத் (இது ஆரம்பிக்க மூலகாரணமாக இருந்த “ஸலபி” என்ற பிரிவினைப் பெயரையும், மற்ற பிரிவினைப் பெயர்களையும் விரும்பா) நமது நாட்டு, துபை சகோதரர்களின் முழு ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

“அந்நஜாத்” என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியிடமே இருந்தது. இன்றும் 9 நபர்கள் கொண்ட கமிட்டியிடமே உள்ளது. புதிதா அமைக்கப்பட்ட கமிட்டியில், கலைக்கப்பட்ட கமிட்டியிலிருந்த  நால்வர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அட்ஹாக் கமிட்டி உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் “அந்நஜாத் ஆரம்டபம் முதல் அருகில் இருந்து உதவிகள் பல செய்து வரும் சகோதரர் நால்வர் உள்ளனர்.

எனவே, P.J. அவர்கள் கூறுவது போல் “அந்நஜாத்” தனி நபருக்கு சொந்தமாகவுமில்லை. எந்தவித அமானித மோசடியும் நடக்கவுமில்லை. இஸ்லாத்தை அதன் தூயவடிவில் கொண்டு வரும் முயற்சியில் அயராது பாடுபடும் எனதருமை சகோதர ஆலிம்களே! எனதன்பு  உடன் பிறப்புகளே! இம்மாதிரியான அவதூறுகளை  அள்ளி வீசும்  பணியில் ஈடுபடாமல் மார்க்கப்பணியில் நமது முழு கவனத்தையும் செலுத்துமாறு அன்புடனும் மிகுந்த கவலையுடனும் வேண்டிக் கொள்கிறேன். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவனாக!

இவண்,

K.முஹம்மத் கவுஸ்,

நிர்வாகி, “அந்நஜாத்”

*******************************************

சமூகவியல் : 5.அறிபவன் அவனே!  

புலவர் செ.ஜஃபர் அலீ, பி.லிட், கும்பகோணம்.

(நபியே!) நீர் (மனிதர்களை) நளினமாகவும், அழகான நல்லறிவுரைகளைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கித்துக் கொள்ள நேரிட்டால்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கஞ் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை, உறுதியாக உம் இறைவன் நன்கறிவான்.  நேரான வழியிலிருப்போர் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்” (அல்குர்ஆன் : 16:125)

இன்றைய காலக் கட்டத்தில் மார்க்க விஷயத்தைப் பொறுத்தவரையில் மிக நெருக்கடியான காலச் சூழலில் முஸ்லிம்களாகிய நாம் வாழ்ந்து வருகின்றோம்.

மார்க்க அடிப்படை உண்மைகளை உணர்ந்து அதன்படி செயல்பட்டு, வல்ல அல்லாஹ்வின் பேரருளை இம்மையிலும், மறுமையிலும் பெறுவதற்காக தங்களைத் தயார்படுத்திக் கொள்ள துடிதுடியாய்த் துடிப்பவர்கள் ஒருபுறம்! சில சுயநலச் சக்திகளால் உருவாக்கப்பட்ட போலி மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு இன்பங் கண்டவர்கள் அதனை வி்ட்டு வெளியேற மனமின்றி, நாம் சொல்கின்ற எல்லாவற்றையும் மறுத்து போலி வாதம் பரியவதிலே குளிர் காய்பவர்கள் பிறிதொரு புறம்! சண்டையி்ட்டுக் கொள்வோர் போட்டுக் கொள்ளட்டும். நாம் எதிலும் சேர வேண்டாம் என்று இரண்டாமவர் கூட்டத்திலேயே தங்களை அறியாமலேயே ஐக்கியமாக்கிக் கொண்டவர்கள் இன்னொரு புறம்! இவர்கள் யாரென்றால், ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்களே” அத்தகைய கூத்தாடிகள் வேகின்ற வீட்டில் பிடுங்கியவரை ஆதாயம் காண்பவர்கள்! ஆக முடிவாகச் சொல்லப்போனால் சத்தியத்தை ஏற்று அதன் வழி செயல்வோரும் – அசத்தியத்திலே தங்களை மூழ்கடித்துக் கொண்டவர்களுமாக இரு பிரிவினர் இருந்து வருகின்றார்கள். இதில் வெற்றி பெறும் சமூகம் யாரென்பதும் வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

இவண், இன்னொன்றையும் சுட்டிக் காட்ட விழைகின்றேன். நாம் அனைவரும் முஸ்லிம்கள்: இப்பெயரிட்டு அழைக்கும்படியாகவே அல்குர்ஆனும், அல்ஹதீஸும் நமக்குத் தெளிவுபடுத்துகின்றனர். வெற்றிபெறும் கூட்டத்தினர் பெயர்கள் சூட்டுவதாலேயே பிளவுபட வேண்டாம், பிளவுபடக் கூடாது என்பதுதான் முஸ்லிம் சகோதரர்களின் ஒருமித்த கருத்தாகும். 16:125 குர்ஆன் கட்டளைப்படி, மனித சமூகமாகிய நாம் தர்க்கஞ் செய்ய நேரிட்டால் ஒருவருக்கொருவர் கண்ணியமான முறையிலேயே விவாதம் புரிய ஏவப்பட்டுள்ளோம். அதுதான் மனித சமூக தர்மத்திற்கு அழகு.

நம்முடைய செயல்கள் அனைத்தையும் எந்நேரமும் அல்லாஹ் பார்ப்பவனாகவும் – உற்றுநோக்குபவனாகவும், நாம் பேசிக் கொள்வதை – உரையாடுவதை, தர்க்கஞ் செய்து கொள்வதைக் கேட்பவனாகவும் இருக்கின்றான். நமக்குள் யார் நேர்வழியில் சென்று கொண்டிருப்பவர் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். இத்தகைய இறை நம்பிக்கையைக் கொள்ளாத – அந்நம்பிக்கையில் அழுத்தமாக இல்லாத எவரும் உண்மை முஸ்லிம் ஆகார்.

உறுதியாக எவர்கள் (மெய்யாகவே) பயபக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர் தம் செயல்களை அழகாக்கி வைக்கின்றார்களோ அவர்களுடனும் தான் அல்லாஹ் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 16:128)

இந்த வசனத்தின் மூலம், இறையாணைக்குக் கீழ்ப்படிந்து, அவன் மீதுள்ள நம்பிக்கையால் – இறையச்சத்துடன் நல்லறங்களைச் செய்து வரும் பயபக்தியாளர்களுடன் எல்லாம் வல்ல இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோம். இதற்கு மேலும் நாம் வீண் தர்க்கத்தில். பங்குகொண்டு வாழ்நாளட்களை வீழ்நாள்களாக்காமல் உண்மை இறையடியார்களாக வாழ்வதற்கு முயற்சி செய்வதே மனித சமூக நீதியாகும். உண்மையாளர்களாகிய ஒரு கூட்டத்தினர் ஒருபுறம் சமுதாயத்தவரிடையே போராடிக் கொண்டிருக்கையில் இவர்களை எப்படியாவது, தங்களின் விதண்டாவாத பொருளற்ற – பயனற்ற உரையாடல்களால் செயல் இழக்கச் செய்து, சமுதாயத்தில் இவர்களுக்குள்ள செல்வாக்கை மங்கச் செய்வதன் மூலம் அற்ப ஆதாயங்களை நாம் தேடிக்கொள்வதிலேயே கண்ணுங் கருத்துமாக  இருக்கின்ற  பிரிதொரு பிரிவினரைப் பற்றி நாம் மிக மிக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

பொருளற்ற வாதங்கள் பேசுவோருக்கு, முதலாவதாக இறை நம்பிக்கையில் முழுமை இல்லை; இரண்டாவதாக சுயநலம்; மூன்றாவதாக ஒன்றில் ஒரு பொருளில் ஆழ்ந்த விருப்பு அல்லது வெறுப்பு; நான்காவதாக  சொகுசான இம்மை வாழ்வுக்கு இடையூறாக வருபவற்றைத் தூக்கியெறியும் மனப்பான்மை; ஐந்தாவது மறுமை வாழ்வில் ஐயம். இவ்வாறான கொள்கைகள் கொண்டவர்களிடத்தில் நாம் உரையாடுவதைத் தவிர்த்துக் கொள்ளல் மிக மிக நலம். திருமறையின் தெளிவான அறிவுரைகள் எவருடைய உள்ளத்தில் இருளைப் போக்கவில்லையோ, அவருக்கு அறிவொளி என்பது அறவே கிடையாது. மனித சமூகம் மாசுறக் கூடாது! அதையும் மீறி “மாசு” என்னும் மோசத்தை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டு வாழ ஆசைப்படுபவர்களை தடுக்கத்தான் இயலுமோ?

அறியாமை என்னும் சேற்றில் சிக்கியவர்கள், தாங்கள் அதில்தான் சிக்கியிருக்கின்றோம் என்பதை முதலில் அவர்கள் உணர்ந்து கொண்டால் மட்டுமே, அவர்கள் சிந்தனை என்னும் கரைக்கு வருவதற்கு முயற்சி செய்வார்கள். அவர்களுடைய முயற்சி உண்மையிலேயே உண்மையை நாடி இருக்குமானால், அவர்களுக்கு அம்முயற்சி வெற்றியும் தரும். அறியாமைச் சேற்றை சுகமான “நீரூற்று” என அல்லது “நீரருவி” என எண்ணி இறுமாந்து இருப்பவர்கள் எங்ஙனம் ‘பகுத்தறிவு’ என்னும் கரைக்கு வர விழைவர்? தப்பித் தவறி வந்தாலும் இங்கே மன ஒருமைப்பாடு பெறுவார்களா? மீண்டும் அங்கே செல்லத்தானே அவர்கள் இதயம் எண்ணும்? ஏகத்துவத்தை இதயத்தில் கொண்டவர்களால் மட்டும் சந்தன மனத்தையும், சாக்கடை நாற்றத்தையும் பிரித்தறிய முடியும்.

********************************************

நபிவழித் தொகுப்பு வரலாறு! 

தொடர் – 13.  அபூ அஸ்மா

ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் எழுத்துப் பணிகள்!

(1) ஸஹீஃபத்துஸ்ஸாதிகா (சத்திய ஏடு)

இத்தொகுப்பு ஹிஜ்ரி 63-ல் காலமான, அப்துல்லாஹ்பின் அம்ருப்னுல் ஆஸ்(ரழி) அவர்களால் தொகுக்கப்பட்டது. இவர்களுக்கு நபி(ஸல்) அவர்களின் புனிதமான ஹதீஸ்களைத் தொகுத்து நூல் வடிவாக்குவதில் ஆசையும், ஆர்வமும் இருந்து வந்தது.

நபி(ஸல்) அவர்களின் வாயிலாக எவற்றைக் கேட்டார்களோ, அவற்றை உடனே அப்படியே பதிவு செய்து கொள்ளும் பழக்கமுள்ளவர்களாயிருந்தார்கள். இதுவகையில் நபி(ஸல்) அவர்களே இவர்களுக்கு ஆர்வமூட்டி எழுதச் செய்துள்ளார்கள். (முக்தஸர் ஜாமிஉல் இல்ம், பக்கம் 36)

“ஸஹீஃபத்துஸ்ஸாதிகா” வென்னும் இத்தொகுப்பு ஏறத்தாழ 1000 ஹதீஸ்களைக் கொண்டுள்ளது. நீண்ட காலமாக அது அவர்களின் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்டு வந்து, இறுதியாக “முஸ்னத் அஹ்மத்” என்னும் ஹதீஸ் களஞ்சியத்தில் முழுமையாக இணைக்கப்பட்டு அதில் இடம் பெற்றுவிட்டது.

(2)  ஸஹீஃபத்துஸ் ஸஹீஹா (முறையான ஏடு)

இது ஹிஜ்ரி 101ல் காலமான ஹுமாமுப்னுல் முனப்பஹ்(ரஹ்) அவர்களது தொகுப்பு இவர் அபூஹுரைரா(ரழி) அவர்களின் பிரபல்யமானமாணவர்களில் ஒருவராவார். இவர் தமது மரியாதைக்குரிய ஆசிரியரின் அறிவிப்புகளை ஒட்டுமொத்தமாக ஒன்றில் எழுதி மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார். இவரது கையெழுத்துப் பிரதிகள் இன்றும், பெர்லின், டமஸ்கஸ் நகர நூல் நிலையங்களில் பாதுகாப்புடன் இருந்து வருகின்றன. அத்துடன் இமாம் அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அவர்களும் தமது பிரபல “முஸ்னத்” எனும் நூலில், அபூஹுரைரா(ரழி) எனும் தலைப்பின் கீழ் இம்முழு ஏட்டினையும் பூரணமாகப் பதிவு செய்து விட்டார்கள். பக்கம் 312 முதல் 318 முடிய இப்பிரதி அபூஹுரைரா(ரழி) அவர்களின் மொத்த அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும். அதன் பெரும்பாலான அறிவிப்புகள் புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றிலும் இருக்கின்றன. வார்த்தைகள் சற்று முன் பின்னாக இருக்கின்றனவே அன்றி: குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை.

(3)  “பஷீருபின் நஹீக்” என்பவரின் தொகுப்பு :

இவர்களும் அபூஹுரைரா(ரழி) அவர்களின் மாணவர்களின் ஒருவராவார். இவர் தமது மதிப்புக்குரிய ஆசிரியராம் அபூஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக ஹதீஸ்களைச் செவியேற்று, தாம் பதிவு செய்து கொண்டது மட்டுமின்றி, தமது ஆசிரியரை விட்டும் விடை பெறும்போதும், ஒருமுறை அதை நேரில் வாசித்துக் காண்பித்து சரிபார்த்துக் கொண்டார்கள்.  (ஜாமிஉல் இல்மு, பாகம் 1, பக்கம் 72, தஹ்தீபுத்தஹ்தீபு, முதலாம் பாகம், பக்கம் 470)

(4)  முஸ்னத் அபூஹுரைரா(ரழி) :

 இது ஸஹாபாக்களின் காலத்திலேயே எழுதப்பட்ட பிரதியாகும். இதன் நகல் ஒன்று “இரண்டாம் உமர்” என்றழைக்கப்படும் உமருபின் – அப்துல் அஜீஸ் அவர்களின் தந்தை அப்துல் அஜீஸ் பின் மர்வான் என்பவரிடத்திலும் இருந்திருக்கிறது.

அவர் “கஸீருபின் முர்ரா” என்பவருக்கு பின்வருமாறு எழுதியுள்ளார். ஸஹாபா பெருமக்களின் ஹதீஸ்கள் அனைத்தையும் எனக்கு எழுதி அனுப்பிவையுங்கள். ஆனால் அபூஹுரைரா(ரழி) அவர்களின் ஹதீஸ்களை எழுதி அனுப்பத் தேவையில்லை.   ஏனெனில் அவை ஏற்கனவே எழுதப்பட்டு என்னிடம் உள்ளன. (தபகாத் இப்னு ஸஃது, பாகம் 7, பக்கம் : 157)

மேலும் “முஸ்னத் அபூஹுரைரா என்னும் ஓர் பிரதி இமாம் இப்னு தைமிய்யா(ரஹ்) அவர்களது திருகரத்தால் எழுதப்பட்டு இப்பொழுதும் அது ஜெர்மனீ நூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. (திர்மிதீ விரிவுரை : துஹ்ஃபத்துல் அஹ்தீ” எனும் நூலில் முகவுரையில் பக்கம் 165-ல் காணப்படுகிறது)

(5) ஸஹீஃபத்துல் அலி(ரழி) ஏடுகள் :

இதுபற்றி இமாம் புகாரீ(ரஹ்) அவர்களின் விளக்கத்திலிருந்து பெரிய நூல் எனத் தெரிகிறது. ஜகாத் பற்றிய விளக்கம், மதீனாவின் புனிதத் தன்மை, ஹஜ்ஜத்துல் வதாஉவின் குத்பா பேருரை முதலிய இஸ்லாமிய நெறிமுறைகளின் தத்துவங்கள் இதில் நிரம்பி உள்ளன (ஸஹீஹ் புகாரீ, கிதாபு இஃதிஸாமு பில் கிதாபி வஸ்ஸுன்னா, முதற் பாகம் பக்கம் 451)

(6)  நபி(ஸல்) அவர்களின் குத்பா பேருரையின் தொகுப்பு :

இது மக்கா வெற்றியின்போது, அபூஷாஹ் யமனீ(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொண்டதற்கேற்ப நபி(ஸல்) அவர்களும் தமது உபதேசத்தை பிறர் எழுதிக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள். இது ஒருவர் பிறருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து முக்கிய பல விளக்கங்களைக் கொண்ட ஓர் பேருரையாகத் திகழ்கின்றது.

(7) ஸஹீஃபத்துஜாபிர்(ரழி) :

இது ஜாபிர்(ரழி) அவர்களின் கையெழுத்துப் பிரதி, “ஜாபிருபின் அப்துல்லாஹ்” என்னும் அறிவிப்புகளை, அவர்களின் மாணவர்களான. ஹிஜ்ரி 110ல் காலமான “வஹபுபின் முனப்பஹ்” என்பவரும் “சுலைமான் பின்கைஸ் லஷ்கரீ” அவர்களும் முன்பு எழுதப்பட்டவாரே தொகுத்துள்ளார்கள். இத்தொகுப்பு ஹஜ்ஜின் கிரிகைகள், ஹஜ்ஜத்து வாதாஉ, குத்பா பேருரைகள் முதலிய  அடங்கியுள்ள ஒன்றாகும். (ஸஹீஹ் புகாரி, முதலாம் பாகம், பக்கம் 20)

8)  ரிவாயத்து ஆயிஷா சித்தீக்கா(ரழி) :

இது அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் அறிவிப்புகள் அடங்கிய தொகுப்பாகும். இது அன்னை அவர்களின் மாணவராக விளங்கும் உர்வாபின் ஜுபைர்(ரழி) அவர்களால் எழுதப்பட்டது. (தஹ்தீபுத் தஹ்தீபு பாகம் 7, பக்கம் 183)

(9) அஹாதீஸுப்னு  அப்பாஸ்(ரழி)

    இது இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களின் பல்வேறு அறிவிப்புகளின் மொத்தத் தொகுப்பாகும். இதை ஸயீதுபின் ஜுபைர்(ரஹ்) என்னும் தாபீயீன்களைச் சார்ந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் தொகுத்தெழுதியுள்ளபடியே தொகுத்துள்ளார். (தாரமீ, பக்கம் 68)

*****************************************
துலாக்கோல்!

ஹம்துல்லாஹ் ஜமாலி

நவம்பர் 87, அந்நஜாத் இதழில் மெளலிதில் உள்ள தவறுகளை குர்ஆன், ஹதீஸ், ஒளியில் விளக்கி “மெளலூது ஓதுவோம் வாருங்கள்” என்ற சிறப்புக் கட்டுரையை வெளியிட்டோம். அதனை விமர்சித்து ஜமாஅத்துல் உலமாசபை தலைவரும், செயலாளரும் தம் மனம்போன போக்கில் எழுதியுள்ளார். அதற்கு பதிலளிப்பது கடமையென இங்கு உங்களுக்கு எங்களது பதிலை தருகிறோம்.

ஜ.உ.சபைத் தலைவர் அரபு மொழியில் இலக்கணம், இலக்கியம், அணி இலக்கணம், கவியாக்கும் முறை தெரியாமல் நாம் அனர்த்தம் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார். இதுவரை இவர்கள் குர்ஆன், ஹதீஸை எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஆயகலை 13 தெரிந்திருக்க வேண்டும். இலக்கண இலக்கியத்தில் முழு ஞானம் வேண்டுமென கூறினார்கள். அப்படிக் கூறி பாமர மக்களை மூளைச் சலவை செய்தால்தான், தாங்கள் வக்காலத்து வாங்கும் பிக்ஹு சட்டங்கள் மக்களிடையே விலைபோகும் என நாடினார்கள். ஆனால் இன்று பிதற்றல்களையும் (பர்தா, மெளலிது) விமர்சிக்க அதே ஞானம் வேண்டுமென கூறத் தொடங்கி விட்டனர். அப்படிக் கூறி மூளைச் சலவை செய்தால்தான் இக்கவிகளைப் பாடுவதன் மூலம் தங்களது சட்டைப்பை, தோல்பையை நிரப்பமுடியும் என முயற்சிக்கிறார்கள், பாவம்!

நபி(ஸல்) அவர்களது பெயரால் கூறப்படும் ஹதீஸ்களையே சரியான முறையில் சீர்தூக்கி, தரம் பிரித்து உண்மையானது, பலமானது, பலஹீனமானது, இட்டுக்கட்டப்பட்டது என விமர்சிக்க இஸ்லாமிய ஷரீஅத் நமக்கு ஆணையிட்டிருக்க, இவர்கள் கூறும் குப்பைக் கவிதைகளும், மானிட ஊகங்களும், மனித விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வேதங்களா? என கேட்கிறோம். பதிலளிப்பார்களா?

நமது பிரசுரங்களில், கட்டுரைகளில் திருகுர்ஆனின் வசனங்களை முன்பின் தொடரைவிட்டு, தனிமைப்படுத்தி அனர்த்தம் செய்வதாகவும் ஜ.உ.சபைத் தலைவர் கூறியுள்ளார். இதுவரை 23 மாத  இதழ்கள், 16க்கு மேற்பட்ட பிரசுரங்களை அந்நஜாத் வெளியிட்டுள்ளது. அதிலிருந்து ஒரே ஒரு உதாரணம் இவரது கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட முடியுமா? பாவம்! ஜ.உ.சபைத்தலைவர் என்ற செருக்கில் நாம் சொல்வதை மக்கள் கண்மூடி இன்னும் பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கிறார். அந்த காலம் மலை ஏறிவிட்டது என ஞாபகப்படுத்துகிறோம்.

குர்ஆனை பங்கிடுகிறார் ஜ.உ.ச.செயலாளர் :

நமது மெளலிது பிரசுரத்தில் (பக்கம் 12) குர்ஆன் வசனம் 2:79ஐ குறிப்பிட்டு மனித கரங்களால் கற்பனையாக எழுதியவற்றை பின்பற்றுவதைவிட எவ்வித  கருத்து  வேறுபாடற்ற அல்லாஹ், அவனது ரசூல் வாக்கை பின்பற்ற அழைப்பு விடுத்தோம். ஜ.உ.சபை வக்காலத்து வாங்கும் பிக்ஹு நூற்கள், மெளலிதுகள் மனிதர்களால் எழுதப்பட்டதா? அல்லாஹ்வினால் அருளப்பட்டதா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மேற்கூறிய குர்ஆன் வசனம் யூத, நஸராக்களுக்கு இறக்கப்பட்டது; முஸ்லிம்களாகிய நமக்கல்ல என குர்ஆனை பங்கிட்டுள்ளார். ஜ.உ.சபை செயலாளர்,  இவரது கூற்று சரி என்றால் :

சூரா ஹுதில் லூத்(அலை) சமூகத்தினர் செய்த தீயச் செயலான ஓரின புணர்ச்சி (ஆணுக்கு ஆண் உடல் உறவு)யை அல்லாஹ் கண்டிக்கிறான். அவர்களுக்கு கொடிய வேதனை இருப்பதாக எச்சரிக்கிறான். (குர்ஆன் அத்தி. 11, வசனங்கள் 74 முதல் 82) இந்த கண்டிப்பு எச்சரிக்கை லூத்(அலை) கூட்டத்தாருக்குத்தான் முஸ்லிம்களாகிய நமக்கில்லை என ஜ.உ.ச. செயலாளர் வாதிடுகிறாரா? ஓரின புணர்ச்சிக்கு ஓட்டளித்து எய்ட்ஸ்க்கு வக்காலத்து வாங்குகிறாரா? இச்செயலை நியாயப்படுத்துகிறாரா?

சூரா யூசுபில் அஜீஸின் மனைவி, யூசுப்(அலை) அவர்களை ஹராமான வழியில் அனுபவிக்க அழைக்கிறான். இறை நம்பிக்கையாளர் யூசுப்(அலை) அல்லாஹ்வுக்கு பயந்து கொள். நான் இதுபோன்ற அநீதங்களை செய்யமாட்டேன் என விலகி ஓடுகிறார்.  (சூரா 12, வசனங்கள் 22 முதல் 24) இது யூசுப்(அலை)க்கு கூறப்பட்டது. அவரது கூட்டத்தினருக்கு பொருந்தும்: முஸ்லிம்களாகிய நமக்கல்ல என வலிய வரும் காமப் பெண்ணை அனுபவிக்க அனுமதிக்கிறாரா? இந்த ஜ.உ.ச.செயலாளர்.

இப்படியே குர்ஆனை இது யகூதிக்கு இறங்கியது. அது நஸ்ரானிகளுக்கு, இது  காபிர்களுக்கு என கூறுபோட நாடுகிறாரா? குர்ஆனில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு வசனமும் எல்லோருக்கும் படிப்பினையைக் காட்டும் பாடங்கள் என அல்லாஹ் கூறுவது (11:120) இவருக்கு தெரியாதது ஏனோ? இதுவரை இஸ்லாமிய மார்க்கத்தை ஹனபி, ஷாபி, ஹன்பலி, மாலிக்கி என கூறுபோட்டவர்கள், அனைவருக்கும் படிப்பினையான குர்ஆனையும் கூறுபோட்டதில் வியப்பில்லை. இவ்வாறு இது யூதருக்கு. இது நஸ்ரானிகளுக்கு, இது குறைஷிக் காபிர்களுக்கு, இது அவர்களுக்கு, இது இவர்களுக்கு என குர்ஆனை பங்கு போட்டால் இறுதியில் இன்றைய முஸ்லிம்களுக்கு குர்ஆனில் எதுவுமே மிஞ்சாது என்பது இவருக்குத் தெரியாதா?

மெளலிது பிரசுரத்தில் சுமார் 80 குர்ஆன் வசனங்களையும், 70 ஸஹீஹான ஹதீஸ்களையும் ஆதாரமாக அளித்தோம். அதில் முதல் 26 பக்கங்களில் 43 திருகுர்ஆன் வசனங்கள், 15க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. இவையனைத்தும் ஜ.உ.சபை செயலாளருக்கு வள வளக் கருத்துக்களாக தெரிந்துள்ளன. இது அவரது குர்ஆன், ஹதீஸ் பற்றிய ஞானத்தை எடுத்துக் காட்டுகிறது.

“மாஹி”க்கு நபி(ஸல்) கொடுத்த விளக்கமென்ன?

“மாஹி” (அழிப்பவர்) என்பதற்கு நபி(ஸல்) கூறிய பொதுளை சிறிதும் பார்க்காமல், தனது மனம்போன போக்கில் அர்த்தம் செய்கிறார் ரஹ்மத் ஆசிரியர். அல்லாஹ் அவனது ரசூல்(ஸல்) அவர்களுக்கிருப்பதாகக் கூறிய மற்றச் சிறப்புகளைக் கூறி “மாஹி”க்கு சப்பைக் கட்டு கட்டுகிறர். நபி(ஸல்) ஒரு கலிமாவை மொழியச் செய்து, அவர்களது காலத்திலிருந்த பல காபிர்களை, யகூதி, நஸ்ரானிகளை “குப்ரின் பாவத்திலிருந்து காப்பாற்றினார்களே அவர்களை “மாஹித் துனூபி” (பாவங்களை அழிப்பவரே!) என அழைக்கக் கூடாதா? என வினவுகிறார். இதனை நாம் அவர்கள் உயிருடனிருந்தபோது அல்லாஹ் நாடிய அளவு பாவத்திலிருந்து தடுக்கும் சக்தி இருந்தது. ஆனால் செய்துவிட்ட பாவத்தை அழிக்கும் சக்தி அவர்களுக்கு அப்போதுமில்லை. இப்போதுமில்லையென குறிப்பிட்டிருந்தோம். நபி(ஸல்) க்கு பாவத்தை அழிக்கும் சக்தி இருந்திருந்தால் அவர்களது பெரிய தந்தை “அபூதாலிப்” விஷயத்தில் நபி(ஸல்) எவ்வளவோ முயன்றும் ஏன் கலிமாவுடன் மரிக்கச் செய்ய முடியவில்லை என்பதை ஜ.உ.சபை செயலாளர் விளக்குவாரா?

“மாஹி” என்பதற்கு நபி(ஸல்) கூறிய அர்த்தம் இதனை நமக்கு நன்கு படம் பிடித்து காட்டுகிறது. முஅத்தா இமாம் மாலிக்(ரஹ் கிதாபின் கடைசி ஹதீஸைப் பாருங்கள். நபி(ஸல்) தனக்கு ஐந்து பெயர்களிருப்பதாக கூறுகிறார்கள்.

1. நான் முஹம்மது, 2.நான் அஹ்மது,  3.நான் மாஹி(அழிப்பவர்), என்னைக் கொண்டு அல்லாஹ் குப்ரை அழிக்கிறான், 4. நானட் ஹாஷிர் – மக்கள் என தலைமையில் ஒன்று திரட்டப்படுவர், 5.நான் அகிப் – நான் எனக்குப்பின் நபி இல்லாத இறுதியானவன் (அறிவிப்பு : முஹம்மது இப்னு ஜுபைர்(ரழி), ஜுபைர் பின் முத்யிம்(ரழி), இந்த ஹதீஸ் புகாரீ, முஸ்லிம், முஸ்னது அஹ்மது, முஸ்தத்ரிக் ஹாக்கிம், அபூ நயீம், பைஹகி போன்ற ஹதீஸ் நூற்களிலும் சரியான அறிவிப்பாளர்  வரிசையில் இடம் பெறுகிறது)

இந்த ஹதீஸில் முஹம்மது, அஹ்மது என்பதற்கு எவ்வித விளக்கமும் தராக நபி(ஸல்) “மாஹி” (அழிப்பவர்) என்று குறிப்பிடும் போது மட்டும் “அல்லாஹட் என்னைக் கொண்டு குப்ரை அழிக்கிறான் என்றார்கள். தன்னை எதனையும் அழிக்கும் சக்தி உடையவராக தனது உம்மத்து விளங்கிவிடக் கூடாது என்று தான் இந்த விளக்கத்தை குறிப்பாக அளித்தார்கள்.

இந்த விளக்கங்களைப் பார்க்காமல், நபி(ஸல்) பயந்த அதே விளக்கத்தை ஜ.உ.சபை செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் இஸ்லாமிய சட்ட (பிக்ஹு) விளக்கத்திற்கு விளக்கமளிக்கும் விவேகியல்லவா? நபி(ஸல்) கூறிய விளக்கத்தை பார்க்கவில்லை!  பார்த்து விளங்கி எழுதவுமில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. நபி(ஸல்) மாஹிக்கு கொடுத்த விளக்கத்தை ஏற்பதா? இந்த பிக்ஹு கலாமேதையின் விளக்கத்தை ஏற்பதா? என்பதை வாசகர்களிடமே விடுகிறோம்.

யார் யாரோ எழுதிய சட்டங்களுக்கு விளக்கமளிப்பதை விடஅல்லாஹ்வும், அவனது ரசூலும் கூறிய சரியான முறையில் இவர் விளக்கமளித்தால், இந்த விமர்சனம் வந்திருக்காது. இனியாவது இவர் குர்ஆன், ஹதீஸை திறந்து பார்த்து விளங்கி விளக்கமளிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

நூர் பற்றிய விளக்கம் :

மெளலீதில் நபி(ஸல்) அவர்களை சூரியனுடனோ, சந்திரனுடனோ ஒப்பிட்டதை நாம் விமர்சிக்கவில்லை. மெளலிது ஆசிரியரின் மூலக் கருத்துப்படி நபி(ஸல்)  அல்லாஹுவின் நூரிலிந்து தோன்றினார்கள் மற்ற அனைத்தும் அவர்களது நுரிலிருந்து தோன்றின என்பதாகும். எனவே எதனையும் நபி(ஸல்)யின் நூருடன் ஒப்பிட முடியாது. எதனை அவர்களுடன் ஒப்பிட்டாலும் அதுவும் அவர்கள் நூரிலிருந்து தோன்றியதுதானே! எனவே தான் மிஞ்சியுள்ள ஒரே நூரான அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடுகிறார் என்றோம். இதறட்கு மெளலிது பக்தர்கள் “அனமின் நூரில்லாஹ், வகுல்லு ஷையின் மின் நூரி” “நான் அல்லாஹ்வின் நூரிலிருந்து வந்தவன். மற்றனைத்தும் எனது நூரிலிருந்து வந்தன”  என்ற  இட்டுகட்டப்பட்ட  ஹதீஸைக்  கூறுவதைக்  காணலாம்.

இதனை நிரூபிக்கும் விதமாக மெளலிதிலும், “லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக்” (நீங்கள் படைக்கப்படவில்லையேனில் இவ்வுலகமே படைக்கப்பட்டிருக்காது) என்று குறிப்பிட்டிருப்பதையும் காணலாம். இங்கு அல்லாஹுவின் தனிச்சிறப்பு குணங்களில் ஒன்றான நூருடன் ஒப்பிட்டு, அதற்கும் மேலானவர் என “நூருன் பெளக்கநூர்”, எனக் கூறுவதை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

பாவம்! இஸ்லாமிய சட்ட வியாக்கியானிக்கு “தெளஹீது அஸ்மாஉ வஸ் ஸிபாத்” *(அல்லாஹுவின் தனிச் சிறப்புக்களில் ஓரிறைக் கொள்கை) பற்றி தெரியாதது வருந்தத்தக்க விஷயம். இதற்கென அவர் எடுத்து வைத்திருக்கும் குர்ஆன் வசனம் அவரது கூற்றுக்கே மாற்றமாக இருப்பதை அறியாமல் எழுதியுள்ளார். அவர் கூறிய அல்லாஹு நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழி….. என்ற வசனத்தின் பொருளைப் பாருங்கள்.

அல்லாஹ், வானங்கள், பூமி(ஆகியவை)களின் பிரகாசமாக இருக்கிறான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் : விளக்கு இருக்கும் மாடத்திற்கு ஒப்பாகும். (24:35) எனத் தொடர்கிறது. இந்த வசனத்தின் ஆரம்பமே அவனுடைய, அதாவது அல்லாஹ்வுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: என்பதிலிருந்து அந்த பிரகாசம் அல்லாஹுவுடையது என்பதை பாமரனும் உணருவான். பாவம் பிக்ஹின் கலைக் களஞ்சியத்திற்கு விளங்காதது வருந்தத்தக்க விஷயம். அதனை “மதலு நூரிஹி கமிஷ்காத்தின்” என்று குறிப்பிட்டவர். அதிலுள்ள “ஹி” என்ற சுட்டுப்பெயர் யாரைக் குறி்க்கிறது என்பதை விளங்காமல் எழுதியுள்ளார். அரபி ஞானத்தில் முதிர்ந்த ஜ.உ.ச. செயலாளர் எழுதியுள்ளார். அரபி ஞானத்தில் முதிர்ந்த ஜ.உ.ச. செயலாளர்.

இதற்கும் மேலாக இந்த இறைவசனம் ஆயத்துல் “முதஷாபிஹாத்” என்ற பல பொருட்களைக் குறிக்கக் கூடியது. உதாரணமாக அல்லாஹ் கூறியுள்ளதற்கு பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே! இங்கு எதற்கு உதாரணம் கொடுக்கப்படுகிறது. எந்த பிரகாசத்திற்கு உதாரணமாக  அல்லாஹ் கூறுகிறான் என்பதுதான் பிரச்சனை “மதலு நூரிஹி” அவனது (அல்லாஹ்வினது) பிரகாசத்திற்கு உதாரணம் என்பதை எல்லோரும் அறியலாம்.

ஆயாத்துல் முதஷாபிஹாத்தைப் பற்றி ஒரு நல்லடியான் எப்படிப்பட்ட கருத்தை கொள்வான் என்பதை 3:7 வசனத்தில் பார்க்கவும். ஜ.உ.சபை செயலாளர் எப்படி பல கருத்துக்களைக் கொண்டு மக்களை குழப்ப நாடியுள்ளார் என்பதை வாசகர்கள் அறியலாம். அவரைப் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நபி(ஸல்) அவர்களை நூர் என்று அழைக்கலாமா? 

அல்லாஹ்வின் திருநாமங்களை “அப்து” என்ற அடைமொழியுடன் மற்றவர்களுக்கு வைக்க அனுமதித்த நபி(ஸல்) “அப்து”(அடிமை) என்ற அடைமொழியின்றி அழைக்க வேண்டாமென கூறினார்கள். அல்லாஹுவின் பெயர்களான அர்-ரஹ்மான், அர்-ரஹீம் அல்மலீக், அந்தூர் போன்றவற்றை அப்துர் ரஹ்மான்,அப்துர் ரஹீம், அப்துல் மலீக், அப்துந்நூர் என்று முழுஐமயாக கூப்பிட வேண்டுமென நபி(ஸல்)  கூறினார்கள். அப்படியிருக்க நபி(ஸல்) அவர்களே விரும்பாத நிலையில் அவர்களை “நூர்” என அழைக்கலாமா? அவர்களை நூர் என்று அழைப்பது எமக்கு மட்டுமல்ல. ஹதீஸ் ஞானமுள்ள அனைவருக்கும பிடிக்காது. பாவம் ஜ.உ.சபை செயலாளருக்கு பிக்ஹு ஞானமிருப்பதில் பத்து சதவீதம் கூட ஹதீஸ் ஞானமில்லாதது வருந்தத்தக்க விஷயம்.

அடுத்து பர்னபாஸ் சுவிசேஷத்திலிருந்து வந்தாலும் எடுக்கலாம் என்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனப்படி இப்படி வாதிட்டாலும் நாம், குர்ஆன், ஹதீஸுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதுவே நபி(ஸல்) நமக்கு விட்டுச் சென்ற உரைக்கற்கள்: அதில் மோதாமலிருந்தால் ஏற்கலாம் என்பதை நாம் பக்கம் 21-ல் குறிப்பிட்டிருந்தோம். இது இவரது கண்ணில்படாதது ஏனோ?

நபியவர்களின் பேரொளியை அல்லாஹ் படைத்ததாகத் தானே கூறப்பட்டிருக்கிறது என்கிறார் ஜ.உ.ச. செயலாளர், அது எங்கு கூறப்பட்டுள்ளது என்பதை குர்ஆன், ஹதீஸ் மூலம் இவரால் நிரூபிக்க முடியுமா? சொந்த ஊகங்களை, ஆதாரமின்றி தமிழக ஜ.உ.சபை செயலாளர் என்ற தலைக்கணத்தில் கூறிவிட்டால் மக்கள் ஏற்பார்கள் கண்மூடி பின்பற்றுவார்கள் என  இன்னும் கனவு காண்கிறாரா? பாவம்!

அடுத்து நபியவர்கள் நூரினாலேயே (ஒளியினாலேயே) படைக்கப்பட்டார்கள் என்று கூறப்படவில்லையே? என  ஆதங்கப்படுகிறார் பாவம்! மெளலிது பக்தர்கள்.

1. அனமின் நூரில்லாஹ், வகுல்லு ஷையின் மின்நூரி எனக் கூறி திரிவதன் பொருளென்ன?

2. லவ்லாக லமா கலக்துல் அஃப்லாக் என்று மெளலிது ஆசிரியர் கூறுவதன் அர்த்தமென்ன? (இந்த இரு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை புரிந்து கொண்டால் மெளலிது போன்ற அனாச்சாரங்கள் தானாக நின்றுவிடும். ஜ.உ.ச. செயலாளருக்கு புரியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.)

3. ஆதம்(அலை) அவர்களின் படைப்புக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்டது.

4.  பின்பு அது ஆதம்(அலை) முதுகில் வைக்கப்பட்டது. அதனட் மூலம் ஆதம்(அலை) வஸீலா தேடினார்கள்.

5. பின்பு அது நூஹ்(அலை) அவர்களிடமிருந்தது; அதன் உதவியால் “தூபான்” வெள்ளத்திலிருந்து தப்பினார்கள்.

6. பின்பு அது இப்ராஹீம்(அலை) அவர்களிடமிருந்து அதன் உதவியால் நெருப்பு குண்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள், என வரிகைகளாக தாங்கள் வக்காலத்து வாங்கும் மெளலிது கிதாபு கூறும் புருடாக்களின் பொருள் என்ன?

இதற்கு ஜ.உ.ச. செயலாளர் தனது ரஹ்மத் இதழில் பதில் அளிப்பாரா?

அன்த கப்பாருல் கதாயா வத்துனுபில் மூபிகாத் :

நீர் தவறுகளையும், ஆபத்தான குற்றங்களயும் மன்னிப்பவர் என்ற ரஹ்மத் ஆசிரியரின் சரியான பொருள்படி நபி(ஸல்) அவர்களுக்கு, தவறுகளையும், ஆபத்தான குற்றங்களையும் மன்னிக்கும் சிறப்பு இருப்பதாக  கூறுகிறார். ஆனால் நபி(ஸல்) அவர்களது பற்பல ஹதீஸ்கள் இவரது கூற்றை மறுக்கின்றன.

தபூத் சண்டையின் போது அனைத்து சஹாபிகளும் போருக்கு போனார்கள். ஆனால் ஒரு சிலர், ஏறக்குறைய 80 பேர்கள் கலந்துகொள்ளவில்லை. போர் முடிந்து வந்த நபி(ஸல்) அவர்களிடம் போரில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் கேட்டார்கள். பலர் பற்பல காரணங்களைக் கூறி தப்பிக் கொண்டனர். ஆனால் கஃபு இப்னு மாலிக்(ரழி), முராராபின் ராபிஆ(ரழி),  ஹிலால் பின் உமையா(ரழி) ஆகிய மூவர் பொய்யான காரணங்களைக் கூறாமல் உண்மையைக் கூறினார்.

இதனை செவியுற்ற நபி(ஸல்) இம்மூவரை சமூக பகிஷ்காரம் செய்யும்படி தனது மற்ற தோழர்களுக்கு கூறினார்கள். அவர்களுடன் பேசவோ,  நட்புறவாடவோ கூடாது என்றார்கள். அனைவரும் அம்மூவரை பகிஷ்கரித்தனர். ஒருநாள், இருநாள் அல்ல. ஐம்பது நாட்கள் இந்த பகிஷ்காரம் நடந்தது. கடைசி பத்து நாட்களில் அவர்களது மனைவிமார்கள் தாம்பத்தியத்திலும் பகிஷ்கரித்தனர். இவ்விதம் தண்டிக்கப்பட்ட அம்மூன்று சஹாபாக்களும் செய்த “தவ்பாவின்” காரணமாக அல்லாஹ் மன்னித்ததாக நபி(ஸல்) 51வது நாள் கூறுகிறார்கள். இதனை கேட்டு குதூகலமடைந்த கஃபு இப்னு மாலிக்(ரழி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து “இந்த மன்னிப்பு தங்களிடமிருந்ததா? அல்லது அல்லாஹ்விடமிருந்ததா? என வினவினார். அதற்கு நபி(ஸல்) “திட்டமாக இது அல்லாஹ்விடமிருந்துதான்” என பதிலளித்தார்கள்.
(ஹதீஸ் சுருக்கம்). ஆதாரம் : புகாரீ, முஸ்லிம், முஸ்னத் அஹ்மது.

நபி(ஸல்) அவர்களுக்கு தவறுகளையும், ஆபத்தான குற்றங்களையும் மன்னிக்கும் சிறப்பிருந்தால், தானே மன்னித்திருக்கலாம். ஆனால் அச்சிறப்பு, மன்னிக்கும் தன்மை, தனக்கில்லை எனக் காட்டவே அல்லாஹுவின் ஆணைக்கென 40, 50 நாட்கள் காத்திருந்தார்கள் என்பது தெரிகிறது. யாராவது பாவம் செய்துவிட்டால், தவறிழைத்து விட்டால், ஒளூ செய்து இரு ரகாஅத்கள் தொழுது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேளுங்கள். அல்லாஹ் மன்னிப்பவன் என நபி(ஸல்) கூறியதும், இந்தந்த அமல்களைச் செய்து பாவமன்னிப்பு கேளுங்கள் என படிப்பித்ததும் நல்ல உதாரணங்களாகும். அல்லாஹ்வைப் பற்றிய தவ்ஹீதை நமக்கு கற்றுத் தந்ததாகும். எனவே தான் அல்லாஹ் “வ மன் யஃபிருத்துனூப இல்லல்லாஹ்” (3:135) அல்லாஹ்வைத் தவிர மன்னிப்பவன் யார்? என நபி(ஸல்) அவர்களையே கேட்கவைத்தான்.

மேலும் திருகுர்ஆன் வசனங்களான 2:272, 3:128, 6:17, 7:188, 10:106,107, 11:63, 28:56, 42:52, 46:9, 72:21,22 இக்கருத்தை வலியுறுத்துகின்றன. இவ்விதம் அனைத்தையும் மன்னிக்கும் சக்தி. மாண்பு அல்லாஹுவுக்கு மட்டும் இருப்பதாக குர்ஆனும், ஹதீஸும் தெள்ளத் தெளிவாக கூறுகின்றன. இச்சிறப்பு நபி(ஸல்) அவர்களுக்கு இருப்பதாக யார் கூற்றை ஏற்பது என்பதை வாசகர்களிடையே ஒப்படைக்கிறோம்.

முனாஜாத்தாம்! அல்லாஹுவை அழைக்கிறாராம் !

இதுவரை இஸ்லாமிய சட்ட விளக்கத்திறகு (பிக்ஹுக்கு) விளக்கமளித்தவர் இப்போது மெளலிதுக்கு (ஷாஹு) விளக்கமளிக்க ஆரம்பித்து விட்டார். “யா நபி ஸலாம்” என்ற பைத்தின் தொடக்கத்திலிருந்து, யா நபி, யா ரசூல் என நபி(ஸல்) அவர்களையே யா!(ஓ) என்ற அழைப்புக்குறியில் குறிப்பிடப்படுகிறது. இப்படி ஒன்பது தடவைகள் நபி(ஸல்) அவர்களை அழைத்துவிட்டு பத்தாவது தடவையில் அது அல்லாஹுவை குறிக்குமென கதை விடுகிறார். அது மட்டுமின்றி அந்த யா(ஓ) என்பதை விளக்கும் முகமாக “அன்த” நீர் என நபி(ஸல்) அவர்களையே மெளலிது ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த “அன்த” என்ற சொல்லும் 7 தடவைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்க ஜ.உ.ச. செயலாளர் “யா வலிய்யுல் ஹஸனாத்தி” என்பதிலிருந்து அல்லாஹ்வை அழைக்கிறாராம். அது முனாஜாத்தாம், உண்மையில் இவரது கருத்து சரியெனில் முழுப் பொருளை அவர் தமிழில் தரட்டும் பார்க்கலாம். மக்கள் புரிந்து கொள்வார்கள். ஒருவேளை இவரது தலைவர் போல கவியாக்கும் முறைப்படி இலக்கிய நயம் என வாதிடலாம். அப்படியாயின் இது முனாஜாத்து என்பதற்கும், அல்லாஹ்வை நோக்கி கேட்கப்படுகிறது என்பதற்கம் விளக்கம் தர முடீயுமா? தான் ஓதி, அதன்மூலம் வருமானத்தை பெருக்கி வந்த, இதுபோன்ற மெளலிது பித்தர்கள் தங்களது செயலை நற்செயலாகக் காட்ட எந்த விளக்கத்தையும் தரத் தயங்கமாட்டார்கள் என்பதை ஜ.உ.சபைத் தலைவரும், செயலாளரும் நிரூபித்து வருகின்றனர்.

முடிவாக மெளலிது ஓதுவது வாஜிபோ, பர்ளோ அல்ல என்கிறார். அப்படியாயின் அது சுன்னத்தா? என்பதை கூறட்டும். நபி(ஸல்) சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத ஒரு நற்செயலும் உண்டா? என்பதை விளக்கட்டும் பார்க்கலாம். மவ்லிது ஓதுவதால் ரசூல்(ஸல்) மீது முஹப்பத்து அதிகரிக்கிறதாம். அப்படியெனில் இவர்களுக்கு ரசூல்(ஸல்) மீது முஹப்பத்து வருடத்தில் ஒருசில நாட்கள் தான் வருகிறதா? அதில் ஸலவாத் அதிகம் ஓதப்படுவதால் நன்மைகள் கிட்டுகிறதாம். தினசரி தொழுகையிலும், துஆவிற்கு முன்னும், பின்னும் பாங்கு சொன்ன பின்னும் (முன்னால் அல்ல) மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸலவாத் சொல்லுங்கள். ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மை கிட்டுமென நபி(ஸல்) கூறினார்களா? அல்லது மெளலிது ஓதச்சொன்னார்களா? எந்த ஸஹாபியாவது இப்படி செய்தார்களா? தாபியீன்கள், இமாம்கள் இதனை வரவேற்றார்களா? என்பதை ஜ.உ.ச. செயலாளர் ஆதாரத்துடன் நிரூபிப்பாரா?

இப்படி எவ்வித ஆதாரத்தையும் காட்டாமல் தனது மனம்போன போக்கில் மெளலிதுக்கு வக்காலத்து வாங்கி இருப்பது வருந்தத்தக்க விஷயம், அல்லாஹ்வின் “அஸ்மாவு வஸ்ஸிபாத்துக்களில்” ஷிர்க்(இணை வைப்பது) பற்றி ஞானமற்றிருப்பது அவரது குறையாகும். எதனையும் முழுமையாக ஆராயாமல், தனது வயதான காலத்தில் ஞாபகத்திலுள்ளதை ஆதாரமாக கூறியிருப்பதும்: அதற்கு தனது சொந்த ஊகங்களை முடிவாக கூறியிருப்பதும் வருந்தவேண்டிய விஷயமாகும்.

இவர் நமக்கு அளிக்கும் குர்ஆன், ஹதீஸ், ஆதாரங்களையாவது சரிபார்த்து நிதானமாக விமர்சித்தால் நலமாக இருக்கும். அதன் மூலம் இவர் பல குப்பைகளுக்கு விளக்கமளிப்பதை விட குர்ஆன், ஹதீஸ் மூலம் விளக்கமளித்த திருப்தியும் ஏற்படும். நாமும் இவரது விமர்சனங்களை வரவேற்போம். அனைவருக்கும் நேர்வழி கிட்ட வாய்ப்பாகும் இதனை செய்ய ஜ.உ.சபை மெளலவிகள் தயாராவார்களா? தலைவர், இதனை செய்ய ஜ.உ.சபை மெளலவிகள் தயாராவார்களா? தலைவர்கள் செயலாளர் முன் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபி(ஸல்) விட்டுச் சென்ற இரண்டே இரண்டான குர்ஆன், ஹதீஸ் வழிக்கு வர அல்லாஹ்விடம் அனைவரும் இறைஞ்சுவோமாக! இவர்கள் தாங்களாக வரவில்லையெனில் விழித்துக்கொண்ட சமுதாயத்தினிடத்தில் வகையாக மாட்டிக் கொள்வது நிச்சயம் எனக் கூறி முடிக்கிறோம்.

*********************************************

தக்லீதின் பெயரால்…..

அக். 87 இதழில் முகல்லிதுகள் தங்கள் பொய்க்கொள்கையை நிலைநாட்ட குர்ஆன் 4:59 வசனத்தில் எப்படி விளையாடுகிறார்கள்? என்பதை விரிவாகப் பார்த்தோம்.

இதேபோல் குர்ஆன் 4:115 வசனத்தையும் தங்கள் தக்லீது கொள்கையை நிலைநாட்ட எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்போம். 

எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும் அல்லாஹ்வின் இத்தூதரை விட்டுப்பிரிந்து மூமின்கள், செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயெ செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம். அதுவோ சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்”. (குர்ஆன் : 4:115)

மேலே உள்ள வசனத்தை மேல் எழுந்தவாரியாக படிக்கும் எந்தவொரு சாதாரண மனிதனும், மனித சமூகத்திற்கு முன்மாதிரியாக அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபி(ஸல்) அவர்களை விட்டு வேறு யாரையும் முன்மாதிரியாகவோ, இமாமாகவோ எடுத்துக் கொள்ள முடியாது என்பதை அறிந்து கொள்ளலாம். அப்படி வேறோருவரை முன்மாதிரியாகவோ இமாமாகவோ எடுப்பவர்கள் மூமின்களின் கூட்டத்திலிருந்து பிரிந்து விட்டார்கள். நாளை மறுமையில் நரகத்தில் மிகவும் கெட்ட இடத்திற்கு சென்றடைவார்கள் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரிக்கையும் செய்கின்றான்.

இப்படி சாதாரணமாகப் புரிந்து கொள்ளக்கூடிய வசனத்தை எப்படி மக்களுக்கு மத்தியில் சித்தரிக்கின்றார்கள். அது எவ்வளவு பெரிய கட்டுக்கதை, அதுவும் மரியாதைக்குரிய இமாம் ஷாபி(ரஹ்) அவர்களையே அக்கட்டுக்கதையைக் கொண்டு இழிவுபடுத்தி (அவர்களும் மூமின்களின் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று தானும் நரகிற்கு செல்வதோடு நில்லாமல் மற்றவர்களையும் அழைத்து செல்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி) அவர்களை மதித்து நடப்பதாகத் தம்பட்டம் அடிக்கிறார்கள் என்ற விபரங்களைச் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம்.  அந்த  4:115 வசனத்தின் ஆதாரப்பூர்வமான விளக்கம் வருமாறு :

இந்த 4:115 வசனம் இறங்கிய வரலாற்றைப் பார்க்கும்போது, ஒரு திருட்டுக் கோஷ்டியை அல்லாஹ்வின் அறிவிப்பின்படி கண்டு பிடித்தபோது அதிலுள்ள ஒரு நயவஞ்சகன் காபிர்களோடு போய் சேர்ந்து கொண்ட பொழுதுதான் இந்த வசனம் இறங்கியதாகத் தெரிகின்றது. (தப்ஸீர் இப்னு கஸீர் ) எனவே இந்த வசனத்தில் முஃமின்கள் செல்லாத வழி என்றால் நபித் தோழர்கள் செல்லாத வழி என்பதே தெளிவாகத் தெரிகின்றது. இதைக் கீழ்வரும் ஹதீஸும் நிரூபிக்கின்றது.

என் சமூகத்தினரில் மறுத்தவர் தவிர ஏனையோர் அனைவரும் சுவனபதி செல்வர் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினர். அப்பொழுது தோழர்கள், மறுத்தவர் என்றால் யார்? என்று வினவினர். எவர் என்னைப் பின்பற்றி ஒழுதுகிறாரோ அவர் சுவனபதி செல்வார். அன்றி எவர் எனக்கு மாறு செய்தாரோ அவர் நிச்சயமாக மறுத்தவராவார் என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), ஆதாரம் : புகாரீ.

ஆக, நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரையும் நாம் இமாமாக ஏற்றுப் பின்பற்ற நிச்சயமாக முடியாது. தங்களை ஹனபி என்றும் ஷாபி என்றும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் தயவுசெய்து ஆத்திரப்படாமல் சிந்தித்து விளங்கி உண்மையை ஏற்று நடக்க அன்புடன் அழைக்கிறோம்.

****************************************
நபி வழியில் நம் தொழுகை

– தொடர் : 14  அபூ அப்துர்ரஹமான்

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாககும். (3:31)

“என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” – மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி), புகாரி, முஸ்லிம்.

சென்ற இதழில் “அசுத்தங்கள் என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சுத்தப்படுத்த வேண்டும்” என்ற விவரங்கள் இடம் பெற்றன. இவ்விதழில் “அதானும் இகாமத்தும்” என்ற தலைப்பில் பாங்கின் அவசியம், பாங்கின் பலன், பாங்குக்கு  மறுமொழி கூறுவது, இகாமத்தும் மறுமொழியும், பாங்கின் துஆ ஆகிய விபரங்கள் இடம் பெறுகின்றன.

அதனும்(பாங்கு), இகாமத்தும்

பொதுவாக தொழுகைக்கு அழைக்கப்படும் அழைப்பிற்கு “அதான்” என்றும், குறிப்பாக தொழுகை நடைபெறப்போகிறது என்பதை அறிவிப்பதற்கு “இகாமத்” என்றும் சொல்லப்படும்.

பாங்கு, இகாமத் ஆகியவற்றின் முழு விபரம் :

அப்துல்லாஹ் பின் ஜைத்(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்கு அழைப்பதற்காக) மணி அடிப்பது என்ற முடிவுக்கு வந்தபோது, அது கிருஸ்தவர்களின் நடைமுறைக்கு ஒத்திருப்பதால் அதை அவர்கள் வெறுத்த நிலையில் இருந்தார்கள். ஒருநாள் நான் தூங்கிக் கொண்டிருந்தபோது, இரு பச்சை நிற ஆடைகள் அணிந்த ஒருவர் தமது கையில் மணி ஒன்றை வைத்துக்கொண்டு, என் பக்கம் வரப்போக இருந்தார்.

அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடியாரே! அந்த மணியை எனக்கு விற்று விடுகிறீரா? என்று கேட்டேன். அதற்கவர் “அதை நீர் என்ன செய்வீர்?” என்றார். அதற்கு நான் “அதனால் நாங்கள் தொழுகைக்கு அழைப்புக் கொடுப்போம்” என்றேன்.  அப்போது அவர் “இதைவிட மேலான ஒரு முறையை நான் உமக்கு எடுத்துரைக்கவா?  என்றார். அதற்கு நான் சரி என்றேன். அதற்கவர் (பின்வருமாறு)

“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் – அஷ்ஹது அல்லாஹ் இலாஹ இல்லல்லாஹ்

அஸ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்

ஹய்ய அலஸ்ஸலாஹ் – ஹய்ய அலஸ்ஸலாஹ்

ஹய்ய அலல்ஃபலாஹ் – ஹய்ய அலல்ஃபலாஹ்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அகபர் – லா இலாஹ  இல்லல்லாஹ்”

என்று கூறிவிட்டு சற்று விலகிச் சென்றார். பின்னர் தொழுகையின் தயார் நிலையின்போது, நீர் (இவ்வாறு) கூறவேண்டும் என்றார். (அதாவது 🙂

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் – அஷ்ஹது அல்லா இலாஹ  இல்லல்லாஹ்

அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் – ஹய்ய அலஸ்ஸலாஹ் ஹய்ய அலல்ஃபலாஹ்

கத்காமத்திஸ்ஸலாஹ் – கத்காமத்திஸ்ஸலாஹ் அல்லாஹு அக்பர்

அல்லாஹு அக்பர் – லாஇலாஹ  இல்லல்லாஹ் என்று கூறினார்.

பின்னர் நான் சுப்ஹு நேரத்தில் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தான் கண்ட(கனவின் விபரத்)தைக் கூறினேன். அதற்கவர்கள், நிச்சயமாக இன்ஷா அல்லாஹ் இது உண்மைக் கனவு தான் என்றார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி நீர் எழுந்திருந்து பிலால் இடம் நீர் கனவில் கண்டவற்றை அப்படியே எடுத்துக் கூறும்!  ஏனெனில் அவர் உம்மைவிட உரத்த குரலும், அழகிய தொனியுமுள்ளவர் என்றார்கள். உடனே நான் எழுந்து பிலால் அவர்களிடம் எடுத்துக் கூற அவர்கள் அவ்வாறே பாங்கு சொன்னார்கள்.

இவ்வாறு பாங்கு சொல்லுவதை வீட்டில் இருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த உமர்(ரழி) அவர்கள், தமது மேலாடையைத் தரையில் இழுத்தவண்ணம் ஓடோடி வந்து, (நபி(ஸல்) அவர்களை நோக்கி) உங்களை உண்மையைக் கொண்டு அனுப்பி வைத்த(வல்ல)வனின் மீது ஆனையாக, நான் (இப்பொழுது கூறக்) கண்டது போன்றே நானும் கனவு கண்டேன் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கே சர்வப் புகழும் என்றார்கள்.

அப்துல்லாஹ்பின் ஜைத்(ரழி), (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜ்ஜா, திர்மிதீ)

அப்துல்லாஹ்பின் ஜைத்(ரழி) அவர்களின் மற்றொரு அறிவிப்புத் தொடரில் பின்னர் பாங்கு சொல்லும்படி கட்டளையிடப்பட்டது என்றுள்ளது. இந்தக் கனவை உண்மைக் கனவு என்று நபி(ஸல்) சொல்லி, அதை அங்கீகரித்ததினால் பாங்கு மார்க்கமாக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு எவரின் கனவும் மார்க்கமாக்கப்பட மாட்டாது என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவும்.

பிலால்(ரழி) அவர்கள் பாங்கு சொல்லிவிட்டு, நபி(ஸல்) அவர்களைத் தொழுகைக்கு அழைக்க வருவார்கள். ஒருநாள் அவ்வாறு ஸுப்ஹு நேரம் அவர்களை அழைத்தபோது “நபி(ஸல்) அவர்கள் தூங்குகிறார்கள்” என்று சொல்லப்படவே, பிலால்(ரழி) “அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்” (தொழுகை தூக்கத்தைப் பார்க்கிலும் மேலானது) என்று உரத்த தொனியில் கூறினார்கள்.

ஸயீதுப்னுல் முஸய்யப்(ரழி) அறிவித்துள்ளார்கள்: அப்போதுதான் சுப்ஹுடைய பாங்கில் இவ்வாசகம் இணைக்கப்பட்டது. (அஹ்மத், அபூதாவூத்)

மேற்காணும் அப்துல்லாஹ்பின் ஜைத்(ரழி) அவர்களின் கனவு சம்பந்தப்பட்ட அந்த அறிவிப்பில் இகாமத்தின் ஆரம்பத்தில் கூறப்படும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்னும் வாசகங்கள் இரண்டு மட்டும் இடம் பெற்றிருக்கின்றன. அதன் காரணமாக இகாமத்தின் மொத்த வாசகங்கள் 13 என்று கணக்கிடப்படுகிறது.

ஆனால் அபூமஹ்தூரா(ரழி) அவர்களுக்கு நபி(ஸல்)அவர்கள் இகாமத்திற்கு 17 வாசகங்களை கற்றுக் கொடுத்தார்கள் என்று அபூமஹ்தூரா(ரழி) அவர்களே அறிவித்துள்ள அறிவிப்பு, அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

எனினும் அபூமஹ்தூரா(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் இகாமத் 17 வாசகங்களைக் கொண்டுள்ளது என்ற அறிவிப்பைப் பார்க்கினும், அப்துல்லாஹ்பின் ஜைத்(ரழி) அவர்களின் இகாமத் 13 வாசகங்களை கொண்டுள்ளது என்ற அறிவிப்பே அஸஹ்ஹூ அதிகமான அறிவிப்பாளர்களின் மூலம் அறிவிக்கப்பட்டு மிகவும் ஸஹீஹானது என்ற தரத்தை அடைந்துள்ளது.

பாங்கின்போது, காதில் விரலை வைத்தாலும், வலப்புறம், இடப்புறம் திரும்புதலும் :

அபூஜுஹைஃபா(ரழி) அறிவித்துள்ளார்கள் : ஒருமுறை நான் (பாங்கின்போது) பிலால் அவர்களின் வாயைக் கூர்ந்து கவனித்தவாறு இருந்தேன். “ஹய்ய அலஸ்ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்” என்று கூறும்போது அவர்கள் வலப்புறம், இடப்புறங்களில் திரும்பி கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்புத் தொடரில், பிலால்(ரழி) அவர்களின் இரு விரல்களும் அப்பொழுது அவர்களின் காதுகளில் இருந்தன.  (அஹமத், திர்மிதீ)

பாங்கின் அவசியம் :

தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்ல வேண்டும். மேலும் உங்களில் (சன்மார்க்க அடிப்படையில்) பெரியவர் இமாமத் செய்யவேண்டும். மாலிக்பின் ஹுவைரிஸ்(ரழி), (புகாரி, முஸ்லிம்)

பாங்கின் பலன் :

ஒரு மலையின் மேற்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் ஒருவர், தானே பாங்கு சொல்லித் தொழும்போது, உங்கள் இறைவன் மிக சந்தோஷம் அடைகிறான். (மேலும் மலக்குகளை நோக்கி) இதோ எனது இவ்வடியான் என்னை பயந்தவனாக பாங்கு சொல்லி தொழுவதைப் பாருங்கள்! அவன் பாவங்களை நான் மன்னிப்பதோடு, அவனை நான் சுவர்க்கத்திலும்  புகுத்த வைப்பேன்” என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூற, நான் கேட்டிருக்கிறேன். உக்பாபின் ஆமிர்(ரழி), (அபுதாவூத், நஸயீ)

பாங்கை விடுவதால் ஏற்படும் தீமை :

“மூவர் ஓரிடத்தில் இருந்துகொண்டு, அவர்கள் பாங்கு சொல்லாமலும், தொழாமலும் இருப்பாராயின் நிச்சயமாக ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் கொண்டு விடுவான் என்று உணர்ந்து கொள்ளுங்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள்.  அபூதர்தாஃ(ரழி), (முஸ்னத் அஹ்மத்)

பாங்குக்கு மறுமொழி கூறுவது :

உமர்(ரழி) அறிவித்துள்ளார்கள். பாங்கு சொல்பவர் “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர் என்றால் நீங்களும் அல்லாஹு அக்பர் –  அல்லாஹு அக்பர்” என்று சொல்ல வேண்டும்.  பிறகு அவர் “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்” என்றால் நீங்களும் அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லவேண்டும். பிறகு அவர் அஷ்ஹது அன்ன முகம்மதர் ரசூலுல்லாஹ் என்றால்” நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லவேண்டும். பிறகு அவர் ஹய்ய அலஸ்ஸலாஹ், என்றால்,  அப்போது நீங்கள்  “லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்” என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் “ஹ்ய்யஅலல்ஃபலாஹ்” என்றால் அப்போதும் நீழுங்கள் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லவேண்டும்: பிறகு அவர் “அல்லாஹு அக்பர் – அல்லாஹு அக்பர்” என்றால் நீங்களும் அல்லாஹு அகபர் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டும். பிறகு அவர் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்றால் நீங்களும் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று உள்ளத்தின் உறுதியுடன் கூறினால் அத்தகையோர் சுவர்க்கம் புகுவர்” என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உமர்(ரழி),  முஸ்லிம், அபூதாவூத்)

நபி(ஸல்) அவர்கள் பாங்குக்கு பதில் சொல்கையில் அருகில் இருந்து கவனித்தவர் :

முஆவியா(ரழி) பற்றிய ஓர் அறிவிப்பில், பாங்கு சொல்பவர், “ஹய்ய அலஸ்ஸலாஹ்” என்று கூறும்போது, 

“லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ்” என்று அவர்கள் பதில் கூறிவிட்டு, “நான் உங்கள் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு பாங்குக்கு பதில் கூறும்போது, அதை எனது காதால் கேட்டுக் கொண்டிருந்தேன் என்றார்கள். (புகாரீ)

இகாமத்தும், மறுமொழியும் :

அபூ உமாமா(ரழி) அவர்கள் ஒரு ஸஹாபி கூறியதாக அறிவித்துள்ளார்கள். பிலால்(ரழி) அவர்கள் “இகாமத்” சொல்லத் துவங்கி “கத்காமத்திஸ்ஸலாஹ்” என்று அவர் கூறும்போது, நபி(ஸல்) அவர்கள் (அதற்கு பதில் சொல்லும் வகையில்) அகரமஹல்லாஹுவ அகாமஹா” (அல்லாஹ் அதை நிலைநிறுத்தி, நேமமாக்கியருளவானாக!) என்று கூறினார்கள். ஏனைய இகாமத்துடைய வாசகங்களுக்கு (மேலே) உமர்(ரழி) அவர்களின் அறிவிப்பில் உள்ளவாறு பாங்கின் வாசகங்களுக்கு பதில் சொன்னது போல் பதில் சொன்னார்கள். (அபூதாவூத்)

தனித்துத் தொழுவோரும் பாங்கு, இகாமத் சொல்லிக் கொள்வதே முறையாகும்!

இது விஷயம் குறித்து அஸ்மாபின்த் யஜீத்(ரழி) அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) ஆகியோர் மூலம் பெண்களுக்கு பாங்கும், இகாமத்தும் இல்லை என்னும் ஓர் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த ஹதீஸின் தொடரில் “உபைதுல்லாஹ்” என்பவர் காணப்படுகிறார். அவரோ ஹதீஸ்கலா, வல்லுநர்களால் நம்பகமற்றவராக கருதப்படுவதால், அவ்வறிவிப்பு பலஹீனமானதாகும்.

ஹதீஸ் விஷயம் குறித்து அஸ்மாபின்த் யஜீத்(ரழி) அப்துல்லாஹ் பின் உமர்(ரழி) ஆகியோர் மூலம் பெண்களுக்கு பாங்கும், இகாமத்தும் இல்லை என்னும் ஓர் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த ஹதீஸின் தொடரில் “உபைதுல்லாஹ்” என்பவர் காணப்படுகிறார். அவரோ ஹதீஸ்கலா, வல்லுநர்களால் நம்பகமற்றவராக கருதப்படுவதால், அவ்வறிவிப்பு பலஹீனமானதாகும்.

ஹதீஸ் தொகுப்பாளர் இமாம் அபூதாவூத் அவர்கள் இதுகுறித்து பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்கள். நான் அஹ்மது பின் ஹம்பல் மூலம் கேட்டிக்கிறேன். அவர்களிடத்தில் பெண்களுக்கு பாங்கு இகாமத் உண்டா? என்று கேட்கப்பட்டது; அப்போதவர்கள், இவ்வாறே இப்னு உமர் அவர்களிடம் கேட்கப்பட்டது; அப்போதவர்கள், இவ்வாறே இப்னு உமர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போதவர்கள், அல்லாஹ்வை நினைவு கூறும் அப்புனிதமான வாசகங்களை (எவ்வாதாரமின்றி) “பெண்களுக்குத் தேவையில்லை” என்று எவ்வாறு நான் சொல்லமுடியும்? என்றார்கள். ஆகவே இப்னு உமர்(ரழி) அவர்களின் இக்கூற்றை ஆதாரமாகக் கொண்டு பெண்களுக்கும் பாங்கு, இகாமத் உண்டு என்பதாக அஹ்மது பின் ஹம்பல்(ரஹ்) அறிவித்துள்ளார்கள்.

பாங்குக்குப் பின் :

அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி) அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டேன். பாங்கு சொல்பவரின் பாங்கை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவது போன்றே கூறுங்கள். பின்னர் என்மீது ஸலவாத் ஓதுங்கள்! ஏனெனில எவர் என் மீது ஒரு ஸலவாத் ஓதுவாரோ அதன் காரணமாக அல்லாஹ் அவர்மீது 10 ஸலவாத் ஓதுகிறான். பின்னர் அல்லாஹ்விடம் எனக்காக “வஸீலாவை”க் கேளுங்கள்: நிச்சயமாக அது சுவர்க்கத்தில் அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே அன்றி மற்றெவருக்கும் கிடைக்காததோர் உயர்பதவி, அவர் நானாக இருக்கலாம் என்று நல்லாதரவு வைக்கிறேன். எவர் “வஸீலா”வென்னும் அவ்வுயர் பதவி எனக்குக் கிடைப்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றாரோ, அவருக்கு எனது ஷபாஅத்து கிடைக்கும். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)

ஆகவே மேற்காணும் அறிவிப்பில் காணப்படுவது போல் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதிவிட்டு, அல்லாஹ்விடம் அவர்களுக்காக சுவர்க்கத்தில் குறிப்பிடத்தக்கதோர் உன்னதப் பதவியை) அளிக்குமாறு கீழ்காணும் துஆவை ஓதவேண்டும்.

பாங்கின் துஆ :

அல்லாஹும்ம – ரப்ப – ஹாதிஹித் தஃவதித், தாம்மத்தி வஸ்ஸலாத்தில் காயிமத்தி ஆத்தி முஹம்மதனில் வஸீலத்த வல்ஃபழிலத்த வப் அஸ்ஹு மகாமன் மஹ்முதனில்லதீ வ அத்தஹூ என்று ஒருவர் கூறினார், அவருக்கு எனது “ஷஃபாஅத்” (பரிந்துரை) உண்டு” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜாபிர்(ரழி), புகாரீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜ்ஜா

பொருள் : யா அல்லாஹ்! முழுமையான இவ்வழைப்பிற்கும், நிலைநாட்டப்படும் தொழுகைக்கும் உரித்தான ரட்சகனே! முஹம்மத் அவர்களுக்கு வஸீலாவென்னும், சுவர்க்கத்தின் ஆக உயர்வான பதவியையும், எல்லாரையும் விட சிறந்த அந்தஸ்தையும் கொடுத்து, அவர்களை அனைவராலும் பாராட்டப்படும் நிலையில் எழுப்புவாயாக! அது உன்னால் வாக்களிக்கப்பட்டதேயாகும். (பைஹகீ அவர்களின் அறிவிப்பின் இறுதியில் “இன்னக்கலா துக்லிஃபுல்மீஆத்” எனும் வாசகமும் சேர்ந்து காணப்படுகிறது. அதன் பொருள் நிச்சயமாக நீ வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய்)

ஸஃதுபின் அபிவக்காஸ்(ரழி) அறிவித்துள்ளார்கள் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் பாங்கு சொல்பவரின் சப்தத்தைச் செவியேற்றபோது பின்வருமாறு கூறுவாரோ, அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்:  “வஅன அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லாஷரீக்கலஹூ வஅன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ ரழீத்து பில்லாஹி ரப்பன், வபில் முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனா.

பொருள் : நானும் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை, மேலும் நிச்சயமாக முஹம்மத் அவர்கள் அவனது அடியாரும், தூதருமாவார்கள் என்று உறுதி கூறுகிறேன். அல்லாஹ்வை ரட்சகனாகவும், முஹம்மதைத் தூதராகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும் திருப்தியோடேற்றுக் கொண்டேன். முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜ்ஜா, திர்மிதீ.

கட்டை விரல்களை முத்தி கண்ணில் ஒத்திக் கொள்ளல் கண்டிக்கப்படி வேண்டியதோர் பித்அத்தாகும்!

பாங்கின் பொழுது “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று கூறப்படும்போது, “அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று நாமும் சொல்வது தான் சுன்னத்தே தவிர மாறாக ஸல்லல்லாஹு அலைக்க யாரசூலல்லாஹ்” என்றோ, அல்லது “கர்ரத் ஐனீபிக்க யாரசூலல்லாஹ் என்றோ, “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்” என்ற ஸலவாத்துகளையோ கூறுவதும், அது சமயம் கட்டை விரல்களை முத்தி, கண்களில் ஒத்திக் கொள்வதும் ஆதாரமற்ற பித்அத்தான செயல்களாகும்.

பொதுவாக நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கேட்கும்போது ஸலவாத்து கூற வேண்டுமே தவிர பாங்கு இகாமத் சொல்லும்போது அவ்விரண்டிற்காக குறிப்பிடப்பட்டுள்ள வாசகத்திற்கு மேல் அதிகமாக ஸலவாத்து, தஹ்பீஹ் முதலிய வாசகங்களை அவற்றுடன் இணைத்துச் சொல்வதும் பித்அத்தேயாகும். பாங்கு என்றால் பாங்கு மட்டும்தான் சொல்லவேண்டும். இகாமத் என்றால் அது மட்டும்தான் சொல்லப்படவேண்டும். அவ்வாறின்றி அவற்றோடு தன்னிச்சையாக எவரும் யாதொரு வாசகத்தையும் இணைத்துக் கூறுவது முறைகேடான செயலாகும்.

************************************************

துடுப்பா? இடுப்பு ஒடிவது நிச்சயம்! 

அல்அமீன், நெல்லிக்குப்பம்.

டிசம்பர் ’87 அந்நஜாத் இதழில் இடம்பெற்ற “துடுப்பு” என்ற உண்மை சம்பவம் பற்றிய கட்டுரையைப் படித்தேன், துடித்துப்போனேன். இஸ்லாத்தை இஸ்லாமாக மக்களுக்கு போதிக்க  வேண்டிய மெளலவிகள் செய்திருக்கும் திருகுதாளங்கள் மனதை அறுத்தது. “உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள், அவர்கள் திர்ஹத்திற்கோ, தீனாருக்கோ வாரிசுகள் அல்லர்” என்ற நபிமொழியை இவர்கள் மறந்தது ஏனோ? ஒருவேளை அந்த ஹதீஸில் திர்ஹம், தீனார் எனக் குறிப்பிட்ட நபி(ஸல்) அவர்கள் “ரூபாய்” என குறிப்பிடவில்லை என வாதிடப்போகிறார்களா?

ஆனால் இந்த ஆலிம்கள் தங்களை நபிகளின் வாரிசுகள் என தலைநிமிர்ந்து, நெஞ்சுயர்த்தி தங்களின் பயான்களில், சொற்பொழிவுகளில் கூறுவதை தினசரி கேட்டு வருகிறோம். இவர்களா நபிமார்களின் வாரிசுகள்? அல்லாஹ்வின் அருள்மறையிலே நபிமார்கள் கூறியதை காணுங்கள்: “என்னுடைய மக்களே! நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை: என்னுடைய கூலி என்னைப் படைத்தவனிடமேயன்றி (உங்களிடம்) இல்லை?” இவ்விதமாக நூஹ்(அலை) கூறுவதை 11:29ல் காணலாம். ஹூது(அலை) கூறியதை 11:51, 26:127 வசனங்களிலும் காணலாம். மற்ற எல்லா நபிமார்களும் தன்னை பின்பற்றுவோரிடம் எவ்வித கூலியையும் பெராமல் மார்க்கத்தை போதித்திருப்பதை பற்பல குர்ஆன் வசனங்கள் நிரூபிக்கின்றன. (6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 26:109,127,164,180, 34:47, 36:21, 38:86, 42:23, 52:40)

நபி(ஸல்) அவர்களும் அவ்விதமே வாழ்ந்திருப்பதை குர்ஆன் படம் பிடித்துக் காட்டுவதையும் பாரீர்.

“நீர் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பதில்லை” (11:104) எனவேதான் அல்லாஹ் இம்மெளலவிகள் அடிக்கடி ஓதி கூலிபெரும் யாஸீன் சூராவிலேயே, நீங்கள் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இத்தூதர்களை (அவசியம்) பின்பற்றுங்கள்: இவர்களே இறைவனால் நேர்வழியில் செலுத்தப்பட்டவர்கள் (36:20,21) என ஆணை இடுகிறான்.

நபிமார்கள் இவ்விதம் வாழ்ந்திருக்க, அவர்களின் வாரிசுகள் என தம்பட்டம் அடிக்கும் இக்கூலி மெளலவிகள் ஒரு ஜூஸ்வு ரூ.6/-  என விற்றிருப்பது வருந்தத்தக்க செயலாகும். மேலும் “குர்ஆஐன ஓதுங்கள்! அதன்மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர் ஓதுங்கள்! அதன்மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள்” என நபி(ஸ்) அவர்கள் தடுத்திருப்பது இவர்களுக்கு தெரியாதா? (ஆதாரம் : அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அஸாகிர்)

“எவர் குர்ஆனை ஓதுகிறாரோ அவர் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வரும் காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்களிடம் (ஒரு ஜூஸ்வு ரூ.6/- வீதம் முழு குர்ஆன் ரூ.180/- என கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள்: (ஆதாரம்: அஹ்மது, திர்மிதீ) என நபி(ஸல்) கூறியது இவர்களக்காகத்தானோ? என நினைக்கத் தோன்றுகிறது. இது மெளலவிகளாகிய எங்களுக்கல்ல என வாதிடப்போகிறார்களா?

எவரொருவர் என்னை ஆதரவாளனாக உறுதியாக ஏற்றுக் கொண்டாரோ,  அவர் மக்களிடம் எதனையும் (கூலியும் யாசகமாக) கேட்கமாட்டார்: அவருக்கு நான் சுவர்க்கத்தை தர பொறுப்பேற்கிறேன்” என அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவூத்) இந்த வாக்கை கேட்ட நாள் முதல் நான் எவரிடமும் எதனையும் கேட்பதை நிறுத்தி விட்டேன் என நபித்தோழர் ஸஃப்வான்(ரழி) போன்றோர் வாழ்ந்து காட்டினார். (ஆதாரம்: ரியாழுஸ் ஸாலிஹீன்)

எவரொருவர் இவ்வுலக இன்பத்தை மட்டும் நாடுகிறாரோ அவருக்கு அது மட்டும் கிட்டும். மறுமை இன்பம் கிட்டாது. ஆனால் மறுமை இன்பம் நாடுவோருக்கு இவ்வுலகமும், மறுமையும் கிட்டுமென குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு தெளிவுறுத்துவது, இந்த மெளலவிகள் கண்ணில் படவில்லயோ? ஒரு சில ரூபாய்க்காக கர்ஆனை விற்கும் இம்மார்க்க புரோகிதர்கள் இஸ்லாத்திற்கே ஒரு களங்கம்.

எவர்கள் இறைமறையில் அல்லாஹ் அருளியவைகளை மறைத்துவிட்டு, அதற்குக் கிரயமாகச் சொற்ப தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாக வயிற்றில் நெருப்பைத் தவிர மற்றெதனையும் நிரப்பிக் கொள்ளவில்லை. அன்றி மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்துப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு (மிக்க துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (குர்ஆன் : 2:174)

இந்த வசனம் முஸ்லிம்களுக்கு இல்லை: யகூதி, நஸ்ரானிகளுக்கு இறங்கியது என வாதிட்டாலும் வாதிடலாம். அல்லாஹ்வுக்கு இவர்கள் பயந்து கொள்ளட்டும். முஸ்லிம் என்ற பெயரில் யகூதிகள்,  நஸ்ரானிகள் செய்ததையே செய்து தப்பி்க்க முயற்சிக்க வேண்டாம். குர்ஆன் முழுமறை அனைவருக்கும் அருள்மறை, பொதுமறை என்பதை அறிந்துகொள்ளட்டும்.

இவ்வசனம் மூலம் அல்லாஹ்வின் அருள்மறை செய்திகளை மறைத்து சொற்ப விலைக்கு விற்பவர்கள் :

1. தங்கள் வயிற்றை நெருப்பைக் கொண்டு நிரப்புகிறார்கள்.

2. மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்.

3. அவர்களை பரிசுத்தமாக்க மாட்டான் (பாவியாய் இருப்பர்)

4. கடும் வேதனையும் காத்திருக்கிறது.

என்பன போன்ற விவரங்களை தெரிந்து கொள்கிறோம். புரிந்து கொள்கிறோம். நபிமார்களின் வாரிசுகளான இம்மெளலவிகளுக்கு இந்நிலை ஏற்படலாமா? இவர்களே அல்லாஹ்வின் கடும் கோபத்தில் இருக்கையில் இறந்தவர்களுக்கு துடுப்பு தருகிறார்களாம். தீன் வழி விளங்கி மக்கள் விழித்துவிட்டால், இவர்களது இடுப்பு ஒடியப்போவது நிச்சயம். எனவே நபி(ஸல்) அவர்கள் சொல்லித்தராத, காட்டித்தராத (பித்அத்துகள்) அனாச்சாரங்களுக்கு துணை போகாதீர்கள். குர்ஆனை விற்காதீர்கள்.

இறுதியாக ஒரு செய்தி: பற்பல அனாச்சாரங்களை கண்டிக்கும் தேவிபந்து அரபிக் கல்லூரியில்  பட்டம் பெற்றவர்கள்; இப்படி கத்தம், பாத்திஹாவுக்கு வக்காலத்து வாங்கி சட்டம் இயற்றி கொட்டம் அடித்துக் கொண்டிருப்பது வருந்தத்தக்கது, வேதனை தரக் கூடியது. கடந்த ஆண்டு இவர்கள் கூட்டிய “சுன்னத்வல்ஜமாஅத்” கூட்டத்தில் அம்மதரஸாக்களில் படித்தவர்கள் அம்மதரஸா அகீதாவிற்கு மாறாக நடந்தால் மெளலவி ஸனதுகளை பறிக்கவேண்டும், என்று தீர்மானம் போட்டனர். இவர்கள் தேவ்பந்து மதரஸா அகீதாவிற்கு முற்றிலும் மாறாக நடந்துள்ளனரே! மரியாதையாக தங்கள் ஸனதுகளை தேவ்பந்து மதரஸாவிற்கு திருப்பி தருவார்களா? உள்ளொன்றும், வெளியொன்றுமாக இரட்டை வேடமிடும் இவர்கள் செய்யும் வேலையை மக்களே புரிந்துகொள்ளுங்கள்.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இவர்கள் உலக ஆதாயம் தேடி குர்ஆனைக் கற்றுக் கொள்கிறார்கள் அல்லவா? இவர்களை முறியடிக்க, நபி(ஸல்) அவர்களின் போதனைப்படி நாம் அனைவரும் குர்ஆனை நேரடியாகக் கற்றுக் கொள்வோம். அந்த ஹதீஸ் வருமாறு:

அபூஸயீதுல் குத்ரீ(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறி நான் கேட்டிருக்கிறேன். உலக ஆதாயும் தேடி குர்ஆனைக் கற்பவர்கள் அதைக் கற்பித்து முன்பே, நீங்கள் குர்ஆனைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தையடைய முற்பட்டு விடுங்கள். ஏனெனில் குர்ஆனைக் கற்போரில் மூன்று பிரிவினர் உண்டு.

1. பெருமைக்காகக் கற்பவர்.

2. பிழைப்பிற்காகக் கற்பவர்.

3. அல்லாஹ்விற்காகக் கற்பவர் (அஹ்மத்)

யா அல்லாஹ்! இந்த மெளலவிகளக்கு குர்ஆன், ஹதீஸ் வழியில் வாழ தவ்ஃபீக் தருவாயாக! அவர்களை உண்மையான தீனுடைய அழைப்பாளர்களாக ஆக்கி வைப்பாயாக! ஆமீன்!

********************************************

நாங்கள் சொல்வதென்ன?

நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை !

நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஸலவாத் சொல்லச் சொல்கிறோம் !

நபித்தோழர்களை நாங்கள் குறை கூறவில்லை !

இந்த உம்மத்திலேயே அவர்கள் தான் சிறந்தவர்கள் என்கிறோம் !

இமாம்களை நாங்கள் இகழவில்லை !

அவர்களைத் தக்லீது (கண்மூடிப் பின்பற்றல்) செய்வதையும், அவர்கள் பெயரால் சொல்லப்படும் பொய்களையும் மறுக்கிறோம் !

அவ்லீயாக்களை நாங்கள் பழிக்கவில்லை !

அவர்களை அல்லாஹ்வுக்கு, இடைத் தரகர்களாக்குவதையும், அவர்கள் பெயர்களால் நடத்தப்பப்படும் அனாச்சாரங்களையும் ஆகாது என்கிறோம் !

ஆலிம்களை நாங்கள் அவமதிக்கவில்லை !

அவர்கள் புரோகிதர்களாகவும், தரகர்களாகவும் மாறி சமுதாயத்தைக் கூறுபோட்டுச் சுரண்டுவதை கண்டிக்கிறோம் !

ஆலிம்கள் தேவையில்லை என்று நாங்கள் சொல்லவில்லை !

மதரஸா சென்று வந்தவர்கள் மட்டும் ஆலிம்களல்லர் :

குர்ஆன், ஹதீதுகளை விளங்கி நடப்பவர்கள் அனைவரும் ஆலிம்களே !

ஆக முஸ்லிம்கள் அனைவரும் ஆலிம்களாக ஆகவேண்டும் என்கிறோம் !

யாரையும் தக்லீது செய்யாதீர்கள். அந்நஜாத்தையும் தக்லீது செய்யாதீர்கள். அந்நஜாத்தில் வருபவற்றைக் குர்ஆன், ஹதீதுகளோடு சரிபார்த்து விளங்கிப் பின்பற்ற வேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம்.

****************************************
இது தான் சமாதான வழியா?

இப்னு ஹத்தாது

அந்நஜாத் டிச’ 87 இதழில் மன்ஹும் யாரஸுலல்லாஹ் என்றே கேட்கப்பட்டது என்று எழுதி இருப்பது தவறு. மாறாக மன்ஹிய (அது எது?) என்றே கேட்கப்பட்டது என்று காதியானிகள் தங்கள் இதழில் விளக்கம் கொடுத்து, தனிப்பெயர் வைத்துக் கொள்வதையும் நியாயப்படுத்தி எழுதியுள்ளார்கள்.

தங்களின் இலக்கண அறிவைப் பயன்படுத்தி மக்களை வழிகேட்டில் இழுத்துச் செல்வதில் கை தேர்ந்தவர்கள் காதியானிகள். அவர்கள் சந்தப்பவாதிகளே; சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு தங்கள் நிலையை மாற்றிக் கொள்வார்கள். முஹம்மத் உமர் க்ஷி.பு. 1-5-1986-ல் வெளியிட்ட இமாம் மஹ்தி பற்றிய அண்ணல் மாநபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள் என்ற பிரசுரத்தின் 7-ம் பக்கம் நாம் மொழி பெயர்த்தது போல் தான் அவர்களும், “அவர்கள் (அந்த ஒரே பிரிவு) யார்? ” என்றே மொழி பெயர்த்துள்ளனர். அதே போல் 1889 லிருந்து சமீபகாலம் வரை நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்கள் வரமுடியும் என்று வாதிட்டு வந்தவர்கள். இப்போது மிர்சா குலாமுக்குப்பிறகு நபி வர முடியாது என்று வாதிட ஆரம்பித்துள்ளனர். இதை அவர்களின் சமாதான வழி ஆகஸ்ட் 1986 இதழி பக்கம் 15-ல் பார்க்கலாம்.

ஆழ்ந்து சிந்திப்பவர்கள் அவர்களின் போலித்தனத்தை அறிந்து கொள்ள முடியும். அது எது? என்றால் மாஹிய என்றே கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் கூற்றுப்படியே மன்ஹிய என்று ஒப்புக் கொண்டாலும், அந்தக் கூட்டத்தார் யார்? என்று பொருள் கொள்ள முடியுமே அல்லாமல் அது எது? என்று பொருள் கொள்வது அறிவுடையமையாகாது. ஒரு வாதத்திற்கே அது எது? என்று வைத்துக் கொண்டாலும் பிரிவுப் பெயர் வைப்பதற்கு அனுமதி இல்லை என்பதையே அது ஊர்ஜிதம் செய்கிறது. அப்படி அனுமதி இருந்திருந்தால், அந்தப் பிரிவு எது? (அவர்கள் கூற்றுப்படி) என்று கேட்ட இடத்தில் அந்தப்பிரிவின் பெயரையும், செயல்களையும் நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டி இருபார்கள்.

“அப்படி ஒரு பிரிவார் இருந்தால் அவர்கள் தம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட தமக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளவே வேண்டும் என்பது தெளிவாகிறது” என்று காதியானிகள் தங்கள் பத்திரிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவர்களின் இந்த கூற்றுப்படி நபி(ஸல்) அவர்களது காலத்திலிருந்து மிர்சா குலாம் காலம் வரை (1989வரை) அப்படியயாரு வெற்றி பெறும் கூட்டத்தார் இருக்கவில்லை, அதனால் பெயரிடப்படவில்லை என்று கூறுகிறார்களா?

இந்த எண்ணம் ஒரு முஸ்லிமை எங்கே கொண்டு போய் சேர்க்கும்? அன்று முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டவர்கள் அனைவரும் வெற்றிபெறும் கூட்டத்தினரே, அதனால் தனிப்பெயர் சூட்டவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சொல்லியும் அவர்களால் தப்பிக்க முடியாது. அன்றும் குறை´களிலும், யூதர்களிலும், நஸரானிகளிலும் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு பச்சை முனாபிக்குகள் பலர் இருந்தனர் என்பதற்கு பல குர்ஆன் வசனங்கள், ஹதீதுகள் ஆதாரங்களாக இருக்கின்றன.

உண்மையில் எல்லாக் காலங்களிலும் வெற்றி பெறும் கூட்டத்தாரும் இருப்பார்கள். வழிகேடர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அதே போல் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தில் நேர்வழி நடக்கும் ஒரு கூட்டமும், வழிகேட்டில் செல்லும் 72 கூட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியானால் நேர்வழி நடக்கும் கூட்டம் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை ஒரே பெயரில் தான் இருக்கமுடியும் அன்று ஒரு பெயர்; இன்று ஒரு பெயர் என்பது அறிவுக்கே பொருந்தாத ஒரு வாதமாகும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் “முஸ்லிம்” அல்லாத ஒரு பெயர் இருப்பது சாத்தியமே இல்லை; எந்தப் பெயரைச் சொன்னாலும் நிச்சயமாக அது நபி(ஸல்) அவர்களது காலத்திற்குப்பின் ஏற்பட்ட பெயராகவே இருக்கும். குறிப்பாக அஹ்மதியா இயக்கம் 1889-ல் தான் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒன்றே அஹ்மதியா இயக்கம் நேர்வழி நடக்கும் கூட்டம் அல்ல என்பதற்கு போதிய சான்றாகும்.

மேலும் காதியானிகள் தங்களை அஹ்மதிகள் என்று சொல்லிக் கொள்வதிலும் அஹ்மதியா தரீக்கா என்று சொல்லிக் கொள்வதிலும் பச்சைப் பொய்யர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குறிப்பிடும் அஹ்மது என்ற பெயர் நபிமுஹம்மது (ஸல்) அவர்களையும், அஹ்மதி யா தரீக்கா நபி(ஸல்) அவர்களின் தரீக்காவையுமே குறிக்க முடியும் மிர்சா குலாம் பிறப்பதற்கு முன்பே இப்பெயர் வழக்கத்தில் இருந்திருப்பதும், நபி(ஸல்) அவர்களுக்கு அஹ்மது என்ற பெயரும் உண்டு என்று புகாரீ, முஸ்லீம், அஹ்மது, ஹாக்கீம், அபூநயீம், பைஹகி போன்ற நூல்களில் காணப்படும் ஹதீஸும் இதற்குச் சரியான ஆதாரங்களாக இருக்கின்றன. அந்த நபருடைய பெயர் மிர்சா குலாம் அஹ்மது. மிர்சா குடும்பப் பெயர். குலாம் அஹ்மது அவருக்குப் பெற்றோரால் இடப்பட்ட பெயர். அதாவது அஹ்மதின் வேலையான் என்ற பொருளைத் தரும் உண்மையிலேயே அஹ்மது என்ற பெயரை உடைய இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்களே, குர்ஆனில் அஹ்மது என்று குறிப்பிடுவது என்னையேயாகும் என்று வாதிட்டதில்லை. அஹ்மது என்று பெயரிடப்பட்ட வேறுயாரும் வாதிட்டதாகவும் இல்லை.

இந்த நிலையில் குலாம் அஹ்மது தன்னை அஹ்மது என்று சொல்லிக் கொள்வதும், குர்ஆனில் அஹ்மது என்று என்னையே சொல்லப்படுகிறது என்று சொல்வதும் எவ்வளவு பெரிய பொய் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

அல்குர்ஆன் :19:30-ல் குழந்தையாக இருந்த இப்னுமர்யம் அவர்கள் “நான் அப்துல்லாஹ்” என்று அதிசயமாகப் பேசி இருப்பதை ஆதாரமாகக் காட்டி , இன்று அப்துல்லாஹ் என்ற பெயரை உடையவன், நானே அந்த இப்னுமர்யம் என்று வாதிட்டால் அது எவ்வளவு பெரிய அறிவீனமான வாதமோ, அதைவிட அறிவீனமான ஒரு வாதமே, குலாம் அஹ்மது தன்னை அஹ்மது என்று சொல்லிக் கொள்வதும், தானே எதிர்பார்க்கப்பட்ட இப்னுமர்யம் என்று சொல்லிக் கொள்வதும் ஆகும். இந்த வாதத்தை காதியானிகள் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்வது அதைவிட அறிவீனமாகும்.

அஹ்மது என்பது நபி(ஸல்) அவர்களின் பெயராக இருந்தாலும் , அஹ்மதியா தரீக்கா நபி முஹம்மது(ஸல்) அவர்களின் தரீக்காவையே குறித்தாலும், நபி (ஸல்) அவர்கள் நம்மை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்ளவே கற்றுத் தந்துள்ளார்கள். அஹ்மதியா தரீக்காவினர் என்றோ, அஹ்மதியா இயக்கத்தினர் என்றோ, அழைத்துக்கொள்ள நமக்கு கற்றுத் தரவில்லை. மேலும் உண்மையான இப்னுமர்யம் தனக்கென ஒரு இயக்கம் அமைத்துக் கொள்வார் என்று நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்ததாக ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் இல்லை. மிர்சாகுலாம் தனக்கென ஒரு தனி இயக்கம் அமைத்துக் கொண்டதே உண்மையான இப்னுமர்யம் , இவர் அல்ல; சுபுஹுக்கு முன்னால் தோன்றும் மெய் வெள்ளைக்கு முன்தோன்றும் பொய் வெள்ளையைப் போல், உண்மையான இப்னுமர்யம் இறங்குவதற்கு முன் முளைத்துள்ளபொய் இப்னுமர்யம் என்பது தெளிவாகின்றது குன்யத்துப் பெயரான இப்னுமர்யம் வேறொருவரை ஒரு போதும் குறிக்காது.

அவர்கள் தங்கள் இதழில் வெளியிட்டுள்ள வஹி பற்றிய விளக்கங்கள், மற்றும் பல முறைகேடான விளக்கங்கள் உட்பட, காதியானிகள் எடுத்து வைக்கும் எல்லா முடக்கு வாதங்களுக்கும், “காதியானிகளின் ஆகாசப் புளுகு ” என்ற நூலில் ஆதாரங்களுடன் பதில் தருவோம்.

(இன்ஷா அல்லாஹ்)

********************************************

உண்மை பொய் ஆகியவற்றின் நிலை!

நீங்கள் எப்பொழுதும் உண்மை பேசுவதில் நிலைத்திருங்கள். ஏனெனில் நிச்சயமாக உண்மை (உங்களை) நன்மையின் பக்கம் சேர்க்கும். நிச்சயமாக நன்மை (உங்களை) சுவர்க்கத்தின்பால் சேர்த்துவிடும். ஒருவர் சதா உண்மையே பேசி உண்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேயிருப்பார். அதன் பயனாக அவர் அல்லாஹ்விடம் “ஸித்தீக் ”என்னும்” மிக்க நேர்மையாளர் ” என்று பதிவு செய்யப்பட்டு விடுவார்.

பொய்யைக் கைவிடுங்கள் ! ஏனெனில் நிச்சயமாகப் பொய்யானது (உங்களை) தீமையின் பக்கம் சேர்க்கும். நிச்சயமாகத் தீமை (உங்களை) நரகத்தின்பால் சேர்த்துவிடும். ஒருவர் சதா பொய்யையே பேசி, பொய்யைத் தேர்ந்தெடுத்துக் கொண்டே இருப்பார். அதன் விளைவாக அவர் அல்லாஹ்விடம் “”கத்தாபு ” என்னும் மிக்கப் பொய்யாளன் என பதிவு செய்யப்பட்ட விடுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரழி) ; புகாரீ, முஸ்லிம்.

********************************************************

ஐயமும் தெளிவும்

ஐயம் : 1. ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்கு (தானே) பொறுப்பாளியாக இருக்கிறான். (52:21)

2. அணுவளவு நன்மை செய்தோர் அதன் பலனைக் கண்டு கொள்வர்; அணுவளவு தீமை செய்தோர் அதன் கேட்டையும் கண்டு கொள்வர் (99:7,8) உங்களுக்கு அவனை (அல்லாஹ்வை) அன்றி உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ வேறுயாருமில்லை நீங்கள் (இதனை) சிந்திக்க வேண்டாமா? (32:4)

3. எச்சுமையாளனும் (தனது சுமையை அன்றி) மற்றெவரின் சுமையையும் சுமந்து கொள்ளமாட்டான் (53:38).

இக்கருத்து குர்ஆனின் பல வசனங்களில் இடம்பெற்றுள்ளது. வி­யம் இவ்வாறிருக்க ஒருவர் மற்றொருவரின் பாவ மன்னிப்புக்காக அல்லது அவர் உயர் பதவி அடைய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடம் துஆ செய்வதில் என்ன அர்த்தமிருக்கிறது? இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு அவர் செய்த பாவத்திற்கு இவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தால், அவர் தாம் செய்த பாவத்திற்குரிய தண்டனையை அவர் எப்படி அனுபவிப்பது? தக்க ஆதாரத்துடன் இச்சந்தேகத்தைத் தெளிவுபடுத்துக!   யூசுப் மரைக்காயர், திருவனந்தபுரம்.

தெளிவு : 1. பின்னர் “”அவர்கள் எங்கள் ரட்சகனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்களின் சகோதரர்களுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக! அன்றி ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் பகையை ஆக்கா திருப்பாயாக! நீயோ மிக்க இரக்கமுள்ளவனும், கிருபைமிக்கவனுமாவாய் ” என்று கூறுவார்கள். (59:10)

2. நபியே நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை என்று உறுதியாக நம்புவீராக! மேலும் உம்முடைய பாவத்திற்காகவும், மூமின்களாகிய ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (எம்மிடம்) பாவமன்னிப்புத் தேடுவீராக !(47:19)

3. அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சூழ்ந்துள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்கிறார்கள்; அவனை விசுவாசிக்கிறார்கள், ஈமான் கொண்டோரின் பாவங்களை மன்னிக்கும்படியும் கோருகிறார்கள். எங்கள் ரட்சகனே! நீ (உனது) ஞானத்தாலும் கருணையாலும், யாவையும் சூழ்ந்திருக்கிறாய், எனவே பாவமன்னிப்புத்தேடி உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னித்தருள்வாயாக! (40:7)

4. எனது ரட்சகனே! நான் சிறுபிள்ளçயாயிருக்கும் போது, என் பெற்றோர் என்னைக் கிருபையாய் வளர்த்தது போன்று, அவ்விருவருக்கும் நீ கிருபை செய்தருள்வாயாக! (17: 24)

தாங்கள் குறிப்பிட்டுள்ள திருவசனங்களில் காணப்படுவது போல் ஒவ்வொரு நபரும் தாம் செய்த நன்மை தீமையின் லாப, நஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை ஏனெனில் அது, அல்லாஹ்வின் எச்சரிக்கை. வல்ல அல்லாஹ் பாவிகளுக்கு அவ்வாறு எச்சரிக்கை விடுத்ததன் பின்ன; அவர்கள் மீது கருணை கூர்ந்து அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பபடுவதற்கான பரிகாரங்களையும் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறியிருப்பதால் அவற்றையும் கவனித்தே நாம் ஓர் முடிவுக்கு வரமுடியும்.

அல்லாஹ் பாவிகளைத் தண்டிப்பதாகக் கூறிவிட்டால் அவர்களை அவன் தண்டித்தே தீரவேண்டும் என்பதல்ல; அவன் அவர்களை மன்னிக்கவும் செய்யலாம். ஏனெனில், அவன் செய்வது பற்றி கேட்பதற்கு எவருக்கு அதிகாரமில்லை; அவனோ அனைவரைப் பற்றியும் கேட்கும் அதிகாரமுள்ளவனாகும். அவன் தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரைத் தண்டிப்பான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாகும். (2:284)

ஆகவே மேற்காணும் திருவசனங்களின் மூலம் ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம் சகோதரருக்கு பாவமன்னிப்புத் தேடலாம் என்பது மட்டுமின்றி பாவமன்னிப்புத் தேட வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.

அல்லாஹ் குறிப்பாக தனது நபி அவர்களுக்கு உமது தவறுக்கு நீர் பாவமன்னிப்புத் தேடுவதுடன், உம்மைப் பின்பற்றி மூமினாகிய ஆண், பெண் அனைவருக்காகவும் பாவமன்னிப்புத் தேடுவீராக! என்று உபதேசிப்பதன் மூலம் பொதுவாக அனைத்து மூமின்களும் பிற மூமின்களுக்கு பாவமன்னிப்புத் தேடுவது அவசியம் என்பதை உணர்த்துகிறான்.

கிருபையுள்ள ரஹ்மான் பாவியாகி விட்ட தனது அடியார் மீது கொண்டுள்ள அளவிலாக் கருணையினால், மீண்டும் அவர்களை நல்லவர்களாக தனக்கு உவந்தவர்களாக ஆக்கும் பொருட்டே ஒரு மூமினைப் பிற மூமினுக்கும், நபியைத் தமது உம்மத்துக்கும் பாவமன்னிப்புத் தேடும்படி பணித்துள்ளான்.

அது மட்டுமின்றி, தனது மலாயிகத்துமார்களையும் கூட மூமின்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவதற்கும், நல்ல துஆ செய்வதற்கும் நியமித்துள்ளான் என்பதை திருகுர்ஆன் (40:7) வசனத்தில் பார்க்கிறோம்.

இம்மகத்தான சலுகைகள் அனைத்தும் இறை விசுவாசிகளான மூமின்களுக்கு மட்டுமே இறையருளால் அருளப்பட்டிருக்கின்றன. “முஷ்ரிக்குகள் (இணைவைத்து வணங்குபவர்) தமது நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்பது தெளிவான அதன் பின்னர் அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் முறையல்ல.” (9: 113)

இவ்வசனத்தின் மூலம் ஒரு மூமினாகியவர் இணைவைத்து வணங்கு பவர்களுக்கு எக்காரணத்தை முன்னிட்டும் பாவமன்னிப்புத் தேடுவது (ஹராம்) கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஐயம்: இடது கையால் உண்ணவோ பருகவோ கூடாது என்பதற்கும், பிஸ்மில்லாஹ் சொல்லித்தான் எதையும் சாப்பிட வேண்டும் என்பதற்கும் ஹதீஸின் வாயிலாக ஆதாரம் உண்டா?   ஹைதர் அலி, இளங்காகுறிச்சி.

தெளிவு : உங்களில் எவரும் தமது இடது கையால் உண்ணவோ, குடிக்கவோ செய்யாதீர். ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் தனது இடது கையால் உண்ணவும் குடிக்கவும் செய்கிறான். இப்னு உமர் (ரழி) (முஸ்லிம்) அன்னை உம்மு ஸலமா (ரழி) அவர்களின் முந்தைய கணவர் அபூஸலமா அவர்களின் மகன் உமர்(ரழி) என்பவர் அறிவித்துள்ளார்; நான் நபி(ஸல்) அவர்களின் மேற்பார்வையில் அவர்களிடம் இருந்து வந்தபோது, (ஒருமுறை சாப்பிடும் போது) எனது கை சாப்பாட்டுப் பாத்திரத்தில் எல்லாப்பக்கங்களிலும் சுழன்று வருவதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, குழந்தாய்! பிஸ்மில்லாஹ் சொல்லி, உமக்கு அருகில் இருப்பதை உமது வலது கையால் சாப்பிடும் என்றார்கள். உமரு பின் அபிஸலாமா (ரழி), (புகாரீ, முஸ்லிம்) ஸலமத்துபின் அக்வஉ (ரழி) அறிவிக்கிறார்கள் : நபி(ஸல்) அவர்களின் அருகில் ஒருவர் தனது இடக்கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உமது வலக்கையால் சாப்பிடும் என்றார்கள். அதற்கவர் (தனது ஆணவத்தால் வலக்கையால்) சாப்பிட முடியாது என்றார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் “”உனக்கு (வலக்கையால்) சாப்பிட முடியாது” என்று கூறிவிட்டு இவரது ஆணவத்தைத் தவிர வேறு எதுவும் நான் கூறியதை அவர் செய்வதற்குத் தடையாக இருக்கவில்லை என்றார்கள். பின்னர் அவர் வலக்கையை அவரது வாய்க்கு உயர்த்தவே இல்லை (அந்நிலையில் செயலற்றுப் போய்விட்டது). (முஸ்லிம்).

ஐயம்: அல்லாஹ்வின் வீட்டை (பள்ளிவாசலை) பரிபாலனம் செய்யக் கூடியவர்களுக்கு என்ன தகுதிகள் வேண்டும்? குர்ஆனில் விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நூருத்தீன் , தோப்புத்துறை

தெளிவு : அல்லாஹ்வின் வீட்டை (பள்ளிவாசலை) பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான கொண்டு, தொழுகையைக் கடைபிடித்து, ஜகாத்தை முறையாக கொடுத்து, அல்லாஹ் அல்லாத மற்றெவருக்கும் அஞ்சாதவர்கள் தாம்; இத்தகையவர் தாம் நேர்வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள் (9:18) மேற்காணும் ஐந்து அம்சங்களும் உடைய நல்லவரே இறை இல்லங்களைப் பரிபாலனம் செய்ய தகுதி படைத்தோராவார்.

ஐயம் : உலகில் சிலரேனும் முழுமையாக குர்ஆன், ஹதீஸின் ஏவல் விலக்கல்களை ஏற்று எப்பாவமும் செய்யாது பூரணமாக வாழமுடியுமா? வாழ்ந்திருக்கிறார்களா? விளக்கம் தேவை.  இமாம் அலி, கும்பகோணம்.

தெளிவு : முறைப்படி வாழ முடியுமா? வாழ்ந்திருக்கிறார்களா? என்று தாங்கள் கேட்பதைப் பார்த்தால் அவ்வாறு வாழ்வதற்கு சாத்தியக் கூற இல்லை என்று கூறுவீர் போல் தெரிகிறதே! அவ்வாறு மனிதரால் சாத்தியமில்லாதவை எவற்றையும் வல்ல நாயன் நம்மீது கடமையாக்கவில்லை. “இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை ” (22:78)

அல்லாஹ் யாதோர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை (2:286)

இவ்வாறு வல்ல அல்லாஹ் மார்க்கத்தை அனைவரும் அனுஷ்டிப்பதற்கு ஏதுவான வகையில் இலகுவாக அமைத்துத் தந்திருப்பதாக கூறியிருக்கும் போது முழுமையாக முறைப்படி ­ரீஅத்தைப் பின்பற்றி வாழ முடியுமா? வாழ்ந்திருக்கிறார்களா என்ற தங்களின் கேள்வி வியப்பை அளிக்கிறது. ­ரீஅத்தின் நெறி பிறழாது நேர்மையாக தாம் நடப்பதுடன், மற்றவர்களையும் அவ்வாறு நடக்க பெருமுயற்சிகள் செய்து கொண்டிருக்கும் ஓர் கூட்டம் இவ்வுவலகம் முடியும் வரை இருந்து கொண்டிருக்கும் என்று நபி(ஸல்) அவர்களின் ஹதீஸின் வாயிலாக காணுகிறோம்.

“இறுதி நாள் என்னம் இறைவனின் கட்டளை வரும் வரை எனது சமுதாயத்தில் ஓர் கூட்டத்தார் (சத்தியத்தை நிலை நாட்டும் வகையில்) மேலோங்கியவராக இருந்து கொண்டேயிருப்பர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முகீரத்துபின் ஷிஃபா (ரழி) (புகாரீ)

ஐயம் : பாங்கு இகாமத்து எந்த ஆண்டில் அமுலுக்கு வந்தது விளக்கம் தேவை.  முஹம்மது இத்ரீஸ், திருச்சி – 2

தெளிவு : பாங்கு ஹுஜ்ரீ முதல் ஆண்டில் அமுலுக்கு வந்தது! அமுலாக்கப்பட்டதன் நோக்கம்: அப்துல்லாஹ்பின் உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள்: முஸ்லிம்கள் மதீனாவுக்கு வந்த போது, தொழுகைக்காக, ஒரு நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டு,, அதில் அனைவரும் கூடுவர் அதற்காக அழைப்புக் கொடுப்பதற்குரிய ஏற்பாடு எதுவுமில்லாதிருந்தது. ஒரு நாள் அதுபற்றி தம்மிடையே பேசத் துவங்கினர்; அவர்களில் ஒருவர் “கிறிஸ்தவர்களின் மணியைப் போன்று, ஒரு மணியைத் தயாரித்துக் கொள்ளுங்கள்” என்றார்; மற்றொருவர் “யூதர்கள் கொம்பு ஊதுவது போன்று, ஒரு கொம்பைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.” என்றார் அப்போது உமர் (ரழி) அவர்கள் “தொழுகைக்கு அழைக்கும் ஒரு அழைப்பாளரை அனுப்பி வையுங்கள் ” என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், (உமர் (ரழி) அவர்களின் அவ்வபிப்பிராயத்தை சரிகண்டு) “பிலாலே! நீர் எழுந்து (மக்கள்) தொழ வருவதற்கு அழைப்புக் கொடுப்பீராக? ” என்றார்கள்! இப்னு உமர் (ரழி) ; (புகாரீ, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ)

ஐயம் : மனிதர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் நபியாக இருப்பதுபோல் ஜின் கூட்டத்தாருக்கு நபிகள் உண்டா? விளக்கம் தேவை. A R. அப்துல் மாலிக், திருமானூர்.

தெளிவு : ஜின் கூட்டத்தாருக்கு அவர்களின் இனத்தைச் சார்ந்த நபி மார்கள் அனுப்பப்பட்டிருப்பதாக குர்ஆன், ஹதீஸின் வாயிலாக எவ்வாதாரமும் கிடையாது. ஆனால் மனித இனத்திலிருந்தே ரசூல்மார்களும் நபிமார்களும் அனுப்பப்பட்டுள்ளனர் என்பதை பின்வரும் திருவசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

(நபியே!) உமக்கு முன்னரும் மனிதர்களையே அன்றி (மற்றெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை (21:7)

நிச்சயமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம். மேலும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத் (நபித்துவத்)தையும் வேதத்தையும் ஏற்படுத்தினோம். (57:26)

ஜின் வர்க்கத்தில் நபிமார்கள் நியமிக்கப்படாதிருப்பினும் ஜின் கூட்டத்தார் அவ்வப்போது வாழ்ந்து வந்த நபிமார்களைச் சந்தித்து வி­யங்களைத் தெரிந்து, தமது ஜின் கூட்டத்தாரிடம் அவ்வி­யங்களைக் கூறி அவர்களை எச்சரித்திருப்பதன் காரணத்தால், திருகுர்ஆன் ஜின்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோர் இருந்திருக்கின்றனர் என்பதை பின்வருமாறு தெளிவுபடுத்துகிறது.

“(நபியே) ! இந்த குர்ஆனை செவியேற்கும் பொருட்டு ஜின்களில் சிலரை நாம் உம்மிடம் வருமாறு செய்தோம் ; அவர்கள் அங்கு வந்தபோது (தங்கள் இனத்தாரை நோக்கி) “நீங்கள் வாய் பொத்தி இதனைக் கேட்டுக் கொண்டு இருங்கள் ” என்று கூறினார்கள். (அது) ஓதி முடிவு பெறவே தங்கள் இனத்தாரிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.”

“எங்கள் இனத்தவரே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டுள்ளது. (அது) தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் வழிகாட்டுகிறது ”

“எங்கள் இனத்தாரே! அல்லாஹ்வின்பால் அழைப்பவருக்கு பதில் கூறி, அவரை விசிவாசியுங்கள் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு அல்லாஹ் மன்னித்து துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காத்துக் கொள்வான் ” (46:29-31)

ஐயம் : திருகுர்ஆனில் (24:13ல்) அவதூறு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் 4 சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் என்றும் (2:282)ல் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்டவைகளுக்கு 2 சாட்கிகள் அவசியம் என்றும் கூறப்பட்டிருக்கிறது, அந்த சாட்சிகள் முஸ்லிம்களாகத்தான் இருக்கவேண்டுமா? அல்லாதவர்களும் இருக்க இடம்பாடு இருக்கிறதா?  A.D. அப்துல் லத்தீஃப் – மதீ²நகர், சிக்கல்.

தெளிவு: திருகுர்ஆனி (2:13)ல் உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கி கொள்ளுங்கள். ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால் சாட்சிகளில் நீங்கள் பொருந்தக் கூடியவர்களிலிருந்து (நம்பிக்கை, நாணயமுள்ள) ஆடவர் ஒருவரையும், பெண்களில் இருவரையும் சாட்சிகளாக நியமித்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டிருப்பதால் சாட்சிகள் முஸ்லிம்களாக இருக்கவேண்டும் என்பது மட்டுமின்றி அவர்கள் முறையான நம்பிக்கை நாணயமும் உள்ளவர்களாயிருத்தல் வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.

ஐயம் : ஒருவர் தும்மினால் அல்லது கொட்டாவி விட்டால் எதுவும் சொல்லவேண்டும் என்பதற்கு ஹதீஸின் வாயிலாக விளக்கம் தேவை.
ஹாஜா மொய்தீன், ஆழ்வார் திருநகரி.

தெளிவு : அபுஹுரைரா (ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தும்மினால் அதற்காக அவர் “”அல்ஹம்துலில்லாஹ் ” (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூற வேண்டும். (அதைச் செவியுறும்) மற்றவர் அவருக்கு யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உமக்கு ரஹ்மத் செய்வானாக) என்று கூற வேண்டும் அதற்கு “”யர்ஹமுகல்லாஹ் ” என்பதை செவியுற்ற தும்மியவர் யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலக்கும்” (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டி உங்கள் நிலைமையை சீர்படுத்துவானாக!) என்று கூறவேண்டும். (புகாரீ) ( இமாம் தீர்மதீ, அபூதாவூத் ஆகியோரின் அறிவிப்பின்படி “”யஃபிருல்லாஹு லீவலக்கும் ” என்று தும்மியவர் மற்றவர் தனக்கு “”யர்ஹமுகல்லாஹ் ” என்று கூறியவுடன் சொல்ல வேண்டும் என்றும் உள்ளது.

பொருள்: அல்லாஹ் என்னையும், உங்களையும் மன்னிப்பானாக! அபூஸயீதுல் குத்ரீ (ரழி) அறிவித்துள்ளார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் ஒருவர் கொட்டாவி விட நேர்ந்தால் தமது கையைத் தமது வாயின் மீது வைத்து (அதை) அடக்கிக் கொள்வாராக! ஏனெனில் நிச்சயமாக ஷைத்தான் (அப்பொழுதுவாயில்) நுழைகிறான். (முஸ்லிம்) எனவே ஹதீஸ்களின் வாயிலாக இயலுமான அளவு கொட்டாவி வருவதை அடக்கிக் கொளவதற்காக முயற்சி செய்ய வேண்டும். என்று தான் கூறப்பட்டிருக்கிறதே தவிர அதற்காக “” அஊது பில்லாஹிமினஷ் ஷைத்தானிர் ரஜீம்” என்று கூறவேண்டும் என்பதாக காணப்படவில்லை. வாயில் கையைவைத்து கொட்டவியைத் தடுத்து கொள்ள வேண்டும் எனறு கூறிய “” நபி (ஸல்) அவர்கள் தாம் தும்மினால் தமது கையை அல்லது ஆடையைக் கொண்டோ முகத்தை மூடிக்கொள்வார்கள்” என்று அபூஹுரைரா(ரழி) அறிவித்துள்ளார்கள். (திர்மதீ, அபூதாவூத்)

ஐயம்: நபி(ஸல்) அவர்கள் தமது பர்லான தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்தவுடன் என்ன ஓதி வந்தார்கள், அவர்கள் ஓதி வந்த அவ்வாசகங்களோடு நாமாக எதனையும் இணைத்து ஓதுவதற்கு மார்க்கமுண்டா?   ஸர்புத்தீன், பம்பாய்.

தெளிவு : ஸவ்பான் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்:

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைவிட்டு (ஸலாம் கொடுத்து) திரும்பிவிட்டால் மும்முறை “அஸ்தஃபிருல்லலாஹ்” என்று (கூறி) “இஸ்திஃபார் ”பாவமன்னிப்புத் தேடுவார்கள். (அத்துடன்) “அல்லாஹுமம் அன்த்தஸ்ஸலாம்- வமின்கஸ்ஸலாம் தபாரக்த்தயாதல்ஜலாலிவல் இக்ராம் ” என்றும் ஓதுவார்கள். முஸ்லிம், திர்மதீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத்.

பொருள் : யா அல்லாஹ் நீயே காப்பாற்றக் கூடியவன் உன்னிடமே அனைத்துப் பாதுகாப்புமுள்ளன. கண்ணியமும், மகத்துவமுள்ளவனாகிய நீயே மிக்க மேலானவனாகும்.

மேற்காணும் ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் தொழுது ஸலாம் கொடுத்தவுடன் “அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன் ” என்ற பொருளைக் கொண்டுள்ள “அஸ்தஃபிருல்லாஹ் ” எனும் வாசகத்தை மும்முறை கூறிவிட்டு அதன்பிறகு அல்லாஹுமம் அன்த்தஸ் ஸலாம்…… இறுதிவரை அவர்கள் ஓதியிருப்பதாக ஸஹீஹான ஹதீஸில் காணப்படுவதால் இவ்வாறு ஓதுவது தான் நமக்கு மார்க்கமாக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்த அதே அசல் அமைப்பில் (சிறிதும் கூட்டாது குறைக்காது) ஓதுவதுதான் சுன்னத்து அதன் அருமை உணர்ந்தவர்களே அன்றி வேறு யாரும் அதில் கவனம் செலுத்த மாட்டார்கள். பட்டம் பெற்ற மவ்லவிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத்துக்குக் கற்றுத் தந்து விட்டுச் சென்ற அப்புனிதமான வாசகங்களோடு அதன் அசல் அமைப்பைச் சீர் குலைந்து, எவ்வாதாரமுமின்றி தான் தோன்றித்தனமாக பல வாசகங்களை இணைத்து ஓதுவதைத் தான் இன்றைய நடைமுறையில் மக்களால் பார்க்க முடிகிறது அசல் அமைப்பு மாறாமல் ஓதுவோர் மிக மிகக் குறைவு.

பிறர் அத்துடன் தவறாக இணைத்தோதும் வாசகங்கள் அல்லாஹுமம் அன்த்தஸ்ஸலாம் வமின்கஸ்ஸலாம் வஇலைக்க யர்ஜி உஸ்ஸலாம், ஃபஹய்யினா ரப்பனா பிஸ்ஸலாம் வஅத்கில்னா பிரஹ் மத்திக்க யாரப்ப தாரக்க தாரஸ்ஸலாம் தபாரக்த்த ரப்பனாவக ஆலைத்த வத அழ்ழம்த்த யாதல் ஜலாலி வல் இக்ராம்.

சிறுவர் முதல் முதியோர்வரை எல்லாரும் இலகுவாக மனனம் செய்து தொழுதவுடன் சிறப்பாக ஓதவேண்டுமென்ற உயர்ந்த நோக்கோடு தனது உம்மத்துக்கு நபி(ஸல்) அவர்களால் கற்றுத்தரப்பட்ட ஒரு துஆவை மாசுபடுத்தி விடாது தூய வடிவில் அதன் அசல் அமைப்பில் ஓதுவது தான் முறை மாறாக எவரோ நபி(ஸல்) அவர்களின் வாசகத்தின் புனித நிலையைப் புரிந்து கொள்ளாது அத்துடன் சொந்த வாசகங்களை கலப்படம் செய்து தயாரித்தவற்றை நாம் ஓதுவது முறையல்ல.

நபி(ஸல்) அவர்கள் எதை எப்படிச் செய்யவேண்டும். கூறவேண்டும் என்று நமக்கு மார்க்க மாக்கியிருக்கறிVர்களோ அதை அப்படியே செய்வதும், கூறுவதும் தான் சுன்னத்து – அது தான் நாம் அவர்களைப் பின்பற்றி நடக்கிறோம் என்பதற்கோர் எடுத்துக்காட்டு.

ஒரு முறை இப்னு உமர் (ரழி) அவர்களின் அருகில் ஒருவர் தும்மி விட்டு – “அல்ஹம்துலில்லாஹ்”  “வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்” என்றார். அதற்கு இப்னு உமர் (ரழி) அவர்கள் நானும் கூட நீர் கூறுவது போன்று “அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ” என்று கூறுவேன். ஆனால் (இச்சமயம் உமக்கு மார்க்கத்தில் சுன்னத்தாக்கப்பட்டது முறை இவ்வாறு அல்ல, நமது நபி(ஸல்) நமக்கு “அல்ஹம்துலில்லாஹி அலாகுல்லிஹால்” (எல்லா நிலைகளிலும் அனைத்துப் புகழும் அல்லலாஹ்வுக்கே) என்று தான் கற்றுத் தந்துள்ளார்கள். நாஃபிஉ (ரழி), (திர்மதீ). முறையே அபூஹுரைரா (ரழி) அறிவிப்பின்படி புகாரீயில் அல்ஹம்துலில்லாஹ் என்றும், ஹிலாலுபிஸ் யல்ரஃப் (ரழி) அறிவிப்புப்படி திர்மதீ, அபூதாவூத் ஆகிய நூல்களில் “அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ” என்றும் பதிவாகியுள்ளன.

ஆகவே தும்மினால் நபி(ஸல்) அவர்களின் வாயிலாக நமக்கு கிடைத்த இவ்வாசகங்களில் எதையேனும் கூறவேண்டுமே தவிர வேறு வார்த்தைகளைக் கூறுவது தவறு என்பதை மேலுள்ள ஹதீஸில் இப்னு உமர் (ரழி) அவர்கள் சுட்டிக்காட்டி இருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

ஐயம்: ஒருவர் தமது மனைவியின் விருப்பத்திற்கேற்ப தனது தாடியை அகற்றி விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?    ஒருவர், எக்ககுடி

தெளிவு: உங்களில் எவரது விருப்பமும் நான் கொண்டு வந்துள்ள (மார்க்கத்)தைப் பின்பற்றியதாகாதவரை (முழுமையான) மூமினாக முடியாது என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்துல்லாஹ்பின் அம்ரு(ரழி), ­ரஹுஸ்ஸுன்னா. நாம் முஸ்லிம்களாக- முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிபட்டு நடப்பவர்களாக இருப்பதால் சுயவிருப்பத்திற்கோ, பிறர் விருப்பத்திற்கோ ஏற்றவாறு நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும், மார்க்கம் அனுமதிக்கும் காரியங்களில் மனைவியின் விருப்பத்திற்கேற்ப நடப்பது தவறல்ல; மார்க்கத்திற்குப் புறம்பானவற்றில் யாதொரு முஸ்லிமும் மற்றவரின் விருப்பத்திற்கேற்ப எதுவும் செய்வதை மார்க்கம் அனுமதிக்காது.

ஐயம்: நமது வீட்டில் நுழையும் போது ஸலாம் கூற வேண்டும் என்பதற்கு ஹதீஸ் ஆதாரம் உள்ளதா?    முஹம்மத் காசிம், மதுரை

தெளிவு: ஹதீஸ் என்ன? குர்ஆனிலும் ஆதாரமுண்டு “ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும், அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான – பாக்கியமுள்ள பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கு” என்ற) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (பரஸ்பரம்) கூறிக்கொள்ளுங்கள்! நீங்கள் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு (த்தனது) வசனங்களை விவரிக்கிறான். (24:61)

அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள் :

நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி “என தருமை மகனே ! நீர் உமது குடும்பத்தாரிடம் வீட்டிற்குள் பிரவேசிக்கும் பொழுது (அவர்களுக்கு) ஸலாம் கூறும் ! அது உமக்கும் உமது குடும்பத்தவருக்கும் “பரகத் ” விருத்தியாகும் என்று கூறினார்கள். (திர்மிதீ)

மேற்காணும் திருவசனமும், ஹதீஸும் வீட்டில் நுழையும் போது ஸலாம் கூறி நுழைய வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

*************************************************

முக்கிய அறிவிப்பு :

இதன் மூலம் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு அன்புடன் அறிவிப்பது என்னவென்றால் புரட்சிமின்னல் பிப் – பக்கம் 5-ல் “குர்ஆன் ஹதீஸை எடுத்தியம்ப வேண்டும் என்ற வேணவாவினால் ஒரு இஸ்லாமிய அமைப்பினர் அரும்பாடுபட்டுச் சமுதாயப் பத்திரிகை எனப் பெற்றெடுத்த பிள்ளையை அதன் தந்தையிடமிருந்து சேவகனே தட்டிப் பறித்துக்கொள்ள – ஆதாரமற்ற இன்னொரு பிள்ளையைத் தத்தெடுத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது ” என்றும் , பக்கம் 120-ல் “அடுத்தவருக்குச் சொந்தமானதை தன்னுடைய தாக்கிக் கொண்டதும் அமானித மோசடியும் தான். பிளவு ஏற்பட முக்கியக் காரணம், என்றும் எழுதுவதன் மூலம் “அந்நஜாத்” ஆசிரியர், வெளியிடுபவரை விமர்சித்துள்ளார் ” . அவர் கூறும் காரணங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நஜாத்தை (அவர்கள் பாணியில் சொல்வதானால்) யார் பெற்றார்களோ அவர்களிடமே பிள்ளையாக உள்ளது. பு.மி. கூறும் அமைப்பினர் இடையில் வந்து தட்டிப்பறிக்கும் சூழ்ச்சி செய்தனர். இறையருளால் சூழ்ச்சிகள் வீழ்ந்தன.

P.J., K.M.H., & K.S.R., இம்தாதி ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டு, பொதுக் குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் உரியவர்களிடம் ஒப்படைத்து விடுவதே சிறப்பு என எண்ணி முறையாக எழுத்து மூலம் எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளனர்.  மேலும் அந்நஜாத் (இது ஆரம்பிக்க மூலக்காரணமாக இருந்த “ஸலபி ” என்ற பிரிவினைப் பெயரையும், மற்ற பிரிவினைப் பெயர்களையும் விரும்பாத) நமது நாட்டு, துபை சகோதரர்களின் முழு ஒத்துழைப்புடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

“அந்நஜாத் ” அன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியிடமே இருந்தது. இன்றும் 9 நபர்கள் கொண்ட கமிட்டியிடமே உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட கமிட்டியில், கலைக்கப்பட்ட கமிட்டியிலிருந்த நால்வர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் அட்ஹாக் கமிட்டி உறுப்பினர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். மேலும் “அந்நஜாத்” ஆரம்பம் முதல் அருகில் இருந்து உதவிகள் பல செய்து வரும் சகோதரர் நால்வர் உள்ளனர்.

எனவே, P.J.,அவர்கள் கூறுவது போல் “அந்நஜாத் ” தனி நபருக்கு சொத்தமாகவுமில்லை, எந்தவித அமானித மோசடியும் நடக்கவுமில்லை. இஸ்லாத்தை அதன் தூயவடிவில் கொண்டு வரும் முயற்சியில் அயராது பாடுபடும் எனதருமை சகோதர ஆலிம்களே! என தன்பு உடன் பிறப்புக்களே! இம்மாதிரியான அவதூறுகளை அள்ளி வீசும் பணியில் ஈடுபடாமல் மார்க்கப்பணியில் நமது முழு கவனத்தையும் செலுத்துமாறு அன்புடனும், மிகுந்த கவலையுடனும் வேண்டிக் கொள்கிறேன். வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் அவனது நேர்வழியில் நடத்தாட்டுவனாக!

இவண் 

முஹம்மத் கவுஸ்

நிர்வாகி, “அந்நஜாத்”

Previous post:

Next post: