தொழுகை இஸ்லாத்தின் ஆணிவேர்!

in 2019 மார்ச்

S.H. அப்துர் ரஹ்மான்

பகலின் இரு முனைகளிலும் (காலை, மாலை) இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நிச்சயமாக நன்மைகள் பாவங்களை போக்கிவிடும். (11:144) மேற்கண்ட குர்ஆன் வசனம் தொழுகையின் அவசியத்தை உணர்த்துகின்றது.

இவ்வளவு தெளிவாக்கப்பட்ட கடமையை நாம் சரிவர பின்பற்றுவதில்லை. நபி(ஸல்) அவர்கள் ஒருநாள் தொழு கையை குறித்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது பின்வருமாறு கூறினார்கள். எவர் தம் தொழுகையைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு அவரது தொழுகை இறுதித் தீர்ப்பு நாளில் ஒளியாகவும், ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு இத்தொழுகை ஒளியாக அமையாது, ஆதாரமாகவும் ஆகாது. ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் அமையாது. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ்பின் அமர் பின் ஆஸ்(ரழி) நூல்கள்: முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்.

தொழுகை எவ்வாறு இறுதி தீர்ப்பு நாளில் உதவியாக இருக்கும் என்பதனை உணர்த்துகின்றது. இதனை அறிந்தால் நாம் தொழுகையில் பாராமுகமாக இருக்க மாட்டோம். நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்து விடுவான். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பலுடையவர்களாகவே நிற்கிறார்கள். மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகை யாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்) இன்னும் மிக சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை. (4:142)

மேற்கூறிய வசனம் பிறருக்கு காண்பிக்க தொழுவதைக் குறிக்கிறது. அவ்வாறு தொழுபவர்கள் நயவஞ்சகர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்னும் (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும் அசிரத்தையாக)வும் இருப்போர்; அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கின்றார்கள். (107:4-6)

இவ்வளவு எச்சரிக்கைகள் தொழுகையின் அவசியம் பற்றி குர்ஆன் ஹதீஃத்களில் காணப்படும் போது மக்கள் தொழுகையில் அசிரத்தையாக இருப்பது வேதனைக்குரிய வி­யமாக உள்ளது. இன்னும் சில தொழுகையாளிகளும், சில நேரங்களில் தனியாக தொழுகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தொழுகையை சில நேரங்களில் விட்டு விடுகின்றனர். இதனை தவிர்க்க தொழுகை யாளிகள் ஜமாஅத்துடன் சரியான நேரத்தில் தொழுவதை கடைபிடிக்க வேண்டும். முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்து தனியே பிரிந்து சென்று தொழுபவர்களை விட ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவது 27 மடங்கு அதிகமான நன்மை அடைகிறது. அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்கள்: புகாரி,(முஸ்லிம்)

மேலும் ஒரு அறிவிப்பில் கீழ்கண்டவாறு தனியாக தொழுவது தடை செய்யப்பட்டு உள்ளது. ஒருவன் முஅத்தின் (பாங்கு சொல்பவர்) தொழுகைக்கு அழைப்பு கூறி அதனை செவி ஏற்றபின் அதன் பக்கம் விரைந்து வருவதிலி ருந்து தடுக்கும் காரணம் எதுவும் இல்லையானால் தனித்து நின்று நிறைவேற்றப்படும் தொழுகை (மறுமை நாளில்) ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அப்போது தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் காரணம் என்று கூறினீர்களே அது என்ன எவை எவை காரணிகளாக அமைய முடியும்? என வினவ, அச்சமும் நோயும் தான் என்று விடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி), நூல்: அபூதாவூத்.

மேற்கண்ட ஹதீஃத்கள் ஜமாஅத்துடன் தொழுவதை வலியுறுத்துகின்றன. தனித்து தொழுவது ஏற்று கொள்ளப்படமாட்டாது என்பதை உணர்த்துகின்றது. எனவே தொழுகையாளிகள் தங்களின் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது மிகவும் சிறப்பானது ஆகும். ஜமாஅத்துடன் தொழுவதால் தொழுகை முறைப்படி சரியான நேரத்தில் நிறைவேற்றப்படுகின்றது. தொழுகையை விட்டுவிடுவது தவிர்க்கப்படுகின்றது. சிலர் அன்றாடம் வியாபாரம் போன்றவற்றிற்காக அல்லது தொழில் ரீதியாக பிரயாணம் செய்பவர்கள் தாங்கள் தொழ முடிவதில்லை என்று போலி காரணங்களை கூறுகின்றனர். அவர்கள் பஜ்ர் தொழுகையை அதன் நேரத்திலும் லுகரையும், அஸரையும், லுஹர், அஸர் ஆகிய இடைப்பட்ட நேரத்தில் நேரம் கிடைக்கும்போது ஜம்உ செய்து கொள்ளலாம். சற்று தொலைவு பயணம் செய்பவர்கள் லுகர் அஸரை 2 ரகாஅத்துகளாக சுருக்கி ஜம்உ செய்து கொள்ளலாம்.

இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உள்ளது. உள்ளூரில் 4 ரகாஅத்துகள் எனவும் பிர யாணத்தில் 2 ரகாஅத்துகள் எனவும், போர்க்களத்தில் 1 ரகாஅத் எனவும் நபி (ஸல்) அவர்களால் தொழுகை கடமையாக் கப்பட்டது என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல்கள் : முஸ்லிம், அபூதாவூத், நஸயீ. சிலர் அன்றாடம் வியாபாரத்திற்காக காலையில் புறப்பட்டு மாலையில் திரும்புகின்றனர். இவர்கள் மாலை திரும்பியதும் அஸர் நேரத்தில் லுகரையும் அஸரையும் ஜம்உ செய்யலாம். அவ்வாறு அல்லாமல் லுஹர் நேரத்தில் சாப்பிட ஒதுக்கும் நேரத்தில் லுகரையும் அஸரையும் ஜம்உ செய்யலாம். அதை விட்டு நாங்கள் வியாபாரத்திற்கு செல்கிறோம். அதனால் எங்களால் தொழுகையை நிறைவேற்ற முடிவதில்லை என்று கூறி தப்பித்து கொள்ள நினைக்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க முடியாது. நிச்சயம் இவர்கள் அல்லாஹ்விடம் மாட்டிக் கொள்வார்கள். இவர்கள் கூறும் காரணங்கள் ஒருபோதும் சரியாகாது. வியாபாரம் மற்றும் வேலை அனைத்துமே இவ்வுலக வாழ்க்கைக்காக, இவ்வுலகத்தில் உயிர் வாழ மட்டுமே உதவும். இதற்காக நாம் முக்கியத்துவம் கொடுப்பதோடு மறுஉலக வாழ்க்கைக்காக நாம் அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்கி தொழுவதை, கண்ட காரணங்களை கூறி தவிர்ப்பது எந்த முறையிலும் சரியாகாது. பல உண்மையற்ற காரணங்களைக் கூறி தொழுகையை விட்டுவிடும் இழிநிலை முஸ்லிம்களிடையே தற்போது அதிகமாக காணப்படுகிறது. இன்றைய முஸ்லிம்களில் பலர் பெயரளவிலேயே முஸ்லிம், அவர்களிடையே எந்த ஒரு இஸ்லாமிய பண்பாட்டையும் காணமுடிவதில்லை. இஸ்லாத்தின் அடிப்படை ஆணிவேரான தொழுகையே இவர்களிடம் காணப்படுவது இல்லை.

இவர்கள்தான் மாற்று மதத்தவர்களிடையே இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்கள் ஏற்பட வழிவகுக்கின்றனர். இவர்களை போன்ற முஸ்லிம்கள் உலகில் இருக்கும் வரை சோதனைகள் சூழவே செய்யும். ஒரு முஸ்லிமின் ஐந்து முக்கிய கட்டாய கடமைகளில் முதன்மையானது தொழுகையே. தொழுகை இல்லாமல் எப்படி இவர்கள் முஸ்லிம்கள் என கூறிக் கொள்கின்றார்கள் என்பது தெரியவில்லை. கேட்டால் அதற்கு ஆயிரம் நொண்டிக் காரணங்கள் சொல்கிறார்கள். அவை ஏற்றுக் கொள் ளப்படமாட்டாது. தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் பற்றி குர்ஆனில், “உங்களை நரகத்தில் புகுத்தியது எது என்று குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் தொழக்கூடியவர்களில் இல்லை” என்று கூறுவார்கள். (74:42, 43) என்கின்ற இறைவசனத்தைப் பார்த்தாவது தொழுகையை நிலைநாட்டுங்கள். மேலும், புகாரீ, ஹதீஃத் எண் 644ல் உள்ள எச்சரிக்கையைப் பாருங்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்னுடைய உயிர் எவனுடைய கரத்தி லிருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! விறகுகளைக் கொண்டு வருமாறு நான் கட்டளையிட்டு அதன்படி விறகுகள் கொண்டுவரப்பட்டுப் பின்னர் தொழுகைக்கு அழைக்குமாறு நான் உத்தர விட்டு, அதன்படி அழைக்கப்பட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கட்டளையிட்டு, அதன்படி அவர் தொழுகை நடத்திப் பின்னர் தொழுகைக்கு வராமலிருக்கிற ஆண்களின் வீடுகளுக்குச் சென்று வீட்டோடு அவர்களை எரிப்பதற்கு நான் நினைத்ததுண்டு. என்னுடைய உயிர் யாருடைய கையில் இருக்கிறதோ அவரின் மீது ஆணையாகப் பள்ளியில் ஒரு துண்டு இறைச்சி அல்லது ஆட்டுக் குளம்பு கொடுக்கப்படுகிறது என்று அவர்கள் எவரேனும் அறிவார்களானால் நிச்சயமாக இஷா தொழுகைக்காக ஜமா அத்திற்கு வந்து விடுவார்கள் என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். புகாரி: 644, அத்தியாயம்:10, பாங்கு. இதனை அறிந்த சிலரும் தொழுகையில் கவலை இல்லாமல் அக்கறையில்லாமல் இருக்கின்றனர். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி தொழுகையை ஆரம்பித்து பேணித் தொழுவோமாக!

Previous post:

Next post: