மனோ இச்சையை பின்பற்றும் மனிதர்களே!! அல்குர்ஆன் மட்டும் போதுமா?

in 2019 பிப்ரவரி

மனோ இச்சையை பின்பற்றும் மனிதர்களே!!

அல்குர்ஆன் மட்டும் போதுமா?

அபூ ஹனீஃபா, புளியங்குடி

குர்ஆன் மட்டும் என்பவர்கள் குறித்த ஆந்நஜாத் பதிவிற்கு அவர்கள் பதில் தராத நிலையில் மீண்டும் இதை பதிய காரணம், நமக்கு பதில் தராமல் முஸ்லிம்களை தனிமையில் பேசி, அவர்களை வசப்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். தனிமையில் பேசி குழப்பும் வி­யங்கள் பற்றி எச்சரிக்கவே இந்தப் பதிவு.

உண்மை என்று நம்பினால் மட்டுமே நேர்வழி :

அல்குர்ஆன் 7:3 வசனத்தில் அல்லாஹ் இறக்கிவைத்ததை பின்பற்றுங்கள் என்று சொல்வது நாம் வைத்திருக்கின்ற 114 அத்தியாயங்களை கொண்ட அல்குர்ஆன் என்ற புத்தகம் மட்டும் தான் என்று நம்பினால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கும். அதில் உள்ளதை சுயமாக சிந்தித்தால் நேர்வழி அடைய முடியும் அதிலே எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது. அதை தவிர மற்ற புத்தகங்களை, ஹதீஃத்களை பின்பற்றினால் வழிகேடு என்று சுய விளக்கம் கொடுத்து, நம்பவைத்து தங்கள் மனோ இச்சையை பின்பற்ற வைக்கும் கூட்டத்தார்கள் தான் அஹ்லுல் குர்ஆன், குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த கூட்டத்தில் இருக்கக்கூடிய கொள்கை சொந்தங்களுக்கு கூட குர்ஆனை தெளிவாக எடுத்து விளக்கிச் சொல்ல ஒரு நபர் தேவை இருக்கிறது. ஆனால் இறைத்தூதர் குர்ஆனை விளக்கவில்லை மாறாக குர்ஆனில் இருப்பதைப் போல் அப்படியே வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்கள். இவர்களால் குர்ஆனில் இருப்பதைப் போன்று வாழ முடியவில்லை. குர்ஆனை விட்டு வெளியில் விளக்கம் தருகிறார்கள். மேலும் குர்ஆனை விளக்குவதற்கு ஒரு நபர் தேவை இருக்கிறது. ஆனால் இறைத் தூதர் குர்ஆனில் இருப்பதைப் போன்று அப்படியே வாழ்ந்தார்கள். குர்ஆனை விளக்கிச் சொல்லவில்லை அல்லாஹ்வே அனைத்திற்கும் விளக்கம் தந்திருக்கிறான் என்று சொல்வார்கள் என்றால் இவர்களின் வார்த்தையில் உண்மை இருக்கிறதா? இவர்களின் வார்த்தையை நம்பமுடியுமா? இவர்கள் எப்படிப்பட்ட உண்மையை மறைக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்.

அஹ்லுல் குர்ஆன் உறுப்பினர்கள் சுய சிந்தனையாளர்களா?

அஹ்லுல் குர்ஆன் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் சுய அறிவின் மூலமாக, சுயமாக தாங்களாகவே சிந்தித்து இந்த கொள்கையை ஏற்றுக்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இல்லை. ஏதோ ஒருவரின் சுய சிந்தனையில் உதித்ததை மற்றவர்கள் கேட்டு குர்ஆன் மட்டும்தான் இறைவனிடம் இருந்து இறங்கியது என்ற நம்பிக்கையை தங்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கிறார்கள். பின்னர் குர்ஆன் வசனத்தை மட்டுமே வைத்து அதன் மூலம் விளக்கத்தை தேடுகிறார்கள்.

உண்மையில் நாம் வைத்திருக்கும் 114 அத்தியாயங்களை கொண்ட குர்ஆன் மட்டும் தான் இறைவனிடம் இருந்து இறக்கப்பட்டதா? எது நேர்வழி? எது வழிகேடு? என்பதை விரிவாக பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

வழிகெடுக்கும் கூட்டத்தார்கள் :

காலம், காலமாக மனித சமுதாயத்தை ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் நேர்வழியை விட்டு வழிகெடுக்கும் கூட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும் புதிது புதிதாக வழிகெடுக்கும் கூட்டங்கள் உருவா கிக் கொண்டும் இருக்கின்றன. அப்படிப்பட்ட கூட்டத்தைப் போன்றே சில கூட்டங்கள் கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் தான் அஹ்லுல் குர்ஆன், அல்குர்ஆன் மட்டும் போதும் அதில் சொல்லப்படுகின்ற செய்தி (ஹதீஃத்) மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் இவர்கள் நபி(ஸல்) அவர்கள் அறிவித்துத் தந்த (செய்தி) ஹதீஃத்களை ஏற்பவர்களா என்றால் நிச்சயமாக இல்லை. அல்குர்ஆனுக்கு எதிராக வராத ஹதீஃத்களை ஏற்போம் என்று வாயளவில் மட்டும் சொல்லக் கூடிய இவர்கள் கண்ணியமிக்க இமாம்கள் தொகுத்து வைத்துள்ள ஹதீஃத்களை முற்றிலுமாக புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள். அல்குர்ஆனுக்கு எதிராக இல்லாத எந்த செய்தியையும் மோடி சொன்னாலும் ஏற்போம் என்று சொல்கிறார்கள். ஆனால் இமாம்கள் சொன்னால் ஏற்கமாட்டோம் என்று ஹதீஃத்களை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள். நாங்கள் ஹதீஃத்களை முற்றிலுமாக புறக்கணிக்கவில்லை என்று அவர்கள் சொல்வார்கள் என்றால் குர்ஆனுக்கு வெளியில் எந்த ஹதீஃதை பின்பற்றுகிறார்கள் என்று கேளுங்கள், வாய் திறக்க மாட்டார்கள்.

கண் இருந்தும் குருடர்கள் :

காலங்காலமாக ஹதீஃத்களை படித்து சிந்தித்து எது சரி எது தவறு எது குர்ஆனுக்கு எதிராக இருக்கிறது, எது சிறந்தது என்று தனித்தனியாக பிரித்து சத்தியத்தை அறிந்து மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்த இவர்கள் இன்று கண் தெரியாத ஒரு குருடனைப் போன்று ஹதீஃத் புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு, ஹதீஃத் புத்தகங்கள் என்றால் என்ன? இமாம்கள் என்றால் யார்? அவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்கு அல்குர்ஆன் எப்படி வந்தது என்று நாம் கேட்டால், திடீரென வந்ததாக சொல்கிறார்கள். தான் உண்ணுவது இந்த உணவு தான் என்பதை அறிந்தவன், அந்த உணவு தனது தட்டிற்கு எப்படி வந்தது என்பதை மிகச் சரியாக அறிந்ததாகச் சொல்பவன். உன்னுடைய தட்டில் உள்ள உணவு உன் தட்டிற்கு எப்படி வந்தது என்று கேட்டால் தானாக தட்டிற்கு வந்தது என்று சொல்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட பொய்யனாக இருப்பான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மையை அறிந்தே அதை மறைப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவனைப் போன்றவர்கள் தான் இந்த அல்குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லக் கூடிய கூட்டத்தார்கள்.

உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள் :

இந்த குர்ஆன் எங்கே இருந்து வந்தது? குர்ஆனை தொகுத்தவர் யார்? ஹதீஃத்களை அறிவித்தவர்கள் யார்? ஹதீஃத்களை தொகுத் தவர் யார்? என்பதை எல்லாம் அறிந்தே அதை மறைக்கிறார்கள். இமாம்கள் தாங்களாகவே தங்கள் பிழைப்பிற்காக ஹதீஃத்களை உருவாக்கிக் கொண்டார்கள் என்று உண்மையை பொய்யாக்க முயற்சிக்கிறார்கள் உண்மையை பொய்யுடன் கலக்கிறார்கள். இவர்களைத்தான் அல்லாஹ் சொல்கிறான்.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். அல்குர்ஆன் 2:42

இந்த வசனத்திற்கு ஏற்ப அஹ்லுல் குர்ஆன் கூட்டத்தார்கள் தாங்கள் அறிந்தே உண்மையை பொய்யுடன் கலக்கிறார்கள், தாங்கள் அறிந்தே உண்மையை மறைக்கவும் செய்கிறார்கள். எப்படி மறைக்கிறார்கள்? இந்த அஹ்லுல் குர்ஆன் கொள்கையை தன்னகத்தே கொள்வதற்கு முன்னால் இவர்கள் ஹதீஃத்களை ஏற்று செயல்படுத்தி வந்ததே உண்மை.

சுய அறிவு இல்லாத கேள்விகள் :

அல்குர்ஆன் ஒரு கிதாபா? பல கிதாபா? இறைவன் ஒருவனா? பல இறைவனா? ஒரு இறைவன் என்றால் ஒரு கிதாப் தான் ஆனால் நீங்களோ பல கிதாப்களை ஹதீஃத் புத்தகங்களை தூக்கிக்கொண்டு திரிகிறீர்கள் அதனை பின்பற்றுகிறீர்கள் என்று பல கேள்விகளை முன்வைத்து மார்க்கத்தை அறியாத, அல்குர்ஆனை, ஹதீஃத்களை படிக்காத முஸ்லிம்களை திக்குமுக்காட செய்கிறார்கள். குர்ஆனை மட்டும் பின்பற்றுவதால் நாங்கள் கொண்ட கொள்கைதான் சரி நீங்கள் எல்லாம் வழிகேட்டில் இருக்கிறீர்கள் என்று தங்களை, தாங்களே நேர்வழி பெற்றவர்களாக நல்லடியார்களாக பிரகடனம் செய்கிறார்கள். நாங்கள் நேர்வழி பெற்றவர்கள் நீங்கள் வழிகேடர்கள் என்ற மமதையில் திரிகிறார்கள். உங்களிடம் சத்தியத்தை நாங்கள் சேர்த்து விட்டோம். உங்களுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது. இனி நீங்கள் மறுமையில் கேள்வி கணக்கில் இருந்து தப்பவே முடியாது என்று ஒருவித பயத்தை அப்பாவி முஸ்லிம்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அதனாலேயே பலரும் நிலை தடுமாறி விடுகின்றனர்.

தடுமாற்றத்திற்கு காரணம் என்ன?

அவர்களின் இந்த தடுமாற்றத்திற்கு காரணம் குர்ஆன் மட்டும் போதும் என்பவர்களிடம் உண்மை இருக்கிறது என்பதினால் அல்ல. மாறாக இதுகாலம் வரை மார்க்கம் என்றால் என்ன என்பதை முஸ்லிம்கள் அறியாததின் விளைவு முஸ்லிம்கள் அல்குர்ஆனை பொருள் அறிந்து படிக்காததின் விளைவு. குர்ஆனை அன்றாடம் பொருள் அறிந்து படித்தவர்களும் நிலைதடுமாறி நிற்கிறார்கள் என்றால் நிச்சயமாக அவர்கள் பொருள் அறிந்து படிக்கவில்லை மாறாக வாசித்து மட்டும் இருக்கிறார்கள் கடமைக்கு படித்திருக்கிறார்கள் என்பதை அறியலாம். மேலும் இறைவன் என்ன சொல்கிறான் என்பதை விளங்காத நிலையிலேயே படித்திருக்கிறார்கள் என்பதையே நாம் விளங்கி கொள்ள முடிகிறது.

இவர்களின் கேள்விகள் நியாயமானதா?

அல்குர்ஆன் வஹியாக இறக்கப்பட்ட சமயங்களில் நபியின் வாழ்நாள்களிலேயே அவை எழுதி பாதுகாக்கப்பட்டுள்ளது. நபியின் நடைமுறைகளான ஹதீஃத்கள் அவ் வாறு எழுதி ஏன் பாதுகாக்கப்படவில்லை? நபியின் காலத்தில் எழுதப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. சஹாபாக்கள் காலத்திலாவது எழுதி பாதுகாத்திருக்கலாம். ஆனால் இமாம்கள் காலத்தில் அதுவும் பல தலைமுறைகளுக்கு பின் ஏன் எழுதப்பட்டது? இன்னும் ஏராளமான கேள்விகளை கேட்கிறார்கள் முஸ்லிம்களை குழப்புகிறார்கள் மூளைச் சலவை செய்கிறார்கள் இவர்களின் கேள்வி கள் நியாயமானதா? அறிவார்ந்ததா?

இவர்கள் சுயசிந்தனையாளர்கள் என்பது உண்மையா என்றால் இல்லவே இல்லை. இவர்கள் சுயசிந்தனையாளர்களாக இருந்திருந்தால் இப்படி கேள்வி கேட்டிருக்க மாட் டார்கள். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் குர்ஆன் வஹியாக இறக்கப்பட்டது. அது சிறுசிறு பல பாகங்களாக பல இடங்களில் பதிந்துவைக்கப்பட்டு இருந்தது. மேலும் நபியின் காலத்திலேயே குர்ஆன் புத்தகமாக தொகுக்கப்படவில்லை மாறாக நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் சில ஆண்டுகளுக்கு பின்னரே குர்ஆன் புத்தகமாக தொகுக்கப்பட்டது. தொகுக்கப்பட்டதற்கு காரணம் என்ன? பல காரணங்கள் இருக்கிறது என்று ஹதீஃத்களில் இருக்கிறது நாம் சொல்ல முடியும். அதுபோல ஹதீஃத்களை ஏன் சஹாபாக்கள் தொகுக்கவில்லை என்று கேள்வி கேட்பார்கள் என்றால் நபியுடன் இருக்கக்கூடிய நபி தோழர்களுக்கு எது நபியின் நடைமுறைகள் எது இறைக்கட்டளை என்று தங்கள் கண் முன்னே பார்க்கிறார்கள்.

அதனால் அவர்களுக்கு பிற்காலத்தை பற்றிய சிந்தனை இறைக் கட்டளைகள் மேலே மட்டுமே இருந்திருக்கிறது. அதனாலே குர்ஆனை தொகுத்திருக்கிறார்கள். மேலும் ஹதீஃத்களை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்வோம். இமாம்களுக்கு என்ன அவசியம் வந்தது என்று கேட்பார்கள் என்றால் சஹாபாக்களுக்கு என்ன அவசியம் வந்ததோ அதே அவசியம் தான் இமாம்களுக்கும் வந்திருக்கிறது என்று நாம் விளங்கிக் கொள்வோம். இவ்வாறாக நடைமுறையில் செயல்பாட்டில் இருந்து வந்த வழக்கங்கள் மற்றும் சஹாபாக்களின் காலத்திலிருந்து தெரிவிக்கப்பட்ட ஹதீஃத் களைத்தான் (இமாம்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும்) முஹத்தீஸின்கள் (வல்லுனர்கள்) ஆராய்ந்து வெளிப்படுத்தியது தான் என்பதை அறியாத அப்பாவிகளாகவோ அல்லது அறிந்தும் மறைப்பவர்களாவோ இருக்கிறார்கள்.

அறியாமையின் உச்சகட்டம் :

அல்குர்ஆன் என்பது ஒரு கிதாபா? பல கிதாபா? என்று கேள்வி கேட்கும்போதே அவர்கள் அறியாமையின் உச்சத்தில் இருக் கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அல்குர்ஆன் என்பது 114 அத்தியாயங்களை கொண்ட ஒரு புத்தகமாக மட்டும் இறைவனிடம் இறங்கியிருந்தால் அவர்கள் கேட்கும் கேள்வி நியாயமானது. மாறாக 23 ஆண்டு காலமாக மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களிடம் ஏற்படும் குழப்பங்கள், சந்தேகங்கள் மார்க்கத்தைப் பற்றிய சந்தேகங்கள், இறைவனைப் பற்றிய சந்தேகங்கள் போன்றவற்றை தீர்க்கும் விதமாகவும், ஈமான் கொண்டவர்களை பக்குவப்படுத்தும் விதமாகவும், அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். இறைவனுக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இறைத் தூதருக்கு எப்படி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை விளக்கும் விதமாகவும், முந்தைய நபிமார்கள் யார்? நபிமார்களின் நிலை என்ன? முந்தைய ஈமான் கொண்டவர்களின் நிலை என்ன? அவர்கள் எப்படி இறைவனுக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள். இறை நிராகரிப்பாளர்களின் நிலை என்ன? அவர்களின் மறுமை நிலை என்ன? என்பதை விளக்கும் விதமாக அல்குர்ஆன் சிறுக சிறுக உள்ளுணர்வாக வஹியாக இறக்கப்பட்டுள்ளது.

நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம். 76:23

இந்த வசனம் அல்குர்ஆன் புத்தகமாக இறக்கப்படவில்லை மாறாக வஹியாக காலத்திற்கு ஏற்ப சிறுகச் சிறுக இறக்கப்பட்டது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த வசனம் ஒன்று போதும் அல்குர்ஆன் என்பது நாம் வைத்திருக்கின்ற 114 அத்தியாயங்களை கொண்ட புத்தகம் மட்டும் அல்ல. மாறாக வஹியாக இறக்கப்பட்ட அனைத்தும் அல்குர்ஆன் என்பது தெளிவாக விளங்கு கிறது. 114 அத்தியாயங்களைக் கொண்ட நாம் வைத்திருக்கும் இந்த குர்ஆன் சஹாபாக்கள் புத்தகமாக தொகுக்கும் வரைக்கும் பல பகுதிகளில் பல ஏடுகளாக இருந்தது என்பது வரலாறு. அந்த வரலாற்றை அறிந்த சுய சிந்தனையாளர்கள் கேட்கிறார்கள் அல்குர்ஆன் என்பது ஒரு கிதாபா? பல கிதாபா? என்று இது சுயசிந்தனையாளர்கள் கேட்கக் கூடிய கேள்வியா? அல்லது அறிவீனர்கள் கேட்கக் கூடிய கேள்வியா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள் :

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள் அவனையன்றி பாதுகாவலர்களை பின்பற்றாதீர்கள், நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். 7:3

இந்த வசனத்தின் மூலம் உங்கள் இறைவனிடம் இருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறேன். அல்லாஹ்விடம் இருந்து இறக்கப்பட்டது 114 அத்தியாயங்களை கொண்ட அல்குர்ஆன் என்ற புத்தகம் மட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை. காரணம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு தகுந்தவாறு செயல்முறைகளாக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். அவ்வாறு செயல்முறைப்படுத்த இறைக் கட்டளைகளுக்கு வெளியில் இருந்து விளக்கி சொல்லவேண்டும். அவ்வாறு விளக்கி சொல்வது இறைக்கட்டளைகளான 114 அத்தியா யங்களுக்கு வெளியிலேயே அது வஹியாக அமைகிறது. பொதுவாக தொழுகையை எடுத்துக்கொள்வோம். அல்லாஹ் தொழுமாறு கட்டளையிடுகிறான் அல்லாஹ்வின் தூதர் எவ்வாறு தொழவேண்டும் என்று கற்றுத் தருகிறார்கள் தொழுகையை எப்படி ஆரம்பிப்பது என்பது முதல் ஸலாம் சொல்லி தொழுகையை முடிப்பது வரை கற்றுத் தந்திருக்கிறார்கள்.

தொழுகையை எவ்வாறு தொழ வேண் டும் என்று இறைவன், ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலமாக நபி(ஸல்)அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவாறு நபி(ஸல்) அவர்கள் தானும் தொழுது பிறரும் அவ்வாறு தொழுமாறு கட்டளையிட்டார்கள்.

முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், அல்லாஹ்வின் கட்டளை களை சுயமாக சிந்தித்து தொழுகை முறைகளை கற்றுத் தந்தார்களா? அல்குர்ஆன் 10:38வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் “இதை (நம் தூதராகிய) அவர் சுயமாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா?” ஹதீஃத் தேவையில்லை எனக் கூறும் நபர்களுடைய அத்தனை விளக்கங்களுக்கு சாட்டை அடி தருகிறது இந்த ஒரே ஒரு வசனம்.

குர்ஆனில் உள்ள எந்த ஒரு செயலையும், நடைமுறையையும் இறைத்தூதர் சுயமாக செய்யமாட்டார், கற்பனையும் செய்யமாட்டார் என்பது இந்த வசனத்தின் மூலமும் மற்றும் 11:35, 32:3, 16:44, 46:8, 52:33 வசனங்கள் மூலமும் விளங்குகிறது. அதுபோல தொழுகை முறையையும் தூதர் சுயமாக சிந்தித்து கற்பனை செய்யவில்லை மாறாக இறைச் செய்தியை கொண்டுவரும் வானவ தூதரான ஜிப்ரில்(அலை) அவர்கள் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. யார் இறைச் செய்தியை கொண்டு வருகிறாரோ அவர் தான் எந்த ஒரு செயலையும் கற்றுக் கொடுப்பார் இறைத் தூதர் சுயமாக எதையும் செய்யமாட்டார் என்பதையும் விளங்க முடிகிறது. அவ்வாறு இறைக் கட்டளைகளுக்கு அதிகப்படியாக தெளிவாக விளக்கிச் சொல்லப்படுவதும் வஹியே என்பதையும் அது 114 அத்தியாயங்கள் கொண்ட நாம் வைத்திருக்கின்ற குர்ஆனுக்கு வெளியில் இருப்பதையும் அறிய முடிகிறது.

குர்ஆனுக்கு வெளியில் வஹி இருக்கிறது என அஹ்லுல் குர்ஆன் ஜமாஅத்தினர் ஒப்புக் கொண்ட ஆடியோ ஆதாரம் :

குர்ஆன் மட்டும் போதும் என்பவர்களும் நாம் வைத்திருக்கும் குர்ஆனுக்கு வெளியிலே யும் வஹி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள் ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் வஹியே அதை 100க்கு 200 மடங்கு ஏற்றுக் கொள்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அவ்வாறு ஏற்றுக் கொண்டு இந்த குர்ஆன் ஒரு கிதாபா? அல்லது பல கிதாபா? என்று கேள்வி கேட்டால் அவர்களை விட அறிவீனர்கள் யாராவது இருக்க முடியுமா? குர்ஆனுக்கு வெளியில் வஹி இல்லை என்று மறுப்பார்கள் என் றால் குர்ஆனுக்கு வெளியில் வஹி இருக்கிறது என்று அவர்களே ஏற்றுக் கொண்ட ஆடியோ ஆதாரம் நம்மிடம் இருக்கிறது யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். குர்ஆனுக்கு வெளியிலும் வஹீ இருக்கிறது என்பதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அவை ஹதீஃத்கள் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயக்கம்?

இறைக்கட்டளை, தூதரின் நடைமுறை பிரித்து வைத்தது யார்?

இறைவனுடைய கட்டளை இறைத் தூதரின் விளக்கம் நடைமுறை அங்கீகாரம் அனைத்தையும் மனிதர்களாகிய நாம் தனித் தனியாக பிரித்து வைத்தோமா? என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக இறைத்தூதர் முகம்மத்(ஸல்) அவர்களே தனித்தனியாக பிரித்து காட்டியிருக்கிறார்கள். வஹி இறங்கும் காலங்களில் இறை வசனங்களை இறைக் கட்டளைகளை தனியாக எழுதி பாதுகாக்குமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் ஏன் என்றால் எது இறைக்கட்டளை, எது தூதரின் வழிமுறை, என்பதை மனிதர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே அவ்வாறு செய்தி ருக்கிறார்கள் இதைப் போன்று தான் முந்தைய நபிமார்களின் வாழ்க்கையிலும் நடைபெற்றதை அல்லாஹ் பல வசனங்களின் மூலம் நமக்கு தெளிவாக விளக்குகிறான்.

அல்குர்ஆன் 2:51 மேலும் நாம் மூஸாவுக்கு நாற்பது நாட்களை வாக்களித்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக் கன்(ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள், (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.

இந்த வசனத்தில் இறைக்கட்டளை களான இறை நெறிநூல் அளிப்பதற்கு முன் னாலே அல்லாஹ் மூஸா நபியிடம் வஹியின் மூலமாக பேசுகிறான் என்பதை அறியலாம். நபி சுயமாக பேசமாட்டார் நபி பேசுவது வஹியே அதுவும் நெறிநூலில் சொல்லப் படாத செய்திகள் என்பதை அந்த மூஸாவின் சமூக மக்கள் அறிந்து கொண்டார்கள் என் பதையும் இந்த வசனத்தின் மூலம் நெறி நூலிற்கு வெளியிலே வஹி இருக்கிறது என் பதை நாமும் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக மூஸா நபியை பிர்அவ்னிடம் அனுப்பி யது. கைத்தடியை பாம்பாக மாற்றியது கடலை பிளந்தது போன்றவைகள் எல்லாம் இறைநெறிநூல் கொடுக்கப்படுவதற்கு முன்னால் நடந்தவைகள் அந்த மக்களும் நடை பெறக்கூடிய செயல்களை கண் எதிரே பார்க்கிறார்கள். நெறிநூல் கொடுக்கப்படுவதற்கு முன்னால் பேசப்படுபவைகளும் இறைவன் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட வஹியே என்பதை அந்த மக்கள் நம்பினார்கள் இன் னும் பல வசனங்களில் நபிமார்கள் இறைக் கட்டளை இல்லாத வஹியின் மூலமாக மனி தர்களிடம் பேசினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. அதுபோல முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சில விசயங்களைப் பார்க்கலாம்.

(நபியே) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக, என்று அல்லாஹ் சொல்கிறான். அல்குர்ஆன் 20:132

இந்த வசனத்தின் அடிப்படையில் தொழுகையை ஏவுவது மட்டும் நபியின் கடமை அல்ல மாறாக தொழுது வருவதும் நபிக்கு கடமை. நபி எப்படி தொழுதார்? எப்படி இபாதத் செய்தார்? என்பது அல்குர்ஆனில் விளக்கம் இருக்கிறதா என்றால் இல்லை அப்படி என்றால் நபிக்கு தொழுகை முறையை கற்றுக்கொடுத்தது யார்? நபி சுயமாக கற்பனை செய்தார்களா? அல்லது குர்ஆனில் இல்லாத வஹியாக இறக்கப்பட்டதா? நிச்சயமாக உறுதியாக இறைக் கட்டளைகளில் இல்லாத வஹியாக அருளப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். காரணம் தொழுகை முறைகளை குர்ஆனில் இருந்து இதுநாள் வரைக்கும் யாரும் எடுத்துக்காட்ட முடியவில்லை முன்னோர்களின் வழிமுறைகளாக தொழுகை முறை காலம் காலமாக வந்து கொண்டு இருக்கிறது என்று கற்பனை செய்து கொள்ளுமாறு கூறுகிறார்களே அல் லாமல் குர்ஆனில் இருந்து நேரடியான ஆதாரத்தை காட்ட முடியவில்லை.

இறைத்தூதரின் நடைமுறைகள் மற்றும் விளக்கங்களை சஹாபாக்கள் நேரடியாக கண்டதால் எது இறைக் கட்டளை? எது இறைத்தூதரின் நடைமுறை என்பதில் குழப்பம் இல்லை? ஆனால் இன்று பலருக்கு அது குழப்பமாக தெரிகிறது. இந்த குழப்பம் ஏன் என்றால் இது மனிதர்களுக்கான சோதனை. யார் நபியை பின்பற்றுகிறார்? யார் சுயமாக தங்கள் மனோ இச்சையை பின்பற்றுகிறார்? என்பதை அறிவிக்க வேண்டிய இந்த சோதனை.

சகலவிதமான உதாரணங்கள் :

நிச்சயமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் மிகுதியானவர்கள் நிராகரித்திருக்கவில்லை. அல்குர்ஆன் 17:89

இவ்வசனத்தில் இந்த குர்ஆனில் சகலவிதமான உதாரணங்களையும் விவரித்துள்ளோம் என்று அல்லாஹ் சொல்கிறான். அப்படி என்றால் இந்த குர்ஆனிலே எல்லாவற்றிற்கும் விளக்கம் இருக்கிறது இதை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் வைத்திருக்கும் 114 அத்தியாயங்களை கொண்ட அல்குர்ஆன் என்ற புத்தகத்தை காட்டி இது மட்டும் தான் குர்ஆன் என்று வாதம் வைக்கிறார்கள் அது சரியா என்பதை பார்ப்போம்.

வஹி என்பது இறைக் கட்டளையும் இறைத் தூதரின் விளக்கமும் சேர்ந்ததுதான் என்று அஹ்லுல் குர்ஆன்காரர்கள் பேசிய ஆடியோ ஆதாரம்!

முதலில் அல்குர்ஆன் என்பது வஹியாக இறக்கப்பட்டது என்பதை அவர்கள் மறுக்க மாட்டார்கள் வஹி என்பது இறைக் கட்டளையும், இறைத் தூதரின் விளக்கமும் சேர்ந்தது தான் என்பதையும் மறுக்கமாட்டார்கள், மறுத்தார்கள் என்றால் அவர்கள் வாயிலாக பேசிய ஆடியோவே ஆதாரம் சான்றாக நம்மிடம் இருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது இறைக்கட்டளைகளை மட்டும் தனியாக பிரிந்து இது மட்டும்தான் குர்ஆன். இறைத் தூதரின் விளக்கம் குர்ஆன் இல்லை என்று எப்படி சொல்கிறார்கள்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறார்கள். ஆம்! தங்கள் மனோ இச்சையை தன்னுடைய இறைவனாக ஏற்றுக் கொண்டதன் விளைவு அவ்வாறு சொல்கிறார்கள்.

படைத்த இறைவனுக்கு மட்டுமே சிரம் பணிவேன், இறைவனால் படைக்கப்பட்ட ஆதமுக்கு சிரம் பணிய மாட்டேன் என்று சொன்ன ஷைத்தானை தம் ரப்பாக ஏற்றுக் கொண்டதன் விளைவு, இறைக்கட்டளையான குர்ஆனை மட்டும் ஏற்றுக் கொள்வேன் இறைத்தூதரின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்கள். அதனால் தான் அல்லாஹ் இந்த குர்ஆனிலே சகலவிதமான உதாரணங்களை விளக்கியுள்ளோம் என்று கூறியும் தொழுகைக்கான உதாரணங்களை, விளக்கங்களை அவர்களால் குர்ஆனில் இருந்து கொண்டுவர முடியவில்லை. மாறாக முன்னோர்களை பின்பற்றச் சொல்கிறார்கள். அதாவது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் காட்டியதைப் பின்பற்ற மாட்டார்களாம். முன்னோர்களின் செயல்களைப் பின்பற்றலாமாம்.

முன்னோர்களை பின்பற்றலாமா?

மேலும், அல்லாஹ் இறக்கிவைத்த இதைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல, எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் கண் டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். என்ன, அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அல்குர்ஆன் 2:170

இந்த வசனத்தின் அடிப்படையில் வழிகெட்ட முன்னோர்களை பின்பற்றுவது வழிகேடு என்று அல்லாஹ் சொல்கிறான். தொழுகை முறை எங்கள் முன்னோர்கள் வழியாக தொன்று தொட்டு வருகிறது என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். அவர்களின் முன்னோர்கள் கடந்த 800 ஆண்டுகளாக இமாம்கள் தொகுத்து வைத்துள்ள ஹதீஃத்களின் அடிப்படையில் தொழுது வருகிறார்கள்.

மேலும் இமாம்கள் தொகுத்து வைத்துள்ள ஹதீஃத்களின் அடிப்படையில் முஸ்லிம்கள் பல தொழுகை முறைகளை கொண்டிருக் கிறார்கள். தவ்ஹீத்வாதிகள் ஒருவகையாக தொழுகிறார்கள், மத்ஹப்வாதிகள் ஒருவகையாக தொழுகிறார்கள் எந்த தொழுகை முறை சரியானது என்பதை விளக்க வேண்டும். கண்ணியமிக்க இமாம்கள் சத்தியத்தை விட்டு முஸ்லிம்களை வழிகெடுத்தார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள், அவர்கள் அவ்வாறு குற்றம் சாட்டுவதில் உறுதியுடையவர்களாக இருப்பார்கள் என்றால் கடந்த 800 ஆண்டுகளாக பின்பற்றி வரும் வழிமுறைகளை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எது சரியான வழிமுறை என்பதை குர்ஆனை கொண்டு மட்டும் விளக்க வேண்டும். ஏன் என்றால் இவர்கள் அறிவுக்கு எட்டிய அளவிற்கு அனைத்து வழிமுறைகளும் இமாம்களை பின்பற்றி வழிகேடாகவே இருக்கிறது. அதனால் எது சரியான தொழுகை முறை என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் முன்னோர்களின் வழிமுறை வழி கேடாக இருக்கும் பட்சத்தில் அவர்களை பின்பற்றக்கூடாது என்பது இறைவனின் கட்டளை அல்குர்ஆன் 2:170. அதனால் முன் னோர்களை பின்பற்றாமல் தொழுகை முறைக்கு குர்ஆனில் இருந்து ஆதாரம் தர வேண்டும் தருவார்களா? ஒரு காலமும் அவர்களால் தர முடியாது ஏன் என்றால் தொழுகை முறைக்கு விளக்கம் குர்ஆனில் இருந்திருந்தால் அவர்கள் எப்போதோ தந்திருப்பார்கள். இதுநாள் வரைக்கும் அவர்களால் தரமுடியவில்லை என்றால் இனியா தரப்போகிறார்கள்? இருந்தால் தானே தரமுடியும். சிந்தித்துப் பாருங்கள்!

அல்குர்ஆனை அல்லாஹ் பாதுகாக்கிறான்:

நிச்சயமாக நாம் தான் இந்நெறிநூலை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். 15:9

அல்லாஹ் எதை இறக்கி வைத்து மனிதர்களில் தான் நாடியவர்களை நேர்வழிபடுத்த நினைத்தானோ அதனை அவனே பாதுகாத்து வருகிறான். அதனால் தான் இன்று வரைக்கும் இந்த குர்ஆனை எந்த ஒரு மனிதனாலும் பொய்பிக்க முடியவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தை மறுக்க முடியவில்லை, இறை வசனங்கள் இறங்கிய காலகட்டத்திலும் அதனை பொய்ப்பிக்க முடியவில்லை, மார்க்கம் முழுமை அடைந்த நிலையிலும் அதனை பொய்பிக்க முடியவில்லை, கடந்த 1440 வருடங்களாக எத்தனையோ மனிதர்கள் பொய்பிக்க முயன் றும் தோல்வியையே அடைந்திருக்கிறார்கள். காரணம் அல்லாஹ் அதன் பாதுகாவலனாக இருக்கிறான்.

இன்று குர்ஆன் மட்டும் போதும் ஹதீஃத்கள் தேவை இல்லை என்று சொல்லி இந்த குர்ஆனை கேள்விப் பொருளாக ஆக்கவும் விரைவிலேயே இந்த குர்ஆனை மனிதர்கள் முற்றிலுமாக புறக்கணிக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும் குர்ஆனிலே அனைத்திற்கும் விளக்கம் இருக்கிறது என்று தங்கள் மனோ இச்சையை பின்பற்ற வைக்கிறார்கள், இந்த அஹ்லுல் குர்ஆன் கூட்டத்தினர். பிற்காலத்தில் இந்தகுர்ஆனிலே பலவற்றிற்கு விளக்கம் இல்லை என்று சொல்லி இது இறைவனிடம் இருந்து இறங்க வில்லை மாறாக இறைத்தூதர் காலம் சென்ற பின் சஹாபாக்களால் எழுதப்பட்டது என்று கூறி ஹதீஃத்களை எப்படி முற்றிலுமாக புறக்கணித்தார்களோ அதுபோல குர்ஆனையும் முற்றிலுமாக புறக்கணிக்கச் செய்யவே குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்லி திரிகிறார்கள் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்,

வேதமுடையவர்களே, நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள், முன்பு வழிதவறிச் சென்ற கூட்டத்தாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள், அநேகரை அவர்கள் வழிதவறச் செய்ததுடன், தாங்களும் நேர்வழியை விட்டு விலகி விட்டனர். என்றும் (நபியே) நீர் கூறுவீராக, அல்குர்ஆன் : 5:77

இந்த வசனத்தின் அடிப்படையில் இன்றைக்கு நேர்வழி என்ன என்பதை அறிந்தே வழிகேட்டை நேர்வழியாக எடுத்துக் கொண்டு தானும் வழிகெட்டு பிறரையும் வழிகெடுக்கிறார்கள் அஹ்லுல் குர்ஆன் கூட்டத்தினர். மேலும் அல்லாஹ் சொல்கிறான்.

இவர்களுக்குப் பின் இவர்களுடைய சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள். அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள், இச்சைகளைப் பின்பற்றினார்கள், அவர்கள் கேட்டைச் சந்திப்பார்கள். 19:59

இன்றைக்கு அஹ்லுல் குர்ஆன் கூட்டத்தினர் தங்கள் தொழுகையை தங்கள் மனோ இச்சைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டார்கள், தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, தொழுகையை வீணாக்குகிறார்கள், விரைவில் கேட்டையே சந்திப்பார்கள்.

அஹ்லுல் குர்ஆன் கூட்டத்தினர் தொழுகை முறைகளைப் பற்றியும் இபாதத் துக்கள் பற்றியும் இன்னும் பல கேள்விகள் கேட்டால் அதற்கு சரியான பதில் தர மறுக்கிறார்கள் அப்படிப்பட்ட இந்த கூட்டத்தை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில் நிச்சய மாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின் பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும் இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனை விட மிக வழிகெட்டவன் எவன் இருக்கிறான், நிசசயமாக அல்லாஹ் அக்கிர மக்காரச் சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன் : 28:50

நேர்வழிகாட்டி யார்?

எவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டி ருப்பதைக் காண்பார்கள், அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார், பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார், தூய்மையான ஆகாரங்ளையே அவர்க ளுக்கு ஆகுமாக்குவார், கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார், அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும், இறக்கிவிடுவார், எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமானதையும் பின்பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். அல்குர்ஆன்: 7:157

இந்த வசனத்தின் மூலம் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே நேர்வழி இன்னது என்று அறிவிக்கக்கூடியவர்கள், அவர்களை மட்டும் பின்பற்றினால் அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மனோ இச்சையை பின்பற்றுபவர்களின் நிலை :

எவன் தன்னுடைய இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ அவனை நீர் பார்த்தீரா? மேலும் அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு, இன்னும் அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்து விட்டான். எனவே அல்லாஹ்வுக்குப் பிறகு அவ ருக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? அல்குர்ஆன் : 45:23

மேலும் எந்த ஆதாரமும் இன்றி குர்ஆனை பற்றி தங்கள் மனோ இச்சையின் அடிப்படை யில் உங்களிடம் தொடர்ந்து தர்க்கம் செய்தால், எனவே, நீர் அழைத்துக் கொண்டே இருப் பீராக, மேலும் நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர், இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த நெறிநூல்களை நான் நம்புகிறேன், அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான். அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு, உங்கள் செயல்கள் உங்களுக்கு, எங்களுக்கும், உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம். அல்லாஹ் நம்மிடையே ஒன்று சேர்ப்பான். அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டி யிருக்கிறது என்றும் கூறுவீராக. அல்குர்ஆன் : 42:15

அல்லாஹ் இறக்கி வைத்ததை பின்பற்ற நாம் அழைக்கிறோம். ஆனால் அவர்கள் தங்கள் மனோ இச்சைகளை மட்டுமே பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்கள் செய்கைகளில் உறுதியுடையவர்களாக இருந்தால் சத்தியத்தை ஆதாரத்தோடு சொல்வது மட்டுமே நமது கடமை. நேர்வழி காட்டுவது அல்லாஹ்வின் புறத்தில் இருக்கிறது அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டிவிட்டானோ அவர்களை யாராலும் வழிகெடுக்க முடியாது. அல்லாஹ் யாருக்கு வழிகேடு என்று உறுதி செய்துவிட்டானோ எவருடைய உபதேசமும் அவர்களை நேர்வழிப்படுத்தாது என்பதை உறுதியாக நம்பிக்கை கொண்டு சத்தியத்தை ஆதாரத்துடன் தொடர்ந்து எடுத்துரைப்போம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: